தாலிபான்கள் கூட செய்தியாளர்களை சந்தித்தார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பிரதமர் 7 ஆண்டுகள் ஆகியும் செய்தியாளர்களை சந்திக்க மறுக்க காரணம் என்ன?

அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் வாயில் வந்ததை எல்லாம் வடையாக சுட்டு விடலாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவ்வாறு வடை சுட முடியாது.
அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து கேள்விகளைக் கேட்பர். தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் என்னவானது என்பர்.
கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு, ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம், சீனாவிடம் பம்முவது, டிஜிட்டல் இந்தியா, கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிப்பது, எம்.எல்ஏ. – எம்.பிக்களை விலைக்கு வாங்குவது என மீடியாக்கள் மோடியிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன.
இவற்றுக்கெல்லாம் பதில் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இயலும்.
தாலிபான்கள் பத்திரிக்கையாளர்களை தாமே வரவழைத்துச் சந்திக்கிறார்கள் எனில் அவர்கள் மீது பொது பிம்பத்தில் எவ்வாறெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதோ அவற்றுக்கு பதிலை வைத்துக் கொண்டு சந்திக்கின்றார்கள்.
தமிழகத்தை சார்ந்த தந்தி தொலைக்காட்சி கூட தாலிபான் பிரதிநிதியை பேட்டி கண்டது.
எப்போதும் ஆயுதங்களுடனே வலம் வருகிறீர்களே, இது மக்களை அச்சுறுத்துவதாகாதா? என்று கேட்டதற்கு. மன்னிக்கவும் இது போன்ற கேள்விகளை காஷ்மீரில் பாதுகாப்பு எனும் பெயரில் வலம் வரும் இந்திய ராணுவத்திடம் என்றைக்காவது கேட்டுள்ளீர்களா என்று பதிலளிக்கின்றார்.
இப்படி அவர்களிடம் ஏதேனும் ஒரு பதில் உள்ளது. மோடியிடம் அவ்வாறான பதில்களில்லை. எனவே தான் பத்திரிக்கையாளர் சந்திப்பை இத்தனை ஆண்டுகாலம் தவிர்த்து வருகிறார்.
மீடியாக்களை எதிர்கொள்ள துணிவில்லை என்பதைத் தாண்டி இதற்கு வேறு காரணம் இருக்க முடியாது.
அண்மையில் அழையா விருந்தாளியாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி செப் 23 முதல் செப் 25 வரை அங்கு தங்கியிருந்தார்.
இதில் உள்ள 65 மணி நேரத்தில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று பேசியது முதல் விமானத்திலேயே அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது வரை மொத்தமாக 20 கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இதை தினமணி உள்ளிட்ட சில ஊடகங்கள் பெருமிதத்துடன் பதிவு செய்கின்றன.
இதை எல்லாம் செய்கின்ற இந்திய பிரதமருக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கத் துணிவில்லையே?
அமெரிக்கா செல்லும் போது விமானத்தில் கோப்புகளைப் பார்வையிட்டதை பிரதமர் அலுவலகம் செய்தியாக்குகின்றது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமானத்திலேயே பத்திரிக்கையாளர் சந்திப்பையே நடத்தியுள்ளார். மோடியால் இதைக் காப்பியடிக்க முடியுமா என்று அந்த புகைப்படத்தை குறித்து காங்கிரசார் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கெல்லாம் பதில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவது தான். 56 இன்ச் மார்பு என்று மார்தட்டிக் கொள்வதில் பெருமையில்லை.
ஊடகங்களைக் கேள்வி கேட்க வைத்து அதற்கு உரிய பதிலை அளிப்பதில் தான் ஒரு பிரதமராக மோடியின் பெருமை அடங்கியுள்ளது. அதுவே ஜனநாயகமும் கூட.