ஏகத்துவம் – மே 2016

தலையங்கம்

கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!

வழக்கமாக மே மாதத்தில் தெறிக்கின்ற கோடை வெயில் இப்போது  மார்ச்  மாதமே தெறிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அது  ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருக் கின்றது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வீசுகின்ற அனல் காற்றுக்கு இது வரை  நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவ்விரு மாநிலங்களில் 118 டிகிரி வெயில் அடிக்கின்றது. இதன் விளைவாக கொதிக்கின்ற சட்டியில் பொறிக்க வேண்டிய முட்டையை கொதிக்கின்ற சாலையில்  பொறிக்கின்றனர். அந்த அளவுக்குக் கோடையின் வெப்பம் உக்கிரத்தை அடைந்திருக்கின்றது.

சென்ற ஆண்டு இதே கோடையில் ஆந்திராவில் 1700 பேரும், தெலுங்கானாவில் 500 பேரும் பலியாயினர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்திலும் கோடை வெயிலுக்கு இந்த ஆண்டு மக்கள் ஒரு சில இடங்களில் பலியாகிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வேலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கோடை வெயில்  105, 106, 107 என்று ஏறிக் கொண்டே சென்று 110 டிகிரியைத் தொட்டு விட்டது. இதன் விளைவாக ஒரு பக்கம் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் தங்கள் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஓரிரு வேளைகள் சாப்பிடாமல்  இருந்து விட்டு போகலாம். ஆனால் இந்த வெயிலின்  வெட்கையில் மாட்டித் தவிக்க முடியாது என்று கூற ஆரம்பித்து விட்டனர்.

மற்றொரு பக்கம், “ஏழைகளுக்கு ஏற்காடு! வசதியானவர்களுக்கு   ஊட்டி’ என்று  ஒரு காலத்தில் இருந்த நிலை மாறிப் போய், இப்போது ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடில்லாமல், அனைவரும் இந்த  வெயிலின் உச்சககட்ட தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும், விரண்டோடுவதற்காகவும்  ஊட்டி, கொடைக்கானல் நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கின்றனர்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற எந்தக் கோடை கால உல்லாச வாசஸ்தலமாக இருந்தாலும் பெரும்பாலும் அவை மலைப் பகுதியில் அமைந்திருப்பவை என்று நாம் அறிந்திருக்கின்றோம்.

சமதளப் பாதையில் சாலைப் பயணம் என்பது இன்றைய காலத்தில் சவாலான பயணமாக இருக்கையில், மலைப் பாதையில் அதை விடப் பன்மடங்கு சவாலான, உயிரைப் பணயம் வைத்து, மரணத்தின்  மிக அருகில் அமைந்த ஆபத்தான பயணம் என்பதை எல்லோரும் தெரிந்திருக்கின்றார்கள்.

இந்த மலைப் பயணத்தில் என்னென்ன ஆபத்துக்கள் இருக் கின்றன? என்பதை முதலில் பார்ப்போம்.

  1. சாதாரண சாலைகளில் 50 கிலோ மீட்டரை ஒரு முக்கால் மணி நேரத்தில் கடந்து விடலாம். ஆனால் இதே தூரத்தை மலைப் பகுதியில் மூன்று மணி நேரத்தில் தான் அடைய முடியும். போக்குவரத்து பாதித்து விட்டால் நான்கைந்து மணி நேரம் கடக்க வேண்டும். இது மலைப் பகுதியில் பயணிகள் சந்திக்கின்ற முதல் சவாலாகும்.
  2. மலைப் பாதையில் கற்கள், மரங்களை ஏற்றிச் செல்கின்ற கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் மது போதையில் இருந்து அல்லது ஏதோ தவறுதலாக பிரேக் பிடிக்காமல் ஆக்ஸிலரேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் போதும். கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி பின்னோக்கிப் பாய்ந்து விடும். அவ்வளவு தான் பின்னால் அடுத்து அடுத்து நிற்கின்ற வண்டிகள் பாதிப்புக்கும், பயங்கர விபத்திற்கும் உள்ளாகி விடும். பின்னால் நின்று கொண்டிருந்த காரில் அல்லது பஸ்ஸில் பயணிகளின் உயிர்களை ஒரு நொடிப் பொழுதில் பலி வாங்கி விடும். இந்தியாவில் கனரக வாகனங்கள் மலைப் பாதையில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
  3. ஊட்டி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்த மலைப் பகுதியாகும். வளைந்து, வளைந்து செல்கின்ற அதிலும் குறிப்பாக தலையை சுற்றச் செய்கின்ற கொண்டை ஊசி வளைவுகளில் கொஞ்சம் வேகமாக வாகனங்கள் சென்றால் கூட பல அடிகள் பள்ளத் தாக்கில் விழுந்து மனித உடலின் எலும்பும் வண்டி உடலின் இரும்பும் தேறாத அளவுக்கு சுக்கு நூறாக அப்பளமாக நொறுங்கிப் போய் விடும். இந்தியாவில் மலைப் பகுதியில் செல்கின்ற வாகனங்களுக்கு எவ்வித வேகக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் கிடையாது.
  4. மலைப் பாதையில் குறிப்பாக மழைக் காலங்களில் பாறைகள் வாகனங்களின் மீது உருண்டு விழுவ தற்கும், மரங்கள் சாய்ந்து விழுவதற்கும் அதிகம் அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உயிர் பறி போகின்ற அபாயம் அதிகமாகவே காத்திருக்கின்றது.
  5. சுய நலமிக்க மனிதனின் சுரண்டல் வேலையின் காரணமாக காடுகளும் சுரண்டல்களுக்கு உள்ளாயின. அதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டு அங்குள்ள நீர் வளங்கள் வற்றிப் போனதால் யானைகள் காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக சாலைகளுக்குள் படை எடுத்து வர ஆரம்பித்து விட்டன.  இப்படிப்பட்ட யானைகளின் பவனியும், படையெடுப்பும் மனிதனின் சாலைப் பயணத்தை சாவுப் பயணமாக மாற்றி விடுகின்றது.
  6. சாதாரண சாலைகளிலேயே வாகனங்கள் ஒன்று மற்றொன்றுடன் சர்வ சாதாரணமாக மோதி உயிர்ப் பலிகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் மலைப் பாதையில் மோதல்களுக்குரிய சாத்தியக் கூறுகள் அதாவது சாவுக்குரிய சாத்தியக் கூறுகள் இன்னும் பன்மடங்கு பரிமாணத்தில் உள்ளன.
  7. சாலைப் பயணத்தில் சில ஆண்களுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பஸ், கார் பயணங்களின் போது வாந்தி வரத்துவங்கி விடும். வளைந்து வளைந்து செல்கின்ற மலைப் பயணத்தில் வாந்திக்கும், குடலைப் புரட்டுகின்ற குமட்டல்களுக்கும் சொல்லவே வேண்டியதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் பாதையில் செல்வோர் ஆங்காங்கு கார்களை நிறுத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாக, குடம் குடமாக வாந்தி எடுப்பதை அதிகம் பார்க்க முடியும்.

8, மலைகளில் பாயும் அருவிகளில் குளிப்பதற்காகவும் மக்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்து, தங்களது உயிர்களைப் பணயம் வைத்து பயணம் மேற்கொள்வதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட சிறிய, பெரிய சோதனைகளைச் சந்தித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் இவ்வளவு  சங்கடங்களும்  சவால்களும் சடுதியில் சாவுக்கு அழைத்துச் செல்கின்ற சாத்தியக் கூறுகளும் நிறைந்த இந்த சாகசப் பயணத்தை மக்கள் மேற்கொள்வது எதற்கு? சுட்டெரிக்கின்ற சூரிய வெப்பத்திலிருந்து ஒரு சில நாட்களாவது  தப்பிக்க வேண்டும் என்பதற்காகத் தான்!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் சாதாரண நாட்களில் தங்கும் விடுதி அறைகளில் ஒரு நாள் வாடகை ஐநூறு  ரூபாய் என்றால் இது போன்ற சீசன் நாட்களில் ஆயிரம், இரண்டாயிரம் என்று பன்மடங்கு அதிகரித்து விடுகின்றது. மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஒரு மாதத்திற்குக் கொடுக்கும் வாடகையை இங்கு ஒரு நாளுக்குக் கொடுக்கிறார்கள். ஒரு மாதச் செலவுகளை ஒரே நாளில் செலவழிக்கின்றார்கள்.

மக்கள் இப்படிச் செலவழிப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றால் இது வெப்பத்தின் வேகத்தையும், அதில் அவர்கள்  வெந்து நீர்ந்து வியர்வையில் குளித்து அனுபவிக்கின்ற வேதனையும் தான் எடுத்துக் காட்டுகின்றது.

ஆட்டம் போட்ட சூரியன் அந்தி நேரத்தில் அஸ்தமான பின்னரும்,  அடிவானத்தில் அடைக்கலமான பின்னரும் அவனது தாக்கம் அடங்க  மறுக்கின்றது. பகலில் அடித்த வெயிலின் வெட்கை இரவில் மக்களின் தூக்கத்தைக் கலைக்கின்றது. படுக்கும் பாய்களை நனைக்கின்றது. அதனால் தான் மக்கள் என்ன விலை கொடுத்தேனும் இதை விட்டுத் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இந்தக் கொடிய வெயிலுக்கே இப்படித் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களே! நாளை மறுமையில்  மக்களை வாட்டி எடுக்கப் போகும் கொடிய நரகத்தின் வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், தடுத்துக் கொள்ளவும், அதிலிருந்து தப்பித்து, தங்களை விடுவித்துக் கொள்ளவும் என்ன விலையேனும் கொடுப்பார்கள் அல்லவா?  இதோ அல்லாஹ் சொல்கின்றான்:

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலை யாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும்.

அல்குர்ஆன் 70:11-16

இந்த வசனங்கள் நாளை நரகத்தின் பரிமாணத்தையும், பயங்கரத்தையும், அதற்காக மனிதன் என்ன விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பான் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஆனால் அப்போது மனிதன் என்ன விலையும் கொடுக்கவும் முடியாது. அப்படியே கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளவும் படாது என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.

அல்லாஹ்விடம் தூய உள்ளத் துடன் வருவதைத் தவிர செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

அல்குர்ஆன்  26:88

இன்று உங்களிடமிருந்தும், (ஏக இறைவனை) மறுத்தோரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. உங்கள் தங்குமிடம் நரகமே. அதுவே உங்கள் துணை. அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 57:15

இந்த உலகில் மனிதன் தப்ப நினைக்கின்ற வெப்பம் அதிகப்பட்சம் ஒரு மூன்று மாத கால அளவு தான்! அதன் பின்னர் குளிர் காலம் அவனை அரவணைத்துக் கொள்கின்றது. ஆனால் நரகம் அவ்வாறானது அல்ல! இதோ அல்லாஹ் சொல்கின்றான்.

(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக் குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப் படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம்.

அல்குர்ஆன் 35:36

அது ஓர் அணையாத நெருப்பு என்று அல்குர்ஆன் சொல்கின்றது.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர் களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.

அல்குர்ஆன் 17:97

எனவே அப்படிப்பட்ட நெருப்பை விட்டு தப்பிப்பதற்கு என்ன வழி?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படு பவரிடம், “பூமியிலிருக்கும் பொருள் களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை யிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், “ஆம்என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், “நீ ஆதமின் முதுகுத் தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப் பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லைஎன்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3334

ஆம்!  ஒருவன், இறைவனுக்கு இணை வைத்து விட்டால் அவன் நிரந்தர நரகத்திற்குப் போய் விடுவான் என்று இந்த நபிமொழி கூறுகின்றது.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப் பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரை யும் இணைகற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

இந்த வசனம் கூறுகின்றபடி, ஒருவர் அல்லாஹ்வுக்கு எதையும், எவரையும் இணையாக்காமல் இவ்வுலகில்  அவனை மட்டும் வணங்கி, நல்லறங்கள் செய்து வாழ்ந்து மரணித்தால் அவர்களுக்கு நிச்சயமாக சுவனம் பரிசாகக் கிடைக்கும்.

இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்துச் செல்கின்ற தற்காலிக  சோலைகள் போலல்லாமல் நிரந்தரமான சுவனச் சோலைகளில் இருப்பார்கள் என்று அழுத்தம் திருத்தமாக அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் 4:122

நாம் நரகத்திலிருந்து காப்பாற்றப் பட்டு சொர்க்கச் சோலைகளில் காலாகாலம் வசிக்கின்ற நன்மக்களாக ஆவோமாக! இந்தக் கோடை காலம் நமக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் அமையட்டுமாக!

—————————————————————————————————————————————————————-

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்!

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

நபியவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்ற மிக அற்புதமான நிகழ்ச்சி மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் ஆகும்.

மிஃராஜ் என்ற உண்மைச் சம்பவத்தின் அற்புதமான நிகழ்வுகளை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம்.

இந்நிகழ்வு ரஜப் 27ல் நடைபெற்றதாக ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆனால் ரஜப் 27 அன்று தான் மிஃராஜ் நடைபெற்றது என்பதற்கு உறுதியான எந்த ஆதாரமும் கிடையாது. அது போன்று மிஃராஜ் நோன்பு என்ற பெயரில் நோன்பு நோற்பதும் பித்அத்தான அனாச்சாரம் ஆகும்.

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

அல்குர்ஆன் 17:1

ஜிப்ரீல் வருகை – வீட்டு முகடு திறக்கப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு அதை மூடி விட்டார்கள்”

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி 349

கஅபாவில் இருக்கும் போது நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சி நடந்ததாக புகாரி 3207வது ஹதீஸில் கூறப்படுகின்றது.

இரண்டையும் இணைத்துப் பார்க்கையில் நபி (ஸல்) அவர்களை வீட்டிலிருந்து ஜிப்ரீல் (அலை) கஅபாவிற்கு அழைத்துச் சென்று அங்கு இந்நிகழ்ச்சி நடந்ததாக விளங்கிக் கொள்ளலாம்.

புராக் வாகனம்

நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிதர்களுக் கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது….(இந்த நிகழ்ச்சி நடந்தது)….. கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதுமான புராக் எனும் வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது

அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஃஸஆ

நூல்: புகாரி 3207

கடிவாளம் பூட்டப்பட்டு, சேண மிடப்பட்டவாறு புராக் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறச் சிரமப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல், “முஹம்மதிடம் நீ ஏன் இவ்வாறு செய்கின்றாய்? அவரை விட அல்லாஹ்விடம் மதிப்பிற்குரிய எவரும் உன் மீது ஏறியதில்லையேஎன்று (அதை நோக்கி) கூறியதும், அதன் மேனி வியர்த்து வழிந்தோடத் துவங்கி விட்டது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 3056

தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 234

மூஸா (அலை) அவர்களைக் காணுதல்

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 4379, அஹ்மத் 12046, நஸயீ 1613

பைத்துல் முகத்தஸிற்குச் செல்தல்

பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளியில் நுழைந்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047

பைத்துல் முகத்தஸில்…

என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 251

நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த தொங்கலான தலை முடி உடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும்) தஜ்ஜாலையும் கண்டேன். இவை யெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. “அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்” (அல்குர்ஆன் 32:23)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 3239, முஸ்லிம் 239

நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தல்

அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், “முஹம்மதே! இதோ மாலிக்! நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்” என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதலில் எனக்கு (ஸலாம்) சொல்லி விட்டார்.

விண்ணுலகிற்குச் செல்லுதல்

ஜிப்ரீல் (அலை) என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மை யிலுள்ள (முதல்) வானத்தை அடைந்த போது, வானத்தின் காவலரிடம், “திறங்கள்என்று கூறினார்கள். அதற்கு அவர், “யார் அது?” என்று கேட்டார். “இதோ ஜிப்ரீல்என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார். அதற்கு “உங்களுடன் வேறெவராவது இருக்கின்றாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “என்னுடன் முஹம்மது இருக்கிறார்என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், திறங்கள்என்றார்.

(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் மேலே சென்ற போது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தனது வலப்பக்கம் பார்க்கும் போது சிரித்தார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து), “நல்ல இறைத் தூதரே! வருக! நல்ல மகனே வருக!என்று கூறினார். நான், “ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், “இவர் ஆதம் (அலை) அவர்கள். அவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப்பக்கம் இருப்பவர் சொர்க்க வாசிகள். இடது பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவே தான் அவர் வலப்பக்கத்திலுள்ள தம் மக்களைப் பார்க்கும் போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுகின்றார்என்று பதிலளித்தார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3342

பிறகு நாங்கள் இரண்டாம் வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்என்று பதிலளித்தார். “அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகைஎன்று சொல்லப்பட்டது.

பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ் விருவரும், “சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்என்று பதிலளித்தார். “அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகைஎன்று சொல்லப்பட்டது.

பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப் பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல் வரவாகட்டும்என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்என்று பதிலளித்தார். “அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகைஎன்று சொல்லப்பட்டது.

நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர் களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஃஸஆ

நூல்: புகாரி 3207

அவரை (இத்ரீஸை) உயரமான தகுதிக்கு உயர்த்தினோம்என்ற (19:57) வசனத்தை ஓதினேன்.

நூல்கள்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047

பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்என்று பதிலளித்தார். “அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகைஎன்று சொல்லப்பட்டது.

பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடத்தில் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன்.  அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்என்று பதிலளித்தார். “அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகைஎன்று சொல்லப்பட்டது.

நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்என்று வாழ்த்தி னார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழு தார்கள். “நீங்கள் ஏன் அழுகின்றீர் கள்?” என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. அவர், “இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள்என்று பதிலளித்தார்.

பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்என்று பதிலளித்தார். “அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகைஎன்று சொல்லப்பட்டது.

நான் இப்ராஹீம் (அலை) அவர் களிடம் சென்று ஸலாம் உரைத்தேன்.  அவர்கள், “மகனும், நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்என்று சொன்னார்கள். பிறகு பைத்துல் மஃமூர் எனும் பாக்கியம் நிறைந்த இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது.

நூல்: புகாரி 3207

இப்ராஹீம் (அலை) அவர்கள் பைத்துல் மஃமூரில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.

நூல்கள்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047

பைத்துல் மஃமூர்

நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், “இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்என்று கூறினார்.

நூல்: புகாரி 3207

ஸித்ரத்துல் முன்தஹா

பிறகு “ஸித்ரத்துல் முன்தஹா‘ (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்டப்பட்டது. அதன் பழங்கள் ஹஜ்ர் என்ற இடத்தின் கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போல் இருந்தன.  

நூல்: புகாரி 3207

அல்லாஹ்வின் கட்டளைப்படி அதை மூட வேண்டியது மூடியதும் அது சிவப்பு மாணிக்கங்களாக அல்லது பச்சை மரகதங்களாக அல்லது அவற்றைப் போன்றதாக அது மாறி விட்டது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அஹ்மத் 11853

அதன் வேர் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீலிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவை யாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும்என்று பதிலளித்தார். 

நூல்: புகாரி 3207

மூன்று பாத்திரங்களில் மூன்று பானங்கள்

அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து அருந்தினேன். அப்போது என்னிடம், “நீங்களும் உங்களுடைய சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்என்று சொல்லப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5610

சிலிர்க்க வைக்கும் ஜிப்ரீலின் இயற்கைத் தோற்றம்

நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாற வில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்லின் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.

திருக்குர்ஆன் 53:1-18

(இங்கு நபி (ஸல்) அவர்கள் பார்த்தது அல்லாஹ்வைத் தான் என்ற கருத்தில் மஸ்ரூக் என்பார், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவிய போது ஆயிஷா (ரலி) கூறியதாவது)

இந்தச் சமுதாயத்தில் முதன் முதலில் இதை விசாரித்தது நான் தான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் ஜிப்ரீல் தான். ஜிப்ரீலை அவர் படைக்கப்பட்ட அந்த இயற்கையான தோற்றத்தில் மேற்கண்ட அந்த இரு சந்தர்ப்பங்களில் தவிர வேறு சந்தர்ப்பத்தில் நான் கண்டது கிடையாதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: முஸ்லிம் 259

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 4856

சுவனத்தில் நுழைக்கப்படுதல்

பின்னர் நான் சுவனத்தில் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் ஆன கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி 349

அல்கவ்ஸர் தடாகம்

நான் சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர், “இது தான் உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்கிய அல்கவ்ஸர்என்று கூறினார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணம் மிக்க கஸ்தூரியாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்கள்: புகாரி 6581, அஹ்மத் 11570

நான் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன். 

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் நூல்: புகாரி 3241, 5198, 6449, 6546

மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வு களைக் காயப்படுத்திக் கொண்டிருந் தவர்கள்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861

இறுதி எல்லையும் இறை அலுவலகமும்

ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்த போது, அங்கு நான் (வானவர்களின்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3342

ஸித்ரத்துல் முன்தஹா

பிறகு “ஸித்ரத்துல் முன்தஹா‘ (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்டப்பட்டது. அதன் பழங்கள் ஹஜ்ர் என்ற இடத்தின் கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போல் இருந்தன.   (நூல்: புகாரி 3207)

அல்லாஹ்வின் கட்டளைப்படி அதை மூட வேண்டியது மூடியதும் அது சிவப்பு மாணிக்கங்களாக அல்லது பச்சை மரகதங்களாக அல்லது அவற்றைப் போன்றதாக அது மாறி விட்டது. (நூல்: அஹ்மத் 11853)

அதன் வேர் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீலிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவை யாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும்என்று பதிலளித்தார்.   (நூல்: புகாரி 3207)

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு “சித்ரத்துல் முன்தஹாவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பல வண்ணங்கள் அதைப் போர்த்திக்கொண்டிருந்தன. அவையென்ன என்று எனக்குத் தெரியாது. பிறகு நான் சொர்க்கத் திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது. (முஸ்லிம் 263)

அல்லாஹ் விதித்த கடமை

பிறகு என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப் பட்டுள்ளனஎன்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உமது இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் குறைத்துத் தரும்படி கேளுங்கள்என்று சொன்னார்கள்.

நான் திரும்பச் சென்று இறைவனிடம் அவ்வாறே கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க இறைவன் இருபதாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல, (இறைவனிடம் நான் மீண்டும் குறைத்துக் கேட்ட போது) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.

பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்க, “அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான்என்று கூறினேன். அதற்கு அவர்கள் முன்பு கூறியதைப் போலவே கூறினார்கள். அதற்கு, “நான் ஒப்புக் கொண்டு விட்டேன்என்று பதிலளித்தேன்.

அப்போது, “நான் எனது விதியை அமல் படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை வழங்குவேன்என்று அறிவிக்கப்பட்டது. (நூல்: புகாரி 3207)

ஒவ்வொரு பகல், இரவிலும் அவை ஐந்து நேரத் தொழுகைகள்! ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் (வீதம்) ஐம்பதாகும். ஒருவர் ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே – அவர் அதைச் செய்யாவிட்டாலும் – அவருக்காக ஒரு முழு நன்மை பதிவு செய்யப்படுகின்றது. அதைச் செயல்படுத்தி விட்டால் அவருக்கு அது பத்து நன்மைகளாகப் பதியப்படுகின்றது.

ஒருவர் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று எண்ணி அதைச் செய்யாமல் விட்டு விட்டால் எதுவும் பதியப்படுவதில்லை. அவர் அந்தத் தீமையைச் செய்து விட்டால் அதற்காக ஒரேயொரு குற்றமே பதிவு செய்யப்படுகின்றதுஎன்று அல் லாஹ் கூறினான். நூல்: முஸ்லிம் 234)

குறைஷிகள் நம்ப மறுத்தல்

என்னைக் குறைஷிகள் நம்ப மறுத்த போது நான் கஅபாவின் ஹிஜ்ர் பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் முகத் தஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடை யாளங்களை விவரிக்கலானேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 3886

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காலையில் மக்காவில் இருந்த போது என்னுடைய இந்த (பயண) விஷயமாக நான் தாங்க முடியாத கவலை கொண்டிருந்தேன். மக்கள் என்னைப் பொய்யராக்கி விடுவார்கள் என்று அறிந்திருந்தேன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) தனியாகக் கவலையுடன் அமர்ந் திருக்கும் போது, அங்கு சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.

நபி (ஸல்) அவர்களிடம், “என்ன? ஏதேனும் புதுச் செய்தி உண்டா?” என்று கிண்டலாகக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் கேட்டான். “இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்என்று கூறினார்கள். எங்கே? என்று அவன் வினவிய போது, “பைத்துல் முகத்தஸ்என்று பதிலளித்தார்கள். “அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?” என்றான். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

தனது கூட்டத்தாரை அழைத்து வந்ததும் (அவர்களது முன்னிலையில்) நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்து விடுவார்களோ என்று பயந்த அவன், அந்தச் செய்தியைப் பொய்ப்படுத்துவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

உம்முடைய கூட்டத்தாரை நான் அழைத்துக் கொண்டு வந்தால் என்னிடம் அறிவித்ததை அவர்களிடமும் அறிவிப்பீரா?” என்று கேட்டான். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

உடனே அபூஜஹ்ல், “பனீ கஅப் பின் லுவை கூட்டத்தாரே! வாருங் கள்!என்று கூறினான். அவனை நோக்கி சபைகள் கிளர்ந்தெழுந்து வரத் துவங்கி அவ்விருவருக்கும் மத்தியில் அமர்ந்தனர். “என்னிடம் அறிவித் ததை உம்முடைய கூட்டத்தாரிடம் அறிவியுங்கள்என்று அபூஜஹ்ல் கூறினான்.

இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்என்று கூறினார்கள். எங்கே? என்று அவர்கள் வினவிய போது, “பைத்துல் முகத்தஸ்என்று பதிலளித்தார்கள். “அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?” என்று அக்கூட்டத்தினர் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

சிலர் கை தட்டியவர்களாகவும், சிலர் இதைக் கேட்டு ஆச்சரிய மடைந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டும், “நீர் அந்தப் பள்ளியை எங்களிடம் வர்ணனை செய்ய முடியுமா?” என்று கேட்டனர். அந்த ஊருக்குச் சென்று பள்ளியைப் பார்த்தவரும் அந்தச் சபையில் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் (பைத்துல் முகத்தஸ்) பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது. (இதைக் கேட்ட) மக்கள், “வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார்என்று கூறினர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2670

—————————————————————————————————————————————————————-

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்? கப்ரு வணங்கிகளின் கயமைத்தனம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் வழிகெட்ட கூட்டத்தினருக்குக் குர்ஆன் என்றாலே ஆகாது. ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது.

இவர்களின் சன்மார்க்க (?) பிரச்சார ஏடுகளில் குர்ஆனையோ, ஹதீஸ் களையோ அதிகம் குறிப்பிட மாட்டார்கள். தங்களது மனோ இச்சையை நியாயப்படுத்தும் படி யாரேனும் சில கருத்துக்களைக் கூறியிருந்தால் அதைத் தேடி எடுத்து பக்கங்களை நிரப்பி விடுவார்கள்.

இக்குறைமதியாளர்கள் எதை ஹதீஸ் என்று கருதுகிறார்களோ அதை நபியின் பெயரால் எடுத்தெழுதி தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்த முனைவார்கள்.

அப்படித்தான் பரேலவிகளின் ஒரு பத்திரிக்கையை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது அவர்களுக்கே   உரிய சர்வ லட்சணங்களையும் பொதிந்திருந்தது.

இந்த லட்சணத்தில், “ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு’ என்ற “ஓம்ஸ்’ (?) விதியின் படி… என்று தத்துவம் வேறு அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு’ என்பது நியூட்டனின்  மூன்றாம் விதி என்பதைக் கூட அறியாத அறிவிலிகள், அறிவியலும் தெரியாமல் ஆன்மீகமும் தெரியாமல் தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி இருக்கிறார்கள்.

அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரையில் தர்காவை ஆதரிக்கப் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.

இறந்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள், ஏன் முதல் ஆலயமான கஃபாவைச் சுற்றிலும் அதன் கீழும் எல்லா இடங்களிலும் அடக்கமாகி இருக்கிறார்கள். அதன் மேல்தான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை யாரும் தர்கா என்று சொல்வதில்லை.

கஃபாவின் வாசலில் ஆதித் தந்தையினர் தலைமாடு உள்ள தென்றும் சுமார் 7 நபிமார்கள் அதனைச் சுற்றி அடங்கப் பட்டுள்ளனர் என்றும் ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் மிஷ்காதுல் மஸாபீஹ்)

கஃபாவின் கீழேயும் அதைச் சுற்றிலும் நபிமார்கள், நல்லோர்களின் அடக்கத்தலங்கள் உள்ளதாம். அதன் மேல்தான் கஃபா எனும் புனித ஆலயமே எழுப்பப்பட்டுள்ளதாம். அப்படியிருக்க அதே போன்று இறந்தவர்களின் மேல் கட்டடம் – தர்கா எழுப்புவதை எப்படி குறை கூற முடியும்?

இது தான் கட்டுரையாளர் முன் வைக்கும் அறிவீன வாதமாகும்.

இவர்களுக்கு ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது என்ற நமது முன்னுரையை மெய்ப்பிக்கும் வகையில் தான் இந்த வாதம் அமைந்துள்ளது.

மார்க்கத்தின் பெயரால் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக மார்க்கம் தடுத்த ஒன்றை, அது ஆகுமானதே என்று கூறுவதாக இருந்தால் அதற்குச் சரியான, தகுந்த ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.

இறந்தவர்களின் மேல் சமாதியை எழுப்புவது இறை சாபத்திற்குரியது என்று பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.

அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 437

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப் பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்து வானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர்என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330

கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படு வதையும் அதன் மீது உட்காரு வதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1765)

இறந்தவர்களின் அடக்கத்தலத்தின் மேல் தர்கா எழுப்புவது கூடாது என்று இந்த நபிமொழிகள் தெளிவாக எடுத்துரைத்திருக்கும் போது, “இல்லையில்லை தர்கா கட்டுவது குற்றமல்ல, கஃபாவுக்கு கீழேயே கப்ருகள் தான் உள்ளன” என்று சொல்வதாக இருந்தால் மேற்கண்ட நபிமொழிகளுக்குத் தகுந்த விளக்கம் சொல்ல வேண்டும்.

மேலும் கஃபாவுக்குக் கீழே நபிமார்கள், நல்லோர்களின் கப்ர்கள் உள்ளது என்ற தங்கள் கருத்துக்குரிய வலுவான சான்றுகளை முன்வைக்க வேண்டும்.

கஃபாவின் வாசலில் ஆதித் தந்தையினர் தலைமாடு உள்ளதாம், அவர்களின் கால்மாடு எங்கே உள்ளது என்பதைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார்கள். அது போக கஃபாவைச் சுற்றி 7 நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

இப்படிப் போகிற போக்கில் சொல்வதெல்லாம் மார்க்கமாகி விடாது.

உலகில் முதலில் கட்டப்பட்ட ஆலயம் கஅபா என்று குர்ஆன் கூறுகிறது.

அகிலத்தின் நேர்வழிக்குரிய தாகவும், பாக்கியம் பொருந்திய தாகவும் மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

திருக்குர்ஆன் 3:96

ஆதம் (அலை) அவர்கள் தான் கஅபாவைக் கட்டினார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் கட்டப்பட்ட க அபா ஆலயத்தில் அவரது கப்ரு எப்படி இருக்கும்? தன்னை அடக்கம் செய்து விட்டு அவர் கஅபாவைக் கட்டினாரா?

ஹதீஸ் உண்டா?

சரி. இவர்கள் சொல்வதற்கு ஏதும் ஆதாரம் உள்ளதா? என்றால் கஃபாவைச் சுற்றிலும், அதன் கீழும் கப்ர்கள் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது

மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. அவை இஸ்மாயீல் (அலை) மற்றும் ஷூஐப் (அலை) அவர்களின் கப்ருகளாகும். இஸ்மாயீல் அலை அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியில் ருக்னுல் அஸ்வத் – ஹஜருல் அஸ்வதிற்கு – நேராக உள்ளது.

அக்பாரு மக்கா, பாகம் 2,  பக்கம் 124

இது நபிகள் நாயகம் கூறியதாக இல்லை. இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழரின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளதால் இதை நாம் ஏற்க வேண்டியதில்லை.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக உள்ள இந்தச் செய்தியும் ஏற்கத்தக்க செய்தி அல்ல. முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இதில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரை அறிஞர்கள் பலரும் பலவீனமானவர், பொய்யர், மூளை குழம்பியவர் என்று குறை கூறியுள்ளனர்.

இமாம் நஸாயி இவரை நம்பகமானவர் அல்ல, இவரது செய்திகள் எழுதப்படாது என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் இவரைப் பொய் சொல்பவராகக் கருதுகிறார்கள் என்று குர்ரா பின் காலித் என்பாரும் விமர்சித்துள்ளனர்.

இவர் ஹதீஸ் துறையில்  மதிப் பில்லாதவர். இவரைப் புறக்கணிப்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித் துள்ளனர் என்று இமாம் அபூஹாதம் அவர்கள் விமர்சித்துள்ளார்.

இமாம் தாரகுத்னீ, ஹாகிம், ஸாஜி ஆகியோர் இவர் புறக்கணிக்கப்பட வேண்யடிவர் என்று குறை கூறியுள்ளனர்.

இப்னு அப்பாஸ், அபீ ஸாலிஹ் வழியாக நான் அறிவிக்கும் செய்திகள் பொய்யானாதாகும். அதை அறிவிக்காதீர்கள் என்று அவரே (கல்பீ) தன்னைப் பற்றி கூறியுள்ளதாக இமாம் சுப்யான் அஸ்ஸவ்ரீ கூறுகிறார்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்,    பாகம் 9, பக் 158

மேற்கண்ட அறிவிப்பு இப்னு அப்பாஸ், அபீஸாலிஹ் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தொடர்புடைய ஹதீஸ் அறிவிப்பாளரே இது பொய்யான அறிவிப்பு என்று இனம் காட்டிய பிறகு இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வது அறிவீனத்தின் உச்சமாகும்.

எனவே இந்தப் பொய்யான செய்தியை அடிப்படையாக கொண்டு கஃபாவின் கீழ் கப்ருகள் உள்ளன என்ற தங்கள் கருத்தை நிலைநாட்ட இயலாது.

செய்தி: 2

இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பின்வரும் செய்தியும் அமைந்துள்ளது.

அப்துல்லாஹ் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது

மகாமு இப்றாஹீமிலிருந்து ருக்னுல் யமானீ பகுதி வரையிலும் ஜம்ஜம் அமைந்த இடத்திலிருந்து ஹிஜ்ர் பகுதி வரையிலும் உள்ள இடைப்பட்ட இடத்தில் சுமார் 99 நபிமார்களின் கப்ருகள் உள்ளன. அவர்கள் ஹஜ் செய்ய வந்தார்கள். (பிறகு) அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

மஸாயிலுல் இமாம் அஹ்மத்,

பாகம் 1,  பக்கம் 408

இந்தச் செய்தியை இமாம் அஹ்மத் அவர்களின் மகன் ஸாலிஹ் தனது மஸாயில் என்ற நூலில் கொண்டு வருகிறார்.

இந்தச் செய்தியும் நபிகள் நாயகம் கூறியதாகவோ, நபித்தோழர் கூறியதாகவோ இல்லை.

மாறாக அப்துல்லாஹ் பின் ளம்ரா என்ற தாபியி சொன்னதாகவே வருகிறது.

இதுவே இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக ஏற்க முடியாது என்பதற்கு போதுமான காரணமாகும்.

மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் சுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நினைவாற்றல் ரீதியாக பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

இவரது ஹதீஸில் சில குறைகள் உள்ளதாக இமாம் அஹ்மத் அவர்களும், இவரது ஹதீஸ் எழுதப்படும் ஆனால் ஆதாரமாக கொள்ளப்படாது என்று இமாம் அபூஹாதம் அவர்களும், உபைதில்லாஹ் பின் அம்ர் வழியாக அறிவிக்கும் போது இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் நஸாயீ அவர்களும் தூலாபி எனும் அறிஞர் இவர் அவ்வளவு உறுதியானவர் அல்ல என்று விமர்சித்துள்ளார்கள்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் நினைவாற்றல் மோசமானவர் ஆவார் என்று விமர்சித்துள்ளார்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்,    பாகம் 11, பக்கம் 198

இத்தகைய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டவர் இடம்பெற்றுள்ள, நபியின் கூற்றாகவும் இல்லாத இந்தச் செய்தி கண்டிப்பாக நமது கொள்கையை நிர்ணயிக்கவோ நமது நம்பிக்கையை தீர்மானிக்கவோ உதவாது.

மேலும் ஹஜ் செய்ய வந்த நபிமார்கள் அங்கே மரணித்து இருந்தாலும் அங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. இதில் சுட்டிக்காட்டப்படும் பகுதிதான் தவாப் செய்யும் பகுதியாகும். மக்கள் தவாப் செய்து கொண்டு இருக்கும் போது அந்த இடத்தில் எப்படி நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அதுவும் 90 நபிமார்களும் ஒரே நாளில் ஹஜ் செய்ய வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒருவர் வந்திருக்கலாம்.

ஒவ்வொரு நபியும் மக்காவில் மரணித்த போதும் சொல்லி வைத்தது போல் தவாப் செய்வதைத் தடுக்கும் வகையில் அங்கே அடக்கம் செய்வார்களா?

இதை பரேலவிகள் உண்மை என்று நம்பினால் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஏறி மிதிக்கலாம்; அதற்கு எந்த மதிப்பும் கொடுக்கத் தேவை இல்லை என்று பத்வா கொடுக்க வேண்டும்.

அல்லது தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் நபிமார்களின் கப்ருகள் உள்ளதால் இனிமேல் கஅபாவை தவாப் செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டும்.

இரண்டில் எதைச் சொல்லப் போகிறார்கள்?

நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் கூட சம்பந்தப்படாத இந்தச் செய்தி இவர்களது கருத்திற்கு ஒரு போதும் ஆதாரமாகாது.

கஃபாவைச் சுற்றி கப்ருகள் உள்ளது தொடர்பாக நபிகள் நாயகம் கூறியதாக அல்குனா வல் அஸ்மா என்ற நூலில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

செய்தி: 3

ஆயிஷா (ரலி) அறிவிப்பதாவது

இஸ்மாயியீல் (அலை) அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியிலே உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்குனா வல்அஸ்மா

பாகம் 1, பக்கம் 239

இதில் யஃகூப் பின் அதாஃ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூசுர்ஆ மற்றும் இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் இவரை மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.

பார்க்க: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 9, பக்கம் 211

இமாம் தஹபீ அவர்களும் இவரை பலவீனமானவர் என்கிறார்

அல்காஷிஃப்,

பாகம் 2, பக்கம் 395

இது பலவீனமான செய்தி என்பதைப் பல அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சுமார் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த இமாம் ஸகாவீ அவர்கள் இதை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அல்மகாஸிதுல் ஹஸனா,

பாகம் 1, பக்கம் 484

எனவே இதுவும் ஏற்கத்தக்க செய்தி அல்ல.

தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் எப்படி இஸ்மாயீல் (அலை) அவர்களை அடக்கம் செய்திருப் பார்கள்? அப்படியானால் தவாப் செய்யும் போது அந்தக் கப்ரை ஏறி மிதித்து தான் தவாப் செய்கிறார்களா?

அறிவற்ற கப்ர் முட்டிகள்

இஸ்மாயீல் (அலை) உள்ளிட்ட எந்த நபியும் கஃபாவின் கீழ்ப் பகுதியிலோ அல்லது கஃபாவைச் சுற்றியோ அடக்கம் செய்யப் பட்டிருப்பதாக அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ எங்கும் சொல்லவில்லை.

மேலும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும்.

ஆதம் அலை அவர்கள் காலத்திலேயே இந்த கஃபா கட்டப்பட்டு விட்டது.

எந்த நபிமார்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் புழுகுகிறார் களோ அவர்களது பிறப்பு – இறப்பிற்கு முன்பாகவே கஃபா ஆலயம் கட்டப்பட்டு விட்டது. இறைவனால் அது சிறப்பிக்கப்பட்டும் விட்டது.

அத்தகைய கஃபா ஆலயத்தின் சிறப்பு எந்த தனிமனிதர்களை கொண்டும் அல்ல என்பதை விளங்கி கொள்ள வேண்டும். இவர்கள் கூறிய படி அங்கே சிலர் அடக்கம் செய்யப் பட்டிருந்தாலும் கஃபா ஆலயத்திற்கு எந்தச் சிறப்பும் கிடையாது.

மஸ்ஜிதுந் நபவீ வரலாறு அறியாத மடையர்கள்

ஓரிடத்தில் பள்ளிவாசல் கட்டும் போது அங்கே சில மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்களது உடல்களை அப்புறப் படுத்தி வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.

மனித உடல்களை அப்புறப் படுத்திய பிறகே அங்கே பள்ளிவாசல் எழுப்ப இயலும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறையாகும்.

மஸ்ஜிதுந் நபவீ இந்த அடிப் படையிலேயே கட்டப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி பணித் தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப் பினார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.

நான் உங்களிடம் கூறுபவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணை வைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப் பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும் படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 428

இந்த வரலாறு அறியாத மடையர்கள் தான் கஃபாவைச் சுற்றி நபிமார்கள் அடங்கி உள்ளதாக ஆதாரமற்றுப் பிதற்றுகிறார்கள்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் சொன்னபடி கஃபாவைச் சுற்றி பல நபிமார்கள் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றாலும் கூட இன்று அவை கண்டறிய முடியாத படி சமமாக உள்ளது.

அவற்றின் மீது வானுயர எந்தக் கோபுரமும், கட்டடமும் கட்டப் பட்டிருக்கவில்லை.

பூமாலைகள் இல்லை, சந்தனங்கள் இல்லை, ஊது பத்திகளோ உண்டியல்களோ இல்லை.

சாதாரண தரையாகவே கஃபாவைச் சுற்றிலும் காட்சியளிக்கிறது.

அப்படியிருக்க இது எப்படி மேலெழும்பிய தர்கா கட்டி வழிபாடு என்ற பெயரில் இவர்கள் கூத்தடிப் பதற்கும், கும்மாளமிடுவதற்கும் ஆதாரமாகும்?

கல்லை வழிபடும் கப்ர் முட்டிகளிடம் அறிவார்ந்த வாதத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மறந்து விடக்கூடாது.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 9  ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

அஹ்லு பைத்தின் பொருட்டால் அனைத்தும் நடந்து விடுமா?

எம். ஷம்சுல்லுஹா

“வேண்டுதல் முன் வைக்கப் படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் (என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது’ என்ற இந்தக் கவிஞனின் உளறல்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்  சென்ற இதழில் வெளுத்துக் காட்டினோம்.

இந்த இதழில், இந்தக் கவிஞன் எடுத்திருக்கின்ற வஸீலா என்ற அஸ்திரத்தைத் தோலுரித்துக் காட்டுவோம். தங்களுக்கு ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்றால் “இறைவா! இன்ன நல்லடியார் பொருட்டால் எனக்கு இன்ன தேவையை நிறைவேற்று’ என்று இவர்கள் பிரார்த்தனை செய்வதை வணக்கமாகவும், வழக்கமாகவும் கொண்டிருக்கின்றனர். இதைத் தான் இந்த அசத்தியவாதிகள் வஸீலா என்றழைக்கின்றனர். இந்தக் கவிஞனும் வஸீலா என்ற கற்பனை மற்றும் கனவுப் பாதையில் தனது ஹுசைன் மவ்லிதில் அதிகமாக உலா வருகின்றார்.  அதை இப்போது பார்ப்போம்:

ஹுசைன் மவ்லிதில் ஏழாவது ஹிகாயத் என்ற உரைநடைப் பகுதியில் இந்த மவ்லிதை இயற்றுவதற்குரிய காரணத்தைச் சொல்கின்றார்.

“நான் சில நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தேன். அப்போது நான் உடனே, இந்த வேதனைகளிலிருந்து என்னுடைய தலைவர் ஷஹீத்  ஹுசைன் (ரலி)யின் பரக்கத்தால் (பொருட்டால்)  எனக்கு அல்லாஹ் குணமளித்தால் இயன்ற அளவுக்கு உரை மற்றும் கவிதை நடையில் அவருக்குப் புகழ் மாலை சூட்டுவேன் என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன். அது போலவே அல்லாஹ் எனக்கு சுகமளித்தான். அதற்கு நன்றிக் கடனாக நான் இந்தப் புகழ் மாலையை இயற்றினேன்”

இது தான் ஹுசைன் மவ்லிதை இயற்றியதற்கு அவர் கூறும்  காரணம் மற்றும் விளக்கமாகும்.

இரண்டாவது ஹிகாயத்தில்,

“இயலாதவனே! ஹுசைனின் புகழ் பாட எழுந்திடு!’ என்று என் உள் மனதில் வானவரிடமிருந்து  வருகின்ற ஓர் உதிப்பு தோன்றியது. உடனே அஹ்லு  பைத்துகளை புகழ் பாடுவதற்கு வழி காட்டினானே அந்த  அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்று புனித குடும்பத்தைப் புகழ் பாடும் பணியில் களமிறங்கினேன்

என்று கதையளந்து விட்டு  கவிதை நடையில் வஸீலாவை மய்யப்படுத்தி  ஒரு பிரார்த்தனையும் செய்கின்றார்.

இதன் பொருள்: உள்ளத்தில் உண்மையாகவே  ஹுசைன் குடும்பத்தாரை நான் நேசிக்கின்றேன். இதன் மூலம் சுவனத்தில் உல்லாசமாய் உலா வருவதை ஆதரவு வைக்கின்றேன்.

அவர்களின் பொருட்டால் இரக்க முள்ள நாயனே! என் புகழாரத்தை ஏற்றுக் கொள்வாயாக!  இப்போதே  விரைவாக எனது நோயை நீக்கி நிவாரணம் அளிப்பாயாக!

கடைத்தேற இடைத்தரகு தேவையா?

இந்த வழி கெட்ட கவிஞர் தனது  உரை மற்றும் கவிதையில், அனைத்திற்கும் விமோசனமும் விடுதலையும் அஹ்லு பைத்துகளை நேசிப்பதில் தான் அடங்கி யிருக்கின்றது. அவர்களை இடைத் தரகர்களாகக் கொண்டு அல்லது அவர்களின் பொருட்டால்  அல்லாஹ்விடம் கேட்டால் தான் தருவான். இன்னும் சொல்லப் போனால், அல்லாஹ் தர முடியாது என்று முடிவெடுத்திருந்தாலும் இவர்களை ஊடகமாக்கி அல்லது இடைத் தரகர்களாக்கி அல்லது இவர்களது பொருட்டால் அல்லது பரக்கத்தால் என்று கேட்டால் அல்லாஹ் தந்து விடுவான் என்று சொல்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் துஆவின் ஒழுங்கு முறை பற்றி கற்றுக் கொடுத்துள்ளதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் “இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாகஎன்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவ தாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6339

உலகத்தில் ஒரு மனிதன், சக மனிதனிடத்தில் “நீ கொடுத்தால் கொடு இல்லையென்றால் விட்டு விடு’ என்று சொல்வான். உணமையில், இது ஒரு  மறைமுக  நிர்ப்பந்தமும் மிரட்டலும் ஆகும். “நீ தரவில்லை என்றால் எனக்குப் பிரச்சனையில்லை. எனக்குத் தருவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்; நீ தராவிட்டால் உனக்குத் தான் நஷ்டம்’ என்ற பல பொருளை உள்ளடக்கியது இந்த வாசகம்.

இப்படி நிர்ப்பந்தத்தையும், மிரட்டலையும் அல்லாஹ்வுக்கு யாரும் விடுக்க முடியாது என்பதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட இந்த ஹதீஸில்  கற்றுத் தருகின்றார்கள்.

இந்த அடிப்படையில், “இன்னார் பெயரை நான் சொல்கின்றேன் எனவே, இறைவா!  இன்னார் பொருட்டால் எனக்கு நீ தர வேண்டும்’ என்ற  அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது அவனுக்கு விடுகின்ற  மறைமுக நிர்ப்பந்தமும், மிரட்டலும் ஆகும் என்பதை இந்தக் கவிஞரும், அவரது கேடு கெட்ட  கொள்கையைச் சேர்ந்தவர்களும்  உணரவில்லை.

இந்தக் கவிஞரின் இந்த நிலைப்பாடு,  அல்லாஹ்வை எடுப்பார் கைப் பிள்ளையாக ஆக்கி விடுகின்றது. அல்குர்ஆன் 85:16 வசனம் கூறுகின்ற “நினைத்ததைச் செய்து முடிப்பவன்” என்ற அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலை அடித்து நொறுக்கி அவனை யார் யார் எல்லாம் ஆட்டுவிக்கின்றாரோ அவருக்குத் தக்க ஆடக் கூடியவன் என்ற கேடு கெட்ட நிலைக்கு இறக்கி விடுகின்றது.

இந்தப் பலவீனத்தை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.   ரப்புல் ஆலமீனாகிய  அவன் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை மாற்றக் கூடியவன் எவனும் இல்லை. இதை அல்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

தொழுத பின்னால் ஓதக்கூடிய சில வழமையான துஆக்களில்  அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப் படுத்துகின்ற ஆழமான அர்த்தம் பொருந்திய இத்தகைய துஆவையும் கற்றுத் தருகின்றார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் கடமை யான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்’ (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எச்செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனுமளிக்க முடியாது.) – நூல்: புகாரி 844

இப்படிப்பட்ட அல்லாஹ்வின் ஆற்றலுக்கெல்லாம் உலை வைக்கக் கூடிய படுமோசமான பாதகமான சிந்தனையைத் தான் இந்தக் கவிஞர் கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்.  இது இவருக்குரிய தனிப்பட்ட கொள்கை கிடையாது. சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படக் கூடிய அத்தனை ஷியாக் கூட்டத்தின் கொள்கையாகும்.

ஆபத்திற்குக் கை கொடுக்கும் தொழுகையும் துஆவும்

பொதுவாக ஒரு மனிதனுக்குச் சோதனை ஏற்பட்டு விட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் தெள்ளத் தெளிவாக வழி காட்டி விட்டான்.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

நபி (ஸல்) அவர்களும் இதற்காகப் பல்வேறு வழிமுறைகளை காட்டித் தந்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது “லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்என்று பிரார்த்திப் பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும், பொறுமை மிக்கோனு மாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், மாபெரும் அரியாசனத்தின் அதிபதியு மான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

நூல்: புகாரி 6345

இதையெல்லாம் விட்டு விட்டு ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தைப் புகழ்ந்தால் பிரச்சனை தீரும் என்று சொல்வது இவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றாமல் தங்களது மன இச்சையைப் பின்பற்றுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. இந்த வகையில் இவர்கள் ஷியா மதத்தையே பின்பற்றுகின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.

வஸீலா தேடுவதின் வழிமுறை என்ன?

அஹ்லு பைத்துகளை அல்லது வேறு அவ்லியாக்களை வைத்து தேடப்படும் போலி வஸீலாவை நாம் கண்டிக்கும் போது, “பாருங்கள்! இந்த வஹ்ஹாபிளுக்கு நாம் அல்லாஹ் விடம் வஸீலா தேடுவது கூடப் பிடிக்கவில்லை;  ஆனால் நாமோ  5:35 என்ற வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்விடம் வஸீலா தேடுகிறோம்’ என்று தங்கள் தவறான நிலைப் பாட்டிற்குத் தக்க இந்த வசனத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள். அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 5:35

உண்மையில் இவர்கள் சொல்கின்ற இந்த வஸீலாவையா கூறுகின்றது என்று இப்போது விரிவாகப் பார்ப்போம். இவ்வசனத்தில்  “இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று கூறப்படுகிறது.

வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக – சாதனமாக உள்ளது என்பர்.

அல்லாஹ்வின் பால் நெருங்குவ தற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.

அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளில் போய்க் கேளுங்கள் என்பது இதன் பொருள் அல்ல.

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே சான்று உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய எல்லா முஸ்லிம்களும் அடங்குவர்.

முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான்.

முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இக்கட்டளையின்படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அவ்வாறு அஞ்சினார்கள்.

இரண்டாவது கட்டளை அல்லாஹ் வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விடச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது.

வஸீலா என்பதற்கு நல்லடியார் களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் இந்தக் கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.

“முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள்” அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்.

இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான் களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அந்த மகான்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் அவர்கள் வஸீலாவாக ஆக்கவில்லை யென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?

எனவே வஸீலாவுக்கு இடைத் தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். “நான் உங்களின் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றேனே! எனக்காக நீங்கள் உதவக் கூடாதா?’ என்று அவரிடம் உதவி கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.

“இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள்” என்று கேட்டால் நம்மைப் பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். “இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும்?” என்று கேட்பார்.

“இன்னார் பொருட்டால் இதைத் தா” என்று இறைவனிடம் இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாக உள்ளது.

“நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா” என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்குக் கோபம் வராதா? “நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்?” என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.

ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக்காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட மடமை எதுவும் இருக்க முடியாது. ஒரு மனிதரிடம் அப்படி யாரேனும் கேட்டால் அவருக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராதா? இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.

எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது. வஸீலா என்பது நல்லறம் தான் என்ற கருத்தை இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது.

அல்குர்ஆன் கூறுகின்ற இந்த உண்மையான நல்லமல்கள், நல்லறங்கள் வாயிலாக  வஸீலா தேடுவதை  விட்டு விட்டு இது கூறுக் கெட்ட ஷியாக் கூட்டம் நல்லடியார்களை வைத்து வஸீலா தேடுகின்றது. அப்படிப்பட்ட வஸீலாவைத் தான் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இந்த மவ்லிது கிதாப் வளைத்து வளைத்துக் கூறி மக்களை வழி கெடுக்கின்றது.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்  தொடர்: 32

பெண்களின் உரிமைகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியாக வரு வதற்கு முன்னால் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார்கள். அபூஸலமாவின் மூலமாகச் சில குழந்தைகள் உம்மு ஸலமாவுக்கு இருந்தன.

நபியவர்கள் குடும்பச் செலவிற்காக உம்மு ஸலமாவிற்குக் கொடுக்கும் தொகையில் தனது முன்னால் கணவர் அபூஸலமா மூலமாகப் பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கூலி கிடைக்கும் என்று சொன்னார்கள். தடையேதும் போடவில்லை.

அப்படியெனில் கணவனிடமிருந்து மனைவிக்குக் கிடைத்த பொருளா தாரத்தில் அந்தக் கணவருக்குச் சம்பந்தமில்லாத குழந்தைகளுக்கு, அதாவது வேறொரு கணவன் மூலமாகப் பெற்றெடுத்த குழந்தை களுக்கும் தாய் என்ற அடிப்படையில் செலவு செய்தால் அது கூடுதலான கூலியை இறைவனிடம் பெற்றுத் தரக்கூடிய காரியம் எனப் புரிந்து கொள்ளலாம்.

கணவனின் அனுமதி தேவை யில்லை, செலவழித்துக் கொள்ளலாம், மறுமையில் கூலியும் கிடைக்கிறது. இதுவும் இஸ்லாம் பெண்களுக்குச் செலவு செய்வதற்காக வழங்கியுள்ள உரிமையாகும்.

இதுபோக பெண்களுக்கு சுய செல்வமும் இருக்கத்தான் செய்யும். அதாவது வாரிசு முறையில் கிடைத்த சொத்து இருக்கலாம். அல்லது தகப்பனார் கொடுத்த அன்பளிப்புகள் இருக்கலாம். அல்லது கணவன் செலவுக்காகக் கொடுத்ததில் சிக்கனமாக செலவு செய்துவிட்டு சேகரித்து வைத்திருக்கலாம். இப்படி நகை நட்டுக்கள் என்று பெண்களுக்கு என தனி சொத்துக்களைச் சேர்த்து வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் மனைவிக்குரியதுதான்.

அதுபோக கணவனே அடிக்கடி அன்பளிப்பாக நகை நட்டுக்களை வாங்கிக் கொடுப்பான். இப்படி மனைவிக்குக் கணவன் கொடுத்தால் அது அவளுக்குரிய அன்பளிப்பாகத் தான் ஆகும். அவளுக்குத் தான் அது சொந்தம்.  கணவன் கொடுக்கும் போதே இது எனது சொத்து, நீ அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் உரிமை என்னுடையது என்று சொன்னால் அதில் மனைவிக்கு அனுபவிக்க மட்டும் தான் உரிமையுண்டே தவிர, அவற்றை தன்னுடைமை என உரிமை கொண்டாட முடியாது.

இப்படி பெண்கள் தங்களுக்குரிய சொத்துக்களை மார்க்கத்திற்காகவும், நன்மையான காரியங்களுக்காகவும் பயன்படுத்தினால் கணவன் அதில் தலையிட உரிமையில்லை என்றும் மார்க்கம் குறிப்பிடுகிறது. கணவனின் அனுமதியைப் பெறாமலேயே அவற்றைச் செலவிடலாம்.

எவ்வளவு பெரிய உரிமை இது?  கணவனுக்குரிய பொருளையும் அவனைக் கேட்காமல் செலவு செய்யலாம், தனக்குரியதையும் கணவனிடம் கேட்காமலேயே செலவு செய்யலாம் என்பது பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கிய கூடுதலான உரிமையாகும். பெண்ணுக்கு இவ்வளவு உரிமையை இஸ்லாம் வழங்குகிறது என்பதை உணர்ந்து ஆண்கள் செயல்பட வேண்டும்.

இதற்குச் சரியான சான்றாக பெருநாள் தினத்தன்று நபியவர்கள் பெண்களுக்கென திடீரென நடத்திய குத்பா உரை சம்பவத்தை ஆதாரமாகக் கொள்ளலாம்.

பெருநாள் தினத்தில் நபியவர்கள் தொழுகை முடித்துவிட்டு பெருநாள் குத்பா உரை நிகழ்த்துகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு எட்டிய அளவுக்குப் பெண்களுக்கு உரை எட்டவில்லை என நபியவர்கள் நினைக்கிறார்கள். அதன் பிறகு பெண்கள் பகுதிக்கு பிலால் (ரலி) யுடன் சென்று பிரத்யோகமாக மீண்டும் தனி குத்பா உரை நிகழ்த்துகிறார்கள். அதில் தர்மம் சம்பந்தமான செய்தியைச் சொல்கிறார்கள். பெண்கள் மனமுருகி தங்களின் அணிகலன்களான காதணி, கழுத்தணி, கால்தண்டை போன்ற நகைநட்டுக்களை பிலால் (ரலி) விரித்த விரிப்பில் தர்மமாக இடுகிறார்கள்.

இது தற்செயலாக நடந்த சம்பவம் தான். நபியவர்கள் இன்னது தான் பேசுவார்கள் என்று பேசும் வரைக்கும் ஸஹாபியப் பெண்களுக்குத் தெரியாது. கணவன்மார்களிடம் தர்மம் செய் வதற்கு அனுமதி கேட்டிருப்பதற்கும் வாய்ப்பே கிடையாது. நபியவர்களின் பேச்சைக் கேட்டு அந்த சபையிலேயே பெண்களாக எடுத்த முடிவின் அடிப்படையிலேயே தங்களது நகைகளை மார்க்கத்திற்காக, பைத்துல்மாலுக்காகக் கொடுக்கிறார்கள்  எனில் இது கணவனிடம் அனுமதி பெறாமலேயே பெண்கள் செலவிட லாம் என்பதற்குச் சிறந்த சான்றாக உள்ளது.

இந்தச் சம்பவம் புகாரியில் 98, 863, 964, 1431 இதுபோன்று நிறைய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வம் பெண்களுக்கு எந்த வகையில் வந்திருந்தாலும் தங்களுக் கென உரிமையாகிவிட்டால் அதைச் செலவழிப்பதற்கு கணவனின் அனுமதி பெறாமலேயே தங்களின் சுய முடிவின் அடிப்படையில் செலவழிக்கலாம்.  பெண்களின் செல்வத்திற்குப் பெண்கள் தான் சொந்தக்காரார்கள் என்பது இதிலிருந்து விளங்கும் முக்கியமான விஷயமாகும்.

அதுபோன்று அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

ஆண்களுக்கு அவர்கள் பாடு பட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:32

ஆக, இவ்வளவு சான்றுகளையும் வைத்துப் பார்க்கும் போது பெண்களுக்கு இஸ்லாத்தில் வழங்கப் பட்டுள்ள உரிமை போன்று எந்த மார்க்கத்திலும் மதத்திலும் வழங்கப் படவே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிற சமுதாயங்களில் பெண்கள் பெயரில் சொத்து வைத்துக் கொள்ளவே கூடாது என்றெல்லாம் உள்ளது.

அதாவது, உலக நடைமுறையில் சொத்துக்கள் கணவன் பெயரில் இருக்க வேண்டும். இல்லையெனில் தகப்பனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதுதான் பெண்களின் தலைவிதி என்று வைத்திருந்தார்கள்.

இஸ்லாம் அன்றைய காலத்தில் மஹர் என்ற பெயரில் பெண்களுக்குச் சொத்துரிமையை நிலைநாட்டியது. வாரிசு என்ற முறையில் சொத்துரிமை, அன்பளிப்பு வகையில் சொத்துரிமை,  அதுபோக தன்னால் வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடியுமானால் அதுபோன்ற சொத்துரிமைகளையும் பெண்கள் தங்கள் பெயரிலேயே வைத்துக் கொள்ள அனுமதியும், உரிமையும் வழங்கியுள்ளது.

எனவே பெண்கள் வேலைக்குப் போய் தான் சம்பாதித்து குடும்பத்தைப் பேணவேண்டும் என்கிற நிலை நிர்பந்திக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற பெண்களுக்கு கிடையாது.

ஆக, ஆண்களும் மார்க்கத்தைப் பேணி, பெண்களும் மார்க்கத்தைப் பேணி தன்னிறைவுடையவர்களாக வாழ்வதற்கு இஸ்லாம் வழிவகை செய்கிறது. இதுபோன்ற சுதந்திரத்தைக் கொடுத்து பெண்கள் தன்னிறைவாக வாழ்வதை கண்கூடாகப் பார்க்கிறோôம்.

குடும்பம் என்பது மனைவி மட்டுமல்ல

இதுபோக ஆண்கள் மனைவிமார் களுக்குச் செலவு செய்வதைத்தான் பார்த்தோம். இதில் குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றாலேயே மனைவிக்குச் செலவு செய்வது தான் என்று சிலர் நினைப்பது முற்றிலும் தவறானது.

முழு வருவாயையும் மனைவிக்கு மட்டுமே செலவு செய்வது கூடாது. பலர் வெளிநாடுகளில் இலட்சம் இலட்சமாக சம்பாதித்து அனைத் தையும் மனைவி பெயரிலேயே அனுப்பி வைக்கிறார்கள். அத்தனையும் கொடுத்துவிட்டு, கடைசியில் என்றாவது ஒருநாள் மனக் கசப்பு ஏற்பட்டு, விவாகரத்து ஏற்பட்டு விட்டால் அனைத்தையும் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று விடுகிறாள். இதனால் நிற்கதியாக வாழும் ஆண்களைப் பார்க்கிறோம். எனவே பெண்களுக்குத் தேவைக்குப் பொருளாதாரத்தைக் கொடுக்கலாமே தவிர, எல்லாவற்றையும் கொடுத்து விடக்கூடாது.

எனவே இதில் கணவமார்கள் புரிய வேண்டிய முக்கிய செய்தி, மனைவிக்குக் கொடுப்பதைப் போன்று குடுபத்திலுள்ள மற்றவர்களுக்கும் இன்னும் குடும்பத்தில் தேவைப் படுகிற மற்ற செலவுகளையும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது என்பதுதான்.

நாம் சம்பாதிக்கும் பொருளில் தாய் தந்தையருக்கும், மனைவி மக்களுக்கும், உற்றார் உறவினர் களுக்கும் இன்னும் பல நற்காரியங்களுக்கும் சமூகப் பணிகளுக்கும் செலவழிக்கும் உரிமை ஆணுக்கு இருக்கிறது என்பதை முதலில் புரிய வேண்டும்.

ஆண் சம்பாதிப்பது எதற்கு என்பதைப் பற்றி நபியவர்கள் இப்படிக் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

உலகிலேயே அழகிய முறையில் உறவாடுவதற்கு தகுதியானவர் யார்? என நபியவர்களிடத்தில் கேட்டபோது, தாய் தான் என்றார்கள். அப்படியெனில் ஒரு ஆண் மகன் சம்பாதிக்கும் பொருளிலேயே முதன் முதலாக செலவு செய்வதற்குத் தகுதியான நபர் தாய் தான். இப்படியே மூன்று முறை கேட்கிறார்கள்; மூன்று முறையும் தாய் என்றார்கள். நான்காவதாக தந்தை என்றார்கள்.  ஒரு ஆண் தாயிற்குப் பிறகு தந்தைக்குச் செலவு செய்திட வேண்டும்.

ஆனால் இன்று பலர், திருமணம் ஆனதும் தாய் தந்தையரை மறந்து விடுவதைப் பார்க்கிறோம். தாய் தந்தையர்களை நடுரோட்டில் விடுகிற நிலைமையைப் பார்க்கிறோம். இது மார்க்கத்திற்கு விரோதமானது. மனைவி என்ற ஒரு பெண் திட்டமிட்டு கணவரைத் தனிக் குடும்பம் நடத்திட வலியுறுத்துகிறாள்.  மாமனார், மாமி யாரைப் பார்ப்பதை வெறுக்கிறார்கள். அதற்கு எதையாவது கதைகளை அளந்து கணவனிடம் உசுப்பேற்றி விடுகிறார்கள். ஆண்களும் இதைப் பாவம் என்று விளங்காமல் வாழ்வதைப் பார்க்கிறோம்.

இதில் பெண்கள், தாய் தந்தையரைக் கவனிக்காத பாவியாக தமது கணவனை ஆக்குகிறோம், நரகவாதியாக மாற்றுகிறோம் என்கிற குற்ற உணர்வற்றவர்களாக இருக்கிறார் கள். இவையெல்லாம் மார்க்கத்தில் சரியான காரியங்களா? என்று பகுப்பாய்ந்து பெண்கள் தங்களைப் பேணிக் கொள்ள வேண்டும்.

எனவே ஆண்கள் தாய் தந்தையரை விட்டுவிட்டு வருகிறார்கள் எனில் அந்த நிலையைத் தூண்டியது, அதனை வலியுறுத்தியது பெண்தான். எனவே பெண்கள் நமது கணவன் மார்கள் தாயைக் கவனித்து சொர்க்கம் செல்ல வேண்டும், தந்தையைக் கவனித்து நரகிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டும், அதில் ஏற்படுகிற சிரமங்களை நாம் தாங்கிக் கொண்டு கணவனைப் பெற்றோர்களைப் பேணுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் தாய் தந்தை என்று இருப்பதுதான் கணவன் மனைவிக்கிடையேயுள்ள பிரச்சனைகளையும், குழப்பங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.

பெண்களில் அதிகமானோர், தனிக் குடும்பமாக வாழ்வது சரியானது என நினைக்கிறார்கள். ஆனால் இது பல கட்டங்களில் மார்க்கத்தின் வரம்புகளை மீறுவதற்கு வழிவகை செய்கிறது.

இவ்வுலக வாழ்விலும் பல கட்டங்களில் எதிர்பார்த்த நன்மைக்குப் பதிலாக எதிர்ப்பார்ப்புகள் பொய்த்து தீங்கு நேரிடுவதைப் பார்க்கிறோம். குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையைக் கவனிப்பதற்கு தந்தையால் முழு நேரம் செலவிட முடியாது. தாயால் கூட முழுநேரமாக முடியாது.

பெரும்பாலான நேரங்களில் தாத்தா பாட்டியாக இருக்கிற கணவனின் தாய், தந்தையர் அல்லது மனைவியின் தாய் தந்தையர் தான் பேணி வளர்க்கின்றனர். சில நேரங்களில் தனிக் குடும்பத்தில் குழந்தைகள் கணவன் மனைவியரை சந்தோஷ மாகக் கூட இருக்க விடாத சூழ்நிலையெல்லலாம் உள்ளது.

தாய் தந்தையர் இருந்தால் குழந்தைகளைப் பேணுவார்கள், வேலைகளைப் பகிர்ந்து செய்து கொள்ளலாம், தகுந்த ஆலோசனை களை வழங்குவார்கள், பக்கபலாமாக, துணையாக நிற்பார்கள். அதேபோன்று கணவன் வேலைக்குச் சென்று விடுவார்; மனைவி தனியாக இருப்பார். இதுவே பலவிதமான மன அழுத்தத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்தி விடும்.

இவற்றையெல்லாம் மாற்றி இயல்பாக வாழ்வதற்கு கணவனின் பெற்றோருடன் இருப்பதே சிறந்த வழிமுறையாகும். அதற்குத் தேவையான பொருளாதாரமும் கணவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படியிருந்தால் மறுமையில் கணவன் சிறப்பான அந்தஸ்தில் இருக்க முடியும். பெண்களாகிய நாமும் மாமியார் மாமனாரைப் பார்ப்பதினால் மறுமையில் சிறப்பான இடத்தைப் பெறமுடியும். ஆண்கள் பெற்றோருக்குச் செய்கிற கடமைகளில் மனைவி குறுக்கிடவே கூடாது. குடும்பத்தினரில் யாருக்கெல்லாம் பொருளாதாரத்தில் கணவன் செலவழிக்க வேண்டும் என ஒரு பட்டியலேயே நபியவர்கள் போடுகிறார்கள்.

தாய் தந்தையரையும் சகோதரி களையும் சகோதரர்களையும் பிறகு அதற்கடுத்த அதற்கடுத்த சொந்தங் களையும் கவனிக்கச் சொல்கிறார்கள் நபியவர்கள்.

ஆனால் சமூக அமைப்பில் ஒரு மனைவிக்கு வில்லியாக சித்தரிப்பது, கணவனின் உடன் பிறந்த சகோதரிகளைத் தான்.

உண்மையில் கணவனின் உடன் பிறந்தோர்களிடம் ஒரு பெண் எவ்வளவு நேசபாசமாக நடக்க வேண்டும்?

கணவன் சம்பளம் வாங்கியதும் முதலில் உங்களது தாயாருக்கும் பிறகு உங்களது தந்தைக்கும் கொடுங்கள் என்று சொல்பவளே நல்ல மனைவியாவாள். உங்களது அக்கா தங்கைக்கெல்லாம் ஏதேனும் கொடுத் தீர்களா? என்று கணவனிடத்தில் கேட்பவள் தான். அப்போதுதான் கணவன் அல்லாஹ்விடத்தில் நல்லவனாக முடியும். அப்படி ஒரு மனைவியைப் பெற்றிருப்பவன் குடும்ப வாழ்வில் சிறப்பாகச் செயல்பட முடியும். ஏனெனில் இப்படியொரு நல்ல மனைவியைப் பெற்றதே பெரிய பாக்கியமாக நினைப்பான். வெறுமனே காசு, பணம் மட்டும் நமது சந்தோஷங்களைத் தீர்மானித்து விடாது.

அல்லாஹ்வும் இவ்வாறு தான் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிக்காதே என்று சொன்ன இறைவன் எல்லா இடங்களிலும், அதற்கடுத்ததாக உங்களது பெற்றோர்களைப் பேணுங்கள் என்றே சொல்கிறான்.

“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ” எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக் காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 4:23, 24

இதுபோன்ற வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

பார்க்க: அல்குர்ஆன் 4:36,37, 6:151

உங்கள் பெற்றோருடன் அழகான முறையில் தோழமையாக இருந்து கொள் என்றும் கூறுகிறான். எனவே பெற்றோர்களைப் பேணுவதைப் பற்றி மார்க்கம் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. எனவே ஆண்களுக்கு பெற்றோரைப் பேணுவது கட்டாயக் கடமை. அதனை மனைவிமார்கள் தூண்ட வேண்டும். எனவே பெண் களும், ஆண்களும் பெற்றோரையும் மாமனார் மாமியாரையும் பார்ப்பது மார்க்கத்தில் மிகவும் முக்கியமான நன்மை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒருவேளை தனிக்குடித்தனம் போவது தான் மாமியாருக்கு நன்மை என்ற நிலை வந்தால் கூட கணவன் அவர்களது பெற்றோர் விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்வதைத் தூண்டுவது பெண்ணின் முக்கியக் கடமையாகும். அப்போது தான் அது மறுமைக்காக உழைக்கிற குடும்பமாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட மறுமை நலனுக்காக உழைக்கிற குடும்பமாக மாறுவோம். இரு உலகிலும் வெற்றி பெறுவோம்.

—————————————————————————————————————————————————————-

காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை

உம்மு ராஷித், மேலப்பாளையம்.

ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

அல்குர்ஆன் 17:15

ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அருள்மறையாம் திருமறையில், ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்று குறிப்பிடுகிறான்.

ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது என அல்லாஹ் கூறுகின்றான்.

உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொரு வன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது.

பழி, பாவம் என்று குறிப்பிட்ட வுடன் பாரதூரமான காரியத்தை ஒருவன் செய்து விட்டு அந்தப் பழியை மற்றொருவன் மீது போட்டுவிடுவது என எண்ணிவிடக் கூடாது. நாம் இங்கே கூற வருவது ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்காக அவனைச் சார்ந்தவர்களை ஒட்டு மொத்த சமூகமும் இழிவாகக் கருதுவதையும், விமர்சிப்பதையும் தான்.

இச்செயல் பிற மதத்தினரிடம் இருந்தால் அவர்களுக்கென்று எந்த வரையறையும் கிடையாது என விட்டுவிடலாம்.

ஆனால் அறியாமைக் கால பழக்கவழக்கங்கள் அனைத்தையும் என் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்து விட்டேன். உங்களில் ஒருவர் மற்றவருக்குச் சகோதரர்  என எல்லா வகையிலும் மனித நேயத்தைப் போதித்த இஸ்லாமிய சமுதாயத்தாரிடம் இந்நிலை குடிகொண்டிருப்பது தான் நம்மை கலக்கம் அடையச்செய்கிறது.

ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் மது அருந்துகிறார்; அல்லது கொலை செய்திருக்கிறார்; அல்லது திருடியிருக்கிறார். அவரது இழி செயலுக்காக அவரைக் குறை கூறுவதும், குற்றம் பிடிப்பதும் நியாயமானது தான்.

ஆனால் இதற்காக அவரது பெற்றோர்களுக்கு, மனைவி, மக்களுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு இந்தப் பாதக செயல்களை அடை மொழியாக்கி குடிகாரனின் மகன், குடிகாரனின் மனைவி என்று அவர்களை அடையாளம் காட்டுகிறது இந்த சமூகம். இது எவ்விதத்தில் நியாயம்?

மது அருந்துவது தவறு என்று தெரிந்தும் அத்தவறைச் செய்யும் தகப்பனுக்கு எவ்வித இழுக்கோ, பாதிப்போ இருப்பதில்லை. ஆனால் அவனுக்கு பிறந்த ஒரே பாவத்திற்காக பழியைச் சுமந்து கொண்டு அன்றாடம் பாதிக்கப்படுவதும், பரிதவிப்பதும் அவரின் குடும்பத்தினர் தான். தவறே செய்யாமல் இங்கே இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

எந்த ஒரு தகப்பனோ, அல்லது தாயோ தன் பிள்ளை கெட்டுப்போக வேண்டும், தப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. தன் கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விடக்கூடாது என்றே ஒவ்வொரு பெற்றோரும் விரும்பு கின்றனர். ஆனால் சமுதாயமோ பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்று வாய்க்கு வந்த படி பேசி விடுகின்றனர்.

தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை, அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து விட்டான், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயத் தானே செய்யும் என்பன போன்ற பழமொழிகளை ஒரு மனிதன் நன்மை செய்யும் போது பயன்படுத்துவதை விடவும் தவறு செய்யும் போது அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இதோ நபிகளார் கூறுவதைக் கவனியுங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறு கிறார்கள்: அறிந்து கொள்ளுங்கள் ஒருவர் செய்த குற்றத்திற்கு அவரைத் தவிர வேறு யாருக்கும் தண்டனை தரக்கூடாது. பிள்ளை செய்த குற்றத்திற்காக பெற்றோருக்கு தண்டனை தரக் கூடாது. பெற்றோர் செய்த குற்றத்திற்காக பிள்ளைக்கு தண்டனை தரக்கூடாது.

அறிவிப்பவர்: அம்ரு இப்னு அல்அஹ்வஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2085

மேலும் நபி (ஸல்) அவர்கள் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்றும் நமக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டு வார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்என்றோம். அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் “ஆம்என்றோம். நபி (ஸல்) அவர்கள் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிட வேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 67

அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்ட மானத்தில் ஒவ்வொருவரும் சர்வ சாதாரணமாக சரமாரியாக விளையாடிக் கொண்டிருக்கின்றோம். தவறுகள் அரங்கேறி காலங்கள் கரையோடி னாலும் அவர்களின் அந்தக் கருமங்கள் மட்டும் தலைமுறையையும் தாண்டி ஆறாத வடுவாக இருந்து கொண்டேயிருக்கின்றது. இவர்களின் இவ்விளையாட்டிலே மழலை மொழி மாறாத, மனித முகம் அறியாத குழந்தைகள் கூட தப்பமுடியவில்லை.

தாய் தந்தையர் சூட்டிய பெயரில் அழைக்கப்படுகிறார்களோ இல்லையோ பெரியோர் செய்த தவறை சுட்டிக் காட்டி அதை புனைப் பெயராக்கி அப்பெயரிலேயே அவர்களை அழைத்து அவமானத்தை ஏற்படுத்துபவர்களே ஏராளம். இது புனைப்பெயரிட்டு புண்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இவர்களின் மனிதாபிமானமற்ற மனித நேயம் இன்னும் தொடர்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 49:12

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 49:11

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது, பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள் ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5006

அவர்களது தவறான எண்ணம் மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதால் இறைவனே அதைப் பாவமானது என்று கூறுகின்றான். முன்னோர்கள் செய்யும் தவறுக்காக தவறே செய்யாத நாங்கள் குற்றம் பிடிக்கப்பட வேண்டுமா? காலமெல்லாம் அவமானப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டுமா? எனது தகுதிக்கும், நற்பண்புகளுக்கும் எந்த மதிப்பும் இல்லையா? என்ற பாதிக்கப்பட்டவனின் கேள்விக்கும், குமுறலுக்கும் நியாயமான எவ்வித பதிலையும் தருவதில்லை இந்தச் சமூகம்.

இதர விஷயத்தில் வியாக்கியானம் பேசுபவர்களும் கூட  இவ்விஷயத்தில் வாய் மூடி மௌனமாகின்றனர். இது தான் எதார்த்தம். இந்நிலையை மாற்ற முடியாது என்றே கருதுகின்றனர்.

ஒரு மனிதன் அவனது குடும்பத்தினரால் தான் அடையாளம் காட்டப்படுகின்றான். பெற்றோர்களின் கர்மம் பிள்ளைகளையே சாரும் என்பதைப் போன்று குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் செயல்பாடுகளைக் கொண்டே ஒரு மனிதனின் கடந்த கால, நிகழ்கால, வருங்கால, நிலை தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே இயற்கையின் நியதி என்று கூறி மறைமுகமாகவும், வெளிப்படை யாகவும் அவர்களின் அநீதிக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

இவ்வுலகத்தில் மாற்றவே முடியாது என்ற எந்தச் செயலும் இல்லை. மாற்றுவதற்கு (தன்னை திருத்திக் கொள்வதற்கு) மனமே இல்லாத போது மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இதையே இறைவனும் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும்போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

அல்குர்ஆன் 13:11

இவ்வாறு சொல்பவர்களிடத்தில் நாம் கேட்கின்றோம். இதே சூழ்நிலை அவர்களின் குடும்பத்திலும் ஏற்பட்டு அதையே அவர்களுக்கு அடையாளமாக்கி குடிகாரனின் மகன் என்ற முத்திரையைக் குத்தும் போது இது தான் யதார்த்தம், இயற்கை நியதி என்று கூறினால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இத்தருணத்தில் தான், தாம் இது போன்று மற்றவர்களைப் புண்படுத்திய விஷயங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவனின் மன உளைச்சலை பிற மனிதர்கள் உணர்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தான் பாதிக்கப்பட்டால் தான் பிறரது வலியை உணரமுடியும் என்றால் நாம் மனிதப் பிறவிகளாக பிறந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். பகுத்தறிவை எது எதற்கோ பயன்படுத்தும் மனித சமுதாயம் தான் பாதிக்கப்படும் போது தான் பிற மனிதனின் வலியை உணர்கின்றது என்றால் இது எவ்வளவு பெரிய அவமானம், வேதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இச்செயல்களுக்காக சமுதாயத்தின் ஒர் அங்கமாக இருக்கின்ற நாம் வெட்கித் தலை குனிய வேண்டும். எல்லோருமே நல்ல காரியங்களை வரவேற்கின்றோம். ஆனால் பிற மனிதர்கள் தான் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமே ஒழிய அதை நம்மிடமிருந்து ஆரம்பிப்பதில்லை.

மனிதர்களாக படைக்கப்பட்ட அனைவருமே தவறு செய்பவர்கள் தான். இதற்கு சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொன்ன இறைத்தூதர்கள் மற்றும் சத்திய வழி நடந்த ஸஹாபாக்களும் விதிவிலக்கல்ல! தன்னைத் தானே பரிசுத்தவான் என்று சொல்லிக் கொள்ள யாருக்கும் தகுதியில்லை. தவறு செய்வது மனித குணம். அதை மன்னிப்பது மனிதாபிமானம். மன்னித்து அவர்களுக்கு நல்வழிகாட்டி அவர்களுக்கு நன்மைகள் புரிவது மார்க்க அடிப்படையில் சிறந்த பண்புகள். ஒருவரை நீங்கள் மன்னித்து அவரது குறையை மறைத்தால் காலத்திற்கும் உங்களை அவர்கள் மறக்கமாட்டார்கள். மனிதர்களின் உள்ளங்களில் மிக உயர்ந்த அந்தஸ்தை உங்களுக்கு ஏற்படுத்துகின்ற குறைகளை மறைத்தல் என்ற குணம் உங்களை மக்களுக்கு மத்தியில் சிறந்தவராக ஆக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டுவிடவும் மாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட் டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்:  முஸ்லிம் 5036

மார்க்கம் இவ்வாறு கூற நாமோ பெற்றோர்கள் செய்த குற்றத்திற்காகப் பிள்ளைகளையும், பிள்ளைகள் செய்த குற்றத்திற்காகப் பெற்றோர்களையும், முந்தைய தலைமுறையினர் செய்த தவறுக்காகப் பிந்தைய தலைமுறை யினரையும் அவமானப்படுத்து கின்றோம். இது அவர்களுக்கு நாம்  செய்யும் மிகப்பெரும் அநீதி என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவன் இறைவனிடம் நான் இச்சமூகத்ததால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று முறையிடும் போது   இறைவன் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கின்றான்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2448

இந்தப் பாதக செயல்களின் தாக்கம் இம்மையோடு மட்டும் நின்று விடாமல் மறுமை வரையும் தொடர்கின்றது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்த வரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறை கேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப் படும். அவருடைய நன்மைகளி லிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப் படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5037

பாதிக்கப்பட்டவன் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும், மனவேதனைக்கும், இவ்வுலகில் அவனுக்கு ஏற்பட்ட அவல நிலைக்கும் பகரமாக மறுமையிலே அவன் கணக்குத் தீர்த்துக் கொள்வான். எனவே மறுமையில் பாதிக்கப் படுவதிலிருந்து விலகி, பாதிப்பை ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

நரகத்திற்கு அழைக்கும் நாகூர் ஹனிஃபா

நாகூர் இப்னு அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி.

1980களில் தன்னுடைய ஏகத்துவ பிரச்சாரப் பயணத்தை தவ்ஹீத் ஜமாஅத் துவக்கியது. துவக்கிய ஆரம்ப காலம் முதல் இணை வைப்பிற்கு எதிராக வீரியமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

இணை வைப்பின் சாயல் எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடங்களையெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கப் பாடுகிறது.

ஆரம்பத்தில் இணை வைப்பில் மூழ்கியிருந்த மக்களிடத்தில் தர்கா வழிபாடு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாமல் மவ்லிதுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது என்று அனைத்து மவ்லிதுகளிலும் மனிதர்களை அல்லாஹ்வின் அந்தஸ்திற்குக் கொண்டு சேர்க்கும் இணைவைப்பு வாசகங்கள் இருக்கின்றன என்று அவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லி விளக்கினோம். அல்லாஹ்வுடைய அருளால் அதன் தாக்கம் மக்களிடத்தில் குறைந்தது.

அதே போன்று தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த நாகூர் ஹனிஃபா அவர்களின் பாடல்கள் மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது வெண்கலக் குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருடைய உள்ளத்திலும் அவரது பாடல்கள் இடம்பிடித்தது.

எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவக்கு வதாக இருந்தாலும் ஹனிஃபாவின் பாடல்களை ஒலிபரப்பித் தான் ஆரம்பிக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப் போனால், பல ஊர்களில் பள்ளிவாசல்களில் கூட நோன்பு, பெருநாள் நாட்களில் ஒலிபரப்பி வருகின்றனர்.

இன்றளவும் வெள்ளிக்கிழமை களில் வீடுகள் மற்றும் கடைகளில் நாகூர் ஹனிபாவின் பாடல்களை ஒலிபரப்பாவதைப் பார்க்க முடியும். இதை ஒரு புனிதக் காரியம் என்று நினைத்தே பாமர மக்கள் பலர் செய்து வருகின்றனர்.

இதற்குக் காரணம் அதில் இஸ்லாமிய கருத்துக்கள் நிறைந்திருக் கின்றன என்று நினைப்பதுதான்.

அவரது பாடல்களில் ஒரு சிலவற்றில் இஸ்லாமிய சிந்தனை இருந்தாலும் அதிகமானவைகளில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விஷமக் கருத்துக்கள் தான் நிறைந்துள்ளன.

அப்படியிருந்தும் இந்தப் பாடல்களை இஸ்லாத்தின் வேத வரிகள் போல நம்புகின்றவர்கள் இன்றளவும் ஏராளம்.

இந்த நிலையைச் சீர் செய்ய வேண்டும் என்பதற்காக ஏகத்துவம் இதழ் ஹனிஃபாவின் ஒரு சில பாடல்கள் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைகின்றது என்று இதற்கு முன்னால் தெளிவுபடுத்தியிருந்தாலும் இத்தொடர் கட்டுரையின் வாயிலாக ஒவ்வொரு பாடலையும் தெளிவு படுத்தவிருக்கின்றோம்.

இவ்வாறு மக்களுக்குத் தெளிவு படுத்துவது தனி நபர் விமர்சனமாக ஆகாது. இணைவைப்பை தெளிவு படுத்தியதாகத் தான் ஆகும் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிளக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4001

எதிர்காலத்தை அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

அந்த ஆற்றல் அல்லாஹ்வின் தூதருக்கு இருப்பதாகப் பாடும் சிறுமிகளைக் கூட, அவர்கள் அறியாமல் சொல்லி விட்டார்கள் என்று விட்டுவிடாமல் நபி (ஸல்) அவர்கள் கண்டித்து தெளிவுபடுத்துகிறார்கள்.

அந்த அடிப்படையில் முதலாவதாக, “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்று துவங்கும் பாடலில் இடம்பெறும் இணை வைப்புக் கருத்துக்களை இம்மாத இதழில் அறியவிருக்கின்றோம்.

“அடியார்க்கு அருள் செய்யும் அம்மா

அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா”

அழகிய கடலோரத்தில் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கும் பீமா அம்மா தான் மனிதர்களுக் கெல்லாம் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார் என்று பாடுவதன் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விஷமக் கருத்தினை இந்தப் பாடலில் நாகூர் ஹனிஃபா பதிவு செய்கின்றார்.

இந்த உலகத்தில் வாழும் எந்த மனிதனாக இருந்தாலும் அவன் மரணித்து விட்டால் அவனுக்கும், இவ்வுலகிற்கும் இடையே உள்ள தொடர்பு அத்தோடு முறிந்து விடுகிறது.

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

அல்லாஹ் மனிதர்களின் உயிரைக் கைபற்றுகின்ற போது இவ்வுலகிற்கே தன்னை திருப்பி அனுப்புமாறு மனிதர்கள் இறைவனிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதை நிராகரிக்கும் விதமாக “அவர்களுக்குப் பின்னால் (பர்ஸக்) திரை உள்ளது” என்ற வாசகத்தை இறைவன் பதிவு செய்வதன் மூலம் இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறான்.

நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களும் இறந்துவிட்டால் பர்ஸக் எனும் புலனுக்குத் தெரியாத திரையால் திரையிடப்பட்டுவிடுவார்கள். அவர்களால் இவ்வுலகைக் காண முடியாது, இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு பேச முடியாது, பேசுவதை கேட்க முடியாது, எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாது.

அவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என்று யாரேனும் நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணை கற்பித்ததாக ஆகிவிடும்.

ஏனென்றால் அல்லாஹ்தான் தனது அர்ஷில் இருந்து கொண்டு இங்கு வாழும் மனிதர்கள் அனைவரையும் கண்காணிக்கின்றான், அவர்கள் பிரார்த்திப்பதைச் செவியுறுகிறான்.

ஆனால் ஹனிபா அவர்கள், என்றோ இறந்து போன பீமா என்ற பெண்மணி இன்றளவும் உயிருடன் இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் அடியார்க்கெல்லாம் அருள் புரிகின்றார் என்று அல்லாஹ்வின் வசனத்திற்கு எதிராகப் பாடியது மட்டுமின்றி இவை இஸ்லாமியப் பாடல்கள் (?) என்றும் மக்களுக்கு மத்தியில் பதிவு செய்துள்ளார்.

அல்லாஹ்வின் அடியாரா? பீமாவின் அடியாரா?

மேலும் தனது பாடலில் “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்று பாடுவதன் மூலம் பீமாவிற்குத் தான் நாங்கள் அடியார்கள். அல்லாஹ்விற்கு அல்ல என்பதைப் பதிவு செய்கின்றார்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும் பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் 13: 15

மனிதன் உட்பட இவ்வுலகில் உள்ள அனைத்தும், அவற்றின் நிழல்களும் தனக்கே பணிகின்றன என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூற, “நாங்கள் உனக்குப் பணிய மாட்டோம் பீமாவிற்குத் தான் பணிவோம்’ என்று இந்தப் பாடல் வரி அல்லாஹ்விற்கு எதிராக பேசுகிறது.

அருள் புரிவது அல்லாஹ்வா? பீமாவா?

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்திற்கும் அல்லாஹ்தான் அருள் புரிகிறான். அல்லாஹ்வைத் தவிர யாராலும் எவ்வித அருளும் யாருக்கும், எதற்கும் வழங்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் தவிர (மற்றவருக்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்படும் என்றோ, உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள் என்றோ, நம்பாதீர்கள்!” (எனவும் கூறுகின்றனர்.) “நேர் வழி அல்லாஹ் வின் வழியேஎன்று கூறுவீராக! “அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராள மானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 3:73

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:268

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 29:60

மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர் களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல்குர்ஆன் 2:243

திருமறைக் குர்ஆனுடைய இத்தனை வசனங்களும், இன்னும் ஏராளமான வசனங்களும் அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது என்று கூற, “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்ற இந்த வரி, அருள் புரிவது அல்லாஹ் மட்டுமே என்ற இஸ்லாத்தின் ஆணிவேரைப் பிய்த்து எறியும் விதமாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழந்த காஃபிர்களின் நம்பிக்கை கூட அல்லாஹ்தான் அருள் புரிபவன் என்றிருந்தது.

அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்என்று அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர். அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கிய போது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.

அல்குர்ஆன் 9:75, 76

இந்த வசனத்தில் காஃபிர்கள் “அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால்” என்று கூறுவதின் மூலம் அருள் புரிபவன் அல்லாஹ்தான் என்று நம்பியிருந்தனர் என்றும் அதேசமயம் இறைவன் அருள் புரிந்ததற்குப் பிறகு நன்றி கெட்டு நடந்தனர் என்றும் விளங்குகிறது.

ஆனால் இந்தப் பாடல், பீமாதான் தன்னுடைய அடியார்க்கு அருள் புரிகின்றார் என்று கூறுகிறது.

பீமாவைக் கடவுளாகவும், மக்களை பீமாவின் அடியார்களாகவும் மாற்றி அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் வாசகங்களை ஏந்தி நிற்கும் பாடலுக்கு பெயர் இஸ்லாமியப் பாடலா?

“படி மீது கெதி வேறு உண்டோ

என்னைப் பாராது வாராது இருப்பதும் நன்றோ”

தங்கள் படிகளே கதி என்று இருக்கும் என்னைப் பார்க்க மாட்டீர்களா? என்று பொருள் பட இப்பாடலின் அடுத்த வரி துவங்குகிறது.

அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து இருப்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைக் கலப்பற்ற முறையில் நம்பியுள்ளான் என்பதற்குத் தக்க சான்றாகும்.

ஆனால், பீமாவே கதி என்று இருப்பதாகவும், அவரையே எதிர் பார்த்து இருப்பதாகவும் இப்பாடல் கூறுகிறது.

இவர்கள் யாரையெல்லாம் கடவுளின் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று அவர்களின் அருளை எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்களோ அந்த அவ்லியாக்களே(?) அல்லாஹ்வுடைய அருளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார் களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

அல்குர்ஆன் 17:57

பீமாவை இவர்கள் கடவுளாகக் கற்பனை செய்கின்றனர். ஆனால் அந்த பீமாவே அல்லாஹ்வின் அருளைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

“என்னை பாராது வாராது இருப்பதும் நன்றோ” என்ற இந்த வரியை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ளலாம்.

பீமா அவர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும் என்பது முதல் விதம்.

அல்லது, பீமா தனது அருளை வந்து தர வேண்டும் என்பது இரண்டாம் விதம்.

இந்த இரண்டு விதங்களில் எப்படிப் புரிந்து கொண்டாலும் அது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற வாசக முறை தான்.

ஏனென்றால், இறந்து விட்ட பீமா நேரடியாக வருதல் என்பதும் முடியாது. அருளும் தர முடியாது. இவற்றைப் பற்றி ஏற்கனவே மேலே குறிப்பிட்டுவிட்டோம்.

“படி வாரும் மலர் பாதம் அன்றோ

ஓடி வர வேண்டும் வர வேண்டும் இது நேரமன்றோ”

இறந்துவிட்ட பீமாவால் படியில் ஓடியும் வரமுடியாது. நடந்தும் வர முடியாது என்பது தெளிவு.

பீமாவின் பாதம் மலர் போன்றது என்று இந்த வரியில் வர்ணிக்கின்றார்.

பீமாவின் பாதம் மலர்போன்ற மென்மையான பாதமா? அல்லது பித்த வெடிப்பால் வறண்ட பாதமா என்பது யாருக்குத் தெரியும்?

வரலாறு நிறை கேரளாவில்

வாழும் மறையோர்கள் முறை கேட்கும் தாயே

வரலாறு நிறைந்த கேரளாவில் வாழும் மறையோர்கள். மறையோர்கள் என்றால் வேதத்தின்படி நடப்போர்கள் என்று அர்த்தமாகும்.

அந்த மறையோர்களே பீமாவிடம் தான் பிரார்த்திக்கிறார்கள் என்று இந்த வரி கூறுகிறது.

ஒருவன் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின்படி நடந்தால் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்க மாட்டார்கள்.

ஏனென்றால், திருமறைக் குர்ஆனுடைய பல வசனங்கள் அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் பிரார்த்திப்பதை கடுமையாக கண்டிக் கின்றது. நரகத்தை வாக்களிக்கின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப் பேற்றுக் கொள்கிறான்” (என்றும் கூறுவீராக!)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 7:194-198

உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!என்று கூறப்படும். அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். வேதனையையும் காண்பார்கள். இவர்கள் நேர் வழி சென்றிருக்கக் கூடாதா?

அல்குர்ஆன் 28:64

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லைஎன்று கூறுவீராக!

அல்குர்ஆன் 34:22

இவைகளைப் போன்று இன்னும் ஏராளமான வசனங்கள் அல்லாஹ்  வையன்றி யாரிடமும் கையேந்தக் கூடாது என்று சொல்கின்றன. இந்த வேதத்தின்படி நடக்கும் மறையோர்கள் எப்படி பீமாவிடம் பிரார்த்திப்பார்கள்?

இன்னும் சொல்லப் போனால் இதே ஹனிபா அவர்கள், இறை வனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை என்று ஏகத்துவ வாசகங்களை ஒரு பாடலில் சொல்லிவிட்டு இந்தப் பாடலில் பீமாவிடம் கையேந்துங்கள் என்று ஏகத்துவத்திற்கு எதிரான வாசகங்களைச் சொல்கின்றார்.

இன்றையை தர்காவாதிகள் இறந்தவர்களிடம் பிரார்த்தித்துவிட்டு, நாங்கள் அல்லாஹ்விடம் நெருங்க வேண்டும் என்பதற்காக இவரின் பொருட்டால் கோரிக்கை வைக் கின்றோம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இப்படி காரணம் சொல்பவர்களைத் தான் அல்லாஹ் காஃபிர் (இறை மறுப்பாளன்) என்கின்றான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின் றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

“அருளோடு முகம் பார்க்க வேண்டும்

என்னை அன்போடு கண் பார்த்து வந்தாள வேண்டும்”

எனக்கு அருள் புரிந்து, என்னை நீங்களே ஆள வேண்டும் என்று பீமாவை நோக்கி கூறுகிறார்.

அருள் புரிவது அல்லாஹ் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

அனைத்து மனிதர்களையும் ஆள்பவன் அல்லாஹ் ஒருவனே.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

இந்த வசனத்தில் “என்னை வணங்குவதற்காக” என்ற இடத்தில் யஃபுதூனீ என்று அரபிச்சொல் இடம்பெற்றுள்ளது.

இது அப்து – அடிமை என்ற மூலச் சொல்லிலிருந்து வந்ததாகும்.

அதாவது, அல்லாஹ்வாகிய நான் எஜமானனாக இருந்து, அடிமைகளான மனிதர்களையும், ஜின்களையும் நான் ஆள வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களைப் படைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் 3:83

ஆனால் இந்த வரியில், பீமா வந்து ஆள வேண்டும் என்று எஜமானியத்தை அல்லாஹ்விற்கு வழங்காமல் பீமாவிற்கு வழங்கி, தன்னை பீமாவின் அடியானாக ஆக்கி அல்லாஹ்விற்கு இணையாக பீமாவை நிறுத்துகின்றார்.

“வீர மரணத்தை முகப்பாக பாடி

வந்த உயர்வான மாதா நீர் துணை செய்ய வேண்டும்”

வீர மரணமடைந்த உயர்ந்த தாயாகிய பீமா அவர்களே! நீங்கள் தான் எங்களுடன் துணை நிற்க வேண்டும் என்று இந்த வரி கூறுகிறது.

பீமா ஷஹீதாக வீர மரணமடைந்தார்களா? அல்லது இயற்கை மரணம் வந்தடைந்ததா? என்பது தெரியவில்லை.

அடுத்து, தனக்கு என்ன தீங்கு ஏற்பட்டாலும் அதை நீக்குபவன் அல்லாஹ் தான் என்பதை மறுத்து பீமாதான் தனக்கு ஏற்படும் தீங்கைத் தடுத்து பக்கபலமாக நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 39:38

அல்லாஹ்வைத் தவிர தீங்கைத் தடுக்கும் ஆற்றலோ அருளை வழங்கும் ஆற்றலோ யாருக்கும் இல்லை. என்ன தீங்கு ஏற்பட்டாலும் இறைநம்பிக்கையாளர்கள் அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

ஆனால், இந்தப் பாடல் வரியோ பீமாவே துணை என்று கூறுகிறது.

மாற்று மதத்தவர்கள் தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்களது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களது வாகனங்களில் காளிகாம்பாள் துணை, அம்மன் துணை, முருகன் துணை என்று சொல்வதற்கும் பீமா துணை என்று இப்பாடல் சொல்வதற்கு என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொண்டோருக்குத் திருக்குர்ஆன் உதாரணம் கூறுகின்றது.

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?

அல்குர்ஆன் 29: 41

இந்த வசனத்தில் அல்லாஹ்வை யன்றி மற்றவர்களைப் பாதுகாவலர் களாக ஏற்படுத்திக் கொண்டோர் சிலந்திப் பூச்சியை போன்றோர் என்றும் அவர்களின் பாதுகாவலர்கள் சிலந்தி வலையைப் போன்ற பலவீனமான வர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மொத்தத்தில் “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா! அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா!” என்ற இந்தப் பாடலின் மூலம் அருள் புரியும் அதிகாரம் பீமாவின் கையில் தான் இருக்கின்றது என்றும் பீமா உயிருடன் தான் இருக்கின்றார் என்றும் இணைவைப்புக் கொள்கையை திரும்பத் திரும்ப விதைத்து இஸ்லாத்தின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். இத்தகைய இந்தப் பாடல் இஸ்லாமிய கருத்துக்களைச் சொல்லும் பாடலா? என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம்.

அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.

இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.

நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே நமக்கு ஒன்று திரண்டு நிற்கும்.  ஏராளமான இடங்களில் இவ்வாறு ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கி இருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன? இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்வது? இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? என்பது குறித்து சில கருத்துக்களை இக்கட்டுரை மூலம் காண்போம்.

ஊர் எதிர்ப்பும் பின்னணியும்

மார்க்கத்தைத் தூய முறையில் பின்பற்றும் போது, சில ஊர்களில் மக்கள் திரளாக வந்து எதிர்க்கிறார்கள். மார்க்க விளக்கக் கூட்டத்தைக் கூட நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். இப்படிக் கூட்டமாக திரண்டு வருபவர்களுக்கு பின்னணியில் சில நபர்கள் குள்ள நரிகளாக ஒளிந்து இருக்கிறார்கள். குறிப்பாக, மக்களை வைத்து ஆதாயம் அடைபவர்கள், பேருக்கும், புகழுக்கும் ஏங்குபவர்கள் இதுபோன்ற இடையூறுகளுக்குத் தூபம் போடுகிறார்கள்.

இன்றையச் சூழலில் மட்டுமல்ல, நபிமார்களின் காலம்தொட்டு இதுபோன்ற நபர்கள் இருந்துள் ளார்கள். சத்தியம் வென்றால், “அனைவரும் சமம் எனும் சித்தாந்தம் மேலோங்கும்; சுயநலனுக்காக மக்களை ஏமாற்ற இயலாது” என்பதால், இவர்கள் தான் முதல் எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள். காசு, பணம் இருப்பதாலும், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் மக்கள் இருப்பதாலும் அதிகமாக ஆட்டம் போடுகிறார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் “எதைக் கொடுத்து அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. “நாங்கள் அதிகமான பொருட் செல்வமும்  மக்கட் செல்வமும் பெற்றவர்கள். நாங்கள் தண்டிக்கப்படுவோர் அல்லர்என்றும் அவர்கள் கூறினர். “என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்கு கிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமா னோர் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 34:35, 36)

ஊராரின் எதிர்ப்புக்கு காரணம்

தவ்ஹீது பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்த ஊர்மக்கள் ஏன் திரள்கிறார்கள் என்பதற்கும் திருக்குர்ஆன் பதில் தருகிறது. அசத்தியவாதிகள் முன்னோர்களின் பெயரைச் சொல்லிச் சொல்லியே தங்களின் வழிகெட்ட காரியங்கள் சரியென வாதிடுவார்கள்; தங்களின் தப்புகளை நியாயப் படுத்துவார்கள். இன்றும் தவ்ஹீதுக்கு எதிராகக் கோஷமிடும் ஆட்கள், இவ்வாறே வாதிடுவதையும் மற்றவர் களை மூளைச் சலவை செய்வதையும் பார்க்கிறோம்.

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர் களை எதில் கண்டீர்களோ அதை விட நேர் வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! “எதனுடன் நீங்கள் அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களேஎன்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 43:23

மூதாதையர்கள் மீது குருட்டுத் தனமான பாசமும் கண்மூடித்தனமான பக்தியும் வைத்திருக்கும் நபர்களை இவர்கள் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே தான் இவர்களின் பேச்சினை நம்பிக் கொண்டு, “எங்களுடைய முன்னோர் களை மட்டம் தட்டுகிறீகள்; கேவலப் படுத்துகிறீர்கள், அவர்களின் மார்க்க வழிமுறைகளை வழிகேடு என்கிறீர் கள்; அவற்றைப் புறக்கணிக்கிறீர்கள்,” என்று பாமர மக்களும் ஒன்றும் புரியாமல் நம்மிடம் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்.

இவ்வாறே (நம்மை) மறுப் போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளி களைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தமக்கெ திராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

திருக்குர்ஆன் 6:123

”இந்தத் தவ்ஹீத்காரர்களை வளர விட்டால் மற்றவர்கள் முன் நீங்கள் செல்லாக் காசாக ஆகிவிடுவீர்கள். அவர்கள் மேலோங்கி விடுவார்கள். ஊரை இரண்டாக ஆக்கிவிடுவார்கள். கடைசியில், உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவார்கள்” என்று ஊளையிட்டும் உளறிக் கொட்டியும் பொது மக்களிடம் ஊர்வெறியைத் தூண்டுகிறார்கள். அழைப்புப் பணிக்கு எதிராக அடுத்தவர்களை உசுப்பேற்றி விடும் கயவர்கள் ஃபிர்அவ்னின் அடியாட்களைப் போன்றவர்கள். அன்று அவர்கள் செய்த அதே வேலையை இன்று இவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகிறது.

இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர் ஆன் 7:109, 110

ஊர் வெறியும் ஊர் நீக்கமும்

நாம் மட்டுமின்றி அனைவரும் மறுமையில் வெற்றி பெற வேண்டும் எனும் சிறந்த நோக்கத்தோடு செயல்படுகிறோம். பல்வேறு சிக்கல்கள் சிரமங்களுக்கு மத்தியில் சிறிதும் தளராமல், தயங்காமல் சத்தியத்தை முன்வைக்கிறோம். இதனை உரிய பதிலோடு எதிர்கொள்ள இயலாமல், பொறுத்துக் கொள்ளாமல், நம்மை ஊரிலிருந்து விரட்டுவதாக வெளியேற்றுவதாக மிரட்டுகிறார்கள். அல்லது ஊரை விட்டும் ஒதுக்கி வைப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்.

இவ்வாறு தான், காலந்தோறும் அசத்தியவாதிகள் சத்தியவாதிகளிடம் சிறு பிள்ளைத்தனமாக பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். இந்த ஊர் நீக்க மிரட்டல் என்பது இவர்களிடம் மார்க்கப் பற்று முனை மழுங்கிப் போய் விட்டதின் அடையாளம் என்பதே உண்மை.

ஷுஐபே! உம்மையும், உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்று வோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார்.

திருக்குர்ஆன் 7:88

முஹம்மது நபியவர்களை விடுத்து முன்னோர்களை, இமாம்களை மார்க்க வழிகாட்டியாக ஏற்று வாழ்பவர்கள், தவ்ஹீத்வாதிகளுக்கு வீடோ கடையோ வாடகைக்கு விட வேண்டாம் என்று அறிவிக்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்கள் இறந்தால் மையவாடியில் இடம் கொடுக்காதீர்கள் என்று ஊர் ஜமாஅத் மூலம் எச்சரிக்கிறார்கள். இதைக் கேட்டு ஏகத்துவச் சொந்தங்களுக்குச் தடுமாற்றம் வந்தது கிடையாது; இனிமேலும் வந்து விடக் கூடாது. மார்க்க வரம்புகளைக் கண்டு கொள்ளாமல் ஊரோடு ஒத்துப் போனால் மட்டுமே, நாமும் வசதி வாய்ப்போடு இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது.

(ஏக இறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகள். பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் இது கெட்டது.

திருக்குர்ஆன் 3:196, 197

ஊரை விடவும் உண்மையே முக்கியம்

சுலைமான் நபி காலத்தில், ஸபா எனும் நாட்டினை ஒரு அரசி ஆட்சி செய்து வந்தாள். அவளும் மக்களும் சூரியனை வணங்குகிறார்கள் எனும் செய்தி “ஹுத் ஹுத்’ எனும் பறவை மூலம் சுலைமான் நபிக்குத் தெரிய வந்தது.

அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழுமாறும் தூதராகிய தமக்குக் கட்டுப்படுமாறும் அரசிக்கு சுலைமான் நபி கடிதம் அனுப்பினார்கள். அந்த அரசி மக்களிடம் ஆலோசனை செய்கிறாள். நம்மிடம் வலிமை இருக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனாலும் அரசிக்குத் தயக்கம். இந்தக் கடிதம் எழுதியது, நம்மிடம் பெரும் செல்வத்தைப் பெறுவதற்காகவா அல்லது வேறு எதற்காக என்று அறிந்து கொள்ள அன்பளிப்பை அனுப்பி வைக்கிறாள். அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சி இதோ…

ஸுலைமானிடம் (தூதுவர்) வந்த போது “செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்!என்றார். “அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! அவர்கள் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவோம்” (என்றும் கூறினார்).

பிரமுகர்களே! அவர்கள் கட்டுப் பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார். “உங்கள் இடத்திருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வமையுள்ளவன்என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.

தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். “அவளது சிம்மாசனத்தை அடை யாளம் தெரியாமல் மாற்றுங்கள்! அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்என்றார். அவள் வந்த போது “உனது சிம்மாசனம் இப்படித் தான் இருக்குமா?” என்று கேட்கப்பட்டது. “அது போல் தான் இருக்கிறதுஎன்று அவள் கூறினாள். “இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம்” (என்று ஸுலைமான் கூறினார்).

அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது அவளைத் தடுத்தது. அவள் (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தாள். “இம்மாளிகையில் நுழைவாயாக!என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகைஎன்று அவள் கூறினாள். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப் பட்டு விட்டேன்என்று அவள் கூறினாள்.

திருக்குர்ஆன் 27:22-44

அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி அறிந்ததும் இஸ்லாத்தை தழுவிய அரசியிடம் நமக்குப் படிப்பினை இருக்கிறது. ஊர் மக்களின் கருத்துக்கும் நடைமுறைக்கும் மாற்றமாக சத்தியக் கருத்துகள் இருந்தாலும் அவற்றை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்கே முக்கியத்தும் தர வேண்டும். இந்தக் குணம் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ஆள்பவர்கள், ஜமாஅத் தலைவர்கள், ஊர்ப் பெரியவர்கள் போன்றவர் களுக்கும் அவசியம் வேண்டும்.

மார்க்கத்தை மறக்கடிக்கும் ஊர்ப்பற்று

நாம் வாழும் தெரு, ஊர், நாடு போன்றவற்றின் மீது பற்று வைப்பது குற்றம் இல்லை. அதன் மீது அக்கறை கொண்டு நலப்பணிகள் செய்வதும், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதும் நல்லதுதான். அதேசமயம், அந்தப் பாசமும் பற்றும் மார்க்க வரம்புகளை மீறும் வகையில் இருந்துவிடக் கூடாது.

ஏகத்துவத்தை எதிர்ப்பவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருப் பவர்கள் உட்பட அனைவரும் இதனை நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட எதுவும் முதன்மை நேசமாக இருப்பது கூடாது. இங்கு, எதுவும் என்று குறிப்பிடுவதில் ஊரும் உள்ளடங்கும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத் திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது. 3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (16)

நம்முடைய ஊர் நிகழ்ச்சியில் நாம் பங்கெடுக்காமல், பங்களிப்பு கொடுக் காமல் இருக்கலாமா? என்று நினைத்துக் கொண்டு, மார்க்கத்திற்கு முரணான காரியங்களை ஆமோதிக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள். இனியாவது, அவற்றை விட்டும் விலகி இருந்து, ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். ஒரு ஊரை வெறுப் பதும் நேசிப்பதும் மார்க்கத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணரட்டும்.

நாம் பிறந்த ஊராக இருப்பினும், முஃமினாக வாழ விடாமல் அடக்கி ஒடுக்கும் நிலை இருக்கலாம். முஸ்லிமாக வாழ முடியாவிட்டாலும் சரி, சொந்த ஊரில் தான் இருப்பேன் என்று வறட்டுப் பிடிவாதம் கொள்வது சரியல்ல. இதனை ஹிஜ்ரத் தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது…..

…..நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) “ஸாஉ‘, “முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பாக்கியம் புரிவாயாக!  இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை “ஜுஹ்ஃபாஎனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய்நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) “புத்ஹான்எனும் ஓடையில்  மாசடைந்த தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1889

(அடுத்த இதழில் முடியும்)