ஏகத்துவம் – ஜூலை 2015

தலையங்கம்

வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு!

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ:

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்று வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்என்று கூறினோம்.

அல்குர்ஆன் 2:38

இதை அல்லாஹ் இன்னும் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.

ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும்போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 7:35

இந்த வசனங்கள் நமக்கு இடுகின்ற கட்டளை, என்னுடைய வஹீச் செய்தியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பது தான்.

அந்த வஹீச் செய்தி அல்லாஹ்வின் வேதத்தின் வழி யாகவும், தூதர்கள் வழியாகவும் வரும் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த உலகத்தில் மனித சமுதாயம் பின்பற்ற வேண்டியது இவ்விரு விதமான வஹீயை மட்டும் தான். இது தான் இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இவை அல்லாதது வழிகேடாகும். அது நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். இதற்குத் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஒரு மனிதர் இறந்து அவர் கப்ரில் வைக்கப்படும் போது, “உங்களிடம் தூதராக அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?’ என்ற ஒரு கேள்வியும் கேட்கப்படும். அப்போது அவர், “அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து அவரை நம்பி உண்மைப் படுத்தினேன்என்று பதில் கூறுவார். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி)

நூல்: அபூதாவூத் 4127, முஸ்னத் அஹ்மத் 17803

இன்ன இமாம், இன்ன பெரியார் எனக்குக் கற்றுத் தந்தார் என்று இந்த நல்லடியார் கப்ரில் பதில் கூறவில்லை. அல்லாஹ்வின் வேதத்தைப் படித்துத் தெரிந்து கொண்டேன் என்று தான் கூறுகின்றார். ஆக, ஒரு மனிதர் இறந்து கப்ரில் வைக்கப்பட்டதும் அவருக்குக் கை கொடுப்பது குர்ஆன் எனும் இறைச்செய்தி தான் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்துடன் மட்டும் குர்ஆன் நிற்கவில்லை. நரகம் வரை அதன் பயணம் தொடர்கின்றது.

இறை வசனங்களை ஏற்க மறுத்த மனிதன், நாளை மஹ்ஷர் மைதானத்தில் வந்து நிற்கும் போது புலம்பும் புலம்பலை அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான்.

நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், “அல்லாஹ் வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனேஎன்று எவரும் கூறுவதற்கு முன்னரும், “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனேஎன்று கூறுவ தற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் “திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனேஎன்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!

அல்குர்ஆன் 39:55-57

நாளை மறுமையில் வந்து நின்று இதுபோன்று மனிதன் புலம்பக்கூடாது என்பதால் இறைவன் முற்கூட்டியே எச்சரிக்கை செய்கின்றான். அத்துடன், என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன என்றும் குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வின் வசனங்களைத் தான் இது குறிக்குமே தவிர வேறு எந்தப் பெரியாரின், இமாம்களின் வார்த்தைகளையும் குறிக்காது.

அடுத்து, மக்கள் நரகத்திற்கு இழுத்து வரப்படும்போது நரகத்தின் காவலர்கள் அவர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி இதோ:

(ஏகஇறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். “உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்க வில்லையா?” என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ஆம்என்பார்கள். எனினும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.

அல்குர்ஆன் 39:71

நரகத்தை நோக்கி மக்கள் வீசி எறியப்படும் போதும் அவர்களிடம் மலக்குகள் கேட்கின்ற கேள்வி, உங்களிடம் தூதர் வரவில்லையா? என்பது தான்.

கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் “எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவ லர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அதற்கவர்கள் “ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய் யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக் கிறீர்கள் என்று கூறினோம்” எனக் கூறுவார்கள்.

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 67:8-10

குற்றவாளிகள் நரகத்தில் நுழையும் போது, தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை நியாயமானது தான் என்று உணர்த்துகின்ற, உரைக்கின்ற வகையில் இந்தக் கேள்விகளை மலக்குகள் அவர்களிடம் தொடுக்கின்றனர்.

இமாமின் எச்சரிக்கை வந்ததா? இந்தத் தலைவரின் அறிவுரை வந்ததா? அந்தப் பெரியாரின் போதனை வந்ததா? என்று மலக்குகள் கேட்கவில்லை. அல்லாஹ்வின் வசனங்கள் வந்தனவா? அவனுடைய வசனங்களை தூதர்கள் கொண்டு வரவில்லையா? என்று தான் மலக்குகள் கேட்கிறார்கள்.

இவை அனைத்தும் உணர்த்தும் விஷயங்கள் ஒன்றே ஒன்று தான். நாளை மறுமையில் ஆதாரமாக வந்து நிற்கப்போவது அல்லாஹ்வின் வேதமான வஹீ தான்.

கப்ர், மஹ்ஷர், நரக வாசல் என பல்வேறு பகுதிகளில் மலக்குகள் கேட்ட கேள்வியையும் அதற்கு மக்கள் அளித்த பதில்களையும் பார்த்தோம்.

நரகத்தில் அவர்கள் வேதனையில் உழன்று கொண்டிருக்கும் போது அவர்களின் புலம்பல்களைக் கொஞ்சம் காதில் கேட்போம்.

நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது “உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?” என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள். “நாம் அனைவருமே இதில் தானே இருக்கிறோம். அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பு அளித்து விட்டானேஎன்று பெருமையடித்தோர் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 40:47, 48

தங்களுக்குள் புலம்பிக் கொண்டி ருக்கும் அவர்கள் மலக்குகளிடம் வேதனையைக் குறைக்கும்படி கெஞ்சுகின்றனர்.

உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ் வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.

உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம்என்று கூறுவார்கள். அப்படி யானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

அல்குர்ஆன் 40:49, 50

இங்கும் உங்களிடம் நபித் தோழர்கள், இமாம்கள், பெரியார்களின் விளக்கங்கள் வரவில்லையா? என்று கேட்கவில்லை. உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வரவில்லையா? என்று தான் மலக்குகள் கேட்கிறார்கள்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார் களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப் பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” (எனவும் கூறுவார்கள்.)

அல்குர்ஆன் 33:66-68

இந்த வசனங்களில் நரக   வாசிகள் தெளிவாகவே போட்டு உடைக்கின்றார்கள்.

இவை அனைத்தும் உணர்த்து கின்ற உண்மை, நாளை நம்மை நரகிலிருந்து காப்பது அல்லாஹ்வின் வேதம் என்ற வஹீ தான். அவனது தூதருக்கு அளித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனும் வஹீ தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் இறைநம்பிக்கை யாளர்கள் ஒன்று கூடி, “(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள்…..

….(பல நபிமார்களிடம் சென்று விட்டுப் பின்னர்) அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) “உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்க ளுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்என்று சொல்லப்படும்.

அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், “குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லைஎன்று சொல்வேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி 4476, 656, 7410, முஸ்லிம் 284

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை விவரிக்கின்றது. குர்ஆன் தடை விதித்தவர்களைத் தவிர ஏனையவர்கள் நரகத்திலிருந்து காக்கப்படுகின்றனர்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் தரக்கூடிய பாடமும் படிப்பினையும் என்ன?

நாளை நடுநாயகமாக, நடுவராக வந்து நிற்கப் போவதும் காக்கப் போவதும் குர்ஆன் என்ற வஹீ தான். அதற்கு விளக்கமாக அமைந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனும் வஹீ தான்.

புறக்கணித்தவர்களை நரகத்தில் கொண்டு போய் கவிழ்க்கப் போவதும் இந்தக் குர்ஆன், ஹதீஸ் எனும் வஹீ தான்.

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ தான். வஹீ என்பது இஸ்லாத்தின் உயிர்மூச்சும் அதன் பேச்சுமாகும். அதைத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கின்றது.

குர்ஆன் எனும் வஹீ இறங்கிய இம்மாதத்தில் மிகவும் பொருத்த மாகவே, “இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!” என்ற தலைப்பில் ஸஹர் நேரத்தில் உலகெங்கும் உள்ள மக்களை இந்தக் கொள்கையின்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றது.

நரகத்தை விட்டும் நம்மைக் காக்கின்ற இத்தூய கொள்கையின்பால் மக்களே வாரீர்! வாரீர்! என்று இம்மாதத்தில் ஏகத்துவமும் தன் பங்குக்கு அழைப்பு விடுக்கின்றது.

—————————————————————————————————————————————————————-

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

அருள்மிகு ரமலான் மாதம் இது! இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும்.

அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் முரணான பாதையில் பயணம் செய்கின்றார்கள்.  இதைப் படம் பிடித்துக் காட்டுவ தற்காக இந்த ஆக்கம் ஏகத்துவ இதழில் அளிக்கப்படுகின்றது.

இவர்கள் தங்களை தீனைக் காக்கின்ற தூண்களாக சித்தரிக் கின்றார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. கடவுள் கொள்கை முதல் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்க வழிபாடு வரை உள்ள அனைத்து விஷயங்களிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கின்ற தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது  வழி கெட்டவர்கள் என்ற முத்திரையைக் குத்தி, சத்தியத்தின் பக்கம் மக்கள் வருவதைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

அதனால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகின்றது. அதிலும் குறிப்பாக குர்ஆன் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இவர்களை அந்தக் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் அடையாளம் காட்டுவது பொருத்தமாக அமையும் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை இடம் பெறச் செய்கிறோம்.

மத்ஹபுவாதிகள் ஒரு புறம் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று பொய்யாக விமர்சித்துக் கொண்டே பகிரங்கமாக எண்ணற்ற ஹதீஸ்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவற்றை நமது முந்தைய இதழ்களில் தனிக்கட்டுரையாக விளக்கி உள்ளோம். அதுமட்டுமின்றி அவர்கள் திருமறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் மறுக்கிறார்கள்.

வணக்க வழிபாடு மற்றும் கொள்கை தொடர்பாகக் குர்ஆன் கூறும் கணக்கற்ற போதனைகளைத் தெரிந்து கொண்டே, அதற்கு மாற்றமாக நடப்பதன் மூலம் குர்ஆனிய வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்னென்ன இறை வசனங்களை மறுக்கின்றார்கள் என்ற விபரத்தை முழுமையாகக் காண்போம்.

உரத்த சப்தமின்றி திக்ர்

திக்ர் எனும் இறைவனை நினைவு கூர்வது, மிகச் சிறந்த வணக்கமாகும். அவ்வணக்கத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துவதுடன் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.

உரத்த சப்தமின்றி, மெதுவாக, இரகசியமாக,  பணிவுடன் இறைவனை திக்ர் செய்ய வேண்டும் என்பதே இறைவனை நினைவு கூரும் முறையாகும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

உமது இறைவனைக் காலை யிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

இந்த இறை வசனத்தை மறுக்கும் வகையில் மத்ஹபுவாதிகள் திக்ர் (?) செய்கிறார்களா? இல்லையா?

ராத்திபு என்றும் ஹல்கா என்றும் பல பெயர்கள் இட்டுக் கொண்டு திக்ர் மஜ்லிஸ் நடத்துகின்றார்கள். அதில் இறைவன் கூறும் இந்த ஒழுங்கைப் பேணுவதில்லை. மைக் செட் போட்டு, கூட்டமாக சப்தமிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பணிவுடன் திக்ர் செய்யுமாறு இறைவசனம் கூறியிருக்க, இவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திக்ர் (?) செய்கிறார்கள்.

இவர்களது இந்தச் செயல் இறைவசனத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொண்டும் தங்கள் முன்னோர்களைப் பின்பற்றும் விதமாகவும் மனோ இச்சையைப் பின்பற்றும் விதமாகவும் மேற்கண்ட இறை வசனத்தைப் பகிரங்கமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் அழகான பெயர்கள்

அவ்வாறு திக்ர் செய்யும் போது இன்னுமொரு பாவத்தையும் செய்கிறார்கள்.

இறைவனைப் போற்றிப் புகழ்வதாக இருந்தால் அல்லாஹ் தன்னை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள் ளானோ, என்னென்ன பெயர்களைச் சூட்டியுள்ளானோ அவற்றைச் சொல்லி இறைவனின் புகழ்பாடலாம்.

இறைத்தூதர் கற்றுத்தந்த பிரகாரம் இறைவனது பெருமைகளை எடுத்துக் கூறி இறைவனைப் பெருமைப் படுத்தலாம். அதை விடுத்து இவர்கள் செய்யும் ஈனச் செயல் என்ன தெரியுமா?

இறைவனை திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அழகான பெயர்களைச் சுருக்கி, திரித்துக் கொண்டு இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

அல்லாஹூ என்பதை “ஹூஹூ’ “ஹூஹூ’ என்றும் “அஹ்’ என்றும் இறைவனின் பெயரைச் சிதைத்துக் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி ஹக் தூ ஹக் என்றும் இன்னும் பல்வேறு அர்த்தம் இல்லா புது வார்த்தைகளை இவர்களாக உருவாக்கி திக்ர் என்ற பெயரில் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இறையருள் நிறைந்த இந்த ரமலான் மாதத்திலும் கூட இறை சாபத்தைப் பெற்றுத்தரும் இக்காரியத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களது இந்தச் செயல் பின்வரும் வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 

திருக்குர்ஆன் 7:180

அல்லாஹ்வின் அழகான பெயர்களை சுருக்கிக் கூறி இந்த வசனத்தை மறுப்பதோடு இறைவனின் கடும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் தெளிவாக அறியலாம்.

எக்ஸ்பிரஸ் கிராஅத்

திருக்குர்ஆன் அருளப்பட்ட, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமலான் மாதத்திலும் கூட இவர்களது குர்ஆன் வசனங்களை மறுக்கும் போக்கு மாறுவதில்லை. மாறாக தொடரவே செய்கிறது.

குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!

திருக்குர்ஆன் 73:4

திருக்குர்ஆன் வசனங்களை நிறுத்தி, நிதானமாக, திருத்தமாக ஓத வேண்டும் என்று இவ்வசனத்தின் வாயிலாக அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

எல்லா நிலையிலும் குர்ஆன் என்பது திருத்தமாக ஓதப்பட வேண்டும். குறிப்பாக தொழுகையில் மிக அழகான முறையில் ஓதப்பட வேண்டும்.

ஆனால் இவர்கள் ரமலானில் இரவுத் தொழுகையின் போது குர்ஆன் வசனங்களை என்ன பாடு படுத்துகிறார்கள்?

ரமலான் மாத இரவுத் தொழுகை யின் போது முழுக்குர்ஆனையும் ஓதி முடிக்க  வேண்டும் என்று மார்க்கம் கூறாத சட்டத்தை இவர்களாக இயற்றிக் கொண்டு அதற்காக இவர்கள் செய்யும் காரியம் என்ன?

பிஸ்மில்லாஹிர் ,,,,,,, மாலிகி யவ்மி ,,,,,,,, வலழ் ழாள்ளீன்,,,,,

இவ்வாறு பாத்திஹா அத்தியா யத்தை ஓதும் போது மூன்றே மூன்று வார்த்தைகள் மட்டுமே மக்களுக்குப் புரியும். எவ்வளவு தான் கவனத்தைக் குவித்து கேட்டாலும் ஏனைய வார்த்தைகள் புரியாத வகையில் படுவேகமாகக் குர்ஆன் வசனங்களை ஓதுகிறார்கள்.

வேகம் என்றால் அப்படியொரு வேகம். ஒரு எழுத்துக்கூட தெளிவாக உச்சரிப்பதில்லை. 23 ரக்அத்களை 30 நிமிடத்தில் முடிக்கிறார்கள் என்றால் என்னவொரு வேகம் என்பதை கணித்துக் கொள்ளுங்கள்.

இதுதான் குர்ஆனைக் கண்ணியப் படுத்தும் செயலா?

குர்ஆனுக்கு போலியான மதிப்பளிப்பதில் இவர்களை விஞ்ச ஆளில்லை. குர்ஆனைத் தொட்டு முத்தமிடுவதென்ன? அதைத் தரையில் வைக்கக் கூடாது என்று கூறி உயரமான இடத்தில் வைப்பதென்ன?  கால் படக்கூடாது, கை படக்கூடாது என இவ்வாறெல்லாம் வெற்று மரியாதைகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

ஆனால் உண்மையில் குர்ஆனை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிப்பதில்லை.

குர்ஆனை மதிப்பது என்பது அதை அல்லாஹ் சொன்ன விதத்தில் நிறுத்தி நிதானமாக ஒதுவதிலும் குர்ஆன் கூறும் போதனைகளின் படி நடந்து கொள்வதிலும் தான் இருக்கின்றது. அந்த வகையில் இவர்கள் குர்ஆனை அவமதிக்கவே செய்கிறார்கள். நிதானமாக ஓத வேண்டும் என்று கூறும் வசனங்களை மறுக்கவே செய்கிறார்கள்.

மஹர் எனும் மணக்கொடை

இஸ்லாம் கூறும் திருமணத்தின் முக்கியமான அம்சம் மஹர் வழங்குவதாகும்.

திருமணம் முடிக்கும் ஆண், தான் மணக்கவிருக்கும் பெண்ணுக்கு மஹராக ஒரு தொகையை வழங்குவதே திருமணத்தின் மிக முக்கியமான நிகழ்வாகும். ஆண்கள் தாங்கள் திருமணம் செய்யவிருக்கும் பெண்களுக்கு மஹர் வழங்குவதை திருக்குர்ஆன் கட்டாயம் என்கிறது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

திருக்குர்ஆன் 4:4

மஹர் வழங்குவதைப் பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது.

எனது பெண்ணை உனக்குத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் எட்டு ஆண்டுகள் என்னிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் (அதுவே நீர் கொடுக்கும் மஹர்) என்பதாக ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொண்டு திருமணம் செய்தார்கள். அந்தத் தவணையையும் நிறைவேற்றினார்கள் என்ற வரலாற்று நிகழ்வை திருக்குர்ஆன் கூறுகிறது.

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படை யில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 28:27

இதிலிருந்து திருமணத்தையொட்டி பெண்ணிடம் நகையாக, தொகையாக வரதட்சணை பெறுவது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல. இயன்றதை பெண்ணுக்கு மஹராக வழங்கி திருமணம் முடிப்பதே இஸ்லாமியக் கலாச்சாரம் என்பதை அறியலாம்.

ஆதரவற்ற அனாதைப் பெண்களை மணம் முடிப்பதால் இருந்தால் கூட கட்டயமாக மஹர் தொகை வழங்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமை யாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீன மானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:127

திருமணம் முடிப்பதாக இருந்தால் அவர்களுக்குரிய மஹர் தொகையை வழங்கி விட்டுத் திருமணம் செய்யுங்கள் என்று 5வது அத்தியாயம், வசனம் 5ல் சொல்லப்பட்டுள்ளது.

நபியே நீங்கள் யாருக்கு மஹர் கொடுத்தீர்களோ அந்தப் பெண்களை உங்களுக்கு நாம் திருமணம் முடிக்க அனுமதித்துள்ளோம் என்று 33வது அத்தியாயம் வசனம் 50ல் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு மஹர் கொடுப்பதை வலியுறுத்தியும் மஹர் தொடர்பான இதர செய்திகளையும் தாங்கியதாக பல வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன.

அத்தகைய அத்தனை வசனங் களையும் மறுக்கும் வகையில் இந்த ஆலிம்கள் கூட்டம் செயல்படுகின்றது.

திருமணத்தின் போது ஆண், பெண்ணுக்கு மஹர் கொடுப்பதற்குப் பதிலாக பெண்ணிடமிருந்து வரதட்சணையாக நகை, தொகை பொருள்கள் என பலவற்றையும் கேட்டுப் பெறுகிறார்கள். குர்ஆன் வசனத்தை மறுக்கும் இச்செயலுக்கு ஆலிம்கள் துணை நிற்கிறார்கள். தலைமை தாங்குகிறார்கள்.

மஹர் கொடுப்பதை வலியுறுத்தி இறைமறை வசனங்கள் எவ்வளவோ இருப்பதை அறிந்தும் வரதட்சணை பெறுகிறார்கள்; அதை ஆதரிக்கிறார்கள்; அதற்காகப் பிரார்த்தனை (?) வேறு செய்கிறார்கள் எனில் இது குர்ஆன் வசனங்களை மறுக்கும் செயல் அல்லவா?

இந்த இலட்சணத்தில் மண மக்களுக்காக துஆ செய்யும் போது மட்டும் மூஸா (அலை) மற்றும் அவர்களது மனைவி வாழ்ந்ததைப் போன்று இவர்கள் வாழ வேண்டும் என்று துஆச் செய்வார்களாம்.

ஆனால் மூஸா (அலை) அவர்கள் தன்னிடம் எதுவும் இல்லாத போதும் எட்டு ஆண்டுகள் வேலை செய்வதை மஹராகக் கொடுத்தாரே அதைப் பின்பற்றும் வகையில் மஹர் வழங்க மாட்டார்களாம்?

இதிலிருந்து இவர்களுக்குக் குர்ஆனிய போதனைகள் ஒரு பொருட்டல்ல! மாறாக தங்கள் முன்னோர்கள் எத்தகைய பாதையை காட்டித் தந்தார்களோ அது குர்ஆனுக்கு முரணான பாதையாக, பயணமாக இருந்தாலும் அதைப் பின்பற்றுவது தான் இவர்களது குறிக்கோள் என்பதை அறியலாம்.

இரண்டு சாட்சிகள்

திருமணம் என்றதும் அது தொடர்பான பிற விஷயங்கள் நம் நினைவிற்கு வருகின்றது. ஆம் இவர்கள் ஏதோ மஹர் தொடர்புடைய வசனங்களை மட்டும் மறுக்கவில்லை. மாறாக திருமணம் தொடர்பில் இன்னும் பல குர்ஆன் வசனங்களை மறுக்கின்றார்கள்.

திருமணத்திற்கு மஹர் அவசியம் என்று திருக்குர்ஆன் கூறியதைப் போன்று திருமண ஒப்பந்தத்தை முறிப்பதாக இருந்தால் இரண்டு சாட்சிகள் அவசியம் என்றும் கூறுகிறது.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:2

விவாகரத்திற்கு நேர்மையான இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இவ்வசனம் கூறுகிறது.

இன்றைக்கு இந்த வசனத்தை மறுக்கும் வகையில் ஆலிம்கள் கூட்டம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றார்கள்.

கடிதம் மூலம் தலாக், தொலைபேசி மூலம் தலாக் என்று பல வகையான மார்க்கத்திற்கு எதிரான தலாக் முறைகளை பல ஆலிம்கள் சரிகாண்கிறார்கள்.

தலாக்கிற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இறைவசனம் சொல்லியிருக்க மேற்கண்ட முறையிலான தலாக்குகளில் அந்த இரண்டு சாட்சிகள் பேணப்பட்டதா?

சாட்சிகள் என்றால் யார்? கணவன், மனைவி  ஆகிய இருவருக்கு மிடையில் விவகாரத்து நடை பெறுவதை நேரடியாகக் கண்ணால் காண்பவரே சாட்சியாக இருக்க முடியும்.

கடிதத்திலோ, தொலைபேசியிலோ தலாக் கூறும் போது கணவன் மனைவியைக் கண்ணால் காண இயலுமா?  பிறகு எப்படி சாட்சிகள் என்று கூற முடியும்?

இதில் மற்றுமொரு வேதனை வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் தலாக் சொல்கிறார்களாம். இதையும் இந்த ஆலிம்கள் கூட்டம் ஆம் சரிதான் தலாக் செல்லும் என்று தலையாட்டுகிறது.

வீடியோ கால் மூலம் தலாக் சொல்வதில் பல நடைமுறைச் சிக்கல் இருக்கிறது.

பின்னாளில் வீடியோவில் பேசியது நானில்லை என்று யாரும் மறுக்க இயலும்.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிலும் தில்லு முல்லுகளை செய்ய இயலும். அவ்வளவு ஏன்? மறைவில் இருந்து கொண்டு சிலர் மிரட்டி தலாக் விடுமாறு நிர்ப்பந்திக்க இயலும்? இதுவெல்லாம் வீடியோவில் தெரியுமா?

இப்படிப் பல குளறுபடிகள் இருப்பதாலும் திருமணத்திற்குப் பிறகுள்ள ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களைப் பெற்றுத்தருவது போன்ற விஷயங்கள் அடங்கி யிருப்பதாலும் ஜமாஅத்தின் முன்னிலையிலே விவகாரத்து அளிக்கப்பட வேண்டும். அப்போது இரண்டு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இப்படி திருக்குர்ஆன் பெண்களின் வாழ்க்கைக்கு பாதுகாப் பளிக்கும் விவாகரத்து முறையைக் கற்பித்துத் தந்திருக்கும் நிலையில் இவ்வசனத்தை மறுக்கும் வகையில் ஆலிம்கள் கூட்டம் பல தவறான விவகாரத்துகளை சரிகாண்கிறது.

கடிதம், மொபைல், வீடியோ கால் ஆகியவகளின் மூலம் தலாக் சொல்வதும் அதை ஆதரிப்பதும் திருக்குர்ஆன் வசனத்தை மறுக்கும் செயலேயாகும் என்பதை அழுத்த மாகப் பதிவு செய்து கொள்கிறோம்.

ஜீவனாம்சம்

போலி மதகுருமார்களாலும் மத்ஹபினராலும் மறுக்கப்படும் மற்றுமொரு இறைவசனம் ஜீவனாம்சம் தொடர்புடைய வசனமாகும்.

விவாகரத்து செய்தவர்களால் விவகாரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உடலுறவு கொள்ளாத நிலையில் விவாகரத்து செய்தால் அப்பெண் களுக்கு இத்தா இல்லை என்றாலும் ஜீவனாம்சம் அளிக்கப்பட வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

திருக்குர்ஆன் 2:236

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

திருக்குர்ஆன் 33:49

விவகாரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார வசதியை அவரவர் சக்திக்கு ஏற்ப செய்து கொடுக்க வேண்டும் என்று மேற்கண்ட இறைவசனங்கள் எடுத்தியம்புகின்றன.

வாழ்வாதார வசதி என்றால் தற்போது நடைமுறையில் பெண் களுக்கு அநீதியிழைக்கும் வகையில் உள்ள மாதாந்திர ஜீவானம்சம் அன்று. அதை இஸ்லாம் வரவேற்கவில்லை. மாறாக விவகாரத்துச் செய்யும் போது அவளின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் யாரிடத்திலும் அவள் உதவியை எதிர்பார்க்காத வகையில் ஒரு பெரும் தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும்.

இதைத் தான் திருமறைக்குர்ஆன்  அல்லாஹ்வை அஞ்சுவோர் மீது கடமை, நன்மை செய்வோர் மீது கடமை என்றெல்லாம் கூறி பல இடங்களில் வலியுறுத்துகின்றது.

திருக்குர்ஆன் கூறும் இச்சட்டத்தை காபிர்கள் மறுத்தால் அதுவேறு. திருக்குர்ஆனை இறைவேதமாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள், ஆலிம்கள் இதை மறுக்கலாமா?

ஆனால் ஆலிம்கள் தான் இதை மறுத்து, விவகாரத்து செய்யப் பட்டவளுக்கு ஜீவனாம்சம் எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை என்று மனமுரண்டாக தத்துவம் பேசி குர்ஆன் வசனத்தை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆண், பெண்ணை விவாகரத்துச் செய்வதால் அவள் பல இழப்புகளுக்கு ஆளாகிறாள். அவள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறாள். அதுவும் விவாகரத்து செய்யப்பட்டவளுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை எனில் அவள் நிலை பரிதாபத்திற்குரியது. அதை ஓரளவு சரிகட்டும் விதமாக அல்லாஹ் இந்த ஜீவனாம்ச உரிமையை பெண்களுக்கு வழங்கி நியாயத்தை, நீதியை நிலை நாட்டியுள்ளான்.

இறைவனின் நீதியில் குறைகாணும் வகையில் ஜீவனாம்சம் எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை என்று இந்த ஆலிம்கள் கூறுகிறார்கள் எனில் இவர்கள் உண்மையில் ஆலிம்கள் தானா?

இன்னும் சில ஆலிம்களோ இத்தா காலத்தில் சில உதவிகளைச் செய்வது பற்றியே இந்த வசனங்கள் பேசுகிறது என்று முரண் வாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தா அனுசரிக்க தேவையில்லாத, உடலுறவு கொள்ளாத பெண்களுக்கும் வாழ்வாதார வசதி அளிக்கப்பட வேண்டும் என்று இறைவன் கூறியதை இவர்கள் மறந்து விட்டு இத்தகைய வாதத்தை வைக்கின்றார்கள்.

மேலும் அல்லாஹ் அழகிய முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னது ஒருத்தியைத் திருமணம் செய்து அவளை அனுபவித்து விட்டு வெறும் மூன்று மாதம் சிறு சிறு உதவிகளை செய்வது பற்றியா? இது தான் அழகிய முறையா?

குர்ஆன் பெண்களுக்கு வழங்கிய ஜீவனாம்ச உரிமையை இத்தகைய ஆலிம்களே நடைமுறையில் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். இதன் மூலம் ஜீவனாம்சம் குறித்த பல இறை வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் தான் இதற்காகக் குரல் கொடுப்பதுடன் நடைமுறைப்படுத்திக் கொண்டும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

களாத் தொழுகை

களாத் தொழுகை உண்டு என்று கூறுவதன் மூலமும் குர்ஆன் வசனங்களை இந்த ஆலிம்கள் மறுக்கிறார்கள்.

ஏனெனில் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர்ஆன் 4:103

ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரம், முடிவு  நேரம் என்று உண்டு. தொழுகைகளை அதற்குரிய நேரத்திற்குள்ளாக நிறைவேற்றிட வேண்டும்.

இதையே அல்லாஹ் நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறி குறித்த நேரத்தில் குறித்த தொழுகை களை நிறைவேற்றுவதை முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளான்.

தூக்கம், மறதி, பயணம் போன்ற காரணங்களால் மட்டுமே தொழுகை களை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்தித் தொழலாம். (புகாரி 597, முஸ்லிம் 1316)

இதல்லாமல் ஒரு தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தி  களாவாக தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

ஆனால் இந்த ஆலிம்கள் களாத் தொழுகை உண்டு என்று மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாகவே தொழுகைகளை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தித் தொழலாம் என்று குர்ஆனுக்கு எதிரான கருத்தை தெளிவாகக் கூறுகின்றனர். மக்களும் இவர்கள் சொல்வதை உண்மையென நம்பி பல தொழுகைகளை சாதாரணமாக களாவாகத் தொழுது கொண்டிருக்கின்றார்கள்.

உரிய காரணமின்றி தொழுகையை விட்டு விட்டால் அதற்குரிய பரிகாரமாக மன்னிப்புக் கேட்டு, திருந்துவதைத் தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். களாச் செய்வதை அல்லாஹ் குறிப்பிடவில்லை.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நரகத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க் கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 19:59, 60

தொழுகையை பாழாக்கியவர்களைப் பற்றி இவ்வசனத்தில் பேசும் இறைவன், அவர்கள் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு வாழ வேண்டும் என்கிறானே தவிர களாச் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. எனவே மார்க்கம் அனுமதித்த காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் தொழுகைகளை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தித் தொழலாகாது.

இந்தக் கருத்தைத் தரும் மேற்கண்ட வசனங்களை மறுத்து களாத் தொழுகை உண்டு என்று கூறி மக்களை வழிகெடுக்கும் போலி மதகுருமார்களை என்னவென்பது?

இதிலிருந்து இவர்கள் தெளிவாக குர்ஆனை மறுப்பவர்கள் என்பதை விளங்கலாம்.

முத்தலாக்

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம்.

திருக்குர்ஆன் 2:229

திரும்ப அழைத்துக் கொள்ளும் படியான விவாகரத்து செய்வதை பற்றி அல்லாஹ் கூறும் போது இரண்டு தடவைகளே என்கிறான். அப்படி யென்றால் இரண்டு நேரங்களில் சொல்லும் வகையிலான இரண்டு வாய்ப்புகள் என்று பொருள்.

இதன் மூலம் ஒரு நேரத்தில் ஒரு தலாக் தான் சொல்ல முடியும் என்ற கருத்தை இந்த இறைவசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

முதல் வாய்ப்பில் தலாக் சொல்லி குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் வாய்ப்பிலும் தலாக் சொல்லி விட்டால் இத்தா காலத்திற்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம். ஆனால் இறுதி வாய்ப்பான மூன்றாம் வாய்ப்பில் தலாக் சொல்லி விட்டால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது.

மூன்றாம் தலாக்கைச் சொன்ன பிறகு திரும்ப இருவரும் இணைவதாக இருந்தால் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளையும் பயன்படுத்தி விவகாரத்து செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அப்போதே மூன்று தலாக் நிகழ்ந்து விடும் என்று தவறான நம்பிக்கை உள்ளது. இந்நடைமுறை முழுக்க முழுக்க மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாகும்.

“தலாக் என்பது இரண்டு தடவைகளே’ என்று கூறுவதன் மூலம் ஒரு நேரத்தில் ஒரு தலாக் தான் சொல்ல இயலும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் தெரிவித்து விட்டான். இவ்வசனத்தை மறுக்கும் வகையில் இவர்கள் முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கையைப் பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்.

குர்ஆனைக் கற்றறிந்த ஆலிம்கள் என்போரும் குர்ஆனுக்கு எதிரான முத்தலாக்கை ஆதரிக்கிறார்கள் எனும் போது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றுபவர்கள் அல்ல, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் என்பது தெளிவு.

பள்ளியில் தொழத் தடை

மனோஇச்சை வாதிகள் மறுக்கும் மற்றுமொரு இறைவசனம் இதோ:

அல்லாஹ்வின் பள்ளிவாசல் களில் அவனது பெயர் கூறப் படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

திருக்குர்ஆன் 2:114

எந்தக் காரணத்துக்காகவும், முஸ்லிம்களில் எவரையும் பள்ளி வாசலுக்கு வராதே என்று தடுப்பது கூடாது; அது மிகப்பெரும் பாவமாகும் என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன; அங்கே இன்ன ஆள் வரலாம், இன்ன ஆள் வரக்கூடாது என்று சட்டம் இயற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் கஅபாவில் தொழ அனுமதி மறுக்கப்பட்ட போது அல்லாஹ் கடும் கோபம் கொண்டு பின்வரும் வசனங்களை இறக்கி தனது கண்டங்களைப் பதிவு செய்கிறான்.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை! அவன் விலகா விட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.

திருக்குர்ஆன் 96:9-18

எனவே பள்ளிக்குள் தொழ வருபவர்களை, அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர வருபவர்களைத் தடுப்பது இறைவனின் கடும் கோபத்தைப் பெற்றுத் தரும் செயலாகும்.

ஆனால் இந்தப் போலி மதகுருமார்கள், ஆலிம்கள் கூட்டம் மக்கா இணை வைப்பாளர்கள் போன்று பள்ளியில் தொழ வருபவர்களைத் தடுக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்.

தொப்பி போடாமல் தொழ அனுமதியில்லை

மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் தொழ அனுமதியில்லை

விரலை ஆட்டி தொழுபவர்களுக்கு இங்கே தொழ அனுமதியில்லை

இரண்டாம் ஜமாஅத் நடத்த அனுமதி இல்லை என்றெல்லாம் இன்றும் பல ஊர்களில் போர்டுகள் வைத்து, தொழுபவர்களைத் தடுக்கும் பாவ காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஓர் இறைமறுப்பாளர் தொழ பள்ளிக்குள் வருகிறான் எனில் அவனையே தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்படியிருக்க நபிகள் நாயகத்தைப் பின்பற்றி முறையாகத் தொழுபவர்களுக்கு பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று இவர்கள் கூறுவார்களேயானால், தொழ வருபவர்களைத் தடுப்பார்களே யானால் குர்ஆனின் வசனங்களை மறுப்பதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதையும் இவர்கள் தான் கடைந்தெடுத்த குர்ஆன் மறுப்பாளர்கள் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நபியை அழைத்தல்

மேலே நாம் பட்டியலிட்ட புனித இறை வசனங்களை மறுக்கும் குர்ஆன் மறுப்பாளர்கள் இன்னும் பல புனித குர்ஆன் வசனங்களைச் சகட்டு மேனிக்கு மறுக்கின்றார்கள். அதில் பின்வரும் வசனமும் அடங்கும்.

உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 24:63

மற்ற நபர்களை அழைப்பது போன்று அகிலத்தின் தூதராம் நபிகள் நாயகத்தை அழைக்கலாகாது என்று இவ்வசனம் தடை செய்கின்றது.

மத்ஹபுவாதிகள் என்ன செய்கிறார்கள்? இந்த வசனத்தை மறுத்து, அல்லாஹ் சொன்னால் நாங்கள் கட்டுப்பட வேண்டுமா? என்று அகம்பாவம் கொண்டவர்களைப் போன்று நபிகள் நாயகத்தை சாதாரணமாக மற்ற நபர்களை அழைப்பது போன்று அழைக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தைச் சொன்ன இறைவனின் ஆலயத்திலே அமர்ந்து கொண்டு, யா முஹம்மத் என்றும் இன்னும் பல வார்த்தைகளாலும் பிற நபர்களை அக்கம் பக்கத்தினரை அழைப்பது போன்று உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஆலிம்கள் கூட்டமும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

நபி நேசம் என்று வேஷமிடும் இந்த வேடதாரிகள் நபிகள் நாயகத்தைக் கண்ணியப்படுத்தும் விதமாய் இறைவன் சொன்ன சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையா?

மவ்லித் என்ற பெயரில் தங்கள் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நபிகள் நாயகத்தை மற்ற நபர்களைப் போன்று சாதாரணமாக யா முஹம்மத் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் தெளிவாகக் குர்ஆனை மறுக்கும் செயல் அன்றி வேறில்லை.

நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டவரா?

இதைவிட மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியம் வைக்கப்பட்டவர் என்கிறார்கள். அதனால் ஒரு வித மனக்குழப்ப நிலைக்கு ஆளானார்கள் என்றும் பிதற்றுகிறார்கள்.

நபிகள் நாயகம் சூனியம் வைக்கப் பட்டார்கள் என்று யார் கூறுகிறாரோ உறுதியாக அவர் குர்ஆன் வசனத்தை மறுக்கவே செய்கிறார்கள்.

ஏனெனில் நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டார்கள் என்று கூறுவதை குர்ஆன் மறுக்கின்றது மட்டுமின்றி அவ்வாறு கூறுவோரை அநியாயக்காரர்கள் என்கிறது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்றபோது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

எனவே நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டார்கள். அதனால் ஒருவித மனக்குழப்பத்திற்கு ஆளானார்கள் என்று கூறுவதன் மூலம் இந்த ஆலிம்கள் கூட்டம் மேற்கண்ட வசனத்தை மறுக்கின்றார்கள்.

இறந்தவர்களுக்கு யாசீன்

உயிருடன் உள்ளவர்களை எச்சரிக்கை செய்வதற்காக திருக் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறுகிறான்.

உயிருடன் உள்ளவரை எச்சரிப்ப தற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற் காகவும் (இதை அருளினோம்).

திருக்குர்ஆன் 36:70

ஆனால் இன்றைக்கு திருக் குர்ஆனை இறந்தவர்களுக்குரியதாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எந்த அத்தியாயத்தில் “இந்தக் குர்ஆன் உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காக அருளப்பட்டுள்ளது’ என்று அல்லாஹ் கூறினானோ அந்த யாசீன் அத்தியாயத்தையே இறந்தவர்களுக் குரியதாக ஆக்கி அவர்கள் பெயரில் ஓதி ஈஸால் ஸவாப் செய்கிறார்கள்.

இறந்தவர்களுக்குக் குர்ஆன் ஓதும் இந்தச் சடங்கிற்கு போலி மதகுருமார்கள், ஆலிம்கள் என்போரும் உடந்தையாக இருக்கிறார்கள். ஏன்? குர்ஆனுக்கு எதிரான இத்தகைய சடங்கை உருவாக்கி மக்களிடையே பரப்பியதும் இந்த ஆலிம்களே!

இப்படிக் குர்ஆனின் பல வசனங்களை மறுத்து அதற்கு எதிரான சட்டதிட்டங்களை, சடங்கு சம்பிரதாயங்களை மக்களிடையே தழைக்கச் செய்வதற்கு இந்த ஆலிம்கள் சத்தியத்தை மறைப்பதும் ஓர் அதி முக்கிய காரணமாகும்.

மார்க்கத்தை மறைக்கலாகாது

எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

திருக்குர்ஆன் 2:41

வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்கள் மத்தியில் சொல்லாமல் உலக ஆதாயம் கருதி வேதத்தில் உள்ளதை மறைப்பது தான் இங்கே அற்ப விலைக்கு விற்றல் என்று கூறப்படுகிறது.

யூதர்கள் இந்த இழிசெயலைச் செய்தார்கள். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் “அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாதுஎன்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 3:187

அற்ப உலக ஆதாயத்திற்காக வேதத்தில் உள்ளதை மறைப்பதும் வேதத்தின் படி தீர்ப்பளிக்காமலிருப் பதுமே வேதத்தை விற்பதாகும். வேதத்தை மறைக்க கூடாது, வேதத்தின் படியே தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறும் மேற்கண்ட வசனங்கள் உள்பட பல வசனங்கள் இக்கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. ஆனால் குர்ஆனை மனனமிட்டதாகக் கூறி, பகட்டு காட்டும் ஆலிம்கள் கூட்டம் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை மறைக்கின்றது; மறுக்கின்றது.

குர்ஆனுக்கு எதிரான பாதையில் தாங்கள் பயணிப்பது மட்டுமின்றி மக்களையும் அதன் வழியே அழைத்துச் செல்கிறார்கள். இவர்கள் சுன்னத் வல்ஜமாஅத்தினர் அல்லர். மாறாக குர்ஆன் மறுப்பாளர்கள் ஆவார்கள். இனி இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படவே இவர்கள் தகுதி படைத்தவர்கள்.

இப்படி எண்ணற்ற வசனங்களை மறுத்து அதற்கெதிரான செயல்களைப் புரியும் இந்தக் குர்ஆன் மறுப்பாளர்கள் நம்மை பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று கூக்குரலிடுவது வியப்பிலும் மேலான வியப்பாகும்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 24

எல்லை மீறாதீர்…

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் பெண்களின் பலவீனங்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் அவர்களது இயற்கைத் தன்மைகளையும் ஆண்கள் புரிந்துகொண்டு, முடிந்தளவுக்கு அவர்களை மன்னித்து அரவணைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களை அரவணைத்துச் சென்றுள்ளார்கள் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம்.

இப்படிப் பெண்களை ஆண்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்வதைப் பெண்களும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நாம் வேண்டுமென்றே கணவன்மார் களிடத்தில் வம்புச் சண்டை வளர்க்கலாம், இதற்கு ஆயிஷா (ரலி) சம்பவத்தை ஆதாரமாகக் காட்டிக் கொள்ளலாம் என்று பெண்களில் சிலர் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.

பெண்களுக்கு எப்படி இயற்கை யான குணம் இருக்கிறதோ அதுபோன்று ஆண்களுக்கென்றே இயற்கையான குணங்களும் இருக்கின்றன. பெண்கள் இப்படிப் பேச ஆரம்பித்தால் பின்னர் ஆண் ஏதாவது தவறைச் செய்துவிட்டு இது எனது இயற்கைக் குணம், நான் எப்படி அதற்குப் பொறுப்பாவேன்? என்று சொல்லிவிடுவான். எனவே இதனை மனதில் வைத்துத்தான் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஆண்களும் பலதரப் பட்ட நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கென தனியான குணாதிசயங்களுடன் தான் அல்லாஹ் அவர்களைப் படைத்திருக்கிறான்.

எனவே கடந்த இதழ்களில் பார்த்த விஷயங்கள் அனைத்தும் பெண் களிடம் ஆண்கள் அரவணைத்துப் போகவேண்டும் என்பதற்கான ஆதாரமாக ஆண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இதுபோன்ற செய்திகளைப் பெரிது படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

பொறுமைக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருமானாருக்கே ஒரு கட்டத்தில் பெண்களிடத்தில் கோபம் வந்துவிடுகிறது. மனைவிமார்கள் செய்கிற சில செயல்களை நபியவர்கள் பொறுத்துக் கொண்டாலும் அளவுக்கு மீறி அவர்கள் நடந்து கொள்ளும் போது நபியவர்கள் கோபப்பட வேண்டியதாயிற்று.

நபியவர்கள் மனைவிமார்களை ஈலா என்ற சட்டத்தின் மூலம் ஒரு மாத காலம் பிரிந்து வாழ்ந்தார்கள். இந்தளவுக்கு நபிகள் நாயகத்திற்கே கோபம் வந்திருக்கின்றது எனும் போது, சாதாரண கணவன்மார்களுக்கு கோபம் மிகக் கடுமையாகத் தான் வரும். எனவே இந்தப் பண்பு ஆண்களிடத்தில் இருக்கும் என்பதையும் சேர்த்தே பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு அணியாகச் செயல்பட்ட நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் ஒரே அணியில் ஒன்றுதிரண்டு வந்து, குடும்பச் செலவுக்குக் கூடுதலாகப் பொருளாதாரம் தேவை என்ற கோரிக்கையை வைத்தார்கள். கோரிக்கையாக வைத்திருந்தால் கூட நபியவர்களுக்குக் கோபம் வந்திருக்காது. ஆனால் அவர்களோ தந்துதான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கணவரிடம் செலவுக்குப் பற்றாக் குறை எனில் கூடுதலாகக் கேட்கலாம். கணவனிடத்தில் அதற்கான தகுதியிருந்தால் கேட்கலாம். அதாவது கணவனுக்கு மாதச் சம்பளம் 5 ஆயிரம் எனில் 8 ஆயிரம் ரூபாய்க்கு மனைவி பட்ஜெட் போட்டால் அந்தக் கணவனால் நிச்சயம் தரமுடியாது. இப்படிப்பட்ட நிலையில் மனைவி கணவரிடம் கூட்டித் தா என்று கேட்கக் கூடாது. 5 ஆயிரம் சம்பளத்தில் தாய் தந்தையருக்கும், மருத்துவச் செலவுக்கும், சகோதர சகோதரி களுக்கும் கொடுப்பான். இன்னும் பல விஷயங்களுக்கு அந்த ரூபாயைத் தான் பயன்படுத்திட வேண்டும். எனவே அனைத்துக் காசையும் என்னிடத்திலேயே கொடுத்துவிடு என்றெல்லாம் மனைவிமார்கள் கணவனை வற்புறுத்தக் கூடாது. கணவனின் வரவுக்குத் தகுந்த மாதிரி சரியாக நடந்து கொள்பவளே சிறந்த மனைவியாக இருப்பாள்.

கணவரின் வருமானத்தை விட அதிகமான பொருளாதாரத்தை மனைவிமார்கள் கேட்டால் நிச்சயம் அவர்களால் முடியாது.

எப்போது முடியாது என்று வருகிறதோ அதற்குத் தகுந்த மாதிரி தனது முடிவை மனிதன் மாற்றிக் கொள்வான்.

நபிகளாரைச் சுற்றி அனைத்து மனைவிமார்களும் அமர்ந்திருக்க, வீடே நிசப்தமாகக் காட்சியளிக்க அபூபக்கரும், உமரும் நபிகளாரின் வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். கோபத்தின் விளைவு நபிகளாரின் முகத்தில் காட்டிக் கொண்டிருக்கிறது.

என்ன பிரச்சனை என்று தீர்க்கமாகத் தெரியாவிட்டாலும் உமரும் அபூபக்கரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அந்த இக்கட்டான நிலையிலிருந்து நபியவர்களை வேறு நிலைக்கு கொண்டு வருவதற்காக நபிக்கு சிரிப்புக் காட்டும் வகையில் உமர் (ரலி) பேசுகிறார்கள்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பேச்சை ஆரம்பிக்கிறார்கள் உமர் (ரலி). “எனது மனைவி என்னிடம் செலவுக்கு அதிகமாகப் பணம் கேட்டால் கழுத்தை நெறித்து விடுவேன்’ என்கிறார். உமர் எதிர்பார்த்தபடியே ரசூலுல்லாஹ் அவர்களும் சிரித்து விடுகிறார்கள். “உமரே! தாங்கள் சொல்வதுதான் தற்போது இங்கே நடந்து கொண்டிருக்கிறது’ என்றார்கள் நபியவர்கள். அப்போது தான் இறைவன் வசனத்தை இறக்குகிறான்.

இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும் பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன் என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 33:28, 29

எல்லோரைப் போன்றும் சொகுசாக வாழ வேண்டும், எல்லோரைப் போன்றும் நகை நட்டுக்கள், அணிகலன்கள் அணியவேண்டும் என்பது போன்று நினைப்பீர்களானால் எல்லோரும் என்னிடமிருந்து அழகிய முறையில் விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

அதிகமான நெருக்கடியை நபியவர்களது மனைவிமார்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்பதை இதி-ருந்து நம்மால் விளங்கிக் கொள்ளமுடிகிறது. எனவே மறுமை வேண்டும் என்றால் என்னுடன் இருங்கள். உலகம்தான் பெரிது என்றால் அழகிய முறையில் கணக்கை முடித்துக் கொள்வோம் என்று நபியைச் சொல்லச் சொல்கிறான் இறைவன். இது நபியின் தீர்ப்பல்ல. இறைவனின் தீர்ப்பு.

இப்படி இறைவன் சொன்னதும் அனைத்து மனைவிமார்களுக்கும் ஒன்றும் பேசமுடியாமல் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் தமது மகள் ஆயிஷாவின் கழுத்தை நெறித்துக் கொண்டு, கடுமையாக ஆயிஷாவைத் திட்டுகிறார்கள். அதுபோன்றே உமர் (ரலி) அவர்களும் தமது மகள் ஹப்ஸாவின் கழுத்தை நெறிக்க ஓடுகிறார்.

நபியவர்களின் வாழ்வில் இப்படி யொரு சம்பவமும் நடந்துள்ளது. எனவே மனைவிமார்களுக்குச் சாதகமான ஹதீஸ்கள் நிறைய இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, கணவனை எடுத்தெறிந்து பேசலாம், அளவுக்கு அதிகமாக நெருக்கடியை ஏற்படுத்தலாம், எதற்கெடுத்தாலும் சண்டையிடலாம் என்று செயல்பட்டால் அப்போது நபியவர்கள் அளவுக்கு கோபப்படுகிற ஆண்களும் நம்மில் இருக்கலாம். அபூபக்கர் அளவுக்கும், உமர்  அளவுக்கும் கோபப்படுகிற ஆண்களும் நம்மில் இருக்கலாம். இப்படி ஆண்கள் பலமாதிரி இருப்பார்கள் என்பதையும் கவனித்துத் தான் செயல்பட வேண்டும்.

நாமும் அளவோடு தான் கணவனிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னால் கூறப்பட்ட செய்திகளின் நிலையை மனைவிமார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பெண்களுக்கு இறைவன் செயல்திட்டங்களை வைத்து படைத்திருப்பதைப் போன்று ஆண்களுக்கும் சில தனித்துவம் மிக்க செயல்திட்டங்களை வைத்துத் தான் படைத்திருக்கிறான் என்பதைப் பெண்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆக குடும்ப வாழ்க்கை என்பது இருதரப்பு அனுசரணையில் தான் சுழலும் என்பதைப் புரிய வேண்டும்.

கணவனுக்கு மார்க்கம் எல்லை வகுத்திருப்பதைப் போன்று மனைவிமார்களுக்கும் இறைவன் எல்லையை வகுத்து வைத்துள்ளான் என்பதையும் சேர்த்து விளங்குகிற தம்பதிகள்தான் சரியாக குடும்பத்தை இயக்கமுடியும் என்ப துதான் இஸ்லாமிய குடும்பவியல்.

இன்னும் சொல்லப் போனால், மக்காவிலிருந்து நபிகள் நாயகம் அவர்களும், ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருகிறார்கள். மக்காவிலுள்ள குடும்ப அமைப்பிற்கும், மதீனாவிலுள்ள குடும்ப அமைப் பிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. மக்காவிலுள்ள குடும்ப அமைப்பில் பெண்களுக்கு பெரிய அளவுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண்கள் என்றாலேயே அடி உதைக்கு ஆளாக வேண்டியிருந்தது. மக்காவிலுள்ள ஆண்களின் நிலையும் அப்படித்தான். எதற்கெடுத்தாலும் அடிஉதை, வெட்டு குத்து என்றுதான் இருந்தார்கள். இதுதான் மக்காவிலுள்ளவர்களின் தன்மை.

மதீனாவைப் பொறுத்த வரை, ராஜ்ஜியமே பெண்கள் ராஜ்ஜியம்தான். மதிக்கிறோம் என்ற பெயரில் பெண்கள் சொல்வதை ஆண்கள் அப்படியே கேட்பார்கள். ஆனால் இஸ்லாம் என்ற மார்க்கம் இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. மக்காவாசிகள் போன்று எதற்கெடுத்தாலும் அடி, உதை, மிரட்டல் என்பதும் தவறு. அதேபோன்று மனைவிமார்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று மதீனாவாசிகள் போனதும் தவறு.

மக்காவாசிகள் அறவே பெண் களின் உரிமையை பறித்தனர். மதீனாவாசிகள் பெண்கள் தான் ஆண்கள் போன்று ஆகிவிட்டிருந் தனர். இதைப் பின்வரும் சம்பவத்தில்  உமர் (ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபியவர்கள் பெண்களை அடிக்காதீர்கள் என்று கட்டளை யிட்டிருந்தார்கள். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, பெண்கள் கணவன்மார்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். எல்லா விஷயத்திலும் எல்லை மீறுகிறார்கள் என்று முறையிட்டதும், நபியவர்கள் பெண்களை இலேசாக அடித்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கினார்கள். (மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய பிறகு) நபியவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப் பதாகப் புகார் செய்தனர். உடனே நபியவர்கள், அதிமான பெண்கள் தங்களது கணவன்மார்கள் அடிப் பதாகப் புகார் கூறினார்கள். எனவே உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று சட்டம் சொன்னார்கள்.

(பார்க்க: அபூதாவூத் 1834, சுனனுத் தாரமீ 2122)

வலிக்காத அளவுக்கு அடிப்பதற்கு அனுமதி வழங்கிய அடுத்தடுத்த நாட்களிலேயே, கணவன்மார்கள் அடிக்கிறார்கள் என நபியவர்களிடம் அதிகமான பெண்கள் புகார் அளித்தனர்.

அதன் பிறகு, நபியவர்கள் ஆண்களைக் கண்டிக்கிறார்கள். உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவிமார்களிடத்தில் சிறந்தவரே என்று கூறினார்கள்.

உங்களது குடும்பத்தினரில் (மனைவியிடத்தில்) சிறந்தவரே உங்களில் சிறந்தவர், நான் எனது குடும்பத்தில் (மனைவியிடத்தில்) சிறந்தவன் என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: திர்மிதீ 3830

இந்த ஆதாரங்கள் எதைக் காட்டுகிறது எனில், உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் இருப்பார்கள். பலதரப்பட்ட குணாதிசயங்கள் உடையவர்களாக ஆண்களோ பெண்களோ இறை வனால் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே முள் மீது போடப்பட்ட சேலைத் துணியைப் போன்று குடும்ப உறவுகளை, கணவன் மனைவி உறவுகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

அதாவது முள் மேல் கிடக்கின்ற சேலைத்துணி கிழிந்துவிடாமல் பக்குமாக எடுப்பதைப் போன்று பக்குமாக உறவை வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களிடம் எல்லை தாண்டி நடந்து கொண்டால் குடும்ப உறவு முறிந்துவிடும் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று நாம் கொடுக்கும் தொந்தரவுகளை ஓரளவுக்குத்தான் ஆண்கள் சகித்துக் கொள்வார்கள், அளவுக்கு மீறி தொந்தரவு கொடுப்பதை எந்த ஆண்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் சேர்த்தே பெண்களும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஆக கணவன், மனைவி என்ற இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து குடும்ப வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி

காற்று இறைவனின் சான்றே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

காற்று இறைவனின் சான்று என்பதையும், காற்றின் முக்கியத் துவத்தைப் பற்றியும் கடந்த இதழில் கண்டோம்.

காற்றின் அற்புதங்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மார்க்கம் கூறும் செய்திகளை இனி காண்போம்.

காற்றின் மூலம் அழிவு

நமக்கு வாழ்வைக் கொடுத் திருக்கும் ஏக இறைவனின் மகத்துவத்தையும் மாண்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவன் அளிக்கும் அருளை எதிர்பார்த்தவர் களாக, அழிவை அஞ்சியவர்களாக வாழ வேண்டும். அசத்தியத்திலே ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு, அழிச்சாட்டியம் செய்பவர்களுக்கு அவன் நாடினால் எந்த விதத்திலும் தண்டனை வழங்குவான் என்பதை மறந்துவிடக் கூடாது.

நமக்கு முன்னால் வாழ்ந்த ஆது எனும் சமுதாய மக்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு ஹூத் நபியை அல்லாஹ் அனுப்பினான். ஆனால் அந்த மக்களோ சத்தியத்தை ஏற்க மறுத்தார்கள்; பெருமையடித் தார்கள். காற்றை அனுப்பி அவர்களை அல்லாஹ் அழித்தான். இந்தக் கடந்த கால வரலாறு குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; மகத்தான நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் மணற்குன்றுகளில் நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக! எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும் சென்றுள்ளனர். எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக நீர் எங்களிடம் வந்துள்ளீரா? நீர் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக! என்று கேட்டனர். (இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார். தமது பள்ளத் தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். இது நமக்கு மழை பொழியும் மேகமே எனவும் கூறினர். இல்லை! இது எதற்கு அவசரப் பட்டீர்களோ அதுவே. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும் (என்று கூறப்பட்டது.) தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு பொருளையும் அது அழித்தது. அவர்களின் குடியிருப்புகளைத் தவிர (வேறு எதுவும்) காணப்படாத நிலையைக் காலையில் அடைந்தனர். குற்றம் செய்யும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

(திருக்குர் ஆன் 46:21-25)

ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்ட னர். எங்களை விட வலிமை மிக்கவர் யார்? எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவு படுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 41:15,16)

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.

(திருக்குர்ஆன் 51:41,42)

காற்றின் மூலம் உதவி

அல்லாஹ்வை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவன் சொன்னபடி வாழும் அடியார்களுக்கு அறியாப் புறத்தில் இருந்தும் அவன் அருள் புரிவான். நன்மைகளை அள்ளிக் கொடுப்பான். ஏதேனும் துன்பங்களின் போது எதிர்பார்க்காத விதத்திலும் காப்பாற்றுவான்.

இன்னும் தெளிவாகச் சொல்வ தென்றால், கண்ணுக்குத் தெரியாத காற்றின் மூலம்கூட உதவி செய்வான். இதற்கு ஆதாரமாக நபிகளார் காலத்தில் நடந்த சம்பவங்கள் இருக்கிகின்றன.

இஸ்லாத்தை வேரோடு ஒழிக்க வேண்டும்;   முஸ்லிம்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதற்காக இணை வைப்பவர்கள், காஃபிர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு போர் செய்ய வந்தார்கள். அவர்களின் தாக்குதலை முறியடிப் பதற்குக் கடந்து வர இயலாத அளவிற்கு முஸ்லிம்களால் பெரும் அகழ் தோண்டப்பட்டது.

அந்த அகழ்ப் போரின் போது எதிரிகளை சீர்குலைக்க, திணறடிக்க அவர்களுக்கு எதிராக அல்லாஹ் கடும் காற்றை அனுப்பினான். அதன் மூலம் முஃமின்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைத்தது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்த போது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான். அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்ட போது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.

(திருக்குர்ஆன் 33:9-11)

(அகழ்ப் போரின் போது) நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப் பட்டுள்ளேன்; ஆது சமுகத்தார் (தபூர் எனும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி 1035, 3343

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது. அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி னார்கள். மதீனாவுக்குள் வந்த போது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5367)

காற்றின் மூலம் எச்சரிக்கை

காற்றின் வேகத்தைப் பொறுத்து தென்றல், புயல் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம். காற்றின் வேகத்தை அளக்க, திசையைக் கண்டறிய என்று அது தொடர்பாக ஆராய்வதற்குப் பல கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன? காற்று என்பது சாதாரணமானது அல்ல. அதன் மூலமும் அபாயகரமான அதிபயங்கர மான விளைவுகளும்கூட ஏற்படும்.

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று பழமொழி சொல்வார்கள். சில நேரங்களில் வீசும் காற்று மிகவும் வேகமானதாக இருக்கும். சுழன்று சுழன்று வீசுவது, மண்ணை, மணலை வாரி வீசுவது, மழையோடு சேர்ந்து தாக்குவது என்று பல வகையில் இருக்கும்.

இதனால் வீடுகள் இடிந்து விழும்; மின்கம்பங்கள் கோபுரங்கள் சாய்ந்து சரிந்துவிடும்; வாகனங்கள் தூக்கி எறியப்படும்; மனிதர்கள் சிக்கிப் பலியாவார்கள். இவ்வாறு,  மோசமான பாதிப்புகள் கொடூரமான சம்பவங்கள் சூறாவளியால் நிகழ்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இதுபோன்ற இன்னல்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற பயம் அனைவருக்கும் இருக்கும். இருந்தால் மட்டும் போதாது, ஏக இறைவனுக்கு மாறு செய்யாதவர்களாக நாம் இருக்க வேண்டும். அவனை நினைத்து துதித்து பெருமைப் படுத்துபவர்களாகத் திகழ வேண்டும். இந்த எச்சரிக்கை கலந்த அறிவுரையை பின்வரும் வசனங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றும் போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர்.

(திருக்குர்ஆன் 10:22, 23)

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.

(திருக்குர் ஆன் 2:266)

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப் பாளரையும் காண மாட்டீர்கள். அல்லது மீண்டும் ஒரு தடவை அதில் (கடலில்) உங்களை அனுப்பும் போது, உங்களுக்கு எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை) மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில் உதவுபவரை காண மாட்டீர்கள்.

(திருக்குர் ஆன் 17:67-69)

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல் தொடர்: 31

அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

உலகத்தில் உள்ள அத்தனை பெண்களையும் விடச் சிறந்தவர்களான, எல்லா முஃமீனான ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன் மாதிரியாகச் சொல்லப்பட்ட மர்யம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்என்று வானவர்கள் கூறியதை நினை வூட்டுவீராக! “மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!” (என்றும் வானவர்கள் கூறினர்.).

(அல்குர்ஆன் 3.42,43)

இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

(அல்குர்ஆன் 66.12)

இத்தகைய சிறப்பைப் பெற்ற மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதாகப் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய் யாவைப் பொறுப்பாளியாக்கினான்.

அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்.

இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ், தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குகிறான்என்று (மர்யம்) கூறினார்.

(அல்குர்ஆன் 3.37)

இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத் தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.  அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித் தார். “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று (மர்யம்) கூறி னார்.  “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற் காக (வந்த) உமது இறைவனின் தூதன்என்று அவர் கூறினார்.

எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார்.  “அப்படித் தான்என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளைஎனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.) பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.  பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.

கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.  “பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்) நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் “நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்என்று கூறுவாயாக!  (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத் திடம் கொண்டு வந்தார். “மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?” என்று அவர்கள் கேட்டனர்.

ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்த தில்லை” (என்றனர்) அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

உடனே அவர் (அக்குழந்தை), “நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக ஆக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்திய வனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர் பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.  நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது” (என்றார்) இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.          

அல்குர்ஆன் 19:16-34

இது மர்யம் (அலை) அவர்கள் விஷயத்தில் இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களாகும்.

அதே போன்று குகைவாசிகளின் வரலாற்றைப் பற்றியும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

முந்தைய சமுதாயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில பேர் இருந்தார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதால்  சொல்லெணாத் துயரத்தை – துன்பத்தை அடைந்தார்கள்.

இனிமேல் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு இந்த ஊரில் வாழ முடியாது. நமக்குக் கொள்கை தான் முக்கியம் என்பதை அறிந்து அந்த ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள். அந்த ஊரை விட்டு சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ஒரு குகையில் அவர்கள் தஞ்சம் அடைகின்றார்கள். ஆனால், அந்தக் குகையில் அவர்களுக்கே தெரியாமல் பல அற்புதங்கள் அங்கே நிகழ்கின்றது.

குகைவாசிகள் குறித்தும், அவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள் குறித்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றை முதலில் பார்ப்போம்.

அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது “எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம். அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.  அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம்.

அவர்கள் எழுந்து “நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.

இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங் களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்? அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்குபவற் றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).  சூரியன் உதிக்கும் போது அது அவர்களின் குகையை விட்டும் வலப்புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப் புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவர் நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர் வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.

அவர்கள் விழித்துக் கொண்டிருப் பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை வலப்புறமும் இடப் புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!  அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?” என்று அவர் களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்என்றனர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்என்றும் கூறினர்.

அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுக முடிவு நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகை வாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். “அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் “இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்என்றனர்.

“(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்என்று (சிலர்) கூறுகின்றனர். “ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்என்று மறைவானதைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். “எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்என்று (மற்றும் சிலர்) கூறுகின்றனர். “அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!

அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! “எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்என்று கூறுவீராக!

அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) “அவர்கள் தங்கிய (காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர் களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 18:9-26

இதுவே குகைவாசிகள் பற்றித் திருக்குர்ஆன் கூறும் வரலாறாகும். இதனுடைய விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

கஅபாவை விட ரவ்ளா சிறந்ததா?

யூதக் கொள்கையைப் போதிக்கும் மனாருல் ஹுதா!

கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவதையும், கப்ருகளை பூசுவ தையும், அதன் மீது எழுதுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

மேலும் உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை இடித்துத் தரை மட்டமாக்குமாறும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நபிவழியின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுடைய கப்ரின் மீது கட்டப்பட்ட குவிமாடம் (குப்பா) இடிக்கப்பட வேண்டியதே என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது.

இந்த சத்தியக் கருத்து அதிகமான இஸ்லாமியர்களிடம் மேலோங்கிய காரணத்தினால் பரேலவிகள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எண்ணற்ற விஷமத்தனங்களைச் செய்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

வழிகேட்டைப் போதிப்பதில் பரேலவிகளுக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்களல்ல என்று கூறும் விதத்தில் மத்ஹபுகளைத் தூக்கிப் பிடிக்கும் தேவ்பந்திகளும் களமிறங்கியுள்ளனர்.

ஆம்! தேவ்பந்திகளின் சார்பாக வெளியிடப்படும் மனாருல் ஹுதா என்ற இதழில் கஅபாவை விட நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா (மண்ணறை) சிறந்ததாகும் என்று எழுதி மிகப்பெரும் வழிகேட்டை மார்க்கமாகக் சித்தரித்துள்ளனர். மேலும் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறாமல் அவர்கள் நம்முடைய கண்களை விட்டும் மறைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

நபியவர்கள் மண்ணுக்கு கீழ் புனித (?) ரவ்ளா  எனும் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் என்று எழுதி நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் கொள்கையை மார்க்கமாகச் சித்தரித்துள்ளனர்.

இவர்கள் இந்த வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாகப் பெரும்பாலும் மனோ இச்சைகளையும், நபியவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும், பலவீனமான செய்திகளையுமே ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

நபியவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் என்பதற்கு அவர்கள் முன்வைத்துள்ள தவறான ஆதாரங்களுக்குரிய சரியான விளக்கம் தனிக் கட்டுரையாக தெளிவு படுத்தப்படவுள்ளது.

இந்தக் கட்டுரையில் ரவ்ளா என்றால் என்ன? நபியவர்களின் கப்ரை ரவ்ளா என்று கூறலாமா? நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடச் சிறந்தது என்பது இஸ்லாத்திற்கு எதிரான யூதர்களின் கொள்கையே என்பதைப் பற்றி நாம் அறியவிருக்கின்றோம்.

ரவ்ளா என்றால் என்ன?

ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும்.  வழிகெட்ட கொள்கைக்குச் சொந்தக்காரர்களான பரேலவிகளும், தேவ்பந்திகளும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ரவ்ளா என்று குறிப்பிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் கால கட்டத்தில் தம்முடைய கப்ரை ரவ்ளா என்று குறிப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் கப்ரை ரவ்ளா என்று குறிப்பிடுவதே நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வீடு பள்ளிவாசல் கிடையாது. பிற்காலத்தில்தான் ஆட்சியாளர்கள் இந்த வீடு அமைந்துள்ள பகுதியில் பள்ளியை விரிவுபடுத்திய காரணத்தால் இது பள்ளிக்குள் வந்துவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்தில் தம்முடைய வீட்டிற்கும், மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் நபியவர்கள் நின்று உரையாற்றும் மிம்பருக்கும் மத்தியிலுள்ள பகுதியைத் தான் ரவ்ளா என்று குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1196)

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு பகுதியைத்தான் ரவ்ளா  (பூங்கா) என்று  குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ரவ்ளா என்பதில் நபியவர்களின் வீடு உள்ளடங்காது.

மேலும் இது நபியவர்கள் உயிரோடு வாழும் போது கூறிய வார்த்தையாகும். அப்போது நபியவர்களுக்குக் கப்ரு கிடையாது.

நபியவர்கள் அல்லாஹ்வின் ஆலயத்தை ரவ்ளா என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மனாருல் ஹுதாவோ நபிவழிக்கு எதிராக மண்ணறையை ரவ்ளா என்று குறிப்பிடுகின்றனர். பள்ளிவாசலைக் குறிக்கும் ரவ்ளா என்ற வார்த்தையை மண்ணறையைக் குறிக்கும் வார்த்தையாக ஆக்கி, மண்ணறையை பள்ளிவாசலாக மாற்றுவது தெளிவான யூதக் கலாச்சாரமாகும்.

மேலும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் எதனை புனிதமாக அறிவித்துள்ளனரோ அதைத் தவிர வேறு எதையும் புனிதம் என்று அறிவிக்கும் அதிகாரம் மனிதர்களுக்குக் கிடையாது. ஆனால் மனாருல் ஹுதா இதழில் நபியவர்களின் மண்ணறையை வரிக்கு வரி புனித ரவ்ளா என்று குறிப்பிட்டு அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இது யூதர்களின் வழிமுறையாகும். ஏனெனில் யூதர்கள்தான் நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக்கி அதனைப் புனித பூமியாகக் கருதினர். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நபியவர்கள் சபித்துள்ளனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர் என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்.  

நூல்: புகாரி 1330

நபியவர்கள் தம்முடைய பள்ளிவாசலைத்தான் ரவ்ளா என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த வழிகேடர்களோ நபியவர்களின் கப்ரை ரவ்ளா என்று பெயரிட்டு, அதனைப் புனித பூமியாகச் சித்தரித்து நபிவழிக்கு எதிராக யூதர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றனர்.

கஅபாவை விட நபியின் மண்ணறை சிறந்ததா?

மனாருல் ஹுதா இதழில் நபியவர்களின் கப்ருக்கு ரவ்ளா என்று பெயர் சூட்டி அது கஅபாவை விட மிகச் சிறந்தது என்று மிகப்பெரும் வழிகேட்டைத் திணித்துள்ளனர்.

இதற்குத் தம்முடைய மனோ இச்சையையும், ஒரு நூலில் எழுதப் பட்டுள்ள வழிகெட்ட கருத்தையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

ஆப்ங்கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல் என்ற நூலில் கூறப்பட்ட ஒரு வழிகெட்ட கருத்தை இதற்கு ஆதாரமாக மனாருல் ஹுதா முன்வைத்துள்ளது.

மக்கா, மதீனா மற்றும் உலகின் அனைத்தையும் விட கஃபா தான் உயர்ந்தது. நபி (ஸல்) அவர்களின் உடலைத் தாங்கியிருக்கும் அந்த ரவ்ளா மட்டும்தான் கஃபாவை விட உயர்ந்தது (நூல்: ஆப்ங்கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல், 1 : 85)

ஆப்ங்கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல் என்ற நூல் என்ன அல்லாஹ்வின் வேதமா? அல்லது இறைத்தூதரின் பொன் மொழி வார்த்தைகளா? மனாருல் ஹுதாவிற்கு எதை ஆதாரமாகக் காட்ட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனது ஏனோ? அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே என்ற அடிப்படையை விட்டும் தவறிய காரணத்தினால் இது போன்ற யூதக் கருத்துக்களைக் கூட மார்க்க ஆதாரமாக முன்வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நபிமார்களின் சமாதிகளை அல்லாஹ்வின் மிகப்பெரும் ஆலயத்தை விட மிகச் சிறந்ததாகச் சித்தரிப்பது யூதர்களின் வழிமுறை யாகும். அத்தகைய வேலையைத்தான் மனாருல்ஹுதா செய்துள்ளது.

உலகில் உள்ள  இடங்களிலேயே கஅபாவை விட சிறந்த பூமி வேறெதுவும் கிடையாது என்று நபியவர்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் “ஹஸ்வாஎன்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அதீ

நூல்: திர்மிதீ 3860

அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் மிக விருப்பத்திற்குரிய பகுதி கஅபா தான் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறிய பிறகு இவர்களுக்கு மாற்றமாக மண்ணறையை கஅபாவிடச் சிறந்து என்று கூறுபவார்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிராத்தித்தது போன்று நான் மதீனாவிற்காக அதன் ஸாஉ, முத்து ஆகியவற்றில் (வளம்ஏற்பட) பிரார்தித்தேன்.

நூல்: புகாரி (2129)

மதீனா நகரம் புனித பூமி என்றாலும் மக்கா அதைவிட அந்தஸ்தில் உயர்ந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுந் நபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து உலகில் மிகச் சிறந்த பூமி கஅபா தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் ஆலயத்தை விடவும் நபியவர்களின் மண்ணறை மிகச் சிறந்தது என்பது யூதர்களின் இணைவைப்புக் கொள்கையே என்பது தெளிவாகிறது.

படைப்பினங்களில் சிறந்தவர் யார்?

நபியவர்கள் உலகிலுள்ள் அனைத்து முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் பொருள் என்ன? மற்ற அனைவரை விடவும் நபியவர்கள் இறையச்சமிக்கவர்கள் என்பதும் அல்லாஹ்விடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகச் சிறந்த அந்தஸ்தும், பதவியும் உள்ளது என்பதுமாகும்.

ஒருவர் படைப்பினங்களில் சிறந்தவர் என்றால் அல்லாஹ் விடத்தில் அவருக்குக் கிடைக்கும் அந்தஸ்து மிக உயர்ந்ததாகும் என்பதே அதன் கருத்தாகும்.

கஅபா உலகின் ஆலயங்களில் சிறந்தது என்றால் அந்த ஆலயத்தில் செய்யும் வழிபாடுகளுக்கு ஏராளமான நற்கூலிகளை அல்லாஹ் தருகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக கஅபாவின் செங்கற்களும், மண்ணும் புனிதம் வாய்ந்தவை என்று ஒருவன் கருதினால் அது வழிகேடாகும்.

ஆனால் இந்த அடிப்படை அறிவு கூட மனாருல் ஹுதாவிற்கு இல்லை.

மனாருல் ஹுதா இதழில் பின்வருமாறு எழுதியுள்ளனர்.

அல்லாஹ்வின் அனைத்து படைப்புக்களை விட நபி (ஸல்) அவர்கள் சிறந்தவர்களாக உயர்ந்தவர்களாக இருக்கும் போது அவர்கள் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்களோ அந்த மண்ணும் அல்லாஹ்வின் அனைத்து படைப்புக்களை விட மிக உயர்ந்த்தாகவும் சிறந்ததாகவும் ஆகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் கஅபாவை விடவும் உயர்ந்தவர்கள். எனவே கஅபாவை விடவும் அவர்களின் புனித உடலைச் சுற்றியிருக்கும் இடம் மிக உயர்ந்ததாகிவிடும். (மனாருல் ஹுதா மே 2015)

நபியவர்கள் சிறந்தவர்கள் என்றால் அந்தஸ்தில் சிறந்தவர்கள் என்று தானே அதன் பொருள். ஒரு மனிதன் சிறந்தவன் என்று கூறினால் அவன் இறையச்சத்தை வைத்துத் தான் அது தீர்மானிக்கப்படும்.

அல்லாஹ் குலம் கோத்திரத்தை வைத்தோ, எதிலிருந்து படைக்கப் பட்டோம் என்பதை வைத்தோ சிறப்பைத் தீர்மானிக்க மாட்டான். இப்லீஸ் நெருப்பால் படைக்கப் பட்டவன், ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்.

இப்லீஸ், தான் எதிலிருந்து படைக்கப்பட்டோம் என்பதை வைத்து தனக்கு சிறப்புத் தன்மை இருப்பதாக வாதிட்டான். ஆனால் அல்லாஹ்வோ தனக்குக் கட்டுப்படுவதை வைத்துத் தான் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பான்.

எனவே ஒருவர் சிறந்தவர் என்றால் இறையச்சத்திலும், ஈமானிலும் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஒருவர் சிறந்தவர் என்பதை வைத்துக் கொண்டு அவர் உருவாக்கப்பட்ட மண்ணும் சிறந்தது என்று வாதிப்பது இப்லீஸின் வழிமுறையாகும்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை யொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

ஆதம் (அலை) எந்த மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்களோ அதே மண்ணிலிருந்துதான் உலகிலுள்ள அனைத்து மனிதர்களும், நபி (ஸல்) அவர்களும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதனின் சிறப்பு அவனுடைய இறையச்சத்தினால்தான் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் கெட்டவன் என்றால் அவன் இறையச்சம் இல்லாததினால் கெட்டவன் என்பதுதான் அதன் பொருள். இதனால் அவன் படைக்கப்பட்ட மண்ணும் கெட்டது என்று வாதிப்பது அறியாமையாகும். அல்லாஹ் தூய்மையான மண்ணிலிருந்து தான் மனித சமுதாயம் அனைத்தையும் படைத்தான். எனவே கெட்ட மண்ணிலிருந்து கெட்டவர்களைப் படைத்தான் என்று வாதிப்பது எப்படி அறியாமையோ அது போன்றது தான் ஒருவன் நல்லவன் என்பதினால் அவன் படைக்கப்பட்ட மண் சிறந்தது என்று வாதிப்பது.

அல்லாஹ் ஒரு போதும் நம்முடைய உடல்களையோ, அதனுடைய மூலத்தையோ பார்க்கவே மாட்டான். மாறாக நம்முடைய உள்ளங்களைத் தான் பார்க்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், உங்கள் தோற்றங் களையோ உங்கள் செல்வங் களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5012)

எனவே நபியவர்கள் சிறந்தவர்கள் என்பதால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சிறந்ததாகி விடும் என்பது வழிகெட்ட கொள்கையாகும்.

மேலும் படைப்பினங்களில் சிறந்தவர்கள்  இப்றாஹீம் (அலை) அவர்கள்தான். இதனை நபியவர்களே கூறியுள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் (4367)

நபி (ஸல்) அவர்களை விட படைப்பினங்களில் மிகச் சிறந்தவர் இப்றாஹீம் (அலை) அவர்கள் தான். எனவே இப்றாஹீம் (அலை) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் கஅபாவை விடச் சிறந்தது என்று இவர்கள் வாதிப்பார்களா?

ஈமான் கொண்டு நல்லறங்கள் செய்யும் அனைவருமே படைப்பினங் களில் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

(அல்குர்ஆன் 98:7)

எனவே சொர்க்கவாசிகள் என்று நன்மாரயம் கூறப்பட்ட அனைத்து ஸஹாபாக்களின் கப்ருகளும் கஅபாவை விடச் சிறந்தது என்று இவர்கள் வாதிப்பார்களா?

இதிலிருந்தே இவர்கள் தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்காக எத்தகைய அபத்தமான கருத்தையும் முன்வைக்கத் தயங்க மாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

ஒருவர் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டாரோ அந்த மண்ணிற்கு கொண்டு வரப்படுவார் என்ற கருத்தில் ஹாகிமில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.

இதிலிருந்து நபியவர்களின கப்ர் கஅபாவை விடச் சிறந்தது என்ற கருத்து விளங்கப்படுவதாக உளறியுள்ளனர்.

ஒருவர் தான் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டாரோ அந்த மண்ணில் அடக்கம் செய்யப்படுவார் என்பதிலிருந்து கஅபாவை விட நபி (ஸல்) அவர்களின் மண்ணறை உயர்ந்தது என்ற கருத்தை குறைந்த பட்ச அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள்.

நபியவர்கள் சிறந்தவர் என்பது ஈமானிலும், இறையச்சத்திலும்தான். அவர்கள் சிறந்தவர்களாக இருப்பதினால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட மண்ணும் சிறந்தது என்று வாதிப்பது வழிகேடு என்பதை நாம் மேலே தெளிவுபடுத்தி விட்டோம். எனவே மேற்கண்ட செய்தி அந்த கருத்தைத் தரவில்லை.

மேலும் இந்தச் செய்தியின் கருத்தே தவறானதாகும். விண்கலம் வெடித்து விண்வெளியில் மரணித்தவர்கள் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள்? தீயில் கருகி சாம்பலாகிவிட்டவர்கள், விலங்குகளால் அடித்து சாப்பிடப்பட்டவர்கள் இன்னும் பல சம்பவங்களில் பலர் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள். எனவே இவர்கள் மண்ணிலிருந்து படைக்கப்படவே இல்லை என்று வாதிக்கப் போகிறார்களா?

மேலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மனனத் தன்மையில் மோசமானவர். இவர் தன்னுடைய மனனத்திலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக் கூடியவர் என்று இமாம் அபூசுர்ஆ விமர்சித்துள்ளார்கள். இவர் மற்றவர்களின் புத்தகங்களிலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக் கூடியவர் என்றும் இமாம்கள் விமர்சித்துள்ளனர். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தி கிடையாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மரணித்த பிறகு பர்ஸக் உடைய வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் உண்மை. பர்ஸக் என்பது திரைமறைவு வாழ்க்கையாகும். அதனை உலகில் வாழ்கின்ற மனிதர்களால் உணர முடியாது.

நபிமார்களைத் தவிர எந்த மனிதனை பூமியில் அடக்கம் செய்தாலும் மண் அவனுடைய உடலை அரித்து அவன் சில நாட்களில் மக்கிப் போய்விடுவான். மக்கிவிட்டதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்பது பொருளல்ல. கப்ரு வாழ்க்கை என்பது பூமிக்கு கீழே என்று கூறுவது அறியாமையாகும்.

ஒருவன் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அவன் மனிதர்களால் அறியமுடியாத பர்ஸக் உடைய வாழ்க்கையில் துன்பத்தையோ, அல்லது இன்பகரமான  நிம்மதியான உறக்கத்தையோ அனுபவிக்கிறான். அல்லாஹ் அவனை கியாமத் நாளில் உயிர் கொடுக்கும் போது அவன் மண்ணறைகளிலிருந்து வெளிப் படுவான் என்றே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பர்ஸக் உடைய வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் உலகில் வாழும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

மொத்தத்தில் நபியவர்களின் மண்ணறை அல்லாஹ்வின் ஏகத்துவ ஆலயமான கஅபாவை விடச் சிறந்தது என்று வாதிப்பது வழிகெட்ட யூதர்கள் மற்றும் ஷியாக்களின் கொள்கையாகும். அந்தக் கொள்கையைத்தான் மானருல் ஹுதா வழிகாட்டியுள்ளது.

இத்தகைய வழிகெட்ட கொள்கையிலிருந்து அவர்கள் தவ்பா செய்து சத்தியக் கொள்கையின் பக்கம் திரும்பவில்லையென்றால் இந்த வழிகெட்ட கொள்கை நிரந்தர நரகத்தில் கொண்டுதான் சேர்க்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் கிடையாது.

—————————————————————————————————————————————————————-

எழுச்சி கண்ட வீழ்ச்சி

எம். எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம், மேலப்பாளையம்

ஏகத்துவ அழைப்புப் பணியை உயிர்மூச்சாகக் கொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகின்றது.

பிற மதத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்க பிரச்சாரம், சிறுவர், சிறுமியர் மார்க்க அடிப்படையில் வளர்வதற்குத் தனி இல்லம், ஆதரவற்றோர் வயதான காலத்தில் மார்க்க அடிப்படையில் மரணிப்பதற்கு முதியோர் இல்லம், தனி நபர் பிரச்சாரம், நரிக்குறவர்களுக்கும், பார்வை யற்றோருக்கும்  பிரச்சாரம், இஸ்லாத்தை ஏற்ற ஆண்கள், பெண்களுக்காக மூன்று மாதப் பயிற்சி வகுப்பு, இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அறியாதவர்களுக்காக ஒரு வருட ஆலிமா வகுப்பு, ஆண்கள் சத்தியப் பிரச்சாரத்தைக் கற்று அதனைப் பரப்புவதற்காக நான்கு வருட ஆலிம் படிப்பு, ஏகத்துவத்தை பொக்கிஷமாகப் பெற்ற தவ்ஹீத் குடும்பத்தினர் தன் குடும்பத்திலிருந்தே பெண் பிரச்சாரகர்களை உருவாக்குவ தற்காக மூன்று வருட ஆலிமா படிப்பு என பல்வேறு நிறுவனங்களின் மூலம் ஏகத்துவப் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்து வருகின்றது.

இதுதவிர வார பயான், மாத பயான், தெருமுனைப் பிரச்சாரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பெண்கள் பயான், ஜும்ஆ உரை, இனிய மார்க்கம், எளிய மார்க்கம், பொதுக்கூட்டங்கள், ஒரிறைக் கொள்கை விளக்க மாத இதழ், மகளிர் மாத இதழ் எனப் பல்வேறு செயல்பாடுகள் மூலம் தஃவா பணியை உயிர் மூச்சாகக் கொண்டு தஃவா பணியில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

மனிதர்கள் ஒரே ஒரு கடவுளை வணங்க வேண்டும், பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு குழப்பம் விளைவிக்கக் கூடாது, அசத்தியத்திலிருப்பவர்களை சத்திய கொள்கைக்குக் கொண்டு வருவ தற்கும், அதில் உறுதித் தன்மையை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்கும், மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கப்பட்டு மக்கள் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த முடிவில்லாத தொடர் பிரச்சாரங்கள்.

இப்படிப் பல்வேறு வகையில் ஏகத்துவத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற நாம், சத்தியக் கொள்கையில் இருக்கும் பெண்கள் நம் கண்முன்னே முஷ்ரிக்குகளுக்கு (அசத்தியவாதிகளுக்கு) வாழ்க்கைப் பட்டு, மறுமை வாழ்க்கையை இழந்து கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

இலட்சியத்தில் அலட்சியம்

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்ததற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்தாமல், மார்க்கம் முழுமையடைந்ததற்குப் பிறகு இறை வசனங்களுககும், நபிகளாரின் பொன்மொழிகளுக்கும் உயிரூட்டாமல், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் ஏன்?

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர் கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறை வன்) தனது வசனங்களை மனிதர் களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

அல்குர்ஆன் 2:208

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகின்றாள்:

  1. அவளது செல்வத்திற்காக.
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளது அழகிற்காக.
  4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

நூல்: புகாரி 5090

இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற வீட்டில் பிறந்து வளர்ந்த ஒர் ஏழைப் பெண் அழகிலும், செல்வத்திலும், அந்தஸ்திலும் குறைந்தவளாக இருக்கின்றாள். ஆனால் அவள் மனதிலோ இந்த ஏகத்துவக் கொள்கை மிக உறுதியாக இருக்கின்றது. இந்த ஏகத்துவத்திற்காக தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பகைத்து, தான் ஒரு தவ்ஹீத்வாதியைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறாள்.

நீங்கள் மார்க்கத்தைத் தான் உண்மையில் நேசித்தீர்கள் என்றால் மார்க்கத்திற்காக போராடிக் கொண்டி ருக்கின்ற இந்தப் பெண்ணையே தேர்ந்தெடுத்திருப்பீர்கள். அழகும், அந்தஸ்தும் உள்ள பெண்கள் அவர்களது ஒழுக்கம் குறை சொல்லப்படக்கூடிய அளவில் இருந்தாலும் அவர்கள் 17 வயது முதல் 20 வயதிற்குள் பெரும்பாலும் திருமணம் முடிக்கப்பட்டு விடுகின்றனர். தேங்குவதெல்லாம் கொள்கைப் பிடிப்புள்ள பெண்கள் தான். இவர்கள் பல ஊர்களிலும் இருக்கின்றனர்.

இதன் மூலம் நாங்கள் மார்க்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. அழகிற்கும். அந்தஸ்திற்குமே முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொல்லாமல் செயல் வடிவில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றீர்க்ள்.

மார்க்கத்தை முதன்மைப் படுத்துவதாக இருந்தால் கொள்கைப் பிடிப்புள்ள பெண்கள் உங்கள் கண்களை விட்டும் மறைந்திருக்க மாட்டார்கள். இப்போதாவது சிந்திக்க வேன்டாமா? சுய பரிசோதனை செய்ய வேண்டாமா? நாம் யாரை, யாருக்காக, எதற்காகத் திருமணம் முடித்திருக் கின்றோம் என்பதை…

சத்தியக் கொள்கைக்கு வந்த பெண்களை அழகை, அந்தஸ்தை, செல்வத்தை, பட்டங்களைக் காரணம் காட்டி அசத்தியவாதிகளிடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்களே! இவர்கள் விஷயத்தில் இவர்களுக்காக என்ன பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்?

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண் களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக் கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

அல்குர்ஆன் 60:10

மேலும் முஷ்ரிக்கான பெண்ணை மணமுடிப்பது ஒழுக்கம் கெட்டவளை (விபச்சாரியை) மணமுடிப்பதை விட கேவலமான செயலாகும். ஏனெனில் இணைவைப்பு என்பது அல்லாஹ் வுக்குச் செய்கின்ற மாபெரும் அநீதியாகும். இவ்வாறு தான் இறைவனும் கூறிக்காட்டுகின்றான்.

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப் பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ளமாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 24:3

இவ்வளவு பெரிய மாபெரும் கண்டனத்திற்குப் பிறகு அசத்தியத்தில் இருக்கின்ற பெண்களுக்கு உங்கள் மனதில் இடம் தரப்போகிறீர்களா? சத்தியத்தில் உள்ள நம் கொள்கைச் சொந்தங்களை அசத்தியவாதிகளிடம் அனுப்பி வைக்கலாமா? இப்பெண்கள் கொள்கைக்காகப் படும் வேதனை களை, துன்பங்களை சிந்தித்துப் பாருங்கள்.

  1. தவ்ஹீதை ஏளனமாகப் பார்ப்பவர்களுக்கு முன்பு தலைகுனிவு.
  2. திருமணம் சம்பந்தமாக உறவினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமை.
  3. தங்கள் வயதிற்கு ஒத்த அல்லது தங்களை விட வயதில் குறைந்த பெண்களுக்கெல்லாம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள்.
  4. பொதுவான சபைகளுக்குச் செல்ல முடியவில்லை. தோழிகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. கண்களில் கண்ணீரைத் தவிர வாழ்த்துச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
  5. வயது முதிர்ந்த பெற்றோருக்குப் பாரமாகவும், உடன் பிறந்த அண்ணன், தம்பி, தங்கைகளின் திருமணம் தன்னால் தடைபடுகின்றதே என்ற மனக்கவலையும் ஒவ்வொரு நாளும் அவளை வாட்டி வதைக்கின்றது.

இவை தான் அவர்களுக்கு நீங்கள் அளிக்கின்ற பரிசா? ஒருவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது ஈமானின் சுவையில் ஒன்றாகும். உங்களுக்கு வரவிருக்கின்ற வாழ்க்கைத் துணையை அல்லாஹ்வுக்காக நேசித்து மணமுடிக்கின்றீர்களா? அல்லது காதல் எனும் வலையில் விழுந்ததற்காக மணமுடிக்கின்றீர்களா? கொள்கைக் குன்றுகளை விட்டு விட்டு அழகைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

முன்மாதிரி நபித்தோழர்கள்

எந்த ஒரு விஷயத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் பக்கம் பக்கமாக பயான் பேசவில்லை. நபிகளாரின் கட்டளைக்கு, “செவியுற்றோம், கட்டுப் பட்டோம்’ என்று மதிப்பளித்தார்கள் நபித்தோழர்கள்.

ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் திருமண ஒப்பந்தங் களைத் தொடராதீர்கள் என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் மக்காவில் உள்ள தனது மனைவியை விவாகரத்து செய்த உமர் (ரலி) அவர்கள் எங்கே? தவ்ஹீத் என்ற போர்வையில் இருந்து கொண்டு முஷ்ரிக்கான பெண்கள் என்று தெரிந்தும் அவர்களைக் கரம் பிடிக்கும் நமது ஆண்கள் எங்கே?

இப்பெண்களுக்காக இரக்கப் படுங்கள் என்று கேட்கவில்லை. குர்ஆன், ஹதீசுக்குக் கட்டுப்படுங்கள் என்றே கேட்கின்றோம். உயிரை விட இந்தத் தூதருக்கே முன்னுரிமை என்று வாயளவில் கூறிவிட்டு நழுவிச் செல்லாமல் அதற்கு உயிரூட்டி யவர்கள் நபித்தோழர்கள் என்பதற்குக் கீழ்கண்ட ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணி களான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள் எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், அல்ஹஷ்ர் அத்தியாயத் திலுள்ள, “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று தாம் செய்த வினையை கவனிக்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது (உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும் என்று வலிலியுறுத்தினார்கள். உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந் தும், வெள்ளிக் காசுகளிலிலிருந்தும், ஆடைகளிலிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரி களில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட் களுடன்) வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும், ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் – அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் – உண்டு என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1848

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பரேலவிகளுக்கு தொழுகை ஒரு யோகாதான்

எம். ஷம்சுல்லுஹா

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 7:146

இந்த வசனம் மிகவும் அழகாக பொருந்திப் போவது பரேலவி களுக்குத்தான்.

அல்லாஹ்விடம் நேரடியாக உதவி தேடுவது நேர்வழியாகும். இதை இவர்கள் நேர்வழியாக எடுத்துக் கொள்வதில்லை.

மாறாக அவ்லியாக்கள் இறந்த பிறகும் உயிருடன் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் வழியாக நாம் அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்ற அறிவு கெட்ட, அர்த்தமற்ற வாதத்தை வைக்கிறார்கள்.

இது உண்மையில் வழிகேடான பாதையாகும். இதைத் தான் பரேலவிகள் தங்கள் வாழ்க்கைப் பாதையாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

இந்தப் பாதையின் மையப் புள்ளியாய் பரேலவிகள், ஷியாக்கள் மோடியுடன் இந்துத்துவா கொள்கையில் ஒன்றாகிறார்கள்; சங்கமிக்கின்றார்கள்.

அண்மையில் இந்துத்துவாவின் தலைவர் நரேந்திர மோடி அனைத்து பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும், யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தனது இந்துத்துவா திட்டத்தை வெளியிட்டிருந்தார்.

தனது இந்துத்துவா வழிபாட்டைச் செயல்படுத்துவதற்காக ஜூன் 21, 2015 யோகா தினம் என்று அவர் அறிவித்திருந்தார். சூரிய வணக்கம் என்பது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு வணக்கமாகும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனிலும் தெளிவாகத் தடை செய்கின்றான்.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திர னுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (திருக்குர்ஆன் 41:37)

சூரியனை வணங்குவது ஒரு புறமிருக்கட்டும். சூரியனை ஒரு கூட்டம் வணங்கிக் கொண்டிருக் கின்றது. அவர்கள் வணங்குகின்ற அந்த நேரங்களில் அல்லாஹ்வைக் கூட தொழக் கூடாது. காரணம் அந்த நேரங்களில் முஸ்லிம்கள் அல்லாஹ் வைத் தொழுதாலும் மற்றவர்கள் பார்க்கும் போது, முஸ்லிம்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் நிழல் கூட மற்றவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக சூரியன் உதிக்கின்ற, மறைகின்ற, நேரங்களில் தொழக் கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்பு களுக்கிடையே உதிக்கின்றது.

புகாரி 3273

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து தொழவேண்டாம்.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி),

புகாரி 585

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(ஹதீஸின் ஒரு பகுதி) “சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்      வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப் படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங் கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரைத் தொழுது கொள்க. பிறகு சூரியன் மறையும் வரைத் தொழுவதை நிறுத்தி விடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா (ரலி),

நூல்: முஸ்லிம் 1512

இஸ்லாம் இந்த அளவு சூரிய வணக்கத்தின் சாயல் முஸ்லிம்கள் மீது படியாமல் பார்த்துக் கொள்கின்றது. மோடி அரசு இந்த சூரிய வழிபாட்டைத் தான் சூட்சுமத்துடன் முஸ்லிம்கள் மீது திணிக்கப் பார்க்கின்றது.

இந்தச் சூரிய வழிபாட்டை வெறுமனே திணித்தால் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு இந்துத்துவா மோடி அதை யோகாவுடன் சேர்த்து திணிக்கின்றார்.

பள்ளிக் கூடங்களில் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுகள் என்ற அடிப்படையில் எத்தனையோ உடற்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தனையையும் தாண்டி யோகா என்ற பெயரில் இப்படி உடற் பயிற்சியை அறிமுகப்படுத்துவதற்கு மோடி பரிவாரம் துடிப்பதற்குக் காரணம் என்ன? யோகாவில் தான் உடற்பயிற்சி என்ற பெயரில் சூரியனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு வணங்குதல் என்ற சூரிய வழிபாடு பிணைக்கப்பட்டுள்ளது.

அதனால் அந்த வடிவில் முஸ்லிம்களை வழிமாற்றம் செய்வதற்கு மிகப்பெரிய ஒரு சதிவலை இந்துத்துவா அரசால் பின்னப்பட்டுள்ளது.

இதற்கு யோகா என்று உடற்பயிற்சி முலாம் பூசப்பட்டுள்ளது. யோகா என்ற முகம் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஓர் அறிவிப்பு வெளியான மாத்திரத்தில் உடனே சுதாரித்துக் கொண்ட அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சூரிய வழிபாட்டையும் யோகாவையும் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக் குவதைக் கடுமையாக கண்டித்து கடந்த ஜூன் 8 அன்று அறிக்கை வெளியிட்டது.

நாடு முழுவதும் இதற்கு எதிரான பிரச்சாரத்தை மக்களிடத்தில் அது கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தது.

சூரிய வணக்கத்தை பள்ளிக் கூடங்களில் கட்டாயமாக்கக் கூடாது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கு முன்னாலும் தலை வணங்க மாட்டார்கள் என்று அதன் உறுப்பினர் கமால் ஃபரூக்கி தெரிவித்தார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் வாரியத்திடம்  இலங்குகின்ற ஏகத்துவ உணர்வாகும் இது.

இப்படி ஏகத்துவ சிந்தனைகள் கொண்ட ஓர் இஸ்லாமியக் கூட்டம் இதை வன்மையாக எதிர்த்துக் கொண்டிருக்கையில் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகளில் சில குழுவினர், ஆயுர்வேத யோகா இணை அமைச்சர் சிரிபத் நாயக்கைச் சந்தித்து 21ஆம் தேதி நடைபெற்ற யோகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மஜ்லிஸ் உலமா ஹிந்த் (உத்தரபிரதேஷ்), ஜமாஅத் உலமா ஹிந்த் (டெல்லி), அனைத்து இந்தியா ஜமாஅத் -இ சல்மானி, ஜமாஅத் ஹூஃப்பாஸ்- இ கிராம், தாவூதி போரா கமிட்டி ஆகியோர் தான் இந்தக் குழுவினர்.

இந்தப் பெயர்களிலேயே இவர்கள் பக்கா பரேலவிகள், பகிரங்க ஷியாக்கள் என்பது நன்கு வெட்ட வெளிச்சமாகின்றது.

இந்த சன்னியாச சாமிகளான பரேலவி, ஷியாக்கள் மோடியின் இந்துத்துவா என்னும் கொள்கையில் சங்கமிக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு சங்கமிப்பதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

காரணம் மோடி கூட்டம் (கற்சிலைகளை) நட்ட வைத்து வணங்கும் கூட்டம். இவர்களோ படுக்க வைத்து வணங்கும் கூட்டம். அதனால் இந்த மையப்புள்ளியில் இவ்விரு சாராரும் ஒன்றாகச் சந்திக்கின்றனர்.

நேர்வழியைத் தங்கள் வழியாகக் காணாமல் வழிகேட்டைப் பாதையாக எடுத்துக் கொள்வார்கள் என்று எவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறானோ அந்த ரகத்தைச் சார்ந்தவர்கள் தான் இவர்கள்.

இந்த பரேலவிகள் அந்த பக்கம் இருக்க வேண்டியவர்கள். தப்பித் தவறி இந்தப் பக்கம் உட்கார்ந்து கொண்டு இஸ்லாத்தையும் முஸ்லிம் களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு ஈமானிய சிந்தனையோ, சமுதாய உணர்வோ அறவே கிடையாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தமிழகத்தில் உள்ள அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம் இந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகை ஒரு யோகாவா?

ஈமானிய உணர்வுடன், ஏகத்துவ சிந்தனையுடன் அகில இந்திய தனியார் சட்ட வாரியம் மோடியின் இந்துத்துவா கொள்கைத் திணிப்பை எதிர்த்துக் களம் இறங்கும் வேளையில் இந்த பரேலவி – ஷியா கூட்டம், இஸ்லாமிய சமுதாயத்தைக் கலாச்சார ரீதியாக மாற்றத் துடிக்கும் மோடி கூட்டத்துடன் கைகோர்த்து நிற்பதன் மூலம் தாங்கள் யார் என்பதைத் தெளிவாக அடையாளப் படுத்தி உள்ளனர்.

அப்துல்லாஹ் ஜமாலி, ஸைபுத்தீன் ரஷாதி போன்றவர்கள் இந்த பரேலவிகள் படையைச் சார்ந்தவர்கள். சமுதாயம் இந்த ஆசாமிகளை இனியாவது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பரேலவிகள் கொடுத்த தெம்பால் அமைச்சர் சிரிபத் நாயக், “தொழுகையில் கூட்டு யோகா நிலைகள் உள்ளன’ என்று வாய்க்கு வந்தபடி விட்டு அடித்துள்ளார். முஸ்லிம்கள் மீது ஒரு கலாச்சார திணிப்பை நடத்துவதுடன் தொழுகையில் யோகா நிலைகள் உள்ளன என்ற திமிர் வாதத்தை அமைச்சர் பேசுகின்றார்.

தொழுகை என்பது முஸ்லிம் களுக்கு உடற்பயிற்சி கிடையாது. அல்லாஹ்வுக்குச் செலுத்துகின்ற தூய வணக்கமாகும். நெஞ்சுக்கு மேல் கை கட்டி நிற்றல், குனிதல், நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குதல் அனைத்தும் இறைவனுக்கு ஒரு முஸ்லிம் செய்கின்ற வணக்கமாகும். இது ஒரு போதும் யோகாவாகாது.

ஒரு முஸ்லிம் யோகா என்ற நினைப்பில் தொழுகையை நிறை வேற்றினால் அது தொழுகையாகாது.  ஏனென்றால் செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்று நபிகள் நாயகம் கூறிவிட்டார்கள்.

ஒரு முஸ்லிம் யோகா செய்வதாக நினைத்துத் தொழுகையை நிறை வேற்றினால் அது அவனது முகத்தில் தூக்கி வீசியெறிப்படும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

பரேலவிகள், ஷியாக்கள் போன்ற அறிவிலிகளைத் தவிர வேறு எந்த ஒரு முஸ்லிமும் தொழுகையை யோகாவாக நினைத்து செய்வதில்லை.

அமைச்சரின் இந்த விஷமக் கருத்துக்கு பரேலவி மற்றும் ஷியா வகையறாக்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போகிற போக்கில் இந்த பரேலவி, ஷியா வர்க்கம் வெளிப்படையாக அறிவித்து இந்துத்துவாவில் சங்கமம் ஆகிவிடுவார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இஸ்லாமிய சமுதாயம், முஸ்லிம் பெயர்தாங்கிகளின் வலையில் விழுந்து விடாமல் இந்துத்துவா சக்திகளின் சதிகளை அடையாளங்கண்டு செயல்பட வேண்டும். யோகா என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவா திணிக்கும் சூரிய வணக்கத்திலிருந்து தங்கள் தலைமுறையினரைப் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

யோகாவை ஆஹா ஓஹோ என்று மோடிக்கூட்டம் புகழ்ந்து தள்ளு கின்றது. யோகா என்றால் என்ன? என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகின்றார்:

யோகா பயிற்சியின் அனைத்து நிலைகளையும் நாயின் உடல் இயக்கத்தின்போது காண முடியும். உதாரணமாக, நாய் படுக்கையி லிருந்து எழுந்ததும் முன்புற மற்றும் பின்புற கால்களை நீட்டி பெருமூச்சுவிடும். அதுபோன்ற பயிற்சி யோகாவில் உள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த யோகா அவசியம் என்று கருதினால், முதலில் அவர்களது பசியையும் பட்டினியையும் போக்க முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடியின் யோகாவுக்கு நாயின் உடல் அசைவு என்ற இந்த தகுதியைத் தவிர்த்து வேறு எந்த பெரிய தகுதியையும் கொடுத்து விட முடியாது.