ஏகத்துவம் – ஜூன் 2011

தலையங்கம்

சோதனையின்றி சொர்க்கமில்லை

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம், பள்ளிவாசல் தடை, அடக்கத்தலம் மறுப்பு, திருமணப் பதிவேடு மறுப்பு, பொதுக்கூட்டத்திற்குத் தடை, பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம் கண்டது தான் இந்த ஜமாஅத்! அப்போதெல்லாம் தவ்ஹீது அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதும், ஆக்கிரமித்து நின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

அல்குர்ஆன் 2:214

அந்த அளவுக்குத் தவ்ஹீதுவாதிகள் பாதிக்கப்பட்டார்கள்; சோதிக்கப்பட்டார்கள். இந்த வசனம், உதிரம் சிந்திய அவர்களின் காயத்திற்கு ஒற்றடமானது. உடைந்து போன அவர்களது உள்ளத்திற்கு ஆறுதலானது. ஒவ்வொரு தவ்ஹீதுவாதிக்கும் வேதனையே வாழ்க்கையானது.

தவ்ஹீதுவாதிகளுக்கு எதிர்ப்பலைகள், எரிமலைகள் புதிதல்ல! அல்லாஹ்வின் அருளால் அவர்கள் எந்த எதிர்ப்பலையிலும், எரிமலையிலும் எதிர் நீச்சல் போடுவதற்குத் தெம்பும் தைரியமும் கொண்டிருக்கிறார்கள்.

இதை இங்கு சொல்வதற்குக் காரணம், ஏகத்துவாதிகளின் வியர்வையிலும் உழைப்பிலும் வளர்ந்த துரோகி ஜவாஹிருல்லாஹ், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று தேர்தலுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் கொக்கரித்திருப்பது தான்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் இவர் இதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கருவருப்பதற்கு இந்தத் தேர்தல் களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்.

திருவிடைச்சேரி சம்பவத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று திமிராக எக்காளமிடுகின்றார்.

ஏதோ இவருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கிடைத்தது போன்று பேசுகின்றார். இவருக்குக் கிடைத்திருப்பது ஒரு எம்.எல்.ஏ. பதவி தான். அதுவும் அதிமுக போட்ட பிச்சை தான். இதற்கே இந்த ஆட்டம் போடுகிறார். கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை.

இருப்பினும் அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்து, தவ்ஹீத் ஜமாஅத்தை அடக்க நினைத்தால் இவருக்கு நாம் சொல்லிக் கொள்வது, தன்னைக் கடவுள் என்று வாதிட்ட ஃபிர்அவ்னிடம் வீர முழக்கமிட்ட மந்திரவாதிகளின் அக்னி வரிகளைத் தான்.

“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்று அவர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆன் 20:71, 72

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

ஷஃபீக்

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

  1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
  2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை.
  3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1373

மேற்கண்ட மூன்று நேரங்கள் பொதுவாக தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்கள். ஆனால் கிரகணத் தொழுகையை பொறுத்தவரை அதை எப்போது தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

கிரகணம் ஏற்பட்டது முதல் அது நீங்குகின்ற வரை தொழ வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் பிரகாசம் வரும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 1060

எனவே கிரகணத் தொழுகை சூழ்நிலையை பொறுத்து தொழப்படுகின்ற தொழுகையாகும். எந்த நேரத்தில் இது ஏற்பட்டாலும் தொழலாம். மேலே கூறப்பட்ட மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்ற சட்டம் கிரகணத் தொழுகைக்குப் பொருந்தாது.

? திருமணத்திற்கும் வலிமாவிற்கும் எவ்வளவு பொருளாதாரம் இருப்பது அவசியம்?

! திருமணம் செய்வதற்குப் பெண்ணின் மீது எந்தவித பொருளாதார சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளன.

திருமணம் செய்வதற்காக மணமகன், மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 4:4

ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது.

ஒரு மனைவியை விவாக ரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

அல்குர்ஆன் 4:20

மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்.

அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.

அல்குர்ஆன் 4:24

தன்னிடத்தில் பொருளாதாரம் இருக்கும் பட்சத்தில் அதை மஹராகக் கொடுப்பது ஆண் மீது கடமை. பொருளாதாரம் இல்லை என்றாலோ அல்லது சிறிதளவு செல்வம் இருந்தாலோ மணமகள் பொருந்திக் கொண்டால் தன்னால் இயன்றதை அவர் கொடுத்து மணமுடிக்கலாம். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை” என்று சொன்னார்கள்.

அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் “இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (“மஹ்ர்’ எனும் விவாகக் கொடையாக)க் கொடு!” என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், “என்னிடம் இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார்.

எனவே, நபி (ஸல்) அவர்கள், “குர்ஆனி-ருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?” என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: புகாரி 5029

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த “சுன்னத்’ நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே “வலீமா’ விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு “முத்து‘ கோதுமையையே “வலீமா’ விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)

நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய “வலீமா’ விருந்தில் ஒரு ஆட்டை “வலீமா’வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும்.

எனவே திருமண விஷயத்தில் ஆண்கள் மீதே சில பொருளாதாரக் கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. அக்கடமைகள் கூட அவரவர் சக்திக்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால் இன்றைக்கு சிலர் பெரிய அளவில் பொருளாதாரம் இருந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். திருமணத்தை ஆடம்பரமாக்கி தங்கள் மீதே தேவையற்ற சுமைகளை சுமத்திக் கொள்கிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒருவர் திருமணம் செய்வதற்குப் பொருளாதாரம் எந்த வகையிலும் தடை இல்லை.

—————————————————————————————————————————————————————-

கொள்கையற்றவர்களின் கூக்குரல்

“இறையில்லக் கொள்ளையர்கள் ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் அல்ஜன்னத்தில் வெளிவந்த ஒரு செய்தியில் குர்ஆன், ஹதீஸை பெயரில் மட்டும் தாங்கி நிற்கும் ஜாக் இயக்கம், தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்துள்ளது.

கன்னியாகுமரியில் சுன்னத் ஜமாஅத் பள்ளியைக் கொள்ளையடித்த ஒரு கூட்டம் தான் இந்தக் குற்றச்சாட்டை தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்துகின்றது.

இவ்வாறு நாம் கூறும் போது அவர்கள் இந்த வசனங்களை ஆதாரம் காட்டினர்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:17, 18, 19

“அந்தப் பள்ளிவாசல் இணைவைப்பில் இருந்தது. மேற்கண்ட வசனங்களின்படி நாங்கள் மீட்டெடுத்தோம்” என்று இவர்கள் பதில் சொல்வார்கள். அதே பதிலைத் தான் இவர்களுக்குத் திருப்பிச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இத்தனைக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வகிக்கும் இந்தப் பள்ளிகளைப் பொறுத்த வரை நிலம் வாங்குவதற்கோ, கட்டடம் கட்டுவதற்கோ ஜாக்கிலிருந்து பத்து பைசா கூட செலவளித்ததில்லை. அந்தந்த பகுதியிலுள்ள கொள்கைவாதிகள் மக்களிடம் வசூலித்த நன்கொடைகள் மூலமே நிலம் மற்றும் பள்ளி கட்டுமானப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது நாம் ஜாக் என்ற பெயரில் செயல்பட்டதால் அந்தப் பெயரில் பதிவு செய்தோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் செயல்பட்டிருந்தால் இந்தப் பெயரில் பதிவு செய்திருப்போம்.

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் உள்ள மூத்த பிரச்சாரகர்கள் அனைவருமே ஆரம்ப காலத்தில் “குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும்; அவ்விரண்டும் தான் நமது மூல ஆதாரங்கள் என்ற அடிப்படையில் தான் ஒன்று சேர்ந்தோம். இதன் காரணமாகத் தான் அந்த இயக்கத்திற்கு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்று பெயர் வைத்தோம். காலப் போக்கில் என்ன ஆனது?

தூய்மையை நிலைநாட்டுவதற்காகத் துவக்கப்பட்ட ஓர் அமைப்பில் ஊழல், ஒழுக்கக் கேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் ஒதுக்கப்படுவதற்குப் பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டனர்.

சமுதாய ரீதியிலான சில போராட்டங்களை அமைப்பு மூலமாகச் செய்வோம் என்று குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நிறுவிய போது அதற்கு, “கூடாது’ என்று மார்க்க அடிப்படையில் பதிலளிப்பதை விட்டு விட்டு, “அமீர் சொன்னால் கேட்க வேண்டும்; அமீர் சொல்லுக்குக் கட்டுப்படாவிட்டால் அறியாமைக் கால மரணம்” என்று பதில் தரப்பட்டது.

இத்தோடு மட்டும் நிற்காமல், குர்ஆன் ஹதீஸ் என்ற இரண்டு ஆதாரங்களுடன் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது ஆதாரத்தையும் மார்க்கத்தின் அடிப்படையாகச் சேர்த்தனர்.

சிறு சிறு விவகாரங்களில், சில்லரை பிரச்சனைகளில் மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். அடிப்படையிலேயே மாற்றம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆக, அந்த இயக்கத்தில் குர்ஆன் ஹதீஸ் என்பது பெயரளவுக்குத் தான் என்றானது.

நாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பதைப் பெயராக வைத்திருந்தாலும் இன்று வரை சொல்லில், செயலில், கொள்கையில் அனைத்தும் குர்ஆன் ஹதீஸ் தான். அந்த அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழ வேண்டும் என்று அறிமுகம் செய்த போது அதைக் கிண்டல் செய்தனர்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்திய போது அது இந்தக் காலத்திற்கு ஒத்து வராது; குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறினர்.

இவர்கள் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதை விட்டு விட்டதுடன் நில்லாமல், கூட ஒரு படி மேலே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லை இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று தெளிவாக அறிவித்து விட்டனர்.

பெண் வீட்டு விருந்து ஒரு பகிரங்க வரதட்சணை என்று தெரிந்தும் பெண் வீட்டு விருந்தில் போய் பேயாக விழுந்தனர். இவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகிறார்களாம்.

இதன்படி, சுன்னத் வல்ஜமாஅத் என்று பெயர் வைத்துக் கொண்டு ஷிர்க், பித்அத் செய்பவர்களைப் போன்று, இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்று பெயர் வைத்துக் கொண்டு அதற்கு நேர் முரணான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடத்தில் பள்ளிவாசல்கள் மாட்டினால் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமான பாதையில் தான் போகும் என்று பள்ளிவாசல்களை மீட்டுவது ஒருபோதும் மார்க்கப்படி தவறாகாது.

எனவே கண்ணியமிகு பள்ளிவாசல்கள் மீட்புக்கு இவர்களிடம் என்ன காரணம் இருக்கின்றதோ அதே காரணம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடமும் இருக்கின்றது. எனவே இந்த அடிப்படையில் ஆலய அபகரிப்பு என்று இவர்கள் கூக்குரலிடுவது அறவே பொய் என்றாகி விடுகின்றது.

மேற்கண்ட வசனங்களின் கருத்துக்கேற்ப, குர்ஆன் ஹதீஸைத் தூய்மையாக நிலை நிறுத்துதல் என்ற பார்வையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தச் செயல் ஆலயப் பாதுகாப்பாகத் தான் அமைகின்றது. இதை இங்கே ஒரு வாதத்திற்குத் தான் குறிப்பிடுகின்றோம்.

ஜாக் பட்டியலிடும் பள்ளிவாசல்கள் யாரிடம் இருக்கின்றன? குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களிடம் தான் இருக்கின்றன. குர்ஆன், ஹதீஸை பெயரளவில் வைத்துக் கொண்டு செயலில் அதற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் இந்தப் பள்ளிவாசல்கள் இல்லை.

எந்த நோக்கத்திற்காக இந்தப் பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கத்திற்காகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. இது ஹதீஸில் உள்ள ஒரு நடைமுறை! அதனால் இந்தப் பள்ளியில் அந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. ஜாக்கிடம் இருந்தால் இந்த ஹதீஸ் செயல் வடிவம் பெறுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அது மட்டுமின்றி இந்தப் பள்ளிக்காக உழைத்தவர்கள், இரத்தம் சிந்தியவர்களிடம் தான் இருக்கின்றது. வெறும் மதனிகளின் உழைப்பில் ஏகத்துவக் கொள்கை வளர்ந்தது என்பதை தவ்ஹீது இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்கெடுத்தவர்கள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில், “முஹ்யித்தீன் என்று திக்ர் செய்வது கூடும்; அது ஷிர்க் அல்ல! இதை எதிர்ப்பவர் என்னிடம் முபாஹலா செய்யத் தயாரா?” என்று காயல் ஜலீல் முஹைதீன் கேட்ட போது இந்த மதனிகள் தாங்கள் மையம் கொண்டிருந்த மர்கஸ் என்ற மடாலயங்களில் மய்யமாகக் கிடந்தார்கள்.

அப்போது இணை வைப்பிற்கு எதிராக எரிமலையாகக் கிளம்பியவர்கள் அந்த முபாஹலாவை எதிர் கொண்டார்கள். இணை வைப்பின் காட்டுக் கூச்சலுக்கு வேட்டு வைத்து ஏகத்துவத்தை நிலைநாட்டினார்கள்.

“இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்’ என்ற வசனத்தைக் காட்டி அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று பிரச்சாரம் செய்த போது, டாக்டரிடம் உதவி தேடுவதும் இணை வைப்பு தானே என்று குராபிகள் எதிர்க் கேள்வி கேட்டனர்.

இதற்கெல்லாம் “இஸ்திஆனத்’ என்பது வேறு, “தஆவுன்’ என்பது வேறு என்ற விளக்கம் தரப்பட்ட போது தான் ஏகத்துவப் பிரச்சாரத்தில் இருந்த ஆலிம்களுக்கே தெளிவு கிடைத்தது. எனவே ஏகத்துவ வளர்ச்சிக்கு அப்போது தேவைப்பட்டது பிரச்சாரமோ, மர்கஸோ அல்ல! விளக்கம், விவாதக் களம் போன்றவை தான் தேவைப்பட்டது. அதில் தான் தவ்ஹீதுக் கொள்கை பிரம்மாண்ட வளர்ச்சி கண்டது.

தவ்ஹீதை ஆரம்பத்தில் சொல்லும் போது, “இவர்கள் அரபு நாட்டில் காசு வாங்கி விட்டு, அந்தக் காசுக்காக, அரபு நாட்டின் எலும்புத் துண்டுக்காக இந்தப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள்” என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்தனர். அதற்குத் தக்க மதனிகள் அரபு நாட்டு சம்பளத்தை வாங்கிக் கொண்டும் இருந்தனர். இது தவ்ஹீது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்தது.

“தமிழக மதரஸாக்களில் படித்தவர்கள் தான் நாங்கள்! அரபு நாட்டில் படித்தவர்கள் அல்லர்! தாயத்து தட்டு எழுதிப் பிழைப்பு நடத்திய இந்த தமிழகத்து ஆலிம்களிடம்  ஓதி விட்டு வந்து தான் தவ்ஹீதைச் சொல்கிறோம். நாங்கள் அரபு நாட்டிலிருந்து சம்பளமும் வாங்கவில்லை” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்த போது தான் மக்களிடம் இந்தப் பிரச்சாரம் எடுபட்டது. மக்கள் தவ்ஹீதுக் கொள்கைக்கு சாரை சாரையாகப் படையெடுத்து வந்தனர்.

அப்படி உழைத்து தவ்ஹீதை வளர்த்த அந்த மக்களிடம் இந்தப் பள்ளிகள் தவ்ஹீது அடிப்படையில் இருப்பது எப்படி அபகரிப்பாகும்? இதை ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் சிந்தித்துப் பார்த்து, தடம் புரண்ட ஜாக்கின் அபத்தத்தைப் புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

இவர்கள் தான் காதியானி மதத்தினர்

அப்துந் நாசிர்

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான் தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: திர்மிதி 2145

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3535

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களை விடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப் பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றுவிட்டது.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 907

நபி (ஸல்) அவர்கள் “தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை” என்று கூறினார்கள். (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள் “என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளன)’ என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி 2198

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்’ (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்’ (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்று திரட்டப்படுவார்கள். நான் “ஆகிப்’ (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை” என்று கூறினார்கள்.

நூல்:  முஸ்லிம் 4697

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 3455

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4777

மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி. அவர்களுக்குப் பின் எந்த நபியும், எந்த ரசூலும் வர மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றன. இறுதி நபியாகிய முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் நபி என்று வாதிடக் கூடிய பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததை மெய்ப்பிக்கும் வகையில் தன்னை நபி என்று வாதிக்கும் பொய்யர்களில் ஒருவன் தான் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவனாவான். இவன் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் காதியான் என்ற ஊரில் பிறந்தான்.

“யூதர்கள் எதிர்பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான் தான்” என்று இந்த பொய்யன் உளறினான்.

இவனுடைய இந்த உளறல் மூலம் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் யாரும் இவனை ஏறிட்டும் கூடப் பார்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களில் இவனுடைய பொய்களைப் பற்றி அறியாத சிலர் தான் இவனால் வழிகெடுக்கப்பட்டு வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று மக்கா காஃபிர்களிடம் எடுத்துரைத்த போது அம்மக்களால் நபிகள் நாயகத்தின் நபித்துவத்தை மறுக்க இயலவில்லை. அதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்னும் நபித்துவத்திற்குப் பிறகும் உண்மையாளராகத் திகழ்ந்தார்கள் என்பது தான். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்-) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது

நூல்: புகாரி 4770

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய உண்மையை முன்னிறுத்தித் தான் தம்மை நபி என்று மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

1891ஆம் ஆண்டிலிருந்து மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான். ஒரு நபி என்பதற்கு முக்கியமான அடையாளமே அவர் பொய்யராக இருக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனோ மிகவும் கடைந்தெடுத்த பொய்யர்களில் ஒருவனாக இருந்தான். இவன் திருமறைக்குர்ஆனில் இல்லாத வசனங்களை திருமறைக் குர்ஆனில் உள்ளதாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறாத ஹதீஸ்களை நபியவர்கள் கூறியதாகவும் அல்லாஹ்வின் மீதும் நபியவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறியுள்ளான். இப்படிப்பட்ட பொய்களே இவன் பொய் நபி என்பதற்கு தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

இவன் ஏராளமான பொய்களைக் கூறியுள்ளான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவனுடைய பொய்களுக்கு உதாரணமாக சில சான்றுகளைத் தருகின்றோம்.

மிர்சா குலாமும் முஹம்மதீ பேகம் திருமணமும்

முஹம்மதீ பேகம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரின் மனைவியின் மீது ஆசை கொண்ட மிர்சா குலாம் எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாஹ் தனக்கு முன்னறிவிப்புச் செய்திருப்பதாக பின்வரும் விஷயங்களைக் கூறினான்.

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்குத் திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது: அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன்.

இரண்டாவது: அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.

மூன்றாவது: எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது: முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.

ஐந்தாவது: அப்போது நான் முஹம்மதீ பேகத்தை திருமணம் செய்வேன்.

ஆறாவது: அவளை மணப்பேண். அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புகள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.

இவை அனைத்தும் “ஆயினே கமாலாத்” என்ற நூலில் 325ஆம் பக்கத்தில் மிர்சா குலாமால் எழுதப்பட்டுள்ளது.

இப்போது நாம் கேள்விக்கு வருகிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது “ஸவ்வஜ்னாகஹா’ அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று கூறினான்.

அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக் கொடுத்ததாகக் கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள்.

இவ்வாறு “ஸவ்வஜ்னாகஹா’ அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று பொய்யன் மிர்சாவுக்கு  அல்லாஹ் கூறியிருந்தால் அது கட்டாயம் நிறைவேறியிருக்க வேண்டும். ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை. இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் “இதுதான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம்’ என்றும் அவன் சொன்னான். இதற்கு மிர்சாவை நபி என்று நம்புபவர்கள் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்னபடி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.

நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை இந்தப் பொய்யன் குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை. நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.

அதுவும் இது தான் நபி என்பதற்கு ஆதாரம் என்று அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது. இந்தக் கேள்விகள் காதியானிக் கூட்டத்தாருடன் விவாதம் செய்யும் போது மூல நூலை வாசித்துக் கேட்கப்பட்ட கேள்விகளாகும். அதை அவர்கள் மறுக்கவில்லை.

அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்குத் திருமணம் நடக்கும் வரை உயிருடன் இருந்து, அவளை எனக்குத் திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் மிர்சா கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்காமலே மரணித்து விட்டார்.

இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும் பொய்யன் என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா? இல்லையா?

அல்லாஹ் அப்படிச் சொல்லியிருந்தால் அது போல் நடந்ததா? இது நிறைவேறாவிட்டால் அவன் பொய்யன்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார் என்று இந்த அயோக்கியன் சொன்னான். அவன் அப்படிச் சொன்ன படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் உண்மை சொன்னான். நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொல்லியிருக்கிறான்.

அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்துத் தந்து விட்டு மரணிப்பார் என்ற இவன் சொன்னானா? இல்லையா? அது நிறைவேறவில்லை என்பதால் அவன் பொய்யன் என்பதை அவனே ஒத்துக் கொள்கிறான் என்று தானே அர்த்தம்.

இது காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்கப்பட்ட கேள்விகள். இப்போது நாம் கேட்கும் கேள்விகள் திடீர் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகள். அந்த விவாதத்தின் போதும் அவர்கள் அதற்குப் பதில் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகு கூடப் பதில் சொல்ல முடியாது.

மிர்சா குலாம் பொய்யன் தான் என்பதை அவன் ஆதாரமாகக் காட்டியவைகளை வைத்தே அல்லாஹ் அடையாளம் காட்டிவிட்டான்.

பொய்யன் மிர்சாவின் புளுகு மூட்டை

அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று மிர்சா கூறினான்.  (நூல்: தத்கிரா)

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவன் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரால் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் – பேரன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

இது தத்கிரா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் 265ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படி பொய்களை விட்டடித்தவன் எப்படி உண்மையான நபியாக இருக்க முடியும் என்பதை இந்தக் காதியானி மதத்தினர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா

மிர்சா குலாம் காதியானி கூறுகிறான்: இதோ இவர் தான் மூஸா அல்லாஹ்வின் இளைஞர். இவர் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் தன்னுடைய வேதத்திலே சுட்டிக் காட்டியுள்ளான்.  அவர் வானத்திலே உயிருடன் இருக்கிறார். அவர் மரணிக்கவில்லை. அவர் இறந்தவர்களில் இல்லை என்று நாம் நம்பிக்கை கொள்வதை நம் மீது இறைவன் விதியாக்கியுள்ளான்.

நூல்: நூருல் ஹக், பக்கம்: 68, 69

மூஸா (அலை) அவர்கள் வானத்தில் உயிருடன் இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் எங்குமே கூறவில்லை. ஆனால் பொய்யன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானியோ குர்ஆனில் இல்லாத ஒன்றை குர்ஆனில் இருப்பதாகப் பொய்யாக இட்டுக் கட்டி கூறியுள்ளான். இதோ இத்தகைய பொய்யர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?

அல்குர்ஆன் 7:37

முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு நபி என்று வாதிடும் பொய்யர்கள் தோன்றுவார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்களின் முன்னிறிவிப்பின் பிராகரம் தோன்றியவன் தான் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன். இவன் பொய்யன் என்பதை இவனது வார்த்தைகளை வைத்தே அல்லாஹ் நிரூபித்து விட்டான். நாம் குறிப்பிட்ட விஷயங்கள் தவிர இன்னும் ஏராளமான மிர்சாவின் பொய்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் அவற்றை நாம் வெளியிடுவோம்.

இவனுடைய உளறல்களைச் சிந்தித்த உலக மக்கள் அனைவரும் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்டார்கள். தற்போது உள்ள காதியானி மதத்தினரும் இவனது பொய்களை உணர்ந்து, அவற்றை சிந்தித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் வேறு நபியோ, ரசூலோ வர முடியாது என்ற சத்தியக் கொள்கையின் பக்கம் திரும்பும் நல்வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக!

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தஃப்ஸீர்கள்      தொடர்: 6

வன்ஹர்என்பதன் பொருள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

ஒரு அரபு சொல்லுக்குப் பொருள் செய்வதாக இருந்தால் அரபு அகராதியின் படி பொருள் செய்ய வேண்டும். குறிப்பாக, குர்ஆனில் உள்ள ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்யும் போது இதே வார்த்தை குர்ஆனின் ஏனைய இடங்களில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ஹதீஸ்களில் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைக் கவனித்து பொருள் செய்ய வேண்டும்.

இந்த அணுகுமுறை இறைவனுடைய வார்த்தையை சரியான முறையில் புரிய, அவ்வார்த்தைக்குப் பிழையில்லாத பொருள் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த வழிமுறையை மீறும் பட்சத்தில் மொழியாக்கம் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத பொருளை உதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. இந்த வகையிலமைந்த ஒரு விளக்கத்தை இங்கே காண்போம்.

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

எந்த ஒரு வணக்க வழிபாட்டையும் “இறைவனுக்காக’ என்ற தூய எண்ணத்துடன் செய்திட வேண்டும் என்ற அடிப்படையில், “இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவீராக ‘என இவ்வசனத்தில் இறைவன் நபிகளாருக்குக் கட்டளையிடுகின்றான்.

“அறுப்பீராக’ என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வன்ஹர் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இது நஹ்ர் என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. இவ்வார்த்தைக்கு அறுத்தல் என்பது பொருளாகும்.

இந்த வார்த்தை இதே பொருளில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அறுத்துப் பலியிடுவதற்கான நாள் என்ற பொருளில் யவ்முன் நஹ்ர் என்ற சொல் ஹதீஸ்களில் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க புகாரி 67, 369, 968)

வன்ஹர் என்பதற்கு அனைத்து தர்ஜுமாக்களிலும் அரபு அகராதியின் படி “அறுப்பீராக’ என்றே மொழிபெயர்த்துள்ளனர்.

ஆனால் இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம் வித்தியாசமாக இருக்கின்றது.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம் 15 பக்கம் 704

நீர் அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்குவீராக என்று பொருள் என அபுல் அஹ்வஸ் கூறுகிறார்.

நூல்; அத்துர்ருல் மன்சூர்

பாகம் 15 பக்கம் 703

அதாஃ கூறுகிறார்: நீர் தொழும் போது ருகூவிலிருந்து தலையை உயர்த்தி சீராக நிற்பீராக என்று பொருளாகும்.

தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்துவீராக என்று பொருளாகும் என அபூ ஜஃபர் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம் 15 பக்கம் 702

வன்ஹர் என்ற வார்த்தைக்குப் பொருள் ஒருவர் கிப்லாவை முன்னோக்குதல் என்கிறார். மற்றொருவர் சீராக நிற்குதல் என்கிறார். மிகவும் எளிதான அனைவருக்கும் நன்கு தெரிகின்ற ஒரு வார்த்தைக்கு இந்த இமாம்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விளக்கமளித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த வார்த்தைக்கு அரபு அகராதியிலும், ஏனைய ஹதீஸ்களிலும் பொருளைப் பார்த்திருந்தால் இத்தகைய விளக்கத்தை இமாம்கள் அளித்திருக்க மாட்டார்கள்.

குர்ஆன் வசனங்களை சரியாகப் புரிந்து கொள்ள இமாம்கள் கூறும் விளக்கங்கள் தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

நடுத் தொழுகை

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!

அல்குர்ஆன் 2:238

இந்த வசனத்தில் அனைத்து தொழுகையையும், குறிப்பாக நடுத்தொழுகையையும் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை எது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “எதிரிகளுடைய புதை குழிகளையும் அவர்களுடைய வீடுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள், சூரியன் மறையும் வரை நடுத் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்” என்று கூறினார்கள். அஸ்ர் தொழுகையே நடுத் தொழுகையாகும்.

நூல்: புகாரி 6396

அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகை என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கமளித்துள்ளார்கள். இனி இதில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு கடுகின் முனையளவும் இடமில்லை என்பது தெளிவு.

இருப்பினும் நடுத்தொழுகை எதுவென்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதாக விரிவுரை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் உச்சமாக, நடுத்தொழுகை எது என்பதில் அறிஞர்களின் கருத்துகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, கஷ்ஃபுல் கிதா அன் ஸலாதில் உஸ்தா (நடுத்தொழுகை தொடர்பாக சந்தேகத்தை அகற்றுதல்) என்றொரு நூலே தொகுப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நபிகள் நாயகம் (ஸல்) தெளிவாக விளக்கிவிட்ட பின்னரும் கருத்து வேறுபாடு கொள்ள என்ன அவசியம்?

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்ளதூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

அல்குர்ஆன் 4:59

இவ்வசனத்தின் படி முஸ்லிம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்படும் போது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை நோக்கிச் சென்று அதற்கான தீர்வைக் காண வேண்டும். இதுவே இறைவன் நமக்குக் காட்டித் தரும் நல்வழி. கருத்து வேறுபாடுகளைக் களைய நல்லதொரு தீர்வு.

இறைவன் காட்டித் தந்த இந்த வழியை அறிஞர்கள் கடைப்பிடித்தார்களா? தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைய நபிவழியின் துணையை நாடியிருந்தால் நடுத்தொழுகை எது என்பதில் பல்வேறு கருத்துக்கள் தோன்றியிருக்காது, முளைத்திருக்காது.

நபிவழியின் பக்கம் தலை சாய்க்காததால் நடுத்தொழுகை தொடர்பாக நபிகளாரின் விளக்கத்தை ஓரங்கட்டிவிட்டு ஒவ்வொருவரும் தங்களது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஏறத்தாழ நடுத்தொழுகை தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கருத்துக்களை விரிவுரை நூல்களில் காணமுடிகின்றது. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

நடுத்தொழுகை என்பது மக்ரிப் தொழுகையாகும் என இப்னு அப்பாஸ் கூறுகிறார். இக்கருத்தையே கபீஸா என்பவரும் கூறுகிறார்.

நாஃபிஃ கூறுகிறார்:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நடுத்தொழுகை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு இப்னு உமர் அது அனைத்து தொழுகைகளும் தான். அவைகளை பேணுங்கள் என்று பதிலளித்தார். முஆத் பின் ஜபல் அவர்களும் இதையே கூறுகிறார்.

ஆறாவது கருத்து, அது ஜூம்ஆ தொழுகையாகும். இக்கருத்தை மாலிக் மத்ஹபைச் சார்ந்த இப்னு ஹபீப் கூறுகிறார்.

ஏழாவது கருத்து நடுத்தொழுகை என்பது மற்ற நாட்களில் லுஹர் தொழுகையாகும். ஜூம்ஆ நாளில் ஜூம்ஆ தொழுகையாகும்.

எட்டாவது கருத்து அது இஷா தொழுகையாகும். இதை இப்னு தீன், மற்றும் குர்துபீ ஆகியோர் கூறுகின்றனர்.

நாங்கள் ஜைத் பின் ஸாபித் அவர்களுடன் இருந்தோம். உஸாமாவிடம் ஆளனுப்பி நடுத்தொழுகையைப் பற்றி கேட்டார்கள். அதற்கு உஸாமா அது லுஹர் தொழுகையாகும் என பதிலளித்தார்.

பத்தொன்பதாவது கருத்து அது சுப்ஹ், இஷா தொழுகைகளாகும். ஏனெனில் இவ்விரண்டு தொழுகைகளும் நயவஞ்சர்களுக்கு மிகவும் பாரமானது என்று ஆதாரப்பூர்வமான செய்தி இருக்கிறது. மாலிக் மத்ஹபை சார்ந்த அப்ஹரிய்யு என்ற அறிஞர் இதை கூறுகிறார்.

நூல்: அர்ரிவாயாதுத் தஃப்ஸீரிய்யா

பாகம் 1, பக்கம் 240

இது போக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அச்ச நிலை தொழுகை, லுஹா நேரத் தொழுகை, இரவுத் தொழுகை, வித்ர் தொழுகை என என்னென்ன தொழுகைகள் இருக்கின்றதோ அத்தனையையும் குறிப்பிட்டு (மழைத் தொழுகையை மட்டும் தான் விட்டிருக்கிறார்கள். அது கூட ஏன் என்று தெரியவில்லை. இன்னும் சில விரிவுரைகளைப் பார்வையிட்டால் இதனையும் குறிப்பிட்டிருக்கலாம்) இவை தான் நடுத்தொழுகை (?) என்று அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர்.

அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகை என்று ஒற்றை வரியில் முடிக்க வேண்டிய விஷயத்திற்கு ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார்கள் எனில் இது சரியா? மார்க்க அறிஞர்களுக்கு அழகா? என்பதை நியாய உணர்வுடன் சிந்தித்துப் பாருங்கள்.

முரண்பாடு கொள்ளத் தேவையே இல்லை எனும் போது ஏன் ஒரு புத்தகம் வெளியிடும் அளவிற்கு இவ்வளவு கருத்துக்கள்?

நபிகளாரின் விளக்கத்தை விட யாருடைய கருத்தையும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக்கூடாது; கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்பதற்குத் தான் இவை ஆதாரங்களாக அமைந்துள்ளன.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

—————————————————————————————————————————————————————-

உரிய நீதி வழங்குமா உச்ச நீதிமன்றம்?

செப்டம்பர் 30, 2010 அன்று பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக  அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கின்றது. இது இந்திய முஸ்லிம்களின் பார்வையை மட்டுமல்ல! உலக முஸ்லிம்களின் பார்வையையும் உச்ச நீதிமன்றத்தை நோக்கித் திருப்பியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் சரி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 1994ல் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு அதே உச்ச நீதிமன்றத்தின் மூலம் அது சரி செய்யப்பட்டது. அதுவும் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடத்திக் கொண்டிருந்த போது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டியது.

பாபரி மஸ்ஜித் வழக்கில் இன்னும் சரி செய்யப்படாத அநீதிகள் பல இருந்தாலும், 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாபரி மஸ்ஜிதைச் சுற்றியுள்ள நிலத்தை குறுக்கு வழி மூலம் விஹெச்பி கைப்பற்ற நினைத்ததை அந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் முறியடித்தது.

தமிழ் ஏடுகள் எவற்றிலும் இதுவரை வெளிவராத இந்த விளக்கங்களை ஏகத்துவம் உங்கள் முன்னிலையில் தருகின்றது.

குடியரசுத் தலைவரின் ஆணை மூலம் மத்திய அரசு 1993ல் பாபரி மஸ்ஜித் நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலத்தைக் கையகப்படுத்தியதை நாம் அறிவோம்.

இதன் பின்னர் மத்திய அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டது. 1994ல் உச்ச நீதிமன்றம் அது தொடர்பாகத் தனது தீர்ப்பையும் அளித்தது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த பின்பு விஷ்வ ஹிந்து பரிஷத், பாபரி மஸ்ஜிதிற்கு அருகிலுள்ள இடத்தைத் தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. அதற்கு இரு விதமான காரணங்களை முன்வைத்தது.

  1. பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள நிலம், ராம ஜென்ம பூமி நியாஸ்க்கு உரியது.
  2. இதை ராம ஜென்மபூமி நியாஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளுக்குத் திரும்பக் கொடுப்பதால் பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்குக்கு இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னால் விஹெச்பி இவ்விரு வாதங்களையும் முன் வைப்பதற்குக் காரணம் என்ன?

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான ஜகதீஸ் சரண் வர்மா (ஜே.எஸ். வர்மா) அளித்த தீர்ப்பு இது தான்.

“சர்ச்சைக்குரிய நிலத்தில் பள்ளி இடிக்கப்படுவதற்கு முன்னால் அப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் மட்டும் தான் முஸ்லிம்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு எதிராக இந்துக்கள் எழுப்புகின்ற ஆட்சேபணை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும். 1993 அயோத்தியா நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாபரி மஸ்ஜித் இடத்தைத் தவிர எஞ்சியிருக்கும் இடத்தில் முஸ்லிம்கள் எவ்வித உரிமையும் கோரவில்லை. இந்துக்களின் சொத்துக்கள் அடங்கிய அந்த எஞ்சியுள்ள நிலத்தின் பெரும்பகுதி இந்துக்களுக்குச் சொந்தமானது. அவை சர்ச்சைக்குரிய பகுதி அல்ல!”

வர்மாவின் இந்தத் தீர்ப்பு தான் விஹெச்பியின் கோரிக்கைக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

விடுவார்களா விஹெச்பி?

அவ்வளவு தான்! விஹெச்பி வரிந்து கட்டிக் கொண்டு, பள்ளிக்கு அருகில் அமைந்த நிலத்தைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். மத்திய அரசாங்கம் மொத்தம் 67.703 ஏக்கர் நிலத்தை 1993ல் கையகப்படுத்தியது. இதில் விஹெச்பி 43 ஏக்கர் நிலத்தை திரும்பக் கோரியது. இதற்குத் தான் மேற்கண்ட இரண்டு வாதங்களை முன்வைத்தது.

இப்போது விஹெச்பி கோருகின்ற 43 ஏக்கர் நிலத்தின் பின்னணியைப் பார்ப்போம்.

இந்த நிலம் உ.பி. அரசாங்கத்தால் ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பிக்கு சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. ராமர் கோயில் கட்டுவது அந்த நோக்கங்களில் அறவே இடம் பெறவில்லை.

இதைத் திட்டமிட்டு மறைத்தே உ.பி. அரசிடமிருந்து ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பி இந்த நிலத்தை குத்தகைக்குப் பெற்றது.

1992ல் இந்த அமைப்புகளின் நோக்கம் பள்ளியை இடித்து விட்டு கோயிலைக் கட்டுவது தான். அதே நோக்கத்திற்காகவே பள்ளிக்கு அருகிலுள்ள நிலத்தை திரும்பத் தரும்படி மத்திய அரசிடம் கேட்டது.

அப்போதைய பிஜேபி தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகிறார்:

உண்மையில் சர்ச்சைக்குரிய பகுதி பாபரி மஸ்ஜித் இருந்த 80க்கு 40 அடி கொண்ட பகுதி மட்டும் தான். மீதியுள்ள நிலப் பகுதி சர்ச்சைக்குரிய பகுதி அல்ல! இது ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பியால் வாங்கப்பட்ட நிலமாகும். எனவே ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பி இந்த நிலத்தைத் திரும்பக் கேட்பதில் ஓர் அடிப்படை இருக்கின்றது.

(தி இன்டியன் எக்ஸ்பிரஸ், 06.02.2002)

ஆனால் மார்ச், 4, 2002 அன்று பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து:

கையகப்படுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய 67 ஏக்கர் நிலத்தில் ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பி 42 ஏக்கருக்கு நிரந்தர குத்தகைதாரர். அத்துடன் கையகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்.

இவ்வாறு தெரிவித்த வாஜ்பாய், என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் உ.பி. அரசு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்தது என்பதைத் தெரிவிக்காமல் விட்டு விட்டார். அதைத் தெரிவித்தால் விஹெச்பியின் மோசடி அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

ராமர் கதா பூங்கா

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஸ்ரீராம் கதா பூங்காவை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் உ.பி. அரசாங்கம் ராமஜென்ம பூமி நியாசுக்கு அந்த நிலத்தை குத்தகைக்குக் கொடுக்கின்றது. குத்தகையின் நிபந்தனை இது தான்.

தனது சொந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவே குத்தகைதாரரான ராமஜென்ம பூமி நியாஸ் தெரிவித்திருந்தது. இதன் பேரில் தான் உ.பி. அரசு 42 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட்டது.

குத்தகைதாரர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று குத்தகை ஒப்பந்த விதி எண்: 3 தெரிவித்தது.

குத்தகைக்கு விடுபவர், அதாவது மாநில அரசாங்கம் தான் இந்த நிலத்தின் உரிமையாளர் என்று விதி எண்: 4 தெரிவித்தது. அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் நிலத்தில் சோதித்துப் பார்ப்பதற்கு அதிகாரம் அளித்தது.

1895ஆம் ஆண்டில் அரசு வழங்கல்கள் சட்டத்தின்படி நிலம் குத்தகைதாரருக்கு வழங்கப்பட்டது என்று தெளிவாக அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது.

ஏற்கனவே 1882ஆம் ஆண்டின் சொத்து மாற்றச் சட்டப்படி குத்தகைதாரருக்கு (தான் வழங்கிய சொத்தை அரசு தன்னிச்சையாகப் பறிக்காமல் இருப்பதற்காக) ஒரு பாதுகாப்பு இருந்தது.

1895ஆம் ஆண்டில் அரசு வழங்கல் / கொடைகள் சட்டம், குத்தகைதாரருக்கு வழங்கப்பட்டிருந்த அந்தப் பாதுகாப்பை நீக்கி விட்டது.

குத்தகைதாரர், ஒப்பந்தத்தை மீறினால் அரசு தன் விருப்பப்படி தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தை உடனே ரத்துச் செய்து விடலாம் என்று அந்தச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் உ.பி. அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யாமல் கோயில் கட்டும் நோக்கத்திற்காகவே ராமஜென்மபூமி நியாஸிடம் விட்டு வைத்திருந்தது.

பச்சைப் பொய்! பகிரங்கப் பொய்!

இந்தச் சட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு, ராம ஜென்மபூமி நியாஸ், உ.பி. அரசிடமிருந்து குத்தகை நிலத்தை எந்த அடிப்படையில் பெற்றது என்பதைப் பார்ப்போம்.

ராமர் கதா பூங்காவை அமைப்பது, அதை அழகுபடுத்துவது, புராண காவியமான ராமாயணத்தின் கலாச்சார கண்ணோட்டங்களைக் காணச் செய்வது என்ற அடிப்படையில் தான் ராம ஜென்மபூமி நியாஸ் அந்த நிலத்தை குத்தகைக்குப் பெற்றது. உ.பி. அரசின் சுற்றுலாத் துறையும் இந்த நோக்கத்திற்காகத் தான் கொடுத்தது.

இது ஓர் ஒன்பதாண்டு காலத் திட்டம் என்பதாலும் பொதுக் காரியம் என்பதாலும், அந்த நிலத்தை ஒரு ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் கூட குத்தகைக்கு விடாமல் நிரந்தரக் குத்தகைக்கு விட்டது.

இதில் ராம ஜென்மபூமி நியாஸ் சொந்தமாக வாங்கியது ஒரே ஒரு ஏக்கர் நிலம் தான். மீதமுள்ள 42.09 ஏக்கர் நிலம் உ.பி. அரசுக்குச் சொந்தமானது.

1989ஆம் ஆண்டு ஜனவரி 20, 23 மற்றும் செப்டம்பர் 27 ஆகிய தேதிகளில் ராம் கதா பூங்காவுக்காக பாபர் மஸ்ஜிதுக்கு அப்பால் 55.674 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசாங்கம் கையகப்படுத்தியது.

ஆட்சிக்கு வந்த பிஜேபி

ஜூன் 24, 1991ல் உத்தர பிரதேசத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. ஜூலை 31, 1991 அன்று கவர்னர் உரையில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற உறுதிமொழி இடம்பெற்றது.

அக்டோபர் 7, 1991ல் பாபரி மஸ்ஜிதைச் சுற்றியுள்ள 2.77 ஏக்கர் நிலத்தை முறையின்றி உ.பி. அரசு கையகப்படுத்தியது. எதற்காக? சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், பக்தர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அரசின் இந்த நிலப் பறிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது அதற்குப் பதிலளித்து ஜனவரி 3, 1992ல் தாக்கல் செய்த பிரமாணத்தில் உ.பி. அரசு தெரிவித்ததாவது:

ராமஜென்ம பூமியை (ராமர் பிறந்த இடம் மற்றும் அதைச் சுற்றிலும் அமைந்த பகுதி) உள்ளடக்காமல் ராம் கதா பூங்காவை அமைக்க எந்தத் திட்டமும் இல்லை. காரணம் ராம் கதா பூங்கா அமைக்கப் போவதே ராம ஜென்ம பூமியைச் சுற்றித் தான். இந்த முடிவைக் கருத்தில் கொண்டு தான் ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவதற்காக வேண்டி மாநில அரசு 2.77 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

பகவான் ராமர் விராஜ்மான் கோயில் கட்டுவதற்காக வேண்டி ராம ஜென்மபூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதி கட்டாமல் காலியாக விடப்படும்.

இது தான் நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல் செய்த வாக்குமூலமாகும்.

அரசு நிலத்தை ராம ஜென்மபூமி நியாஸ் குத்தகைக்கு எடுத்ததற்கான குறுகிய நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விட்டது. ராம ஜென்மபூமி நியாஸின் அப்பட்டமான பச்சைப் பொய்யை, பகிரங்கப் பொய்யை அம்பலப்படுத்தி விட்டது.

ராமர் கதை பூங்கா என்பதெல்லாம் வெறும் கதையளப்பு! பள்ளியை இடித்து விட்டுக் கோயில் கட்டுவது தான் அதன் நோக்கம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

அத்துடன் பள்ளிக்கு அருகில் உள்ள நிலம் சர்ச்சைக்குரியது தான் என்பதும் இங்கு உறுதியாகி விட்டது. அது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலம் என்ற சங் பரிவாரத்தின் வாதம் பொய் என்பதும் ஊர்ஜிதமாகி விட்டது.

அம்பலப்படுத்திய ஹைகோர்ட்

இந்த உண்மையை உயர் நீதிமன்றமும் அம்பலப்படுத்தியது. உ.பி. அரசால் கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்த போது, அது ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் அறக்கட்டளை விதிகள் குறித்து தனது பார்வையைச் செலுத்தியது.

டிசம்பர் 18, 1985ல் செயலாக்கம் கண்ட இந்த அறக்கட்டளை விதிகளின் முக்கிய நோக்கமே ராமர் கோயிலைக் கட்டுவது தான். அதன் அறங்காவலர்கள் அனைவருமே தெளிவான விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர்கள்.

இது தொடர்பாக நீதிபதி எஸ்.சி. மாத்தூர் குறிப்பிட்டதாவது:

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ராமர் கதா பூங்காவும், அண்மையில் கையகப்படுத்தப்பட்ட (2.77) நிலமும் ஒரே நோக்கத்திற்காகத் தான் பயன்படுத்தப்படவுள்ளது. ராமர் கதா பூங்காவிற்கான நிலம் ஒப்படைக்கப்பட்ட டிரஸ்ட், விஹெச்பி உறுப்பினர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட டிரஸ்ட் ஆகும். அதன் நோக்கமும், குறிக்கோளும் மத ரீதியிலானது. அக்டோபர் 1991ல் கையகப்படுத்தப்பட்ட 2.77 நிலத்தை மார்ச் 20, 1992 அன்று ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பிற்குக் கொடுத்தது கோயில் கட்டுதல் என்ற ஒரேவிதமான நோக்கத்திற்காகவும் நடவடிக்கைக்காகவும் தான். எனவே அது செல்லாது.

இவ்வாறு நீதிபதி எஸ்.சி. மாத்தூர் குறிப்பிடுகின்றார்.

“பள்ளிவாசலும், அதற்கு அருகிலுள்ள அடக்கத்தலமும் முஸ்லிம்களின் வழிபாட்டுடன் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுடன் மற்றொன்று பின்னிப் பிணைந்தது. அடக்கத்தலம் என்பது முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தாகும். பள்ளியில் இறந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி விட்டு இந்த அடக்கத்தலங்களில் அவர்களை முஸ்லிம்கள் அடக்கம் செய்வார்கள். முஸ்லிம்களுக்கு அந்த அடக்கத்தலத்தில் சட்டப்பூர்வமான அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள்” என்று நீதிபதி எஸ்.ஹெச்.ஏ. ரஜா தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடுகின்றார்.

இதற்கு 1885ல் ஒரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வரைபடத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார். நான்கு பக்கங்களிலும் உள்ள அடக்கத்தலங்கள் பள்ளியின் வெளிப்புற எல்லை நோக்கி அமைந்திருந்ததை அந்த வரைபடம் காட்டியது.

இந்தத் தீர்ப்பு, பள்ளியைச் சுற்றி அமைந்திருந்த நிலங்கள் அடக்கத்தலம் என்றும், ராம ஜென்மபூமி நியாஸின் அறக்கட்டளை விதிகள் மோசடி என்றும் அம்பலப்படுத்தியது.

ஆனால் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை டிசம்பர் 11, 1992 அன்று தான் அளித்தது. அப்போது பள்ளிவாசல் கயவர்களால் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

இந்தத் தீர்ப்பு உ.பி. அரசு, ராம ஜென்மபூமி நியாஸிற்கு 42 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்தது செல்லாது என்று அறிவித்தாலும், குத்தகை ஒப்பந்தத்தின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினாலும் சட்டப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவில்லை.

இத்தனைக்குப் பிறகு அதற்கு உயிர் இல்லாவிட்டாலும் அந்தக் குத்தகை ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு தான் ராம ஜென்ம பூமி நியாஸ் 42 ஏக்கர் நிலத்தைத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

வர்மாவின் வார்த்தைகள்

ராம ஜென்மபூமி நியாஸ் மற்றும் விஹெச்பி அமைப்புகளை இவ்வாறு கோர வைத்தது நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தீர்ப்பில் இடம் பெற்ற வாசகங்கள் தான்.

“அயோத்தியா நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாபரி மஸ்ஜித் இடத்தைத் தவிர எஞ்சியிருக்கும் இடத்தில் முஸ்லிம்கள் எவ்வித உரிமையும் கோரவில்லை. இந்துக்களின் சொத்துக்கள் அடங்கிய அந்த எஞ்சியுள்ள நிலத்தின் பெரும்பகுதி இந்துக்களுக்குச் சொந்தமானது. அவை சர்ச்சைக்குரிய பகுதி அல்ல!”

நீதிபதி வர்மா எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குறிப்பிடுவது தான் விஹெச்பிக்குத் தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் ஆகிவிட்டது. நீதிபதி வர்மா தனது தீர்ப்பில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக பொம்மை வெளியிட்ட அறிக்கையை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார்.

பொம்மை அறிக்கை

பாபரி மஸ்ஜிதின் மூன்று பக்கங்களும் பழமை வாய்ந்த மையவாடியில் தான் அமைந்திருக்கின்றது. பக்கா மற்றும் கச்சாவான ஆயிரம் கப்ர்கள் இந்த மையவாடியில் இருக்கின்றன. காஜி கித்வாவின் கப்ரும் இங்கு தான் இருக்கின்றது. அண்மைக் காலம் வரை இடம் பெற்றிருந்த கப்ருகள் தான் மார்ச் 20, 1992ல் அடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.

இவ்வாறு ஏப்ரல் 7, 1992 அன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் அவர் வெளியிட்ட அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் 42.09 ஏக்கரை ராம ஜென்மபூமி நியாஸிற்குக் குத்தகைக்கு விட்ட மாத்திரத்தில் அது செய்த முதல் வேலை அங்கிருந்த சிறு சிறு கோயில்களையும் முஸ்லிம்களின் மையவாடியையும் இடித்துத் தரைமட்டமாக்கியது தான்.

இவ்வாறு மார்ச் 10, 2002 இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவிக்கின்றது.

இந்தச் சிறு சிறு கோயில்களை இடித்த மாதிரியே பாபரி மஸ்ஜிதும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விடும் என்ற பயம் முஸ்லிம்கள் அதிகமாக ஆட்கொண்டது என்றும் பொம்மை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முஸ்லிம்களின் மையவாடி வக்ஃப் சொத்தாகும். ஆனால் “பள்ளிக்கு அருகில் அமைந்த இந்த நிலத்தின் மீது முஸ்லிம்கள் உரிமை கொண்டாடவில்லை’ என்று தனது தீர்ப்பில் போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டுப் போய் விட்டார் ஜே.எஸ். வர்மா! இது விஹெச்பிக்கு ஊட்டச்சத்தைக் கொடுத்தது.

பூஜைக்கு அனுமதி கோரல்

வர்மாவின் தீர்ப்பு வந்தது தான் தாமதம்! ராம ஜென்மபூமி நியாஸ் மற்றும் விஹெச்பியினர் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் மார்ச் 15, 2002ல் பாபரி மஸ்ஜிதுக்கு அருகில் பூமி பூஜை நடத்தப் போவதாக விஹெச்பி அறிவித்தது.

பூஜை நடத்துவதற்கு அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த பிஜேபி அரசு அதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்தது.

இதற்காக அருகிலுள்ள சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை (முஸ்லிம்களின் அடக்கத்தலம் அமைந்த இடம் என்பதால் இதுவும் சர்ச்சைக்குரிய நிலம் தான் என்பதை மேலே கண்டோம்) ராம ஜென்மபூமி நியாஸிற்கு மாற்றக் கோரி மத்திய அரசு, மார்ச் 13 அன்று உச்சநீதிமன்றத்தை அணுகியது என்று ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை தெரிவிக்கின்றது.

கூலிக்கு மாரடித்த சோலி சொராப்ஜி

பிஜேபி அரசின் அட்டார்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) பதவியில் நியமிக்கப்பட்ட சோலி சொராப்ஜி, பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள நிலத்தில் பூமி பூஜை செய்ய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

சர்ச்சைக்கு அப்பாற்பட்ட, அருகிலுள்ள நிலத்தில் தற்காலிகமாக பூமி பூஜை நடத்துவது தடை செய்யப்பட்ட காரியமல்ல! அது அங்கு நீடித்து வரும் ஸ்டேட்டஸ் கோ நிலையை மீறியதாகவும் ஆகாது என்று தெரிவித்தார்.

சுதாரித்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்

தான் அளித்த தீர்ப்பில் ஏதோ தப்பு இருக்கின்றது; அல்லது ஆட்சியிலிருக்கும் பிஜேபி மற்றும் சங் பரிவாரங்களால் தங்களுக்குச் சாதகமாக நமது தீர்ப்பு வளைக்கப்படுகின்றது; திரிக்கப்படுகின்றது என்று தெரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் பூமி பூஜைக்கும், பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள நிலத்தை ஆட்டையைப் போடுகின்ற அபாய சிந்தனைக்கும் ஆப்பு வைத்து மார்ச், 13, 2002 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இதோ:

மதம் தொடர்பான எந்தவித அடையாள பூஜையோ, பூமி அல்லது ஷிலா பூஜை உட்பட வேறெந்த பூஜையுமோ யாராலும் சம்பந்தப்பட்ட இடத்தில் செய்வதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் எந்த ஒரு பகுதியையும் யாருக்கும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது. அந்த நிலத்தின் எந்தவொரு பகுதியையும் யாரும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு அல்லது மதம் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் அதில் செய்வதற்கு முற்றிலும் இந்த நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படுகின்றது.

எங்களுடைய கட்டமைப்பின் அடிப்படையே மதச் சார்பின்மை தான். மதச் சார்பின்மையைப் பாதிக்கச் செய்கின்ற எந்தவொரு காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம்.

இன்னொரு டிசம்பர் 6 நடப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பூஜை தொடர்பான அரசின் முறையீடுகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.

இந்துத்துவா சக்திகள் இப்படிக் கிளம்பி அருகிலுள்ள நிலத்தை அபகரிக்க முனைந்ததற்கு அடிப்படைக் காரணம் 1994ல் வர்மா கொடுத்த ஒரு பிடி தான். இதை சுப்ரீம் கோர்ட் சரி செய்தாலும் அது ஒரு தற்காலிக அடிப்படையில் தான்.

ஏனெனில் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவை மார்ச் 13, 2002ல் வழங்கியவுடன் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பிஜேபி அரசாங்கத்திலுள்ள தலைவர்கள், உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கி விட்டால் 42 ஏக்கர் நிலத்தையும் ராம ஜென்மபூமி நியாஸிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

எனவே உச்ச நீதிமன்றத்திடமிருந்து நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பது இது தான்.

  1. ஏற்கனவே ஒரு மதத்தினரை (இந்துக்களை) தற்காலிகக் கோயில் கட்டி வழிபடச் செய்த தவறைக் களைந்து, மார்ச் 13, 2002ல் காட்டிய அதே மதச் சார்பின்மை அடிப்படையில் பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும்.
  2. ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புடன் உ.பி. அரசு செய்த ராம் கதா பூங்கா குத்தகை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
  3. பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள, குத்தகைக்கு விடப்பட்ட நிலம் தொடர்பாக 1994ல் நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறிய தீர்ப்பின் தவறான கருத்துக்களைக் களைந்து, அந்த நிலத்தை முஸ்லிம்களிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும்.

இந்த அம்சங்கள் அடங்கிய மதச் சார்பற்ற, ஓர் உன்னதமான  தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு அச்சாரமாக செப்டம்பர் 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தின் கறை படிந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டு உண்மையான மதச் சார்பின்மையும் நீதியும் நிலைநாட்டப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் வெற்றி

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப கால கட்டத்தில் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான் தவ்ஹீதுவாதிகள் இருந்தனர்.

1989ஆம் ஆண்டு அல்ஜன்னத் என்ற பத்திரிகையில் அப்போது எழுதியதைப் பாருங்கள்.

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்சம் லாவண்யம் ஒழிந்து விடப் போகிறதா? தமிழ்ச் சமுதாயம் வறுமைக் கோட்டைத் தாண்டி விடப் போகிறதா? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்பட்டு விடப் போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கப் போகின்றதா? இதில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச் சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப் பிடித்துப் போய் அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்ன தான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:85

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!

அல்குர்ஆன் 5:2

வட்டியும் மதுவும் சூதும் லஞ்சமும் ஒழுக்கக் கேடுகளும் குற்றங்களும் எவராலும் ஒழியப் போவதில்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்து விடப் போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப் போவதில்லை.

அல்ஜன்னத், ஜனவரி 1989

ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பு நம்முடைய அந்தப் பார்வையை முற்றிலும் மாற்றியது. நம்முடைய வாக்குரிமையை தேர்தலில் பயன்படுத்தாமல் விடுவது பி.ஜே.பி. போன்ற முஸ்லிம் விரோதக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவதற்குப் பாதை வகுத்து விடும் என்று உணர்ந்ததால் அந்த நிலைபாட்டைக் கைவிட நேர்ந்தது. நாம் எதிர்த்து வாக்களித்த பின்னரும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் தான் நம்முடைய வாக்குரிமையைப் பயன்படுத்தும் முடிவுக்கு வந்தோம்.

சமுதாயத்திற்காகப் போராடும் வாசல் ஜாக்கில் அடைக்கப்பட்டதால் தமுமுக என்ற இயக்கத்தைத் தவ்ஹீதுவாதிகள் கண்டனர்.

அந்த அமைப்பைக் கண்ட பிறகு முதன் முதலில் சந்தித்த தேர்தல் 1998 நாடாளுமன்றத் தேர்தல்!

கோவையில் குண்டுவெடிப்பு நடந்து, முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது.

அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்தது. திமுக ஆட்சியில் 1997ல் நடைபெற்ற கலவரத்தில் காவல்துறையினரால் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். எனவே இரண்டு கட்சியையும் ஆதரிக்க முடியாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்தோம்.

ஆனால் பிப்ரவரி 14, 1998ல் கோவை குண்டு வெடிப்பு நடந்ததால் புறக்கணிப்பு என்ற முடிவை மாற்றி வலிமையான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.

அந்தத் தேர்தல் நடைபெற்று 13 மாதங்களில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி, பிஜேபி ஆட்சியைக் கவிழ்த்தார்.

அடுத்து 1999ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல்.

அப்போது திமுக, பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தது. இக்கால கட்டத்தில் கருணாநிதி தமுமுகவை நசுக்கி அழிப்பதற்குத் துடித்துக் கொண்டிருந்தார்.

ஜூலை 4 அன்று சென்னையில் நடைபெறவிருந்த வாழ்வுரிமை மாநாட்டையும் தடை செய்து விடுவார் என்ற ஒரு நெருக்கடி இருந்தது. அதனால் அம்மாநாட்டிற்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தோம். அதில் கலந்து கொண்ட அவர், பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்தக் சூழலில் 1999 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தோம்.

2001 சட்டமன்றத் தேர்தல்

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்து அதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதாகவும் ஜெயலலிதா சொன்னதன் அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். ஆனால் தேர்தல் அறிக்கையில் தலித் முஸ்லிம்களுக்குத் தனி இட

ஒதுக்கீடு தருவோம் கூறி, இஸ்லாத்துக்குள் தலித்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். மேலும் முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு இடங்களை மட்டுமே ஒதுக்கினார்.

இதனால் வெகுண்டெழுந்து ஜெயலலிதாவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியதுடன், ஜெயலலிதாவின் இந்த ஆணவப் போக்கிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை எதிர்த்து அந்தத் தேர்தலில் களமிறங்கினோம்.

அதிமுக போட்டியிடும் இடங்களில் அதிமுகவை எதிர்ப்பது, மற்ற இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களைக் கவனித்து வாக்களிப்பது என்ற நிலைபாட்டை எடுத்தோம்.

2004 தேர்தலில் இட ஒதுக்கீடு

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமுமுகவின் செயற்குழு தஞ்சையில் கூடியது. இந்த செயற்குழு தவ்ஹீதுவாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஒத்திகை பார்க்கப்பட்ட செயற்குழு என்று குறிப்பிடலாம்.

ஒவ்வொரு கருத்தும், ஆலோசனையும் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், “தலைவர் அதுபற்றி முடிவெடுப்பார்’ என்று ஜவாஹிருல்லாஹ்வின் தன்னாதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த சமயத்தில் 2004ல் விருதுநகரில் திமுக நடத்திய மாநாட்டில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே இந்த இட ஒதுக்கீடு வாக்குறுதிக்காக திமுகவுக்கு ஆதரவளிக்கலாம் என்று தமுமுகவின் தேர்தல் நிலைபாடு பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆலோசனை வழங்கியது.

இந்தச் செயற்குழுவில் திமுகவை ஆதரித்து தீவிரமாகப் பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

உடனே குறுக்கிட்டு “தேர்தலில் ஆதரவு என்றால் அது எந்த நிலையில் இருக்க வேண்டும்? இஸ்லாத்தின் வரம்புகளை மீறாமலும் இயக்கத்தின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படாமலும் இன்னது செய்யலாம்; இன்னது செய்யக் கூடாது என்று இப்போதே தெளிவாக வரையறுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் நம் சகோதரர்கள் வரம்பு மீறிவிடக் கூடும்” என்று வற்புறுத்தப்பட்டது.

அப்போதைக்கு இதை மறுக்க முடியாமல் இதற்கான திட்டங்களை வகுக்க ஒரு குழு அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் வகுக்கப்பட்ட எந்த விதிமுறையும் பேணப்படவில்லை. “வாடி பொட்டப்பிள்ளை” என்ற பாடலுக்கு ஆபாச நடனம் ஆடிய நங்கைகள் முன்னே செல்ல தமுமுக பொதுச் செயலாளர் ஓட்டுக் கேட்டுச் சென்ற அவலம் அப்போது தான் நடந்தது.

அந்தத் தேர்தலில் தான் முதன்முதலில் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் திமுகவிற்கு ஆதரவளித்தோம். இதன் பின்னர் இஸ்லாமிய சமுதாயத்தின் ஆதரவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தான் என்ற வியூகம் தமிழகத்தில் வகுக்கப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் தேர்தல் ஆதரவு என்பது அந்தந்த கட்சிக்குக் கிடைக்கும் சீட்டுகள் அடிப்படையில் தான் இருந்தது. இதைத் தான் தவ்ஹீதுவாதிகள் மாற்றியமைத்தனர்.

இதற்கிடையே ஏகத்துவக் கொள்கையால் தமுமுக வளர்ச்சி பாதிக்கின்றது என்று கூறி தவ்ஹீதுவாதிகளின் முதுகில் தமுமுக குத்தியதால் தவ்ஹீதுவாதிகள் ஆன்மீகம், அரசியல் இரண்டையும் இணைத்துச் செயல்படுகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைக் கண்டனர்.

2006 தேர்தலில் இட ஒதுக்கீடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானதும் கண்ட முதல் தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல்! இந்த சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கும்பகோணத்தில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்து மாபெரும் உரிமை மீட்புப் பேரணியை நடத்தியது. எதிர்பார்த்தது போலவே அது உரிய பலனை அளித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வந்தது.

ஜெயலலிதாவைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை கொண்டவர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று வெளிப்படையாகவே பேசியவர். இருப்பினும் கும்பகோணம் பேரணியில் கூடிய கூட்டம் அவருடைய எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் அவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அது குறித்து ஆய்வு செய்வதற்காக ஓர் ஆணையத்தையும் அமைத்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவுக்கு விழுந்தாலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்தது.

எதிர் விளைவில் இட ஒதுக்கீடு

எதிர்பார்த்தது போன்று அதிமுக ஆட்சிக்கு வரவில்லையே என்று தவ்ஹீதுவாதிகள் கனத்த மனதுடன் இருந்தனர். கவலையுடன் இருந்தனர். ஆனால் அல்லாஹ் அதில் நன்மையை வைத்திருந்தான்.

ஒரு சில கட்டங்களில் நேரடியாகக் கிடைக்காதது எதிர் விளைவில் கிடைத்து விடும். ஜெயலலிதா என்ன கொடுப்பது? நான் கொடுக்கிறேன் என்று கருணாநிதி வழங்கியது தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு!

எனவே இதன் மூலம் அல்லாஹ் ஒரு மாபெரும் வெற்றியை அளித்தான். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு

திமுக ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீட்டை உடனே தந்து விடவில்லை. அதற்காகப் பல கட்டப் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, அறப்போர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. அந்தப் போராட்டங்களில், திமுக அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை நன்றிக் கடனாக திமுகவிற்கு அளிப்போம் என்று பிரகடனம் செய்தோம்.

திமுக 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்ததும், நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னதாகவே கருணாநிதியைச் சந்தித்து வாக்களித்தபடி திமுகவை ஆதரிப்பதாக உறுதியளித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! அல்லாஹ்வின் கிருபையால் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியும் கண்டது.

விதியை மறுக்கும் வீணர்கள்

2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்து அந்தக் கட்சி தோற்று விட்டதால், தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தால் அந்தக் கட்சி தோற்று விடும் என்ற சென்டிமென்டை நமது எதிரிகள் வேண்டுமென்றே பரப்பினார்கள். விதியை மறுத்து விதண்டாவாதம் பேசினார்கள்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் நமது இலக்கு இட ஒதுக்கீடு! அந்த இட ஒதுக்கீட்டை எதிர் விளைவின் மூலம் வல்ல அல்லாஹ் கிடைக்கச் செய்தான். அது தான் நமது தேர்தல் வெற்றி! இது விதியை மறுக்கும் வீணர்களுக்குப் புரியப் போவதில்லை.

இவர்கள் பார்வையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தால் அந்தக் கட்சி தோற்று விடும் என்ற குஃப்ரான வாதத்திற்கு 2009 நாடாளுமன்றத் தேர்தல் செருப்படியாக அமைந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலும் இட ஒதுக்கீடும்

இந்த சட்டமன்றத் தேர்தலை முக்கிய நிரலாகக் கொண்டு தான் 30.01.2011 அன்று சேலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு கூடியது. மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடியது இந்தப் பொதுக்குழு! நிர்வாகிகள் தேர்வுக்கு இன்னும் கால அவகாசம் இருந்த போதும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு முன்னரே கூடியது.

இப்பொதுக்குழு கூடுவதற்கு முன்னரே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையிடம் தொடர்பு கொண்ட திமுக, அதிமுக தலைவர்களிடம், “பொதுக்குழு கூடுவதற்கு முன்னால் ஆளுங்கட்சி இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும். எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். உங்களில் யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு’ என்று தெரிவித்திருந்தோம். இதனால் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது இரு கட்சிகளும் மாறி மாறி தலைமையைத் தொடர்பு கொண்டன. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள் என்று நம்மைத் தாக்காற்றிக் கொண்டிருந்தன.

இந்நிலையில் இந்தப் பொதுக்குழு முடிவதற்கு முன்னால் இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்ற லெட்டர் பேடு இயக்கத்தைச் சேர்ந்த ஹிதாயத்துல்லாஹ் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துவதற்கு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து முடிவெடுப்பேன் என்று அறிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே வெற்றி

அல்லாஹ்வின் கிருபையால் இது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு முடிவதற்குள்ளாக, தேர்தலுக்கு முன்பே கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

முஸ்லிம்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் தமிழகத்தில் பதிவானது தான் அந்த மாபெரும் வெற்றியாகும். அதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த சமுதாய அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, லெட்டர் பேடுகளோ இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த நிர்ப்பந்தத்திற்குப் பின்னர் தமிழக முதல்வர் இவ்வாறு அறிவித்தார். அதற்குப் பிறகு தான் மற்ற இயக்கங்கள் வேறு வழியின்றி இந்தக் கோரிக்கையைக் கையில் எடுத்தன.

திமுக தலைவரின் மேடை அறிவிப்பு வெளியானதைத் தவிர அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் நமது தலைமைக்கு வரவில்லை. அதுபோன்று அதிமுகவிடமிருந்தும் சரியான பதில் வரவில்லை.

அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரமே அப்போது முடிவுக்கு வரவில்லை. அதனால் தேர்தல் களம் பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டம் ஏற்படாததால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய முடிவை பின்னர் ஒரு செயற்குழு கூடி முடிவெடுக்கட்டும் என்று அந்த சேலம் பொதுக்குழு அதிகாரம் வழங்கியது.

சென்னையில் செயற்குழு

இதற்கிடையே இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நமது தலைமையிடம் வந்து பேசிய வண்ணமிருந்தனர்.

அதிமுக ஓரளவிற்கு நமது கோரிக்கையை ஒப்புக் கொள்ளும் தருவாயில் இருந்தது. அப்போது தான் 06.03.2011 அன்று சென்னையில் செயற்குழு கூடியது. தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு முடிவதற்குள் தங்களது முடிவைத் தெரிவிப்பதாக அதிமுக கூறியது. ஆனால் செயற்குழு முடிவதற்குள் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் இந்தச் செயற்குழு முடியும் வரை ஆளுங்கட்சியான திமுக இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக எந்த ஆணையும் பிறப்பிக்காததால் அதற்கு ஆதரவு இல்லை என்றும், இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாகத் தேர்தல் அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டால் அதற்கு முழு ஆதரவு என்றும், இந்த வாக்குறுதியை நமது தலைமைக்குக் கடிதமாகத் தந்தால் தார்மீக ஆதரவு மட்டும் வழங்குவது என்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அந்த செயற்குழு முடிவடைந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கை

ஆனால் செயற்குழு தீர்மானத்திற்குப் பின் நாம் எதிர்பாராத ஒரு வித்தியாசமான சூழல் உருவானது.

ஆணை பிறப்பிக்க வேண்டிய ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதாகக் குறிப்பிட்டது.

தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சி, அதைச் செய்யாமல் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதாகக் குறிப்பிட்டது.

இதனால் சென்னை எழும்பூரில் 26.03.2011 அன்று மீண்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழுவைக் கூட்ட நேரிட்டது.

அந்தப் பொதுக்குழுவில், வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் வகிப்பது, அல்லது ஆதரவு தெரிவிப்பது என்ற இரு நிலைபாட்டை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்திய போது, ஆதரவு தெரிவிப்பதற்குத் தான் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

இதற்கிடையே இந்தப் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது, திருச்சியில் மரியம் பிச்சையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தித் தரப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னணியிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் இருந்தது.

அதிமுக தலைமையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகிகள், “திமுகவின் தேர்தல் அறிக்கையை எல்லாவற்றிலும் காப்பியடித்து வெளியிட்ட நீங்கள் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை மட்டும் திட்டமிட்டு மறைத்து விட்டீர்கள்; மறுத்து விட்டீர்கள்” என்று திட்டிய பிறகு தான் ஜெயலலிதா தனது திருச்சி பிரச்சாரத்தில் மவுனம் கலைத்தார்.

இந்த அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இரட்டை வெற்றி!

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று அப்போதைய ஆளுங்கட்சித் தலைவரை, முதல்வரைப் பேச வைத்தது மட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையிலும் சொல்ல வைத்து, முரசொலியிலும் எழுத வைத்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான்.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஜெயலலிதாவையும் அது பற்றிப் பேச வைத்து 5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஓர் அஸ்திவாரத்தை அமைத்திருக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

நாம் ஆதரித்த திமுக தேர்தல் களத்தில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அது 5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்ததில் வெற்றியடைந்திருக்கின்றது.

இது தான் இறையருளால் இந்தத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்ட வெற்றியாகும். தற்போது 5 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கத்தை அனைத்துக் கட்சிகளிடமும் ஏற்படுத்தி விட்டோம். இனி களமிறங்கி அந்த இலக்கை அடைவதற்காகப் போராடுவோம், இன்ஷா அல்லாஹ்!

—————————————————————————————————————————————————————-

பொருளியல்    தொடர்: 14

பொருள் திரட்டும் வழிமுறை

நபிமார்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் நபிமார்கள் அல்லாஹ் தந்த அருட்கொடைகளைப் பெற்று அதற்கு நன்றி செலுத்தினார்கள்.

உலகிலேயே நாம் குறைவான அமல் செய்து ஒருவனை திருப்திப்படுத்த முடியும் என்றால் அது அல்லாஹ்வை மட்டும் தான். உதாரணத்திற்கு நாம் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்றால் நாம் அதற்காகக் கடுமையாக ஒருவனிடம் உழைக்க வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவன் குறைந்த அமலிலேயே அவன் திருப்தி அடைகிறான் நாம் வயிறு நிறைய உண்டு விட்டு வெறும் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் போதும் என்று கூறுகிறான்.

சுலைமான் நபி அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர்கள் அதைப் பெற்றுவிட்டு, இது தமது இறைவனிடமிருந்து தமக்குக் கிடைத்த  அருட்கொடை என்று கூறினார்கள் அதனால் அவர்கள் ஒரு நல்லடியாராக, நபியாக இருக்கிறார்கள்.

“நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.

அல்குர்ஆன் 27:40

ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான்.  ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2322

அதேபோல் நபி (ஸல்) அவர்களும் அதிகம் சோதிக்கப்பட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “ஆம்;  உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள்.  நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்-முக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5660

நாம் கஷ்டத்தை அடைந்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தருகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 2:155

எனவே நாம் சோதனையைக் காணும் போது நாம் தடம் புரளாமல் நாம் அதை மறுமைக்கான நன்மைகளாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்படி பொருளாதாரத்தைத் தேடுகின்ற விஷயத்தில் ஹலால் ஹராம் என பிரிப்பதைப் பார்க்கின்ற இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது அரைகுறை இறை நம்பிக்கையாளர்கள், “இந்த தேவையில்லாத கட்டுப்பாடுகள் ஏன்?’ எனக் கேட்கின்றனர்.

ஆனால் அல்லாஹ் ஹலாலாக்கிய விஷயங்களையும் ஹராமாக்கியதையும் பிரித்துப் பார்த்தால் ஆயிரம் விஷயங்களை அல்லாஹ் ஹலாலாக்கியிருந்தால் ஒரு விஷயத்தை ஹராமாக்கியிருப்பான். உலகத்தில் நாம் வாழும் போது சம்பாதிப்பதில் மனிதன் விதித்திருக்க கூடிய சட்டங்களுக்குக் கட்டுப்படுகிறோம்.

வெளிநாட்டில் நாம் சம்பாதிப்பதை உண்டியல் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது என இந்திய அரசு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படுகிறோம். ஆனால் அல்லாஹ் ஹராமாக்கிய விஷயங்களில் கட்டுப்பட மறுக்கிறோம். எனவே இதை உணர்ந்து ஹராமான வழிகளில் சம்பாதிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும்.

மனிதர்களே! பூமியில் உள்ள வற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

அல்குர்ஆன் 2:168

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.

அல்குர்ஆன் 2:172

ஹராமான வழியில் சம்பாதிப்பதைக் கண்டிக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போன்று சொல்வதைப் பாருங்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை யிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:

“தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்” (அல்குர்ஆன் 23:51). “நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்”

(அல்குர்ஆன் 2:172)

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1844

நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் நமது சம்பாத்தியம் தூய்மையான முறையில் இருக்கவேண்டும். அடுத்தது ஹராமான பொருளாதாரத்திலிருந்து நாம் செய்யக்கூடிய தர்மங்களுக்கு நன்மை கிடைக்காது.

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது- “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3743

ஹலால், ஹராமைப் பேணாத காலம் வரும் நபி (ஸல்) அவர்கள் என்று எச்சரித்தார்கள். அது நம்முடைய காலம் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்..

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2083

ஹராமை ஹலாலாகச் சித்தரிக்கின்ற முஸ்லிம்களைப் பார்க்கிறோம். இப்படித் தந்திரம் செய்து ஹராமை ஹலாலாக்குவது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தில் சில மனிதர்கள் மதுவை அருந்துவார்கள். அவர்கள் அதற்கு வேறு பெயரைச் சூட்டிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் (ரலி), நூல்: ஆபுதாவுத் 3203

யூதர்கள் ஹராமை ஹலாலாக்கக் கூடிய தந்திரத்தைத் தான் செய்தார்கள். அவாகளுக்கு அல்லாஹ் தடை செய்தவற்றை, தந்திரமாக ஹலாலாக்கிக் கொண்டார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்கப்பட்டது.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது! அது ஹராம்!” எனக் கூறினார்கள்.  அப்போது தொடர்ந்து, “அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2236

ஹராமிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு இஸ்லாம் எளிமையான வழிமுறையைக் காட்டுகிறது. அதாவது ஹலாலுக்கும் ஹராமுக்கும் மத்தியில் சில சந்தேகமான விஷயங்கள் உள்ளன. அந்தச் சந்தேகமான விஷயங்களை விட்டுவிடப் பழகினால் ஹராமான விஷயங்களை விட்டு விலகி விடுவோம்.

உதாரணமாக நம்மிடத்தில் பால் கொடுக்கப்படுகிறது. ஒருவர் அதில்  தேன் கலந்துள்ளது என்கிறார். இன்னொருவர் விஷம் கலந்துள்ளது என்கிறார். இந்நிலையில் நாம் பேணுதல் என்ற அடிப்படையில் அந்தப் பாலை குடிக்க மாட்டோம். இதே அடிப்படையில் தான் நாம் மார்க்கத்தைப் பார்க்க வேண்டும். சந்தேகமானதை விட்டு விட வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

மார்க்கக் கல்வியின் அவசியம்

இன்று அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீது மர்கஸ்கள் (ஏகத்துவப் பிரச்சார மையங்கள்) சொந்தமாகவோ, அல்லது வாடகைக் கட்டடங்களிலோ அமையப் பெற்றிருக்கின்றன.

ஒரு ஜமாஅத்தின் செயல்பாடு, பிரச்சாரப் பணி என்பது ஜும்ஆவுடன் நின்று விடுவதில்லை. அது பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் அமைய வேண்டும்.

குழந்தைகள் மதரஸா

குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்கும் பகுதி நேர மதரஸாக்களை காலையிலும், மாலையிலும் நடத்த வேண்டும். இது தான் நம்முடைய சந்ததிகள் சத்திய வார்ப்புகளாக உருவாகும் படைக் களமாகும்; பயிற்சித் தளமாகும்.

வயது வந்தோர் கல்வி

மாலை, இரவு நேரங்களில் வயது வந்தவர்கள் மற்றும் முதியோருக்காக குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பதுடன், அவர்களைக் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக ஆக்க முடியும்.

குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள்

வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களைத் தேர்வு செய்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

இது போன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் நம் மக்களை ஏகத்துவத்தில் பிடிமானம் கொண்டவர்களாக மாற்ற முடியும். ஊரில் ஒரு தாயீ இருந்தால் தான் இந்தக் காரியங்களைத் தடையின்றிச் செயல்படுத்த முடியும்.

இதற்கு நாம் வெளியூரிலிருந்து தாயீக்களை இரவலாகத் தருவிக்காமல் சொந்த ஊரிலேயே உருவாக்க வேண்டும். இந்த ஏகத்துவக் கொள்கையை நாம் இறந்த பிறகும் நமது மக்களிடம் என்றென்றும் தொடரச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ச்சி பன்மடங்கு பரிமாணத்தில் வளர்ந்து வருகின்றது. 1980களில் வேர் பிடித்த தவ்ஹீது மரம் இப்போது ஊர் தோறும் கிளைகளாக கிளைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனுடைய வளர்ச்சியின் வேகத்திற்கும் வீதத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் அழைப்பாளர்கள் இல்லை.

அழைப்பாளர்கள் தேவை என்று பல்வேறு கிளைகளிலிருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. கைவசத்தில் இருக்கும் அனைத்து அழைப்பாளர்களையும் கோருகின்ற கிளைகளுக்கு விரைந்து வினியோகிக்கத் தலைமை தவறுவதில்லை. இருப்பினும் பற்றாப்படி தீரவில்லை.

எங்களுக்கு அழைப்பாளர் இல்லை என்று பல்வேறு கிளைகளிலிருந்து ஏக்கக் குரல்கள் தலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றன. ரமளானில் தாயீக்களின் தேவை உச்சக்கட்டத்தை எட்டிவிடுகின்றது. அமீரகம், கத்தார் போன்ற பகுதிகளுக்கு அவசியத்தை முன்னிட்டு அழைப்பாளர்களை அனுப்பியது போக இப்போது புருணை போன்ற நாடுகளுக்கும் அழைப்பாளர்களை அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் தலைமை உள்ளது.

ஆசியாவையும் தாண்டி ஐரோப்பாவிலும் தமிழ் பேசுகின்ற தவ்ஹீது சகோதரர்களிடமிருந்து அழைப்பாளர்களுக்காக அழைப்பு வந்து கொண்டிருக்கின்றது. தலைமை இப்படி ஒரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, தலைமை மீது கிளைகள் கோபப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. தாயீக்கள் தரவில்லை என்று வெந்து, வேதனையை தலைமை மீது கொட்டுவதிலும் அர்த்தமில்லை. இருக்கின்ற தாயீக்களைத் தான் தலைமையினால் பிரித்து அனுப்ப முடியும்.

அவரவர் ஊர்களிலிருந்து நன்கு திறமையுள்ள மாணவர்களை, நான்காண்டு கல்வித் திட்டத்தில் அமைந்துள்ள மேலப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரிக்கு அல்லது இரண்டாண்டு கல்வித் திட்டத்தில் அமைந்துள்ள சேலம் தவ்ஹீது கல்லூரிக்கு அனுப்பி வைப்பது தான் கிளைகளுக்கு முன்னால் உள்ள ஒரே வழியும் வாய்ப்பும் நிவாரணமும் ஆகும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.

சொந்த ஊரில் உருவாகின்ற ஓர் அழைப்பாளர் அந்த ஊரில் தவ்ஹீது வளர்ச்சி காண்பதில் அதிகம் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார். அதற்காக முக்கிய கவனத்தையும் முழுமையான கரிசனத்தையும் செலுத்துவார். அதனால் கிளைகள் இந்த முயற்சியில் இறங்கி அழைப்பாளர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்வர வேண்டும். இதை விட்டு விட்டு தலைமை மீது பழியையும் பாவத்தையும் போட்டு விட்டு, அழைப்புப் பணி மீதுள்ள கடமையை, அதுவும் தங்கள் ஊர் கிளையின் மீதுள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

நமது ஏகத்துவ இயக்கம் ஓர் இதயம் போன்றது. அதன் உயிர் மூச்சு மார்க்க ஞானம் உள்ள, ஒழுக்கமிக்க அழைப்பாளர்கள் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: புகாரி 100

மார்க்க அறிஞர்களின் மரணம், மார்க்கக் கல்வியின் மரணம் என்று இங்கு குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹ், திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் 9:122

இதன் அடிப்படையில் நாம் இரத்தமும் வியர்வையும் சிந்தி தியாகத்துடன் வளர்த்த இந்த ஏகத்துவக் கட்டமைப்பு நமது காலத்திலேயே, நம் கண் முன்னாலேயே அழிய நாம் காரணமாக ஆகலாமா? இந்தக் கொள்கை அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டாமா?

கவலைப்படுங்கள்! இப்போது களமிறங்குங்கள். உங்கள் ஊர்களிலிருந்து இக்கல்லூரிகளில் கல்வி பயில அழைப்பாளர்களை அனுப்புங்கள்.

ஆனால் அதே சமயம், தலைமை இப்படிக் கூறுகிறது என்பதற்காக படிப்பு ஏறாத மக்குகளையும் மழுங்கல்களையும் அனுப்பி வைத்து விடாதீர்கள். காரணம், பொதுவாக சமுதாயத்தில் மதரஸாவுக்கு அனுப்பப்படுகின்ற மாணவர்கள், “பையனுக்குப் படிப்பே வரவில்லை. அதனால் மதரஸாவுக்கு அனுப்புகிறேன்’ என்று பெற்றோர் கூறுவது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் ஆகி விட்டது.

இந்த மாணவர்கள் மதரஸா வந்து ஆசிரியர்களின் பிராணனை வாங்குவதுடன் மட்டுமல்லாமல் படிப்பு முடிந்து வெளியே வந்ததும் நரகத்திற்கு அழைக்கும் பிரதான ஏஜெண்டுகளாகவும் மாறி விடுகின்றனர். காரணம் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க வேண்டும் என்று தெரியாத மூடர்களை மதரஸாவுக்கு அனுப்பி வைப்பது தான்.

அதனால் நல்ல புத்திசாலியான, பட்டப்படிப்பு அல்லது +2 அல்லது எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களை அனுப்புங்கள். அவர்கள் அழைப்பாளர்கள் என்ற பட்டதாரிகளாக மட்டுமில்லாமல் சமுதாயத்தை சத்தியப் பாதைக்குக் கொண்டு செல்லும் படைப்பாளிகளாகவும் உருவாவார்கள்.

பொதுவாக மதரஸாவுக்கு வந்து கல்வி படிப்பவர்கள் பிழைப்புக்கு வழியில்லாதவர்கள், பிறரிடம் கையேந்துபவர்கள் என்ற இழிநிலை இருப்பதால் தான் இக்கல்விக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஆனால் தவ்ஹீது ஜமாஅத் அந்நிலையை மாற்றி ஓர் அற்புத நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

தன்மானமிக்கவர்களாகவும், தரமிக்கவர்களாகவும் தவ்ஹீது தாயீக்கள் உருவாகியிருக்கின்றார்கள். அதற்கு இஸ்லாமியக் கல்லூரியிலிருந்து வெளிவந்து அழைப்புப் பணியில் செயல்படுகின்ற அழைப்பாளர்கள் சாட்சியங்களாக அமைந்திருக்கின்றார்கள். பொது அறிவு, கணிணி அறிவு, ஆங்கில ஞானம் என பல்வேறு வகைகளிலும் சிறந்து விளங்குவதுடன் சத்தியப் பிரச்சாரப் பணியிலும் விவாதக் களங்களிலும் வெளுத்துக் கட்டி வருகின்றார்கள்.

அழைப்பாளர்கள் பற்றாக்குறைக்குத் தன்னாலான பெரும் பொருளாதாரச் செலவீட்டில் இஸ்லாமியக் கல்லூரியையும் தவ்ஹீது கல்லூரியையும் தலைமை தீர்வாகத் தந்திருக்கின்றது. இரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு ஏழை மாணவர்களைக் கிளைகளிலிருந்து தத்தெடுத்து அனுப்புங்கள். அழைப்புப் பணியே அழகிய பணி என்பதால் செல்வந்தர்களும் தங்கள் பிள்ளைகளை இப்பணியின் மகத்துவம் கருதி இக்கல்விக்காக அனுப்பி வையுங்கள்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

அல்குர்ஆன் 41:33

(அல்லாஹ்) தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 2:269

இந்த வசனம் கல்வியின் மதிப்பை மிகச் சிறப்பாகத் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். நான் விநியோகிப்பவன் தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: புகாரி 71

இவ்வாறு மார்க்கக் கல்வியின் மகிமையைச் சொல்லும் வசனங்களும், ஹதீஸ்களும் அதிகமாகவே உள்ளன. இத்தகைய மதிப்பையும், மரியாதையையும், மாண்பையும் பெற்ற இந்த மேன்மை மிகு கல்வி, தமிழகத்தில் உரிய மதிப்பை இழந்தது ஏன்? என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்காக நாம் பெரிய ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. மதரஸாக்களின் சட்ட திட்டங்களையும், பாடத்திட்டங்களையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அந்தக் காரணங்களை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மதரஸாக்களின் சட்டதிட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொட்டை அடித்தல்

மார்க்கக் கல்வி பயில வருகின்ற ஒரு மாணவனுக்கு முதன் முதலில் மதரஸா நிர்வாகம் இடுகின்ற கட்டளை மொட்டையடிக்க வேண்டும் என்பது தான். அவ்வாறு மொட்டை அடிக்கவில்லையெனில் அந்த மாணவன் மதரஸாவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டான்.

மொட்டையடித்த மாணவன் மதரஸாவிலிருந்து வெளியே வருவதற்கே வெட்கப்படுகின்றான். தன்னுடைய சக வயதினர் தலை முடி வைத்துக் கொண்டு அழகாகக் காட்சியளிக்கையில் இவர்கள் மட்டும் ஏதோ பிராணிகள் போன்று ஒதுங்கி, ஒடுங்கி நடக்க வேண்டிய நிலை!

பொதுவாக மனிதனுக்கு அழகே தலை முடி தான். அதை ஓய்த்துக் கட்டும் வழக்கத்தை இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை மார்க்கம் என்று இவர்கள் காட்ட முயல்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை மழிப்பதைப் பழித்துத் தான் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்” என்று சொன்னார்கள். “அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் (அவர்களின் அடையாளம்)” என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 7562

மார்க்கத்தில் இல்லாத இந்தச் சட்டத்தை இவர்கள் கடுமையாகக் கடைப்பிடிப்பதால் அதிகமான மாணவர்கள் இதன் பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

ஜிப்பா

மதரஸா நிர்வாகம் மாணவர்களை ஜிப்பா அணியச் சொல்கிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் கலாச்சாரம் சட்டை, லுங்கி, கால்சட்டை போன்றவற்றை அணிவது தான். மற்றவர்கள் சட்டை, பேண்ட் சகிதத்துடன் காட்சியளிக்கும் போது தாங்கள் மட்டும் ஜிப்பாவுடன் தோன்றுவது இவர்களுக்குப் பெருத்த வெட்க உணர்வையும், வேதனையையும் தோற்றுவிக்கின்றது.

ஜிப்பா போடும் மதரஸா என்ற காரணத்தாலேயே அங்கு போய்ச் சேராமல் சட்டை போட அனுமதிக்கும் மரஸாவைத் தேடிப் பிடித்துச் சென்று படித்த ஆலிம்கள் உள்ளனர். இதனால் தான் ஆலிம்களில் சட்டை போடும் ஆலிம்கள், ஜிப்பா போடும் ஆலிம்கள் என்று இரு வகைகளாக உள்ளனர். அந்த அளவுக்கு இவர்கள் ஜிப்பா அணிவதை வெறுத்துள்ளனர்.

ஜிப்பா என்ற ஆடையைத் தான் அணிய வேண்டும் என்பதாலும், தலையில் மொட்டை அடிக்க வேண்டும் என்பதாலும் பல வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் இந்தக் கல்விக்கு வருவதில்லை. மார்க்கத்தில் இல்லாத நடைமுறையை மார்க்கம் என்ற பெயரில் செயல்படுத்துவது மார்க்கக் கல்வி பயில்வதற்குத் தடையாக அமைந்துள்ளது.

பாடத் திட்டம்

இது கணிணி (கம்ப்யூட்டர்) யுகம்! அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த புரட்சி உலகம்! வியத்தகு மாற்றத்தைக் கண்ட இந்த உலகத்தில், அதற்கு ஈடு கொடுக்கும் கல்வித் திட்டம் அரபு மதரஸாக்களில் இல்லை. மதரஸாவிலிருந்து வெளிவந்த மாணவர்களுக்கு, ஆங்கில விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்குக் கூட ஆங்கில அறிவு இருப்பதில்லை.

இன்றைய அரபுலகம், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான அரபி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கும் பாடத் திட்டம் இன்னும் மதரஸாக்களில் அறிமுகமாகவில்லை. இதனால் மதரஸாக்களில் பயின்று வெளிவரும் ஆலிம்கள் பிழைப்புக்காகப் புரோகிதத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் நிலை!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதரஸாவில் படித்து வெளிவரும் ஆலிம்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துதல், குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல் போன்ற வட்டத்தைத் தாண்டி கத்தம் ஃபாத்திஹா ஓதுதல், கல்யாணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல், தாயத்து கட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இவை அத்தனைக்கும் மக்களிடம் கை நீட்டிக் காசு வாங்குவதால்  மற்றவர்கள் இந்தத் துறையை அறவே வெறுக்கின்றனர்.

இன்னும் பல ஊர்களில் ஆலிம்கள் தான் ஜனாஸாவைக் குளிப்பாட்ட வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இதனால் ஊரில் யார் இறந்தாலும் உடனே கதவு தட்டப்படுவது அங்குள்ள பேஷ் இமாமின் வீடு தான். அவர் நள்ளிரவில் என்ன நிலையில் இருப்பார்? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் பார்க்காது. இறந்தவர் வீட்டில் உடனே இமாம் வந்து நிற்கவில்லை என்றால், அவருக்கு உயிர் போனது போன்று இவருக்கு வேலை போய் விடும் என்ற நிலை!

கையேந்தும் நிலையில் கண்ணியமிக்க ஆலிம்கள்

இறந்த வீட்டில் போய் காரியத்தை நடத்திக் கொடுத்தால் இந்தப் புரோகிதப் பணிக்காக ஜனாஸாவுடன் தட்டில் வரும் அரிசி, முட்டை, சேவல்   போன்ற காணிக்கைகள் இமாமுக்கு வழங்கப்படும். ஜனாஸா தொழுகை துவங்கும் முன்பே, தொழுகை நடத்துவதற்காக அவரது கையில் அழுக்கடைந்த 5 ரூபாய் தாளை இறந்தவரின் வாரிசு இரகசியமாக அல்ல! அஸ்ஸலாமு அலைக்கும் என்று உரத்தக் குரல் கொடுத்தவராகக் கொடுப்பார்.

ஒரு துளி சுய மரியாதை உள்ளவன் கூட இந்தச் சோதனையைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அதை இந்த ஆலிம் தாங்கிக் கொள்வார், தன்னுடைய குடும்பத்தைக் காப்பதற்காக! இதை விட்டு வெளியே வந்தால் வேறு துறை அவருக்குத் தெரியாது என்பதற்காக!

இதில் இன்னும் வேதனை என்னவென்றால் இந்த ஆலிம், பெண் குழந்தைகளைப் பெற்றிருப்பார். இவர்களைக் கட்டிக் கொடுக்கும் காலம் வரும். அதற்காக அவர் சிங்கப்பூர் செல்வார். கடை கடையாக ஏறுவார். நமது நாட்டில் வீட்டு வாசல்களில் நிற்கும் யாசகர்களுக்குச் சில சில்லரைக் காசுகளை விட்டெறிவது போல் அங்கு அவருக்கு வீசியெறியப்படும்.

பாவம் அவர் என்ன செய்வார்? பணத்திற்காக மணம் முடிக்கும் ஈனப் பிறவிகள் இருக்கையில் அவர் யாசகம் என்ற எல்லைக்குச் செல்கின்றார். இப்படிப்பட்ட ஓர் இழிநிலைக்குத் தள்ளப்படும் போது இந்தக் கல்வியை யார் தான் ஏறெடுத்துப் பார்ப்பார்கள்?

தன்மானத்தைத் தரும் தவ்ஹீது

இதனால் தான் மார்க்கக் கல்வி மக்களிடத்தில் மரியாதை இழந்து நிற்கின்றது. மக்கள் தங்கள் பிள்ளைகளை இந்தத் துறைக்கு அனுப்புவதற்குத் தயங்குகின்றனர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன்வருவதில்லை. இலவச உணவு என்பதால் ஏழைப் பிள்ளைகள்    தான் இந்தக் கல்வி கற்பதற்கு அனுப்பப்படுகிறார்கள்.

மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டுமானால் இது வரை காணப்பட்டு வரும் குறைகள் களையப்பட வேண்டும். சட்ட திட்டங்கள் மற்றும் பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

இன்று தவ்ஹீது ஜமாஅத்தினரால் நடத்தப்படும் இஸ்லாமியக் கல்லூரி இது போன்ற குறைகளை ஓரளவு களைந்திருக்கின்றது. நான்காண்டு பாடத் திட்டத்தில் தரமிக்க ஆலிம்களை உருவாக்கியிருக்கின்றது. தவ்ஹீது (ஏகத்துவக் கொள்கை) இருப்பதால் அது தன்மானத்தை ஊட்டியிருக்கின்றது.

எனவே தவ்ஹீது வட்டத்தில் உள்ள சகோதரர்கள், குறிப்பாகச் செல்வந்தர்கள் மார்க்கக் கல்வியைப் பற்றி ஏற்கனவே கொண்டிருந்த அதே தவறான மதிப்பீட்டை இப்போது கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட தவறான மதிப்பீட்டை மாற்றிக் கொண்டு உங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி பயில அனுப்புங்கள்.

இவ்வாறு உங்கள் பிள்ளைகளை நீங்கள் அனுப்பும் போது அவர்களைக் கண்டிப்பாக +2 வரை படிக்க வையுங்கள். இது அவர்களுக்கு இரு வகையில் பயன் தரும்.

ஒன்று, அவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு இந்தத் தகுதி பின்புலமாக அமையும். ஏனென்றால் இந்த மார்க்கக் கல்வி ஒரு பட்டப் படிப்புக்கு நிகரான பாடத்திட்டத்தை உள்ளீடாகக் கொண்டுள்ளது. எனவே +2 முடித்திருந்தால் தான் இதை நன்கு விளங்கிக் கற்பதுடன் மற்றவர்களுக்கும் விளக்கும் திறமையைப் பெற முடியும்.

அடுத்ததாக, +2 முடித்தவர் ஆலிம் படிப்பை முடித்து விட்டு, அஞ்சல் வழி தொலை தூரக் கல்வி மூலம் பட்டப் படிப்பு முதற் கொண்டு, எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி. போன்ற படிப்புகளையும் படித்து முனைவர் (டாக்டர்) பட்டம் பெறுவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன.

தற்காலத்தில் பட்டப் படிப்பில் அரபிப் பாடத்தை எடுத்தவர்கள், எம்.பில்., பி.ஹெச்.டி. முடித்தவர்கள் கூட அரபு மொழியைச் சரியான முறையில் வாசிப்பதற்குத் தாளம் போடுகின்றனர். இதில் அவர்கள் காட்டுகின்ற பந்தாக்களும் தாங்க முடிவதில்லை. ஆனால் இவ்வாறு இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற பின் பட்டப் படிப்பை முடிப்பவர்கள் இந்தத் துறையில் மின்னுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இப்படி வெளிவருபவர்கள், சமுதாயத்தை எதிர்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது. அவர்கள் சத்தியத்தை யாருக்கும் அடிமைப் படாதவாறு சொந்தக் காலில் நின்று சொல்லலாம்.

இன்று மார்க்கக் கல்வி பயில வரும் பெண்களுக்கும் 10வது வகுப்பாவது முடித்திருப்பது அவசியமாகும். மார்க்கக் கல்வி பயில அனுப்பும் பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொள்வதேயில்லை.

இந்தக் கல்வித் தகுதி நிச்சயமாக அவர்களை மார்க்கத்தை நன்கு விளங்குவதற்கும், உலக விஷயங்களில் சிறந்து விளங்குவதற்கும் துணை புரியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெண்களையும் குறைந்தபட்சம் மேற்கண்ட கல்வித் தகுதி முடித்த பின்னரே மார்க்கக் கல்வி பயில அனுப்ப வேண்டும்.

இந்த அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு, ஏகத்துவ சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி பயில அதிகமாக அனுப்பி வைக்க வேண்டும்.

பல சகோதரர்கள் தங்கள் ஊருக்கு தாயீ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து மார்க்கக் கல்வி பயில்வதற்கு ஆட்களை அனுப்புவதில்லை. எனவே தாயீக்கள் பற்றாக்குறையைத் தீர்க்க உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை இஸ்லாமியக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மார்க்கக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆர்வமுள்ள ஏழைகள் இருப்பார்கள். வசதி படைத்தவர்கள் அவர்களை எல்லா வகையிலும் தத்தெடுத்துப் படிக்க வைத்து, உங்கள் ஊரில் ஏகத்துவத்தை நிலை நாட்டுங்கள்.

நமது இந்த அணுகுமுறையின் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத்திலுள்ள ஆலிம்களையும் இந்தக் கொள்கைக்கு ஈர்க்க முயல வேண்டும். இதன் மூலம் மார்க்கக் கல்வியின் மதிப்பை உயர்த்த வேண்டும்.