மார்க்க ஆதாரங்களுக்கு எதிராக எலிக்கறி சாப்பிடலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.
ஆனால் எலியைச் சாப்பிடுவது ஹராம் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் நாம் தெளிவு படுத்தியுள்ளோம்.
இந்நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் எலியைச் சாப்பிடுவது ஹராம் என்கிறது. ஆனால் அவர்களே எலியை வளர்க்கலாம் என மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று கூறி நமது இணைய தளத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு பதிலைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
நமது இணைய தளத்தில் முன்னர் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைக் காண பின்வரும் இணைப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.
தங்களுடைய தவறான வழிகேட்டை நியாயப்படுத்த இவர்கள் எடுக்கும் முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும், இவர்கள் எப்படிப்பட்ட வழிகேட்டையும் நியாயப்படுத்தி மக்களை வழிகெடுக்கக் கூடியவர்கள் என்பதையும் இவர்களின் இந்த வாதமே தெளிவாகக் காட்டுகிறது.
”கினிப் பன்றிகள்” என்று கூறப்படும் ஒரு விலங்கினத்தை வீட்டு வளரப்பு பிராணிகளாக வளர்க்கலாமா? என்ற கேள்விக்கு அவற்றை வளர்க்கலாம். அவை பன்றி இனத்தை சார்ந்தவை இல்லை என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
”கினி பன்றிகள்” கொறித்து உண்பதால் எலிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றுதம் அதில் கூறப்பட்டுள்ளது.
இதில்தான் இவர்களின் மடைமாற்றச் சிந்தனையை புகுத்தியுள்ளனர்.
”கினிப் பன்றிகள்” – எலிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று எழுதி விட்டு அவற்றை வளர்க்கலாம் என்று கூறியதால் தவ்ஹீத் ஜமாஅத் எலி வளர்க்கலாம் என்று கூறியதாக மடைமாற்றம் செய்து தங்களின் எலிகறி ஹலால் ஃபத்வாவை நியாயப்படுத்தி மக்களை வழிகெடுக்க முனைகின்றனர்.
உண்மையில் கினிப் பன்றிகள் எலிக் குடும்பம் என்று கூறியதால் அது எலியாகிவிடுமா?
மனிதர்கள் உயிரினங்களை பல்வேறு வகைகளில் வகைப்படுத்துவார்கள்.
பாலூட்டிகள் என்ற தலைப்பில் வகைப்படுத்தும் போது ஆடு, மாடு, ஒட்டகம், பன்றி என்று வகைப்படுத்துவார்கள்.
பன்றி பாலூட்டி குடும்பம் என்று கூறியதால் அது ஆடு, மாடு,ஒட்டகங்களைப் போல் உண்பதற்கு ஹலாலானது என்று குறைந்த பட்ச மார்க்க அறிவுள்ள யாராவது வாதம் வைப்பார்களா?
முதுகெலும்பிகள் என்ற தலைப்பில் வகைப்படுத்தும் போது மனிதன், ஆடு, மாடு, ஒட்டகம், பன்றி என்றி வகைப்படுத்தினால் ஆட்டை பன்றியின் குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள் . எனவே ஆட்டை உண்பது ஹராம் என்ற யாராவது வாதிடுவார்களா?
இவ்வாறே முதுகெலம்பற்றவை, ஊன் உண்ணிகள், தாவர உண்ணிகள் என்று பல்வேறு குடும்பத்தின் கீழ் உயிரினங்களை வகைப்படுத்துவார்கள்.
உயிரினங்களை ஒரு தலைப்பின் கீழ் வகைப்படுத்தும் போது உண்பதற்கு தடுக்கப்பட்ட பிராணிகளும், தடை செய்யப்பட்ட பிராணிகளும் அந்த குடும்பத்தின் கீழ் வரும் .
அதன் அடிப்படையில்தான் ”கினி பன்றிகள்” கொறித்து உண்பதால் அது எலிக் குடும்பம் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது எலி எவ்வாறு கொறித்து உண்ணும் வகையின் கீழ் வருகிறதோ அது போன்று ”கினி பன்றி”களும் கொறித்து உண்ணும் வகையின் கீழ் வருகிறது என்ற கோணத்தில்தான் ”எலிக் குடும்பம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியதினால் கினி பன்றிகள் எப்படி எலியாக மாறும்?
முயல் என்பதும் கொறித்து உண்ணும் எலிக் குடும்பத்தைச் சார்ந்ததுதான். எனவே முயல் வளர்ப்பை எலி வளர்ப்பு என்று இவர்கள் வாதிப்பார்களா?
இந்த ”கினிப் பன்றிகள்” – ”பன்றி முயல்கள்” என்றும் சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கினி பன்றி என்று கூறுவதினால் அது எவ்வாறு பன்றி இனத்தைச் சார்ந்தது என்று கூற முடியாதோ அது போன்று அது கொறித்து உண்பதில் எலிக் குடும்பத்தைச் சார்ந்து என்பதினால் அதனை எலி என்றும் கூற முடியாது.
கோரைப்பல், வேட்டையாடும் நகங்கள், தீங்கு தரக் கூடியவை மற்றும் குறிப்பிட்டு மார்க்கம் ஹராமாக்கியவை உண்பதற்கு தடுக்கப்பட்டவை ஆகும்.
கினிப் பன்றிகளுக்கு கோரைப் பற்கள் கிடையாது. மேலும் அவை தீங்கு தரக்கூடியவைகளும் கிடையாது. அவை எலிகளும் கிடையாது. அவை தனி ஒரு இனமாகும். இவை முயலைப் போன்று தாவர உண்ணிகளாகும். எனவே இவற்றை உண்பதற்கோ வளர்ப்பதற்கோ மார்க்கத்தில் தடையில்லை.