ஏகத்துவம் – செப்டம்பர் 2012

தலையங்கம்

மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்

என்ன தான் மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்ணைத் தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும் வானிலிருந்து ஒரு சொட்டு மழையை அவனால் இறக்க முடியாது. இதோ அல்லாஹ் தனது திருமறையில் கேட்கிறான்.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

அல்குர்ஆன் 56:68, 69

இது எக்காலத்துக்கும் பொருந்துகின்ற இறை சவாலாகும்.

மழை என்பது வல்லமை மிகு அல்லாஹ்வின் கையில் இருக்கும் தனி அதிகாரமும் ஆற்றலும் ஆகும். வானிலிருந்து மழை பெய்யவில்லை எனில் மண்ணில் உயிர் வாழ்க்கை இல்லை. இதையே திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானத்தில் உங்கள் உணவும், நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.

அல்குர்ஆன் 51:22

ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு பொழியவில்லை. தென்மேற்குப் பருவமழை தான் கர்நாடகாவுக்கு நீர்வளத்தைத் தருகின்றது. அங்கிருந்து காவிரிக்கு நீர்வரத்து கிடைக்கின்றது.

இதுபோல் கேரளாவில் பொழிகின்ற தென்மேற்குப் பருவமழையினால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கின்றது.

இப்போது தென்மேற்குப் பருவமழை பொய்த்து விட்டதால் இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் முதன்மை உணவான அரிசி விளைச்சல் இல்லை. குறுவை பயிரிட முடியாத அளவுக்கு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாயினர். அரிசியைப் போன்றே இதர தானியங்களும் விளைச்சல் இல்லை.

அரிசி விலை இப்போதே வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலையும் ஏறியிருக்கின்றது. வறட்சியின் இந்தக் கோரப்பிடி தொடருமானால் ஒட்டுமொத்த இந்தியாவும் கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே கோடை வெயிலிலும் மின்வெட்டிலும் தவிக்கின்ற, தகிக்கின்ற, தமிழக மக்கள் நீரினால் கிடைக்கும் மின்சாரத்தை இழந்து தற்போது தமிழகம் இருள்மயமாகக் கிடக்கின்றது.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் மழை ஒன்று தான் மக்களுக்குத் தீர்வு! இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கைவசம் உள்ள ஆற்றலாகும்.

இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் தங்கள் போலி தெய்வங்களிடம் மழை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர். முஸ்லிம்கள் உண்மையான, ஏகனான, தனித்தவனான, ஒரே ஒருவனான அல்லாஹ்விடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் மழை தேடுவதற்காக, “ஸலாத் அல்இஸ்திஸ்கா’ என்ற மழைத் தொழுகையை நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். இதன்படி நமது ஜமாஅத்தினர் மழைத் தொழுகை தொழுவோமாக! மழை வேண்டுவதற்காக நபி (ஸல்) அவர்கள் சில சிறப்பு துஆக்களையும் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அந்தத் தொழுகை மற்றும் துஆக்கள் மூலம் அல்லாஹ்விடம் மழை வேண்டிப் பெறுவோமாக!

அத்துடன் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்வோமாக! ஏனெனில் நபி நூஹ் (அலை) அவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்ற போது, மழை வேண்டுமானால் பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்

அல்குர்ஆன் 71:10,11

நூஹ் நபியின் இந்த அறிவுரைப்படி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி, பருவ மழையைப் பெறுவோமாக!

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு கிளைகள் மழைத் தொழுகையை அறிவித்து நிறைவேற்றி வருகின்றன. இதன் எதிரொலியாகத் தமிழகத்தில் மழைக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. இந்நிலை நீடித்து, பருவமழை பொய்க்காமல் பொழிவதற்கு வல்ல ரஹ்மானிடம் தொடர்ந்து பாவமன்னிப்புத் தேடுவோம்.

மலை இல்லாமல் மழை இல்லை

காற்று இல்லாமல் மழை இல்லை என்று அடித்துச் சொல்லலாம். காரணம், பஞ்சு மிட்டாய்களைப் போன்று பிய்ந்து, பிய்ந்து கிடக்கும் குட்டி மேகங்களை ஒன்று திரட்டுவதற்கும் சில்லறை சில்லறையாகச் சிதறிக் கிடக்கும் மேகத் துண்டுகளை ஒன்று சேர்ப்பதற்கும் உரிய வேலையைக் காற்று தான் செய்கின்றது.

ஈரத் துளிகளை மேக மூட்டமாய், மேகக் கூட்டமாய் ஒன்று திரட்டி சூல் கொண்ட காற்று இமய மலை அளவிலான ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, செங்குத்தாக வானை நோக்கி எழுகின்றது. அந்தரத்தில், ஆகாயத்தை நோக்கி அங்கே இவ்வளவு கனமான உருவத்தில் செல்வது யார்? என்று அதைப் புவி ஈர்ப்பு விசை சுண்டி இழுக்கின்றது. அதன் வெளிப்பாடு தான் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்ற மழையின் புறப்பாடு! இதை அல்லாஹ் தனது திருமறையில் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான்.

சூல் கொண்ட காற்றுகறைளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

அல்குர்ஆன் 15:22

இதன் அடிப்படையில் கருக் கொள்கின்ற காற்றில்லாமல் உருக் கொள்ளும் மழை இல்லை என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் மலை இன்றி மழை இல்லை என்று சொல்ல முடியுமா? ஆம் என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி?

அல்லாஹ்வின் அற்புதத்தை அறிந்து கொள்ள, அவனது படைப்பின் நுணுக்கத்தைத் தெரிந்து கொள்ள மழையின் உருவாக்கத்தைப் பற்றியும், அதற்கு மலையின் உதவியைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை மலை இன்றி மழை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இரண்டு பருவ மழைகள் பொழிகின்றன. ஒன்று தென்மேற்குப் பருவமழை! மற்றொன்று வடகிழக்குப் பருவமழை! இவ்விரண்டும் முறையே தென்மேற்கு, வடகிழக்குப் பருவக் காற்றுகளால் ஏற்படுகின்றன.

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.

அல்குர்ஆன் 7:57

இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது போன்று பருவக் காற்றுகள் மழைக்குக் காரணமாக அமைகின்றன.

இவ்விரு பருவக் காற்றுகளும் எப்படி உருவாகின்றன?

தென்மேற்குப் பருவக்காற்று

தென்மேற்குப் பருவக் காற்று உருவாக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், கடலிலிருந்து, நிலத்திற்குப் பெயர்ச்சியாகும் காற்று பற்றியும் அதற்கான காரணத்தையும் பார்ப்போம்.

கோடை காலத்தில் நிலம் அதிகமாகச் சூடாகி, வெப்ப அளவு 45 டிகிரி சென்டிகிரேட் அளவை விடத் தாண்டி விடும். பூமி உள்வாங்கிய இந்த வெப்பம் காற்றையும் சூடுபடுத்துகின்றது. வெப்பமடைந்த காற்று மேல் நோக்கி உயர்கின்றது. இதனால் அங்கு குறைந்த அழுத்தம் ஏற்படுகின்றது. இந்தக் கால கட்டத்தில் கடலின் வெப்பம் 20 டிகிரி என்ற அளவில் இருக்கும். கடலில் உள்ள இந்தக் குளிர் காற்று, குறைந்த அழுத்தத்தை ஈடு செய்வதற்காக நிலத்தை நோக்கிப் பெயர்ச்சி ஆகின்றது. இந்த விளக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்போது பருவக்காற்றுகளைப் பார்ப்போம்.

பூமத்திய ரேகை அல்லது புவி இடைக்கோட்டிற்கு வடக்கே இந்தியா அமைந்திருப்பதை நாம் அறிவோம். மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சூரியன் வட அரைக் கோளத்தில் பிரகாசிப்பதால் இந்தியாவில் கோடை காலம். இதனால் இம்மாதங்களில் வடமேற்கு இந்தியா மிக மிக அதிகமாக வெப்பமடைகின்றது. இவ்வாறு அதிக வெப்பமாகும் போது இங்குள்ள காற்று வெப்பமடைந்து, விரிவடைந்து உயரே செல்கின்றது. எனவே இங்கே குறைந்த அழுத்த மையம் உருவாகின்றது.

இதே காலத்தில் தென் அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவுகின்றது. எனவே தென் அரைக் கோளத்தில் உயர் அழுத்த மையம் ஏற்படுகின்றது. வடமேற்கு இந்தியாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தத்தை ஈடுசெய்ய தென் அரைக்கோளத்தில் உள்ள அதிக அழுத்த மையத்திலிருந்து காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக, தார் பாலைவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்தியாவின் வட மற்றும் நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த அழுத்த மையம் ஏற்படுகின்றது. அதாவது காற்று சூடாகி, விரிந்து மேல்நோக்கி எழுகின்றது. இதனால் ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்பவும் ஈடுகட்டவும் இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதமிக்க, மழை நீரைக் கருக் கொண்ட காற்றுக்கள் பெயர்ச்சி செய்து புறப்படுகின்றன.

திசை மாறும் காற்றுக்கள்

வட அரைக்கோளத்தை (அதாவது தார் பாலைவனத்தை) நோக்கித் தான் இந்தக் காற்றுக்கள் புறப்பட்டு வருகின்றன. ஆனால் புவியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றன.

இவ்வாறு திசை மாறும் தென்மேற்குப் பருவக்காற்றுக்கள் என்ன செய்கின்றன? இங்கு தான் அல்லாஹ்வின் அழகிய படைப்பின் அதி அற்புத ரகசியமும் ரசனையும் பளிச்சிடுகின்றது. அவனை நம்புகின்ற அடியார்களைப் பரவசத்திற்கும் பக்தி வசத்திற்கும் ஆட்படுத்துகின்றது.

நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.

அல்குர்ஆன் 77:23

அல்லாஹ் சொல்வது போன்று அவனது சிறப்புமிகு படைப்புத் தன்மை இங்கு புலனாகின்றது.

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

அல்குர்ஆன் 77:27

மலைகளை, மதுரமான மழை நீருடன் தொடர்புபடுத்திப் பேசுகின்ற அவனது தொழில் நுட்பமும் துலங்குகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையும் மழையும்

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது அல்லாஹ்வின் அற்புதத்தையும் ஆற்றலையும் பறை சாற்றுகின்ற மாபெரும் படைப்பு என்றே கூற வேண்டும்.

இந்த மலைத் தொடர் மராட்டியம், குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கே துவங்கி, மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகின்றது. இதன் நீளம் சுமார் 1600 கிலோ மீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலையின் பரப்பளவு 60,000 சதுர கிலோ மீட்டர்கள்.

தமிழகத்தில் இம்மலைத் தொடர் ஆனைமலை, நீலகிரி மலைத் தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலைத்தொடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இம்மலைத் தொடரின் உயரமான சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடியாகும். இதன் உயரம் 2695 மீட்டர் ஆகும்.

இதேபோன்று வட இந்தியாவில் அமைந்திருக்கும் ஹிமாலயா மலைத் தொடரும் அல்லாஹ்வின் அளப்பெரும் அரிய ஏற்பாடாகவும், ஆற்றல்மிகு தொழில்நுட்பமாகவும் அமைந்துள்ளது.

பூமி சுழற்சி காரணமாக தென்மேற்காகத் திருப்பப்பட்ட காற்று தென் முனையைத் தொடுகின்ற போது இந்தியாவின் தீபகற்ப அமைப்பின் காரணமாக இரண்டு கிளைகளாகப் பிரிந்து செல்கின்றது. ஒன்று அரபிக் கடல் கிளையாகவும் மற்றொன்று வங்கக் கடல் கிளையாகவும் பிரிந்து செல்கின்றது.

இங்கு தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் வேலையையும், இமய மலையின் வேலையையும் உணர முடியும். இவ்விரு மலைகளும் மிகப் பெரிய தடுப்புச் சுவரைப் போன்று செயல்படுகின்றன. இந்த இரு மலைகள் மீது பருவக்காற்றுகள் மோதி மேலெழுகின்றது. வேறு வழியில்லாமல் மழையாகப் பொழிகின்றது.

முதன்முதலில் தென்மேற்குப் பருவக்காற்று முட்டுவதும் மோதுவதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான். இந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் பயனாக கேரளா, கர்நாடகா, மும்பை, குஜராத், கொங்கன், கோவா, டெல்லி போன்ற இடங்கள் அதிகப்பட்சமான மழையைப் பெறுகின்றன.

இவ்வாறு மழையைப் பொழிவித்த காற்று வறண்ட காற்றாக மாறுகின்றது. இந்த வறண்ட காற்று மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியைக் கடந்து அதன் மறு சரிவான கிழக்குப் பகுதியின் வழியே, அதாவது தக்காண பீடபூமியில் இறங்குகின்றது. வறண்ட காற்று மழையைத் தராது. எனவே இந்தப் பகுதி மட்டும் மழை பெறாத, மழை மறைவுப் பகுதியாகும். இதைத் தவிரவுள்ள மற்ற பகுதிகள் அதிகமான மழை பெறும் பகுதிகளாகும்.

வங்கக் கடல் கிளைக் காற்று

இந்த வங்கக்கடல் கிளைக் காற்று, வங்கக் கடலில் உள்ள ஈரப்பதத்தையும் மேலதிகமாக எடுத்துக் கொண்டு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பொழிவிக்கின்றது. மேகலாயாவின் சிரபுஞ்சி எனுமிடத்திலிருந்து 16 கி.மீ. மேற்கிலுள்ள மாசின்ரம் என்னுமிடம் தான் உலகிலேயே அதிகமான மழை பெறும் இடமாகும்.

ஏற்கனவே இந்தக் காற்று, தார் பாலைவனத்தில் உள்ள வெப்பத்தை ஈடுகட்ட வந்த காற்று என்பதை நாம் அறிந்தோம். இதுதான் இமயமலை என்ற மாபெரும் இயற்கை மதில் சுவரால் தடுக்கப்பட்டு இந்தக் காற்று மேற்கு நோக்கித் திருப்பப்பட்டு, கங்கைச் சமவெளி முழுவதிலும் மழை பொழிவிக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிகள் மழை மறைவுப் பகுதிகள் என்பதை அறிந்தோம். அங்கு மழை இல்லாததால் நீர்வளம் ஏதுமில்லை என்று எண்ண வேண்டியதில்லை. மழை பெய்த பகுதிகளிலிருந்து மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் இந்தப் பகுதிக்குச் சென்றடைந்து அந்தப் பகுதிகளை வளமாகவும் செழிப்பாகவும் ஆக்குகின்றன. இதுவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அழகிய அருமையான ஏற்பாடாகும்.

வடகிழக்குப் பருவக்காற்று

இந்தியப் பெருங்கடலிலிருந்து புறப்பட்டு, பூமியின் சுழற்சியில் திசை திருப்பப்பட்ட காற்று தான், அதாவது நீரிலிருந்து நிலத்திற்குப் பெயர்ச்சியாகும் காற்று தான் தென்மேற்குப் பருவக்காற்று என்றால், வடகிழக்குப் பருவக்காற்றானது நிலத்திலிருந்து நீரை நோக்கி வரும் காற்றாகும்.

அக்டோபர் முதல் மார்ச் வரை சூரியன் தென் அரைக்கோளத்தில் பிரகாசிக்கின்றது. இதனால் அங்கு கோடை காலம் நிலவுகின்றது. இப்போது தென் அரைக்கோளத்தில் குறைந்த காற்று அழுத்த மையம் உருவாகின்றது. தென் அரைக்கோளத்தில் கோடை காலம் என்றால் வட அரைக்கோளத்தில் குளிர்காலம். இங்குள்ள குளிர் காற்று அதைச் சரிகட்டப் புறப்பட்டுச் செல்லும் போது புவி சுழற்சி காரணமாக வடகிழக்காகத் திசை திருப்பப்படுகின்றது.

அவ்வாறு திசை திருப்பப்பட்ட இந்தக் காற்று வங்கக் கடல் வழியாக பயணிக்கின்றது. அப்போது கிழக்குத் தொடர்ச்சி மலை ஒரு தடுப்புச் சுவர் போல் செயல்படுகின்றது. கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்றது கிடையாது. இதில் அதிகமான இடைவெளிகள் உள்ளன. இருந்தாலும் அது ஒரு தடுப்புச் சுவராகத் திகழ்கின்றது. இதுவும் அல்லாஹ்வின் மகத்தான, மாபெரும் ஏற்பாடாகும். இதன் விளைவாக இந்தக் காற்றுகள் மூலம் தமிழகம், ஆந்திரம், ராயல்சீமா, பாண்டிச்சேரி, இலங்கையின் கிழக்குப் பகுதிகள் போன்றவை மழையைப் பெறுகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்று மூலம் மிகக் குறைந்த அளவு மழையைப் பெறும் தமிழகக் கடலோரப் பகுதிகள், வடகிழக்குப் பருவக்காற்றினால் 60% மழையைப் பெறுகின்றன. தமிழகத்தின் உட்பகுதிகள் 40 முதல் 60% வரை மழையைப் பெறுகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்றினால் பயனடைந்த கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள் போன்றவை வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் 20% மழையைப் பெறுகின்றன. தென்மேற்குப் பருவ மழையில் மழை மறைவுப் பகுதியாக இருந்த தக்காண பீடபூமி கூட வடகிழக்குப் பருவமழையைப் பெற்று விடுகின்றது.

தமிழகத்தின் தலைவிதியையும் தானிய விதியையும் நிர்ணயிப்பதே வடகிழக்குப் பருவமழை தான். தமிழகத்திற்கு உணவைத் தரும் உயிர்நாடியாக வடகிழக்குப் பருவமழை அமைந்திருக்கின்றது.

ஆக மொத்தத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளும், வடகிழக்குப் பருவமழைக்குக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.

மலைத் தடுப்புகளுக்கு ஆங்கிலத்தில் தர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீ இஹழ்ழ்ண்ங்ழ் என்று சொல்லப்படும். இமயம் போன்ற மலையெனும் இயற்கைத் தடுப்புகள், பாதுகாப்பு மதில் சுவர்கள் இல்லையென்றால் இந்தக் காற்றுக்கள் சீனாவுக்கும், ஆப்கானுக்கும் ரஷ்யாவுக்கும் பறந்து போய்விடும். இந்தியா மழையை மறந்து போய்விட வேண்டும்.

மலைகள் நதிகளின் பிறப்பிடம்

இதுவரை பார்த்த விளக்கங்களிலிருந்து மலையின்றி மழையில்லை என்பது உறுதியாகின்றது. அப்படித் தான் அல்லாஹ் மலைகளை அமைத்திருக்கின்றான்.

அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலையானாலும், இமயமலைத் தொடரானாலும் அவை ஆறுகளில் பிறப்பிடமாக அமைந்துள்ளன.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி எல்லாமே மேற்குத் தொடர்ச்சி மலையின் பிள்ளைகள் தான். இந்த வகையில் மலைகள் அல்லாஹ்வின் அரும்பெரும் அருட்கொடைகள் என்றே கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மூல முதற்காரணமாக காற்று அமைந்திருக்கின்றது.

மரம் ஓர் அருட்கொடை

மழை பெறுவதற்கு ஏதுவாக மலைகளை அருட்கொடையாக அல்லாஹ் ஆக்கியிருப்பது போன்று மரங்களை மற்றொரு காரணியாக ஆக்கியிருக்கின்றான். மரங்கள் தாம் தம் இலைகள் மூலமாக நிலத்தடி நீரை சூரிய ஒளியின் மூலம் உறிஞ்ச வழிவகுக்கின்றன.

பருவக் காற்றைக் கொண்டு வருவதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மறு சுழற்சியில் மழை வருவதற்குத் துணை நிற்கின்றன. மரங்களின் வேர்கள் மழை நீரைப் பிடித்து வைப்பதன் மூலம் நிலத்தடிக்குக் கீழே உள்ள நீர்ப்படுகைகள் நீரை மறுசேமிப்பு, சேகரிப்பு செய்வதற்கு உதவுகின்றன.

நன்கு அடர்த்தியான தேக்கு மரக் காடு, ஆயிரம் மழைத் துளிகள் அடங்கிய பரிமாணங்களை வழங்குகின்றது. வெப்ப மண்டலத்தில் கடல்கள் செயல்படுவதைப் போன்று, வளி மண்டலத்தில் நன்கு அடர்ந்து செறிந்த காடுகள் செயல்படுகின்றன.

அதாவது வளி மண்டலத்தில் நீராவியை வெளியிட்டுப் பின்னர் மழையினால் அதை நிரப்பிக் கொள்கின்றன.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான இந்த மரங்களை, காடுகளிலும் நகரங்களிலும் பெருமளவு அழித்து, மனிதன் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றான்.

நீர்வளம்

மழை பெறுவதற்கு மலைகளும் மரங்களும் காரணியாகத் திகழ்வது போன்று நீர்வளமும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்கள் இந்தியத் துணைக் கண்டத்தை வளையமிட்டிருப்பது இங்கு வாழும் மக்களுக்கு ஒரு பாக்கியமாகும்.

மழை பொழிவிற்கு அடிப்படைக் காரணமான ஈரப்பதத்தை, காற்றுக்கள் தன்னகப்படுத்துவதற்கு இக்கடல்கள் அற்புத ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.

புவியின் சுழற்சி

சுழலும் பூமியும் காற்றைத் திசை திருப்புவதற்கு ஒரு சூத்திரதாரியாகத் திகழ்கின்றது. இதுதவிர இந்தியத் துணைக்கண்டம் புவியியல் வரைபடத்தில் வட அரைக்கோளத்தில் அமைந்திருப்பது. இவை அத்துணை காரணிகளும் இணைந்து தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மழையைப் பொழிவிக்கின்றன.

மவ்சிம் – மான்சூன்

இந்தப் பருவக்காற்றுக்களுக்கு அரபியர்கள் மவ்சிம் என்று பெயர் வைத்தனர். மவ்சிம் என்றால் பருவக் காலம் என்று பெயர்.

இந்த மவ்ஸிம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது தான் மான்சூன் – ஙர்ய்ள்ர்ர்ய் என்று அனைவரும் ஒருமித்துக் கூறுகின்றனர்.

அரபியர்கள் முற்காலத்தில் பாய்மரக் கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். பிறகு வடகிழக்குப் பருவக்காற்றின் போது தங்கள் தாயகம் திரும்புவார்கள். அதனால் இதற்கு பழ்ஹக்ங் ரண்ய்க்ள் – வணிகக் காற்றுக்கள் என்று பெயர் வழங்கப்பட்டது.

கப்பல்கள் கடல்களில் நகர்வது அல்லாஹ்வின் மாபெரும் அற்புதமாகும்.

மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை.

அல்குர்ஆன் 42:32

இந்த அடிப்படையில் இந்தக் காற்றுக்கள் மக்களின் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதைப் பார்க்கிறோம். இன்றைய கால கட்டத்தில் காற்று, மின் உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

மழை பொழிவதற்கு அல்லாஹ்வின் பல்வேறு அருட்கொடைகளைப் பார்த்தோம். இந்த அருட்கொடைகள் அனைத்திற்காகவும் அல்லாஹ்வுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதில் குறிப்பாக, காற்று ஸ்தம்பித்து விட்டால் கடலில் மட்டுமல்ல, மண்ணிலும் மனித வாழ்வே ஸ்தம்பித்து விடும்.

அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான். உடனே அது அதன் (கடலின்) மேற்பரப்பில் நின்று விடுகின்றது. சகிப்புத் தன்மையும், நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 42:33

அறிவியல் பேருண்மைகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் இந்த அருட்கொடைகளுக்கு என்றென்றும் நன்றி செலுத்துகின்ற நல்லடியார்களாக வாழ்வோமாக!

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

தர்மா

வேறு கொள்கையில் உள்ளவர் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் இதற்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இதற்கு மற்ற மதங்களில் இருப்பதைப் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் இஸ்லாத்தில் கிடையாது.

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உளமாறக் கூறுகிறேன்.  முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் உளமாறக் கூறுகிறேன்) என்று மனப்பூர்வமாக ஏற்று, கூறிவிட்டால் அவர் முஸ்லிமாகி விடுவார்.

அவர் இஸ்லாத்தில் இணைவதற்கு இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை.

ஒருவர் முஸ்லிமாகிவிட்டதைப் பகிரங்கமாக மக்களிடம் தெரிவித்தால் தான் உலக ரீதியில் சில பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அவருடைய திருமணம், மரணம் ஆகிய காரியங்கள் இஸ்லாமிய முறைப்படி நடைபெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.

? மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா? நாம் நடத்தும் அனைத்து மார்க்கப் பணிகளுக்கும் மக்களிடம் பணம் பெறப்படுகிறது. இதுதான் நிலையா? இது எல்லாம் இல்லாமல் தப்லீக் என்ற இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். நம் ஏன் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பது இல்லை? பெரும்பாலும் மறைமுகமாகவே அவர்களை தவ்ஹீத் பக்கம் அழைக்கிறோம்? இவர்களைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் அவரே மனமுவந்து அளித்தாலே தவிர பெறாமல் தவ்ஹீத் பணி செய்யக்கூடாதா? செல்வத்தை சோதனை என்று இஸ்லாம் கூறுகின்றது. மார்க்கப் பணிக்கு இந்தச் செல்வம் தேவை தானா?

தமீம் அன்சாரி

தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காகப் பிறரிடம் உதவிகளைக் கேட்பதில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது தவறான கருத்தாகும்.

அவர்கள் நம்மைப் போன்று பொதுமக்களிடம் வெளிப்படையாகக் கேட்க மாட்டார்கள். ஆனால் சமுதாயத்தில் பெரும் பெரும் பணக்காரர்களைத் தேடிச் சென்று உதவிகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்கள் கேட்டால் கொடுப்பதற்கு ஏராளமான செல்வந்தர்கள் இருக்கின்றார்கள்.

எத்தனையோ தப்லீக் மத்ரஸாக்கள் பலருக்குச் சம்பளம் கொடுத்து மத்ரஸாவிற்காக நிதிதிரட்டி வருமாறு ஊரெல்லாம் அனுப்பி வைக்கின்றார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் வந்துவிட்டால் ஒரு வீடு விடாமல் ஏறிச் சென்று ஏழைகளுக்குச் சேர வேண்டிய தோலை மத்ரஸா பணிக்காக இவர்கள் வாங்கிச் சென்று விடுகிறார்கள்.

எனவே தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காகப் பிறரிடம் உதவி கேட்டுச் செல்வதில்லை என்பது தவறான கருத்தாகும். இவர்கள் பொதுமக்களிடம் வெளிப்படையாக உதவி கேட்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலில் இவர்களின் வட்டம் மிகச் சிறியது. ஆறு விஷயங்களை மட்டும் பள்ளிவாசலுக்குச் சென்று சொல்வதும் தனி நபர்களைச் சந்தித்து சொல்வதுமாகும். இதற்குப் பொருளாதாரம் தேவை இல்லை.

சமுதாயப் பணிகளைப் பற்றியோ, தீமைகளைக் கண்டித்துக் களமிறங்குவது பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை.

அதே நேரத்தில் இஜ்திமா என்ற பெயரில் இவர்கள் நடத்தும் மாநாடுகளுக்கு பெருமளவு பொருட் செலவு செய்கிறார்கள். தனவந்தர்களிடம் வாங்கித் தான் இப்பணியைச் செய்கிறார்கள்.

இவர்கள் மார்க்கப் பணியை வீரியமாகவும் விவேகமாகவும் செய்ய மாட்டார்கள். எந்த வழியில் சென்றால் பிரச்சனையும் சிரமமும் இருக்காதோ அந்த வழியில் மட்டுமே மார்க்கத்தைப் போதிப்பார்கள்.

பொருளாதாரத்தைச் செலவு செய்து மார்க்கத்தைப் பலருக்கு எத்தி வைக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால் இவர்கள் மார்க்கத்தைப் பரப்ப இப்படிப்பட்ட சுமைகளைச் சுமக்க மாட்டார்கள். கஷ்டப்படாமல் மார்க்கத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

பொதுவாக சத்தியக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் சமானியர்களாகவே இருப்பார்கள். ஓரிரு செல்வந்தர்களும் இவர்களுடன் இருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை இது போன்றதாகும்.

இந்த ஜமாஅத்துக்குச் சில செல்வந்தர்கள் உதவி செய்தாலும் அவர்களின் உதவி மட்டும் ஜமாஅத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. நடுத்தரமான அல்லது ஏழை மக்கள் ஒவ்வொருவரும் இந்த ஜமாஅத்தை நம்பி, தம்மால் இயன்ற உதவியை அளிக்கின்றார்கள். இவர்களின் உதவியும் ஜமாஅத்திற்குத் தேவைப்படுகின்றது.

இந்த மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்கு இலகுவான வழி ஏதாவது இருந்தால் அதற்காகப் பணம் செலவழித்தாலும் பரவாயில்லை. அநேக மக்களுக்கு சத்தியம் சென்றடைய வேண்டும் என்று மட்டுமே ஜமாஅத் நினைக்கின்றது. இதற்காகப் பொதுமக்களிடம் சிறு சிறு தொகையாக பணம் திரட்டும் கடினமான முயற்சியில் ஜமாஅத் இறங்குகின்றது.

ஒருவர் தவ்ஹீது ஜமாஅத் செய்யும் பணிகளையும் தப்லீக் ஜமாஅத் செய்யும் பணிகளையும் எடைபோட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வார்.

செல்வம் சோதனை என்று மார்க்கம் கூறுவதை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். செல்வம் சோதனை என்பதால் பிறரிடம் உதவிகளைக் கேட்கக் கூடாது என்பது உங்கள் வாதம்.

இது தவறான வாதமாகும். செல்வம் சோதனை என்பதால் நீங்கள் சம்பாதிக்காமல் இருப்பீர்களா? உங்களுக்குச் செல்வம் தேவைப்படும் போது அடுத்தவரிடம் உதவி கேட்காமல் இருப்பீர்களா?

மனிதன் செல்வத்தின் மீது அதிக ஆசை வைத்துள்ளான். செல்வத்தின் மீதுள்ள ஆசையால் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி ஹராமான வழியில் செல்வத்தைத் தேடி விடக்கூடாது. காசு பணத்துக்காக மார்க்கத்தை புறந்தள்ளிவிடக் கூடாது என்பதற்காகவே செல்வம் சோதனை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் செல்வம் பலரைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வதைப் பார்க்கின்றோம். அது போன்று நாமும் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்பதே இதன் கருத்து.

ஆனால் ஆகுமான வழியில் செல்வத்தைத் தேட மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. நல்ல காரியங்களுக்கு உதவி செய்யுமாறு பிறரிடம் வெளிப்படையாகக் கேட்பது தவறல்ல.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2

மக்களிடம் மார்க்கப் பணிக்காக தாருங்கள் என்று கூறி பணம் வசூலித்து அந்த வகைக்காகச் செலவழிக்காமல் சுருட்டிக்கொள்வது தான் பாவம். மக்களிடம் உதவி பெற்று மக்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் செலவிடுவது நன்மையான செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் நன்மையான பணிக்காக மக்களிடம் வெளிப்படையாக உதவி கேட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. பின்வரும் சம்பவம் இதற்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடைஅல்லது “நீளங்கிஅணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது “மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி(முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு “ஸாஉகோதுமை, ஒரு “ஸாஉபேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும்  ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉகோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; தூக்கவே முடியவில்லை எனலாம். பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டிருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டுஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1848

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியையும் செய்தார்கள். மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க மக்களிடம் தான் கேட்டு வாங்க முடியும். மருத்துவ உதவி, ஜகாத் உதவி, புயல் நிவாரண உதவி என்று கூறிக் கொண்டு தப்லீக் ஜமாஅத்தை யாரும் அணுக முடியுமா? அணுகினால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் எனப் பொருத்தமற்ற இடத்தில் அல்லாஹ்வின் பெயரை துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்வி தவறானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்      தொடர்: 6

பால்ய விவாகமும் மறுக்கும் உரிமையும்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மத்ஹபு வழி

வயதுக்கு வராத சிறுவர், சிறுமியை தகப்பன் அல்லது பாட்டன் திருமணம் முடித்து வைத்து விட்டால் வயதுக்கு வந்ததும் அவ்விருவருக்கும் சுய விருப்பம் கிடையாது. (அதாவது அந்தத் திருமண உறவை முறிக்க முடியாது)

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198

சிறுவர், சிறுமியின் பால்ய விவாகம் கூடும்.

(நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198)

பால்ய விவாகம் கூடும் என்றும், இதற்குப் பிறகு அவ்விருவரும் பருவமடைந்து விட்டால் திருமண பந்தத்தை முறிக்கும் உரிமை அவ்விருவருக்கும் இல்லை என்றும் ஹனபி மத்ஹபு கூறுகின்றது. இமாம் அபூஹனிபா மற்றும் அவரது மாணவர் அபூயூசுப் ஆகியோர் இச்சட்டத்தை முன்மொழிவதாக இதன் தொடர்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

மாநபி வழி

ஹனபி மத்ஹபு சொல்லும் இச்சட்டத்தில் நபிவழிக்கு முரணான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று பால்ய விவாகம். இதை நபிவழி அனுமதிக்கவில்லை.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

அல்குர்ஆன் 4:21

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும். ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியோ, முதிர்ச்சியோ இல்லாத சிறுவர், சிறுமிகள் திருமணம் என்ற கடுமையான ஒப்பந்தத்தைச் செய்யலாகாது என்பது இந்த வசனம் தெரிவிக்கும் பொருளாகும். ஆனால் மத்ஹபோ இந்த வசனத்தைச் சற்றும் கண்டு கொள்ளாமல் பால்ய விவாகம் கூடும் என்கிறது.

நம்மில் யாரும் ஒரு வியாபாரம் பற்றி அறியாத சிறுவனோடு வியாபார ஒப்பந்தம் செய்து கொள்வோமா? சொத்து பத்துகளை வாங்கும், விற்கும் ஒப்பந்தத்தைச் செய்வோமா? இவைகளையே செய்ய மாட்டோம் என்றால் திருமணம் என்பது இவைகளை விடக் கடுமையான ஒப்பந்தம் இல்லையா?

இந்த நடைமுறை அறிவு இருந்தாலே பால்ய விவாகத்தை அனுமதிக்கும் மத்ஹபுச் சட்டம் தவறு என்பதை உணரலாம். மேலும் திருமணத்திற்குப் பின் அவ்விருவரும் பருவத்தை எய்துவிட்டால் பிரிந்து கொள்ளும் உரிமை இல்லை என்றும் மத்ஹபு போதிக்கின்றது. இதுவும் நபிவழிக்கு எதிரான சட்டமே.

கன்னிப்பெண்ணாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் திருமணத்திற்கு அவளின் சம்மதம் மிக அவசியம் என்பது நபிவழி.

கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது. கன்னி கழிந்த பெண்ணிடம் உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6968

திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனில் அந்த பந்தத்திலிருந்து விலகும் உரிமை பெண்ணுக்கு உண்டு. நபியவர்கள் தங்கள் வாழ்க்கையிலே இதை நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.

கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே, நான் நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

நூல்: புகாரி 6945

ஆனால் அறியாத பருவத்தில், அவர்களது விருப்பம் என்ன என்பதே தெரியாத நிலையில் திருமணம் முடித்து வைக்கலாம் என்று மத்ஹபு கூறுவதோடு விபரம் அறிந்த பின் பிரியும் உரிமை கிடையாது என்றும் சட்டம் வகுப்பது சரியா? இது நபிவழி அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டமா? என்பதை அறிவுள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நிர்ப்பந்தத்தின் நிலை

மத்ஹபு வழி

திருமணம், விவாகரத்து, விவாகரத்தைத் திரும்பப் பெறுதல், மனைவியுடன் உறவு கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தல், போர் இன்றியே எதிரிகளிடமிருந்து கிடைக்கும் வெற்றிப் பொருளை எடுத்துக் கொள்ளுதல், லிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பாக்குதல்), அடிமையை விடுதலை செய்தல், பழிக்குப் பழி வாங்காது மன்னித்தல், சத்தியம், நேர்ச்சை ஆகிய பத்து காரியங்களையும் நிர்ப்பந்தப்படுத்தி செய்தாலும் அக்காரியங்கள் செல்லும்.

நூல்: ஷரஹ் பத்ஹுல் கதீர்  பாகம் 3, பக்கம் 489

திருமணம், விவாகரத்து உள்ளிட்ட பத்துக் காரியங்களை நிர்ப்பந்தப்படுத்தி செய்தால் அது செல்லும் என்று மத்ஹபு கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணின் தந்தையைக் கத்தியைக் காட்டி மிரட்டி, உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்காவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி, அவளைத் திருமணம் செய்தால் அந்தப் பெண் அவனுக்கு மனைவியாகி விடுவாள் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

அதே போல் கணவன், மனைவி ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, யாரேனும் ஒருவர் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நீ தலாக் விடு என்று கூறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் கணவன் தன் மனைவியைத் தலாக் விட்டால் அந்தத் தலாக் செல்லுபடியாகும், அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று இந்தச் சட்டம் கூறுகின்றது. இச்சட்டத்திற்கு மாநபிவழியில் ஆதாரமுண்டா என்பதை காண்போம்.

மாநபி வழி

இஸ்லாத்தில் எந்த ஒரு காரியத்திற்காகவும் யாரையும் நிர்ப்பந்திக்க கூடாது. ஏனெனில் நிர்ப்பந்தம் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒரு காரியத்தை விரும்பி செய்தாலே ஒழிய நிர்ப்பந்தத்தினால் செய்தால் அது நிரந்தரமாகாது.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளதுஎன்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 18:29

இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வார்.

அல்குர்ஆன் 73:19

இதுவே உண்மையான நாள்! விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 78:39

இன்னும் ஏராளமான வசனங்கள் மற்றும் நபிமொழிகள் இஸ்லாத்தில் உள்ள எந்தக் காரியத்திற்காகவும் யாரையும் நிர்பந்திக்கக் கூடாது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றன.

நிர்ப்பந்தம் கூடாது என்றால் நிர்ப்பந்தித்துச் செய்யப்படும் காரியம் செல்லாது என்றே பொருளாகும். இந்த கருத்தும் மேற்கண்ட வசனங்களில் உள்ளது. ஆனால் ஹனபி மத்ஹப் இதற்கு எதிராக நிர்ப்பந்தித்துச் செய்தால் அது செல்லும் என்று தீர்ப்பளிக்கின்றது.

நிர்ப்பந்தம் செல்லாது

நிர்ப்பந்தித்துச் செய்யப்படும் காரியம் செல்லும் என்றால் ஹனபி மத்ஹபு கூறும் பத்து விஷயத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இஸ்லாம் ஆகும். ஏனெனில் இஸ்லாத்தை ஏற்பது எரியும் நரகை விட்டும் காக்கக் கூடியது, சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லக்கூடியது. இவ்வளவு சிறப்புமிக்க இஸ்லாத்தை ஏற்குமாறு ஒருவரை நிர்ப்பந்தித்து அவரும் ஏற்றுக் கொண்டால் இது செல்லும் என்பார்களா?

அப்படியானால் நபிகள் நாயகம் காலத்தில் எத்தனையோ காஃபிர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் தாம் வலிமை (ஆட்சி) பெற்றிருந்த காலத்தில் மக்கள் நலன் கருதி காஃபிர்களை நிர்ப்பந்தித்திருப்பார்களே? ஏன் செய்யவில்லை? இறைவன் ஏன் இதைக் கட்டளையிடாமல் இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்று கூற வேண்டும்? நிர்ப்பந்தத்தால் செய்யும் காரியம் செல்லாது என்பதால் தான்.

உதாரணமாக, நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தனது மனைவியைத் தலாக் கூறி விட்டார் என்றால், அது வெறும் வாயளவில் சொன்னதாகத் தான் ஆகுமே தவிர உண்மையில் தலாக் ஆகாது. நிர்ப்பந்தத்தால் அல்லாஹ்வை மறுத்தால் கூட அது குற்றமாகாது.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப் பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.

அல்குர்ஆன் 16:106

நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ்வை மறுத்து, குஃப்ரான வார்த்தைகளைச் சொல்லி விட்டால் கூட அதனால் அவர் காஃபிராகி விட மாட்டார் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது. எனவே நிர்ப்பந்தத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் செல்லாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

கேள்விக்குறியாக்கும் சட்டம்

நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்தால் அது செல்லும் என்ற ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி யாரும், யாருடைய மனைவியையும் அல்லது எந்தப் பெண்ணையும் நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டால் ஊரில் எந்தப் பெண்ணும் நிம்மதியாக நடமாட முடியாது, வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

ஹனபி மத்ஹபைச் சார்ந்த ஆலிம்களில் ஒருவரை நிர்ப்பந்தித்து அவரது மனைவியை தலாக் விடச் சொன்னால் அவர் மனைவியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவாரா? அல்லது நிர்ப்பந்தத்தில் தலாக் என்று கூறினாலும் அது தலாக் ஆகாது என்று கூறுவாரா?

மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் அந்த மத்ஹபைத் தூக்கி எறிந்து விடுவது தான் இந்த மத்ஹபு ஆலிம்களின் நிலைபாடு.

மேலும் பல விஷயங்களிலிருந்து குறிப்பிட்ட இந்தப் பத்து விஷயங்களை மட்டும் கூறுவதில் எந்தத் தத்துவமும் இல்லை. ஆக மத்ஹபு கூறும் இந்தச் சட்டத்திற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

கஃபா இடம் பெயருமா?

புனித ஆலயமான கஃபாவை மக்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான், (பார்க்க: அல்குர்ஆன் 5:97)

மக்களுக்காக மக்கள் அங்கே சென்று தவாப் செய்வதற்காக கஃபாவை நிலையானதாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். கஃபா எங்கேயும் நகர்ந்து செல்லாது என்பதையும், அதைச் சந்திக்கச் செல்லும் மக்களை ஏமாற்றாது என்பதையும் திட்டவட்டமாக இந்த வசனம் கூறுகிறது.

மத்ஹபு வழி

கராமத் உடையவர்களைச் சந்திப்பதற்காக கஃபா ஆலயம் இடம் பெயர்ந்து விட்டால் அது அமைந்திருந்த இடத்தை நோக்கித் தொழலாம்.

 (துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 402)

கஃபா நிலையானது என்று இறைவன் கூறியிருக்கும் போது அது இடம் பெயர்ந்து செல்லலாம் என மத்ஹபு கூறுகிறது.

கஃபா ஆலயம் எவரையும் சந்திப்பதற்காக இடம் பெயருமா? பெயரும் என்றால் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக அது மதீனாவிற்குச் சென்றிருக்குமே? நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நாடி ஹஜ் செய்ய வந்த போது தடுக்கப்பட்டார்களே அப்போது நபிகளாரை சந்திக்கச் செல்லவோ, இடம் பெயரவோ இல்லையே?

நபிகள் நாயகத்திற்கே இடம் பெயராத கஃபா இனி வேறு யாருக்கும் இடம் பெயருமா?

குர்ஆனுக்கு முரணாகவும் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையிலும் இந்த நூலாசிரியர் கற்பனை செய்து அதிசயமான சட்டத்தைச் சொல்லியிருக்கின்றார். இதற்கும் மாநபி வழிக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அறிவை கொண்டு சிந்தித்தாலே தெளிவாகி விடும்.

ஹவ்வாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டது ஏன்?

மாநபி வழி

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

மாதவிடாய் பற்றி இறைவன் கூறும் போது அது ஓர் தொல்லை என்று குறிப்பிடுகிறான். அந்தச் சமயத்தில் பேண வேண்டிய ஒழுங்குமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் கற்றுத் தந்துள்ளார்கள். மற்ற படி இது ஏற்பட்டதற்கான காரணத்தை, பின்னணியை நபிகளார் கூறவில்லை. பெண்களுக்கு இறைவன் வழங்கிய ஒரு சோதனை என்று இவ்வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

மத்ஹபு வழி

மாதவிடாய் ஏற்பட்டதற்கான காரணம், (தடுக்கப்பட்ட) மரத்தில் உள்ளதை ஹவ்வா சாப்பிட்டதால் தான். அதனால் தான் அல்லாஹ்வின் இந்தச் சோதனை துவங்கியது.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 283

தடுக்கப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்டதால் தான் மாதவிடாய் ஏற்பட்டது என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ எங்காவது கூறியிருக்கின்றார்களா? அதைச் சாப்பிட்டதால் என்ன ஏற்பட்டது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன.

அல்குர்ஆன் 7:19

வெட்கத்தலங்கள் வெளியாகின என்று தான் அல்லாஹ் கூறுகின்றானே தவிர இதனால் தான் மாதவிடாய் ஏற்பட்டது என்று கூறவில்லை. மேலும் இந்த வசனத்தில் இருவருமே மரத்திலிருந்து சுவைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களது இந்த அற்புதமான கண்டுபிடிப்பின் படி பார்த்தால் ஆதம் (அலை) அவர்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டிருக்க வேண்டும்.

மத்ஹபு நூல்களை எழுதியவர்கள் குர்ஆன் வசனங்களைக் கூட சரியாக விளங்காமல் குர்ஆன் மற்றும் நபிவழிக்கு முரணாகவும், இவ்விரண்டிலும் இல்லாததையுமே சட்டம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளனர். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

பிடிக்க ஒரு பிறை! முடிக்க ஒரு பிறை

குட்டையைக் குழப்பிய குமரி காஜி

நீண்ட காலமாகத் தமிழகம் பிறை விஷயத்தில் குழம்பிய குட்டையாக இருந்து வந்தது. சில இடங்களில் கசாப்புக் கடைக்காரர்கள் பெருநாளை நிர்ணயிக்கின்ற கதாநாயகர்களாகவும் பெருநாளை நிச்சயிக்கின்ற காஜிகளாகவும் மாறிவிடுவார்கள். அவர்களுக்கு மார்க்கம் என்பது அறவே கிடையாது. வியாபாரம் தான் நோக்கம். எனவே அவர்களும் பிறை விஷயத்தில் குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை பெருநாள்; மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பெருநாள். இரண்டு ஊர்களுக்கும் மத்தியில் உள்ள தூரம் நான்கு கிலோ மீட்டர் தான். இப்படி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இந்தப் பிரச்சனை தான். இவ்வாறு குட்டையைக் குழப்பியதில் இலங்கை வானொலிக்குச் சரி பங்குண்டு,

அன்றைய தமிழகம் சிலோன் வானொலியின் சிறைக் கைதியாக இருந்தது. பெருநாள் விஷயத்தில் சிலோன் கைதிகளாக இருந்த தமிழக மக்களை விடுதலை செய்த புண்ணியமும் (?) பாக்கியமும் விடுதலைப் புலிகளைச் சாரும். காரணம், விடுதலைப்புலிகள் இலங்கையை நிர்மூலமாக்கியதால் அதன் வானொலி வாயிழந்தது. ஊமையும், ஊனமுமாகி ஒடுங்கிப் போனது.

உலகெங்கிலும் ஏற்பட்ட ஊடகப் புரட்சி தமிழகத்திலும் ஏற்பட்டது. இதனால் இலங்கை வானொலி அடிபட்டுப் போனது. இல்லையென்றால் பிறை விஷயத்தில் இலங்கை வானொலியின் குழப்பத்தை விட்டும் தமிழக முஸ்லிம்கள் தப்ப முடியாது. இந்திய வானில் பிறை ஒளி தெரிகின்றதோ இல்லையோ இலங்கை வானொலியில் தக்பீர் ஒலி கேட்டால் போதும், பெருநாள் வந்து விடும்.

இலங்கையில் யார் பிறை பார்த்தார்கள்? வந்த செய்தி ஆதாரப்பூர்வமான செய்தியா? என்றெல்லாம் பார்ப்பது கிடையாது.

நோன்பு என்று முடிவாகி மக்கள் ஸஹரும் வைத்து விடுவார்கள். அடுத்து சுபுஹ் தொழுகைக்காகவும் ஆயத்தமாவார்கள். திடீரென்று பள்ளிகளில் நகராக்கள் அடிக்கப்படும்.

நகரா முழக்கத்தை அடுத்து தக்பீர் முழக்கம்! என்னவாம்? இலங்கையில் பிறை பார்த்து விட்டார்களாம்; பெருநாள் வந்து விட்டது.

தையல் கடைகளில் ஒரு கை தைக்கப்பட்டு, மறு கை தைக்கப்படாத சட்டைகள். ஒரு கால் தைக்கப்பட்டு மறுகால் தைக்கப்படாத கால்சட்டைகள். மூட்டப்படாத கைலிகள். மளிகைக் கடைகளில் மல்லுக்கட்டுகின்ற மக்கள் கூட்டம். கசாப்புக் கடைகளில் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம். அடுத்தடுத்து அறுக்கப்படும் ஆடுகளின் அலறல் சப்தம்.

அப்படி ஒரு அவஸ்தைப் பெருநாள்! அவசரப் பெருநாள்! இந்தக் குழப்பத்திற்குக் காரணம் சிலோன் வானொலியின் பெருநாள் தக்பீர் தான்.

இலங்கைப் பிறையை சில மாவட்டங்கள் ஏற்கும். பல மாவட்டங்கள் மறுக்கும். ஏற்றோருக்கு அன்றைய தினம் இடைஞ்சலும் இன்னலும் நிறைந்த பெருநாள். அவஸ்தைப் பெருநாள்! அல்லல் – அலறல் பெருநாள்!

மறுத்தவர்களுக்கு மறுநாள் அமைதிப் பெருநாள்!

தமிழகத்தில் இப்படி இரு பெருநாட்கள் எனும் இந்த அவல நிலை நீண்ட நாட்கள் தொடர்ந்து வந்தது.

உதவாக்கரை உலகப் பிறை

இந்த நிலையில், பிறை விஷயத்தில் பிரிவினையா? பிளவா? இதைத் தாங்கிக் கொள்ள முடியாது! உலகம் முழுவதும் ஒரு பிறையைக் கொண்டு வருகிறோம் என்று ஒரு உதவாக்கரைக் கூட்டம் புறப்பட்டது.

ஊரை, உலகை, பிறை விஷயத்தில் ஒன்றுபடுத்தப் போகின்றோம் என்று புறப்பட்ட இந்தக் கூட்டம் கணிப்புப் பிறை, லிபியா பிறை, சவூதிப் பிறை என்று தங்களுக்குள்ளேயே மூன்று நாட்கள் பெருநாள் கொண்டாடி சிதறி, சின்னாபின்னமாயினர்.

இவர்களது இந்த நடவடிக்கை, தமிழகத்தில் அதுவரை இருந்த இரண்டு பிறைகளை மூன்று பிறைகளாக, மூன்று பிரிவினர்களாக ஆக்கியது. இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் இந்தக் கடைந்தெடுத்த மடப் பேர்வழிகள் மக்காவில் போய் அங்கு அரஃபா நாளுக்கு முந்தைய நாள் அரஃபா நாளை அனுஷ்டித்தது தான். இதில் இவர்களின் மடமை மற்றும் மவ்ட்டீகத்தனத்தின் உச்சக்கட்டத்தை அறிய முடிந்தது.

பிறை விஷயத்தில் மதம் பிடித்து, பிறை மதம் கண்ட இவர்களுக்கு ஜாக்கில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டது. இந்த மவ்ட்டீகப் பேர்வழிகள் ஜாக்கில் மகுடம் சூட்டப்பட்டனர். ஏதோ அமெரிக்காவின் நாஸா ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் போல் தங்களை நினைத்துக் கொண்டு செயல்பட்ட இவர்களின் அரைவேக்காட்டு வாதங்கள் மக்களிடம் எந்த வரவேற்பையும் பெறவில்லை. மக்களின் வெறுப்பையும் வேதனையையும் தான் பெற்றது.

இந்த அரைவேக்காட்டு விஞ்ஞானிகள் குட்டையைக் குழப்பினாலும் அது தமிழக மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

குட்டையைக் குழப்புவதெல்லாம் டவுண் காஜிகள் தான்.

தமிழக முஸ்லிம்கள் இலங்கைப் பிறையைக் கைவிட்டனர். இதனால் பெருங்குழப்பம் தவிர்க்கப்பட்டது. ஆனால் குழப்பம் அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. தமிழக அளவில் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் இந்த டவுண் காஜிகள் தான்.

2010ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தில் தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை. இந்த நிலையில் சென்னை டவுண் காஜி மாலோகானில் பிறை பார்க்கப்பட்டதாகக் கூறி பெருநாளை அறிவித்தார். அதனால் தமிழகத்தில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

இந்த டவுண் காஜிகளுக்கு மார்க்க ஞானம் எதுவும் கிடையாது. அரசாங்கத்தால் நியமிக்கப்படும் பொம்மைகள். மார்க்க அடிப்படையை ஆதாரமாகக் கொள்ளாமல் இவர்கள் வாய்க்கு வந்தபடி சொல்வது தான் மார்க்கம் என்றாகி விட்டது.

பிறை விஷயத்தில் இவர்கள் வைத்தது தான் வரிசை! இதில் இவர்களுடைய ராஜ்யம் தான் என்ற எதேச்சதிகார நிலை நீடித்தது.

தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கு எதிராப் போர்க்கொடி தூக்கியது; புரட்சி செய்தது. அரஃபா, குர்பானி ஆகிய வணக்கங்கள் பிறையை அடிப்படையாகக் கொண்டவை. இதில் ஒரு தனிப்பட்ட நபரின் சுய விருப்பத்திற்குச் செய்ய முடியாது; செய்யக் கூடாது.

பிறை பார்ப்பதில் தமிழக அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டுமானால் பிற பகுதிகளிலிருந்து வரும் பிறை அறிவிப்பை ஏற்காமல் தமிழகத்தில் பிறை பார்த்து அறிவிக்க வேண்டும்; அல்லது முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு நிலைபாட்டை எடுத்தால் அதன்படி செயல்பட வேண்டும். அப்போது குழப்பத்திற்கும், குளறுபடிக்கும் இடமிருக்காது. அத்துடன் இத்தனை குழப்பத்திற்கும் குளறுபடிகளுக்கும் காரணம், விளக்கமில்லாத டவுண் காஜிகளின் மூடத்தனமான பிறை அறிவிப்புகள் தான்.

எனவே அந்த ஹஜ் பெருநாளின் போது டவுண் காஜியின் மாலேகான் பிறை அறிவிப்பை ஏற்காமல் தமிழகத்தில் பிறை தென்படாததால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து மறுநாள் துல்ஹஜ் பிறை ஒன்று என அறிவித்தோம். அந்த வருட ஹஜ் பெருநாளையும் அதன்படி பிரித்துக் கொண்டாடினோம்.

குட்டையைக் குழப்பிய குமரி காஜி

டவுண் காஜிகளின் குழப்பத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, இந்த ஆண்டு நோன்புப் பெருநாளின் போது குமரி மாவட்டத்தில் நடந்த குழப்பம். இதைச் செய்தவர் யார்? வேறு யாருமல்ல. குமரி மாவட்ட டவுண் காஜி அபூஸாலிஹ் தான்.

இந்த ரமளானில் நோன்பு பிடிக்கும் போது குமரி மாவட்ட ஜமாஅத்தினர் தமிழகத்தில் பிறை கண்டதன் அடிப்படையில் நோன்பு வைத்தனர். நோன்பை முடிக்கும் போது, கேரளாவில் பிறை பார்த்ததன் அடிப்படையில் பெருநாள் என்று அறிவித்தனர். அதன் பிறகு இலங்கையில் பிறை பார்த்ததன் அடிப்படையில் பெருநாள் என்று அறிவித்தனர்.

இவ்வாறு அறிவித்த மாத்திரத்தில் டவுண் காஜி அபூஸாலிஹிடம், “என்ன இப்படி அறிவித்து விட்டீர்களே?” என்று கேட்ட போது, “எனக்கு இதில் உடன்பாடில்லை. ஜமாஅத்துல் உலமாவும், ஜமாஅத் பெடரேஷனும் தான் இந்த முடிவை அறிவிக்கச் சொன்னார்கள்” என்று கூறியுள்ளார்.

ஜமாஅத்துல் உலமா, ஜமாஅத் பெடரேஷன் போன்றவை நாகர்கோவிலில் கூடியுள்ளனர். இரவு 8.30 வரை பார்த்து விட்டு, பெருநாள் இல்லை என்ற முடிவில் கலைந்து சென்றுள்ளனர். கேரளாவில் பிறை பார்த்ததன் அடிப்படையில் பெருநாள் அறிவிப்பார்களா? என்று கலாச்சாரப் பள்ளி இமாமிடம் கேட்ட போது, அப்படி வராது என்று பதிலளித்துள்ளார்.

ஆனால் இரவு 8.45 மணிக்கு குமரி மாவட்ட காஜி, நாளை பெருநாள் என்று அறிவிப்புச் செய்துள்ளார். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ஒரு தெளிவான நிலைபாடு இல்லாதது தான்.

அதிலும் குறிப்பாக குமரி மாவட்டம் கேரளாவை ஒட்டியிருப்பதால் கடிகாரத்தின் பெண்டுலம் போன்று ஒரு தடவை அந்தப் பக்கம், மறு தடவை இந்தப் பக்கம் என்று ஆடிக் கொண்டிருக்கின்றது.

இதில் வேடிக்கையும் வினோதமும் என்னவென்றால் டவுன் காஜி இலங்கைப் பிறையை ஆதாரமாகக் கூறியிருப்பது தான். இரண்டு நிலைகள் என்பதைத் தாண்டி மூன்றாவது நிலைக்கு இந்த டவுண் காஜி தாவியிருப்பது தான்.

இதன் அடிப்படையில் நோன்பு பிடிப்பதற்கு ஒரு பிறை! நோன்பை முடிப்பதற்கு வேறு பிறை!

நோன்பு வைப்பதற்கு நிதானம்! நோன்பை முடிப்பதற்கும் முறிப்பதற்கும் அவசரம்!

தெளிவான ஆதாரமின்றி ஒரு நோன்பை அநியாயமாக ஓய்க்கும் பாவத்தைப் பற்றி இவர்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை என்பதை இது காட்டுகின்றது.

குமரியைத் தவிர உள்ள தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு தெளிவான வழித்தடத்தில் செல்கின்றார்கள். குமரி மாவட்ட டவுண் காஜி மட்டும் தமிழ்நாடு, கேரளா, இலங்கை என்று பெருநாளை சீக்கிரம் கொண்டு வருவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு மூன்று வழித்தடங்களில் பயணம் செய்கின்றார்.

கொள்கைக் குன்றாய் நின்ற குமரி தவ்ஹீத் ஜமாஅத்

இந்த விஷயத்தில் குமரி மாவட்டத்தில் சுன்னத் ஜமாஅத் எனப்படுவோர் அனைவரையும் குறை சொல்ல முடியாது. ஏன்?

சரியான கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் செயல்படுகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு நிலைபாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமான குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத், இதுபோன்ற அர்த்தமற்ற, ஆதாரமற்ற பெருநாள் அறிவிப்புக்களுக்குப் பலியாகாத, பணியாத துணிச்சலான கிளையாகும். எதற்கும் வளைந்து கொடுக்காத கொள்கைப் பிடிப்புள்ள கிளையாகும்.

சரியான நிலைபாட்டின் அடிப்படையில், தமிழகத்தை ஒத்து, மறுநாள் தான் பெருநாள் என்று குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இந்தப் பெருநாள் தொழுகையில் கடந்த ஆண்டுகளை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, சுன்னத் ஜமாஅத்தினர் அதிக அளவில் கலந்து கொண்டனர். வழக்கத்தை விடப் பெருநாள் திடல் வசூலும் அதிகரித்தது.

இதிலிருந்து சுன்னத் ஜமாஅத்தின் நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள், மார்க்க விபரம் தெரிந்தவர்கள் குமரி மாவட்ட காஜியின் கண்மூடித்தனமான பெருநாள் அறிவிப்பை நிராகரித்து விட்டனர்; அதன் மீது அதிகமான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இனியாவது குமரி மாவட்ட டவுண் காஜி பாடமும் படிப்பினையும் பெறுவாரா? அல்லது பழைய, பாழாய் போன பாதையிலேயே செல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

தவறான வாதங்களும் தக்க பதில்களும்      தொடர்: 4

இணை கற்பித்தல்

இறைநேசர்களை நாமே தீர்மானிக்கலாமா?

இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர் என்று சொல்ல முடியாது. அல்லாஹ்வால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும்.

ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கüடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், “அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, “உங்கüல் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்து தான் ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், “இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 2662

இந்த ஹதீஸின் அடிப்படையில், ஒருவரை நாம் நல்லவர் என்று சொல்வதாக இருந்தால், என்னிடத்தில், என் பார்வையில் இவர் நல்லவர் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, அல்லாஹ்விடத்தில் இவர் நல்லவர் என்று நாம் யாரையும் கூறக்கூடாது.

“நான் பார்த்த வரையில் அவர் இறையச்சமுள்ளவராகத் தென்படுகிறார். ஆனால் அல்லாஹ்விடத்தில் அவர் இறையச்சமுள்ளவரா என்று எனக்குத் தெரியாது. மாற்றமாகவும் இருக்கலாம். நான் இறையச்சமுடையவராக நினைத்த ஒருவர் அல்லாஹ்விடத்தில் இறையச்சம் இல்லாதவராக இருக்கலாம்’ என்று நாம் கூறவேண்டும்.

ஒருவர் தொழுகையில் மூழ்கிக் கிடக்கிறார்; அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசாதவராக இருக்கிறார்; கோள் சொல்லாதவராக இருக்கிறார். இத்தகைய நல்ல செயல்களை அந்த மனிதரிடம் நாம் காண்கிறோம். “இவர் ஒரு நல்ல மனிதர்; இவர் இறைநேசராக எனக்குத் தெரிகிறார். ஆனால் இவர் அல்லாஹ்விடம் நிஜமான நேசராக இருக்கிறாரா  என்று எனக்குத் தெரியாது’ என கூற வேண்டும்.

அதை விட்டுவிட்டு, நூறு சதவீதம் அவர் இறைநேசராக இருக்கிறார் என்றோ அவர் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் என்றோ நாம் சொல்லிவிடக்கூடாது. அதைத் தீர்மானிப்பவன் அல்லாஹ் என்று சேர்த்தே கூறவேண்டும். எனவே எந்த மனிதரையும் நல்லவர், மகான் என்று யாரும் தீர்மானிக்க முடியாது.

அதே நேரத்தில் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வேண்டி ஒருவரை நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும்.  உதாரணமாக நாம் கடை நடத்தி வருகிறோம். அந்தக் கடைக்கு ஒருவரை வேலைக்குச் சேர்ப்பதாக இருந்தால் அவர் நல்லவரா என்று ஆய்வு செய்யக் கூடிய நிலை ஏற்படுகிறது. அதேபோல் நம்முடைய மகளை ஒருவனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவனை நல்லவனா கெட்டவனா என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. அவ்வாறு நல்லவர் கெட்டவர் என்று கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உலகத்தில் நல்லவர் என்று முடிவு செய்யக்கூடிய தேவை நமக்கு இல்லாமல் போய் விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு மணமகளைத் தேர்வு செய்வதைப் பற்றி  கூறும்போது,

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக, 2. அவளது குடும்பத்திற்காக, 3. அவளது அழகிற்காக, 4. அவளது மார்க்கத்திற்காக.

மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5090

இந்த நான்கு விஷயங்களில் முதல் மூன்றை நாம் தீர்மானித்து விடலாம். நான்காவதாக இருக்கக்கூடிய மார்க்கப்பற்றை நாம் தீர்மானிக்க முடியுமா? முடியாது. மாற்றுக் கருத்துடையவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மார்க்க பற்றுள்ள பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள் என்று கூறியிருக்கிறார்கள். நாமே நல்ல பெண்ணை முடிவு செய்யலாமே என்று விதாண்டாவாதம் செய்வார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நல்ல பெண் என்று சொன்னால் நமக்கு அந்தப் பெண் நல்லவளாகத் தெரிகிறாள். ஆனால் அவள் அல்லாஹ்விடத்தில் பெரிய மார்க்கப்பற்றுள்ளவளா என்று எனக்குத் தெரியாது. ஒரு மாப்பிள்ளையை நல்லவன் என்று நினைத்தால் எனக்கு அவன் நல்லவன் என்று தெரிகிறது. ஆனால் அவன் அல்லாஹ்விடத்தில் மார்க்கப்பற்றுள்ளவனாக இருக்கிறானா என்று எனக்கு தெரியாது. இந்த அர்த்தத்தில் நாம் ஒருவரை நல்லவர், தீயவர் நாம் தீர்மானிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் செல்கிறார்கள். போன பிறகும் மக்காவில் சில முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்யாமல் இருந்தார்கள். முதலில் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்ற முஸ்லிம்களின் கை ஓங்கிவிட்டது. நாம் இனி அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று தோன்றிய பிறகு அந்த முஸ்லிம்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள். இதைப் பற்றி அல்லாஹ் திருமைறக் குர்ஆனில் கூறும்போது,

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.

அல்குர்ஆன் 60:10

இந்த வசனத்தில், முஸ்லிம்களான பெண்கள், “என்னுடைய கணவன் தவறான மார்க்கத்தில் இருக்கிறார்; நான் சத்திய மார்க்கத்தில் இருக்கிறேன்; அவர் எனக்கு தேவையில்லை’ என்று ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை வெளிப்படையாகச் சோதித்துப் பாருங்கள் என்று தான் இறைவன் கூறுகிறான். அவர்கள் நிஜமாகவே விளங்கி இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்களா? அல்லது சதித்திட்டத்தோடு வந்திருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டு விசாரணை செய்து கண்டறியுங்கள். அப்போது உங்களுக்கு, அவர்கள் முஃமின்கள் என்று தெரிந்தால் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள்.

வெளிப்படையான செயல்களை மற்றும் அடையாளங்களை வைத்து, அதாவது அல்லாஹ் என்றால் யார்? சொர்க்கம் என்றால் என்ன? இம்மை மறுமை என்றால் என்ன? என்று அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் சரியாகச் சொல்லி விட்டார்கள் என்றால் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால்  அவர்களுடைய உள்ளத்தில் ஈமான்  இருக்கிறதா என்பதை அல்லாஹ் தான் அறிவான்.  அவர்கள் நம்பிக்கைக் கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்று கட்டளையிடுகின்றான்.

வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்யாமலும் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி வாழ்பவர்களை நல்லவர்கள் என்றும் இதற்கு மாற்றமாக வாழ்பவர்களைக் கெட்டவர்கள் என்றும் நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் கெட்டவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகிறானோ அவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். இன்னும் இதற்கு நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத் திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்.

அல்குர்ஆன் 2:204

ஒருவன் நல்லதைப் பேசுகிறான் என்று சொன்னால் அவன் ஈமானுடன் இருக்கிறான் என்று நாம் சொல்ல முடியாது. தன்னை மகான் என்று சொல்லக் கூடியவன் பல அற்புதமான விஷயங்களை எடுத்து வைத்து விட்டு, அதுதான் தன்னுடைய உள்ளத்தில் இருக்கிறது என்று சொந்தம் கொண்டாடுவான். அதற்கு அல்லாஹ்வை சாட்சியாக வைத்திருக்கிறேன் என்று சொல்வான் என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான். அவர்களுடைய வாதம் உங்களுக்கு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களை நல்லவர்களாக நினைத்து விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் இறைவன் கூறுகிறான்.

நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன். 63:4

இந்த வசனத்தில் இறைவன் முனாஃபிக்குகளைப் பற்றி கூறுகிறான். அவர்களுடைய தோற்றம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் பேசுவார்கள். எனவே அவர்களின் பேச்சை உண்மையென நம்பிவிடாதீர்கள். அவர்களை முஃமீன் என்றும் நம்பி விடாதீர்கள். அவர்கள் தான் உங்களுக்கு முதல் எதிரிகள் என்று இறைவன் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் முனாஃபிக்குகள் என்று ஒரு கூட்டம் இருந்தது. இவர்கள் யார் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்தால் தான் தெரியும். அவர்கள் ஐவேளையும் தொழுகைக்கு வந்து விடுவார்கள். போருக்குச் சரியாக வந்து விடுவார்கள். நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதலில் வந்து நிற்பார்கள். இப்படியெல்லாம் முஸ்லிம்களின் அனைத்துக் காரியத்திலும் அவர்கள் பங்கெடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது. அதில் யார் நடிக்கிறார்கள்? யார் அதில் நிஜமாக இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் நம்முடைய கடமை வெளிப்படையாகப் பார்ப்பது தான். முஃமின் என்று சொல்கிறாயா? அப்படியானால் வந்து சேர்ந்து கொள் என்றுதான் சொல்ல முடியும். இதைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.

அல்குர்ஆன்  2:8

இந்த வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி இறைவன் கூறுகின்றான். அவர்களுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை கிடையாது. அவர்கள் வெளிப்படையில் அல்லாஹ்வை நம்புகிறோம் என்று சொல்கிறார்கள். வெளிப்படையில் மறுமையை நம்புகிறோம் என்று சொல்கிறார்கள். உங்களுடன் இருப்பதால் அவர்களை ஈமான் கொண்டவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் இல்லை. இப்படிப்பட்ட ஆட்களும் உங்களில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் நபியவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறான்.

எனவே வெளிப்படையான செயல்களை வைத்து நாம் ஒருவரை நல்லவர் என்று தீர்மானிக்கக் கூடாது. இன்னும் சொல்வதென்றால், மறுமை நாளில் அல்லாஹ் சொர்க்கம், நரகம் என்று தீர்ப்பளிப்பான். தீர்ப்பளித்த பிறகு சில பேர் நரகத்திற்குச் சென்று விடுவார்கள். சிலபேர் சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள்.

இவ்வுலகத்தில் தங்களை நல்லவர்கள், சொர்க்கவாதிகள் என்றும், மற்றவர்களை தீயவர்கள், நரகவாதிகள் என்றும் நினைத்திருப்பார்கள். ஆனால் மறுமை நாளில் யாரை நரகவாதிகள் என்று எண்ணினார்களோ அவர்கள் சொர்க்கவாசிகளாகவும், இவர்கள் நரகவாசிகளாகவும் இருப்பார்கள். அப்போது நரகவாசிகள், சொர்க்கவாசிகளைப் பற்றிக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.

தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். “உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை; அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்க வாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?” என்று கூறுவார்கள். (இதன் பின்) “சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்’ (என தடுப்புச் சுவரிலிருப்போரை நோக்கிக் கூறப்படும்.) (அல்குர்ஆன். 7:48, 49)

இந்த வசனத்தில் அல்லாஹ், நீங்கள் யாரைக் குழப்பவாதிகள், பிரிவினைவாதிகள், புதுக் கொள்கையைப் புகுத்துபவர்கள், இவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள், இவர்கள் தான் நரகத்திற்குரியவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். நீங்கள் யாரை சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் நரகத்தில் கிடக்கிறார்கள் என்று இறைவன் நரகவாசிகளிடம் கூறுகிறான்.

ஆக, ஒருவனை நாம் நல்லவன் என்று தீர்மானித்திருப்பது பொய்யாகி விடுகிறது. அதேபோல் யாரை நாம் மகான், அவ்லியா என்று நினைக்கிறோமோ அவன் நரகத்தில் கிடக்கிறான். அந்த நினைப்பும் பொய்யாகி விடுகிறது.

அதேபோல் இன்னொருவன் நரகத்தில் கிடப்பான். அவன், நாம் நரகத்திற்கு வந்துவிட்டோம். இன்னும் சில கெட்டவர்கள் இருந்தார்களே அவர்களைக் காணோமே! என்று புலம்பிக் கொண்டிருப்பான். அதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்? (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா?” என்று கேட்பார்கள். நரக வாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை!  (அல்குர்ஆன். 38:62-64)

அதுபோன்று, மனிதனுடைய தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும்  விதமாக ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 49:11)

இந்த வசனத்தில் நாம் ஒருவரை மட்டமாக நினைப்போம். ஆனால் அவர் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராக உயர்ந்தவராக இருப்பார். எனவே இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் கூறும் செய்தி என்னவென்றால், நாம் இந்த உலகத்தில் ஒருவரை நல்லவர் என்று தீர்மானிக்க முடியாது. அல்லாஹ் மட்டும் தான் அனைத்தையும் அறிந்தவன்.

அதுபோக சில வரலாற்றுச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போதும் நல்லடியார்களை நபியவர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஸஹாபாக்களாலும் நல்லடியார்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வஹியின் மூலம் அல்லாஹ் அறிவித்துத் தான் தெரிந்து கொண்டார்களே தவிர அவர்களால் சுயமாக அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒருவரை நல்லடியார் என கருத அவர் நல்லடியாராக இல்லாமல் போயிருக்கிறார். அதேபோல் ஸஹாபாக்களும் ஒருவரை நல்லடியார் என நினைக்கிறார்கள். அவர் நல்லடியாரா? இல்லையா? என்பதை நபியவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நாம் யாரையெல்லாமோ அவ்லியாக்கள் என்று நினைத்து வைத்திருக்கிறோம். அவருடைய வரலாறும் தெரியாது. நாம் அவருடைய காலத்தில் வாழவுமில்லை. அவருடன் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கொடுக்கல் வாங்கல் எதுவும் கிடையாது. அவர் ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர். அவர் இறந்து, அவரை அடக்கம் செய்து விட்டார்கள். அவரைப் பற்றி நூல் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதை நாம் படித்துத் தெரிந்து கொள்கின்றோம். இதை வைத்து நாம் அவரை அவ்லியா என்று நம்புகிறோம்.

ஸஹாபாக்கள் தங்கள் கண்முன்னால் பார்த்த ஒருவரை நல்லடியார், மகான் என்று சொல்கிறார்கள். அதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமானவற்றை ஹதீஸ்களில் பார்க்க முடியும்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்துகின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெüப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்கüன் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்கüல் எமக்கு வெüப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெüப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெüப்படுத்துகின்றாரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; அவரை நம்பவுமாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி 2641

இந்தச் செய்தியின் மூலம், வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் நாம் ஒருவனை நல்லவனா கெட்டவனா என்று தீர்மானிக்க முடியும் என்பது தெளிவாகின்றது. அதே போல் யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. தவறே செய்யாத ஒரு குழந்தையைக் கூட சொர்க்கவாசி என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இதை இறைவனுடைய அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லைஎன்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5175

ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட நாம் சுவர்க்கவாசி என்று கருதி விடக்கூடாது எனும் போது பெரியவர்களை அவ்லியாக்கள் என்றும், அல்லாஹ்வின் இறைநேசர் என்றும் நாம் எவ்வாறு கருத முடியும்?

உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மரணம்

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும். வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அஃலா அவர்கள், “அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’ எனக் கூறும் போது நபியவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபியவர்கள் கூட ஒரு ஸஹாபி இறந்த பிறகு அவர்களின் நிலையை அவர்களாக அறிய முடியாது என்று சொன்னால் இன்று நாம் யார் யாருக்கெல்லாமோ அவ்லியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இது எந்த வகையில் சரியானது? உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த ஸஹாபி; ஹிஜ்ரத் செய்தவர்; அவர் மரணித்த பிறகு அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிவான். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

வழிகெட்ட ஸலபிக் கொள்கை

குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்

தமிழகத்தின் சில பகுதிகளில் ஸலபி என்ற பெயரில் பகிரங்க வழிகேட்டுக்கு ஒரு கூட்டம் அழைத்துத் திரிகின்றது, அவர்களின் மடமையை அம்பலப்படுத்த விவாதிக்க அழைத்தால் ஓட்டம் எடுக்கிறது. எனவே அவர்களுக்குப் பகிரங்க அறைகூவல் விடுக்கும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.

குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே மனிதர்களின் சுய கருத்துக்கள் கலந்துவிடாமல் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய தூய்மையான மார்க்கமாக இஸ்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இத்தூய கொள்கையை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்கள் செய்த தியாகத்தையும் நபித்தோழர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் இன்றைக்குச் சிலர், “குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம்’ என்ற இஸ்லாத்தின் பாதுகாப்புச் சுவரை உடைக்க நினைக்கின்றனர். இந்த இழிசெயலைச் செய்வதற்கு இவர்கள் நபித்தோழர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி நபித்தோழர்களையும் அதனைத் தொடர்ந்து ஸலபுக் கொள்கையில் உள்ள இமாம்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

தங்களுடைய இந்த வழிகேடான கொள்கையை நிரூபிப்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களையும் ஆதாரங்களையும் பார்த்தால் இவர்கள் மத்ஹபுவாதிகளையும் தரீக்காவாதிகளையும் மிஞ்சிவிட்டார்கள் என்பதைப் பொதுமக்கள் கூட அறியலாம். இவர்கள் ஆதாரமாகக் காட்டும் செய்திகளுக்கும் வாதங்களுக்கும் சரியான பதிலை பல வருடங்களுக்கு முன்பே நாம் கொடுத்துள்ளோம், அதை முறையாக எதிர்கொள்ளத் திராணியில்லாமல் பொது மக்களைக் குழப்பிவருகின்றனர்.

(இது குறித்து முழுவிபரம் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்)

நாம் இவர்களிடம் கேட்கின்ற கேள்விகளுக்கும் நம்முடைய ஆதாரங்களுக்கும் பதில் சொல்லாமல் பாமர மக்களைத் தேடிச் சென்று குழப்பும் செயலைச் செய்து வருகின்றார்கள்.

எனவே இந்தக் கட்டுரையின் வாயிலாக இவர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு இவர்கள் சரியான பதிலை ஆதாரத்துடன் கூற வேண்டும். இதை இவர்கள் செய்யாவிட்டால் இவர்கள் வழிகேடர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் சரியான ஓரிறைக் கொள்கையாளர்களா?

ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஒன்றே ஒன்று பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்துபோன அல்லது உயிருடன் உள்ள ஒருவருக்கு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறிவிடுகிறான்.

தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அநாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.

பின்வரும் வசனம் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 39:3

எனவே நபித்தோழர்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் நீங்கள் ஓரிறைக் கொள்கையாளர்களா?

நீங்கள் நபிவழி நடப்பவர்களா?

தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அதை மார்க்கச் சட்டமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1573

மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.

இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுப்பட்ட நீங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளீர்கள்.

அன்றைக்கு மத்ஹபுவாதிகள் தங்களுடைய வழிகேடான கொள்கைக்கு எந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டினார்களோ அதே வசனங்களை இன்றைக்கு நீங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

இமாம்களையும், பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான்.  நீங்கள் அன்றைக்கு எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினீர்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கு எதிராகவே உள்ளன.

இந்த அடிப்படையில் நீங்களும் மத்ஹபுவாதிகளாக இருந்து கொண்டு ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்று பெயர் வைத்து குர்ஆன் ஹதீஸைக் கடைபிடிக்கும் ஏகத்துவவாதிகளைப் போல் காட்டிக் கொள்வது ஏன்?

நபித்தோழர்களுக்கு இறைச் செய்தி வந்ததா?

முஸ்லிம்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீச் செய்தியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நீங்களும் நம்பும் போது நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று எப்படி கூறலாம்?

நபித்தோழர்கள் நபிமார்களா?

குர்ஆனின் ஒரு வசனத்துக்கு மற்ற வசனங்களைக் கொண்டோ அல்லது நபிமொழிகளைக் கொண்டோ விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தை ஏற்கலாம். இதனால் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தை நாம் தாண்டியவர்களாக ஆகமாட்டோம். இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கின்றது.

எந்த ஆதாரத்தையும் காட்டாமல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் 75:17

குர்ஆனுக்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று ஜாக் மற்றும் ஸலபுக் கொள்கையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

எனவே விளக்கம் என்ற பெயரில் நபித்தோழர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்று கூறும் நீங்கள் நபித்தோழர்களை நபிமார்களின் இடத்தில் வைத்து விட்டீர்கள்.

மார்க்கம் பாதுகாக்கப்படவில்லையா?

நபித்தோழர்கள் சிறப்புக்குரியவர்கள்; மதிப்புக்குரியவர்கள் என்று நம்ப வேண்டும். அதே நேரத்தில் அவர்களைப் பின்பற்றக்கூடாது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை.

ஏனென்றால் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து வந்த மார்க்கம் என்பதால் இந்த மார்க்கத்தில் தவறான கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் நபித்தோழர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தாலும் அவர்கள் கூறிய மார்க்க விஷயங்கள் அனைத்தும் அவர்கள் சுயமாகச் சொன்னவை அல்ல. மாறாக இறைவன் கூறியதை அப்படியே கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கூறிய மார்க்க விஷயங்களில் தவறு வர வாய்ப்பில்லை.

இந்த பாதுகாப்புத் தன்மை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நபித்தோழர்களுக்கும் இல்லை. இதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் மார்க்க விஷயங்களில் நபித்தோழர்களிடத்தில் ஏற்பட்ட சில தவறுகளை நாம் சுட்டிக்காட்டினோம்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் நாம் சுட்டிக்காட்டிய செய்திகளை மறுக்காமல் அவை நபித்தோழர்களிடம் ஏற்பட்ட தவறுகள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

நம்முடைய கேள்வி என்னவென்றால் மார்க்க விஷயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இருக்கின்ற போது அவர்கள் கூறியதைக் கண்மூடிக் கொண்டு மார்க்கமாக ஏற்க வேண்டும் என்று கூறினால் இந்தக் கூற்று நம்முடைய மார்க்கத்தின் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?

மார்க்கம் முழுமையாகவில்லையா?

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமை செய்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

நபித்தோழர்களின் விளக்கம் இல்லாமல் மார்க்கத்தை விளங்க முடியாது என்றால் அல்லாஹ்வின் மார்க்கம் முழுமையடைவில்லை என்று கூற வேண்டி வரும். இது குர்ஆனுக்கு எதிரான கூற்றாகும்.

உங்கள் யூகம் மார்க்கமாகுமா?

“நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் நிச்சயம் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இருக்கும். எனவே நபித்தோழர்களைப் பின்பற்றுவது தவறில்லை’ என்று வாதிடுகின்றீர்கள்.

மார்க்க விஷயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் நீங்கள் இவ்வாறு வாதிடுவது மடமையாக உங்களுக்குத் தெரியவில்லையா?

முத்தலாக் விசயத்தில் நபி (ஸல்) அவர்கள் ஒரு முடிவு எடுத்திருக்க உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமான முடிவை எடுத்து செயல்படுத்தினார்களே! உமர் (ரலி) அவர்கள் எடுத்த முடிவு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு எடுத்த முடிவா? (பார்க்க: முஸ்லிம் 2932)

தயம்மும் தொடர்பான வசனத்தையும் நபிமொழியையும் ஆதாரமாகக் கொண்டு தயம்மும் செய்யக்கூடாது என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்களே! (புகாரி 346) இது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு எடுத்த முடிவா?

53:11 வது வசனம் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்ததைப் பற்றி பேசுகிறது என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்திருக்க இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்களே! (முஸ்லிம்: 284) இது நபி (ஸல்) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்ட விளக்கமா?

தமத்துஃ முறையிலும் கிரான் முறையிலும் ஹஜ் செய்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் தடுத்துள்ளார்களே! (புகாரி: 1563) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டதா?

நீங்கள் ஸஹாபாக்கள் விஷயத்தில் இவ்வாறு யூகம் செய்தது போல் தாபியீன்கள், தபஅ தாபியீன்கள், அதற்கு அடுத்து வந்தவர்கள் விஷயத்திலும் யூகம் செய்ய முடியும்.

தாபியீன்கள் ஸஹாபாக்களிடமிருந்து கேட்காமல் கூற மாட்டார்கள் என்று யூகித்து தாபியீன்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

தபஅ தாபீயீன்கள் தாபியீன்களிடம் கேட்டிருப்பார்கள் என்று யூகித்து தபஅ தாபியீன்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

இதனடிப்படையில் முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் ஆகியோரைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

பட்டியல் எங்கே?

நபித்தோழர்களும் மனிதர்களே! மார்க்க விஷயங்களில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டுள்ளன. இதற்குரிய சான்றுகளை நாம் சொல்லும்போது நாங்கள் தனித்தனி நபித்தோழரின் கருத்துக்களை ஏற்பதில்லை. அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டு எடுத்த முடிவையே ஏற்போம் என்று கூறுகின்றீர்கள்.

அப்படியானால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஸகாத் இல்லை என்பதற்கும் பெருநாள் தினத்தில் அல்லாஹு அக்பர் என்ற வாசகத்துடன் கூடுதலாக சில வாசகங்களை சேர்த்துச் சொல்வதற்கும் இன்னும் பல மார்க்க விஷயங்களுக்கும் தனித்தனி நபித்தோழர்களின் கூற்றுக்களை நீங்கள் ஆதாரமாக ஏன் காட்டுகிறீர்கள்? இவற்றை ஆதாரமாகக் கொண்டு மார்க்கச் சட்டங்களைக் கூறுவது ஏன்?

ஒரு மார்க்க விஷயத்தில் அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டதாக எந்த ஒன்றையும் உங்களால் ஒருக்காலும் காட்ட முடியாது. ஏனென்றால் நபித்தோழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடந்தனர். இவ்வாறிருக்க அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே மார்க்கத்தில் பொய் சொல்வதை முதலில் விட்டுவிடுங்கள்.

அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டுக் கூறிய மார்க்க விஷயங்களை நீங்கள் பட்டியலிட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் இல்லாத ஒன்றை கற்பனை செய்து இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மக்கள் புரிவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் நபியவர்களின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒரு வசனத்தை மறந்து விட்டார்கள். இந்தச் செய்தி புகாரியில் 4454வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி பல நபித்தோழர்களுக்குத் தெரியவில்லை. இது புகாரியில் 5729வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

எனவே பல நபித்தோழர்கள் செய்தால் அது மார்க்கமாகிவிடும் என்று எப்படிக் கூற முடியும்?

நபித்தோழர் தனித்து கருத்து கூறினால் அது மார்க்கம் இல்லை. பல நபித்தோழர்களின் கூற்று மார்க்கம் என்று நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டுக்கு எந்தக் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது?

எனவே வழக்கம் போல், தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபித்தோழர்களை ஏசுகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்று பல்லவி படிக்காமல் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நபித்தோழர்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டுவிட்டு நழுவிச் செல்லக்கூடாது.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக!

உங்கள் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் அகில உலகத் தலைவர்களையோ உங்கள் தமிழகத் தலைவர்களையோ அழைத்து வந்து எங்களுடன் விவாதிக்க முன்வாருங்கள்.

அப்படி விவாதித்தால், உங்களுக்கும் கப்ரு வணங்கிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும், உங்களுக்கும் மத்ஹப்வாதிகளுக்கும்  அடிப்படை ஒன்றுதான் என்பதையும், உங்கள் நடைமுறையும் தரீக்காவாதிகளின் நடைமுறையும் ஒன்றுதான் என்பதையும் நாம் நிரூபித்து உங்களது வழிகேட்டை உங்களுக்குப் புரியவைக்கத் தயாராக இருக்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

பைத்தியம் பலவிதம்            தொடர்: 4

நபியின் கை நாயனின் கையா?

மறுமையில் நன்மை கிடைப்பது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை வைத்துத் தானே தவிர அவர்களது முடி, வியர்வை போன்றவற்றைப் பாதுகாத்து வைப்பதில் அல்ல என்ற விபரத்தைச் சென்ற இதழில் பார்த்தோம். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தாலோ அல்லது காரி உமிழ்ந்தாலோ நபித்தோழர்கள் அந்த எச்சிலையும் உளூச் செய்த தண்ணீரையும் விரைந்து எடுத்து, அதைத் தங்களுடைய முகங்களிலும் உடல்களிலும் தடவிக் கொள்வார்கள். “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவினார்கள். “இதனால் நாங்கள் பரக்கத் தேடுகிறோம்என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனது தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புபவர் உண்மையைப் பேசுவாராக! அமானிதத்தை நிறைவேற்றுவாராக! அண்டை வீட்டாருக்கு இடையூறு செய்யாதிருப்பாராக!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுஹ்ரி, நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்

இந்த ஹதீஸை நம்பிக்கைக்குரிய அன்சாரித் தோழர் அறிவிப்பதாக ஜுஹ்ரி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபித்தோழர் பெயர் குறிப்பிடாததைக் காரணம் காட்டி இந்த ஹதீஸை முர்ஸல் என்று வாதிட முடியாது. நம்பகமான அறிவிப்பாளர்கள் நபித்தோழரின் பெயரைக் குறிப்பிடாமல் அறிவிப்பது ஹதீஸ் கலையில் ஒரு கோளாறு கிடையாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஜுஹ்ரி என்றழைக்கப்படும் முஹம்மத் பின் முஸ்லிம் பின் ஷிஹாப் என்பார் நம்பத்தகுந்த, ஐயத்திற்கு அப்பாற்பட்ட நேர்மையான அறிவிப்பாளர். இவர் தாபிஃ ஆவார். இவர் நபித்தோழர்களிடம் செவியுற்றுள்ளார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை தொடர்பான செய்தியில் தான் நபி (ஸல்) அவர்களின் எச்சிலையும் உளூச் செய்த தண்ணீரையும் நபித்தோழர்கள் தடவிக் கொண்டனர் என்ற விபரம் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்புத் தொடரில் இதே ஜுஹ்ரி தான் இடம்பெறுகின்றார். அந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் தொடர் ஒரு பலமான அறிவிப்பாளர் தொடராக அமைகின்றது.

எனவே இந்த ஹதீஸிலிருந்து நமக்குத் தெரிய வருகின்ற விஷயம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற காரியங்களைத் தடுத்திருக்கின்றார்கள் என்பது தான்.

பொதுவாகவே பரேலவிகள் குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் தங்களுக்குச் சாதகமானவற்றை எடுத்துக் கொண்டு, பாதகமானவற்றை மறைத்து விடுவார்கள்; மறுத்து விடுவார்கள். அந்த வகையில் இதுவும் ஒன்று என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் முடிகளைச் சேகரித்து வைப்பதாலோ, வியர்வைத் துளிகளைச் சேகரித்து வைப்பதாலோ அல்லது அவர்களது ரத்தம், சிறுநீர் போன்றவற்றைக் குடிப்பதாலோ எந்தப் பலனும் இல்லை. மாறாக, மார்க்கத்தில் இதற்குத் தடை தான் உள்ளது. எனவே இவற்றை விடுத்து நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதுதான் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும்.

நபியின் கை நாயனின் கையா?

இந்தப் பரேலவிகள் வைக்கின்ற படுபயங்கரமான, அபாண்டமும் அபத்தமும் மிகுந்த மற்றொரு கூற்று, நபி (ஸல்) அவர்களது கை அல்லாஹ்வின் கை என்ற கூற்றாகும்.

எவ்வளவு துணிச்சலாக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றார்கள்? இதுபற்றி இவர்களுக்கு எந்த ஓர் உறுத்தலும் கடுகளவு பயமும் இல்லாமல் இப்படி ஒப்பிடுகின்றார்கள் என்று பாருங்கள். இதற்கு அவர்கள் காட்டுகின்ற ஆதாரம் என்ன?

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)

நபித்தோழர்களின் கை மீது நபியவர்களின் கை இல்லை, அல்லாஹ்வின் கை இருக்கின்றது என்று ஒரு பயங்கர இணை வைப்பை இந்த வசனத்திற்கு விளக்கமாகக் கூறுகின்றார்கள்.

நேரடியாகவும் மிகவும் எளிதாகவும் எடுக்க வேண்டிய விஷயத்தைக் கோணலாகவும் குதர்க்கமாகவும் எடுக்கின்றார்கள்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் அந்த நாட்டு அமைச்சருடன் ஒப்பந்தம் போடுகிறார் என்றால் அந்த ஒப்பந்தம், அந்தத் தூதருடன் போட்ட ஒப்பந்தமல்ல, இந்திய நாட்டுப் பிரதமருடன் போட்ட ஒப்பந்தமாகும்.

இதுபோல் நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடத்தில் செய்த ஒப்பந்தம், கொடுத்த வாக்குறுதி அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தம், அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதி என்று தான் சரியான மார்க்க அறிவுள்ளவர்கள் இதை விளங்குவார்கள். அவர்களின் கை மீது அல்லாஹ்வின் கை இருக்கின்றது என்று கூறப்படுவது அந்த அர்த்தத்தில் தான்.

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வாக ஆக்கும் அநியாயத்தைச் செய்கின்றார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

எறிந்த கை யாருடைய கை?

தங்கள் அபாண்டத்திற்கும் அபத்தத்திற்கும் ஆதாரமாகக் காட்டுகின்ற மற்றொரு வசனம்:

அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 8:17)

நபி (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க்களம் “பத்ருப் போர்’ என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.

* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9)

* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான். (8:11)

* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான் (8:11)

* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர் (8:12)

* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான் (8:12)

இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான்.

“பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா” என்று நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலிலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபி (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவை பட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் “நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்” என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி)

இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ, அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே வீசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டன.

இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வசனத்தை, பரேலவிகள் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக “அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல; இருவரும் ஒருவர் தான்” என்றெல்லாம் உளறுகின்றனர். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கியுள்ளனர். ஈஸா நபி விஷயத்தில் கிறித்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சி விட்டார்கள்.

இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் கொடுத்த இவர்களின் தலைவனான இப்னு அரபி என்பவன் பிற மதங்களில் உள்ள “அத்வைதம்’ என்ற கொள்கையைக் காப்பி அடித்து இஸ்லாத்துக்குள்ளேயும் திணிக்க முயன்றான். காணும் பொருள் அனைத்துமே அல்லாஹ் என்று இவன் கூறினான். இவனை மகான் என்று கூறும் மூடர்கள் தான் பரேலவிகள்.

இந்த இப்னு அரபி, திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு கருத்து கொண்ட வாக்கியங்களுக்குத் தவறான பொருள் கொடுத்து இவன் மக்களை வழிகெடுக்க முயன்றான்.

குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து, தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் ஒரு கைப்பிடி கற்களால் அனைத்து எதிரிகளின் கண்களிலும் படுமாறு வீச முடியுமா? முஹம்மது நபியே அல்லாஹ்வாக இருந்தால் தானே அப்படி வீச முடியும்? அவர்கள் எறிந்ததை, தான் எறிந்ததாக அல்லவா அல்லாஹ் கூறுகிறான்? எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் ஒன்றே” என்று இவர்கள் உளறுகின்றனர்.

இணை வைத்தலிலின் வாசலை இறுக்கமாக அடைத்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடுகின்றனர்.

ஆனால் இந்த வசனம் இவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.

“நான் கல்லை வீசினால் போதும், எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்” என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைப் பற்றிக் கூறுவதற்கு முன், நபித் தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்” என்று குறிப்பிடுகிறான்.

நபித் தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித் தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்தத் தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?

“அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ்” என்று இவர்கள் கூறியது போல் “அல்லாஹ் தான் நபித் தோழர்கள், நபித் தோழர்கள் தான் அல்லாஹ்” எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

பத்ருப் போரில் பல நபித் தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்ற கருத்து ஏற்படும்.

“எதிரிகளின் படை பலத்தில் மூன்றில் ஒரு பங்காக நீங்கள் இருந்தும் உங்களால் எதிரிகளை வெல்ல முடிந்தது என்றால் அத்ற்கேற்ப பல சூழ்நிலைகளை நான் தான் ஏற்படுத்தினேன்” என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்

இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ, அவர்களின் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகவே, தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 18:110)

நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மல ஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி, மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுகின்றனர்.

நபிகள் நாயகத்துக்கும், நபித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.

நீங்கள் பயிரிடுவதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கேட்கிறான்.

மனிதர்கள் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக் கொள்கிறோம்.

அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.

* நீர் எறிந்த போது

* நீர் எறியவில்லை

என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே “நீர் எறியவில்லை’ எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.

அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. “நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை” என்று நாம் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.

ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். உளறிக் கொட்ட மாட்டார்கள்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.

நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை; அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால், பயிரிடுதல் என்பதற்கு இருவேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதை (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.

இது போல் தான் மேற்கண்ட வசனத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீர் எறிந்த போது, அதாவது “பொடிக் கற்களை நீர் வீசிய போது”

நீர் எறியவில்லை, அதாவது “ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை”

என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும், மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.

இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம்; அதைக் கொண்டு போய்ச் சேர்த்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு, அவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு, அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.

“யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவன் கேட்கும் காதாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கையாக அவன் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரி 6502) என்பது போன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

“பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்” என்று கூறி மக்களை வழி கெடுக்க முயல்கின்றனர்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறை நேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சகஜமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்’ என்று கூறினால் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்’ என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“நான் பசியாக இருந்த போது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்த போது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்த போது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?” என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் “நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?” என்று கேட்பான், அதற்கு இறைவன் “ஒரு ஏழை பசி என்று கேட்ட போது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்” என்று கூறுவான். (பார்க்க: முஸ்லிம் 4661)

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லாம் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?

இப்படிக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரித்துப் பேசுவது தான் இவர்களின் வாடிக்கை! இந்த அசத்தியவாதிகளின் வாதங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போலி வாதம் ஒருபோதும் எடுபடப் போவதில்லை.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன்21:18)

அல்லாஹ்வின் இந்த வசனத்தை இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை    தொடர்: 12

அதிசயப் பிராணி

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். 

அல்குர்ஆன் 78:1-5

உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் புகை மூட்டம், தஜ்ஜால், ஈஸா நபியின் வருகை, யஃஜூஜ் மஃஜூஜ் போன்றவற்றைப் பார்த்தோம்.

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அந்தப் பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படாவிட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்குத் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.

அல்குர்ஆன் 27:82

இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும், அது வானிலிருந்து இறக்கப்படாது எனவும், இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும், தஜ்ஜால் போன்று முன்பே படைக்கப்பட்டு அந்தப் பிராணி மறைத்து வைக்கப்படவில்லை. இனி மேல் தான் அது தோன்றவிருக்கிறது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளன. அவற்றிலிருந்து இந்தப் பிராணி வித்தியாசப்படுகின்றது. எந்தப் பிராணியும், மனிதர்களுடன் பேசுவதில்லை. இந்த அதிசயப் பிராணியோ மக்களிடம் பேசக் கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறியமுடியும்.

பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதிசயப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து அடுத்ததும் தோன்றிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: முஸ்லிம் 5234

இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை.

மனிதர்களின் கற்பனைக்கு எட்டக் கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற ஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கூறியிருப்பார்கள். மனிதர்கள் இது வரை கண்டிராத ஒரு வடிவில் அது அமைந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும். அதன் வடிவம் தான் நமக்குக் கூறப்படவில்லையே தவிர அது வந்துவிட்டால் சட்டென்று கண்டு கொள்ளக்கூடிய முக்கியமான தன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.

“மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும்” என்பதை விட எந்த அடையாளமும் தேவையில்லை. அப்படி ஒரு பிராணி தோன்றவிருக்கிறது என்று நம்புவதே நமக்குப் போதுமானதாகும் என்பதாலேயே அது பற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்