ஏகத்துவம் – மே 2007

களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம்

தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும்.

அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை, இணை வைத்தல் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது தான் மறுமை வெற்றிக்கு வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக நமக்கும், அவர்களுக்கும் இடையில் கால் நூற்றாண்டு காலமாக வாதங்கள் நடந்திருக்கின்றன. முபாஹலாவும் நடந்துள்ளது. இந்த வரிசையில் ஒன்று தான் அண்மையில் நடந்த களியக்காவிளை விவாதம்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் நீண்ட காலமாக “விவாதத்திற்குத் தயார்’ என்று சவால் விடுவதும் நெருங்கினால் நழுவுவதுமாக இருந்தார். கடைசியில் ஒரு வழியாக மாட்டிக் கொண்டதும் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. களியக்காவிளையில் விவாதம் நடத்துவது என முடிவானது.

இந்த விவாதம் நடைபெறுவதற்கு முன், இதையொட்டி நடைபெற்ற தவ்ஹீது ஜமாஅத்தின் விவாதக் குழுவில் “களியக்காவிளை விவாதம் பற்றி ஜாக் போன்ற அமைப்புகளின் நிலை எப்படியிருக்கும்?’ என்ற பேச்சு எழுந்தது.

“அமைப்பு ரீதியாக ஜாக் என்பது நமக்கு எதிராக இருந்தாலும், மார்க்கச் சட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அகீதா (கொள்கை) விஷயத்தில் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்” என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறியது. அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கலீல் ரசூல் மறுத்தார்.

விவாதம் குறித்து கமாலுத்தீன் மதனி என்ன நிலையில் இருக்கிறார் என்று பார்த்து விடுவோம் என்று கூறி விவாதக் குழுவில் இருந்த கோவை ரஹ்மத்துல்லாஹ், சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுவதாகக் கூறி, கமாலுத்தீன் மதனீயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

“நாங்கள் டி.என்.டி.ஜே குரூப்புடன் விவாதம் செய்யவுள்ளோம். அதற்கு மூல கிதாபுகள் தேவை. பிர்தவ்ஸியா மதரஸா அருகில் இருப்பதால் தங்கள் கிதாபுகளைக் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்” என்று சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் கேட்டார்.

அதற்கு எஸ்.கே. “கிதாபுகள் எல்லாம் இரவல் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் ஜமாலிய்யாவில் கேட்டு வாங்குங்கள்” என்று கூறினார்கள்.

“ஜமாலிய்யாவில் சில கிதாபுகள் இல்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறோம்” என்று ரஹ்மத்துல்லாஹ் கூற, அதற்கு எஸ்.கே. “நீங்கள் பாக்கியாத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஐடியா கொடுத்தார்.

“பாக்கியாத்தில் சில புது கிதாபுகள் இல்லை. அவை உங்களிடம் இருக்கும் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறோம்” – ரஹ்மத்துல்லாஹ்

“அப்படியெல்லாம் கொடுப்பதில்லை” – எஸ்.கே.

ரஹ்மத்துல்லாஹ்: அப்படியானால் தவ்ஹீது ஜமாஅத்தினர் இது வரை ஜகாத், அரைக்கால் ட்ரவுஸர், பன்றிக் கறி போன்ற விஷயங்கள் குறித்து முரண்பட்டுப் பேசிய பழைய அல்ஜன்னத் குறிப்புகள் தொகுப்பைத் தர முடியுமா?

எஸ்.கே.: அது என்னிடத்தில் இல்லை. திருச்சியில் (ஒரு பத்திரிகை ஆசிரியரைக் குறிப்பிட்டு) ஒரு ஹஜ்ரத் இருக்கிறார். அவரிடம் ஆரம்பத்திலிருந்து அதன் தொகுப்பு இருக்கிறது. அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.

ரஹ்மத்துல்லாஹ்: உங்களிடத்தில் அந்தத் தொகுப்பு இல்லையா?

எஸ்.கே.: சென்னையில் இருக்கிறது.

ரஹ்மத்துல்லாஹ்: நாளைக்கு விவாதத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு எப்படி நாங்கள் வாங்க முடியும்?

எஸ்.கே.: இல்லை, இல்லை. நீங்கள் திருச்சியிலேயே வாங்கிக்கொள்ளுங்கள்.

ரஹ்மத்துல்லாஹ்: நீங்கள் சொன்னதாக வாங்கிக் கொள்ளலாமா?

…மறுமொழி கூறாமல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

யாருக்கும் யாருக்கும் இடையில், என்ன கொள்கையை நிலை நாட்டுவதற்காக விவாதம் நடைபெறுகிறது? என்பதையெல்லாம் பார்க்காமல், அல்லாஹ்வுக்கு எதிரான ஒரு கூட்டத்திற்கு உதவுகின்றார்கள்.

“எல்லோருமே தவ்ஹீதுவாதிகள் தான்’ என்று இன்னும் தமிழகத்தில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிந்திப்பதற்காக இந்தத் தொலைபேசி உரையாடலைத் தருகிறோம்.

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் அசத்தியக் கொள்கையை எதிர்த்து நடந்த விவாதமாகும். மக்கத்து முஷ்ரிக்குகளை விட மோசமான கொள்கை கொண்ட ஒரு கூட்டத்துடன் நடந்த விவாதமாகும். அசத்தியத்திற்கு எதிரான இந்த விவாதப் போரில் நேர்முகமாக வந்து தவ்ஹீது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும். அப்படி உதவாவிட்டாலும் மானசீகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லது எதையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு, அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களது வாதம் நிலைபெறுவதற்காக வழி வாய்க்காலைக் கூறுகிறார் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்?

இது எஸ்.கே.யின் நிலை!

இன்னொரு கூட்டம், “களியக்காவிளை விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தோற்று விட்டது’ என்று ஊர் ஊராகப் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்களும் தவ்ஹீது வாதிகள் என்ற பெயரால் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! களியக்காவிளையில் ஏகத்துவத்திற்கே அல்லாஹ் வெற்றியை அளித்தான் என்பதை, அதன் ஒளிப் பதிவுகளைப் பார்த்த யாரும் கூறுவார்கள். அது தான் உண்மை! ஒரு வேளை நாம் தோற்றிருந்தால் அசத்திய அணியினர் இதை ஊர் ஊராகக் கொண்டு போய் நம்மைக் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் அவர்கள் தோல்வியைத் தழுவியதால் தான்.

எந்த அளவுக்கென்றால், “முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கப்ரிலிருந்து எழுந்து வந்து நேரடியாக நமக்கு உதவுவாரா?” என்று நாம் விவாதத்தில் எடுத்து வைத்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கும் போது, “அல்லாஹ் நேரடியாக வந்து உதவுவானா?” என்று கேட்டார்கள். இதைக் கேட்ட சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட இந்த வாதத்தில் இருந்த ஷிர்க்கை உணர்ந்து கொண்டார்கள்.

அவர்களே தோல்வியை ஒப்புக் கொண்டு, ஒதுங்கி ஓரத்தில் கிடக்கின்ற வேளையில், தாங்களும் தவ்ஹீது வாதிகள் தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு போலிக் கூட்டம் இதைத் தோல்வி என்று சித்தரிப்பதற்குக் காரணம் என்ன?

களியக்காவிளையில் தவ்ஹீத் ஜமாஅத் தோற்று விட்டது என்று சுன்னத் ஜமாஅத்தினருக்கு மத்தியில் பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவதன் மூலம் இவர்கள் என்ன நாடுகிறார்கள்? தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் இவர்கள் மறுமையில் என்ன நன்மையை எதிர்பார்க்கிறார்கள்?

இதிலிருந்து இவர்களின் தீய எண்ணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

மகன் இறந்தாலும் பரவாயில்லை! மருமகள் விதவையாக வேண்டும் என்பது போல், ஏகத்துவம் அழிந்தாலும் பரவாயில்லை! தவ்ஹீத் ஜமாஅத் தோற்க வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு!

இவர்களின் தனி நபர் எதிர்ப்பைப் பற்றிப் பேசும் போது, “ஒரேயொரு இறைவன் தான்” என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதால் அதற்கும் மாற்றமாக, “இல்லையில்லை! இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள் போல் தெரிகின்றதே! என்று நம்மவர்களில் சிலர் கிண்டலாகக் கூறுவதுண்டு.

இன்று களியக்காவிளையில், முஹ்யித்தீனும் கடவுள் தான், அதாவது இரண்டு இறைவன் தான் என்று சொல்லும் கூட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் களமிறங்கிப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அந்தக் கருத்தை இவர்களும் ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள்.

இதிலிருந்து ஜாக் முதல் நமக்கு எதிரான கருத்துடைய இயக்கங்கள் மற்றும் தனி நபர்களின் அடையாளங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். களியக்காவிளை விவாதம் இந்த அடையாளத்தை நன்கு தெளிவாக்கியுள்ளது.

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்?
எம். (ஷாகுல்) அப்துல் ஹமீது, மேலப்பாளையம்

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

“பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்’ என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் “தபர்ருக்’ (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.

? ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று ஹதீஸ் உள்ளதா? எவ்வாறு ஓதிப் பார்ப்பது கூடாது? நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் அல்முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) அத்தியாயங்களை ஓதி விட்டுத் தூங்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது போன்று மரணத் தருவாயில் வேதனை குறைவதற்காக ஓதிப் பார்க்க அனுமதியுள்ளது. இவ்வாறு ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?
பின்த் அப்ரோஸ், தொண்டி

ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று எந்த ஹதீசும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நோய்க்காக குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதை அனுமதித்துள்ளார்கள். ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். எனவே இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

மறுமையில் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, ”அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மிஃராஜின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப் பட்டனர். அப்போது இறைத் தூதர்களில் ஓரிருவருடன் ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத் தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காண்பிக்கப்பட்டது. நான், “இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?” என்று கேட்டேன். அப்போது, “இல்லை! இது மூஸாவும் அவருடைய சமுதாயமும்என்று சொல்லப்பட்டது.

அப்போது, “அடிவானத்தைப் பாருங்கள்என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பின்னர், “அடிவானங்களில் இங்கும் பாருங்கள்என்று சொல்லப்பட்டது. அப்போது வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் கண்டேன். “இது உங்கள் சமுதாயம்! விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இதில் அடங்குவர்என்று சொல்லப்பட்டதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். மக்கள் விவாதிக்கத் துவங்கினார்கள். “நாம் தான் அவர்கள்; நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனது தூதரைப் பின்பற்றினோம். அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள்; நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்என்று சொன்னார்கள்.

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே அவர்கள் புறப்பட்டு வந்து “அவர்கள் யாரெனில் அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள். பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள். (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்என்று சொன்னார்கள்.

அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, “அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டு விட்டார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5705

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகள், உறங்கும் போது முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) சூராக்களை ஓதுதல் போன்றவை இதில் அடங்காது. ஏனெனில் “ஓதிப் பார்த்தல்’ என்பது ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டு, அது குணமடைவதற்காக மந்திரிப்பதாகும்.

இறைவனுக்கு இணை கற்பிக்காமல் குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதற்கு நபியவர்கள் அனுமதித்துள்ளதால் அதைச் செய்வது குற்றமில்லை. ஆனால் அது போன்று எதையும் செய்யாமல் இறைவன் மீதே முழுமையாக தவக்கல் வைக்கக் கூடியவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு அந்தஸ்து தான் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் பாக்கியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் ஓதிப் பார்த்தாலும் இந்தப் பாக்கியம் கிடைக்காது என்றால் அதை ஏன் நபியவர்கள் கற்றுத் தர வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.

ஓதிப் பார்க்க விரும்புவோர் எதைக் கொண்டு ஓதிப் பார்க்க வேண்டும்? என்று கற்றுத் தருவது நபி (ஸல்) அவர்களின் பொறுப்புகளில் உள்ளது என்பதால் அதைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதே சமயம் ஓதிப் பார்க்காமல் இருப்பது சிறந்த செயல் என்பதை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.

? திருக்குர்ஆன் தமிழாக்கத்தில், சூரத்துந்நூர் 36, 37 ஆகிய வசனங்களுக்கு மொழியாக்கம் செய்ததில், “இறையில்லங்கள் உயர்த்தப்படவும் அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில், முஃமின்கள் துதிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். “முஃமின்கள் என்றால் ஆண்கள் என்று அர்த்தம்; சில ஆண்கள் என்று அரபியில் இல்லை” என்று ஒரு ஆலிம் கூறுகிறார். விளக்கவும்.
எம். திவான் மைதீன், பெரியகுளம்

நீங்கள் குறிப்பிடும் அந்த வசனத்தில், சில ஆண்கள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில், ரிஜால் என்ற அரபி வார்த்தை இடம் பெற்றுள்ளது. ரிஜால் என்பதற்கு நேரடிப் பொருள் ஆண்கள் என்பது தான்.

இந்த வசனத்தில் ஆண்கள் என்று கூறப்படுவது ஒட்டு மொத்த ஆண் இனத்தைப் பற்றியும் அல்ல! அல்லாஹ்வை நினைவு கூரும் சில ஆண்களைப் பற்றித் தான். எனவே இந்த இடத்தில் ரிஜால் என்பதற்கு, “சில ஆண்கள்’ என்று மொழி பெயர்த்ததில் எந்தத் தவறும் இல்லை.

ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில் முஃமின்கள் என்று மொழி பெயர்த்திருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். முஃமின்கள் என்று அரபியில் இல்லை. அதனால் அடைப்புக் குறிக்குள் முஃமின்கள் என்று போட்டுள்ளனர்.

இதே ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில் 72:6 வசனத்தில் இடம் பெறும், “ரிஜால்’ என்ற வார்த்தைக்கு “சில ஆண்கள்’ என்றே மொழி பெயர்த்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

? குர்ஆனின் சில சூராக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?
அப்துல்லாஹ்

மன்ஜில் என்ற நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த சூராவை ஓதினால் இன்ன நோய் குணமாகும், செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற கருத்தில் ஆதாரமற்ற செய்திகள் ஏராளமாக சமுதாயத்தில் உலவி வருகின்றன. இவற்றிற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் கிடையாது.

திருக்குர்ஆனில் நோய் நிவாரணம் இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு அது நஷ்டத்தையே அதிகப்படுத்தும்.

அல்குர்ஆன் 17:82

தேள் கடித்த ஒருவருக்கு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி மந்திரித்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்த செய்தி புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூற்களில் பதிவாகியுள்ளது.

இது தவிர குறிப்பிட்ட சூராவில் குறிப்பிட்ட இன்ன நோய்க்கு நிவாரணம் இருக்கிறது என்று ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. “அலிஃப் லாம் மீம்என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துஎன்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதீ (2835)

இது தவிர சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரத்துல் ஃபாத்திஹா, கஹ்ஃப், குல்ஹுவல்லாஹு அஹத், ஃபலக், நாஸ் போன்ற அத்தியாயங்களுக்கும் ஆயத்துல் குர்ஸீ போன்ற சில வசனங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில சிறப்புகளைக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளில் பெரும்பாலும் மறுமைப் பயன் தொடர்புள்ளவை தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

? நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?
மு. ஷேக் அப்துல்லாஹ், ஜித்தா

வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸில் இல்லை.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தவரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும் வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம். நான் எனது வில்லிலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயையும் ஏவி வேட்டையாடுவேன். (இவற்றில்) எது எனக்கு ஆகுமானதாகும்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களின் விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவி விட்டு அவர்களின் பாத்திரத்தில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை நீங்கள் அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் சாப்பிடுங்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா அல்ஹுசனிய்யி (ர-)

நூல்: புகாரி 5478, 5488

இந்த ஹதீஸில் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுவதை வைத்து, “மாற்று மதத்தவர்களுடன் சாப்பிடக்கூடாது’  என்று உங்கள் நண்பர்கள் கூறியிருக்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைக் கூறவில்லை.

“வேறு பாத்திரம் இருந்தால் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம்’ என்று இந்த ஹதீஸ் பொதுவாகக் கூறினாலும், அபூதாவூதில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் வேதக்காரர்களைக் கடந்து செல்கிறோம். அவர்கள் தங்களுடைய பாத்திரத்தில் பன்றி இறைச்சியைச் சமைக்கிறார்கள். தங்களது பாத்திரத்தில் மதுவையும் குடிக்கிறார்கள்என்று அபூஸஃலபா அல் ஹுஸனிய்யி (ரலி) கேட்டார். “அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அதிலேயே நீங்கள் சாப்பிடுங்கள்; குடியுங்கள். வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதை நீங்கள் தண்ணீரால் கழுவி அதில் சாப்பிடுங்கள்; குடியுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ர-)

நூல்: அபூதாவூத் 3342

முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான பன்றி இறைச்சியையும், மதுவையும் வேதக்காரர்கள் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு நபித்தோழர் கேட்கும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பதிலை அளிக்கிறார்கள். எனவே இது பொதுவான தடை அல்ல என்பதை விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டால் அந்தப் பாத்திரத்தை நாம் பயன்படுத்தக் கூடாது; வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதைக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்குத் தடையேதும் இல்லை.

? வாரிசு இல்லாத பெண் தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைத்து விட்டார். அவளது கூடப் பிறந்த சகோதரர்களுக்கும் அச்சொத்தில் பாகம் கிடைக்குமா? ஷரீஅத் சட்டம் என்ன சொல்கிறது? இஸ்லாத்தில் தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா?
கலீல் ரஹ்மான், செங்கல்பட்டு

தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

வளர்ப்புக் குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கலாம்.

(பாகப் பிரிவினை என்பது) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

அல்குர்ஆன் 4:11

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.)

அல்குர்ஆன் 4:12

மரண சாசனம் செய்ய அனுமதி உள்ளதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.

ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்பட வேண்டும்.

விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். “அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பங்கு! ஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3936, 4409, 5668, 6373

இந்த அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட சொத்தை மரண சாசனம் செய்திருந்தால் அதை வாரிசுகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

குழந்தை இல்லாத பெண் தனது சொத்தை வளர்ப்பு மகனுக்கு முழுமையாக எழுதி வைத்திருந்தாலும் அதில் மூன்றில் ஒரு பகுதி போக மீதமுள்ள இரண்டு பங்கு அந்தப் பெண்ணின் சகோதர, சகோதரிகளுக்குக் கீழ்க்கண்ட வசனத்தினடிப்படையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும்.

கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 4:176

? குளிப்பு கடமையான நிலையில் மஸ்ஜிதில் கால் படக் கூடாது என்று கூறுகின்றனரே! இது பற்றி குர்ஆன், ஹதீஸில் வருவதென்ன? விளக்கவும்.
ஜே. ரியாஸ் அஹ்மத், காயல்பட்டணம்

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:43

இந்த வசனத்தின் அடிப்படையில், குளிப்பு கடமையான ஒருவர் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது. வேறொரு இடத்திற்குப் பள்ளிவாசலின் வழியாகத் தான் செல்ல வேண்டுமென்றால் அவ்வாறு செல்வதில் தவறில்லை. வேண்டுமென்றே பள்ளிவாசலுக்குச் செல்வதை இந்த வசனம் தடை செய்கிறது.

? அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன?
ரஹ்மத் அலீ, புதுக்கோட்டை

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள் என்று நிரூபணமானால் அதை உண்ணக் கூடாது. அஜினாமோட்டா உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதால் கண்டிப்பாக அதை உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

———————————————————————————————————————————————-

 மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!

ஷியாக்கள் ஓர் ஆய்வு                                     தொடர் – 4

அபூஉஸாமா

ஆன்றோர்கள், சான்றோர்கள் வீற்றிருக்கும் அவையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி முழங்கும் முழக்கம் இதோ:

எனக்கு ஸலாம் கூறாமல் சூரியன் (தினந்தோறும்) உதிப்பதில்லை. உதிக்கின்ற அந்தச் சூரியன் ஊர், உலகத்தில் நடக்கவிருக்கும் விவரங்களை என்னிடம் தெரிவிக்காது விடுவதில்லை. இவ்வாறு உதிக்கும் சூரியன் மட்டுமல்ல! உதிக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து தன்னுள் நிகழவிருப்பதைத் தெரிவித்து விடுகின்றன. இவ்வாறு மாதங்களும், வாரங்களும், நாட்களும் தமக்குள் நடக்கவிருப்பதை என்னிடம் வந்து அறிவித்து விடுகின்றன. அவை தமக்குள் நடக்க இருக்கும் ரகசியங்களை கொட்டி விடுகின்றன.

என் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக! நல்லவர்கள், கெட்டவர்கள் அனைவரும் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றனர். என் சமூகத்தின் முன்னால் நிறுத்தப் படுகின்றனர்.

என் கண்ணொளி என்றென்றும் நிரந்தரமான பதிவேட்டில் பதிந்தே இருக்கின்றது. அல்லாஹ்வின்  ஞானக் கடலில் நான் மூழ்கிப் போயிருக்கிறேன். மக்கள் காட்சியளிக்கும் (மறுமை) நாளில் நான் அல்லாஹ்வின் ஆதாரம். நான் நபி (ஸல்) அவர்களின் தனிப் பிரதிநிதி! அவர்களுடைய அடுத்த வாரிசு!

இது தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் முழக்கம் என்று முஹ்யித்தீன் மவ்லிது குறிப்பிடுகிறது.

அகில உலகத்தின் ஆட்சி கொடுக்கப்பட்ட இறைத் தூதர் சுலைமான் அவர்களுக்குக் கூட அல்லாஹ் சூரியனை வசப்படுத்திக் கொடுக்கவில்லை. சுழலும் அந்தச் சூரியன் முஹ்யித்தீன் முன்னால் வந்து நின்று ஸலாம் சொல்கிறதாம். அத்துடன் நிற்கவில்லை இந்தக் கப்ஸா புராணம்! மக்கள் எல்லோரும் இவருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்களாம்.

இவர் என்ன? படைப்பினத்தில் அல்லாஹ்வால் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றாரா? மக்கள் இவர் முன்னால் நிறுத்தப்படுவதற்கும், அவர்களை இவர் பார்வையிடுவதற்கும் அல்லாஹ்வால் தனி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா?

அதுவும் இவர் இறந்து பல நூறு ஆண்டுகள் பறந்து போனதற்குப் பின்னால் இப்படி ஒரு பார்வையிடலா?

இப்படிப் பிதற்றும் முஹய்யித்தீன் மவ்லிது தனது பொய்யை இத்துடன் நிறுத்தவில்லை. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பார்வை, பதிவேட்டில் பதிந்திருக்கிறதாம். இவ்வாறு கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கிறது இந்த மவ்லிது! இதை நோக்கித் தான்     நமது விமர்சன வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றோம்.

“நான் வானங்கள், பூமியில் உள்ளவற்றை அறிகின்றேன்; சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் அறிகின்றேன். இது வரை நிகழ்ந்ததையும், இனி நிகழவிருப்பதையும் நான் அறிவேன்” என அபூ அப்தில்லாஹ் (ஷியாக்களின் இமாம்) கூறுகின்றார்.

நூல்: அல்காஃபீ ஃபில் உசூல்

பக்கம்: 124

இந்த நச்சுக் கருத்தைத் தான் முஹ்யித்தீன் மவ்லிது பறை சாற்றுகின்றது. இதைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் வீடு வீடாகச் சென்று ஓதி வருகின்றனர்.

ஷியாக்களின் இந்த நச்சுக் கருத்து தான் ஷாஹுல் ஹமீது அண்டு சன்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மவ்லிதுக் கிதாபுகளில் அச்சுக் கோர்க்கப்பட்டிருக்கின்றது.

ஷியாக்களின் கருத்துக்களையும், அவர்களின் வேர்களான யூதர்களின் கருத்துக்களையும் வாந்தி எடுப்பதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் பக்கா ஷியாவினர் தான் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.

இந்த மவ்லிதில் படிந்திருக்கும் ஷியாக்களின் படிமானங்களையும், அதன் மீது சுன்னத் வல் ஜமாஅத்தினர் கொண்டிருக்கும் பிடிமானங்களையும் இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.

அபுல் முளஃப்பர் கூறியதாக அபூ மஸ்ஊத் அறிவிப்பதாவது: (இந்தக் குப்பைக்கு அறிவிப்பாளர் வேறு வேண்டிக் கிடக்கிறது!)

“நான் பணியாளர்களுடன் எண்ணூறு தீனார் பணத்தை எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் செல்கிறேன்” என்று ஷைக் ஹம்மாதிடம் விடை பெறும் விதமாக அபுல் முளஃப்பர் தெரிவிக்கின்றார். (சிஷ்யர்கள் பயணம் செய்யும் போது அதை ஷைகுகளிடம் தெரிவிப்பது ஒரு முக்கியமான வழிமுறையாம்)

அதற்கு ஹம்மாத், “நீ பயணம் செய்ய வேண்டாம். அவ்வாறு பயணம் செய்தால் நீ கொல்லப்பட்டு, உன்னுடைய பொருளும் கொள்ளை அடிக்கப்பட்டு விடும்” என்று தெரிவிக்கின்றார். ஷைகின் இந்த முன்னறிவிப்பைக் கேட்டு மனம் உடைந்து போன அபுல் முளஃப்பர் சென்று கொண்டிருக்கின்றார். வழியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவரைக் கண்டு, ஹம்மாத் அவரிடம் கூறியதை அப்படியே தெரிவிக்கின்றார். (அபுல் முளஃப்பருக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. ஹம்மாத் தன்னிடம் கூறியதை முஹ்யித்தீன் அப்படியே வார்த்தை பிசகாது கூறுகின்றாரே என்று பிரமித்து விடுகின்றார்)

அப்போது முஹ்யித்தீன் அபுல் முளஃப்பரை நோக்கி, “நீ செல்! வெற்றிகரமாக இலாபம் ஈட்டித் திரும்புவாய். (ஹம்மாது சொன்னது போல் நீ கொல்லப்பட மாட்டாய்) உன்னையும், உனது பொருளாதாரத்தையும் காப்பது என் கடமை” என்று குறிப்பிடுகின்றார். அது போன்றே அபுல் முளஃப்பர் விரைந்து செல்கின்றார். முதலை விட அதிகமாக முன்னூறு தீனார் லாபம் ஈட்டுகின்றார்.

வியாபாரத்தில் இப்படியொரு லாபத்தை அடைந்த அவர் ஒருநாள் தன் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்குச் செல்ல நேரிடுகின்றது. தான் சம்பாதித்த அந்தப் பொருளை கவனக்குறைவாக அங்குள்ள மணற்பரப்பில் வைத்து விட்டுச் செல்கின்றார். தன்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டுத் திரும்பும் போது பணத்தை மறந்து வைத்து விட்டு, தான் தங்கும் வீட்டிற்கு வந்து விடுகின்றார். தூக்கம் மேலிட்டு, தூங்கியும் விடுகின்றார்.

அப்போது ஒரு கனவு காண்கிறார். கனவில் அவர் ஒரு வியாபாரக் கூட்டத்தில் வரும் போது கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தைக் கொன்று விடுகின்றனர். இவரையும் ஒருவர் வந்து ஈட்டியால் தாக்கிக் கொன்று விடுகின்றார்.

இவ்வாறு கனவு கண்டதும் திடுக்கிட்டு விழிக்கின்றார். இவ்வாறு விழித்துப் பார்க்கும் போது அவருடைய கழுத்தில் இரத்தக் கறை இருப்பதைப் பார்க்கின்றார். அவரது உடல் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற கடுமையான வலியையும், வேதனையையும் உணர்கின்றார். உடனே அவருக்குத் தன்னுடைய பணம் நினைவுக்கு வருகின்றது. பணம் வைத்த இடத்தை நோக்கி விரைகிறார். அவர் வைத்த இடத்தில் பணம் அப்படியே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு பாக்தாத் வந்து சேர்கிறார்.

பாக்தாத் வந்ததும் அவரது உள்ளத்தில், முதன் முதலில் யாரைச் சந்திப்பது? என்ற கேள்வி எழுகின்றது. ஷைக் ஹம்மாதைச் சந்திக்கலாம்; காரணம் அவர் வயதில் மூத்தவர்; அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திக்கலாம்; காரணம் அவர் சொன்னது தான் சரியாக இருக்கின்றது என்று அபுல் முளஃப்பர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். எதிரில் ஷைகு ஹம்மாதே வந்து விடுகிறார். அவர் அபுல் முளஃப்பரின் மன ஓட்டத்தை அப்படியே புரிந்து கொண்டு, “நீ முதலில் அப்துல் காதிர் ஜீலானியையே சந்திப்பாயாக! ஏனெனில் அவர் உனக்காக அல்லாஹ்விடம் பதினேழு தடவை முறையிட்டார். (அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்) அவர் அம்முறையீட்டை எழுபது தடவையாக நிறைவு செய்தார். கடைசியில் உன் மீது நேரடியாக, நிஜமாகவே நிகழவிருந்த கொலை, கொள்ளையானது கனவிலும், மறதியிலும் நிகழ்வதாக மாறியது” என்று ஷைகு ஹம்மாத், தடுமாற்றத்திலிருந்த அபுல் முளஃப்பருக்கு விளக்கினார்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் அவரைப் பற்றி அளக்கப்பட்ட கதையாகும். இது உரையாகவும், கவிதையாகவும் அம்மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள்:

  1. அபுல் முளஃப்பரைப் பார்த்து ஹம்மாத், செல்லாதே என்று கூறுகிறார். இவ்வாறு அவர் கூறியதற்குக் காரணம் அவருக்குப் பதிவேட்டில் உள்ளது தெரிந்திருக்கின்றது.
  2. அபுல் முளஃப்பர், ஹம்மாத் ஆகிய இருவருக்கு மத்தியில் மட்டுமே நடந்த விபரத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். ஆனால் அதை அப்படியே அப்துல் காதிர் ஜீலானி அறிகிறார்.
  3. ஹம்மாத், போகாதே என்று சொன்னார்! நான் சொல்கிறேன், நீ போ! என்று முஹ்யித்தீன் உத்தரவிடுகின்றார். அவரிடம் விதியை மாற்றுவதற்கு உத்தரவாதமும் கொடுக்கின்றார்.
  4. இலாபம் ஈட்டி விட்டு, பாக்தாதுக்குள் நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அபுல் முளஃப்பர் மனதுக்குள் தத்தளிக்கின்றார், தடுமாறுகின்றார். இந்தத் தவிப்பை, அபுல் முளஃப்பரின் உள்ளத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தை, எதிரில் வந்த ஹம்மாத் அறிந்து கொண்டு, நீ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போய் பார் என்று கூறுகிறார்.

ஷைகு ஹம்மாத், ஷைகு முஹ்யித்தீன் ஆகிய இருவரில் ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான் மிகவும் உயர்ந்தவர் என்று நிரூபணம் ஆனாலும், இரண்டு பேருமே பதிவேட்டில் உள்ளதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறார்கள். உள்ளத்தில் தோன்றுவதையும் அப்படியே பார்க்கிறார்கள். அவற்றை எடுத்துச் சொல்லவும் செய்கிறார்கள்.

மறைவானவற்றை அப்படியே அறிகின்ற இந்த அற்புத ஆற்றல் (?) இவ்விரு ஷைகுகளுக்கும் நிறையவே உள்ளது என்பதை இந்தக் கதையிலிருந்து நாம் மிகச் சாதாரணமாக விளங்கிக் கொள்கிறோம்.

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர் களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் இவை. இதற்கும் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்தக் கதைகளுக்கும் என்ன வித்தியாசம்?

முஹ்யித்தீன் அப்துல் ஜீலானிக்கும், ஹம்மாதுக்கும் மறைவான ஞானம் இருப்பதாக சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஓதுகின்ற, தூக்கிப் பிடிக்கின்ற மவ்லிதுக் கிதாபு சொல்கிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் ஓத வேண்டும் என்றும் இந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி இவர்களை ஓத அழைக்கிறார்கள். இவர்களும் போய் ஓதுகின்றனர். அப்படியானால் இவர்கள் யார்? சுன்னத் வல் ஜமாஅத்தினர் அல்ல! பக்கா ஷியாக்கள் தான். யூதர்களின் கள்ளப் பிள்ளையான ஷியாக்களின் பரம்பரை தான் இவர்கள்!

இவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்!

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 11:5

அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:7

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண் பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:43

(நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 31:23

வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். அவன் உள்ளங்களில் உள்ளதையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:38

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 42:24

இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 57:6

வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்து வதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 64:4

உங்கள் கூற்றை இரகசிய மாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 67:13

இந்த வசனங்களும் இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களும், உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இருப்பதைக் கூறுகின்றன. ஆனால் இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கும், ஹம்மாதுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர், மவ்லிது ஓதும் மவ்லவிகள். அப்படியென்றால் இவர்கள் யார்? கடைந்தெடுத்த ஷியாக்கள் தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

————————————————————————————————————————————————

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்

கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர்

திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல் குர்ஆன் 30:21)

இந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.

வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.

வரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு

திருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள், வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

நிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்

நிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.

சனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது  இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ (4826)

மேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும்? நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா? அல்லது கெட்டதாக அமையுமா? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

(அல்குர்ஆன் 6:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் (9171)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா

நூல்: முஸ்லிம் (4137)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர்  (பீடை) என்பதும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ (5757)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)

நூல்: அபூதாவூத் (3411)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)

நூல்: அஹ்மத் (6748)

மார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

பந்தலிலும் ஓர் பாவ காரியம்

பிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.

(அல்குர்ஆன் 42:49,50)

இப்ராஹீம் நபி, ஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

மாலையில் மறைந்துள்ள மர்மம்

மணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும் மக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.

அதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றி, வீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடுவார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.

நிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்என்று கூறுவீராக

(அல்குர்ஆன் 9:51)

இந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.

தாலி கட்டுதல்

தாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

மணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே!

இந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள்.

நமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)

நூல்: அஹ்மத் (16781)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)

நூல்: அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், “வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (19149)

எனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரத்தி எடுத்தல்

பிறகு மணமகனையும், மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.

ஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன், மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.

நிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது.  ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?” என்று கேட்பீராக! “இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:63,64)

தாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்

சில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!  

(அல்குர்ஆன் 41:37)

இவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

மூட நம்பிக்கைகள்

  • ஆயிசு நூறு
  • காக்கை கத்தினால் தபால் வரும்
  • மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்
  • கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்
  • சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்
  • வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.
  • குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது
  • வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது
  • பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்
  • விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்
  • திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது
  • ஆரத்தி எடுப்பது
  • திருமணத்தில் தாய் தந்தையர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது
  • தாயத்து, தாவீஸ் அணிவது
  • தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது
  • வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை மாட்டுவது
  • பூசணிக்காயைத் தொங்க விடுவது
  • பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது
  • வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது
  • மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது
  • கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்
  • தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்
  • உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை
  • தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்
  • திருமணத்தில் மாலை மாட்டுதல்
  • மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்
  • மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்

————————————————————————————————————————————————

வலஜாவில் ஒரு வாட்போர்…….27

அபூபக்ர் (ரலி) வரலாறு                         தொடர் – 32

எம். ஷம்சுல்லுஹா

இராக்கில் பாரசீக சக்திகளை வேரறுத்து விட்டதாக காலித் கருதவில்லை. பாரசீகத்தின் கிஸ்ரா எனும் பாம்பு இன்னும் தன் படத்தைக் கீழே போடவில்லை என்பதை காலித் அறிந்திருந்தார்.

பாரசீகப் பேரரசின் அடுத்தக்கட்ட வேலை, முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, (முஸ்லிமான) அரபியரை, (முஸ்லிம் அல்லாத) அரபியர்களைக் கொண்டு களையெடுக்க வேண்டும் என்பது பாரசீகத்தின் திட்டம் என்று காலித் கணக்குப் போட்டு வைத்திருந்தார். அவரது கணக்கு சரியானது; கணிப்பு நிஜமானது.

இராக்கின் புராத், திஜ்லா என்ற இரு நதிகளுக்கு இடையே பல்வேறு அரபிக் கோத்திரங்கள் பரவலாகப் பரந்து விரிந்து கிடந்தன. பாரசீகப் பேரரசு இவர்களுடைய சுதந்திரத்திற்கு எவ்வித சோதனையையும் கொடுக்கவில்லை. அவர்களுடைய சுய ராஜ்யத்திற்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கவில்லை. இந்த அரபியப் படையினரிடம் இஸ்லாமியப் படை வந்து, இஸ்லாத்தில் நுழையுங்கள்; அல்லது வரி செலுத்துங்கள் என்று கேட்டால் இசைவார்களா? ஒரு போதும் இசைய மாட்டார்கள். அசையக் கூட மாட்டார்கள். இஸ்லாமிய அரசா? அல்லது பாரசீக அரசா? என்றால் அவர்கள் தேர்வு செய்வது பாரசீகத்தைத் தான்.

இந்தச் சிந்தனை தான் இஸ்லாமிய ராஜ தந்திரியின் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. இந்தச் சிந்தனை ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் காலிதின் காதுக்கு ஒரு தகவல் வருகின்றது. பனூ பக்ர் பின் வாயில் தலைமையில் ஒரு படை வஜலாவை நோக்கி வருகின்றது என்ற தகவல் தான் அது! தளபதி காலித் அப்போது மதாரில் இருந்து கொண்டிருந்தார்.

பக்ர் கிளையினரைத்  தூண்டி விட்ட பாரசீகம்

மதாரில் பாரசீகப் படை படுதோல்வி அடைந்தது. காரின் கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி அர்தஷீருக்குக் கிடைக்கின்றது. அர்தஷீர் அப்போது பாரசீகப் பேரரசின் அரசராக இருந்தார். இதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, தன் அரசின் பாதத்தை அரபகத்தில் பதிய வைத்து விட வேண்டும் என்பதற்காக பனூ பக்ர் கிளையை அர்தஷீர் தூண்டி விடுகின்றார்.

அந்தப் படைக்கு அன்தர்சகர் என்பவன் தலைமை தாங்குகின்றான். இவன் மதாயின் நகரத்தைச் சார்ந்த கறுப்பு இனத்தவன்; ஒரு வீரன். இவன் மதாயினிலிருந்து புறப்பட்டு கஸ்கர் என்ற இடத்திற்கு வந்தான். பின்னர் அங்கிருந்து வலஜாவுக்கு வந்தான்.

அரபியர்களை அரபியர்கள் தான் வீழ்த்தினார்கள் என்ற வரலாறு வந்து விடக் கூடாது என்பதற்காக பஹ்மன் ஜாதவைஹ் என்பவன் தலைமையில் ஒரு பாரசீகப் படையையும் அர்தஷீர் அனுப்பி வைக்கின்றார். அந்தப் படை அன்தர்சகர் படையை வேறு வழியில் தொடர்ந்து வருகின்றது. இந்தப் படை, ஹியராவுக்கும் வலஜாவுக்கும் இடையில் அரபியர்களையும், பாரசீகத் தலைவர்களையும் திரட்டி வருகின்றது. இந்தப் படையின் தொகையைக் கண்ட பஹ்மன் ஜாதவைஹ் பெருமிதமும் பேரானந்தமும் அடைந்தவனாக வலஜாவில் முகாமிடுகின்றான்.

இந்தத் தகவலைப் பெற்ற காலித், தான் கைப்பற்றிய நகரங்களின் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். வெற்றிக் களிப்பில் இருந்து விடாதீர்கள்! எதிரிகளைத் தோற்கடித்து விட்டோம் என்ற மிதப்பில் மிதந்து விடாதீர்கள் என்ற ஓர் அறிவுரையைப் பதிவு செய்து விட்டு வலஜாவை நோக்கி அவசரமாக விரைகின்றார்.

அவரது படை வலஜா வந்ததும், பனூ பக்ர் படையும், பாரசீகப் படையும் இணைந்து காலிதின் படையுடன் கடுமையாக மோதுகின்றனர். இரு படையினரும் இனி தங்களுக்குப் பொறுமையில்லை எனுமளவுக்கு உக்கிரமான போர் நடக்கிறது. காலித் முன்னால் நின்று கொண்டு தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தார். எதிரிகளிடம் முஸ்லிம்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளை!

வலஜாவிற்கு வரும் வழியில் காலித் முன்னேற்பாடாக இரு படைகளை இரு வேறு பகுதிகளில் பிரித்து விட்டு, திடீர்த் தாக்குதலுக்கு வருமாறு ஏற்கனவே கட்டளையிட்டிருந்தார். அந்த இரு படையினரும் தாமதமாக வந்தாலும் இஸ்லாமியப் படைகளுக்குத் தக்க பலமாக வந்து சேர்ந்தனர்.

முன்னால் காலிதின் மின்னல் வீச்சிலும், பின்னால் திடீர் படையினரின் அதிரடித் தாக்குதலாலும் எதிரிப் படையினர் அடையாளம் தெரியாமல் ஆயினர்.

தம்முடன் வந்த நண்பர்களின் கதி என்ன? என்று பார்க்க முடியாதவாறு அவரவரின் கதி அவசர கதியில் முடிந்து போனது. தளபதி அன்தர்சகர் அடித்துப் புரண்டு கொண்டு ஓடிப் போய், தாகத்தால் தவித்தே செத்தான். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தான். போர் குற்றவாளிகளையும் அவர்களுக்கு உதவியவர்களையும் இஸ்லாமிய ராணுவம் கைதிகளாகப் பிடித்தது.

அம்பாரமாய் குவிந்த ஆகார வகைகள்

போர் முடிவின் போது அங்கு ஆகாரங்கள், உணவுப் பொருட்கள் அம்பாரமாய் குவிந்து கிடந்தன. எதிரிகளின் இந்தப் பொருளாசை பற்றியும் அதற்காக எதிரிகள் புரிந்த போரைப் பற்றியும் விமர்சித்து, அல்லாஹ்வின் போர் வாள் ஆற்றிய உரை இதோ:

கொட்டிக் கிடக்கும் இந்த ஆகாரங்களையும், குவிந்து கிடக்கும் உணவுப் பொருட்களையும் ஒரு முறை நீங்கள் உற்றுப் பாருங்கள். அல்லாஹ்வின் பாதையில் ஓர் அறப் போர் இல்லையெனில், அவன் பால் அழைக்கும் அழைப்புப் பணி இல்லையெனில், மறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையெனில் நாங்களும் இந்த உலக சுகபோக வாழ்க்கைக்காகத் தான் போரில் குதித்திருப்போம். அதில் உங்களை விஞ்சியும் விடுவோம்.

உங்களைப் போன்ற வெறி பிடித்தவர்களுக்குப் பசியையும் பட்டினியையும் உடமையாக்கி இருப்போம். ஆனால் நாங்கள் மறுமைக்காகப் போரிடுபவர்கள்; இந்த உலக சுகபோகத்திற்காகப் போரிடுபவர்கள் கிடையாது.

இவ்வாறு காலித் உரையாற்றினார்.

காலிதின் இந்த அக்கினிப் பொறி பறக்கின்ற ஆவேசப் பேச்சுக்குப் பின்னர் அவருடைய படையிலுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைப் பெரிதாகக் கருதுவார்களா? இங்கு அல்லாஹ்வின் பாதையில் அல்லவா காலித் தன்னை அர்ப்பணித்துள்ளார். அதே சமயம் வெற்றிப் பொருட்களையும் பெற்றுள்ளார். அவரது வலக்கரங்கள் அடிமைகளை சொந்தமாக்கியிருக்கின்றன. இவை உண்மையில் இம்மை, மறுமை ஆகிய ஈருலகப் பேறும் பாக்கியமும் அல்லவா?

இத்தகைய படையினருக்குத் தான் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். அந்தப் போரின் பரிசாகக் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி விட்டு மீதியை போராளிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். படம் எடுத்து ஆடிய பாரசீகப் பாம்பின் விஷப் பல்லை, காலித் பிடுங்கி எறிந்தார்.

உல்லைஸில் ஒரு போர்

இதனால் இந்தப் போருக்குப் பின் பாரசீகம் அவ்வளவாக எகிறவில்லை. ஆனால் அரபிக் கிளைகள் அடங்கவில்லை. வலஜா போரின் தோல்விக்காக பாரசீகம் கொதித்து எழாவிட்டாலும் பனூ பக்ர் கிளையினர் கொதித்து எழுகின்றனர். கோபாவேசத்தில் சீறுகின்றனர். பனூ பக்ர் கிளையினர் ஏன் இவ்வாறு ஆத்திரம் கொள்கின்றனர்?

அல்லாஹ்வின் போர் வாளும், வெற்றியின் கூர் வாளுமாகிய காலித் பின் வலீத், வலஜா போரில் ஆயிரம் பேருக்குச் சமமான பாரசீக மாவீரனை மண்ணைக் கவ்வச் செய்தார். அந்தப் போரில் ஏற்பட்ட சாவுப் பட்டியலில் முக்கியமான இருவர் இடம் பெறுகின்றனர். ஒருவர் ஜாபிர் பின் புஜைர் என்பவரின் மகன்! மற்றொருவர் அப்துல் அஸ்வதின் மகன்!

ஜாபிர் பின் புஜைர், அப்துல் அஸ்வத் ஆகிய இருவருமே பனூ பக்ரின் தலைவர்கள். அதனால் பனூ பக்ர் கிளையினர் கிளர்ந்தெழுகின்றனர். அதிலும் தங்களைப் போன்ற அரபி இனத்தவர் தங்களைத் தோற்கடித்து விட்டனர் என்ற வெறி அவர்களுடைய தலைகளில் ஏறிப் போய் இருந்தது. குறிப்பாக அவர்களிலுள்ள கிறித்தவர்கள், முஸ்லிம்களை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தனர்.

இதன் காரணமாக பனூ பக்ர் கிளையினர் அந்நியப் படைகளிலும் ஆதரவு கோரி கடிதம் எழுதுகின்றனர். அந்நிய சக்திகளும் படையனுப்புவதாக வாக்களித்துப் பதில் கடிதம் அனுப்பினர்.

பாரசீக மன்னன் அர்தஷீர், தன்னுடைய ஆளுனரான பஹ்மன் ஜாதவைஹிக்கு, “நீ உடனே உல்லைஸுக்குப் போ! அங்கு ஒன்று கூடுகின்ற பாரசீக, கிறித்தவப் படைகளுடன் இணைந்து கொள்க” என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் அனுப்பினார்.

பஹ்மன் ஜாதவைஹ், மன்னரைச் சந்தித்து விட்டு உல்லைஸுக்குச் செல்வோம் என்று எண்ணி அவர் ஜாபான் என்பவரைத் தனது பிரதிநிதியாக உல்லைஸுக்கு அனுப்பி வைக்கின்றார்.

பஹ்மன் ஜாதவைஹ், மன்னரிடம் வந்த போது அவர் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் அவரது நோக்கம் நிறைவேறாமல் உல்லைஸுக்குப் புறப்பட்டு வந்தார். ஸஃபர் மாதம் அவர் உல்லைஸ் வந்து சேர்ந்தார்.

கிறித்தவப் படைக்கு அப்துல் அஸ்வத் தலைவராக இருந்தார். ஜாபிர் பின் புஜைரும் கிறித்தவராக இருந்ததால் அவரும் அப்துல் அஸ்வதுக்கு முழு உதவியளித்தார்.

இந்தக் கூட்டுப் படைகள் உல்லைஸில் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்ற விபரம் காலித் பின் வலீதுக்குக் கிடைத்தது.

காலித் உடனே உல்லைஸுக்கு வருகின்றார். எதிரிகளின் முகாமை வந்தடைந்த போது அவர்கள் உணவு பரிமாறுவதற்காகப் பந்தி ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தனர்.

சண்டைக் களமா? சாப்பாட்டுக் களமா?

காலிதைக் கண்ட எதிரிப் படையினர், “நாம் சாப்பாட்டைச் சாப்பிடுவோமா? அல்லது இவர்களைச் சாத்துவோமா?” என்று தமது தளபதி ஜாபானிடம் ஆலோசனை செய்தனர்.

அதற்கு ஜாபான், “அவர்கள் உங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் நீங்களும் அப்படியே இருந்து விடுங்கள். ஆனால் அவர்கள் (காலித் படையினர்) உங்களைச் சாப்பாட்டில் கை வைக்க விட மாட்டார்கள் போல் தெரிகிறது” என்று கூறினார்.

ஜாபானின் இந்த ஆலோசனையை அவரது படையினர் கண்டு கொள்ளவில்லை. பந்திக்கான விரிப்புகளை விரித்தனர். உணவுகளை வைத்தனர். சண்டைக் களத்தில் இறங்குவதற்குப் பதிலாக அவர்கள் சகட்டு மேனிக்கு சாப்பாட்டுக் களத்தில் இறங்கினர்.

அப்போது அந்தக் களத்திற்கு அருகே வந்த காலித், “புஜைர் எங்கே? அப்துல் அஸ்வத் எங்கே? மாலிக் பின் கைஸ்  எங்கே? ஜத்ரா கிளையைச் சேர்ந்த ஆள் எங்கே?” என்று எதிரிப் படையினரின் பெரும் புள்ளிகள், தலைவர்களின் பெயர்களைக் கூறி சிங்கமாய் கர்ஜிக்கலானார்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்

சில வருடங்களுக்கு முன்னால் நமது அனைத்து முயற்சிகளும் இணை வைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை ஒழிப்பதற்காக முடுக்கி விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர் கொள்கையில் இருந்தவர்கள் நமது பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார்கள். இதையெல்லாம் முறியடித்து மக்களை வென்றெடுத்தோம், அல்ஹம்து லில்லாஹ்!

ஆனால் நம்முடன் சேர்ந்து இக்கொள்கையைப் பரப்பியவர்கள் இன்று நமது சொற்பொழிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக் கட்டையாக மாறியுள்ளனர். இயக்க வெறியும், பொறாமையும், குரோதக் கண்ணோட்டமும் இவர்களைத் தூண்டிவிட்டு குராஃபிகளுக்கு வேலையில்லாமல் இவர்களைச் சதி செய்ய வைக்கிறது.

குர்ஆன், ஹதீஸ் இந்த இரண்டை மாத்திரம் சொன்னால் தான் மக்கள் தம்மை அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்ந்துள்ள இவர்கள் ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் நம்மை வசை பாடுகிறார்கள். விதிவிலக்காக நல்லெண்ணத்துடன் நமது கருத்தை விமர்சிப்பவர்களும் இருக்கலாம்.

“அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லாத ஹதீஸாக இருந்தாலும் அதற்குச் சரியான எந்த ஒரு விளக்கமும் கொடுக்க இயலாத வகையில் அது குர்ஆனுடன் மோதுமானால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்ற அடிப்படையை நாம் கூறி வருகிறோம். இதன் அடிப்படையில் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை ஏற்கக் கூடாது என்று எழுதி வருகிறோம்.

இதை அங்கீகரிக்காதவர்கள் நாம் கூறிய இந்த அடிப்படை, யாரும் கூறாத ஒன்று; ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதியே இல்லை; மனோ இச்சைப்படி ஹதீஸை மறுப்பதற்காக இந்த வழிகளைத் திறந்து விடுகிறார்கள் என்று கூறி தங்களது அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.

விரலை ஒடித்தாலும் ஹதீஸைச் செயல்படுத்துவோம்; அவ்ஸில் தூக்கிப் போட்டாலும் ஹதீஸைச் செயல் படுத்துவோம்; தாய், தந்தையர் பேசாவிட்டாலும் பரவாயில்லை ஹதீஸ் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி நிரூபித்துக் காட்டிய இந்த ஜமாஅத்தைப் பார்த்து ஹதீஸை மறுக்கிறார்கள் என்ற அவதூறு இவர்களால் சமீபத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் வேரில்லாத மரம் என்பதைப் பின்வரும் சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆன் மனோ இச்சையைப் பின்பற்றச் சொல்கிறதா?

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16:44)

ஹதீஸிற்கும், குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இவ்வசனம் எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது.

அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் மட்டும் வரவில்லை; நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அவனிடமிருந்து வந்தவையே! இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் (53:4)

குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வராது. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அல்லாஹ்வின் கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (4:82)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் (41:42)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் இந்த முரண்பாடே அது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகி விடும். தன் பெயரால் அறிவிக்கப்படும் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் (1)

திருக்குர்ஆன் கூறும் இக்கருத்தைக் கூறிய நாம் மனோஇச்சையைப் பின்பற்றுவர்கள் என்றால் குர்ஆன் மனோஇச்சையைப் பின்பற்றச் சொல்கிறது என்ற மாபாதகக் கருத்தை இவர்கள் தங்களை அறியாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

நபித்தோழர்கள் ஹதீஸை மறுத்தார்களா?

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை; அதன் அடிப்படையில் செயல்படவுமில்லை என விமர்சனம் செய்கிறார்கள்.

ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் இந்த மேதைகள் ஹதீஸைப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம்! நாம் கூறும் இந்த அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை 

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்)என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பாத்திமா பின்த் கைஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் (2953)

அபூஇஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை என அறிவித்தார்கள்” (என்பது தான் அந்த ஹதீஸ். அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள், “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் பகிரங்கமான வெட்கக் கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்   (65:1) என்று  கூறியுள்ளான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)

நூல்: முஸ்லிம் (2963)

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்கு கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது; எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத்தன்மையில் உமர் அவர்கள் எள்ளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒருபோதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம்.

உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்டக் கூட்டத்தைச் சார்ந்தவர் என்றெல்லாம் இந்த ஹதீஸ் பாதுகாவலர்கள் (?) நம்மை விமர்சனம் செய்ததைப் போல் விமர்சனம் செய்வார்களா?

சுருக்கமாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது சரியா தவறா? என்ற ஆய்வுக்குள் செல்ல மாட்டோம். அந்தக் கருத்தை இதற்கு முன்னால் யாராவது சொன்னார்களா என்றே கேட்போம் என்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளைக் கூட நாம் இங்கு குறிப்பிடுவது, சஹாபாக்களின் நடைமுறைகள் மார்க்க ஆதாரம் என்பதற்காக அல்ல. முன்னோர்கள் யாராவது சொல்லியிருந்தால் தான் சரி என மத்ஹப் வாதிகள் சென்ற பாதையில் இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு முன்னோர்களும் நமது வழிமுறையை கடைபிடித்துள்ளார்கள் என்று உரைப்பதற்காகத் தான் இதைக் கூறுகிறோம். குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றும் கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் காட்டிய குர்ஆன் வசனமே நம்பிக்கை கொள்வதற்குப் போதுமானது.

குர்ஆனுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி முரண்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிப்பாகக் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக அந்தச் செய்தியை அறிவித்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து தான் தவறு ஏற்பட்டிருக்கும் என்ற இந்த நியாயமான கருத்தை  உமர் அவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஹதீஸ்களை நம் சமுதாயத்திற்குத் தந்த அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களும் முன் வைத்துள்ளார்கள்.

அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் “சகோதரரே! நண்பரே!எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? “இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று சொல்லி விட்டு, “அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53:43); ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார் (35:18) (என்று கூறும்) குர்ஆனே உங்களுக்குப் போதும்என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1694)

உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) “இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவிருத்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்க) “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதை செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.

(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80)

(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22) 

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1697)

உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, “பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப் பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் (ரஹ்)

நூல்: முஸ்லிம் (1693)

உமர் (ரலி) அவர்களும், அவர்களுடைய மகன் இப்னு உமர் அவர்களும் பிரபலமான நபித் தோழர்கள். குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆனிற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக “அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள்” என்று இவர்கள் சொல்ல முன்வருவார்களா? இவர்கள் முன்வந்தாலும் ஒரு போதும் நமது உள்ளம் அதை ஏற்றுக் கொள்ளாது. இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து “சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, “அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக “அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு “இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது” (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)

நூல்: அஹ்மத் (24894)

ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753, 5772 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. “வீடு, பெண், கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுனம் பார்க்கலாம்” என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம்.

இந்த மூன்று செய்திகளிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதைக் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் தான் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று நாம் கூறும் அடிப்படையில் நபித் தோழர்களும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காகத் தான் இந்தச் செய்திகளைக் கூறியுள்ளோம்.

ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

குர்ஆனைப் படிக்காத ஒருவர், “குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை’ என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் “அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது தான்’ என்று சொல்பவர்களைப் பார்த்து, “யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள்’ என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் யாரும் கூறாத கருத்து என்று இவர்கள் கூறுவதும் அறியாமை தான்.

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று, இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம்பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை. தெரிந்து கொண்டே மறைக்கிறார்களா? அல்லது அறியாமை இருளில் சிக்கித் தவிக்கிறார்களா?

இமாம் ஷாஃபியின் கூற்று

“ஒரு ஹதீஸ் நம்பத்தன்மையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா?” இமாம் ஷாஃபி அவர்கள், “கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438

இமாம் குர்துபீயின் கூற்று

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல்: தஃப்சீருல் குர்துபீ, பாகம்: 12, பக்கம்: 213

இமாம் ஜுர்ஜானியின் கூற்று

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113

இமாம் சுயூத்தியின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவதாகும்.

நூல்: அல்மனாருல் முனீஃப், பக்கம்: 80

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி: குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவது, அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

நூல்: நக்துல் மன்கூல், பாகம்: 2, பக்கம்: 218

இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல்: உசூலுஸ்ஸர்ஹசீ, பாகம்: 1, பக்கம்: 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை (நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.

நூல்: கஷ்ஃபுல் அஸ்ரார், பாகம்: 4, பக்கம்: 492

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.

நூல்: ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ், பாகம்: 2, பக்கம்: 368

இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று

“சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள்” என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார்.

நூல்: தர்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 277

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக் கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 275

அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல்: மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ், பாகம்: 1, பக்கம்: 62

விதியை செயல்படுத்திய மேதைகள்

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாமல் இருந்து ஆனால் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்ட ஹதீஸாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புகாரி, முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் அந்த ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் தவறு வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு நடந்து கொண்ட இந்த இமாம்கள் வழிகேடர்களா? ஹதீஸைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்களா? அல்லது அழிப்பதற்காகக் கிளம்பியவர்களா?

இமாம் இஸ்மாயீலீ

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்று சொல்லப்படும் அறிஞர். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்குப் பதிலாக இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸை எப்படிக் குறை காணுகிறார் என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் “நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்களின் தந்தை “இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் “இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெது (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது?” என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் “நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்என்று பதிலளிப்பான்.

பிறகு “இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார்:

அல்லாஹ் வாக்கு மீற மாட்டான் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படி எடுத்திருப்பார்கள்? “இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர்” என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 8, பக்கம்: 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹிம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர். மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹிம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை; மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது இப்படிக் கூறியுள்ளாரா? என்று கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் மத்ஹபை நோக்கி வந்த வழியே செல்லக் கூடியவர்களே! இப்போது உங்கள் உள்ளம் குளிர்ந்து விட்டதா?

இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்து பின்வருமாறு கூறுகிறார்கள்.

குர்துபீ கூறுகிறார்: மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70

ஹஜ் செய்வதற்கு சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் சம்பந்தப்பட்டப் பெண்மணி வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாகக் கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸை பின் தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானது என்பதில் நமக்கு மறுப்பில்றைலை, குர்ஆனுக்கு முரண்படாத வகையில் இதற்கு நாம் விளக்கம் தர முடியும்.  இளமையில் ஒருவருக்கு ஹஜ் கடறைமையாகி அதை நிறைவேற்றாமலே தள்ளாத வயதை அறைடைந்தால் அவர் மீது  இருந்த ஹஜ் செய்யும் கடமை நீங்காது என்பதை மாலிக் இமாம் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

குர்ஆனுக்கு நேரடியாக ஒரு ஹதீஸ் முரண்பட்டால்  குர்ஆனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நம்முடைய அடிப்படைக் கொள்கை தான் மாலிக் இமாம் அவர்களின் கொள்கையாகவும் இருந்தது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்க சரி தான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் பலரால் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது அவருக்கு அக்கறை இல்லை என்று பொருளா?

இமாம் இப்னு தைமியாவின் வழிமுறை

இப்னு தைமியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4997)

படைப்பின் துவக்கம் சனிக்கிழமையில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.

நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா, பாகம்: 4, பக்கம்: 34

வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக திருமறைக் குர்ஆன்  சொல்லும் போது இந்த ஹதீஸ் ஏழு நாட்களில் படைத்ததாகக் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தைமியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம். இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்ற வார்த்தை இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

  1. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும், ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். “தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்” (4:48 & 4:116)

மேலும், “தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான்.  அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39:53) என்றும் கூறுகிறான்.

நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தைமியா, பாகம்: 2, பக்கம்: 185

இப்னு தைமியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான்  இவ்வாறு அணுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொருத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.  உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்துப் பல செய்திகளை இப்னு தைமியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேலுள்ள ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தைமியாவை விட ஒரு படி மேலே சென்று “இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு” என்று கூறியுள்ளார்.

அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்து விட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இந்த ஹதீஸ் மொத்தம் ஏழுநாட்களில் படைத்ததாகக் கூறுகிறது.

இமாம் புல்கீனீயின் வழிமுறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பிவிடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.

அறிவிப்பவர்: அபஹுரைரா (ரலி),  நூல்: புகாரி (7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். இவர்களை யாரும் எவ்விதத்திலும் குறை காண முடியாது. மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது, “உமது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான்’ (18:49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38:85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவுசெய்துள்ளார்.

இமாம்களில் ஒரு கூட்டத்தினர் இதை மாற்றப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்கள்.  “நரகம் இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நிரம்பும்’ என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் “உமது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான்’ என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்:  13, பக்கம்: 437

இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அஸ்ஸஹீஹா, பாகம்: 6, பக்கம்: 39

அறிவீனர்களின் வழிமுறையல்ல; அறிஞர்களின் வழிமுறை

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள் என்ற தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.

நாய் மற்றும் மற்றவைகள் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்து விடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். “ஒருவன் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்’ (6:164) என்ற இறைவனது கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப், பாகம்: 3, பக்கம்: 342

இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்குப் பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் இந்த உண்மையை உரியவர்களுக்கு உணர வைப்பானாக!

———————————————————————————————————————————————–

அற்பத் தேனீயின் அற்புத ஆட்சி

அறிவியல் அற்புதங்கள்                                    தொடர்: 2

எம். ஷம்சுல்லுஹா

பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

அல்குர்ஆன் 6:38

என்று அல்லாஹ் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தமது இறக்கைகள் மூலம் பறந்து செல்லும் தேனீக்கள் உண்மையில் ஒரு வியக்கத்தக்க சமுதாயம் தான். மனிதன் உற்று நோக்க வேண்டிய உன்னத சமுதாயம்.

அறிவியல் அடிப்படையில் தேனீ பூச்சியினமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் இந்த வசனம், தரையில் வாழ்வன, ஆகாயத்தில் பறப்பன என்ற ரீதியில் தான் பிரித்துக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் ஆகாயத்தில் பறக்கும் இனமான தேனீ என்ற சமுதாயத்தைப் பற்றி நமது பார்வையைச் செலுத்துவோம்.

நாட்டுக்குள்  ஒரு குடியாட்சி

ஒரு நாடு என்றால் மக்கள் வாழ்வர். அம்மக்களுக்கென்று ஓர் ஆட்சி இருக்கும். அதை ஆள்வதற்கு ஓர் அரசன் அல்லது அரசி அல்லது ஆட்சித் தலைவர் இருப்பார். அவருக்கென்று அதிகாரம் இருக்கும். அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பார்கள். நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்கள் இருப்பார்கள். உள்நாட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்குத் தனி அதிகாரிகள், களப்பணியாற்றும் பணியாளர்கள் இருப்பார்கள்.

ஆட்சித் தலைவருக்கென்று கோட்டை, கொத்தளம் இருக்கும். அந்தத் தலைமைச் செயலக செங்கோட்டையிலிருந்து அவர் ஆட்சி செய்து கொண்டிருப்பார். ஆட்சித் தலைவர் தன் நாட்டைக் காப்பதற்காக ஆயுதங்களும் வைத்திருப்பார். போர் வீரர்களும் போர்க் கருவிகளைப் பெற்றிருப்பார்கள்.

அரசாங்கம் என்று ஒன்று இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான கருவூலங்களையும், மக்களுக்குத் தேவையான உணவுகளையும் காலம் காலம் காக்கின்ற உணவுக் களஞ்சியங்கள், நிதியாதாரங்களைக் காக்கின்ற வங்கிகள் போன்றவற்றை அந்த அரசாங்கம் தன்னகத்தே கொண்டிருக்கும்.

இதுவெல்லாம், தான் கண்டிருக்கும் சமூகக் கட்டமைப்பு என்று நாட்டுக்குள் வாழும் மனித சமுதாயம் தன்னைத் தானே மெச்சிக் கொண்டிருக்கின்றது. அடுக்கடுக்கான ஆட்சிக் கூட்டமைப்புகளை எண்ணிப் பார்த்து மனிதன் பெருமையடைந்து கொள்கிறான்.

கூட்டுக்குள் ஒரு குடியாட்சி

ஆனால் அல்லாஹ்வின் இந்த அற்புதப் படைப்பான தேனீயானது, மனிதன் கொண்டிருக்கும், இப்போது புதிது புதிதாகக் கண்டிருக்கும் நிர்வாக சீராட்சி, சிறப்பாட்சியை என்றோ கண்டிருக்கின்றது.

ஆட்சியின் அலுவல்களை, அதற்கான அமைச்சகங்களைப் பிரித்துப் பணியாற்றும் இந்த அற்புதக் கலையை தேனீக்கள் தாம் வாழ்கின்ற கூட்டுக்குள் கொண்டிருக்கின்றன. தேனீக்களின் கூட்டு வாழ்க்கைக்குள் கொஞ்சம் நாம் உள்ளே போய் வந்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.

தேனீக்களின் ராணி

தேனீக்களின் இந்தச் சமுதாயத்திற்கு ராணி இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை அன்றே கூறியிருக்கின்றார்கள்.

மழை பொழியுமாறு தஜ்ஜால் வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும். முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது முளைப்பிக்கும். பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள். பாழடைந்த இடத்திற்குச் சென்று, “உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்துஎன்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களின் ராணிகள் போன்று அவனைப் பின் தொடரும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின்  ஸம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம் 5228

இந்த ஹதீஸில் யஆஸிபி நஹ்ல் – தேனீக்களின் ராணிகள் என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தேனீக்கள் (கிளம்புவது) போல்… என்று சொல்லாமல், தேனீக்களின் ராணிகள் (கிளம்புவது) போல்… என்று குறிப்பிடுகின்றார்கள்.

ராணி தேனீக்கள் கிளம்பி விட்டால் மற்ற தேனீக்களும் கிளம்பி விடுகின்றன. ராணி தேனீக்கள் கிளம்பவில்லை என்றால் மற்ற தேனீக்கள் கிளம்புவதில்லை. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்றைய அறிவியல் உலகம் இதை உறுதி செய்கின்றது.

ராணித் தேனீயின் பணி

ராணித் தேனீயின் தலையாய பணி நிர்வாகம் தான். உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஒரு காரியம் உருப்பட வேண்டும் என்றால் உடையவன் இருக்க வேண்டும். தான் இருப்பதாக அவன் உணர்த்திக் கொண்டு இருக்க வேண்டும்.

வீட்டு நிர்வாகத்தில் வீட்டுத் தலைவன், தான் இருப்பதை பிள்ளைகளிடம் உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஆட்டம் தாங்க முடியாமல் வீடு அமர்க்களப்படும். இது போல் ஒரு நாட்டுத் தலைவன், தான் இருப்பதாக உணர்த்த வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும்.

சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் மாபெரும் ஆட்சியை வழங்கியிருந்தான். ஜின்களும் அவர்களுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. பைத்துல் மக்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டிருந்த போது சுலைமான் நபியவர்கள் இறந்து விடுகின்றார்கள். அவர் இறந்து விட்டது தெரியாமலேயே ஜின்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமேஎன்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:11-14

தங்களைக் கண்காணிக்க எவருமில்லை என்றிருந்தால் பணியாளர்கள் பணி புரிய மாட்டார்கள் என்ற உண்மையை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது. இந்தக் கண்காணிப்புப் பணியைத் தான் ராணித் தேனீ மிக அற்புதமாகத் தன் கூட்டுக்குள் செய்கிறது.

மக்களைக் கட்டுப்படுத்த மன்னர்களிடம் அதிகாரம் இருக்கின்றது. இந்த ராணியிடம் தனக்குக் கீழுள்ள தேனீக்களைக் கட்டுப்படுத்த, ஆட்சி செலுத்த என்ன இருக்கின்றது?

ஓர் ஆரோக்கியமான தேன் கூட்டில் மொய்த்து நிற்கும் தேனீக்களின் எண்ணிக்கை இருபதாயிரம் முதல் எண்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் ஆகும். இந்த அளவுக்கு உள்ள கூட்டத்தைத் தான் இந்த ராணித் தேனீ கட்டுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு கட்டுப் படுத்துவதற்கு ராணித் தேனீயிடம் என்ன உள்ளது? மாயக் கோலா? அல்லது மந்திரச் சொல்லா? இரண்டுமல்ல! மாறாக, டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்று சொல்லப்படும் வேதிப் பொருள் உள்ளது. இது திரவம் அல்லது ஆவி வடிவத்தில் வெளிப்படுகிறது. இதை வேதியியல் வாசனை அல்லது இரசாயன செய்தித் தூதர் என்று கூறலாம்.

தேனீக்கள் இந்தச் செய்தித் தூதுக்களை தங்களிடம் உள்ள ஆண்டெனா (தகவல் பெறும் உணர்வு இழைகள்) மூலமும் மற்ற உறுப்புகள் மூலமும் பெற்றுக் கொள்கின்றன.

இது தேனீயின் தலையிலிருந்து வாய்க்கு அருகில் தொங்குகின்ற தாடை சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. இது தான் ராணித் தேனீயின் செங்கோலாக செயல்படுகிறது. தேன் கூட்டின் சட்ட ஒழுங்கைக் காக்கும் கட்டுப்பாட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது. ராணித் தேனீக்கு உள்ள வேதியியல் பொருள் மற்ற தேனீக்களுக்கும் உண்டு. ஆனால் அந்தந்த தேனீயின் பணிக்குத் தக்க அமைந்து விடுகின்றது.

ஆனால் ராணித் தேனீயிடம் கிளம்புகின்ற இந்த வேதியியல் தூது கொஞ்சம் வித்தியாசமானது. இரு வகையானது.

ஒன்று தேனீக்களின் தற்காலிக மாற்றத்தையும் தாக்கத்தையும் தரக் கூடியது. உதாரணமாக தேன் கூட்டிற்குள் அந்நிய சக்திகள், மிருகங்கள், மனிதர்கள், பிற தேனீக்கள், குளவிகள் வந்தால் உடனே இரசாயன தூதுச் செய்தி ராணித் தேனீயிடமிருந்து மின்னல் வேகத்தில் பறக்கும்.

உடனே அந்த அந்நிய சக்திகள் தாக்கப்படுவார்கள். ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்பு செய்வதை விட்டும் எதிரிகள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது தற்காலிகமான தாக்கத்தைத் தரக் கூடிய இராசயன தூதுச் செய்தி ஆகும். இதை இங்ட்ஹஸ்ண்ர்ழ்ஹப் டட்ங்ழ்ர்ம்ர்ய்ங்ள் என்று குறிப்பிடப்படுகின்றது.

மற்றொன்று நிரந்தர தாக்கத்தைத் தரக் கூடியது.

தன்னுடன் பாட்டாளித் தேனீக்களை இனச் சேர்க்கைக்கு அழைப்பது, தேன் கூட்டைப் பராமரிப்பது, பாட்டாளித் தேனீக்களை சுயமாகக் கருவுற்று இனப்பெருக்கம் செய்யாமல் தடுத்து, தான் மட்டுமே இனப் பெருக்க சக்தியாக இருக்கும் ஏகபோக உரிமையைத் தக்க வைப்பது போன்ற காரியங்களை இந்த வேதியியல் திரவம் அல்லது ஆவியின் மூலம் செய்து தேன் கூட்டை நிர்வகித்து வருகின்றது.

மொத்தத்தில் இனச் சேர்க்கை, எச்சரிக்கை, பாதுகாப்பு, உணவு உற்பத்தி, இலட்சக்கணக்கில் வாழும் தேனீக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் போன்ற மனித சமுதாயத்திற்கு அறைகூவல் விடுக்கும் அரியணை ஆட்சியை ராணித் தேனீ நடத்துகின்றது.

இதனால் தான் அல்லாஹ் இந்தத் தேனீயைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற வகையில் அத்தாட்சி மிக்க அற்புதப் படைப்பாகப் படைத்திருக்கிறான். இந்த வகையில் தேனீக்கள் மனித சமுதாயத்தை விஞ்சி நிற்கின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————-

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்                  தொடர் – 4

ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 60:10

இந்த வசனத்தில் இணை வைப்பவர்களிடமிருந்து விலகி சத்தியத்தின் பக்கம் வந்த பெண்களை மீண்டும் அந்த இணை வைப்பாளர்களிடம் அனுப்பி விடாதீர்கள்; இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று அல்லாஹ் கூறுகின்றான்.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தம் இல்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் 24:26

நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்குத் தகுதியானவர்கள்; கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்குத் தகுதியானவர்கள் என்று இந்த வசனத்தில் கூறுகிறான்.

இந்த இறைக் கட்டளையை நாம் ஏற்றுச் செயல்படுகிறோமா? இல்லை. அதனால் தான் இணை வைப்பிலிருந்து மீண்டு, ஏகத்துவத்திற்கு வந்த பெண்களை விட்டு விட்டு, எந்தப் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று இறைவன் கூறுகின்றானோ அந்த இணை வைக்கும் பெண்களைத் தேடிச் செல்கிறோம்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், ஏகத்துவ மாப்பிள்ளைக்காக காத்திருந்து முதிர் கன்னிகளாகி, ஊராரின் இழி சொற்களுக்கு ஆளாகி, கடைசியில் இறைவன் தடை செய்துள்ள கெட்ட ஆண்களிடத்தில் அந்த நல்ல பெண்கள் போவதற்குக் காரணமாக நாம் ஆகி விடுகின்றோம்.

60:10 வசனம் இறங்கியதும் உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான இரண்டு மனைவியரை விவாகரத்துச் செய்தார்கள். “இணை வைக்கக் கூடியவர்கள்; இவர்களுடன் வாழ்வதை இறைவன் தடை செய்துள்ளான்” என்று கூறி தன்னுடைய மனைவியரை தலாக் விட்டார்களே அந்த உமர் (ரலி) அவர்களிடம் இருந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? இல்லை.

அந்த உறுதி நம்மிடம் இருந்தால், மார்க்கம் என்று வருகின்ற போது சொந்தம், பந்தம் எதுவும் வேண்டாம்; நீ வேறு, நான் வேறு என்று கூறி, இணை வைக்கும் பெண்களைப் புறக்கணித்து விட்டு ஏகத்துவப் பெண்களைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஏகத்துவப் பெண்களும் தேங்கிக் கிடக்க மாட்டார்கள்.

ஏகத்துவ வாதிகள் என்று சொல்லிக் கொண்டு, இணை வைக்கும் பெண்களை சிலர் திருமணம் செய்கிறார்கள் என்றால், வேறு சிலர் அழகும், செல்வமும், குலப் பெருமையும் உள்ள பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏகத்துவக் கொள்கையுடைய பெண்களைத் தான் திருமணம் செய்வோம் என்று கூறிக் கொண்டு, மேற்கண்ட நிபந்தனைகளை இடுகின்றனர்.

நாங்களும் ஏகத்துவ வாதிகள் தான். பத்து, பதினைந்து வருடங்களாக ஏகத்துவத்தில் இருக்கிறோம் என்று கூறுவார்கள். மேலும் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் கூறுவார்கள். ஆனால் தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் என்று வந்து விட்டால் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் மணப் பெண்ணைத் தேர்வு செய்வார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது, அவள் நல்லவளா? பண்புள்ளவளா? மார்க்கப் பற்றுள்ளவளா? என்று கவனிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக
  2. அவளது குடும்பத்திற்காக
  3. அவளது அழகிற்காக
  4. அவளது மார்க்கத்திற்காக

மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

அழகு, செல்வம், குடும்பப் பாரம்பரியம், மார்க்கம் ஆகிய    நான்கு நோக்கங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள் எனவும், மார்க்கப் பற்றுள்ளவளை மணப்பவரே வெற்றியடைபவர் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர், பெண்ணைத் தேர்வு செய்யும் போது, பண்பானவளா? மார்க்கப் பற்றுள்ளவளா? என்று பார்ப்பதில்லை. மாறாக, நம்முடைய குடும்ப அந்தஸ்துக்கும், பாரம்பரியத்திற்கும் தகுதியானவளா? நல்ல அழகுள்ளவளா? தண்ணீர் குடித்தால் அது தொண்டையில் இறங்குவது தெரியும் அளவுக்கு நிறமுடையவளா? என்றெல்லாம் பார்க்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் எங்கள் ஊரில் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் பெண் வீட்டாரிடம், “நான் மஹர் கொடுத்து உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்கிறேன்; சீர் எதுவும் தர வேண்டாம்’ என்று கூறியுள்ளார். அந்தப் பெண் ஏகத்துவக் கொள்கை உடையவள் இல்லை. முழுக்க முழுக்க இணை வைப்பில் மூழ்கிய பணக்கார வீட்டுப் பெண். மாப்பிள்ளை வீட்டாரோ தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மஹர் கொடுத்து, சீர் வரிசைகள் வேண்டாம் என்று கூறி இணை வைப்பில் உள்ள இந்த பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவளது செல்வம் தான்.

இது ஓர் உதாரணம் தான். இன்னும் எத்தனையோ பேர் அழகையும் செல்வத்தையும் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள். அதைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், மணந்தால் ஏகத்துவ மாப்பிள்ளையைத் தான் மணப்பேன்; இல்லையேல் காலம் முழுவதும் கன்னியாகவே இருப்பேன் என்ற கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள். இந்தப் பெண்களை நீங்கள் புறக்கணிப்பதற்குக் காரணம் இவர்களிடம் அழகில்லை; அழகு இருந்தாலும் செல்வம் இல்லை என்பதால் தானே!

மஹர் கொடுத்து, பணக்காரப் பெண்ணைத் தேடிச் சென்று திருமணம் செய்வதற்குக் காரணம், நாம் கேட்கவில்லை என்றாலும் பெண்ணுக்குத் தாங்களாக நகை போடுவார்கள்; பிற்காலத்தில் சொத்து கிடைக்கும். சொந்த பந்தங்களைப் பகைத்துக் கொண்டு, அல்லாஹ்வுக்காக மட்டுமே காத்திருக்கும் இந்தப் பெண்களை மணந்து கொண்டால் என்ன சொத்தா கிடைக்கப் போகின்றது?

அன்று சத்திய மார்க்கத்திற்காக பிறந்த ஊரை விட்டு, தங்கள் தாய், தந்தையரை, மனைவி மக்களை, சொத்து சுகம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, எதுவுமே இல்லாத ஏழைகளாக ஹிஜ்ரத் செய்தார்களே! அந்த சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளை ஒவ்வொரு மேடைகளிலும் கேட்கும் நீங்கள் அந்த வரலாறுகளிலிருந்து படிப்பினை பெற்றீர்களா? அவ்வாறு படிப்பினை பெற்றிருந்தால் இன்று அழகிற்கும், செல்வத்திற்கும், குலப் பெருமைக்கும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்களா?

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்!

வளரும் இன்ஷா அல்லாஹ்