ஏகத்துவம் – செப்டம்பர் 2013

தலையங்கம்

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம்

ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்.

பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அனைத்து வணக்கங்களிலும் “ரியா’ என்ற முகஸ்துதி, அதாவது பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கலக்கின்ற அபாயமிருக்கின்றது. என்றாலும் ஹஜ் என்ற வணக்கத்தில் இந்த முகஸ்துதி அதிகம் கலக்கின்ற வாய்ப்பிருக்கின்றது. அதனால் ஹாஜிகள் இதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

அல்குர்ஆன் 3:97

தனக்காக மட்டுமே ஹஜ் செய்ய வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதை ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் வணக்கத்தில் முகஸ்துதி எப்படியெல்லாம் கலக்கின்றது என்பதை வரிசையாகப் பார்ப்போம்.

 1. ஹஜ்ஜுக்குப் பயணம் செய்வதற்கு ஒரு மாதம், இரண்டு மாதங்கள் இருக்கும் போதே, தெரிந்த ஆட்களையெல்லாம் கண்டு, அவர்களிடம் கை கொடுத்து, “நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன்; துஆச் செய்யுங்கள்’ என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.
 2. வீடு வீடாகப் போய் பயணம் சொல்லுதல்

ஆட்களைக் கண்டு பயணம் சொல்வதுடன் மட்டும் நிறுத்தாமல் வீடு வீடாக ஏறி, இறங்கி பயணம் சொல்கிறார்கள். இவ்வாறு பயணம் சொல்பவர்கள், ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

இவர்களில் யாருக்காவது நாம் பாவம் செய்திருப்போம் அல்லவா? அதனால் இப்போதே அவர்களைச் சந்தித்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று காரணம் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன், சக மனிதனுக்குப் பாவம் செய்தால் உடனுக்குடன் தீர்த்து விடவேண்டும். ஒரு ஹஜ் பயணத்திற்காகவோ, வேறேதும் காரணத்திற்காகவோ தாமதப்படுத்துதல் கூடாது. ஏனென்றால் எந்தச் சமயத்திலும் நாம் மரணிக்கலாம். அதனால் அதைத் தாமதப்படுத்துதல் கூடாது. ஆனால் ஹஜ்ஜை முன்னிறுத்தி இவ்வாறு சொல்லி வருவது வணக்கத்தை விளம்பரத்துவதாக ஆகும். இது பகிரங்கமான ரியா எனும் முகஸ்துதி ஆகும்.

வெளிநாடு செல்வதால் நாம் திரும்பி வர முடியாமல் மரணித்து விடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம் என்றும் காரணம் கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தால் ஹஜ்ஜை விட அதிக நாட்கள் வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லும் போதும் இப்படி மன்னிப்புக் கேட்டு விட்டுச் செல்வார்கள். வேறு எதற்காக எவ்வளவு நாட்கள் பயணம் செய்தாலும் இதுபோல் செய்வதில்லை. இதிலிருந்து தாங்கள் செய்யும் இந்த முகஸ்துதியை நியாயப்படுத்த இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்

 1. விருந்து வைத்தல்

பயணம் சொன்னால் போதாது என்று ஹஜ் செல்வதற்காக விருந்தும் வைக்கின்றார்கள். ஒரு லட்சம் ரூபாயில் செய்ய வேண்டிய ஹஜ்ஜை, பொருளாதார ரீதியில், சமுதாயத்தில் பாரமாக்கி, அடுத்தவரை ஹஜ் செய்ய முடியாமல் தடுப்பதாகும். இந்த வகையில் இது பாவமாகும்.

 1. வழியனுப்பு விழா

ஹஜ்ஜுக்குச் செல்பவர் ஏதோ சாதனை படைக்கப் போவது போன்று வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கென மேடை போட்டு ஹஜ் செய்யச் செல்பவரை ஆளாளுக்குப் புகழ்கின்றனர்.

 1. பயணம் அனுப்புதல்

ஹாஜிகளை வழியனுப்ப வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரைக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒரு பெருங்கூட்டம் வாகனங்களில் செல்கின்றனர். இது போதாதென்று ஒரு கூட்டம் சென்னை வரைக்கும் செல்கின்றது. இந்தச் செலவுகளையும் ஹாஜிகளே பொறுப்பேற்க வேண்டும். இதற்கென்று பெரும் பொருளாதாரத்தை விரயமாக்குகின்றனர்.

பெரும்படை புறப்பட்டுச் சென்று சென்னையில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் போய் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் எனத் தங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையினால் அவர்கள் ஹஜ் சீசன் வந்தாலே பயந்து நடுங்கும் நிலைமை.

 1. ரயில் மற்றும் விமான நிலையங்களில் பெருங்கூட்டம்

சாதாரண பயணிகள் அனைவரும் அல்லல், அவஸ்தைப்படுகின்ற அளவுக்கு விமான, ரயில் நிலையங்களில் பெருங்கூட்டம் கூடி அடுத்தவருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் ஹாஜிகள் செல்லும் தினத்தில் விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் ஸ்தம்பித்து விடுகின்றன.

 1. மாலை மரியாதை

ஐயப்ப பக்தர்களைப் போன்று ஹாஜிகள் அனைவரும் மாலைகள் அணிந்து கொண்டு செல்கின்றனர். அந்த மாலைகளை ரயில்களின் ஜன்னல் ஓரங்களில் கட்டித் தொங்க விடுவது அதைவிடக் கொடுமை.

 1. சுவரொட்டிகள் அடித்தல்

ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம் என்று ஹாஜிகளின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துகின்றனர். ஹஜ் காலம் வந்து விட்டாலே ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்துகின்றனர். ஹஜ் வணக்கம் விளம்பரமாக்கப்படுகின்றது என்பதற்கு இதை விட ஆதாரம் தேவையில்லை.

 1. இந்தக் காரியங்கள் அனைத்தையும் ஹஜ் பயணம் முடித்து விட்டு ஹாஜிகள் திரும்ப வரும் போதும் செய்கின்றனர். வழியனுப்பு விழாவிற்குப் பதிலாக வரவேற்பு விழா நடக்கின்றது. மற்ற அனைத்தும் அப்படியே தொடர்கின்றது.
 2. ஹாஜிகளின் துஆ கபூலாகும் என்ற நம்பிக்கையில் ஹாஜிகளிடம் சென்று, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் கைலாகு கொடுத்து, துஆச் செய்யச் சொல்கின்றனர். இது தொடர்பாக வரும் ஹதீஸ் பலவீனமானதாகும்.
 3. வரவேற்பு விழா

“ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக!’ என்று மறுபடியும் போஸ்டர் அடித்து வரவேற்பு விழாக்கள் நடத்துகின்றனர். தெரு முழுக்க தோரணங்கள் தொங்க விட்டு, மாப்பிள்ளை ஊர்வலம் போல் ஹாஜிகளை காரில் வைத்து ஊர்வலம் நடத்துகின்றனர்.

 1. ஹாஜி என்ற அடைமொழி

டாக்டர், இஞ்சினியர் என்று பெயருக்கு முன்னால் போடுவது போன்று ஹாஜி என்ற அடைமொழியைப் போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் கையெழுத்துப் போடும் போது கூட, ஹாஜி சுல்தான், ஹாஜி மஸ்தான் என்று கையெழுத்துப் போடுவது கொடுமையிலும் கொடுமை.

இவை அனைத்தும் எதைக் காட்டுகின்றன? ஹஜ் எனும் வணக்கத்தை இவர்கள் விளம்பரப்படுத்துவதைத் தான். இப்படி வணக்கத்தை விளம்பரப்படுத்தினால், பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமல் செய்தால் அதன் விபரீதம் என்ன?

முதன்முதலில் மறுமையில் அல்லாஹ் அடியார்களுக்குக் காட்சியளிப்பான். முகஸ்துதிக்காக இந்த உலகில் வணக்கங்கள் புரிந்தவர்கள் அப்போது ஸஜ்தாச் செய்ய இயலாமல் ஆகிவிடுவார்கள். இதை கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சஜ்தா செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 4919

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார்.  அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3537

ஹஜ் என்ற இந்த வணக்கம் இப்படி விளம்பரம் ஆவதால் நரகம் தான் கூலியாகக் கிடைக்கின்றது. அல்லாஹ் காப்பாற்றுவானாக!

வழிகெடுக்கும் வழிகாட்டிகள்

தற்போது ஆங்காங்கே ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, நபிவழிக்கு மாற்றமான விளக்கங்களைத் தருகின்றார்கள். தலைப்பிலேயே ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் நடத்தும் விளக்க வகுப்புகளில் கலந்து கொண்டு ஹஜ்ஜுக்குச் சென்று வருவபர்கள் எப்படி தூய்மையான அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்? சென்று வந்த பின்னர் எப்படி ஏகத்துவக் கொள்கையில் இருப்பார்கள்? எனவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் நபிவழி ஹஜ் விளக்க வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள்.

அதுபோன்று ஹஜ் வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்களும் இணைவைப்புக் கொள்கை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஹாஜிகளுக்குத் தவறான வழியைக் காட்டுகின்றார்கள். பித்அத்தான செயல்களையும், ஷிர்க்கான விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இவற்றை விட்டுத் தப்பிக்க ஒரே வழி, “நபிவழியில் நம் ஹஜ்’, “ஹஜ் – உம்ரா வழிகாட்டி’ போன்ற நமது ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நூல்களைப் படியுங்கள்; நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.

தமிழக முஸ்லிம்களில் பலர், யா முஹ்யித்தீன், யா காஜா முஈனுத்தீன் என்று அழைத்துப் பிரார்த்திப்பவர்களாக உள்ளனர். இது மாபெரும் இணை வைப்பாகும். இந்தப் பாவத்தைச் செய்தவரை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

அல்குர்ஆன் 5:72

இப்ராஹீம் நபி அவர்கள் இந்த இணைவைப்பை எதிர்த்துத் தான் போரிட்டார்கள். இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவூட்டும் இந்த ஹஜ் வணக்கத்தைச் செய்யும் ஹாஜிகளே! ஷிர்க் எனும் கொடிய பாவம் கலக்காத தூய ஹஜ் செய்யுங்கள்.

சிலர் ஹஜ்ஜுக்குச் சென்று வந்த பின்னரும் பொட்டல்புதூருக்கும், நாகூருக்கும், அஜ்மீருக்கும் சென்று பாவ மூட்டைகளைச் சுமந்து வருகின்றனர். இணைவைப்பில் வீழ்ந்து கிடக்கின்றனர். இத்தகையவர்கள் ஹஜ் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவே ஹஜ்ஜுக்குப் பிறகு, மரணிக்கின்ற வரை அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தியுங்கள்; முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்!    நரகமே தங்குமிடம்!

பெண் ஜின்னின் காமெடி?

ரிஃபாஆ பின் அப்திஸ்ஸாலிஹ் (அப்துஸ்ஸாலிஹ் உடைய மகள் ரிஃபாஆ) என்ற ஒரு பெண் ஜின், பெண்களின் கூட்டத்துடன் கண்மணி நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தது.

ஒரு சமயம் அந்த பெண் ஜின் வழமையாக வரும் நேரத்தை விட சற்று நேரம் கழித்து கண்மணி நபி (ஸல்) அவர்களைக் காண வந்தது. ஏன் தாமதம்? என்று கண்மணி நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு அந்தப் பெண் ஜின் பின்வருமாறு விடையளித்தது.

எங்களில் ஒரு ஜின் இந்தியாவில் இறந்து விட்டது. மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன். அதன் காரணமாக தாமதமாகி விட்டது என்று கூறி ஓர் அழகிய நிகழ்ச்சியை நகைச்சுவையாக விவரிக்க ஆரம்பித்தது. அந்தப் பெண் ஜின் நகைச்சுவையாக அந்த நிகழ்வைச் சொன்னதும் அதைக் கேட்ட கண்மணி நபி (ஸல்) அவர்கள் ரொம்பவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

(தகவல்: தாரீகே ஜுர்ஜான், ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் இஸாபா)

இது “அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா’ என்ற பத்திரிகையில் பிப்ரவரி 2013 இதழில் வெளியாகியுள்ளது. பெண் ஜின் கூறிய நகைச்சுவை என்ற தலைப்பில், தாரீக் ஜுர்ஜானி வாயிலாக ஜாபிர் (ரலி) அறிவித்தார் என்று படு அசத்தலில் ஒரு பக்கா ஹதீஸைப் போன்று துவங்குகின்றது. இந்தத் துவக்கமும் தோரணையும் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடும் போல் தோன்றுகிறது. ஆனால் உள்ளே போனால், மீண்டும் அதே துர்நாற்றம் என்பது போல் வழக்கமான பொய் ஹதீஸையே அவிழ்த்து விடுகின்றனர்.

இந்தப் பொய்ச் செய்தியைப் பதிவு செய்பவர்கள் கொஞ்சம் கூறாகப் பதிவு செய்திருக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இவர்கள் பதிவு செய்த பொய்ச் செய்தியில் பாதி விடுபட்டுள்ளது.

கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று இவர்கள் விட்டு விட்ட கேடு கெட்ட ஹதீஸின் மிச்சத்தை நாம் நிரப்பி விட்டு நமது சாட்டையைச் சொடுக்குவோம்.

“மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன்’ என்பதிலிருந்து துவங்குவோம். இங்கிருந்து துவங்குவதற்குக் காரணம், மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன் என்று இவர்கள் தவறாக மொழி பெயர்த்துள்ளதால் தான். இதற்குரிய மூலத்தில், “தஃஸியத்’ என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்கு ஆறுதல் கூறுதல் என்று பொருள். இதன் வேர்ச் சொல் “அஸ்யுன்’ என்பதாகும். இதற்குப் பொறுமை கொள்ளுதல் எனப் பொருள்.

இந்த ஹதீஸை மொழிபெயர்த்தவர் “இஸ்ஸத்’ – கண்ணியம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை என நினைத்து, கண்ணியப்படுத்துதல் என்று மொழிபெயர்த்துள்ளார். இறந்தவர் வீட்டில் கண்ணியப்படுத்துவதற்கு என்ன இருக்கின்றது? அதனால் இது மொழியாக்கத்தில் உள்ள பிழை.

இப்போது அந்தச் சம்பவத்திற்கு வருவோம்.

“நான் மய்யித் வீட்டினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றிருந்தேன். என்னுடைய வழியில் நான் கண்ட ஓர் ஆச்சரியத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று அந்த ஜின் கூறியது. “நீ என்ன கண்டாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இப்லீஸை ஒரு பாறையில் நின்று தொழக் கண்டு, நீ தான் இப்லீஸா? என்று கேட்டேன். அவன், ஆம் என்றான். “நீ ஆதமை வழிகெடுத்துவிட்டு இப்போது (இதை வேறு) செய்கிறாய். (இதை வேறு) செய்கிறாய்’ என்று சொன்னேன். “இ(வ்வாறு பேசுவ)தை நீ விட்டு விடு’ என்று சொன்னான். “(இந்த லட்சணத்தில்) நீ தொழ வேறு செய்கின்றாய்?’ என்று நான் சொன்னேன். “ஆம்! நல்லடியாரின் மகள் ஃபாரிஆவே! தான் செய்த சத்தியத்தை இறைவன் நிறைவேற்றும் போது எனக்கு மன்னிப்பு அளிப்பதை நான் ஆதரவு வைக்கிறேன்’ என்று இப்லீஸ் பதிலளித்தான். அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது போன்று நான் பார்த்தது இல்லை.

இதுதான் இந்த அற்புதமான (?) ஹதீஸின் முழுப்பகுதி.

ஆனால் கட்டுரையாளர், பன்னூலாசிரியர் என்று போட்டுள்ளனர். அவருக்கு அந்த நகைச்சுவை என்னவென்று தெரியவில்லை. நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்; அதனால் நாமும் சிரிக்க வேண்டும் என்று காரணம் சொல்கின்றார்.

சொல்வது பொய் தான். அதைக் கூட சரியாகச் சொல்லவில்லை என்றால் இப்படித் தான் அசடு வழிய வேண்டி வரும்.

இந்தச் செய்தியை இப்னுல் ஜவ்ஸி அவர்கள், மவ்லூஆத் – இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று நூலில் பதிவு செய்து விட்டு, “இது நடப்பதற்கே சாத்தியமற்ற ஒரு நிகழ்வு, இந்தத் தொடரில் இடம்பெறுகின்ற இப்னு லஹீஆ நம்பத்தகுந்தவர் அல்லர். பொய்யர்கள், பலவீனமான வர்களிடமிருந்து செய்திகளை மறைத்து அறிவிப்பவர்’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதே போல் இமாம் சுயூத்தி அவர்கள் தனது நூலான, அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் (புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட போலி முத்துக்கள்) நூலில் இந்தச் செய்தியைப் பதிவு செய்து விட்டு, இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள முன்கிர் என்பவர் யாரெனத் தெரியவில்லை என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மீஸானில் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கின்றார்கள்.

இந்த முன்கிர் பின் ஹகம் என்பவர் தான் இந்த ஹதீஸை இட்டுக்கட்டியிருக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் அவர்கள் லிஸானும் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

இப்படி ஒரு பொய்யான செய்தியைத் தான் பன்னூல் ஆசிரியர் (?) இந்த மாத இதழில் எழுதியிருக்கின்றார். “தகவல்’ என்று பன்னூலாசிரியர் அசத்தலாகப் போட்டிருப்பது போல் தாரீக் ஜுர்ஜான், இஸாபாவிலும் இந்தச் செய்தி இடம்பெறுகின்றது.

தாரீக் ஜுர்ஜானில் இதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் இஸாபாவில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்து அதன் அடிக்குறிப்பில், “இதன் அறிவிப்பாளர் தொடரில் யாரெனத் தெரியாதவர்கள் இடம்பெறுகின்றார்கள்” என்று குறிப்பிடுகின்றார். அத்துடன் இப்னுல் ஜவ்ஸீயின் மேற்கண்ட கூற்றையும் சேர்த்துக் கூறுகின்றார்.

இப்படி ஒரு பொய்யான செய்தியை, ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் இஸாபா என்று ஆதாரம் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இத்துடன் பன்னூலாசிரியர் நிற்கவில்லை. “புன்னகை பூத்த பூமான் நபியுல்லாஹ்” என்ற தலைப்பில் இன்னொரு பொய்ச் செய்தியையும் அதே தொடரில் எழுதித் தள்ளியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாததைச் சொல்லி நரகத் தண்டனையை அனுபவிப்பதில் இந்த எழுத்தாளருக்கு எவ்வளவு வேகமும் ஆர்வமும் உள்ளது என்று எண்ணி நாம் வேதனையடைய வேண்டியுள்ளது.

அந்த ஹதீஸை இப்போது பார்ப்போம்.

நாங்கள் ஒருமுறை கண்மணி நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்தோம். மக்காவிற்குச் செல்லும் வழியில் அரஜ் என்னுமிடத்தில் தங்க நேரிட்டது. எனவே தனித்தனியே கூடாரம் அமைத்துக் கொண்டோம். நான் என்னுடைய கூடாரத்திலிருந்து புறப்பட்டு கண்மணி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்ற போது, அவர்கள் தங்கள் கூடாரத்தில் காணப்படவில்லை. தூரத்தில் தெரியும் ஒரு மலையில் தனித்து அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களை அடைவதற்கு நெருங்கிவிட்ட போது, கூச்சலும் இரைச்சலுமான சத்தம் என் காதில் விழுந்ததும் ஏதோ ஒரு மறைவான நிகழ்ச்சி நடக்கின்றது என்ற நான் யூகித்துக் கொண்டேன். அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டேன். ஏராளமான மனிதர்கள் உரத்த குரலில் பேசிக் கொள்வதும் சண்டையிட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

சற்று நேரம் கழித்து கண்மணி நபி (ஸல்) அவர்கள் புன்னகை பூத்த முகத்தினராக என்னிடம் வந்தார்கள். நான் அங்கேயே விசாரித்தேன். “யா ரசூலுல்லாஹ், இதென்ன கூச்சல்என்று கேட்டேன். அதற்கு கண்மணி நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம் ஜின்களுக்கும் காபிர் ஜின்களுக்கும் இடையே குடியிருப்பு விஷயத்தில் தகராறு இருந்தது. அவ்விருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தீர்ப்புக்காக என்னிடம் வந்தன. முஸ்லிம் ஜின்கள் ஹபஸ் எனும் இடத்திலும் காபிர் ஜின்கள் கௌர் எனும் இடத்திலும் குடியிருக்கச் சொல்லி தீர்ப்பளித்தேன். இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர்என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: பிலால் பின் காரிஸ் (ரலி), தகவல்: கலாமுல் முபீன்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்கள் அல்லுஅஃபா வல்மத்ரூகீன் (பலவீனமானவர்கள், விடப்பட்டவர்கள்) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

இவரது ஹதீஸ் வெறுக்கப்பட்டது; இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அபூதாலிப் தெரிவிக்கின்றார்.

இவரிடமிருந்து எதையும் அறிவிக்காதே என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அபூகைஸமா தெரிவிக்கின்றார்.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக உஸ்மான் பின் ஸயீத் குறிப்பிடுகின்றார்.

இமாம் அபூதாவூதிடம் இவர் பற்றிக் கேட்கப்பட்ட போது, “இவர் பொய்யர்களில் ஒருவர்’ என்று சொன்னதாக அபூஉபைத் அல் ஆஜுரி தெரிவிக்கின்றார்.

மேற்கண்ட இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஹாபிழ் மிஸ்ஸி அவர்களின் தஹ்தீபுல் கமாலில் இடம்பெறுகின்றன. ஷைகு நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அல்லயீஃபா நூலில் இதை 2074வது ஹதீஸாகக் கொண்டு வந்து, “இது முற்றிலும் பலவீனமான ஹதீஸ். இதில் இடம்பெறும் கஸீர் பின் அப்துல்லாஹ் விடப்பட்டவர். ஹைஸமீ அவர்கள் இதே காரணத்திற்காக இதைக் குறையுள்ளது என்று கூறியுள்ளார்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அறிஞர்களின் கருடப் பார்வையையும் கடுமையான ஆய்வையும் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யான ஹதீஸ் பதிந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாகவும் கண்ணும் கருத்துமாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. அந்த மாமனிதரின் சொல்லுக்கு எத்தனை பாதுகாப்பு, எத்தனை முஸ்தீபு என்று எண்ணுகையில் மெய்சிலிர்க்கின்றது.

ஆனால் இந்தப் பன்னூல் ஆசிரியர்களும், பத்திரிகைகளும் அந்த மாமனிதரின் விஷயத்தில் எவ்வளவு மெத்தனப் போக்கில் இருக்கின்றார்கள்? பன்னூல் ஆசிரியர் கொண்டு வந்த ஹதீஸ்களைப் பார்க்கும் போது இவருக்கு ஹதீஸ் ஞானம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அடுத்த நூலிலிருந்து அப்படியே காப்பி அடித்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

இவருக்கு முஸ்லிம் நூலில் இடம் பெறும், ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

“என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் இங்கு சமர்ப்பிக்கின்றோம். இறைவனை அஞ்சுமாறு இவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 15

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறைநேசர்கள் என்றால் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்தச் சோதனையிலிருந்தும் காப்பாற்றி விடலாம்; நாம் தவறு செய்து விட்டால் கூட அல்லாஹ்விடம் அவர் பரிந்து பேசி, நமக்கு சொர்க்கத்தை வாங்கித் தந்து விடுவார் என்றெல்லாம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறைநேசருக்கெல்லாம் பெரிய இறைநேசரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தில் வாழும் போது அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அதிகாரம் என்ன? என்பதைத் தெளிவாக விளக்கக்கூடிய சம்பவம் உஹதுப் போரில் நடந்த சம்பவம். அந்த உஹதுப் போரில் நபி (ஸல்)  அவர்கள் செய்த ஒரு செயலை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான்.

வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அதிகாரம்

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, “நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். ஆனால் நடந்தது என்ன? அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இறைவன் கூறிவிட்டான். மேலும் உஹதுப் போரில் எதிரிகளுக்கு வெற்றியையும் வழங்கினான். முஸ்லிம்களின் தரப்பில் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தினான்.

உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது, எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். (முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (3:128) என்ற வசனம் இறங்கியது

இந்தச் சம்பவம் முஸ்லிமில் 3346வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை யாரையும் சபிப்பதற்காகச் சொல்லவில்லை. தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனையைத் தாங்க முடியாமல் இந்த வார்த்தையைச் சொல்லி விடுகிறார்கள். ஆனாலும் அல்லாஹ் இதனை அனுமதிக்கவில்லை.

முஹம்மது, என்னுடைய செய்தியை எடுத்துச் சொல்பவராக இருந்தாலும் சரி தான், எனக்கு விருப்பமானவராக இருந்தாலும் சரிதான். என்னுடைய அதிகாரத்தில் யாரும் பங்காளியாக – கூட்டாளியாக முடியாது. எதிரிகளைத் தோற்கடிப்பதா? வெற்றி பெற வைப்பதா என்பதைத் தீர்மானிப்பது உம்முடைய கையில் இருக்கிறதா? அவர்கள் உம்மை அடித்துக் காயப்படுத்தியதால் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்பதை நீர் தீர்மானிக்கக் கூடியவரா? என்று அல்லாஹ் கடுமையாகக் கண்டிப்பதை நாம் பார்க்கிறோம்.

இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட துன்பத்தின் தன்மையை அல்லாஹ் பார்க்கவில்லை. அவர்கள் பயன்படுத்திய வார்த்தையைத் தான் பார்க்கிறான். “இவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிக் கூறலாம்? ஒருவரை வெற்றி பெற வைப்பதும், தோற்க வைப்பதும் எனது அதிகாரமல்லவா? அதில் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையிடலாம் என்று உணர்த்திடவே “அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” எனக் கூறுகிறான்.

நம்முடைய நேசராயிற்றே! உயிர் போகும் அளவுக்கு வேதனைப்படுகிறாரே! அந்த நேரத்தில் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றெல்லாம் அல்லாஹ் விட்டுவிடவில்லை. எந்த நேரத்திலும் அடிமைகள், அவர்களின் நிலைக்கு ஏற்ற வார்த்தைகளைத் தான் பேச வேண்டுமே தவிர அல்லாஹ்வுக்கே உரித்தான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று கற்றுத் தருகிறான்.

என்னுடைய அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் கிடையாது. நான் நினைத்தால் அவர்களுக்கு நேர்வழியை வழங்கி அவர்களை மன்னிப்பேன். அவர்களைத் தண்டிப்பதும் அவர்களை மன்னித்து விடுவதும் என்னுடைய கையில் உள்ளது. உம்மை அடித்ததற்காக நீர் என்னிடம் பாதுகாப்பு தேடியிருக்கலாம்; உதவி தேடியிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று சொல்கின்ற அதிகாரத்தை உமக்கு வழங்கவில்லை என்று கடுமையாகக் கண்டிக்கிறான்.

இதுபோன்ற வார்த்தைகளைக் கூட சொல்லக்கூடாது என்று தூதரையே இறைவன் கண்டித்திருக்கும் போது, இந்த அவ்லியா குழந்தையைத் தருவார், செல்வத்தைத் தருவார், நமது பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பார், நோய்களைக் குணப்படுத்துவார், நிம்மதியைத் தருவார் என்று நாம் எப்படி சொல்ல முடியும். இது அவனுடைய அதிகாரத்தில் நாம் தலையிடுவதாக இல்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே இந்த ஆற்றலை, அதிகாரத்தைக் கொடுக்காத போது, நாம் யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள் என்று நினைத்திருக்கிறோமோ அவர்களுக்கு எப்படிக் கொடுப்பான்? நபி (ஸல்) அவர்களுடைய கால் தூசுக்குச் சமமாகாத இந்த அவ்லியாக்களுக்கு எப்படி தனது அதிகாரத்தில் பங்கு கொடுப்பான்?

நபிகள் நாயகம் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்த விதத்திலும் சமமாகாத, இறந்தவர்களிடம் நாம் நமது தேவைகளைக் கேட்கிறோம். நேர்ச்சை செய்கிறோம். மன அமைதிக்காக அங்கேயே படுத்து உறங்குகின்றோம். அவர்களுடைய அடக்கத்தலங்களை கஅபாவை தவாஃப் செய்வது போன்று சுற்றி சுற்றி வருகிறோம்.

கோயில்களில் தெய்வங்களைத் தேர்களில் வைத்து ஊர்வலம் வருவதைப் போல, நாமும் சந்தனக்கூட்டை வைத்துக் கொண்டு விழா எடுத்து வருகின்றோம். கடவுளாக அவர்களை நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் சிந்திக்க வேண்டாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வார்த்தையைச் சொல்வதற்கே அனுமதிக்கவில்லை எனும் போது, நாம் ஒருவரைப் பார்த்து, இவர் அவ்லியா என்றோ, அவர் நமக்கு நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்றோ சொல்வதற்கு நமக்கு அல்லாஹ் அனுமதிப்பானா? அதனைச் சகித்துக் கொள்வானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்வழிப்படுத்தும் அதிகாரம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் தான். நபிகளாரை எடுத்து வளர்த்ததும் அவர் தான். நபிகளார், தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தந்தை இறந்து விடுகின்றார்கள். எட்டு வயதில் தாயும் இறந்து விடுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனாதையாக ஆனவுடன் அவர்கள் பாட்டனார் அப்துல் முத்தலிபுடைய பராமரிப்பில் தான் வளர்ந்தார்கள். அதற்குப் பிறகு அபூதாலிப் அவர்கள் நபிகள் நாயகத்தைத் தம்முடைய பராமரிப்பில் எடுத்து வளர்க்கிறார்கள். இப்படி அவர்களை வளர்த்து ஆளாக்கி, வியாபாரத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்களை செல்வந்தராக ஆக்கி, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவர் தான் அபூதாலிப்.

அந்தச் சமூகத்தில் நபிகளாருடைய குலம் தான் மிகப் பெரிய அந்தஸ்து உடையது. குரைஷிக் குலத்தினர் தான் மிக உயர்ந்த ஜாதியினராக – அந்தஸ்து உடையவர்களாகக் கருதப்பட்டனர். அந்தக் குலத்தின் முக்கியமான பிரமுகராக அபூதாலிப் அவர்கள் இருந்ததால் நபிகளார் மீது யாரும் கை வைக்கவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கும் வரை, நபியவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை மட்டுமே மக்கா காஃபிர்கள் வேதனை செய்தார்கள்; துன்புறுத்தினார்கள். ஆனால் நபியவர்கள் மீது கை வைப்பதற்குப் பயந்தார்கள்.

அபூதாலிப் மரணமடைந்த பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தார்கள்; தைரியம் பெற்றார்கள்; அவர்களை அடிக்கத் திட்டமிட்டார்கள். அந்த அளவுக்கு அபூதாலிபிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்றிக் கடன்பட்டிருந்தார்கள்.

மரண வேளையில், கட்டிலில் படுத்த படுக்கையாக அபூதாலிப் கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம் அறிவுரை சொல்வதற்காக வருகிறார்கள். அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு “நீங்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக சிபாரிசு செய்கிறேன். நீங்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நான் ஏதாவது அல்லாஹ்விடத்தில் உங்களுக்காகப் பரிந்து பேச முடியும். இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் அவனிடத்தில் வாய் திறக்க முடியாது’ என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அபூஜஹ்ல், அபூதாலிபே!  உன்னுடைய அப்பன் பாட்டன்மார்கள் இருந்த கொள்கையை விட்டு விட்டுப் புதிய கொள்கைக்குப் போய்விடப் போகிறீரா? முன்னோர்களுடைய மார்க்கம் வேண்டுமா? அல்லது பிள்ளைகளுடைய மார்க்கம் வேண்டுமா? என்று சொல்லி அவருடைய மனதில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான்.

கடைசி வரைக்கும் நபிகளாருடைய பேச்சு எடுபடாமல் போனது.  இறுதியில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்னை வற்புறுத்தாதே! நான் என்னுடைய அப்பன் பாட்டன்மார்களுடைய மார்க்கத்திலேயே இருந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிடுகிறார். இறுதியில் இணைவைத்த நிலையிலேயே இறந்து விடுகிறார். நபியவர்களுக்கு இவ்வளவு பக்கபலமாக இருந்தும், அவர்களுக்கு ஆதரவாக இருந்தும் சத்திய மார்க்கம் அவருடைய உள்ளத்தைச் சென்றடையவில்லை. இதோ அந்தச் சம்பவம்:

முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்‘ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லைஎன்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லி விட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரைஎன்று சொன்னார்கள். அப்போது தான், “இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லைஎன்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், “(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாதுஎன்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

நூல்: புகாரி 3884

அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே இறந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நாம் யார் யாருக்கெல்லாமோ இஸ்லாத்தை எடுத்துரைத்தோம். அவர்களெல்லாம் இஸ்லாத்தில் நுழைந்து விட்டார்கள். ஆனால் நம்முடன் நகமும் சதையுமாக இருந்து, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து, நமக்கு எல்லா உதவிகளையும் செய்த, நம்முடைய எல்லா விஷயங்களையும் அறிந்த நம்முடைய பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று கவலை அடைந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் இந்த வசனத்தை (28:56) அல்லாஹ் இறக்குகிறான். நீர் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறீர். உம்முடைய பணி எடுத்துச் சொல்வது மட்டும் தான். உள்ளத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது உம்முடைய பணி அல்ல. நீர் சொன்னதால் மட்டுமே அவர் நேர்வழிக்கு வந்து விடுவாரா? நான் நாடியவருக்கு நேர்வழி காட்டுவேன். உம்முடைய பெரிய தந்தையாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நேர்வழி காட்டிவிட மாட்டேன். அதே நேரத்தில் உம்மைக் கொல்வதற்கு ஒருவன் வருவான். அவனுக்கு நான் நேர்வழி காட்டுவேன். ஒருவரை நேர்வழிக்குக் கொண்டு வருவதும், அவரை வழிகேட்டில் விடுவதும் என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. இதற்காக நீர் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அடுத்ததாக, நான் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கோருவேன் என்று தம்முடைய பெரிய தந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்களே அதனையும் கண்டித்து அல்லாஹ் வசனத்தை (9:113) இறக்குகிறான். இணை வைத்தவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடக்கூடாது என்று நான் தடுத்து வைத்திருக்கிறேன். இப்ராஹீம் நபியே அவருடைய தந்தைக்காகப் பாவமன்னிப்பு தேடிய போது அதைத் தடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது நீர் எவ்வாறு உம்முடைய பெரிய தந்தைக்காகப் பாவமன்னிப்பு தேடுவதாக வாக்குறுதி கொடுக்கலாம்? என்று இறைவன் கூறுகிறான்.

எதற்காக அல்லாஹ் இந்தச் சம்பவத்தை நமக்குச் சொல்கிறான்? ஏன் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறான்? எதற்காக இந்தச் செய்தியை வரலாற்று நூல்களில் அல்லாஹ் பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? நபியாக இருந்தாலும் அவரால் ஒருவனுக்கு நேர்வழி காட்ட முடியாது. இறைவனால் மட்டுமே நேர்வழி காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

ஷெய்கு பார்த்தாலே நேர்வழி கிடைக்குமா?

இன்றைக்கு ஷெய்கு, முரீது என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர் பார்த்தாலே நமக்கு நேர்வழி கிடைத்து விடும் என்று சொல்கிறார்கள். ஷெய்கு நமக்கு அறிவுரை சொன்னால் போதும்; அதைக் கேட்டாலே நம்முடைய உள்ளத்தில் நேரடியாகப் போய் பதிந்து, நாம் நேர்வழி பெற்று விடுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெரிய தந்தையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பிரச்சாரம் அபூதாலிபின் உள்ளத்தில் பதிந்து நேர்வழி பெற்றாரா? அவர்களுடைய பிரச்சாரம் அவருடைய காது வரைக்கும் போனதே தவிர அவருடைய உள்ளத்தைச் சென்றடையவில்லை. ஆனால் இவர்கள் ஷெய்கு எனப்படுபவர்களை நபிமார்களுக்கும் மேலாக சக்தி வாய்ந்தவர்களாக நினைக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த வரைக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருந்தார்கள். பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரவில்லை.

நபிகளார் மக்காவை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டு மதீனாவிற்குச் சென்றார்கள். அப்போது தான் மக்காவிலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள். ஆனால் மக்காவில் அப்போது இஸ்லாத்தைச் சொல்வதற்கு நபியவர்கள் அங்கு இல்லை. நபியவர்கள் அங்கு இருக்கும் போது பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களை ஏற்றுக் கொண்டவர்களும் ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார்கள். ஒரு சிலர் தான் மிஞ்சியிருந்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் மக்காவில் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகமானது. அல்லாஹ் நினைத்தால் யாரையும் இஸ்லாத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தால் தான் இஸ்லாத்திற்கு அதிகமான மக்கள் வருவார்கள். நபிகளார் ஊரை விட்டுச் சென்றதால் மக்காவில் உள்ளவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் காஃபிராகவே மரணித்து விடுவார்கள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் நபிகளார் மக்காவில் இல்லாத போதே அந்த மக்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது. எந்த அளவுக்கென்றால் அல்லாஹ் தன்னுடைய செய்தியை அவர்களுடைய காதுகளிலும் கொண்டு போய்ச் சேர்த்து, அவர்களுடைய உள்ளத்திலும் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது இஸ்லாம் வளர்ந்ததை விட அவர்கள் இல்லாத போது மிக வேகமாக வளர்ந்தது. ஆக நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் இருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறதா? இல்லையா?

அல்லாஹ்வுடைய தூதரை நேரடியாகப் பார்த்து, அவர்களுடைய பிரச்சாரத்தை நேரடியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மக்கள் இஸ்லாத்திற்கு வரவில்லை எனும் போது, ஷெய்கு, ஆன்மீகு குரு என்றெல்லாம் ஊரை ஏமாற்றுபவர்கள் பார்த்தவுடன் ஹிதாயத் கிடைத்து விடும் என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பது விளங்கவில்லையா?

யாரும் யாருக்கும் நேர்வழி காட்டிவிட முடியாது. இன்றைக்கு நாமும் இணை வைப்பு, பித்அத் போன்றவற்றிற்கு எதிராக எவ்வளவோ அடுக்கடுக்கான ஆதாரங்களை வைக்கிறோம். குர்ஆனையே அவர்களிடமும் கொண்டு காட்டுகிறோம். எல்லோரும் திருந்துகின்றார்களா? நேர்வழி பெறுகிறார்களா? அல்லாஹ் சிலருடைய உள்ளங்களில் முத்திரை வைத்துவிட்டான். பிறகு எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

இன்னும் சிலர் நம்முடைய பிரச்சாரத்தைக் கேட்டு, “குர்ஆன் சொல்வதை நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். குர்ஆன் ஆயத்துகளை இவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். நாம் அதன்படி நடக்கத் தான் வேண்டும்’ என்று தங்களை திருத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

 ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி, வேறு எந்த நபிக்கும் இந்த அதிகாரம், அதாவது ஒருவனை நேர்வழிப்படுத்தக்கூடிய அதிகாரம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தொடர்: 2

பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்

பல்லி திட்டமிட்டுத் தான் தீக்குண்டத்தை நோக்கி ஊதியது என்பது ஜாக்கின் அல்ஜன்னத் ஏப்ரல் 2013 இதழின் வாதம். அதை நிலைநிறுத்துவதற்கும் நிரூபிப்பதற்கும் ஒரு நீண்ட விளக்கவுரையை, அடுக்கடுக்கான அசத்தல் ஆதாரங்களை (?) மே மாத இதழில் அள்ளி வைத்திருந்தது. அதை அப்படியே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா? என்ற தலைப்பில் சென்ற இதழில் வெளியான எமது கட்டுரையைப் படித்த சில சகோதரர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களின் அந்த நெருப்புக் குண்டத்தை ஊதிய பல்லி செய்த தவறுக்கு மற்ற பல்லிகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்ற போது அந்தப் பல்லியை விட்டு விட்டு மற்ற பல்லிகளை அடிப்பது, அடிக்கச் சொல்வது சரியானதாகத் தெரியவில்லையே! என்று கேட்டார்கள். அவர்கள் எழுதியுள்ள நூலிலும் இதைத் தான் கூறியிருந்தார்கள். (பார்க்க: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?)

ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. எனினும் ஒரு விஷயத்தைப் பற்றி அறியும் போது முழுமையாக அறிய வேண்டும். எல்லா விஷயங்களிலும் அதனை ஒட்டியுள்ள பல அம்சங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் இணைத்துத் தான் விளங்க வேண்டும். ஒருவர் செய்த நன்மையோ, பாவமோ மற்றவர்கள் மீது விழாது என்பது தான் நிதர்சமான உண்மையாகும். இந்த அடிப்படையால் தான் உலகின் மிகப் பெரும் மதமான கிருஸ்துவத்தின் அஸ்திவாரமே ஆடிப் போகின்றது. மற்றவர்கள் செய்த பாவங்களையெல்லாம் இயேசு சுமந்து கொண்டார் என்பது அடிப்படையில் பொருத்தமற்ற வாதமாகும். இதனாலேயே கிருஸ்தவம் சீரிய சிந்தனையால் குத்திக் கிழிக்கப்பட்டு சிதறிச் சின்னாபின்னப்பட்டுப் போனது. தவறு செய்தவர்களை விட்டு விட்டு அடுத்தவர்களைத் தண்டிப்பதாலேயே அல்லது அடுத்தவர்களின் பாவங்களைத் தான் சுமந்து கொள்வதாகக் கூறுவதாலேயே பல தத்துவங்கள் உலகில் செயலிழந்து மூலையில் போய் முடங்கிக் கொண்டன. இதிலிருந்து இஸ்லாம் தனித்தன்மை கொண்டதாலேயே ஓங்கி வளர்ந்து வருகின்றது. இதனை விளங்குவதுடன் இன்னொன்றையும் சேர்த்துக் கொண்டால் விஷயம் முழுமையடைந்து விடும். சில சமயங்களில், சொற்ப நேரங்களில் ஒருவருடைய செயல்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது தான் இன்னொரு விஷயமாகும். விதிவிலக்காக ஒருசில சமயங்களில் இவ்வாறு நிகழலாம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கான ஒருசில சான்றுகளை இங்கே நான் தருகிறேன்.

2:40 இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவுகூருங்கள். நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மேலும் நீங்கள் எனக்கே அஞ்சுவீர்களாக!

(மேலும் 2:47, 2:63, 2:64 ஆகிய வசனங்கள்)

இங்கே பாருங்கள். உங்களுக்கு நான் செய்த அருட்கொடைகள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் பார்த்து மேலுள்ள வசனங்கள் பேசுகின்றன. ஆனால் அருட்கொடைகளை அனுபவித்ததோ, குரங்காக மாற்றப்பட்டதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதர்களாவர். அவர்களை விட்டு விட்டு அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர்களைப் பார்த்து ஏன் பேச வேண்டும்? செய்தது யாரோ! யாரையோ பார்த்து சொல்லப்படுகிறதே! இது குர்ஆனில் இருக்கும் அம்சம் தான். முன்னோர்கள் செய்த செயலுக்காக பின்னோர்கள் பழிக்கப்படுவதும் உண்டு. அவர்கள் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று இவர்கள் ஆதங்கப்பட்டாலும் நடைமுறை இது தான். அதேபோல முன்னோர்கள் செய்த சாதனைகளால் பின்னோர்கள் அதன் பலனை அனுபவிப்பதும் உண்டு. ஆக, இதனைக் குர்ஆன் கோடிட்டுக் காட்டுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே இதனை இங்கு நான் குறிப்பிட்டேன். இன்னும் வாருங்கள் ஆதாரங்களைப் பார்ப்போம்.

 1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் நபியவர்களின் மனைவி) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.

நூல்: புகாரி 3330

இங்கே பார்த்தீர்களா? இன்றைக்கு நாம் இறைச்சியைப் பாதுகாப்பாக வைக்க என்ன பாடுபடுகிறோம்? இந்த இறைச்சி கெட்டுப் போகக் காரணமே நமக்கு முன் வாழ்ந்த அந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். அவர்கள் செய்ததற்காக நமக்குத் தண்டனை? அவர்களுடைய செயலுக்காக நம்முடைய இறைச்சி ஏன் கெட்டுப் போக வேண்டும்? இதிலிருந்து தெரிவது என்ன? சில சமயங்களில் ஒருவருடைய தவறுகள் அடுத்தவரையும் பாதிக்கலாம்.

 1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில் அவர் தான் முதன்முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.

இங்கே பார்த்தீர்களா? உலகில் யார் அநியாயமாகக் கொலை செய்தாலும் அதிலிருந்து ஒரு பங்கு ஆதம் (அலை) அவர்களுடைய முதல் மகனுக்கு போய்ச் சேருகிறது என்கிறது நபிமொழி. இவர் செய்யும் கொலைக்கு அவர் ஏன் பாவம் சம்பாதிக்க வேண்டும்? இவருடைய பாவம் அவரது தலையில் ஏன் விழ வேண்டும்? இது பொது விதியல்ல. எப்போதாவது இப்படி நிகழ்ந்து விடும் என்பதைத் தான் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பல்லி விஷயமும் அப்படிப்பட்டது தான்.

 1. இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.

வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும்/ எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் “நாங்கள் முஸ்லிம்கள் தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்என்று கூறிவிடுங்கள். (புகாரி 6)

இங்கே சற்று சிந்தித்துப் பாருங்கள். உம்முடைய குடிமக்களுடைய பாவமும் உம்மைச் சாரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள். குடிமக்களுடைய பாவத்திற்கு மன்னர் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர்களுடைய சுமையை இவர் எப்படிச் சுமக்க முடியும்? இதெல்லாம் விதிவிலக்கான சட்டங்கள் என்பதைப் புரிந்து கொண்டால் எந்த ஹதீஸையும் நிராகரிக்கின்ற நிலை ஏற்படாது. ஹதீஸை மறுக்கும் கூட்டத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக! அவர்கள் பேசினால் நாமும் பேசுவோம் இன்ஷா அல்லாஹ்.

அல்ஜன்னத், மே 2013

“கிருஸ்தவம் சீரிய சிந்தனையால் குத்திக் கிழிக்கப்பட்டு சிதறிச் சின்னாபின்னப்பட்டுப் போனது. தவறு செய்தவர்களை விட்டு விட்டு அடுத்தவர்களைத் தண்டிப்பதாலேயே அல்லது அடுத்தவர்களின் பாவங்களைத் தான் சுமந்து கொள்வதாகக் கூறுவதாலேயே பல தத்துவங்கள் உலகில் செயலிழந்து மூலையில் போய் முடங்கிக் கொண்டன”

என்றெல்லாம் எழுதி விட்டு, அடுத்த வரியிலேயே இஸ்லாத்திலும் அதுபோன்ற நிலை உண்டு என்று எழுதினால் இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்? இஸ்லாமிய மார்க்கமும் அதுபோன்று சிதறி, சின்னாபின்னமாக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் போன்று தெரிகின்றது.

கட்டுரையை முடிக்கின்ற இந்தத் தோரணையைப் பார்த்தால், “தவ்ஹீத் ஜமாஅத் வைத்த வாதம் ஒரு சொத்தை வாதம், அதை ஒரு சுண்டு சுண்டி விட்டேன்; அது சுருண்டு விட்டது. இனி ஒருபோதும் அது எழுந்திருக்க முடியாது. இனி என்ன வாதம் வைத்தாலும் அதன் பட்டையைக் கழற்றி விடுவேன்’ என்று சட்டையைக் கழற்றிக் கொண்டு களத்தில் நிற்கும் பயில்வானைப் போன்று இந்தக் கட்டுரையை முடிக்கின்றார். அவர்கள் பேசினால் நாமும் பேசுவோம் என்ற ஆணவ வார்த்தைகளை இந்த ஆசாமி தன் எழுத்தில் காட்டுகின்றார்.

தனி மனித ஒழுக்க வாழ்க்கையில் நீர்த்துப் போன, ஆசாடபூதியான, ஒரு பால் உத்தமபுத்திரன் தான் இந்தச் சவடால் வசனம் பேசுகின்றார். இந்த ஆசாடபூதி எழுப்பிய மாளிகை அசையாமல், ஆட்டம் காணாமல் நின்றதா? அதுதான் இல்லை. அடுத்த மாத அல்ஜன்னத் (ஜூன் 2013) இதழ் வெளியாவதற்குள் அவர்களது வாதங்களின் அஸ்திவாரம் அரித்து ஆட்டம் கண்டு அதளபாதாளத்தில் வீழந்து விட்டது.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:109

பல்லிக்குப் பகுத்தறிவு கொடுத்து, அதற்கு ஆதாரமாக இந்த ஆசாமி எழுப்பிய வாதங்கள் அனைத்தும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொல்கின்ற கதையாகிவிட்டது.

இவரது ஆணவத்திற்கும் அகந்தைக்கும் அடி கொடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்ல. அவரது ஜாக் ஆட்களே எலும்பு கூடத் தேறாத அளவுக்கு அடி கொடுத்திருக்கின்றார்கள்.

தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு எழுதியிருக்கும் அல்ஜன்னத்தில் ஒரு கேள்விக்கு அவர்கள் அளித்திருக்கும் பதிலைப் பாருங்கள்.

கேள்வி: இப்ராஹீம் (அலை) அவர்கள் போடப்பட்ட நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது தொடர்பான ஹதீசுக்கு கடந்த இதழில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் ஒரு பல்லி ஊதியதற்காக இப்போதுள்ள பல்லியை ஏன் அடிக்க வேண்டும் என்ற நியாயமான கேள்விக்குக் கொடுக்கப்பட்டிருந்த பதில் சரியாகத் தோன்றவில்லை. சரியான விளக்கம் தரவும்.

பதில்: அந்த ஹதீஸை சரியாகப் புரிந்து கொள்வதற்கு புகாரியில் இடம்பெற்றுள்ள அந்த ஹதீஸைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை) தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது அவர்களுக்கெதிராக (நெருப்பை) ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல்: புகாரி 3359

இங்கு நபி (ஸல்) அவர்கள் பொதுவாகப் பல்லியைக் கொல்லும்படி கூறுகிறார்கள். ஏனென்றால் அது மனிதர்களுக்குத் தீங்கு தரக்கூடிய ஜந்து. அதற்குக் கூடுதல் விளக்கம் தான் இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக்குண்டத்தை ஊதியதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏனென்றால் இதைக் கூறிய நபி (ஸல்) அவர்களுக்கும், கேட்டுக் கொண்டிருந்த ஸஹாபாக்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் ஊதிய பல்லி வேறு, பிற்காலத்தில் இருக்கும் பல்லிகள் வேறு என்பது தெரியும்.

ஆனால் அவற்றுக்கு மத்தியில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது என்னவெனில் அறிந்தோ, அறியாமலோ மனிதர்களுக்குப் பல்லிகள் தீங்கு செய்து கொண்டிருக்கும். நடைமுறையில், நாம் தண்ணீர் வைக்கின்ற இடத்திலும் அதிகம் பயன்படுத்துகின்ற இடத்திலும் வந்து பல்லி எச்சமிடுவதைப் பார்க்கிறோம். உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, உணவுப் பொருள் இருக்கும் இடத்திற்கோ நேராக மேலே வந்து நிற்பதையும், அவற்றில் வந்து விழுவதையும் அதனால் மனிதர்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதையும் காண்கிறோம்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக் குண்டத்தின் திசையை நோக்கி ஊதிய பல்லி, ஒரு நபிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று திட்டமிடாமல் யதார்த்தமாகச் செய்திருக்கலாம். ஆனால் அறிந்தோ, அறியாமலோ மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தி விடுவது தான் பல்லிகளின் இயல்பு என்பதை விளக்குவது தான் இந்த ஹதீஸில் நபியின் நோக்கம்.

இப்படிப் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸில் ஆட்சேபிக்க எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதனால் தான் இந்தச் செய்தியை அறிவித்த ஸஹாபாக்கள் மற்றும் ஹதீஸ் அறிஞர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் அனைவரும் இதை மறுக்காமல் ஏற்றிருக்கிறார்கள். அல்லாஹ் அவனது மார்க்த்தைச் சரியாகப் புரிந்து செயல்பட அனைவருக்கும் நல்லுதவி செய்யட்டும்.

(அல்ஜன்னத், ஜூன் 2013)

ஏப்ரல் அல்ஜன்னத் இதழில், பல்லி திட்டமிட்டுத்தான் தீக்குண்டத்தை ஊதியது; பல்லியின் நிய்யத் (?) இப்ராஹீம் நபியவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பது தான் என்று எழுதினார் இந்த ஆசாமி. (இதற்கு ஆகஸ்ட் மாத ஏகத்துவ இதழில் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டது வேறு விஷயம்)

மே மாத அல்ஜன்னத் இதழில், பல்லி திட்டமிட்டு ஊதியது என்ற வாதத்தைப் பல்வேறு ஆதாரங்களைப் போட்டு தூக்கி நிறுத்தினார்.

ஜூன் மாத அல்ஜன்னத் இதழில் ஜாக்கினர் இதற்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தான் வெளியிட்ட வாதத்திற்கு நேர்முரணான வாதத்தை மறு மாதமே வெளியிடுகின்ற ஒரே அமைப்பு ஜாக் தான்.

“இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக் குண்டத்தின் திசையை நோக்கி ஊதிய பல்லி, ஒரு நபிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று திட்டமிடாமல் யதார்த்தமாகக் செய்திருக்கலாம்” என்று எழுதியுள்ளனர்.

பல்லி சிந்தித்து ஊதவில்லை; அது பொதுவாக மனிதனுக்குத் தீங்கிழைக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது என்று கூறி, அல்ஜன்னத் தன்னுடைய முந்தைய இதழுடன் மோதிக் கொள்கின்றது. “பைத்தியத்தில் ஜாக்’ என்று நாம் தலைப்பிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

இவர்களின் முரண்பாட்டை மட்டும் இந்த இதழில் நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இவர்களின் வாதங்களுக்கான பதில் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் வெளிவரும்.

—————————————————————————————————————————————————————-

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை    தொடர்: 7

தொழுகையின் ஆரம்ப துஆக்கள்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் ஓதப்படும் துஆக்களாகும்.

நாம் அல்லாஹ்விடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்பதை அறியாத மக்களாகவே இருக்கின்றோம்.

நாம் எவற்றையெல்லாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

தொழுகை என்பதற்கு அரபியில் “ஸலாத்” என்று கூறுவார்கள். இதன் பொருள் “பிரார்த்தனை” என்பதாகும்.

தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கின்றவரை பல்வேறு நிலைகளில் ஓதும் துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு துஆவும் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய துஆக்களாகும்.

இறை அனைத்தும் பாவங்களிலிருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி, நேர்வழியில் நம்மை நிலைநிறுத்தி, இவ்வுலக வாழ்வில் ஈடேற்றமளித்து, ஈமானோடு நம்மை மரணிக்கச் செய்து, கொடும் நரகத்திலிருந்து காப்பாற்றி, நிரந்தர சுவர்க்கத்தில் நம்மை இணைத்திடும் அற்புத கருத்துக்களைப் பொதிந்துள்ள துஆக்கள். இறைவனால் இறைத்தூதருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அற்புத துஆக்கள்.

இந்த அற்புத துஆக்களை ஓதும் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்கிறார்கள்.

என்றாவது ஒருநாள் நாம் துஆக்கள் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியைப் பெற்று, இந்த துஆக்களை ஓதும் போது இறையருளால் மிகப்பெரும் பாக்கியத்திற்குரிய மனிதர்களாகிவிடுவோம். இது தொழுகையாளிகளுக்கு இறைவனின் மாபெரும் அருளாகும்.

தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும் காண்போம்.

அல்லாஹும்ம பாஇத் பைனீ

அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (744)

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

வஜ்ஜஹ்து

வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வ நுசுகீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து. வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு. லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன அப்துக்க. ழலம்த்து நஃப்சீ. வஅதரஃப்த்து பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்சனில் அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ சஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த. அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்க

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)

நூல்: முஸ்லிம் ( 1419)

பொருள்: நான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்க மாட்டேன். என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் கட்டுப்பட்டு நடப்பவர் (முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு (காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால் தான் நான் (நல்வாழ்வு கண்டேன்). உன்னிடமே நான் (திரும்பிவரப்போகிறேன்). நீ சுபிட்சமிக்கவன். உன்னதமானவன். நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்; பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.

இரவுத் தொழுகையில் ஓதும் ஆரம்ப துஆ

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்:

அல்லாஹும்ம! லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. லக்க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்த முல்க்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக்கு. வ லிஆஉக்க ஹக்குன். வ கவ்லுக்க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். வஸ்ஸலாத்து ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்து, வ பிக்க ஆமன்த்து, வ அலைக்க தவக்கல்த்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்த்து, வ இலைக்க ஹாகம்த்து. ஃபக்பிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1120)

பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்துக்கும் உரிமையாளன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது தரிசனம் உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் உண்மை. மறுமை உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ஆற்றலோ இல்லை.

இரவுத் தொழுகையின் மற்றொரு ஆரம்ப துஆ

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும்  பின்வரும் துஆவை ஓதுவார்கள்.

அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1418)

பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (இறைவா) கருத்து வேறுபாடுடைய விசயங்களில் சத்தியத்தின் பக்கம் உன் நாட்டப்படி எனக்கு வழிகாட்டுவாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்!

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் சிறப்புகள்

தொழுகையாளிகள் ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.

சூரத்துல் ஃபாத்திஹா தொழுகைக்கு மிகவும் அவசியமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.

அறிவிப்பவர்:  உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: முஸ்லிம் 651

தொழுகையில் ஓதவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு ஏராளமான சிறப்புகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

மகத்தான குர்ஆன்

சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு பல்வேறு பெயர்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மகத்தான குர்ஆன் என்பதும், திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்பதும்  அல்ஹம்து சூராவிற்குரிய பெயர்களில் உள்ளதாகும்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் அல்ஹம்து சூராவை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றான்.

(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.

அல்குர்ஆன் 15:87

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், “நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்என்று சொல்லவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹாஅத்தியாயம்) தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4474

அல்லாஹ்வாலும், அல்லாஹ்வின் தூதராலும் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்ட அல்ஹம்து அத்தியாயத்தை ஓதும் பாக்கியம் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கிறது.

நன்மைகளை வாரி வழங்கும் அற்புத ஒளி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லைஎன்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத் தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப் பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹாஅத்தியாயமும் “அல்பகராஅத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லைஎன்று கூறினார்.

நூல்: முஸ்லிம் 1472

அல்ஹம்து சூராவின் எந்த வரிகளை ஓதினாலும் அதில் உள்ளவை நமக்கு வழங்கப்படும்.

இது எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாக்கியங்கள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் தொழுகையாளிகள் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஏனெனில் அவர்கள் தான் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுகின்றனர்.

தொழுகை என்பதே அல்ஹம்து அத்தியாயம் தான்

ஹஜ் என்பது பல்வேறு காரியங்களை உள்ளடக்கியக்கியதாகும். அவற்றில் ஒன்று தான் அரஃபாவில் தங்குதலாகும். என்றாலும் நபியவர்கள் அரஃபாவில் தங்குவதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக “ஹஜ் என்பதே அரஃபா தான்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அது போன்று தான் தொழுகையில் பல்வேறு நிலைகளும், துஆக்களும் உள்ளன. என்றாலும் அல்லாஹுத்தஆலா அல்ஹம்து சூராவை ஓதுவதை மட்டும் தொழுகை என்று குறிப்பிடுகிறான்.

அல்ஹம்து சூராவை அல்லாஹ் இரு பகுதிகளாக்கியுள்ளான். அதன் முதல் பகுதி அல்லாஹ்வைப் புகழ்ந்து பெருமைப்படுத்துவதாகும்.

இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்பதாகும்.

அல்ஹம்து அத்தியாயத்தை இரு பகுதிகளாகப் பிரித்திருப்பதை அல்லாஹ் தொழுகையையே இருபகுதிகளாகப் பிரித்திருப்பதாக் கூறிக்காட்டுகிறான்.

தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவது எவ்வளவு பாக்கியம் நிறைந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.

அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ்,  “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்என்று கூறுவான்.

அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்‘  (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்என்று கூறுவான்.

அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்என்றும்  கூறியுள்ளார்கள்.)

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்என்று கூறுவான்.

அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 655

தொழுகையில் ஓதும் அல்ஹம்து அத்தியாயத்திற்குத் தான் இத்தகைய பாக்கியங்களை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.

தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை எப்பெரும் பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதற்கு இது மிகச் சிறந்த சான்றாகும்.

மலக்குமார்களின் ஆமீன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 780

இமாம் ஜமாஅத்துடன் தொழுபவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தின் காரணமாக முன்பாவங்கள் மன்னிக்கப்படும் பாக்கியத்தைத் பெறுகிறார்கள்.

தொழுகை அதனை பேணித் தொழுபவர்களுக்கு இன்னும் ஏராளமான பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரக்கூடிய தொடர்களில் விரிவாகக் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்    தொடர்: 5

குடும்ப அமைப்பின் அவசியம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

உறவுகளால் விளையும் நன்மைகள்

அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் இயற்கை நியதியாக இருக்கின்ற குடும்ப அமைப்பில் மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப அமைப்பின் மூலம் நமது உடலுக்கும் மனதிற்கும், ஏன் இந்தச் சமூகத்திற்கும் கூட நன்மை கிடைக்கின்றது.

குடும்பம் என்றாலேயே ஒரு ஆண், பெண்ணிலிருந்து தான் துவங்கும். கணவனாக இருப்பவன் தந்தையாக மாறுவான். மனைவியாக இருப்பவள் தாய் என்ற அந்தஸ்தை அடைகிறாள். அதேபோன்று இந்தக் கணவன், மனைவிக்குத் தாய், தந்தையர் இருந்தால் அவர்கள் தாத்தா பாட்டி என்ற உறவாகின்றார்கள். அவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்ற உறவுகள் இருந்தால் மாமன், அத்தை என்ற உறவு முறைக்குள் வருவார்கள். ஆக, குடும்பம் என்ற அமைப்பை வைத்துப் பார்த்தால் தான் ஒரு சமூகம் உண்டாகும். கோத்திரம் உண்டாகும். இப்படி அமையும் அமைப்பு தான் மனிதன் நெருக்கடியான காலகட்டத்தை அடைகின்ற போது நெருக்கமாக வந்து நிற்பார்கள்.

நாம் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டால், எவன் வருகிறானோ இல்லையோ நமது அண்ணன், தம்பி வந்து நிற்பார்கள். அதனால் தான் தமிழில் “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வார்கள். ஏனெனில், அண்ணனுக்குப் பிரச்சனை என்றால் தம்பிமார்கள் வந்து நின்று உதவுவார்கள் என்பதால் தான். தம்பிக்கு ஒரு கஷ்டம் என்றால் அண்ணுக்குத் துடிக்கும். எனவே அண்ணன், தம்பி என்ற உறவு முறை நமக்குக் கிடைக்க வேண்டுமாயின், குடும்பம் என்ற இந்த அமைப்பில் தான் கிடைக்கும்.

குடும்பம் இல்லாமல் தவறான முறையில் உடலுறவு கொள்பவனுக்கு எந்த உறவு முறையும் இருக்காது. ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று திரிகின்றவர்களுக்கு அண்ணன், தம்பி, மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை போன்ற உறவு முறை இன்பங்களை இழந்துவிடுவார்கள். எனவே குடும்ப உறவு வேண்டாம் என்பவர்கள் அவர்களது இளமை முறுக்கில் எல்லாம் சரியாகத் தெரிந்தாலும் பிற்காலத்தில் உடல் மற்றும் மனநோய்களுக்கு ஆளாக்கப்படுவதோடு அனாதைகளாக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இப்படிப்பட்டவர்களுக்குக் கடைசிக் காலகட்டத்தில் எந்த சொந்தபந்தமும் உற்றார் உறவினர்களும் இல்லாமல் ஆக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு யாரும் உதவி செய்ய முடியாத நிலையில் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்வதாக இருந்தால் ஏதாவது ஒரு வகையில் ஒரு நெருக்கம், தொடர்பு இருக்க வேண்டும். எந்த உறவு முறை தொடர்பும் இல்லையென்றால் எப்படி ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யமுடியும்? தந்தை வழியில் உள்ள உறவாக இருக்க வேண்டும். அல்லது மனைவி வழியில் அந்த உறவு இருக்க வேண்டும். இவைகளெல்லாம் கிடைக்க வேண்டுமெனில், குடும்ப அமைப்புக்குள் சென்றால் தான் கிடைக்கும்.

ஆனால் சில விவரங்கெட்டவர்கள், சினிமாக்களிலும் சீரியல்களிலும் சுதந்திரம் என்ற பெயரில் தவறான படங்களையும் நாடகங்களையும் தயாரித்து, மக்களிடம் தவறான பாலியல் உறவுகளை, சரியெனச் சித்தரிக்கிறார்கள். அப்படியானால் அதைப் பற்றி அறியாத மக்களுக்கு இவர்கள் கேடு செய்கிறார்கள் என்று அர்த்தம்.

இளமையைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசிக் காலத்தில் அனாதரவாக நிற்கதியாக்கி விடுவதற்குத் தான் இந்தச் சிந்தாந்தங்கள் உதவும். இவற்றால் மனித சமூகத்திற்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. இதனால் தான் இந்தக் கேடுகெட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றி வாழும் நடிக, நடிகைகள் இறுதிக் காலத்தில் அனாதையாகி, தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம்.

எனவே குடும்பம் என்ற அமைப்பின் மூலம் தான் மனிதர்கள் பல்வேறு உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்கின்றனர். அதன் மூலம் மனிதன் மனிதத் தன்மையுடையவனாக வாழும் நன்மை நமக்குக் கிடைக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படை

குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான் மனித குலம் பெருகியிருக்கிறது. மனித குலம் பெருகியிருப்பதால் தான், மனித வளங்களும் முன்னேற்றங்களும் வளர்ந்திருக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து என்று சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் தான் நாம் இன்று அனுபவிக்கின்ற பல்வேறு நவீன வசதிகளைப் பெற்றிருக்கிறோம்.

பேருந்து என்ற கனரக வாகனம் மக்கள் தொகை பெருக்கத்தினால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் தனக்கு இலாபம் கிடைப்பதற்காகத் தான் கண்டுபிடிக்கிறான். ஊருக்கு பத்துப் பேர் மட்டும் இருந்தால் எப்படி நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்க முடியும். பேருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியிருக்காது.

அதே போன்று இப்போது மைக்கில் பேசுகிறோம் எனில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால் தான். பத்துப் பேர் மட்டும் இருந்தால் மைக் வைத்துப் பேசுவதற்கு எந்தத் தேவையும் ஏற்படாது. அப்படி தேவைப்படவில்லை என்ற போது மைக்கைக் கண்டுபிடிப்பதால் என்ன இலாபம்? இந்தப் பேச்சை பதிவு செய்யத் தேவையில்லை. அதை ஒளிபரப்பத் தேவையில்லை. இப்படியே ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.

எனவே இன்றைய உலகில் மனிதன் பயன்படுத்துகிற அனைத்து வசதிகளும் குடும்ப அமைப்பு என்று இருப்பதால் தான் கிடைத்திருக்கிறது. குடும்ப அமைப்பு என்று இல்லையென்றால் இன்று நாம் பயன்படுத்துகிற மனித வளம், அறிவியல் வளர்ச்சி பெருகியிருக்காது.

அன்பும் தியாகமும்

குடும்பத்தில் மற்ற உறவு முறைகளை விலக்கிவிட்டு ஆராய்ந்தால், கணவன், மனைவி என்ற கட்டுப்பாடுகளில் உடல் ரீதியான தொடர்புகள் ஏற்படுவதால், அவர்களுக்கு மத்தியில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. மற்றதை விட உடல் ரீதியாக ஒளிவு மறைவு இல்லாததால் ஒருவர் மீது மற்றவர் அதிமான ஈர்ப்புடையவராகி விடுகிறார்கள். மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கணவனும் அந்தப் பிரச்சனையைக் களைவதில் முனைப்பு காட்டுகிறான். அதேபோன்று கணவனுக்கு எதாவது உடல் நலக்குறைவு எனில் மனைவி கண்விழித்து அவனைக் காக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான்.

குடும்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்கள் அனைவருமே தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். அண்ணனுக்கு ஒரு தேவையிருந்தும், அதை தம்பிக்காக விட்டுக் கொடுப்பார். இது ஒரு தியாகம் தான்.

மனைவி என்பவள் நன்றாகச் சமைத்து, கணவனுக்கு வயிறு முட்டக் கொடுத்துவிட்டு, தான் சாப்பிட்டதைப் போன்று நடித்துக் கொள்வாள். தாய் தான் இந்த தியாகத்தில் முதல் இடம் வகிப்பாள். தான் பசியோடு இருந்தாலும் தன் பிள்ளையை நன்றாகக் கவனிப்பாள்.

இப்படி ஒழுங்கான குடும்பமாக இருந்தால் தாய்க்குத் தந்தையும், தந்தைக்குப் பிள்ளையும், பிள்ளைக்குப் பெற்றோர்களும், மனைவிக்குக் கணவனும், கணவனுக்கு மனைவியும், அண்ணனுக்குத் தம்பியும், தம்பிக்கு அண்ணனும் என ஒருவருக்கொருவர் தனது தேவைகளையும் விருப்பங்களையும் பிறருக்காக விட்டுக் கொடுத்து, அனுசரித்து, தியாகம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

சிலர் இப்படி குடும்பத்திற்காகச் செலவு செய்வதையும் சுயநலம் என்பார்கள். இது தவறான விமர்சனமாகும். ஒருவன் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்காமல் தான் மட்டும் வைத்துக் கொண்டால் தான் சுயநலம் என்று கூறலாம். தான் சார்ந்த குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அதை சுயநலம் என்று விமர்சிப்பது நியாயமில்லை. இஸ்லாம் கூறும் குடும்ப அமைப்பில் ஒவ்வொருவனும் தன்னுடைய உறவினர்களுக்காகச் செலவு செய்ய ஆரம்பித்தாலே உலகில் பிச்சைக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். எனவே இதைச் சுயநலம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக ஆவதற்கு முயற்சி செய்கிறான் எனில் சுயநலத்திற்காக இல்லை. தனது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் போன்ற சொந்த பந்தங்களுக்காகவும் தான் உழைக்கிறான். எனவே ஒருசில கஞ்சர்களைத் தவிர மற்ற அனைவருமே குடும்ப அமைப்பிற்காகத் தான் உழைக்கிறார்கள், வாழ்கிறார்கள். இதை சுயநலம் என்று சொல்லக்கூடாது.

சுய தொழில்கள் அல்லது பிறரிடம் கூலி வேலைகள் செய்வதும் இன்னும் சிலர் தனது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி இளமையைத் தொலைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சிரமப்படுவதும் தனது குடும்பமாக இருக்கிற தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுக்குத் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்னும் சொல்வதாக இருப்பின், வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படுவதே தியாகம் தான்.

ஒருவன் தன் வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுவதற்காக உழைக்க வேண்டுமெனில், உள்நாட்டில் மாதத்தில் பத்து நாட்கள் வேலை பார்த்தால் போதும். வெளிநாட்டைப் பொறுத்தளவுக்கு மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் உழைத்தாலே போதுமானதாகும். ஆனால் மாதம் முழுவதும் உழைக்கக் காரணம், நம்முடைய தாய், தந்தையர்களும் மனைவி மக்களும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு மேலும் அல்லாஹ் நமக்குத் தந்தால் உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் உதவுவதற்குத் தான்.

ஆக, குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியேறிவனுக்கு சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது. அவர்களது எண்ணங்களில், எனது உடல், எனது சுகம், எனது ஆசைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கஷ்டப்படுவது என்பது மட்டுமே நிறைந்திருக்கும். அதனால் தான் இத்தகையவர்கள் எந்த தியாகத்தையும் செய்யாதவர்களாகவும் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

சமூக ரீதியாகக் கிடைக்கிற நன்மைகள் போக, கணவன் மனைவி என்று வாழும் குடும்ப அமைப்பில் அவ்விருவரும் சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குடும்பவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது ஒழுங்கான இல்லற வாழ்க்கை இருந்தால் அது நிச்சயமாக சரியான பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

தாம்பத்தியத்தின் நன்மைகள்

மனிதன் எத்தனையோ வேலைகளைச் செய்கிறான். அதில் அவனது எந்த உறுப்பு பயன்படுத்தப்படுகிறதோ அது மட்டும் தான் வேலை செய்யும். உதாரணமாக, சாப்பிடுவதை எடுத்துக் கொள்வோம். சாப்பாட்டை வாயில் போடுவதற்கு கை பயன்படும். அவ்வளவு தான் அதன் வேலை. அதன் பிறகு அதை செரிமானம் செய்வதற்கு வயிற்றில் ஏதாவது சுரப்பிகள் சுரந்து அதைச் சரி செய்கிறது. இதுபோன்று ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த மாதிரி 5, 10 அல்லது 20 உறுப்புக்கள் வேலை செய்யும். அதற்காக முழு உடலும் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் வேலை செய்யாது. ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மட்டும் தான் உடலிலுள்ள அனைத்து செல்களும் உழைக்கிறது. அனைத்து அணுக்களும் ஈடுபடுகிறது.

ஒரு மனிதனுடைய குழந்தை அச்சு அசலாக அவனைப் போன்று இருக்கிறது. அப்படியானால் அவனுடைய அனைத்து இடத்திலிருந்தும் செல்களை எடுத்திருப்பதாகத் தான் அர்த்தம். மனித உயிரணு என்பது மனிதனின் அனைத்து செல்களையும் சேர்த்து சுருக்கித் தான் வருகிறது. சில பேருக்கு அச்சு அசலாக இல்லாமல் வேறொரு மாதிரியாக வருவதற்குக் காரணம், கணவன் மனைவி என்ற இரண்டு வெவ்வேறான செல்கள் கலந்து விடுவதாலாகும். எனவே தாம்பத்தியத்தில் ஈடுபடுகிற போது தான் மனித உறுப்புக்கள் முழுமையாக வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே முழு மனதுடன், சரியான ஈடுபாட்டுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தால், மனிதனின் மூளைத் திறன் அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.

எலிகளை வெறுமனே சகட்டுமேனிக்கு ஆராய்ச்சி செய்யாமல், ஆண் பெண் என்று ஜோடிகளைப் பிரித்து, எப்போதும் ஜோடியுடனே திரியக்கூடிய சுதந்திரமான எலிகளையும், ஒரு வாரத்திற்கு ஒரு தடவை ஜோடியுடன் சேருகிற சில எலிகளையும், ஒரு மாதத்திற்கு ஒரு தடவை ஜோடியுடன் சேருகிற சில எலிகளையும், சில ஆண் எலிகளைத் தனியாகவும் சில பெண் எலிகளைத் தனியாகவும் வைத்து ஆராய்ந்த பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

அதில் ஜோடிகள் பிரிக்கப்பட்டு தவணை முறையில் மாதக் கணக்காகவும் வாரக் கணக்காகவும் சேர்ந்த எலிகளை விட, எப்போதும் ஜோடியாக இருக்கும் சுதந்திரமான தாம்பத்திய உறவு கொள்கின்ற எலிகள் தான் மிகவும் சுறுசுறுப்பாகவும் மூளை வளர்ச்சியுடன் திறம்பட செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் சரியான அளவிலும் முழு மனதுடனும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகிற போது, மூளையில் சில சுரப்பிகள் நன்றாக சுரந்து அதன் வளர்ச்சிக்கு வித்திடுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இந்தப் பயன் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் தான் மனிதனுக்குக் கிடைக்கிறது.

இதுபோன்று நடைமுறையில் பெண்களிலும் ஆண்களிலும் சிலரிடம் ஓர் அதிசயத்தைப் பார்க்க முடியும். சிலர் திருமணத்திற்கு முன்னால் விவரமில்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணம் முடித்து தாம்பத்தியத்தில் ஈடுபடத் துவங்கிவிட்டார்களெனில் அவர்களின் பேச்சுக்களிலும் நடைமுறைகளிலும் முதிர்ந்த நிலையில், ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு நல்ல மாறுதல்களைக் காணலாம்.

அதேபோன்று ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்யும் போது, நடைப்பயிற்சி செய்யும் போதெல்லாம் நமது உடலில் 300 முதல் 500 கலோரிகள் தான் குறைகிறது. ஏனெனில் உடற்பயிற்சியிலும் நடைப்பயிற்சிலும் சில குறிப்பிட்ட உடலுறுப்புக்கள் மட்டுமே வேலை செய்கின்றன. ஆனால் உடலுறவு கொள்ளும் போது, நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்வதால் நமது உடலில் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புக்கள் நீங்கிவிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிக்கவும் குறையவும் காரணம் இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பது தான்.

இல்லற வாழ்வில் ஆண்கள் எப்படி நடக்க வேண்டும், பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருப்பதால் சிலருக்கு இல்லற வாழ்வு சரியாக அமைவதில்லை. இல்லற வாழ்வில் ஏற்படுகிற பிரச்சனையால் தேவையற்ற மன உளைச்சலும் இரத்த அழுத்தமும் தேவையற்ற கொழுப்புக்களும் உருவாகி விடுகின்றது. இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு சில நேரங்களில் இதயக் கோளாறு வரை சென்றுவிடுகிறது.

கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் இல்லற வாழ்வை சரியான முறையில் தொடர்ந்தால் இவற்றிலிருந்து மனித சமூகம் தப்பித்துவிடும்.

உதாரணமாக, தலைவலி வரக் காரணம் சில நேரங்களில் தலையிலுள்ள நரம்புகளுக்குச் சரியான முறையில் இரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் தான். அதே போன்று உடலின் சில பகுதிகள் திடீரென வலியை ஏற்படுத்தக் காரணம் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதால் தான். எனவே இரத்த ஓட்டம் சரியாக இருக்கின்ற போது நமது உடல் உறுப்புக்களும் சரியாக இயங்கும். அப்படி இயங்கினால் மனித உடல் அமைதியான நிலையை அடையும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இல்லறத்தில் ஈடுபடும் போது மனிதனுக்கு வியர்வை வரும். அதேபோன்று உடல் உழைப்பில் ஈடுபடும் போது, மண்வெட்டி பிடித்து வேலை செய்தாலோ அல்லது கோடரியினால் வேலை பார்த்தாலோ அல்லது மூட்டை தூக்கும் போதோ அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் போதோ வியர்வை வரும். ஆனால் இல்லறத்தில் ஈடுபடும் போது வருகின்ற வியர்வைக்கும் உடல் உழைப்பின் மூலம் வருகிற வியர்வைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வரும் வியர்வையில், அனைத்து செல்களிலுள்ள உப்புத் தன்மையும் கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றது. அப்போது மனிதன் உடற்கூறு ரீதியாக தூய்மையான மனிதனாக மாறி விடுகிறான். அதனால் தான் ஒழுங்கான முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு முடித்ததும் நன்றாகத் தூக்கம் வருகிறது.

அதேபோன்று விளையாட்டு வீரர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு சரியாக விளையாட மாட்டார்கள். எனவே விளையாட்டு வீரர்களை ஆய்வுக்குட்படுத்தி அவர்களைச் சோதித்த போது, அவர்கள் தங்களது மனைவிமார்களைப் பிரிந்திருப்பது தான் ஒழுங்காக விளையாடாமல் இருப்பதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் போது, மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டால் தளர்ந்து விடும் எனவும் உடல் பலவீனமாகி விடுவதாகவும் தவறாகப் போதிக்கின்றனர். பலர் இந்தத் தவறான சிந்தனைக்குட்பட்டு விட்டதால் தாங்களாகவே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதால் தான் விளையாட்டில் மனநிலை குன்றியவர்களாகி, தோல்வியைத் தழுவுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். எனவே யார் தனது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபாட்டுடன் இருந்து கொண்டு விளையாட்டையும் தொடர்கிறார்களோ அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் அவரின் வீரம் கூடுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் செய்யும் போது கூட மனைவிமார்களுடன் செல்வார்கள் என்று ஹதீஸ்களில் படிக்கிறோம். போர் என்பது மனிதன் சந்திக்கின்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையாகும். ஆனால் அந்த நேரத்திலும் நமது மனது தெளிவாக இருந்தால் தான் நாம் போரில் முழுக் கவனம் செலுத்த முடியும் என்று தமது மனைவியை சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்வார்கள் என்று ஹதீஸ் நூற்களில் பார்க்கிறோம்.

அதாவது, நமது உடலும் மனமும் ஒரே நேர்க்கோட்டில் செயல்பட வேண்டுமானால் நமது மூளையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். நமது மூளை நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் எப்போதும் செய்கின்ற காரியத்தில் தடங்கல் வரக்கூடாது. மனைவிமார்களை மதீனாவில் விட்டுவிட்டு, தான் மட்டும் போருக்குச் சென்றால் என்ன நடக்கும்? உடல் மட்டும் தான் போர்களத்தில் இருக்கும். மனது மதீனாவை நோக்கித் தான் இருக்கும்.

இப்படி இருநிலை ஒரு மனிதனிடத்தில் இருந்தால் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது என்பது தான் யதார்த்தம். அதனால் தான் நபியவர்கள் போர்க்களமாக இருந்தால் கூட, நமக்குச் சரியான வழிமுறையை செயல் வடிவில் காட்டித் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கல்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால், சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2593

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புகாரி 2661, 2879

எனவே இத்தனை பயன்களையும் நன்மைகளையும் குடும்பம் என்ற அமைப்பில் தான் நாம் பெறமுடியும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

மஹ்ஷரில் மனிதனின் நிலை

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

மஹ்ஷர் மைதானத்தில் பொதுவாக மனிதர்களின் நிலைகள் எப்படியிருக்கும்? இறை மறுப்பாளர்களின் நிலை என்ன? கெட்ட மனிதர்களின் நிலை என்ன? என்பன பற்றிக் கடந்த இதழில் கண்டோம். குறிப்பிட்ட தீமைகளைச் செய்தவர்கள் மஹ்ஷரில் என்ன நிலையை அடைவார்கள் என்பது பற்றிப் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றையும். மஹ்ஷரில் நல்லவர்களின் நிலை எப்படியிருக்கும் என்பதையும் இந்த இதழில் பார்ப்போம்.

கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை

ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான். எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களது செல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும் கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். தீமையான வீணான காரியங்களுக்கு செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்ல காரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலே மற்றவர்கள் கண் முன்னால் தங்களது செல்வத்தின் மூலம் கழுத்து நெறிக்கப்படுவார்கள். கருமியாக இருந்தது எந்தளவிற்குக் குற்றம் என்று உணரும் விதத்தில் நடத்தப்படுவார்கள்.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்ததுஎன்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (அல்குர்ஆன் 3:180)

முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை

நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதை விடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு அமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின் கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத் தரமாட்டான். மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ் அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில் நம்பிக்கை கொண்ட மக்கள் படைத்தவனுக்கு ஸஜ்தா செய்யும் போது இவர்களால் மட்டும் ஸஜ்தா செய்ய முடியாது. இவர்களின் முதுகுகள் கட்டை போன்று மாற்றப்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), நூல்: புகாரி 4919

நல்லவர்களின் நிலைகள்

இஹ்ராமோடு இறந்தவர்களின் நிலை

நாடு, நிறம், மொழி, இனம் என்று பல வகையில் மனிதர்கள் வேறுபட்டு இருந்தாலும் அனைவரும் சமமானவர்கள், இறைவனின் அடிமைகள்; அவர்களுக்கு மத்தியில் எந்தவொரு உயர்வு தாழ்வும் கிடையாது என்று பாடம் புகட்டும் சமத்துவத்தைப் போதிக்கும் புனித இடம் மக்காவில் இருக்கும் கஅபா ஆலயமாகும். தீண்டாமையை உடைத்து மனித ஒற்றுமையை உயிர்ப்பிக்கும் இந்த ஆலயத்தில் உலகெங்கும் இருந்து வரும் மக்கள் பலர் இஹ்ராம் கட்டிய நிலையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கே வரும் மக்கள் வெள்ளம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்நேரத்தில் சிலர் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிச்சலில் சிக்குவதன் மூலம் அல்லது அங்கே இருக்கும்  சூழ்நிலை சமாளிக்க முடியாததன் மூலம் இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்து விடுகிறார்கள். இவ்வாறு இறந்து போன மக்கள், மஹ்ஷர் மைதானத்தில் சிறப்பான நிலையில் இருப்பார்கள். இவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அரஃபா மைதானத்தில் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தனது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி இரு ஆடைகளால் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்..) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூற்கள்: புகாரி 1265, திர்மிதி 937, 874

ஷஹீதானவர்களின் நிலை

சத்திய மார்க்கத்தின் பாதையில் அநீதிகளை, அக்கிரமங்களை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைபவர்கள் இருக்கிறார்கள். மறுமை வெற்றிக்காக நற்காரியங்களில் ஈடுபடும் வேளையில் உயிரிழந்து விடுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இறைவழியில் இருக்கும் போது இறந்துப் போகும் உயிர்த் தியாகிகளை, மக்களெல்லாம் ஒன்று திரண்டு நிற்கும் மறுமை நாளில் வல்ல இறைவன் கண்ணியப்படுத்துவான். மறுமைப் பேறுக்காக உயிரையே தியாகம் செய்த அவர்களின் அரிய காரியத்திற்காக அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் அந்தஸ்தை அங்கிருப்பவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் அவர்களை அல்லாஹ் நடத்துவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சங்கி-களால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3010

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்-முக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும் தாக்கப்பட்ட போது இருந்தது போன்றே இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 237

பாங்கு சொல்பவர்களின் நிலை

படைத்தவனை வணங்குவதற்காகவே நாமெல்லாம் படைக்கப் பட்டிருக்கிறோம். அவ்வாறு அவனை வணங்குவதற்காக அனைத்து மக்களையும் அழைக்கும் அழகிய செயலே பாங்கு சொல்வதாகும். இக்காரியத்தில் ஆர்வம் காட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் பாங்கின் வாசகங்களைத் தெரியாதவர்களாக அல்லது தெரிந்தாலும் சொல்வதற்கு வெட்கப்படுவர்களாக, தயங்குபவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்பை அறிந்தால் இவ்வாறு இருக்க மாட்டார்கள். பாங்கு சொல்லும் இறைப்பணியை மேற்கொள்ளும் மக்கள் மற்ற மக்களிலிருந்து வேறுபடும் விதத்தில் கழுத்து உயர்ந்து, கண்ணியமான தோற்றத்தில் இருப்பார்கள். எல்லா மனிதர்களும் சங்கமித்து நிற்கும் போது இவர்கள் தனித்தன்மையோடு, தனித்துத் தென்படுவார்கள். இந்தத் தகுதி பாங்கு சொல்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ், நூல்: முஸ்லிம் 631

அங்கத்தூய்மை செய்தவர்களின் நிலை

நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் பிரபஞ்சத்தின் இரட்சகனுக்கு நன்றி செலுத்துவதற்கு, அவனைத் துதிப்பதற்கு நாள்தோறும் ஐந்து நேரத் தொழுகையை முஸ்லிம்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இப்படி இறைவனைத் தொழுவதற்கு வேண்டி அங்கத்தூய்மை (உளூ) செய்பவர்கள் மறுமையில் சிறப்பான அடையாளத்துடன் தென்படுவார்கள். எல்லா மக்களும் ஒன்றுதிரண்டிருக்கும் அந்தப் பெருவெளியில் கை கால்கள் பிரகாசிக்கும் வகையில் இருப்பார்கள். பளிச்சென்று மின்னும் தோற்றத்தை வைத்து இவர்கள் உளூ செய்வதன் வாயிலாக தங்களது கை கால்களைக் கழுவி தூய்மையைப் பேணியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

“(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லாநகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனை விட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (416)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) எனது சமுதாயத்தார் எனது (அல்கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தை விட்டும் பிறரது ஒட்டகத்தை விரட்டிவிடுவதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரை விரட்டுவேன்என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் நபியே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆம்; வேறெவருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். உங்களில் ஒரு குழுவினர் என்னைவிட்டுத் தடுக்கப்படுவர். அவர்களால் (என்னருகில்) வந்து சேரமுடியாது. அப்போது நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்என்பேன். அப்போது  வானவர் ஒருவர் என்னிடம், “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாய் உங்களது மார்க்கத்தில்) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 417

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறப்புகளிலுள்ள அடையாளங்களால் “(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே!என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: நுஅய்ம் அல்முஜ்மிர், நூல்: புகாரி 136, முஸ்லிம் 415

இந்த உலகத்தில் இருந்த போது  ஒவ்வொருவரும் எந்த விதத்தில் வாழ்ந்தார்கள் என்பதை மஹ்ஷர் மைதானத்தில் அவர்களுக்கு இருக்கும் நிலையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். நல்லவர்களாக வாழ்ந்தார்களா? கெட்டவர்களாக வாழ்ந்தார்களா? நிலையான மறுமை வாழ்க்கையில் எவ்வாறு இருப்பார்கள்? என்பதை அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருக்கும் அடையாளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, அனைவரும் எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் நாளில் நல்ல நிலையில், சிறப்பான தோற்றத்தில் இருப்பதற்காக நாம் படைத்தவனிடம் பிராத்திக்க வேண்டும். மேலும் மறுமையில் நல்லவர்களுடன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்; ஒருபோதும் கெட்டவர்களின் கூட்டத்தில் கெட்ட நிலையில் இருந்து விடக்கூடாது என்று எண்ணம் கொண்டு அதற்கேற்ப அமல் செய்ய வேண்டும். அந்த வகையில் மார்க்கம் தடுத்த காரியங்களை விட்டு விலகி, நற்காரியங்களில் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இதற்கு வல்ல இறைவன் நமக்கு துணை புரிந்து அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

தொடர்: 2

இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

எம். ஷம்சுல்லுஹா

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி ஆவார். இவர் மொராக்கோ என்ற (மக்ரிப்) நாட்டைச் சேர்ந்த நவீன கால மார்க்க அறிஞராவார். அவர் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தைத் தான் ஏகத்துவத்தில் தந்துள்ளோம்.

இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை நாம் புகழ்கின்றோம். அவனிடமே நாம் உதவியும் தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் கெடுதிகள், நம்முடைய செயல் தீங்குகளை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் யாருக்கு வழிகாட்டுகிறானோ அவரைக் கெடுப்பவன் எவனுமில்லை. அல்லாஹ் யாரை வழிகெடுக்கிறானோ அவரை நேர்வழிப்படுத்துபவன் எவனுமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை என்று உறுதிமொழி கூறுகின்றேன். முஹம்மது அவனுடைய அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார் என்று உறுதிமொழி கூறுகின்றேன்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் 3:102

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:1

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

அல்குர்ஆன் 33:70, 71

இந்தப் புகழுரைக்குப் பின்…

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். செயலில் சிறந்தது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செயலாகும். காரியங்களில் மிகவும் கெட்டவை புதியவையாகும். ஒவ்வொரு புதிய காரியமும் பித்அத் (நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவை) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் தான்.

“வரலாற்றுப் பயணத்தில் ஏகத்துவக் கொள்கை மற்றும் அறைகூவல்களை எதிர்கொள்கின்ற அதன் ஆற்றல்’ என்ற தொடரை வெளியிடுவதற்கும், இந்தச் சிறிய தொடரை வெளியிடுவதற்கு உதவி புரிந்த அல்லாஹ்வுக்குத் துவக்கத்தில் நன்றி செலுத்திக் கொள்கிறோம்.

தொடரில் இடம்பெறுகின்ற இந்தச் சிறிய நூலுக்கு, கஸ்ஸாலியின் இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் எனப் பெயரிட்டுள்ளேன்.

(இதையே, “இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?’ என்று தலைப்பிட்டுள்ளோம்.)

இஹ்யா என்ற இந்த நூல் மட்டுமல்ல. இதே அடிப்படையில் அமைந்த எந்த நூலாக இருந்தாலும் உடனடியாக நாம் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை அதை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தியாக வேண்டும். காரணம் இந்த நூல் அதிகமான மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தாலும் இந்த நூலின் பிரதியைக் காணாமல் இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் சில வீடுகளில் இந்த நூலைத் தவிர வேறு எந்த நூலையும் நீங்கள் பார்க்க முடியாது. வீடுகளுக்கு இந்த கதி என்றால் பொது மற்றும் தனி நூலகங்களின் கதியைச் சொல்ல வேண்டியதில்லை. அந்த நூலகங்களில் இஹ்யாவின் ஆட்டமும் ஆதிக்கமும் தான்.

மாத இதழ்கள், மக்களிடம் நடத்தப்படும் சொற்பொழிவுகள், மத்ரஸாக்களில் நடத்தப்படும் பாடங்களில் இஹ்யாவின் சாம்ராஜ்யத்தை நீங்கள் கேட்கவே வேண்டாம். சூபிஸம் என்ற கொள்கையில் ஈடுபாடு இல்லாதவர்களிடம் இஹ்யாவின் தாக்கம் இது! அந்த சூபிஸக் கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இதுதான் வானிலிருந்து இறக்கப்பட்ட இஞ்சீலும், ஸபூரும் ஆகும்.

அதனால் அந்த நூலைப் பற்றிய அவர்களது பாராட்டைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களது பாடங்களுக்கு அதை முன்னோடியாக ஆக்குவதைக் கூறவும் வேண்டுமா?

இது ஒன்றும் புதிது கிடையாது.

ஆனால் இவர்கள் இந்த இஹ்யாவை நோக்கி மக்களிடம் செய்கின்ற பிரச்சாரம், குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து மார்க்க விஷயத்தில் முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ள தெளிவான விளக்கத்திற்குக் கூட நேர் எதிராக இருப்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

தஃரீபுல் இஹ்யா பி ஃபளாயிளில் அஹ்யா – இஹ்யாவின் சிறப்புகளைப் பற்றி வாழ்பவர்களுக்கு ஓர் அறிமுகம் என்ற பெயரில் அப்துல்காதிர் பின் அப்துல்லாஹ் அல்ஐதுரூஸ் என்பவர் ஒரு நூலை இயற்றியிருக்கின்றார். இந்நூலைப் போன்று இஹ்யாவைச் சிறப்பிக்கும் விதமாக கஸ்ஸாலியின் ஆதரவாளர்கள் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றனர்.

அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும், முன்சென்ற சத்தியக் கொள்கையாளர்கள் மீதும் எந்த அளவுக்கு கஸ்ஸாலி ஆதரவாளர்கள் துணிந்து பொய் சொல்வார்கள் என்பதற்கு இந்த ஐதுரூஸ் தனது நூலில் கூறுகின்ற ஒரு சம்பவம் சரியான எடுத்துக்காட்டாகும்.

யாஃபிஇ கூறுவதாக அந்த நூலில் ஐதுரூஸ் தெரிவிப்பதாவது:

இஹ்யா உலூமித்தீன் என்ற நூலுக்கு எதிரான பிரச்சாரத்தில் அபுல் ஹஸன் அலீ பின் ஹர்சஹம் என்ற மார்க்க அறிஞர் மிகக் கடுமையான போக்கைக் கடைப்பிடித்திருந்தார். இவர் மக்ரிப் என்ற நாட்டைச் சேர்ந்த பிரபலமான மாபெரும் அறிஞரும் மார்க்கச் சட்ட மேதையும் ஆவார். மக்களிடம் அவரது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.

இஹ்யாவின் அனைத்துப் பிரதிகளையும் திரட்டுமாறு மக்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு அனைத்துப் பிரதிகளும் பெரிய பள்ளிவாசலில் குவிந்து கிடந்தன. வெற்றிகரமாகக் குவிந்த அந்தப் பிரதிகள் அனைத்தையும் கொளுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கனவுக் காட்சியும் கஸ்ஸாலியின் புகாரும்

அந்தத் தருணத்தில் வெள்ளிக்கிழமை இரவில் அவருக்கு ஒரு கனவுக் காட்சி தோன்றுகின்றது. அவர் (இஹ்யாவைக் கொளுத்தவிருக்கும்) அந்தப் பள்ளிக்குள் நுழைகின்றார். ஆச்சரியம்! நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் வீற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருக்கின்றார்கள்.

இமாம் கஸ்ஸாலி நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அலீ பின் ஹர்ஸஹம், நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் வந்ததும் கஸ்ஸாலி, “அல்லாஹ்வின் தூதரே! நான் எழுதிய நூல் அவர் குற்றம் சாட்டுவது போன்று அமைந்திருந்தால் நான் அல்லாஹ்விடம் திருந்தி பாவமன்னிப்பு கேட்டு விடுகின்றேன். அவரது குற்றச்சாட்டுக்கு மாற்றமாக இந்நூல் அமைந்து, உங்களது பரக்கத்தை பெறத்தக்க வகையிலும், உங்கள் வழிமுறையைப் பின்பற்றுகின்ற அடிப்படையிலும் அமைந்திருந்தால் என்னுடைய எதிர்வாதிக்கு உரிய தண்டனை அளியுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இஹ்யா உலூமித்தீனை எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார்கள். நூலின் கடைசி வரை ஒரு பக்கம் கூட விடாமல் படித்து முடித்தார்கள். “இந்த இஹ்யா ஓர் அழகான நூல்” என்று குறிப்பிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அதனைப் பார்த்து, “அருமை’ என்றார்கள். பிறகு அதைப் படித்து விட்டு, “உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பினானே அவன் மீது சத்தியமாக! இது ஓர் அழகான நூல் தான்” என்று சொன்னார்கள். பிறகு அதை உமர் (ரலி) அவர்கள் எடுத்துப் பார்த்து விட்டு, அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றே பாராட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அலீ பின் ஹர்ஸஹமின் சட்டையைக் கழற்றச் சொல்லி, இட்டுக்கட்டியவருக்கு – அவதூறு சொல்பவருக்குரிய கசையடிகளைக் கொடுத்து அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அவ்வாறு அவரது சட்டையைக் கழற்றி அடியும் கொடுத்தார்கள். ஐந்து கசையடிகள் கொடுத்ததும் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் பரிந்துரை செய்தார்கள். “இந்நூலில் உங்களுடைய சுன்னத்துக்கு மாற்றமான செய்தி இடம்பெற்றிருக்கின்றது என்று அவர் தவறாக நினைத்திருக்கலாம். அதன் அடிப்படையில் அவரது முடிவு தவறாக அமைந்திருக்கலாம்’ என்று அபூபக்ர் (ரலி) விளக்கமும் சொன்னார்கள். இதைக் கேட்ட இமாம் கஸ்ஸாலி திருப்தியடைந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டார்.

இப்போது அலீ பின் ஹர்ஸஹம் கண் விழிக்கின்றார். தமது முதுகில் கசையடியின் தடம் பதிந்திருப்பதைக் கண்டார். தன்னுடைய தோழர்களிடம் இதைத் தெரிவித்து, கஸ்ஸாலி இமாமுக்கு எதிரான பிரச்சாரத்திலிருந்து திருந்தி விலகி விட்டார். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினார். ஆனாலும் சாட்டையடி காயத்தின் காரணமாக ஏற்பட்ட வலியினால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டேயிருந்தார். இதற்கிடையே அல்லாஹ்விடம் பணிந்து உருகிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை தேடிக் கொண்டிருந்தார்.

இறுதியில் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி தமது சங்கையான கையினால் அவருடைய முதுகில் தடவி விட்டார்கள். அவ்வளவு தான். அவருக்கு நிவாரணம் ஏற்பட்டு, அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு சுகமும் அடைந்தார். பிறகு இஹ்யா உலூமித்தீனைத் தொடர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அல்லாஹ் இந்த விஷயத்தில் அவரது உள்ளத்தைத் திறந்து விட்டான். அல்லாஹ்வின் ஞானத்தை அடைந்து மறைமுக, நேர்முக ஞானம் பெற்ற மாபெரும் மகான்களில் ஒருவராக மாறி விட்டார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!

இஸ்லாத்திற்கு எதிரான சதி

இந்தச் சம்பவத்தையும், இதை அப்படியே பதிவு செய்துள்ள நூல்களையும், இந்தச் சம்பவத்தைத் தாங்கி வெளியாகும் செய்தி ஆவணங்களையும் படிப்பவர்கள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் சதி செய்கின்ற மாபெரும் சதிகாரனைக் கண்டிப்பாக அடையாளம் கண்டு கொள்வார்.

இது முஸ்லிம்கள் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்கின்ற மார்க்க விளக்கத்திற்கு நேர் எதிரான விஷயமாகும். இதை எப்படி முஸ்லிம்களுடைய ஏடுகளில் பதிவு செய்ய முடியும்?

எழுதப் படிக்கத் தெரியாமை தான் நபி (ஸல்) அவர்களின் மாபெரும் அற்புதமாகும். அப்படியிருக்கையில் அவர்கள் எப்படிப் படிப்பார்கள்? எழுதுவார்கள்? நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 29:48

ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள். அந்த விளக்கத்தை வரும் இதழில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

பெண்கள் என்றால் மட்டமானவர்களா? பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கணவன் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டுமா? கணவனுக்குப் பிடிக்காதவர்கள் வீட்டுக்கு வரக் கூடாதா? குடும்பத்தில் ஆண்கள் தான் முடிவு எடுக்க வேண்டுமா? ஆண்களைக் கேட்டுத் தான் பெண்கள் செயல்பட வேண்டுமா? இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? இறைவன் படைக்கும் போதே ஆண்களை, பெண்களை விட உயர்வாகவும் மேன்மையாகவும் படைத்திருக்கிறான் என்று என் தந்தை கூறுகிறார்.  இது உண்மையா?

பதில்: பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என இறைவன் கூறுகிறான்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:228

எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்கள்; பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது இதன் கருத்தல்ல. காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாகும்.

சில வகையில் பெண்களை விட ஆண்கள் சிறப்பிற்குரியவர் களாகவும், மற்ற சில வகையில் ஆண்களை விட பெண்கள் சிறப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது நிர்வாகமாக இருக்கும். சிறிய நிறுவனம் என்றாலும் பெரிய நிறுவனம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் இருந்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று இருந்தால் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று ஆகுமே தவிர நிர்வாகமாக ஆகாது.

எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்து வராது. எந்த முடிவு எடுப்பது என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது யாராவது ஒருவருக்கு மற்றவர் கட்டுப்பட்டால் மட்டுமே குடும்ப நிர்வாகம் குலைந்து போகாமல் இருக்கும்.

முரண்பாடு வருகிறது என்பதற்காகக் குடும்பம் சிதைந்து விடக் கூடாது. எனவே கணவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கான காரணங்களும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆண்கள் தான் குடும்பத்துக்காகப் பொருள் திரட்டக் கடமைப்பட்டுள்ளனர். உழைத்து, சம்பாதித்து, மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவிடுகிறார்கள் என்பது முதல் காரணமாகும். பொருளாதாரத்தைத் திரட்டுபவன் என்ற அடிப்படையில் தான் அவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையைச் செய்யாத ஒரு கணவன் தனக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் பெயரால் உரிமை கொண்டாட முடியாது.

அடுத்ததாக, உடலமைப்பில் ஆண்கள் தான் பெண்களை விட வலிமையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முடிவு எடுக்கும் போது மற்றவர் அதற்குக் கட்டுப்பட மறுத்தால் அப்போதும் குடும்ப அமைப்பு சீர்குலைந்து விடும். யாருக்கு வலிமை அதிகம் உள்ளதோ அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் மற்றவர் கட்டுப்பட எளிதாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்விரு காரணங்களையும் குறை சொல்ல முடியாது. இருவருக்கும் ஆசைகள் இருந்தாலும் ஆண் முடிவு செய்தால் தான் இல்லறமே நடக்கும். ஆணுக்கு ஆசை இல்லாமல் பெண்ணுக்கு மட்டும் ஆசை இருந்தால் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது. இவ்விரு காரணங்களால் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:34

இப்படி குடும்பத் தலைவனாக கணவன் நியமிக்கப்பட்டதால் பெண்ணுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றோ அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றோ பெண்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அடக்கியாளலாம் என்றோ இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. இதையும் இஸ்லாம் தெளிவுபடுத்தத் தவறவில்லை.

உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 7095

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2911

நல்ல மனைவியை ஒருவன் அடைந்திருப்பது அல்லாஹ் செய்த அருள் என்று நினைக்கும் ஒருவன் பெண்ணை அடிமையாக நடத்த மாட்டான். மனைவிக்கு நல்லவனாக இருப்பவன் தான் மனிதரில் நல்லவன் என்ற அறிவுரையை நம்புபவன் மனைவியின் மார்க்கத்துக்கு உட்பட்ட ஆசைகளுக்குத் தடை போட மாட்டான். மனைவியின் உறவினரோடு இவனுக்கு ஏதும் மனவருத்தம் இருப்பதால் மனைவியையும் அவளது இரத்த பந்தங்களையும் பிரிக்க மாட்டான். ஒரு கணவன் இப்படியெல்லாமா நடப்பது என்று ஒரு பெண் கேள்வி கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அவன் நல்லவனாக நடக்கவில்லை என்று ஆகிவிடும்.

அடித்துச் சித்திரவதை செய்ய மாட்டான். அப்படிச் செய்தால் அவன் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவனாக ஆவான். கணவனுக்கு கட்டுப்படுவதற்கும் எல்லை உண்டு.

இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மை பயக்கும் காரியங்களில் ஒரு பெண் தனது கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். கணவன் தீமையான செயலைச் செய்யும் படி கட்டளையிட்டால் அதில் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறான காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்படுதல் அறவே கூடாது.

அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் மகளின்  கணவர், எனது மகளின் தலையில் ஒட்டுமுடி வைக்கச் சொல்கிறார்”  என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5205

எந்த மனிதனுக்குக் கட்டுப்படுவதாக இருந்தாலும் தீமைகளில் கட்டுப்படக்கூடாது என்பது பொதுவான விதியாகும். இது கணவன் மனைவி விஷயத்துக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, “இதில் நுழையுங்கள் என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், “நாம் நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்என்று கூறினர். ஆகவே, இதை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். “அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  “அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 7257

கணவன் வெறுப்பவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதா? என்று கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு மஹ்ரமான உறவு இல்லாத அந்நியர்கள் சம்பந்தமாக கணவர் அவ்வாறு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படத் தான் வேண்டும். உங்களுக்கு மஹ்ரமான உறவினர்கள் விஷயமாக அவர் இது போல் கட்டளையிடக் கூடாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். என்னுடன் ஒரு ஆண் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். “ஆயிஷாவே இவர் யார்?” என்று கேட்டார்கள். “இவர் எனது பால்குடிச் சகோதரர்என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே உங்கள் சகோதரர்கள் யார் என்பதில் கவனமுடன் இருங்கள். பசியால் பால் குடித்தாலே பால்குடிச் சகோதரர் என்ற உறவு ஏற்படும்எனக் கூறினார்கள்

நூல்: புகாரி 2647

பால்குடிச் சகோதரர் என்பது நெருக்கமான உறவாகும். அது போன்ற உறவுடையவர்கள் தமது மனைவியின் வீட்டுக்கு வருவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் உண்மையில் பால்குடிச் சகோதாரர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

ஒருவரது மனைவியின் உறவினர்கள், மனைவியைப் பார்க்க வருவதற்கும் உறவைப் பேணுவதற்கும் கணவன் குறுக்கே நிற்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் கணவனுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பது மனைவியின் பொறுப்பாகும். பிரச்சனை இல்லாத இல்லறத்துக்கு இது அவசியமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) அறிவுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத் தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களைப் படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாவன:  மற்றவர்களுக்கு உங்கள் படுக்கைகளைக் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவன: அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.

நூல்: திர்மிதி 1083

முடிவு எடுக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு என்றாலும் குடும்ப நலனுக்காகக் கணவன் தன் மனைவியிடத்தில் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். சரியான ஆலோசனைகளைச் சொல்லும் போது கணவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நபியவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தமது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்களது முடிவின் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி 2734)