ஏகத்துவம் – அக்டோபர் 2016

தலையங்கம்

ஒலிம்பிக் கூத்துக்களும் ஒரிசா அவலமும்

மரணித்துப் போன மனிதநேயம்

இந்தப் படத்தைப் பாருங்கள்! திரைப்படத்தில் கதாநாயகியை கதாநாயகன் செந்தூக்காகத் தூக்கி, செந்தூரமே! சந்தனமே! தேனே! தெள்ளமுதே என்று தித்திக்கும் பாட்டுப் பாடி ஆடுகின்ற காதல் படக் காட்சியல்ல!

கப்பல் கவிழ்ந்து கடலின் கரையில் ஒதுங்கிய  சிரிய அகதிச் சிறுவன் ஆயிலான் குர்தியின் உடல், உலக மக்களின் உள்ளங்களை நொறுக்கி எடுத்தது போன்று மறுபடியும் மக்களின் உள்ளங்களை நொறுக்கி எடுத்த ஒரு கொடிய சோக நிகழ்ச்சியாகும். அது என்ன?

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் ஏற்படும்போது, சடலத்தை இலவச வாகனங்களில் எடுத்துச் செல்லும் சட்டம் ஒடிசாவில் அமலில் உள்ளது. இந்த நிலையில் காளஹன்டி மாவட்டம், மெல்கரா என்ற கிராமத்தைச் சேர்ந்த தானாமாஜி என்பவரின் மனைவி காசநோய் காரணமாக மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை 60 கிலோ மீட்டரில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல எந்த உதவியும் மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை.

இதையடுத்து பழங்குடி இனத்தைச் சார்ந்த அவர் தனது மனைவியின் சடலத்தைப் போர்வையில் சுற்றி, தனது தோளில் சுமந்து செல்கின்ற காட்சி தான் இது! அவருடன் 12 வயது மகளும் நடந்து செல்கிறார். கொஞ்ச நஞ்ச தூரமில்லை. 12 கிலோ மீட்டர் தூரம் வரை அழுகின்ற கண்களுடன் அருகில் அந்தச் சிறுமி நடந்து  சென்ற காட்சி பத்திரிக்கையாளர்களைப் பாதிக்கச் செய்தது. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்ட பிறகு தான் அமரர் ஊர்தி அனுப்பப்பட்டு மீதி 48 கிலோ மீட்டர் தூரம் அவர்களால் கடக்க முடிந்தது.

தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தானாமாஜி, “மருத்துவமனை அலுவலர்கள் வாகனங்கள் இல்லையென தெரிவித்துவிட்டனர். நான் மிகவும் ஏழை, மனைவியின் உடலை எடுத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்குப் பணம் இல்லை எனக் கூறினேன். நான் பலமுறை அழுதும், அவர்கள் மனம் இரங்கி எனக்கு உதவ முன்வரவில்லை” என்றார்.

இந்த வீடியோ பதிவுகளைப் பார்க்கின்ற போது பார்ப்போர் விழிகள் நீர் வீழ்ச்சிகளாகின்றன. ஆனால் இந்தியாவின் கூட்டு மனசாட்சி மட்டும் குருடாகிப் போய் விட்டது; குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கின்றது. இது கொடுமையிலும் கொடுமையாகும். மாட்டுக்காக மனித உயிரைக் கொல்லும் புனித நாடல்லவா நமது நாடு?

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு அரசாங்கங்கள், கம்பெனிகள், தனி நபர்கள் மூலம்  கோடானுகோடி பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுகின்ற புண்ணிய நாடல்லவா நமது நாடு?

மல்யுத்த வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி அழுகின்ற நாடல்லவா நமது நாடு? இதோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்த வீராங்கனைகளுக்கு அரசாங்கங்கள், அமைப்புகள், தனி நபர்கள் கொட்டி அழுத கோடிக்கணக்கான பொருளாதார பரிமாணத்தையும் பிரமாண்டத்தையும் பாருங்கள்:

ரியோ ஒலிம்பிக்கில் முதன் முதலில் பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹைதரபாத்தைச் சார்ந்த பி.வி சிந்துக்கு இந்தியாவில் பண மழை பொழிகின்றது. இதுவரைக்கும் கொட்டிய பணமழைப் பட்டியல்:

1)     தெலுங்கானா அரசாங்கத்தின் சார்பாக 5 கோடி ரூபாய். ஆயிரம் சதுர அடியில்  நகரத்தில் வீட்டு மனை, அரசாங்க வேலை.

2)     ஆந்திர மாநிலத்தில் 3 கோடி ரூபாய், புதிய தலைநகரமாகிய அமராவதியில்  ஆயிரம் சதுர அடியில் ஒரு வீட்டு மனை.

3)     டெல்லி அரசாங்கம் சார்பில் 2 கோடி ரூபாய்.

4)     பேட்மிண்டன் அசோசியேஷன் ஆஃப் இண்டியா, விளையாட்டு அமைச்சகம், ஹர்யானா, மத்திய பிரதேச அரசாங்கங்கள் சார்பில் தலா 50 லட்சம்.

5)     பாரத் பெட்ரோல் கார்பரேஷன் சார்பில் 75 லட்சம்.

6)     கேரளத்தைச் சார்ந்த வியாபாரி ஐக்கிய அமீரகம் வாழ் முக்கட்டு செபாஷ்டியன் அளித்திருக்கும் 50 லட்சம்.

7)     இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 30 லட்சம் ரூபாய்.

8)     ஆல் இண்டியா ஃபுட் பால் ஃபெட்ரேஷன் சார்பில் 5 லட்சம்.

9)     சினிமா நடிகர் சார்பில் 1.01 லட்சம்.

10)     ஜுவல்லர்ஸ் சார்பில் 6 லட்சம் பெறுமான வைர நெக்லெஸ்.

11)     ஹைதராபாத் பேட்மிண்டன் அசோசியேஷன் தலைவர் க்ஷி. சமுந்தேஸ்வரநாத் சார்பில் BMW கார்.

இது போன்று மல்யுத்த வீராங்கனை ஷாக்ஸி மாலிக்கிற்கு ஹரியானா அரசாங்கம் 2.5 கோடி ரூபாய் அளித்திருக்கின்றது.

மறைக்க வேண்டிய அங்க அவயங்களை அடுத்தவர்களிடம்  வெளிச்சம் போட்டு விருந்து படைக்கும் இந்த வெட்கங்கெட்டவர்களுக்கு மக்களின் வரிப் பணம் எப்படி வாரியிறைக்கப்படுகின்றது என்று பாருங்கள்!

ஆனால் பாவம், பாதிக்கப்பட்ட பழங்குடி இனத்தவன், இறந்து போன தன் மனைவியைக் கண்ட இடத்தில் வீசி விட்டுப் போகாமல் அவளது பிணத்தை பன்னிரெண்டு கிலோ மீட்டர் தூரம் தோளிலேயே சுமந்து கொண்டு செல்கின்றான். மனைவியைக் காக்கின்ற வகையில் மனித நேயம் காக்கின்றான். மானம் காத்திருக்கின்றான்.

மனைவி இறந்த சோகம்…

அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டு செல்ல பொருளாதாரம் இல்லாத சோகம்…

அவளை 12 கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்றது ஒரு சோகம்…

அருகிலேயே மகள் அழுது கொண்டு உடன் நடந்து வருவது ஒரு சோகம்…

எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக்கூடாத சோக நிகழ்வு இந்தப் பழங்குடி இனத்தவரின் வாழ்வில் அரங்கேறியுள்ளது.

ஒரு பொருளின் தாங்க முடியாத கனத்திற்கு, பிணம் போல் கனக்கின்றது என்று உவமானம் சொல்வார்கள். அப்படிப்பட்ட கனமான பிணத்தைத் தான் இந்தப் பழங்குடி இனத்தான் சுமந்து செல்கின்றான்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா?  எல்லோருமே வேடிக்கை தான் பார்க்கின்றார்கள். எவனுமே அவனுக்கு உதவி புரிய முன் வரவில்லை. அவள் உயிருடன் இருந்தாலே அவள் தீண்டத்தகாதவள் என்று அவள் அருகில் கூட நெருங்க மாட்டார்கள். இப்போது தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பெண் செத்த பிணமாக ஆகி விட்டாள். அவர்களது பாஷையில் சொல்லப் போனால் ஆவியாகி விட்டாள்; பேயாகி விட்டாள்; பிசாசாகி விட்டாள். அவளை அண்டுவார்களா? அணுகுவார்களா? ஒரு போதும் மாட்டார்கள்.

வழிநெடுகிலும் வேடிக்கை பார்த்த மக்கள் அவனுக்கு உதவாமல் போனதற்குக் காரணம், அவனது ஜாதி தான் என்று சொல்கின்றனர். இவனுக்கு உதவினால் நம்மைக் கேவலமாக நினைப்பார்களே என்ற எண்ணம் தான் அவர்கள் உதவுவதை விட்டும் தடுத்து விட்டது என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிலும் நமது நாட்டில் சுவாதியைப் போன்று யாரேனும் கொலை செய்யப்பட்டால், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்கள். அதை வீடியோ படமெடுப்பார்கள். அந்த அவலம் தான் இங்கும் நடந்துள்ளது.

சடலத்தைத் தூக்கிச் சொல்கின்ற அவலத்தைப் பார்த்த அரசாங்கம் மனமிறங்கவில்லை. அது மயானமாகவே கிடக்கின்றது.  இந்தப் பழங்குடி இனத்தவனின் குடும்பப் பாடு என்னவென்று பார்க்கவில்லை. அவனுக்குத் தனியார் நிறுவனங்களும், சல்மான்கான்களும், சச்சின் தெண்டுல்கர்களும் உதவ முன் வரவில்லை.

இது தொடர்பாக முகநூலில் வந்த வீடியோ பதிவுகளை பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா பார்க்கின்றார். அவரது பரந்த பார்வையில் இந்தப் பழங்குடியான் இடம் பிடிக்கின்றான். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது போல் தாழ்த்தப்பட்ட அந்தச் சகோதரருக்கு சிறந்த முறையில் ஒன்பது லட்சம் ரூபாய் வழங்கியிருக்கின்றார்.

அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

அல்லாஹ்வின் தூதரைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்தப் பண்பைப் பின்பற்றி பஹ்ரைன் பிரதமர் இந்த உதவியைச் செய்திருக்கிறார். பழங்குடி இனச் சகோதரனின் பாரத்தை இறக்கி வைத்திருக்கிறார்.

இவன் முஸ்லிம் அல்லவே! இந்து மதத்தவனாயிற்றே! அதிலும் தாழ்த்தப்பட்டவனாயிற்றே என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று அவர் ஏற்றுள்ள இஸ்லாம் மார்க்கத்தின் போதனையே இதற்குக் காரணம்.

இந்த மானங்கெட்ட மத்திய, மாநில அரசாங்கங்களோ, தனியார் நிறுவனங்களோ ஒலிம்பிக் என்ற ஆடம்பரத்தையும் ஆரவாரத்தையும், பகட்டையும் படோடாபத்தையும் பார்த்தார்கள்.

இங்கு பாதிக்கப்பட்டுள்ள இவன் இந்து மதத்தில் ஓர் அங்கம் என்று பார்க்கவில்லை. அவனது சாதியின் இழிவைத்தான் பார்த்துள்ளனர்.

ஆனால் பஹ்ரைன் பிரதமரோ பாதிக்கப் பட்டவனையும், பரிதாபகரமான அவனது வாழ்க்கையையும் பார்த்து உதவியிருக்கின்றார்.  இந்தியாவில் மரணித்துப் போன மனித நேயத்தை அவர் உயிர்ப்பித்திருக்கின்றார்.

இதன் மூலம் பழங்குடி இனத்தவனை சரியான முறையில் பார்க்கத் தவறி விட்டதற்குப் பாடம் படித்துக் கொடுத்திருக்கின்றார். பாடம் படிக்குமா இந்த மாட்டு நேய இந்தியா?

—————————————————————————————————————————————————————-

காதியானிகள் வரலாறு தொடர்: 5

யூசுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்கள் இல்லையா?

எம்.ஐ. சுலைமான்

காதியானிகளின் வாதம்

முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான்.

அல்குர்ஆன் 40:34

இவ்வசனத்தில் யூஸுஃப் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

யூஸுஃப் நபிக்குப் பின் நபி வரமாட்டார் எனக் கூறி நபிமார்களை நிராகரித்த ஒரு கூட்டத்தைப் பற்றி அல்லாஹ் இங்கே எச்சரிக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம்.

யூஸுஃப் நபிக்குப் பின் நபி வரமாட்டார் என்று முந்தைய சமுதாயம் கூறியதற்கு ஒப்ப இந்தக் கூற்றும் உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வரலாம். அது நான் தான் என்று பொய்யன் மிர்ஸா கதியானி வாதிட்டான்.

நமது பதில்:

யூஸுஃப் நபி கடைசி நபியாக இல்லாத நிலையில் அவர்கள் இவ்வாறு அந்தச் சமுதாயத்தினர் கூறியது தவறாகும்.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

முஹம்மது நபி தான் கடைசி நபி என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றைக் கடந்த இதழ்களில் விளக்கியுள்ளோம். ஆனால் இந்தச் சிறப்பு யூஸுஃப் நபிக்கு இல்லை. எனவே யூஸுஃப் நபிக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் என்று அம்மக்கள் கூறியதை இறைவன் கண்டிக்கிறான்.

முஹம்மது நபி இறுதி நபியாக இருப்பதால் அவர்களுக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த வித்தியாசத்தை இவர்கள் விளங்கவில்லை.

ஒரு நியாயவிலைக் கடையில் தினமும் ஐம்பது பேருக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

முதல் நபருக்குப் பொருள் விநியோகம் செய்த பின், ‘இனி யாருக்கும் வழங்கப்படாது’ என்று கூறி ஒருவன் மக்களை விரட்டினால் அது குற்றமாகும். இப்படி 49 நபர்கள் வரை யாரை விரட்டினாலும் அது குற்றமாகும்.

ஆனால் ஐம்பதாவது நபருக்கு விநியோகம் செய்யும்போது இவருக்குப் பின் யாருக்கும் இன்று ரேஷன் இல்லை என்றால் அது குற்றமாகுமா?

49 பேர் விஷயத்தில் இவ்வாறு கூறியது தவறு என்பதால் ஐம்பதாவது நபருக்குப் பின் கூறுவதும் தவறாகி விடுமா?

யூஸுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்களின் வருகை முற்றுப்புள்ளி வைக்கப்படாத காரணத்தால், அவருக்குப் பிறகு தூதரே வரமாட்டார் எனக் கூறுவது குற்றமாகும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை அவர்களுடன் தூதர்களின் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. நபிகள் நாயகத்துக்குப் பிறகு தூதர்கள் வருவார்கள் என்று சொன்னால் அது தான் குற்றமாகும்.

எனவே யூஸுஃப் நபிக்குப் பிறகு தூதர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது தான் குற்றமே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் தூதர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது இவ்வசனத்திற்கு எதிரானது அல்ல.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மங்கலம் சலீம் M.I.Sc.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே அல்லாஹ்வை நம்புவது உட்பட மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும்.

இதன் காரணமாகவே, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வை நம்புவது குறித்து கூறப்படும் ஏராளமான இடங்களில் மறுமை சம்பந்தமான போதனையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இந்த மறுமையை நம்பியவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் மார்க்கம் வலியுறுத்துகின்றது என்பதை இப்போது பார்ப்போம்.

தொழுகையைப் பேணுதல்

மறுமையை நம்புவோர் தொழுகையைப் பேண வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இது, தாய் கிராமத்தை (மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர் களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். பாக்கியம் பெற்றதும், தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர்.

(திருக்குர்ஆன் 6:92)

மறுமையில் கடமையான விஷயங்கள் குறித்தும் குறிப்பாக தொழுகை குறித்தும் விசாரிக்கப்படும்.

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

மறுமையை நம்புவோர் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் திருக்குர்ஆன் போதிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(திருக்குர்ஆன் 4:59)

மறுமையை சரியாக நம்பியவர்கள் நபிகளாரின் போதனைக்கு மாற்றமாகச் செயல்படக் கூடாது. முன்னோர்கள், பெரியார்கள், இமாம்களின் வழிகாட்டுதல்களே முக்கியம் என்கிற நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தூதர் காட்டிய தூய வழியில் பயணிக்க வேண்டும்.

நபியை அதிகம் நேசிக்க வேண்டும்

மறுமையை நம்புவோர் நபிகள் நாயகத்தை அதிகம் நேசிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காணமாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

(திருக்குர்ஆன் 58:22)

துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளல்

மறுமையை நம்புவோர் துன்பத்தின் போது துவண்டு விடாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மார்க்கம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தனது கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதுகணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

ஆதாரம்: புஹாரி 1281

இறந்துபோனவர் பெயரில் ஆறாவது நாள், ஒன்பதாம் நாள், பதினாறாவது நாள், நாற்பதாம் நாள், நினைவு நாள் என்றெல்லாம் மார்க்கம் கூறாத சடங்குகளைச் செய்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும். மறுமையை நம்பும் மக்கள் மார்க்கம் வழிகாட்டும் வகையில் மட்டுமே துக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிறர் நலம் நாடுதல்

கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் இஸ்லாம் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய செய்திகளையும் குறிப்பிட்டிருக்கின்றது. ­­மறுமையை நம்புகிறவர்கள் வணக்க வழிபாடுகளில் மட்டுமின்றி பின்வரும் வகையில் பொதுநலத்தில் அக்கறை கொண்டிருப்பதும் அவசியம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும்  மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புஹாரி 6018, 6136, 6138

அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்’’ என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்‘’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புஹாரி 6019, 6135

உண்மை பேசுதல்

மறுமையை நம்பும் நபர்கள் உலக விஷயத்திலும் சரி, மார்க்க விஷயத்திலும் சரி உண்மையை உரைப்பவர்களாகத் திகழ வேண்டும். சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புஹாரி 6018, 6136, 6138

வியாபாரத்தில் நேர்மை

அனைத்து அருட்கொடை குறித்தும் மறுமையில் கேள்வி கேட்கப்படும். இதன்படி நாம் பொருளாதாரத்தைச் சேகரித்த மற்றும் செலவளித்த விதம் குறித்தும் விசாரணை இருக்கிறது. எனவே மறுமையை நம்பியவர்கள் வட்டி. பதுக்கல், லஞ்சம், களவு என்று மார்க்கம் தடுத்திருக்கும் எவ்வழியிலும் செல்வத்தை ஒருபோதும் தேடிச் சென்று விடக் கூடாது.

அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது

அல்குர்ஆன் 7:85

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.  வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:278

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!

அல்குர்ஆன் 2:188

மறுமையை நம்பும் மக்கள் உலகத்தையே மறந்து விட வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. உலக இன்பத்திற்கான பொருட்களை, பொருளாதாரத்தைத் திரட்டிக் கொள்வதற்கு மார்க்கம் தடை ஏதும் விதிக்கவில்லை. மாறாக, மார்க்கத்தை மதிக்காமல் உலக மோகத்தில் மூழ்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கின்றது, இஸ்லாம்.

மறுமையை நம்புகின்ற நாம் மார்க்கம் அனுமதி அளிக்கும் வகையில் தான் பொருளீட்ட வேண்டும்.

இந்த இம்மை வாழ்க்கை அற்பமானது; அந்த மறுமை வாழ்க்கை அற்புதமானது. மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் போதுதான் நாம் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் சரியாக இருக்க இயலும்.

மறுமையை நம்புவதாக வெறுமனே வாயளவில் சொல்லாமல் உளப்பூர்வமாக முன்மொழிய வேண்டும். அடுத்தபடியாக, அந்த நம்பிக்கையை உண்மைப்படுத்தும் வண்ணம் வாழ வேண்டும். இதனை மனதில் கொண்டு நன்முறையில் வாழ்ந்து வெற்றி பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————-

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம்  தொடர்: 3

ஹதீஸ்களை மறுத்த இமாம்கள்

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையிலிருந்த பல இமாம்கள் திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி பல ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்று நாம் எடுத்து வைத்த அடுக்கடுக்கான ஆதாரங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய பரலேவி உலமாக்கள் அவர்களது வாயாலேயே, “ஆமாம்! எங்களது இமாம்கள் ஒரு சில ஹதீஸ்களை திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி மறுத்தது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்ட செய்தியை விவாதம் குறித்தான தொடரின் முந்தைய பாகத்தில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது காண்போம்.

ஹதீஸ்களை மறுத்த மாலிக் இமாம்

ஒருவர் கடமையான நோன்புகளை களாச் செய்ய வேண்டியுள்ள நிலையில் மரணித்துவிட்டால் அதை அவரது பொறுப்பாளர் நிறைவேற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1952

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது என்றார்கள்.

நூல்: புகாரி 1953

மேற்கண்ட இந்த ஹதீஸ்களை இது திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்பாடாக உள்ளது என்று கூறி மாலிக் இமாம் அவர்கள் மறுத்துள்ளார்கள். கீழ்க்கண்ட வசனத்தை தனது நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக மாலிக் இமாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை’’ என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

அல்குர்ஆன் 53:38,39

ஒருவர் தான் என்ன சம்பாதித்தாரோ அதுதான் அவருக்கு வழங்கப்படும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கும் போது, நான் வைக்காத நோன்பை எனது பிள்ளைகள் வைப்பதால் எனக்கு எப்படி நன்மை கிடைக்கும்? ஒருவருக்கு அவர் சம்பாதித்தது தானே கிடைக்கும்?

எனவே இந்த வசனத்திற்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுபட்ட நோன்பை அவரது பொறுப்பாளர்கள் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கவே மாட்டார்கள். இந்த ஹதீஸை ஏற்க முடியாது என்று இமாம் மாலிக் அவர்கள் மறுத்துள்ளார்கள். இதனை மாலிக் மத்ஹப் அறிஞரான இமாம் ஸாதிப்பி தனது முவாஃபகாத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு புகாரியில் உள்ள ஆதாரப்பூர்வமான இந்த இரண்டு ஹதீஸ்களையும் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி இமாம் மாலிக் அவர்கள் மறுத்துள்ளதால் அவர்களை காஃபிர் என்று நீங்கள் ஃபத்வா கொடுப்பீர்களா என்று நாம் எழுப்பிய கேள்விக்கு கடைசி வரைக்கும் பரலேவிக்கூட்டம் வாய்திறக்கவே இல்லை.

ஹதீஸை மறுத்த ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள்

ஒரு வழக்கில் இரண்டு சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிப்பது மார்க்கக் கட்டளை என்பதை நாம் அறிவோம். ஒருவருக்குத் தனது வழக்கில் ஆதாரமாக இரண்டு சாட்சியங்கள் கிடைக்கவில்லை; இப்போது என்ன செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதாவது ஒரு சாட்சியத்தோடு அந்த நபர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். இதை இரண்டு சாட்சிகளுக்கு ஒப்பானதாக ஆக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்று முஸ்லிம் என்ற கிரந்தத்தில் ஆதாரப்பூர்வமான செய்தி பதியப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சத்தியம் மற்றும் ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள். 

நூல்: முஸ்லிம்  (3526)

ஆனால் இந்த ஆதாரப்பூர்வமான செய்தி திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள் மறுத்துள்ளார்கள்.

தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!)

திருக்குர்ஆன் 2:282

மேற்கண்ட வசனத்தில், “உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கும் போது ஒரு சாட்சியுடன் மற்றுமொரு சாட்சிக்குப் பகரமாக சத்தியம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி அனுமதித்திருப்பார்கள்? எனவே இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கு   முரண்படுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சொல்லி ஹனஃபி மத்ஹப் அறிஞரான அபூ ஸைத் அத்தப்பூஸி அவர்கள் தக்வீமுல் அதில்லா என்ற நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

அப்படியானால் ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள் வழிகேடர்களா? அவர்களெல்லாம் உங்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டி வழிகேட்டில் தள்ளியுள்ளார்களா? என்று கேட்ட கேள்விக்குக் கள்ள மௌனம் மட்டுமே பரலேவிக் கும்பலிடமிருந்து பதிலாக வந்தது.

பரலேவிக் கூட்டம் மதிக்கக் கூடிய மத்ஹபு அறிஞர்களே பல ஹதீஸ்களை பற்பல காரணங்களைக் கூறி மறுத்துள்ளார்கள்; அவர்கள் மறுத்துள்ள செய்திகள் அனைத்துமே புகாரி முஸ்லிம் உள்ளிட்ட ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் செய்திகளையெல்லாம் கேட்ட, சுன்னத் வல்ஜமாஅத் தரப்பில் பார்வையாளர்களாக வந்த மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தவ்ஹீத் ஜமாஅத் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு நமது ஆலிம்சாக்கள் தகுந்த விளக்கம் சொல்லி, தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது வைத்த குற்றச்சாட்டுக்களையெல்லாம் உண்மையென்று நிரூபித்து நமது கொள்கையை(?) நிலைநாட்டுவார்கள் என்று நம்பிய சுன்னத் ஜமாஅத் தரப்பு பார்வையாளர்களுக்குக் கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது.

பரலேவி ஆலிம்சாக்களின் அசாத்திய மௌனம், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சரியான கொள்கை தான் என்பதை அவர்களுக்கும் உலகிற்கும் பறைசாற்றுவதாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து சஹாபக்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி பல ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள். அது குறித்த செய்திகளை எடுத்து வைத்தோம். அதற்கும் பரலேவிக் கூட்டம் கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.

குடும்பத்தினர் அழுவதினால் மய்யித் வேதனை செய்யப்படும் என்ற ஹதீஸை மறுத்த ஆயிஷா(ரலி)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள். (புகாரி 3978)

“இறந்தவரின் உறவினர் அழுவதினால் இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘‘அவர் (இப்னு உமர்) மறந்து விட்டார். நபியர்கள் ஒரு கப்ரை கடந்து சென்ற போது கூறியதெல்லாம் ‘இந்த கப்ரிலிருப்பவர் வேதனை செய்யப்படுகிறார். இவருடைய குடும்பத்தினர் இவருக்காக அழுகின்றனர்” என்றுதான். பிறகு ‘‘ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்” (6:164) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்

நூல்: நஸாயீ (1855)

மேற்கண்ட இரண்டு செய்தியும் கூறுவது என்ன?

இறந்தவருக்காகப் பிறர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவதாக அறிவிப்பவர்கள் பொய்யர்களில்லை; யாரோ எவரோ கிடையாது;

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிய போது தாங்கள் கேட்டதாக  அறிவிக்கின்றார்கள். ஆனால் இதை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. இதுபோன்று நபிகளார் கூறியிருக்கவே மாட்டார்கள் என்பதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் ஆதாரம் என்ன தெரியுமா?

ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார் (6:164)

மேற்கண்ட வசனத்தில் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவரது மரணத்திற்காக நாம் அழுதால் அதற்காக அந்த மய்யித் வேதனை செய்யப்படும் என்று நாம் எப்படி நம்ப முடியும்? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அந்த மய்யித், தான் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிப்பது அல்லாஹ்வுடைய வசனத்திற்கு எதிராக இருக்கின்றதே! இதை நபிகளார் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்பது தான் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்தின் சாராம்சம்.

அப்படியானால்  திருக்குர்ஆனுக்கு முரண் படுவதாகச் சொல்லி ஆயிஷா (ரலி) அவர்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை – அதுவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்துள்ளார்களே!  இதை ஆதாரமாக வைத்து நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களை காஃபிர் என்று சொல்வீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம்; இது குறித்து விளக்கமளித்தால் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று பயந்த பரலேவிக் கும்பல் கடைசி வரைக்கும் இது குறித்து வாய்திறக்கவே இல்லை.

திருக்குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இன்னும் சில ஹதீஸ்களை இந்த விவாதத்தில் நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 2

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனஃபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

தொழுகையில் சந்தேகம் வந்தால்…?

எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று ஒருவருக்குச் சந்தேகம் எழுமேயானால் இந்தச் சந்தேகம் துவக்கமாக வருகிறதா? அல்லது அதிமான முறை வந்துள்ளதா? என்றெல்லாம் வகை வகையாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்குமான தீர்வு ஹிதாயாவில் முன்வைக்கப்படுகின்றது.

ஒருவர், தாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா எனத் தெரியாமல் குழம்பி நின்றால் இக்குழப்பம் முதல் முறையாக ஏற்பட்டிருக்குமெனில் அவர் தொழுகையைப் புதிதாக மறுபடியும் தொழ வேண்டும் எனவும், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

الهداية شرح البداية – (1 / 76)

ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وذلك أول ما عرض له استأنف لقوله عليه الصلاة والسلام إذا شك أحدكم في صلاته أنه كم صلى فليستقبل الصلاة

ஒருவர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் வந்தால் அவர் தொழுகையை மீண்டும் தொழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 76

இவர் குறிப்பிடும் இந்தச் செய்தியை நபிகளார் எங்கே சொன்னார்கள்? யாரிடத்தில் சொன்னார்கள்? என்பதற்கு மத்ஹபு ஆதரவாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவர் குறிப்பிடும் இதே பிரச்சனைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகிய தீர்வு நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 990

நபிகளாரின் இந்தத் தீர்வையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் அதிகமான முறை சந்தேகம் வந்தால் அப்போது தான் இதை அமல்படுத்த வேண்டும் என்கிறார்.

தொழுகையில் சந்தேகம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் பொதுவாக வழிகாட்டியிருக்க, நூலாசிரியரோ அந்தச் சந்தேகம் முதல் தடவை வருகிறதா? அதிகமான முறை வந்துள்ளதா என்று ஆதாரமின்றி பிரிக்கிறார். இது இவர் செய்யும் முதல் தவறு.

அதையடுத்து முதல் தடவை வந்தால் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் இதை நபியின் பெயரால் சொல்லியது அவர் செய்த மிகப்பெரிய பிழையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் மக்களிடையே உரையாற்றிடும் போது அறியாமல் ஹதீஸ்களைத் தவறுதலாகக் கூறி விட்டால் கூட அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து எக்காளமிடும் மத்ஹபுக்கூட்டம் நபி சொல்லாததை நபி சொன்னதாக தாங்கள் போற்றும் மத்ஹபு அறிஞர்கள் சொல்லியமைக்கு மௌனம் காப்பதேன்? அவமானகரமான மௌனமிது என்பதில் அறிவுடையோர் சந்தேகிக்க மாட்டார்கள்.

கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் உண்டா?

ஸகாத் பற்றிய பாடத்தில் எவை எவைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என்பதை விலாவரியாக விளக்கிக் கொண்டு வரும் போது நபியின் பெயரால் ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. கருத்து சரியா தவறா என்பதை ஆராயாமல் இப்படி எங்கேனும் நபிகளார் சொல்லியுள்ளார்களா? என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

الهداية شرح البداية – (1 / 102)

ولنا قوله عليه الصلاة والسلام ليس في الحوامل والعوامل ولا في البقرة المثيرة صدقة

கர்ப்பத்தில் உள்ளவைகள், நீர் இறைக்கப் பயன்படும் மாடுகள்,  உழவு மாடுகள் ஆகியவற்றில் ஸகாத் வழங்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கு ஆதாரமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  102

கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்டம் கூறி விட்டு இவ்வாறு நபி கூறியுள்ளார்கள் என்று இந்த நூலாசிரியர் பதிகிறார்.

கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் வழங்கத் தேவையில்லை தானே? சரியாகத்தானே சொல்கிறார் என்று நாம் கருதி விடக்கூடாது. ஏனெனில் நபியின் பெயரால் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் அப்படி ஒரு செய்தியை நபி சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் வாயில் வந்ததை நல்ல கருத்து தானே என்று என்றெண்ணி நபியின் பெயரால் அள்ளி விடக் கூடாது. அது மோசமான செயலுடன் நபியின் மீது பொய்யுரைப்பதாக ஆகி விடும்.

காரட், பப்பாளி சாப்பிடுவது இரத்த சுத்திகரிப்புக்கு நல்லது என்று நபி சொன்னார்கள் என ஒருவர் எழுதினால், பேசினால் ஆஹா என்னவொரு நல்ல கருத்தை நபி பெயரில் புனைந்து சொல்கிறார் என்று பாராட்டுவோமா? அல்லது ஆதாரமற்றதை நபியுடன் இணைக்காதீர்கள் என்று அவ்வாறு சொல்பவரை கடிந்து கொள்வோமா?

இந்த வேலையைத்தான், கர்ப்பத்தில் உள்ளவைகளுக்கு ஸகாத் இல்லை என நபி சொன்னார்கள் என்ற இந்த விவகாரத்திலும் மேற்கண்ட நூலாசிரியர் செய்துள்ளார்.

(குறிப்பு: மற்ற இரண்டிற்கும் பலவீனமான செய்திகள் உள்ளன)

பொறுப்பாளர் நோன்பு நோற்கக் கூடாது?

நோன்பு தொடர்பான பாடத்தில் ஒருவர் மற்றொருவருக்காக நோன்பு நோற்கவோ, தொழவோ கூடாது என்று சட்டம் கூறிவிட்டு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார்.

الهداية شرح البداية – (1 / 127)

لقوله صلى الله عليه وسلم لا يصوم احد عن أحد ولا يصلي أحد عن أحد

யாரும் யாருக்காகவும் நோன்பு நோற்கக் கூடாது, யாரும் யாருக்காகவும் தொழவும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 127

நபிகள் நாயகம் இவ்வாறு கூறினார்கள் என்றால் அது நபித்தோழர்கள் எனும் சமுதாயத்தின் வழியாகவே நம்மை வந்து சேரும். இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடமிருந்து கேட்டறிவித்த தாபிஈ யார்? இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் பதிவாகியுள்ளது?

இவற்றுக்கு விடை தெரிந்தோர் உண்டா? மத்ஹபின் தீவிர ஆதரவாளர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.

மேலும் இவற்றுக்கு மாற்றமாக இறந்த பெற்றோர் சார்பில் அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்கலாம் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார்கள் என்பதற்கு நேரடியான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953

இந்த நபிமொழிகளுக்கு முரணாக நபியவர்கள் பேசியதாக ஹிதாயா நூலாசிரியர் கூறுகிறார். இதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.

—————————————————————————————————————————————————————-

விமர்சனங்களுக்கு கலங்காதீர்!

 எம். எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்

‘வீட்டையே திருத்த முடியலை இவர் ஊரைத் திருத்த வந்துவிட்டார்’ என்று நம்மை நோக்கி சிலர் கூறுவர். இது போன்ற விமர்சனங்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்கு ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது. ஏனெனில் இப்ராஹிம் நபியின் தந்தை ஆஸர் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நூஹ், லூத் போன்ற நபிமார்களின் மனைவிமார்கள் ஏகத்துவத்தை ஏற்கவில்லை என்பதே குர்ஆன் கூறும் தெளிவான பிரகடனமாகும்.

தன் மனைவி மக்களைத் திருத்தியதற்குப் பிறகே மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்திருந்தால் மார்க்கத்தை மக்களுக்கு இவர்கள் எடுத்துரைத்திருக்க முடியாது.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர் சகிப்புத் தன்மை உள்ளவர்.

அல் குர்ஆன் 9:114

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!’’ என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மனநெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும், உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். உமது மனைவியைத் தவிர. (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்’’ என்றனர்.

அல்குர்ஆன் 29:33

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏகஇறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!’’ என்று நூஹ் கூறினார். ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்‘’ என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை’’ என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

அல்குர்ஆன் 11:42, 43

அவன் எதையாவது சொல்லி விடுவானோ? இவன் எதையாவது சொல்லி விடுவானோ? என்று எண்ணிக் கொண்டிருந்தால் மார்க்கப் பிரச்சாரம் மட்டுமல்ல! நடைமுறை வாழ்க்கையிலேயே நம்மால் எதையும் செய்ய இயலாது. துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்று கூறுவது போல இறைவன் நம்மோடு இருக்கின்றான் என்று எண்ணி குர்ஆன் ஹதீஸில் உள்ளவாறு உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்க வேண்டுமே ஒழிய, பிறர் இவ்வாறு இவ்வாறெல்லாம் விமர்சிப்பார்களே! என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நமது கடந்த காலத்தைப் பற்றியோ, நமது மூதாதையர்களின் தவறுகளை பற்றியோ விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள். திருப்திப்படுத்த முடியாத மனிதனை திருப்திப்படுத்த எண்ணுவதில் அர்த்தமில்லை. எவ்வளவு தான் நாம் சரியாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் நடந்தாலும் குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களால் விமர்சிக்கப்படவே செய்தார்கள். அதற்காக அவர்கள் பிரச்சாரப் பணிக்கு முழுக்குப் போடவில்லையே? தமது பணியைத் தொடர்ந்து செய்வதில் ஆர்வம் செலுத்தினார்களே ஒழிய அந்த உன்னதப் பணியிலிருந்து அவர்கள் ஒதுங்கிவிடவில்லை.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

அல்குர்ஆன் 6:116

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன்  5:69

அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 3:146

அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! அவர்களை அழகிய முறையில் முற்றிலும் வெறுத்து விடுவீராக!

அல்குர்ஆன் 3:10

 (முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

அல்குர்ஆன் 6:33

அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம். 

அல்குர்ஆன் 15:97

நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏக இறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்!

அல்குர்ஆன் 33:1

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல் பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள்: உயைனா பின் பத்ர்  (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ்  (ரலி)ஸைத் அல் கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி). அப்போது நபித் தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்‘’ என்று கூறினார்.  இந்த விஷயம்  நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன’’ என்று சொன்னார்கள்.

அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?’’ என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.

அப்போது  காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்’’ என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்’’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை’’ என்று கூறி விட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள்.

நூல்: புகாரி 4351

மக்களின் நிராகரிப்பு அதிருப்தியை ஏற்படுத்திவிடக்கூடாது

ஒரு சில பகுதிகளுக்கு சொற்பொழிவாற்றச் செல்வதற்கு சில ஆலிம்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு எத்தனை முறை சென்று பிரச்சாரம் செய்தாலும் மீண்டும் அவர்கள் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள். திருந்தாதவர்களுக்கு எதற்காகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஆதங்கப்படுவதைக் காண்கின்றோம்.

மக்களோடு வாழ்ந்து அவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில் இறைவனால் இப்பூலோகத்திற்குத் தூதராக அனுப்பப்பட்டவர்களே  மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் போது அதை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சொற்பமானவர்களே அதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.

உதாரணமாக நபி நூஹ் (அலை) அவர்கள் 950 வருடம் மக்களுக்கு அழைப்புப் பணி செய்தார்கள். அப்போது அவருக்கு மக்கள் கொடுத்த  சிரமத்தில் சிறிதையும் நாம் அனுபவிக்கவில்லை என்பதற்குக் கீழ்க்கண்ட வசனங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

உமது சமுதாயத்திற்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பீராகஎன்று நூஹை அவரது சமுதாயத்திடம் நாம் அனுப்பினோம். என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்.

அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிய வேண்டாமா?’ என்று அவர் கூறினார்.

என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்என்று அவர் கூறினார். எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை’  ‘நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர்’ ‘பின்னர் அவர்களை நான் உரத்த குரலில் அழைத்தேன்’ ‘பின்னர் அவர்களைப் பகிரங்கமாகவும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன்’  ‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்’ ‘செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்’ “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்கு எந்த மரியாதையையும் வழங்காதிருக்கிறீர்கள்’’

அல்குர்ஆன்  71:1-13

எனவே அழைப்புப் பணி செய்யும் போது இது போன்றவற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு  சலிப்படைந்து விடக்கூடாது. மேலும் திரும்ப திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும். 

அல்குர்ஆன் 51:55

எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.

அல்குர்ஆன்: 88:21

நாம் பிரச்சாரம் செய்த உடனே அவர்கள் திருந்திவிட வேண்டும். அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!    

அல்குர்ஆன்  16:127

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடக்கத்தலம் (கப்று) அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு!’’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘‘என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’’ என்று – நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் – கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தார். -அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை – ‘‘நான் உங்களை (யாரென) அறியவில்லை’’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1283

நபி (ஸல்) அவர்களின்  துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப்என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’  என்று கூறினார். உடனே, “(வேண்டாம்😉 ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.

நூல்: புகாரி 3231

எனவே அழைப்புப் பணி செய்வதே நம் கடமை. நேர்வழி காட்டுவது இறைவனின் கையில் என்றே மார்க்கம் நமக்கு கட்டளையிடுகின்றது.

இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

அல்குர்ஆன் 18:6

நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!’’ (என்றும் கூறினார்.)

அல்குர்ஆன் 11:34

‘‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்!’’ எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.   

அல்குர்ஆன்  24:54

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள், அம்மக்களுக்கு உரிமைப்பட்டவராக (உறவினராக) இருந்தால் தாம் சொல்வதை அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துச் சொல்வது நம் கடமை. அதே சமயம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதற்காக அவர்களை நாம் நிர்பந்திக்கக் கூடாது.

இந்த வேளையில் அவர்கள் எதையேனும் நல்லறத்தை நிர்பந்திக்கப்பட்டுச் செய்வார்களே யானால் அதை இறைவனுக்காகச் செய்யாமல் உங்களது பார்வையில் நல்லவர்களாக இருக்க வேண்டும்; உங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டும்; நீங்கள் அவர்களைக் கண்டித்து விடக்கூடாது என்பதற்காகவே செய்கின்றனர். நீங்கள் இல்லையென்றால் அவர்கள் அந்த நல்லறத்தைச் செய்வதில்லை. அதை மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் பார்க்கின்றோம். எனவே நாம் அவர்களுக்கு வலியுறுத்தலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தக்கூடாது.

அவர்கள் நல்லறங்களை எல்லாக் காலங்களிலும் இறைவனுக்காகச் செய்கின்ற சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். நான் சொன்னால் தான் அவன் கேட்பான். என்னால் தான் அவனைத் திருத்த முடியும் என்ற நிலையையும் நாம் தவிர்க்க வேண்டும்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.

அல்குர்ஆன் 2:256

 (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது. இதை விளங்காதோருக்கு வேதனையை அவன் அளிப்பான்.

அல்குர்ஆன் 10:99,100

இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது’’ என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும்.

அல்குர்ஆன் 18:29

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்  தொடர்: 28

இதயத்தை ஈர்ப்பதுஇறை வேதமல்ல! இசை நாதமே!

குருநாதர் (?) கஸ்ஸாலியின் குர்ஆனிய வெறுப்பு

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

குர்ஆனைக் கேட்பதை விட இசையைக் கேட்பதே இதயத்தை ஈர்க்கும் என்று இஹ்யாவில், கிதாபு ஆதாபுஸ் ஸிமா வல் விஜ்த் (செவியுறுதல் மற்றும் மனம் உருகுதலின் ஒழுங்குகள்) என்ற பாடத்தில் கஸ்ஸாலி குறிப்பிடும் நச்சுக் கருத்துக்களைப் பாருங்கள்:

குர்ஆனைக் கேட்பது இதயத்திற்குப் பயன் அளிக்கும் என்றால், காரிகள் ஓதுகின்ற குர்ஆன் கிராஅத்தைக் கேட்பதை விட்டு விட்டு மக்கள் இசைப் பாடல்களில் லயிப்பதும் ரசிப்பதும் ஏன்?  குர்ஆன் ஓதப்படும் சபைகளில் தானே இவர்கள் சங்கமம் ஆக வேண்டும்? இவர்களின் இதயங்கள் சஞ்சரிக்க வேண்டும்? ஆனால் இதற்கு மாறாக, இவர்களோ பாடகர்கள் பாடுகின்ற சங்கீத சபாக்களில் சங்கமம் ஆகின்றார்களே?

இவர்களின் இதயங்கள் கவ்வாலி, கானா பாடல்களில் கலந்தும் கவிழ்ந்தும் கிடப்பதும் ஏன்?  ஒரு காரியின் அழைப்பின் பேரில் கூடுகின்ற ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பல்வேறு விதமான  கருத்துக்களைக் கற்பது கடமை தானே என்று நீ கேட்டால், இன்னிசைப் பாடல் தான் குர்ஆனை விட இதயத்தை இயக்கவும் ஈர்க்கவும் வல்லது என்று  உனக்கு நான் ஏழு விதமான வகைகளில்  விளக்கம் அளிக்க உள்ளேன். அவற்றை இப்போது பார்ப்போம்:

முதல் வகை: குர்ஆனுடைய அனைத்து வசனங்களும் கேட்பவனுடைய  நிலைக்குப் பொருத்தமாக அமையாது. அவன் விளக்கத்திற்கும் அவன் என்ன இக்கட்டில் மாட்டியிருக்கின்றானோ அதற்கு ஏற்றாற் போல் குர்ஆன் வசனங்கள்  இறங்கி வராது. இசைவாக ஆகாது. கவலையின் பிடியில் சிக்குண்ட, கைசேதத்திற்குள்ளான, ஆசையில் ஆட்பட்ட ஒருவனுக்கு கீழ்க்காணும் வசனங்கள் எப்படிப் பொருந்தும்?

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும்  (அல்குர்ஆன்4:11)

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:4)

வாரிசுரிமைச் சட்டம், விவாகரத்து, குற்றவியல் தண்டனைகள் மற்றும் இன்ன பிற சட்டங்கள் இடம் பெறுகின்ற வசனங்களும் இவ்வாறு  பொருத்தமாக அமையாது.

உள்ளத்தை உருக்குகின்ற ஒரே ஆயுதம் அதற்கு பொருத்தமாக அமைகின்ற இசைப் பாடல்கள் தான். கவிஞர்கள் வடிக்கின்ற கவிதைகள் அனைத்தும் வெறும் கவிதைகள் அல்ல! அவன் உள்ளத்தின் நிலைகளைத் தான் வார்த்தைகளின்  வாயிலாக வெளியே கொண்டு வருகின்றான். இந்த அடிப்படையில் அவனது கவிதைகள் உள்ளத்தின் வெளிப்பாடுகளாகும்.

அதனால் சோகத்தில் உள்ளவன் அதை விளங்குவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. எளிதில் அதை அவன் புரிந்து கொள்கின்றான். சில வார்த்தைகள் கருத்துக்களை விட்டும் வெகு தூரம் விலகி நிற்கும். படிப்பவர், அந்த  வார்த்தைகளை விளங்குவதற்கும் புரிவதற்கும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு  தனது மூளையைப் போட்டு கசக்க வேண்டும். அதன் பின் தான் கருத்தை விளங்க முடியும்.

ஆனால் ஒரு சிலர்  அவற்றை எளிதில் விளங்கக் கூடிய புத்தி சாதுரியமும் சாமர்த்தியமும் கொண்டவர்களாக இருப்பார். இப்படிப்பட்டவர் எதையும்  எதிர்கொள்கின்ற மனப் பக்குவத்தைக் கொண்டிருப்பார். இத்தகையவரின் உள்ளத்தில் இன்னிசை பாடல் போன்ற ஒரு மாற்று வழி அறவே நுழைய முடியாது.

இத்தகையவர்களின் காதுகளில் விழுகின்ற அனைத்துச் செய்திகளிலும் அவரது கவனம் தொடரும். இவரின் காதில் பாகப் பிரிவினைக்குரிய அந்த வசனம் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இந்த வசனம் அவரது காதில் விழுந்த மாத்திரத்தில், மரணத்தின் காட்சி அவரது கண் முன்னால் அகல விரிய ஆரம்பிக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கின்ற போது தனக்குப் பின்னால் காசு பணத்தையும் சந்ததியையும் விட்டுச் செல்கின்றான்.  இரண்டும் அவனுக்குப் பிரியமானவை. ஒன்றை (அதாவது சொத்தை) மற்றொன்றிற்காக (அதாவது சந்ததிகளுக்காக) விட்டு விட்டு செல்கின்றான். அவ்விரண்டையும் தனது கடைசிக் கட்டத்தில் துறந்து விடுகின்றான். இந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக தனது சந்ததிகளுக்கு வஸிய்யத் – என்ற மரண சாசன அறிவுரை- செய்கின்றான். .

1) இப்போது அவனிடம் அச்சமும் ஆட்டமும் திகிலும் திடுக்கமும் அவனிடம் மேலோங்கலாம்.

2) அல்லது  வசனத்தைச் செவியுறுகின்ற போது அதில் இடம் பெறுகின்ற அல்லாஹ் என்ற வார்த்தை கடந்த போன அவனது இவ்வுல வாழ்க்கையைப்  பற்றியும் எதிர் வரக்கூடிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் திடுக்கிட வைக்கலாம்.

3) அல்லது எல்லாம் வல்ல அல்லாஹ் மக்களின் வாழ்க்கை, மரணத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மரணிப்பவரின் சொத்திலிருந்து அவனது சந்ததிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று  தானே பொறுப்பேற்று பங்கீடும் பகிர்மானமும் செய்கின்ற அன்பும்  அடியார்கள் மீது அவன் கொண்டிருகின்ற அவனது அளவற்ற கருணையும் இவன் கண் முன்னால் பளிச்சென்று தோன்றி, நம்முடைய சந்ததிகளுக்கு நம்முடைய மரணத்திற்குப் பின்னால் அல்லாஹ் இவ்வளவு கவனம் எடுக்கின்றான்; கரிசனம் கொள்கின்றான் என்றால் நிச்சயமாக தன்னை எப்படி கவனிக்காமல் கை விடுவான்? என்று அல்லாஹ்வின் அருளில் நெகிழ்கின்ற வேளையில் அது அவனிடம்   அல்லாஹ்வுடைய  ஓர் ஆதரவையும் அரவணைப்பையும் தோற்றுவிக்கலாம். அத்துடன் இது அவனிடம் அல்லாஹ்வுடைய  நன்மாராயத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி விடுகின்றது.

4) அல்லது  ‘‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு”  என்ற அல்லாஹ்வின் வார்த்தை, ஓர் ஆண் பெண்ணை விட சிறந்தவன் என்பதால் இந்த சிறப்பை அல்லாஹ்  இந்த உலகத்தில் அல்லாஹ் அளித்திருக்கின்றான்; மறுமையில் ஆண்களுக்கு சிறப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அவர்களை  அல்லாஹ்வின் நினைவிலிருந்து வர்த்தகமோ, வணிகமோ திசை திருப்பாதது தான். அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திசை திருப்பிய  ஒரு பொருள், அல்லாஹ் அல்லாத ஒரு சக்தி உலகத்தில் இருக்குமானால் அது  நிச்சயமாக இந்த பெண்கள் தான்! அது ஆண்கள் அல்ல என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை, இப்படி உலகப் பொருளாதாரத்தில் பெண்கள் பின்னுக்கு தள்ளப் பட்டது போன்று தான் மறுமையின் அருள்கொடையிலிருந்து பின்னுக்கு தள்ளப் படலாம் அல்லது அருளிலிருந்து தடுக்கப் படலாம் என்ற அவர் பயப்பட நேரிடலாம்.

குர்ஆன் கூறுகின்ற பாகப்பிரிவினை வசனம் இந்த எடுத்துக்காட்டுகளில் கண்ட  தாக்கங்களை ஒருவரிடத்தில் ஏற்படுத்தலாம். ஆனால் அவர் இரண்டு அம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒன்று, எதையும் எதிர்க்கொள்ளக் கூடிய மனப் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்

மற்றொன்று, கருத்துகளை விட்டும் தூர விலகி நிற்கும் வார்த்தைகளை விளங்கிக் கொள்ளக் கூடிய விளக்கத் தன்மையும் விபரமும் இருக்க வேண்டும்.

இத்தகையவர்கள் மிக அரிதிலும் அரிது. இதன் காரணமாகத் தான்     கவலைப்பட்டு காயப்பட்டு கிடக்கின்ற மக்கள் தங்களது  சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்ற இன்னிசைப் பாடல்களின் பக்கம் விரைகின்றனர். ஏனெனில், அந்தப் பாடல் வார்த்தைகளில் பட்டுத் தெறிக்கின்ற தீ அவர்களுடைய உள்ளங்களைப்  பற்றி எரியச் செய்கின்றது. கவிதை வரிகளின் தாக்கம் முடங்கிக் கிடந்த உள்ளத்தை மறு ஆக்கம் அடையச் செய்கின்றது.

இதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம்: அபுல் ஹசன் நூரிய்யி என்பவர் தஃவா – அழைப்புப் பணி – தொடர்பான ஒரு ஜமாஅத்துடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு மத்தியில் மார்க்கக் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு சட்ட ஆய்வு நடந்து கொண்டிருந்தது. அபுல் ஹசன் மவ்னமாகவே உட்கார்ந்து கொண்டிருந்தார். பிறகு தலையை உயர்த்தி  பின் வரும் கவிதை வரிகளைப் பாடத் துவங்கினார்.

رب ورقاء هتوف في الضحى ذات شجو صدحت في فنن

 ذكرت إلفا ودهرا صالحا وبكت حزنا فهاجت حزني

 فبكائي ربما أرقها       وبكاها ربما أرقني

 ولقد أشكو فما أفهمها ولقد تشكو فما تفهمني

 غير أني بالجوى أعرفها وهي أيضا بالجوى تعرفني

இந்தக் கவிதை வரிகளைப் பாடிய மாத்திரத்தில், அங்கிருந்த  மக்களை அவை  கைது செய்து சிறை பிடித்தன, அவை அவர்களின் உள்ளங்களை நெகிழச் செய்து விட்டன. அதன் ஈர்ப்பு விசையின் பிடியிலிருந்து யாரும் தப்பவில்லை  எனுமளவுக்கு அதன் வீச்சும் வேகமும் இருந்தது.

கல்வி சம்பந்தப்பட்ட விவாதத்தில் அவர்கள் மூழ்கியிருந்த போது அவர்களுக்கு இந்த ஈர்ப்பும், இழுப்பும் ஏற்படவில்லை. அவர்களின் உள்ளங்கள் நெகிழவில்லை.

இதயங்களை இழுத்து ஈர்த்த அந்த கவிதை வரிகளின் அர்த்தம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

இளங்காலை நேரத்தில் கவலை நிறைந்த புறாக்கள் கிளைகளில் இசை ஒலி எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

நட்பையும், நல்ல காலத்தையும் அவை நினைவு கூர்ந்தன. அவை கவலையில் அழுதன.  அவை எனது கவலையையும் கிளப்பி விட்டன. சில கட்டத்தில் எனது அழுகை, புறாக்களை உருக வைத்தது. அந்தப் புறாக்களின் அழுகை என்னை உருக வைத்தது. நான் முறையிடுகின்றேன். என் முறையீட்டை அந்தப் புறாக்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. அந்தப் புறாக்கள்  முறையிடுகின்றன. அவற்றால்  அதை எனக்குப்  புரியவைக்க முடியவில்லை. எனினும், ஆகாய  வீதியில் அந்தப் புறாக்களை நான் அறிவேன். அதே ஆகாயத்தில் அவை என்னை அறிந்திருக்கின்றன.

இது தான் இவர்களின் இதயங்களை ஈர்த்த கவிதைகளாம்! இதில்தான் இவர்களின் உள்ளங்கள் நெகிழ்ந்தனவாம்.

நமது விமர்சனம்:

சூஃபிஸப் பேர்வழிகள் ஆன்மீகம் என்ற போர்வையில் இசையுடன் அல்லது இசையில்லாத பாடல் ரசனையில் விழுந்து கிடப்பவர்கள். இவர்களின் இந்த ரசனைக்கு வக்காலத்து வாங்குவதற்குக் களமிறங்கியிருக்கின்றார் கல்விக் கடல் (?) கஸ்ஸாலி.   கவிதைப் பாதைக்கும் கவிதை போதைக்கும் கச்சை கட்டிக் கொண்டு வழக்காடுகின்றார் கஸ்ஸாலி.

அந்த போதையில் அவர் விழுந்து கிடப்பதால் குர்ஆனை விடக் கவிதை தான் ஈர்ப்பு சக்தி நிறைந்தது என்று கூறுகின்றார்.

“வாரிசுரிமை சட்டம், விவாகரத்து, குற்றவியல் தண்டனைகள் மற்றும் இன்ன பிற சட்டங்கள் இடம் பெறுகின்ற வசனங்களும் இவ்வாறு  பொருத்தமாக அமையாது. உள்ளத்தை உருக்குகின்ற ஒரே ஆயுதம் அதற்கு பொருத்தமாக அமைகின்ற இசைப் பாடல்கள்  தான். கவிஞர்கள் வடிக்கின்ற கவிதைகள் அனைத்தும் வெறும் கவிதைகள் அல்ல! அவன் உள்ளத்தின் நிலைகளைத் தான் வார்த்தைகளின்  வாயிலாக வெளியே கொண்டு வருகின்றான். இந்த அடிப்படையில் அவனது கவிதைகள் உள்ளத்தின் வெளிப்பாடுகளாகும். அதனால் சோகத்தில் உள்ளவன் அதை விளங்குவதற்கு சிரமப்பட வேண்டியதில்லை” என்ற கஸ்ஸாலியின் வாதம் குர்ஆனை விட இன்னிசைக் கவிதைகள் தான் எளிமையானவை; இனிமையானவை என்பதைத் தான் நிறுவுகின்றது.

இது கவிதைக்கு ஆதரவாகக் கஸ்ஸாலி வைக்கின்ற முதல் வாதமாகும். இஸ்லாத்தைப் பற்றிய ஞானம் இல்லாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் கூட கஸ்ஸாலி கூறும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இது பற்றிய விமர்சனங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்

அப்துந் நாஸிர்

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ 631

நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படிதான் அமைய வேண்டும் என்பதை மேற்கண்ட நபி மொழி எடுத்துரைக்கின்றது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக தொழுகையின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் செய்கின்ற ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைகளையும் எவ்வாறு தொழுதார்கள் என்பதை ஆதாரங்களுடன் தொகுத்து ”நபிவழியில் தொழுகை” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி போன்ற மாத இதழ்களின் வாயிலாகவும் கட்டுரைகள் வடிவிலும், கேள்வி பதில் வடிவிலும் தொழுகை தொடர்பான ஏராளமான சட்டதிட்டங்கள் சான்றுகளுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வரிசையில் கடமையாக்கப்பட்ட ஐங்காலத் தொழுகைகளில் எந்தெந்த ரக்அத்துகளில் நபியவர்கள் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள்? எந்தெந்த ரக்அத்துகளில் சப்தமின்றி ஓதியுள்ளார்கள்? என்பது தொடர்பான விளக்கங்கள் இதற்கு முன்னர்  தெளிவுபடுத்தப்பட்டிருந்தாலும் அவை ஒரே தொகுப்பாக இல்லாத காரணத்தினால் இது தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடமிருந்தும், மதரஸா மாணவ, மாணவியரிடத்திலிருந்தும் எழுகின்றன. எனவே அவர்களது சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.

சப்தமாகவும் ஓதியுள்ளார்கள்              மெதுவாகவும் ஓதியுள்ளார்கள்

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம்.

நூல்: புகாரி (772), முஸ்லிம் (659, 660, 661)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதுமாறு கட்டளையிடப்பட்ட இடத்தில் சப்தமாகவும், மெதுவாக ஓதுமாறு கட்டளையிடப்பட்ட இடத்தில் மெதுவாகவும் ஓதினார்கள். (ஏனெனில்,) உம் இறைவன் மறப்பவன் அல்லன் (19:64) என்றும் அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

நூல்: புகாரி 774

மேற்கண்ட செய்திகளில் இருந்து நபியவர்கள் சில ரக்அத்துகளில் சப்தமாகவும் ஓதியுள்ளார்கள். சில ரக்அத்துகளில் சப்தமின்றி மெதுவாகவும் ஓதியுள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நபியவர்கள் எந்தெந்த ரக்அத்துகளில் சப்தமாக ஓதியுள்ளார்கள் என்று தெளிவான ஆதாரங்கள் வந்துள்ளதோ அதைத் தவிர மற்ற அனைத்து ரக்அத்துகளிலும் மெதுவாக ஓதியுள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும், மஃக்ரிப் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்துகளிலும், இஷா தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமாக ஓதியுள்ளார்கள். அது போன்று லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளில் நான்கு ரக்அத்துகளிலும் சப்தமின்றி ஓதியுள்ளார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

சுபுஹ் தொழுகையில் சப்தமாக ஓதுதல்

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல்’ (‘அஸ்ஸஜ்தாஎனும் 32ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூராஎனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1594, 1595, 1596)

நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘இதா ஸுல்சிலத்தில் அர்ளு ஸில்சாலஹாஎன்ற (அத்தியாயத்தை) ஓத தாம் செவியேற்றதாக ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார். நபியவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது வேண்டுமென்றே (அவ்வாறு ஓதினார்களா?) என்பதை நான் அறியமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அறிவிப்பவர்: முஆத் இப்னு அப்தில்லாஹ்

நூல்: அபூதாவூத் (816)

அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(ஒரு நாள்) நபி (ஸல்)  அவர்கள் மக்காவில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூசா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம்அல்லது ஈசா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம்வந்ததும்  நபி (ஸல்) அவர்களுக்கு  இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்து விட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்து கொண்டேன்.

நூல்: முஸ்லிம் (780)

அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாகஎனும் (81:17ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.

நூல்: முஸ்லிம் (781)

குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் வந்நக்ல பாசிகா(த்)தின் லஹா தல்வுன் நலீத்எனும் (50:10ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள காஃப்அத்தியாய)த்தை ஓதுவதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம் (782, 781,783, 784,785, 786)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமிட்டு ஒதியுள்ளார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

லுஹர், அஸர் தொழுகைகளில் சப்தமின்றி மெதுவாக ஓதுதல்

நபி (ஸல்) அவர்கள் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளின் அனைத்து ரக்அத்துகளிலும் சப்தமின்றி மெதுவாகவே ஓதியுள்ளார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன.

அபூ மஃமர் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும், அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்என்று பதிலளித்தார்கள். அ(வர்கள் மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, அவர்களது தாடி அசைவதை வைத்து (நாங்கள் அறிந்து கொண்டோம்.) என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (746)

நபியவர்கள் ஓதியதை தாடி அசைவதின் மூலம் தான் நபித்தோழர்கள் அறிந்து கொண்டனர். இதிலிருந்தே அவர்கள் சப்தமிட்டு ஓதவில்லை என்பது தெளிவாகிறது.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் (அல் ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாயத்தையும் (அவ்விரு ரக்அத்கள் ஒவ்வொன்றிலும்) மற்றோர் அத்தியாத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள்.

நூல் : புகாரி (762)

‘‘சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள்” என்பதிலிருந்து சில சமயங்கள் தவிர அனைத்து நேரங்களிலும் சப்தமின்றி மெதுவாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

மஃக்ரிபின் முதல் இரண்டு ரக்அத்துகளில் சப்தமாக ஓதுதல்

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நீங்கள் என் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியேற்றுள்ளேன்   என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (764)

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: அஹ்மத் (22442)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ‘‘சூரத்துல் அஃராஃப்அத்தியாயத்தை பிரித்து மஃக்ரிப் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளில் ஓதினார்கள்.

நூல்: நஸாயீ (981)

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்’ (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கையில் நான் செவியேற்றேன்.

நூல்கள்: புகாரி (765, 3050, 4023, 4854) முஸ்லிம் (791)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் வல்முர்சலாத்தி உர்ஃபன்எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிடமிருந்து செவியேற்றதாகும்’’ என்று கூறினார்கள்.

நூல்கள்: புகாரி (763, 4429), முஸ்லிம் (790)

நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் எங்களுக்கு ‘‘அல்லதீன கஃபரூ வஸத்தூ அன் ஸபீலில்லாஹிஎனத் துவங்கும் (47வது அத்தியாயத்தை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் (1835)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளில் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள் என்பது  தெளிவாகிறது. மேலும் முதலிரண்டு ரக்அத்துகளில் சப்தமாக ஓதினார்கள் என்பதிலிருந்து மூன்றாவது ரக்அத்தில் சப்தமில்லாமல் மெதுவாக ஓதியுள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

இஷாவின் முதலிரண்டு ரக்அத்துகளில் சப்தமாக ஓதுதல்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷா தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கடுமையாக ஏசினார். நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, நீர் குழப்பவாதியா? குழப்பவாதியா? குழப்பவாதியா? என்று (முஆத் அவர்களிடம்) மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.

நூல்: புகாரி (701)

இஷா தொழுகையில் நடுத்தர அத்தியாயங் களிலிருந்து இரண்டை ஓதித் தொழுவிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே முதல் இரண்டு ரக்அத்துகள் மட்டும்தான் சப்தமாக ஓதித் தொழ வேண்டிய ரக்அத்துகள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (98ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனியை ஓதினார்கள்.

நூல்: புகாரி (767)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனியை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட அழகிய குரலில்அல்லது அழகிய ஓதல் முறையில்வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை.

நூல்: புகாரி (769)

சுலைமான் பின் யஸார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்த ஒரு இமாமைக் குறித்து கூறும் போது  ‘‘நபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு மிகவும் ஒப்பான தொழுகையை இன்னாரை விட வேறு யார் பின்னாலும் நான் தொழுததில்லைஎன்று கூறினார்கள்.

சுலைமான் பின் யஸார் கூறுகிறார்: நான் அந்த மனிதருக்குப் பின்னால் தொழுதேன். அவரை லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டுபவராகவும், இறுதி இரண்டை சுருக்குபவராகவும் கண்டேன். மேலும் அவர் அஸரை சுருக்கமாகத் தொழுதார். மஃக்ரிபில் முதலிரண்டு ரக்அத்துகளில்  சுருக்கமான (கிஸாருல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும், இஷாவில் முதலிரண்டு ரக்அத்துகளில் நடுத்தர (வஸ்தில் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும்  சுப்ஹிலே நீளமான (திவாலுல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும் கண்டேன்.

நூல்: அஹ்மத் (7650)

மேற்கண்ட செய்தியில் சுபுஹில் இரண்டு ரக்அத்துகளிலும், மஃக்ரிபில் முதலிரண்டு ரக்அத்துகளிலும், இஷாவில் முதல் இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமிட்டு ஓதித் தொழுவித்த இமாமைப் பற்றி அபூஹூரைரா (ரலி) தொழுதுவிட்டு,  நபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு ஒப்பான தொழுகை என்று குறிப்பிடுகிறார்கள்.

இதிலிருந்து மஃக்ரிபின் மூன்றாவது ரக்அத்திலும், இஷாவின் இறுதி இரண்டு ரக்அத்துகளிலும் சப்தமின்றி மெதுவாக ஓதவேண்டும் என்பதையும் அறியமுடிகிறது.

மேலும் லுஹரிலும், அஸரிலும் சப்தமின்றி மெதுவாக ஓதித் தொழுதுள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்  தொடர்: 35

பணம் மட்டும் தான் வரதட்சணையா?

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

வரதட்சணைக் கொடுமையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். வரதட்சணையால் பெண்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.

வரதட்சணையின் காரணத்தால் ஆண்களின் திருமணம் தாமதமாகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால், தங்கைக்குத் திருமணம் முடித்த பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் என்பதை மார்க்கக் கடமை போல் செய்வதைப் பார்க்கிறோம்.

பெண்ணுக்குத் திருமணம் முடிப்பதாக இருந்தால் அண்ணன் தம்பிகள்தான் வெளிநாடு சென்று உழைத்து அதில் வரும் காசு பணத்தை வைத்து தங்கை அல்லது அக்காவின் திருமணத்தை நடத்திட வேண்டும். இப்படி வரதட்சணைக் கொடுமையால் ஆணின் திருமண வயது 30 என்றும் 35 என்றும் தேவையற்ற காரணங்களால் தாமதமாகிறது. ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிய நேரத்தில் திருமணம் ஆகவில்லையெனில் உரிய நேரத்தில் வாரிசு உருவாவதில் தாமதம் ஏற்பட்டு அதுவே அவனது வாழ்வில் பெருந்துயரத்தைக் கொணர்ந்துவிடும்.

எனவே ஆண்கள் திடகாத்திரமான வயதில் இளமை மாறுவதற்கு முன்னாலேயே திருமணத்தை முடித்து விடுவதே ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

உரிய வயதில் ஆண்கள் திருமணம் முடித்தால் தான் பிள்ளைகளின் கல்விக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பொருள் திரட்ட வாய்ப்பு இருக்கும். அதன் பிறகு பிள்ளைகள் பெரிதாக வளர்ந்து அவர்கள் பொருள் தேடும் நிலைக்கு விரைவாக வந்தால்தான் நாம் வயதாகும் நிலையில் ஓய்வு எடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். தாமதமாகத் திருமணம் முடித்தால் இவை சரியாக அமையாது.

வரதட்சணையின் மற்றொரு தீய விளைவு பெண்ணைப் பெற்றவர்கள் பிச்சை எடுப்பதாகும். தங்களால் வரதட்சணை கொடுக்க முடியாவிட்டாலும் பிச்சை எடுத்துக் கொடுக்க முடியும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.

ஜமாஅத்துகளில் பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொண்டு, தொலைதூர ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுக்கின்றனர். சுயமரியாதை இழந்து, கூனிக்குறுகி நின்று கொண்டு, ஒவ்வொரு ஜும்ஆக்களிலும் ஐவேளைத் தொழுகைகளிலும் பொதுமக்கள் முன்னிலையில் ஸலாம் சொல்லி பிச்சை கேட்டு நிற்கும் அவலம் நமது நெஞ்சை உலுக்குகிறது.

இப்படி ஒரு முஸ்லிம் சுயமரியாதை இழந்து மக்களிடம் பிச்சை எடுத்த காசை வாங்குகிற மருமகன்தான் உண்மையில் மானங்கெட்டவன். ஏனெனில் வருங்கால மாமனாரை ஊர் ஊராகப் பிச்சை எடுக்க வைத்தவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியுமா? இது நமக்கு எவ்வளவு பெரிய கேவலம் என்று வரதட்சணை வாங்குபவன் சிந்திக்க வேண்டாமா?

பிச்சை எடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமா? பிச்சை எடுப்பவர்கள் மறுமையில் முகங்களில் சதையில்லாமல் எலும்புக் கூடாக அல்லாஹ்வின் சன்னிதானத்தில் வருவார்கள் என்று கடுமையாகக் கண்டிக்கும் மார்க்கத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் சரியா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்ணைப் பெற்றதினால் இப்படியொரு இழிநிலை இந்தச் சமூகத்தில் பெற்றவர்களுக்குத் தேவைதானா? இதுபோன்று எந்த மதத்தின் வழிபாட்டுத்தலங்களிலாவது பெண் பிள்ளைக்காகப் பிச்சை கேட்கும் நிலை உள்ளதா? இல்லை.

பரிந்துரைக் கடிதம் கொடுக்கும் ஜமாஅத்துக்கள், தங்களது மஹல்லாக்களில் வரதட்சணை வாங்கும் திருமணத்தைப் பதிவு செய்ய மாட்டோம் என்று சட்டம் போட்டால் ஆண்கள் வரதட்சணை கேட்க முன்வர மாட்டார்கள். அதுவே ஆண்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் கேவலமாகத் தெரியும்.

வரதட்சணை கேட்பதில் கூட பல ரகம் உள்ளது. பெண்வீட்டில் என்ன தருவீர்கள் என்றுதான் ஆரம்பிப்பார்கள். பெண்ணின் படிப்பு என்ன? குணம் என்ன? மார்க்கப் பற்று என்ன? எதையும் கேட்கமாட்டார்கள். என்ன போடுவீர்கள்? என்று தான் கேட்பார்கள்.

பணமாக, ரொக்கத் தொகையாக வாங்குவது ஒருவகை. நாங்களெல்லாம் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, கல்யாணத்திற்கு என்ன போடுவீர்கள் என்று பெண்வீட்டாரிடம் கேட்பார்கள். அப்படியெனில் நகைநட்டுகள் என்று பொருள். அதாவது காசு பணமாக, ரொக்கமாக வாங்கினால் தான் வரதட்சணை; நகைநட்டுகளாக, பண்டபாத்திரமாக வாங்குவது வரதட்சணையாகாது  என்று இவர்களாக ஒரு அளவுகோலை வைத்து வாங்குகின்றனர்.

நகை நட்டுகளும், பண்ட பாத்திரங்களும் இலவசமாகவா கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.

இன்னும் சில ஊர்களில் நடக்கும் கொடுமை, அதுவும் அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை, நாகூர் போன்ற ஊர்களில் ஒரு பெண்ணைப் பெற்றால் திருமணத்தின் போது வீடு கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். இந்த ஊர்களிலெல்லாம் ஆண்கள், மனைவியரின் வீட்டில்தான் இருப்பார்கள். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அதிகமானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள்.

அதாவது ஆண்கள் திருமணம் வரைக்கும் பெற்றோருடன் இருந்துவிட்டு, திருமணம் முடித்ததும் மற்ற ஊரில் பெண்கள் செல்வது போன்று காயல்பட்டினம் போன்ற ஊர்களில் மாப்பிள்ளைகள் புகுந்த வீட்டுக்குச் சென்று விடுவார்கள். மாப்பிள்ளையைக் கண்ணீர் விட்டு அழுது பெண் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

அதேபோன்று, எல்லா வீடுகளும் பெண்கள் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆண்களுக்குச் சொத்து எதுவும் கிடையாது. சிலர் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்நிலையில்தான் உள்ளனர்.

அதாவது ஒருவர் தனது மனைவி வீட்டில் இருப்பார். அவர்களுக்குப் பெண் பிள்ளை இருந்தால் தங்களது பெண்ணின் திருமணத்திற்காக அதைக் கொடுத்துவிட வேண்டியதுதான். வீடு இல்லையெனில் எந்தப் பெண்ணுக்கும் கல்யாணம் செய்யவே முடியாது. ஒரு வீடு அம்மா பெயரில் இருந்து, 4 பெண் பிள்ளைகளைப் பெற்றால் என்ன ஆவது? இருக்கிற வீட்டை 1 பெண்ணுக்குக் கொடுத்து விட்டு மீதமுள்ள 3 பெண்ணுக்கும் வீடு வாங்குகின்ற வரைக்கும் திருமணம் முடிக்காமல் காத்துக் கொண்டிருப்பார்கள்?

இவ்வளவு பெரிய கொடுமையை ஒரு சமூகமே சேர்ந்து நன்மை போல் சித்தரித்து வாழ்ந்து வருகின்றனர். இவைகளெல்லாம் பெரிய அநியாயம்? மனதால் சிந்தித்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போகிறது. ஆனால் இந்தக் கொடுமைக்கான தீர்வையும் அதிலிருந்து விடுபட்டு சரியாக வாழ வழிமுறையையும் மார்க்கம் எப்படிச் சொல்கிறது என்று பாருங்கள்.

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! … 

(அல்குர்ஆன் 65:6)

மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு கூட அவளை கணவன் வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என்று இந்த வசனத்தில் சொல்கிறான். அப்படியெனில் கணவன், மனைவி சேர்ந்து வாழ்கிற போது கணவன் வீட்டில்தான் மனைவி இருக்க வேண்டும் என்பது உறுதியிலும் உறுதியான விஷயம்.

எனவே மனைவி வீட்டில் கணவன் வாழ்வதும் வரதட்சணை தான். சொல்லப் போனால் இது வரதட்சணையிலேயே மிகப் பெரிய கொடுமையான வரதட்சணையாகும்.

பெண்ணுக்கு வீடு கொடுத்தால் தான் திருமணம் முடிக்க முடியும் என்றால் எல்லோராலும் இது முடியுமா? இரண்டு அல்லது மூன்று பெண்கள் இருந்தால் இதை எப்படி செயல்படுத்திட முடியும்? இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன? இப்படி இந்தத் தீமையினால் பாதிக்கப்படும் நமது சமூகத்தின் நிலை பற்றிப் பிற சமூக மக்கள் என்ன நினைப்பார்கள்? இதற்கெல்லாம் மறுமையில் இறைவன் தரப்போகும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்பதையெல்லாம் இந்தச் சமூகம் யோசிக்க வேண்டும்.

வரதட்சணையாகப் பெண் வீட்டாரிடம் பிச்சைக்காரன் போல் சோறு கேட்கும் நிலையைப் பார்க்கிறோம். கல்யாணத்திற்கு விருந்து கேட்பது அது ஒரு கூத்து. அதிலும் சிலர் கல்யாணத்திற்கு முன்கூட்டியே பெண் பார்க்கிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோருக்கு சோறு போடச் சொல்வார்கள். சோறு போடுவது ஒரு நபருக்கு குறைந்தது முன்னூறு ரூபாய் செலவு செய்தால்தான் திருப்தியாக விருந்து என்கிற முறையில் பரிமாற முடியும்.

அதுபோகப் பெண் வீட்டில் இருந்து கொண்டு பெண் வீட்டார் செலவில் மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு விருந்து நடத்துவார்கள். ஏன் இவர் வீட்டில் வைத்தால் நண்பர்கள் வந்து சாப்பிட மாட்டார்களோ? இதுபோக சம்பந்தி கலப்பு அல்லது கலப்புப் பெருநாள் என்ற பெயரில் பெரிய தடபுடலான விருந்தை பெண்வீட்டுப் பணத்தில் மூக்குமுட்ட தின்னுகின்றனர்.

ஏன் சம்பந்தி கலப்பு பெண்வீட்டில் கலந்தால் தான் நடக்குமா? மாப்பிள்ளை வீட்டில் அப்படியொரு கலப்பை நடத்தினால் என்ன? இப்படியெல்லாம் பெண்ணிடமிருந்து பிச்சை எடுக்கும் அவல நிலை இந்தச் சமூகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதுவெல்லாம் வரதட்சணையின் தொடர்தான்.

அதற்கடுத்து முஸ்லிமல்லாத மக்கள் ஆடி சீர், அமாவாசை சீர், தலைப்பிள்ளை சீர், தீபாவளி சீர், பொங்கல் சீர் என்றெல்லாம் ஏராளமான பெயர்களில் வைத்திருப்பார்கள். அதை அப்படியே காப்பியடித்து இங்கேயும் நோன்புப் பெருநாள் சீர், ஹஜ் பெருநாள் சீர் என்று வைத்திருக்கிறார்கள். தலை நோன்புப் பெருநாள் என்ற பெயரில் அதாவது திருமணம் முடித்த பிறகு கணவன் அடைகிற நோன்பு சீருக்கு அப்படி தலைநோன்பு பெருநாள் சீர் என்றும், மிஃராஜ் சீர், பராஅத் சீர், தலைப்பிரசவச் சீர் என்றெல்லாம் பிறமதக் கலாச்சாரத்தைக் காப்பியடித்து பெண்வீட்டாரை மொட்டையடிப்பதைப் பார்க்கிறோம்.

ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி சுயமரியாதை இழந்து பெண்வீட்டாரிடம் அடித்துப் பிடித்துத் தின்கிறது இந்த சமூகத்தின் மாப்பிள்ளை வம்சம். இதுவெல்லாம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதம், கொடூரம்தான். இப்படி வாழ்வது இஸ்லாமியக் குடும்பமே கிடையாது.

நமது சமூகத்தில் உண்டாக்கப்படும் இதுபோன்ற திருமணங்களின் அஸ்திவாரமே அக்கிரமமாகும். ஆரம்பமே அநியாயத்தில் ஆரம்பிக்கிறது.

குழந்தை பெற்றால் ஓரிரு மாதங்களில் மனைவியை கணவன் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் அப்படி யாரும் உடனே அழைத்துச் செல்ல மாட்டார்கள். ஏன்? பெண் பிள்ளை பிறந்திருக்கிறது, குறைந்தது 5 பவுனாவது போட்டால்தான் மனைவியை அழைத்துச் செல்வார்கள். பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்குப் பெண்களை அனுப்புவதில் தவறொன்றுமில்லை. ஆனால் அதில் ஏற்படும் அத்தனை செலவிற்கும் பொறுப்பாளர் கணவர்தான்.

மாமியார் வீட்டில் இருப்பதை விடத் தாய் வீட்டில் குழந்தை பெற்றவள் இருப்பது மிகவும் நல்லதுதான். ஏனெனில் தேவையான அளவுக்கு நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் அப்படியே பெண்ணின் தாய் வீட்டிலேயே தொடர்ச்சியாக வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள். ஏனெனில், அவர்கள் எனது பிள்ளைக்கு நகை போடவில்லை அதனால்தான் என்பார்கள். கொலுசு போடவில்லை, மோதிரம் போடவில்லை, வெள்ளியில் அர்ணக் கொடி போடவில்லை என்றெல்லாம் தாமதத்திற்கான காரணத்தைக் கூறுகிறார்கள். இதுவெல்லாம் குழந்தைகளின் பெயரைப் பயன்படுத்தி பெண்வீட்டில் சுரண்டப்படும் சுரண்டல்களாகும்.

இப்படி ஏராளமான கொடுமைகள் பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு இஸ்லாத்தை விடவும் சொத்துரிமைகளையும் சுய உரிமைகளையும் வேறு எந்த ஆன்மிக நெறிகளும் வழங்கிடவில்லை என்பதே உண்மை. இவற்றையெல்லாம் முஸ்லிம்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

மக்களைக் காக்கும் மரண தண்டனை

கொலை நகரமாக மாறி வரும் இந்தியத் தலைநகராம் டில்லியில் 2012ல் ஓடும் பஸ்ஸில் காம வெறிகொண்ட கும்பலால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணத்தையும் தழுவினாள். அதற்காக ஒட்டு மொத்த நாடே கொந்தளித்தது. கொதித்தது.  அதன் விளைவாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மசோதா  19, மார்ச் 2013 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கலானது.

* பெண்கள் மீது அமில வீச்சுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

* பாலியல் பலாத்காரம், குழுவாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனை! இதை ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் செய்யலாம்.

* ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை.

இவை அந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

ஆனால் இவை ஏதாவது ஓர் அச்சத்தையும் அசைவையும் குற்றவாளிகளிடம் ஏற்படுத்தியிருக்கின்றதா? பாலியல் பலாத்கார பாதகர்களிடம் ஏதேனும் ஒரு பாதிப்பை உருவாக்கியிருக்கின்றதா? கொலைகாரர்களைக் குலைநடுங்க வைத்திருக்கின்றதா? கொலைநகர் என்ற குற்றப் பெயரிலிருந்து தலைநகர் விடுபட்டிருக்கின்றதா? விடுதலை பெற்றிருக்கின்றதா?

அதற்கு 22/09/16 அன்று ‘இனியும் தாமதிக்கலாகாது’ என்று தமிழ் இந்து தீட்டியிருக்கின்ற தலையங்கம் பதிலளிக்கின்றது. அதைப் பார்ப்போம்:

டெல்லியில் வெறி கொண்ட ஒரு இளைஞரால், இளம் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே பதைபதைக்க வைத்திருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையின் மிகக் கோரமான முகத்தை இச்சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது.

வடக்கு டெல்லியின் புராரி பகுதியில், காலை 9 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற 21 வயது கருணாவை வழிமறித்துக் கொன்றார், 34 வயதான ஆதித்யா மாலிக் எனும் சுரேந்தர் சிங். நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த இளம் பெண்ணின் உடலில் 32 முறை கத்தரிக்கோலை அவர் பாய்ச்சியதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுசெய்திருக்கிறது. இவ்வளவுக்கும் வெறி அடங்காமல் உயிரற்ற உடலை உதைத்ததுடன், அப்பெண்ணின் முகத்தைச் சிதைக்கவும், தலையைத் துண்டிக்கவும் அவர் முயன்றிருக்கிறார். கொலை செய்த கையோடு யாரையோ அலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபடி, சாவதானமாக முன்னும் பின்னும் நடந்த அவர், பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் உடலை அலைபேசியில் படமும் எடுத்திருக்கிறார்.

மனதை நடுங்கவைத்த இந்தக் கோர நிகழ்வை சாலையில் சென்ற வழிப்போக்கர்கள் தடுக்க முற்படவில்லை. பலர் சாதாரணமாக அந்நிகழ்வைக் கடந்து சென்றனர். சிலர் விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரேயொரு மனிதர் தடுக்கச் சென்றார் அவரும் ஆதித்யா விடுத்த எச்சரிக்கைக்குப் பயந்து பின்வாங்கிவிட்டார். எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான், ஆதித்யாவைப் பிடித்து உதைத்திருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள். எவ்வளவு கொடுமை!

தலைநகர் டெல்லியில் 48 மணி நேரத்தில், பெண்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது கொலைத் தாக்குதல் இது. மங்கள்புரியில் அமித் என்ற இளைஞரால் மாடியிலிருந்து வீசப்பட்ட 25 வயது சீமா கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இந்தர்பூரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 28 வயது லக்ஷ்மி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஞ்சய் என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். இவை எல்லாவற்றையும் ‘காதல்’ எனும் பெயரால் அழைக்கும் துர்பாக்கியச் சூழலிலேயே நம் சமூகம் இன்னும் இருக்கிறது. கொடுமை!

பெண்ணுயிர் மீதான மதிப்பின்மை, தம் விருப்பங்கள் மறுதலிக்கப்படும்போது மனிதர்களின் மனதில் எழும் வெறி, பின்விளைவுகளைப் பற்றித் துளியும் அலட்டிக்கொள்ளாமல் குற்றத்தில் ஈடுபடும் அளவுக்கு அச்சமற்றதாகிவிட்ட சட்ட ஒழுங்குச் சூழல், பொது இடத்தில் ஆபத்தில் சிக்கியிருக்கும் சக மனிதரைக் காப்பாற்றத் தயங்கும் மனிதர்களின் சுயநலம் என்று ஒட்டுமொத்த சமூகம் மீதும் பல்வேறு விதமான கேள்விகளை ஒரே சமயத்தில் வீசுகிறது, கருணா என்ற இந்தப் பெண்ணின் கொலை.

பிரச்சனையின் வேர் வரை நாம் சென்றே ஆக வேண்டும். தேசிய அளவில் தீவிரமாக விவாதித்துச் செயலாற்ற வேண்டிய பிரச்சினை இது. இதற்கெனவே நாடளுமன்றம் விசேஷமாகக் கூடினாலும் தவறில்லை. ‘மகள்களைக் காப்போம்!’ – வெறும் கோஷமாகவே முடங்கிவிடக் கூடாது!

ஆம்! மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின் நாடாளுமன்றத்தில் தாக்கலான சட்டத்தின் தண்டனைகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம்  எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதைத் தான் இந்த தலையங்கம் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றது.

டெல்லியில் அண்மையில் நடந்த இந்தக் கொலை முயற்சிகள், கொலைகள் எல்லாமே ஒரு தலைக் காதலால் ஏற்பட்டவையாகும். இந்த ஒரு தலைக் காதல் ஒரு பெண், இரு பெண்கள் உயிர்களை பதம் பார்க்கவில்லை. பல பெண்களின் உயிர்களைப் பதம் பார்த்து பலி கொண்டிருக்கின்றன.

அப்படிப் பலியான பெண்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்:

  1. வினோதினி

காரைக்காலைச் சார்ந்த  ஐடி இளம்பெண் வினோதினி, தீபாவளிப் பண்டிகை முடிந்து சென்னை செல்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில் காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு தந்தை மற்றும் நண்பருடன் வந்தபோது, ஒரு தலைக் காதல் பிரச்சினையால் வினோதினி மீது சுரேஷ்குமார் என்ற அப்பு ஆசிட் வீசினார். விநோதினி ஆசிட் வீச்சிற்குள்ளான விவகாரம் டெல்லி மருத்துவப் பெண் பலாத்கார  சம்பவத்திற்கு முந்தி நடந்தது என்றாலும் இந்த இளம்பெண் 90 நாட்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இறந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  1. சுவாதி

 ஜூன் 13, 2016 காலை 6.30 மணி அளவில் சுவாதியை அவரது தந்தை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். செங்கல்பட்டு மின்சார ரயிலுக்காக காத்திருந்த சுவாதி, 2-வது நடைமேடையில் மகளிர் பெட்டி நிற்கும் இடத்துக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயிலுக்காகவும் நடை மேடையில் ஒருசிலர் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் படி வழியாக ஓடிவந்த ஒருவர், சுவாதிக்கு அருகே சென்றார். கண் இமைக்கும் நேரத்தில், தன் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சரமாரியாக சுவாதியைக் குத்திவிட்டு ஓடி மறைந்தார். சம்பவ இடத்திலேயே சுவாதி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கண் எதிரில் இளம் பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடுவதைப் பார்த்ததும், நடைமேடையில் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

  1. சந்தியா

சென்னை சுவாதி கொலை சம்பவத்தைப் போன்றே, தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் சில நாட்களுக்கு முன் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காதலிக்க மறுத்த 17 வயதுப் பெண் பலர் முன்னிலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் பைன்ஸாவைச் சேர்ந்தவர் சந்தியா (17). இவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவர் காதலித்துள்ளார். ஆனால், சந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மதியம் ஏராளமான பொதுமக்கள் கண் எதிரில், காய்கறி நறுக்கும் கத்தியால் சந்தியாவை அவரது வீட்டு வாசலிலேயே சரமாரியாக கழுத்தில் குத்தினார் மகேஷ். இதில், சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஷ் அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

  1. மோனிகா

திருச்சி பிச்சாண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவரது மனைவி பாத்திமா, கன்டோன் மென்ட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர். இவர்களது மகள் மோனிகா (21) திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (26) என்பவருக்கும் மோனிகாவுக்கும் பழக்கம் இருந்ததாகவும், பெற்றோர் அறிவுறுத்தலின்பேரில் பாலமுருகனுடனான பழக்கத்தை மோனிகா துறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாலமுருகனோ, தன்னைக் காதலிக்குமாறு மோனிகாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மோனிகா நேற்று கல்லூரி முடிந்து பிச்சாண்டார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்து சென்றபோது, பாலமுருகன் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், மோனிகாவின் உடலில் 5-க்கும் அதிகமான இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. மோனிகா திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பாலமுருகனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது, தான் ஏற்கெனவே விஷம் அருந்தியுள்ளதாக பாலமுருகன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, பாலமுருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  1. ஹீனோ டோனிஸ்

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் ஊசுட்டேரியில் வசிப்பவர் மரியஜோசப். இவரது மகள் ஹீனோ டோனிஸ் (19), ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்தார். அதே கல்லூரியில் எழிலரசன் (19) என்பவர் பி.காம் படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் எழிலரசனின் நட்பு ஹீனோ டோனிஸுக்குப் பிடிக்காததால் பழக்கத்தைத் துண்டித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கல்லூரி முடிந்து ஹீனோ டோனிஸ் வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த எழிலரசன், தனது இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த எழிலரசன், கத்தியால் ஹீனோ டோனிஸை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

  1. சோனாலி

கரூர்- ஈரோடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு சிவில் இன்ஜினீயரிங் படித்து வந்தார் சோனாலி. அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வெங்களூர் அருகில் உள்ள ஆதியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் உதயகுமாரும் சோனாலியும் நட்புடன் பழகி வந்ததாகக் கூறுகின்றனர் சக மாணவர்கள்.

போதிய வருகைப் பதிவு இல்லாததால், கல்லூரி நிர்வாகம் பருவத் தேர்வை எழுத உதயகுமாரை அனுமதிக்கவில்லை. இதனால், தற்போது நடைபெற்று வரும் பருவத் தேர்வுக்கும் உதயகுமார் வரவில்லை. உதயகுமாரின் ஒழுங்கீன நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த சோனாலி, அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

நன்றாகப் பேசி வந்த சோனாலி, சில நாட்களாகப் பேசாதது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கல்லூரிக்குத் தேர்வு எழுத சோனாலி வந்திருப்பதை அறிந்த உதயகுமார், தனது கல்லூரி சீருடையை அணிந்துகொண்டு கல்லூரிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்த சோனாலியிடம் கோபமாகப் பேசிவிட்டு, அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால், வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ் குமாரையும் தாக்கிவிட்டு உதயகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனாலி மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  1. ஃபிரான்சினா

தூத்துக்குடி ஜார்ஜ் சாலை, இந்திரா நகரைச் சேர்ந்த நியூ மென் மகள் பிரான்சினா (24), ஒரு தலைக் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர், தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

செப்டம்பர் 8ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததால் நேற்றோடு பணியை விட்டுவிட அவர் முடிவு செய்திருந்தார். இதனால் உற்சாகத்துடன் காலையில் பள்ளிக்குப் புறப்பட்டு வந்த அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என, சக ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

நாம் இங்கு எடுத்துக் காட்டியிருப்பது ஒரு சில கொலைகளை தான். ஆனால் புள்ளி விவரம் தருகின்ற கொலைகளோ நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

இதுகுறித்து மதுரை எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கதிர் கூறும்போது, “தமிழகத்தில் காதல் விவகாரங்களில் கொடூரக் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 2012ஆம் ஆண்டில் 622 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் அந்த ஆண்டில் 291 ஆண்கள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டில் 660 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் 316 ஆண்கள், பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2014-ல் 581 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் 239 ஆண்கள், பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டில் 556 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காதல் விவகாரத்தில் 175 ஆண்கள், பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சராசரியாக 150 பெண்கள் கொல்லப்படுகின்றனர். காதல் விவகாரத்தில் கொலையாவதில் 60 முதல் 70 சதவீதம் பெண்களாகவே இருக்கின்றனர். காதல் விவகாரக் கொலைகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்ற சதவீதம் மிகக் குறைவாக இருக்கிறது. 5 முதல் 7 சதவீதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது.

இவ்வாறு எவிடென்ஸ் கதிர் கூறுகிறார்.

குறைபாடு நிறைந்த  குற்றவியல் சட்டம்

மகளிருக்கு எதிரான குற்றங்கள் இவ்வளவு மலிவாக நடப்பதற்குக் காரணம் குறைபாடுள்ள குற்றவியல் சட்டம் தான். குற்றம் செய்தவர்கள் மிக எளிதாக சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். 5 முதல் 7 சதவீதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது.

இதற்கு எடுத்துக் காட்டாக, ‘ஏமாற்றம் அளிக்கின்றது சவ்மியா வழக்கின் தீர்ப்பு’ என்ற பெயரில் இந்து தமிழ் ஏடு 21/09/16  அன்று தீட்டிய தலையங்கத்தை பார்ப்போம்.

கேரள மாநிலத்தில் இளம்பெண் சௌம்யா (23) ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

எர்ணாகுளம் – ஷோரனூர் பயணிகள் ரயிலில் 2011 பிப்ரவரி 1 அன்று பெண்களுக்கான பெட்டியில் தனியாகச் சென்றிருக்கிறார் சௌம்யா. அந்தப் பெட்டியில் ஏறிய கோவிந்தசாமி, சௌம்யா வைத்திருந்த கைப்பையைப் பறிக்க முயன்றிருக்கிறார். அவர் தடுக்க முற்பட்டபோது அவரைத் தாக்கியிருக்கிறார்.

பிறகு, ரயிலிலிருந்து தள்ளப்பட்ட நிலையில், சுயநினைவற்றுப் போன சௌம்யாவைப் பாலியல் வல்லுறவுக்கும் ஆட்படுத்தியிருக்கிறார் கோவிந்தசாமி. காணாமல்போன சௌம்யாவைப் பல இடங்களிலும் தேடிய போலீஸார், பிப்ரவரி 6 அன்று தண்டவாளத்தின் அருகே கிடந்த அவரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. கேரள மக்களைக் கொந்தளிக்க வைத்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது அரசு. பிரேதப் பரிசோதனை மருத்துவர், ‘சௌம்யா ரயிலிலிருந்து குதிக்கவில்லை, தள்ளப்பட்டிருக்கிறார்’ என்று காயங்களின் அடிப்படையில் அறிக்கை அளித்திருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த வேறு சிலர் அளித்த முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்ட னையாக மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனிப்பட்ட நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களைவிட, தடய அறிவியல்பூர்வமாகத் தரப்படும் ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளவை. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமல்போனது துரதிர்ஷ்டம்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். கோவிந்தசாமி தரப்பில், அனுபவம் உள்ள பெரிய வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அவர் இந்த வழக்கில் காவல் துறையினர் விட்ட ஓட்டைகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

கேரள அரசோ, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதாட புதிய வழக்கறிஞரை அமர்த்தியிருக்கிறது. அவருக்கு இந்த வழக்கின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள நேரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

தீர்ப்பு சௌம்யா குடும்பத்தவருக்கு மட்டுமல்ல; நாட்டின் பெரும்பாலானோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அரிதினும் அரிதான இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனைப் பெறும் அளவுக்குத் தகுதியானவர் அல்ல குற்றம்சாட்டப்பட்டவர் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் இந்நாட்களில் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுப்பதாகத் தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் காவல் துறை, நீதித் துறை இரண்டும் ஒருங்கிணைந்து, விரைவாகச் செயல்பட வேண்டும்.

இது இந்து தமிழ் ஏடு சவ்மியா வழக்கின் தீர்ப்பைப் பற்றி செய்த விமர்சனம்.

குற்றங்களுக்கு எவ்வளவுதான் கடுமையான தண்டனைகளைச் சட்டப்புத்தகத்தில் எழுதி இருந்தாலும் உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்களை நிரூபிக்க முடியும்.

ஒரு கொலைவழக்கில் தீர்ப்பளிக்க இருபது ஆண்டுகள் கூட ஆகின்றன. குற்றம் நடக்கும்போது அதை பார்த்த சாட்சிக்கு நாள் செல்லச் செல்ல ஆர்வம் குறைகின்றது. நாம் ஏன் ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும் என்று அவன் நினைக்கிறான். இதனால் சாட்சி சொல்ல ஆள் இல்லாமல் குற்றவாளி தப்பிக்கிறான்.

மேலும் இருபது ஆண்டுகளில் மாற்றி மாற்றி சாட்சி சொல்லும் மனித பலவீனம் காரணமாக குற்றவாளி தப்பிக்கிறான்.

குற்றம் நடந்த போது இருந்த தீமைக்கு எதிரான வேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்காது. இவ்வாறு உணர்வு மழுங்குவதாலும் சாட்சியம் வலுவிழந்து விடுகிறது.

இந்த இழுத்தடிப்பின் காரணமாக சாட்சிகளில் பலர் வழக்கு முடிவதற்குள் செத்து விடுகிறார்கள். நீண்ட காலம் வழக்கு நடக்கும் போது சாட்சிகள் மிரட்டப்படுவதாலும் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

வழக்கை நடத்தும் காவல் துறை அதிகாரிகள் இருபது ஆண்டுகளில் மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் இறுதியாக வழக்கை நடத்தும் அதிகாரிக்கு அந்தக் குற்றம் பற்றிய போதிய அறிவு இருப்பதில்லை.

அரசு வழக்கறிஞர்களும் இருபது ஆண்டுகளில் மாறிக் கொண்டே உள்ளனர். இதனால் வழக்கு பற்றிய முழு அறிவு கடைசியில் வாதாடிய வழக்கறிஞருக்கு இருப்பதில்லை.

இருபது ஆண்டுகளில் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளும் மாற்றப்படுகின்றனர். முதல் நீதிபதி கேட்ட வாதங்கள் என்ன? அவர் புரிந்து கொண்டது என்ன என்பது அடுத்த நீதிபதிக்கும் முழுமையாகத் தெரியாது.

எவ்வளவு கடுமையான தண்டனைகள் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றினாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நிலை ஏற்படாதவரை எந்தக் குற்றமும் நாட்டில் குறையாது. அதிகப்பட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற காலக்கெடு நிர்ணயித்து அதற்கேற்ப நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் அதிகரித்து, அதற்குத் தேவையான நிதிகளை ஒதுக்கினால் தவிர இக்குற்றங்கள் குறையப் போவதில்லை.

காதலாக இருந்தாலும் வேறு விருப்பமாக இருந்தாலும் அது எல்லைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எல்லை மீறி வெறிபிடித்து அலைவதை காதல் என்ற பெயரில் ஊக்குவிப்பதை அறிவு ஜீவிகள், காட்சி ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். அப்பொருள் கிடைத்தால் அதை வாங்குகிறோம். அப்பொருளை மற்றவர் வாங்கி விட்டால் அல்லது அதை வாங்கும் வசதி நம்மிடம் இல்லாவிட்டால் கிடைப்பதை வாங்கிக் கொள்கிறோம்.

குறிப்பிட்ட உணவை விரும்பலாம். அது கிடைக்காவிட்டால் பட்டினி கிடந்து சாவேன் என்று இருக்கக் கூடாது, கிடைப்பதைச் சாப்பிட்டு வாழ வேண்டும்.

காதல் என்பதும் இதுபோன்ற உணர்வுதான். ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புகிறான். அல்லது ஒரு பெண், ஒரு ஆணை விரும்புகிறாள். விரும்பியது கிடைத்தால் இணைந்து வாழலாம். கிடைக்காவிட்டால் கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும் என்று எதார்த்த நிலையை இளம் பருவத்தினருக்குச் சொல்லிக் கொடுக்காமல் அவளை விட்டால், அவனை விட்டால் வேறு கதி இல்லை என்று காதலர் தினக் கொண்டாட்டங்களின் போதும் மற்ற நேரங்களிலும் இளைய சமுதாயம் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். லைலா – மஜ்னு, அனார்கலி – சலீம் என்ற பைத்தியக்காரர்களை முன்னுதாரண்மாக எடுத்துக்காட்டி மதி மயக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே தான் காதலித்தவள் தனக்குக் கிடைக்காவிட்டால் அவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறி ஒருவனுக்கு ஏற்படுகிறது.

அவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி என்ற யதார்த்த நிலை சொல்லிக் கொடுக்கப்பட்டால், கட்டாயம் ஒருதலைக் காதல் கொலைக்கு வழியே இருக்காது.

இது இன்றைய இந்தியாவுக்கு சிறந்த தீர்வாகும்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித நேயம் என்ற பெயரில் மரண தண்டனை கூடாது என்ற கோஷத்தை சிலர் முன்னெடுப்பதைப் பார்க்கிறோம்.

சட்டத்தின் பிடி கடுமையாக இருந்தால்தான் குற்றமிழைப்பவர்கள் உள்ளத்தில் அது கலக்கத்தையும் கவலையையும் பாதிப்பையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தும். குற்றங்கள் குறைந்து விடும்.

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்

அல்குர்ஆன் 2:179

—————————————————————————————————————————————————————-

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்

நம்பியோரை காப்பாரா நாகூரார்?

நாகூர் இப்னு அப்பாஸ்

இஸ்லாத்தின் கருத்துக்களை ஏந்தி நிற்கின்ற பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வருகின்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு எதிரான பாடல்கள் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம்.

“நானிலம் போற்றிடும் நாகூரார்” என்று துவங்கும் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை இப்போது காண்போம்.

“நானிலம் போற்றிடும் நாகூரா

உம்மை நம்பி வந்தேன் திரு நபி பேரா”

உலகமே போற்றிடும் நாகூராரை தனது காரியங்கள் அனைத்திற்கும் பொறுப்பு சாட்டி  அவரையே நம்பி, அவரையே சார்ந்திருப்பதாகவும், நாகூரார், நபி (ஸல்) அவர்களின் பேரன் என்றும் இந்த பாடலின் முதல் வரியில் பாடுகின்றார்.

இதுபோன்ற கவிதை வரிகளைத் தயாரிப்பதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை அறிவுகூட தனக்கு இல்லை என்பதை இந்த கவிஞர் நிரூபித்திருக்கின்றார்.

இஸ்லாத்தின் அடிப்படையைப் பொறுத்த வரையில் நமது அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டி அவனையே நம்பி சார்ந்திருக்க வேண்டும். இந்த அந்தஸ்தை அவனல்லாத யாருக்கும் வழங்கிவிடக் கூடாது.

அவ்வாறு வழங்குவது அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலாகும்.

எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன் நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.

அல்குர்ஆன் 11:56

என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!’’ என்று மூஸா கூறினார்.

அல்குர்ஆன் 10:84

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்‘’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:51

உங்களில் இரு குழுவினருக்கும் அல்லாஹ் உதவுபவன் என்ற நிலையில் அவ்விரு குழுவினரும் கோழைகளாகிட எண்ணினர். நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் 3:122

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் 64:13

அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்

அல்குர்ஆன் 14:12

இத்துனை வசனங்களும் அல்லாஹ்வையே நம்ப வேண்டும், அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றன்.

இவைகளுக்கு மாற்றமாக நாகூர் மீரானைத் தான் நம்பிச் செல்வதாக இப்பாடலில் தெரிவிக்கின்றார்.

இது இறைவனது அந்தஸ்தை நாகூராருக்கு வழங்கும் அப்பட்டமான இணைவைப்பாகும்.

மேலும், இப்பாடல் வரியில் கூடுதல் தகவலாக நாகூர் மீரான நபி (ஸல்) அவர்களின் வழியில் வந்த பேரனாவார் என்று தெரிவிக்கின்றார்.

நாகூர் மீரான் நபி (ஸல்) அவர்களின் பேரன் என்பதற்கு என்ன ஆதாரம்? எந்த வழியில் இவர் பேரனாக இருக்கின்றார் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது.

நபி (ஸல்) அவர்களின் வழிதோன்றலாகிய நாகூர் மீரானைத் தானே நாங்கள் நம்பியிருக்கின்றோம் இதில் என்ன தவறிருக்கிறது என்ற அர்த்தமற்ற வியாக்கியானத்துக்காக இவ்வாறு சொல்கின்றார் போலும்.

நபி (ஸல்) அவர்களாக இருந்தால் கூட அல்லாஹ்வின் அந்தஸ்தை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப் பேற்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 33:3

ஏக இறைவனை) மறுப் போருக்கும் நயவசகருக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் தொல்லைகளை அலட்சியப் படுத்துவீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 33:48

இவ்வாறிருக்க நபி (ஸல்) அவர்களின் குடும்பத் தாரில் ஒருவரைச் சார்ந்திருப்பது அர்த்தமற்றதாகும்.

இன்னும் இப்பாடலின் மற்றொரு வரி

“திக்குத் திசை பணியும் தெய்வீக மீரா”

உலகமே பணிகின்ற தெய்வமாக நாகூர் மீரான் திகழ்வதாக பாடலின் இந்த அடி கூறுகிறது.

அனைத்து பலவீனங்களையும் சுமந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்ற ஒரு மனிதன் அவர் மரணித்து ஆண்டுகள் பல ஓடி விட்டது.

அத்தகைய உடல், உலகமே பணிகின்ற தெய்வம் என்று கூறி இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் வரிகளைக் கொண்டிருக்கிறது இப்பாடல்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் 13:15

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.

அல்குர்அன் 16:49

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரி னங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமா னோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்’’ என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவ னுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

அல்குர்ஆன் 22:18

அகிலத்தார் அனைவரும் அல்லாஹ்வுக்கே பணிய வேண்டும் என்று இவ்வசனங்கள் கூற இந்தப் பாடலோ அல்லாஹ்வுக்குப் பணிய வேண்டாம் நாகூராருக்குப் பணியுங்கள் என்று எடுத்துரைக்கிறது.

திருமறைக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் அல்லாஹ் அல்லாத எவ்விதக் கடவுளும் இல்லை என்று சொல்ல, நாகூர் மீரானை தங்களது கடவுளாக கற்பனை செய்கின்றனர் தர்காவாதிகள்.

அல்லது அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு வேறு கடவுள் உண்டா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அல்குர்ஆன் 52:43

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

அல்குர்ஆன் 35:3

அல்லாஹ் அல்லாத கடவுள் உண்டா? என்ற இறைவனின் கேள்விக்கு ஆம் எங்கள் நாகூரார் இருக்கின்றார். அவர் அருள் புரிவார் என்று இப்பாடல் வரிகளின் வாயிலாக பதிலுரைக்கின்றார்.

அடுத்து இப்பாடலின் மற்றொரு வரியில் “அடியேனெனக்கிரங்கும் அண்ணலே மீரா” என்று வருகிறது.

அவர் அடியார்கள் அழைத்தால் அவர்களுக்காக இரங்கி, அருள் புரிகின்றார் என்ற கருத்தை இவ்வரி தருகின்றது.

இறந்தவர்களுக்கும் உயிருடன் உலகில் வாழுபவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை  உள்ளது.

அல்குர்ஆன் 23:99,100

இவ்வாறு இந்தப் பாடலிலும் இதுபோன்ற இன்னும் பல பாடல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாகூர் ஹனிஃபா பாடியிருக்கின்றார்.

சமாதி வழிபாட்டை ஆதரித்து பல பாடல்களை அரங்கேற்றிய நாகூர் ஹனிஃபா “பொன் மொழி கேளாயோ, நபிகளின் பொன் மொழி கேளாயோ” என்ற பாடலின் ஒரு வரியில் “வீழ்ந்து சமாதி முன் பூஜைகள் செய்வதை விட்டொழி என்றுரைத்தார்” என்றும் பாடியிருக்கின்றார்.

இப்பாடலில் ஏகத்துவத்தின் அடிப்படை சித்தாந்தத்தை விதைத்து விட்டு, ஏனைய பல பாடல்களில் ஏகத்துவத்திற்கு வேட்டு வைக்கும் விஷம கருத்தை பாடுவதேனோ?

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல் தொடர்: 43

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு கப்ரு வணங்கிகள், நபியவர்களே ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள், ஜியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள்! நபியவர்கள் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் உயிரில்லாத ஒருவரையா சந்திக்கச் சொல்வார்கள்? உயிருடன் உள்ளவர்களைத்தானே சந்திக்க சொல்வார்கள்? எனவே கப்ரைச் சந்தியுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்தே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நாம் சொல்வதைச் செவியேற்பார்கள். நமக்கு உதவியும் செய்வார்கள் என்று பைத்தியக்காரத்தனமான ஒரு வாதத்தை வைக்கின்றார்கள்.

ஜியாரத் என்ற சொல்லுக்கு மனிதரைச் சந்திப்பது என்ற குறுகிய அர்த்தம் கிடையாது. அதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி, எக்மோர் சந்திப்பு என்று சொல்கிறோம். இதிலும் சந்திப்பு என்று வந்திருக்கிறது. அதனால் இரயிலை போய் சந்தித்து விட்டு வர வேண்டும் என்று அர்த்தம் கொள்வோமா! ஆனால் இந்தச் சந்திப்புக்கும் அரபியில் ஜியாரத் என்று சொல்லப்படும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகனத்திலும் நடந்தும் குபாவை சந்திக்கச் செல்வார்கள்.

நூல்: முஸ்லிம் 2705

 நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் (கஅபாவை) தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 1732

மேற்கண்ட ஹதீஸ்களில் நபியவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று குபாவைச் சந்திக்கச் செல்வார்கள் என்றும், மினாவில் தங்கும் நாட்களில் கஅபாவை ஸியாரத் செய்தார்கள் என்றும் வந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு இவர்கள் கொடுக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் நபியவர்கள் குபாவிற்கோ, அல்லது கஅபாவிற்கோ சென்று அங்குள்ள பள்ளிவாசலிடம் உரையாடுவதற்குச் சென்றார்கள். அதனிடம் துஆச் செய்தார்கள் என்று அர்த்தம் கொடுப்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விட்டது. துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதற்கு நேரடியாகக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கபுருக்குச் சென்று நாம் சலாம் சொல்வது அவர்களுக்குக் கேட்கும். நபியவர்கள் கப்ரை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம். நமது கோரிக்கையை வைக்கலாம் என்று குருட்டுத் தனமான வாதங்களை வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

யாரேனும் ஒருவர் என் மீது சலாம் சொல்வாரேயானால், அவருடைய ஸலாமுக்கு நான் பதில் சலாம் சொல்வதற்காக வேண்டி அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை (உயிரை) திருப்பித் தருகிறான்.

நூல்: அபூதாவூத் 2043

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இது சரியான ஹதீஸா என்பது ஒருபுறமிருக்க. இதை சரி என வாதிடக்கூடியவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு உரையாற்றும் போது கூறுவார்கள். ஆனால் இந்த ஹதீஸில் ஆழமாகச் சென்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழிப்பார்கள்.

இந்த ஹதீஸ் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் நம்பிக்கையின் பிரகாரம் நபியவர்கள் மரணிக்கவில்லை. இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வருகின்றது.

நாம் சலாம் சொல்லும் போது மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறான் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் நபியவர்கள் பதில் சலாம் சொன்னவுடன் மீண்டும் அல்லாஹ் அவர்களுடைய உயிரைக் கைப்பற்றிக் கொள்கிறான்.

இதில் அவர்கள் பாதியை மறைத்துக் கொண்டு அரையும் குறையுமாக மக்களுக்குச் சொல்வார்கள். பார்த்தீர்களா! நபியவர்கள் உலகில் உள்ள எல்லா மக்களுடைய சலாமிற்கும் பதில் சலாம் சொல்வார்கள். எனவே நபியவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக நம்முடைய நிலைபாடு என்னவென்றால், மேற்கண்ட ஹதீஸ் பல நம்பகமான சரியான ஹதீசுக்கு முரணாக உள்ளது. மேலும் இந்த ஹதீஸில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

அதாவது வேறு ஹதீஸ்களில், நபியவர்களுக்குச் சொல்லப்படும் சலாமையும் சலவாத்தையும் மலக்குமார்கள் எடுத்துக் காட்டுவார்கள் என்று வருகின்றது. ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்படும் அனைத்து சலாமிற்கும் இறைவனால் உயிர் கொடுக்கப்பட்டு பதில் சலாம் சொல்வார்கள் என்று வருகின்றது. அப்படியானால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொருவரும் நபிகள் நாயகத்தின் மீது சலாமும், சலவாத்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நபியவர்கள் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் என்றால் அவர்கள் மரணிக்காமல் இருக்கிறார்கள் என்ற அர்த்தம் வந்து விடும்.

அப்படி இருந்தால் நபியவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் நிலையே ஏற்படாது. எப்போதும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு உயிருடன் தான் இருந்திருப்பார்கள். எனவே இந்த ஹதீஸ் அர்த்தமற்றதாகி விடுகின்றது.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஸலாமுக்குப் பதில் சொல்வதற்காக உயிரைத் திருப்பித் தருகிறான் என்று சொல்வதிலிருந்தே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது உறுதியாகி விடுகின்றது.

இவர்கள் கூறும் அர்த்தத்தை  நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நபிகளார் மரணிக்கவில்லை. மரணிக்கவும் மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகி மரணிக்காத நித்திய ஜீவனாகிய இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதக நிலை ஏற்பட்டு விடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும வணங்கக் கூடாது. அவனைத் தவிர வேறு யாருக்கும்  மறைவான ஞானம் இல்லை. அற்புதம் செய்யும் ஆற்றலும் அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவன் மரணிக்காதவன். நித்திய ஜீவன். அவனைத்த தவிர மற்ற அனைவரும் மரணிப்பவர்களே. அவர்கள் இறைவனின் தூதர்களாக இருந்தாலும் சரியே! இறைநேசர்களாக இருந்தாலும் சரியே! அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விட்டது என்பதைப் பல்வேறு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன்  பார்த்தோம்.

இறுதியாக, இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். நபியவர்கள் பொது மண்ணறைகளைச் சென்று சந்தியுங்கள் என்றார்கள். ஆனால் இவர்கள் இன்று ஒருவரை மகான் என்று தாங்களாகவே சொல்லிக் கொண்டு அவருடைய மண்ணறையைச் சுற்றி ஒரு கட்டடத்தைக் கட்டியிருக்கின்றார்கள்.

நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களுக்கே இல்லாத ஒரு கட்டடத்தை யாரென்று தெரியாத மனிதர்களுக்குக் கட்டி வைத்திருக்கின்றார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இழிசெயலைத் தான் நபியவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். எந்த அளவிற்கென்றால் தான் மரணிக்கப் போகின்ற கடைசிக் கால கட்டத்தில் கூட இதை (இணை வைப்பை) பற்றித்தான் அதிகமாக எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கைகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்,

—————————————————————————————————————————————————————-

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி தொடர்: 5

உலக விஷயங்களும் மார்க்க விஷயங்களும்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற கொள்கையை அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள பல்வேறு கருத்துக்களை நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதால் தூதர் என்ற முறையில் அவர்கள் காட்டிய வழி மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இறைத்தூதர் என்ற முறையில் அல்லாமல் மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை மார்க்கத்தில் அடங்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் இவ்வாறு சாப்பிடவில்லை.

இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்எனக் குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்: முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்: முஸ்லிம் 4356

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது ‘‘இது உடும்பு இறைச்சி’’ என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது ஹராமா?’’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை’’ என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் கருத்து)

நூல்: புகாரி 5391, 5400, 5537

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் தான். எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுவதிலேயே இந்த அளவுகோலை மார்க்கம் வகுத்திருக்கும் போது, இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, மத்ஹபுகளைப் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.