தலையங்கம்
மாநாடு தரும் படிப்பினை
ஹுனைன் போர்க்களம் உதவாத மக்கள் பலம்
இந்து நாளேட்டைப் போலவே தந்தி டிவியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நல்ல பெயர் தங்கள் செய்திகளில் மருந்துக்குக் கூட வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். அப்படிப் பட்ட தந்தி டிவியில் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தே ஆட்சிக்கு வந்தாலும் நாளை கோட்டையில் பறக்கப் போவது தேசியக் கொடி தான்” என்று ஒரு விவாதக் களத்தின் போது நெறியாளர் ஹரி குறுக்கே விழுந்து குறிப்பிட்டார்.
“சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீது கூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும், பெருமாளையும், சுடலைமாடனையும், முனியாண்டி யையும், இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” என்று அவரிடம் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.
இது யாருடைய வார்த்தைகள் என்கிறீர்கள்? நம்முடைய மாநாடு முடிந்த பின் பிப்ரவரி 4 அன்று நமக்கு எதிராக நச்சுக் கருத்துகளை தமிழ் இந்து நாளேட்டில் விதைத்து இணைய தளங்களிலும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்ட சமஸின் வார்த்தைகள்!
இந்த நாட்டில் அரசியல் தளத்திற்குக் களம் அமைப்பது மக்கள் சக்தி தான்! ஓர் அரசியல் கட்சியை அரியணையில் ஏற்றுவதற்குரிய, பிரமிக்க வைக்கின்ற பிரமாண்டமான அத்துணை பெரிய மக்கள் சக்தி திரண்டதால் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் எழுத்தளவிலும், வார்த்தையளவிலும் அவர்களை அறியாமலேயே வடிவெடுக்கின்றன.
இந்த ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொண்ட வேகத் தடைகளையும் வேகக் கட்டுப்பாடு களையும் தாண்டி வார்த்தைகள் வெளியே புறப்பட்டு வந்து வெடித்துச் சிதறுகின்றன.
இதில், தவ்ஹீத் ஜமாஅத் ஆட்சியை கனவிலும் கற்பனையிலும் நினைத்து பார்க்காத தூரத்தில் நிற்கும் ஜமாஅத்தாகும். அப்படியிருந்தும் நாம் உச்சரிக்காத ஆட்சி, அதிகாரம், அரியணை, கோட்டை, கொடி என்ற அரசியல் அகராதியின் மந்திர உச்சாடணங்களை இவர்கள் ஓங்கி ஒலிப்பதற்குரிய காரணம் என்ன?
கூடிய மக்கள் கூட்டம் நாம் கூடிய விரைவில் கோட்டைக்குப் போய் விடுவோமோ என்ற தோற்றத்தை இவர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த அளவுக்கு வந்து குவிந்த மக்கள் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி அமைந்துள்ளது என்பதைத் தான் இது தெளிவாகத் தெரிவிக்கின்றது.
உண்மையில், இந்தக் கூட்டத்தைக் கண்டு எல்லா இணை வைப்புக் கூடாரங்களும் அரண்டும் மிரண்டும் போயிருக்கின்றன. அவர்களிடத்தில் இதன் பிம்பமும், பிரம்மாண்டமும் அதிர்வலைகளைப் பதிய வைத்திருக் கின்றன என்றால் அதை மறுக்க முடியாது.
திருச்சி, பிராட்டியூர் திடல் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டது. அந்தத் திடலை தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்து துணிந்து எடுத்தது. இது தவிர அந்தத் திடலை ஒட்டியுள்ள இன்னும் பல ஏக்கர் நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் கேட்டுப் பெறப்பட்டதால் முன்னூறு ஏக்கராக ஆனது.
பொதுவாக இது போன்ற திடலை எடுப்பதற்கும் இந்தப் பணியை மேற்கொள்வதற்கும் ஒரு துணிவும் மனவலிமையும் வேண்டும். அத்தகைய துணிவையும், மன வலிமையையும் அல்லாஹ் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அளித்தான். அந்த வகையில் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் அம்மாபெரும் திடலில் மக்கள் குழுமுவார்களா? கூடுவார்களா? என்ற தயக்கமும், கலக்கமும் யாருக்கும் வரத்தான் செய்யும். அது போல் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டது. ஆனால் உள்ளுக்குள் ஒரு தன்னம்பிக்கை இருந்தது. இது போன்ற தைரியமும், தன்னம்பிக்கையும் வேறெந்த ஜமாஅத்திற்கும் இயக்கத்திற்கும் வராது என்பதை இங்கு அடக்கத் துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்லாஹ் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப மக்களை அலைகடலாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
இதுபோன்று பரந்து விரிந்து கிடக்கும் திடல்களில் மாநாடு என்ற பெயரில் அதிலும் குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத்தைப் போன்று பெரும் எதிர்ப்புகளுக்குடையே நடத்தும் போது மக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்குமானால், ஒரு வட்ட தட்டின் மத்தியில் கிடக்கும் சோழப் பொறிகள் போன்று அது காட்சியளித்திருக்கும். எதிரிகள் காரித் துப்பியிருப்பார்கள். அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
அது மட்டுமல்லாமல், பொதுவாக பொதுக்கூட்டம், மாநாட்டுத் திடல்கள் நாற்காலிகளால் நிரப்பப்படும்! ஆனால் தவ்ஹீது ஜமாஅத் நடத்திய இந்த மாநாட்டுத் திடலில் மக்களுக்காக நாற்காலிகள் போடப்படவில்லை. மக்கள் தாங்கள் கொண்டு வந்த விரிப்புகளிலும் பெரும்பாலும் வெறும் புல் தரைகளிலும் தான் அமர்ந்திருந் தார்கள். காணுமிடமெல்லாம் மனிதத் தலைகள்! மக்கள் அலைகள்! அந்த அளவுக்கு பிராட்டியூர் திடல் பிதுங்கி வழிந்தது.
இதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நாவால் மட்டுமல்லாமல் நம்முடைய கொள்கை உறுதிப்பாட்டின் மூலமும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில் இது நம்முடைய உள்ளங்களில் மமதையையும் மயக்கத்தையும் தந்து விடக் கூடாது. அவ்வாறு தந்து விட்டால் அது தான் நாம் வீழ்ந்து அழிந்து போகக் கூடிய அதள பாதாளமாகும்; அழிவுப் பாதையாகும்.
தமுமுகவில் நாம் இருந்த போது, 2004, மார்ச் 21 அன்று தஞ்சையில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து நமது பங்காளிகள் நாசமாகிப் போனார்கள். அதில் உள்ள அதிகமான மேல்மட்ட, கீழ்மட்டப் பொறுப் பாளர்கள் ஏகத்துவக் கொள்கைவாதி களாகத் தான் இருந்தார்கள். அவர்கள் தான் இந்த மக்கள் கூட்டத்தைக் கண்டதும் மனம் மாறியும், தடம் மாறியும் போனார்கள்.
இறுதியில், அரசியல் வேண்டாம்; அது கொள்கையை அழித்து விடும் என்று அறிவுரையும், அறவுரையும் சொன்ன தவ்ஹீது ஜமாஅத்தை அழிக்கின்ற பாதையில் களமிறங் கினார்கள். அதில் படுதோல்வி கண்டார்கள்.
இன்று பதவிக்காக நடுத்தெருவில் சண்டை போட்டு நாறி நிற்கின்றார்கள். இது தேர்தல் காலம். எந்த அரசியல் கட்சியும் இவர்களை ஏறெடுத்துப் பார்க்காத ஏதிலிகளாக, நாற்காலிக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாதியற்றவர்களாக வீதியில் அலைகின்றார்கள். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கேலி, கிண்டலுக்கு ஆளாகி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
இந்த இழிநிலை ஏன்? கேவலம் ஏன்? தஞ்சைப் பேரணியில் கூடிய கூட்டம் தான் அவர்களை இந்த அதள பாதாளத்தில் கொண்டு போய் தள்ளியது.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்கள் சக்தியைக் கண்டு ஏமாந்து நாசமாய் போன கூட்டத்திற்கு உதாரணம் காட்டுவதற்காக வரலாற்று பாதையில் நீண்ட, நெடிய பயணம் செய்யத் தேவையில்லாத அளவுக்கு நம் கண் முன்னாலே நான்கு அடிகள் எடுத்து வைத்ததும் நன்றாகத் தெரியக் கூடிய அருமையான பாடமாகவும், ஆவணப் படமாகவும் இவர்கள் அமைந்து விட்டார்கள் என்பதற்காகத் தான்!
அதனால் தான் தமுமுக, தவ்ஹீது ஜமாஅத் பிளவுக்குப் பிறகு நமக்குக் கூட்டம் கூட ஆரம்பித்ததும் ஏகத்துவம் மாத இதழ் அலறி அடித்துக் கொண்டு, பதறித் துடித்துக் கொண்டு, இந்த மக்கள் போதைக்கு நமது ஜமாஅத் அதற்கு ஆட்படக் கூடாது; அதற்கு அடிமைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது அபாய மணி அடித்திருக்கின்றது.
ஏகத்துவத்தின் அபாய மணி: 1
நமது ஜமாஅத் 2005, பிப்ரவரி 6 அன்று விழுப்புரத்தில் நடத்திய நான்காவது செயற்குழுவை ஒட்டி, “கொடி தூக்கும் கழகமல்ல; கொள்கை காப்பகம்’ என்ற தலைப்பின் கீழ் மார்ச், 2005 ஏகத்துவம் தந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கீழே தருகிறோம்.
இறை உதவியா? எண்ணிக்கையா?
இன்று இறைவனின் அருளால் நமது ஜமாஅத் தமிழகத்தில் தனியொரு சக்தியாக உருவெடுத்து வருகின்றது. “தவ்ஹீதுவாதிகள், உங்களை முஷ்ரிக் என்று கூறுகின்றார்கள்’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்தும் நாம் நடத்தும் போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்கள் வெள்ளமெனப் பாய்கின்றனர்.
நாம் நடத்தும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களில் கடல் போல் மக்கள் கூட்டம் வருவதும், மற்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் கடல் போல் திடல் காலியாகக் காட்சியளிப்பதும் நம்முடைய உள்ளங்களில் ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணி விடக் கூடாது. இந்த விஷயத்தில் நம்முடன் கடுகளவு கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உயர்ந்த சமுதாயமான நபித்தோழர்களுக்குக் கூட அல்லாஹ் உரிய பாடத்தைப் படித்துக் கொடுக்கத் தவறவில்லை.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்க வில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
(அல்குர்ஆன் 9:25)
உயர்ந்த, உறுதி மிக்க சமுதாயத்தையே அல்லாஹ் இப்படி வாட்டி விடுகின்றான் எனும் போது நாம் எம்மாத்திரம்?
எனவே, இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்பது போன்ற மமதையான வார்த்தைகள் எள்ளளவு கூட, மறந்தும் வாயிலிருந்து வந்து விடக் கூடாது.
இந்த எண்ணம் வந்து விட்டால் நாம் அழிவுக்கு ஆளாகி விடுவோம். அல்லாஹ் காப்பானாக! நாம் வளர்த்த இயக்கம் அழிவுப் பாதைக்குப் போனதற்கு இதுதான் காரணம் என்பது நம் கண் முன்னால் கண்ட உண்மையாகும்.
எனவே இறை உதவி என்பது எண்ணிக்கை அடிப்படையில் வருவதல்ல. உறுதியான ஈமானின் அடிப்படையில் வருவதாகும். இதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். (ஏகத்துவம் மார்ச், 2005)
அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத் கண்ட மக்கள் வெள்ளப் பெருக்கு கும்பகோணத்தில் ஜனவரி 29, 2006 அன்று நடந்த இடஒதுக்கீட்டிற்கான பேரணி, மாநாட்டின் போதாகும். அப்பேரணி மாநாட்டின் பிரம் மாண்டத்தை விளக்கிய பின்னர் ஏகத்துவத்தில் வெளியான தலையங் கத்தின் ஒரு பகுதியை இப்போது பார்ப்போம்.
ஏகத்துவத்தின் அபாய மணி: 2
காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம்! “பேரணி துவங்குமிடம்’ என்ற ஒரு முனையிலிருந்து “முடியும் இடம்’ என்ற மறு முனை வரையிலும் பெண்கள் கூட்டம் நிறைந்து, அதன் பிறகு ஆண்கள் பேரணி என ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பேரணி நிறைவடையாத நிலையில் பாதிப் பேர் நேரடியாக மாநாட்டுத் திடலுக்கே வரும் நிலை! இன்னும் பல பேருந்துகளிலிருந்து மக்களை இறங்க விடாமல் காவல் துறையினர் திருப்பியனுப்பிய சம்பவமும் நடந்தேறியது.
“நான் ஒன்றரை மணிக்கு பேரணி புறப்படும் இடமான அசூர் பைபாஸ் சாலைக்கு வந்தேன். இரவு 12 மணிக்குத் தான் மாநாட்டு மேடையைப் பார்த்தேன்” என்று ஆதங்கப்படுகிறார் ஒரு சகோதரர்.
அப்பப்பா! எவ்வளவு விஷமப் பிரச்சாரங்கள்! எத்தனை அவதூறுப் பிரசுரங்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே, அதன் தோற்றத்திலேயே போலிப் பிரசுரங்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முகவரியிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு கள்ளக் கடிதங்கள் என்று இவர்கள் பின்னிய சதி வலைகளைப் பிய்த்தெறிந்து விட்டுப் பாய்ந்து வந்த மனித அலைகள் உண்மையில் கும்ப கோணத்தைக் குலுக்கி விட்டது.
இறுதிக்கட்ட முயற்சியாக மாநில நிர்வாகிகளின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை அனுப்பி, பீதியைக் கிளப்பி, மீடியாக்களைத் திசை திருப்பினார்கள்.
மதுவை மிஞ்சிய மக்கள் போதை
மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் ஏற்படும் போதை மதுவை விட மிஞ்சி, மயக்கத்தைத் தர வல்லது. அல்லாஹ் காப்பானாக!
இந்த எண்ணம் நாம் நெருங்க முடியாத இடத்தில் இருந்த நபித் தோழர்களிடம் கூட தலை காட்டியுள்ளது. இதை அல்லாஹ் தனது திருமறையில் கண்டிக்கின்றான்.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்க வில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
(அல்குர்ஆன் 9:25)
அவனது அருள் இன்றி, அதிக எண்ணிக்கை மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, வேறு எதையும் சாதித்து விடாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
இந்த வசனம் தரும் பாடம், அல்லாஹ் வெற்றியைத் தருவதற்கு எண்ணிக்கை ஒரு கருவியல்ல! கொள்கை தான்! உறுதிமிக்க ஏகத்துவக் கொள்கை தான்! இதற்காகத் தான் அல்லாஹ் வெற்றியை அளிக்கின்றான் என்பதைக் கணக்கில் கொண்டு நமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 110வது அத்தியாயம்)
கூட்டம் நிறைந்து வழியும் போது, அடக்கத்துடன் புனிதன் அல்லாஹ் வைப் போற்றிப் புகழ்ந்து அவனிடம் பாவ மன்னிப்புக் கோருவோமாக! (ஏகத்துவம், பிப்ரவரி 2006)
இது நாம் குடந்தையில் கண்ட மக்கள் வெள்ளத்திற்குப் பிறகு ஏகத்துவம் இதழின் தலையங்கத்தில் அடித்த அபாய மணியாகும்.
இப்படி 2006 விழுப்புரம் செயற்குழுவிலிருந்து தற்போதைய பொதுக்குழு வரையிலான நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத் கண்ட உறுப்பினர்கள் வளர்ச்சி…
அதுபோல், 2006 குடந்தை பேரணி முதல் சென்னை தீவுத்திடலில் (ஜூலை 4, 2010) நடந்த இட ஒதுக்கீட்டு கோரிக்கைப் பேரணி வரையில் தவ்ஹீத் ஜமாஅத் கண்ட மக்கள் சக்தியின் வளர்ச்சி…
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் 2008, மே 10. 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு முதல் தற்போது திருச்சியில் (2016, ஜனவரி 31) நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு வரை…. தவ்ஹீத் ஜமாஅத் கண்ட வளர்ச்சி பன்மடங்கு, பன்மடங்கு என்றால் அது மிகையல்ல!
இது நம்மிடத்தில் தடுமாற்றத் தையும், தடமாற்றத்தையும் கொண்டு வந்து விடக்கூடாது என்று இப்போதும் அதே வசனங்களைச் சொல்லி ஏகத்துவம், அதே அபாய மணியை அடிக்கின்றது.
இந்தக் கொள்கையின் பக்கம் வந்த மக்கள் சில கோடி என்றால் வரவேண்டிய மக்கள் இன்னும் பல கோடி இருக்கிறார்கள்.
இதை எண்ணிப் பார்த்தால் நாம் செல்ல வேண்டிய பயண தூரம் இன்னும் பல்லாயிரம் மைல்கள் ஆகும். அதை நினைத்து முன்பைக் காட்டிலும் நமது அழைப்புப் பணியை இன்னும் வேகப்படுத்துவோமாக! விரைவு படுத்துவோமாக!
—————————————————————————————————————————————————————-
இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
இறைவனால் மன்னிப்பு வழங்கப் படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும்.
அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான்.
மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான்.
ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான்.
இணைவைப்பை இல்லாதாக்கு வோம் என முழக்கத்துடன் தனது பயணத்தைத் துவக்கிய ஏகத்துவம் இதழ், இதுநாள் வரை இணைவைப்பு குறித்து பல கோணங்களில் மாறுபட்ட தகவல்களை வாசகர்களுக்கு வழங்கியிருக்கின்றது.
இப்போது ஓர் புதிய நினைவலையாக இணைவைப்பிற்கான காரணிகளை இஸ்லாம் எப்படி தடை செய்கின்றது என்பதை அறியத் தருகிறோம்.
எந்தெந்த வாசல் வழியாக வெல்லாம் இணைவைப்பு எனும் நச்சுக்கிருமி நுழைய முயலுமோ அத்தகைய வாசல்கள் யாவற்றையும் நச்சென இஸ்லாம் மூடி வைத்துள்ளது.
எந்த வகையிலும் இணைவைப்பு மக்களிடம் நுழைந்து விடாமலிருக்க இஸ்லாம் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.
இணைவைப்பின் பக்கம் கொண்டு செல்லும் செயல் எதுவாக இருந்தாலும் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற அடிப் படையில் இஸ்லாம் இணைவைப்பின் காரணிகளைத் தடை செய்துள்ளது.
இஸ்லாம் தடை செய்திருக்கிற சில விஷயங்களை நுணுக்கமாக அணுகும் போது அதன் வழியாக இணை வைப்பு நுழைய வாய்ப்புண்டு என்பதாலேயே அவை தடுக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம்.
எல்லையற்ற புகழ்மாலை
யாரையும் வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இறைத்தூதர்களாகவே இருந் தாலும் வரம்புமீறிப் புகழ்வது பாவம் என்று மார்க்கம் எச்சரித்துள்ளது.
“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ் வின் அடியார்‘ என்றும் “அல்லாஹ் வின் தூதர்‘ என்றும் சொல்லுங்கள்‘ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 3445
இறைத்தூதர்களை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்ற தடையின் பின்னணியில் என்ன உள்ளது என்று பார்த்தால், அது இணைவைப்பிற்கு அழைத்துச் சென்று விடும் என்கிற அபாயம் தான் காரணம் என்பதைப் புரியலாம்.
முதலில் சாதாரணமாகப் புகழ ஆரம்பிப்பவர், பிறகு படிப்படியாக புகழ் சூட்டுவதை அதிகரிப்பார். முடிவில் இறைவனின் அந்தஸ்தை மனிதருக்கு வழங்கி புகழ ஆரம்பித்து விடுவார்.
நபிகள் நாயகம் காலத்திலேயே இது போன்று நடந்துள்ளது என்பதை வரலாற்றில் காண்கிறோம்.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 4001
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறைவானவற்றை அறிபவர் என்று சிறுமி புகழும் போது நபிகள் நாயகம் அதைக் கண்டித்து இவ்வாறு இனி கூறாதே என்று எச்சரிக்கின்றார்கள்.
வரம்பு மீறிப் புகழ ஆரம்பிக்கும் போது இப்படித்தான் இறைவனின் அந்தஸ்துகள் வழங்கப்பட்டு புகழ்பாடும் சூழல் ஏற்பட்டு விடும்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் காலத்தில் கிரகணம் ஏற்பட்ட போது நபியின் மகனது இறப்பிற்காகத் தான் கிரகணம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.
தனது மகனின் இறப்பிற்காக கிரகணம் ஏற்படுகின்றது என்று மக்கள் பேசிக் கொள்ளும் போது இந்தப் புகழ் தனக்குச் சேர்வதையும் நபிகள் நாயகம் கண்டித்தார்கள்.
தான் பெரும் சோகத்தில் இருந்த போதிலும் மக்களின் இந்தப் பேச்சு, புகழ்மாலை இணைவைப்பிற்கு அழைத்துச் சென்று விடும் என்பதை மக்களுக்கு உணர்த்த நபிகள் நாயகம் தவறவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற் பட்டது” என்று பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும், எவரது பிறப்புக் காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)
நூல்: புகாரி 1043
இறைத்தூதர்களையே இவ்வாறு புகழக் கூடாது என்றால் மற்றவர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
இன்றைக்கு இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாவங்கள் பெரும்பாலும் எல்லை மீறிப் புகழ்வதினாலேயே ஏற்படுகின்றன.
மவ்லித், மீலாது என்ற பெயரில் படிக்கப்படும் பாடல்கள் அத்தனையும் நபிகள் நாயகத்தையும், மற்ற சாதாரண மனிதர்களையும் இறைவனுக்குச் சமமாக்கும் இணைவைப்பைத் தாங்கியே நிற்கின்றன.
எல்லை மீறிப் புகழ்வதே இத்தகைய இணைவைப்பிற்கு அழைத்து வந்தது என்பதை ஏனோ மக்கள் உணர்வதில்லை.
இதனாலே இணைவைப்பின் வாசலான எல்லை மீறிப்புகழ்வதை இஸ்லாமிய மார்க்கம் தடுக்கின்றது.
எல்லை மீறிய மரியாதை
பெரியோர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை மரியாதை என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் நிற்க வேண்டும். வரம்பைத் தாண்டியதாய் அமைந்து விடக்கூடாது.
மரியாதை என்பது அதன் வரம்பைத் தாண்டும் கட்டமானது நம்மை இணைவைப்பை நோக்கி இழுத்துச் செல்லும் அபாயகரமான கட்டம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லை மீறிய மரியாதை என்பது இணைவைப்பின் ஓர் வாசலாக இருப்பதால் தான் மார்க்கம் இந்த வாசலையும் அடைத்து வைக்கின்றது.
மரியாதை என்ற பெயரில் அளவு கடந்து போகக் கூடாது என்றும், அதுவும் இணைவைப்பின் பக்கம் நம்மை அறியாமல் கடத்தி விடும் என்றும் மார்க்கம் போதிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மக்கள் மரியாதை தர விரும்பி எழுந்து நிற்பார்கள். அதை நபிகள் நாயகம் வேண்டாமென தடுத்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறே) தொழுதோம். அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற, அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நாங்கள் நின்றவாறு தொழுது கொண்டிருந் தோம். உடனே எங்களையும் உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள். உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அவர்கள் சலாம் கொடுத்(து தொழுகையை முடித்த)ததும், “நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்து கொள்ளப் பார்த்தீர்கள். அவர்கள் தாம் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்கும் போது நின்றுகொண்டு இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் நின்று தொழு தால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 701
நபிகள் நாயகம் இதைத் தடுக்கக் காரணம் இன்று எழுந்து நிற்பதில் ஆரம்பிப்பார்கள், பிறகு இன்னும் கொஞ்சம் மரியாதையை அதிகப்படுத்த சற்று குனிவார்கள், பிறகு தரையில் தலை படுமளவு குனியவும், அடுத்து குப்புறப்படுத்து காலில் விழவும் ஆரம்பித்து விடுவார்கள்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. எனறாலும், அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: அஹ்மது 12068
எழுந்து நிற்பதைத் தடுத்த போதிலும் மக்கள் நபியின் காலில் விழ எத்தனித்தார்கள். அதற்காக நபியிடமே அனுமதி கோரினார்கள்.
நபிகள் நாயகத்திற்கு மரியாதை செய்யும் விதமாகக் காலில் விழலாமா என்று மக்கள் கேட்டபோது வன்மையாக அதைக் கண்டித்தார்கள்.
ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா (காலில் விழுவது) செய்யும்படி கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு மனைவி ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளை யிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 1079
தனக்கு எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்ததிலிருந்து யாரும் யாருக் காகவும் எழுந்து நின்று மரியாதை செய்தல் இஸ்லாத்தில் கூடாது என்பதை அறியலாம்.
மக்கள் தனக்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்புவர் நரகை அஞ்சிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்கள்.
“தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ, அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.
நூல்: அபூதாவூத் 4552
தனக்காக எழுந்து நிற்கவேண்டும் என்று முதலில் விரும்புவார். பிறகு தன் காலில் மக்கள் விழ வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.
நபியவர்களின் கண்டிப்பும், மக்களின் நடைமுறையும் இது இணைவைப்பின் வாசலே என்பதைச் சந்தேகமற உணர்த்திவிடுகின்றது. அதனாலேயே மார்க்கம் இதைத் தடுத்து, அணைபோட்டு வைத்துள்ளது.
நல்லோர்களின் உருவப்படம்
நல்லடியார்களின் உருவப் படங்களை வரைதலையும், அவர் களுக்குச் சிலை வடிப்பதையும் இஸ்லாம் அறவே தடை செய்கின்றது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை மனிதர்களிலேயே மிக மோசமானவர்கள் என்று மார்க்கம் வர்ணிக்கின்றது.
அபிசீனிய நாட்டில் தாம் கண்ட “மரியா‘ என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே “நல்ல அடியார்‘ அல்லது “நல்ல மனிதர்‘ ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி விடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடு வார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 434
நல்லடியார்களின் பெயரில் உருவப் படங்களை வரைவதும், சிலை வடிப்பதும் கண்டிப்பாக இணை வைப்பிற்கே அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அது எப்படி?
நல்லடியாரின் உருவப்படத்தை வீட்டிலோ சமாதியிலோ அமைத்திருப்பார்கள்.
முதல் தலைமுறை அவரை நல்லடியார் என்று கூறும். அடுத்த தலைமுறை அவரை மகான், அவ்லியா என்று வார்த்தைகளை மாற்றிக் கூறும்.
அப்படியே நான்காம் ஐந்தாம் தலைமுறை அவரைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ ஆக்கி விடும்.
நவீன உலகில் கடவுள்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் பெருகியிருக்க இது போன்ற உருவ வழிபாடு ஓர் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கருப்பசாமி, முனியாண்டி, சுடலையப்பன், மாரியம்மன் இவர்கள் எல்லாம் எப்படிக் கடவுள்களாக ஆக்கப்பட்டார்கள்?
இவர்கள் எல்லாம் அந்தந்த ஊரின் நல்ல மனிதர்களாக இருந்திருக்கலாம்.
நல்ல மனிதராயிற்றே என்று முதல் தலைமுறை அவர்களுக்குச் சிலை வடித்திருப்பார்கள். காலம் செல்லச் செல்ல அடுத்தடுத்த தலைமுறை களால் அவர்கள் கடவுளர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆக நல்ல மனிதர் என்று சொல்லி அவரின் உருவத்தை வரைதல், கற்சிலை வடித்தல் போன்றவை இணைவைப்பிற்கு அழைத்துச் செல்லும் அபாயகரமான காரணியாக இருக்கின்றது.
அதனாலேயே இது மார்க்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
நபிமார்களாக இருந்தாலும் அவர்களுடைய உருவச்சிலையை வடித்தலோ, வரைதலோ கூடாது என்று உறுதிபட மார்க்கம் தெரிவித்து விட்டது.
சமாதி கட்டுதல்
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி எழுப்புதல் கூடாதென்று மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதும் இந்த வகையைச் சார்ந்ததே!
மற்ற மனிதர்களை விட்டும் தனித்துத் தெரியும் வகையில் சமாதி எழுப்பி அதற்கு ஓர் நினைவாலயம் அமைத்து பெயர் பொறித்து விட்டால் போதும்.
அது யார்? ஏன்? என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் மக்கள் அந்த சமாதியைத் தொட்டுக் கும்பிட ஆரம்பித்து விடுவார்கள்.
முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
எல்லை மீறிய மரியாதை அளிப்பதற்கு இத்தகைய சமாதிகள் ஊக்கம் கொடுக்கின்றன. தூண்டுகின்றன.
வெற்றுத் தரையாக இருக்கும் வரை மக்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அதுவே கட்டியெழுப்பபட்டதாக இருக்கும் எனில் அது பல இணைவைப்பு காரியங்கள் நடைபெறுவதற்கு உந்து சக்தியாக மாறிவிடுகின்றன.
யூத, கிறித்தவர்கள் நபிமார்களின் மண்ணறைகளைச் சமாதிகளாக கட்டியெழுப்பியதாலே இணை வைப்பில் விழுந்தார்கள் என்று நபிமொழி எச்சரிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப் பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்து வானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்க விடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1330
எனவே தான் இஸ்லாம் யாருடைய மண்ணறையின் மீதும் கட்டடம் எழுப்பக் கூடாது என்று மறுப்பு தெரிவிக்கின்றது.
கப்றுகள் பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் ரலி,
நூல்: முஸ்லிம் 1765
மீறி எழுப்பப்பட்ட கட்டடத்தை ஆட்சியாளர்கள் தகர்க்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது.
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாரிப் (ரலி) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1764)
மண்ணறையின் மீது சமாதி எழுப்புவதை இவ்வளவு காட்டமாக, கடுமையாகக் கண்டிப்பதற்கு காரணம் இது இணைவைப்பிற்கு அழைத்துச் செல்லும் என்பதே.
இணைவைப்பின் சாயல்
இப்படி எவையெல்லாம் இணை வைப்பின் காரணிகள் என்பதை இனம் கண்டு அவை அனைத்தையும் மார்க்கம் தடுக்கின்றது.
இதுபோலவே எந்த ஒரு செயலிலும், வணக்கத்திலும் இணை வைப்பின் சாயல் ஏற்படுவதைக் கூட மார்க்கம் விரும்பவில்லை.
ஒரு செயல் அனுமதிக்கப்பட்ட தாகவே இருந்தாலும் அதில் இறை வனுக்கு நிகராக இன்னொருவரை ஆக்கும்படியான ஒப்பு இருந்தாலோ, அதன் சாயல் துளி தெரிந்தாலோ அதையும் மார்க்கம் தடை செய்து இணைவைப்பை எந்த வகையிலும் எட்டிப்பார்க்கவிடாமல் வேரறுக்கின்றது.
இதைப் பல ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது.
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதே. அவ்வாறு செய்த நேர்ச்சையை எங்கும் நிறைவேற்றலாம்.
ஆனால் பிறமத வழிபாட்டுத் தலங்களில் இறைவனுக்காகச் செய்த நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது.
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதறகும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி)
நூல்: அஹ்மத் 16012
இதற்கு என்ன காரணம் என்றால் பிறமத வழிபாட்டுத்தலங்களில் இறைவனுக்கான வணக்கத்தைச் செய்யும் போது வெளிப்பார்வையில் அல்லாஹ்வுக்காக என்பது அடிபட்டுப் போய் வேறு கடவுளுக்காக இது செய்யப்படுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இறைவனுக்காக ஒருவர் ஆட்டை அறுக்கிறார். அதைப் பொதுவெளியில் அறுத்தால் ஒன்றும் தெரியாது. அதையே கோயில் வளாகத்தில் போய் அறுத்தால் கோயில் கடவுளுக்காக அறுத்ததாகத் தான் மக்கள் நினைப்பார்கள்.
ஒரு முஸ்லிமின் செயல்பாட்டில், வணக்கத்தில் இணைவைப்பின் சாயல் கூட எட்டிப்பார்க்க கூடாது என்பதற்காகவே இந்தத் தடை என்பதை யாரும் எளிதில் புரியலாம்.
கப்ரை முன்னோக்கி தொழுதல்
அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒருவர் தனது தொழுகையை கப்ரை முன்னோக்கி அமைத்துக் கொள்ளும் போதும் இந்த இணைவைப்பின் ஒப்பு எட்டிப்பார்க்கின்றது.
தொழுபவர் அல்லாஹ்வுக்காகத் தான் தொழுகிறார் என்றாலும் ஒரு குறிப்பிட்ட கப்ரை முன்னோக்கி தொழுகையை அமைக்கும் போது கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட மனிதருக்காகத் தொழுகிறாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் மார்க்கம் இதையும் தடுக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ(ரலி),
நூல்: முஸ்லிம் 1769
சூரியன்
குறிப்பிட்ட நேரங்களில் அல்லாஹ் வுக்காகக் கூட தொழக்கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது.
சூரியன் தோன்றி முழுமையாக வெளிப்படும் வரை, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும் வரை.
இது போன்ற நேரங்களைத் தேர்ந்தெடுத்து தொழக்கூடாது என்று மார்க்கம் சொல்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும்போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: முஸ்லிம் 1509
சூரியனை வணங்கி வழி பட்டவர்கள் இந்த நேரத்தைத் தேர்வு செய்தே வழிபட்டார்கள். இன்றும் இவ்வாறு வணங்கும் சிலர் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் முஸ்லிம்கள் இந்த நேரங்களில் தொழும்போது சூரியனை வணங்குவது போன்ற வெளித் தோற்றம் ஏற்படுகின்றது.
வெளித்தோற்றத்தில் கூட இணை வைப்பின் சாயல் தென்படக் கூடாது என்பதற்காகவே இந்த நேரங்களில் தொழத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என விளங்கலாம்.
இஸ்லாம் இணைவைப்பை ஒரு போதும் ஆதரிக்காது, இணை வைப்பின் சாயலைக் கூட இஸ்லாம் சகித்துக் கொள்ளாது என்பதே இவை நமக்கும் போதிக்கும் பாடமாகும்.
—————————————————————————————————————————————————————-
இணை கற்பித்தல் தொடர்: 37
இறந்தவர்கள் செவியேற்பார்களா?
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
மரணித்தவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை. அவர்கள் எதையும் செவியுற மாட்டார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக அமைகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
இறைவன் சொல்லிக் காட்டுகிறான்…
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
(அல்குர்ஆன் 46:5)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், தன்னை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களை மறுமை நாள் வரும் வரை அழைத்தாலும் அவர்கள் உங்களது அழைப்பை ஒருபோதும் செவியேற்க மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே அவர்கள் செவியேற்றாலும் திரும்பப் பதில் தர மாட்டார்கள் என்று கூறுகிறான்.
இதை விட ஒரு வழிகேடு வேறு எதுவும் கிடையாது. உயிருடன் உள்ள ஒருவரை அழைத்தால், அவரிடத்தில் ஏதேனும் உதவி கேட்டால் அதை அவர் செவியேற்பார். அதை நிறைவேற்றவும் செய்வார். ஆனால் இறந்து, மண்ணோடு மண்ணாகிப் போன ஒருவரிடத்திலோ, சிலை களிடமோ சென்று கேட்பது என்பது வழிகேடும் மடமைத்தனமும் ஆகும்.
மேலும், இந்த வசனத்தில் அல்லாஹ் நமக்கு 3 விஷயங்களைப் பதிய வைக்கிறான்.
முதலாவது, நீங்கள் இறந்து போனவர்களையோ, சிலைகளையோ அழைத்தால் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
இரண்டாவது, அப்படியே அவர்கள் உங்களது அழைப்பை செவியேற் றாலும் அவர்கள் பதில் தர மாட்டார்கள்.
மூன்றாவது, நீங்கள் அவர்களை அழைப்பதை அவர்கள் அறியாதவர் களாக இருக்கின்றனர்.
இந்த மூன்று தன்மையும் பெற்றவர் எப்படிக் கடவுளாக முடியும்? கடவுள் தன்மை உடையவர் என்று சொல்ல முடியும்? அத்தனையும் அறியும் ஆற்றல் உள்ளவர் என்று சொல்ல முடியும்?
மேலும் இறைவன் கூறுகிறான்…
நீர் இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாது. அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 27:80)
இறந்தோரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 30:52)
இந்த இரு வசனங்களிலும் இறந்து போனவர்களைச் செவியேற்கச் செய்யும் அதிகாரம் நபிக்கே இல்லை என்று சொல்கிறான். உயிருள்ள – செவியேற்கக் கூடிய ஒருவனிடத்தில் ஒரு செய்தியைச் சொன்னால் அது அவனுக்கு கேட்கும். விளங்கும்.
அதே நேரத்தில், காது கேட்காத ஒருவனிடத்தில் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அது அவனுக்குக் கேட்காது. விளங்கவும் செய்யாது என்பது மறுக்க முடியாது உண்மை. இவ்வாறிருக்கும் போது இறந்து போன ஒருவரிடத்தில் சென்று நாம் கேட்டால், அழைத்தால் அவர் எப்படி அதைச் செவியேற்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இறந்து போனவருக்குக் கேட்கும் திறன் இருக்காது என்பதை குர்ஆன் ஹதீஸைப் படித்துத் தான் தெரிய வேண்டுமா? நாம் சிந்தித்துப் பார்த்தாலே இதை விளங்கிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் மனிதன் இறந்து விட்டால் செவியேற்கும் திறன் இல்லாமல் போய்விடும் என்பதனையும், ஒரு மனிதன் இறந்து விட்டால் எந்ததெந்த உறுப்புகள் எவ்வளவு நேரம் வரை செயல்படும்? எப்போது செயலிழக் கின்றது? என்பதையும் மருத்துவ உலகமே கணக்கிட்டுச் சொல்லி யிருக்கின்றது. இதற்கு மேலும் ஆதாரம் தேவையா?
மேலும், இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதனை, படிக்காத பாமரர்களும் விளங்கக்கூடிய விதத்தில் இறைவன் ஒரு பாடம் கற்பிக்கிறான். பின்வரும் வசனத்தைப் பாருங்கள்.
குருடனும் பார்வையுள்ளவனும், இருள்களும் ஒளியும், நிழலும் வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும் இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவரை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
(அல்குர்ஆன் 35:19-22)
நம்மில் யாராவது குருடனையும் கண்பார்வை உள்ளவனையும் சமமானவர்கள் என்று சொன்னால் நாம் ஒத்துக் கொள்வோமா? அவ்வாறு சொன்னால் அவனைப் பைத்தியக் காரன் என்று தான் உலகமே சொல்லும். குளிரும் சூடும் இரண்டுமே ஒன்றுதான் என்று சொன்னாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இப்படி இருக்கையில் இறந்து போனவரும் உயிருள்ளவரும் சமம் என்றால் அதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சிந்திக்க வேண்டாமா?
அவர் இறந்து விட்டார்; அவர் கபுருக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று நமக்கு நன்றாகத் தெரிகிறது. இப்படி இருக்கும் போது அவர் இறக்கவில்லை; அவர் உயிருடன் தான் இருக்கிறார்; அவருக்கு நாம் சொல்வது கேட்கும் என்றால் எப்படி இருக்கும். பைத்தியம் என்றுதானே நினைப்பார்கள். அதுபோன்ற பைத்தியக்காரத்தனமான காரியத்தைத் தான் நாம் ஆன்மீகம், வணக்கம் என்ற பெயரில் செய்து வருகின்றோம்.
ஆக, எவ்வாறு சூடும் குளிரும் சமமாக ஆவதற்கு வாய்ப்பில்லையோ சாத்தியமற்றதோ அதே போன்று தான் இறந்தவர்களும் உயிருள்ள வர்களும் சமமாவதற்கும் வாய்ப்பே இல்லை. அது சாத்தியமற்ற செயல்.
அது போன்று மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
யார் அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்களையோ, நபிமார் களையோ, சிலைகளையோ வணங்கு கின்றார்களோ அவர்களுக்கு எதிராக மறுமை நாளில் அவர்கள் வணங்கிய இந்த அவ்லியாக்களும் சிலைகளும் நபிமார்களும் வந்து நிற்பார்கள். இறைவனிடத்தில் மக்கள் செய்த இணைவைப்புச் செயலையே மறுத்துப் பேசுவார்கள் என்பதாகச் சொல்லிக் காட்டுகிறான்.
தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள் களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.
(அல்குர்ஆன் 19:81, 82)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகின்றது என்றால், ஒரு மனிதர் இறந்து விட்டால் அவர் இறந்த பிறகு அவருக்கு உலகத்தில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாது. அது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்து போன பிறகு அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. மேலும் அல்லாஹ்வையன்றி நாம் யாரைக் கடவுளாக ஆக்கி அவர்களை அழைக்கின்றோமோ அவர்களுக்கும் இந்த உலகத்தில் நடப்பது தெரியாது. அல்லாஹ்விடத்தில் மறுத்தும் விடுவார்கள். மேலும் நமக்கு எதிராகவும் நம்முடைய இணை வைப்பிற்கு எதிராகவும் வந்து நிற்பார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, இறைவன் வாழ்விற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிக்காட்டுகிறான்.
முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23:99, 100)
மேற்கண்ட வசனத்தின் இறுதியில் மனிதன் இறந்த பிறகு அவனுக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் ஓர் திரை உள்ளது என்பதை ”பர்ஸக்” என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
இதில் பர்ஸக் என்பதற்கு ”திரையிடுதல்” என்பது பொருள்.
இதை நாம் இன்னும் எளிதாக விளங்க வேண்டுமென்றால் திருக்குர்ஆனில் அல்லாஹ் வேறு ஒரு வசனத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.
இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.
(அல்குர்ஆன் 55:19, 20)
நாம் அந்தக் கடலைப் பார்க்கும் போது இரண்டு கடலும் ஒன்றோ டொன்று ஒட்டி, கலந்திருப்பதைப் போன்று தெரியும். ஆனால் அதற்கு மத்தியில் கண்ணுக்குத் தெரியாத, உடைக்க முடியாத ஒரு திரையை இறைவன் போட்டு வைத்திருக்கிறான்.
இதே போன்றுதான் இறந்துவிட்ட மனிதனுக்கும், உலகத்திற்கும் மத்தியில் ஒரு கடினமான திரையை இறைவன் போட்டு வைத்திருக்கிறான். அவனுக்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்து விட்ட மனிதர்கள் யாரும் திரும்ப இந்த உலகிற்கு வர முடியாது. அவனுக்கும் அவனுடைய உலகம் சார்ந்த செயல்பாட்டிற்கும் இடையில் ஒரு தடை ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டாலும் சரி! பூமியின் மேற்பரப்பிலேயே மரணித்தவராக இருந்தாலும் சரி! இந்த உலகத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும்.
அந்தத் தடையை மீறி யாராலும் இந்த உலகத்திற்கு வரவும் முடியாது. இந்த உலகத்தில் நடக்கும் செயல்பாட்டினை அறிந்து கொள்ளவும் முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது.
ஆனால் இன்றைய முஸ்லிம்கள், மண்ணறையில் அடக்கம் செய்யப் பட்டவர்கள் நல்லடியார்கள் என்றும், அவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களைக் கண்கானிக்கின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.
மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்படாத, பூமியின் மேற்பரப்பில் இறந்து கிடந்த, முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு நல்லடியாரைப் பற்றி அல்லாஹ் திருக்குர்னில் குறிப்பிடும் போது,
ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக் குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகி றோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக் கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது “அல்லாஹ் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் 2:159)
இவ்வசனத்தில் நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகளாக மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பி லேயே அவரது உடல் கிடந்தது.
ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இறந்து போன நல்லடியார்களிடம் சில முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால் இறந்தவருக்கோ இவர் பிரார்த்தனை செய்தது கூடத் தெரியாது என்பதை இந்த வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த வசனத்திலிருந்து இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே நாமாக ஒருவரை நல்லடியார் என்று சொல்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைத்தவர்களாக ஆகிவிடுவோம் என்பதையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்.
ஒருவேளை அப்படியே அவர்கள் நல்லடியார்கள் தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவர்களிடத்தில் பிரார்த்திப்பது என்பது நியாயமற்ற, இறைவனால் ஏற்றுக் கொள்ள முடியாத, மன்னிக்க முடியாத செயல் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும்
படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும்
கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
அல்லாஹ் ஒருவன்தான் உண்மை யான கடவுள். அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் கிடையாது என்பதற்குத் திருமறைக் குர்ஆன் எடுத்து வைக்கும் முதன்மையான ஆதாரங்களில் ஒன்று “அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் கற்பனைக் கடவுள்களால் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது” என்பதாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது.
“அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட் பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்
அல்குர்ஆன் 5:76
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர்.
அல்குர்ஆன் 10:18
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் 10:106
“அவனையன்றி பாதுகாவலர் களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 13:16
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 17:56
அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழிகேடாகும்.
அல்குர்ஆன் 22:12
அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்ப தற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.
அல்குர்ஆன் 25:3
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:55
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அவர்களால் பயனும், தீங்கும் செய்ய இயலாது என்பதைத் தீர்க்கமாக அறிவிக்கின்றன.
பயனும் தீங்கும் செய்ய முடியாது என்றால் எப்படி? என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எத்தனையோ மக்கள் மாட்டைக் கடவுளாக வணங்கு கின்றனர். மாடு பல பயன்களைத் தரத்தான் செய்கிறது. வயலை உழுது போடுகிறது, பால் தருகிறது, வண்டி இழுக்கிறது. இப்படி எத்தனையோ பயன்களை மாடு தருகிறது.
அது போன்று மாடு ஒருவரை முட்டி அவருக்குத் தீங்கு இழைப்பதையும் பார்க்கிறோம்.
அப்படியென்றால் அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுவைகள் எந்தப் பயனும் செய்ய முடியாது. எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதன் பொருளை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு படைப்பினமாக இருந்தாலும் அல்லாஹ் அதற்குக் கொடுத்த சக்தியை வைத்து மற்றொரு படைப்பினத்திற்கு அல்லாஹ்வின் நாட்டப்படி பயனோ, தீங்கோ செய்ய முடியும். இதைப் பற்றி மேற்கண்ட வசனங்கள் பேசவில்லை.
மனித இனம், ஜின் இனம், மலக்குமார்கள், விலங்குகள், உட்பட எந்த படைப்பினமாக இருந்தாலும் அவை மற்றொரு படைப்பினத்திற்கு பயனோ, தீங்கோ ஏற்படுத்த வேண்டுமென்றால் மூன்று அடிப்படைகளை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான். அந்த அடிப்படைகளுக்கு உட்பட்டுத்தான் அவை மற்றொரு படைப்பினத்திற்கு பயனோ தீங்கோ ஏற்படுத்த முடியும். அந்த அடிப்படைகளாவன.
- பயனோ, தீங்கோ ஏற்படுத்தும் சக்தியை அந்தப் படைப்பினத்திற்கு அல்லாஹ் வழங்கி யிருக்க வேண்டும். வழங்கியுள்ளான் என்பதை நமது அறிவைக் கொண்டோ, வஹியைக் கொண்டோ நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
- ஒரு படைப்பினம் மற்றொரு படைப்பினத்திற்குப் பயனோ தீங்கோ அளிக்க வேண்டும் என்றால் இரண்டிற்கும் மத்தியில் தொடர்பு இருக்க வேண்டும். அதாவது பாதிப்பு ஏற்படுத்தும் பொருள், பாதிக்கப் படக்கூடிய பொருளோடு தொடர்பு கொள்ள வேண்டும். பயன் ஏற்படுத்தும் பொருள், பயனைப் பெறக் கூடிய பொருளோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
- மேற்கண்ட இரண்டு அடிப்படைகளின் மூலம் பயனோ, தீங்கோ ஏற்படுவதற்கு அல்லாஹ் நாட வேண்டும்.
மேற்கண்ட மூன்று அடிப்படைகள் இல்லாமல் எந்த ஒரு படைப்பினமும் மற்றொரு படைப்பினத்திற்குப் பயனோ, தீங்கோ செய்ய முடியாது. அவ்வாறு செய்ய முடியும் என்று ஒருவன் நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியமாகும்.
ஒரு பாம்பு மற்றொருவனுக்கு மேற்கண்ட அடிப்படைகளின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தவறு கிடையாது.
ஏனெனில் பாம்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் சக்தியை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்கு விஷத் தன்மை உள்ளது.
பாம்பிற்கு விஷத்தன்மை உள்ளது என்பதால் மட்டுமே அது நமக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. மாறாது அது கொத்தினால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். அதாவது பாம்பிற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும் பொருளுக்கும் மத்தியில் தொடர்பு இருக்க வேண்டும்.
பாம்பிற்கு விஷத் தன்மை இருந்தாலும், அது ஒருவரைத் தீண்டி னாலும் அதன் மூலம் அவருக்குப் பாதிப்பு ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால்தான் பாதிப்பு ஏற்படும். அல்லாஹ் நாடவில்லை என்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்டமாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.
அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மனநோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனநோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மனநோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ் வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.
அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.
ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.
அல்லாஹ் ஏற்படுத்திய வரையறைகளுக்கு உட்பட்டுத்தான் ஒரு படைப்பினம் மற்றொரு படைப்பினத்திற்குப் பயனோ, தீங்கோ செய்ய முடியும்.
இந்த வரையறைகளைத் தாண்டி பயனோ, தீங்கோ ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன்தான்.
இதைத்தான் மேற்கண்ட வசனங் கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ்வைத் தவிர வணங்கப் படக்கூடிய யாராக இருந்தாலும் அல்லாஹ்வைப் போன்று எந்தவித புற சாதனங்களும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்பதைத்தான் அந்த வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
எந்த வித புறச்சாதனங்களும் இல்லாமல் பயனோ, தீங்கோ ஏற்படுத்தும் இந்த ஆற்றலை அல்லாஹ் கடுகளவு கூட தன்னைத் தவிர வேறு யாருக்கும் வழங்க மாட்டான். இதைத் திருமறைக் குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 34:22)
அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
(அல்குர்ஆன் 35:13)
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக யாருமில்லை.
(அல்குர்ஆன் 112:4)
அல்லாஹ்வைத் தவிர உள்ள எந்தப் படைப்பினத்திற்கும் அல்லாஹ் வைப் போன்ற சக்தி அணு அளவு கூட கிடையாது என்பதை மேற்கண்ட வசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சிலை வழிபாடு மாபெரும் இணைவைப்பு ஏன்?
சிலை வழிபாடு செய்பவர்கள் தாங்கள் வணங்கும் சிலைகள் எவ்வித புறச்சாதனமும் இல்லாமல் தங்களுக்குப் பயனையும், தீங்கையும் ஏற்படுத்தும் என்று நம்பிய காரணத்தினால் தான் சிலை வழிபாட்டை இஸ்லாம் மாபெரும் இணைவைப்பு என்று எச்சரிக்கிறது.
இப்றாஹீம் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த காஃபிர்கள் தாங்கள் தெய்வமாக வணங்கும் சிலைகள் எவ்வித புறச் சாதனமும் இல்லாமல் இப்றாஹீம் நபிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று அச்சுறுத்தினார்கள். ஆனால் இப்றாஹீம் (அலை) அவர்கள் அவர்களின் அச்சுறுத்தலுக்கு சிறிதும் அஞ்சவில்லை. அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தார்கள். இதைப் பற்றித் திருக்குர்ஆன் மிக அற்புதமாக எடுத்துரைக்கிறது.
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர் களா?” “அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?” (என்றும் அவர் கூறினார்.) நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.
(அல்குர்ஆன் 6:80-82)
சக்தியில்லாத கற்சிலைகள் எவ்வித புறச்சாதனமும் இன்றி பாதிப்பு ஏற்படுத்தும் என்று நம்புவதை மாபெரும் இணைவைப்பு என இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
ஹூது (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயம் இவ்வாறு தான் அச்சுறுத்தியது.
“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்” என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). “நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் கூறினார். எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன்நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 11:54, 55,56)
கற்சிலைகள் எவ்விதப் புறச் சாதனமும் இன்றி ஹூது நபி அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய தாக காஃபிர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை இணை வைப்பு என்பதையும், எந்த உயிரினமாக இருந்தாலும் அதனுடைய கண்ட்ரோல் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது என்பதையும் மிகத் தெளிவாக இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ்வைப் போன்று பாதிப்போ, பயனோ ஏற்படுத்தும் ஆற்றல் கடுகளவு கூட இறைவன் அல்லாதவர்களுக்குக் கிடையாது. அது போன்ற சக்தியை அல்லாஹ் கடுகளவு கூட யாருக்கும் ஒரு போதும் கொடுக்கவும் மாட்டான்; நாடவும் மாட்டான்.
இறைவன் அல்லாதவர்கள் இவ்வாறு பாதிப்பு ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதும், அதற்கு அஞ்சுவதும், இவ்வாறு பயனளிப் பார்கள் என்று நம்புவதும், அதனை ஆதரவு வைப்பதும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியமாகும். இறைவன் அல்லாதவர்களை கடவுளாகக் கற்பனை செய்வதாகும்.
இதுபோன்ற அச்சத்தை இறைவன் மீது மட்டும்தான் வைக்க வேண்டும்.
“இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!” என்று அல்லாஹ் கூறுகிறான்.
(அல்குர்ஆன் 16:51)
அல்லாஹ்வைப் போன்று மற்றவர்களுக்கு அஞ்சுவது இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்வதாகும் என்று மேற்கண்ட வசனம் மிகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.
அல்லாஹ்வைப் போன்று மற்றவர்கள் பாதிப்பு ஏற்படுத்துவார்கள் என்று பயந்தால் அது அவர்களைக் கடவுளாகக் கற்பனை செய்கின்ற மாபெரும் இணைவைப்பு என்பதையும் மேற்கண்ட வசனம் விளக்குகிறது.
தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன் இல்லை.
(அல்குர்ஆன் 39:36, 37)
இறைவனல்லாதவர்கள் இறைவனைப் போன்று பாதிப்பு ஏற்படுத்துவார்கள் என்று கூறி மற்றவர்கள் நம்மை அச்சுறுத்தினால் நாம் அதற்கு அஞ்சக் கூடாது என்றும், அல்லாஹ் மட்டும் நமக்குப் போதுமானவன் என்றும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் நமக்கு ஈமானிய வலிமையை ஊட்டுகின்றான்.
இன்றைக்கு கப்ரு வணங்கிகள் இறந்தவர்களை இறைவனைப் போன்றுதான் நம்புகிறார்கள். அல்லாஹ் எவ்வாறு பயனோ, தீங்கோ ஏற்படுத்துவானோ அது போன்று அவுலியாக்களும் எவ்வித புறச் சாதனமும் இல்லாமல் நன்மையோ, தீமையோ செய்வார்கள் என்று அச்சுறுத்துகின்றனர். மேலும் அல்லாஹ் இது போன்ற ஆற்றலை இறந்து போய்விட்ட, அவர்கள் நம்புகின்ற அவுலியாக்களுக்குக் கொடுத்துள்ளதாகவும் வாதிக்கின்றனர்.
இறைவன் தனக்கு மட்டுமே உரிய ஆற்றலைக் கடுகளவு கூட அடுத்தவருக்கு வழங்க மாட்டான். அதற்கு நாடவும் மாட்டான் என்பதற்கான சான்றுகளை நாம் மேலே கண்டோம்.
இவ்வாறு இறந்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கின்ற காரணத்தினால் தான் நாம் தர்ஹா வழிபாட்டை கப்ர் வணக்கம் என்றும், நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற இணைவைப்பு என்றும் விமர்சிக்கின்றோம்.
தர்ஹாவாதிகளின் இந்த நம்பிக்கையை இணைவைப்பு என்று ஏற்றுக் கொள்கின்ற ஸலஃபிகளில் பலர் அல்லாஹ் நாடினால் சூனியக்காரன் எவ்வித புறச்சாதனமும் இன்றி பாதிப்பை ஏற்படுத்துவான் என்றும், அல்லது சூனியம் வைக்கப்பட்ட பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை வைக்கின்றனர்.
சூனியக்காரனோ, சூனியம் வைக்கப்பட்ட பொருட்களோ எவ்விதப் புறச்சாதனமும் இன்றி ஒரு போதும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. அல்லாஹ் அதற்கு ஒரு போதும் நாடவும் மாட்டான். சூனியக்காரன் அல்லது சூனியம் வைக்கப்பட்ட பொருட்கள் புறச்சாதனம் இன்றி இறைவனைப் போன்று பாதிப்பு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வைப்பதும் அதற்கு அல்லாஹ் நாடுவான் என்பதும் மாபெரும் இணைவைத்தலாகும்.
இது மட்டுமில்லாமல் சூனியக் காரன் எப்படி வந்தாலும் ஜெயிக்க முடியாது என்றும், சூனியத்தை அல்லாஹ் அழிப்பான் என்றும், பொய்யான விஷயங்கள் உண்மை யாவதற்கு அல்லாஹ் ஒரு போதும் நாட மாட்டான் என்பதையும் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக நேரடியாகவே எடுத்துரைத்துள்ளது.
தாயத்து, தாவீஸ், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், காலத்தைத் திட்டுதல், தாத்து அன்வாத் என்ற புனித மரங்களை ஏற்படுத்துதல், ஜோசியம் பார்த்தல், நட்சத்திரத்தால் மழை பொழியும் என்று நம்புதல், சூனியத்தை நம்புதல், இணை வைக்கும் வாசகங்களால் ஓதிப் பார்த்தல், தாலிகட்டுதல், ஆரத்தி எடுத்தல், திருமணப் பந்தலில் வாழைமரங்களைக் கட்டிவைத்தல் போன்ற அனைத்திலும் இறைவனைப் போன்று எவ்வித புறச்சாதனமும் இன்றி பாதிப்போ, நன்மையோ செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாலும், இறைவன் வழங்காத சக்தியை அவற்றிற்கு இருப்பதாக நம்புவதாலுமே அவை இறைவனுக்கு இணைகற்பிக்கும் நம்பிக்கை என்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது.
எனவே அல்லாஹ் கொடுக்காத சக்தியை இருப்பதாக நம்புவதும். எவ்விதத் தொடர்பும் இல்லாமல் நன்மையோ, தீமையோ செய்ய முடியும் என்று நம்புவதும், அல்லாஹ் தன்னைப் போன்று பயனோ, தீங்கோ ஏற்படுத்துவதற்கு நாடுவான் என்று நம்புவதும் இணைவைப்பு நம்பிக்கையாகும். இத்தகைய இணை வைப்பு நம்பிக்கையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்புரிவானாக!
—————————————————————————————————————————————————————-
குடும்பவியல் தொடர்: 30
குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி
பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்களைப் பார்த்து வருகிறோம். பெண்கள் வேலைக்குச் செல்வதால் பெண்களுக்குப் பல்வேறு பாதிப்பு ஏற்படுவதுடன் ஆண்களின் வேலை பாதிப்பதாகவும் கள ஆய்வு சொல்கிறது.
ஆண்களை மட்டும் வேலைக்குச் சேர்த்தால் போட்டி போட்டுக் கொண்டு வேலை நடக்கிறது. அதுவே பெண்களுடன் வேலை செய்யும் ஆண்கள், வேலை செய்வதில் காட்டும் அக்கறையை விட, தன்னுடன் வேலைக்கு வந்த பெண்களின் மீது காட்டும் அக்கறை அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது ஆண்களைத் திசை திருப்புகின்ற காரியமாக பெண் இருப்பதால் முழு ஈடுபாட்டுடன் ஆண்களால் வேலை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. இதனால் ஆண்களின் வேலைத்திறன் குறைந்து விடுகிறது என்று கண்டறிகிறார்கள்.
தனியாக வேலை செய்யும் ஆண் கள் பொறுப்புடனும், ஈடுபாட்டுடனும் அதிகக் கவனத்துடனும் வேலை செய்கிறார்கள். பெண்களுடன் வேலை செய்யும் போது, அதாவது பெண்கள் என்றால் சுமார் 18 லிருந்து 35 வயது வரைக்குமுள்ள நடுத்தர வயதுள்ள பெண்களுடன் வேலை செய்கின்ற போது பொறுப்பற்ற தன்மையுடனும், குறைவான ஈடுபாட்டுடனும் வேலை செய்வதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களை வேலைக்குச் சேர்ப் பதால் ஆண்களின் வேலைத்திறன் குறைந்து நிறுவனங்கள் நஷ்டமடை வதாகவெல்லாம் கண்டறிகிறார்கள். ஆனாலும் இத்தனை காரண காரியங்களையும் உதறித் தள்ளிவிட்டு, புரட்சி, புதுமை என்று பெயர் வைத்துக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பீற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம்.
இவர்கள் இயல்பு வாழ்க்கை யையும், யதார்த்தத்தையும் உணராமல் இவ்வாறு சொல்கின்றனர்; செய்கின்றனர். பெண்களின் உடற்கூறு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணராமல் இருக்கின்றனர். கண்ணுக்கு முன்னால் என்ன பாதிப்புகள், விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் பார்ப்பது கிடையாது.
வேலைக்குப் போகிறேன் என்ற பெயரில் பெண்கள் குடிகாரர்களாக மாறுவதைப் பார்ப்பது கிடையாது. இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் அதையும் குடும்பத்தார்கள் கண்டு கொள்ளக் கூடாது; இவற்றையெல்லாம் கவனிக்காமல் புரட்சி, புரட்சி என்று கூப்பாடு போடுகின்றனர்.
பொதுவானவர்கள் இப்படி ஆண் ஆதிக்கம் என்றும் புரட்சி என்றும் சம உரிமை, சமத்துவம் என்றும் சொல்லிக் கொண்டு பெண்களை இன்னும் அடிமைத்தனம் செய்கின்றனர். ஆனால் முஸ்லிம் களைப் பொறுத்தவரை, பெண்கள் வேலைக்குப் போகிற விஷயத்தில் அல்லது வேலைக்கு அனுப்புகின்ற விஷயத்தில் மிகத் தெளிவான முடிவில் இருக்க வேண்டும். அதாவது குடும்பப் பொருளா தாரத்திற்கு எல்லா வகையிலும் ஆண்களே முழுப் பொறுப்பு என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.
மேலும் பொருளாதாரத்தைச் செலவு செய்வது ஆண்களுக்குக் கடமை தான். இருப்பினும் இத்துடன் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தை ஆண்கள் குடும்பத்திற்குச் செலவு செய்வது கடமை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவற்றுக் கெல்லாம் மறுமையில் நன்மைகள் இருக்கிறது என்று இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.
ஆண்களாகிய கணவன்மார்களும் தந்தைமார்களும் தாங்கள் சிரமப்பட்டு சம்பாத்தியம் செய்கிறார்கள் என்பது உண்மைதான். சம்பாதித்த பணத்தில் மனைவிக்குச் செலவு செய்வதில், வீட்டுத் தேவைகளுக்குச் செலவளிப்பதில் ரொம்பவும் கணக்கு பண்ணக் கூடாது. மிகவும் மூடி மூடி வைக்கக் கூடாது.
இன்னும் சிலர் உலகத்திற்கு வள்ளலாக இருப்பார்கள். ஆனால் குடும்பத்தில் கஞ்சனாக இருப்பார்கள். எனவே ஒரு மனிதன் தன்னுடைய சம்பாத்தியத்தில் யாருக்கு நல்லபடியாக செலவு செய்ய வேண்டும் என்பதை யும் நபியவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி),
நூல்: புகாரி 55, 4006, 5351
எனவே, மனைவி மக்களைப் பேணவேண்டும் என்று அல்லாஹ் சொன்னதால் செய்கிறேன், அதற்கான நன்மையை இறைவனிடம் தான் எதிர்பார்க்கிறேன் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் குடும்பத்திற்காகச் செலவளித்தால் அது அவருக்குத் தர்மம் செய்த நன்மையைப் பெற்றுத் தரும்.
மனைவி மக்களைக் கவனிப்பது கணவனுக்குக் கட்டாயக் கடமை. கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். கூடுதலாக தர்மம் செய்த நன்மையையும் இறைவன் தருகிறான் என்பதைத்தான் நபியவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் நமது குடும்பத்தைச் சாராத நபர்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுத்தால் அதற்கு தர்மத்தின் நன்மை மட்டும்தான் கிடைக்கும். ஆனால் குடும்பத்திற்குச் செலவளித்தால் இரட்டை நன்மைகள் கிடைக்கிறது.
எனவே கணவன்மார்கள் செலவு செய்யும் போது அடிக்கடி தாங்கள் செலவு செய்வதைக் குத்திக்காட்டி, எடுத்தெறிந்து பேசிவிடக் கூடாது. ஏனெனில் அப்படி நமது செலவைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் நாம் இறைவன் சொன்னதற்காகச் செய்யவில்லை என்றாகிவிடும். மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு குடும்பத் தலைவர்கள் செலவு செய்திட வேண்டும்.
அதே போன்று, தனது குடும்பத்திற்கு ஒரு ஆண் மகன் செலவு செய்வது மற்றும் கவனிப்பதன் சிறப்பு பற்றி மேலும் நபியவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவி யின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ்(ரலி),
நூல்: புகாரி 56, 1296, 4409, 5668
எனவே குடும்பத்தைக் கவனிப் பதை விரும்பிச் செய்ய வேண்டும். குடும்ப விவகாரத்தில் வெறுத்துக் கொண்டு எதையும் செய்யவே கூடாது. அதனால்தான் நபியவர்கள் மனைவிக்கு ஊட்டி விடுகின்ற ஒரு கவள உணவுக்கும் இறைவன் நன்மையைத் தருவான்; அதில்கூட இறைவன் எதையும் குறைத்து விடமாட்டான் என்கிறார்கள்.
தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற இபாதத்துகளைச் செய்யும் போது எவ்வாறு உலகில் எந்தத் தேவைகளையும், காரணங்களையும் பார்க்காமல் மறுமையில் நன்மை கிடைக்க வேண்டும் என்று செய்கிறோமோ அது போன்றுதான் குடும்பத்திற்குச் செலவு செய்வதையும் குடும்பத்தினரைக் கவனித்துப் பேணுவதையும் செய்ய வேண்டும்.
ஏனெனில் தொழச் சொன்ன இறைவன் தான், நோன்பு வைக்கச் சொன்ன இறைவன் தான் குடும்பத்தையும் பேணச் சொல்லி யிருக்கிறான் என்பதை உணர்ந்து விரும்பி வேண்டிச் செய்ய வேண்டும். ஏதோ கடமை என்றெல்லாம் செய்யவே கூடாது.
ஒரு மனிதர் செலவு செய்வதிலேயே சிறந்தது எது? என்று நபியவர்கள் பட்டியல் போடும் போது, ஒரு ஆண் செலவளிப்பதிலேயே சிறந்தது, அதுவும் முதலாவது சிறப்பிற்குரியது தனது குடும்பத்திற்குச் செலவு செய்கிற பொருளாதாரம் தான். அதன் பிறகுதான் அறப்போருக்குச் செலவு செய்வதுகூட வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),
நூல்: முஸ்லிம் 1817
அதே போன்று இன்னும் நபியவர்கள் குடும்பத்திற்குச் செலவு செய்வதன் சிறப்புகளைப் பற்றிக் கூறுகிறார்கள்.
… மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங் கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை (அல் கவ்ஸர் தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3723
குடும்பத்திற்குச் செலவு செய்வதன் சிறப்பை அறிந்து கொள்ள அபூதல்ஹா (ரலி) அவர்களின் தியாகத்தை எடுத்துச் சொல்கிற சம்பவம் நல்ல சிறந்த உதாரணம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
“நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.
அதற்கு அபூதல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டுவிட்டார்.
நூல்: புகாரி 1461, 2318, 2769, 4555, 5611
எனவே குடும்பத்தினருக்காகச் செலவு செய்வது மற்ற தான தர்மங்களை விடவும் மேலானது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்.
குடும்பத்தினரைத் தன்னிறைவான வர்களாக மாற்றிய பிறகு குடும்பத்தை யும் தாண்டி மற்றவர்களுக்கு தான தர்மங்கள் செய்வது நல்லது.
குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தான தர்மத்தில் உள்ளது தான் என்றும், இதற்கும் மறுமையில் எண்ணிலடங்கா நற்கூலிகள் கிடைக்கும் என்றும் நம்பிச் செயல்பட வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
சென்ற இதழின் தொடர்ச்சி…
இணை வைப்பே தீமைகளின் தாய்!
– எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்
இணைவைப்புக் கொள்கை என்பது மனித வாழ்க்கையின் நோக்கத்தை, இலக்கை மாற்றிவிடும்; இருளில் தள்ளிவிடும்.
மூடநம்பிக்கைகள், பாவங்கள், தீமைகள், அனாச்சாரங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதும் இதுவே. மனிதர்களுக்குத் துன்பத்தை தருகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும், சிக்கல்கலுக்கும் காரணமாக இருப்பதும் இதுவே.
நாமும், மற்றவர்களும் கவலைகள் இல்லாமல் நலமுடன் இருக்கும் வகையில் நமது வாழ்க்கை தூய்மையாக இருக்க வேண்டும் எனில் ஓரிறைக் கொள்கையின்படி வாழ வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கும் நம்பிக்கை மற்றும் நடத்தையை விட்டு நாம் அகன்று விட வேண்டும்.
அப்போது மட்டுமே ஈருலகிலும் வெற்றி பெற இயலும். அந்த அடிப்படையில் இணை வைத்தலால் உருவாகும் பல்வேறு தீமைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
ஆளை மயக்கும் ஆன்மீக மோசடிகள்
இறைவனை எளிதில் நெருங்க முடியாது; அவனது அருளை அடைய வேண்டும் என்றால் பரிகாரம் நடத்த வேண்டும்; தேவைகளுக்கு ஏற்ப பூஜைகள் செய்ய வேண்டும்; கணக்குப் பார்க்காமல் காணிக்கை தர வேண்டும் என்று ஆன்மீகம் முலம் பெரும் மோசடி நடந்து வருகிறது. இதனால், எதையும் யோசிக்காமல் பக்தர்கள் அளிக்கும் கொடைகள் மூலம் குறிப்பிட்ட சிலருடைய வயிறும் வாழ்க்கையும் நிறைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, “ஆண்டவன் எங்கும் இல்லை; ஆன்மீகம் என்பது கொள்ளை’ என்று சிலர் கோஷம் போட்டு கிளம்பி விட்டார்கள். கொசுவை ஒழிக்க வீட்டையே எரிக்கத் தயார் ஆகிவிட்டார்கள் இந்த நாத்திகர்கள்.
இந்த நிலை மாற வேண்டுமா? கண்டதை எல்லாம் கடவுளாகக் கருதும் மனநிலை மாறினால் போதும். இறைவனுக்குரிய அம்சங்களில் எதுவும் எதிலும் இல்லை; எவரிலும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். அவனை எங்கிருந்தும் எப்போதும் அழைக்கலாம் எனும் நம்பிக்கை மலர வேண்டும். இதோ திருமறை வசனங்களைப் பாருங்கள்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த் திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என் னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடா தீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை யோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
திருக்குர்ஆன் 39:53
இறைவன் பொதுவானவன்; அவனிடம் பிரார்த்தனை செய்வதற்கும், பாவ மன்னிப்புக் கோருவதற்கும்; அவனது அன்பைப் பெறுவதற்கும் ஒருபோதும் இடைத்தரகர் தேவை இல்லை என்பதே தூய இஸ்லாம். ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் அனைத்துப் பித்தலாட்டங்களும் ஏமாற்றல்களும் அழிந்தொழிய இந்த இஸ்லாமிய நம்பிக்கையே சிறந்த தீர்வு தரும்.
தீமைகளும் பாவங்களும்
இறைவன் மனிதனைப் போன்றவன்; மனிதனும் இறைவனாக ஆகலாம் என்பது போன்ற படைத் தவனின் புனிதத்தைப் பாழ்படுத்தும் நம்பிக்கையே தீமைகளுக்கு அச்சாணியாக இருக்கிறது.
தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் தீங்கு தரும் அனைத்துப் பாவங்களையும் சிலர் செய்கிறார்கள். பிறகு, குறிப்பிட்ட தொகையை காணிக்கை செலுத்தி விட்டால் அல்லது ஆலயம் கட்டுவதற்குப் பணம் கொடுத்து விட்டால் இறைவன் பார்வையில் நல்லவனாகி விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்தத் தைரியம் காரணமாகவும் வட்டி, வரதட்சனை, லஞ்சம், மோசடி என்று ஏகப்பட்ட தீமைகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் பார்வையில் இறைவனை வணங்குவது என்பது அவனை வழிபடுவது மட்டுமே. அவ்வாறு தான் இணைவைப்புக் கொள்கையின் இறைநம்பிக்கை இருக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாற்றமாக இஸ்லாம் இருக்கிறது.
“எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:162, 163
“முஃமின் – இறை நம்பிக்கை யாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: திர்மிதி (2551)
தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஏக இறைவனுக்குப் பயந்து அவனது கட்டளைப்படி நல்ல முறையில் செயல்படுவது வணக்கம் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது, இதுவே இறை நம்பிக்கையின் உண்மையான அடையாளம் என்றும் பிரகடனம் செய்கிறது.
சுற்றம் மறக்கடிக்கும் சுயநலம்
“கடவுளை மற! மனிதனை நினை!’ என்பது நாத்திகப் பழமொழி. மனிதர்களை மறந்து, அவர்களுக்குச் சேவை செய்வதைத் துறந்து, பக்தியில் மூழ்குவதே இறைவனின் அன்பை அருளை அடையும் வழி என்று ஆன்மீகவாதிகள் வாழ்ந்ததன் எதிர்விளைவாக இந்தப் பழமொழி பிறந்தது. இது இணைவைப்பு கொள்கைகளுக்கு பொருந்துமே தவிர ஒருபோதும் இஸ்லாத்திற்குப் பொருந்தாது.
காரணம், பிற மனிதர்களுக்கு உதவுவதும், தேவைகளை நிறை வேற்றுவதும், ஆதரவு அளிப்பதும் இறைவனை நெருங்குவதற்கான வழி என்றும் மறுமையில் மகத்தான கூலிகளைப் பெற்றுத்தரும் என்றும் இந்த மார்க்கம் போதிக்கிறது.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்…
திருக்குர்ஆன் 4:32
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4661)
நல்லறங்களும் வணக்கமே எனும் இஸ்லாமியக் கண்ணோட்டம் வரும் போது மட்டுமே மனிதன் தீமைகளை விட்டும் பாவங்களை விட்டும் விலகுவான். மேலும், சக மனிதர்களுக்கு உதவி செய்வது, ஒத்துழைப்பு தருவது போன்ற பொதுநலம் காக்கும் குணம் உருவாகும். சுயநலம் ஒழியும்.
வேலி தாண்டும் விபச்சாரம்
ஒட்டுமொத்தக் குடும்பங்களின் தொகுப்பே சமுதாயம். சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டும் எனில் ஒவ்வொரு குடும்பமும் சிறந்து விளங்குவது கட்டாயம். எனவே, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறையாகத் திருமணம் செய்து கட்டுக்கோப்பான குடும்பத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களுக்குள் உரிமைகளை, கடமைகளை சரிவரப் பேண வேண்டும். முறையான வாழ்க்கை துணையிடம் மட்டுமே பாலுணர்வுத் தேவையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய ஒழுக்க விழுமங்களை எல்லாம் விபச்சாரம் சிதைத்து சேதப்படுத்தி விடுகிறது. நவீன காலத்திலோ இந்த ஒழுக்கக் கேடான காரியம் வெவ்வேறு விதங்களில் தலைவிரித்து ஆடுகிறது. காம வேட்டைகளும் சேட்டைகளும் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அசிங்கம் நிறைந்த அனாச்சாரத்தையும் அடக்கி ஒடுக்கும் ஆற்றலும் அணுகுமுறையும் ஓரிறைக் கொள்கையிடம் மட்டுமே இருக்கிறது.
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
(திருக்குர் ஆன் 17:32)
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (60:12)
விபச்சாரி, விபச்சாரம் செய்யும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் செய்வதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடு கின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளை யடிப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2475)
ஏக இறைவனை நம்பியவர்கள் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருக்கக் கூடாது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி விபச்சாரம் செய்யும் போது இறை நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள் என்று எச்சரிக்கிறது இஸ்லாம். இதையும் மீறி இதில் ஈடுபடும் நபர்களுக்கு இம்மையிலும் மறுமை யிலும் கடுமையான தண்டனையை நிர்ணயிக்கிறது.
விபச்சாரம் செய்யும் பெண்ணை யும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ் வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டு இருக்கட்டும்.
(அல்குர்ஆன் 24:2)
(பொய் கூறித் திரிந்தவர், விபச்சாரம் செய்தவர், குர்ஆனைப் புறக்கணித்தவர், பிறர் மானத்தில் விளையாடியவர் ஆகியோருக்குத் தண்டனை வழங்கப்படுவதை மிஃராஜில் நபியவர்கள் பார்த்தார்கள்.)
(மலக்குகளை நோக்கி) “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு (மலக்குகள்) இருவரும் கூறியதாவது:
ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்ட வர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.
அறிவிப்பவர் ஸமுரா பின் ஜுன்துப்,
நூல்: புகாரி (1386)
இணைவைப்புக் கொள்கைகள் விபச்சாரச் செயலுக்கு எதிராக வாய் திறந்து இருக்கின்றனவா? கிடைக்கும் இடமெல்லாம் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆட்களுக்கு தண்டனைகள் தருவதற்கும், திருத்துவதற்கும் சரியான சட்டங்களை வைத்துள்ளனவா? இதற்கெல்லாம் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும். ஆனால், இப்படி ஓரிறைக் கொள்கை கைகட்டி வேடிக்கைப் பார்க்கவில்லை என்பதை மேற்கண்ட செய்திகள் மூலமே புரிந்து இருக்கும்.
கொலை ஓர் பெரும்பாவம்
தினந்தோறும் கொலை பற்றிய செய்தி இல்லாமல் நாளிதழ் வெளி வருவதில்லை எனும் அளவிற்குக் கொலைகள் பெருகி விட்டன. அரசியல், பொருளாதாரம், சுய விவகாரம் என்று பல்வேறு காரணங்களால் இந்தக் கொடுமை சர்வசாதாரணமாக நடக்கிறது. ஆன்மீகம் குறித்து மட்டும் உரக்கப் பேசும் இணைவைப்புக் கொள்கைகள் கொலையைத் தடுப்பதற்குத் தீர்வு சொல்வதில் தோற்றுவிட்டன. ஆனால் இஸ்லாம் இதையும் இரும்புக் கரம் கொண்டு தடுக்கிறது.
காரணம், இஸ்லாம் அமைதியை நாடும் மார்க்கம்; கொலையைக் கொடிய செயல் எனும் கொள்கை கொண்டது இது. உயிர்கள் அனைத்தும் புனிதமானவை என்று போதிக்கிறது. இறை நம்பிக்கை இருப்பவர்கள் கொலையை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று ஆணை இடுகிறது.
(முஃமின்கள்) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள் களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய் பவன் வேதனையைச் சந்திப்பான்.
திருக்குர்ஆன் 25:68
“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்‘ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்‘ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.
(திருக்குர் ஆன் 5:32)
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் “புனிதமிக்க தினம்‘ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இது எந்த நகரம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க நகரம்‘ என்றனர். பிறகு அவர்கள் “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க மாதம்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்கு கின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமான வையாகும்!” எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1739
மனிதர்கள் விட்டொழிக்க வேண்டிய பெரும்பாவங்களை பட்டியல் போடும் இஸ்லாம், அதில் கொலையைக் குறிப்பிடுகிறது. இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு பழிக்குப் பழி சட்டம் மூலம் கடுமையான தண்டனையை கொடுக்கிறது. இந்த உலகில் கொலையாளிகள் தப்பித்து கொண்டாலும் மறுமையில் இறை வனின் கடுமையான வேதனையில் இருந்து எவ்வகையிலும் தப்பிக்க இயலாது என்று எச்சரிக்கை விடுக்கிறது.
இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், “பொய் கூறுவதும்‘ அல்லது “பொய்ச் சாட்சியம் சொல்வதும்‘ பாவங் களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல்: புகாரி 6871
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக் காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப் பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப் படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.
(திருக்குர் ஆன் 2:178, 179)
ஓரிறைக் கொள்கை கூறும் குற்றவியல் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் இடங்களில் கொலை என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்; உயிருக்கு உயிர் எனும் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தைப் பரிகாசம் செய்பவர்கள், கொலையைத் தடுக்க, தீர்வு சொல்ல இயலுமா? கொலையைக் குறைப் பதற்குக் கூட அவர்களிடம் தெளிவான வழி இல்லை; அவர்களின் இணைவைப்புக் கொள்கையிலும் முறையான பதில் இல்லை என்பதே உண்மை.
—————————————————————————————————————————————————————-
ஜாக் கூறும் நொண்டிச்சாக்கு
எம்.எஸ். சுலைமான்
கடந்த செப்டம்பர் 2015 அல்ஜன்னத் இதழில் “சரியான அரபாவும் பெருநாளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதில் உள்ள அபத்தங்களைத் தோலுரித்துக் காட்டி அக்டோபர் 2015 ஏகத்துவம் இதழில் “பெரும்பான்மையைப் பின்பற்றும் ஜாக்’ என்ற மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
இதைப் பார்த்த மாத்திரத்தில் ஜாக்கினர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அதனால் தான் “தொண்டியானியின் பிறை பித்னா’ என்று தரம் கெட்ட வார்த்தைகளில் தடுமாற ஆரம்பித்து விட்டார்கள்.
பொதுவாக, கேட்கப்படும் கேள்விகளுக்கும், வைக்கப்படும் வாதங்களுக்கும் யாரிடம் பதில் இல்லையோ அவர்கள் கோபப்படுவது இயல்பு தான். இதை நபிமார்களின் வரலாறு தொட்டு இன்று வரை நாம் பார்த்து வருகிறோம்.
போலி சுன்னத் வல்ஜமாஅத் தினரிடம், “மத்ஹபு கூடும் என்று கூறுகிறீர்களே, அதற்குக் குர்ஆன், சுன்னாவிலிருந்து ஒரு ஆதாரத்தை யேனும் காட்டுங்கள்’ என்று நாம் கேட்டால் அந்த ஆலிம்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது. அதேபோல் தான் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி, வெகுதூரம் போய் விட்ட ஜாக்கினரிடம், பிறை விஷயத்தில் முரண்பட்டுப் பேசுகிறீர்களே என்று கேட்கும் போது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரை விட அதிகமான கோபம் இவர்களுக்கு வருகின்றது. பதில் இல்லையெனில் கோபம் வரத்தானே செய்யும்?
சரி! இவர்களை இந்தளவிற்கு ஆத்திரமடையச் செய்த அந்தக் கேள்வி தான் என்ன?
“உலகில் எங்கிருந்து பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் நீங்கள், “ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் நாளில் தான் அரபா நோன்பு நோற்க வேண்டும் என்று சொல்கிறீர்களே! இது முரண்பாடாகத் தெரிய வில்லையா?”
இந்தக் கேள்விக்கு அவர்கள் முறையான பதிலை அளித்திருக்க வேண்டும். ஆனால் இவர்களது நிலைப்பாட்டைத் தவிடுபொடியாக்கும் இந்தக் கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கியாமத் நாள் வரையிலும் இக்கேள்விக்குப் பதில் அளிக்க இயலாது.
அதனால் தான் ஆத்திரம் தலைக்கேறி கோபத்தில் வார்த்தை களைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
இவர்கள் திட்டித் தீர்ப்பதால் தஃவா களத்தில் இருக்கும் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
மாறாக ஏகத்துவக் கொள்கையில், குர்ஆன் ஹதீஸை உள்ளபடியே சொல்வதில் இன்னும் உறுதியாகத் தான் இருப்போம் இன்ஷா அல்லாஹ்.
ஜாக்கினர் தங்கள் பத்திரிகையில் “பிறை பார்த்த தகவல் கிடைத்தால் உடனே தெரியப்படுத்துங்கள்’ என்று அகில உலகத்திற்கும் ஒரு அறிவிப்பு செய்வார்கள்.
ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் தான் அரஃபா நோன்பு, சவூதி பிறை அறிவிக்கும் நாளில் தான் ஹஜ் பெருநாள் என்றால் எதற்காக இந்த அறிவிப்பு? யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்?
அடுத்து அவர்கள் கோபத்தில் கொட்டிய சில உளறல்களைப் பார்ப்போம்.
“சென்னையில் பிறை பார்த்த தகவலை தாம்பரத்தில் ஏற்கக் கூடாது என்றார்கள். பிறகு ஏற்கலாம் என்றார்கள். ஊட்டியில் பார்க்கப்பட்ட பிறைச் செய்தியை சென்னையில் ஏற்றுச் செயல்படக் கூடாது என்று மிகுந்த கொள்கை உறுதியோடு முழங்கினார்கள். பிறகு அந்தர்பல்டி அடித்து ஏற்றுக் கொள்ளலாம் என்றார்கள்”
இவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? ஒரு கருத்தைச் சொன்னால் அது தவறாக இருந்தாலும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான வாதம்? இவர்கள் தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக்கூடியவர்களாம்.
தவறான கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறியிருக்க, இவர்களோ தவறான கருத்தைச் சொல்லி விட்டால் அதிலேயே பிடிவாதமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பாதையை அப்படியே பின்பற்றி, அவர்களின் வாதத்தையே முன்வைக்கிறார்கள்.
மேலும் இக்கருத்தைச் சொல் வதற்கு இவர்களுக்குக் கொஞ்சமாவது அருகதை உண்டா?
ஆரம்பத்திலிருந்து ஜாக்கில் இருப்பவர்களும், புதிதாக ஜாக்கில் ஒட்டிக் கொண்டுள்ள அப்துர்ரஹ்மான் என்ற தொண்டியானியும் பிறந்தது முதல் இன்று வரை பிறை விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்களா? இப்போது இருக்கின்ற இதே நிலைபாட்டில் தான் முப்பது வருடங்களாக இருக்கிறார்களா?
பிறை விஷயத்தில் ஜாக் எத்தனை முறை அந்தர்பல்டி அடித்துள்ளது என்று இந்தத் தொண்டியானி, தனது அகில உலக அமீரிடம் கேட்டு விட்டு இதை எழுதியிருக்க வேண்டும்.
ஜாக்கின் ஆரம்ப காலத்தில் பிறை விஷயத்தில் இன்றைக்கு இருக்கின்ற இதே நிலைபாட்டில் தான் இருந்தார்களா?
பிறையைப் பார்க்காமலேயே, கணித்து இந்தத் தேதியில் பெருநாள், இந்தத் தேதியில் நோன்பு என்று முன்கூட்டியே ஒவ்வொரு கிளைக்கும் கடிதம் அனுப்பவில்லையா?
பெருநாள் தினம் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே, பிறை பார்க்கப்படுவதற்கு முன்பே, இந்த நாளில் தான் பெருநாள் என்று தினமணி போன்ற நாளிதழில் அறிக்கை கொடுக்கவில்லையா?
அறிக்கை கொடுத்து ஓரிரு நாட்களில் அதை மாற்றிக் கொள்ளவில்லையா?
இன்றைக்கும் ஜாக்கில் பிறை விஷயத்தில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்களே! ஒரு கூட்டத்திற்கு ஒருநாளும், மற்றொரு கூட்டத்திற்கு அடுத்த நாளும் பெருநாள் என்று இரு பிரிவாக ஜாக் செயல்படுகிறதே!
ஆரம்பித்திலிருந்தே பிறை விஷயத்தில் சமுதாயத்தைக் கூறு போட்டுப் பிரித்தவர்கள் இந்த ஜாக்கினர் தான் என்பது தொண்டியானி அப்துர்ரஹ்மான் போன்றோருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அகில உலக அமீர் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
இந்த லட்சணத்தில், “தொண்டி யானியின் பிறை பித்னா’ என்று நம்மைப் பார்த்து எழுதுகிறார்கள் என்றால் இவர்களது பாஷையில் தண்ணியடித்தவர்களால் தான் இது போன்று எழுத முடியும்.
இன்னொரு அற்புதமான (?) கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள்.
“துபாயிலும், சவூதி அரேபியா வின் பிறைத் தகவலை ஏற்று அறிவிப்புச் செய்கிறார்கள். இவ்வாறு அறிவிப்புச் செய்பவர் களை உங்களால் தடுக்க இயலா விட்டாலும் அங்கிருக்கும் உங்கள் ஜமாஅத்தினர் இத்தகைய பிறை அறிவிப்பை ஏற்றுச் செயல்படக் கூடாது என்று நீங்கள் அறிவித்து இருக்க வேண்டும்.”
முதலில் சவூதியும், துபாயும் இவர்கள் கூறும் பிறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க மாட்டார்கள். சவூதியில் பார்க்கப்பட்ட பிறை சவூதிக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்கள் இதைப் பின்பற்றி பெருநாள், நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டாம் என ஃபத்வாவே கொடுத்துள்ளார்கள்.
உங்கள் நிலைப்பாட்டிற்கு மாற்ற மாக இருக்கும் சவூதியை என்றைக் காவது நீங்கள் கண்டித்ததுண்டா?
பல ஆண்டுகள் சவூதியில் இருந்த இந்தத் தொண்டியானி அப்துர் ரஹ்மானும் சவூதியுடன் அதிகம் தொடர்பு வைத்துள்ள மற்றவர்களும், சவூதி ஜாலியாத்தில் பல வருடங்களாக காசுக்காகப் பணியாற்றுபவர்களும் பிறை விஷயத்தில் வாயே திறக்கவில்லையே! அந்த மர்மம் தான் என்ன?
சரி! அரசாங்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என வைத்துக் கொண்டாலும் அந்தக் கருத்து தவறு என்றாவது பிரச்சாரம் செய்யலாமே! உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்ட பலர் அங்கு இருக்கிறார்களே! அவர்களுக்காவது பிறை விஷயத்தில் சவூதியின் நிலைப்பாடு தவறு என்று உணர்த்தினீர்களா?
நாங்கள் சவூதியில் பார்க்கப்பட்ட பிறையை மட்டும் ஏற்கவில்லை. மற்ற நாடுகளில் பார்க்கப்பட்ட பிறைத் தகவலையும் ஏற்றுக் கொண்டோம் என்றெல்லாம் கூறும் நீங்கள் சவூதியில் வாழும் ஜாக்கினரை லிபியா பிறையை ஏற்று ஒருநாள் முன்பாகவே பெருநாள் கொண்டாடுமாறு என்றைக் காவது சொல்லியிருக்கிறீர்களா?
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் ஏற்று அதைச் செயல்படுத்துவோம் என்று சொல்லி, அதற்காக அறிவிப்பும் செய்யும் நீங்கள், பிறை பார்த்த தகவல் இந்த நாட்டிலிருந்து வந்துள்ளது; அதைப் பின்பற்றி இன்று பெருநாள் என்று என்றைக்காவது மறு அறிவிப்பு செய்துள்ளீர்களா?
“உலகில் இந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் இன்று பிறை ஒன்று’ என ஒவ்வொரு மாதமும் உங்கள் பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறீர்களா? அவ்வாறு வெளியிடாவிட்டாலும் அந்தத் தகவலையாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 மாதங்களுக்கான பிறை பார்த்த பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம்.
இதையெல்லாம் நீங்கள் செய்து விட்டு எங்களிடம் கேள்வி கேளுங்கள்.
“இந்த வருடம் முஹர்ரம் மாத அறிவிப்பு சவூதி தகவல் படி அறிவிக்கப்படவில்லை. எகிப்தில் அறிவிக்கப்பட்டதையே எடுத்தோம்” என்று எழுதியுள்ளீர்களே! இதன்படி சவூதிவாழ் மக்களுக்கு நீங்கள் கொடுத்த அறிவிப்பு என்ன? அதை எப்போது கொடுத்தீர்கள்? உங்கள் அறிவிப்பைக் கேட்டு உங்கள் ஜமாஅத்தினர் முஹர்ரம் மாத நோன்பை என்றைக்கு வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களால் ஒருபோதும் பதில் சொல்ல முடியாது. இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்.
“சென்னையில் பிறை பார்த்த தகவலை தாம்பரத்தில் ஏற்கக் கூடாது என்றார்கள். பிறகு ஏற்கலாம் என்றார்கள்” இது தான் தொண்டியானி அப்துர்ரஹ்மான் நம்மை நோக்கி எழுப்பியுள்ள குற்றச்சாட்டாகும்.
இந்தக் கேள்விக்கு 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அல்முபீன் பிறை ஓர் ஆய்வு சிறப்பிதழிலும், அதன் பின்னர் வெளியிடப்பட்ட “பிறை ஒரு விளக்கம்’ நூலிலும் அப்போதே பதில் கூறியுள்ளோம். அந்தப் பதிலை இங்கே பதிகிறோம்.
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ
நாமே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடமே ஒப்படைத்துள்ளதால் நமது விருப்பம் போல் தீர்மானிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் எவற்றையெல்லாம் தீர்மானித்து விட்டார்களோ அந்த விஷயத்தில் நாம் தீர்மானிக்க ஒன்றுமே இல்லை. அவர்களின் தீர்மானத்திற்கு மாற்றமாக நாம் எதையும் தீர்மானிக்க முடியாது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்மானிக்காமல் நம்மிடம் அப் பொறுப்பை விட்டுள்ள விஷயத்தை மட்டுமே நாம் தீர்மானிக்க வேண்டும்.
சவூதியில் காணப்படும் பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று நாம் தீர்மானித்தால் அந்தத் தீர்மானம் குப்பைக் கூடைக்குத் தான் போக வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் அனைவருக்கும் தலைப்பிறை ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
28 நோன்பு முடிந்தவுடன் தலைப்பிறை என்று தீர்மானிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. அது போல் முப்பது முடிந்த பிறகும் அந்த மாதம் நீடிக்கிறது என்று தீர்மானிக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்பது தெளிவான ஹதீஸ் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டது.
கண்ணால் பிறையைக் கண்ட பிறகு அல்லது காண்பதற்கு ஏற்ற நாளில் கண்டவர் சாட்சி கூறிய பிறகு அதை நம் வசதிப்படி மறுக்க முடியாது. தக்க சாட்சிகள் கூறும் போதும் நாமே கண்ணால் காணும் போதும் ஏற்க வேண்டும் என்று மார்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை மீறி நாம் தீர்மானிக்க முடியாது.
இது போல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை தவிர நாம் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்ட அம்சமும் இருக்கிறது.
இதை நாமே ஏற்றுக் கொண்டிருக்கிற மற்றொரு சட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்தால் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழலாம் என்று மார்க்கம் அனுமதித்துள்ளது.
காயல்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு ஒருவர் தூத்துக்குடி வருகிறார். இவர் கஸ்ர் தொழலாம். ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் பயணம் செய்கிறார். இவர் கஸ்ர் தொழ மாட்டார். ஏனெனில் ஊருக்குள் தான் இவர் சுற்றுகிறார். பயணம் என்றால் ஊரை விட்டுத் தாண்ட வேண்டும் என்று கூறுவோம்.
ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.
இது போன்ற தீர்மானம் செய்வது மட்டுமே நம்மிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
எந்தக் கிராமத்தில் தெரியும் பிறை நமது ஊருக்குத் தெரிய வாய்ப்புள்ளது? எந்தக் கிராமங்களில் காணப்பட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தும்? எவ்வளவு தூரத்தை நாம் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்? என்பன போன்ற விபரங்களை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கலாம். இந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கக் கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மட்டும் தான் மிச்சமாக உள்ளது.
இதுதான் பிறை ஒரு விளக்கம் நூலில் நாம் எழுதிய கருத்தாகும்.
இந்த மார்க்க விளக்கத்தின்படி, சென்னையிலோ அல்லது ஊட்டியிலோ பார்க்கும் பிறையை தமிழகம் முழுவதும் ஏற்று செயல்படுத்துகிறோம்.
துபை மற்றும் வளைகுடா மக்கள் தத்தமது பகுதி என்று சவூதி வரையிலும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் உங்கள் பிறைக் கொள்கையை சவூதியோ மற்ற வளைகுடா நாடுகளோ ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
புகாரி 1909 ஹதீஸில், “மேக மூட்டமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்ற பிற்பகுதி ஜாக்குக்கு எதிராக இருப்பதால் அதை மட்டும் மறைத்து விட்டு ஜாக் வெளியிட்டிருந்தது. இதை நாம் நமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
இதைப் பற்றி தொண்டியானி அப்துர்ரஹ்மான் எழுதும் போது, ஹதீஸின் பிற்பகுதி ஜாக்குக்கு எதிரானது என்றால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரானது தான். ஏனென்றால் திருச்சியில் மேக மூட்டமாக இருந்தால் சென்னைத் தகவலை எதிர்பார்க்கக் கூடாது என்று எழுதியுள்ளார்.
இதற்கும் மேலே நாம் சொன்ன பதில் தான். திருச்சியில் பார்த்ததை தமிழகம் முழுமைக்கும் ஒரே பகுதியாகத் தீர்மானிக்க மேற்கண்ட ஹதீஸில் அனுமதி உள்ளது.
ஆனால் அதே சமயம் ஜாக் தீர்மானிப்பது போல் உலகம் முழுவதும் ஒரே நாளாகத் தீர்மானிக்க அனுமதியில்லை என்பதை பிறை ஒரு விளக்கம் நூலில் திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விரிவாக விளக்கியுள்ளோம்.
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கரீதியாக எங்களிடம் பதில் உள்ளது. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கம் சார்ந்த பதில் உங்களிடம் இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு தனிமனிதன் மீது கொண்ட வெறுப்பும் பொறாமையும் உங்களை மார்க்க விஷயத்தை விட்டும் திசை திருப்பி விடவேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
இன்றைக்கு இருப்போர் நாளை இறந்து போவர். ஆனால் திருக்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் கியாமத் நாள் வரைக்கும் இருக்கும்.
நாம். பிறை விஷயத்தில் இந்தக் கருத்தில் இருக்கிறோம் என்பதற்காக நம்மை தரக்குறைவான வார்த்தை களால் விமர்சனம் செய்கிறீர்களே! இதே கருத்தைக் கொண்ட சவூதி அறிஞர்களை இந்த அளவிற்கு அல்ல… ஒரு சிறு விமர்சனத்தையாவது நீங்கள் செய்ததுண்டா?
அடுத்து, கட்டுரைக்குச் சம்பந்த மில்லாத சில குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார்கள்.
ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூ ஹுதைபாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது….
திருக்குர்ஆன் தர்ஜுமா, பதிப்பு: 7, பக்கம்: 1309, குறிப்பு: 357
அபூஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருப்பது அபூஹுதைபா வுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.
திருக்குர்ஆன் தர்ஜுமா பதிப்பு: 8, பக்கம்: 1446
இதில் குற்றம் கண்டுபிடிக்க வந்த தொண்டியானி அப்துர்ரஹ்மான், “பெரியவர் பால் குடித்தல் தொடர்பான ஹதீஸை தொண்டியானி நிராகரிக்கிறார். அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை நிராகரிப்பதற்காக ஹதீஸிலே எப்படி பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று பாருங்கள்” என்றெல்லாம் மேற்கண்ட அல்ஜன்னத் கட்டுரையில் எழுதி தனது காழ்ப்புணர்வைப் பட்டவர்த்தன மாகக் கொட்டியிருக்கின்றார்.
அதாவது முந்தைய பதிப்பில், வளர்ப்பு மகன் என்பதை விட்டு விட்டோமாம் அடுத்த பதிப்பில் வளர்ப்பு மகன் என்பதைச் சேர்த்துக் கொண்டோமாம். இதனால் ஹதீஸில். பித்தலாட்டம் செய்து விட்டோமாம். இவர் எடுத்துக்காட்டியுள்ள இரண்டு குறிப்புகளிலும் ஹதீஸ் தொடர்பான ஒரு கருத்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதை எடுத்துப் போட்டு ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்று பாருங்கள்.
முதல் பதிப்பில், “வளர்ப்பு மகன்’ என்று போடாமல் அடுத்த பதிப்பில் வளர்ப்பு மகன் என்பதைச் சேர்த்துக் கொண்டோமாம் இதனால் ஹதீஸில் பித்தலாட்டம் செய்து விட்டனர் என்று தொண்டியானி அப்துர்ரஹ்மான் கூறுகின்றார்.
ஸாலிமுடைய செய்தியில் உள்ள பிரச்சனை என்ன? பருவமடைந்த ஓர் அன்னிய ஆண், ஒரு அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருக் கலாம்; அவளிடத்தில் பால் குடித்து விட்டால் அவ்விருவருக்கும் தாய், மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது தான் அந்தச் செய்தியில் கூறப்படுகின்றது. இது திருக்குர்ஆன் கூறும் சட்டத்திற்கு எதிராக உள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகின்றது.
திருக்குர்ஆனுக்கும், ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாக இந்த ஹதீஸின் கருத்து அமைந்துள்ளது என்பதால் இதை நிராகரிக்கிறோம். (இது தொடர்பாக பல முறை விரிவாக ஏகத்துவம் இதழிலும் தனியாக நூற்களிலும் உரைகளிலும் விளக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் விவாதம் செய்தும் நிரூபித்துள்ளோம்.)
அபூஹுதைபாவின் மனைவிக்கு ஸாலிம் வளர்ப்பு மகனாக இருப்பதால் அப்பெண்ணுக்கு அவர் மகனாக ஆகி விடுவாரா? மஹரமாக ஆகிவிடுவாரா? வளர்ப்பு மகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்பெண்ணைப் பொறுத்தவரை ஸாலிம் ஓர் அன்னிய ஆண் தானே! இதில் என்ன பித்தலாட்டம் செய்து விட்டோம்?
குர்ஆனுக்கு முரண்படும் கருத்தைக் கொண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் சொல்லவில்லலை. தொண்டியானி அப்துர்ரஹ்மான் இருக்கும் ஜாக்கும் தான் இந்தக் கருத்தைச் சொல்லியுள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தால் உங்கள் அகில உலக அமீரிடம் கேளுங்கள். அவர் அதை மறுத்தால் அவர்கள் வெளியிட்ட நூலை நாங்கள் தருகிறோம். வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் ஜாக்கிற்கு எதிராக ஒரு கட்டுரையை தொண்டியானி எழுதட்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸை நிராகரிக்கின்றது என்பதை நிரூபிக்க மற்றொரு அவியலை தொண்டியானி அப்துர்ரஹ்மான் ஆதாரமாகத் தருகின்றார்.
“அப்பாஸ் அலீ என்பவர் இவர்களுடன் இருந்து இப்போது விலகி விட்டார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இன்ன பக்கத்தில், இவர்கள் ஹதீஸில் செய்யும் பித்தலாட்டத்தையெல்லாம் தோலுரித்துக் காட்டுகின்றார்” என்று மிகப் பெரிய ஆதாரத்தை, உலகில் யாரும் காட்ட முடியாத ஆதாரத்தை தொண்டியானி காட்டியுள்ளார்.
ஒரு குற்றச்சாட்டைக் கூறுகின்றார் என்றால் அந்தக் குற்றச்சாட்டு என்ன என்பதை விளக்கி, அதற்குத் தாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும். அவர் அப்படிச் சொன்னார்; இவர் இப்படிச் சொன்னார் என்றெல்லாம் குற்றம் சுமத்துவதாக இருந்தால் நாங்களும் அதே போன்று குற்றம் சுமத்த முடியும்.
கோவை அய்யூப் என்ற ஜாக் தலைமை நிர்வாகி எத்தனை பெண்களை ஏமாற்றியிருக்கிறார்; பெண்கள் விஷயத்தில் படுமோசமாக நடந்து கொண்டார் என்றெல்லாம் சமூக வளைத்தளங்களில், இன்ன வெப்சைட்டில் எழுதியிருக்கிறார்கள் என்று ஆதாரம் காட்ட முடியும். இப்படி எழுதுவது ஒரு ஆதாரமா?
சரி! அப்பாஸ் அலீ தான் உங்களுக்கு ஆதாரம் என்றால் அவர் எழுதிய, பேசிய அனைத்தையும் ஆதாரமாகப் போடுங்கள். அவர் ஜாக்கையும் தொண்டியானி அப்துர்ரஹ்மான் போன்றவர்களையும் நார் நாராகக் கிழித்து எழுதியுள்ளாரே! அவற்றையும் ஆதாரமாகக் காட்டுங்கள்.
இவ்வளவு ஏன்? எங்களை விட்டு சென்ற பின்னால் ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு சொல்வது சின்ன விஷயம் என்று அப்பாஸ் அலீ பேசியுள்ளாரே! அதை ஆதாரமாகக் கொண்டு ஜாக் பள்ளிகளில் இரண்டு பாங்கு சொல்லுங்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் ஜாக்குடனும், தவ்ஹீத் ஜமாஅத் துடனும் இருந்து பிரச்சாரம் செய்த ஹாமித் பக்ரி இப்போது கப்ருகளை வணங்க வேண்டும், மீலாது விழா கொண்டாட வேண்டும் என்று சொல்- தர்ஹாக்களை வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரும் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றார். எனவே அவரையும் நீங்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தை ஒருவன் திட்டி விட்டால் போதும். அது தான் உங்களுக்கு மிகப் பெரிய ஆதாரமாக ஆகிவிட்டது. அந்தோ பரிதாபம்!
“ஏர்வாடி, மதுரை ஆகிய ஊர்களில் நடந்த பிறை விவாதங் களில் இவர்களின் கருத்துக்கள் தவறானவை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டதால் தான் அந்த சிடிக்களை, மற்ற சிடிக்களை வெளியிட்டது போல் வெளியிடாமல் மறைத்து வைத்தார்கள்”
இப்படி ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பையும் மேற்படி தொண்டியானி எழுதியுள்ளார்.
அந்த விவாதத்தில் ஜாக் தான் வெற்றி பெற்றது என்றால் அந்த சிடிக்களை நீங்கள் வெளியிட்டு எங்கள் கருத்து தவறானது என்று நிரூபிக்கலாமே! நீங்கள் அதை மறைத்து வைப்பது ஏன்? எடிட் செய்யப்படாத சிடி இருந்தால் அதை வெளியிட்டு, எங்களுக்கும் ஒரு பிரதி அனுப்பி வையுங்கள். நாங்கள் அதை இணைய தளத்தில் பதிவேற்றுகிறோம்.
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று ஏர்வாடி விவாதத்தில் ஜாக் சார்பாக விவாதித்த சிராஜ், அபூஅப்துல்லாஹ் போன்றவர்கள் இப்போது பிறை விஷயத்தில் எந்தக் கருத்தில் இருக்கிறார்கள் என்பது அகில உலகத்திற்கும் தெரிந்த விஷயம்.
இவ்வளவு ஏன்? அந்த விவாதத்திற்குப் பின்னர் தான் ஜாக்கும் சோதிடக் கணிப்புப் பிறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை பத்து வருடங்களுக்கும் மேலாகப் பின்பற்றியது. அதன் பிறகு, உலகில் எங்கிருந்து பிறை பார்த்தாலும் ஏற்க வேண்டும் என்ற கருத்துக்கு மீண்டும் மாறி, சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் ஐக்கியமாகி, தற்போது பிறை விஷயத்தில் ஜாக் எந்தக் கருத்தில் இருக்கிறது என்பது ஜாக்கிற்கும் தெரியாது; இந்தக் கட்டுரையை எழுதிய தொண்டியானிக்கும் தெரியாது என்பது தான் வேடிக்கை.
ஏர்வாடி பிறை விவாத சிடியை வெளியிட்டால் இந்தக் குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடும் என்பதால் தான் அதை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள் போலும். ஆக, தொண்டியானியின் பிறை பித்னா என்று தலைப்பிட்டு தங்களைத் தாங்களே ஜாக்கினர் திட்டியுள்ள கூத்தைத் தான் அல்ஜன்னத் அரங்கேற்றியுள்ளது.
—————————————————————————————————————————————————————-
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்: 24
இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
பொய்யான ஹதீஸ்: 6
“அல்லாஹ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மக்களிடம் கோபம் கொள்கின்ற வரையிலும், குர்ஆன் வசனங்களுக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் இருக்கின்றன என்று புரிகின்ற வரையிலும் ஒர் அடியான் மார்க்கத்தை முழுமையாக விளங்கிய வனாக ஆவதில்லை” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை “கல்வியின் சிறப்பு’ என்ற பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வந்துள்ளார். “மக்கள் அனைவரிடமும் கோபம் கொள்கின்ற வரை” என்ற கூடுதல் வார்த்தையுடன் இதே செய்தி பதிவாகியுள்ளது.
“அவரிடத்தில் அவரை விடவும் வேறு எவரும் மிக கோபத்திற்குரியவர் கிடையாது என்ற நிலையை அடைகின்ற வரை” என்ற கூடுதல் வாசகத்துடனும் இந்தச் செய்தி வந்துள்ளது.
விமர்சனம்:
இந்த ஹதீஸை இப்னு அப்துல் பர், ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிப்பதாகப் பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மர்ஃபூஃ ஆக, அதாவது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பது சரியல்ல! அபுத் தர்தா (ரலி) கூறியதாக அறிவிப்பது தான் சரியாகும் என்று இப்னு அப்துல் பர் அவர்களே தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறு ஹாஃபிழ் இராக்கி அவர்கள், இஹ்யா ஹதீஸ்களின் இலட்சணங்களைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே எழுதிய “அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார்’ என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள். அபுத் தர்தா சொன்ன கருத்தை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு கோளாறு நடந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்களுடன் இணைக்கின்ற பாதகத்தையும் பாவத்தையும் கண்டுக் கொள்ளாமல் கஸ்ஸாலி இந்த ஹதீஸை இஹ்யாவில் அடித்து விட்டுள்ளார். இது மட்டுமின்றி இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமானதாகும்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் ஆமிர் மற்றும் அவரது ஆசிரியான அப்துல் மலிக் பின் யஹ்யா ஆகிய இருவரையும் நம்மால் அறிய முடியவில்லை. மேலும், இந்தத் தொடரில் அல்ஹகம் பின் அப்தா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். இவர் இப்னு மாஜாவின் அறிவிப்பாளர். இவரிட மிருந்து பலர் அறிவித்தாலும் அவர்கள் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிடவில்லை. இவர் பலவீனமானவர் என்று அஸ்தி கூறுவதாக மீஸானுல் இஃதிதாலில் ஹாபிழ் தஹபீ கூறுகின்றார். ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இவர் மறைக்கப்பட்டவர் என்று தக்ரீபில் தெரிவிக்கின்றார்.
அறிவிப்பாளர் தொடர் அடிப் படையில் போலியான ஹதீஸாக இருப்பதுடன் கருத்து அடிப் படையிலும் போலியாகவே உள்ளது. பொதுவாக மக்களிடம் கோபம் கொண்டு பகைக்க வேண்டுமென்றால் அவர்கள் இணைவைப்பில் இருக்க வேண்டும்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 60:4) என்ற வசனம் இதை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
ஒட்டுமொத்த மக்களும் அப்படி இணைவைப்பில் இருக்க மாட்டார்கள். ஒரு சாரார் ஏகத்துவவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்டவரை நேசிக்க வேண்டும். அவர்களைப் பகைத்து விடக்கூடாது.
இந்த ஹதீஸோ மக்கள் அனைவரையும் பாகுபாடு காட்டாமல் பகைக்கச் சொல்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்படி முஃமின்களையும் சேர்த்து ஒரு போதும் கூறமாட்டார்கள். எனவே இது கருத்தின் அடிப்படையில் ஒரு போலியான செய்தியாகி விடுகின்றது.
பொய்யான ஹதீஸ்: 7
(அல்குரபா) அரிதானவர்கள் யார் என்று (தோழர்கள் வினவும் போது அவர்களை நோக்கி) இன்றைய தினம் எதில் இருக்கின்றீர்களோ அதைப் பற்றிப் பிடிப்பவர்கள் என்று (நபி யவர்கள் பதிலளித்தார்கள்) உள்ளது.
இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி இஹ்யாவில் அதே கல்வியின் சிறப்பு என்ற பாடத்தில் கொண்டு வருகின்றார்.
“இந்த ஹதீஸிற்கு நான் எந்த ஓர் அடிப்படையையும் காணவில்லை’ என்று ஹாஃபிழ் இராக்கி அவர்கள் அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்,
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மதஹபைச் சார்ந்த இமாம் சுபுக்கீ அவர்கள் தபகாத்துஷ் ஷாஃபி என்ற நூலில் இஹ்யாவில் இஸ்னாத் இல்லாத ஹதீஸ்கள் என்ற தலைப்பில் ஒரு சிறிய தொகுப்பை வெளி யிட்டுள்ளார்கள். அதில் மேற்கண்ட ஹதீஸையும் பதிவு செய்திருக்கின்றார். இப்படி அறிவிப்பாளர் தொடர் இல்லாத பொய்யான ஹதீஸை எந்த வித உறுத்தலுமில்லாமல் கஸ்ஸாலி இஹ்யாவில் கொண்டு வந்திருக்கின்றார்.
பொய்யான ஹதீஸ்: 8
அமலை (வணக்கம் செயவதை) உள்ளுணர்வாக அளிக்கப்பட்ட காலத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். வாதம் புரிவதையே உள்ளுணர்வாக அளிக்கப்பட்ட ஒரு கூட்டம் பின்னால் வரும் என்று (நபி (ஸல்) கூறியதாக சில ஹதீஸ்களில் உள்ளது)
இஹ்யாவில், இந்த ஹதீஸை கஸ்ஸாலி, பயானுல் கத்ரில் மஹ்மூத் மினல் உலூமில் மஹ்மூதா என்ற பாடத்தில் கொண்டு வருகின்றார்.
இந்த ஹதீஸை நான் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கி அவர்கள் கூறுகின்றார்கள். தபகாத்துஷ் ஷாஃபி என்ற நூலில் இமாம் சுபுக்கி அவர்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றார்கள்
விவாதமும் விதண்டா வாதமும்
ஒரு பேச்சுக்கு இந்த ஹதீஸை சரி என்று வைத்துக் கொண்டாலும், இது பொத்தாம் பொதுவாக விவாதத்தை மறுக்கின்றது. அந்த அடிப்படையில், இது மார்க்கத்திற்கு எதிரான நிலைபாடாகும். இதற்கு எடுத்துக்காட்டு கூறுவதற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை. தமிழ்நாட்டில் அசத்தியம் மரண அடி வாங்கி, மண்ணைக் கவ்வியதிற்கு அடிப்படைக் காரணமே தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்ப காலகட்டங்களில் கண்ட விவாதக் களங்கள் தான்.
இன்று கண்ட கண்ட அநாமதேயங்கள், அடையாளம் தெரியாத அரை வேக்காட்டு ஆசாமிகள், நம்முடன் விவாதம் நடத்தி விட்டால் தனக்கு ஒரு பெயர் கிடைக்கும் என்று கிளம்பி வருகின்றன. தலைவிதியே என்று இந்தத் தகுதியற்றவர்களுடன், தரங்கெட்டவர்களுடன் விவாதமும் தவ்ஹீது ஜமாஅத் நடத்துகிறது. இதற்குக் காரணம், தவ்ஹீது ஜமாஅத் விவாதத்திலிருந்து பின்வாங்கி விட்டது என்ற பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.
ஆனால் அன்று ஒரு பத்ருத்தீன் என்ற பரேலவியைத் தவிர்த்து வேறு யாரும் விவாதக் களத்தை சந்திக்க முன் வரவில்லை. அந்த அளவுக்கு விவாதம் அச்சத்தையும், ஆட்டத் தையும் எதிரிகளுக்குக் கொடுத்தது. அதனால் சத்தியம் மேலோங்கு வதற்கும் மென்மேலும் வளர்வதற்கும் விவாதம் ஓர் அற்புத ஆயுதமாக அமைந்தது. அது தான் நபிமார்களின் வலுவான ஆயுதமாகத் திகழ்ந்தது.
ஆரம்ப இறைத்தூதர் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடத்தில் அதிகமான அழகிய வாதங்களை எடுத்து வைத்தார்கள். அந்த அற்புதமான அறிவு ரீதியிலான வாதங்களுக்குப் பதிலளிக்கத் தெரியாத வீம்பு பிடித்த ஏகத்துவ எதிரிகள் கூறிய வார்த்தைகள் இதோ:
“நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! நீர் உண்மை யாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 11:32
பகுத்தறிவுப் பகலவன் வீரமிகு ஏகத்துவப் பரப்புரையாளர் இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிலைகளை நொறுக்கித் தள்ளிய பின், ஊர் பஞ்சாயத்துக்காரர்களால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட வேளையில் அவர்கள் வைத்த வாதங்கள் சிலை பற்றிய எதிரிகளின் சிந்தனைகளை சுக்குநூறாகச் சிதற வைத்தது.
“இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே விழிப் படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)
அல்குர்ஆன் 21:62-67
அது போன்று அரசனிடம் அவர்கள் வைத்த வாதம் அசைக்க முடியாத அழுத்தமான வாதமாகும். இதைப் பின்வரும் வசனம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
அசத்தியவாதியை வாய்ப் பொத்தி மவுனம் மட்டுமல்ல! மரணமும் அடையச் செய்யக்கூடிய அற்புத ஆற்றல் வாதத்திற்கு இருக்கின்றது. அதனால் தான் நபிமார்களின் இந்த வழிமுறையை நபி (ஸல்) அவர்களையும் கடைப்பிடிக்கவும் கைக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
அழகிய விவாதம் என்பது மார்க் கத்தில் புகழப்படக்கூடிய அருமையான விவாதமாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்பதுடன் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.
விவாதத்தில் இகழத்தக்க விவாதமும் இருக்கின்றது. அது விதண்டாவாதம் ஆகும். அதற்கும் உதாரணத்தை நம்முடைய சமீப கால வரலாற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
அல்லாஹ்வுக்கு அனைத்தும் ஆற்றல்களும் இருக்கின்றன என்பதை இந்த அப்துல்லாஹ் ஜமாலி என்ற பரேலவிக் கூட்டத்திற்கும் பகிரங்கமாகத் தெரியும்.
இவர்களில் யாராவது ஒருவருக்கு முதலமைச்சரை அல்லது பிரதம அமைச்சரை நன்கு தெரியும் என்று வைத்துக் கொள்வோம். அது மாதிரியான கட்டங்களில் அவர்கள் நேரடியாகவே முதலமைச்சரையோ அல்லது பிரதம அமைச்சரையோ போய்ச் சந்தித்து விடுவார்கள். கட்சியின் எம்.எல்.ஏ.வையோ அல்லது எம்பியையோ அவர்கள் துணைக்கு அழைப்பது கிடையாது. அதிலும் இறந்து போன எம்.எல்.ஏ.வையோ அல்லது எம்.பி.யையோ துணைக்கு அழைத்தால் இவர்களை என்ன வென்போம்? இதே அளவுகோலை இவர்கள் அல்லாஹ்வுடைய விஷயத்தில் பொருத்திப் பார்ப்பது கிடையாது.
அல்லாஹ் அனைத்து ஆற்றல் களையும் பெற்றவன். அப்படிப்பட்ட அந்த அல்லாஹ்வை தொழுகை மூலம் நெருங்குவதற்கும் நேரடியாக உதவி தேடுவதற்கும் வாய்ப்பும் வசதியும் இருக்கும் போது அவ்லியாக்களை துணைக்கு வைத்து, அதிலும் குறிப் பாக இறந்து போன அவ்லியாக்களைத் துணைக்கு அழைத்து உதவி தேட வேண்டும் என்றும் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் கூறுகின்றனர். இது உண்மையில் விதண்டாவாதமகும்.
இதையே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
தங்களுக்குச் சான்று கிடைக் காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரின் உள்ளங்களில் பெருமை தவிர வேறில்லை. அதற்கு அவர்கள் தகுதி படைத்தோர் இல்லை. அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்
அல்குர்ஆன் 40:56
இந்த விதண்டாவாதம் மார்க்கத்தில் வெறுக்கப்பட்டதாகும். அதே சமயம் அழகிய விவாதம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கஸ்ஸாலி குறிப்பிடும் இந்தப் போலி ஹதீஸ் பொதுவாக விவாதத்தையே தடை செய்வது போல் அமைந்துள்ளது. எனவே அறிவிப் பாளர் தொடர் அடிப்படையிலும் கருத்து அடிப்படையிலும் இந்தச் செய்தி தவறானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.