ஏகத்துவம் – நவம்பர் 2008

தலையங்கம்

பருவ மழையும் பாவ மன்னிப்பும்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா காஃபிர்களிடம் கொண்டு வந்தார்கள்.

அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை.

அல்குர்ஆன் 22:62

இந்த வசனத்தின் மூலம் மக்கா காஃபிர்கள் வணங்கிய கடவுள்கள் பொய்யானவை என்று பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்கவில்லை. அது மட்டுமின்றி நபியவர்களையும், இந்தக் கொள்கையை ஏற்ற மக்களையும் சித்ரவதை செய்தனர். பெரும் கொடுமைக்கு உள்ளாக்கினர்.

இந்தச் சமயத்தில் அந்த மக்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். “யூசுப் நபியின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போன்று பஞ்சத்தை ஏற்படுத்து” என்று அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். இந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு பஞ்சம் ஏற்படுகின்றது. தாங்க முடியாத பஞ்சத்தின் காரணமாக இறந்தவற்றைக் கூட மக்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். மழை வராதா? என்று வானத்தை நோக்கி ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். வானம் மழை பொழியவில்லை; வறட்சி நீங்கவில்லை; வறுமை விலகவில்லை.

வேறு வழியில்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மழைக்காகப் பிரார்த்திக்கும்படி கோரிக்கை வைக்கின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்குச் சரியான நெஞ்சழுத்தம் தான். அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது என்று நான் உங்களிடம் பிரச்சாரம் செய்கின்றேன். இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அதற்காகத் தான் இந்தத் தண்டனை உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றது. நீங்களோ அதைக் கண்டு கொள்ளாது மழை வேண்டிப் பிரார்த்தனை செய்யச் சொல்கின்றீர்களே! இணை வைப்பை விட்டும் விலக மாட்டீர்கள். ஆனால் மழை மட்டும் வேண்டுமா?’ என்று கேட்டு விட்டு, மழைக்காகப் பிரார்த்தனை செய்கின்றார்கள். மழையும் பொழிகின்றது.

இந்தச் செய்தி புகாரியில் 4774வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 5007வது ஹதீஸாகவும் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில் மக்கத்துக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிரார்த்தனை செய்யச் சொன்னதன் மூலம், தங்கள் தெய்வங்கள் பொய்யானவை; அல்லாஹ் மட்டும் தான் உண்மையானவன் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்கள்.

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

அல்குர்ஆன் 29:63

மழை பொய்த்துப் போகும் கட்டங்களில் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடி, அவனிடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் மழைத் தொழுகை என்ற வணக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஏனெனில் அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் மழையை அனுப்பாவிட்டால் இந்தப் பூமியை உயிர்ப்பிக்க வேறு எந்தச் சக்தியாலும், எத்தகைய மகான், அவ்லியா, பெரியார்கள் வந்தாலும் முடியாது.

எனவே தான் அவனிடம் மன்றாடி மழை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும் என்ற வணக்கத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

பொதுவாக தமிழகத்தில் வறட்சி நிலவுகின்ற போதெல்லாம் தவ்ஹீது ஜமாஅத் மழைத் தொழுகை நடத்தத் தவறுவதில்லை. இந்த நபிவழியை தமிழகத்தில் வேறெந்த ஜமாஅத்தும் நடைமுறைப்படுத்துவதில்லை. கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு இடங்களில், பல்வேறு கட்டங்களில் மழைத் தொழுகை நடத்தி வந்திருக்கின்றோம்.

தமிழகத்தின் வளமே தென்மேற்குப் பருவ மழை தான். வடகிழக்குப் பருவ மழை என்பது தமிழகத்திற்கு உபரியாகக் கிடைக்கும் வளமாகும். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனது.

பருவ மழை பொய்த்துப் போனால் என்ன விளைவு ஏற்படும்?

உணவுப் பஞ்சம்

குடிநீர் தட்டுப்பாடு

நிலத்தடி நீர் வற்றிப் போதல்

மின்சார உற்பத்தியில் பாதிப்பு

விவசாயம் சார்ந்த தொழில் துறைகள் நசிந்து போதல்

கால்நடைகள் அழிதல்

இவற்றால் ஏற்படும் விலைவாசி உயர்வுகள்

ஏற்கனவே நீராவி எஞ்சின்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடுகின்ற கார்பன் டை ஆக்ஸைட் வாயுவினால் பூமியின் வெப்பம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மழை பொழியா விட்டால் பூமியின் வெப்பம் மேலும் அதிகமாகி இந்தப் புவியே அக்கினி மயமாக மாறும் அபாயம்!

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் மேற்கண்ட விளைவுகள் அனைத்தையும் தமிழகம் கண்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் சில ஊர்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழைத் தொழுகை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் பருவ மழை தொடங்கி, தற்போது தொடர்ந்து பெய்து வரும் நற்செய்தியை அடைந்திருக்கின்றோம்.

மழைத் தொழுகை என்பது உடனடி நிவாரணம் தான்.  தொடர்ந்து மழை பொழியாமல் நின்று போவதற்குக் காரணம், இஸ்லாமிய சமுதாயத்தில் நிலைத்து நிற்கும் இணை வைப்பு முதற்கொண்டு நாம் சாதாரண பாவம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற, நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் டி.வி.க்களின் படக் காட்சிகள் வரையுள்ள பாவங்களில் இருந்து மக்கள் வெளியேறி, திருந்தி அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.

அல்லாஹ் மழையைத் தராமல் இருப்பதற்கு முழுக் காரணம் நாம் செய்கின்ற பாவங்கள் தான்.  இதைக் கீழ்க்காணும் வசனங்கள் தெளிவாக்குகின்றன.

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காகத் திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

அல்குர்ஆன் 7:96

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்.  உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.  செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் 71:10-12

இதனால் தான், முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது.  நிச்சயமாக ஒரு நாளில் நூறு தடவை அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகின்றேன்” என்று கூறுகின்றார்கள்.

பாவங்கள் அதிகம் செய்கின்ற நாம் இந்தப் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

இனியேனும் தினந்தோறும் பாவ மன்னிப்பு தேடுவதுடன், பாவங்களை விட்டும் விலகி விடுவோமாக!

———————————————————————————————————————————————-

கஅபா வரலாறு

எம். ஷம்சுல்லுஹா

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களேபரம், போர், குண்டு வெடிப்பு என உலகத்தின் அனைத்துப் பகுதிகளும் அமளி துமளியாகி அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் ஒரேயொரு ஊர் மட்டும் அமைதியிலும் அடக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்றது. சுற்றி எரியும் பயங்கர பாவத் தீ அங்கு மட்டும் பற்றாமல், பரவாமல் எப்படித் தள்ளி நிற்கின்றது? அந்தத் தீயை விட்டும் அந்த ஊர் தன்னை மட்டும் எப்படித் தற்காத்துக் கொண்டு தனித்து நிற்கின்றது?

சுற்றி எரியும் நெருப்பு வளையத்தின் நடுவே சுண்டைக்காய் அளவிலான அந்தப் பகுதி மட்டும் பற்றி எரியாமல் பத்திரமாக இருக்கின்றது. அந்தப் பகுதி எது? மானுட குலத்திற்கு வழிகாட்டும் அந்த மண்ணின் மகுடம் எது? அது தான் முதல் ஆலயத்தைத் தன்னகமாகக் கொண்ட புனித மக்கா நகரமாகும்.

மங்காத புகழ் கொண்ட அந்த மக்காவின் அற்புதத்தைத் தான் அல்குர்ஆன் அகில உலகத்தை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றது.

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 28:57

அமைதிப் பூங்காவை நோக்கி ஆண்டுக்கொரு பயணம்

இவ்வாறு உலக மக்கள் அனைவரின் அபய வாழ்விற்கு, அமைதி வாழ்விற்கு மாதிரி நகரமாக மக்கா திகழ்கின்றது. இதை, மாதிரி நகரமாகவும், அபாய நகரங்களுக்கு மத்தியில் அபய நகரமாகவும் அமைதிப் பூங்காவாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளதற்குக் காரணம் அங்குள்ள ஆலயம் தான்.

அது தான் உலகிலேயே முதன் முதலில் மக்களுக்கு ஒரு வணக்கத் தலமாக நிறுவப்பட்ட ஆலயமாகும். இதைப் பின் வரும் வசனம் தெரிவிக்கின்றது.

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

அந்த ஆலயத்தை நோக்தித் தான் வல்ல இறைவன் ஆண்டு தோறும் மக்களை சென்று வரச் செய்கிறான். ஏன்?

அது உலக மக்களின் ஒருமைப்பாட்டுச் சின்னம்! வெள்ளையன், கறுப்பன் என்ற நிற வேறுபாடுகளை – ஆப்ரிக்கன், அமெரிக்கன் என்ற தேசிய வேறுபாடுகளை – ஆங்கிலேயன், அரபியன் என்ற மொழி வேறுபாடுகளை – ஆண்டான், அடிமை என்ற உயர்வு தாழ்வுகளை – மனிதர்களுக்கு மத்தியில் உடைத்தெறிந்து உலகிலுள்ள மனித குலத்தை ஆண்டுதோறும் அங்கு ஒன்று கூட்டுகின்றது.

நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் தான். உங்களுக்குள் வேறுபாடுகள் தலை காட்டக் கூடாது என்று இந்த முதல் ஆலயத்தில் ஒன்று கூட்டி உத்தரவு போடுகின்றது.

பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள். யாருக்கும் அங்கே முதலிடம் என்பது இல்லை.

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 22:25

ஒரு இந்தியனுக்கு இருக்கின்ற அதே உரிமை தான் மக்காவைச் சேர்ந்த அரபியனுக்கும் உண்டு என்று இந்த வசனம் பிரகடனம் செய்கிறது.

ஏற்றத் தாழ்வுகளின் கேந்திரமாக வழிபாட்டுத் தலங்களே அமைந்திருக்கும் சூழ்நிலையில் இஸ்லாம் மாத்திரமே அவற்றைச் சமத்துவத்தின் பிறப்பிடமாக மாற்றி அமைத்திருக்கிறது.

ஜனநாயகத்தின் சிகரம்

அறிவியலில் ஆகாயம் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா மீது சாதியச் சகதி அள்ளி வீசப்படுகின்றது. அவரைக் கொலை செய்யச் சதி செய்ததாகக் கைது செய்யப் பட்டவர்கள் கூறும் காரணம், இன வெறி தான்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ இந்தச் சாதியத்தை – சனாதன தர்மத்தை அடியோடு அழித்து சகோதரத்துவத்தை, மக்காவில் நடைபெறும் ஹஜ் எனும் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. அத்துடன் அந்தப் புனித நகரத்தின் சட்ட ஒழுங்கையும் பாதுகாக்கச் செய்கின்றது.

அந்நகரத்தில் எப்படி அமைதி நிலவுகின்றது? திரையரங்குகள், ஆபாச நடன நட்சத்திர ஆடலரங்குகள், மதுக் கடைகள், விபச்சார விடுதிகள், கூத்துக்கள், கும்மாளங்கள், கொலைகள், கொள்ளைகள் இல்லாமல் அந்த நகரம் எப்படி நகர்கின்றது என்பதையும் ஒரு கணம் உலக மனித இனத்தைச் சிந்தித்துப் பார்க்கச் சொல்கின்றது.

அபய பூமி! அமைதிப் பூங்கா

(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

அல்குர்ஆன் 105:1-5

இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து, கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.

உலகெங்கிலும் உள்ள நாடுகள், நகரங்கள் ஏதாவது ஒரு நாட்டின் ஆதிக்கத்தில் வந்திருக்கின்றன. ஆனால் மக்கா நகரம் மட்டும் எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்தின் கீழும் ஒரு போதும் வந்ததில்லை. ஏன்? இது அபய பூமி என்பதால்!

மனித இனம் இந்த அபய பூமியை உற்று நோக்கிப் பார்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது. அவ்வாறு உற்று நோக்கினால் போதும். இதன் பின்னணியில் இருப்பது திருக்குர்ஆன் தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்.

அதனால் தான் அந்தத் திருக்குர்ஆன் அமைதி, அபயத்திற்கு மறு பெயராகத் திகழும் மக்காவை கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் பார்க்கச் சொல்கின்றது.

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?

அல்குர்ஆன் 29:67

இந்த வசனத்தின் கட்டளைப்படி நாம் அதிசய அற்புத ஆலயத்தை, அல்குர்ஆன் மற்றும் அதன் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பார்ப்போம்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கஅபாவை நோக்கித் தொழுகின்றார்கள். அதை நோக்கித் தான் இந்த துல்கஃதா, துல்ஹஜ் மாதங்களில் பயணமாகிறார்கள். ஆம்! தூரத்தில் நின்று தொழுத மக்கள் அதன் பக்கத்தில் நின்று தொழப் போகின்றார்கள். அதைச் சுற்றிலும் உவகை பொங்க வலம் வரப் போகின்றார்கள். அவர்கள் கஅபாவை அங்கு வலம் வருகின்ற வேளையில் நாம் அதன் வரலாற்றை வலம் வருவது மிகவும் பொருத்தமாகும்.

வாருங்கள்! கஅபாவைப் பற்றி ஒரு வரலாற்று வலம் வருவோம். அதன் ஊடே மக்கா வெற்றியைப் பற்றியும் கண்டு வருவோம், இன்ஷா அல்லாஹ்!

தொன்மை வாய்ந்த தூய ஆலயம்

இந்தப் பூமியில் வாழ்ந்த முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஅபாவாகும். இது திருக்குர்ஆன் கூறும் வரலாற்று உண்மை!

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

உலகம் தோன்றி எத்தனையோ பில்லியன் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் என்ற சக்கரம் ஒரு முனையில் துவங்கி, மறு முனையான இறுதி நாளை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கின்றது. அது தனது இறுதிக் கட்டத்தை அடைந்து வருகின்றது.

காலமெனும் வெள்ளத்தின் வேகமான ஓட்டத்திலும் அதன் துவக்கத்திலிருந்து இது வரை நிலைத்து நிற்கின்ற எந்தவொரு தொன்மைச் சின்னத்தையும் உலகில் பார்க்க இயலாது.

காரணம், இந்தக் கால ஓட்டத்தில் எத்தனை கண்டங்களை கடல் கொண்டிருக்கின்றது! எத்தனை கண்டங்கள் மலைகளாக நிமிர்ந்திருக்கின்றன! அத்தகைய மலைகளில் ஒன்று தான் இமயம் என்று அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது.

இப்படிக் கால வெள்ளத்திலும், கரை புரண்டெழுந்து தரையை இரையாக்கிய கடல் வெள்ளத்தாலும், தலை கீழாகப் புரண்டெழுந்த மாற்றங்களாலும் அழிவைக் காணாத ஒரு புராதனச் சின்னம் ஒன்று உண்டென்றால் இந்தக் கஅபாவெனும் ஆலயம் தான்.

அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

அல்குர்ஆன் 22:29

இதைப் பழம் பெரும் தொன்மை வாய்ந்த ஆலயம் என்று அல்லாஹ் மிகப் பொருத்தமாகவே பட்டம் சூட்டியிருக்கின்றான்.

இந்தக் கஅபாவை வலம் வருபவர் அதை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். காரணம், அதன் உயரம் 39 அடி 6 இன்ச் ஆகும்.

முதலில் இந்த ஆலயம் இதை விடவும் அதிகமாக இருந்திருக்கலாம். காரணம், நபி ஆதம் (அலை) அவர்கள் 60 முழம் உயரமானவர்கள். அவரும் அவரது காலத்து மக்களும் இந்தக் கஅபாவிற்குள் சென்று தொழுகின்ற அளவில் இன்னும் உயரமாக இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் புனர் நிர்மாணம் செய்யும் போது அதன் உயரம் குறைக்கப்பட்டு, குறைக்கப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்க வேண்டும்.

புனர் நிர்மாணம் பெற்ற புனித ஆலயம்

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட அந்த முதல் ஆலயம், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் புனர் நிர்மாணம் பெறுகின்றது. அதுவரை அந்த ஆலயத்தின் செயல்பாடு என்ன? ஆதம் நபி முதல் இப்ராஹீம் நபி வரை அதன் வரலாற்றுச் சங்கிலித் தொடர் என்ன? என்பதைப் பற்றி குர்ஆன், ஹதீஸில் குறிப்பு ஏதும் இல்லை.

ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்திற்குப் பின் அல்லாஹ் அதற்குரிய வரலாற்றுச் சங்கிலியின் பயணத்தை இன்று வரை தொடரச் செய்துள்ளான். இனி இந்த உலகம் அழிவைச் சந்திக்கும் நாள் வரை அது தொடரும்.

இப்போது நாம் பார்க்க வேண்டியது இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலம் வரை உள்ள வரலாற்றைத் தான். அந்த வரலாற்றுச் சுரங்கத்தில் பல்வேறு பாடங்கள், படிப்பினைகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.

இறைவனின் இனிய நண்பர் இப்ராஹீம்

எல்லாம் வல்ல அல்லாஹ் முதன் முதலில் இந்தப் பூமியில் எழுப்பிய அந்த ஆலய இடத்தை அப்படிப் பாதுகாத்து வைத்திருந்தான். அதற்குப் புத்துயிர் கொடுக்க நாடி, அந்தப் பணியை ஒருவரிடம் கொடுக்க விரும்பினான். அவர் யாரென்றால் அந்த இறைவனுக்காகத் தம்மையே அர்ப்பணம் செய்யத் தயாரானவர். ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அனைத்துத் தியாகங்களையும் செய்தவர். அவரிடம் தான் அந்தப் பொறுப்பை வழங்குகின்றான். அவர் தான் அவனது நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்கள்.

அவனுக்காகவே காலம் முழுவதும் ஓயாது, உறங்காது உழைத்த உத்தமருக்கு முதுமைப் பருவம் ஏற்பட்ட பின்பு குழந்தைப் பாக்கியம் இல்லை. அதற்காக அவர் அல்லாஹ்விடம், “என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக!” (37:100) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அவரது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் வேளை வருகின்றது. அல்லாஹ் அவருக்கு ஹாஜர் என்ற பெண்ணைத் துணைவியாக அளிக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். “அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து, “இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?’ எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) “என் சகோதரிஎன்று சொன்னார்கள்.

பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள், “நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லைஎன்று சொன்னார்கள்.

பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்க சுத்தி (உளூ) செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார்.

உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து அங்க சுத்தி செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார்.

உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்என்று பிரார்த்தித்தார்.

இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பி இருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான)  ஹாஜரைக் கொடுங்கள்என்று (அவையோரிடம்) சொன்னான்.

சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்தக் காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2217

அன்பளிப்பாகக் கிடைத்த ஹாஜர் மூலமாக அல்லாஹ், இஸ்மாயீல் என்ற குழந்தையை அவர்களுக்கு அளிக்கின்றான். இதைத் தான் அவர்கள் நன்றிப் பெருக்குடன் அல்லாஹ்விடம் சொல்லிக் காட்டுகின்றார்கள்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

அல்குர்ஆன் 14:39

இப்போது இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் மக்காவின் பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப, நீண்ட நாளுக்குப் பிறகு பிறந்த – கொஞ்சி மகிழ வேண்டிய குழந்தை இஸ்மாயீலை, கொண்ட மனைவியுடன் மக்கா பாலைவனத்தில் கொண்டு போய் விடுகின்றார்கள். அங்கு தான் அவர்களுக்குத் தொன்மை வாய்ந்த தூய ஆலயத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.

எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 22:26

பகல் நேரத்தில் பற்றி எரியும் மணல் துகற்கள்! மனித சஞ்சாரம் இல்லாத, மரம் செடி இல்லாத பொட்டல் பள்ளத் தாக்கு! நீர் ஓடை அல்ல, வாடை கூட இல்லாத பாலைவனம்!

இத்தகைய பாலைவனத்தில் தான் பகுத்தறிவுப் பகலவன் இப்ராஹீம் நபியவர்கள் தம் அருமை மகன் இஸ்மாயீலை, பால் முகம் பார்த்துப் பார்த்து உள்ளத்தில் பால் வார்க்கின்ற செல்லக் குழந்தையை, ஏகத்துவத்தின் குலக் கொழுந்தை விட்டுச் செல்கிறார்கள்.

“ஏன் என்னை விட்டு மனைவி மக்களைப் பிரிக்கின்றாய்?’ என்று எதிர்க் கேள்வியை இறைவனிடம் கேட்காமல், அந்த ஐயப்பாட்டிற்கு எள்ளளவு கூட உள்ளத்தின் அடித்தளத்தில் இடம் கொடுக்காமல் பாதுகாப்பில்லாத பரந்த மணற்பரப்பு வெளியில் தன் மனைவியையும் மழலையையும் விட்டுச் செல்கிறார்கள்.

இதோ! இறைவனிடம் அவர்கள் தொடுக்கின்ற, உள்ளத்தைத் தொடுகின்ற பிரார்த்தனைகள்! உண்மையில் அவை அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்பட்ட இரத்தின வரிகள்!

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

அல்குர்ஆன் 14:35-41

அவர்கள் செய்த இந்தப் பிரார்த்தனை அனைத்துமே ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை! அவை அனைத்துமே நம்முடைய கவனத்தை ஈர்ப்பவை! நம்முடைய உள்ளங்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தொடுபவை!

பாதுகாப்பில்லாத பாலைவனத்தில் பச்சிளம் பாலகனையும் மனைவியையும் விட்ட அவர்கள்,

  1. தம் சந்ததிக்கு எந்த அபாயமும் ஏற்படாத வகையில் அந்த இடத்தை, அந்த ஊரை அபய பூமியாக ஆக்கி விடு என்று பிரார்த்திக்கின்றார்கள்.
  2. என்னுடைய சந்ததியையும், மனைவியையும் நீர் வளமில்லாத, வேளாண்மை விவசாயம் இல்லாத நிலப்பகுதியில் குடியமர்த்தி இருக்கிறேன்; எனவே நீர் வளத்தை வழங்கு என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
  3. இங்கு இருப்பது உனது புனித ஆலயம் மட்டும் தான்; மனித சஞ்சாரமில்லை. உன்னைத் தொழுவதற்காகக் கட்டியிருக்கின்ற இந்த ஆலயத்தில் மனித சஞ்சாரத்தை ஏற்படுத்து என்று பிரார்த்திக்கிறார்கள்.

இந்தப் பிரார்த்தனைகளை அல்லாஹ் எப்படி அங்கீகரித்து, நிறைவேற்றுகின்றான் என்பதை இந்த வரலாற்றுத் தொடரின் ஊடே நாம் தெளிவாகப் பார்க்கலாம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஆலயம் என்றால் அதன் அருகே மனித சஞ்சாரம் வேண்டும். மனித சஞ்சாரத்திற்கு இன்றியமையாத நீர் வளம் வேண்டும்.

இவ்விரண்டில் மனித சஞ்சாரம் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்ப வடிவில் குடியேறி விடுகின்றது.

மனிதன் ஒரு நகரை அமைக்க வேண்டும் என்றால் முதலில் நீர் வளத்தை ஏற்படுத்தி விட்டுத் தான் பிறகு மனித வளத்தைக் கொண்டு வருவான்.

ஆனால் இது மனித ஏற்பாடல்ல! இறைவனின் ஏற்பாடு! எனவே முதலில் மனித வளத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டு, அதன் பின் நீர்வளத்தை ஏற்படுத்துகின்றான்.

இதன் மூலம் அந்த ஆலயத்தை ஏகத்துவத்தின் இணையற்ற மையமாக நிறுவுகின்றான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? காஃபிராக இருந்த கணவன், மனைவி இருவரில் கணவர் மட்டும் இஸ்லாத்தைத் தழுவி உள்ளார். மனைவி இஸ்லாத்தை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடலாமா? இவர்களின் நிலை பற்றிக் குர்ஆன், ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளது?

அப்துர்ரஹ்மான், ஈரோடு

இணை கற்பிப்பவர்களிடத்தில் திருமண சம்பந்தம் செய்து கொள்வதற்குத் திருக்குர்ஆன் தடை விதித்துள்ளது.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

இந்த வசனம், இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் செய்வதற்குத் தடை விதிக்கிறது. ஏற்கனவே திருமணம் முடித்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவளுடன் இணைந்து வாழக் கூடாது. ஏனெனில் முஸ்லிமான கணவனுக்கு முஸ்லிமல்லாத பெண் அனுமதிக்கப்பட்டவள் அல்ல என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 60:10

இந்த வசனத்தின் அடிப்படையில் நபித்தோழர்கள், இஸ்லாத்தை ஏற்காத தங்கள் மனைவிமார்களை விவாகரத்துச் செய்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாமா) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதித்து வந்தார்கள். இணை வைப்பவர்களின் மனைவிமார்களில் யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களுக்காக, அவர்களுடைய கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடும்படியும், நிராகரிக்கும் பெண்களுடன் திருமண பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் (குர்ஆனில் சட்டம் அருளி) முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்ட போது, உமர் (ரலி) அவர்கள், அபூ உமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல் குஸாயீயின் மகளையும் (அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால்) விவாகரத்துச் செய்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2734

எனவே இஸ்லாத்தை ஏற்காத மனைவியுடன் சேர்ந்து வாழ்வது மார்க்க அடிப்படையில் குற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம், ஒருவர் இஸ்லாத்தில் இணைவதற்கு இது நிபந்தனையில்லை. இஸ்லாத்தை ஏற்ற பிறகும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால், அதன் காரணமாக அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராக மாட்டார். இஸ்லாத்தில் இருந்து கொண்டே பாவம் செய்தவராவார்.

? நான் சவூதியில் இருந்த போது இரண்டு முறை ஹஜ் செய்து விட்டேன். தற்போது என் மனைவியை (வயது 58) ஹஜ்ஜுக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளேன். விண்ணப்பத்தில் மஹ்ரமான ஆண் துணைக்கு, எனக்குத் தெரிந்த ஒருவரை (வயது 68) சித்தப்பா முறை என்று எழுதி அனுப்பியுள்ளேன். என் மகன் சவூதியில் வேலை பார்க்கிறார். அங்கு சென்று விட்டால் மகனுடன் சென்று என் மனைவி ஹஜ் செய்வார். இவ்வாறு ஹஜ்ஜுக்கு அனுப்புவது சரியா?

எம். ராஜா முஹம்மது, வெள்ளையூர்

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராகஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233

இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும். வயது, வசதி, பாதுகாப்பு இது போன்ற காரணங்களால் மஹ்ரமான துணை தேவையில்லை என்று ஒரு பெண் கருதினால் தனியாக ஹஜ் செய்யச் செல்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றதுஎன்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 3595

தனியாக ஹஜ்ஜுக்கு வரும் பெண்ணைப் பற்றி இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள். அந்த முன்னறிவிப்பு நிறைவேறியதையும் நபித்தோழர் அறிவிக்கின்றார். தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்துப் பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

எனவே ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

மஹ்ரமான துணை அவசியம் என்ற ஹதீஸின் அடிப்படையில் ஹஜ் விண்ணப்பத்தில் இவ்வாறு கேட்டிருப்பார்கள். இதில் பொய்யான தகவலைக் குறிப்பிட்டது தான் மார்க்க அடிப்படையில் குற்றமே தவிர தனியாக ஹஜ்ஜுக்கு அனுப்பி வைப்பதில் தவறில்லை.

மேலும் சவூதிக்குச் சென்ற பின் மகனுடன் சேர்ந்து தான் ஹஜ் செய்யப் போகின்றார் என்பதால் விமானப் பயணத்தின் போது மட்டுமே தனியாகச் செல்லும் நிலை இருக்கின்றது. எனவே இது எந்த விதத்திலும் மார்க்கத்திற்கு முரணானது கிடையாது.

———————————————————————————————————————-

ஜாக் விடுக்கும் ஜோக் சவ(டா)ல்

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.

அல்குர்ஆன் 62:5

இந்த வசனத்தைப் படிக்கின்ற எந்தவொரு யூதனும், “எங்கள் சமுதாயத்தை எப்படிக் கழுதை என்று குறிப்பிடலாம்; கழுதையைப் போல் நான்கு கால்கள் எங்களுக்கு இருக்கின்றனவா? வால் இருக்கிறதா? கதி கலங்க வைக்கும் காட்டுச் சப்தம் இருக்கின்றதா?” என்ற கேள்வியைக் கேட்க மாட்டான்.

காரணம், இதில் கூறப்படுகின்ற உவமை, ஒப்பு நோக்கு யூத சமுதாயம் வேதத்தின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தது பற்றித் தான் என்பதை அந்த யூதன் புரிந்து கொள்வான். சாதாரண அறிவு உள்ளவர்கள் இப்படித் தான் புரிந்து கொள்வார்கள்.

ஒருவனைப் பார்த்து சிங்கம் என்று கூறினால், படிப்பறிவற்ற பாமரன் கூட, சிங்கம் என்றால் நான்கு கால்களும், வாலும் இருக்கின்றதா? என்று கேட்க மாட்டான்.

ஆனால் ஜாக் புத்திசாலிகள் (?)  இப்படித் தான் கேட்கிறார்கள்.

“கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு” என்ற தலைப்பில் ஏகத்துவம் அக்டோபர் 2006 இதழிலும், “நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரையல்ல!” என்ற தலைப்பில் நவம்பர் 2006 இதழிலும் கட்டுரைகள் எழுதியிருந்தோம். அதில் ஜாக்கின் செயல்கள் யூதர்களின் செயல்பாட்டுக்கு ஒத்திருப்பதை ஒப்பு நோக்கியிருந்தோம்.

“ஜாக் பின்பற்றுவது இஸ்லாமிய காலண்டரல்ல! இஸ்ரேலியக் காலண்டர் தான்”  என்று செப்டம்பர் 2008 இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதாவது ஜாக்கை யூத மார்க்கத்துடன் ஒப்பிட்டிருந்தோம்.

யூத மதத்துடன் ஜாக் எதில் ஒத்துப் போகின்றது?

கணிப்பு விஷயத்தில் ஒத்துப் போகின்றது. அதாவது ஜாக்கிற்கும் யூத மதத்திற்கும் உள்ள ஒற்றுமை பிறை விஷயத்தில் செய்யும் கணிப்பும் கணக்குமாகும்.

கணிப்புக் காலண்டர் கண்ட வரலாறு

யூதர்களிடம், “சேன்ஹெட்ரின்’ (லத்தீன் மொழியில் “ஒன்றாக அமர்தல்’ என்று பொருள்) என்ற உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பிறை அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் பணியை இந்த உச்ச நீதிமன்றம் தான் செய்து வந்தது. இருவர் சாட்சி சொல்வர்; அந்த சாட்சியத்தை வைத்து மாதத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்துக் கொண்டிருந்தது.

இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூத மக்களுக்குக் குன்றின் மேல் நின்று தீப்பந்தம் அசைத்துக் காட்டப்படும். மற்றொரு குன்றின் மேல் நிற்பவர் பதிலுக்கு அது போல் தீப்பந்தம் அசைப்பார். இதை வைத்து வெளியூர் யூத மக்கள் அதை மாதத்தின் துவக்க நாள் என்று விளங்கிக் கொள்வர்.

இந்த உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை உடைப்பதற்காக பிரிவினைவாதிகள், மாதத்தின் வேறு நாட்களிலும் தீப்பந்தத்தை அசைத்து இடையூறு செய்தனர். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் இரவில் தூதர்களை அனுப்பி மாதத்தின் துவக்கத்தைத் தெரிவித்தது. இந்தத் தூதர்கள் வந்து சேர்வதற்கு முன்னால் மறு நாள் துவங்கி, பண்டிகையை யூத சமுதாயம் இரு வேறு நாட்களில் கொண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. (ஜாக்கினர் போல் அவர்களும் இதற்காகக் கவலைப்பட்டனர்.) எனவே இதையெல்லாம் தவிர்ப்பதற்காக யூத உச்ச நீதிமன்றம் நான்காம் நூற்றாண்டில் நிரந்தரக் காலண்டருக்குத் தாவியது. அதாவது கணக்கு, கணிப்பின் பக்கம் தாவியது.

கண்ணால் பார்க்கும் நடைமுறையிலிருந்து கணிப்பிற்குத் தாவிய யூதர்களின் வரலாறு இது! இணைய தளங்களில் ஹிப்ரு காலண்டர் என்ற தலைப்பில் தேடினால் இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் தான் செப்டம்பர் இதழில், ஜாக்கின் காலண்டர் யூதக் காலண்டர் என்று ஒப்பிட்டு எழுதப்பட்டது. அதாவது யூதக் காலண்டரும் கணிப்பு!  இவர்களுடைய காலண்டரும் கணிப்பு!

இங்கு ஒப்பீடு செய்திருப்பது கணிப்பைத் தான். இதைப் புரிந்து கொள்ளாத பேர்ணாம்பட்டு ஜாக்கினர், “ஐந்து வருடக் காலண்டரைக் கொண்டு வாருங்கள்; ஆறு வருடக் காலண்டரைக் கொண்டு வாருங்கள்; அது எங்கள் காலண்டருடன் எப்படி ஒத்திருக்கின்றது என்று காட்டுங்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது கழுதையைப் போல் கால்களும் வாலும் இருக்கின்றதா? என்று ஜாக்கினர் ஜோக்கான சவடால்களை எழுப்பியுள்ளனர். இதிலிருந்து ஜாக்கின் அபார ஞானத்தைத் தெரிந்து கொள்ளாலம்.

அண்மையில் கோவையில் ஜாக்குடன் விவாதம் செய்த கேரள நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பினர்  “ஜாக் காலண்டர் இஸ்லாமிய காலண்டரல்ல, இஸ்ரேலிய காலண்டர் தான்” என்று சொன்னதை மேற்கோள் காட்டியே செப்டம்பர் 2008 இதழில் இந்தத் தலைப்பில் இதை வெளியிட்டிருந்தோம். இது நாம் ஏற்கனவே எழுதியதை உறுதிப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டிருந்தோம்.

“கே.என்.எம். மார்க்க அறிஞர் ஜக்கரிய்யா சுலாஹி அவர்கள், “ஜாக்கின் காலண்டர் யூதக் காலண்டர் தான். அதை நான் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். யூதக் காலண்டரில் 31 வரும். இந்த விஷயத்தைத் தவிர மற்றவைகளில் ஜாக் காலண்டர், இஸ்ரேலியக் காலண்டரை ஒத்திருக்கின்றது” என்று குறிப்பிட்டார்,”

இது தான் அந்த இதழில் குறிப்பிட்ட செய்தியாகும். அதாவது இந்தச் செய்தியில், “யூதக் காலண்டருக்கும் ஜாக் காலண்டருக்கும் உள்ள வித்தியாசம் யூதக் காலண்டரில் 31 தேதி வரும்’ என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளோம்.

இது விளங்காத பேர்ணாம்பட்டு ஜாக்கினர், ஐந்து வருடக் காலண்டரை வைத்து ஒப்பிட்டுக் காட்ட முடியுமா? என்று சவடால் விட்டுள்ளனர்.

“31 தேதி வருவது தான் வித்தியாசம்’ என்று கூறுவதிலேயே இரண்டு காலண்டருக்கும் தேதி வித்தியாசம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. கணிப்பு என்ற அடிப்படையில் யூதர்களும், ஜாக்கினரும் ஒத்துப் போகின்றனர் என்பது தான் மேற்கண்ட விவாதத்தின் சாராம்சம். இந்தக் கருத்தைத் தான் அக்டோபர், நவம்பர் 2006 இதழ்களிலும், செப்டம்பர் 2008 இதழிலும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

கே.எம்.என். அமைப்பைச் சேர்ந்த ஜக்கரியா சுலாஹி அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்ட போது அதற்குப் பதிலளிக்காத ஜாக்கினர், தவ்ஹீது ஜமாஅத்தினரை நோக்கிச் சவடால் விடுவது வேடிக்கையாக உள்ளது.

பேர்ணாம்பட்டு ஜாக்கினரே! உலகப் பிறை கொண்டு வருவதாகப் புறப்பட்ட உங்கள் அமைப்பிலேயே ஒருவர் நோன்பு நோற்று, மற்றவர் நோன்பு நோற்காமல் நாறிப் போன பின்னரும் இது குறித்துப் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

கே.எம்.என். விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தான் கமாலுத்தீன் மதனி உட்பட ஜாக்கினர் பலர் யூதக் கணிப்புக் காலண்டரை ஏற்காமல், மறு நாள் நோன்பு நோற்றனர். ஜாக்கின் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் சிலரைத் தவிர ஜாக்கில் யாரும் யூதக் கணிப்புக் காலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த உண்மை பேர்ணாம்பட்டு ஜாக்கிற்குத் தெரியாதா?

பிறை விஷயத்தில் நீங்கள் முதலில் ஒத்த கருத்துக்கு வந்து விட்டு அதன் பின்னர் மற்றவர்களுக்குச் சவால் விடுங்கள்; சவடால் பேசுங்கள். இல்லையேல், “ஒரு நாள் கழித்து நோன்பு நோற்றதால் எங்களைக் காஃபிரைப் போல் பேசியும் எழுதியும் வருகிறார்களே’ என்று உங்களைப் பற்றி உங்கள் அமீர் புலம்பித் தீர்த்த கடிதத்தை வெளியிட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

————————————————————————————————————————————————

ஏன் என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை

கே.எம். அப்துந் நாசிர்,கடையநல்லூர்

நம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல் இன்று வரை ஆல விருட்சமாக வேர் விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி, வளர்ந்து, வாடிக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த ஏகத்துவக் கொள்கை மிக வீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக் காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டது தான்.

மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் இறையச்சம் உடையவர்கள் இறைவழி நடப்பதற்காகக் கேட்ட கேள்விகளும், அதற்குத் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து அளிக்கப்பட்ட பதில்களும் தான் என்றால் மிகையாது.

இன்றைக்கும் நம்முடைய தவ்ஹீத் சகோதரர்களை ஆதாரம் என்ற வார்த்தையினால் கிண்டலடிக்கக் கூடியவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

இதற்குக் காரணம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும் இதற்கு என்ன ஆதாரம்? இந்த ஹதீஸ் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்று நம் சகோதரர்கள் கேட்கின்ற கேள்விகள் தான்.

மக்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத பரேலவிகள், மத்ஹபுவாதிகள், மார்க்க விரோதிகள், இணை வைப்பாளர்கள் ஒவ்வொரு காலத்திலும் கையிலெடுத்த ஆயுதம், கேள்வி கேட்பது வழிகேடு  என்பதைத் தான்.

நாங்கள் எதைச் சொன்னாலும் உயிருள்ளவன் கைகளில் இறந்தவனுடைய உடல் எப்படி இருக்குமோ அது போன்று ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் முன்னிலையில் கைகட்டி வாய்பொத்தி இருக்க வேண்டும். எங்களைப் போன்றவர்களை அவமதித்தால் அதாவது எங்களிடம் வினா தொடுத்தால் நீங்கள் செல்லுமிடம் நரகம் தான். எங்களின் பெயர்களைக் கூறுவதற்குக் கூட உங்களுக்குத் தகுதியில்லை என்றுரைத்து ஒன்றுமறியா அப்பாவி மக்களைப் பயமுறுத்தினார்கள்.

தங்களின் அசத்தியக் கருத்துக்களைத் திணிப்பதற்கு இதையே கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதற்கும் துணிந்து சிலர் கேள்விகள் கேட்கும் போது அவர்களின் முகங்கள் கருத்தன. சத்தியத்தின் முன்னால் தங்களின் அசத்தியங்கள் மாண்டு போவதைக் கண்டு அவர்களின் இதயங்கள் இறுகின. பதில் சொல்ல முடியாமல் திணறினர். இவர்களின் உளறல்களினால் தான் அதிகமான மக்கள் அவை போலி என்பதை உணர்ந்து சத்தியத்தின் பக்கம் அணி திரண்டனர்.

இன்றைக்கும் சில அசத்திய வாதிகள் தங்களின் வழிகேட்டிற்கு ஆள் சேர்ப்பதற்காக, கேள்வி கேட்பது அநாவசியம் என்ற பரேலவியிஸத்தின் ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளனர். இவர்களின் அசத்தியக் கொள்கைக்கு எதிராக இவர்களிடம் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு இவர்களிடம் திருமறை, மற்றும் திருநபி வழியின் அடிப்படையில் தெளிவான பதில் இல்லையென்பதால் தான் கேள்வி கேட்பது அநாவசியமாக இவர்களுக்குத் தோன்றுகிறது.

பொதுவாக நமக்குத் தெரியாத விஷயங்கள் இருக்குமானால் அதைத் தெரிந்து கொள்வதற்கு ஆசைப்பட வேண்டும். தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக மார்க்கம் தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். ஏனெனில் இது மறுமை வாழ்க்கை தொடர்புடையது. இதில் ஏற்படும் தவறுகள் நிரந்தர வேதனைக்கு நம்மை ஆளாக்கி விடும். எனவே மார்க்க விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி  அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. அவற்றில் பல விஷயங்களை நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லது தவறாக விளங்கி வைத்துள்ளோம். இவற்றை நீக்குவதற்கு, மார்க்கம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்கம் தடுத்த சில காரியங்களைக் கூட அவற்றை நன்மை என்று எண்ணி நாம் செய்து வருகிறோம். தர்ஹாவிற்குச் செல்லுதல், தாயத்து அணிதல் போன்ற ஏராளமான காரியங்களை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

இது போன்று, கட்டாயம் செய்ய வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்திய பல காரியங்களைச் செய்யாமல் இருக்கிறோம். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை சரிவரச் செய்வதில்லை.

அல்லது திருக்குர்ஆன் நபிமொழிகளில் குறிப்பிட்டவாறு அந்த வணக்கங்களைச் செய்வதில்லை. இதற்குக் காரணம் மார்க்கத்தைப் பற்றியும் அதன் சட்டங்களைப் பற்றியும் நாம் சரியாக அறியாமல் இருப்பதாகும்.

இஸ்லாம் எந்த விஷயத்தையும் குருட்டுத்தனமாக அப்படியே நம்பிவிட வேண்டும் என்று போதிக்கவில்லை. இறைவன் தந்த வசனங்களில் எவ்வித முரண்பாடும் இருக்கவே இருக்காது என்றாலும் அதையும் கூட சிந்திக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர்ஆன் 25:73

பல விஷயங்களை கேள்வி கேட்பதின் மூலம் தான் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.

நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

அல்குர்ஆன் 16:43

என்ற இறை வசனம்,  தெரியாத விஷயங்களைத் தெரியவில்லை என்று விட்டு விடாமல், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

பின்வரும் வசனமும் கேள்வி கேட்பதினால் தான் பல விளக்கங்கள் நமக்குக்  கிடைக்கும் என்றுரைத்து கேள்வி கேட்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

கேட்போருக்கு யூஸுஃபிடமும், அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 12:7

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இறை வேதம் தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டால் அதற்கு முன்பாக அதைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

(முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர்!

அல்குர்ஆன் 10:94

நபி (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்களும் அன்றைய காலத்து மக்களும் கேட்ட பல கேள்விகளை திருமறைக் குர்ஆன் பட்டியலிட்டு அதற்குப் பதில் கூறுகிறது.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர் (2:189)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர் (2:215)

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். (2:217)

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். (2:219)

அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (2:220)

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர் (2:222)

தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (5:4)

அந்த நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (7:187)

(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். (33:63)

போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (8:1)

(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (17:85)

(முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (18:83)

(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (20:105)

கேள்வி கேட்பது அநாவசியம் என்பவர்கள் மேற்கண்ட அத்தனை இறை வசனங்களுக்கும் இன்னும் ஹதீஸ்களில் ஸஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கும் என்ன பதில் கூறப் போகிறார்கள்?

பின்வரும் ஹதீஸ்கள் மார்க்கம் தொடர்பாகக் கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி -ஸல்- அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி -ஸல்- அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து  கொண்டேன்.

நூல்: புகாரி 3607

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மது அவர்கள் யார்?” என்று கேட்டார். -அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்- “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர் தாம்என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை “அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டு விடக் கூடாதுஎன்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உம் மனதில் பட்டதைக் கேளும்!என்றார்கள்……

நூல்: புகாரி 63

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் பலியிடுவதற்கு முன்பே தெரியாமல் தலையை மழித்து விட்டேன்என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!என்றார்கள். பின்னர் மற்றொரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே தெரியாமல் அறுத்துப் பலியிட்டு விட்டேன்என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!என்றார்கள். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்என்றே விடையளித்தார்கள் (நூல்: முஸ்லிம் 2514)

மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் கேள்வி கேட்டு மார்க்கத்தை அறிந்து கொள்வது மிக மிக அவசியம் என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பின்வரும் ஹதீஸும் இதற்கு மற்றொரு சான்றாகும்.

அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும், மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

நூல்கள்: புகாரீ 100, முஸ்லிம் 2673

மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்கப்படும் போது அதற்கு அறிவீனமாகப் பதிலளிப்பவர்களை நபியவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பதே தவறாக இருந்தால் அதற்குப் பதிலளிப்பவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கேள்வி கேட்டால் தானே அவர்கள் தவறாகப் பதிலளிப்பார்கள். கேள்வி கேட்பதே கூடாது என்று சொன்னால் அவர்கள் தவறாகப் பதிலளிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆனால் நபிவர்கள் தவறாகப் பதிலளிப்பவர்களைப் பற்றித் தான் எச்சரிக்கை செய்கிறார்களே தவிர கேள்வி கேட்பதைப் பற்றி எச்சரிக்கவில்லை. இதிலிருந்து மார்க்கம் தொடர்பாகக் கேள்விகள் கேட்பது நபியவர்கள் வழிகாட்டிய ஒன்று என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கேள்விகள் கேட்பது கூடாது என்பதற்குச் சில ஹதீஸ்களை அசத்தியவாதிகள் எடுத்து வைக்கின்றனர். ஆனால் உண்மையில் அந்தச் செய்திகளைச் சிந்தித்தால் கேள்வி கேட்பதைத் தான் அச்செய்திகள் வலியுறுத்துகின்றன என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபித் தோழர்கள் (சிலர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, “(நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவு படுத்தாமல் இருக்கப்போவதில்லைஎன்று சொன்னார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்ட போது அங்கிருந்த ஒவ்வொருவரும் தத்தமது ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுது கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் எனத் தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹுதாஃபா (தாம் உன் தந்தை)என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒரு போதும் கண்டதில்லை. எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்என்று சொன்னார்கள்.  (புகாரி 6362)

ஒரு நபித் தோழர் கேள்வி கேட்டதினால் நபியவர்கள் கோபப்பட்டுள்ளார்கள். எனவே கேள்வி கேட்பது கூடாது. அது அநாவசியமானது என அறியாதவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் இதனைச் சரியாகச் சிந்திக்கவில்லை என்றே கூறலாம். உண்மையில் கேள்வி கேட்பது தவறு என்று சொன்னால் ஸஹாபாக்கள் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பதில் சொல்லப்பட்டிருக்கக் கூடாது. மேலும் இந்த ஹதீஸிலும் கூட,

“நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவு படுத்தாமல் இருக்கப்போவதில்லை”

என்று நபியவர்கள் கூறிய வாசகம் கேள்வி கேட்பது மற்றும் அதற்கு பதிலளிப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

கேள்வி கேட்டதினால் நபியவர்கள் கோபப்படவில்லை. கேட்கப்பட்ட கேள்வி மார்க்கம் தொடர்பற்றதாகும். தனி நபர் தொடர்பானதாகும். இதனால் இம்மை மறுமை பயன் விளையப் போவதில்லை. மார்க்கத்தை அறிவதற்காகக் கேட்கப்பட்ட கேள்வியாக அது இல்லை. கேலிக்காகத் தான் இவ்வாறு கேள்வி கேட்டார் என்றும் சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகத் தான் நபியவர்கள் கோபம் கொண்டார்கள். எனவே மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பதைத் தடை செய்வதற்கு இதனை ஆதாரம் காட்டுவது தவறான புரிதல் என்பதைத் தவிர வேறில்லை.

மேலும் அவசியமற்ற கேள்வியாக இருந்தும் கூட நபியவர்கள் பதிலளித்து விட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக்  கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

நூல்: புகாரி (5975)

கேள்விகள் கேட்பது ஹராம் என்று கூறக் கூடியவர்கள் அதற்குச் சான்றாக மேற்கண்ட ஹதீஸையும் எடுத்துரைக்கின்றனர்.

மேற்கண்ட செய்தியும் சத்தியத்தை அறிவதற்காக, அசத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதற்காக கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு எதிரானதல்ல. இதில் நபியவர்கள் கஸ்ரத்துஸ் ஸுஆல் என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் பொருள் அதிகமாகக் கேட்பது என்பதாகும். இவ்வாசகத்திற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று அதிகம் கேள்வி கேட்பது. மற்றொன்று அதிகம் யாசகம் கேட்பது. இதில் இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஏனெனில் யாசகம் கேட்பதை இழிவானதாகக் கருதி ஏராளமான நபிமொழிகள் வந்துள்ளன.

ஆனால் அதிகமாகக் கேள்வி கேட்பது என்ற பொருளைக் கொடுத்தால் மார்க்கத்திற்குத் தொடர்பில்லாத தனி நபர் தொடர்பாகவோ அல்லது வீணிற்காக, விளையாட்டிற்காக, கேலிக்காக அதிகம் கேள்விகள் கேட்பது தான் வெறுக்கத் தக்கது என்கின்ற கருத்தைத் தான் அது குறிக்கும். ஏனெனில் ஸஹாபாக்கள் நபியவர்களிடம் அதிகமதிகம் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு நாம் திருமறைக் குர்ஆனிலிருந்தே ஏராளமான சான்றுகளைக் காட்டியுள்ளோம்.

கேள்வி கேட்பதை விட விவாதம் செய்தல் என்பது மிகப் பெரும் விசயமாகும். ஏனெனில் கேள்வி கேட்டல் என்பது கேட்பதோடு நின்று போய்விடும். பதிலளிப்பவர் அதற்குத் தவறாகச் சொன்னாலும் சரியாகச் சொன்னாலும் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. ஆனால் விவாதம் செய்யும் போது அதிகமதிகம் கேள்விகள் தான் கேட்கப்படும். சஹாபாக்கள் மார்க்கச் சட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ததைக் கூட திருமறைக் குர்ஆன் கண்டிக்கவில்லை. மாறாக பாராட்டியே கூறுகிறது.

தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

அல்குர்ஆன் 58:1

கேள்வி கேட்பதே தவறு என்று சொன்னால் விவாதம் செய்வது அதை விட பெரிய தவறாகும். ஆனால் ஸஹாபாக்கள் நபியவர்களிடம் விவாதமே செய்துள்ளனர். எனவே அதிகம் கேட்பது என்பதற்கு அதிகமாகக் கேள்வி கேட்டல் என்ற பொருளைக் கொடுத்தால் அதில் மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பது ஒருபோதும் அடங்காது என்பது மிகத் தெளிவானதாகும். அப்படி யாராவது வாதிட்டால் அவர் ஏராளமான வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை மறுத்த குற்றத்திற்குள்ளாவார்.

பின்வரும் ஹதீசும் சிந்திக்கத் தக்கதாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கி விட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஆம் என்று சொல்லி விட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகி விடும்என்று கூறிவிட்டு, “நான் எதைச் (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத் தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும் தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2599

மேற்கண்ட ஹதீஸ் மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பது கூடத் தவறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது போல் இருக்கலாம். ஆனால் இந்தச் சம்பவத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதன் தெளிவான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.

மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கி விட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

அப்போது தான் ஒரு மனிதர் “ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?”  என்று கேட்கிறார்.

இவர் இவ்வாறு கேட்கும் போது,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள்.

ஒரு கேள்வி கேட்கும் போது நபியவர்கள் பதிலளிக்காமல் இருந்தால் அந்தக் கேள்வியை அப்படியே விட்டு விடவேண்டும். கேள்வி கேட்பதே கூடாது என்பதால் நபியவர்கள் கோபப்படவில்லை. மாறாக அவர் அக்கேள்வியைக் கேட்கும் போது நபியவர்கள் மவுனமாக இருக்கின்றார்கள். இரண்டாவது தடவை கேட்கும் போதும் மவுனமாக இருக்கின்றார்கள். இதனை அவர் குறிப்பால் உணர்ந்து மூன்றாவது தடவை கேட்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் துருவித் துருவி கேட்கின்றார். இதனால் தான் நபியவர்கள் கோபப்படுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்க வேண்டிய கருத்து இது தான். நபியவர்களிடம் எந்தக் கேள்வி கேட்கும் போது அவர்கள் மவுனமாக இருக்கிறார்களோ அந்தக் கேள்வியை மீண்டும் ஒரு முறை கேட்பது கூடாது. இதற்கான காரணத்தை பின்வரும் ஹதீஸ்களைப் படித்தால் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் எதை(ச் செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்

நூல்: முஸ்லிம் 4703

நபியவர்கள் நம்முடைய முடிவிற்கு விட்டு விட்டார்கள் என்பதை அவர்களிடம் கேள்வி கேட்கும் போது அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருப்பதன் மூலம் தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாகக் கேள்வியே கேட்காமல் ஸஹாபாக்களாக முடிவு செய்து கொள்தல் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

கேள்வி கேட்கும் போது நபியவர்கள் மவுனமாக இருக்கின்றார்கள். அதற்குப் பிறகும் ஒருவர் கேள்வி கேட்டால் அது மாபெரும் குற்றமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றி (என்னிடம்)  கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டு விடுமானால், அவர் தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெரும் குற்றம் இழைத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 4704

எனவே மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பது தவறு என்பதை வலியுறுத்துவதாக மேற்கண்ட ஹதீஸ் அமையவில்லை. மாறாக மார்க்கம் தொடர்பாக நபியவர்களிடம் ஒன்றைக் கேட்கும் போது அவர்கள் மவுனமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் கேட்பது கூடாது என்பது தான் இதன் விளக்கமாகும்.

மேலும் நபியவர்களின் காலத்திற்கு மட்டும் தான் இது பொருத்தமாகும். ஏனெனில் நபியவர்கள் ஆம் என்று கூறினால் தான் மார்க்கத்தில் ஒன்று கடமையாகும். அவர்களுக்குப் பின் வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கிடையாது. எனவே நபியவர்களைத் தவிர மற்றவர்களிடம் மார்க்கம் தொடர்பாக விளங்கிக் கொள்வதற்காக எத்தனை தடவை திருப்பித் திருப்பிக் கேட்டாலும் அது தவறானதாகாது.

எனவே இந்த ஹதீஸின் சரியான கருத்தை விளங்காமல் கேள்வி கேட்பது தவறு என்பதற்கு ஆதாரமாக இதனை எடுத்துரைப்பது அவர்கள் சரியாக விளங்கவில்லை என்பதையே படம் பிடித்துக் காட்டுகிறது.

மார்க்கம் தொடர்பான செய்திகளைப் பற்றி விவரம் கேட்கும் போது, பதிலளிப்பவர் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பதிலளிப்பவரா? என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!

அல்குர்ஆன் 8:1

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

அல்குர்ஆன்8:20

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

அல்குர்ஆன் 47:33

இஸ்லாத்தின் அடிப்படைகள் திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளும் தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. மேலும் இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு மனிதர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கினால் அவர்கள் முஃமின்களாக இருக்க மாட்டார்கள் என்பதையும் பின்வரும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (நேரான) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6:145

இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி மட்டுமே நேரான வழி! அந்த ஒரு வழியை மட்டுமே நாம் பின்பற்றி நடக்க வேண்டும். மற்ற வழிகளைத் தேர்வு செய்யக்கூடாது.

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 24:51

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:36

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4:65

இதைப் போன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும், அதை முஃமின்கள் ஏற்று நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன. இவ்வாறு செய்பவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும், மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

நூல்கள்: புகாரீ 100, முஸ்லிம் 2673

இந்த நபிமொழியில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்வுகள் இன்று நடைமுறையில் இருப்பதை நாம் காண முடிகிறது. இன்று இஸ்லாத்தின் பெயரால் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான பல ஃபத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புகளை) கூறி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் தர்ஹா வழிபாட்டைக் கூடும் என்று கூறும் ஆலிம்களும் இன்று உள்ளனர். அவர்களை இன்றும் பெரிய அறிஞர்கள் என்று மக்கள் நம்புகின்றனர். இவர்களைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்குத் தான் மேற்கூறப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.

எனவே மார்க்கத் தீர்ப்பு கேட்கும் போது, அதற்குப் பதில் சொல்பவர் எதன் அடிப்படையில் பதிலளிக்கிறார் என்பதைக் கவனித்து, கேள்வியைக் கேளுங்கள்.

நமது இதழிலும் மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாக வைத்துப் பதில் அளிப்போம். இதில் தவறுகள் தென்பட்டால் எங்களுக்குத் தெரிவிக்கலாம். சரியான விமர்சனமாக இருந்தால் தவறைத் திருத்திக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகிறேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.

  1. இந்தக் குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.
  2. மக்களுக்கு நன்மையே நாட வேண்டும்.

நூல்: புகாரி 7275

———————————————————————————————————————————————–

ஷியாக்கள் ஓர் ஆய்வு     தொடர் – 11

நபிமார்களை இழிவுபடுத்துதல்

அபூஉஸாமா     

அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம்.

அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.

அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.

இறைக் கோபமும் சிறை வாசமும்

அல்லாஹ், தனது தூதர் யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்?

அதைத் திருக்குர்ஆனிலிருந்து பார்ப்போம்.

எல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது. இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர். அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.

ஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம் யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிச் சொல்கிறான்.

(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.

அல்குர்ஆன் 10:98

தமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார்கள்.

அதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச் சென்று கப்பலில் பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

யூனுஸ் தூதர்களில் ஒருவர்.

நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.

இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.

அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.

அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.

அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.

அல்குர்ஆன் 37:139-148

தன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

அல்குர்ஆன் 21:87. 88

யூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை மறுப்பில்லையா?

இது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட  அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் செல்கிறது ஷியாயிஸம்.

தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?

அலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன் இவர்கள் நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், “ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, “உளவாளி யாரும் இல்லையே!” என்று சொன்னோம். அதற்கு அவர், “கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை” என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

“வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்” என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

“நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்” என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

யூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர் ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.

இங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ் நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்கள்.

யூனுஸ் நபி அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப் போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 68:48

அல்லாஹ்வின் மீது கோபம் கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை! இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த முன்னெச்சரிக்கையை விடுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376

இறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா விஷக் கிருமிகள், தங்கள் பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.

 ஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப் போகின்றது.

இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த அருட்கொடை விளங்கும்? இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப் புறந்தள்ளி விட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும் அலீயை உயர்த்துகின்றார்கள்.

அதை இப்போது பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————-

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனை

மக்கள் விரும்பிச் செல்கின்ற இடங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டத்தை மக்காவில் உள்ள இறையில்லமான கஃபாவில் நம்மால் காண முடிகிறது.

மக்கள் உள்ளங்களை ஈர்க்கும் புனிதத் தலமாகவும் பாதுகாப்பு மையமாகவும்  இதை ஆக்குமாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ததின் விளைவால் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போகக் கூடிய இடமாக இன்றைக்கு கஃபதுல்லாஹ் இருந்து கொண்டிருக்கிறது.

இறைவா! இவ்வூரை பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டதுஎன்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:126

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களின் உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

அல்குர்ஆன் 14:37

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காகப் பிரார்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகராக்கினேன்.  இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிராத்தித்தது போன்று நான் மதீனாவிற்காக அதன் ஸாஉ, முத்து ஆகியவற்றில் (வளம் ஏற்பட) பிரார்த்தித்தேன்.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 2129

புறக்கணிக்கப்படும் பாதுகாப்பற்ற நாடுகள்

மக்களின் உள்ளங்களைக் கவரக்கூடிய பல அம்சங்களை அல்லாஹ் இந்த ஆலயத்தில் ஏற்படுத்தி இருக்கிறான். இந்த அம்சங்கள் மக்களைக் கவர வேண்டும் என்றால் அச்சமற்ற பாதுகாப்பான நிலை அங்கு அவசியம் நிலவ வேண்டும். அப்போது தான் மக்கள் இந்த இடத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாகச் செல்வதற்கு முன்வருவார்கள்.

பொதுவாகக் கூச்சல், குழப்பம், சண்டை சச்சரவுகள் இல்லாமல் பயமற்ற நிலையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று மனிதர்கள் எல்லோரும் விரும்புகிறார்கள்.

பாதுகாப்பும் நிம்மதியும் அற்ற இடம் எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் அங்கு மக்களை வரவிடாமல் பயம் தடுத்து விடுகிறது.

இந்தியாவில் தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரத்து மிகவும் குறைந்திருக்கிறது. இந்த நாட்டிலே கண்ணையும் நெஞ்சையும் கவரும் பல அம்சங்கள் இருந்தும் கூட முன்பு போல் வெளிநாட்டுப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவது கிடையாது.

நம் நாட்டில் பெருகி வரும் வன்முறைகளும் குண்டு வெடிப்புகளும் தான் அயல்நாட்டவர்களின் வருகை தடை படுவதற்குக் காரணமாக இருக்கிறது. அண்டை நாடான இலங்கையில் இயற்கை வளம் நிறைந்திருந்தாலும் அங்கு நடக்கும் யுத்தத்தின் காரணமாக அமைதியற்ற நிலையில் மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் இவர்களுக்கு இந்த உலகமே இருண்டு விடுகிறது.

பாதுகாப்பான வழிபாட்டுத்தலம்

ஒரு வழிபாட்டுத்தலம் பாதுகாப்புத் தன்மையை இழந்து விட்டால் என்ன கதிக்கு ஆளாகும் என்பதைப் புரிந்து கொள்ள அண்மையில் இராஜஸ்தானில் ஏற்பட்ட கொடூரமான சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்.

வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக புரளி கிளம்பியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார்கள். நூற்றுக்கணக்கானோர் நெரிசலில் சிக்கி மாண்டதால் வழிபாட்டு ஆலயம் மையவாடியாகக் காட்சியளித்தது. மக்களின் வாழ்வும் விருப்பமும் பாதுகாப்பான இடத்தை நோக்கியே இருப்பதால் உலக மக்கள் ஒன்று கூடும் இடமான மக்காவை அபயமளிக்கும் பூமியாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

மக்காவில் உள்ள அல்லாஹ்வின் ஆலயம், அழிவுகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனிவர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 28:57

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!

அல்குர்ஆன் 95:3

தனித்தன்மையை உணர்த்தும் நிகழ்வுகள்

புனிதமிக்க கஃபதுல்லாஹ்வின் பாதுகாப்புத் தன்மையை விவரிக்கும் சில நிகழ்வுகளை அல்லாஹ் வரலாற்றில் நிகழ்த்தியிருக்கிறான். அல்லாஹ்வின் இந்த ஆலயமும் இதைச் சார்ந்து இருப்பவர்களும் இறைவனால் பாதுகாக்கப்பட்டு நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததைப் பின்வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

மனிதனும் செடிகொடிகளும் இல்லாத ஒரு பாலைவனமாக கஃபதுல்லாஹ் இருந்த போது இறை உத்தரவுப்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவியையும் சிறு குழந்தையாக இருந்த இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் ஆலயத்தில் விட்டுவிட்டு வந்தார்கள். தன் மனைவி மக்களைக் காக்கும் பொறுப்பை அல்லாஹ்விடத்திலே ஒப்படைத்தார்கள்.

கைக்குழந்தையுடன் அந்தப் பாலைவனத்தில் தனியாக விடப்பட்ட ஹாஜர் (அலை) அவர்களுக்கு வானவர் ஒருவர் கூறிய ஆறுதல் இந்த ஆலயத்தின் தனித்தன்மையை உணர்த்துகிறது.

அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான்என்று சொன்னார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3364

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் மக்காவில் உள்ள இறை ஆலயத்தை இடித்துத் தகர்ப்பதற்காகப் படை திரட்டி வந்தான்.

சூடான கற்களை எரியும் பறவைகளால் இவனையும் இவனது படையையும் அல்லாஹ் அழித்து, தன் இல்லத்தைப் பாதுகாத்தான். இந்த நிகழ்வை திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்க வில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

அல்குர்ஆன் 105வது அத்தியாயம்

அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)

நூல்: புகாரி 2434

கியாமத் நாள் வரை பாதுகாக்கப்படும் ஆலயம்

கியாமத் நாள் வரை இந்த ஆலயம் அபய பூமியாகவே விளங்கும். இதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். உலகின் எல்லா பகுதிகளுக்கும் தஜ்ஜால் சென்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இறையில்லம் உள்ள மக்காவிலும் புனித நகரமான மதீனாவிலும் இவனால் நுழைய முடியாது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்ள்: வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்!

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1834

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல்கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடை வீதிகளும் இருக்குமே!என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கு ஏற்ப எழுப்பப்படுவார்கள்!என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2118

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணி வகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றிவிடுவான்!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 1881

நிம்மதியை நிலைநாட்ட வேண்டியவை

பொதுவாக ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் திரளும் போது அங்கு சண்டை சச்சரவுகளும் கூச்சல் குழப்பங்களும் திரண்டு விடுகிறது. மக்கள் அதிகமாகக் கூடுகின்ற இடங்களில் இவற்றை நம்மால் காண முடிகிறது.

லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற கஃபதுல்லாஹ்விற்குள் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் நிம்மதியை நிலைநாட்டுவதற்காகவும் புனித மிக்க இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.

உயிர்களைக் கொலை செய்வது கூடாது

இந்த ஆலயத்தின் புனிதத்தைக் கருதி இங்கே எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது. புற்பூண்டுகளுக்கும் செடிகொடிகளுக்கும் உயிர் இருப்பதால் இவற்றையும் கிள்ளக் கூடாது.

மற்ற இடங்களில் வேட்டையாடுவது போல் இங்கே வேட்டையாடக் கூடாது.

மற்ற இடங்களில் அனுமதிக்கப்பட்ட இந்தக் காரியங்களை புனித மிக்க இந்த ஆலயத்தில் செய்வது கூடாது.

இதைக் கடைப்பிடித்து புற்பூண்டுகளுக்கும் உயிரிகளுக்கும் நாம் இடஞ்சல் செய்யாமல் இருக்கும் போது மனிதர்களுக்கு இடஞ்சல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளி அளவு கூட நம் மனதில் எழ விடாமல் இந்தச் சட்டங்கள் தடுத்து விடுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போர் செய்ய அனுமதிக்கப்படவில்லை.  எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது.  அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்!. 

இங்குள்ள முட்களை வெட்டக்கூடாதுவேட்டைப் பிராணியை விரட்டக் கூடாதுபிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாதுஇங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது!என்று நபி (ஸல்)  அவர்கள்  கூறிய போது, “அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது!என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இத்கிரைத் தவிர!என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1834

அமைதியை நிலைநாட்டுவதற்காக கொலை செய்யலாம்

சில நேரங்களில் அமைதி நிலைநாட்டுவதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். மக்களுக்குக் கேடு தரக்கூடிய வஸ்துக்கள் இந்தப் புனித ஆலயத்திற்குள் நுழைந்து விட்டால் நிம்மதியை நிலை நாட்டுவதற்காக அவற்றைக் கொல்வதற்கு அனுமதி உள்ளது.

அநியாயக்காரர்கள் வேண்டுமென்றே போர் செய்வதற்காக இந்த ஆலயத்திற்குள் வந்தால் அக்கிரமத்தை ஒடுக்கி அபயத்தை ஏற்படுத்துவதற்காக இந்த ஆலயத்திற்குள்ளே அவர்களை எதிர்த்துப் போரிடலாம்.

எதிரிகளைக் கொன்று இந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தலாம்.

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

அல்குர்ஆன் 2:191

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவை!  இஹ்ராம் கட்டியவர் அவற்றைக் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1829

பாவங்கள் புரிவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமைக் காலக் கலாச்சாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6882

தொழுபவரைத் தடுக்கக் கூடாது

புனித மிக்க இறை ஆலயத்தில் ஒருவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். தொழ நினைப்பவரை எவரும் தடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்து முனாஃபின் மக்களே! இந்த ஆலயத்தில் இரவிலோ அல்லது பகலிலோ எந்த நேரத்தில் ஒருவர் இதனை தஃவாப் செய்து தொழ நினைத்தாலும் அவரைத் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: திர்மிதி 795

———————————————————————————————————————————————-

பிறை ஆலோசனைக் கூட்டம்

பிறை பார்ப்பதன் அடிப்படையில் தான் நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்ததன் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு கொண்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

தத்தமது பகுதி எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பகுதியில் உள்ளவரும் இந்த எல்லையை வரையறுப்பதில் பவ்வேறு அளவுகோலை வைத்துள்ளனர்.

தத்தமது பகுதி என்பது தமது ஊர் அல்லது தாலுகா அல்லது மாவட்டம் என்ற அளவில் தான் இருக்க வேண்டுமா? தத்தமது பகுதி என்பது நமது மாநிலம் என்று முடிவு செய்தால் தவறாகுமா என்று பல சகோதரர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பின்வரும் காரணங்களையும் அவர்கள் முன் வைத்தனர்.

  •  தமிழகம் ஒரு மாநிலமாக, தனி அதிகாரம் படைத்ததாகவுள்ளது.
  • மாநிலம் முழுவதற்கும் ஒரே நாளில் தான் பெருநாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கிறது.
  • தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பிறை பார்த்ததை ஏற்று தலைமை காஜி அறிவிப்பதை தமிழக அரசு ஏற்று விடுமுறை அளிப்பதால் தமிழக முஸ்லிம்கள் அதை ஏற்று எல்லா ஊர்களிலும் பெருநாளை அறிவிக்கின்றனர்.
  • நமது ஊரில், நமது தாலுகாவில் பிறை பார்க்கவில்லை என்பதால் நாம் பெருநாள் என்று முடிவு செய்யாத நிலையில் நமது ஊர் மக்கள் பெருநாள் என்று முடிவு செய்கின்றனர். ஒரு வீட்டிலேயே தவ்ஹீத் கொள்கையை ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் பல குடும்பங்களில் உள்ளனர். இதனால் பெருநாள் என்ற மகிழ்ச்சியை அனைவரும் சேர்ந்து அடைய முடியவில்லை.
  • ஒவ்வொரு தமிழக தவ்ஹீத்வாதியும் தனது ஊர் அல்லது தனது மாவட்டம் தான் தனது பகுதி என்று சொன்னாலும் அது பலருக்கும் வாய் வார்த்தையாகத் தான் உள்ளது. தனது ஊரில் பெருநாள் என மற்றவர்கள் அறிவிக்கும் போது அன்றே தனக்கும் பெருநாளாக இருக்க வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகின்றனர். அதாவது தமிழ்நாடு முழுதும் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் தான் பலரது ஆழ் மனதில் உள்ளது.
  • நீங்கள் முடிவு செய்யும் நாள் என்பது சிலர் முடிவு செய்வது என்ற பொருளைத் தராது. ஒட்டு மொத்த அல்லது மிகப் பெரும்பான்மையானவர்களின் முடிவு என்பதே பொருளாக இருக்க முடியும். எனவே எந்த முடிவை அதிகமானோர் தம் மனதுக்குள் எடுத்து விட்டு சொல்லத் தயங்குகிறார்களோ அதையே தமது பகுதி என்று முடிவு செய்தால் அது தவறா?

இது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது பிறை காணப்பட்டால் அதை பிறை பார்க்காத மற்ற பகுதியினர் ஏற்றால் அது தவறாகுமா? என்ற அடிப்படையில் அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன.

இது பற்றி ஆலோசிப்பதற்காக 14.10.2008 அன்று உலமாக்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமது மாவட்டம் தான் தமது பகுதி என்று ஒரு பகுதியினர் முடிவு செய்தால் அதற்கு எவ்வாறு அவர்களுக்கு உரிமை உள்ளதோ அது போல தமது மாநிலம் தான் தமது பகுதி என்று முடிவு செய்து தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது நோன்பையும், பெருநாளையும் ஒரு ஊரார் முடிவு செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

ஒட்டுமொத்த தமிழகம் சுமார் அரை மணி நேரம் வித்தியாசம் கொண்டதாக உள்ளதாலும், தமிழகத்தை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் மாநிலமாக அமைக்கப்பட்டு ஒரே மாதிரியான சட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது என்பது போன்ற காரணங்களால் இப்படி முடிவு செய்பவர்களைத் தடுக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.

உலகில் எங்கே பிறை பார்த்தாலும் ஏற்க வேண்டும் என்ற கருத்து தவறானது என்பதை இக்கூட்டம் மீண்டும் உறுதி செய்தது.

மேலும் தமது பகுதி என்பது தமது மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டம் தான் என்று யாராவது முடிவு செய்து அதனடிப்படையில் செயல்பட்டால் அந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் முடிவு செய்யப்பட்டது.

பகுதி என்பதற்குக் குறிப்பிட்ட எல்லையை மாநிலத் தலைமை நிர்ணயித்து திணிக்கக் கூடாது என்றும் இந்த முடிவை ஒவ்வொரு கிளையும் சுயமாக எடுக்கலாம் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

———————————————————————————————————————————————-

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 7

எம். ஷம்சுல்லுஹா

இனிமையான குரலில், லயிக்க வைக்கும் ராகத்தில் மிக ரசனையாகக் குர்ஆனை ஓதி, நம்மை வசப்படுத்தி ரசிக்க வைக்கும் இந்த ஆலிம் பெருமக்களா நரகில்? ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

அதற்கான பதிலைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாக இருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறு பக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்று விடுவார்கள். அவர்களுடைய இறை நம்பிக்கை அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்று விடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 3611

இன்று இந்த ஆலிம்கள் சொற்பொழிவாற்றும் போது, கண்மணி நாயகம், ரசூலே அக்ரம், ஹள்ரத் நபிகள் நாயகம் என்று நபி (ஸல்) அவர்களின் பெயருக்கு முன்னால் அலங்கார அடைமொழிகளைக் கொடுத்து அழைப்பதில் கொஞ்சமும் வஞ்சம் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களது ஈமான் தொண்டைக் குழியைத் தாண்டி உள்ளத்திற்குள் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

சிந்தனையற்ற இளைஞர்கள்

இன்று மதரஸாவில் படிக்கும் மாணவர்களைப் பார்த்தீர்கள் என்றால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் இளம் வயதினர். எந்தச் சிந்தனைத் தெளிவும் இல்லாதவர்கள். இதற்கு ஒரே ஓர் எடுத்துக் காட்டு, இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புவது தான்.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

அல்குர்ஆன் 35:22

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் விளக்கியிருந்தும் இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புகின்றனர். இது போன்று அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளை நாம் கூறலாம்.

அதிர வைக்கும் அதிகமான வணக்கங்கள்

தஸ்பீஹ்கள், நஃபில்கள், தஹஜ்ஜத் என இவர்களது வணக்கங்கள் அமர்க்களப்படும். இவர்களது வணக்க வழிபாடுகளைப் பார்த்து, நாம் என்ன தொழுகிறோம் என்று எண்ணத் தலைப்படுவோம். இந்த அடையாளங்கள் மட்டுமே ஒருவர் சுவனவாதி என்று முடிவெடுக்கப் போதுமாகி விடாது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

வழிகெட்ட ஒரு கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்யும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவை யாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3610

இப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரித்து வைத்தாற்போல் இவர்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். ஆனால் இவர்களோ இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர். நமது ஜமாஅத்தில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அதிலும் இவர்களை விட்டு விலகி நமது ஜமாஅத்தை நோக்கி அணியணியாகப் படையெடுத்து இளைஞர்கள் வருகின்றனர். இதை வைத்துக் கொண்டு இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்புகின்றனர்.

நமது ஜமாஅத்தில் அதிகமான இளைஞர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் சிந்தனைத் தெளிவற்றவர்கள் கிடையாது. சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். இந்த ஆலிம்களைப் போன்று நட்சத்திரங்கள் வானில் பதிக்கப்பட்டுள்ளன என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் அல்ல.

இந்த இளைஞர்கள் சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். அதனால் தான் சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், சுய மரியாதையை இழந்து சக மனிதனின் காலில் விழுந்து வணங்குதல், தாயத்து, தகடு என்ற மவ்ட்டீகங்களை விட்டும் வெளியேறி சத்தியத்தின் பக்கம் வந்துள்ளனர்.

மேற்கண்ட புகாரி 3611 ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று சிந்தனையற்ற இளைஞர்களாக இருப்பவர்கள் இந்த ஆலிம்களிடம் பாடம் பயிலும் மதரஸா மாணவர்கள் தான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸில் இவர்களது அடையாளத்தையும் விளக்கியுள்ளார்கள். அது தான் மொட்டையடித்தல் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (மறு பக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்என்று சொன்னார்கள். “அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவது தான் (அவர்களின் அடையாளம்)என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7562

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள இந்த அடையாளம் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்று பாருங்கள். ஒருவன் மதரஸாவுக்குச் சென்றால் முதன் முதலாக அவன் தனது தலை முடியைத் தான் பலி கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் அவன் ஓதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டான். மதரஸாவுக்கு ஓத வந்த பல மாணவர்கள் மொட்டையடிக்கும் கலாச்சாரத்தைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றனர். இதனால் பல இளைஞர்கள் மதரஸா பக்கமே தலை காட்டாமல் இருந்திருக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ்களில் வருகின்ற அடையாளங்களும் அளவீடுகளும் எவ்வளவு துல்லியமாக இந்த ஆலிம்களுக்குப் பொருந்திப் போகின்றன என்று பாருங்கள். மேற்கண்ட ஹதீஸ்களில் இடம் பெறும் கூட்டத்தினர் கொல்லப்பட்டு விட்டனர் என்றாலும் அவர்களது அடையாளங்கள் அனைத்தும் இந்த ஆலிம்களுக்கும் பொருந்திப் போகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே இதை இங்கே குறிப்பிடுகின்றோம்.

எனவே இந்த ஆலிம்கள் மயக்கத்தக்க விதத்தில் குர்ஆன் ஓதுவதையும், வியக்கத்தக்க வகையில் அமல்கள் செய்வதையும் வைத்து இவர்களா நரகத்திற்குச் செல்வார்கள் என்று அதிசயிக்கவோ, ஆச்சரியப்படவோ தேவையில்லை.

ஷிர்க் என்ற பாவம் யாரிடமிருந்தாலும் அவர்கள் நரகத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.

என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்என்று இத்தூதர் கூறுவார்.

அல்குர்ஆன் 25:30

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தப் புகாரின் அடிப்படையில் குர்ஆன் தான் மறுமையில் நடுவராக வந்து நிற்கின்றது.

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் பரிந்துரைக்காக நபி (ஸல்) அவர்களிடம் செல்லும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் ஸஜ்தாவில் விழுந்து மன்றாடுவார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்று வல்ல ரஹ்மான் நரகத்திலிருந்து மக்களை வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பான். இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது,

இறுதியில் குர்ஆன் தடுத்து விட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்க மாட்டார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “(நபியே!) உம் இறைவன் உம்மை (“மகாமும் மஹ்மூத்எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்எனும் (17:79 ஆவது வசனத்தை) ஓதினார்கள்.

பிறகு இந்த “மகாமும் மஹ்மூத்எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்களிக்கப்பட்ட இடமாகும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 7440

இந்தக் குர்ஆன் மறுமையில் நடுவராக வந்து நிற்கின்றது. குர்ஆன் யாரைத் தடை செய்துள்ளதோ அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்காமல் நிரந்தர நரகத்திற்கு உரியவர்களாகி விடுகின்றனர்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.

அல்குர்ஆன் 5:72

வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் மக்களை ஏமாற்றுவதைப் பார்க்கிறோம். அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைப் பறி கொடுத்து ஏமாந்தவர்கள் அவர்கள் மீது கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வெளிநாட்டுக்குச் சென்றால் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து விடலாம். ஆனால் மறுமை விஷயத்தில் ஏமாந்தவர்கள், ஏமாற்றியவர்கள் இந்த உலகத்திற்குத் திரும்பி வர முடியுமா? ஒரு போதும் வர முடியாது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

மறுமையைப் பொறுத்த வரை ஒரு போதும் திரும்ப முடியாது என்று அல்குர்ஆன் ஆணித்தரமாகக் கூறுகின்றது. அதனால் இதில் ஏமாந்தவர்கள், தங்களை ஏமாற்றியவர்கள் மீது அதாவது இந்த ஆலிம்கள் மீது தங்களது அத்தனை ஆத்திரத்தையும் கொட்டுவார்கள்.

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 41:29

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 33:66-68

இப்படியொரு வேதனை வெளிப்பாட்டை ஏமாற்றப்பட்டவர்கள், ஏமாற்றியவர்களுக்கு எதிராக வெளிப்படுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு பயனும் இருக்காது.

எனவே இந்த உலகத்தில் அவர்களை அடையாளம் கண்டு, புனித நபியின் புகாருக்கு ஆளாகும் இந்த ஆலிம்களின் மாயச் சிலந்தி வலையிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

———————————————————————————————————————————————-

தொடர்: 6         

முதஷாபிஹாத்

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கவையே என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம்.

மூன்றாவது ஆதாரம்

அல்லாஹ் தன் திருமறையில் முதஷாபிஹ் வசனங்களைப் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். முதலாவது இடம் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் 3:7 வசனமாகும்.

முதஷாபிஹ் பற்றிக் கூறும் மற்றொரு வசனத்தை நாம் ஆய்வு செய்யும் போது முதஷாபிஹ் என்பது மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கதே என்ற கருத்து மேலும் உறுதியாகின்றது.

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், முதஷாபிஹானதாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

அல்குர்ஆன் 39:23

முதஷாபிஹான வசனத்தைக் கேட்பதால் இறையச்சம் உடையவர்களின் மேனி சிலிர்த்துப் போகும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகின்றான். மேனி சிலிர்த்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் எல்லா மொழிகளிலும், ஒரு விஷயம் தெளிவாக விளங்கி உள்ளத்தில் ஊடுறுவுவதற்கே பயன்படுத்தப்படுகின்றது.

முதஷாபிஹ் வசனங்களைக் கேட்பதால் இறையச்சமுடையோரின் மேனி சிலிர்க்கின்றன என்றால் அந்த வசனங்கள் விளங்குவதுடன் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றவும் செய்யும் என்பது தெளிவாகின்றது.

மேனி சிலிர்க்கும் என்று கூறுவதுடன் இறைவன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மை அடைகின்றன என்றும் குறிப்பிடுகிறான். ஒன்றுமே புரியாவிட்டால் அதைக் கேட்டவுடன் இறை நினைவில் உள்ளங்கள் இளகி விடுமா? முதஷாபிஹ் வசனங்கள் விளங்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது அமைந்துள்ளது.

மேலும் இதே வசனத்தில், குர்ஆன் முதஷாபிஹான வசனங்களைக் கொண்டதால் அதை அழகான செய்தி என்றும் இறைவன் கூறுகின்றான். முதஷாபிஹாக இந்த வேதம் அமைந்திருப்பது அதன் சிறப்புத் தகுதி என்று சிலாகித்துக் கூறுகின்றான். எவருக்கும் விளங்காமல் அமைந்திருப்பதை இறைவன் ஒரு சிறப்புத் தகுதியாகக் குறிப்பிட்டிருப்பானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த வாசகமும், முதஷாபிஹ் விளங்கத்தக்கவையே என்பதை உறுதிப்படுத்துகின்றது.

மேற்கண்ட வசனத்தை மிகவும் கவனமாக ஆராயும் போது, 3:7 வசனத்திற்கும் நாம் செய்த பொருளை இது உண்மைப் படுத்துவதைக் காணலாம். இறையச்சமுடையவர்களின் மேனி சிலிர்த்து விடும் என்ற கூற்றின் மூலம் இறையச்சமுடையவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள் என்பதை இறைவன் தெரிவிக்கின்றான். அதே போல் 3:7 வசனத்தில், “கல்வியில் சிறந்தவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கிக் கொள்வார்கள்’ என்று கூறுகின்றான்.

இறையச்சமுடையோர் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதும், கல்வியில் சிறந்தோர் என்று 3:7 வசனத்தில் குறிப்பிடுவதும் ஒரே வகையினர் தான்.

ஏனெனில் மற்றொரு வசனத்தில், “அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்கள் தான்” (35:28) என்று கூறுகின்றான். இந்த வகையில் இரு வசனங்களும் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கின்றன.

3:7 வசனத்தில், “உள்ளத்தில் வழிகேடு இருப்பவர்கள் குழப்பத்தை நாடி முதஷாபிஹ் வசனங்களைத் தவறாகக் கையாள்வர்’ என்றும், கல்வியில் சிறந்தவர்கள் சரியான பொருளைப் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட இறைவன், மேற்கண்ட 39:23 வசனத்திலும் அதே கருத்தைத் தெரிவிக்கிறான்.

“இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை” என்று அந்த வசனத்தை அல்லாஹ் நிறைவு செய்கின்றான்.

அதாவது முதஷாபிஹ் வசனங்களின் மூலம் நேர்வழி பெறுவோரும் உள்ளனர். வழிகேட்டில் வீழ்ந்து கிடப்போரும் உள்ளனர் என்று தெரிவிக்கின்றான்.

திருக்குர்ஆனின் சில வசனங்கள் வேறு சில வசனங்களுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் 3:7 வசனத்தில் இருவேறு முரண்பட்ட அர்த்தங்கள் செய்ய இடமிருந்தாலும் 39:23 வசனம், முதஷாபிஹ் பற்றிய நிலையைத் தெளிவாக, இரண்டு கருத்துக்கு இடம் தராத வகையில் விளக்குகின்றது. இந்த வசனத்தையும் இணைத்து 3:7 வசனத்திற்குப் பொருள் செய்யும் போது இரண்டு வசனங்களும் முதஷாபிஹ் வசனங்கள் பற்றி ஒரே முடிவை அறிவிப்பதை உணரலாம்.

(3:7 வசனத்திலும், 39:23 வசனத்திலும் முதஷாபிஹாத், முதஷாபிஹ் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி பெயர்ப்புகளில் இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட்டு, இரண்டு இடங்களிலும் அரபி மூலத்தைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

நான்காவது ஆதாரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து “இறைவா! இவருக்கு உன் வேத (ஞான)த்தைக் கற்றுத் தருவாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 75

“இறைவா இவரை மார்க்க விஷயத்தில் விளக்கமுடையவராக ஆக்குவாயாக! மேலும் இவருக்குத் தஃவீலை (உண்மையான விளக்கத்தை) கற்றுக் கொடுப்பாயாக!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது அஹ்மத், இப்னு ஹிப்பான், தப்ரானி ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனையில், “இந்த வேதத்தில் முஹ்கமானவைகளைக் கற்றுக் கொடு!” என்று கூறாமல், இந்த வேதத்தைக் கற்றுக் கொடு என்று பொதுவாகவே குறிப்பிடுகின்றார்கள். முஹ்கம், முதஷாபிஹ் உட்பட இரண்டு வகையான வசனங்களையுமே இது எடுத்துக் கொள்ளும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அறிந்து கொள்ளும் அறிஞர்களில் நானும் ஒருவன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதையும், மேற்கண்ட நபிமொழியையும் கவனிக்கும் போது, நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை முதஷாபிஹ் பற்றியதே என்று அறிய முடிகின்றது. ஏனெனில் முஹ்கம் வசனங்களின் பொருளை அனைவராலும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்குவது தான் சிலரால் மட்டும் இயலக்கூடிய காரியம். நபி (ஸல்) அவர்கள் விஷேசமாகப் பிரார்த்தனை செய்திருப்பதால் முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்திற்காகவே துஆச் செய்தார்கள் என்று உணரலாம்.

3:7 வசனத்திலும், நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட துஆவிலும் தஃவீலஹு, அத்தஃவீல் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது இதை மேலும் உறுதி செய்கின்றது.

இந்த ஆதாரமும் முதஷாபிஹ் வசனங்களை அனைவரும் விளங்க முடியாவிட்டாலும், சிலரால் விளங்க முடியும் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

ஐந்தாவது ஆதாரம்

திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாது அதை பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களை இறைவன் மறுமையில் நிறுத்தி விசாரிப்பான். அப்போது அவர்களை நோக்கி, “எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று (இறைவன்) கேட்பான் (27:84) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

“நீங்கள் என் வசனங்களை அறியாமல்” என்று இறைவன் குறிப்பிடாது, “என் வசனங்களை முழுமையாக அறியாமல்” என்று கூறுகின்றான். இந்த வாசகம், எதையும் விட்டு விடாமல் முழுமையாக விளங்கிக் கொள்வதற்கே அரபி மொழியில் பயன்படுத்தப்படுகின்றது. சிலவற்றை விளங்கி, சிலவற்றை விளங்காமல் இருப்பதை, முழுமையாக அறிதல் என்று கூற முடியாது. திருக்குர்ஆனில் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள கீழ்க்கண்ட இடங்களைப் பார்வையிடுக!

65:12, 72:28, 27:22, 18:91, 18:68, 2:255, 20:110

என் வசனங்களை முழுமையாக அறியாமல் பொய்யென்று கருதிக் கொண்டிருந்தீர்களா? என்ற கேள்வியின் மூலம் இறை வசனங்களை முழுமையாக அறியாமல் இருப்பவர்களைக் கண்டிக்கின்றான். இதன் மூலம் இறை வசனங்கள் அனைத்தையும் அறிய இயலும்; அறிய வேண்டும் என்பது தெளிவாகின்றது. வேதத்தை முழுமையாக அறிய முடியாது என்றிருந்தால் இறைவன் இவ்வாறு கேட்க மாட்டான். அதை ஒரு குற்றமாக விசாரிக்கவும் மாட்டான்.

இறை வேதத்தில் விளங்க முடியாத ஒரு வசனமும் இல்லை என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்