ஃபாத்திர் – படைப்பாளன்

அத்தியாயம் : 35

வசனங்களின் எண்ணிக்கை: 45

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகளையுடைய வானவர்களைத் தூதர்களாக ஆக்கியவன். தான் நாடியதைப் படைப்பில் அதிகப்படுத்துகிறான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றல் உடையவன்.426
2. அல்லாஹ், மனிதர்களுக்கு ஏதேனும் ஓர் அருளை திறந்து விட்டால் அதைத் தடுப்பவர் யாருமில்லை. ஆனால் அவன் அதனைத் தடுத்துவிட்டால் அதன்பிறகு அதை அனுப்புபவர் யாருமில்லை. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
3. மனிதர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கும் வேறு படைப்பாளன் இருக்கிறானா? அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்?
4. (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால், உமக்கு முன்னரும் தூதர்கள் பொய்யரெனக் கூறப்பட்டுள்ளனர். அல்லாஹ்விடமே அனைத்துக் காரியங்களும் கொண்டு வரப்படும்.
5. மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. எனவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
6. ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கிறான். அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்! தனது கூட்டத்தார் கொழுந்து விட்டெரியும் நரகத்திற்குரியோராக ஆகவேண்டும் என்பதற்காகவே அவர்களை அவன் அழைக்கிறான்.
7. இறைமறுப்பாளர்களுக்குக் கடும் வேதனை உள்ளது. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு மன்னிப்பும், பெரும் கூலியும் உள்ளது.
8. யாருக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டு, அவன் அதை அழகானதாகக் கருதுகிறானோ அவனா (நேர்வழி நடப்பவன்)? அல்லாஹ், தான் நாடியோரை வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். எனவே அவர்கள்மீதுள்ள கவலைகளால் (நபியே!) உமது உயிர் பிரிந்துவிட வேண்டாம். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
9. அல்லாஹ்வே காற்றுகளை அனுப்புகிறான். அவை மேகங்களை நகர்த்திச் செல்கின்றன. அதனை வறண்ட நிலத்திற்கு நாம் ஓட்டிச் சென்று அதன் மூலம் பூமியை, அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறோம். (இறந்தவர்கள்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதும் இவ்வாறுதான்.
10. எவரேனும் கண்ணியத்தை விரும்பினால் கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே தூய சொற்கள் ஏறிச் செல்கின்றன. நற்செயல் அதை உயர்த்துகிறது. யார் தீய செயல்களுக்காகச் சூழ்ச்சி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. அவர்களின் அச்சூழ்ச்சியே அழிந்து போய்விடும்.
11. அல்லாஹ் உங்களை(த் தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர் விந்துத் துளியிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களை இணைகளாக்கினான். அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதோ, பிரசவிப்பதோ இல்லை. வாழ்பவரின் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும், அவரது வயது குறைக்கப்படுவதும் பதிவேட்டில் உள்ளது. இது அல்லாஹ்வுக்கு எளிதானதே!
12. இரண்டு கடல்கள் சமமானதல்ல! ஒன்று, சுவையானதும், இனிமையானதும், பருகுவதற்கு எளிதானதும் ஆகும். மற்றொன்று, உப்பானதும் கசப்பானதுமாகும். ஒவ்வொன்றிலிருந்தும் புத்தம் புதிய இறைச்சியை உண்ணுகிறீர்கள். (அதிலிருந்து) நீங்கள் அணியும் ஆபரணங்களை எடுக்கிறீர்கள். அதில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களையும் நீர் காண்கிறீர். நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும், நன்றி செலுத்துவற்காகவும் (இதை உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான்.)
13. அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள்.
14. நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியுற மாட்டார்கள். (ஒரு வாதத்திற்கு) அவர்கள் செவியுறுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் இணை வைத்ததை மறுமை நாளில் அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போன்று உமக்கு யாரும் அறிவிக்க மாட்டார்கள்.
15. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தேவையுடையவர்கள். அல்லாஹ்தான் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
16. அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டுப் புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானது அல்ல!
18. ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். கனமான சுமையைச் சுமப்பவன், அதைச் சுமக்க (யாரையேனும்) அழைத்தால் அ(ழைக்கப்படுப)வர் நெருங்கிய உறவினராக இருந்தாலும் அதிலிருந்து சிறிதும் சுமப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (நபியே!) மறைவான நிலையில் தமது இறைவனுக்கு அஞ்சித் தொழுகையை நிலைநிறுத்துவோரைத்தான் உம்மால் எச்சரிக்கை செய்யமுடியும். தூய்மையாக நடப்பவர் தமக்காகவே தூய்மையாக நடக்கிறார். அல்லாஹ்விடமே சேருமிடம் உள்ளது.
19, 20, 21. பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாக மாட்டார்கள். இருள்களும், ஒளியும் சமமாகாது. நிழலும் வெப்பமும் சமமாகாது.
22. உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். தான் நாடியவர்களை அல்லாஹ் செவியேற்குமாறு செய்கிறான். மண்ணறைகளில் இருப்பவர்களை நீர் செவியேற்கச் செய்ய முடியாது.
23. (நபியே!) நீர் எச்சரிக்கை செய்பவர் தவிர வேறில்லை.
24. (நபியே!) உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும் உண்மையுடன் நாமே அனுப்பினோம். எச்சரிப்பவர் தம்மிடம் வராத எந்த ஒரு சமுதாயமும் இல்லை.
25. (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால், இவர்களுக்கு முன்சென்றோரும் (நமது தூதர்களைப்) பொய்யரெனக் கூறியுள்ளனர். அவர்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிரும் வேதத்தையும் அவர்களிடம் கொண்டு வந்தனர்.
26. பின்னர் இறைமறுப்பாளர்களைத் தண்டித்தேன். எனது தண்டனை எப்படி இருந்தது?
27. அல்லாஹ்தான் வானிலிருந்து மழையைப் பொழிவிக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அதன்மூலம் வெவ்வேறு வண்ணங்களில் கனிகளை வெளிப்படுத்துகிறோம். வெண்மையாகவும், சிவப்பாகவும், அடர் கருமையாகவும் வெவ்வேறு வண்ணங்களில் மலைப்பாதைகள் உள்ளன.
28. இவ்வாறு மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிந்தவர்கள்தான். அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்புமிக்கவன்.
29. யார் அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ அவர்கள் இழப்பில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.
30. அவன் அவர்களுக்கு நிறைந்த கூலியையும், தனது அருளை அதிகரித்தும் வழங்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அவன் மன்னிப்புமிக்கவன்; நன்றி பாராட்டுபவன்.
31. (நபியே!) நாம் உமக்கு அறிவித்திருக்கும் இவ்வேதம்தான் உண்மையானது. இது தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ், தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.
32. பின்னர் நாம் தேர்ந்தெடுத்த நமது அடியார்களை இவ்வேதத்திற்கு வாரிசுகளாக்கினோம். அவர்களில் தமக்குத் தாமே அநியாயம் செய்வோரும் உள்ளனர்; நடுநிலையாக நடப்போரும் உள்ளனர்; அல்லாஹ்வின் ஆணைப்படி நற்செயல்களில் முந்திச் செல்வோரும் உள்ளனர். இதுவே பெரும் அருளாகும்.
33. அவர்கள் நிலையான சொர்க்கங்களில் நுழைவார்கள். அங்கு தங்கக் காப்புகளாலும், முத்துகளாலும் அணிவிக்கப்படுவார்கள். அங்கு அவர்களின் ஆடை, பட்டாக இருக்கும்.
34, 35. “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே எங்களை விட்டுக் கவலையை நீக்கினான். எங்கள் இறைவன் மன்னிப்பு மிக்கவன்; நன்றி பாராட்டுபவன். தனது அருளால் நிரந்தர வீட்டில் எங்களைத் தங்க வைத்துள்ளான். இங்கு எங்களை எந்தச் சிரமமும் அணுகாது. எந்தச் சோர்வும் எங்களுக்கு ஏற்படாது” என்று அவர்கள் கூறுவார்கள்.
36. இறைமறுப்பாளர்களுக்கு நரக நெருப்பு (காத்துக்கொண்டு) இருக்கிறது. அவர்கள் மரணிக்குமாறு அவர்களின் காரியம் முடிக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அதன் வேதனை குறைக்கப்படவும் மாட்டாது. ஒவ்வொரு இறைமறுப்பாளருக்கும் இவ்வாறே கூலி வழங்குவோம்.427
37. “எங்கள் இறைவனே! எங்களை (இங்கிருந்து) வெளியேற்றுவாயாக! நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அல்லாத நற்செயலைச் செய்வோம்” என அங்கு அலறுவார்கள். “சிந்திப்பவர், சிந்திக்கும் அளவிற்கு உங்களுக்கு நாம் வாழ்நாள் வழங்கவில்லையா? எச்சரிப்பவரும் உங்களிடம் வந்திருந்தார். எனவே (வேதனையைச்) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை” (என்று இறைவன் கூறுவான்.)428
38. அல்லாஹ்வே வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிபவன். அவனே உள்ளங்களில் இருப்பதையும் நன்கறிந்தவன்.
39. அவனே உங்களைப் பூமியில் தலைமுறையினராக ஆக்கினான். இறைமறுப்பாளர்களின் இறைமறுப்பு அவர்களுக்கே கேடாகும். இறைமறுப்பாளர்களின் இறைமறுப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர வேறெதையும் அதிகரிக்காது. இறைமறுப்பாளர்களின் இறைமறுப்பு இழப்பைத் தவிர வேறெதையும் அதிகரிக்காது.
40. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திக்கும் உங்கள் இணைக் கடவுள்களைக் கவனித்தீர்களா? அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்பதை எனக்குக் காட்டுங்கள்! அல்லது அவர்களுக்கு வானங்களில் ஏதும் பங்கு உள்ளதா? அல்லது நாம் இவர்களுக்கு ஒரு வேதத்தை வழங்கி, அதிலுள்ள தெளிவான சான்றில் இருக்கிறார்களா? அவ்வாறல்ல! அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றத்தையே வாக்களித்துக் கொள்கின்றனர்” என்று கூறுவீராக!
41. வானங்களும், பூமியும் (தத்தம் பாதையிலிருந்து) விலகாதவாறு அல்லாஹ்வே தடுத்து வைத்துள்ளான். அவை விலகி விட்டால் அவ்விரண்டையும் தடுத்து வைப்பவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும், மன்னிப்புமிக்கவனாகவும் இருக்கிறான்.
42. “எச்சரிப்பவர் தங்களிடம் வந்திருந்தால் மற்ற எந்தச் சமுதாயத்தைவிடவும் மிக நேர்வழி பெற்றவர்களாக ஆகியிருப்போம் என அவர்கள் அல்லாஹ்வின்மீது உறுதியிட்டுச் சத்தியம் செய்கின்றனர். அவர்களிடம் எச்சரிப்பவர் வந்தபோது, அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகரித்தது.
43. பூமியில் கர்வம் கொள்வதற்காகவும், தீய சூழ்ச்சி செய்வதற்காகவுமே (இவ்வாறு மறுக்கின்றனர்.) தீய சூழ்ச்சி, அதைச் செய்தவர்களைத் தவிர (வேறெவரையும்) சூழ்ந்து கொள்ளாது. முன்சென்றோர் (தண்டிக்கப்பட்ட) வழிமுறையைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் வழிமுறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர். அல்லாஹ்வின் வழிமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்.
44. இவர்கள் பூமியில் பயணித்து, தமக்கு முன்னிருந்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்கள், இவர்களைவிட சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். அல்லாஹ்வை இயலாமல் ஆக்கிவிடும் எந்த ஒன்றும் வானங்களிலோ, பூமியிலோ இல்லை. அவன் நன்கறிந்தவனாகவும், ஆற்றல் மிக்கவனாகவும் இருக்கிறான்.
45. மனிதர்களின் செயல்களுக்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் எந்த உயிரினத்தையும் பூமியின்மீது விட்டுவைத்திருக்க மாட்டான். எனினும் குறிப்பிட்ட தவணைவரை அவர்களுக்கு அவகாசம் வழங்குகிறான். அவர்களின் தவணை வந்து முடிந்ததும் (தண்டிப்பான்). தன் அடியார்களை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.