ஏகத்துவம் – மார்ச் 2009

தலையங்கம்

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு!

மவ்லிது விழா புறக்கணிப்பு!

திருமண விழா புறக்கணிப்பு!

நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு!

பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு!

கத்னா விழா புறக்கணிப்பு!

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!

இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு!

இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு!

புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் அதையும் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்.

திருமணம் எனும் போது திருமண சபையில் ஓதப்படும் யாநபி பாடல், வாங்கப்படும் வரதட்சணை, வழங்கப்படும் பெண் வீட்டு விருந்து காரணமாக அதைப் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்!

இவை அல்லாமல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத மேடைகளிலும் புறக்கணிப்பு! அது இஸ்லாமிய அமைப்புகள், அல்லது பிற மத அமைப்புகள் பங்கு கொள்ளும் பொது மேடைகளாயினும் சரி! அல்லது அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்கு கொள்ளும் மேடைகளாயினும் சரி! நாம் புறக்கணிக்கவே செய்கிறோம்.

இதனால் உறவினர்களுக்கு மத்தியில் விரிசல்! நண்பர்களுக்கு மத்தியில் பகைமை! அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி போன்றவற்றைச் சந்திக்கிறோம்.

இவையெல்லாம் ஒரு தவ்ஹீதுவாதியின் உள்ளத்தில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு விதமான சலிப்பு, ஒரு விதமான சங்கடம் நம் உள்ளத்தை ஆட்கொள்கின்றது.

எங்கும் புறக்கணிப்பு! எதிலும் புறக்கணிப்பு! ஏன் இப்படி? என்ற கேள்விக் கணையை நம்முடைய மனம் தொடுக்கின்றது.

இவை அனைத்துமே ஒன்றே ஒன்றுக்காகத் தான். இறைவனுக்கு இணை வைக்கும் பாவத்திற்கு நாம் துணை போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் புறக்கணிப்புகள்!

மற்றவர்களுடன் நாம் பங்கேற்கும் மேடையில் நாம் பேசிய பின்பு வரும் பேச்சாளர் இணை வைப்பைப் பேசி விடும் போது, நாம் இருக்கும் போதே உருவப் படங்களைத் திறந்து வைக்கும் போது, நெருப்பைப் புனிதமாகக் கருதி குத்து விளக்கை ஏற்றும் போது இந்த இணை வைத்தல் நிகழ்ச்சியில் நாமும் பங்கெடுத்தவர்களாகி விடுகின்றோம்.

பிற மதத்தவர்களுடன் இந்த நிலை என்றால், இஸ்லாமிய அமைப்புகளுடனும் இதே நிலை தான். பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சைத் துவக்கும் போது, முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். அல்லது உரையை முடிக்கும் போது, நபியவர்களைக் கனவிலும் நனவிலும் கண்டு களிப்போம் என்று கூறுவார்கள். இந்த இணை வைப்புக்கு நாம் சாட்சியாக முடியுமா?

எனவே இதில் நாம் எள்ளளவு கூட சமரசம் செய்யாமல் புறக்கணிக்கிறோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது நம்மைக் கொள்கையில் முடமாக்கி விடுகின்றது. ஏன்? பிணமாகவே ஆக்கி விடுகின்றது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

இந்த பாதுகாப்பு அரணைத் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கையில் எடுத்தார்கள். இணை வைப்பு ஊரில் பகை கொண்டு குகை சென்ற குகைவாசி இளைஞர்கள் கையில் எடுத்தார்கள்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

நாளை மறுமையில் அவரவர் வணங்கிய தெய்வங்களுக்குப் பின்னால் செல்லுங்கள் என்று ஒரு குரல் ஒலிக்கும். அவ்வளவு தான்! ஈஸா நபி, உஸைர் ஆகியோரது தோற்றத்தில் அமைந்த உருவங்களுக்குப் பின்னால் அவர்களை வணங்கிய கூட்டத்தினர் சென்று விடுவர். (முஹ்யித்தீன், காஜா முயீனுத்தீன், ஷாகுல் ஹமீது ஆகியவர்களை வணங்கியவர்களின் நிலையும் அதுதான்.) அவர்கள் அனைவரும் நரகத்தில் வீழ்ந்து விடுவர்.

ஆனால் ஒரு கூட்டம் மட்டும் யாருக்குப் பின்னாலும் செல்லாமல் அசையாமல் நிற்பர். இதைப் புகாரியில் இடம் பெறும் ஹதீஸில் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லைஎன்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லைஎன்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ள மாட்டீர்கள்என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:

மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பாளர் ஒருவர் “ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும், கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர்.

முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் “யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லைஎன்று கூறப்படும். மேலும், “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!என்பார்கள். உடனே “நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா?” என (ஒரு திசையைச்) சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம்என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லைஎன்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர்.

இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டு கொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது “எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனரே!என்று கேட்கப்படும்.

அவர்கள், “உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்என்று பதிலளிப்பர்.

அதற்கு அல்லாஹ், “நானே உங்கள் இறைவன்என்பான். அதற்கு அவர்கள் “நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 4581, 7440

இந்தப் பதிலைச் சொல்பவர்கள் யார்? உலகத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்ச்சிகளை அவனுக்காகப் புறக்கணித்தார்களே – அவனுக்காக உறவுகளை, ஊர்களை, வரவுகளை, வாழ்க்கை வசதிகளைப் புறக்கணித்தார்களே இம்மக்கள் தான் இந்தப் பதிலைச் சொல்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள்! இணை வைப்பு நடக்கும் இடம் எங்கும் புறக்கணிப்பு, எதிலும் புறக்கணிப்பு என்பதில் சலிப்புத் தட்டுமா? என்று இப்போது சொல்லுங்கள்.

எனவே இணை வைப்பு நிகழ்ச்சிகளை, நிரல்களை, விருந்துகளைப் புறக்கணியுங்கள்.

அதிலும் குறிப்பாக இது மவ்லிதுக் காலம்! இந்த மவ்லிதுக் காலத்தில் மவ்லிதுப் பாடல்களைப் பாடுகின்ற சபைகளைப் புறக்கணியுங்கள். அதற்காகச் சமைக்கப்பட்ட நெய்ச் சோறு, புலவு, பிரியாணி போன்ற சாப்பாட்டுக்கு ஊர் வரி செலுத்தாதீர்கள்.

“சாப்பாடு வேண்டாம்; ஆனால் ஊர்க் கட்டுப்பாட்டுக்காக வரியை மட்டும் செலுத்துகிறேன்’ என்று செலுத்தினாலும் அதுவும் இணை வைத்தலுக்குத் துணை போகும் செயல் தான். எனவே இது போன்ற மவ்லிதுகளுக்கு வரி செலுத்தியோ, அல்லது வரி செலுத்தாமல் இலவசமாகவே வருகின்ற உணவுகளையோ வாங்காதீர்கள். புறக்கணியுங்கள்! புறக்கணிப்பில் புடம் போட்ட தங்கமாக இருங்கள்!

———————————————————————————————————————————————–

பாதை திரும்பிய பகுத்தறிவாளர்

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்எனும் (30:30ஆவது) இறை வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

நூல்: புகாரி 1358, 1359, 1385, 4775

பிறக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் பிறக்கும் குழந்தைகளை, பெற்றோர் தான் தங்களுடைய மார்க்கத்திற்கு மாற்றி விடுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதையே ஒரு கவிஞன் கொஞ்சம் மாற்றி, “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே! அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே!’ என்று சொல்கின்றான்.

ஒருவர் செல்கின்ற வாழ்க்கைப் பாதை சரியான பாதையாக இருக்க வேண்டும். அது இஸ்லாம் எனும் பாதை தான் என்பதையே இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்குகின்றார்கள்.

உலகில் பிறந்த ஒருவருக்கு இஸ்லாமியப் பாதை தான் இயற்கையான பாதை! மனித இயல்புக்கு இசைவான பாதை! நல்ல ஒரு சிந்தனையாளர் சிந்தித்துப் பார்த்தால் அவருக்கு இஸ்லாம் தான் சீரிய பாதையாகத் தெரியும்.

* இம்மார்க்கத்தின் உயர் கொள்கையும் உயிர்க் கொள்கையுமான ஓரிறைக் கொள்கை

* சாதி பேதமற்ற சமுதாயம்

* நீதி மிக்க குற்றவியல், உரிமையியல் சட்டங்கள்

* மறுக்க முடியாத மறு உலகக் கொள்கை

* இவை அனைத்தையும் தன்னுடைய அறிவுப்பூர்வமான அழகிய வாதங்கள் மற்றும் அறிவியல் ரீதியில் முன்வைக்கும் அல்குர்ஆன்.

இதையும் அல்குர்ஆன் வெறுமனே வைக்கவில்லை. ஓர் அறைகூவலுடனே வைக்கின்றது. இந்தக் குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றைய அறிவியல் உலகம் வரை இந்த அறைகூவல் எதிர்கொள்ளப்படவே இல்லை. இஸ்லாம் தான் உலகில் சரியான பாதை என்பதற்கு இந்த ஒன்றே சான்றாக அமைகின்றது.

இப்படிப்பட்ட இயற்கையான பகுத்தறிவு மார்க்கத்தை விட்டுத் தான் திருவாரூர் அருகிலுள்ள அடியக்காமங்கலத்தில் பிறந்த கலிக்குஸ்ஸமான் என்ற சகோதரர் திராவிடர் கழகத்திற்குச் செல்கிறார்.

முஸ்லிமாகப் பிறந்த அவருக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாததால் அவர் நாத்திக இயக்கத்திற்குப் பாய்ந்து விடுகின்றார். எழுபதுகளில் வேலூர் லிப்டன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம், நாத்திகத்திலேயே நகர்ந்தது.

நாத்திகத்திற்கு நல்லதொரு பதில்

2007ல் ஒரு புத்தகம் அவருக்குக் கிடைக்கின்றது. அந்தப் புத்தகம் அவரது நாத்திகக் கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் அளித்தது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சியின் ஒளி ஒலி நாடாப் பதிவுகள் அவரது உள்ளத்தில் ஒளிக்கதிர்களைப் பதிய வைக்கின்றன. பகுத்தறிவுக்குத் தேவை விளக்கமான, விரிவான, அறிவியலுக்கு வேட்டு வைக்காத அரிய பதில்கள் தான். அந்தப் பதில் தவ்ஹீது ஜமாஅத் மூலம் அவருக்குக் கிடைத்தது. அவ்வளவு தான்! குர்ஆன் அவரது உள்ளத்தில் குடியமர்ந்தது.

வினாக்களுக்கு விடை தந்த விமானப் பயணம்

இந்நிலையில் அமெரிக்காவில் பணியாற்றும் அவரது மகளார், இவரை அமெரிக்காவுக்கு வருகை தர அழைக்கின்றார். “அமெரிக்காவில் வீட்டில் இருக்கும் போது அதிகமாகப் போரடிக்கும். அதனால் வரும் போது புத்தகங்கள் வாங்கி விட்டு வாருங்கள்’ என்று மகளார் அவரிடம் தெரிவித்திருந்தார்.

அது போல் அவர் மண்ணடிக்குச் சென்று நூல்களை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுகின்றார். பறக்கின்ற விமானத்துடன் அவரது சிந்தனை விமானமும் சிறகடித்துப் பறக்கின்றது.

அல்குர்ஆனின் வானம் தொடர்பான வசனங்கள், வானத்தில் பறக்கும் அவரது மனதில் படுகின்றன. அடுக்கடுக்கான அகன்ற வானங்களைப் பற்றி, தன்னுடைய வாழ்நாளில் இன்றைய நவீன வாகனங்களில் பறந்திராத, இது பற்றிப் படித்திராத, எழுதப் படிக்கத் தெரிந்திராத முஹம்மது நபிக்கு எப்படிச் சொல்ல முடிந்தது?

“இது மனித ஆற்றலுக்கு உட்பட்டதல்ல! மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆற்றல், சக்தி தான் இந்தக் குர்ஆனை அருளியிருக்க முடியும்’ என்று, விமானம் அமெரிக்க எல்லையைத் தொடுமுன், அவரது சிந்தனை விமானம் எல்லையைத் தொட்டு விட்டது. அதன் பின்னர் தான் அவருடைய வாழ்க்கையில் முழு மாற்றம். அந்த மாற்றத்திற்கு ஆதாரமாக அவரது வெண்தாடித் தோற்றம் அமைந்திருக்கின்றது.

முதன் முதலில் முப்பது நோன்பு

அது வரை நோன்பு பிடித்திராத அவர் கடந்த ரமளானில் முப்பது நோன்புகளை நோற்று முடித்தார். “மேற்கு நோக்கி வணங்குபவர்களே! கஅபாவை நோக்கித் தொழுபவர்களே! விமானம் கஅபாவிற்கு மேல் பறக்கும் போது எதை நோக்கித் தொழுவீர்கள்?” என்று வினா எழுப்பி, விடைத்தவர் இன்று விடை கண்டு தவ்ஹீதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

அண்மையில் பிப்ரவரி மாதம் வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் பயிற்சி முகாமில் முழுமையாகப் பங்கெடுத்த போது அவர், நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு வந்த வரலாற்றை நம்மிடம் பரிமாறிக் கொண்டார். வீரமணிக்கு நெருக்கமான அந்தப் பகுத்தறிவாளர், போலிப் பகுத்தறிவுக் கொள்கையிலிருந்து, உண்மையான பகுத்தறிவான ஏகத்துவக் கொள்கையை ஏற்றது நம் அனைவருக்கும் மகிழ்வைத் தரும் நிகழ்வாகும்.

தெருத் தெருவாக நாத்திகப் பிரச்சாரம் செய்த அவர் இன்று வேலூரில் தெருத் தெருவாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்து வருவது நம்மை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. அல்லாஹ் அவருக்கும் நமக்கும் ஏகத்துவத்திலேயே மரணிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!

————————————————————————————————————————————————

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை

உலகத்திலேயே மிக நீளமான ஆறு ஓடும் கண்டம் எது? உலகத்திலேயே மிக அடர்ந்த காடுகள் நிறைந்த கண்டம் எது? அதிகமான தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கண்டம் எது? மண்ணைச் சலித்தாலும் தங்கம் கிடைக்கும் கண்டம் எது? பதில் எல்லோருக்கும் தெரியும். ஆப்ரிக்கா.

ஆனால் உலகத்திலேயே அதிக வறுமை நிறைந்த கண்டம் எது? அதுவும் ஆப்ரிக்கா தான்.

உலகத்திலேயே அதிகம் சுனாமி வரும் நாடு எது? அதிகம் நில நடுக்கம் ஏற்படும் நாடு எது? அதிகம் புயல் வரும் நாடு எது? ஜப்பான்.

உலகில் முதன் முதலில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரில் நேரடியாகக் குண்டு தாக்கிய அரசு அலுவலகம் அப்படியே இன்று வரை வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி பூஞ்சோலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கே ஒரு வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார்கள். அது: “குண்டு விழுந்த இடத்தைச் சுற்றி 75 ஆண்டுகளுக்கு  எந்தப் புல் பூண்டும் முளைக்காது என்று கூறுவார்கள். நாம் அதை மாற்றிக் காட்டியுள்ளோம்”

ஏன் இந்தத் தலைகீழ் நிலை? ஒரு புறம் வளங்கள் நிறைந்து காணப்படுகின்ற அதே அளவு வறுமையும் நிறைந்துள்ளது.

மறுபுறம் வளங்களே இல்லை என்பதையும் கடந்து, தடைகளும் இன்னல்களும் நிறைந்துள்ளன. ஆனால் தொழில் துறையில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம்.

என்ன காரணம்? இவர்கள் பாதகங்களையும் சாதகங்களாக எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்? வளங்களிலெல்லாம் சிறந்த வளமான மனித வளத்தை முறைப்படுத்திப் பயிற்றுவித்து, அதன் மூலம் பாதகங்களும் சாதகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்களில் சிறந்தவர் யார்? எனக் கேட்கப்பட்டது.

மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால்! இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறு வழியின்றி) சிக்கிக் கொள்ளும் வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண்பீர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3493, 3496

சுரங்கத்திலிருக்கும் கனிமங்கள் போன்ற வளத்தை நபி (ஸல்) அவர்கள் எப்படி செம்மைப்படுத்தினார்களோ, காட்டுமிராண்டிக் கூட்டத்தை எவ்வாறு உலகத்தின் தலைவர்களாக மாற்றினார்களோ அந்த அடிப்படையில் அவர்கள் வழியிலான நிர்வாக அமைப்பை, தனி மனிதப் பண்புகளில் விருத்தியை, தகவல் தொடர்பு முறையை, நவீன நிர்வாக தலைமைத்துவப் படைப்புகளின் ஒப்பீட்டோடு விளக்க முயன்றுள்ளோம்.

மக்களின் நம்பகத்தன்மையை ஒரு நிர்வாகம் பெற்றிருப்பதன் அளவைப் பொறுத்துத் தான் அதன் வெற்றி தோல்வியை முடிவு செய்ய முடியும். இன்றைய நவீன உலகில் எல்லாத் துறைகளுமே தனிப் பாடத் திட்டமாக பயிற்சி முறையாக வளர்ச்சியடைந்து விட்டது. அது போல நிர்வாகவியலும் தனித் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.

இன்று தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் ஜமாஅத் அமைப்புகள் தான் முஸ்லிம்களின் தனி மற்றும் மார்க்க விவகாரங்களைக் கவனிக்கும் அதிகார மையமாகப் பெரும்பாலும் திகழ்கின்றன. ஆனால் பெரும்பாலும் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு இஸ்லாமும் தெரியவில்லை; நிர்வாகவியலும் தெரியவில்லை. அதனால் அவர்களின் பொறுப்பும், கடமையும், இலக்கும் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

அது போல முஸ்லிம்களின் வாழ்வைப் புனரமைப்பதற்காகவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காகவும், இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காகவும் செயல்படும் அமைப்புகளில் இணைந்து பணி புரிவோரும் இஸ்லாத்தைத் தெரிந்திருக்கும் அளவுக்கு  நிர்வாகவியலைத் தெரிந்திருக்கவில்லை.

உயர் அரசுப் பணிகளில், நிறுவனங்களில் ஒரு சில முஸ்லிம்கள் தான் செயலாற்றுகின்றனர். அதுபோன்று சில முஸ்லிம்கள் தனி நிறுவனங்களை, தொழில் மையங்களை நடத்துகின்றனர். இவர்களிடம் நிர்வாகவியல் பற்றித் தெளிவு இருக்கின்றது. ஆனால் இஸ்லாமிய நிர்வாக அமைப்பு பற்றிய தெளிவில்லை.

இன்று ஒவ்வொரு முஸ்லிம் செய்யும் தவறுகளும் இஸ்லாத்தின் மேல் உள்ள குறை எனப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் காலத்தில் நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாம் பிரதிபலிக்க வேண்டும். இப்படிப்பட்ட காலத்தில் நிர்வாகவியல் என்ற ஒரு முக்கியத் துறையை இஸ்லாமிய அடிப்படையில் அனைவரும் அறிந்து நடக்க வேண்டும் என்ற முயற்சி தான் இந்தத் தொடர். இதில் நிர்வாக அமைப்பு முறை பற்றியும் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய கொள்கை, திறமை, ஆற்றல், ஒழுக்க முறைகள் பற்றியும் நவீன நிர்வாகவியல் கல்வி ஒப்பீட்டோடு விளக்க முனைந்துள்ளோம்.

இதைத் தகவலுக்காக வாசிக்கும் சராசரிப் புத்தகமாக எடுக்காமல் ஒவ்வொருவரும் சமுதாய அங்கங்களாக நமது கடமைகளைக் குடும்பத்தில், தொழிலில், வாழ்க்கையில் கடைப்பிடித்து இஸ்லாம் முழுமையான மார்க்கம் என்பதை நடைமுறையில் காட்டுவோம்.

எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னைச் சார்ந்தது. சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது. அவனுக்கே புகழனைத்தும்.

நிர்வாகம் என்றால் என்ன?

ஒரு குடும்பத்தை, ஒரு கிராமத்தை, ஒரு ஊரை, ஒரு நகரை, நாட்டை அல்லது ஒரு வியாபார நிறுவனத்தை, தொழிற்சாலையை, ஒரு கட்சியை, ஒரு இயக்கத்தை வழி நடத்த ஒரு தனி நபர் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்துகின்றது. அந்தக் குழு ஒரு கொள்கையின் அடிப்படையில், இடையில் ஏற்படும் தடைகள், இடைஞ்சல்களைச் சமாளித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கித் தங்களைப் பின்பற்றுபவர்களை வழி நடத்துவதே நிர்வாகம் எனப்படுகின்றது.

நடைமுறையிலிருக்கும் பிற நிர்வாகவியல் கோட்பாடுகள்

1) அறிவு

2) உணர்வுகள்

3) பொருளாதாரம்

4) அனுபவங்கள்

மேலை நாட்டு ஒழுக்கத் துறை அறிஞர்கள் மேற்காணும் நான்கு அடிப்படைகளை வைத்து, முன் வாழ்ந்து சென்ற மனிதர்களிடமிருந்து தம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்களைப் பெறுகின்றனர்.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கை திட்டமிட்டபடி மகிழ்ச்சிகரமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் மனிதன், இதை விட அதிக மகிழ்ச்சி கிடைக்கும் வேறொரு வழி கிடைக்குமானால் அது ஒழுக்க வரையறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா இல்லையா என்றெல்லாம் பார்க்க மாட்டான்.

அப்படிப் பார்க்க வேண்டுமானால் “இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரப் பேறுகளும், சுகங்களும் நிறைந்த மறுமை வாழ்வுக்கான தேர்வு’ என்ற அஸ்திவாரம் வலுவாகப் போடப்பட வேண்டும். இந்த அடிப்படை மேலை நாட்டு ஒழுக்கத் துறை அறிஞர்களிடம் இல்லை.

முஸ்லிம்கள் எந்தத் துறையை ஒப்பு நோக்கினாலும் மேலை நாட்டு அறிஞர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதையும் ஆய்வுக்கு எடுக்கின்றனர். ஆனால் மேலை நாட்டு அறிஞர்களின் ஆய்வுகளில் “இஸ்லாம் என்ன கூறுகின்றது?’ என்பதையும் கருத்தில் எடுக்கும் பரந்த மனப்பான்மை இல்லாததை நாம் காண முடிகின்றது.

மேலை நாட்டு தலைமைத்துவக் கோட்பாடுகள் தனி வாழ்வு, பொது வாழ்வு என வாழ்க்கையை இரு கூறுகளாகப் பிரித்துள்ளன. தனி வாழ்வைப் பற்றி ஒரு தலைவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றது.

ஆனால் இஸ்லாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த இல்வாழ்க்கையும் நம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரி என கற்றுக் கொடுக்கின்றது. இஸ்லாமியத் தலைவர், தனி வாழ்விலும் பொது வாழ்விலும் ஒருங்கே ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

கைஸைன் கோட்பாடு

கைஸைன் கோட்பாடு என்பது ஜப்பானில் முறைப்படுத்தப்பட்டதாகும். தலைமைத்துவக் கல்வியாக வரையறுக்கப்பட்ட எல்லா தத்துவங்களுக்கும் கைஸைன் கோட்பாடு தான் முன்னோடி என நம்பப்படுகின்றது. ஜப்பான் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தக் கோட்பாடு முக்கியக் காரணம் என ஜப்பானியர்கள் நம்புகின்றனர். மிக விரிவாக இதைப் பற்றி எழுதலாம் என்றாலும் இஸ்லாமிய தலைமைத்துவம் பற்றி எழுத வேண்டும் என்பதால் கைஸன் கோட்பாட்டைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

பின்வரும் அடிப்படையில் தான் ஒரு தலைவர் இயங்க வேண்டும் என்று கைஸைன் கோட்பாடு கூறுகின்றது.

1)  சுய பண்புகளை மேம்படுத்திக் கொள்வது

2) தனிப்பட்ட வாழ்விலும், மற்ற துறைகளிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் வேண்டும். எந்தத் துறை சார்ந்த முன்னேற்றமும் தடைபட்டு நின்று விடக் கூடாது.

3) வாடிக்கையாளர்கள் அல்லது தன்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும்.

4) தனது தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

5) தாராளத் தன்மை, திறந்த மனப்பான்மை போன்றவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.

6) குழு செயல்பாட்டை வளர்க்க வேண்டும்.

7) நல்ல உறவுகளை ஊக்குவிக்க வேண்டும்.

8) நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கும், இயக்கத்தில் தனக்குக் கீழ் உள்ள நண்பர்களுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். எல்லாக் காரியத்தைச் செய்யும் முன்பும் அவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

9) ஊழியர்களை அல்லது பின்பற்றுபவர்களைப் பயிற்றுவித்து ஆக்கப்பூர்வமானவர்களாக மாற்ற வேண்டும்.

10) மாறிப் பணி புரிவது – ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் தமது வேலைகளை முடித்து விட்டு, வேலையை முடிக்காத சக ஊழியர் வேறொரு பிரிவிலிருந்தாலும், தனது மேலதிகாரியின் அனுமதியின்றி உதவுவது)

கைஸைன் சித்தாந்தத்தைப் பொறுத்த வரை விரிவான ஆய்வு தேவையில்லை. ஏனெனில் இது இஸ்லாமிய தலைமைத்துவ வரையறைகளை மீறவோ மோதவோ இல்லை என்பதால் அடுத்த கோட்பாட்டைப் பாப்போம்.

முழுமையான தர மேலாண்மை

1) எதிலும் எல்லாவற்றிலும் தரம் வேண்டும்.

2) வாடிக்கையாளர்கள் மீது மிகுந்த அக்கரை.

3) எல்லா துறைகளிலும் தொடர்ச்சியாக வளர்ச்சி தேவை.

4) புதிது புதிதாகச் சிந்தித்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 5) அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

6) குழுச் செயல்பாட்டைத் தூண்ட வேண்டும்.

முழுத் தர மேலாண்மை  என்ற இந்த மேலாண்மைத் துறை அமெரிக்கா, ஜப்பான் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இந்த மேலாண்மைக் கல்வி இதைப் பின்பற்றும் நாடுகளில் விரைவான வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய உதவியுள்ளதாக நம்பப்படுகின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

மார்கழிப் பனி மச்சைத் துளைக்கும்; தைப் பனி தரையைத் துளைக்கும் என்பார்கள். மார்கழி, தை மாதங்களின் பனி மச்சைத் துளைக்கிறதோ இல்லையோ காதைத் துளைத்து விடுகின்றது. காரணம் இம்மாதங்களில் சந்திக்குச் சந்தி, சன்னதிக்குச் சன்னதிகளில் கட்டப்பட்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள் பல்வேறு கடவுள்களின் பெயரால் கொட்டுகின்ற பஜனைப் பாடல்கள் நம்முடைய செவிப்பறைகளைக் கிழித்து விடுகின்றன. இதய நோயாளிகளை இம்சைப்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு செய்வதற்குக் காரணம், படுத்துக் கிடக்கும் கடவுள்களை இந்தப் பாடல்கள் தட்டி எழுப்பி விடும் என்று நம்புவதால் தான். அதனால் குளிர் காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் இது போன்ற பாடல்களைப் பாடுகின்றனர்.

இதற்கு இணையாக முஸ்லிம்களும் சில பாடல்களின் மூலம் தாங்கள் நம்பியிருக்கும் நாயகர்களை வழிபாடு செய்கின்றனர்.

முஹர்ரம் மாதத்தில் ஹஸன்-ஹுஸைன், ரபீயுல் அவ்வல் மாதத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ரபீயுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன், ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தில் ஷாஹுல் ஹமீது, ரஜப் மாதத்தில் காஜா முயீனுத்தீன், ஷஅபான் மாதத்தில் ஷாஃபி இமாம் ஆகிய நாயகர்கள் மீது புகழ் பாக்கள் பாடி ஒரு சாரார் வழிபாடு செய்கின்றனர். இந்த சாரார் வேறு யாருமல்லர்! தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்கள் தான்.

இதோ இப்போது ரபீயுல் அவ்வல் மாதம் துவங்கி விட்டது. இம்மாதம் துவங்கியதும் மவ்லிது பஜனைப் பாடல்களும் துவங்கி விடும்.

பிற மதத்தவர்கள் தங்கள் வழிபாடு முடிந்ததும் இனிப்புப் பாயாசம், இன்னபிற பதார்த்தங்கள், பண்டங்கள் போன்ற படையல்களை பிரசாதம் என்ற பெயரில் வழங்குவார்கள். நமது ஆட்கள் நெய்ச் சோறு, புலவுச் சோறு ஆக்கி, தபர்ருக் (அருளாசி பெற்றது?) நேர்ச்சை என்ற பெயரில் வழங்குவார்கள். இந்தச் சாப்பாட்டில் ஒரு பருக்கை கூட தரையில் விழாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மவ்லிது ஓதும் வீடுகளில் மீன் வாசனைக்குக் கூட இடம் கிடையாது. ஆட்டிறைச்சிக்கு மட்டுமே அனுமதி! இவர்களது இந்த நடவடிக்கையே இது கறிச் சோறுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாட்டுக் கச்சேரி; இறைச்சிச் சோறுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை கானம் என்று விளங்கிக் கொள்ளலாம்.

இப்படிப் பல்வேறு கடவுள்களின் பெயரால் பாடப்படும் பாடல்கள், அவை பாடி முடிந்த பின் பகிரப்படும் படையல்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் பிற மதக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவை என்பதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே நன்கு தெளிவுபடுத்தி விடுகின்றன. இருப்பினும் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் இதை ஓர் இபாதத், அதாவது அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கம் என்று நம்புகின்றனர். இது ஒரு வணக்கமல்ல! மாறாக அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் பெரும் பாவம் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

  1. பிற மதக் கலாச்சாரம்

பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே! என்பது நபிமொழி. (நூற்கள்: தப்ரானி, பஸ்ஸார்)

  1. பித்அத்

வணக்கம் என்றால் அது குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஹதீஸில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவையாகும். இம்மூன்றிலும் இந்த மவ்லிது என்ற வணக்கம் இடம்பெறவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3697

இந்த ஹதீஸின்படி மவ்லிது என்பது நிராகரிக்கப்பட வேண்டிய காரியமாகும்.

  1. நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்குதல்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனைத் தவிர வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை நிலைநாட்ட வந்த அகில உலகத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மவ்லிதுப் பாடல்களில் கடவுளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.

பாவங்களை மன்னிப்பவர்; குறைகளை மறைப்பவர்

நோய்களை நீக்குபவர்; வறுமையைப் போக்குபவர்

வாட்டத்தைக் களைபவர்; வளத்தைத் தருபவர்

என்றெல்லாம் இறந்து விட்ட நபி (ஸல்) அவர்களை உயிருடன் இருப்பதாக நம்பி, அவர்களை இந்தப் பாடல் வரிகளில் அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

மனிதன் மரணிப்பவனே!

இவ்வாறு முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திப்பவர்கள், நபியவர்கள் ஒரு மனிதர் என்பதை மறந்து விட்டனர்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் என்பதால் அவர்கள் மரணத்தைத் தழுவியே ஆக வேண்டும். இதையும் திருக்குர்ஆன் விளக்குகிறது.

(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.

அல்குர்ஆன் 39:30

இத்தனைக்குப் பிறகும் முஹம்மது (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று யாராவது நம்ப முடியுமா? ஒரு போதும் முடியாது.

ஆனால் தங்களை சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று அழைத்துக் கொள்ளும் இந்த சாரார், நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பாவித்து இந்தப் பாடல்கள் வழியாக அவர்களை அழைத்து வழிபடுகிறார்கள். இதற்குத் தான் இவர்கள் மவ்லிது என்று குறிப்பிடுகிறார்கள்.

பிற மதத்தவரின் பஜனைப் பாடல்களுக்கும், இவர்களது மவ்லிதுப் பாடல்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

பிற மதத்தவர்கள் பல கடவுள்களை அழைத்துப் பாடுவது போல் இவர்களும், இந்த மாதம் நபி (ஸல்) அவர்கள் பெயரால் மவ்லிது, அடுத்த மாதம் முஹ்யித்தீன் மவ்லிது என்று பல கற்பனைக் கடவுள்களை அழைக்கின்றனர்.

ஷஃபாஅத்தா? சாபமா?

இவ்வாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கிப் பாடுகின்ற மவ்லிதுக் கூப்பாடுகளை முடித்து சாப்பாட்டுக் கூத்துகள் நடக்கின்றன. இவற்றின் மூலம் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் (பரிந்துரை) மறுமையில் கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கிய பாவத்திற்காக இவர்களுக்கு மறுமையில் கிடைக்கப் போவது ஷஃபாஅத் அல்ல, சாபம் தான். இதைக் கீழ்க்காணும் புகாரி ஹதீஸ் விவரிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்.

பிறகு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” (21:104) என்னும் இறை வசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், “இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, “தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்என்று கூறுவார்கள். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை- அவர்கள்) கூறியதைப் போல், “நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்என்னும் (5:117-118) இறை வசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3349

ஈஸா நபியைக் கடவுளாக்கிய கிறித்தவ சமுதாயத்திற்குக் கிடைக்கின்ற அதே நிரந்தர தண்டனை தான் இந்தப் பஜனைப் பாடல் பட்டாளத்திற்கும் கிடைக்கின்றது. இவர்களைத் தங்களது வீடுகளுக்கு அழைத்துப் பாட வைத்து, பண முடிப்பு கொடுத்து, நேர்ச்சைகளையும் பகிர்ந்தளிக்கும் பக்தர்களுக்கும் அதே தண்டனை தான் கிடைக்கின்றது. அல்லாஹ் காப்பானாக!

எனவே இந்தப் பஜனை மவ்லிதுகளைப் படித்து நிரந்தர நரகத்திற்குச் சென்று விட வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கிறோம்.

————————————————————————————————————————————————

அவ்லியாக்களின் சிறப்பு

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.

அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.

இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம். அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பை நாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றி அரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காக அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

நிர்வாணச் சாமியார்

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.

அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.

இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.

அஷ்ஷைகு இப்ராஹீம்

அரபி 1

பொருள்: அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.

(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)

(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த ம(ô)கானின் வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!)

அரபி 2

பொருள்: இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.

(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)

(குறிப்பு: இவ்வளவு கீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம். இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூட இவர் தான் முன்மாதிரியாக இருக்கக் கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.)

அரபி 3

இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன.

அரபி 4

இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது, “அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக, வெள்ளியாக அவை மாறும்.

(குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா, காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.)

அபூகவ்தா

அரபி 5

அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்…………………………….. அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)

குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா?

சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?

ஸய்யித் அஹ்மத் அல்பதவீ

அரபி 6

எனது ஷைகு அவர்கள், ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத்தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள், கப்ரை நோக்கி, “உங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க!” என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்து, “சரி’ என்று அவர் கூறியதை நான் கேட்டேன்.

நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத்தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களையும் அழைத்தார். “இங்கே இவளது கன்னித்தன்மையை நீக்கு” என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.

(தபகாத், பதவீயின் வரலாறு)

குறிப்பு: கப்ரிலிருந்து வந்து ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா? என்பது ஒருபுறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையா? இப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா? என்பதே கேள்வி!

இந்த அவ்லியா பக்தர்கள், கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டி, கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!

ஸய்யித் அல்அஜமீ

அரபி 7

இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்…?

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 62)

குறிப்பு: யானைக்கும் கப்ரு கட்டியுள்ள பொட்டல்புதூர்வாசிகளே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.

“தமிழகத்தில் நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாது; நாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது” என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

அரபி 8

பொருள்: இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 61)

குறிப்பு: கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு அபீ ஹம்ஸா

அரபி 9

நான் நபி (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.

(தபகாத், பாகம்: 1, பக்கம்: 15)

குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.

நபி (ஸல்) அவர்களைக் கனவிலும், நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர்.  நபி (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.

ஷஃபான் அல் மஜ்தூப்

அரபி 10

இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

அரபி 11

மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். “வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டு, “இறைவா, கண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை… என்று துஆச் செய்தார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

குறிப்பு: எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்கும் பெயர் இறைநேசராம்!

அரபி 12

இந்தப் பெரியார் முன்பகுதி, பின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும், குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.

இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போது, கடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.

இந்த சுன்னத் ஜமாஅத்தினர், இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.

நியாய உணர்வும், சிந்திக்கும் திறனும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதா? சிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் அவ்லியாக்கள் பெயராலும், தரீக்காவின் பெயராலும் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனையில் இருந்துள்ளனர் என்பதற்கு இறுதிச் சான்றாக ஒன்றைத் தருகிறோம். அதை அரபி மொழியில் மட்டுமே தர முடியும். அதைத் தமிழில் தருவதற்கு எங்கள் கைகள் கூசுகின்றன. இந்தியத் தண்டனைச் சட்டமும் சும்மா விடாது. அவ்வளவு ஆபாசம்! தெரிந்தவர்களிடம் அர்த்தம் கேட்டுக் கொள்க!

இதைப் பொது மேடையில் வாசித்து அப்படியே தமிழாக்கம் செய்ய முன்வரும் சு.ஜ. உலமாக்களுக்கு ரூபாய் 500 தரப்படும்.

அந்த வாசகம் இது தான்:

அரபி 13

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 186)

இவரெல்லாம் அவ்லியாவா? சுன்னத் ஜமாஅத்தின் காவலர்களே! ஷைகு முரீது வியாபாரிகளே! இதற்குப் பொது மேடையில் அர்த்தம் செய்ய முன்வருவீர்களா? அல்லது இந்தக் குப்பைகளைக் கொளுத்தத் தயாரா?

அரபியில் எழுதப்பட்டதால், முன்னோர்கள் அங்கீகரித்ததால் மத்ஹபைக் கட்டிக் கொண்டு அழுவோரே! சிந்தியுங்கள்.

கம்ப ராமாயணத்தின் காம ரசத்தை விளக்க அறிஞர் அண்ணா, “கம்ப ரசம்’ எழுதினார். அவருக்கு  இந்த ஷஃரானியின் ஆபாசக் களஞ்சியம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இந்த அம்மண சாமியார்களின் ஆபாச ரசத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காக “தபகாத் ரசம்’ எழுதியிருப்பார்.

ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் கோவணத்தைக் கட்டிக் கொண்டு, அல்லது அஷ்ஷைகு (?) இப்ராஹீம் என்ற அவ்லியாவைப் போன்று கோவணமும் இல்லாமல் மேடைக்கு வந்து இந்த ஆபாசக் களஞ்சியத்திற்கு அர்த்தம் செய்வார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்ப்போமாக!

இதைப் பொது மேடையில் மொழிபெயர்ப்பவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். தற்போது பண மதிப்பைக் கவனத்தில் கொண்டு ரூ. 5,000 வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

————————————————————————————————————————————————

தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்

ஆஷிக் சுக்ரியா, கடையநல்லூர்

சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்து அசத்தியவாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

மேற்கண்ட வசனம் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடம் விவாதப் போங்கில் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றது.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில் விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது “நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!என்று அவர்கள் கூறினர். (பார்க்க: அல்குர்ஆன் 11:32)

இன்றைய காலத்தில் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராக எத்தனை, எத்தனை எதிர்ப்பாளர்கள்!

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் இரு பிரிவினராக உள்ளனர்.

ஒரு கூட்டம் அவர்களுடைய கொள்கையை நாம் விமர்சிப்பதால் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்களில் பலர் மிகவும் நல்லவர்கள்.

ஆனால் இன்னும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் நம்மை எதிர்ப்பதெல்லாம் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வினால் மட்டும் தான். இவர்களில் பலர் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் சல்லிக் காசுகளுக்காகத் தஞ்சமடைந்தவர்கள். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். ஏசி அறைகளில் இருந்து கொண்டு ஒன்றிரண்டு பயான்கள் செய்து கொண்டு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.

கூலிக்காக மட்டும் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் இந்த மேதாவிகள் (?) தங்களுடைய எஜமானிய விசுவாசத்தை அதிகம் வெளிப்படுத்துவார்கள். தங்களுக்குச் சம்பளம் கொடுக்கும் அரபிகள் என்ன சொன்னார்களோ அது தான் இவர்களின் மார்க்கம். தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக யார் எந்தக் உண்மையைச் சொன்னாலும் மார்க்கத்தின் பெயரால் அவர்களை எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அதற்காக மார்க்கத்தின் பெயரால் எத்தகைய இருட்டடிப்பையும் செய்வதற்குத் தயாராவார்கள்.

சல்லிக் காசுகளுக்காக சத்திய மார்க்கத்தின் அடிப்படையைக் கூட மாற்றியவர்கள் தான் இவர்கள்! குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்த இந்த மதனிகள், உமரிகள் இதே கருத்தை மிகவும் வலிமையாக இவர்களை விடவும் அழுத்தமாக ஆழமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்த காரணத்தால், இஸ்லாத்தின் அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களைப் பின்பற்றுவது ஆகிய) மூன்று  என மாற்றிக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு கூறுவதால் அனைத்து மதனிகளும், உமரிகளும் இப்படித் தான் என எண்ணி விடாதீர்கள். இவர்களில் மிகவும் நல்லவர்கள் பலர் உள்ளனர்.

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த மாபாதகச் செயல்கள் அனைத்தையும் நாம் பட்டியலிட்டு விட முடியாது. இவற்றையெல்லாம் நாம் இங்கே கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஜகாத் தொடர்பாக இறைச் செய்தியான குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவான சட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த போது “தவ்ஹீத் ஜமாஅத்தினர் மதம் மாறி விட்டனர்’ என்று எந்த வித ஞானமுமின்றி ஃபத்வா கொடுத்தவர்கள் தான் இவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக இவர்கள் செய்த அவதூறுப் பிரச்சாரம் கொஞ்ச நஞ்சமல்ல! விவாதக் களத்தில் சந்திக்கத் துணிவில்லாமல் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் இவர்கள் ஓடிய ஓட்டம் தான் என்ன……

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியங்களோடு தான் களம் இறங்குகிறோம். அதன் அடிப்படையில் தான் தொண்டியில் ஜனவரி 20ம் தேதி தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், விருதுநகரைச் சார்ந்த முஜீபுர் ரஹ்மான் உமரீ என்பவருக்கும் மத்தியில் விவாத ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக கலீல் ரசூல், பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், அப்துந் நாஸிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முஜீபுர் ரஹ்மான் என்பவர் சார்பாக அபு அப்தில்லாஹ் என்பவரும் ( இயக்கப் பெயர்கள் வழிகேடு என்று கூறும் இந்த அதிமேதாவி தவ்ஹீத் எதிர்ப்பு என்று வந்து விட்டால் எந்த இயக்க வாதிகளுடனும் கைகோர்க்கத் தயங்க மாட்டார். சிலரை வழிகேடு என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களுடனேயே கைகோர்த்தால் இவர் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்) அப்துர் ரஹ்மான் மன்பயீ, மற்றும் தமுமுக பிரமுகர்கள் இருவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஜீபுர் ரஹ்மான் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் கருத்து வேறுபாடு(?) கொண்டது முதல் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகப் பல்வேறு விதமான அவதூறுப் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் செய்துள்ளார். ஜகாத் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகப் பல்வேறு விதமான விமர்சனங்களைச் செய்துள்ளார். இது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் இவருக்கு விவாத அழைப்பு விடுத்திருந்து. (இது தொடர்பாக விரிவான தகவல்கள் தேவைப்படும் போது வெளியிடப்படும்.) ஆனால் இவருடைய கருத்திலிருந்த நூர் முகம்மது பாக்கவி அவர்கள் மிகத் தைரியமாக நம்முடைய விவாத அழைப்பை எதிர் கொண்டு ஜகாத் தொடர்பாக முஜீப் என்பவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தார்.

நூர் முகம்மது பாக்கவி அவர்களை நாம் பாராட்டியே தீர வேண்டும். ஏனென்றால் ஜகாத் விஷயத்தில் அவரளவில் தன்னுடைய கருத்தை அவர் சத்தியம் என நம்பியிருந்தார் என்றே நமக்குத் தோன்றுகிறது. சில புல்லுருவிகளைப் போன்று வெளியில் நமக்கெதிராக மிகக் கடுமையான முறையில் விமர்சனங்களைச் செய்துவிட்டு  எதனை விமர்சனம் செய்தார்களோ அந்த விஷயத்தைப் பற்றி எங்கள் முன்னிலையில் விவாதம் செய்ய முன்வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுபவர்களைப் போன்று அவர்  ஜகாத் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை.

முஜீப் என்பவர் பல்வேறு மார்க்க விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியக் கருத்துக்களுக்கு எதிராக மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளார். அவைகளில் சில விஷயங்கள் கொள்கை ரீதியிலானவையாகும்.

  1. இஸ்லாத்தில் மூலாதாரங்கள் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ்கள் ஆகிய இரண்டு மட்டுமே என தவ்ஹீத் ஜமாஅத் இவ்வுலகிற்கே ஓங்கி உரைக்கிறது. ஆனால் முஜீப் என்பவர் இஸ்லாத்தின் அடிப்படைகள் இவ்விரண்டு மட்டுமல்ல. ஸஹாபாக்களின் சுயக் கருத்துக்களையும் மார்க்கத்தின் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். அதுவும் மார்க்கத்தின் மூலாதாரங்களாகும் என்பதைக் கொள்கையாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.
  2. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் குர்ஆனோடு நேரடியாக மோதக் கூடிய செய்திகள் நபிகள் நாயகம் கூறியது கிடையாது. நபிகள் நாயகத்தின் மார்க்க போதனைகள் அனைத்துமே இறைவனின் வஹீ செய்தியாகும். வஹீ செய்தி என்பதற்கு ஆதாரமே அவற்றில் முரண்பாடு ஏற்படாது என்பது தான். எனவே குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்தவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

ஆனால் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்து நபிகள் நாயகம் கூறியதாக வரக்கூடிய எந்தச் செய்தியாக இருந்தாலும் அது ஹதீஸ் தான். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைத்து ஹதீஸ்களையும் மறுப்பதற்குரிய வாயில்களைத் திறந்து விட்டுள்ளார்கள். இவர்கள் மனோஇச்சையைப் பின்பற்றுகிறார்கள் என முஜீப் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

  1. திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலும், விரிவுரையிலும் பல்வேறு தவறுகள் இருப்பதாக முஜீப் என்பவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
  2. தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஸஹாபாக்களைத் திட்டுகின்றார் என முஜீப் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
  3. தவ்ஹீத் ஜமாஅத்தால் தான் குர்ஆன் மட்டும் போதும் என சொல்லக் கூடியவர்கள் தோன்றினார்கள். மற்றும் காதியானிகள் தோன்றினார்கள் என முஜீப் என்பவர் கூறியுள்ளார்.
  4. ஜகாத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேட்டில் உள்ளது. நாங்கள் தான் சத்தியக் கருத்தில் உள்ளோம் என முஜீப் என்பவர் கூறியுள்ளார்.
  5. ஜாக் இயக்கத்தினர் இவருக்கு ஆதாரவாக இருப்பதினால் பிறை விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சரியான நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தை முஜீப் என்பவர் சரி காண்கிறார்.

இது போன்ற இன்னும் பல விஷயங்களை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அவர் மிகக் கடுமையான முறையிலும், விமர்சனக் கண்ணோட்டத்திலும் எடுத்துரைத்துள்ளார்.

இப்படி  தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக முஜீப் என்பவரும் அவருடைய அடிவருடிகளும் பல விஷயங்களைத் திரித்து மாற்றிக் கூறியிருந்த காரணத்தினாலும், பல்வேறு இடங்களில் விவாதம் செய்யத் தயார் என்று அழைப்பு விடுத்த காரணத்தினாலும் சத்தியத்தின் பேரியக்கமாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு முயற்சிகளை எடுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் மாயமாய் மறைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு விதமான கடிதத் தொடர்புகளுக்குப் பிறகு ஜனவரி 20ம் தேதி தொண்டியில் விவாத ஒப்பந்த அமர்வுக்கு ஏற்பாடு செய்தது.

ஒருவன், தான் எடுத்து வைக்கும் கருத்துகளில் உண்மையாளன் என்பதற்கு ஆதாரம் அவன் யாருக்கு எதிராக என்னென்ன கருத்துகளை மிகக் கடுமையான முறையில் மக்களுக்கு மத்தியில் முன் வைத்தானோ அதை சம்பந்தப்பட்டவருக்கு முன்னால் நிரூபிக்கத் தயாரானவனாக இருக்க வேண்டும்.

ஆனால் முஜீப் என்பவர் விவாத ஒப்பந்த நிகழ்வின் போது, நான் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக மட்டும் தான் விவாதத்திற்கு வருவேன். மற்றவற்றிற்கு நான் தயார் இல்லை. என்று பல மணி நேரம் பிடிவாதம் பிடித்தார். விவாத ஒப்பந்த சிடிக்களைப் பார்ப்பவர்கள் இதைத் தெளிவாகக் காணலாம். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர், “நீங்கள் எங்களுக்கு எதிராக பல்வேறு விதமான கருத்துகளைப் பிரச்சாரம் செய்துள்ளீர்கள். ஆகையால் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாகவும் நாம் விவாத்திற்குத் தயார். ஆனால் நீங்களும் நாங்களும் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் விவாதம் செய்ய வேண்டும்’ என ஆணித்தரமாக எடுத்துரைத்து அதற்காக இப்போதே விவாத ஒப்பந்தமும் கையெழுத்தாக வேண்டும் என தெளிவான காரண காரியங்களோடு விளக்கியது.

இல்லை, இல்லை நாங்கள் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக மட்டுமே விவாதத்திற்கு வருவோம்; மற்றவற்றிற்கு தனித்தனியாக விவாத ஒப்பந்தம் செய்வோம் என்று கூறி பின்வாங்கிக் கொண்டே சென்றார்கள். இறுதியில் சத்தியத்தின் பேரியக்கமாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதியைக் கண்டவர்கள் இதற்கு மேலும் நாம் பின்வாங்கினால் அது நமக்கு இழிவாக ஆகிவிடும் என்பதை உணர்ந்த பிறகு அரைகுறை மனதுடன் மற்ற தலைப்புகளிலும் விவாதிக்கச் சம்மதித்தனர். ஆனால் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக விவாதம் முடிந்த பிறகு தான் மற்ற தலைப்பிற்கான காலத்தையும் இடத்தையும் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினர்.

மேலும் திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக இதுவரை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்த தலைப்புகளைத் தான் விவாதிக்க வேண்டும் என முஜீப் என்பவரிடம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறினர்.

ஆனால் முஜீப் என்பவரோ விவாதம் என்பது சத்தியத்தை விளக்குவதற்குத் தான் என்பதை உணராமல் அதை  போட்டியாக எடுத்துக் கொண்டு, நான் இதுவரை விமர்சித்த கருத்துக்கள் மட்டுமல்லாமல் புதிய புதிய தலைப்புகளையும் விவாதத்தின் போது கூறுவேன் என்றார்.

விவாதம் என்பது போட்டியல்ல. திடீரென்று எங்கிருந்தோ ஒரு கேள்வியைக் கேட்டு ஜெயிப்பதற்கு. இது சத்தியத்தை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற ஒன்று. ஒருவன் தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதற்கு இது வரை கூறாத புதிய ஆதாரங்களை விவாதத்தில் எடுத்து வைக்கலாம். ஆனால் தலைப்பையே புதிதாக இனிமேல் தேடிக் கண்டுபிடித்து விவாதத்தின் போது மட்டும் தான் கூறுவேன் என்பது சத்தியத்தை நிரூபிப்பதற்குரிய முறையல்ல என்பதை உணர்ந்திருந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை முறையாக எடுத்து விளக்கி, “நீங்கள் எத்தனை கருத்துக்களை வேண்டுமானாலும் விவாதத்தில் வையுங்கள். ஆனால் அவை எவை என்கின்ற அட்டவணையை எங்களுக்குத் தந்தால் தான் அவை தொடர்பான ஆதாரங்களை திரட்டி விவாதத்தின் போது முறையாக எடுத்துரைக்க முடியும்’ என்பதை விளக்கிய பின் முஜீப் என்பவர் அதைத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

அதன் பிரகாரம் அவர் அந்த அட்டவணையை அளித்தார். அதில் முறையாக இல்லாமல் பொத்தாம் பொதுவாக மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். யார் எப்படி நடந்து கொண்டாலும் அவர்களை விவாதக் களத்தில் சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் தயங்காது.

திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமாக அதிகமான கருத்துகளை முஜீப் என்பவர் எடுத்து வைத்துள்ளார். எனவே இவை அனைத்தையும் விவாதித்து முடிக்கும் வரை விவாதம் தொடர வேண்டும். அல்லது குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற வேண்டும் என்ற கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்தது.

காரணம், ஒரு நாளில் இவ்வளவு விஷயங்கள் குறித்தும் வாதப் பிரதிவாதங்கள் செய்வது கடினம். மேலும் விவாதத்தின் மூலம் மக்களுக்கு உண்மையை விளங்க வைக்க வேண்டும் என்பது தான் தவ்ஹீது ஜமாஅத்தின் நிலை. ஒரு நாள் மட்டுமே விவாதம் என்றால் அரைகுறையாக முடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதுபோன்று, நேரமின்மை காரணமாக நாம் சில விஷயங்களை விளக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதை வைத்துக் கொண்டு, நான் இன்னின்ன கேள்விகள் கேட்டேன்; இவர்கள் பதில் சொல்லவில்லை என்று விவாதம் முடிந்த பின் முஜீப் கூறிவிடக் கூடாது. இது போன்ற காரணங்கள் ஒரு நாளைக்கு அதிகமாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தவ்ஹீது ஜமாஅத் கூறியது.

ஆனால் முஜீப் என்பவர் ஒரு நாளுக்கு அதிகமாக விவாதம் செய்ய நான் தயாரில்லை என்றுரைத்து அதிலேயே பிடிவாதமாக இருந்ததால் தவ்ஹீத் ஜமாஅத் அதற்கும் இறங்கி வந்தது.

இன்ஷா அல்லாஹ் திருக்குர்ஆன் விரிவுரை தொடர்பான விவாதம் 2009 மார்ச் 29 அன்று தொண்டியில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பிலும் தலா 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது போன்ற பல்வேறு ஒப்பந்தங்களும் அங்கே கையெழுத்தாகியது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

(அல்குர்ஆன் 21:18)

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.

(அல்குர்ஆன் 17:81)

மேற்கண்ட இறைவசனங்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. எப்படிப்பட்ட பெருங்கூட்டங்கள் அணிதிரண்டு நின்றாலும் சத்தியம் தான் வெல்லும் என்பதே அந்த உண்மை. இவ்விவாதத்தின் மூலம் அல்லாஹ் சத்தியத்தை உலகுணரச் செய்வானாக.

———————————————————————————————————————————————-

அழகாய் தோன்றும் (அரசியல்) அமல்கள்

எம். ஷம்சுல்லுஹா

மனிதனுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட அல்குர்ஆன், இம்மை மறுமை நன்மைகளைப் பற்றி மிகத் தெளிவாகவே எடுத்துச் சொல்கின்றது.

இவ்வுலகிலும், மறு உலகிலும் மாபெரும் நன்மைக்குரியவர் யார்? மாபெரும் நஷ்டத்திற்குரியவர் யார்? என்பதையும் திருக்குர்ஆன் நமக்கு விளக்கி விடுகின்றது.

திருக்குர்ஆன் ஒருவனை மிகப் பெரிய நஷ்டத்திற்குரியவனாக, ஈடு இணையற்ற இழப்பையுடையவனாகக் கூறுகின்றது. திருக்குர்ஆனைப் படிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நஷ்டவாளி நாம் தானா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அந்த வகையைச் சார்ந்தவரில்லை என்றால் நமது பாதை சரியானது. நம்முடைய செயல்கள் அல்லாஹ் குறிப்பிடுகின்ற அந்த நஷ்டவாளிகளின் செயல்களாக இருந்தால் நம்முடைய பாதை தவறானது; அது வழிகேடு என்று விளங்கிக் கொண்டு மரணம், மறு உலகம் வரும் முன் திருந்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அந்த நஷ்டம், சரிகட்ட முடியாத நஷ்டமாகும். இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் சொல்கிறான்.

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அல்குர்ஆன் 18:103-105

தான் செய்யும் தீய அமலை, தூய அமலாகக் காண்பவன் தான் மிகப் பெரிய நஷ்டத்திற்குரியவன் என்று அல்லாஹ் குறிப்பிட்டு விட்டு, “இவனுக்காகக் கவலைப்பட்டு உம்முடைய உயிர் பிரிந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கிறான்.

யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா? (சொர்க்கவாசி?) அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8

இதற்குக் காரணம், இவர்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள்; இவர்களது உள்ளங்கள் இறுகிப் போய் விட்டன; இத்தகையவர்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். (அல்குர்ஆன் 6:43)

எனவே இதன்படி யார் யாரெல்லாம் அழிக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவருக்கும் அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கியே காட்டியிருக்கின்றான். அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னுக்கு அவனது அமல் அழகாகத் தோன்றியது.

ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.

(அல்குர்ஆன் 40:36, 37)

அழிக்கப்பட்ட ஆது, ஸமூது கூட்டத்தினருக்கு அவர்கள் செய்த அமல்கள் அழகாகத் தோன்றின.

ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகி விட்டது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்த போதும் (நல்) வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான்.

(அல்குர்ஆன் 29:38)

இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டு, திருந்தாத அனைத்துச் சமுதாயங்களுக்கும் ஷைத்தான் அவர்களின் செயல்களை அலங்கரித்தே காட்டியிருக்கிறான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16:63

அடையாளம் காண அழகான வழிகள்

ஷைத்தானின் இவ்வளவு பெரிய அலங்கார அமைலையும், அல்லாஹ்வின் சரியான வழியையும் அடையாளம் காண்பது எப்படி? என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இதை எளிதில் தெரிந்து கொள்ளும் விதத்திலேயே அல்லாஹ் அமைத்துள்ளான்.

  1. பதில் இல்லாமை

ஷைத்தானின் வழிக்குப் பதில் கிடைக்காது.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார்.

 உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!என்றனர்.

அல்குர்ஆன் 21:62-68

இப்ராஹீம (அலை) அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்த மக்களால் பதில் சொல்ல முடியவில்லை.

வாயடைத்துப் போன அரசன்

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

இவ்வாறு பதில் சொல்ல முடியாவிட்டால் அந்தப் பாதை தவறானது; அது ஷைத்தான் அலங்கரித்துக் காட்டும் மாய வழி, தீய வழி என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 28:50)

  1. போலிச் சாக்கு; பொய்யான நியாயம்

ஏகத்துவம் மிகைத்து விடும் போது, அசத்தியவாதிகள் இந்தக் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போது சாக்குப் போக்குகளை, சப்பைக்கட்டுகளை, நொண்டிச் சமாதானங்களை, நோஞ்சான் பதில்களைத் தருவார்கள். அதாவது தாங்கள் செய்யும் இந்தத் தவறான காரியங்களுக்கு ஒரு நியாயம் கற்பிப்பார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட போது இப்படிப்பட்ட பதிலைத் தான் அளித்தார்கள்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 21:52, 53

ஏகத்துவத்தை எடுத்து வைத்த ஏனைய இறைத் தூதர்களின் சமுதாயங்களும் இதே பதிலைத் தான் கூறினார்கள். இதற்கு அல்லாஹ் பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றான்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன் 2:170)

இந்தக் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. தங்களிடம் பதில் இல்லை என்றதும் தங்கள் பாதையை மாற்றி, தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி, திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஷைத்தான் அழகாக்கிக் காட்டும் பாதையைப் பின்பற்றுகிறார்கள் என்றே அர்த்தம்.

ஷைத்தானின் தந்திரம்

நல்ல பாதை என்றால் அதை நம் பெற்றோர் ஏன் பின்பற்றவில்லை? நமது பெற்றோர் நரகவாசிகளா? என்ற நியாயத்தை ஷைத்தான் அவர்களது உள்ளத்தில் போடுகிறான். அவ்வளவு தான்! அவர்கள் நரகத்திற்குச் செல்லும் வரை அந்தப் பாதையை விட்டு நகர்வதில்லை.

இப்படி ஒவ்வொரு கெட்ட செயலுக்கும் ஷைத்தான் ஒரு நியாயத்தைக் கற்பிப்பான். அவனால் ஏமாற்றப்படுவோர் அவனது இந்தத் தந்திர வலையில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

அவனது வலையில் இறை மறுப்பாளர்கள் எப்படியெல்லாம் விழுந்தார்கள் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவாகக் குர்ஆனில் விளக்கிக் காட்டத் தவறவில்லை. அவற்றில் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

தள்ளி வைக்கப்படும் புனித மாதங்கள்

துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் புனிதமாக்கி, அம்மாதங்களில் போர் செய்வதைத் தடை செய்திருக்கின்றான். மக்கத்து இணை வைப்பாளர்கள் முஹர்ரம் மாதத்தில் சண்டையிட்டு விட்டால் அதற்குப் பதிலாக ஸஃபர் மாதத்தைப் புனிதமாக்கி அதில் சண்டையிட மாட்டார்கள்.

இந்தச் சிந்தனை இவர்களுக்கு எப்படி வந்தது? ஷைத்தான் அவர்களிடம் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றான். வருடத்திற்கு நான்கு மாதங்கள் புனிதமானவை. அம்மாதங்களில் சண்டை போடக் கூடாது. அவ்வளவு தான்! அவை எந்த மாதங்களாக இருந்தால் என்ன? கணக்கு நான்கு மாதங்கள் தான். அதனால் புனித மாதத்தை அடுத்த மாதத்திற்குத் தள்ளிப் போடுவது தவறில்லை என்று ஒரு நியாயத்தை ஷைத்தான் அவர்களிடம் போடுகின்றான். அவர்களும் அதைத் தள்ளிப் போடுகின்றனர். ஆனால் இந்த நியாயத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. இது உச்சக்கட்ட இறைமறுப்பு என்று மிக வன்மையாகக் கண்டிக்கிறான்.

(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத்துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:37

வறுமைக்குப் பயந்து குழந்தைகளைக் கொலை செய்தல்

வழிகேட்டில் செல்லக்கூடிய ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் ஷைத்தான் ஒரு நியாயத்தை ஏற்படுத்துகிறான். இதைத் தான் அல்லாஹ் அழகாய் தோன்றும் அமல் என்று கூறுகின்றான்.

இப்படி மக்கா முஷ்ரிக்குகளுக்கு அழகாய் தோன்றிய இன்னொரு செயல், தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்வதாகும். அதற்கும் ஷைத்தான் அவர்களிடம் ஒரு நியாயத்தைப் போடுகின்றான். அதுதான் வறுமை!

வறுமையின் காரணமாக நாமே நம்மைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் போது நம்முடைய பிள்ளைகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? அதனால் அந்தப் பிள்ளைகளைக் கொலை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.

அல்குர்ஆன் 6:137

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:31

அந்தக் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் நாமே உணவு கொடுக்கின்றோம் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சாட்டையடி கொடுக்கின்றான்.

இந்த விளக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு இன்றைய இணை வைப்பாளர்களுக்கு வருவோம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

இந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டி, நீங்கள் இறந்தவர்களிடம் கேட்காதீர்கள் என்று நாம் சொல்லும் போது, “இந்த வசனங்கள் எல்லாம் சிலைகள் சம்பந்தப்பட்டவை’ என்று ஷைத்தான் இவர்களிடம் ஒரு நியாயத்தைப் போடுகின்றான்.

அஃறிணை அல்ல! உயர்திணை

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

கல் இறந்து விட்டது; மண் மரணித்து விட்டது என்று உயிரற்ற பொருட்களுக்குக் கூற மாட்டோம். இறந்தவர்கள், உயிரற்றவர்கள் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து நிச்சயமாக இது இறந்து போன பெரியார்களைத் தான் குறிக்கும் என்று நாம் கூறும் போது அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. அவர்களது நியாயம் அடிபட்டுப் போகின்றது.

தங்களிடம் பதில் இல்லை; தாங்கள் சொல்லும் நியாயமும் தவறானது என்றதும் பாதை திரும்பினார்களா? தவ்ஹீதுக்கு வந்தார்களா? இல்லை! தங்கள் அசத்தியத்தில் உறுதியுடன் நிற்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் செய்கின்ற அமல்கள் அவர்களுக்கு அழகாய்த் தோன்றுகின்றன.

அத்துடன் நில்லாது நம்மைக் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள். அதுவும் ஏகத்துவம் ஆளுக்கு மேல் ஆள் சேர்ந்து நாளுக்கு நாள் வளர்கின்றது என்று தெரிந்தும் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம், இவர்களது அமல்கள் இவர்களுக்கு அழகாகவும் நியாயமாகவும் தோன்றுவது தான்.

மக்கா இணை வைப்பாளர்கள் இதனால் தான் பத்ருப் போரைக் கண்டார்கள்.

ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்என்று கூறினான்.

அல்குர்ஆன் 8:48

மக்கா இணை வைப்பாளர்களின் வழியைத் தான் இன்று சுன்னத் ஜமாஅத்தினர் எனப்படுவோர் பின்பற்றுகின்றனர். இவர்களது அமல்களை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுகின்றான்.

சாக்கடையில் சந்தனம்! கற்றாழையில் கஸ்தூரி!

இது இணை வைப்பாளர்களின் நிலை என்றால், நம்முடன் பயணம் செய்து பாதியில் இறங்கிச் சென்ற பங்காளிகளின் நிலை என்ன? அவர்களுக்கு ஷைத்தான் இன்று அரசியலை அழகாக்கிக் காட்டியுள்ளான். இவர்கள் சொல்லும் நியாயம் என்ன? ஷைத்தான் இவர்களிடம் போட்ட நியாயம் என்ன?

சாக்கடையைத் துப்புரவு செய்வது தான் இவர்கள் சொல்லும் நியாயம்!

ஒரு போதும் எங்களுக்கு ஓட்டுக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று மேடைக்கு மேடை சத்தியமிட்டுச் சொல்லி கழகத்தை வளர்த்தவர்கள் இன்று ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவதற்குச் சொல்லும் காரணம் தான் – ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டிய நியாயம் தான் சாக்கடை உதாரணம்!

“சாக்கடை இனி சந்தன ஓடையாக மாறப் போகின்றது; கற்றாழையில் இனி கஸ்தூரி வாடை வீசப் போகின்றது. வேம்பூ மாம்பூவாகப் போகின்றது. வெற்றிடம் இனி வெற்றி இடமாகப் போகின்றது” என்றெல்லாம் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 542 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்ட கனவில் மிதக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் வேண்டுமல்லவா? அதற்காகத் தான் இந்தச் சாக்கடைக் குளியல் என்று காரணம் கூறுகிறார்கள்.

நாளை ஒரேயொரு தொகுதி தான் என்று கூறி கருணாநிதி ஆப்பு வைத்து விடும் போது என்ன சொல்வார்கள்? நாம் ஒரு தொகுதியில் ஜெயித்தால் 234 தொகுதியிலும் ஜெயித்த மாதிரி என்று வியாக்கியானம் கூறுவார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியாயத்தை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகின்றான்.

சாதாரண மக்களே சாக்கடை என்று மூக்கைப் பொத்துகின்ற போது, ஒரு ஏகத்துவவாதி அதன் பக்கத்தில் நெருங்க முடியுமா? அந்த நெடியின் பக்கம் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியுமா? அதற்காக அரசியலே கூடாது என்று நாம் கூற வரவில்லை. மார்க்கத்தை அடகு வைக்கும் அரசியல் கூடாது என்று தான் கூறுகிறோம்.

கருணாநிதி வரும் போது எழுந்து நிற்கிறார்கள். இப்படி எழுந்து நிற்பது கூடுமா? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

இலங்கையில் முஸ்லிம்களைக் கண்டமேனிக்கு துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து, அவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி, அவர்களின் சொத்துக்களை அபகரித்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடக்கும் மனிதச் சங்கிலியில் பங்கேற்கிறார்கள். இது சமுதாயத் துரோகம் இல்லையா? என்ற கேள்விக்குப் பதிலில்லை.

விடுதலைப்புலிகளின் அழிவுக்காக முஸ்லிம்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று துவக்க விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளைத் தவிர, ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும், உலக நாடுகள் அனைத்துமே புலிகள், இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்பும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் போது, இவர்கள் இலங்கை அரசை மட்டும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இது, காட்டான்குளத்தூரில் தொழுது கொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா? என்று இவர்களிடம் கேட்டால் பதில் இல்லை.

* சட்டமன்றம் போனால் சபாநாயகர் வரும் போது எழுந்து நின்று மரியாதை

* காலஞ்சென்ற தலைவர்களுக்கு மவுன அஞ்சலி; இறந்து போன தலைவர்களை ஒரு நிமிடம் எழுந்து நின்று வணங்குதல்

* சட்டமன்ற, நாடாளுமன்ற வளாகத்தில் சிலை திறப்பில் பங்கேற்பு

* தலைவர்களின் உருவப்படங்களுக்கு மாலை மரியாதை

இப்படி இணை வைப்பின் பட்டியல் நீளுகின்றது.

தாய் மண்ணை வணங்குவோம் என்ற பாடல் வரிகளைப் பாடும் போது பக்தியாக வணங்குதல்

மாநகராட்சி மேயரைக் கூட “வணக்கத்திற்குரிய மேயரே!’ என்று இணை வைக்கும் வார்த்தைகளைக் கூறியே அழைக்க வேண்டும்.

அரசாங்க நிகழ்ச்சிகளில் குத்து விளக்கு ஏற்றித் துவங்க வேண்டும். இது நெருப்பு வணங்கிகளின் வணக்க வழிபாடாகும்.

முதல் அமைச்சர், பிரதம அமைச்சர் வரும் போதெல்லாம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

ஓட்டுப் பொறுக்குவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, அதை நிறைவேற்றாமல் இருப்பது.

தேர்தல் செலவுகளுக்காக வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கட்டாய வசூல் வேட்டை

ஒன்றிரண்டு தொகுதிகளைப் பெறுவதற்காக சமுதாய நலனைக் குழிதோண்டிப் புதைத்தல்

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள்! சாதாரண முஸ்லிமல்லாத ஒரு பாமரன் கூட இந்தச் சாக்கடையைக் கண்டு மூக்கைப் பொத்துகிறான். ஒரு தவ்ஹீதுவாதி இதன் அருகில் கூட நெருங்க முடியுமா?

இந்த அரசியல் வெறும் கழிவுகளைச் சுமந்து வரும் சாக்கடை அல்ல! திராவகத்தைத் திரவமாக, கந்தகத் தூளை அதன் சகதியாக, கதிர்வீச்சை அதன் வெப்பமாகக் கொண்டு ஓடுகின்ற ஓர் அணுஉலை ஓடையாகும். அது ஓடுகின்ற தடத்தை, அந்த மண்ணையே மலடாக்கி விடும். அருகில் உள்ள மரத்தையே அது பட்டுப் போகச் செய்து விடும்.

அப்படிப்பட்ட ஓடைக்கு அருகில் ஒரு தவ்ஹீதுவாதி ஒரு போதும் நெருங்க முடியாது. அதிலும் திருக்குர்ஆனில் இப்ராஹீம் நபி மற்றும் குகைவாசிகளின் புறக்கணிப்பு வரலாறைப் படித்த ஒரு ஏகத்துவ வாரிசுகள் ஒரு போதும் இந்த அணுக்கழிவு ஓடைக்கு அருகில் நெருங்க முடியாது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

இந்த வசனத்தின்படி நமது இலட்சியமும் இலக்கும் ஏகத்துவம் தான். அந்த இலக்கை நோக்கிய இந்தப் பயணத்தின் ஊடே எத்தனை பேர் பாதி வழியில் இறங்கிப் போனாலும் நாம் இறங்க மாட்டோம். ஷைத்தான் அழகாக்கிக் காட்டும் அமல்களைப் பார்த்துச் சறுக மாட்டோம்; சருகாக ஆக மாட்டோம் என்று உறுதி பூணுவோம். அந்த உறுதியிலேயே உயிர் பிரிய அல்லாஹ்விடம் உருக்கமாகப் பிரார்த்திப்போம்.

———————————————————————————————————————————————–

தொடர்: 8

முதஷாபிஹாத்

பத்தாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் திருக்குர்ஆனில் நபித்தோழர்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்படுமானால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கம்.

உதாரணமாக,

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

அல்குர்ஆன் 4:101

இந்த வசனத்தில் எதிரிகளின் அச்சம் இருக்கும் போது தான் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகக் குறைத்துத் தொழுவதற்கு இறைவன் அனுமதிக்கின்றான். அச்சமற்று வாழக்கூடிய காலத்திலும் கஸர் செய்யலாமா? என்று உமர் (ரலி) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டார்கள். இது குறித்து முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்:

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது” (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே?” என்று கேட்டேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது “(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக் கொள்ளுங்கள்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஅலா பின் உமய்யா (ரலி), நூல்: முஸ்லிம் 1108

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளதுஎன்ற (6:82) வசனம் இறங்கியவுடன், “எங்களில் எவர் தான் அநீதி இழைக்காதிருக்க முடியும்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநீதி என்று இறைவன் இங்கே குறிப்பிடுவது இணை வைத்தல் எனும் மாபெரும் அநீதியைத் தான்என்று விளக்கம் அளித்தார்கள். (நூற்கள்: புகாரி, அஹ்மத்)

உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான்என்ற (2:284) வசனம் இறங்கியவுடன், “மனதில் நினைப்பதைப் பற்றியெல்லாம் இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவருமே தப்ப முடியாதே?” என்று நபித்தோழர்கள் அச்சத்துடன் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னர் வேதக்காரர்கள் கூறியதையே நீங்களும் கூறுகிறீர்களா? நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்என்று சொன்னார்கள். உடனே “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்என்ற (2:286) வசனம் இறங்கியது.

(நூற்கள்: முஸ்லிம், அஹ்மத்)

இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை ஹதீஸ் நூற்களில் நாம் காணலாம். நபித்தோழர்களுக்குத் திருமறையின் எந்த வசனத்திற்கேனும் விளக்கம் தேவைப்பட்டால் உடனே அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கத் தவறியதே இல்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

இப்படியெல்லாம் பல்வேறு வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். இவ்வாறு கேட்ட போது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு வசனம் பற்றிக் கூட, “இது எனக்கோ, உங்களுக்கோ விளங்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதே இல்லை. கேட்கப்படும் போதெல்லாம் விளக்கம் அளிக்கத் தவறியதில்லை.

நபித்தோழர்கள் விளக்கம் கேட்ட பல்வேறு வசனங்களில் ஒரே ஒரு முதஷாபிஹ் வசனம் கூட இருந்திருக்காது என்பதும் பொருத்தமாகப் படவில்லை.

அப்படி முதஷாபிஹ் வசனம் பற்றி நபித்தோழர்கள் கேட்டிருந்தால், (முதஷாபிஹ் யாருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களின் வாதப்படி), “இது முதஷாபிஹ்; எனக்கு விளங்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்வில் தமக்கு அருளப்பட்ட எந்த ஒரு வசனத்தைப் பற்றியும், தமக்கு விளங்காது என்று கூறவே இல்லை. முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் விளங்க முடியாது என்பது உண்மையானால் ஒரே ஒரு வசனம் பற்றியாவது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு கூறியதாக எந்தச் சான்றும் கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் எந்த வசனம் பற்றிக் கேட்கப்பட்ட போதும் விளக்கமளித்தார்களே தவிர, விளக்கம் அளிப்பதில் முஹ்கம், முதஷாபிஹ் என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டிருக்கவில்லை.

இங்கே இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல வசனங்கள் விளக்கம் கூறாமலேயே எளிதில் அனைவருக்கும் புரிந்து விடும். வேறு சில வசனங்களை நபி (ஸல்) அவர்கள் விளக்கத்தின் துணையுடனேயே புரிந்து கொள்ள இயலும். நபித்தோழர்கள் விளக்கம் கேட்காத – எளிதில் விளங்குகின்ற – வசனங்களை விட, விளக்கம் தேவைப்பட்ட வசனங்களிலேயே முதஷாபிஹ் வசனங்கள் இருக்க அதிக சாத்தியமுள்ளது.

நபித்தோழர்களுக்கே விளங்கச் சிரமமான வசனங்களில் ஒன்றிரண்டு முதஷாபிஹ் வசனங்கள் கூட இல்லாமல் இருக்குமா? அவ்வாறு இருந்திருந்தால் இவர்களின் வாதப்படி நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் கூறியிருப்பார்கள்? “இது முதஷாபிஹ் வசனம்; இது எனக்கும் விளங்காது; உங்களில் எவருக்கும் விளங்காது; அல்லாஹ்வுக்கு மட்டுமே விளங்கும்” என்று தானே கூறியிருக்க வேண்டும். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறாததே, “குர்ஆனில் விளங்காதது எதுவுமே இல்லை’ என்பதற்குத் தெளிவான சான்றாக உள்ளது.

பதினொன்றாவது ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்கள், “முதஷாபிஹ் வசனங்கள் என்றால் யாவை?’ என்பதை நிர்ணயிப்பதில் பல அளவுகோல்கள் உள்ளன. ஆளுக்கு ஒரு விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் கருத்துப்படியும் பார்த்தால் முழுக் குர்ஆனும் முதஷாபிஹ் என்ற வகையில் சேர்ந்து, முழுக்குர்ஆனும் அனைவருக்கும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.

முதஷாபிஹ் வசனங்கள் யாவை? என்பதைச் சரியான சான்றுகளுடன் அறியும் போது, முதஷாபிஹ் வசனங்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கல்வியில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்பதை உணரலாம். முதஷாபிஹ் வசனங்கள் எவை? என்பது பற்றிய விளக்கமே அவை விளங்கக்கூடியவை என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.

முதஷாபிஹ் எவை என்பது பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் இறுதியில் கூறப்படும் போது இதை அனைவரும் அறியலாம்.

———————————————————————————————————————————————–

ஹதீஸ் கலை ஆய்வு    தொடர்: 12

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

ஏகோபித்தக் கருத்தில் ஏன் தடுமாற்றம்?

மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் கூட சில நேரங்களில் கொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.

ஒரு பெண் மதம் மாறிவிட்டால் அவளைக் கொல்லக் கூடாது என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த பல அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண் ஆயுதங்களைத் தூக்கி போர் செய்ய மாட்டாள் என்பதே இதற்குக் காரணம். இஸ்லாத்திற்கு ஒருவன் புதிதாக வந்து விட்ட சிறிது நாளில் மதம் மாறிவிட்டால் இவனுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கூறுபவர்கள் கூட இச்சட்டத்தைச் சிலருக்குப் பொருத்துகிறார்கள்; சிலருக்குத் தளர்த்துகிறார்கள் என்பதே உண்மை. மதம் மாறியவரைக் கொல்ல வேண்டும் என்ற இந்தச் சட்டத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களும் இருக்கிறார்கள்.

நாம் மட்டும் இதை மறுக்கவில்லை. இமாம் சுஃப்யான் சவ்ரீ மற்றும் அந்நஹயீ ஆகிய இருவரும், “மதம் மாறியவன் கொல்லப்படக் கூடாது. அவன் மரணிக்கும் வரை திருந்திக் கொள்ளும் படி அவனுக்குக் கூற வேண்டும்’ என்று கூறியுள்ளார்கள். இக்காலத்து அறிஞர்கள் பலர் நம்மை விட இச்சட்டத்தைப் பலமாக மறுத்துள்ளார்கள்.

எதிர் வாதங்களும், முறையான பதில்களும்

மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர்க் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைச் சொல்கிறார்கள்.

வாதம்: 1

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம் யாருக்காக இறங்கியதோ அவர்களுக்கு மட்டும் தான் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் பொருந்தும் இந்த அடிப்படையில் இஸ்லாத்திற்குள் வராமல் இருப்பவரை இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திக்கக் கூடாது என்பதை மட்டும் தான் இந்த வசனம் சொல்கிறது. இஸ்லாத்திற்கு வந்து விட்டு மதம் மாறுபவனை நிர்பந்திக்கக் கூடாது என்று இந்த வசனம் சொல்லவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை விளக்கும் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் அனைத்தும் மரணித்து விடும் போது தனக்கு பிறக்கின்ற குழந்தை உயிரோடு இருக்குமானால் அக்குழந்தையை யூதனாக மாற்றி விடுவேன் என்று (அறியாமைக் காலத்தில்) பெண் தன் மீது கடமையாக்கிக் கொள்பவளாக இருந்தாள். பனூ னளீர் என்ற (யூதக் கூட்டம் ஊரை விட்டும்) வெளியேற்றப்பட்ட போது அன்சாரிகளுடைய குழந்தைகளில் சிலரும் அதில் இருந்தார்கள். எனவே அன்சாரிகள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் (யூத மதத்தில்) விட்டு விட மாட்டோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டதுஎன்ற வசனத்தை இறக்கினான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 2307

பிறப்பிலே யூதர்களாக இருந்தவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிர்பந்திக்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. இஸ்லாத்திற்கு வந்துவிட்டு மதம் மாறியவனைத் திரும்ப இஸ்லாத்திற்கு வருமாறு வற்புறுத்துவதற்குத் தடையாக வசனம் இறங்கவில்லை. எனவே மதம் மாறியவனை நிர்பந்திப்பதற்குத் தடையாக இந்த வசனத்தைக் காட்ட முடியாது என்று கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

இவர்கள் விளங்கியிருப்பது முற்றிலும் தவறானது. பெண்களை நிர்பந்தமாகச் சொந்தமாக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த வசனம் இறங்குவதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியை அக்கணவனின் சொந்தக்காரர்கள் மணம் முடித்துக் கொள்வார்கள். அல்லது தாங்கள் விரும்பிய ஆட்களுக்கு மணமுடித்து வைப்பார்கள். இதைக் கண்டித்து இந்த வசனம் இறங்கியதாக புகாரியில் 4579வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி கூறுகிறது.

கணவனை இழந்த பெண்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. எனவே திருமணமே செய்யாத பெண்ணை நிர்பந்திப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று இவர்கள் விளங்குவார்களா? நிச்சயமாக அவ்வாறு எவரும் விளங்க மாட்டோம். மாறாக பெண்ணை நிர்பந்திக்கக் கூடாது என்ற பொதுவான தடையை வைத்துக் கொண்டு எந்தப் பெண்ணையும் எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றே விளங்குவோம். இது போன்று அமைந்த வசனம் தான் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம்.

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது என்று குர்ஆன் சொல்வதால் எதுவெல்லாம் நிர்பந்தமாகுமோ அவை அனைத்தும் கூடாது என்று சொல்வது தான் குர்ஆனைப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

வாதம்: 2

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறி அதற்கு ஆதாரமாக, இணை வைப்பவர்களிடத்தில் போர் புரியுமாறு கட்டளையிடும் வசனங்களைக் காட்டுகின்றனர். இந்த வசனங்களின் அடிப்படையில் மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கிறது. எனவே இந்த வசனங்கள், நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனத்தை மாற்றி விட்டன என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

நமது விளக்கம்

மனோஇச்சையைப் பின்பற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. குர்ஆனுடைய சட்டம் மாற்றப்படுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்ல வேண்டும். முரண்பாடில்லாத வசனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றை ஓரங்கட்டுவது முஸ்லிமிற்கு அழகல்ல.

நிர்பந்தம் கிடையாது என்று கூறும் வசனம் மாற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு அடுத்த வரியிலே ஒரு காரணத்தையும் அல்லாஹ் இணைத்துச் சொல்கிறான். அந்தக் காரணம் இருக்கும் போதெல்லாம் அந்தச் சட்டமும் நிலைத்திருக்கும்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

இஸ்லாம் தெளிவான மார்க்கம் என்பதால் உண்மை எது, பொய் எது என்பதைச் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இச்சட்டத்தை மாற்றிவிட்டு நிர்பந்தத்தை மார்க்கம் ஏற்படுத்தியதென்றால் தெளிவாக இருந்த இஸ்லாம் தெளிவை இழந்து விட்டது. அதனால் நிர்பந்திக்கச் சொல்கிறது என்று பொருள் வரும்.

நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மென்மேலும் தெளிவுபடுத்தப் பட்டதால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் மென்மேலும் வலுப்பெற்றது என்று தான் சொல்ல முடியும்.

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?

அல்குர்ஆன் 10:99

எல்லோருக்கும் நேர்வழி காட்டுவதை அல்லாஹ் நாடவில்லை. அல்லாஹ்வே நாடாத போது நபியே நீ எப்படி நிர்பந்திப்பாய்? என்று அல்லாஹ் கேட்கிறான். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு இது போன்ற காரணம் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்று சொன்னால் அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட மாட்டான் என்ற விதியை மாற்றிக் கொண்டான் என்று கூற வேண்டிய கட்டாயம். வரும்.

அதிகமான மக்கள் நேர்வழி இல்லாமல் மரணிப்பதை கண்ணால் பார்க்கக் கூடிய நாம் இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? எனவே காரணங்களோடு சொல்லப்பட்ட இந்த வசனம் மாற்றப்பட்டது என்று கூறுவது குர்ஆனை மறுத்த குற்றத்தில் நம்மைச் சேர்த்து விடும். அல்லாஹ் நம் அனைவரையும் இதை விட்டும் பாதுகாக்க வேண்டும்.

வாதம்: 3

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று (முஹம்மதே!) எச்சரிப்பீராக!

அல்குர்ஆன் 4:137

மதம் மாறியவர்களைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை நாம் முன் வைத்தோம். இந்த வசனத்தின் பின்பகுதி நயவஞ்சகர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு சொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்கள் தான். மதம் மாறிகளைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. எனவே மதம் மாறிகளைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்று எதிர்த் தரப்பினர் கூறுகின்றனர்.

நமது விளக்கம்

இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. நயவஞ்சகர்களைக் குறிப்பதால் நாம் வைத்த வாதத்திற்கு இந்த வசனம் எப்படிப் பொருந்தாமல் போகும்? நயவஞ்சகனாக இருப்பவன் மதம் மாறியாகவும் இருக்க முடியும். நயவஞ்சகர்களில் மதம் மாறியவர்களைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது.

இந்த நயவஞ்சகர்கள் ஈமான் கொண்டு பிறகு மறுத்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான். ஈமான் கொண்டு விட்டுப் பிறகு இறை நிராகரிப்பாளனாக மாறியவன் மதம் மாறியவன் இல்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?

மதம் மாறிகளைக் கொலை செய்யக் கூடாது என்பதற்கு நயவஞ்சகர்களை நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யாமல் விட்டதை முன்பே ஆதாரமாகக் காட்டினோம். நயவஞ்சகர்களைப் பற்றி இந்த வசனம் பேசுவதால் இது மதம் மாறிகளைக் குறிக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

இமாம் புகாரி அவர்கள் ஸஹீஹுல் புகாரியில் மதம் மாறிய ஆண், மதம் மாறிய பெண் தொடர்பான சட்டம் என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே பல வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். மதம் மாறிகளைப் பற்றி பேசவில்லை என்று எதிர்த் தரப்பினர் கூறிய மேலுள்ள வசனத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்கள். மதம் மாறிகளைக் குறிக்காத வசனத்தை சம்பந்தமில்லாமல் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள்.

நமது கருத்திற்கு இந்த ஒன்றை மட்டும் ஆதாரமாக வைக்கவில்லை. நாம் பல வசனங்களைக் கூறியிருக்கும் போது இந்த ஒன்றுக்கு மட்டும் தப்பான விளக்கத்தைக் கொடுத்து விட்டு மீத வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

தொடர்: 3

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.

மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.

அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.

ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.

முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!

வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி?

தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வரவேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.

அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.

நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.

மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.

நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.

யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, “கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகின்றான்.

யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.

இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:55

மேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.

அல்குர்ஆன் 12:76

அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், குர்ஆனை உரிய முறைப்படி ஆராயாமல் அரை வேக்காட்டுத் தனமாக அணுகியதால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.

இதுபற்றியும் நாம் விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்வோம்.