ஏகத்துவம் – மே 2010

தலையங்கம்

மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு

தேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது முயற்சிகளில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அல்லது தெரிந்தே கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

  1. கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தல்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிறித்துவப் பள்ளிக்கூடங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை விட வெறி கொண்டு அலைகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அங்கு போய் பயில்கின்ற பிஞ்சு நெஞ்சுகளில் கிறித்தவப் போதனைகள், கிறித்தவப் பிரார்த்தனைகள் பதியப்படுவதுடன் மண்டியிட்டுச் செய்கின்ற வணக்க வழிபாடுகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

தும்மினால் கூட “ஏசப்பா’ என்று குழந்தைகள் சொல்கின்ற அளவுக்கு, உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கிறித்தவ மதத்திற்குப் பாதை மாற்றம் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1358, 1359, 1385, முஸ்லிம் 4803

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்தப் பெரும் பாவத்தை எந்த ஒரு சலனமும் இல்லாமல் செய்கின்றனர்.

கிறித்தவ நிறுவனங்களில் பணி புரிவோர், பிஞ்சு உள்ளங்களில், தளிர்க்கின்ற சின்னஞ்சிறு நாற்றுக்களிடம் தங்கள் நச்சுக் கருத்துக்களை நடுவதற்குப் பாடம் பயின்றவர்கள்; பயிற்சி பெற்றவர்கள்.

இந்தக் கிறித்தவ மையங்களில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்து கிறித்துவ மயமாக்குவதற்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இது மழலைப் பிள்ளைகளின் நிலை என்றால் விடலைப் பிள்ளைகளின் நிலை வேதனையிலும் வேதனையாக அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்க்காமல் கிறித்தவ நிறுவனங்களில் கொண்டு போய் சேர்க்கின்றனர். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இதைச் செய்தாலாவது பரவாயில்லை. பணம் கட்டிச் சேர்க்கும் போதும் இத்தகைய கிறித்தவப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது தான் வேதனையாகும். இந்தக் கல்லூரிகள், முஸ்லிம் மாணவர்களை ஜும்ஆ கூடத் தொழ அனுமதிப்பதில்லை. இப்படி இம்மைக்காக மறுமையை இழப்பதற்குப் பெற்றோர்கள் முன்வரலாமா? என்பதைச் சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.

  1. பெண்களின் மேல்படிப்பு

பெற்றோர்கள் தங்கள் பெண் மக்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் கடுமையான ஆர்வத்தைக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணுக்கு உயர் கல்வி வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் உன்னத கற்பா? உயர் கல்வியா? என்று கேட்டால் கற்பு தான் என்று இந்தப் பெற்றோர் பதிலளிப்பர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் கல்லூரி வாழ்க்கை அபாயகரமானதாகவும் ஆபத்தானதாகவுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் அது மிக மிக அபாயகரமானதாக ஆகி விட்டது. சர்வ சாதாரணமாக சக மாணவர்களுடன் திரையரங்கம் சென்று அருகருகே அமர்ந்து படம் பார்ப்பது, ஹோட்டல், பார்க், பீச் என்று சுற்றுவது போன்ற அத்துமீறல்கள், ஆபாசக் கலப்புகள் எல்லாம் இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது. இப்படிச் சுற்றித் திரியும் பெண் பிள்ளைகள் எப்படி கற்பு சுத்தம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அதனால் நம்முடைய பெண் பிள்ளைகளை நரகத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 66:6)

ஆனால் நம்முடைய உலக ஆசை இதையெல்லாம் செய்வதற்குத் தடையாக அமைகின்றது. இதை உள்ளடக்கும் விதமாகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16,17)

நாம் நம்முடைய பிள்ளைகளின் மறுமைத் தேர்வை முதன்மையாக்குவோமாக!

கற்பா? கல்லூரியா?

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்

சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் – ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்…

  1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
  2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)
  3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி

  1. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————

பொருளியல்  தொடர்: 3

பொருளாதாரம் ஒரு சோதனை

பொருளாதாரம் மனிதனுக்கு அவசியம் என்பதை இதுவரை நாம் பார்த்தோம். இதன் காரணமாக, சம்பாதிக்க வேணடும்; சொத்து செல்வங்களைச் சேர்க்க வேணடும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்திருக்கும். இதை மட்டும் வைத்து கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டுதுவது தான் வாழ்க்கை என்று எண்ணிவிடக் கூடாது.

பொருளாதாரம் பயங்கரமானது; அதைக் கையாள வேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்துக்குப் பதிலாக நரகப் படுகுழிக்குக் கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எச்சரித்து, குர்ஆன் மற்றும் ஹதீஸில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியிருக்கின்றார்கள்.

எந்தச் செல்வத்தினால் சொர்க்கம் செல்ல முடியும் என்றும், எந்தச் செல்வத்தை மீட்பதற்காக உயிரைக் கொடுத்தும் போராட வேண்டும் என்றும் மார்க்கம் கூறியுள்ளதோ அந்தச் செல்வம் தான் சோதனை என்றும் மார்க்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைக்கு நமக்கு கொடுக்கப்பட்ட செல்வம் போல யாருக்கும் கொடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் சிலர் சொத்துக்களை வைத்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் அனுபவிக்கவில்லை. அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு, மரணிக்கும் தருவாயில் யாரிடமும் கூறாமல் நிலத்தில் புதைத்து விடுவார். ஆனால் நம்முடைய காலத்தில் எவ்வளவு காசு வைத்திருந்தாலும் அதை வைத்து அனுபவித்து விடலாம். இன்று காசை வைத்து எதையும் வாங்கலாம், எதையும் செய்யலாம் என்ற நிலையில் அல்லாஹ் நம்மை ஆக்கி வைத்திருக்கின்றான்.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று கஅப் இப்னு இயால் அறிவிக்கின்றார்கள்

நூல்: திர்மதி 2258

இந்தச் செல்வத்தை இறைவன் நமக்குச் சோதனையாகக் கொடுத்திருக்கின்றான். இதை நாம் கவனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று விளங்குகின்றது.

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:28)

செல்வம் இவ்வுலகத்தின் கவர்ச்சிப் பொருள்

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும்.

(அல்குர்ஆன் 18:46)

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது

(அல்குர்ஆன் 3:14)

மறுமையே சிறந்தது

கொள்கைக்காக காசு, பணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தவர்களை அல்லாஹ் முஃமின்களுக்கு உதாரணமாக கூறிக் காட்டுகிறான். முஸ்லிமாக இருந்தால் இவர்களைப் போன்று நடக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் பிர்அவ்னுடைய மனைவி ஆசியா (ரலி) அவர்களும், மர்யம் (அலை) அவர்களுமாவார்கள்.

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாகஎன்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 66:11)

இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

அல்குர்ஆன் 66:12

பிர்ஃவ்ன் ஒரு கொடுங்கோல் மன்னனாக இருந்தான். இவனுடைய மனைவிக்கு அவனுடைய அனைத்து அதிகாரங்களும் இருந்தது. இவன் ராஜாவென்றால் இவன் மனைவி ராணியாவாள். ஆசியா (ரலி) எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்று ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்தார்கள். பஞ்சு மெத்தைகளிலும் பல்லக்குக் கட்டிலிலும் சுகமாக வாழ்ந்தார்கள். இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓரிறைக் கொள்கைக்கு வந்தார்கள்.

இதைப் போன்று மர்யம் (அலை) அவர்களும் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டு சமுதாயத்தை விட்டு விரட்டப்பட்டு எந்த ஒரு வசதிவாய்ப்புக்களும் இல்லாமல் பள்ளிவாசலில் தங்கி மற்றவர்களால் வளர்க்கப்பட்டார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 28:13)

மறுமையை மறக்கடிக்கும் பொருளாதாரம்

ஒருவனுக்கு காசு, பணம் மறுமையை மறக்கச் செய்து விடும். மறுமையை மறந்தவர்கள் நரகம் தான் சென்றடைவார்கள்.

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன்: 102வது அத்தியாயம்

செல்வத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பவர்கள், அடுத்தவனைப் பற்றிப் புறம் பேசிக் கொண்டு அலைவார்கள். இவர்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கின்றது.

குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

அல்குர்ஆன்: 104வது அத்தியாயம்

நாசமாக்கும் செல்வம்

முன்னர் வாழ்ந்தவர்கள் பொருளாதாரத்தைப் பார்த்து அழிந்து விட்டார்கள். இந்ந நிலை நமக்கு வரக்கூடாது என்பதற்காக இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பனூ ஆமிர் பின் லுஅய்குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனி-ருந்து ஜிஸ்யா வரியை வசூ-த்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது.

நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்று கூற, அன்சாரிகள், “ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தார்கள். “ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப் பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 3158, 4015, 6425

சுவனத்தில் ஏழைகள்

செல்வம் வழங்கப்பட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், ஏழைகள் அதிகமாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 5198 3241 6449 6546

முந்திச் செல்லும் ஏழைகள்

பணக்காரர்கள் மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து செல்வங்களுக்கும் கணக்குக் காட்ட வேண்டும். அதனால் அது முடிந்து வர பல வருடங்களாகும். ஆனால் ஏழைகள் இவர்களை விடப் பல வருடங்களுக்கு முன் சென்று சொர்க்கத்தில் உள்ளவைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள் மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப் பொருட்களோ இல்லைஎன்று கூறினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்என்று கூறியதைக் கேட்டுள்ளேன்என்றார்கள்.

அதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்என்று கூறினர்

நூல்: முஸ்லிம் 5291

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் சொர்க்கத்தின் வாச-ல் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாச-ல் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர் ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாச-ல் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 5196, 6547

ஏழையே சிறந்தவன்

பணக்காரர்கள் சமுதாயத்தில் சிறப்பானவர்களாக மதிக்கப்படுவார்கள். ஏழைகள் இழிந்தவர்களாகத் தாழ்த்தப்படுவார்கள். ஆனால் அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்தில் ஒரு ஏழை அனைத்து பணக்காரர்களை விடச் சிறந்தவன்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (செல்வமும் செல்வாக்கும் பெற்ற) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர்என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமைதியாக இருந்தார்கள்.

பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழியாகச்) சென்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முத-ல் கேட்ட அதே நபரிடம்) “இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்-ம்களில் ஒருவராவார். இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக் கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரைப் போன்ற (செல்)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6447, 5091

இதுவரை, பொருளாதாரம் சிறந்தது; அதன் மூலம் சுவனம் செல்ல முடியும் என்பதையும், பொருளாதாரம் ஆபத்தானது; அது நரகப் படுகுழியில் தள்ளி விடும் என்பதையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் போதனைகளில் நாம் பார்த்தோம்.

ஒரு நேரத்தில் பொருளாதாரம் நல்லது என்று சிலாகித்துச் சொல்லப்படுகின்றது. இன்னொரு நேரத்தில் அதைத் தரம் தாழ்த்திச் சொல்லப்படுகின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் இதில் முரண்பாடு கிடையாது.

இந்த இரண்டையும் நாம் எப்படி விளங்க வேண்டுமென்றால் பொருளாதாரமென்பது கத்தியைப் போன்றது; அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால் அது நல்லது. அதைக் கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அது கெட்டது என்று புரிவதைப் போன்று தான் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் அதன் முலம் சுவர்க்கம் செல்ல முடியும். அதை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த முடியாது; தீய காரியங்களுக்குத் தான் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும் கருதினால் அது நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். பொருளாதாரம் குறித்து இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் பேண முடியாது என்று நினைத்தால் நம்மிடம் பொருளாதாரம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

ஏகத்துவமும் இணை கற்பித்தலும்    தொடர்: 5

அல்லாஹ்வின் பண்புகளும் தனித் தன்மைகளும்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இறை நிராகரிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தனித் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது அல்லது அல்லாஹ்வுடைய ஆற்றல்கள், பண்புகள் அவனுக்கு இருப்பதைப் போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல் கூடாது. மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய விளக்கங்களையும் நாம் கூறக் கூடாது.

இவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான். எனவே நாம் அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தனித்தன்மைகளை அறிந்து கொள்வதுடன் இறை நிராகரிப்பாளர்கள் மற்றும் இணை வைப்பவர்களின் தவறான கொள்கைகளையும் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணவிருக்கின்றோம்.

அல்லாஹ் இருக்கின்றான் என்பதை ஒருவன் நம்ப மறுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய இறை மறுப்பாளனாவான். அல்லாஹ் என ஒருவன் இருப்பது உண்மையே என்பதற்குத் திருக்குர்ஆன் ஏராளமான சான்றுகளை முன்வைக்கின்றது.

அல்லாஹ் ஒருவனே!

அகில உலகங்களையும் படைத்து, பராமரித்து, பாதுகாக்கும் இறைவன் ஒருவனே என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163)

அல்லாஹ் ஒருவன்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அத்தியாயம்: 112)

அவனே வானத்திலும் இறைவன், பூமியிலும் இறைவன். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன். (அல் குர்ஆன் 44:84)

இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல் குர்ஆன் 16:51

ஒரே நிர்வாகத்தில் இருவர் அதிகாரம் செலுத்தும் போது நிச்சயமாக அந்த நிர்வாகம் சீராக இயங்காது. இருவருக்குமிடையே சண்டைச் சச்சரவுகள், பிரிவினைகள் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். உலக நடைமுறைகள் இதனை நமக்கு நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஆனால் வானம் பூமி மற்றும் கோள்களின் இயக்கங்கள் படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒரே சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே இவற்றை நிர்வாகம் செய்பவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதை நம் பகுத்தறிவுக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

அல்குர்ஆன் 23:22

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அல் குர்ஆன் 23:91

இறைவன் ஒருவன் தான் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் திருமறைக் குர்ஆன், அந்த இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதையும் அல்லாஹ்வை நாம் பார்க்காவிட்டாலும் அவன் இருக்கின்றான் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளை அள்ளிக் கொட்டுகின்றது. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் ஆதாரங்களைச் சிந்திக்கும் எந்தப் பகுத்தறிவுவாதியும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதைத் தன்னுடைய பகுத்தறிவால் ஒருபோதும் மறுக்க இயலாது.

கடவுள் இருக்கிறானா?

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளக் கூடிய சிலர் எந்தக் கடவுளும் இல்லை என்று கூறி அல்லாஹ் என்கிற உண்மையான இறைவனையும் மறுக்கின்றனர். கடவுளை மறுப்பவர்களை நாத்திகவாதிகள் என்று நடைமுறையில் குறிப்பிடுவார்கள்.

ஆனால் கடவுள் இருக்கின்றான்; அவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகளைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. அவற்றில் நம் சக்திக்குட்பட்டு என்னென்ன சான்றுகளை திருக்குர்ஆன் முன்வைக்கின்றது என்பதை நாம் காணவிருக்கின்றோம்.

அந்தச் சான்றுகளை நாம் இங்கே விரிவுரை போன்று எடுத்துரைக்கவில்லை. அவ்வாறு விரிவுரையாக கூறத் துவங்கினால் அவற்றை விவரித்து முடிப்பதற்கு முன்பாக நம்முடைய அறிவும் ஆயுளும் முடிந்து விடும். எனவே சான்றுகளை மட்டுமே நாம் இங்கே வரிசைப்படுத்தியிருக்கின்றோம்.

இந்தச் சான்றுகளில் திருக்குர்ஆனை உண்மைப்படுத்தும் நவீன விஞ்ஞான உண்மைகளை நாம் கொண்டுவரவில்லை. திருக்குர்ஆன் நேரடியாக மனித சமுதாயத்தைப் பார்த்து பேசுவது போன்ற சான்றுகளை மட்டுமே காணவிருக்கின்றோம்.

அல்லாஹ் அவன் தான் உண்மையான கடவுள் என்பதற்குத் தன்னுடைய படைப்பாற்றலை ஒவ்வொன்றாக எடுத்துரைத்து இதனைச் சிந்தித்துப் பாருங்கள் என்று இந்த மனித சமூகத்திற்கு அறைகூவல் விடுகின்றான். இறைவன் சான்றுகளாகக் காட்டும் விஷயங்களை சிந்தனை செய்யும் எவரும் இவற்றை ஒருவன் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை மறுக்க இயலாது. படைத்தவன் ஒருவன் இல்லாது இவை இயங்காது என்பதை அவன் ஒத்துக் கொள்வான். இதோ இறைவன் காட்டும் சான்றுகளைப் பாருங்கள்.

இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகிற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 10:6)

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164)

அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப் படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 6:99)

இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 10:67)

அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 13:3)

பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அதற்குப் புகட்டப்படுகிறது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றை சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 13:4)

அவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன் படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப் பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. பூமியில் அவன் உங்களுக்காகப் படைத்தவை மாறுபட்ட பல நிறங்களைக் கொண்டுள்ளன. படிப்பினை பெறும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:10-13)

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.  (அல்குர்ஆன் 16:67)

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68, 69)

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 16:79)

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. அல்லாஹ் இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்கிறான். சிந்தனையுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது. (அல்குர்ஆன் 23:43,44)

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:20)

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் 30:22)

இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:23)

மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கக் கூடிய சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.   (அல்குர்ஆன் 30:24)

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:25)

மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் இறைவனை மறுப்பவர்களுக்கு எதிராகத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் சான்றுகளாகும். எனவே இறைவன் ஒருவனே, அவன் தான் அல்லாஹ் என்பதை யாரேனும் மறுத்தால் அவன் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்வான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ் உருவமற்றவனா?

அல்லாஹ்வைப் பற்றிய பல உண்மைகள் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமாக வழி கெட்ட அறிஞர்கள் மூலம் மக்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை நாகூர் ஹனீஃபா அவர்களின் இசைப் பாடல்களின் மூலம் தான் இந்த வழிகெட்ட கொள்கை அதிகமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர். உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்”

“கலைவளர்த்த காவலர் நபிகள் நாயகர். உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்”

“உருவமற்ற ஏக தெய்வக் கொள்கையை தரணி எங்கும் நிலைத்து நிற்கச் செய்தவர்”

என்ற பாடல் வரிகள் மூலம் தான் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாம் உருவமற்ற இறைவனைப் போதிக்கிறது என விளங்கி வைத்துள்ளனர்.

சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும் சில வழிகேடர்களும், “அல்லாஹ் உருவமற்றவன்; அவன் ஒன்றுமில்லாத பேரொளியான ஒரு சூன்யம் தான்’ என்ற தவறான கொள்கையைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அல்லாஹ் உருவமுடையவன், அவன் அர்ஷில் இருக்கின்றான், இறைவனின் அர்ஷை எட்டு மலக்குகள் சுமந்து கொண்டிருப்பார்கள் என்று குர்ஆன் சான்றுகளின் அடிப்படையில் எடுத்துரைக்கும் போது, “அப்படியென்றால் அல்லாஹ்வின் எடை எட்டு மலக்குகள் சுமக்கும் அளவுக்குத் தானா?’ எனக் கேட்டு இறைவனைக் கேலிப் பொருளாக்குகின்றனர்.

அது போன்று இறைவன் மறுமையில் தன்னுடைய பாதத்தினால் நரகத்தை மிதிப்பான் என்பது தொடர்பான செய்தியைக் கூறும் போது “அப்படியென்றால் அல்லாஹ்வும் நரகத்திற்குச் சென்று விடுவானா?’ என்று கேட்டு இறைவனைப் பரிகாசம் செய்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு இறைவனைக் கேலியும் கிண்டலும் செய்வதற்குக் காரணம் இறைவன் உருவமற்றவன், ஒன்றுமில்லாத சூனியம் என்பதை நிலைநாட்டுவதற்காகத் தான். இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை ஒத்துக் கொண்டால் இறைவன் உருவமுடையவன் என்று ஏற்க வேண்டியது ஏற்படும் என்பதாலும் இறைவன் நரகத்தைக் காலால் மிதிப்பான் என்பதை ஏற்றுக் கொண்டால் இறைவனுக்கு கால்கள் உள்ளன என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், இதன் மூலம் இறைவன் உருவமுள்ளவன் என்பது நிரூபணமாகிவிடும் என்பதாலுமே இவர்கள் இதனைப் பரிகசித்து மறுக்கின்றனர்.

அகில உலகங்களையும் படைத்த இறைவனுக்கு அவனுக்கே தகுதியான ஒரு தோற்றம் உள்ளது. அதனை இவ்வுலகில் யாரும் காண முடியாது. மறுமையில் இறைவனின் நல்லடியார்கள் காண்பார்கள் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இவற்றை மறுப்பவன் ஏராளமான குர்ஆன் வசனங்ள் மற்றும் நபிமொழிகளை மறுத்து, இறைவனைப் பற்றி இட்டுக்கட்டிய குற்றத்திற்கு உள்ளாகி விடுவான்.

வழிகேட்டைப் புகுத்திய   மொழிபெயர்ப்பு

அல்லாஹ் உருவமற்றவன் என்ற வழிகெட்ட கொள்கை தமிழகத்து முஸ்லிம்களிடம் ஆழப் பதிந்த காரணத்தினால் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக மிக மோசமாக விளையாடியுள்ளனர். தங்களுடைய கைச்சரக்கைப் புகுத்தி, மனோ இச்சைப் பிரகாரம் மொழிபெயர்த்துள்ளனர். இதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஐ.எஃப்.டி. குர்ஆன் மொழிபெயர்ப்பைச் சான்றாகக் கூறலாம்.

அல்லாஹ் தன்னுடைய தகுதிக்குத் தகுந்தவாறு அர்ஷ் எனும் பிரமாண்டமான ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறான். இறைவனுடைய அர்ஷை சுமப்பதற்கு மலக்குகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் இப்போதும் அர்ஷைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். கியாமத் நாளிலும் சுமந்து கொண்டிருப்பார்கள். இதற்கான சான்றுகளை நாம் அர்ஷைப் பற்றி எழுதும் போது விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். இறைவன் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதைத் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்துக் கூறுகிறது.

இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டால் அவன் உருவமுள்ளவன் என்ற பொருள் வந்து விடும் என்பதால் அர்ஷ் என்பது இறைவனின் பிரம்மாண்டமான படைப்பு என்பதையும், இறைவனின் ஆசனம் என்பதையும் ஐஎஃப்டி குர்ஆன் மொழிபெயர்ப்பில் மறைத்து அர்ஷ் என்றால் “இறைவனின் அதிகாரம்” என தவறான விளக்கம் கொடுத்துள்ளனர். இவர்கள் அர்ஷைப் பற்றிக் கூறிய கருத்துகளில் மார்க்கத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் பின்னர் விரிவாக விளக்க உள்ளோம். இங்கு அர்ஷ் என்பதற்கு ஆட்சி செலுத்தும் அதிகாரம் என்று அவர்கள் தவறான விளக்கம் கொடுத்ததை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றோம்.

இதோ அவர்களின் வழிகெட்ட விளக்கத்தைப் பாருங்கள்.

அரபி மொழியில் அர்ஷ் என்பதற்குச் சிம்மாசனம் என்று பொருள். அல்லாஹ்வின் அர்ஷைப் பற்றி அறிய இயலாது. அல்லாஹ் பேரண்டத்தைப் படைத்த பிறகு தனது எல்லையற்ற ஆட்சிக்கு கேந்திரமாக்கிய ஓர் இடத்திற்கு அர்ஷ் என்று கூறியிருக்கலாம். அல்லது அர்ஷ் என்பது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தைக் குறிக்கலாம். ஆக இவ்விரு பொருள் கொள்ளவும் இங்கு இடமுண்டு.

(ஐஎஃப்டி மொழி பெயர்ப்பு பக்கம் : 1221)

மேலும் 69:17 வசனத்தில் கியாமத் நாளில் எட்டு மலக்குகள் இறைவனின் அர்ஷை தம்மீது சுமந்து கொண்டிருப்பார்கள் என வந்துள்ளது. இதற்கு ஐஎஃப்டி விரிவுரையில் கூறியிருப்பதைப் பாருங்கள்.

இந்த வசனம் முதஷாபிஹாத் முடிவான பொருள் கொள்ள இயலாத வசனங்களில் ஒன்றாகும். அர்ஷ் என்றால் என்னவென்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இறுதித் தீர்ப்பு நாளில் அதனை எட்டு வானவர்கள் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் விதத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்து கொண்டிருப்பான். எட்டு வானவர்கள் அவனை அர்ஷுடன் சேர்த்து சுமந்து கொண்டிருப்பார்கள் என்று எந்நிலையிலும் கற்பனை செய்தும் பார்க்க இயலாது. அதே நேரத்தில் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருப்பான் என்றும் குர்ஆனில் கூறப் படவில்லை. இறைவனின் சுயத்தன்மை குறித்து திருக்குர்ஆனில் எந்தக் கருத்தோட்டம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கருத்தோட்டமும் கூட உடல், திசை, இடம் ஆகியவற்றை விட்டுத் தூய்மையானவனாகிய இறைவன் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறான்; ஒரு படைப்பு அவனைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது என்று எண்ணுவதற்குத் தடையாக உள்ளது. எனவே தோண்டித் துருவி இதன் பொருளை நிர்ணயிக்க முயல்வது நம்மை நாமே வழிகேட்டின் அபாயத்தில் வீழ்த்திக் கொள்வதாகும்.

(ஐஎஃப்டி மொழிபெயர்ப்பு, பக்கம் : 1008)

மிகப் பெரும் வழிகெட்ட கருத்தைப் புகுத்தியுள்ளனர். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவர்களோ அவ்வாறு இல்லை என குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான கருத்தைக் கூறியுள்ளனர். இறைவன் உருவமற்றவன் என்ற அடிப்படையை நம்பிய காரணத்தினாலேயே இப்படித் தவறான கொள்கையின் பக்கம் தடம்புரண்டு விட்டனர்.

இவர்களின் வழிகேட்டிற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்:

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. (அல்குர்ஆன் 68:42)

“கெண்டைக் கால் திறக்கப்படும் நாளில்” என்றால், மறுமையில் இறைவன் தனது கெண்டைக் கா-ல் விழுந்து மக்களை பணியச் சொல்வான் என்பது மேற்கண்ட வசனத்தில் பொருள்.

இவ்வுலகில் இறைவனுக்குப் பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்; மற்றவர்கள் இறைவன் கா-ல் விழ முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919வது ஹதீஸில் இதைக் காணலாம்)

மேற்கண்ட வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் இறைவனுக்கு கெண்டைக் கால் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் இறைவனுக்கு கெண்டைக் கால் உள்ளது என ஒத்துக் கொண்டால் இறைவன் உருவமுள்ளவன் என ஏற்க நேரிடும் என்பதால் இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பில் ஐஎஃப்டி நிறுவனத்தினர் தங்களுடைய கைச்சரக்கை நுழைத்துள்ளனர். இதோ அவர்களின் தமிழாக்கத்தைப் பாருங்கள்.

எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும் மக்கள் ஸஜ்தா செய்தவற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட இயலாது.

(ஐஎஃப்டி மொழிபெயர்ப்பு, பக்கம் : 1005)

இது போன்றே பின்வரும் வசனத்திலும் விளையாடியுள்ளனர்.

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப் படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப் பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

அல்குர்ஆன் 39:67

மேற்கண்ட வசனத்தில் இறைவனுக்கு இரண்டு கைகள் உள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையிலே இறைவனின் கைகள் தான். இதை நயியவர்களும் ஹதீஸ்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இறைவனின் கைகள் பற்றி வரும் போது இதனை நாம் விரிவாக விளக்குவோம்.

“இந்த நிர்வாகத்தை என் கைப்பிடியில் நான் வைத்திருக்கிறேன்’ என்று ஒருவர் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இங்கு கை என்பது உண்மையான கையைக் குறிக்காது. மாறாக அதிகாரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

39:67வது வசனத்தில் கூறப்பட்டுள்ள கைகள் என்ற வார்த்தைக்கு அதன் நேரடியான பொருளைக் கொடுத்தால் இறைவன் உருவமுள்ளவன் என்ற கருத்து வந்து விடும். இதனை மறைப்பதற்காக ஐஎஃப்டி விரிவுரையில் கூறியுள்ள கருத்தைப் பாருங்கள்.

பூமியிலும், வானத்திலும் அல்லாஹ்வின் முழு அதிகாரத்தையும் அதனை அவன் பயன்படுத்தும் நிலையையும் காட்டுவதற்காக கைப்பிடியில் இருக்கிறது. கையில் சுருட்டப்பட்டிருக்கிறது என்பன உருவகமாகக் கூறப்பட்டுள்ளன.

(ஐஎஃப்டி விரிவுரை, பக்கம்: 783)

மேலும் குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவனுடைய முகம் என்ற வார்த்தை வந்துள்ளது. இங்கு இறைவனுடைய முகம் என்று மொழி பெயர்த்தால் இறைவனுக்கு உருவமுள்ளது என்று வந்து விடும் என்பதால் இறைவனுடைய முகம் என்று வரக்கூடிய அனைத்து இடங்களிலும் இறைவன் என்று மட்டுமே மொழிபெயர்த்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

சவூதி உலமாக்களின் பார்வையில் இவ்வாறு செய்பவர்கள் காஃபிர்களாவார்கள். இதைத் தான் ஐஎஃப்டி மொழிபெயர்ப்பில் பல இடங்களில் செய்துள்ளனர்.

இங்கு நாம் மற்றொரு கருத்தையும் பதிய வைக்க விரும்புகிறோம். தர்ஜமாவில் மற்ற மொழி பெயர்ப்புகளுக்கு மாற்றமாக சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலேயே அக்கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதக் களத்தில் சந்தித்தும் நம்முடைய சத்தியத்தைப் பதிவு செய்துள்ளோம்.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இன்றளவும் மொழிபெயர்ப்பை திரைமறைவிற்குள் இருந்து கொண்டு குறைகூறி வருகின்றனர். இவர்கள் உண்மையிலேயே நியாயத்திற்காக, சத்தியத்திற்காகப் பாடுபடுவதாக இருந்தால் தர்ஜமாவிற்கு முன்பாக பல்லாண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்ட இது போன்ற தவறான கருத்துகளை ஏன் விமர்சனம் செய்யவில்லை? அதை ஏன் வழிகேடு என்று கூறவில்லை? என்பது தான் நம்முடைய கேள்வியாகும்.

அல்லாஹ்வின் விஷயத்திலும் இன்னும் பல இடங்களிலும் மார்க்கத்திற்கு விரோதமான மொழிபெயர்ப்பைச் செய்துள்ள ஐஎஃப்டி மொழிபெயர்ப்பை குறைந்த பட்சம் வாங்க வேண்டாம் என்றாவது கூறியிருப்பார்களா? அல்லது இந்த மொழிபெயர்ப்பில் இத்தகைய தவறுகள் உள்ளன; இதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்றாவது கூறியிப்பார்களா? சவூதி அரசிடம் இதற்கு எதிராக ஏதேனும் முறையிட்டிருப்பார்களா?

நமக்கு எதிராக செய்த சதிவேலைகளில் நூறில் ஒரு பகுதியைக் கூட இதற்கு எதிராகச் செய்திருக்க மாட்டார்கள். மாறாக இப்போது இவர்கள் இந்த தர்ஜமாவைத் தான் வாங்கி அன்பளிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கு மார்க்கப் பற்று என்பது இரண்டாம் பட்சம் தான். தனி மனித வெறுப்பே இவர்களிடம் தலை தூக்கி நிற்கிறது என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.

அல்லாஹ்வைப் போன்று யாருமில்லை

அல்லாஹ்வின் தோற்றம், தனித் தன்மைகள் மற்றும் பண்புகளைப் பற்றி ஆதாரப்பூர்வமாக நாம் பார்ப்பதற்கு முன்பாக சில அடிப்படைகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

இறைவன் உருவம் உள்ளவன். அவனுக்கு முகம். கைகள். விரல்கள், கால்கள், கண்கள் ஆகியவை உள்ளன எனக் கூறும் போது அந்த முகம் எவ்வாறு இருக்கும்? அவனுடைய கைகள் நம்முடைய கைகளைப் போன்று இருக்குமா? அவனுடைய கால்கள் நம்முடைய கால்களைப் போன்று இருக்குமா? என்றெல்லாம் ஒப்புவமை கற்பிப்பது கூடாது. இறைவனுக்கு உதாரணம் காட்டுவதும் கூடாது. இதனைப் பின்வரும் திருமறை வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.  (அல்குர்ஆன் 42:11)

செவியேற்றல் என்ற தன்மையும், பார்த்தல் என்ற தன்மையும் மனிதர்களுக்கும் இருக்கிறது. இத்தன்மைகளை இறைவனுக்கு நிகரானதாக நாம் கருதிவிடக் கூடாது என்பதால் தான் பரிசுத்தமானவனாகிய அல்லாஹ், “அவனைப் போல் எதுவுமில்லை’ என்று முதலில் கூறிவிட்டுப் பிறகு “செவியேற்பவன்; பார்ப்பவன்’ என்று கூறியுள்ளான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 16:74)

அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)

இதிலிருந்து இறைவனின் தோற்றம் பற்றி நாம் கூறும் போது அது யாருக்கும் ஒப்பான ஒன்றல்ல; அவனைப் போன்றோ, அவனுக்கு உதாரணமாகவோ, அவனுக்கு நிகராகவோ யாருமில்லை என்பதை நம் உள்ளத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் இறைவன் உருவமுள்ளவன் என்பதற்குரிய விரிவான சான்றுகளைக் காண்போம்.

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மார்க்கப் புத்தகங்கள், பயான் சிடிக்கள் ஆகியவற்றை விற்பதன் நிலை என்ன?

சமீர் அஹ்மத்

பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல் திர்மிதி 296)

ஆனாலும் பொது நலன் சார்ந்த, பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்குகொண்டுவிட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “ஜாபிரா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்!என்றேன். “என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?” என்று கேட்டார்கள். “என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு “(உமது வாகனத்தில்) ஏறுவீராக!என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் மணமுடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்!என்றேன். “கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். “கன்னிகழிந்த பெண்ணைத் தான்!என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக் குலாவி மகிழலாமே!என்று கூறினார்கள்.

நான், “எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக!என்று கூறிவிட்டு பின்னர், “உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், “சரி (விற்று விடுகிறேன்!)என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். “இப்போது தான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் “ஆம்!என்றேன். “உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!என்றார்கள். நான் (மனத்திற்குள்) “இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லைஎன்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 2097

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு, பைத்துல் மால் பொது நிதியில் இருந்து ஒட்டகத்தை வாங்கியுள்ளதால் ஜமாஅத் நன்மை, சமுதாய நன்மை சார்ந்த வியாபாரம் பள்ளிவாசலில் செய்யத் தடை இல்லை.

? தொழுகையில் ருகூவில் இருந்து எழுந்த பிறகு “ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி” என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் “ரப்பனா லகல் ஹம்து” அல்லது “ரப்பனா வ லகல் ஹம்து” அல்லது “அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து” அல்லது “அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து” என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் . அதற்கு சாட்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது தனி அந்தஸ்து உடையது என்றும் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் தனி அந்தஸ்து உடையது என்றும் எனவே ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரத்தை விட சொல், செயலே பிரதானமானது என்றும் வாதம் வைக்கின்றீர்கள்.

அப்படியென்றால் ஒட்டகம் குர்பானி கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியது, செய்தது எல்லாம் ஏழு நபர்களுக்கான அனுமதி தானே. பத்து நபர்கள் என்பது அங்கீகாரம் தானே, ஆனால் த.த.ஜ. சார்பில் சமீப காலமாக தாங்கள் ஒட்டகக் குர்பானியில் பத்து நபர்களை வலியுறுத்தி வருவது எவ்வாறு?

தொழுகையில் ஒரு கருத்தையும் குர்பானியில் ஒரு கருத்தையும் கொண்டிருப்பது தாங்கள் கூறிய நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் சம்பந்தமான வியாகியானதிற்குத் தாங்களே முரண்பட்டதாக ஆகாதா? தயவு செய்து விரிவான விளக்கம் தரவும்.

குறிப்பு : தொழுகையில் “ரப்பனா …… ஹம்தன் கசீரன் …..பீஹி” என்று கூறுவதை எங்களுக்கு கூறியவரே நீங்கள் தானே. இப்போது அதனை தாங்களே குறை கூறுவது சரிதானா?

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது பெரிய அந்தஸ்து உடையது செயல் என்பது சிறிய அந்தஸ்து உடையது என்று இருக்குமானால் அதை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் தானே கூற வேண்டும். நகம் வெட்டுவதைக் கூட தம் சமூகத்தாருக்கு உரைத்துச் சென்ற அருமை நபிகள் (ஸல்) இதனை சொல்லாமல் விட்டுச் சென்றார்கள் என்பது உங்கள் கூற்றா?

அபுல் கலாம்

உங்கள் கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன் அடிப்படையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்பதை ஓத வேண்டும் என்று சொல்லித் தந்ததே நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தகைய கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். இப்படி கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டும்.

நாங்கள் முதலில் சொன்ன ஒரு கருத்து தவறு என்று தெரிய வரும் போது நாங்கள் எப்படி நடக்க வேண்டும்? நாம் முன்னர் சொன்னதற்கு மாற்றமாகச் சொன்னால் நமது மதிப்பு குறையும் அல்லது இதை நடைமுறைப்படுத்தியவர்களின் அதிருப்தி ஏற்படும் என்று அஞ்சி உண்மையை மறைக்க வேண்டுமா? அல்லது அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைச் சொல்ல வேண்டுமா? உங்களிடம் உள்ள இதே மனப்பான்மை அதிகமான முஸ்லிம்களிடம் உள்ளதால் தான் எத்தனையோ உலமாக்கள் காலம் கடந்து அறிந்து கொண்ட உண்மைகளைச் சொல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.

முன்பு சொன்னதற்கு மாற்றமாகச் சொல்லலாமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு முன்பு சொன்னது ஏற்கத்தக்கதாக உள்ளதா? இப்போது சொல்வது ஏற்கத் தக்கதாக உள்ளதா என்று சிந்திப்பது தான் சரியான பார்வை. மனிதன் தவறு செய்பவன் என்பதன் கருத்தும் இது தான். முன்பு சொன்னதை நாங்கள் மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக எங்களை நீங்கள் கருதுகிறீர்கள் என்பது தான் பொருள். இப்படி யாரைப் பற்றியும் கருத வேண்டாம்.

தக்க காரணத்துடன் மாற்றப்படுகிறதா அல்லது காரணம் இல்லாமல் மாற்றப்படுகிறதா? இரண்டு கருத்தில் எது சரியான பார்வையில் அமைந்துள்ளது என்பதை மட்டும் பாருங்கள்.

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு “ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி’ என்று கூறுவது நபிவழி என்ற கருத்துக்குப் பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்திய போது “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ – எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி), நூல்: புகாரி 799

மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும், நாமும் ருகூவிற்குப் பிறகு அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.

ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்தச் சூழ்நிலையில் சொன்னார்? என்ற கூடுதல் விபரம் இடம் பெற்றுள்ளது.

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி‘ (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லைஎன்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), முஸ்லிம் (1051)

அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.

ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச் சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.

இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூற வேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.

குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.

வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

மாறாக, அவர்கள் தனது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழ்வதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனாஎன்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: புகாரி 5458

எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருக்கூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.

அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)என்று பதிலளித்தனர். அதற்கு

நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி), நூல்: புகாரி 635

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 636

வேகமாக வந்து தொழுகையில் இணைவது தடை செய்யப்பட்டு விட்டதால், ஹம்தன் கஸீரன்… என்று கூறிய அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருகூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.

? கருக்கலைப்பு செய்வது குற்றமா?

முஹம்மது இன்ஃபாஸ்

திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் “உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’ என்று தெளிவான கட்டளை உள்ளது.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன் 6:140)

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாதுஎன்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:151)

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன் 17:31)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:12)

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன்81:8,9)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவில் வைத்து அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.

ஆனால் குழந்தையாக உருவாவதற்கு முன் அதை அழிப்பது குழந்தையைக் கொல்வதில் அடங்குமா? என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

உயிரினத்தின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை. மனிதன் என்பதற்கான உயிர் இன்னொரு வகை.

மனிதன் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒரு வகையான உயிர் மட்டுமே உள்ளது. ஆனால் மனிதனிடம் மேற்கண்ட இரண்டு வகை உயிர்களும் உள்ளன.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)

மரணிக்கும் போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் தூக்கத்தின் போது உயிர்களைக் கைப்பற்றுவது நமக்கு புரியவில்லை.

தூக்கத்தின் போது உயிர்கள் கைப்பற்றினால்

எப்படி மூச்சுவிட முடிகின்றது?

எப்படி புரண்டு படுக்க முடிகிறது?

எறும்பு கடித்தால் நம்மை அறியாமல் எப்படித் தட்டி விட முடிகிறது?

உண்ட உணவு எப்படி ஜீரணமாகிறது?

இது போல் உடலில் பல இயக்கங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம்.

இந்த வகையில் பார்க்கும் போது, தூங்குபவரின் உயிர் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.

அதே நேரத்தில் தூக்கத்தில் நாம் சிந்திப்பதில்லை, கவலைப்படுவதில்லை, திட்டமிடுவதில்லை, மனனம் செய்வதில்லை. இது போல் பல காரியங்கள் தூக்கத்தில் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது உயிர் இல்லை என்பது போல் இருக்கிறது.

மனித உயிர்களில் இரு வகைகள் உள்ளன என்பதை இந்த வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நாம் தூங்கும் போது கால்நடைகளைப் போன்ற உயிர் நமக்கு இருப்பதையும் மனிதனைப் போன்ற உயிர் நமக்கு இல்லாமல் போவதையும் நாமே உணர்கிறோம்.

நபி மொழிகளிலும் இரு வகையான உயிர்கள் மனிதனுக்கு உள்ளன என்பது கூறப்பட்டுள்ளது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங் கிணைக்கப்படுகின்றது. பிறகு அதே போன்ற காலத்தில் (அட்டை – கஊஊஈஐ போன்று) ஒரு கருக் கட்டியாக மாறுகின்றது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகின்றது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகின்றான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என் னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசா-யா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுதுஎன்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத் திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக் கொண்டு விடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 3208, 3332, 6594

நாற்பது நாட்களாக மூன்று கட்டங்கள் அதாவது 120 நாட்கள் கடந்த பின்னர் தான் உயிர் ஊதப்படுகிறது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்னரே உயிர் இருந்ததால் தான் அது மூன்று நிலைகளை அடைய முடிந்தது; வளர முடிந்தது. மனிதன் என்பதைப் பிரித்துக் காட்டும் உயிர் 120வது நாளில் தான் ஊதப்படுகிறது என்பதும், அதற்கு முன் இருந்தது வேறு வகையான உயிர் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இதைத் தெளிவாகக் கூறுகிறது.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23:14)

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (அல்குர்ஆன் 22:5)

குழந்தையைக் கொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறினால் அது எப்போது முதல் குழந்தையாக ஆகிறது என்பதை நாம் சிந்திக்கும் கடமை உள்ளது.

120 நாட்களுக்கு முன் கருவைக் கலைத்தால் அது குழந்தையைக் கொன்றதாக ஆகாது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

காண்டம் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது, விந்தில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் குழந்தையாக உருவாகாமல் நாம் தடுக்கிறோம். இதனால் குழந்தையைக் கொன்றதாக ஆகாது. அது போல் அடுத்த மூன்று நிலைகளில் வளர்ச்சியடையும் போதும் ஆகாது.

ஆனால் மனிதர்கள தனக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல.

உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.

அவ்வாறு ஏற்கத்தக்க காரணம் இல்லாமல் இதைச் செய்திருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேட வேண்டும். அல்லாஹ் எத்தகைய பாவத்தையும் மன்னிப்பவனாக இருக்கிறான்.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 4:17,18)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

————————————————————————————————————————————————

மறு ஆய்வு

காலாடை கரண்டையைத் தாண்டலாமா?

கரண்டைக்குக் கீழாக ஆடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாகப் பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.

ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறி வருகிறோம். நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர்.

இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

பெருமையை மையமாக வைத்துச் சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்குப் பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்து வருகின்றனர்.

பெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக ஆடை கரண்டையில் படுவதாலோ ஆடை கரண்டையை மூடினாலோ, ஆடை தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும். இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

ஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில் ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும் இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது) ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொல்லுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டுவிடலாம்.

ஜர்ரு மற்றும் இஸ்பால்

ஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளைத் தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது. பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.

எவன் பெருமையுடன் ஆடையை இழுத்துச் செல்வானோ அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்.  (நூல்: அபூதாவுத் (3570))

தரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது கீழாடையைக் கெண்டைக் காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் சுலைம், நூல்: அபூதாவுத் (3562)

மேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையை தரையில் படும் அளவிற்கு தொங்கவிட்டார் என்பதாகும்.

நூல்: லிசானுல் அரப் (பாகம்: 11, பக்கம்: 319)

நடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.

நூல்: அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம்: 2, பக்கம்: 846)

இஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.

நூல்: துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம்: 1, பக்கம்: 407)

இஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதாகும்.

நூல்: அவ்னுல் மஃபூத் (பாகம்: 2, பக்கம்: 340)

எனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன.

இதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

கீழாடை கணுக்கால்களைத் தொடலாமா?

கீழாடையின் எல்லையைப் பற்றிப் பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாகக் கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் கீழங்கி நரகத்திற்குச் செல்லும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5787)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.

அறிவிப்பவர்: சமுரா (ரலி), நூல்: அஹ்மது (19309)

இவ்விரு செய்திகளில் கணுக்கால்களுக்கு கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்துகொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் சுலைம் (ரலி), நூல்: அபூதாவுத் 3562)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது 13115)

கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களைத் தொடும் வகையில் அணிவது தவறல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவுத் (3570)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: தப்ரானீ

மேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.

இந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.

கணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்

மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள், “நீ கெண்டைக்காலின் பாதி வரை கீழாடையை உடுத்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் சுலைம் (ரலி), நூல்கள்: பைஹகீ 5853, அபூதாவுத் 3562)

இந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக்கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.

சுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடாத அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.

தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது. ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

நபியவர்களால் கண்டிக்கப்பட்டவர்கள்

கணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை. மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித்தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.

ஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள். உனது கீழாடையை உயர்த்துஎன்று கூறினார்கள். “நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக்கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்)என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதேஎன்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார். (நூல்: அஹ்மது 18656)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, “நீர் யார்?” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்என்றார்கள். (நூல்: முஸ்லிம் 4236)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு “(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்என்று (இடித்துக்) கூறலானார்கள். பிறகு “அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் “அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்என்று கூறினார்கள்என்றார்கள். (நூல்: முஸ்லிம் 4239)

ஒரு இளைஞர் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்என்று கூறினார்கள். (அவரிடம்), “எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்என்று கூறினார்கள். (நூல்: புகாரி 3700)

ஆடை தரையில் படாமல் கணுக்கால் வரை உடுத்திக் கொள்வதற்குத் தடையில்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. இதற்கு மாற்றமாக, கணுக்காலில் ஆடை படவே கூடாது என்று வாதிடுவோர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். அவற்றுக்கான விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

தொடர்: 4

ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்.

நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து நாம் எடுத்து வைத்த எந்த வாதத்துக்கும் இஸ்மாயீல் ஸலஃபி உருப்படியான ஒரு பதிலையும் தரவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் யூதர்கள் நபிகள் நாயகத்தை விட யூத குருமார்கள் ஆன்மிக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணி இருப்பார்கள் என்பதையும் ஒரு காரணமாக முன் வைத்து நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபித்தோம்.

இதையும் இஸ்மாயீல் ஸலஃபி பின்வருமாறு மறுக்கிறார்.

அடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.

சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.

இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)

என்பதும் ஒன்றாகும்.

சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.

இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரிய வராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.

அடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில் தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீழ்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.

இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

எல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்!

முதலில் சூனியத்தை ஆன்மீகம்-அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள்-வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறுகின்றன. இதை முன் தொடர்களில் நிரூபித்து விட்டோம். மேலும் எதற்கெடுத்தாலும் ஊகம், யூகம் என்று அவர் தடுமாறுவதையும் சென்ற தொடரில் தெளிவுபடுத்தி விட்டோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு அடுத்த வாதத்தைப் பார்ப்போம்.

இவருடைய இந்த வாதமும் இவருடைய சிந்திக்கும் திறனில் உள்ள குறைபாட்டை உணர்த்துகிறது.

இவர் எடுத்து வைக்கும் வாதம் இவருக்கே எதிரானது என்பது கூட இவருக்கு விளங்கவில்லை.

சிந்திக்கும் வழிவகை இவருக்கு அறவே தெரியாததால் ஏறுக்கு மாறாகப் புரிந்து கொள்கிறார். பதில் சொல்ல முடியாத கேள்வியைச் சந்தித்தால் இது யூகம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார். மக்களும் அவரைப் போலவே சிந்தனையற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்.

(தனது கட்டுரையில் 22 இடங்களில் யூகம், யூகம் என்று குறிப்பிட்டு அறிவுப்பூர்வமான வாதங்களை அலட்சியம் செய்கிறார்.)

சூனியத்தை ஆன்மீகம் என்றோ அற்புதம் என்றோ நாம் வாதிடவில்லை. அந்தக் கருத்துக்கு மக்களையும் கொண்டு வரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்பதை நம்பினால் இந்த நிலை ஏற்படும் என்று தான் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

ஒரு காரியத்தினால் ஒரு விளைவு கட்டாயம் ஏற்படும் என்றால் அந்த விளைவு ஏற்படாவிட்டால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்று புரிந்து கொள்வது தான் அறிவு. இதுவும் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் லாஜிக் ஆகும். எதற்கெடுத்தாலும் யூகம் யூகம் என்று கூறி சிந்தனையை அவர் மழுங்கச் செய்திருப்பதால் இதையும் நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

பின்வரும் வசனங்களைப் பாருங்கள்!

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். (அல்குர்ஆன் 3:159)

நபிகள் நாயகத்தை விட்டு மக்கள் வெருண்டு ஓடவில்லை என்பதை வைத்து அவர்கள் நளினமாக நடந்தார்கள் என்று கூறினால் அதை ஊகம் என்று கூறுவாரா?

நபிகள் நாயகம் கடின சித்தம் உடையவராக நடந்து கொண்டார்கள் என்று இவர் புரிந்து கொள்வாரா?

நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 6:58)

மக்கள் உடனடியாக அழிக்கப்படாததால் அந்த அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு இல்லை என்று புரிந்து கொள்வது யூகமா? அறிவின் தெளிவா?

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது.   (அல்குர்ஆன் 7:188)

இதில் இருந்து நபிகள் நாயகத்துக்கு மறைவான ஞானம் உண்டு என்று விளங்குவதா? நபிகள் நாய்கத்துக்கு மறைவான ஞானம் இல்லை என்று விளங்குவதா? இல்லை என்று விளங்கினால் அது யூகமா?

அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:42)

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)

அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். (அல்குர்ஆன் 37:143,144)

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். (அல்குர்ஆன் 21:22)

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 43:81)

இந்த வசனங்கள் அனைத்தும் இது நடந்திருந்தால் அது ஏற்பட்டிருக்கும். அது ஏற்படாததால் இது நடக்கவில்லை என்ற லாஜிக்கின் படி அமைந்துள்ளன.

அது போல் தான் நபிகள் நாயகத்துக்கு சூனியத்தின் மூலம் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் யூதர்கள் தங்கள் ஆன்மிகத்தை உயர்ந்தது என்று சொல்லி இருப்பார்கள் என்று நாம் கூறினால் சூனியத்தை ஆன்மிகம் என்று நாம் கூறியதாக விளங்குகிறார்.

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்களின் மன நிலை பல மாதங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இஸ்லாத்தை விட யூத மதம் ஆற்றல் மிக்கது என்று தான் யூதர்கள் நம்பியிருப்பார்கள். அவ்வாறு பிரச்சாரமும் செய்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு பிரச்சாரம் செய்திருந்தால் அதற்கு குர்ஆனும் மறுமொழி கொடுத்திருக்கும்.

இப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்பதால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்படவில்லை என்பதைத் தவிர வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

அல்லாஹ் கற்றுத் தரும் லாஜிக் அடிப்படையில் நாம் வாதிட்டால் வழக்கம் போல் யூகம் என்று கூறி நழுவப் பார்க்கிறார்.

அடுத்ததாக அவர் எழுப்பும் வாதம் அவருக்கே எதிரானது என்பதைக் கூட அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.

இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)

என்பதும் ஒன்றாகும்.

சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.

சூனியத்தை ஏமாற்றும் தந்திர வித்தை என்று தான் யூதர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது உண்மை. சூனியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட அவர்களே இப்படிப் புரிந்து வைத்திருந்தால் சூனியம் ஏமாற்றும் தந்திர வித்தை என்பது முற்றிலும் உண்மையே. சூனியம் என்பது மாபெரும் அற்புதம் என்றோ ஆன்மிகத்தின் உயர் நிலை என்றோ அவர்கள் கருதவில்லை என்பதும் உண்மை தான்.

இந்த நிலையில் யூதர்கள் செய்த சூனியத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநோயாளியாகி விட்டார்கள் என்பது உண்மை என்றால் யூதர்களின் அபிப்பிராயம் நிச்சயம் மாறி இருக்கும்.

சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்; ஆனால் அதன் மூலம் மாபெரும் மதத் தலைவரையே மனநோயாளியாக்க முடிவதால் நம்முடைய சூனியம் செய்யும் நம்முடைய மத குருமார்களின் ஆன்மிக நிலை மிக உயர்ந்தது என்று கருதி சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்ற தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இதையே ஒரு பிரச்சார ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுத்திருப்பார்கள் என்பது தான் நமது வாதம்

சூனியக் கலையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களைப் போல் நடந்து கொண்ட யூதர்கள் சூனியத்தால் ஒன்றும் பண்ண முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் சூனியம் பற்றி எதுவும் அறியாத இஸ்மாயீல் ஸலஃபி கூட்டம் சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத கலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று கூறுகிறார்.

எனவே நமது வாதம் இன்னும் உறுதியாகிறது. மேற்கண்ட வசனத்துக்கு எதிராக சூனியம் பற்றிய ஹதீஸ் அமைந்திருப்பது நிரூபணமாகிறது.

கட்டுக் கதையை ஆதரிக்கத் தயாராகி விட்டதால் குர்ஆன் கூட இவருக்கு அலட்சியமாகப் போய் விட்டதைப் பின்வரும் இவரது வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.

17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)

சூனியத்தின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸை நம்பினால் அது இத்தனை வசனங்களின் கருத்துக்கும் எதிராக ஆகிவிடும் என்று விரிவாக நாம் விளக்கி இருக்கும் போது அதற்கு இவர் அளிக்கும் பதில் நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார் என்பது தான்.

இந்த வசனங்கள் கூறுவதும் அதன் அடிப்படையில் நாம் எழுப்பிய வாதமும் தவறு என்றால் அதை விரிவாக எடுத்துக் காட்டி மறுக்க வேண்டும். நம்பர்களை மட்டும் சுட்டிக் காட்டி மேற்கண்ட பதிலைக் கூறுவது தான் ஆய்வா?

இதன் மூலம் குர்ஆனை வெறும் நம்பராகத் தான் பார்க்கிறார். அல்லாஹ்வின் வசனங்களுக்கு இவரிடம் மரியாதை இல்லாத காரணத்தால் தான் குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களையும் தூக்கிப் பிடிக்கிறார்

அடுத்ததாகப் பின் வரும் ஆதாரத்தை முன்வைத்து பயங்கரமான வாதத்தை எடுத்து வைக்கிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்ரா, மிஹ்ராஜ் என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா?

நாம் என்ன கூறுகிறோம் என்பதை விளங்கித் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறாரா? அல்லது விளங்காதது போல் நடிக்கிறரா என்று தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிக்க சில அற்புதங்களைச் செய்து காட்டினர்கள். அந்த அற்புதம் செய்தவரையே தூக்கி அடிக்கும் வகையில் அவரை மனநோயாளியாக யூதர்கள் ஆக்கி விட்டார்கள் என்றால் சில மக்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற நமது வாதத்துக்குத் தான் மேற்கண்ட பதிலைக் கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை விட பெரிய அற்புதத்தை மற்றவர்கள் செய்ய முடியாது என்று நாம் கூறினால் அல்லாஹ் செய்த இன்னொரு அற்புதத்தை இவர் உதாரணம் காட்டுகிறார்.

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் தான் மிஃராஜுக்கு அழைத்துச் சென்றார்கள் என்கிறாரா?

மக்களை நல்வழிப்படுத்தவோ, வழிகேட்டில் தள்ளவோ அல்லாஹ் எதையும் செய்வான். சில அற்புதங்கள் நேர்வழியில் செலுத்தும். இன்னும் சில அற்புதங்கள் வழிகேட்டில் தள்ளும். ஆனால் நபிமார்களின் எதிரிகள் கையில் நபிமார்களை மிஞ்சும் வகையிலான அற்புத ஆற்றலை அல்லாஹ் வழங்க மாட்டான் என்பது தான் நமது வாதம். இந்த வாதத்துக்கு இது பதிலாகுமா?

மேற்கண்ட வாதத்துக்கு அவர் அளிக்கும் இன்னொரு பதிலும் இதே வகையில் தான் அமைந்துள்ளது.

தஜ்ஜால் எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து, மழை பொழி என்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை (?) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூற முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே!

தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அற்புதங்களைத் தூக்கி அடிக்கும் வகையில் அற்புதம் செய்தது போன்றும் கருதிக் கொண்டால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். இதற்கும் நமது வாதத்துக்கும் என்ன சம்மந்தம்?

அவர் உளறுகிறார் என்பது அவருக்கே தெரிகிறது. அதனால் தான் இவ்விரண்டையும் கூறி வீட்டு பின்வருமாறு தெரிவிக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே! எனினும், அவர் மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.

மூஸா (அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.

அவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார் என அவர்கள் கூறினர். (20:88)

(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)

அப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, இதை வணங்காதீர்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து-கராமத் முஃஜிஸா பற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.

இங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்?

இந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.

அதாவது முதலிரண்டு வாதங்களும் சரியில்லை என்றாலும் இது மறுக்க முடியாத ஆதாரம் என்று மார் தட்டுகிறார்.

இங்கேயும் இவருக்குச் சிந்திக்கும் திறன் இல்லை என்பது தெளிவாகிறது.

இவர் எடுத்துக் காட்டும் ஆதாரம் சரியானது தான். ஆனால் அவரது வாதம் தவறானது,

நபிமார்கள் காலத்தில் எதிரிகள் சில வித்தைகளைச் செய்து காட்டுவார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த வித்தை பொய்யானது என்று அதே நபிமார்களால் நிரூபிக்கப்பட்டு விடும்.

மூஸா நபியின் முன்னே சூனியக்காரர்கள் வித்தைகளைச் செய்து காட்டிய போது மூஸா நபி கூட பயப்படும் அளவுக்கு அவர்களின் வித்தை அமைந்திருந்தது. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது.

இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். (அல்குர்ஆன் 20:65,66)

ஆனால் முடிவில் மூஸா நபி வெற்றி பெற்றார்கள். சூனியக்காரர்களின் செயல் வெறும் தந்திர வித்தை என்பது நிரூபிக்கப்பட்டது.

அது போல் தான் ஸாமிரி ஒரு வித்தையைச் செய்து காட்டிய போது ஹாரூன் நபி எவ்வளவு தான் விளக்கினாலும் அதைச் சில மக்கள் ஏற்கவில்லை.

ஆனால் முடிவு என்னவானது? இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 20:89)

ஸாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதேஎன நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 20:95-97)

மேற்கண்ட வசனங்கள் மூலம் ஸாமிரி செய்தது வித்தை என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.

மேலும் அவன் செய்து காட்டிய வித்தை மூஸா நபியின் மீதோ ஹாரூன் நபியின் மீதோ அல்ல. காளைக் கன்றின் சிற்பத்தில் தான் தன் வித்தையைக் காட்டினான். அது வித்தை தான் என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இந்த வகையில் அமைந்துள்ளதா? சூனியம் வென்றதாக அந்த ஹதீஸ் கூறுகிறதா? சூனியம் தோற்றதாகக் கூறுகிறதா?

சூனியம் வைக்கப்பட்டது ஆறு மாத காலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மன நோயாளியாக்கியது என்றால் இங்கே சூனியம் வென்றதா? நபிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வென்றார்களா?

அந்த ஹதீஸ் கூறுவது என்ன? ஆறுமாத காலம் மன நோயாளியாக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி சூனியம் ஜெயித்ததாகக் கூறுகிறது.

பிறகு இறைவன் மூலம் இது அறிவித்துக் கொடுக்கப்பட்ட பிறகாவது சூனியம் தோற்றதாகக் கூறப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.

சூனியக்காரனை இழுத்து வரச் செய்து இனி மேல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிவித்திருந்தால் கடைசியில் சூனியம் தோற்றது என்றாவது ஆகி இருக்கும். அப்படியும் நடக்கவில்லை.

“நபிகள் நாயகத்துக்கு நிவாரணம் கிடைத்தவுடன் அது குறித்து அந்த யூதனிடம் அவர்கள் கூறவும் இல்லை. அவன் முகத்திலும் விழிக்கவில்லை” என்று கூறப்படுகிறது.

அப்படியானால் சூனியக்காரன் தான் கடைசி வரை வெற்றி பெற்றுள்ளான். மீண்டும் ஒரு தடவை, இன்னும் பல தடவை கூட அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்து இன்னும் பல கேடுகளைச் செய்ய முடியும் என்று தான் இது குறித்த ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது.

இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்களின் வாதப்படி கியாம நாள் வரை சூனியத்தின் இந்த வெற்றி தொடர்கிறது. ஏனெனில் இனியும் இது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியும் என்பது இவர்களின் கருத்து.

எனவே இவர்களின் மறுப்பில் உப்பு சப்பு இல்லாததால் நாம் எடுத்து வைத்த வாதம் முன்பை விட இன்னும் வலுவாக நிற்கிறது.

போகிற போக்கில் நமது தமிழாக்கம் பற்றியும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அது போல் மேற்கண்ட வாதத்தின் இடையிலும் பின் வருமாறு கூறுகிறார்.

(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)

எனது தமிழாக்கம் குறித்து விவாதிக்க வந்த முஜீபுர்ரஹ்மான் என்பவர், தேவையான குறிப்புகளைப் பெறுவதற்காக இலங்கை சென்றார். தொண்டி விவாதத்தின் போது மேற்கண்ட கேள்வியையும் முஜீப் கேட்டார்.

நாம் செய்த தமிழாக்கம் சரி தான் என்பதைத் தகுந்த காரணத்தோடும் இவர்கள் ஏற்றுக் கொள்ளும் அரபு தஃப்ஸீர்கள் துணையுடனும் நிரூபித்தோம். (விவாத வீடியோவைப் பார்த்து அதை அறிந்து கொள்க.)

ஆயினும் எட்டாவது பதிப்பில் இது போன்ற விமர்சனம் கூட வரக் கூடாது என்பதற்காக இதை விடச் சிறந்த முறையில் மாற்றியிருக்கிறோம். (தவறு என்பதற்காக மாற்றவில்லை.)

இவர் எடுத்து வைக்கும் இன்னும் சில ஆதாரங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.