தலையங்கம்
உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்
60 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் இடப் பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் 30.09.10 அன்று தனது தீர்ப்பை வழங்கியது.
இந்தத் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை முன்னரே ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடிந்தது.
“பாபர் மஸ்ஜிதா? ராமர் கோவிலா? என்பதை முடிவு செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று கூறி வந்த சங்பரிவார்கள், “பேச்சுவார்த்தை மூலம் அல்லது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் கோயில் கட்டுவோம்” என்று கொக்கரித்த சங் பரிவார்கள், சமீப காலமாகக் குரல் மாறி ஒலிக்கத் துவங்கினர்.
ஜனநாயக ரீதியில் தீர்ப்பை ஏற்போம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ராவ் பகாவத் தெரிவித்தார். அலகபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என்று பி.ஜே.பி.யின் துணைத் தலைவர் கல்ராஜ் மிஷ்ரா தெரிவித்தார்.
பொதுவாக அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவார்கள் என்றால் அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்ய வந்த பி.ஜே.பி. பல வேடம் போடும். ஏனெனில் முதல்வர் கருணாநிதியின் கூற்றுப்படி அது ஓர் ஆக்டோபஸ்! சங்பரிவார்களின் சிந்தனையையும் செயல்பாட்டையும் அகமாகவும் முகமாகவும் கொண்டு ஜனித்த பன்முக அவதாரம். பல வேடம் தரிப்பது அதன் கை வந்த கலை!
நீதிமன்றத் தீர்ப்பை அப்படியே ஏற்போம் என்று தங்களின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாகச் சொன்னார்கள். இதிலிருந்தே தீர்ப்பு காவிமயமாக இருக்குமோ என்ற ஒரு கலக்கம் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்படாமல் இல்லை. முஸ்லிம்கள் இவ்வாறு சந்தேகப்படுவதற்குப் பல்வேறு காரணங்களும் இருந்தன.
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நிர்வாகத் துறைக்கு நிகராக நீதித் துறையும் அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்திருக்கின்றது.
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு கூட்டம் பாபரி மஸ்ஜிதுக்குள் சென்று ராமர் சிலைகளைக் கொண்டு உள்ளே வைக்கின்றது. நிர்வாகத் துறை (அப்போதைய உத்திரப் பிரதேச காங்கிரஸ் அரசு) பள்ளிவாசலுக்குப் பூட்டு போடுகின்றது.
ஜனவரி 16, 1050ல் கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்கின்றார். பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை நடத்தப்படவேண்டும் என்றும், அவற்றை அப்புறப்படுத்தக் கூடாது என்றும் ஒரு தற்காலிக உத்தரவைக் கோரியே அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. பைசாபாத் உரிமையியல் நீதிமன்றம் அதை அனுமதிக்கின்றது. அலகாபாத் உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அதை உறுதியும் செய்கின்றது.
1986ல் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி, சிலைகளுக்குப் பூஜை செய்வதற்காகப் பள்ளிவாசலின் பூட்டுக்களைத் திறக்க உத்தரவிடுகின்றார். இது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் விஷமப் பிரச்சாரத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும். இந்த வெற்றியை வழிமொழியும் விதமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நவம்பர் 9, 1989 அன்று ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம், கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கு அனுமதி அளிக்கின்றது. இது தான் பாபரி மஸ்ஜித் உடைக்கப்படுவதற்கு அடித்தளமாக ஆனது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம்:
பள்ளியில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் நிர்வாகத் துறை அவற்றை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அப்புறப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறின. அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசுகள் தான்.
ஓர் அக்கிரமம் நடைபெறும் போது அதற்கு வடிகாலாகவும் விடிவாகவும் அமைவது நீதி மன்றங்கள் தான்.
பைசாபாத் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முதலில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கின்றது. அதன் பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றம் அதை உறுதி செய்து அநீதியிழைக்கின்றது.
1986ல் அதே பைசாபாத் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பூஜை செய்வதற்குப் பூட்டைத் திறக்க உத்தரவிட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றது.
நீதிமன்றங்களின் அநீதியும் அநியாயமும் இத்துடன் நிற்கவில்லை.
மார்ச் 12, 2003 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம், இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு ஓர் உத்தரவை இடுகின்றது. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு!
தொல்பொருள் ஆய்வுத் துறையும் பத்தாவது நூற்றாண்டின் கோயில் அல்லது இந்துக்களின் வளாகம் இந்த இடத்தின் கீழ் இருந்தது என்று சொல்லி வைத்தாற்போல் தெரிவித்தது.
நீதித் துறை முஸ்லிம்களுக்கு இழைத்து வந்த அநீதிகளின் முத்தாய்ப்பாக தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பங்கிட்டு அதில் இரண்டு பங்கை இந்துக்களுக்கும் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் தீர்ப்பு. கட்டப்பஞ்சாயத்துக்களில் அளிக்கப்படும் தீர்ப்பைப் போன்று அமைந்த இந்தத் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒருபுறம்.
இந்தத் தீர்ப்பின் சாரமாக, நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்த்தால் இதுவரை சங்பரிவார்கள் பாபரி மஸ்ஜித் குறித்து என்ன கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்களோ அதை அப்படியே தெரிவித்து வெந்த புண்ணில் வேல் அல்ல! சூலாயுதத்தைப் பாய்ச்சியுள்ளனர்.
தீர்ப்பின் சாராம்சம்
- சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான்.
- சர்ச்சைக்குரிய இடம் பாபரால் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட ஆண்டு உறுதியாகவில்லை. இதைப் பள்ளிவாசல் என்று கருத முடியாது. ஏனெனில் இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமாக அமைந்துள்ளது.
- அகழ்வாராய்ச்சித் துறை ஆய்வின்படி சர்ச்சைக்குரிய பள்ளிவாசல் இருந்த இடத்தில் இந்துக்களின் பிரம்மாண்ட வழிபாட்டுத் தலம் இருந்தது.
- மத்திய வக்ஃப் வாரியம் பாபரி மஸ்ஜித் தொடர்பாகத் தாக்கல் செய்த மனு காலம் கடந்தது.
- பள்ளிவாசலின் மையப்பகுதியில் 1949, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் சிலைகள் கொண்டு வைக்கப்பட்டன.
- வழக்கில் உள்ள சொத்து ராம ஜென்ம பூமியாகும். அதில் ராமர், சீதா மற்றும் இதர சிலைகளும் இருந்தன. அதனால் அவற்றை வணங்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது.
ராம ஜென்ம பூமியை மக்கள் வழிபடுவதுடன், நினைவு தெரிந்த நாட்களுக்கு முன்பே அதைப் புனித இடமாகக் கருதி மக்கள் அங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
பள்ளிவாசல் கட்டப்பட்ட பின்னர் 1949, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் அங்கு சிலைகள் வைக்கப்பட்டது நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்பகுதி இந்துக்களின் அனுபவத்தில் இருந்தது தெரிய வருகின்றது.
உள் பகுதியிலும் அவர்கள் போய் வணங்குகின்றனர் என்பதும் நிரூபணம் ஆகின்றது. இந்துக்கள் அங்கு போய் வணங்கி வருவதால் சர்ச்சைக்குரிய இடத்தைப் பள்ளிவாசலாகக் கருத முடியாது. ஏனெனில் இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
இது தான் அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் சாராம்சம். இங்கு தான் நீதித்துறையின் கருப்புச் சட்டை காவிச் சட்டையாக மாறியிருக்கின்றது என்பதை உணர முடிகின்றது.
இதுவரை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்கள் என்ன சொல்லி வந்தார்களோ அதை அப்படியே நீதிபதிகள் பிரதிபலித்துள்ளனர்.
ஒரு சொத்து யாருக்குரியது என்பதற்கு நீதிமன்றம் பார்க்க வேண்டிய சட்டத்தின் வரையறையானது, அந்தச் சொத்தின் உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரண்டைத் தான்.
- சம்பந்தப்பட்ட சொத்து யாருக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள்.
- அது யாருடைய அனுபவத்தில் இருந்து வருகின்றது?
இந்த இரண்டு சான்றுகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களைத் தான் சட்டம் பார்க்கும்.
இவ்விரண்டையும் தாண்டி அகழ்வாராய்ச்சி, மக்களின் நம்பிக்கை என்பதெல்லாம் சட்டத்தின் வரம்பல்ல! சட்டம் இவ்வாறு பார்க்கச் சொல்லவில்லை.
சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதா? நிச்சயமாக இல்லை. சாத்திரங்களின் அடிப்படையில் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீதி செத்து விட்டது என்பதற்கு இந்தத் தீர்ப்பு உதாரணமாக அமைந்துள்ளது.
சட்டம் எதற்கு? நீதி எதற்கு? நீதி மன்றம் எதற்கு?
வலியவன் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி எளியவனை ஏமாற்றி விடக் கூடாது; பணக்காரன் தனது பண பலத்தை வைத்து பாட்டாளியை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காகத் தானே!
சங் பரிவாரங்கள் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தைக் கற்பனையான காரணத்தைக் கூறி அபகரிக்கத் துடிக்கின்றது.
இந்த அபகரிப்பையும் ஆக்கிரமிப்பையும் செய்வதற்கு சங்பரிவார்களுக்கு நீதிமன்றம் முகவராகச் செயல்படுமானால் எதற்காக நாம் நீதிமன்றத்தை நாட வேண்டும்? இப்படிச் செயல்படுவதற்கு எதற்காக நீதிமன்றம்?
முஸ்லிம்களிடமிருந்து இப்படி அநியாயமாக பாபரி மஸ்ஜிதை நீதி மன்றம் பறித்துக் கொடுக்குமானால் அதுவும் முகமூடி அணிந்த சங்பரிவார் தான்.
அதனால் நீதிமன்றத் தீர்ப்பு என்றால் அது நீதியின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சட்டத்தின் வரம்பு அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
நீதிக்குப் புறம்பாக, சாத்திரத்தின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு அமைந்தால் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள்.
சங்பரிவார்களின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கும் வரை முஸ்லிம்களின் அறவழிப் போராட்டம் தொடரும்.
பைசாபாத் உரிமையியல் நீதி மன்றம், அதன் பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றம் ஆகியவை ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கள் நீதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. சாத்திரத்தின் அடிப்படையிலும், மதச் சார்புடனும் தான் தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது அது தான் தொடர்ந்துள்ளது.
இதுவே இறுதித் தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனினும் உயர்நீதி மன்றமாக இருந்தாலும் சரி! உச்சநீதி மன்றமாக இருந்தாலும் சரி! நீதிபதிகளும் மனிதர்கள் தான்.
அண்மையில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிகளில் 16 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார். முடிந்தால் என் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுத்துக் கொள்ளுங்கள் என்று சவாலும் விடுத்திருக்கின்றார்.
அதனால் காசுக்கு விலை போகும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
இப்படிக் காசுக்கும் காவிச் சிந்தனைக்கும் விலை போன நீதிபதிகளின் தீர்ப்பினால் தான் பாபரி மஸ்ஜித் உடைப்புக்கு உள்ளானது. மீண்டும் அதே போன்று ஓர் அநியாயத் தீர்ப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:135
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 5:8
இந்த வசனங்களின்படி முஸ்லிம்கள் ஒருபோதும் அநியாயத்திற்குத் துணை போக மாட்டார்கள். ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்தை மீட்பதற்காகக் கொல்லப்பட்டால் கூட அவரது மரணம் தியாக மரணம் என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்று விட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்று விட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 202
தன்னுடைய சொத்துக்காக உயிரை விடலாம் எனும் போது அல்லாஹ்வின் சொத்தான பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகத் தங்கள் இன்னுயிரை மாய்ப்பதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்க முன்வருவார்களே தவிர உரிமையை இழக்க மாட்டார்கள்.
அதே சமயம் இந்த உரிமை மீட்புப் போராட்டம் ஒருபோதும் வன்முறை வழியில் நடக்காது; அறவழியிலேயே அமையும்.
————————————————————————————————————————————————————–
கலகம் கொலையை விடக் கொடியது
புனிதமிகு ரமளான் மாதம் பிறை 25, செப்டம்பர் 5ம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரி பள்ளிவாசலில் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் பலியாகி விட்டனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முஸ்லிம் விவகாரம் என்றதும் ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. தங்களது அன்றாட செய்திகளில் முஸ்லிம்கள் தொடர்பான கொலைச் செய்திகள் வராத ஆத்திரத்தை, அரிப்பை இதில் தாகம் தீரத் தணித்துக் கொண்டன. உலை நெருப்பை, ஊதி ஊதி ஊர் நெருப்பாக்கி மகிழ்ந்தன.
இந்த ஊடகங்களுக்குச் செய்தி வருகின்ற வழி நம்பகமான வழியா? நம்பகமற்ற வழியா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. சமூக அமைதிச் சூழல் மாசானாலும் பரவாயில்லை, செய்தியை செய்தீயாக்கி பரவச் செய்து காசாக்குவது தான் அதனுடைய ஒரே இலக்கும் குறிக்கோளும் ஆகும்.
இந்த அடிப்படையில் தான் துப்பாக்கியால் சுட்ட ஹாஜி முஹம்மது என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர் என்ற வதந்தியை சன் டிவி திரும்பத் திரும்ப வாந்தியெடுத்தது.
ஊடகங்கள் தான் செய்தி வந்த வழியைப் பார்ப்பதில்லை. காரணம் அவற்றுக்கு மறுமை விசாரணையில் நம்பிக்கை இல்லை எனலாம். ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லிக் கொள்ளும் நயவஞ்சகக் கும்பல்கள் இணைய தளங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியது தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற நாசக் கருத்துக்களை மின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் மின்னஞ்சல்களில் பரப்பி விட்டன, பறக்க விட்டன.
இறையச்சம் இவர்களுக்கு இருக்கின்றதா? என்று எண்ணிய மறு கணத்தில் நம்முடைய உள்ளத்தில் மின்னிய பதில், இவர்களுக்கு இதயம் இருந்தால் தானே இறையச்சம் இருக்கும் என்பது தான்.
கடந்த ஜூலை 4ல் மக்களால் மறக்க முடியாத பேரியக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாறியிருக்கின்றது என்பதைத் தாங்க முடியாத ஆத்திரத்தில், துப்பாக்சிச் சூடு செய்தி பரவிய மாத்திரத்தில் சென்னையில் அனைத்து இயக்கங்களும் கூடின. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரேயடியாகக் குழி பறிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
“சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சுட்ட இவர்களைச் சும்மா விடக் கூடாது; நாம் அனைவரும் பேரணியாகப் புறப்பட்டுச் சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்யுமாறு முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும்” என்று பேசினர். அப்போது அங்கிருந்த சிலர், “ஆதாரமில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தை இதில் இழுக்கக் கூடாது. ஆய்வு செய்து தான் நாம் முடிவுக்கு வர வேண்டும்” என்று ஆட்சேபணை செய்ததால் இவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.
இதன் பின்னர் உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் ஒரு பயணத்தை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தான் ஊர் மக்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அந்த உண்மையை மறைத்து சில நயவஞ்சகர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக சுவரொட்டிகளை சில இடங்களில் ஒட்டியுள்ளனர்.
நடந்த உண்மையை நாம் விளக்குவதற்கு முன்னால் இவர்களின் திட்டம் இன்ஷா அல்லாஹ் தோல்வியில் தான் முடியும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.
ஜூலை 4 மாநாட்டின் போது, அதில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்கள் செய்த பிரச்சாரம் கொஞ்சமல்ல! ஆனால் இவர்களின் சதித் திட்டம் பலிக்கவில்லை. இவர்கள் காலமெல்லாம் பொறாமையில் வெந்து சாகும் அளவுக்கு அல்லாஹ் மாநாட்டுக்கு மாபெரும் வெற்றியளித்தான்.
இவர்களுக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்றால் இவர்கள் ஒன்று திரண்டு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்யுமாறு மாபெரும் பேரணியை நடத்திக் காட்டட்டும்! தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தினாலும் அல்லாஹ் நாடினாலே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தை யாராலும் தடை செய்ய முடியாது. தடை செய்வதற்கான எந்தச் செயலையும் இந்த ஜமாஅத் செய்ததோ ஆதரித்ததோ கிடையாது.
19 ஆயிரம் அமைப்புகள் ஒன்று திரண்டு சுவரொட்டிகள் ஒட்டினாலும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தை அசைக்க முடியாது. ஏனெனில் துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினராகவோ ஆதரவாளராகவோ இருந்தால் தான் இது மக்களிடம் எடுபடும். ஆனால் சுட்டவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது இவர்கள் வகுத்துள்ள திட்டம் இவர்களுக்குக் கடுகளவும் உதவாது.
மாறாக, இவர்களின் கபட நோக்கத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்பதால் அவர்களுக்குத் தான் இது இழப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி வைக்கிறோம்.
இனி, திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம்.
உண்மை நிகழ்வு
திருவிடைச்சேரியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த சில மாதங்களுக்கு முன் நபிவழி அடிப்படையில் தொழ அனுமதி மறுத்துள்ளனர். தொழுகைக்குச் சென்ற முஜிபுர்ரஹ்மான் என்பவரை ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் என்பவர் தாக்கியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் இரு தரப்பும் தனித்தனி இடங்களில் தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அப்துர்ரஹீம் என்பவரது வீட்டின் மாடியில் தொழுகை நடத்தி வந்தனர்.
வீட்டுச் சொந்தக்காரரான அப்துர்ரஹீமின் குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டிலிருந்த ஜபருல்லாஹ் என்பவரின் குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்துள்ளது.
இந்தப் பிரச்சனையில், மாடியில் செயல்படும் மர்கஸிற்கு நோன்பு திறக்க வந்த ஸலாவுத்தீன் என்பவரது தகப்பனாரை எதிர்வீட்டு ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் சிலர் வழிமறித்து, “இங்கு தொழுகைக்குச் செல்லக் கூடாது’ என்று தடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை ஸலாவுத்தீன், தனது நண்பரான குத்புதீனுக்குத் தெரிவிக்க அவர் அந்த இடத்திற்கு வருகிறார். ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் அவரது கூட்டத்தினரிடம் குத்புதீன் சமாதானமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்தக் கும்பல் குத்புதீனை உருட்டுக் கட்டையால் தாக்குகின்றது.
மர்கஸ் வாசலில் குத்புதீன் தாக்கப்பட்டுள்ளார் என்பதால் செய்தியறிந்த திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், திருவிடைச்சேரி கிளை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் புகார் கொடுக்க குத்புதீன் மறுத்து விடவே இந்தத் தகவலை கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் குத்புதீனைத் தொடர்பு கொண்டு, புகார் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அப்போதும் அவர், “இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி விடுகின்றார்.
இதன் பின், குத்புதீன் திருமங்கலக்குடியில் இருக்கும் தனது மச்சான் ஹாஜி முஹம்மதுவிடம், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் அவரது அடியாட்கள் உருட்டுக்கட்டையால் தன்னைத் தாக்கியது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார்.
கும்பலாகத் தாக்கியுள்ளார்கள் என்பதால் ஹாஜி முஹம்மது, மூன்று கார்களில் ஆட்களை அழைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தலைவரிடம் நியாயம் கேட்கின்றார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஜமாஅத் தலைவர் இஸ்மாயீலின் மூக்கு உடைந்துள்ளது.
“ஜமாஅத் தலைவர் தாக்கப்பட்டு விட்டார், எல்லோரும் பள்ளிக்கு வாருங்கள்’ என்று பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்துள்ளனர். ஜபருல்லாஹ் மற்றும் அவரது அடியாட்கள் கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அங்கு இருந்ததால் ஹாஜி முஹம்மதை நோக்கி அந்தக் கும்பலில் ஒருவர் அரிவாளால் வெட்ட வருகின்றார். அப்போது ஹாஜி முஹம்மதுடன் வந்த ரவி என்பவர் குறுக்கே நின்று தடுக்கும் போது ரவியில் தலையில் வெட்டு விழுகின்றது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ஹாஜி முஹம்மது, அடுத்த வெட்டு தனக்குத் தான் என்பதால் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் சுட்டுள்ளார். இதற்கும் அந்தக் கும்பல் அஞ்சாமல் அவரைக் கொல்ல முற்படவே அவர்களை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல், பிரச்சனைக்குக் காரணமான ஜபருல்லாஹ் என்பவரின் மைத்துனர் ஹஜ் முஹம்மது, அடியாட்கள் பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு, ஹாஜா மைதீன் ஆகியோர் காயமடைகின்றனர்.
இதில் இஸ்மாயீல் மற்றும் ஹஜ் முஹம்மது ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் இறந்து விடுகின்றனர். பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் பின்னர் ஜபருல்லாஹ்வும் அவரது அடியாட்களும் அரிவாள், கம்பு, உருட்டுக்கட்டைகளுடன் அப்துர்ரஹீமின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். அப்துர்ரஹீம், அவரது மனைவி கமருன்னிஸா, மகள் மற்றும் பேரக் குழந்தை ஆகியோர் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளேயிருந்துள்ளனர்.
வெளிக் கதவையும், கொல்லைப்புறக் கதவையும் உடைத்து உள்ளே சென்ற ஜபருல்லாஹ் மற்றும் அவரது அடியாட்கள் வீட்டிலிருந்த டிவி, டேபிள், அலமாரி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்து, அலமாரியில் வைத்திருந்த தங்க நகைகள், கமருன்னிஸா அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
“இவர்களைக் கொல்லுங்கடா’ என்று ஜபருல்லாஹ் வெறிக் கூச்சலிட, அவர்கள் அப்துர்ரஹீமை வெளியே இழுத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்துர்ரஹீம் தனது கைகளால் தடுத்ததால் அவரது கைகளில் வெட்டு விழுகின்றது. அவரது மனைவி கமருன்னிஸாவையும் அரிவாளின் மறு முனையால் தாக்கியுள்ளனர்.
வெட்டுக்காயம் அடைந்த அப்துர்ரஹீமும், ஹாஜி முஹம்மதுடன் வந்த ரவியும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு எள்ளளவும் தொடர்பில்லாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அப்துர்ரஹீம் ஆகியோர் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தான் நடந்த நிகழ்வு!
உண்மையில், இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரத்தை ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆதரிக்கவும் செய்யாது.
மிக மிகச் சிறுபான்மையாக இருந்த போதும் சரி! அல்லாஹ்வின் அருளால் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்த பின்பும் சரி! பள்ளிவாசலில் தாக்கப்படும் போதெல்லாம் காவல்துறையைத் தான் நாடியிருக்கின்றோம். நீதிமன்றம் சென்று நீதியைத் தான் நாடியிருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று திருப்பிக் கொடுக்கும் வலிமையைப் பெற்றுள்ளது. இருந்தாலும் நம்மைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்காமல் சகிப்புத் தன்மையைத் தான் கடைப்பிடிக்கின்றது.
காரணம், இறைவன் நாடினால் நாளைய தினம் இவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கைக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் நல்லெண்ணத்திலும் தான்.
இன்று ஏகத்துவத்திற்காகத் தாக்கப்படுபவர்கள், ஒரு காலத்தில் ஏகத்துவவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் தான்.
ஏகத்துவத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுத்தவர்கள் தான் இன்று இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பின் இதற்காகத் தாக்கப்படுகின்றார்கள் என்பதே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருவிடைச்சேரி சம்பவம் நடைபெற்றதற்குக் காரணம் என்ன? என்பதை இனி பார்ப்போம்.
திருவிடைச்சேரி சம்பவம்:
முழு முதற் காரணம்
திருவிடைச்சேரி சம்பவம் குறித்து இறையச்சம் துளியும் இல்லாமல் பல்வேறு பொய்களை அவிழ்த்து விட்டுள்ள துரோகிகளின் ம.உ. பத்திரிகை, “தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத்’ என்று கிண்டலடித்துள்ளது.
திருவிடைச்சேரி போன்று பல பள்ளிகளில் அடி வாங்கிய தவ்ஹீது சகோதரர்கள் தான் முகம் தெரியாத இந்தத் துரோகிகளைத் தோள்களில் தூக்கிச் சுமந்தனர். அந்த நன்றி கெட்ட நாடகக் கம்பெனியினர் தான் “தவ்ஹீத் ஜமாஅத் துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்பதை இந்த வார்த்தையில் சொல்கின்றனர். ஹாஜி முஹம்மதை தவ்ஹீத் ஜமாஅத் என்று நிலை நிறுத்துகின்றனர்.
திருவிடைச்சேரி பிரச்சனைக்கு மூல காரணம் என்ன? என்று பார்த்தால் இரண்டு காரணங்கள் உள்ளன.
- பள்ளிவாசலில் தவ்ஹீது ஜமாஅத்தினரைத் தொழ விடாமல் அந்தப் பள்ளி நிர்வாகம் தடுத்தது.
- தனிப் பள்ளி கண்ட பிறகு அங்கு வந்தும் தொழ விடாமல் தடுத்தது.
இவை தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்.
இந்தத் துரோகிகளின் பார்வையில் துப்பாக்கிச் சூடு பெரும் பாவமாகவும் பயங்கரவாதமாகவும் தெரிகின்றது. மனித உயிர்களைக் கொன்றது பெரும் பாவம் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அல்லாஹ்வின் பார்வையில் எது பெரும் பாவம்? எது பயங்கரவாதம்? என்பது இந்தத் துரோகிகளுக்கு, சுனாமித் திருடர்களுக்குத் தெரியவில்லை. தெரியவும் செய்யாது.
இதோ அல்லாஹ் கூறுகிறான்:
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:217
- மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது.
- அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது.
- அவனை ஏற்க மறுப்பது.
ஆகியவை தான் இறைவனின் பார்வையில் கலகம் செய்வதாகும். இது கொலையை விடக் கொடியது என்று சொல்கின்றான்.
இந்த வசனம் இறங்கிய பின்னணியைப் பார்த்தால் இதன் கருத்து இன்னும் தெளிவாகப் புரியும்.
நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளை உளவு பார்ப்பதற்காக) ஒரு கூட்டத்தை அபூஉபைதா தலைமையில் அனுப்புகின்றார்கள். அவர் செல்லத் துவங்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பின் காரணமாக அழுகின்றார்; செல்லாமல் அமர்ந்தும் விடுகின்றார். அவருக்குப் பதிலாக அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷை அவருடைய பொறுப்பில் நியமித்து அனுப்புகின்றார்கள். அவரிடம் ஒரு கடிதத்தையும் எழுதிக் கொடுத்து, “இன்ன இடத்தை அடைந்த பிறகு தான் இந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும்” என்றும் அவருக்குக் கட்டளையிடுகின்றார்கள்.
(அந்தக் கடிதத்தில்) “உன்னுடைய தோழர்கள் யாரையும் உன்னுடன் வருவதற்கு நிர்ப்பந்திக்காதே” என்று தெரிவித்திருந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் அதைப் படித்து விட்டு, “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செவிமடுப்பதும் கட்டுப்படுவதும் நமது கடமை ஆகும்” என்று கூறியவாறு தன்னுடன் வந்தவர்களிடம் அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டுகின்றார். அவருடன் வந்தவர்களில் இரண்டு பேர் திரும்பி விடுகின்றர். எஞ்சியவர்கள் அவருடன் செல்கின்றனர்.
அந்தக் கூட்டத்தினர் செல்லும் வழியில் (மக்காவைச் சேர்ந்த எதிரியான) இப்னுல் ஹள்ரமி என்பவரைச் சந்தித்து, கொலை செய்து விடுகின்றனர். அந்த நாள் (போர் தடுக்கப்பட்ட புனித மாதமான) ரஜபா? அல்லது ஜமாதில் ஆகிரா? என்று அவர்களுக்குத் தெரியாது.
அப்போது இணை வைப்பவர்கள், முஸ்லிம்களை நோக்கி, “(தூய இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால்) போர் தடுக்கப்பட்ட புனித மாதத்தில் கொலை செய்து விட்டீர்களே!” என்று விமர்சிக்கின்றார்கள்.
அப்போது தான் அல்லாஹ் 2:217 வசனத்தை அருளினான்.
நூல்: முஸ்னத் அபூயஃலா, தப்ரானி
தூய்மையைப் பற்றிப் பேசும் நீங்கள் புனித மாதத்தில் தப்பு செய்யலாமா? என்று முஷ்ரிக்குகள் கேட்கிறார்கள். அதற்குத் தான் அல்லாஹ் பதிலடி கொடுக்கின்றான்.
புனித மாதத்தில் தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டது. தெரியாமல் நடந்தால் அது தவறாகாது. கொலை செய்வது குற்றம் தான். ஆனால் நீங்கள் செய்து கொண்டிருப்பது அதை விடப் பெருங்குற்றம்.
- மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது.
- அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது.
- அவனை ஏற்க மறுப்பது.
இம்மாபெரும் பாவங்களைச் செய்து கொண்டு இந்தப் பாவத்திற்காகக் காட்டுக் கூச்சல் போடுகின்றீர்களே என்று கேட்பது போல் அல்லாஹ் இந்த வசனத்தை அருளுகின்றான்.
நூறு சத பொருத்தம்
திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த விஷயத்தை அப்படியே திருவிடைச்சேரி சம்பவத்துடன் பொருத்திப் பாருங்கள்.
- பள்ளியை விட்டுத் தடுத்தல். ஒரே ஒரு வித்தியாசம், அது மஸ்ஜிதுல் ஹராம். இது சாதாரண பள்ளிவாசல். ஆனால் தொழுவதற்குத் தடை விதித்தது தான் இரண்டு இடங்களிலும் நடந்துள்ளது.
பள்ளியில் தான் தொழ விடாமல் தடுத்தார்கள். சரி! தொலைந்து விட்டுப் போகிறார்கள், இவர்களது அராஜகம் தாங்க முடியாமல் தனிப் பள்ளி துவங்கி தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகின்றனர். அங்கும் வந்து தொழ விடாமல் தடுக்கின்றனர்.
- அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; இறந்து போன பெரியார்களிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை இது தான்.
அவனை மட்டும் வணங்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
(ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!
அல்குர்ஆன் 40:14
இதை இவர்கள் மக்கா காஃபிர்கள் பாணியில் மறுக்கிறார்கள். இது அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் மறுப்பது இல்லையா?
- அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுதல்: இறை மறுப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்களை மக்காவை விட்டு வெளியேற்றியதை இது குறிக்கின்றது. இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு என சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது. இந்த சட்டத்தின் ஆட்சி மட்டும் இல்லை என்றால் சுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொட்டத்தின் ஆட்சி தான் நடக்கும். ஆம்! ஊரை விட்டும் துரத்தி விடுவார்கள். இப்போது அவர்களால் துரத்த முடியவில்லை என்பதால் ஊர் நீக்கம் செய்து வைக்கின்றார்கள்.
பொதுக் குழாயில் தண்ணீர் கொடுக்கக் கூடாது.
திருமணப் பதிவேடு வழங்கக் கூடாது.
ஊரார் யாரும் இவர்களிடம் பேசக் கூடாது.
தவ்ஹீதுக் கொள்கையில் உள்ளவர்கள் இறந்து விட்டால் ஜனாஸாவை அடக்கம் செய்யக் கூடாது.
பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது.
இதுவெல்லாம் என்ன? மக்கா காபிர்களைப் போன்று ஊரை விட்டே துரத்தி அடிக்க முடியாது. காரணம், இவர்களிடம் ஆட்சியதிகாரம் இல்லை. இருந்தால் அதைச் செய்திருப்பார்கள். அது இல்லையென்பதால் அதற்கு இணையான காரியத்தை இந்த ஜமாஅத்தார்கள் செய்கிறார்கள்.
அல்லாஹ்வின் பார்வையில் இவை கொலையை விடக் கொடிய கலகமாகும், கலவரமாகும். பெரும் பாவமும் பயங்கரவாதமும் ஆகும்.
சங்கரன்கோயிலில் ஒரு அபூஜஹ்ல்
அபூஜஹ்லின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு சங்கரன்கோயில் ஜமாஅத் தலைவர் ஓர் எடுத்துக்காட்டு.
இவர்களுடைய பள்ளிவாசலைப் பிய்த்து எறியுங்கள்; இவர்கள் குழப்பவாதிகள் என்று கூச்சல் போட்டிருக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தினரின் தொழுகைப் பள்ளிக்கு அருகில் கொண்டு வந்து ஒலிபெருக்கிக் குழாய்களைக் கட்டி தொழக் கூடியவர்களுக்கு இடையூறு செய்திருக்கிறார்.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?
அல்குர்ஆன் 96:9,10
இந்த வசனங்களில் அல்லாஹ் சொல்வது போன்று அபூஜஹ்லின் வேலையை அப்படியே செய்கின்றார். இத்துடன் நிற்காமல், தவ்ஹீத் ஜமாஅத்திருக்கு யாரும் முடி வெட்டக் கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்கு ஓர் உத்தரவு போட்டிருக்கிறார். இவர்களால் இந்த “மயிர்’ உத்தரவு தான் போட முடியும். இதைத் தாண்டி ஜனாஸாவை அடக்கக்கூடாது என்று சொல்வார்கள், ஊர் நீக்கம் செய்வார்கள். இவற்றைத் தவிர்த்து இவர்களால் வேறெதுவும் செய்ய முடியாது.
இப்படி எத்தனையோ பேர்களை தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 25 ஆண்டுகளாகப் பார்த்து விட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எல்லாம் இந்த ஜமாஅத் அடங்காது, அடி பணியாது.
இவர்களுடன் கைகோர்ப்பதற்கும் களம் இறங்குவதற்கும் எங்களிடமிருந்து பிரிந்த நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் எங்களுக்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் அழைத்துக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் படையான ஸபானிய்யாக்களுடன் மோதுவதற்கு இவர்கள் தயாராவது எங்களது ஈமானைத் தான் மேலும் அதிகரிக்கும் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறோம்.
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 3:173
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், கொலையை விடக் கொடிய பாவம் என்று சொல்லும் இந்த பயங்கரவாதச் செயல்கள் இவர்களிடம் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத் தான்.
துப்பாக்கிச் சூட்டை விட பெரும் பாவம் பள்ளியில் தொழ விடாமல் தடுப்பது தான். ம.உ. நயவஞ்சகர்களுக்கு இதுவெல்லாம் பெரும் பாவமாகத் தெரியாது. பயங்கரவாதமாகத் தோன்றாது.
ஏனெனில் இந்தத் துரோகிகளும், பள்ளிவாசலை விட்டுத் தடுக்கின்ற, பள்ளியைப் பாழாக்குகின்ற பாவத்தில் பங்கு கொண்டு தவ்ஹீதுவாதிகளைத் துரத்தியடிக்கின்றனர்.
கடையநல்லூரில் தொழ வந்த மக்கள் மீது அடியாட்களைக் கொண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள்.
அபூஜஹ்லைப் போன்று அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழ விடாமல் தடுக்கும் அநியாயத்திற்குத் துணை நிற்பவர்கள் தான் இந்த நயவஞ்சகர்கள்.
அல்லாஹ்வின் பார்வையில் இவர்களும் பயங்கரவாதிகள் தான்.
தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் பள்ளியில் தடுக்கப்படும் போது அடிதடி தாக்குதலில் கூட ஈடுபடுவதில்லை. இந்தக் கொள்கைச் சகோதரர்களின் பார்வையில் அடிதடியே பெரும் பாவமாகத் தெரியும் போது துப்பாக்கிச் சூட்டைப் பற்றி கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ஹாஜி முஹம்மது இந்தக் காரியத்தைச் செய்வார் என்று தெரிந்திருந்தால் அவரது மைத்துனர் குத்புதீன் கூட அவரை அழைத்திருக்க மாட்டார். இப்போது தானும் கொலைக் குற்றவாளியாகி, தனது மச்சானும் கொலைக் குற்றவாளியாகி மரண தண்டனைக்கு வழிவகுக்கின்ற ஒரு காரியத்திற்கு அவர் துணை போயிருக்க மாட்டார்.
தன்னைத் தாக்கிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கமே தவிர வெட்டுக் குத்தில் இறங்க வேண்டும் என்பது அவரது நோக்கமல்ல! அது தான் இப்போது துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கின்றது. இந்தச் துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல!
அதுவும் புனிதக் குர்ஆன் இறங்கிய புனிதமிகு ரமளான் மாதத்தில் எள்ளளவு ஈமான் உள்ளவன் கூட இப்படி ஒரு ரத்தக் களரியை, மரணக் களத்தை நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.
திட்டமிட்டா? திடீரென்றா?
இப்னுல் ஹள்ரமி என்பவன் கொல்லப்பட்ட சம்பவத்தை மேலே கண்டோம். புனித மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்பது நபித்தோழர்களுக்குத் தெரியும். ஆனால் அந்நாள் ஜமாதில் ஆகிர் மாதத்தின் கடைசியா? அல்லது ரஜப் மாதத்தின் துவக்கமா? என்று தெரியாமல், திட்டமிடாமல் திடீரென்று நடந்த சம்பவம் தான் அது!
அது போன்று தான் திருவிடைச்சேரி சம்பவமும்! இது திட்டமிட்டு நடந்ததல்ல! திடீரென்று நடந்தது. துரோக நயவஞ்சகக் கூட்டம், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழித்துக் கட்டுவதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.
இந்த நயவஞ்சகர்கள் ம.உ. பத்திரிகையில்,
முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக் கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம்களையும் எதிரிகளாகக் கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவித் தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழக முஸ்லிம் சமுதாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள்.
என்று துரோகக் கூட்டம் நம்மைப் பார்த்துக் கேட்கின்றது.
புனித மாதத்தில் போர் செய்வது பாவம் என்று பேசும் மக்கா காபிர்களே!
உங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது, அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது, அவனை ஏற்க மறுப்பது.
இவ்வளவு அழுக்குகளை மூடை மூடையாக முதுகில் சுமந்து கொண்டு முஸ்லிம்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறீர்களே என்று அல்லாஹ் கேட்பதைத் தான் இந்த நயவஞ்சகக் கும்பலைப் பார்த்து நாமும் கேட்கிறோம்.
சுனாமித் திருட்டுக்குப் பதில் தராமல் சுருண்டு விழுந்த ஊழல்வாதிகளே! தூய்மையைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்குக் கடுகளவாவது அருகதை, யோக்கியதை இருக்கின்றதா?
முதுகில் குத்திய முதுபெரும் துரோகிகளே! முடை நாற்றங்களே! அபூஜஹ்லின் வாரிசுகளே!
இதே திருவிடைச்சேரியில் பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுத்த போது நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? தனிப்பள்ளியில் தொழுகை நடத்துவதையும் வந்து தடுத்தார்களே! அப்போது எங்கே சென்றிருந்தீர்கள்?
நாங்கள் யாரையும் தலை குனிய வைக்கவில்லை. பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுத்ததுடன், தனியாகத் தொழுவதையும் தடுத்து அல்லாஹ்வுடன் போர் செய்த துரோகிகளாக நீங்கள் தான் தலை குனிய வைத்திருக்கின்றீர்கள்.
விளைவா? எதிர் விளைவா?
திருவிடைச்சேரியில் நடந்தது ஒரு போரல்ல! இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடுகளவும் காரணமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை பதிய வைத்துக் கொண்டு இங்கு கேள்வியை எழுப்புகிறோம். இது ஒரு போர் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால், இந்தப் போரைத் துவக்கியவர்கள் யார்?
பள்ளியை விட்டுத் துரத்தியதன் மூலம், தனிப் பள்ளியில் தொழுவதையும் தடுத்ததன் மூலம் ஜமாஅத் நிர்வாகிகள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஏறி மிதித்திருக்கின்றார்கள். விளைவை ஏற்படுத்தியவர்கள் அவர்கள்! வினையைச் செய்தவர்கள் அவர்கள்! அதன் எதிர் விளைவைச் சந்தித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தே எதிர்பார்த்திராத ஓர் எதிர்விளைவைச் சந்தித்தார்கள். அவர்களிலிருந்தே ஒருவரைக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ் இழிவை வழங்கியுள்ளான். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுப்பாக்கி அதில் ஆதாயம் தேட முயல்வது இந்த நயவஞ்சகக் கும்பலின் சதியாகும்.
மனிதநோய் கட்சியின் மறைமுக சதி
ஆரம்பத்தில், அப்துர்ரஹீம் மற்றும் எதிர்வீட்டு ஜபருல்லாஹ் ஆகிய இரு குடும்பத்தாருக்கும் பகை முற்றியதால் ஏற்பட்ட வெளிப்பாடு தான் இந்தத் துப்பாக்கிச் சூடு என்ற வரம்பில் தான் நின்றது.
மருத்துவமனையில் இருந்து கொண்டு செய்தியாளர்களிடம், இரு குடும்பங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனை என்று மக்கள் கொடுத்த தகவலை, மனிதநோய் கட்சியைச் சேர்ந்த ஒரு ஷைத்தான், “தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் காரணம் என்று சொல்லுங்கள்’ என்று திருத்தி, திரித்துக் கூறியிருக்கின்றான்.
அந்த ஷைத்தான் இவ்வாறு கூறும் போது நமது சகோதரர்களும் அருகில் இருந்துள்ளார்கள். அதனால் இந்த உண்மை நமக்குத் தெரிய வந்தது. இப்போது தான் தவ்ஹீத் ஜமாஅத்தை முடக்குவதற்கு இவர்கள் பின்னிய சதி வலை இது என்பது நமக்குத் தெரிகின்றது.
அதைத் தொடர்ந்து, பொய்யாசிரியரின் பெருநாள் உரை, குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி, ம.உ. ஆகியவற்றைப் பார்க்கும் போது, இவர்கள் திட்டமிட்டுத் தான் இந்த அவதூறைப் பரப்பி வருகின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது.
பொய்யாசிரியரின் புலம்பல்
துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட சுன்னத் வல்ஜமாஅத்தினரோ, காவல்துறையினரோ வேறு எவருமே இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணம் என்று சொல்லாத போது, இந்த நயவஞ்சகக் கும்பல் தலைவரான பொய்யாசிரியர் மட்டும், “இவர்கள் தான் சுட்டார்கள், இவர்கள் தான் சுட்டார்கள்” என்று மன நோயாளி போன்று புலம்புவது ஏன்?
“இதோடு தவ்ஹீதுவாதிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடவேண்டும். இவர்கள் இருந்தால், நாம் அரசியல் நடத்த முடியாது. சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்க முடியாது. ஒரு பொதுக்கூட்டம் போட்டுப் பேசினால் போதும். உள்ள ஓட்டும் நமக்குக் கிடைக்காமல் போய் விடும்” என்ற அச்சம் தான் காரணம்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. கனவுகளுடன் கற்பனையில் மிதந்தவர்களை, மண்ணடிப் பொதுக்கூட்ட உரை மண்ணைக் கவ்வச் செய்து விட்டது. இப்போதும் இவர்களை விட்டால் சட்டமன்றத் தேர்தலில் சட்டியைத் தூக்க வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் பொய்யாசிரியர் பித்துப் பிடித்து உளறத் துவங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது.
இப்படி வதந்தியைப் பரப்பி விட்டால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் அனைவரும் நம் பின்னால் வந்து விடுவார்கள்; சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டு முதலமைச்சர் ஆக்கி விடுவார்கள் என்ற கனவும் பொய்யாசிரியரின் புலம்பலுக்குக் காரணமாக இருக்கலாம்.
இவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம்.
எங்களைப் பொறுத்த வரை கொள்கை விஷயத்தில் நாங்கள் யாரிடமும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
இணை வைப்பவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது; அவர்களைத் திருமணம் முடிக்கக் கூடாது என்றெல்லாம் பகிரங்கப் பிரச்சாரம் செய்கிறோமே! இதுவெல்லாம் யாரை நோக்கி? சுன்னத் வல் ஜமாஅத்தில் ஒரு பகுதியினரைத் தான். இருந்தாலும் சமுதாயப் பிரச்சனைக்காக நாங்கள் அழைத்தால் அவர்கள் வருகிறார்கள்.
ஜூலை 4 அன்று தீவுத்திடலில் லட்சக்கணக்கில் கூடினார்களே! அவர்கள் அனைவரும் தவ்ஹீதுவாதிகளா? இல்லை. நாங்கள் யாரை விமர்சிக்கிறோமோ அந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரும் சேர்ந்து தான் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காட்டினார்கள். ஏன்? எங்களது தலைமையை அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் சொல்லும் கட்சிக்கு அவர்கள் ஓட்டுப் போடுகிறார்கள்.
முஸ்லிம்கள் என்றாலே திமுக தான் என்ற நிலையை மாற்றி, அதிமுகவுக்கு முஸ்லிம்களை ஓட்டுப் போட வைத்தது யார்? தவ்ஹீதுவாதிகள் தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் திமுக தோற்றது; அல்லது நூலிழையில் வென்றது. இதற்குக் காரணம் என்ன? அப்போது இட ஒதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்ததற்காக தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது.
அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு தந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரித்தது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும் திமுக கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.
கொள்கையில் வேறு என்றாலும் சமுதாயப் பிரச்சனைகளில் தவ்ஹீத் ஜமாஅத் தான் தங்களுக்குச் சரியான வழியைக் காட்டும் என்று சுன்னத் வல் ஜமாஅத்தினரும் நம்புகிறார்கள்.
நயவஞ்சக வாத்தியார் கூட்டத்தைப் போன்று கூட்டம் சேர்ந்தவுடன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு விட்டுப் பதவிக்கு அலையும் கூட்டம் அல்ல என்று விளங்கி வைத்திருக்கிறார்கள். இவர்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்; நம்மைக் காட்டி தங்களை வளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் ஊறிப் போய் விட்டது.
இது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் கண்ணியம். இதைப் பார்த்து வயிற்றெரிச்சல் அடைந்திருக்கும் வாத்தியார் கூட்டம் இப்போது, துப்பாக்கிச் சூட்டைக் காரணம் காட்டி புலம்பத் தொடங்கியிருக்கின்றது.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
அல்குர்ஆன் 9:32
இவர்கள் என்ன தான் சதித் திட்டம் தீட்டினாலும் இந்த ஏகத்துவ ஜோதியை இவர்களால் அணைத்து விட முடியாது.
அபூஜஹ்ல் கண்ட அவமானமும் அழிவும்
“இக்ரஃ – ஓதுவீராக’ என்ற வசனம் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வசனமாகும். இந்த வசனத்தைத் துவக்கமாகக் கொண்டு அமைந்தது தான் “அலக்’ எனும் அத்தியாயம்.
இதனையடுத்து அமைந்திருக்கின்ற வசனங்களை ஒருமுறை படியுங்கள்.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!
அல்குர்ஆன் 96:9-19
தொழுகின்ற அடியாரைத் தடுப்பவனைப் பற்றி, அவன் அடையப் போகும் தண்டனையைப் பற்றி இந்த வசனங்கள் போதிக்கின்றன.
தொழுகின்ற அடியார் யார்? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம்.
தடுப்பவன் யார்? அனைத்து ஆலயத் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒரு கேடுகெட்ட முன்மாதிரியாகத் திகழ்பவன் யார்? அபூஜஹ்ல் தான். இதை ஹதீஸ்கள் தெளிவாக விவரிக்கின்றன.
அதாவது, குர்ஆனை மக்களிடம் சொல்ல ஆரம்பித்து விட்டாலே, அதனைச் சொல்பவர்கள் இப்படி ஒரு சோதனையைச் சந்திப்பார்கள் என்பதை இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்களிடம், “குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றுங்கள்’ என்று தூதர் (ஸல்) அவர்களின் அந்தத் தூய உத்வேகத்திலும் உணர்ச்சியிலும் சொல்லும் போது, நபி (ஸல்) அவர்கள் சந்தித்த அதே சோதனைகளைச் சந்திக்கின்றது.
அபூஜஹ்லின் அதே சாதனைகளை (?) அதாவது அவனது சாத்தானியத்தனங்களை அவனது வாரிசுகளான இன்றைய ஜமாஅத் தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை அரங்கேற்றுகின்றனர்.
பள்ளியைப் பாழாக்கும் பயங்கரவாதம்
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
இந்த வசனத்தைச் சொல்லி, இது நியாயமா? என்று கேட்டிருக்கிறோம். இதற்கு அவர்களிடமிருந்து பதில் வராமல் அடி, உதை, ஊர் நீக்கம் என்ற பயங்கரவாதம் தான் வெளிப்பட்டது. இவர்களை இயக்குகின்ற பயங்கரவாதிகள் மவ்லவி வர்க்கம் தான். கருப்புச் சிந்தனைக்குச் சொந்தக்காரர்களான அவர்கள் தான் பள்ளியின் கரும் பலகைகளில் பள்ளியைப் பாழாக்குகின்ற வாசகங்களை எழுதச் செய்தனர்.
குர்ஆன் என்றதும் அவர்களிடம் கொதிப்பு ஏறியது; கோபம் கொப்பளித்தது.
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். “இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 22:72
அல்லாஹ் சொல்கின்ற இந்த வெளிப்பாடுகளை இவர்களிடம் காண முடிந்தது. பள்ளியில் தொழுபவர்களைத் தடுக்கும் இந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகள் இதோ:
அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.
அல்குர்ஆன் 96:14-19
இவை தான் அந்த எச்சரிக்கை மணிகள். ஆர்ப்பரிக்கும் அபாயச் சங்கொலிகள்.
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்‘ என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்து கொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5005
நபி (ஸல்) அவர்களைத் தொழுவதை விட்டும் தடுக்கும் பணியைத் தொழிலாகவே கொண்டவன் தான் அபூஜஹ்ல்! அவனைத் தான் இந்த வசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் இந்த எச்சரிக்கையைக் கேட்டு அவன் திருந்தவில்லை என்பதற்குப் பின்பவரும் ஹதீஸ் எடுத்துக்காட்டு.
(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் சஅத் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்ற போது உமய்யாவிடம் தங்கினார்கள். ( அப்போது நடந்ததை சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) “இறையில்லம் கஅபாவை வலம் (தவாப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறு” என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் தவாஃப் செய்து கொண்டிருந்த போது) எங்களை அபூஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி) “அபூ ஸஃப்வானே! உன்னோடு இருக்கும் இவர் யார்?” என்று கேட்டார். உமய்யா, “இவர் தான் சஅத்” என்றார். அப்போது என்னிடம் அபூஜஹ்ல், “மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக் கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்சமüத்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக்கொண்டிருப்பதை நான் காண்பதா….? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்க மாட்டாய்” என்று சொன்னார்.
நூல்: புகாரி 3950
உக்பா பின் முஐத்தின் அநியாயம்
இது அபூஜஹ்லின் அநியாயம் எனில் உக்பா பின் அபீமுஐத் என்பவன் செய்த அநியாயத்தைப் பார்ப்போம்.
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்கüல் சிலர் சிலரிடம், “இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது அவருடைய முதுகின் மீது வைப்பர் யார்?” என்று கேட்டனர்.
அக்கூட்டத்திலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று அதைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்கüன் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு ஒத்தாசை செய்பவர்கள் (மட்டும்) இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.)
இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த (அபூ ஜஹ்லும் சகாக்களும்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கüன் புதல்வி, சிறுமி ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அவர்கüன் முதுகிலிருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்). பிறகு தமது தலையை உயர்த்தி, “இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்!” என்று மூன்று முறை பிராத்தித் தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை பிராத்தனை புரிந்தது குறைஷிகளுக்கு மன வேதனை அüத்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப்படும் பிராத்தனை யாவும் ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, “இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக் கொள்வாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 240, 520
பத்ருப் போரில் பலியான பாவிகள்
பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்று கொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்கüலும்) இள வயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். ”அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா‘ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்கüல் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து, “என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார். நான், “ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், “அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்கüல் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார்.
சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்கüடையே சுற்றி வருவதைக் கண்டு, “இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கüல் யார் அவனைக் கொன்றது?” என்று கேட்டார்கள். அவர்கüல் ஒவ்வொருவரும், “நான் தான் (அவனைக் கொன்றேன்)” என்று பதிலüத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். இருவரும், “இல்லை” என்று பதிலüத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு, “நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாüல் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) “அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹுக்கு உரியவை” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
நூல்: புகாரி 3141
அல்லாஹ்வின் பள்ளியில் மக்களைத் தொழவிடாமல் தடுத்த பாவிகளின் தலைவன், இஸ்லாத்தின் எதிரி, இறைத் தூதரின் விரோதி அபூஜஹ்ல், இரண்டு இளவல்களிடம் வெட்டுப்பட்டு சாகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் சபித்த அத்தனை பேர்களுமே பத்ர் களத்தில் கொல்லப்பட்டனர்.
ஆனந்தமடையும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி “கலீபு பத்ர்‘ எனும் அந்த பாழும் கிணற்றில் மாண்டு கிடந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 240, 520
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஒட்டகக் கருப்பையை வைத்து ஆர்ப்பாட்டமாய், அட்டகாசமாய் சிரித்தவர்கள் அசிங்கமான, அருவருப்பான பிணமாய், வேரறுந்த மரங்களாய் வீழ்ந்து கிடந்தனர். அன்று ஆதங்கமடைந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் இன்று ஆனந்தமடைகின்றார்.
பள்ளியைப் பாழாக்கியோர் பாழுங் கிணற்றில்…
அல்லாஹ்வைத் தொழுபவர்களை, பள்ளியை விட்டும் தடுத்த இந்தப் பாவிகள் பாழுங்கிணற்றில் பிணங்களாகத் தூக்கி வீசப்படுகின்றார்கள்.
இவ்வாறு வீசப்பட்ட அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வினவுகின்றார்கள்.
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்கüல் இருபத்தி நான்கு பேர்(கüன் சடலங்)களை பத்ருடைய கிணறுகüல் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெüயில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியüக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்கüத்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்கüத்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்கüடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)
நூல்: புகாரி 3976
பாழாய் போனவர்களே! பள்ளியில் எங்களைத் தொழ விடாமல் தடுத்தீர்கள். அதற்கான பரிசைப் பெற்றுக் கொண்டு விட்டீர்கள் என்ற கருத்தும் இதில் அடங்கியிருப்பதை யாரும் மறுக்க முடியுமா?
ஜமாஅத்தார்கள் ஸபானிய்யாக்கள்
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
அபூஜஹ்லை இம்மையில் இழிவும் அவமானமும் அழிவும் தழுவியது. மறுமையில் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்ற தண்டனையும் காத்திருக்கின்றது. “அலக்’ அத்தியாயத்தில் கூறுவது போன்று ஸபானிய்யாக்கள் எனும் மலக்குகள் அபூஜஹ்லையும் அவனது வாரிசுகளான இன்றைய ஜமாஅத்தினரையும் சரியான முறையில் சாத்துவார்கள். அந்த வேதனையிலிருந்து இவர்கள் தப்ப முடியாது.
அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையை அபூஜஹ்ல் மதித்திருந்தால் இவ்வளவு பெரிய இழிவையும் அழிவையும் சந்தித்திருக்க மாட்டான். இதை ஜமாஅத்தார்கள் பாடமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக் கொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் இழிவு இவர்களை சந்திக்கத் தான் செய்யும்.
இவர்கள் இழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ சில உண்மை நிகழ்வுகளைப் பார்ப்போம்.
- வளர்ச்சி
இவர்கள் பள்ளியில் வர விடாமல் தடுப்பதற்குரிய காரணம் என்ன?
தவ்ஹீதுவாதிகள் வளர்ந்து விடக்கூடாது என்பது தான். ஆனால் ஊருக்கு ஊர், இன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தவ்ஹீத் ஜமாஅத் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இவர்கள் நிர்வகிக்கும் பள்ளியில் 5 நேரங்கள் தொழ வருபவர்களை விட தவ்ஹீது ஜமாஅத் வளர்ச்சியடைந்துள்ள ஊர்களில், தவ்ஹீது பள்ளிகளில் அதிகமான எண்ணிக்கையினர் தொழ வருகின்றனர்.
- பெற்றோர் அங்கே! பிள்ளைகள் இங்கே!
எந்தக் கொள்கையை வளர விடக் கூடாது; ஊருக்குள் வர விடக் கூடாது என்று நினைத்தார்களோ அந்தக் கொள்கையை அவர்களது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது இவர்களுக்கு இழிவில்லையா?
- மவ்னமான மவ்லவிகள்
எத்தனையோ மவ்லவிகள், இந்தத் தடைக்குக் காரணமாக இருந்தவர்கள், தடையைத் தூண்டியவர்கள் அந்தப் பள்ளியிலேயே பணி செய்ய முடியவில்லை. அப்படியே பணி புரிந்தாலும் அந்தப் பள்ளிகளில் நபிவழி அடிப்படையில் தொழுவதை அவர்களால் இப்போது தடுக்க முடியவில்லை. இனிமேல் இவர்களைத் தடுக்க முடியாது என்று வாயடைத்து நிற்கின்றனர்.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலேயே இப்போது தடுக்க முடியவில்லை என்பது இவர்களுக்கு இழிவில்லையா?
- தோல்வியில் முடிந்த வழக்குகள்
பள்ளிவாசலில் தொழ விடாமல் நிர்வாகிகள் விதித்த தடையை எதிர்த்து தவ்ஹீதுவாதிகள் நீதிமன்றம் செல்கின்றனர். இந்த நீதிமன்றங்களில் ஜமாஅத் நிர்வாகிகள் தோல்வியையே சந்திக்கின்றனர். அல்லது தவ்ஹீதுவாதிகளுடன் சமரசம் செய்து கொள்கின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணை வரும் போது, நாங்கள் இனி தடுக்கமாட்டோம் என்று எழுதிக் கொடுத்து விட்டு வருகின்றனர். இதுவும் இவர்களுக்கு ஏற்படும் இழிவு தான்.
- பொறுப்பிலிருந்து நீக்கப்படுதல்
பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுத்த நிர்வாகிகள் அந்தப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கின்றார்கள். இப்படியும் கேவலத்தைச் சந்திக்கின்றார்கள். பள்ளியில் தொழ விடாமல் தடுப்போரை இப்படி அல்லாஹ் ஏதாவது ஒரு வகையில் கேவலப்படுத்துகிறான்.
திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காது.
இது வன்முறையை ஆதரிக்கும் ஜமாஅத் என்றால் எஸ்.பி. பட்டிணம், மந்தாரம்புதூர், செய்துங்கநல்லூர், அம்பாசமுத்திரம் போன்ற ஊர்களில் விவகாரங்கள் காவல்துறைக்கும் நீதி மன்றங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்காது. வன்முறையில் நம்பிக்கை இருந்தால் அந்த வழியில் தீர்வு கண்டிருக்கும். ஆனால் அதுபோன்ற வழிகளில் தவ்ஹீத் ஜமாஅத் இறங்கவில்லை.
நம் நாட்டு நீதிமன்றங்களில் நீதி, நியாயம் கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் தாண்ட வேண்டும். அவ்வளவு கால தாமதமானாலும் அதற்குத் தக்க கிளைகள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன. வன்முறைப் பாதையில் அது செல்லவில்லை. அப்படியிருந்தும் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தேறியிருக்கின்றது. அதில் இருவர் பலியாகி இருக்கின்றனர். பிறருடைய மரணத்தில் மகிழ்ச்சியடைபவர்கள் நாங்கள் கிடையாது. இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஹாஜி முஹம்மது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர் அல்ல.
அரிவாள் வெட்டைக் கூட, ஏன் அடிதடியைக் கூட விரும்பாத நாங்கள் துப்பாக்கிச் சூட்டை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
இருப்பினும் இது உணர்த்துகின்ற செய்தி, பள்ளிவாசலில் தொழுபவரைத் தடுத்தால், அவ்வாறு தடுப்பவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகில் ஏதாவது ஓர் இழிவை ஏற்படுத்துவான் என்பது தான்.
கொலை என்பது கொடிய பாவம் தான். ஆனால் கொலையை விடக் கொடிய பாவம் கலகம் செய்வது. அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் தொழுபவர்களைத் தடுப்பது அந்த வகையைச் சேர்ந்தது தான்.
எனவே பொதுவாக ஜமாஅத்தார்கள் இந்தக் கொடிய பாவத்தைச் செய்து இம்மையில் இழிவையும், மறுமையில் கடும் தண்டனையையும் அடைந்து விடாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
————————————————————————————————————————————————————–
தலை போனாலும் விலை போகோம்
இறைத் தூதர்கள், தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க ஆரம்பித்த மாத்திரத்திலேயே கொலை முயற்சி, கோரத் தாக்குதல்கள், கொடுமைகள், ஊர் நீக்கங்கள், நாடு கடத்தல்கள், சிறைவாசங்கள், சித்ரவதைகள் என்று உடல்ரீதியான சோதனைகளும், கேலி, கிண்டல்கள், பரிகாசங்கள், அவதூறுகள், கடும் விமர்சனங்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், போலியான கூற்றுக்கள் என உள ரீதியான சோதனைகளும் அவர்களைத் துரத்தின, தொலைத்தெடுத்தன.
இத்தனையையும் தாக்குப் பிடித்தவாறு தான் தங்கள் தூதுச் செய்தியை மக்கள் மன்றத்தில் தூதர்கள் தாக்கல் செய்தனர்.
இந்த இரு வகையான இடையூறுகளுக்கு இலக்காகாத தூதர்கள் யாருமில்லை எனுமளவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
கொலை முயற்சிக்கு உள்ளான தூதர்களின் வரலாறுகளையும் அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்கின்றான். அப்படிக் கொலை முயற்சிக்கு ஆளான, குறி வைக்கப்பட்ட ஒரு தூதர் தான் ஸாலிஹ் (அலை) அவர்கள். இதோ அவர்களது பிரச்சாரத்தை அல்லாஹ் மறு ஒலிபரப்பு செய்வதைக் கேளுங்கள்.
ஸாலிஹ் நபிக்கு எதிரான சமூதின் சதி
அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.
“என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.
உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:45 47
ஸாலிஹ் நபியின் பிரச்சாரத்திற்கு எதிராக ஒன்பது சதிகாரக் கூட்டத்தினர் ஒன்று கூடினர், ஓரணியில் சேர்ந்தனர். ஸாலிஹைத் தீர்த்துக் கட்டுவதாக சபதம் எடுத்து சத்தியம் செய்தனர். தடயம் இல்லாத அளவுக்கு அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்கின்றனர்.
அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.
அல்குர்ஆன் 27:48
ஆனால் அவர்களின் சதியை அல்லாஹ் முறியடித்து விடுகின்றான்.
“அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் “அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம்‘ என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.
அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம். அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.
அல்குர்ஆன் 27:49-53
இறுதியில் ஸாலிஹ் நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் தான் வென்றனர்.
எரியும் நெருப்பில் இப்ராஹீம் நபி
வரவிருக்கும் ஹஜ் மாதங்கள் ஏகத்துவத்தின் ஈடு இணையற்ற தலைவர் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் நிலையான நினைவைத் தாங்கியவை. அந்த இறைத்தூதர் இப்ராஹீமின் புரட்சிமிகு பகுத்தறிப் பிரச்சாரம் பிரபலமானது. அந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பரிசாகக் கிடைத்தது என்ன?
இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 37:97
ஆனால் அல்லாஹ் அதையும் முறியடிக்கின்றான்.
அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம்.
அல்குர்ஆன் 37:98
மூஸாவுக்கு எதிரான கொலை முயற்சி
நான் தான் உங்கள் கடவுள் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் தூதராக அனுப்பப்படுகிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அவர்களது அறிவுப்பூர்வமான, ஆணித்தரமான வாதங்கள் எனும் ஆயுதங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல் படுதோல்வியடைந்த ஃபிர்அவ்ன், மூஸாவைக் கொலை செய்யத் துடிக்கின்றான்.
“மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
அல்குர்ஆன் 40:26
அவரைத் தூக்கில் போடுவதற்குரிய அனைத்து வேலைகளையும் செய்தான். அதற்குரிய தருணத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கேற்ப, மூஸா தன் சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயலும் போது அவரையும் அவரது சமுதாயத்தையும் ஃபிர்அவ்ன் துரத்தி வருகின்றான். ஆனால் அவனால் அவரை அழிக்க முடியவில்லை. அவனே அழிந்து போனான். தன்னைக் கடவுள் என்று பிதற்றிக் கொண்டிருந்த அவனைக் கடலில் மூழ்கடித்ததுடன் மட்டுமல்லாமல் அவனது பிணத்தை உலக மக்களுக்குப் பாடமாக்கியும் வைத்து விட்டான் வல்ல இறைவன்.
இதை அல்குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
“உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!” என்று (இறைவன்) கூறினான்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான்.
இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:89:-92
சாவிலிருந்து தப்பிய சத்தியத் தோழர்
மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஃபிர்அவ்னும் அவனுடைய குடும்பத்தாரும் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஃபிர்அவ்னின் குடும்பத்தில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
இறைத் தூதர் மூஸாவுக்கு எதிராக ஃபிர்அவ்ன் எடுக்கும் நடவடிக்கையிலிருந்து அவரைக் காப்பாற்றுகின்றார்.
“என் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
“என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?” (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் “நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை” என்று கூறினான்.
“என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன்” என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.
என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.
அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.
முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.
அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
“ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.
“என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்” என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
“என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.”
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.
“நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்” என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் உங்களை அழைக்கிறேன்.
என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்)
அல்குர்ஆன் 40:28-44
இந்தச் செய்தி ஃபிர்அவ்னுக்குத் தெரிந்து அந்தத் தோழரை ஃபிர்அவன் கொல்ல முயற்சிக்கின்றான். ஆனால் அல்லாஹ் அவரைக் காப்பாற்றி விடுகின்றான்.
எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.
அல்குர்ஆன் 4:45
விதிவிலக்காக தாவூத் நபி, சுலைமான் நபி போன்ற ஆட்சியதிகாரம் வழங்கப்பட்ட தூதர்களைத் தவிர அனைத்துத் தூதர்களுக்கு எதிராகவும் கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அந்தக் கொலை முயற்சியில் பலியான தூதர்களும் உண்டு. பாதுகாக்கப்பட்ட தூதர்களும் உண்டு. இங்கு நாம் பார்த்துக் கொண்டிருப்பது பாதுகாக்கப்பட்ட தூதர்களைத் தான். அந்தப் பட்டியலில் அற்புத மனிதப் படைப்பான ஈஸா (அலை) அவர்களும் அடங்குகின்றார்கள்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.
அல்குர்ஆன் 4:157
ஈஸா நபியைக் கொலை செய்ய எதிரிகள் முயற்சி செய்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.
(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
அல்குர்ஆன் 3:54
எதிரிகளின் சதியை முறியடித்து ஈஸா நபியை அல்லாஹ் வானுலகத்திற்கு உயர்த்திக் கொண்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிரான முயற்சிகள்
ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்கத் துவங்கிய காலத்திலிருந்து கொலை முயற்சிகள் அடுக்கடுக்காகத் துரத்துகின்றன, தொடர்கின்றன.
மக்காவிலுள்ள இறை மறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்கின்றார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கüடம், “இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் “ஹிஜ்ர்‘ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்கüன் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், “என் இறைவன் அல்லாஹ் தான்‘ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?” (40:28) என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்
நூல்: புகாரி 3856
குகை வரை வந்த பகை
இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கின்ற போது அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து கொலை செய்யத் துடிக்கின்றார்கள். இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
அல்குர்ஆன் 8:30
புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களும் இதை விவரிக்கின்றன.
(ஹிஜ்ரத் பயணத்தின் போது வழியில்) நபி (ஸல்) அவர்களுடன் நான் (“ஸவ்ர்‘மலைக்) குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்திய போது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கüல் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அமைதியாயிருங்கள்; அபூபக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)
நூல்: புகாரி 3922
புகாரி 3906 ஹதீஸ் இது தொடர்பான முழு வரலாற்றையும் நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் கைகளில் மாட்டி, கொல்லப்படுவதை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விடுகின்றான்.
எந்த மக்கா நகரம், முஹம்மத் (ஸல்) அவர்களை விரட்டியடித்து, கைது செய்ய, கொலை செய்ய நினைத்ததோ அந்த மக்கா நகரை நபி (ஸல்) அவர்கள் கைப்பற்றினார்கள். இப்படிக் கொலை முயற்சிக்கு எதிராகப் பாதுகாக்கப்பட்ட தூதர்களும் இருக்கிறார்கள்; கொலை முயற்சியில் பலியான தூதர்களும் இருக்கின்றார்கள்.
பலியான தூதர்கள்
பனூ இஸ்ராயீல்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பலர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இதைக் கீழ்க்காணும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.
அல்குர்ஆன் 2:88
“அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்” என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் 2:91
நல்லவர்கள் கொல்லப்படுதல்
ஃபிர்அவ்னுடைய குடும்பத்தில் சத்தியத்தை ஏற்றுக் கொண்ட நல்ல மனிதர் காப்பாற்றப்பட்டதைப் பார்த்தோம். அதே ஃபிர்அவ்னுடைய ஆட்சியில் சத்தியத்தை ஏற்றுக் கொண்டதால் மந்திரவாதிகள் கொலையும் செய்யப்பட்டார்கள்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றனர்.
“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று அவன் கூறினான்.
“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்றனர்.
“எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்” (என்றும் கூறினர்.)
அல்குர்ஆன் 20:70-73
இறை நம்பிக்கை கொண்ட அவர்கள் அக்கிரமக்காரன் ஃபிர்அவ்னிடத்தில் வீரமிக்க பீரங்கிகளாக முழங்கிய முழக்கம் வரலாற்றில் மறக்க முடியாத வார்த்தைகள்.
அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, “என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!” என்றார். உங்களிடம் கூலியைக் கேட்காத நேர் வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள். என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். அப்போது நான் பகிரங்கமான வழி கேட்டில் ஆவேன். நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும் கூறினார்). சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்றார்.
அல்குர்ஆன் 36:20-27
இந்த வசனத்தில் ஒரு நல்ல மனிதர் கொல்லப்பட்ட நிகழ்வைப் பார்க்கிறோம்.
வரலாற்றில் தூதுச் செய்தியைப் பரப்பிய நபிமார்கள் காப்பாற்றப்பட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான சதிகளைத் தூள் தூளாகவும் அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். அதே போன்று நபிமார்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.
தூதுச் செய்தியை ஏற்றுக் கொண்ட நல்லவர்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டும் இருக்கிறார்கள். அதுபோல் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.
இந்த வரலாறுகளைத் தான் நாம் மேலே கண்டோம்.
இவ்வளவு எடுத்துக்காட்டுக்களையும் இங்கு கூறுவதற்குக் காரணம், ஏகத்துவப் பிரச்சாரம் என்று அடியெடுத்து வைக்கும் போது இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இதன் அழைப்பாளர்கள் ஆரம்ப காலகட்டத்தில் களத்தில் இறங்கினார்கள்.
பள்ளிவாசல்களில் தொழத் தடை! மீறிச் சென்றால் அடி உதை! பொதுக்கூட்டங்களில் பேசுவதற்குத் தடை! திருமணப் பதிவேடு மறுக்கப்படுதல்! அடக்கதலம் மறுக்கப்படுதல்!
தங்கள் உறவினர் இறந்த சோகத்தில் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் கொள்கைவாதிகளின் குடும்பங்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல! அப்படிப்பட்ட சமயத்தில் ஜனாஸா விஷயத்தில் ஊர் தலைவர்கள், பஞ்சாயத்தினர் காட்டுகின்ற ஆதிக்க, அதிகார வெறியாட்டங்கள் கொடுமையிலும் கொடுமை!
ஆர்.டி.ஓ., தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் களத்திற்கு வந்து, அடக்கத்தலத்திற்கு வந்து ஜனாஸாவை அடக்கம் செய்யும் அநியாயங்கள் இன்னும் பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள்
காவல்துறையில் புகார்கள் பதியப்படாத கிளைகள் இல்லை. நீதிமன்றங்களில் நிலுவையில் வழக்கு இல்லாத கிளைகள் இல்லை. இந்தக் கொடுமைகள் ஏற்கனவே நடந்தும் இன்று வரை நடந்து கொண்டும் இருக்கின்றன.
கூட்டுத் திட்ட கொலை முயற்சி
இவற்றின் உச்சக்கட்டமாக, இந்த வெறியாட்டத்தின் சிகரமாக நடந்தவை தான் கொலை முயற்சிகள். இது தமிழக அளவில் தீட்டப்பட்ட ஒரு கொலை சதித் திட்டம். கூலிப்படைகளை ஏவி விட்டு கொலை செய்ய நடந்த திட்டம்.
இப்படி கொலை பீடங்களைக் கண்டு அரளாத, மிரளாத கொள்கைக் கூட்டத்தினர் தான் அன்று தவ்ஹீது பேரியக்கத்தில் அலை அலையாகத் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இளைஞர்கள் குறிப்பாகப் பெண்கள் ஏகத்துவப் பொதுக்கூட்டங்களில் மொய்க்கத் தொடங்கினர். இப்படி ஓர் எழுச்சி அலையா? ஏகத்துவப் புரட்சியா? என்று தமிழக இயக்கங்களின் இமைகள் நிலை குத்தி நின்றன.
இந்நிலையில் பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தச் சமுதாயத்திற்கு யார் தலைமை ஏற்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பு!
அப்போது தான் தியாகங்களின் சின்னங்களாகத் திகழ்ந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் தலைமை தாங்க முன்வந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாயம் என்ற பெயரில் ஒரு சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் தொடர்பு கொண்டனர்.
அவர்கள், “ஜனநாயகம் ஓர் இணை வைப்பு; சட்டமன்ற, நாடாளுமன்றங்கள் இணை வைப்பின் கேந்திரங்கள்; தேர்தலில் ஓட்டுப் போடுவது ஹராம்” என்று மார்க்க விளக்கமில்லாத, தெளிவில்லாத சித்ததாந்தங்களை இஸ்லாமிய சிந்தனைகளாக மாணவர்கள் வட்டத்தில் மட்டும் பரப்பிக் கொண்டு, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தனர்.
கல்லறை வழிபாடு, கண்மூடித்தனமான மத்ஹபு மாயை இவையெல்லாம் இவர்களுக்கு சில்லறைச் செய்திகளாகவும், செல்லாக் காசுகளாகவும் தெரிந்தன.
விடுதிப் பிரச்சாரமும் வீதிப் பிரச்சாரமும்
இந்த இயக்கத்தினருக்கு தர்ஹாக்கள் எல்லாம் “தாகூத்’ ஆக – வழிகேடுகளாகத் தெரியாது. அரசியல் தலைவர்கள் தான் இவர்கள் தாகூத் என்று தெரியும்.
தர்ஹா, கப்ரு வழிபாடுகள் கூடாது என்று சொன்னாலே இவர்களுக்குக் குமட்டல் வரும்; கோபம் வரும். மத்ஹபு விமர்சனம், தக்லீது கண்டனம் என்று சொல்லி விட்டால் போது இவர்களுக்கு அலர்ஜியும் அஜீரணமும் ஏற்பட்டு விடும்.
இதற்குக் காரணம் இவர்களது தாய் இயக்கம் ஜமாஅத்தே இஸ்லாம். இவர்கள் நட்சத்திர விடுதியில் இருந்து கொண்டு, சட்டை மடிப்புக் கலையாத சமரச அழைப்புப் பிரச்சாரம் செய்வார்கள். மடிப்புக் களையாத வெள்ளைச் சட்டையினருக்கு நடுவீதி, நடுச் சந்தியில் பிரச்சாரம் செய்வதெல்லாம் தெரியாது.
இப்படிப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாம் அமைப்பினருக்குப் பிறந்தது தான் இந்த மாணவர் அமைப்பு! தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்பது போல் தாய்ச் சபையின் கொள்கையை அப்படியே தரித்துக் கொண்டவர்கள்.
வந்தார்கள்! சென்றார்கள்!
இந்த மாணவர் இயக்கத்தினர் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் சங்காத்தம் கொண்டார்கள். நாங்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று நடித்தார்கள், நாடகமாடினார்கள். அடையாளமும் அறிமுகமும் இல்லாத இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுகத்தை, அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
செல்லாக் காசான இவர்களுக்கு இந்த ஏகத்துவக் கொள்கை செல்வாக்கைக் கொடுத்தது, செல்வமும் கிடைத்தது. இப்போது வெளியே போய் விட்டார்கள். பழைய கொள்கைக்கு மாறி விட்டார்கள். வந்த பாதைக்கே திரும்பி விட்டார்கள்.
ஆனால் ஜனநாயகம் ஓர் இணை வைப்பு என்ற பழைய கருத்திற்குள் மட்டும் திரும்பிப் போகவில்லை, போக மாட்டார்கள். காரணம், அந்தக் கொள்கைக்குப் போனால் அரசியல் பதவிகள் கிடைக்காது அல்லவா?
இது தவிர மீதி அனைத்திலும் பழைய கொள்கைப் பாதையில் தான் செல்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் பிரிந்து சென்ற பின் கூலிப் படையை ஏவி விட்டு கொலை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது, அல்லாஹ் இதுபோன்ற பல சதி வலைகளை விட்டும் தவ்ஹீதுவாதிகளைக் காப்பாற்றியிருக்கிறான்.
தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்த தூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வந்த சதிகளை அல்லாஹ் தான் தூள் தூளாக்கினான். அந்தத் தூதர்கள் கொண்டு வந்த செய்தியைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் எடுத்துச் செல்கின்றது.
எந்த ஆலிமும் சத்தியத்தை மக்களுக்கு மத்தியில் சொல்ல வராத போது தவ்ஹீத் ஜமாஅத்தினர்தான் முன்வந்தனர். எதிர்ப்புகள் ஏவுகணைகளாக வந்து இறங்கின. எத்தனையோ சதி வலைகள் பின்னப்பட்டன. இவர் சமர்ப்பிப்பது தூதர் கொண்டு வந்த செய்தி என்பதால் அல்லாஹ் இவரைக் காப்பாற்றினான்.
அன்று சத்தியம் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையாத காலம். ஆனால் இன்றோ, அல்லாஹ்வின் அருளால் இந்தச் சத்தியத்தை ஏற்று நடக்கும் அடுத்த தலைமுறை உருவாகி விட்டது.
அன்று அந்த ஆரம்பக்கட்டத்தில், குரல் வளை நெறிக்கப்பட்டால் குரல் கொடுக்க நாதியில்லாத அந்தக் கால கட்டத்திலேயே கொலைக்கு அஞ்சாத தவ்ஹீது அழைப்பாளர்கள் இப்போதா அஞ்சப் போகிறார்கள்?
தவ்ஹீது அழைப்பாளர்கள் இறைத் தூதர்கள் அல்லர்! இறைத் தூதர்களுக்குத் தான் அல்லாஹ்வின் பாதுகாப்பு என்ற வாக்குறுதியும் வளையமும் இருந்தது. அந்த வளையம் இவர்களுக்குக் கிடையாது என்பதை நன்கு தெரிந்தே வைத்திருக்கிறோம்.
நாம் கொல்லப்படலாம்; அல்லது தானாக மரணிக்கலாம். ஆனால் கூலிப் படையை ஏவிக் கொலை செய்யலாம் என்று கணக்குப் போடுகின்ற, குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பதறியடித்துப் பேட்டி கொடுக்கின்ற இந்த வஞ்சகப் பேர்வழிகளுக்குச் சொல்கிறோம். நிர்வாகிகள் முதல் கடைநிலை அழைப்பாளர் வரை உள்ள இவர்களைக் கொலை செய்து விட்டால் இந்த இயக்கத்தை வேரறுத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள்.
இன்ஷா அல்லாஹ் ஏகத்துவத்தின் அழைப்பாளர்கள் புதைக்கப்பட மாட்டார்கள். விதைக்கப்படுவார்கள். ஆயிரம் அழைப்பாளர்கள் முளைப்பார்கள். அதனால் இந்தக் கொலைச் சதிக்கு ஒருபோதும் இந்த இயக்கம் பயப்படாது. சத்தியத்திற்காக சாவதை, ஷஹாதத் சாவாக, தியாகச் சாவாக, சந்தோஷச் சாவாகவே இந்த இயக்கத்தினர் எடுத்துக் கொள்வார்கள்.
நம்பிக்கை கொண்டு ஃபிர்அவ்ன் முன்னிலையில் வீர மரணத்தைத் தழுவிய மந்திரவாதிகள் முழங்கிய மந்திரச் சொற்களை முழங்கியவாறு இந்த இயக்கத்தினர் சாவார்கள், சரிவார்கள். இதை தவ்ஹீது அழைப்பாளர்கள் தங்களது பொது மேடைகளிலும், பயிற்சி முகாம்களிலும் சொல்லத் தவறுவதில்லை என்பதை இந்த நேரத்தில் ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலை போனாலும் தவ்ஹீதுக் கொள்கையில் விலை போக மாட்டோம். அரசியல், புகழ், பதவி, பொருள், மிரட்டல் இவற்றுக்காக நிலை மாற மாட்டோம். பச்சோந்தி போல் நிறம் மாற மாட்டோம்.
இதைச் சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், யாரும் வந்து எங்களைத் தாக்கி விட்டுப் போய் விடலாம் என்று சர்வ சாதாரணமாக வாசலைத் திறந்து வைக்க மாட்டோம். இன்ஷா அல்லாஹ் மனித சக்திக்கு உட்பட்டு எச்சரிக்கையுடன் இருப்போம்.
கடந்த காலங்களில் இவர்களைப் போன்ற நயவஞ்சகர்கள் நம்முடன் கலந்திருந்தனர். ஆனால் இப்போது இந்த இயக்கத்தில் தியாகச் சிந்தனையுடன், தூய மனதுடன் செயல்படுகின்ற எத்தனையோ சிங்கங்கள் இருக்கிறார்கள். அதனால் திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் நுழைந்து யாரையும் கடித்து விட்டுப் போய் விடலாம் என்று இவர்கள் மனப்பால் குடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
ஒரு தவ்ஹீதுவாதி ஏழையாக இருப்பான். ஆனால் கோழையாக இருக்க மாட்டான் என்பதை இந்தப் பச்சோந்திகளுக்குச் சொல்லி வைக்கின்றோம்.
————————————————————————————————————————————————————–
பொருளியல் தொடர்: 7
யாசகம் கேட்காதீர்
பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல்
இஸ்லாம் சம்பாதிக்கச் சொல்கிறது. ஆனால் மானம் மரியாதையை விட்டு விட்டு சம்பாதிக்கச் சொல்லவில்லை. பொருளாதாரத்தைத் திரட்டும் போது முதல் விதியாக சுயமரியாதை பேணச் சொல்கிறது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் போது, முதலில் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனுக்கு இணை வைக்கக் கூடாது என்றும், பிறகு சுயமரியாதை பேண வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா குறைஷித் தலைவர்களில் ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: என்னிடமும் குறைஷி இறைமறுப்பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்துகொண்டிருந்தது.
குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார். நாங்கள் அவரிடம் வந்து சேர்ந்தோம். அவரும் அவருடைய ஆட்களும் “ஈலிலியா‘வில் (பைத்துல் முகத்தஸில்) இருந்தார்கள். ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச) வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். (நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்த துடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.
(பிறகு எங்களைப் பார்த்து,) “தம்மை இறைத் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?” என்று கேட்டார். நான் “நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய உறவினன்” என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் (தம் அதிகாரிகளிடம்) “அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; (அவருடன் வந்திருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள்‘ என்று கூறினார். பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் “நான் (முஹம்மதைப் பற்றி) இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே “அவர் பொய் சொல்கிறார்‘ என்று கூறிவிட வேண்டும்” என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார். நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்து விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு அப்போது இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர்களைப் பற்றி பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்ட முதல் கேள்வி, “உங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது?” என்பதேயாகும். அதற்கு “அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்” என்று கூறினேன். (பிறகு) அவர், “உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படி(த் தம்மை “நபி‘ என்று) எப்போதாவது வாதித்ததுண்டா?” என்று கேட்டார். நான் “இல்லை‘ என்று பதிலளித்தேன். “அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா?” என்று கேட்டார். நான் “இல்லை‘ என்றேன்.
“அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை; பலவீனர்கள் தாம் (அவரைப் பின்பற்றுகின்றனர்)” என்று சொன்னேன். “அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்துகொண்டே போகின்றார்களா?” என்று கேட்டார். நான், இல்லை; அவர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்” என்று கூறினேன். “அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டார். நான் “இல்லை‘ என்று சொன்னேன். “அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக் கின்றீர்களா?” என்று கேட்டார். நான் “இல்லை‘ என்றேன்.
“அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?” என்று கேட்டார். நான் “இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்னேறாம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்கத் தெரியாது” என்று சொன்னேன். இதைத் தவிர (நபியவர்களை குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவர், “அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டார். நான் “ஆம்‘ என்று சொன்னேன். அவர், “அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எப்படி அமைந்தன?” என்று கேட்டார். “எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள் தாம்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை) அவர் எங்களை வெல்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெல்வோம்” என்றேன்.
“அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்?” என்று கேட்டார். நான் “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும்/ எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், “ஸகாத்‘ கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார்” என்று சொன்னேன்.
நூல்: புகாரி 7
நாம் முதலில் மானத்தை விடாமல் பொருளாதாரத்தைத் திரட்ட முடியுமா? என்று கவனிக்க வேண்டும்.
கஷ்டத்தை சகித்துக் கொள்ள வேண்டும்
நம்மை யாராவது அடித்தால் அல்லது திட்டினால் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு கஷ்டத்தைக் கொடுத்து சோதிக்கின்றான். இதை நாம் பொறுத்துக் கொள்வதில்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகüல் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி (ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்கüடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகüடம் நபி (ஸல்) அவர்கள் “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான். யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6470, 1469
யாசகம் கேட்கக் கூடாது
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.
ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் “முஸ்லிலிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!‘ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி 1472
சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்துள்ளார்கள்.
யாசகம் கேட்டால் வறுமை வரும்
யாசகம் வாங்கி சாப்பிட்டால் தொடர்ந்து அல்லாஹ் நமக்கு வறுமையைத் தருவான். யாசகம் வாங்கி சாப்பிடுவதை விட உழைத்து சாப்பிடுவது சிறந்தது. நாம் உழைத்துச் சாப்பிட்டால் அல்லாஹ் நமக்கு வறுமையைத் தர மாட்டான். தன்மானத்துடனும், வறுமையில்லாமலும் வாழ வேண்டும் என்றால் உழைத்து வாழ வேண்டும்.
யாருக்கு வறுமை ஏற்பட்டு அவன் மக்களிடம் அதை முறையிடுகிறானோ அவனுடைய வறுமை அடைக்கப்படாது. யாருக்கு வறுமை ஏற்பட்டு அவன் அதை அல்லாஹ்விடம் முறையிடுகிறானோ அவனுக்கு அல்லாஹ் விரைவான வாழ்வாதாரத்தையோ அல்லது குறிப்பிட்ட தவணைவரையுள்ள வாழ்வாதாரத்தையோ விரைவில் வழங்குவான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: திர்மிதி 2248
யாரிடமும் கேட்க கூடாது
பிறரிடத்தில் பிச்சை எடுத்து, தன்மானத்தை இழந்து பிறரிடத்தில் திட்டு வாங்கி சாப்பிடுவதற்குப் பதிலாக ஒருவர் உழைத்துச் சாப்பிட்டால் அது அவருக்கு மிகவும் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1480, 1471
யாசகம் கேட்பவர் மறுமையில் இழிவாக எழுப்பப்படுவார்
இவ்வுலகத்தில் நாம் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காகவும், தமது செல்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நாம் யாசகம் கேட்கிறோம். இப்படிக் கேட்பதால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இவ்வுலகத்தில் நமக்குப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் மறுமையில் நமக்குக் கடினமான பாதிப்பு உண்டு. இதை நாம் எண்ணாமல் சில நபர்கள் யாசகம் கேட்கிறார்கள். ஆனால் மறுமையில் கிடைக்கும் பாதிப்பை யாசகம் கேட்கக் கூடியவர் அறிந்திருந்தால் எவரும் யாசகம் கேட்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான். மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம் (அலை) அவர்களிடமும் பிறகு மூசா (அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1475
யாசகம் கேட்பதற்குத் தகுதியானவர்கள்
யாசகம் கேட்க மூன்று நபர்களுக்கு மட்டுமே தகுதியிருக்கிறது. இவர்களை தவிர யாரும் யாசகம் கேட்க தகுதி கிடையாது. (1) பிறருடைய கடனை அடைப்பதற்காகக் கடன் பட்டவர். (2) சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தனது வீடு மழையால் இடிந்து விட்டால் அவரும் அல்லது இயற்கையால் சேதம் ஏற்பட்டவரும் யாசகம் கேட்கலாம். (3) வறுமையில் உள்ளவர் யாசிக்கலாம். இவர் ஏழை என்று மூன்று நபர்கள் சாட்சி கூற வேண்டும்.
இவர்களைத் தவிர யாசிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.
கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் “வாழ்க்கையின் அடிப்படையை‘ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை‘ அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் “வாழ்க்கையின் அடிப்படையை‘ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை‘ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.
நூல்: முஸ்லிம் 1887
ஸஹாபாக்கள் எடுத்த உறுதிமொழி
ஸஹாபாக்களின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் இஸ்லாத்தை ஏற்ற பிறகு சாப்பிடுவதற்கும் இருப்பதற்கு இருப்பிடமும் அவர்களுக்குக் கிடையாது. இவ்வளவு கஷ்டப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவர்களின் நிலைமைகளைப் பார்த்த பின்னரும், நீங்கள் யாரிடத்திலும் யாசகம் கேட்கக் கூடாது என்று உறுதிமொழி எடுத்தார்கள்.
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று கூறினோம். பின்னர் அவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம்.
பின்னர் (மூன்றாவது முறையாக) “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா?” என்று கேட்ட போது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)” என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள்: “மக்களிடம் எதையும் (கைநீட்டி) யாசிக்கக் கூடாது” என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால் கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை.
நூல்: முஸ்லிம் 1886
தனது செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக யாசகம் கேட்டால் நரக நெருப்பையே கேட்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும். அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1883
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————————–
தொடர்: 8
ஸிஹ்ர் ஒரு விளக்கம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “சூனியம் செய்யப்பட்டவர்’ என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அந்த ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்று தான் கருத வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி, சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்ததாக குர்ஆன் கூறினாலும் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார். இது குறித்து அவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தவறானவை என்பதை சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.
“சூனியம் செய்பவர் என்பது தான் இந்த இடத்தில் பொருத்தமான வார்த்தை; நடையழகுக்காக சூனியம் செய்யப்பட்டவர் என்று அல்லாஹ் கூறி விட்டான்” என்ற வாதத்தின் மூலம் கருத்தை விட, நடைக்கே குர்ஆன் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற மோசமான வாதத்தை முன்வைத்து அதன் மூலம் குர்ஆனை இழிவுபடுத்தும் காரியத்தில் இஸ்மாயில் ஸலபி இறங்கியிருப்பதையும் கடந்த இதழில் கண்டோம்.
தன்னுடைய வாதத்தை நிலைநாட்டுவதற்கு இஸ்மாயில் ஸலபி மேலும் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார். அவற்றுக்கான விளக்கங்களையும் பார்ப்போம்.
சந்தேக நிவர்த்தி:
மஸ்ஹூர் என்ற பதம் ஸாஹிர் (சூனியக்காரர்) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை அறபு மொழி வழக்கின் படியும் அல்குர்ஆன் ஒளியிலும் நாம் விளக்கியுள்ளோம். எனினும், அதற்கான காரணம் கூறும் போது ஓசை நயம், இலக்கிய நயம் குறித்துப் பேசியுள்ளோம். இதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் குர்ஆனின் அடிப்படையிலும், குர்ஆன் விளக்கவுரைகளின் அடிப்படையிலும் நாம் கூறியதை மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கருதுகின்றோம். இருப்பினும் அல்குர்ஆன் ஓசை நயம் குறித்துக் கவனம் செலுத்துகின்றது என்பதை நிரூபிக்கச் சிறியதொரு உதாரணத்தைத் தர விரும்புகின்றோம்.
அல்குர்ஆனில் மூஸா-ஹாரூன் ஆகிய நபிமார்கள் பற்றிக் கூறும் போது முதலில் மூஸா நபியையும், அடுத்ததாக ஹாரூன் நபியையும் குறிப்பிடப்படும். (2:248, 7:122) 10:75, 21:48, 23:45, 26:48, 37:114, 37:120) இவ்வாறு அனைத்து இடங்களிலும் மூஸா-ஹாரூன் என இடம்பெற்றிருக்க,
சூனியக்காரர்கள் சுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு, ஹாரூன் மற்றும் மூஸாவின் இரட்சகனை நாம் நம்பிக்கை கொண்டு விட்டோம் எனக் கூறினர்.(20:70)
என மேற்படி வசனத்தில் மட்டும் ஹாரூன் வ மூஸா என மாறி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 7:122, 26:48 ஆகிய வசனங்களும் இதே செய்தியைத் தான் பேசுகின்றது. எனினும், 20:70 இல் மட்டும் ஹாரூன் நபியின் பெயர் முற்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வசனங்களுக்கு முந்திய வசனங்கள் அல்கா, தஸ்ஆ, மூஸா, அஃலா, அதா என இடம் பெறுவதால் இந்த ஓசை நயத்திற்கு ஹாரூன என்பதை இறுதியாக முடிப்பதை விட மூஸா என்பதைக் கொண்டு வருவதே பொருத்தமாகும். இதே போல இதற்குப் பிந்திய வசனங்கள் அப்கா, துன்யா, அப்கா, யஹ்யா, உலா எனத் தொடர்கின்றன. இந்த இடத்தில் வழமை போன்று ஹாரூன் நபியின் பெயரை இறுதியில் போட்டால் ஓசை நயம் அடிபடுகின்றது. எனவே, ஓசை நயத்தைக் கருத்தில் கொண்டு மூஸா என்ற பதம் இறுதியில் போடப்பட்டுள்ளது.
எனவே, நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தில் சூனியம் செய்பவர் என்ற அர்த்தமுடைய ஸாஹிர் என்ற பதம் பயன்படுத்தப்படாமல் மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது!
ஸாஹிர் என்பதற்குப் பகரமாக மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை குர்ஆனின் மூலமே நாம் நிரூபித்திருப்பதால் இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட இந்த வாதத்தின் வலிமை குன்றாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
என்று பயங்கரமான ஆதாரத்தை இஸ்மாயில் ஸலபி எடுத்துக் காட்டுகிறார். இரண்டு நபர்களைப் பற்றி பேசும் போது யாரை முதலில் சொன்னாலும் அதில் எந்த கருத்துச் சிதைவும் ஏற்படாது. எனவே சில இடங்களில் மூஸா என்பதை முதலில் சொல்லியிருப்பதும், சில இடங்களில் ஹாரூன் என்பதை முதலில் சொல்லி இருப்பதும் இலக்கணத்தில் உள்ளது தான். எனவே குர்ஆன் பொருத்தமற்ற நடையைப் பயன்படுத்தி விட்டது என்று யாரும் கூற மாட்டார்கள்.
ஆனால் சூனியம் செய்பவர் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இது போன்றதல்ல. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இவரது இந்த வாதமும் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் திருக்குர்ஆனுடன் அப்பட்டமாக மோதுகிறது என்பதால் எப்படியாவது குர்ஆனுடைய அர்த்தத்தை மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மற்றொரு வாதத்தை வைக்கிறார்.
அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்பவர் என்பது தான் அர்த்தம் என்றால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இன்னொரு அர்த்தமும் செய்யலாம் என்று பின்வருமாறு கூறுகிறார்.
உணவு உண்பவர்:
மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற வசனத்திற்கு அறபு மொழி அகராதியின்படி அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் மஸ்ஹூர் என்றால், உணவு உண்பவர் என்ற விளக்கத்தினை அளித்துள்ளனர். தமிழ் மொழிக்கு இது புது விளக்கமாகத் தெரிந்தாலும், பல குர்ஆன் விளக்கவுரைகள் இது குறித்துப் பேசியுள்ளன.
நபி(ஸல்) அவர்களை அவர் மஸ்ஹூரான மனிதர் என்று கூறினர். பிரபலமான கருத்தின்படி சூனியத்தைக் குறிக்கும் மற்றொரு கருத்தின்படி ஸஹ்ர என்றால் நுரையீரலைக் குறிக்கும். அதாவது, நீங்கள் முஹம்மதைப் பின்பற்றினால் உண்டு-குடிக்கக்கூடிய (சாதாரண) மனிதனைத் தான் பின்பற்றுகின்றீர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். (லபீத் இப்னு ரபீஆ எனும்) கவிஞனின் கூற்றும் இம்ரஉல் கைஸ் என்ற கவிஞனின் கவிதையும் இந்த மொழி நடைக்குச் சான்றாகும். (சுருக்கம்)
நுரையீரல் உள்ள ஒரு மனிதனைத் தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள். அவர் உண்கிறார்; பருகுகிறார்; உணவின் பாலும், பாணத்தின் பாலும் தேவையற்ற ஒரு மலக்கை நீங்கள் பின்பற்றவில்லை என்பதே இந்த வசனத்தின் அர்த்தமாகும். (குர்தூபி)
இவ்வாறே மஸ்ஹூர் என்பதற்கு உணவு உண்பவர், சாதாரண மனிதர் என்ற கருத்து இருப்பதாகப் பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர். சில அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அங்கீகரிக்கும் அறிஞர்கள் இவரும் எம்மைப் போலவே உணவு உண்ணக்கூடிய சாதாரண மனிதர் இவர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற கருத்தில் நபித்துவத்தை மறுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
26:153, 185 ஆகிய இரண்டு வசனங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்ட பின்னர், நீரும் எம்மைப் போன்ற மனிதர் தான் என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து முஸஹ்ஹரீன் என்ற பதத்தை சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் அவர்கள் பயன்படுத்தவில்லை. எம்மைப் போல உணவு உண்ணக்கூடிய சராசரி மனிதர் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகின்றது.
இவ்வாறு நோக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் குறித்து மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் இவரும் எம்மைப் போன்ற மனிதர் தானே என்ற இதே தோரனையில் தான் பேசப்படுகின்றது.
இத்தூதருக்கு என்ன நடந்தது? உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடந்து திரிகின்றார். இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட்டு, அவர் இவருடன் எச்சரிக்கக் கூடியவராக இருக்க வேண்டாமா? என்றும் கூறுகின்றனர். (25:7)
என நபி(ஸல்) அவர்கள் உணவு உண்பவராக இருக்கிறார். அதுவும் கஷ்டப்பட்டு உண்பவராக எம்மைப் போலவே இருக்கின்றார். இப்படிப்பட்ட சராசரி மனிதர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற அர்த்தத்தில் தான் உணவு உண்ணக்கூடிய ஒருவரைத் தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என அநியாயக்காரர்கள் கூறியதாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இந்த அடிப்படையில் நீங்கள் மஸ்ஹூரான ஒருவரைப் பின்பற்றுகிறீர்கள் என்ற வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டவர் அல்லது சூனியக்காரரை அல்லது உணவு உண்பவரை என்ற எந்த அர்த்தத்தை எடுத்தாலும் அந்த அர்த்தத்திற்கும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரபூர்வமான அறிவிப்புக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.
மஸ்ஹூர் என்ற சொல்லுக்கு நுரையீரல் உள்ளவர் என்ற பொருள் அரிதாக உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்த வசனத்தில் அவ்வாறு பொருள் கொள்வது மடமையாகும். அறிஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அடி சறுக்கும். இது போல் அடி சறுக்கியவர்கள் கூறியதைத் தேடிப் பார்த்து மேற்கண்ட வாதத்தை எடுத்து வைக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுகிறார்கள்; பருகுகிறார்கள் என்றெல்லாம் காபிர்கள் விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனம் மறுக்கப்படக் கூடியது அல்ல. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சாப்பிடாமல் இருக்கவில்லை. பருகாமல் இருக்கவில்லை. எனவே இது போல் காபிர்கள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. இவர் மட்டும் அல்ல அனைத்து நபிமார்களும் இப்படித் தான் இருந்தனர் என்று அல்லாஹ் அவர்கள் விமர்சனத்துக்கு மேலும் ஆதாரத்தை எடுத்துக் கொடுக்கிறான்.
ஆனால் 17:47,48 வசனங்களில் அல்லாஹ் அவர்களின் விமர்சனத்தை ஏற்கவில்லை. அந்த வசனங்களைப் பாருங்கள்!
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
திருக்குர் ஆன் 17:47,48
முஹம்மது சாப்பிடுகிறார் என்பது இதன் கருத்தாக இருந்தால் உமக்கு எவ்வாறு உதாரணம் கூறுகின்றனர் என்று பார்ப்பீராக என்று அல்லாஹ் ஏன் கூற வேண்டும்.
சாப்பிடக் கூடியவர் என்பது சரியான உதாரணம் தானே? சாப்பிடக் கூடியவர் என்று தெளிவான வார்த்தைகளால் எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. அது தவறான உதாரணம் என்று கூறவில்லை.
ஆனால் மஸ்ஹூர் என்று கூறிய போது அநியாயக்காரர்கள் தான் இப்படிக் கூறுவார்கள் என்கிறான். இது தவறான உதாரணம் என்கிறான். இவ்வாறு கூறுவது வழிகேடு என்கிறான். இந்த இடத்தில் சாப்பிடக் கூடியவர் என்ற அர்த்தம் அறவே பொருந்தாது என்பதை இவ்வசனமே தெளிவுபடுத்தி விடுகிறது.
நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கவும், குர்ஆனை மறுக்கவும் எத்தகைய தந்திரங்களை எல்லாம் இஸ்மாயில் ஸலபி கையாள்கிறார் என்பது புரிகிறதா?
இதன் பிறகு தான் தன்னை முழுமையாக இனம் காட்டுகிறார். குர்ஆன் ஹதீஸில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தாலும் அதை உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தாலும் இதற்கு முன் இதை யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று கேட்கிறார்.
இந்த வசனமும், ஹதீஸும் முரண்படுவதாகக் குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய எந்த அறிஞரும் கருதவில்லை. முற்கால அறிஞர்களில் (முஃதஸிலா போன்ற வழிகேடர்களைத் தவிர) எவரும் இந்த வசனம் அந்த ஹதீஸிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு மட்டும் இந்த வசனங்களுக்கும், ஹதீஸிற்குமிடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அனைவரும் குர்ஆனைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று கூறுவதா? அல்லது இவர் தான் புரிந்து கொள்வதில் ஏதோ தவறு விடுகின்றார் எனக் கருதுவதா? எது நடுநிலையான முடிவாக இருக்கும்? அவர்கள் அனைவருக்கும் தவறு வருவதற்கான வாய்ப்பை விட இவர் ஒருவருக்குத் தவறு வருவதற்கான வாய்ப்புத்தானே அதிகமாக உள்ளது?
இவர் இவரது விளக்கவுரையில் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியது நபிமார்களின் தூதுத்துவத்தையே முற்று-முழுதாக உளறல் என்று கூறுவதற்காகத் தான் என்று கூறியிருக்கும் போது, அப்படிக் கூறி விட்டு அந்த அர்த்தத்தில் கூறப்பட்ட குர்ஆன் வசனத்திற்கும், இந்த நபிமொழிக்கும் முரண்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?
எனவே, இந்த ஹதீஸை ஏற்பது குறைஷிக் காஃபிர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக இருக்கின்றது என்ற தவறான வாதத்தின் அடிப்படையில் இந்த ஹதீஸை மறுப்பது தவறானதாகும் என்பது தெள்ளத்-தெளிவாகத் தெரிகின்றது.
இவருக்கு தக்லீத் நோய், மத்ஹப் நோய் பீடித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதுவரை ஒருவரும் சொல்லாவிட்டாலும் சொல்வது சரியா தவறா என்பது தான் மார்க்கத்தில் கவனிக்க வேண்டும்.
மத்ஹப்வாதிகள் எடுத்து வைக்கும் அதே வாதத்தை எடுத்து வைக்கிறார்.
ஆனால் இந்த வாதத்தில் மத்ஹப்வாதிகள் உண்மையாளர்களாக உள்ளனர். இவர் இதிலும் உண்மையாளர் இல்லை.
இதுவரை உலகத்தில் ஒரு அறிஞரும், ஒரு பிரிவினரும் கூறாத ஒரு கருத்தை விடுபட்ட நபிவழி என்று அறிஞர் இப்னு பாஸ் அவர்கள் ஒரு பத்வா கொடுத்தனர். அதை தமிழிலும் நூலாக அச்சிட்டு இலட்சக்கணக்கில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அனுப்பினார்கள். மதனிகள் மூலம் அதை வினியோகமும் செய்தனர். யாரும் சொல்லாத கருத்து என்று இதை இவரும் இவரது ஆட்களும் விமர்சனம் செய்தார்களா?
இவர்கள் புதிதாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டுள்ளனர். அறிவியல் கருத்துக்களைக் கூறும் வசனங்கள் பலவற்றுக்கு நாம் செய்த தமிழாக்கத்தை – இது வரை யாரும் சொல்லாத அர்த்தத்தைக் கொடுத்துள்ளனர்.
எனவே இந்த வாதம் அப்படியே வழிகேடர்களின் வாதமாகும்.
யாரும் சொல்லவில்லை என்றால் கூட சொல்லும் கருத்து சரியா என்று தான் பார்க்க வேண்டும். அறிவுப்பூர்வமாக வாதிக்க முடியாத போது மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு நியாயப்படுத்தும் இந்தக் கேவலமான போக்கை இவர் கைவிட வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்