ஏகத்துவம் – அக்டோபர் 2013

தலையங்கம்

கரையும் கடவுள் களங்கமாகும் கடல்

அண்மையில் விநாயகர் சதுர்த்தி என்ற பண்டிகை தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் நடைபெறும்.

ஆனை முகத்தைக் கொண்ட பிள்ளையார் என்ற கடவுள் பிறந்ததையொட்டி நடைபெறும் விழாவுக்குத் தான் விநாயகர் சதுர்த்தி என்று கூறப்படுகின்றது.

ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு கடவுள் கொள்கை உண்டு. கடவுளுக்கு மகன் உண்டு, மனைவி உண்டு என்று நம்பும் மக்கள் விநாயகர் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் கடவுளுக்கு மனைவி மக்கள் இல்லை. எனவே கடவுளுக்குப் பிறந்த நாள் என்பது இஸ்லாத்தில் இல்லை.

அல்லாஹ் ஒருவன்என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன் 112வது அத்தியாயம்

இஸ்லாத்தில் கடவுளுக்கென்று பிறந்த நாள் அல்லது இறந்த நாள் போன்றவை இல்லை. இதனால் பிறரைப் பாதிக்கச் செய்கின்ற பிரச்சனைகளும் இல்லை.

கடவுள் ஒரு குறிப்பிட்ட நாளில் பிறந்தார் என்று நம்பும் மக்கள் அந்த நம்பிக்கையின் காரணமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் அதைக் கொண்டாடினால் அது அவர்களின் உரிமை என்று கருதலாம்.

ஆனால் கடவுளின் பிறந்த நாள் எனும் பெயரில் தங்களுக்கும் பிறருக்கும் கேடுகள் விளைவிக்கும் போது அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் மற்றவர்களுக்கு ஏற்படுகிறது.

பிள்ளையார் என்ற கடவுளை எடுத்துக் கொண்டால் அவருக்குப் பிறந்த நாள் விழா என்றதும் அடுக்கடுக்காக பிரச்சனைகள் அணிவகுத்து வரத் துவங்கி விடுகின்றன.

 1. காற்றை மாசாக்குதல்

ஒரு கடவுள் தன்னுடைய படைப்புகளுக்குச் சுத்தமான, சுகமான காற்றை சுவாசிக்க விட வேண்டும். ஆனால் இந்தக் கடவுளின் பிறந்த நாள் பட்டாசு, வெடி, பறக்கும் புகை மூலம் காற்றை மாசாக்கி விடுகின்றது.

 1. ஒலி மாசு

நிறுவப்பட்ட பிள்ளையார்களின் கூடாரத்தில் கொத்து கொத்தாகக் கட்டப்பட்ட கூம்புக் குழாய்களிலிருந்து புறப்படும் காதைப் பிளக்கின்ற பாட்டு சப்தங்கள்.

யாருடனும் எதையும் பேச முடியாத அளவுக்கு, எதுவும் காதுகளில் கேட்காத அளவுக்கு மனிதர்களின் சுத்தமான, சுவாச ஆதாரங்களான சுற்றுப்புறச் சூழலையே மாசாக்கி விடுகின்றனர்.

 1. போக்குவரத்துப் பாதிப்பு

பிள்ளையார் ஊர்வலமாக வருகையில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி பொதுமக்களின் பணிகளும் பயணங்களும் தடுக்கப்படுகின்றன.

 1. கலவரமாகும் பாதை

பள்ளிவாசல் அமைந்திருக்கும் பாதையில் தான் செல்வேன் என்று அடம்பிடிப்பதுடன், ஊர்வலத்தில் செல்பவர்கள் பள்ளிவாசல், சர்ச்சுகளில் செருப்புகளைத் தூக்கி எறிதல், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் அந்தப் பாதையே கலவரமாகி துப்பாக்கிச் சூடு வரை சென்று உயிர்களைப் பலி கொள்ளுதல்.

 1. பொருள் விரயம்

பல்லாயிரக்கணக்கான பிள்ளையார்களைப் படைத்து அவற்றைக் கொலு வைக்கக் கூடாரம் அமைப்பது, வண்ண வண்ண ரசாயனக் கலவை கொண்டு பூச்சுக்களைப் பூசுதல், பூஜை செய்தல் என்று நாடு முழுவதும் கோடிக்கணக்கில் காசு பணம் கரியாகுதல்.

 1. நீர் நிலைகளை மாசுபடுத்துதல்

நாடு முழுவதும் அபாயகரமான, ஆபத்தான ரசாயனக் கலவை பூசப்பட்ட இலட்சக்கணக்கான சிலைகளை ஆறு, குளங்கள், கடல் போன்ற நீர் நிலைகளில் கொண்டு போய் கரைக்கின்றனர். இதனால் தூய்மையான அந்த நீர்நிலைகள் நாசமாகின்றன. நீர்வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன்கள் பாதிப்படைகின்றன. அந்த மீன்களைப் பிடித்து உண்ணுகின்ற மனித உயிர்கள் பாதிப்படைகின்றன.

இப்படிப் பல்லுயிர்க்கும் பாதிப்பையும் பயங்கர கேட்டையும் விளைவிக்கலாமா? இது நியாயமா?

பொதுவாகப் பெரும் பெரும் நதிகளில் பிணங்களை வீசுவதாலும், எரிக்கப்பட்ட பிணங்களின் சாம்பல்களைக் கரைப்பதாலும் நதிநீர் மாசுபடுகின்றது. கரையோரங்களில் உள்ள கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் மலம், ஜலம் கழிப்பது, பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கூளங்களைக் கொட்டுதல் போன்ற நடவடிக்கைகளால் நதிநீர் பெருமளவு மாசுபடுகின்றது. இது தான் குடிக்கின்ற நீராகவும் குளிக்கின்ற நீராகவும் அமைவதால் மனிதர்கள் பெரும் நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.

உண்மையான கடவுள் மனிதர்களுக்கு மட்டுமல்ல! இதர உயிரினங்களுக்கும் இடையூறு அளிப்பாரா? என்று மனித சமுதாயம் சிந்திக்க மறுக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக கடலில் போய் கவிழ்பவரும், கரைபவரும் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? இவர் எப்படி தனது பக்தர்களைக் காப்பாற்றுவார்?

பிள்ளையார் சிலையைக் கரைக்கப் போன 25 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது இதற்கு நேரடியான, நிதர்சனமான எடுத்துக்காட்டு.

அன்று இப்ராஹீம் என்ற ஓர் இளைஞர் இந்தச் சிலைகளுக்கு எதிரான ஒரு புரட்சியை, ஒரு போரையே நடத்தினார்.

அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக! “எதை வணங்குகிறீர்கள்?” என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்ட போது “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்என்றனர்.

நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?” என்று அவர் கேட்டார். “அவ்வாறில்லை. எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்என்று அவர்கள் கூறினர்.

அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்? என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகளாகும்” (என்று இப்ராஹீம் கூறினார்.)

அல்குர்ஆன் 26:69-77

இவ்வாறு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது சமுதாயத்திடம் சிந்திக்கின்ற வகையிலான கேள்விகளை எழுப்புகின்றார்கள். மக்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அடுத்தக்கட்டமாக, இந்தச் சிலைகளை உடைத்து அவற்றுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றார்கள்.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர்.

நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடு கிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்என்று அவர் கூறினார்.

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்என்று அவர்கள் கூறினர்.

ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்எனக் கூறினர்.

அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்என்றனர்.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

அல்குர்ஆன் 21:51-67

பகுத்தறிவுப் பகலவன் இப்ராஹீம் நபி எழுப்பிய இந்தக் கேள்விகளைத் தான் இவர்களை நோக்கி நாம் கேட்கிறோம். கரைகின்ற கடவுள் எப்படிக் காப்பாற்றுவார்? ஒருபோதும் காப்பாற்ற மாட்டார். இந்தக் கடவுள்களின் பெயரால் நீர், நிலம், காற்று போன்றவற்றை மாசுபடுத்தி மனித குலத்திற்குக் கேடு விளைவிப்பது தான் மிச்சம்.

மக்கள் இதைச் சிந்திப்பார்களா? மாற்றம் காண்பார்களா? ஏக்கத்துடன் எதிர்பார்ப்போமாக!

—————————————————————————————————————————————————————-

தொடர்: 3

பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்

எம். ஷம்சுல்லுஹா

புகாரியில் இடம்பெறும் பல்லி ஹதீஸ் தொடர்பாக அல்ஜன்னத் மாத இதழ் தனக்குத் தானே எப்படி முரண்பட்டது என்பதை விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் அல்ஜன்னத் கட்டுரையாளர் வைத்த வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நாம் எழுப்பிய ஆட்சேபணையை இங்கே நினைவில் புதுப்பித்துக் கொள்வோம்.

இப்ராஹீம் நபி அவர்களைத் தீக்குண்டத்தில் போட்ட போது அந்த நெருப்பை பல்லி ஊதிய காரணத்திற்காகப் பல்லியைக் கொல்ல வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பல்லியை மட்டும் தானே கொல்ல வேண்டும். அநியாயமாக அதன் சந்ததிகளை, பல்லி இனத்தையே ஏன் பழிவாங்க வேண்டும்? ஒரு பல்லி மட்டும் பாவம் செய்திருந்தால், மற்ற பல்லிகள் அந்தப் பாவத்தை எப்படிச் சுமக்க முடியும்?

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.  (அல்குர்ஆன் 35:18)

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை அடிப்படையாக வைத்து இந்த ஆட்சேபணையை நாம் எழுப்பியிருந்தோம்.

அதற்குத் தான் இந்தக் கட்டுரையாளர் பின்வரும் பதிலைத் தருகின்றார்.

ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. சில சமயங்களில், சொற்ப நேரங்களில் ஒருவருடைய செயல்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது தான் இன்னொரு விஷயமாகும். விதிவிலக்காக ஒருசில சமயங்களில் இவ்வாறு நிகழலாம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கான ஒருசில சான்றுகளை இங்கே நான் தருகிறேன்.

2:40 இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவுகூருங்கள். நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மேலும் நீங்கள் எனக்கே அஞ்சுவீர்களாக!

(மேலும் 2:47, 2:63, 2:64 ஆகிய வசனங்கள்)

இங்கே பாருங்கள். உங்களுக்கு நான் செய்த அருட்கொடைகள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் பார்த்து மேலுள்ள வசனங்கள் பேசுகின்றன. ஆனால் அருட்கொடைகளை அனுபவித்ததோ, குரங்காக மாற்றப்பட்டதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதர்களாவர். அவர்களை விட்டு விட்டு அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர்களைப் பார்த்து ஏன் பேச வேண்டும்? செய்தது யாரோ! யாரையோ பார்த்து சொல்லப்படுகிறதே! இது குர்ஆனில் இருக்கும் அம்சம் தான். முன்னோர்கள் செய்த செயலுக்காக பின்னோர்கள் பழிக்கப்படுவதும் உண்டு.

இது கட்டுரையாளர் வைக்கின்ற வாதத்தின் சுருக்கமும் அதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கின்ற குர்ஆன் வசனமுமாகும்.

இவர் தனது விளக்கத்தைத் துவக்கும் போதே, “ஒருவர் செய்ததற்கு இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்’ என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்றார்.

ஒருவர் பாவத்தை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை இவரும் ஒப்புக் கொள்கின்றார். இதைச் சொல்லி விட்டுத் தான் இதில் விதிவிலக்கு இருக்கின்றது என்று வாதிடுகின்றார்.

இஸ்லாம் தனக்கென்று கொள்கை, கோட்பாடுகளை வைத்திருக்கின்றது. அதுபோன்று சட்டங்களையும் வைத்திருக்கின்றது. தான் போட்ட சட்டங்களில் சில விதிவிலக்கை அளிக்கின்றது. உதாரணத்திற்கு, தொழுகை என்பது வயது வந்த ஆண், பெண் இரு பாலருக்கும் கடமையாகும். ஆனால் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் அந்தக் கால கட்டத்தில் தொழ வேண்டியதில்லை என்ற விதிவிலக்கை அளிக்கின்றது. சட்டங்களில் இந்த விதிவிலக்கு உண்டு. ஆனால் கொள்கை, கோட்பாடுகளில், நிலைபாடுகளில் விதிவிலக்கு கிடையாது.

ஏகத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையில் இஸ்லாம் ஒருபோதும் விதிவிலக்கு அளிக்காது. எப்போதும் ஓரிறைவனைத் தான் வணங்க வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணை வைத்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் விதிவிலக்கு அளிக்காது. உயிர் போகும் நிர்ப்பந்தத்தில் கூட உள்ளத்தில் உறுதியான ஈமானுடன் உதட்டளவில் தவறான வார்த்தைகளைப் பிரயோகித்தால் குற்றமில்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு!

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது இதுபோன்ற அடிப்படைக் கொள்கையில் உள்ளதாகும். அதிலும் குறிப்பாக, இது கிறித்தவத்திற்கு எதிரான ஒரு கொள்கை நிலைபாடாகும். இந்தக் கொள்கை நிலைபாட்டில் ஒருபோதும் இஸ்லாம் விதிவிலக்கு அளிக்கவில்லை, அளிக்காது என்ற அடிப்படை அறிவு கூட இந்தக் கட்டுரையாளருக்கு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது அவர் 2:40, 2:63, 64 வசனங்களுக்கு இவர் அளிக்கின்ற அற்புத விளக்கத்தைப் பார்ப்போம்.

இஸ்ரவேலர்களின் முன்னோர்களுக்குச் செய்த அருட்கொடைகளை அவர்களது சந்ததிகளுக்கு இறைவன் சொல்லிக் காட்டுகின்றான். இதுபோல் அவர்களது முன்னோர்களுக்கு அளித்த தண்டனையையும் அவர்களது சந்ததிகளுக்குச் சொல்லிக் காட்டுகிறான். இதை வைத்துக் கொண்டு இப்ராஹீம் நபி காலத்துப் பல்லிக்காக அதன் வாரிசுப் பல்லிகளைக் கொல்லலாம் என்று வினோதமாகவும் விசித்திரமாகவும் வாதிடுகின்றார். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இவருக்குத் தெரியவில்லை.

இஸ்ரவேலர் சமுதாயத்தின் முன்னோôர்கள் நபிமார்களைக் கொலை செய்தார்கள். அந்தக் கொடுஞ்செயலை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களை நோக்கி அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், நாமும் இப்படிச் சுட்டிக் காட்டலாம் என்பது தான்.

முந்தைய இஸ்ரவேலர்கள் நபிமார்களைக் கொலை செய்ததால் அதற்குப் பழிவாங்கும் விதமாக இப்போதைய இஸ்ரவேலர்களைக் கொல்லலாம். இவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்று அல்லாஹ் சொல்லவில்லை.

அன்றைய இஸ்ரவேலர்கள் சனிக்கிழமையன்று வரம்பு மீறி கடலில் மீன் பிடிக்கச் சென்றதால் குரங்குகளாக மாற்றப்பட்டனர். அதுபோல் இன்றைய காலத்து இஸ்ரவேலர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இவ்வாறு யாரும் விளங்க மாட்டார்கள்.

முன்னோர்கள் செய்த தவறுகளை, அவர்கள் பெற்ற தண்டனைகளை படிப்பினைக்காக அவர்களுடைய சந்ததிகளிடம் சொல்லலாம் என்று தான் இதிலிருந்து விளங்க முடியும். இது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல! பொதுவாக மனித சமுதாயத்தினர் செய்த எத்தனையோ தவறுகளை அல்லாஹ் திருக்குர்ஆனில் சுட்டிக் காட்டுகின்றான். அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை திருக்குர்ஆனில் விவரிக்கின்றான். இதற்கும் ஒருவர் பாவத்தை மற்றவர் சுமப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

முந்தியவர்கள் செய்த தவறுக்காகப் பிந்தியவர்கள் விமர்சிக்கப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் கூட இந்தப் பல்லியாளருக்கு விளங்கவில்லை. இப்ராஹீம் நபி காலத்துப் பல்லி செய்த பாவத்திற்கு இப்போதுள்ள பல்லிகளைக் கொல்வதற்கு இது எப்படி ஆதாரமாகும்?

இதை இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும்.

இஸ்ரவேலர்களின் முன்னோர் செய்த பாவத்தை, அவர்களுடைய சந்ததியினரிடம் மட்டும் தான் விமர்சனம் செய்கின்றான். இஸ்ரவேலர் அல்லாத மனித சமுதாயத்தை நோக்கி இந்த விமர்சனத்தைச் செய்யவில்லை.

இதை ஆதாரமாகக் கொண்டு பல்லியைத் தண்டிக்கலாம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், எந்தப் பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியதோ அந்தப் பல்லியின் வாரிசுகளைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள் என்று அந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதா?

ஒரு குறிப்பிட்ட பல்லி ஊதும் போது, அன்று வாழ்ந்த கோடிக்கணக்கான பல்லிகள் இந்தப் பாவத்தில் சம்பந்தப்படவில்லை. அந்தப் பல்லிகளின் வாரிசுகளையும் இந்தப் பாவத்தில் பங்காளிகளாக்கி அவற்றையும் கொல்வதற்கு என்ன ஆதாரம்? இதற்கெல்லாம் பல்லியாளர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

ஒரு ஹதீசுக்கு முட்டுக் கொடுக்கக் கிளம்பிய இவர்கள், ஒருவர் சுமையை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை முட்டித் தள்ளி, தகர்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிறித்தவர்களின் கடவுள் கொள்கைகளில் ஒன்றான முதல் பாவத்தை ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள் என்பதையே இவர்களது இந்த விளக்கம் காட்டுகின்றது.

முதல் பாவத்தின் ஆதரவாளர்கள் வைக்கின்ற இரண்டாவது ஆதாரத்தைப் பார்ப்போம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் நபியவர்களின் மனைவி) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். (நூல்: புகாரி 3330)

இங்கே பார்த்தீர்களா? இன்றைக்கு நாம் இறைச்சியைப் பாதுகாப்பாக வைக்க என்ன பாடுபடுகிறோம்? இந்த இறைச்சி கெட்டுப் போகக் காரணமே நமக்கு முன் வாழ்ந்த அந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். அவர்கள் செய்ததற்காக நமக்குத் தண்டனை? அவர்களுடைய செயலுக்காக நம்முடைய இறைச்சி ஏன் கெட்டுப் போக வேண்டும்? இதிலிருந்து தெரிவது என்ன? சில சமயங்களில் ஒருவருடைய தவறுகள் அடுத்தவரையும் பாதிக்கலாம்.

படைத்த இறைவன், ஒருவர் செய்த தவறுக்காக அவரை மட்டும் தண்டிப்பான். அவன் நாடினால் ஒருவருக்கு அளிக்கும் தண்டனையின் விளைவுகள் காலாகாலம் தொடரும் வகையிலும் செய்வான். அதற்கான அதிகாரமும் ஆற்றலும் அல்லாஹ்வுக்கு மட்டும் உண்டு.

ஆதம் நபி செய்த தவறின் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதால் அவர் மூலம் உருவான மனிதர்களும் அதைச் சுமந்தாக வேண்டும். நாமும் இதன் காரணமாகவே இந்த மண்ணில் வாழ்கிறோம்.

இஸ்ரவேல் சமுதாயம் செய்த ஒரு தவறுக்காக இறைச்சியின் கெட்டுப் போகாத தன்மையை அல்லாஹ் நீக்கி விட்டான். இதனால் காலாகாலத்துக்கும் இறைச்சி கெட்டுப் போகிறது. இது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். இப்படி நாம் செய்ய அதிகாரம் இல்லை.

விபச்சாரம் செய்த பெண்ணைக் கொன்றால் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் கொல்லப்பட்டு விடும். இப்படி செய்யக் கூடாது என்பதற்காக பிரசவித்த பின் அந்தப் பெண்ணுக்குத் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றச் செய்தார்கள்.

தலைமுறை தலைமுறையாக அல்லாஹ் தண்டிப்பது போல் நாமும் செய்ய நமக்கு அனுமதி இல்லை.

ஒரு ஊரை அந்த ஊரின் அநியாயம் காரணமாகத் தண்டிக்கும் போது அநியாயம் செய்யாதவர்களையும் அல்லாஹ் தண்டிப்பான். மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நியாயம் வழங்கும் அதிகாரம் அவனுக்கு உள்ளதால் அவன் இப்படிச் செய்வதை மற்றவர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை பல்லியாளர்கள் கொன்ற பல்லியை உயிர்ப்பிக்கும் அதிகாரம் தம்மிடம் உள்ளதாகக் கருதுகிறார்களோ என்னவோ?

ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமப்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டுவது இவர்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றது.

நமது இந்த வாதத்திற்கு புகாரியில் இடம்பெறும் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதிகளும் இருக்குமே!என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 2118

சண்டையிட வந்தவர்களை பூமி உள்வாங்கலாம்; ஆனால் நல்லவர்கள் எப்படி தண்டிக்கப்படலாம் என்ற நியாயமான கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது, அவர்களின் எண்ணங்களுக்குத் தக்க எழுப்பப்படுவதாகக் கூறுகின்றார்கள். அதாவது கஅபாவைத் தாக்க வந்தவர்கள் மறுமையில் எழுப்பப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்; நல்லவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

விபரமுள்ள, மார்க்க விளக்கமுள்ள எவரும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, நல்லவர்கள் பாவத்தைத் தீயவர்களும் சுமக்கிறார்கள் என்று விளங்க மாட்டார்கள். ஒரு சோதனை என்று வரும் போது அதில் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, ஜாக்கினர் சொல்வது போன்று முதல் பாவத்திற்கு இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

அடுத்து, முதல் பாவ ஆதரவாளர் கூறும் மூன்றாவது ஆதாரத்தைப் பார்ப்போம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில் அவர் தான் முதன்முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.

இங்கே பார்த்தீர்களா? உலகில் யார் அநியாயமாகக் கொலை செய்தாலும் அதிலிருந்து ஒரு பங்கு ஆதம் (அலை) அவர்களுடைய முதல் மகனுக்கு போய்ச் சேருகிறது என்கிறது நபிமொழி. இவர் செய்யும் கொலைக்கு அவர் ஏன் பாவம் சம்பாதிக்க வேண்டும்? இவருடைய பாவம் அவரது தலையில் ஏன் விழ வேண்டும்? இது பொது விதியல்ல. எப்போதாவது இப்படி நிகழ்ந்து விடும் என்பதைத் தான் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பல்லி விஷயமும் அப்படிப்பட்டது தான்.

என்ன அற்புதமான விளக்கம்! எப்படிப்பட்ட அசத்தல் வாதம்! பைத்தியக்காரத்தனமான விளக்கம் அளிப்பதில் இவர்கள் பரேலவிகளை மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.

ஒருவர் ஒரு நன்மையைச் செய்து, அதை மற்றவருக்கு அறிமுகப்படுத்தினால் அதைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேருடைய கூலியும் அவருக்கு வந்து கிடைக்கின்றது. இவ்வாறே தீமையை அறிமுகப்படுத்தியவருக்கு, தீமை செய்வோரின் கூலி போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கின்றது. இதைப் பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல் படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடை முறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.

யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீய நடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4831

விண்டோஸ் எனப்படும் சாப்ட்வேரைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸுக்கு, உலகில் யாரெல்லாம் விண்டோஸ் மென்பொருளை வாங்குகின்றார்களோ அதிலிருந்து ஒரு பங்கு ராயல்டியாகச் சென்று கொண்டேயிருக்கின்றது.

இது போன்று தான் கொலையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதற்காக அதன் ராயல்டி ஆதமின் மகனுக்குப் போய்ச் சேருகின்றது. உலகில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் ஆதமுடைய மகன் முன்மாதிரியாக இருப்பதால் அதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது.

இன்று நடக்கும் கொலையில் ஆதமின் மகனுக்குப் பங்கு என்றால் இந்தக் கொலையாளியின் பாவத்தை அவர் சுமக்கிறார் என்பதல்ல. இந்தக் கொலைக் குற்றத்திற்கான தண்டனை ஆதமின் மகனுக்கு வழங்கப்படவில்லை. கொலையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதற்கான தண்டனை தான் அவருக்கு வழங்கப்படுகின்றது.

கொலை என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆதமின் மகன் செய்த பாவத்திற்குத் தான் இங்கு தண்டனை தரப்படுகின்றதே தவிர இன்று நடக்கும் கொலைக்கான பாவத்தை ஆதமின் மகன் சுமக்கவில்லை.

இது எப்படி ஒருவர் சுமையை மற்றவர் சுமப்பதாக ஆகும்?

இப்ராஹீம் நபியின் தீக்குண்டத்தை ஊதிய பல்லிக்கும் அதன் சந்ததிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருந்தும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி சம்பந்தப்படுத்தியிருக்கின்றார் என்றால் இவர் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற ஆசாமி என்பது இதில் புலனாகின்றது. அதனால் தான் ஜாக் இவரைத் தந்திரமாகக் காலை வாரிவிட்டது.

இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் உங்களையே சாரும். (புகாரி 6)

இங்கே சற்று சிந்தித்துப் பாருங்கள். உம்முடைய குடிமக்களுடைய பாவமும் உம்மைச் சாரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள். குடிமக்களுடைய பாவத்திற்கு மன்னர் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர்களுடைய சுமையை இவர் எப்படிச் சுமக்க முடியும்? இதெல்லாம் விதிவிலக்கான சட்டங்கள் என்பதைப் புரிந்து கொண்டால் எந்த ஹதீஸையும் நிராகரிக்கின்ற நிலை ஏற்படாது.

மன்னர் இஸ்லாத்தை ஏற்காததற்கான பாவமும், அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லப்பட்டும் அதை மக்களிடம் சொல்லாமல் சத்தியத்தை மறைத்த பாவமும் சேரும் என்பதைத் தான் இங்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மன்னருக்கு நேர்வழியை எடுத்துரைக் கின்றார்கள். அதை மன்னர் ஏற்றுக் கொண்டால் அவர் மூலம் குடிமக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். எனவே இரு மடங்கு கூலி கிடைக்கும் என்று கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் அழைப்பைப் புறக்கணித்து, அதை மக்கள் மத்தியில் சொல்லாமல் விட்டு விடும்போது மக்கள் நேர்வழிக்கு வருவதைத் தடுத்த பாவத்தை மன்னர் செய்கின்றார். இது மன்னர் செய்த பாவம் தானே ஒழிய மக்கள் செய்த பாவம் அல்ல. இதைத் தான் குடிமக்களின் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

குடிமக்கள் செய்யும் பாவத்தை மன்னர் சுமக்கின்றார் என்று சொல்லி விட்டாலே, ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்ற கோட்பாடு அடிபட்டுப் போய்விடுகின்றது. இதில் விதிவிலக்கு எங்கே இருக்கின்றது?

அப்படியானால் ஈஸா நபி குறித்து கிறித்தவர்கள் சொல்வதையும் விதிவிலக்கு என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.  (அல்குர்ஆன் 16:25)

இந்த வசனத்தின்படி தன் குடிமக்களை வழிகெடுத்ததற்குரிய பாவத்திற்கு மன்னர் நேரடிக் காரணமாகின்றார். இதனால் குடிமக்களின் பாவம் மன்னரைப் போய்ச் சேருகின்றது.

இப்படி நேரடியாகச் சம்பந்தப்பட்ட பாவத்தை, சம்பந்தமில்லாமல் அடுத்தவர் பாவம் என்று எழுதினால் என்ன அர்த்தம்? இந்த ஆசாமிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பது தான்.

அவர்கள் பேசினால் நாமும் பேசுவோம் என்று வீர வசனமெல்லாம் சத்தான வாதத்தை வைத்து விட்டுத் தான் சொல்ல வேண்டும். சொத்தை, சொதப்பல் வாதங்களை வைத்து விட்டு எகத்தாளமான வசனங்கள் வேறு!

பல்லி தொடர்பாகத் துள்ளிக் குதிக்கும் இந்த மேதாவி, நாம் எழுப்பிய கேள்விகளில் “ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது’ என்ற கேள்விக்கு மட்டும் சொத்தை வாதங்களைக் கொண்டு பதில் சொல்லியிருக்கின்றார்.

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது எனும் ஹதீஸ் தொடர்பாக எழுத்து வடிவிலும், உரைகள் வாயிலாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம். அவை அனைத்திற்கும் இவர் பதில் சொல்லவில்லை. அவற்றை இங்கே பட்டியலிடுகின்றோம்.

 1. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன. (அல்குர்ஆன் 13:15)

“வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்” என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான். (அல்குர்ஆன் 22:18)

உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு முரணாகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?

 1. சாதாரணமாக அண்டாவுக்குக் கீழ் எரிகின்ற நெருப்புக்கு அருகில் மனிதனே அண்ட முடியவில்லை எனும் போது இத்தனை சிறிய அற்பப் பிராணி, ஆர்ப்பரித்து எரியும் அத்தனை பெரிய நெருப்புக் குண்டத்திற்கு அருகே வந்தால் அது அனல் சுவாலைகளில் பஸ்பமாகப் பொசுங்கியிருக்காதா? ஒரு பெரிய மரக்கடை அளவில் எரிபொருள் போடப்பட்டு, எரிகின்ற தீக்குண்டத்தில் இவ்வளவு சிறிய விரக்கடை அளவுக்கு உள்ள பல்லி என்ன சாதித்து விடப் போகின்றது?
 2. இப்ராஹீம் நபி தீக்குண்டத்தில் போடப்பட்டதும் உடனே, மறுகணமே, “நீ குளிர்ந்து, இப்ராஹீமுக்குப் பாதுகாப்பாக ஆகிவிடு’ என்று நெருப்புக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இதை 21:69, 70 வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படியானால் பல்லி எப்போது போய் ஊதியது?
 3. நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊத வேண்டுமெனில் அதற்கு முன்கூட்டியே அந்த சதித்திட்டம் பற்றி ரகசிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் மறைவான ஞானம் அந்தப் பல்லிக்கு இருந்ததா?
 4. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பல்லி தீங்கிழைக்கக் கூடியது!என்று சொன்னார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1831

“நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது, அதனால் அதைக் கொல்லுங்கள்’ என்ற செய்தி மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு முரண்படுகின்றதே! இதற்கு விளக்கம் என்ன?

ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை நாம் ஆதாரமாகக் காட்டும் போது, இந்தப் பல்லியாளர்கள் நஸயீயில் இடம்பெறும் ஒரு ஹதீஸைக் காட்டி இதன் நிலை என்ன? என்று கேட்கலாம்.

ஒரு பெண்மணி ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார். அப்போது அவர்களிடம் ஒரு குச்சி இருந்தது. இந்தக் குச்சி எதற்கு? என்று அப்பெண்மணி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, “இது பல்லியைக் கொல்வதற்காக!என்று பதிலளித்தார்கள். “(பல்லி என்ற) இந்தப் பிராணியைத் தவிர அனைத்துமே இப்ராஹீம் நபியின் நெருப்பை அணைத்தனஎன்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனால் அதைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப், நூல்: நஸயீ 2789

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ள ஹதீஸ் தான்.

பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியது தொடர்பான புகாரி ஹதீஸை நாமாவது குர்ஆனுடன் மோதுகின்றது என்பதால் ஒதுக்கி வைக்கின்றோம். இதற்காக ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று நம்மை நோக்கி விமர்சனம் செய்யும் இவர்கள், ஒரு ஹதீஸை ஏற்று, மற்றொரு ஹதீஸை ஏற்க மறுக்கின்றனர்.

பல்லியைக் கொல்ல வேண்டும் வருகின்ற ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, மேலே நாம் சுட்டிக்காட்டிய புகாரி 1831வது ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

பல்லி சம்பந்தமாக நஸயீயில் வருவது போன்று தன்னையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வருவதை அறிந்து கூட ஆயிஷா (ரலி) அவர்கள் அதற்கு மறுப்பாக, புகாரி 1831ல் இடம் பெறும் செய்தியைக் குறிப்பிட்டிருக்கலாம். இந்த இரண்டு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும் போது இப்படித் தான் முடிவுக்கு வரமுடியும்.

ஆனால் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, புகாரி 1831 ஹதீஸை இவர்கள் தான் முற்றிலுமாக நிராகரிக்கின்றனர்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் நாம் பலமுறை கட்டுரைகள், உரைகள் வாயிலாக எழுப்பிய கேள்விகள். இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல், ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார் என்ற வாதத்திற்கு மட்டும் பதில் என்ற பெயரில் கிறித்தவர்களின் முதல் பாவக் கொள்கையை ஆதரித்து எழுதிய இந்த மேதாவியின் கருத்தை அல்ஜன்னத்தே ஏற்றுக் கொள்ளவில்லை. இவரின் இந்த விளக்கங்களை முட்டித் தள்ளிவிட்டு, இந்த ஹதீசுக்கு முட்டுக் கொடுக்க வந்த ஜாக்கின் பேரறிஞர்கள், “திட்டமிடாமல் யதார்த்தமாக அந்தப் பல்லி செய்திருக்கலாம்’ என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

திட்டமிடாமல் என்றால் அது ஒரு விவகாரமே கிடையாது. ஆனால் பல்லி திட்டமிட்டுச் செய்ததாகத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. அதனால் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற காரணமும் சொல்லப்படுகின்றது.

இந்த ஹதீஸை நிலைநிறுத்த இவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் எதுவுமே செல்லுபடியாகவில்லை என்பதை அவர்களே உணர்ந்து கொண்டார்கள். அதன் பின்னரும் இந்த ஹதீசுக்கு முட்டுக் கொடுத்து, இதனுடன் மோதும் மற்ற ஹதீஸ்களையும் திருக்குர்ஆன் வசனங்களையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் மறுக்கின்றார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் மோதுகின்றார்கள் என்று தான் பொருள்.

மொத்தத்தில் நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது என்று சொல்லும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் மேற்கண்ட காரணங்களால் அது பலவீனமானது, நாம் அறியாத விதத்தில் அறிவிப்பாளர் வரிசையில் ஏதோ குறையிருக்கலாம் என்று கருதி அதை நிறுத்தி வைப்பது தான் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் இணக்கமான முடிவாகும். இதை இவர்கள் புரிந்து கொள்வார்களா?

—————————————————————————————————————————————————————-

இறைச்செய்திகள் இப்போதும் வருமா?

மனிதன் சீர் பெற்று சிறப்பாக வாழ்வதற்குக் கடவுள் நம்பிக்கை முக்கிய  காரணமாக இருக்கின்றது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இந்த உண்மையை மறுக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு எல்லா பித்தலாட்டங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று பலர் தவறாக நினைக்கும் அளவுக்கு கடவுளின் பெயரால் போலி ஆன்மீகவாதிகள் பல பித்தலாட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதால் கடவுளை நம்பச் சொல்வதுடன் கடவுள் பெயரால் மற்றவர் எவரும் ஆட்டம் போட முடியாத அளவுக்கு அதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்து விடுகின்றது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உரிய தனிச் சிறப்பாகும்.

இன்றைக்கு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டம் இஸ்லாத்தின் இந்தத் துôய்மையைப் பாழ்படுத்தி மற்ற மதங்களைப் போல் இஸ்லாத்தையும் மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதை அல்லாஹ் ஒரு போதும் நடக்க விடமாட்டான்.

நம் சமுதாயத்தில் பலர் வேறு மதங்களிலிருந்து புதிதாக இஸ்லாத்திற்கு வந்த காரணத்தாலும் வேறு சமூக மக்களுடன் கலந்து வாழ்வதாலும் அந்த மதங்களிலுள்ள அனைத்து விஷயங்களும் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்ற நோய் இவர்களுக்குப் பிடித்திருக்கின்றது.

இதனால் இவர்களின் செயல்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் சுட்டிக் காட்டி, பாமர மக்களை தங்களின் வழிகெட்ட கொள்கையின்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சந்தனக் கூடு என்ற பெயரில் தேர் இழுப்பு நிகழ்ச்சி, கப்ரு ஸியாரத் என்ற பெயரில் கல் வழிபாடு, உரூஸ் என்ற பெயரில் திருவிழாக்கள், மவ்லூத் என்ற பெயரில் பஜனைப் பாடல்கள், கத்தம் பாத்திஹா என்ற பெயரில் திதி செய்தல் இப்படி இவர்கள் இஸ்லாத்தில் புகுத்திய அனாச்சாரங்கள் ஏராளம்.

சிலை வழிபாட்டுக்காரர்களை விட இவர்கள் தான் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மிக ஆபத்தானவர்கள். ஒருவன் சாராயத்தை சாராயம் என்று சொல்லி விற்கிறான். மற்றொருவன் இது சர்பத் என்று சொல்லி சாராயத்தை விற்கிறான். இந்த இரண்டு பேரும் பாவிகள் என்றாலும் சர்பத் என்று சொல்லி விற்பவன் மற்றவனை விட படுமோசமானவன் என்பதை அனைவரும் அறிவோம்.

இது போன்றே இஸ்லாம் மண்ணுக்குள் புதைத்துவிட்ட, வழிகெட்ட கொள்கைகளை இவர்கள் தோண்டி எடுத்து இஸ்லாத்தின் பெயரால் பரப்பும் வேலையில் தற்போது ஈடுபடுகின்றனர். இந்தக் கட்டுரையில் இவர்களின் ஒரு வழிகேடான கருத்து குறித்து விரிவாக அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

அல்லாஹ் அவ்லியாக்களிடம் பேசுவானா?

அவ்வலியாக்கள் என்று இவர்கள் சிலரை குறிப்பிடுகின்றனர். அவர்கள் உண்மையில் அவ்லியாவா? இல்லையா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். இத்தகையவர்களிடம் அல்லாஹ் அசரீரி (சப்தம்) மூலமாக பேசுவான் என்ற வழிகெட்ட கொள்கையைக் கூறுகின்றனர். இதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாக வாதிடுகின்றனர்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 42:51)

இந்த வசனத்தில் மூன்று முறைகளில் அல்லாஹ் மனிதனிடம் பேசுவதாக கூறுகிறான். வஹீ மூலம் என்றால் தான் விரும்பும் கருத்தை உள்ளத்தில் அல்லாஹ் வெளிப்படுத்திவிடுவான். திரைக்கு அப்பால் இருந்து என்றால் அல்லாஹ்வைப் பார்க்காமல் அவனது சப்தத்தை மட்டும் கேட்கும் வகையில் பேசுவான். தூதரை அனுப்பி என்றால் வானவரை அனுப்பி அந்த வானவர் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கூறுவார்.

அல்லாஹ் திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் பேசுவதாகக் கூறுகிறான். இது அசரீரி முறையில் பேசுவதாகும். எனவே அல்லாஹ்வின் அசரீரியை அவ்லியாக்கள் கேட்பார்கள் என்று கூறுகின்றனர்.

இந்த வசனத்தைச் சரியான அடிப்படையில் சிந்தித்தால் இவர்கள் இஸ்லாத்தின் ஆணிவேரையே  பிடுங்கி எரியும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டனர் என்பதை அறியலாம். அவ்லியாக்களுக்கு (?) வக்காலத்து வாங்கி அல்லாஹ்வின் வசனத்தை திரித்துக் கூறும் யூத வேலையைச் செய்கின்றனர்.

இந்த வசனத்தில் அல்லாஹ் அசரீரி மூலம் பேசுவதை மட்டும் சொல்லவில்லை. இதனுடன் தான் விரும்பும் நபரின் உள்ளத்தில் தான் நாடியதைத் தோன்ற வைப்பது, வானவரை அனுப்பி அவர் மூலம் தெரிவிப்பது என்ற மேலும் இரண்டு விஷயங்களையும் சேர்த்துக் கூறுகிறான்.

எனவே இந்த அசத்தியவாதிகள் நபிமார்களிடத்தில் ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வந்தது போல் அவ்லியாக்களிடத்திலும் (?) வானவர்கள் வருவார்கள் என்று சொல்வார்களா?

நபிமார்களின் உள்ளத்தில் அல்லாஹ் தான் விரும்பிய கருத்தை ஏற்படுத்தியது போல் அவ்லியாக்களின் (?) உள்ளத்திலும் தான் விரும்பியதை ஏற்படுத்துவான் என்று சொல்வார்களா?

அவ்லியாக்களை (?) அல்லாஹ்வுடைய இடத்திலும் நபிமார்களின் இடத்திலும் உயர்த்துவது ஒன்றே இவர்களின் ஒரே கொள்கையாக இருப்பதால் இவ்வாறு இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவர்கள் கூறும் இந்த கருத்தை இந்த வசனத்தின் ஆரம்பமே நிராகரித்து விடுகின்றது.

“எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை”

அல்லாஹ் மனிதர்கள் யாரிடமும் பேசமாட்டான் என்று தெள்ளத் தெளிவாக அல்லாஹ் முதலில் கூறுகிறான். இது தான் அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள பொதுவான விதியாகும். இதனடிப்படையில் அவ்லியாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அல்லாஹ் பேசமாட்டான் என்பது தெளிவாகின்றது.

பொதுவான இந்த விதியிலிருந்து நபிமார்களுக்கு மட்டும் அல்லாஹ் விதிவிலக்குத் தருகிறான். அல்லாஹ் மனிதரிடம் பேசுவதற்குரிய மூன்று முறைகளை இதன் பின் குறிப்பிடுகிறான். இந்த மூன்று முறைகளிலும் நபிமார்கள் அல்லாமல் வேறு யாரிடமும் அல்லாஹ் பேசமாட்டான்.

இந்த வசனத்தைத் தொடர்ந்து அல்லாஹ் இந்த மூன்று முறைகளில் நபிக்கு வஹீ அறிவித்ததாகக் கூறுகிறான்.

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு (வஹீயாக) அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.

அல்குர்ஆன் (42:52)

நபிமார்களுக்கு அறிவிக்கும் வஹீயைப் பற்றியே அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான் என்பதை அல்லாஹ் அடுத்த வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். “இவ்வாறே நபியே உமக்கு அறிவித்தோம்’ என்ற இறைவனின் கூற்று இதை உறுதிப்படுத்துகின்றது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட இந்த வசனத்தை சுட்டிக்காட்டியே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. திரைக்கு அப்பால் இருந்தே அல்லாஹ்வுடன் உரையாடினார்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ் யாரிடத்திலும் தேவையில்லாமல் பேசமாட்டான். மனித குலத்திற்கு எந்த வழிகளைக் காட்ட வேண்டும் என்று அவன் விரும்புகின்றானோ அந்தச் செய்திகளை ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நபிமார்களிடம் அல்லாஹ் பேசினான். நபிமார்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு இதுவல்லாத வேறு எந்தக் காரணமும் இல்லை.

தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பான் என்றால் அவன் அறிவித்ததை ஒன்றுவிடாமல் உடனே மக்களுக்கு எத்தி வைக்கும் கடமை அறிவிக்கப்பட்டவருக்கு உள்ளது. இதைச் சரியாக செய்யாவிட்டால் இறைவனுடைய தண்டனை உடனே வந்துவிடும். இந்தக் கடமை நபி அல்லாத வேறு யாருக்கும் இல்லை. அவ்வாறு இறைவனிடமிருந்து மக்களுக்கு எத்தி வைப்பதால் தான் அவரை ரசூல் (தூதர்) என்றும் நபி (அறிவிப்பவர்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இந்தக் கருத்தை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். (அல்குர்ஆன் 72:26)

எனவே மேற்கண்ட வசனம் நபிமார்களிடத்தில் அல்லாஹ் பேசும் வஹீயை பற்றியே கூறுகின்றது. பொதுவாக இறைநேசர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் அல்லாஹ் இம்முறைப்படி பேசுவான் என்று இந்த வசனம் கூறவில்லை.

நபி அல்லாதவருக்கு வந்த வஹீ

மர்யம் (அலை), மூசா நபியவர்களின் தாயார் மற்றும் ஹாஜர் (அலை) ஆகிய மூன்று பெண்களிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்போர்கள் இதைத் தங்களுக்குரிய ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

மர்யம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பி பேசியுள்ளான்.

அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று (மர்யம்) கூறினார். “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்என்று அவர் கூறினார். “எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார்.

அப்படித் தான்என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.)

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார். “கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். “பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)

அல்குர்ஆன் (19:23)

இது போல் மூசா (அலை) அவர்களின் தாயாரிடமும் அல்லாஹ் பேசியுள்ளான்.

அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! “இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்” (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.

அல்குர்ஆன் (20:38)

அல்லாஹ் வானவரை அனுப்பி அன்னை ஹாஜர் (அலை) அவர்களிடமும் பேசியுள்ளான்.

பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, “சும்மாயிருஎன்று தமக்கே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே அவர்கள், “நீ என்னை கேட்கச் செய்துவிட்டாய். உன்னிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்று)என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள்……..

அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்என்று சொன்னார்.

நூல்: புகாரி (3364)

அல்லாஹ் நபித்துவத்திற்காகவும் நபிமார்களுக்காகவும் பிரத்யேகமாகச் செய்த ஏற்பாட்டை இவர்கள் அனைத்து நல்லடியார்களுக்கும் பொதுவாக்க முயல்கிறார்கள்.

மர்யம் (அலை), மூசா நபியின் தாயார், ஹாஜர் (அலை) ஆகிய மூவரும் நபிமார்களின் தாயார் ஆவார்கள்.

ஈசா (அலை) அவர்களின் பிறப்பை அல்லாஹ் அற்புதமாக்க விரும்புகிறான். இந்த விஷயத்தில் மர்யம் (அலை) அவர்களின் பங்களிப்பு அவசியம் என்பதால் அவர்களிடம் வானவரை அனுப்பி தன் கட்டளையைக் கூறுகிறான்.

இது போன்று மூசா (அலை) அவர்கள் பிறந்தவுடன் அவரை ஃபிர்அவ்ன் கொலை செய்துவிடலாம் என்பதால் அந்த நபியைப் பாதுகாக்கும் ஏற்பாட்டைச் செய்யுமாறு அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் கூறினான்.

இது போன்று அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் ஆளில்லாத பாலைவனமாக இருந்த மக்காவில் அல்லாஹ்வின் உத்தரவுப்படி தனியே விடப்பட்டார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் நபி என்பதாலும் அவர்களின் மூலம் இறைவன் மக்காவில் மனித குலத்தைப் பெருக்க நாடியதாலும் அவர்களை பாதுகாக்கும் ஏற்பாட்டை இறைவன் செய்தான். இதற்காக இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரிடம் அல்லாஹ் பேசினான்.

ஆக இந்த மூன்று நிகழ்வுகளிலும் இவர்கள் இறைநேசர்கள் என்ற காரணத்திற்காக அல்லாஹ் பேசவில்லை. நபிமார்களின் வருகைக்கு இவர்கள் முக்கிய காரணமாக இருப்பதால் தான் நபித்துவ ஏற்பாட்டிற்காக அல்லாஹ் பேசினான்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரும் நபியாக வரமாட்டார்கள். நபியவர்களுடன் நபித்துவம் முற்றுப்பெற்றுவிட்டது. இதற்குப் பிறகு நபியிடமோ நபியை பெற்றெடுக்கும் தாயாரிடமோ அல்லாஹ் பேச வேண்டிய தேவையில்லை.

இந்த மூன்று பெண்மணிகளிடம் அல்லாஹ் பேசினான் என்பதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறிவிட்டான் என்பதால் தான் அதை நாம் நம்புகிறோம்.

ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலை) அவர்கள் இறைநேசர்  தான் என்றாலும்  அவர்களிடம் அல்லாஹ் பேசினானா? என்று கேட்டால் பேசவில்லை என்றே நாம் கூற வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் அல்லாஹ் பேசியதாகத் திருக்குர்ஆன் கூறவில்லை.

ஆசியா (அலை) அவர்கள் விஷயத்திலேயே இவ்வாறு தான் கூற வேண்டும் என்றால் இந்தக் கப்ரு வணங்கிகள் அவ்லியாக்கள் (?) என்று யாரைக் கூறுகிறார்களோ அவர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று எப்படிக் கூற முடியும்?

எனவே மேற்கண்ட நிகழ்வுகளைக் காட்டி தற்போதும் அல்லாஹ் இறைநேசர்களிடம் பேசுவான் என்று கூறுவது இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுப்பதாகும். நபிமார்களுக்கு மாத்திரம் அல்லாஹ் ஏற்படுத்திய பிரத்யேகமான ஏற்பாட்டை மற்றவர்களுக்கும் உண்டு என்று கூறுவதால் இவர்கள் அவ்லியாக்களை (?) நபிமார்களாக ஆக்கிவிடுகின்றனர் என்பதே உண்மை. எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை என்ற நபிகளாரின் கூற்றுக்கு முரணாகவும் இக்கருத்து அமைந்துள்ளது.

இல்ஹாம் என்றால் என்ன?

குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இல்ஹாம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இயல்பாக ஏற்படும் உள்ளுணர்வு என்பது இதன் பொருளாகும்.

அல்லாஹ் அவ்லியாக்களிடம் பேசுவான் என்று கூறுபவர்கள் இல்ஹாம் பற்றிப் பேசும் பின்வரும் செய்தியை தங்களுக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வை) அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3469)

இந்த நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ் அவ்லியாக்களிடம் பேசுவான் என்று கூறுகிறார்கள்.

இல்ஹாம் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தால் தங்களுக்கு எதிரான செய்தியை தங்களுக்கு ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

இல்ஹாம் என்றால் தானாக உணர்தல் என்று பொருள். அந்த உணர்தல் இயல்பானதாக இருக்க வேண்டும்.

மனிதன் பாவமான விஷயங்களையும், தீமையான விஷயங்களையும் யாரும் கற்றுக் கொடுக்காமலேயே உணர்ந்திருக்கின்றான். இதனை இல்ஹாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் உள்ளத்திற்கு அதன் நன்மையையும், தீமையையும் அறிவித்தான்.  (அல்குர்ஆன் 91:7)

மறுமை நாளில் மக்கள் திரண்டிருக்கும் போது அந்நாளின் சிரமத்திலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் நபிமார்களிடத்தில் வந்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு கோரினால் தான் தீர்வு கிடைக்கும் என்று யாரும் அவர்களுக்குக் கூறவில்லை. ஆனால் இது தான் தீர்வு என்பதை அவர்கள் தாங்களாகவே உணர்ந்து செயல்படுவார்கள். இதற்கு இல்ஹாம் என்று சொல்லப்படுகின்றது.

அல்லாஹ் மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்களை ஒன்று திரட்டுவான். (நபிமார்களிடத்தில் சென்று தங்களுக்காக பரிந்துரை செய்யக் கோரும்) உணர்வை அவர்கள் பெறுவார்கள்.

நூல்: முஸ்லிம் (322)

சொôக்கவாசிகள் சொர்க்கத்தில் இறைவனை போற்றிப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். மனிதன் மூச்சு விடுவதைப் போன்று இந்தச் செயலை அவர்கள் செய்துகொண்டிருப்பார்கள். இதுவே அங்கு அவர்களின் இயல்பான எண்ணமாக இருக்கும். இதைக் குறிக்க நபியவர்கள் இல்ஹாம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்க மாட்டார்கள். மூக்குச் சிந்தவும் மாட்டார்கள். சிறுநீர் கழிக்கவும் மாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத் தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக் கொண்டும் போற்றிக் கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத் தூண்டல் ஏற்படும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),  நூல்: முஸ்லிம் (5454)

அல்லாஹ் தேனீக்களுக்கு வஹீ அறிவித்தான் என்பதும் இந்த இல்ஹாம் அடிப்படையில் உள்ளதாகும்.

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்.

அல்குர்ஆன் (16:68)

தேனை எவ்வாறு சேகரிப்பது என்ற வழிமுறைகளை தேனீக்கள் இயல்பாகவே உணர்ந்துகொள்கின்றன. இந்த இயல்புணர்வை ஏற்படுத்தியவன் அல்லாஹ்.

எனவே இயல்பாக மனதில் தோன்றும் எண்ணத்திற்கே இல்ஹாம் என்று சொல்லப்படுகின்றது. இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் முன்பு நாம் சுட்டிக்காட்டிய நபிமொழியில் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ் சிலருக்குச் சரியான முடிவை எடுக்கும் திறனை வழங்குகிறான். அவர்கள் பெரும்பாலான பிரச்சனைகளில் சரியான தீர்வை எடுத்துவிடுவர்.

இவ்வாறு நல்ல தீர்வுகளை எடுக்க வேண்டும் என்று யாரும் அவர்களுக்கு வழிகாட்டாமல் இந்த முடிவுகள் அவர்களின் உள்ளங்களில் இயல்பாகவே தோன்றும். இவர்களைத் தான் நபியவர்கள் முஹத்தசூன்கள் (முல்ஹமூன்கள்) என்று குறிப்பிடுகின்றார்கள்.

இல்ஹாம் எவ்விஷயங்களில் ஏற்படும்?

அல்லாஹ் மார்க்க விஷயங்களை இம்முறைப்படி யாருக்கும் அறிவிக்க மாட்டான். ஏனென்றால் யூகமாக மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மார்க்கத்தை முடிவு செய்ய முடியாது. இந்த வழியில் மார்க்கம் போதிக்கப்பட்டால் எது மார்க்கம்? எது மனோ இச்சை என்பதை பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பம் ஏற்படும். பலர் தங்களுடைய மனோ இச்சைகளை மார்க்கமாகப் போதிக்கும் நிலை ஏற்படும். நுபுவ்வத்திற்குப் பிறகு நபித்துவம் யாருக்கும் இல்லை என்று இஸ்லாம் அடைத்த வாசலை திறந்து வைக்கும் நிலை ஏற்படும்.

எனவே அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்க இல்ஹாம் என்ற முறையை எந்தக் காலத்திலும் தேர்வு செய்யவில்லை. மாறாக இறைவனுடைய கூற்றில் கடுகளவு கூட சந்தேகம் வராமல் இது இறைச்செய்தி என்பதை உறுதியாக உணர்ந்து அதை மக்களுக்கு போதிக்கும் வகையில் தெள்ளத் தெளிவான அறிவிப்பாக நபிமார்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான்.

அல்லாஹ்விடமிருந்து வஹீ வரும் போது, இது வஹீ அல்லாமல் வேறில்லை என்று உணர்த்தும் சில அடையாளங்களையும் ஏற்படுத்தினான். மணியோசை போன்ற சப்தம், கடும் குளிர் உள்ள நாளிலும் வியர்வை வெளிப்படுப்பது இது போன்ற அடையாளங்களின் மூலம் அல்லாஹ் உறுதிப்படுத்தாமல் வஹீ அறிவிக்கமாட்டான்.

மார்க்கத்துடன் தொடர்பில்லாத வேறு விஷயங்களில் தான் நமக்கு முன் நபியல்லாத சிலருக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தினான். இவ்வாறு அவன் ஏற்படுத்திய உள்ளுணர்வுகளைத் தங்களுடைய சுய சிந்தனையாகவே சம்பந்தப்பட்டவர்கள் நினைப்பார்கள்.

பொதுவாக எல்லா மனிதனும் எவ்வாறு யூகிப்பானோ அது போன்று, “இது தான் சரியான தீர்வாக இருக்கும்’ என்ற யூகத்தின் அடிப்படையில் தான் இல்ஹாம் வழங்கப்பட்டவர்களும் செயல்படுவார்கள்.

எல்லா விஷயத்திலும் தவறே செய்யாமல் சரியான முடிவை  அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது. இது அடிப்படையான விஷயம்.

சில மனிதர்களுக்கு அல்லாஹ் இந்தத் திறனைத் தந்திருந்தாலும் அவர்கள் அனைத்து விஷயங்களிலும் இவ்வாறு சரியான முடிவை எடுக்க முடியாது. சில விஷயங்களில் தவறிழைத்து, தானும் மனிதன் என்பதை நிரூபித்துவிடுவார்கள்.

எனவே சரியான முடிவை எடுப்பவர்கள் என்றால் தவறே செய்யாதவர்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது. பெரும்பாலான விஷயங்களில் சரியான முடிவை எடுப்பவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நபிக்குப் பிறகு யாருக்கும் இல்ஹாம் இல்லை

இவ்வாறான உள்ளுணர்வு கொண்டவர்கள் நமக்கு முன்னிருந்த சமுதாயத்தில் இருந்துள்ளனர். இதற்கு நபியவர்களின் தெளிவான வாக்கு மூலம் உள்ளது.

ஆனால் இத்தகையவர்கள் நம்முடைய சமுதாயத்திலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் உமர் (ரலி) அவர்களும் ஒருவர் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவ்வாறு கூறினால் தான் இத்தகையவர்கள் இன்றும் இருக்க வாய்ப்புள்ளது என்று கூற முடியும்.

மாறாக இவ்வாறானவர்கள் என்னுடைய சமுதாயத்தில் இருந்தால் அது உமர் (ரலி) அவர்களாக இருக்கும் என்றே கூறுகிறார்கள். எனவே இத்தகையவர்கள் நம்முடைய சமுதாயத்தில் யாரும் இல்லை. உமர் (ரலி) அவர்கள் கூட இத்தகையவர் இல்லை என்பதையே நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நபிமொழியைப் போன்று பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்என (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 43:81)

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு கூறியதால் அல்லாஹ்வுக்குச் சந்ததிகள் உண்டு என்றும், நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்ததியை வணங்கினார்கள் என்றும் அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள். இது போன்று மேற்கண்ட இல்ஹாம் தொடர்பான நபிமொழியையும் விளங்கிக்கொண்டால் வழிகேடுகள் உருவாகாது.

அல்லாஹ் அவ்லியாக்களிடம் (?) பேசுவான் என்பதற்கு எதை அவர்கள் ஆதாரங்களாகக் காட்டுகின்றார்களோ அந்த வசனங்களும் ஹதீஸ்களும் அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது.

முதலில் இல்ஹாம் என்பது அல்லாஹ் நேரடியாகப் பேசுவதைக் குறிக்காது என்பதால் இவர்களின் வாதம் எடுத்த எடுப்பிலேயே மண்ணைக் கவ்வுகின்றது.

மார்க்க விஷயங்களில் இல்ஹாம் வராது என்பதால் மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக அநாசச்சாரங்களை உருவாக்கும் வாசல் அடைக்கப்படுகின்றது.

இத்தகையவர்கள் நம் காலத்தில் யாருமில்லை. நமக்கு முன்னர் தான் இருந்துள்ளனர் என்பதால் தற்போது இல்ஹாம் என்று கூறிக்கொண்டு யார் கிளம்பினாலும் அவன் பொய்யன் என்பதை இறைத்தூதர் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

மொத்தத்தில் அவ்லியாக்களிடம் (?) அல்லாஹ் பேசுவான் என்ற வாதம் சிக்கல் நிறைந்த வழிகேடான கருத்தாகும்.

நல்ல கனவு

அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு நல்ல கனவை ஏற்படுத்துகிறான். நல்ல கனவுகளின் மூலம் சில நற்செய்திகளை அல்லாஹ் முன்கூட்டியே அறிவிக்கின்றான். இந்த அறிவிப்பு மார்க்கம் தொடர்பில்லாத வேறு விஷயங்கள் தொடர்பாக வரும் நற்செய்தியாகும். ஒருவர், தான் கண்ட கனவு உலகில் உண்மையாகும் போது தான் இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை உணர முடியும்.

நபித்துவத்திற்குப் பிறகு அல்லாஹ்விடமிருந்து மனிதனுக்கு இதைத் தவிர வேறு எந்த அறிவிப்பும் வராது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி), நூல்: புகாரி (6983)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி கூறுகின்றவை (“முபஷ்ஷிராத்‘) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லைஎன்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் “நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் “நல்ல (உண்மையான) கனவுஎன்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6990)

நபித்துவத்திற்குப் பிறகு இறை அறிவிப்பு இல்லை

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற நபித்தோழர்கள் இறைநேசர்கள் என்பதில் இஸ்லாமிய சமுதாயத்தில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் இறைநேசர்கள் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று கூறுபவர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். அவ்லியாக்களிலேயே இவர்கள் தான் சிறந்தவர்கள் என்றும் பின்வந்த எந்த அவ்லியாவும் (?) இவர்களின் இடத்தை அடையவே முடியாது என்றும் கூறுகின்றனர்.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு இறைநேசரிடம் பேசுவான் என்றால் முதலில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களிடம் பேசியிருக்க வேண்டும். சிறந்த அவ்லியாக்களான இவர்களுக்கே இந்த வாய்ப்பு இல்லை என்றால் இவர்களுக்குப் பிறகு வரும் எந்த அவ்லியாவுக்கும் (?) அந்த வாய்ப்பு கிடைக்காது.

உமர் (ரலி) அவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் வஹீ வராது என்ற சரியான கொள்கையிலேயே இருந்தனர். நபித்தோழர்களானாலும் தங்களுக்கும் வஹீ வராது என்றே கூறினார். இதைப் பின்வரும் சம்பவங்களில் அறியலாம்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்)  வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ  வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகின்றாரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; அவரை நம்பவுமாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.

நூல்: புகாரி (2641)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், “ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட)  அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4849)

எனவே அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்ற கூற்று குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் நபித்தோழர்களுக்கும் எதிரானதாகும்.

அல்லாஹ்விடமிருந்து வஹீ வராத நிலையில் வஹீ வந்ததாகக் கூறுவது அல்லாஹ்வின் மீது துணிந்து இட்டுக்கட்டும் பாரதூரமான பாவமாகும். இவர்கள் மிகப்பெரிய அநியாயக்காரார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் “எனக்கு அறிவிக்கப் படுகிறதுஎனக் கூறுபவன், “அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்?

அல்குர்ஆன் (6:93)

மக்களை இணை வைப்பிலும் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகெட்ட கொள்கையிலும் தள்ளுவதற்காக ஷைத்தான் தன்னுடைய கூட்டாளிகளுக்கு வஹீ அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்குர்ஆன் (6:121)

அவ்லியாக்களுக்கு (?) வஹீ வரவில்லை. ஆனால் அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று கூறும் இந்த வழிகேடர்களுக்கு வஹீ வருகின்றது; அந்த வஹீ இவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. இவர்களின் தலைவனான ஷைத்தானிடமிருந்து வருகின்றது.

எனவே தான் இவர்கள் நபிக்குப் பிறகு அவ்லியாக்களிடம் (?) அல்லாஹ் பேசுவான் என்ற ஷைத்தானிய கருத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்லாமிய சமுதாயம் இவர்களை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 6

குடும்பத்தை நாசமாக்கும் விபச்சாரம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிய பின்னர் அதைப் பலர் நாசமாக்கி விடுகின்றனர். இதற்குக் காரணம், ஒரு பெண்ணின் கணவனாக இருந்து கொண்டே தவறாகப் பிற பெண்களிடம் உடலுறவு கொள்வதும், ஒரு ஆணுடைய மனைவியாக இருந்து கொண்டே பிற ஆண்களிடம் உடலுறவு கொள்வதுமேயாகும்.

அதாவது கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையான விசுவாசமானவர்களாக இருப்பதில்லை. உண்மையான விசுவாசிகளாக ஒருவருக்கொருவர் இருந்தால் தான், குடும்ப அமைப்பில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இந்தத் தொடரில் தெரிந்து கொண்டோமோ அவை அனைத்தும் நமக்குக் கிடைக்கும்.

எப்போது ஒருவன் மனைவியல்லாத வேறொரு பெண்ணின் பக்கம் கவனத்தைத் திருப்பி விடுகிறானோ அப்போது அவனுக்கு மனைவி அசிங்கமாகத் தான் தெரிவாள். அதேபோன்று கணவல்லாதவனின் பால் கவனத்தைத் திருப்பிய பெண்ணுக்கு அவளது கணவன் அருவருப்பாகத் தான் தெரிவான்.

கணவன், மனைவியின் மீதும் மனைவி, கணவன் மீதும் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். பார்ப்பதையெல்லாம் ரசிக்க ஆரம்பித்து தட்டுத் தடுமாறினால் கடைசியில் இங்கேயும் மகிழ்ச்சியில்லாமல் அங்கேயும் மகிழ்ச்சியில்லாமல் நாசமாகி விடுகிறார்கள். எனவே கணவன் மனைவி என்ற ஹலாலான முறையிலேயே முழு இன்பத்தையும் ஒருவருக்கொருவர் அடைய முடியும். யாரோ தவறாகச் சொன்னதையெல்லாம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஹராமான முறையில் வேலி தாண்டிச் செல்கின்ற கணவனுக்கோ மனைவிக்கோ எந்த நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் வேலி தாண்டிச் செல்கின்ற போது, மனிதன் என்ற முறையில் கிடைக்கிற அடிப்படையான விஷயங்களில் கூட நிம்மதியை இழக்கிறார்கள்.

அறிவியல் பிரகாரம் கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்பில் பெறும் இல்லறத்தினால் நிம்மதி கிடைக்கிறது. மன உளைச்சலுக்கும் உடற்கூறு பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக இல்லறம் பயன்படுகிறது. ஆனால் வேலி தாண்டிச் செல்கிறவர்களுக்கு அந்த மருந்தே விஷமாக மாறிவிடுகிறது. அதாவது நல்லதைக் கெட்டதாக்கி விடுகிறார்கள்.

மருந்து என்பது நோயைக் குணப்படுத்துவதற்குத் தான். அந்த மருந்தே விஷமாகவும் நோயாகவும் மாறிவிட்டால் அந்த மருந்தைச் சாப்பிடாமலேயே இருந்திருக்கிலாம்.

தாம்பத்தியம் என்ற மருந்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் விஷமாக்கிக் கொண்டார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு தனது மனைவியிடமும் சரியான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது. எந்த வழியில் தவறாக தாம்பத்தியத்தைப் பெறுகிறானோ அங்கேயும் முழுமையான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது. இதே நிலை தடம் மாறிச் செல்கிற பெண்களுக்கும் பொருந்தும்.

எனவே ஒருக்காலும் மனித சமூகம் இதுபோன்று தடம் மாறிச் சென்றுவிடக் கூடாது. பிற சமூக மக்களை விட முஸ்லிம்கள் தடம் மாறிச் செல்லாமல் இருப்பது இலகுவானது தான். ஏனெனில் பிற சமூக மக்களுக்கு இறைநெறி, மறுமை போன்றவைகளில் சரியான நம்பிக்கை கிடையாது. முஸ்லிம்களைப் பொறுத்த வரை அல்லாஹ் நாம் செய்கிற நல்ல, கெட்ட அனைத்து செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அல்லாஹ் பதிவு செய்து வைத்திருப்பதை விசாரிப்பான்; மறுமையில் அதனடிப்படையில் தான் சுவர்க்கமும் நரகமும் தீர்மானிக்கப்படும் என்றெல்லாம் நம்புகிறோம். எனவே இது சம்பந்தமாக இஸ்லாம் என்னவெல்லாம் நமக்குச் கட்டளையிடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் இதுபோன்ற ஷைத்தானியப் பண்புகளிலிருந்து கண்டிப்பாக விடுபட்டுவிடுவோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2475, 5578, 6772, 6782, 6810

விபச்சாரம் செய்கின்ற போது ஒருவன் முஃமினாக இருக்கவே மாட்டான் என்று நபியவர்கள் சொல்லிக் காட்டுகின்றார்கள். அப்படியெனில் விபச்சாரம் செய்கின்ற போது மரணம் வந்தால், நிச்சயமாக அவர் முஃமினாக இருக்கவே முடியாது. மரணிக்கிற போது முஃமினாக இல்லாமல் மரணித்தால் நரகத்திற்குத் தான் செல்வான்.

எனவே விபச்சாரம் செய்யும் ஒவ்வொருவரும், அதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்தச் செய்தியை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். எந்த நிலையிலும் மரணம் வரலாம் என்று மரணத்தை நினைவு கூர்ந்து இதுபோன்ற தவறுகளிலிருந்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஈமானே போய் விடுகிறதெனில் அதை விடப் பெரும்பாவம் வேறொன்றும் இல்லை என்ற கருத்தை இந்தச் செய்திகள் தருகின்றன.

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதுஎன்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப்பெரிய  குற்றம் தான்என்று சொல்-விட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வதுஎன்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 4477, 4761, 6001, 6811, 6861, 7520, 7532

இதில் முதலாவது பெரும்பாவமாக நபியவர்கள் சொன்னதும் ஸஹாபாக்கள் அது உண்மையில் பெரியது தான் என்று எங்களுத்தான் தெரியுமே என்று பதில் சொல்கிறார்கள். எனவே இந்தச் சமூகம் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இணை வைப்பு என்ற மாபாதகச் செயலைத் தான். அடுத்து தன் குழந்தையைத் தானே கொல்வதை நபியவர்கள் கூறினார்கள். மூன்றாவதாக, அண்டை வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது பற்றி எச்சரிக்கிறார்கள்.

ஆணுக்கோ பெண்ணுக்கோ பாலியல் ரீதியாக பெரும்பாலான ஒழுக்கக் கேடுகள் நடப்பதற்கு, நெருக்கமானவர்கள் தான் காரணமாக இருக்கின்றார்கள். யாரென்று அறியாதவர்களால் இந்த நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை. பலவந்தமாக, வலுக்கட்டாயமான கற்பழிப்புகள் தான் முன்பின் அறியாதவர்களால் ஏற்படும்.

தெரிந்து கொண்டே செய்கிற விபச்சாரமெல்லாம் நன்றாகப் பழகியவர்கள் மூலமாகவும், வீட்டிற்கு வந்து போய் இருப்பவர்களின் மூலமாகவும் தான் நடக்கிறது. இதுபோன்ற தவறுகள் எல்லாம் தூரத்துச் சொந்தம், அண்டை வீட்டுக்காரன், கணவனுக்கு நெருக்கமானவர்கள் போன்றவர்களின் மூலமாகத் தான் நடக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் திடீரென ஒருவன் ஒரு வீட்டில் நுழைந்தால் நாமெல்லாம் சந்தேகப்பட்டு விடுவோம். ஆனால் அடிக்கடி வந்து போய் பழகுகின்ற ஒருவனை மற்றவர்களும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். இப்படி நம்மை நம்பியிருக்கிற அண்டை வீட்டுக்காரனுக்கு நாம் செய்கிற துரோகத்தை விபச்சாரத்தில் பெரியதாக நபியவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.

அண்டை வீட்டுக்காரன் என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளடங்கியிருக்கிறன. அண்டை வீடு எனும் போது, அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என ஒருவனுக்குத் தெரியும். அவளது வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான். எப்போது உள்ளே வருவான் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பான். இதையெல்லாம் கண்கானிப்பதற்கு அண்டை வீட்டுக்காரனுக்குத் தான் வாய்ப்புக்கள் அதிகம். இப்படி கண்கானிப்பது தவறு கிடையாது. ஆனால் அவர்களைப் பாதுகாப்பதற்கு அது பயன்பட வேண்டுமே தவிர அவர்களைச் சீரழிப்பதற்குப் பயன்படக்கூடாது.

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமானவர்களாக நடந்து கொள்வார்கள் எனில், அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் நிழல் கூலியாகக் கிடைக்கும். அதில் ஏழு வகையினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டியலிடுகிறார்கள். ஒருவன் விபச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு தானாகக் கிடைத்தும் அல்லாஹ்விற்குப் பயந்து கொண்டு அதிலிருந்து விலகியவனையும் அந்தப் பட்டியலில் சேர்க்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர். 6.  தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 660, 1423, 6806

இன்னும் இந்தக் குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக ஏராளமான செய்திகள் இருக்கின்றன. அவை ஒழுங்காக உள்ளத்தில் பதிந்தால் தான் நமது குடும்பத்தை நாம் சரியாக நடத்த முடியும். முதலில் அஸ்திவாரம் சரியாக இருந்தால் தான் அதன் மேல் கட்டடத்தை எழுப்பலாம். அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் எழுப்பினால் ஒரே காற்றில் அனைத்தும் விழுந்துவிடும்.

அஸ்திவாரம் என்றால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் ஒழுக்கமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான். எனவே அதிலுள்ள செய்திகளை அறிந்து கொண்ட பிறகு குடும்பவியலின் சட்டத்திற்குள் நுழைவோம்.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 3

இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 29:48

ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள்.

முஹம்மதே! இந்தக் குர்ஆனை உங்களுடைய சமுதாயத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் நீண்ட காலம் அவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அப்போது எந்தவொரு நூலைப் படிக்கவும் எழுதவும் உங்களுக்குத் தெரியாது.

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாத, “உம்மி’ மனிதர் தான் என்ற உண்மையை உம்முடைய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அவர்களைப் பற்றி இந்த இலக்கணம், முந்தைய வேதங்களிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அதை அல்லாஹ் தனது திருமறையில் 7:157 வசனத்தில் விவரிக்கின்றான்.

இந்த இயற்கைத் தன்மையிலும் இலக்கணத்திலும் தான் நபி (ஸல்) அவர்கள் இறுதி வரை இருப்பார்கள். அதாவது இறுதி நாள் வரை அவர்களுக்கு ஒரு வரியை, ஏன் ஓர் எழுத்தைக் கூடத் தம் கையால் எழுதத் தெரியாது. எனினும் நபி (ஸல்) அவர்களுக்காக எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வஹீயை எழுதுவார்கள். பல நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எதையும் எழுதியது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடிதத்தை எடுத்து, இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தமாகும்… என ஹுதைபிய்யா தினத்தில் எழுதினார்கள்.

இவ்வாறு ஒரு ஹதீஸ் புகாரியில் 2700வது செய்தியாக இடம்பெறுகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டு பிற்கால ஃபிக்ஹ் அறிஞர்களான அல்காளி அபுல் வலீத் அல்பாஜியும், அவரது ஆதரவாளர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என வாதிடுகின்றனர்.

இவ்வாறு கருதுவதற்குக் காரணமாக அமைந்தது புகாரியில் இடம்பெறும் இந்த அறிவிப்பு தான். இதே செய்தி புகாரியின் மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட (எழுத்தாளர்) எழுதினார்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி எழுத்தர் தான் கடிதத்தை எழுதினார் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கைப்பட கடிதம் எழுதினார்கள் என்று பாஜியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்த மாத்திரத்தில் மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள ஃபிக்ஹ் அறிஞர்களின் கடுமையான கண்டனத்திற்கு இலக்கானார்கள். இதன் காரணமாக அவர்கள் பாஜியின் கருத்திலிருந்து விலகி, அதற்காகப் பல்வேறு அவைகளில் உரையாற்றி விளக்கமும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு எழுதத் தெரியாது. ஆனால் அவர்கள் அற்புதத்தின் அடிப்படையில் எழுதினார்கள் என்பது தான் நமக்குத் தெரிந்த வரை பாஜியின் ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவனது இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 5220

இவ்வாறு காஃபிர் என்று எழுதப்பட்டிருப்பதை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் படிப்பார்கள் என்று அஹ்மதில் (16902) இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுவது வஹீ என்ற அற்புதத்தின் அடிப்படையில் தான். அதே போன்று தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போதும் நபி (ஸல்) அவர்கள் தமது அற்புதத்தின் அடிப்படையில் எழுதினார்கள். இது தான் பாஜியின் ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் எழுத்தைக் கற்காமல் மரணிக்கவில்லை என்று ஒரு ஹதீஸை சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இது தான் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு அளிக்கும் விளக்கமாகும்.

குறிப்பு: ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிட்டது போன்று, “ஸும்ம அஹத ஃப கதப’ – “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிதத்தை எடுத்து எழுதினார்கள்’ என்ற வாசகம் புகாரி 2700வது ஹதீஸில் உள்ளது.

ஆனால் “ஸும்ம அமர ஃப கதப’ – “நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட (எழுத்தாளர்) எழுதினார்’ என்ற வாசகம் நாம் தேடிப் பார்த்த வரையில் புகாரியில் இல்லை.

இப்னு கஸீர் குறிப்பிடும் இந்த வாசகம் தான் இல்லையே ஒழிய, அவர்கள் குறிப்பிடும் கருத்தில் புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடிய போது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள் அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்ட படி தான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்க மாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக் கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, “இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று எழுதுங்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம்,

அல்லாஹ்வின் தூதர்என்னும் சொல்லை அழித்து விடுங்கள்என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒரு போதும் அழிக்க மாட்டேன்என்று மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். (நூல்: புகாரி 3184)

நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது

நபி (ஸல்) அவர்களுக்கு படிக்கத் தெரியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இது உண்மையில் அசாத்தியம்; நடக்க முடியாதது என்றாலும் ஒரு பேச்சுக்கு இவ்வாறு வைத்துக் கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களிடம் இஹ்யா உலூமித்தீன் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் படித்து முடிக்கின்றார்கள். அதில் அவர்கள் ஒரு தவறைக் கூடக் காணவில்லை என்ற இந்தச் சம்பவம் உண்மை என்றால் இதனால் ஏற்படக் கூடிய விளைவு என்ன?

குர்ஆனும் இஹ்யா உலூமித்தீனும் ஒன்று என்ற நிலை ஏற்படும். ஏனென்றால் குர்ஆனில் தான் அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்தவொரு தவறும் வராது. அதுபோன்று நபி (ஸல்) அவர்களின் ஹதீசும் இஹ்யாவும் ஒன்று என்றாகி விடும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி எதையும் பேச மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து வருவது சத்தியம் மட்டும் தான். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஹ்யா உலூமித்தீன் என்பது மார்க்கத்தில் மூன்றாவது வஹீ என்ற நிலைக்கு வந்து விடுகின்றது.

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் தங்களது செயல்பாடுகளையும் கருத்துக்களையும் கூறுபவர்களாக இருந்தனர். நபித்தோழர்கள் சிலர் சரியாகவும் சொல்லியிருக்கின்றனர். தவறாகவும் சிலர் சொல்லியிருக்கின்றனர். இதைக் கீழ்க்காணும் ஹதீஸில் பார்க்கலாம்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச்சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்று விடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக் கொண்டு அதனுடன் மேலே சென்று விட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக் கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டதுஎன்று சொன்னார்.

அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகின்ற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப் போவதில்லை)என்றார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7046

தமது நல்ல தோழர்களின் முடிவில் தவறு ஏற்படுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கின்றார்கள். இதற்கு ஏராளமாக உதாரணங்கள் உள்ளன.

ஆனால் சூபிஸக் கொள்கைவாதிகள், விலாயத் (இறைநேசம் என்ற பதவி) நபித்துவத்தை விடச் சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இதை சூபிஸவாதிகளின் தலைவன் முஹ்யித்தீன் இப்னு அரபியும், மற்ற வழிகெட்ட சூபிஸத் தலைவர்களும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

அடிப்படையே இல்லாத இஹ்யாவில் உள்ள ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்கள் படித்தார்களா? அப்படி அடிப்படையே இல்லாத ஹதீஸ்கள் இஹ்யாவில் அதிகம் உள்ளன. அவை 940 ஹதீஸ்களுக்கு மேல் உள்ளன. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் இஹ்யாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. பலவீனமான ஹதீஸ்கள் இஹ்யா முழுவதையும் சுற்றி வளைத்துள்ளன.

நபித்தோழர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் இஹ்யாவில் அளந்துவிடப்பட்ட பொய்களின் பரிமாணத்தை நீங்கள் கேட்கவே வேண்டாம். முன்னோர்கள் மீது புனையப்பட்ட பொய்களின் புதைகுழி தான் இஹ்யா உலூமித்தீன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)

நூல்: புகாரி 1291, 1364, 3461

புகாரியிலும் இன்னும் ஏராளமான நூற்களிலும் பதிவான “முதவாதிர்’ என்ற தரத்தில் உள்ள இந்த ஹதீஸின் நிலை என்ன? நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸிலிருந்து பின்வாங்கி விட்டார்களா? சூபியாக்களும் அவர்களின் பக்தர்களும் இதற்குப் பதிலளிப்பார்களா?

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கஸ்ஸாலி, இஹ்யாவில் பின்னியுள்ள பேரிடர்களையும் பெரும் சோதனையையும் நபி (ஸல்) அவர்கள் கவனித்தார்களா?

இவர்கள் கருதுவது போன்று, இமாலயப் பொய் கேந்திரமான இஹ்யாவைப் பார்த்து விட்டு நபி (ஸல்) அவர்கள் ஒப்புதல் கொடுத்திருந்தால் அவர்களின் நபித்துவமும் தூதுத்துவமும் ரத்தாகிப் போயிருக்கும். அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனை கண்ணியமும் மகத்துவமும் படுத்த வேண்டும் என்று எந்தத் தூய, கலப்பற்ற தவ்ஹீத் கொள்கையின்பால் மக்களை அழைத்தார்களோ அந்தக் கொள்கையில் நபி (ஸல்) அவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்றாகி விடும். தீய விளைவுக்கு இட்டுச் செல்கின்ற இந்தப் பேச்சை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

நான் கூறியுள்ள இந்தக் கருத்தைப் பொய் என்று கருதுவோர் அல்லாஹ்வின் பரக்கத்திற்குரிய இந்த ஆய்வை துவக்கத்திலிருந்து கடைசி வரைக்கும் தயவு செய்து முழுமையாகப் பார்வையிடுவாராக! முழு ஈடுபாட்டுடன் இஹ்யாவில் இதை உரசுவாராக! காய்தல் உவத்தல் இன்றி, மனமாச்சரியங்கள், மனோ இச்சைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஆழ்ந்த கவனத்துடன் இஹ்யாவைப் படித்துப் பார்க்கட்டும்.

மலை மலையாகக் குவிந்து கிடக்கின்ற ஷைத்தானின் சிந்தனைகள், சித்திரங்களை விட்டு முழுமையாக விலகி ஒருமுனைப்புடன் இதில் ஆய்வு செய்யட்டும்.

குர்ஆன், ஹதீஸ் என்ற இரு மூலாதாரங்களிலிருந்து எந்தச் சான்றுமில்லாத கதைகளும், கற்பனைகளும் தான் சூபியாக்கள் மற்றும் அவர்களின் சீடர்கள் பயணிக்கின்ற பாதைகளாக இருக்கின்றன.

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்!     நரகமே தங்குமிடம்!

யார் உன் கணவர்?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

கடந்த செப்டம்பர் மாத அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா எனும் மாத இதழ் பக்கம் 47ல் நபிகளாரின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் என்ற அடைமொழியோடு, “யார் உன் கணவர்?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை, ஹதீஸை (?) பதிவு செய்திருந்தார்கள்.

அந்த ஹதீஸ் (?) இஹ்யாவு உலூமித்தீன் என்ற (எரிக்கப்பட வேண்டிய) புத்தகத்தில் உள்ளதாக மொட்டையாக முழு விபரமின்றி குறிப்பிட்டிந்தார்கள். அவர்கள் வெளியிட்டிருந்த அந்தச் செய்தி எந்த அளவு நம்பகமானது என்பதைக் காண்போம்.

அவர்கள் குறிப்பிட்டிருந்த செய்தி இது தான்.

மதினாவாசியான ஒரு பெண்மணி, கண்மணி நபி (ஸல்) அவர்கள் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் உங்களைக் கூப்பிடுகிறார்” என்று அழைத்தார். உடனே கண்மணி நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணியிடம், “யார் உன் கணவர்? கண்ணில் வெள்ளை நிறம் இருக்குமே அவரா உன் கணவர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “யாரசூலல்லாஹ், இல்லை! என் கணவருக்குக் கண்ணில் வெள்ளை நிறம் கிடையாது” என்று கூறினாள் அப்பாவியாக. உன் கணவருக்கு நிச்சயம் வெள்ளை நிறம் உண்டு என கண்மணி நபி (ஸல்) அவர்கள் அடித்துப் பேசினார்கள். இல்லை நிச்சயமாக கிடையாது என்று அடித்துப் பேசினார் வந்த பெண்மணி. இதைக் கேட்டதும் கண்மணி நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். குழம்பிப் போய் நின்ற அந்த அன்சாரி பெண்மணியிடம் “எந்த மனிதனுக்கும் கண்ணில் கருமணியை சுற்றி உள்ள வெள்ளை நிறம் இருக்கத் தானம்மா செய்யும். அதைத் தான் சொன்னேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார்கள். வந்த பெண்மணி வெட்கம் கொண்டவராக சிரித்தார்.

தகவல்: இஹ்யா உலூமித்தீன்  (பாகம்: 4, பக்கம்: 214)

இந்த செய்தி அல் ஃபாகிஹா வல் மஜாஹ் எனும் நூலில் ஜுபைர் மற்றும் இப்னு அபீ துன்யா ஆகியோர் பதிவு செய்துள்ளதாக இந்த செய்தியை கஸ்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

இது முழு அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. மாறாக இது தொடர்பு அறுந்த செய்தியாகும்.

ஜைது பின் அஸ்லம் கூறியதாக இந்தச் சம்பவத்தை நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஜைது பின் அஸ்லம் என்பவர் நபித்தோழரல்ல. நபித்தோழர் காலத்தில் வாழ்ந்த மூத்த தாபியீனும் அல்ல. அதற்கு அடுத்த தரத்தில் உள்ள தாபீயீன் ஆவார்.

இத்தகைய காலத்தில் வாழ்ந்த ஒருவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை எவ்வாறு சொல்ல முடியும்? இவருக்கு இச்சம்பவத்தைக் கூறியது யார்? அவரின் நம்பகத்தன்மை என்ன உள்ளிட்ட முழுமையான தகவல்கள் எதுவும் இவற்றில் பதிவு செய்யப்படவில்லை.

இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கின்ற எவரிடத்திலும் நாமறிந்தவரை அதற்கான முழு அறிவிப்பாளர் தொடர் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த செய்தி என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

இந்தச் செய்தி பலவீனமான செய்தி என்பதால் நபிகளாருக்கு நகைச்சுவை உணர்வு இல்லை, அவர்கள் நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் என்றோ இஸ்லாம் நகைச்சுவைக்கு எதிரானது என்பதோ பொருளாகாது.

இஸ்லாம் நகைச்சுவை உணர்வு இருப்பதை ஆதரிக்கவே செய்கிறது. மேலும் நபிகளார் அவர்கள் தம் தோழர்களிடம் நகைச்சுவையாகப் பேசியதற்கு ஏராளமான ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருக்கவே செய்கின்றன. நபிகளாரின் நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் கதைகளையும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் எழுதுவதற்குப் பதிலாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து எழுத வேண்டும் என்பதே நமது நோக்கம். இதோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள நபிகளாரின் நகைச்சுவை தொடர்பான செய்திகள்:

முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். (மரணத் தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே புன்னகைத்தவாறு  திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் தொழுதுமுடியுங்கள்‘  என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி (1205)

சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். (நூல்: முஸ்லிம் 1188)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்!என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்!என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “இல்லை!என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அரக்எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான் தான்!என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை!என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றி விடுங்கள்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றி விடுவோம்என்று கூறினார்கள். அம்மனிதர், “ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே)என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத் தானே இருக்கின்றன?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 4346

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, “அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே! என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அவர் விளையாடிக் கொண்டிருந்த அவரது குருவி இறந்து விட்டதுஎன்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அபூ உமைரே! உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: அஹ்மத் 12389

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், “நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம். (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப் பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், “எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாதுஎன்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 2348

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, “உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், “மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவாஎன்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், “என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவாஎன்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக் கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், “என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!என்பார். அதற்கு இறைவன், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?” என்று கேட்பான். அதற்கு அவர், “என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார்.

(இதை அறிவித்தபோது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது மக்கள் “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இவ்வாறுதான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அப்போது நபித் தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 310

இத்தகைய ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருக்க ஏன் அடிப்படை ஆதாரமற்ற அல்லது அறிவிப்பாளர் தொடர் இல்லாத மொட்டையான செய்திகளைப் பதிவு செய்ய வேண்டும்.

அஷ் ஷரீஅதுல் இஸ்லாமிய்யாவிற்கு இது முதல் நிகழ்வல்ல. இந்த இதழைப் புரட்டினால் அதில் அதிக பக்கங்கள் நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு அறவே ஆதாரம் இல்லாத செய்திகளே நிறைந்துள்ளன. இந்த லட்சணத்தில் இந்த இதழ் விரைவில் 30 வருடத்தை பூர்த்தி செய்யவிருக்கிறதாம்.

இப்படி அண்ணலார் அவர்கள் கூறாததை எல்லாம் பொய்யாக, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைக் கொண்டு பக்கங்களை நிரப்பி ஒரு இதழை 30 வருடம் என்ன? 300 வருடம் வெளியிட்டாலும் அதனால் மனித சமூகத்திற்கு வழிகேட்டைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லை.

எனவே தூய இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பும் விதத்தில் தங்களது பணியை அமைத்துக் கொள்ளுமாறும் இவ்வாறு பொய்யான ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு பாவத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என்றும் அந்த இதழை வெளியிடுபவர்களுக்கு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 15

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

ஒவ்வொரு மனிதருக்கும் தனது தாய் தந்தையர் மீது அன்பு, பாசம் இருக்கும். கெட்ட மனிதருக்கு வேண்டுமானால் பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் எவருக்கும் தாய், தந்தை மீது பாசம் இல்லாமல் இருக்காது. அவன் தன்னுடைய பெற்றோர் இவ்வுலகில் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். அவர்கள் மரணித்து விட்டால் மறுமையில் அவர்கள் நன்றாக இருப்பதற்காக நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? என்று சிந்திப்பான். மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறந்தவர்களுக்காக கத்தம் பாத்திஹா ஓதுவது கூட அவர்களுக்கு மறுமையில் ஏதாவது நன்மை கிடைக்கட்டுமே என்ற ஆவலில் தான்.

பெற்றோரைக் காப்பாற்ற முடியாத நபிகள் நாயகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தகப்பனாரைப் பார்த்ததே கிடையாது. நபியவர்கள் தமது தாயாரின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தகப்பனார் இறந்து விட்டார். தாயாரும் அவர்கள் ஆறு வயதை அடைந்த போது மரணித்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தாய், தந்தையின் மீது பாசம் இருந்தது.

ஒரு சமயம் மதீனாவிற்குப் பயணம் செய்து போகும் வழியில் தனது தாயார் இறந்த இடத்தைக் கடந்து செல்லும் போது அவருக்காகப் பாவ மன்னிப்பு தேட அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள். எனது தாயார் நான் நபியாக அனுப்பப்படுவதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டார்கள். எனவே அவர்களுக்காக நான் பாவமன்னிப்பு கேட்கலாமா? என்று அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அல்லாஹ் அதனை மறுத்து விடுகின்றான். இணை வைக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டேன். அது உம்முடைய தாயாக இருந்தாலும் சரியே என்று இறைவன் கூறிவிட்டான்.

ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் அனைத்து இணை வைப்புக் காரியங்களையும் செய்து விட்டு, தங்களை நபிமார்கள் காப்பாற்றுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக மறுமையில் சிபாரிசு செய்வார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இணை வைப்பில் இறந்து போன தம்முடைய தாய் தந்தைக்கு நபியவர்களால் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய முடிந்ததா?

அதுவும் நபியவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்திற்குப் பரிந்துரை செய்யவில்லை. “என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு தேட வேண்டும். அதற்கு அனுமதி கொடு’ என்று பாவமன்னிப்புத் தேட அனுமதி தான் கேட்கின்றார்கள். அதையும் அல்லாஹ் மறுத்துவிட்டான்.

இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நான் இறைவனிடத்தில் எனது தாயாருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் இறைவன் அதற்கு அனுமதி தரவில்லை. பிறகு அவருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு இறைவன் அனுமதி கொடுத்தான்.

நூல்: முஸ்லிம் 1621

ஆக, பெற்ற தாய் இணை வைத்து விட்டால் கூட அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கும், பரிந்துரை செய்வதற்கும் நபிமார்களுக்கே அனுமதியில்லை எனும் போது நாம் இணை வைத்த நிலையில் மரணித்து விட்டால் நமக்கு இந்த அவ்லியாக்கள், மகான்கள் பரிந்துரை செய்ய முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இன்னும் நபி (ஸல்) அவர்களுடைய தந்தைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதுரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 302

தூதர் அனுப்பப்படாத கால கட்டத்தில் வாழ்ந்தால் கூட அவர்கள் ஏகத்துவத்தை விட்டு விட்டு இணை வைப்பில் இருந்தால் அவர்களை மன்னிக்க அல்லாஹ் தயாராக இல்லை எனும் போது தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் ஏகத்துவத்தை விட்டு விட்டால் நிலைமை என்னவாகும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தைக்குத் தூதர் அனுப்பப்பட்டாரா? அவர்களுடைய தாயாருக்குத் தூதர் வந்தாரா? அந்தத் தூதர் சொல்லி அதை அவர்கள் நிராகரித்தார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்களுக்கே மன்னிப்பு இல்லை என்கிறான்.

ஆனால் நமக்குத் தூதர் வந்திருக்கிறார்; வேதம் இறக்கப்பட்டிருக்கின்றது; அது பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதில் ஏகத்துவத்தைப் போதிக்கும் வசனங்கள் திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டிருக்கின்றது. குர்ஆன் தமிழாக்கம் வந்திருக்கின்றது. ஹதீஸ் நூல்கள் வந்திருக்கின்றன. இதன் பிறகும் நாம் ஏகத்துவத்தைப் புறக்கணித்து விட்டு இணை வைப்பில் மூழ்கிக் கிடந்தால் நம்மை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? நமது நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டாமா?

ஆக, அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும் பெற்ற தாய் தந்தையை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. பெற்ற தாய் தந்தையருக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை. அந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டான். நான் எடுத்தது தான் முடிவு. அதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறிவிட்டான். மேலும் அவன் தனது எஜமான் தனத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதும் இதிலிருந்து விளங்குகின்றது.

நபிகளாரின் மரணம் தரும் படிப்பினை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி மக்களிடத்தில் பரவியவுடன், அந்தக் களத்தில் நின்ற அனைத்து ஸஹாபாக்களும் தங்களுடைய உயிரைக் கையில் பிடித்தவாறு. தப்பித்தால் போதும் என்று பின்வாங்கி ஓடுகின்றார்கள். அந்த நபித்தோழர்களைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்குகிறான்.

முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி சென்று விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குகிறான்.

அல்குர்ஆன் 3:144

இதே வசனத்தை இன்னொரு சம்பவத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்த உடனே அங்கிருந்த ஸஹாபாக்கள் அனைவரும் தவ்ஹீதைத் தெளிவாக விளங்கிய பின்னரும், குர்ஆனை நன்றாகத் தெரிந்திருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்கள் மீது வைத்த பாசத்தின் காரணமாக அவர்கள் மரணிக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் என்றால் சாதாரணமான ஆளா? அவர்கள் எப்படி மரணிக்கலாம்? அவர்களுக்கு மரணம் வருமா? என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நபியவர்களின் கடைசிக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்கள் இவ்வாறு நினைத்தால் பரவாயில்லை. ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற உமர் (ரலி) அவர்கள், நபியவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய கையில் வாளை எடுத்துக் கொண்டு, யாராவது நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று சொன்னால் அவரது தலையை வெட்டி விடுவேன் என்றும் கூறுகிறார்கள்.

சிலர் மட்டும் நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றே நம்புகிறார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள், அந்தச் சிலரையும் மிரட்டி தன்னுடைய கருத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். அந்த அளவுக்கு நபிகளாரின் மீது பாசம் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் இல்லை. அப்போது அவர்கள் மதீனாவில் இல்லை. பிறகு நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களைப் பார்க்க வருகிறார்கள். அங்கு வந்த போது நடந்த நிகழ்ச்சியை கேள்விப்படுகிறார்கள். இதற்குப் பிறகு நடந்த சம்பவத்தைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என் தந்தை அபூபக்கர் (ரலி) மதீனாவிற்கு சற்று தொலைவிலுள்ள சுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற தகவல் எட்டுகிறது. அப்போது உமர்  (ரலி) எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்-அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

 (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி) “நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள்.

அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) இறந்து விட்டார் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர், அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

மேலும், “(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.எனும் (திருக்குர்ஆன் 39:30) வசனத்தையும், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்என்னும் (திருக்குர்ஆன் 3:144) வசனத்தையும் ஓதினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூபக்கர் (ரலி) இந்த வசனத்தை ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்கரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.

நூல்: புகாரி 3667, 3668

இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியவுடன் உமருடைய கையில் இருந்த வாள் கீழே விழுகின்றது. நாம் பெரிய தவறையல்லவா செய்துவிட்டோம். நபியவர்கள் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தினால் நாம் எதையும் சிந்திக்காமல் பேசி விட்டோமே என்று நினைக்கிறார்கள். அதுவரை உமர் (ரலி) அவர்களின் பக்கம் இருந்த மற்ற ஸஹாபாக்களும், அபூபக்கர் இவ்வாறு அடுக்கடுக்கான ஆதாரத்தையும், சான்றுகளையும் வைத்தவுடன் தாங்கள் செய்ததைத் தவறு என்று உணர்ந்தனர். அதற்கு பிறகு தான் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

நாம் இங்கு இதனை குறிப்பிடுவதற்குக் காரணம், மனிதன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான பலவீனம் வரும்போது கூட அதற்கும் ஒரு மறுப்பு கொடுக்கும் விதமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனை ஆக்கி வைத்திருக்கிறான். இந்தக் குர்ஆனுடைய வசனங்களை வைத்துத் தான் அந்த மக்கள் வழிகேட்டிற்குப் போகாமல் தப்பித்துக் கொண்டார்கள்.

அந்த வசனம் இன்றைக்கு வரைக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இந்த மக்களோ, அவ்லியாக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மவ்லுது ஓதினால் நபியவர்கள் வருவார்கள் என்று நம்புகிறார்கள். யா நபி ஸலாம் அலைக்கும் என்று ஓதினால் நபியவர்கள் தாங்கள் இருக்கும் சபைக்கு வந்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் குர்ஆனை எந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்?

நபியவர்கள் மீது அன்பு வைக்கின்றோம் என்ற பெயரில் இணை வைத்தல் காரியம் நடக்கிறது. நபியவர்கள் மீது அபூபக்கர் (ரலி) வைத்த அன்பு, பாசத்தை விட நாம் பாசம் வைத்துவிட முடியுமா? உலகத்தில் எவரும் நபியவர்கள் மீது அபூபக்கர் வைத்த அன்பை விடக் கூடுதலாக அன்பு வைத்துவிட முடியுமா?

தமது தோழர்களில் அபூபக்கருக்கு நிகராக யாரும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் அவரை மட்டும் தான் நபியவர்களுடைய தோழர் என்று சொல்கின்றான். வேறு யாரையும் நபியவர்களுடைய தோழர் என்று சொல்லவில்லை. பின்வரும் ஹதீஸ் அதற்குச் சான்றாக அமைகிறது.

நபியவர்களை மக்கா காபிர்கள் கொல்வதற்கு தேடிய நேரத்தில் நபியவர்களும். அபூபக்கர் (ரலி) அவர்களும் ஸவ்ர் என்னும் குகையில் இருந்தனர்.

நான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணை வைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே!என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)

நூல்: புகாரி 4663

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 9:40

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது)மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்என்று சொன்னார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?’ என்று நாங்கள் வியப்படைந்தோம். அல்லாஹ்வின் தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி -ஸல்- அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் -ரலி- அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (எனது இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிரஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3654

நபிகளாருக்குப் பொருளாதார ரீதியாக அவ்வளவு உதவிகளைச் செய்தவர் அபூபக்கர் (ரலி) ஆவார்கள். துவக்கத்தில் மக்காவில் இருந்த காலத்தில் அவர் தான் அதிக அளவிலான பொருளாதார உதவி செய்தவர். அதுமட்டுமல்லாமல் நபிகள் நாயகம் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்வதற்கு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் அவர் தான். அவருடைய பொருட்செலவில் தான் நபிகளாரை அழைத்துக் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் மீது இந்த அளவுக்குப் பாசம் இருந்தும் கூட குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு, இறைத்தூதர் என்றால் அவர்களும் மனிதர் தான். அவர்களுக்கும் மரணம் ஏற்படும். மற்ற மனிதர்கள் மரணிப்பதைப் போல் அவர்களும் மரணிப்பார்கள். மரணிக்காத தன்மை இறைவனுடைய தன்மை, இதை நபியவர்களுக்கு ஒருபோதும் நாம் கொடுக்கக்கூடாது என்று மக்களிடம் அறிவிக்கின்றார்கள்.

இதைப் போன்று, நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நாம் சொல்லும் போது, “இவர்களுக்கு நபியவர்கள் மீது பாசம் இல்லை’ என்று நம்மை விமர்சிக்கின்றார்கள். நபிகள் நாயகம் மரணிக்கவில்லை என்று சொல்வது தான் அவர்கள் மீது காட்டும் அன்பு என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.

பெற்ற மகளையும் காப்பாற்ற முடியாது

நபியவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை அல்லாஹ் படிப்படியாகத் தான் கட்டளையிடுகின்றான். நபியாகத் தேர்ந்தெடுத்த மாத்திரத்திலேயே அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடவில்லை. ஆரம்பத்தில் வந்த கட்டளை என்னவென்றால் “நீர் ஓதுவீராக” என்பது தான். மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்யச் சொல்லி எந்தக் கட்டளையும் வரவில்லை.

படைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1)

பிறகு இரண்டாவதாகத் தான், “உறவினர்களுக்குச் சொல்வீராக’ என்ற கட்டளை வந்தது.

உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “குறைஷிக் குலத்தாரே!என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), “ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2753, 4771

இந்த செய்தியின் மூலம், இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டும் தான் உம்முடைய பணியே தவிர, அவர்களை நேர்வழிப்படுத்துவதும், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்துரை செய்து அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதும், மறுமையில் வெற்றி பெற வைப்பதும் உமது கடமையல்ல. அல்லாஹ் நாடினால் உமது மகளைக் கூட தண்டித்து விடுவான்; தண்டிக்காமல் விட்டும் விடுவான் என்பதை இறைவன் புரிய வைக்கிறான்.

ஆக, நபியவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்மை எவ்வாறு பெரியார்கள், மகான்கள், அவ்வலியாக்கள் எல்லாம் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல முடியும்? முரீது வாங்கினால் நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? முரீது கொடுக்கக் கூடியவன் சொர்க்கத்திற்குச் செல்வானா என்பதையே சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் முரீது கொடுத்து நம்மை ஏமாற்றிய காரணத்தினாலேயே அவன் நரகத்திற்குச் சென்றுவிடுவான்.

தமக்காக பாவ மன்னிப்பு தேடிய நபிகள் நாயகம்

நாம் எவ்வளவோ பாவம் செய்கிறோம். இதற்காக ஒவ்வொரு நாளும் நாம் பாவமன்னிப்பு தேடுகின்றோமா? இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாப் பாவத்தையும் மன்னித்து விட்டான். பாவமன்னிப்பு தேடாவிட்டாலும் அவர்களை மன்னித்து விட்டான். இதைப்பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும்உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும் அல்லாஹ் மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும் இவ்வெற்றியை அளித்தான்.

அல்குர்ஆன் 48:2,3

இந்த வசனம் இறங்குவதற்கு முன்னால் நீ செய்த பாவத்தையும், இந்த வசனம் இறங்கிய பிறகு இனிமேல் நீ செய்கின்ற பாவத்தையும் நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

நபியவர்களிடம் எந்தப் பாவங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்தில் கேள்வி கிடையாது. ஏனென்றால் முன்தேதியிட்டே அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டான். இருந்தாலும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், தாமும் மனிதன் தான், தம்மிடமும் பாவம் ஏற்படத் தான் செய்யும் என்று நினைத்து அல்லாஹ்விடத்தில் அதிகமாக பாவமன்னிப்பு தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6307. முஸ்லிம் 4870,4871

நபியவர்களுடைய நிலை இவ்வாறு இருக்கும் போது, நாம் அவர்களிடம் போய், “அன்த்த கஃப்ஃபாருல் ஹதாயா” (நீர் தான் பாவங்களை மன்னிப்பவர்) என்று மவ்லீதை ஓதுகின்றோமே! இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். “ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்’ என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

“இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது’ என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

“என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?’ என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

“பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்” என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, “பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது” என்று தெரிவித்தார்.

“அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது” என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.

“குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன” என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், “நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்” என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

நன்றி: அல்ஆலமுல் இஸ்லாம், அரபி வார இதழ்