ஏகத்துவம் – ஜூலை 2008

தலையங்கம்

பொது வாழ்வில் தூய்மை

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

அல்குர்ஆன் 33:32

இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளுக்குரிய தனிப்பட்ட கட்டளையைக் குறிப்பிட்டாலும், மற்ற முஃமினான ஆண், பெண்களுக்குரிய பொதுவான வழிகாட்டல்கள் இதில் அடங்காமல் இல்லை.

உயர் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யும் தவறுகள் சாதாரணமானவை அல்ல; சகித்துக் கொள்ளக்கூடியவை அல்ல. அது மக்களிடத்தில் பெரும் தாக்கத்தையும் தனிக் கவனத்தையும் ஏற்படுத்தும். இது தான் அந்த வசனம் சுட்டிக் காட்டும் வழிகாட்டலாகும்.

தவ்ஹீது ஜமாஅத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் – அது நகரப் பொறுப்பாக இருக்கட்டும்; அல்லது மாவட்ட, மாநிலப் பொறுப்புகளாகட்டும் – இந்த வசனத்தின் அடிப்படையில் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்தத் தவ்ஹீது ஜமாஅத்தை மக்கள் உச்சத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் அதை உன்னிப்பாகவும் கவனிக்கிறார்கள்.

மற்ற ஜமாஅத்தில் உள்ளவர்கள் என்ன தவறு செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ளவர்கள் ஒரு சிறு தவறு செய்தாலும், நீயெல்லாம் ஒரு தவ்ஹீதுவாதியா? என்று கேட்பார்கள்.

இப்படிக் கேட்பதற்காக உண்மையில் நாம் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் தவ்ஹீதுவாதி என்றால் அவன் எல்லா விதத்திலும் சரியாக இருப்பான் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் இது போன்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார்கள்.

நம்முடைய ஜமாஅத்தும் பிற இயக்கங்களை விட்டும் எல்லா வகையிலும் தனித்தன்மையுடன் விளங்குகின்றது.

பிரச்சாரத்தில் தனித்தன்மை

“ஜாக்கும் தவ்ஹீதைச் சொல்கின்றது. திமுகவின் சிறுபான்மைப் பிரிவும் தவ்ஹீதைச் சொல்கின்றது. அதனால் இந்த இயக்கங்களிலிருந்து பேச்சாளர்களை அழைத்துக் கூட்டம் போடுகிறோம். நாங்கள் நடுநிலையாளர்கள்’ என்று சொல்லும் ஒரு சிலர் தமிழகத்தில் உள்ளனர். நம்முடைய பார்வையில் இது நடுநிலை அல்ல! நயவஞ்சகத்தனம்!

இந்த இரு இயக்கங்களும் சிந்தனையில், செயல்பாட்டில் வேறுபட்டவை. அடிப்படைக் கொள்கைகள், சட்டங்கள் அனைத்திலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டவை. நம்மை வேரோடு வீழ்த்தும் விஷயத்தில் மட்டும் தான் ஒன்றுபட்டவை என்று தெரிந்தும் இவர்கள் நடுநிலை என்கிறார்கள் என்றால் இதற்கு நயவஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன பெயர் சூட்ட முடியும்?

இப்படிப்பட்டவர்கள் நம்மைப் பிரச்சாரத்திற்கு அழைத்தால் அதில் நாம் கலந்து கொள்வதில்லை. நம்முடைய மேடைகளை அவர்களுடன் நாம் பகிர்வதில்லை. இப்படி ஒரு தனித்தன்மையைப் பொது மேடைகளில் மட்டுமல்ல! ஜும்ஆ மேடைகளிலும் கடைப்பிடித்து வருகிறோம்.

நடுநிலை என்று சொல்லிக் கொள்பவர்கள் நம்மைப் பிரச்சாரத்திற்கு அழைத்த போதும் நாம் செல்லவில்லை. இதனால் அவர்கள் நம்மை எதிர்ப்பவர்களின் பட்டியலில் கூட இணைந்திருக்கிறார்கள்.

போராட்டங்களில் தனித்தன்மை

சமுதாயப் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாம், மற்ற எந்த இயக்கத்துடனும் சேர்ந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் காண்பதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.

உதாரணத்திற்கு, சுன்னத் ஜமாஅத்தினர், முஸ்லிம் லீக்கினர் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது, அல்ஃபாத்திஹாவில் தொடங்கி, இறுதியில் ஆமீன் போடும் துஆ வரை அது பித்அத்திலேயே முடியும்.

ஆர்ப்பாட்டங்களில் மற்ற இயக்கத்தார் செய்யும் அத்துமீறல், அடாவடித்தனங்களுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அடுத்து, நமது ஜமாஅத்தில் உள்ளது போன்று களமிறங்கிப் போராடும் மக்கள் சக்தி வேறு ஜமாஅத்துகளில் இல்லை. இதனால் நமது கூட்டத்தைக் காட்டி, பெயரை மட்டும் அவர்கள் தட்டிச் செல்வார்கள்.

இது போன்ற மார்க்க மற்றும் உலக ரீதியிலான, நியாயமான காரணங்களால் இந்தத் தனித்தன்மையைக் காத்து வருகிறோம்.

இப்படிப்பட்ட நமது தனித்தன்மையே நம்மை நோக்கிக் கவனத்தைத் திருப்ப வைக்கின்றது. அதனால் மற்ற இயக்கங்களின் ஆந்தைப் பார்வை அல்லும் பகலும் நம்மீது படிந்திருக்கின்றது.

இதல்லாமல் நமது ஜமாஅத், உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்காமல், குர்ஆன் ஹதீஸ் என்ற அறிவார்ந்த முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களைக் கொண்ட ஜமாஅத்தாகும்.

தூய்மையான இயக்கம் என்ற நம்பிக்கையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், “இந்த இயக்கத்தின் துப்புரவும் தூய்மையும் கெட்டு விடக் கூடாது; அது கறைபட்டு விடக்கூடாது; களங்கப்பட்டு விடக்கூடாது’ என்பதில் கண்ணும் கருத்துமாகக் கண் விழித்து, கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இறையச்சம்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற பயம் இந்த ஜமாஅத்தின் நிர்வாகிகளாக இருப்பவர்களிடம் மிகைத்து நிற்க வேண்டும்.

இந்த இயக்கத்தின் இலட்சியமே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது தான். அந்தப் பணியைச் செய்யக் கூடியவர்கள் மற்றவர்களை விட இறையச்சத்தில் மிஞ்சி நிற்க வேண்டும். அதன் வெளிப்பாடு அன்றாடம் ஐந்து நேரத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதாகும். தொழுகை மட்டுமின்றி இதர வணக்க வழிபாடுகளிலும் பேணுதலாக இருக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் மார்க்கம் கூறும் அனைத்து நன்மைகளையும் ஏற்று நடப்பவராகவும், மார்க்கம் தடுத்த தீமைகளை விட்டும் தவிர்ந்து நடப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, தீமைகளைத் தவிர்ந்து நடப்பதில் கண்டிப்பானவராக இருக்க வேண்டும்.

  1. ஷிர்க், பித்அத் நடக்கும் திருமணங்கள், வரதட்சணை வாங்கும் திருமணங்களில் இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் யாரும் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கூடாது. அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரி!
  2. இணை வைப்பவர்களைத் தானும் திருமணம் செய்யக் கூடாது. தனது பிள்ளைகளுக்கும் மணமுடித்துக் கொடுக்கக்கூடாது.
  3. இணை வைப்புக் கொள்கையிலேயே இறந்து விட்டவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக் கூடாது.
  4. இணை வைப்பவர்களின் பின்னால் நின்று தொழக் கூடாது.
  5. வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், அலுவலக் கடன் என்று எந்த வகையிலும் வட்டியில் போய் விழுந்து விடக் கூடாது.
  6. பொருளாதார மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி விடக்கூடாது.
  7. பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு போதும் ஆளாகி விடக் கூடாது.
  8. புகை, போதை போன்ற எந்தவிதமான கெட்ட பழக்கத்திற்கும் ஆளானவராக இருக்கக் கூடாது.
  9. தாடி வைத்தல் போன்ற வலியுறுத்தப்பட்ட, வெளிப்படையான சுன்னத்துகளை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் கொள்கை அடிப்படையில் அமைந்தவை. இதில் இந்த ஜமாஅத்தின் சாதாரண உறுப்பினர் கூட சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

நிர்வாகிகளாக இருப்பவர்கள் கண்டிப்பாக சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லா வகைகளிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் தம் கண் முன் வளர்த்த நபித்தோழர்களைப் போன்ற சமுதாயமாகப் பரிணமிப்போமாக!

———————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? பாங்கு சொல்வதற்கு முன்னால் ஸலவாத் சொல்லலாம் என்று  கேள்வி நேரத்தில் பதில் சொல்லப்பட்டது. இதற்கு முன்பு இந்த விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்படி இருந்தது? பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழியா?

குடியாத்தம் இர்ஃபான், துபை

பாங்குக்கு முன் ஸலாவத் சொல்வது பித்அத் என்று தான் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.  கேள்வி நேரத்திலும் அப்படி எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை.

பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாங்கு முறைக்கு மாற்றமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்).

பின்னர் மீண்டும், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.

பின்னர் “ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“ஹய்ய அலல் ஃபலாஹ்என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள் என அதிகப்படியாக  இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)

நூல்: முஸ்லிம் 623

பாங்கு சொல்வதை அல்லாஹு அக்பர் என்று தான் துவக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் சான்றுகள் உள்ளன. பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழி என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது “ஸலவாத்சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை “ஸலவாத்சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலாவைக் கேளுங்கள். “வஸீலாஎன்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 628

பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லுமாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கு முன் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் என்று பாங்கைத் துவக்க வேண்டும் என்று கூறியிருக்க, அதற்கு முன் ஸலவாத் சொல்லி விட்டு பாங்கைத் துவக்குவது பித்அத் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத செயலாக இருப்பதால் தான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பித்அத்தைச் செய்கின்றனர். சில இடங்களில், இன்னல்லாஹ மலாய்கத்தஹு… என்ற வசனத்தை ஓதி, ஸலவாத் சொல்லி விட்டு பாங்கு சொல்வதும், வெவ்வேறு திக்ருகளைக் கொண்டு பாங்கைத் துவக்குவதும் நடைமுறையில் உள்ளது.

மொழி, இன பேதமின்றி அனைவருக்கும், உலகம் முழுமைக்கும் பொதுவான தொழுகை அழைப்பாக உள்ள பாங்கிலும் இது போன்ற பித்அத்துக்களால் வேறுபடுத்தி வைத்துள்ளது வேதனைக்குரியது.

? மார்ச் மாத ஏகத்துவம் இதழில், அதீ இப்னு ஹாத்தம் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில், “தங்கம், வெள்ளி பெருகி பெறுவோரற்ற நிலை ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை இனிமேல் தான் ஏற்படுமா? உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்பட்டு இந்த நிலை ஏற்பட்டதாக எனக்குப் பாடம் நடத்தப்பட்டது. எனவே இது மறுமையில் அடையாளங்களில் ஒன்றா? அல்லது நடந்து முடிந்து விட்டதா?

க.மு. சித்தி பர்ஹானா ஆலிமா சித்தீக்கியா

ஆசிரியை, மஹ்தி தவ்ஹீத் கல்லூரி, அதிராம்பட்டிணம்

செல்வம் பெருகி, அதை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும் என்று பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. இவை அனைத்துமே இறுதி நாளின் அடையாளங்களாகத் தான் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்கüடையே நேர்மையாகத் தீர்ப்பüக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்கüடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்கüன் பார்வையில்) ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ர-) அவர்கள், “வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்‘ (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3448

இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் மாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும் கல்வி கைப்பற்றப்பட்டு நில நடுக்கங்கள் அதிகமாகும். காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமை நாள் வராது.

மேலும் உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் வராது. அப்போது செல்வன், “தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்க மாட்டாரா?’ என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும் போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார்.

மேலும் மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக் கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது.

சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும் போது அதைக் காணும் மக்கள் அனைவரும் இறை நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அதற்கு முன்பே இறை நம்பிக்கை கொள்ளாத அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள். அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள் அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போது தான் திரும்பியிருப்பார். அதை அவர் அருந்தியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போது தான் செப்பனிட்டிருப்பார். அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார். ஆனால் இன்னும் அதைச் சாப்பிட்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்து விடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவு நாள் ஏற்படும்)என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7121

செல்வத்தை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை உலகில் இது வரை ஏற்படவேயில்லை. உமர் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக் காலத்தில் செல்வம் பெருகி இருந்திருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் அது மிகப் பெரிய சாதனையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் இதை கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்றாகவும், ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் காலத்தில் தான் அந்த நிலை ஏற்படும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் உமர் பின் அப்துல் அஜீஸ் காலத்தில் இந்நிலை ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

? மனிதர்களும் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் தவறு செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு நரகம் என்றால் சரி! ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்? ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா? விளக்கவும்.

ஹெச். செய்யது அலீ நிஜாம், நாகூர்

ஜின் இனம் என்பது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்ட ஓர் இனமாகும். மனிதர்களுக்கு இறைவன் தனது தூதர்களின் மூலம் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்திருப்பது போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன. மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் இறுதித் தூதராக வந்தவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

ஜின், மனித சமுதாயமே! உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா? (என்று இறைவன் கேட்பான்). “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. “(ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம்எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

அல்குர்ஆன் 6:130

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டதுஎன (முஹம்மதே!) கூறுவீராக!

அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்.

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

எங்களில் மூடன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுபவனாக இருந்தான்.

மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

அல்குர்ஆன் 72:1-5

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

அல்குர்ஆன் 7:179

இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்களைப் போன்று ஜின்களும் பகுத்தறிவு வழங்கப்பட்ட, நன்மை தீமை பிரித்தறிவிக்கப்பட்ட ஓர் இனம் என்பதை விளக்குகின்றன. ஆனால் மனிதர்களை விடப் பன்மடங்கு ஆற்றல் கொண்டது ஜின் இனம் என்றும், அவர்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 27:39, 40, 72:8,9, 7:12, 15:27, 38:76, 55:15)

எனவே மறுமையில் நல்லவர்கள் சுவனத்தை அடைவதும், கெட்டவர்களுக்கு நரகம் கூலியாகக் கிடைப்பதும் மனித இனத்தைப் போன்று ஜின்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஜின்கள் ஷைத்தான் இனத்தைச் சேர்ந்ததா? என்று கேட்டுள்ளீர்கள். ஷைத்தான் தான் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்.

ஆதமுக்குப் பணியுங்கள்!என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.

அல்குர்ஆன் 18:50

———————————————————————————————————————————————–

மாநபி வழியும் மத்ஹபுகளும்

நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை.

இது பள்ளிவாசல்களில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் தடையுத்தரவு.

இந்தத் தடை உத்தரவைப் படிப்பவர்களுக்கு, “மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி’ என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தான் மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அடி உதை விழுகின்றது. காவல்துறையில் புகார் பதிவாகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன.

 ஏன் இந்தத் தாக்குதல்கள்? மக்கள் ஏன் இந்த மத்ஹபுகளை வெறித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்?

இந்த மத்ஹபுகளில் மண்டிக் கிடக்கின்ற, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் விஷக் கருத்துக்கள் மக்களிடம் மறைக்கப்படுவதால் தான். மக்களை வெட்கப்பட வைக்கும் ஆபாசங்களை தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆலிம்கள் மறைப்பதால் தான்.

மத்ஹபுகளை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் கூட்டம் கூட்டமாக இன்று வெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள் யார்?

அன்று இவர்களும் பள்ளிவால்களில், மத்ஹபு வெறியில் இருந்து கொண்டு தவ்ஹீதுவாதிகளைத் தாக்கியவர்கள் தான். இவர்கள் ஏன் வெளியில் வந்தார்கள்?

மத்ஹபுச் சட்ட நூற்களில் எழுதப்பட்டுள்ள விஷக் கருத்துகளை, ஆபாசக் களஞ்சியங்களைப் படித்துப் பார்த்த மக்கள் தான் மத்ஹபுகளை விட்டு வெளியே வந்தார்கள். எனவே இதை அனைவரும் தெரிந்து கொண்டு, மத்ஹபு மாயையிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் மக்களிடம் இதைப் பிரச்சாரம் செய்து, அவர்களையும் குர்ஆன், ஹதீஸ் என்ற சத்தியத்தின் பால் இழுக்க வேண்டும் என்பதற்காக இதை இங்கு பிரசுரம் செய்கிறோம்.

ஷாஃபி, அபூஹனீபா, மாலிக், அஹ்மது பின் ஹன்பல் ஆகிய நான்கு இமாம்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் தான் மத்ஹபுகள் என்று ஆலிம்கள் பிரச்சாரம் செய்தாலும், உண்மையில் அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்ட நூற்கள் தான் இன்று இமாம்களின் பெயரால் பின்பற்றப்படுகின்றன. அந்த நூற்களிலுள்ள அபத்தங்களையும் ஆபாசங்களையும் பார்ப்பதற்கு முன், மார்க்க மேதைகளான அந்த நான்கு இமாம்களும் என்ன சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

நான்கு இமாம்களுமே குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒருமித்துக் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஆலிம்கள் இதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.

  1. இமாம் அபூஹனீபா (ரஹ்) கூறுகிறார்கள்

1ஹதீஸ் ஸஹீஹாக (ஆதாரப்பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே எனது கொள்கையாகும்.

ஆதாரம்: ஹாஷியது ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 72

2 “எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்” என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.

ஆதாரம்: ஜாமிவுஸ்ஸகீர், பாகம்: 1 பக்கம்: 19

3 நானும் ஒரு மனிதன் தான். நான் சரியாகவும் நடப்பேன். தவறிழைக்கவும் செய்வேன். எனவே எனது கூற்றை கவனித்துப் பாருங்கள். குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் எனது கூற்று ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமாக இருந்தால் என் சொல்லை விட்டு விடுங்கள்.

ஆதாரம்: ரவாயுவு அபீஹனீபா, பாகம்: 1, பக்கம்: 3

இவை அனைத்தும் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கூற்றுக்கள். மத்ஹபு ஆலிம்களே! குர்ஆனும், ஹதீசும் தான் பின்பற்றத்தக்கவை என்பதை இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருந்தும் தக்லீதுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கக் காரணம் என்ன? இது தான் இமாமை மதிக்கின்ற நிலையா? பதில் தாருங்கள்.

  1. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

4 நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக்கூடிய ஒரு மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.

ஆதாரம்: மவ்ஸ‚அது உஸ‚லில் பிக்ஹ், பாகம்: 5, பக்கம: 414

5 “உளூச் செய்யும் போது கால் விரல்களைக் கோதிக் கழுவ வேண்டியதில்லை” என்ற கருத்தை இமாம் மாலிக் அவர்கள் கொண்டிருந்தார்கள். அப்போது நான், “கால்களைக் கோதிக் கழுவ வேண்டும்’ என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறி அவர்களிடம் ஸனதுடன் அறிவித்தேன். அதற்கு இமாம் மாலிக் அவர்கள், “இது சரியான ஹதீஸ் தான். நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை” என்று கூறி விட்டு, அதன்பின் கால் விரல்களையும் கோதிக் கழுவிட வேண்டும் என உத்தரவிட்டார்கள். இவ்வாறு இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஆதாரம்: அல்ஜர்ஹு வத்தஃதீல், முன்னுரை, பக்கம்: 31, 32

மத்ஹபு ஆலிம்களே! மிகப் பெரும் இரண்டு இமாம்களையும் பின்பற்றுவோர் யார்? உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.

  1. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்

6 எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறிடத் தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் அடிப்படையை வகுத்துத் தரும் போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல் (ஸல்) அவர்களின் கூற்றே ஏற்கப்பட வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.

ஆதாரம்: முக்தஸருல் முஅம்மல், பாகம்: 1, பக்கம்: 58

7 “ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை” என்று முஸ்லிம்கள் அனைவரும் இஜ்மாவு செய்துள்ளனர்.

ஆதாரம்: அல்ஹதீஸ‚ ஹ‚ஜ்ஜதுன் பீ நப்ஸிஹி. பாகம்: 1, பக்கம்: 79

இஜ்மாவு என்பதற்குத் தவறான விளக்கம் தரும் மத்ஹபு ஆலிம்களே! ஸஹாபாக்கள், தாபியீன், தபவுத் தாபியீன்கள் ஆகியோரின் இஜ்மாவைத் தான் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

  1. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறுகிறார்கள்

8 என்னையோ மாலிக், ஷாபியீ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற இமாம்களையோ பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்.

ஆதாரம்: அல்ஹதீஸ‚ ஹ‚ஜ்ஜதுன் பீ நப்ஸிஹி, பாகம்: 1, பக்கம்: 80

நான்கு இமாம்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் உண்மையில் அந்த இமாம்களைப் பின்பற்றுகிறார்களா? என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள கூற்றுக்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஹனபி மத்ஹப் என்று சொல்லிக் கொண்டு இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் வழியில் செல்வதாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஹனபி மத்ஹபு என்று இவர்களுக்குப் போதிக்கப்பட்டதும், இவர்கள் பிறருக்குப் போதிப்பதும் இமாம் அபூஹனீபா எழுதிய நூற்களையா? அல்லது அவர்களின் மாணவர்களான இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மத் ஆகியோர் எழுதிய நூற்களையா? இல்லையே!  இந்தியாவின் எந்த மதரஸாவிலும் அந்த இமாம்கள் எழுதிய நூற்கள் போதிக்கப்படுவதில்லையே! இதன் மர்மம் என்ன?

ஹிஜ்ரி 1118ல் எழுதப்பட்ட ஆலம்கீரி, ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆனது எப்படி? ஹிஜ்ரி 1071ல் எழுதப்பட்ட துர்ருல் முக்தார் எவ்வாறு ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆக்கப்பட்டது? ஏன் ஆக்கப்பட்டது? யாரால் ஆக்கப்பட்டது? ஹிஜ்ரி 745ல் எழுதப்பட்ட ஷரஹ் விசாயா, எப்படி ஹனபி மத்ஹபின் சட்ட நூல் ஆனது? ஹிஜ்ரி 710ல் எழுதப்பட்ட கன்சுத் தகாயிக் என்ற நூல் எவ்வாறு அபூஹனீபா இமாமின் சட்ட நூல் என்று நம்ப வைக்கப்பட்டது? ஹிஜ்ரி 593ல் எழுதப்பட்ட ஹிதாயா என்ற நூல் ஹனபி இமாம் எழுதியதா? ஹிஜ்ரி 428ல் எழுதப்பட்ட குதூரி என்ற நூல் இமாம் அவர்களால் எழுதப்பட்டதா?

இமாமுடைய நூலையும், அவர்களின் மாணவர்களின் நூலையும் பாட நூற்களாக ஆக்காததன் மர்மம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு சட்ட விளக்கம் தர, இன்று பாடத் திட்டத்தில் இருக்கும் நூற்கள் தான் இடம் தருகின்றன என்பதைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? தெளிவுபடுத்துங்கள்.

எந்த ஒரு சிறு மஸ்அலாவுக்கும் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றிலிருந்து சான்றுகள் காட்டாமல் விட்டு வைக்கவில்லை என்று மத்ஹபு ஆலிம்கள் கூறுகின்றனர். இதோ இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில் காணப்படும் குப்பைகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றில் ஆதாரம் உள்ளதா? காட்டுங்கள் பார்ப்போம்.

சதித் திட்டம்

9 குர்ஆன் முழுவதையும் படிப்பதை விட பிக்ஹ் நூலைப் படிப்பது மிகச் சிறந்தது.

கன்சுத்தகாயிக், முன்னுரை

அல்லாஹ் நமக்கு அருளிய மாபெரும் பொக்கிஷமான குர்ஆன் பக்கம் மக்களை நெருங்க விடாமல் தடுப்பதற்காக நீங்கள் செய்த சதித் திட்டத்திற்கு, குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உண்டா? மத்ஹபு ஆலிம்களே! பதில் சொல்லுங்கள்.

பகுத்தறிவுச் சட்டங்கள்

10 பல் துலக்கும் குச்சியைச் சூப்பினால் கண்கள் குருடாகும்.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 124

இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து பெறப்பட்டது? எந்த ஹதீஸிலிருந்து வகுக்கப்பட்டது? தெளிவுபடுத்துவீர்களா?

தொழுகையில் விளையாட்டு

11 ஒரு மனிதனிடத்தில், “நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு’ என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.

ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447

12 தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677

13 ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால் அவனுடைய தொழுகை வீணாகாது.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677

14 தொழுகை முழுமையான பிறகு (அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால்) தொழுகைக்கு வெளியில் செய்யக்கூடிய சொல், செயல் போன்றவற்றினால் தொழுகையை முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு சிரித்தல், வேண்டுமென்றே பின் துவாரத்தின் வழியாகக் காற்றை விடுதல், பேசுதல், நடத்தல், ஸலாம் கூறுதல் போன்ற காரியங்களால் தொழுகையை முடிப்பது கூடும்.

ரத்துல் முக்தார், பாகம்: 3, பக்கம்: 400

15 சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும்

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521

16 கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால் மவுனமாக இருந்துவிடலாம்.

மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81

மத்ஹபு ஆலிம்களே! மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக ஆக்கிக் காட்டுகின்றன. மேற்கூறிய விளையாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து இஜ்மாவு, கியாஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா?

இமாமுடைய தகுதிகள்

17 அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்தைச் சார்ந்தவர், அழகிய மனைவி உள்ளவர், இவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 259

18 இமாமத் செய்பவரின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும். இமாமுடைய “உறுப்பு’ சின்னதாக இருக்க வேண்டும்.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 601

மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இவை. பேஷ் இமாமுக்கு இவ்வளவு அசிங்கமான தகுதிகளை நிர்ணயம் செய்தது குர்ஆனா? ஹதீஸா? இஜ்மாவா, கியாஸா? சொல்லுங்கள். இந்தத் தகுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் இமாமைத் தேர்வு செய்கிறீர்களா?

மோசடிகள்

19 இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் தண்டனை கிடையாது.

துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்: 310

20 போதையூட்டக் கூடிய கடைசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள் மது அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம் புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 9

21 திருமணம் செய்து கொள்ள முடியாத தாய், சகோதரி போன்றவர்களையோ, அடுத்தவனின் மனைவியையோ, இத்தா இருக்கும் பெண்ணையோ ஒருவன் மணமுடித்து, இது தவறில்லை என்று கருதி உடலுறவு கொண்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஆனால் கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் செய்திருந்தாலும் இவ்வாறு தான்.

ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்: 60

இந்த மோசடிகள், ஏமாற்றுக்கள் எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளன. இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா?

விசித்திரமான சட்டம்

22 ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து (பின்னர் அவளுக்குத் திருமணம் (?) செய்து வைக்க வேண்டும்)

ஹிதாயா, பாகம்: 2, பக்கம்: 62

நடைமுறை சாத்தியமில்லாத, பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்ற இந்தச் சட்டத்துக்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள்.

23 ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறியை நுழைத்தால் விந்து வெளியாகாத வரை குளிப்பு கடமையில்லை.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 175

இந்த மானங்கெட்ட அசிங்கங்கள், குர்ஆன் ஹதீஸில் உள்ளவையா? அல்லது இஜ்மா, கியாஸில் உள்ளவையா? விளக்குங்கள்.

குறிப்பு: இதை விட ஆபாசமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால் எங்கள் எழுதுகோல்கள் எழுதுவதற்கு வெட்கப்படுகின்றன.

தமிழில் தொழலாம்

24 அரபி தெரிந்திருந்தாலும், தொழுகையில் அரபி அல்லாத மொழிகளில் ஓதுவது கூடும்.

ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 488

25 பார்ஸி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும்.

ஹாஷியத்துல் ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 523

இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம் உள்ளதா? தெளிவுபடுத்துங்கள்.

26 ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம்.

ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 117

மூத்திரத்துக்கு இவ்வளவு மகிமை இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனை, அதன் தலைசிறந்த அத்தியாயமான பாத்திஹா சூராவை மூத்திரத்தால் எழுதலாம் என்று கூறி, குர்ஆனை இழிவுபடுத்துகின்றன. மத்ஹபு ஆலிம்களே! இது தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டங்களா? சிந்தியுங்கள்.

ஜும்ஆ

27 இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்பது ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும்.

ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 83

மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிறைவேறாமல் போகுமே! “இனி இந்தியாவில் ஜும்ஆ கிடையாது” என்று அறிவிக்கத் தயாரா? மத்ஹபு நூற்கள் அப்படித் தான் கூறுகின்றன.

மத்ஹபு மாறினால் தண்டனை

நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று போர்டு வைக்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைத் தவிர மற்ற மத்ஹபுகள் தவறானவை என்றும் அவற்றைப் பின்பற்றுவது தண்டனைக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூறுகின்றன.

28 ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249

29 ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565

30 நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது.

துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18

ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான காரியம் என்றாகிறது. தவறான மத்ஹபில் இருக்கும்படி போர்டு எழுதி வைப்பது ஏன்?

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இமாம்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு 200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களை ஆதாரமாக ஆக்கியது தான் என்பதை உணர்வீர்கள்.

முரண்பாடுகள்

இந்த மத்ஹபுச் சட்ட நூற்களில் பொய்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடுகளும் மலிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.

31 முஃதஸிலா பிரிவினரை திருமணம் முடித்துக் கொள்வது கூடும். ஏனென்றால் ஒரே கிப்லாவினரில் எவரையும் காஃபிர் என்று நாம் கூறமாட்டோம்.

துர்ருல்முக்தார், பாகம்: 3, பக்கம்: 50

32  முஃதஸிலா பிரிவினருக்கும் சுன்னத்து வல்ஜமாஅத்தினருக்கும் மத்தியில் திருமணம் செய்வது கூடாது.

ஃபத்ஹ‚ல் கதீர், பாகம்: 6, பக்கம்: 397

33 இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லை நிராகரிப்பவன் மீது மணல் எண்ணிக்கைக்கு அல்லாஹ்வின் லஃனத் உண்டாகட்டும்.

துர்ருல் முக்தார் முன்னுரை

34 இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மது ஆகிய இருவரும் மூன்றில் இரண்டு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாக அபூஹனீபா இமாமுக்கு மாறு செய்துள்ளனர்.

ஜாமிஉஸ் ஸகீர், பாகம்: 1, பக்கம்: 8

ஹனபி மத்ஹபின் இமாம்களான அபூயூசுப், முஹம்மது ஆகிய இருவரின் மீது லஃனத் (அல்லாஹ்வின் சாபம்) உண்டாகட்டும் என்று கூறுகின்றனர்.

இப்படி முன்னுக்குப் பின் முரணான, ஆபாசமான, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கின்ற சட்டங்களைத் தான் இமாம்களின் பெயரால் எழுதி வைத்துள்ளனர்.

மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று போர்டு வைப்பதற்கு முன்னால் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தயாரா?

மத்ஹபு வெறியை ஊட்டி, மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களே!

இமாம்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை இழிவு படுத்தும் இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற கொள்கையின் பக்கம் வாருங்கள்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:32

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:36

———————————————————————————————————————————————–

ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள்

மனிதனுக்கு ஷைத்தானால் சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

ஆதமின் மக்கüல் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர”’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி)

நூல்: புகாரி 3431

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்-) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்- முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்- முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.

அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி)

நூல்: புகாரி 608

கொட்டாவி ஷைத்தானிடம் இருந்து வருவதாகும். உங்கüல் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹாஎன்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான்.

அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி)

நூல்: புகாரி 3289

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 1144

ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை விவரிக்கும் இது போன்ற ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள். ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்னத் தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.

இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு மேற்கண்ட இடையூறுகள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?

தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுகிறது என்று மேலுள்ள ஹதீஸ்கள் கூறுகிறது. அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைபிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம்.

முதலில் ஷைத்தானால் மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அவனுடைய தீமைகளிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஷைத்தானால் எந்தத் தீங்கை செய்ய இயலும்?

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தான் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக் கட்டாயமாக, அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்ய விடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான்.  இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

(அல்குர்ஆன் 4:119)

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.

(அல்குர்ஆன் 2:169)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

(அல்குர்ஆன் 114:5)

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தித் தான் ஷைத்தான் வழிகெடுத்தான்.

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். “இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லைஎன்று கூறினான்.

(அல்குர்ஆன் 7:20)

நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஷைத்தான் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாகக் கூறும் போலி ஆன்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப் பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?

நபிமார்களுக்கு ஷைத்தான் இடைஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.

(அல்குர்ஆன் 6:112)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.

(அல்குர்ஆன் 22:52)

வேறெதுவும் செய்ய முடியாது

ஒருவரைப் பைத்தியமாக மாற்றுவது, உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை, தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு

அல்குர்ஆன் 14:22

எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 17:65

அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.

அல்குர்ஆன் 34:21

எவ்வாறு தப்பிப்பது?

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதைத் தான் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறும் திருக்குர்ஆன் அவனுடைய அந்தத் தீங்கிலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்ற வழியையும் கற்றுத் தருகிறது. ஷைத்தானுடைய வழியில் சென்று விடாமல் தனக்குப் பாதுகாப்பைத் தருமாறு அல்லாஹ்விடம் துஆ செய்வது தான் அந்த வழியாகும். இந்த துஆ ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிக்கும் மாபெரும் கருவியாகும்.

என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் (23 : 97)

(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம், மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்  இத்தகையோர் உள்ளனர்.

அல்குர்ஆன் 114வது அத்தியாயம்

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 7:200

குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்!

அல்குர்ஆன் 16:98

அவர் (இம்ரானின் மனைவி) ஈன்றெடுத்த போது, “என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனேஎனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். “ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்எனவும் அவர் கூறினார்.

அல்குர்ஆன் 3:36

ஷைத்தானின் தூண்டுதல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள் நான் ஷைத்தானை விரட்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கூறவில்லை. மாறாக தீய எண்ணங்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் கற்றுக் கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை கற்றுக் கொடுத்தார்களோ அதில் தான் நமக்கு வெற்றி இருக்கிறது. எனவே ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்களின் மாயவலையில் யாரும் விழுந்து விட வேண்டாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும் போது அவர்  அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையி-ருந்து) விலகிக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி)

நூல்: புகாரி 3276

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (விருப்பமானவர்கüடம்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடம் இருந்தே வந்தது. அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும்.

அறிவிப்பவர்: அபூசயீத்  அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 6985

இறைநம்பிக்கை, இறையச்சம், நற்குணங்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் ஷைத்தான் நம்மை வழிகெடுக்க முடியாது.

எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அல்குர்ஆன் 15:42

நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை.

அல்குர்ஆன் 16:99

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் 7:201

ஷைத்தான் வலையில் விழுந்தவர் ஷைத்தானை விரட்டுகிறார்களா?

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

அல்குர்ஆன் 26:221

ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள், மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.

ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளை இழந்து விட வேண்டாம். நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக!

———————————————————————————————————————————————–

தொடர்: 4         

முதஷாபிஹாத்

முதல் சாராரின் ஏழாவது ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்களுக்குப் பொருள் கூறுவதில் அறிஞர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கூற முடியவில்லை. பல்வேறுபட்ட விளக்கங்களை ஒவ்வொருவரும் கூறுகின்றனர். முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்க முடியும் என்றால் அனைவரும் ஒரே கருத்தைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரே கருத்தைக் கூறாமல் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர்.

இவ்வாறு அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே முதஷாபிஹ் எவருக்கும் விளங்காது என்பதற்கு மற்றொரு சான்றாகும் என்று முதல் சாரார் வாதிக்கின்றனர்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இந்த வாதமும் பொருளற்றதாகும். ஏனெனில் கருத்து வேறுபாடுகள் முதஷாபிஹ் வசனங்களில் மட்டுமல்ல! முஹ்கம் என்று முதல் சாராரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தொழுகை, நோன்பு, இன்னபிற சட்டதிட்டங்களைக் கூறக்கூடிய வசனங்களை முதல் சாராரும் முஹ்கம் என்றே கூறுவர். சட்ட திட்டங்களைப் பற்றிய அந்த வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மத்ஹபுகள் என்ற பெயரால் முரண்பட்ட சட்டதிட்டங்கள் நிலவி வருவது இதற்குப் போதிய சான்றாகும்.

கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்ற முடிவுக்கு முதல் சாரார் வருவார்களானால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள ஏராளமான முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூற வேண்டிய நிலைமை ஏற்படும். அல்லது முதல் சாராரும் முஹ்கம் என்று ஏற்றுக் கொண்ட பல வசனங்களை முதஷாபிஹ் வசனங்கள் என்று கூறும் நிலை ஏற்படும்.

முஹ்கம் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எல்லாக் கருத்துக்களையும் அலசி, சரியான கருத்தை முடிவு செய்வது போல் முதஷாபிஹ் வசனங்களிலும் முடிவு செய்ய முடியும்.

இன்னும் சொல்வதென்றால் முதல் சாரார் முதஷாபிஹ் வசனங்கள் எனக் கூறுகின்ற சொர்க்கம், நரகம், மறுமை போன்றவற்றைக் குறிப்பிடும் வசனங்களிலுள்ள கருத்து வேறுபாடுகளை விட முஹ்கம் என்று முதல் சாரார் முடிவு செய்துள்ள, சட்டதிட்டங்கள் தொடர்பான வசனங்களில் கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன.

கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காரணம் காட்டி முதஷாபிஹ் வசனங்கள் விளங்க முடியாதவை என்று முதல் சாரார் கூறுவார்களானால் முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். முதல் சாரார் அவ்வாறு கூறத் துணிய மாட்டார்கள். எனவே அவர்களின் இந்த வாதம் அர்த்தமற்றது என்று இரண்டாம் சாரார் மறுக்கின்றனர்.

முதல் சாராரின் எட்டாவது ஆதாரம்

திருக்குர்ஆனில் முஹ்கம் வசனங்களும் உள்ளன; முதஷாபிஹ் வசனங்களும் உள்ளன. வல்ல அல்லாஹ்வே இவ்வாறு தன் வசனங்களை வகைப்படுத்தி இருக்கிறான். இறைவன் இரண்டு வகை வசனங்கள் உள்ளதாகக் கூறும் போது, இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பது அவசியம். முஹ்கம் வசனங்கள் மனிதர்கள் எவரும் விளங்கிக் கொள்ளத்தக்கவை அல்ல. இறைவன் மாத்திரம் அறியக் கூடியவை என்று கூறும் போது தான் இரண்டு வகைகளாக ஆக முடியும்.

முஹ்கம் வசனங்களும் விளங்கும்; முதஷாபிஹ் வசனங்களும் விளங்கும் என்று கூற முற்பட்டால் முஹ்கம் வசனங்களுக்கும் முதஷாபிஹ் வசனங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் போகும். இறைவன் இரண்டு வகைகளாகத் தன் வசனங்களை வகைப்படுத்தி இருக்கும் போது, “இரண்டும் விளங்கத்தக்கவை’ என்று கூறினால் இறைவன் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளதை ஒன்றாக ஆக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறி இரண்டையும் வித்தியாசப்படுத்துகிறோம் என்று முதல் சாரார் தங்களின் எட்டாவது சான்றைச் சமர்ப்பிக்கின்றனர்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இறைவன் இரண்டு விதமான வசனங்கள் உள்ளதாகக் கூறுவது உண்மையே! இரண்டுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதும் உண்மையே! அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் முதல் சாரார் குறிப்பிட்ட வகையில் தான் அந்த வித்தியாசம் அமைய வேண்டும் என்பது என்ன அவசியம்?

முதல் சாரார் குறிப்பிடுகின்ற அந்த வித்தியாசத்தை, அதாவது குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன என்ற விபரீதக் கருத்தை எண்ணற்ற வசனங்கள் மறுத்துக் கொண்டிருக்கும் போது, முதஷாபிஹ் வசனங்களும் விளங்கும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அதற்கு மாற்றமான இந்த வித்தியாசத்தை எப்படி ஏற்க முடியும்? (முதஷாபிஹ் வசனங்களும் விளங்கக் கூடியவையே என்று இரண்டாம் சாரார் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும் போது இது விரிவாக விளக்கப்படும்)

முஹ்கமையும் முதஷாபிஹையும் சம நிலையில் நாமும் வைக்கவில்லை. முஹ்கம் எளிதில் எவருக்கும் விளங்கக்கூடியவை; முதஷாபிஹ் வசனங்கள் அறிவில் தேர்ந்தவர்களுக்கு விளங்கக் கூடியவை என்று கூறுவதன் மூலம் இரண்டு வகையான வசனங்களையும் நாம் வித்தியாசப்படுத்துகிறோம் என்று இரண்டாவது சாரார் மறுக்கின்றனர்.

முதல் சாராரின் ஒன்பதாவது ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்றால் அறவே விளங்காது என்று நாம் கூறவில்லை. ஓரளவு அனுமானம் செய்ய முடியும். திட்டவட்டமாக இது தான் விளக்கம் என்று கூற முடியாது என்பதே அதன் பொருள். முதஷாபிஹ் வசனங்களைச் சிந்திக்கவே கூடாது என்று நாங்கள் கூறவில்லை என்று முதல் சாரார் தங்களின் கூற்றுக்கு விளக்கம் தருகின்றனர்.

இரண்டாவது சாராரின் மறுப்பு

இவர்களின் இந்த வாதமும் சரியானதல்ல. பெரும்பாலான முஹ்கம் வசனங்களின் நிலையும் கூட இத்தகையது தான். திட்டவட்டமாக அல்லாஹ் இதைத் தான் நாடியுள்ளான் என்று கூற முடியாத முஹ்கம் வசனங்கள் பல உள்ளன.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அறிஞர்கள் பல முஹ்கம் வசனங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். திட்டவட்டமாக அதன் விளக்கத்தை அறிய முடியாததாலேயே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர்.

முதஷாபிஹ் வசனங்களும் விளங்கத்தக்கவை எனவும், விளங்காதவை எனவும் கூறுகின்ற இரு சாராரும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் 3:7 வசனத்தையே இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அந்த வசனத்திற்குப் பொருள் செய்யும் போது, “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் விளங்க முடியாது” என்று சிலரும், “அல்லாஹ்வும், கல்வியில் உறுதி மிக்கவர்களும் விளங்குவார்கள்” என்று வேறு சிலரும் பொருள் கொள்கின்றனர்.

திட்டவட்டமாக அதன் பொருளைக் கூற இயலாத காரணத்தினால் தான் இப்படி இரு அர்த்தங்கள் செய்யும் நிலை. “திட்டவட்டமாக விளங்காது’ என்ற நிலை முதஷாபிஹ் வசனங்களில் மட்டுமல்ல; மேற்கூறிய 3:7 போன்ற முஹ்கம் வசனங்களின் நிலையும் இது தான்.

3:7 வசனம் “முஹ்கம் அல்ல; அதுவும் முதஷாபிஹ் தான்’ என்று முதல் சாரார் ஒரு வேளை கூற முற்பட்டால், அவர்களின் கூற்றுப்படி முஹ்கம் அல்லாத 3:7 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை எழுப்பவே இயலாது போகும்.

அவர்களது வாதப்படி மனிதர்களால் விளங்க முடியாத முதஷாபிஹ் வசனத்தின் அடிப்படையில் எந்த வாதத்தையும் எழுப்ப முடியாது. முஹ்கம் வசனங்களின் அடிப்படையிலேயே வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது முதல் சாரார் ஏற்றுக் கொண்ட உண்மை. இவ்வாறு இரண்டாம் சாரார் மறுக்கின்றனர்.

முடிவுரை – 1

இதுவரை முதல் சாரார் எடுத்து வைத்த வாதங்களையும், அதற்கான மறுப்புக்களையும் மீண்டும் படித்தால், முதஷாபிஹ் வசனங்கள் இவை தான் என்று கூறும் முதல் சாரார் அதற்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை என்பதை உணரலாம்.

முதஷாபிஹ் வசனங்கள் விளங்கிட இயலாதவை என்ற அவர்களின் கூற்றுக்கும் சரியான ஆதாரங்களை எடுத்து வைக்கவில்லை என்பதையும் விளங்கலாம். அவர்களின் வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையும் அறிய முடியும்.

“விளங்காத வசனங்களை இறைவன் எதற்காக இறக்கியருள வேண்டும்?” என்பதற்கு முதல் சாரார் சில வியாக்கியானங்களை அளிக்கின்றனர். இந்த விளக்கத்தை நாம் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் குர்ஆனில் விளங்காதவை இருக்கின்றன என்பதை அவர்கள் நிரூபித்த பின்பே அந்த விளக்கங்கள் தேவைப்படலாம். எல்லாமே விளங்கத்தக்கவை என்று முடிவாகி விட்டால் அவர்களின் அந்த விளக்கம் அவசியமற்றுப் போய் விடும்.

இனி இரண்டாம் சாராரின் வாதங்களை விரிவாகப் பார்ப்போம்.

———————————————————————————————————————————————–

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 3

எம். ஷம்சுல்லுஹா

  1. கொலை முயற்சி,
  2. பிரச்சாரத்திற்குத் தடை
  3. சமூகப் பகிஷ்காரம்
  4. தொழுவதற்குத் தடை

இந்நான்கு வன்முறைகளும் அன்று நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கா காஃபிர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டன.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மட்டுமல்ல! எல்லா இறைத்தூதர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இவை!

தமிழகத்தில் தவ்ஹீதுவாதிகள் முதன்முதலில் ஏகத்துவத்தை எடுத்து வைத்ததும் இதே வன்முறைகளைத் தான் குராபிகள் கையாண்டார்கள். ஏகத்துவம் வளர்ந்த ஊர்களிலும், வளர்ந்து கொண்டிருக்கும் ஊர்களிலும் இந்த வன்முறைகளைத் தான் கையில் எடுக்கின்றார்கள்.

அம்சா தங்களின் அடாவடித்தனம்

ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்த மாத்திரத்தில் கொதித்துக் கொந்தளித்து எழுந்தவர்கள் ஆலிம்கள் தான்.

அன்று முஹம்மது (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தில் தங்கள் ஆதிக்க பீடம் அடித்து நொறுக்கப்படும் என்று அதிர்ந்து அலறிய குறைஷிக் காஃபிர்களைப் போன்று இந்த உலமாக்களின் கூடாரம் அதிர்ந்து அலறியது. இவ்விரு சாராருக்கும் மத்தியில் ஷிர்க்கில் – இணை வைப்பில் ஒற்றுமை இருந்தது போன்று இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை இருந்தது. அது தான் வயிற்றுப் பிழைப்பு!

வளர்ந்து வரும் ஏகத்துவத்தால் வருமானம் பாதிக்கப்படும் என்று குறைஷி வர்க்கம் பயந்தது. அதே பயம் இந்த ஆலிம்கள் கூடாரத்தையும் கவ்விப் பிடித்தது. அதனால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட ஆரம்பித்தனர். கொலை வெறியைத் தூண்டினர். மக்கத்துக் காஃபிர்களான அபூஜஹ்ல் சபையினரைப் போன்று கொலை வெறித் தாக்குதல்களிலும் இறங்கினர்.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் முக்கியமான பள்ளிவாசல் பெரிய குத்பா பள்ளிவாசல்! ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் இந்தப் பெரிய குத்பா பள்ளிவாசலில் ஒரு தொழுகையின் போது கத்தி அல்லது அரிவாளைக் காட்டி, “எவனாவது விரலை அசைத்தால் வெட்டி விடுவேன்” என்று ஒருவர் கொக்கரித்தார். அவர் பெயர் அம்சா தங்கள். தாழையூத்தில் தாயத்து, தகடு தொழில் நடத்துபவர். அவர் அப்போது நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் செயலாளர். எவ்வளவு பொருத்தமான ஆள் இந்த அபூஜஹ்ல் சபைக்குச் செயலாளராக வந்திருக்கிறார் என்று பாருங்கள்.

அப்படியொரு வன்முறைப் போக்கு இவர்களிடம் மேலோங்கி இருந்தது. இது அன்றைய குறைஷிக் குப்பார்களின் வன்முறைப் போக்காகும்.

கொள்கைக்கு எதிரான கொலை முயற்சி

சுருக்கமாகச் சொல்லப் போனால் சத்தியத்தை ஏற்ற ஒரு சின்னஞ்சிறு கூட்டத்திற்கு எதிராக ஒரு போர் முழக்கமே நடந்தது. அதன் உச்சக்கட்டமாகத் தான் அந்த ஆலிம்களும், சத்தியத்திற்கு எதிரான பணக்காரப் பேர்வழிகளும் கூட்டாக இணைந்து கூலிப் படையை ஏவி விட்டு,  கொலை செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் அந்த முயற்சி பலிக்காமல் போனது. வெறியோடு வந்தவர்களின் குறி தவறியது.

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்6. சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

அல்குர்ஆன் 8:30

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போல் அன்றைய அபூஜஹ்லின் பாதையில் ஆலிம்கள் இந்தக் கொலை வெறித் தாக்குதலை நடத்தி முடித்தனர். ஆனால் அல்லாஹ் அவர்களின் சதியை முறியடித்து விட்டான்.

குர்ஆன் கூறும் ஏகத்துவத்தை அன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது அவர்கள் மீதும், கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் மீதும் இந்தக் கொலை வெறித் தாக்குதல் அபூஜஹ்ல் அணியினரால் நடத்தப்பட்டது.

இன்றும் குர்ஆன் கூறும் ஏகத்துவத்தை தவ்ஹீது ஜமாஅத்தினர் மக்களிடம் எடுத்துச் சொல்கின்றனர். இன்று ஆலிம்கள் எனப்படுவோர் பணக்காரப் பேர்வழிகளுடன் இணைந்து கொலை வெறித் தாக்குதல் நடத்துகின்றனர். அன்றைய அபூஜஹ்ல் அணியினரும், இன்றைய ஆலிம் அணியினரும் கிளம்பியிருப்பது குர்ஆனுக்கு எதிராக! அதனால் தான் இந்தக் கொலை முயற்சித் தாக்குதல்கள் என்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டு!

சமூக பகிஷ்காரம்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது, அன்றைய அபூஜஹ்ல் அணியினர் சமூகப் பகிஷ்காரம் செய்ததைக் கடந்த தொடரில் பார்த்தோம்.

இன்று தவ்ஹீது ஜமாஅத்தினர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த காரணத்தால், ஆலிம் சபையினர் ஊர் விலக்கத்தை மேற்கொள்கின்றனர். எனது தம்பி ஹாஜா பிர்தவ்ஸியின் குடும்பத்தை சில ஆண்டுகள் ஊர் நீக்கம் செய்து வைத்தனர். இதற்காக அவர் நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவரும், அவருக்கு உதவ முன்வந்த பெரியவர் கே.எஸ். குலாம் ரசூல் அவர்களும் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல!

இந்த ஊர் நீக்கம் 1987ல் நடந்தது என்றால் அண்மையில் பொட்டல் புதூரில் ஒரு சமூகப் பகிஷ்காரம் நடந்தது.

பொட்டல்புதூர்! இது நெல்லை மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் உள்ள ஊர். இங்கு அமைந்துள்ள சுற்றுலாத்தலம் தர்ஹா தான். எல்லா ஊர்களிலும் அவ்லியாக்கள் இறந்ததற்காக சமாதி எழுப்பி தர்ஹா கட்டுவார்கள் என்றால் இங்கு அப்துல் காதிர் ஜீலானி வந்து போனதற்காக ஒரு தர்ஹா! இந்தத் தர்ஹாவில் கொடி தூக்கி, துதிக்கையை தூக்கிய வண்ணம் வலம் வந்த யானை மரணித்த போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அதை அடக்கம் செய்த அதிசய அற்புத (?) ஊர்.

அந்த ஊரில் அப்துல் காதர் என்ற சகோதரர் குர்ஆன் கூறும் தவ்ஹீதைச் சொல்கின்றார். அவ்வளவு தான்! ஊரே கொந்தளிக்கின்றது; நெருப்பாய் கனர்கின்றது. விளைவு ஊர் நீக்கம்! அதுவும் பொதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதற்குக் கூடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கடையில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அந்த அளவுக்கு உக்கிரமான ஊர் நீக்கத்தை சகோதரர் அப்துல்காதர் சந்தித்தார்.

அன்று மக்காவில் அபூஜஹ்ல் அரங்கேற்றிய அதே சமூகப் பகிஷ்காரத்தை இன்றைய ஆலிம் சபை அரங்கேற்றுகிறது.

இரண்டுக்கும் காரணம் ஒன்று தான். குர்ஆன் கூறும் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னது தான்.

குர்ஆனுக்கு எதிரான நடவடிக்கைகள், வன்முறை வெறியாட்டங்களின் வரிசையில் உள்ளது தான் தொழுவதற்குத் தடை!

பள்ளிவாசலில் தொழத் தடை

ஏகத்துவப் பிரச்சாரம் தமிழகத்தில் தொடங்கியதும் பல்வேறு எதிர்ப்புகள் பல முனைகளிலிருந்து புயலாய் கிளம்பின. அதில் ஒன்று தான் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு விதிக்கப்பட்ட தடை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இப்படித் தடுக்கப்பட்டார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம். அன்று அபூஜஹ்ல் அரங்கேற்றிய இந்த அநியாயத்தை இன்று ஆலிம் சபையினர் அரங்கேற்றுகின்றனர்.

1988ல் நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. அபூஜஹ்லின் பாதையில் இந்த அநியாயத்தை ஜமாஅத்துல் உலமா அரங்கேற்றுவதைப் பாருங்கள். அந்தப் பிரசுரம் இது தான்.

குழப்பவாதிகளை பள்ளிகளில் அனுமதிக்காதீர்கள்!

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தீர்மானம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் கமிட்டியிலிருந்து நெல்லை ஜமாஅத்துல் உலமா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதம், 2.10.88 தேதி அன்று நடைபெற்ற ஜ.உ. சபை செயற்குழு கூட்டத்தில் வாசிக்கப்பட்டு நீண்ட பரிசீலனைக்குப் பின் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் கமிட்டியின் கடிதம்

இமாம்களையும் மத்ஹபுகளையும் ஒத்துக் கொள்ளாத ஒரு கூட்டம் தங்களுக்கு தவ்ஹீது இயக்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு சமீப காலமாக எங்களூரில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு முரணான வகையில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும், தான் தோன்றித்தனமாக அர்த்தங்கள் கூறி அனர்த்தம் விளைவித்து வருகிறது. இதனால் சுன்னத் வல்ஜமாஅத்தினராகிய எங்களூர் முஸ்லிம் பொது மக்கள் கொதிப்பும் கோபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் குழப்பவாதிகளான இக்குதர்க்கவாதிகளை நமது பள்ளிகளில் அனுமதிக்கலாமா? என்பது பற்றி மாவட்ட ஜமாஅத்துல் உலமாவிலிருந்து மார்க்க ரீதியாக முடிவெடுத்து தகவல் தந்தால் அதை நாங்கள் செயல்படுத்தத் தயாராக இருக்கின்றோம்.

நெல்லை ஜ.உ. சபை தீர்மானம்

மேலப்பாளையம் பள்ளி வாசல்களும், மற்றும் ஊர்களிலுள்ள மஜ்ஜிதுகளும் ஹனபி, ஷாபி, ஹன்பலி, மாலிகி ஆகிய நான்கு மத்ஹபுகளையும் தழுவி வாழ்கின்ற சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டு, வக்ஃபு செய்யப்பட்டவைகளாகும். மேலும் அதே அடிப்படையிலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதுமாகும். எனவே மேற்படி பள்ளிகளில் இமாம் அபூஹனீபா (ரஹ்), இமாம் ஷாபி (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் (ரஹ்) ஆகிய நான்கு இமாம்களின் மத்ஹபுகளில் எது ஒன்றையும் பின்பற்றாத, நீங்கள் குறிப்பிட்ட குழப்பவாதிகள் மேல்படி பள்ளிவாசல்களுக்கு வருவதையோ, தனியாகத் தொழுவதையோ, இமாமாக நின்று தொழுகை நடத்தவோ, இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழுவதையோ அனுமதிக்கக் கூடாது. மேலும் மேற்படி குழப்பவாதிகளைக் கொண்டு நிக்காஹ் நடத்தி வைப்பதும் கூடாது. மேலும் குழப்பவாதிகள் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம்கள் நடத்தும் எந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளவும் அனுமதிக்கக்கூடாது.

அவ்வாறு அனுமதித்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளிவால்களை தங்களுடைய தவறான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் பள்ளிவாசல்களுக்கு இந்த நோக்குடன் தான் வருகிறார்கள். எனவே குழப்பம் கொலையை விடக் கொடியது என்ற அல்குர்ஆன் அடிப்படையில் இவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக்கூடாது.

இப்படிக்கு

தலைவர் மௌலானா மௌலவி

எம்.இ.எம். அபுல்ஹஸன் ஷாதலி

செயலாளர் ஹஜரத் வி. ஹம்ஸா மௌலவி

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா

15.10.88

வெளியீடு: மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா சபை.

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் இந்தப் பிரசுரத்தையடுத்து மேலப்பாளையத்தில் அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இதோ:

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

9.11.88 அன்று மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளிவாசலில் வைத்து, ஜனாப் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேலப்பாளையம் அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் ஜமாஅத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

“சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களையும் மத்ஹபுகளையும் ஏற்காதவர்கள் அந்தந்த முஹல்லா பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என்று அந்தந்த பள்ளிவாசல்களிலும் போர்டு எழுதி வைப்பது என்றும், இந்த முடிவை அந்தந்த முஹல்லா பள்ளிவாசல் பொறுப்பாளர்களே அமுல் நடத்த முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

போர்டு எழுதி வைக்க வேண்டிய வாசகம்:

“சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களையும் மத்ஹபுகளையும் ஏற்காதவர்கள் இப்பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்”

– நிர்வாகிகள்

மேலே கண்ட வாசகத்தை பள்ளிவாசல் ஜும்ஆ மற்றும் வக்து தொழுகை நேரங்களில் அறிவிப்புச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம்

இப்படிக்கு

அனைத்துப் பள்ளிவாசல்   நிர்வாகக் கமிட்டியினர்

வி.எஸ்.டி. சம்சுல் ஆலம்

அமைப்பாளர்

———————————————————————————————————————————————–

ஹதீஸ் கலை ஆய்வு              தொடர்: 10

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

நபியவர்கள் செயல்படுத்தாத சட்டம்

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எத்தனையோ நபர்கள் இஸ்லாத்திற்கு வந்து விட்டு வேறொரு மதத்தைத் தழுவினார்கள். இவர்களில் ஒருவருக்காவது நபி (ஸல்) அவர்கள் மரண தன்டனையை விதித்ததாக ஆதாரப்பூர்வமான எந்தச் சான்றும் இல்லை. மாறாக மதம் மாறியவர்களைக் கொல்லாமல் விட்டதற்குத் தான் பல சான்றுகள் உள்ளன.

ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்கத்து குரைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம், “எங்களில் யாராவது உங்களுடன் இணைந்து கொண்டால் அவரை மீண்டும் எங்களிடம் அனுப்பிவிட வேண்டும்; உங்களில் யாராவது உங்களை விட்டும் விலகி எங்களிடம் வந்தால் நாங்கள் அவரை உங்களிடம் அனுப்ப மாட்டோம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்மிஸ்வர் பின் மஹ்ரமா (ரலி)

நூல்: அஹ்மத் 18152

மதம் மாறியவர்களைக் கொல்வது இஸ்லாமிய சட்டமாக இருந்திருந்தால் இந்த இஸ்லாமிய சட்டத்திற்கு மாறு செய்யும் விதத்தில் அமைந்த இந்த ஒப்பந்தத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஒத்திருக்க மாட்டார்கள்.

மாறாக எங்களிடமிருந்து பிரிந்து வருபவர்களுக்கு நாங்கள் மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக அவர்களை எங்களிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றே கூறியிருப்பார்கள். மக்கத்துக் காஃபிர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியச் சட்டத்தைத் தளர்த்தினார்கள் என்று சொல்ல முடியுமா?

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். “(இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள்என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். “மதீனா (துருவை நீக்கித் தூய்மைப்படுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிடமுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1883

இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் தனக்குக் காய்ச்சல் வந்து விட்டதாக அந்தக் கிராமவாசி எண்ணி, நபி (ஸல்) அவர்களிடம் செய்த பைஅத்தை முறித்து விட்டு மக்காவிற்குச் செல்ல நாடுகிறார்.

மதம் மாறி விட்ட இவரை ஏன் நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை? மாறாக இவரது எண்ணப்படி இவர் மக்காவிற்குத் திரும்ப அனுப்பப்படுவார் என்பதை, “மதீனா தீயவர்களை வெளியேற்றி நல்லவர்களை மட்டும் வைத்திருக்கும்’ என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

அன்சாரிகளில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு மதம் மாறி இணை வைப்புக் கொள்கையில் இணைந்து கொண்டார். பின்பு (அதற்காக) வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு மன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்கும் படி தன்னுடைய கூட்டத்தாருக்குத் தகவல் தெரிவித்தார்.

அவரது கூட்டத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இன்னார் (மதம் மாறியதற்காக) வருத்தப்பட்டு விட்டார். அவருக்கு மன்னிப்பு உண்டா? என்று உங்களிடம் கேட்கும் படி எங்களுக்குக் கூறியிருக்கிறார்என்று சொன்னார்கள்.

அப்போது தான், “தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டுப் பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்ற (3:86) வசனம் இறங்கியது.

நபி (ஸல்) அவர்கள் இதை அவருக்குத் தெரிவித்த உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: நஸயீ 4000

மதம் மாறி விட்டவரைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இந்த நபித்தோழர் திருந்தி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்திருப்பாரா?

இந்த மோசமான சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த சான்றாக உள்ளது.

ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறி விட்டார்.

அவர் (மக்களிடம்), “முஹம்மதுக்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாதுஎன்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரைப் பூமி துப்பி விட்டது.

உடனே (கிறிஸ்தவர்கள்) “இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடி வந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்என்று கூறினர்.

அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் “இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்என்று கூறினர்.

மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்குக் குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3617

நபி (ஸல்) அவர்களுடன் இருந்து விட்டுப் பின்பு மதம் மாறிய இவரைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தால் உடனே நபித்தோழர்கள் அதைச் செயல்படுத்தியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவருக்கு மரணத்தைக் கொடுத்தான்.

நயவஞ்சகர்களில் இரு வகையினர் இருந்தனர். இவர்களில் ஒரு வகையினரை நபி (ஸல்) அவர்கள் நயவஞ்கர்கள் என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

இன்னொரு வகையினரைப் பற்றி நபியவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் மட்டும் தான் இவர்களைப் பற்றி அறிந்தவன்.

முதல் வகையினர் பலமுறை தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தங்களின் இறை மறுப்பை வெளிப்படுத்தினார்கள்.

இறை மறுப்பாளர்கள் என்று தெரிந்த பின்பும் நபி (ஸல்) அவர்கள் அந்நயவஞ்சகர்களுக்கு மரண தண்டனையை விதிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுடைய பிரார்த்தனை இவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்காது. நபியவர்களுடன் சேர்ந்து ஜிஹாத் செய்யும் பாக்கியத்தை இழந்தார்கள். இவை மட்டும் தான் இவர்களுக்கு இந்த உலகத்தில் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட தண்டனை. இது அல்லாத தண்டனைகளை இவர்களுக்குத் தருகின்ற பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் “என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!என்று கூறுவீராக! அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

அல்குர்ஆன் 9:83

இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள்.

அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகத் தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்லித் திரியவில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும்.

அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை.

அல்குர்ஆன் 9:74

நபித்தோழர்கள் “இந்த நயவஞ்சகர்களை நாங்கள் கொல்லட்டுமா?’ என்று கேட்ட போது கூட, “மக்கள் தவறாகப் பேசுவார்கள். வேண்டாம்என்றே கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளை விட) அதிகரித்து விட்டனர்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, “இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால் (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்என்று கூறினான்.

அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், “என்னை விடுங்கள்! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன், அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவனை விட்டு விடுங்கள்! முஹம்மத் தன் தோழர்களைக் கொலை செய்கிறார் என்று மக்கள் பேசி விடக் கூடாதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 4907

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

கே.எம். அப்துந் நாசிர்

துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.

கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.

திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

  1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

  1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:23

இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2451, 4719

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.

(பார்க்க: புகாரி 4719)

மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகி விட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.

ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது.

எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே

அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்என்று கூறினார்கள்

அறிவிப்பவர்:  உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232

அனுமதி கோரல்

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 24:27)

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

 (அல்குர்ஆன் 24:28)

இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார்.  “நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்’ என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார்.  இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.

தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்

வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.  மொட்டையாக “நான் தான்’ என்று கூறக் கூடாது.

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன்.  அப்போது அவர்கள், “யாரது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நான் தான்என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நான் தான் என்றால்…?” என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 6250

மூன்று முக்கிய நேரங்கள்

கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 24:57, 58)

இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும்.  இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?

மூன்று முறை அனுமதி கோரல்

நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள்.  “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), “(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர்  திரும்பி விடட்டும்‘’ என்று கூறியுள்ளார்கள்என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245

பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்

ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும்.  இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294

பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை

இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.

அறிவிப்பவர்: அனஸ்  (ரலி)

நூல்: புகாரி 6242

உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6902

அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரையைத் தொங்க விடுதல்

வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது.  திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.  வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும்.  அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.

ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர்.

ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள்.  இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது.  இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.

பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது.  இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.

இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:31

இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.