ஏகத்துவம் – ஜனவரி 2012

தலையங்கம்

நெகிழ வைத்த நெல்லை பொதுக்குழு

அன்று தவ்ஹீதுப் பிரச்சாரம் துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள்! எரிமலைகள்!

இன்று இறைவன் அருளால் “எங்கள் ஊருக்கு தவ்ஹீதுப் பிரச்சாரம் நடத்த தேதி கிடைக்காதா?’ என்ற எதிர்பார்ப்பு அலைகள்! ஏக்க அலைகள்!

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஓர் இருபதாண்டு கால இடைவெளியில் இத்துணை வளர்ச்சி!

அதன் ஒரு கட்ட வளர்ச்சிப் பரிமாணம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டங்கள்.

மூவாயிரத்துக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்டமைப்பு கூடுவதற்குத் தோதான ஒரு கட்டட அமைப்பு, மண்டபம் மாநிலத்தில் கிடைக்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் பிற இயக்கங்களில் இருப்பது போன்று பொது அறிவிப்பாக உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கும் வழக்கம் நம்மிடம் இல்லை. நமது ஜமாஅத்தில் மாநில, மாவட்ட, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் மட்டுமே மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கே மண்டபம் கிடைக்கவில்லை. இதில் சிறப்பு அழைப்பு விருந்தினர்களைச் சேர்த்தால் மைதானத்தில் தான் பொதுக்குழு நடத்த வேண்டும்.

பொதுக்கூட்டம் என்றால் ஒரு திறந்த வெளியில் கூடிக் கலையலாம். ஆனால் பத்து மணி நேர அலுவல்களை, நிகழ்ச்சிகளைக் கொண்ட பொதுக்குழுவை, கூரை, குளியலறை, கழிப்பறை வசதிகள் இல்லாமல் கூட்ட முடியாது. அப்படி மைதானத்தில் ஒரு பொதுக்குழு நடத்த வேண்டுமாயின் பொருளாதாரச் செலவு பத்து லட்சத்தைத் தாண்டி விடும். மாநில அளவில் பொருத்தமான ஒரு மண்டபம் கிடைத்தது சேலம் மட்டும் தான். ஒரு மாற்று ஏற்பாடாக பிற மாவட்டத்தில் நடத்துவோம் என்றெண்ணிய தலைமையின் சிந்தனையில் பட்டது திருநெல்வேலி மாவட்டம்.

நெல்லையில் இருப்பதிலேயே அதிகக் கொள்ளளவு கொண்ட ஒரு மண்டபம் பார்வதி சேஷ மஹால். உள்ளே 1400 பேர்; வெளியே 1000 பேர் அமரலாம் என்ற விபரத்தைத் தெரிந்து கொண்டு அந்த மண்டபத்தை தலைமை தேர்வு செய்தது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்தால் இது போதுமானதல்ல என்றாலும் தமிழகத்தின் கடைக்கோடியில் நடத்தப்படுவதால் அதிக தொலைவில் உள்ளவர்கள் மூன்று நாட்களை ஒதுக்க வேண்டும்; அத்துடன் அவர்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால் அவர்களால் வர இயலாது; எனவே இந்த இடம் போதுமானதாக இருக்கும் என்று கருதி நெல்லையில் பொதுக்குழு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. பொதுக்குழுவும் இனிதே நடந்து முடிந்தது.

இதில் நெகிழ்வூட்டும் நிகழ்வென்ன?

இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் மேலப்பாளையம். இங்கு தான் 1991ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதியன்று உலமா சபையின் பின்னணியிலும் நெல்லையிலுள்ள பணக்காரர்களின் பண பலத்திலும் தவ்ஹீத்வாதிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக!

அல்குர்ஆன் 27:50, 51

அல்லாஹ்வின் வசனப்படி அந்தச் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

அதன்பின் படிப்படியான ஒரு வளர்ச்சிப் படிமானம் கண்டு, கொள்கைச் சகோதரர்களின் கொள்கைப் பிடிமானத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு உருவாகி, இன்று தனது பொதுக்குழுவை நெல்லையில் நடத்தியது.

இந்தக் கொள்கையை வேரறுக்க நினைத்த ஆலிம்கள் அன்றும் இன்றும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்கள் கண் முன்னாலேயே அவர்களது அசத்தியக் கொள்கை, சன்னம் சன்னமாக சுவாசத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் இவ்வூர் சந்ததியினர், இளைய தலைமுறையினர் தவ்ஹீது தலைமுறையாயினர். இன்று தவ்ஹீது தலைமை என்ற வேர்களுக்குத் தங்கள் உழைப்பு என்ற அர்ப்பணிப்பு மூலம் அந்த மக்கள் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களை உபசரிப்பதற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தன்னார்வத் தொண்டர்களாக (வாலண்டியர்ஸ்) இவ்வூரிலிருந்து 150 பேர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

இந்த வகையில் இப்பொதுக்குழு உள்ளத்தை நெகிழ வைத்த பொதுக்குழுவாகும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்க்கும் பொதுக்குழுவாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13வது பொதுக்குழு இது! புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் மூன்றாவது பொதுக்குழு! சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு மாநில நிர்வாகத் தேர்தலை மையமாகக் கொண்டது. இரண்டாவது பொதுக்குழு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

இந்தப் பொதுக்குழு ஆண்டுக்கொரு முறை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் கூட்டப்பட்டது. அவ்வாறு கூட்டுவதற்கு முன், இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டிற்கான திட்டத்தை இப்பொதுக்குழுவில் அறிவிக்கலாம் என்று யோசித்து, தலைமை அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்டது. இதில் அதிகமான மாவட்டங்கள் அழைப்புப் பணிக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்தனர். அதன்படி இந்தப் பொதுக்குழு அழைப்புப் பணியை மையமாகக் கொண்டு அமைந்தது. மாவட்டங்களுக்கிடையில் அழைப்புப் பணிக்கான புள்ளிகளைப் பெறுவதில் போட்டி போடும் பொதுக்குழுவாக அமைந்தது. இந்த அமைப்பு உலக ஆதாயத்தை மையமாகக் கொண்டதல்ல. மறுமை ஆதாயத்தை மையமாகக் கொண்ட அமைப்பு என்பதை இப்பொதுக்குழு நிரூபணமாக்கி நம்மை நெகிழ வைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக மண்டப உரிமையாளர் நம்மிடத்தில் மனம் திறந்தது தான் ஹைலைட்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் இரத்த தானம் பற்றிப் பேசுகையில், அரசு மருத்துவமனையில் நமது ஜமாஅத்திற்குத் தெரிவித்த பாராட்டைப் பற்றி விவரித்தார். மற்ற இரத்த தானக் கழகங்கள், அமைப்புகள், ரசிகர் மன்றங்கள் தருகின்ற இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தருகின்ற இரத்தம் சுத்தமான கலப்படமற்ற இரத்தம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டதை அப்துல் ஜப்பார் விவரித்தார்.

இதைக் கூர்ந்து கவனித்த மண்டப உரிமையாளர், “இரத்த தானம் குறித்து அவர் பேசியது உண்மை தான். இவ்வளவு பெரிய கூட்டத்தில் புகை பிடிக்கும் ஒருவரைக் கூட நான் காணவில்லை. மற்றவர்கள் கூடும் போது மண்டபம் புகை மூட்டமாகக் காட்சியளிக்கும். மண்டபத்திலும் கழிவறைகளிலும் பீடி, சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில் அதைக் காண முடியவில்லை. இதிலிருந்தே இது ஒரு ஒழுக்கமிக்க கூட்டம் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்” என்று குறிப்பிட்டார்.

அவரது இந்த மனம் திறப்பும் ஒரு நெகிழ்வை அளித்தது.

தவ்ஹீத் ஜமாஅத் தான் பீடி, சிகரெட் ஹராம் என்று தெரிவித்து ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருகின்றது. நமது பத்திரிகைகளில் கூட அது சார்ந்த விளம்பரங்கள் வராமல் ஓர் உறுதிப்பாட்டைக் காத்து வருகின்றது. உறுப்பினர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. இந்த ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த ஜமாஅத்தும் இந்த உறுதிப்பாட்டை மேற்கொள்ளவில்லை.

இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்களில் ஒரு சிலர் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய சகோதரர்களுக்கு முன்னால் நமது ஜமாஅத்தைப் பற்றிய மண்டப உரிமையாளரின் மதிப்பீட்டையும் பார்வையையும் முன்வைக்கின்றோம். இந்த மதிப்பீட்டைப் பொய்யாக்காமல், அல்லாஹ்வுக்குப் பயந்து இந்தத் தீய பழக்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இறுதியாக, இந்தப் பொதுக்குழுவை ஒட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தலைமை பரிசாக வழங்கியது. மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும் என்ற தலைப்பில் ஆற்றிய உரைக்குப் பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுரையாக, “இறுதி நபித்துவம்’ என்ற தலைப்பிலான இந்த உரை அமைந்தது.

காதியானிகளை மட்டுமல்லாது, சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஜமாஅத்துல் உலமாவையும் ஆட்டம் காண வைத்துள்ள இந்த உரை, நேரிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அனைவரையும் நெகிழ வைத்தது; மன நிறைவை அளித்தது.

சத்தியப் பாதையில் நாம் காணும் இந்த வளர்ச்சி நமக்குப் போதை அளித்து விடாமல், நமது கொள்கைப் பயணத்தைத் தொடர்வோமாக! அல்லாஹ் கூறும் எச்சரிக்கையை நம் மனதில் கொள்வோமாக!

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.

அல்குர்ஆன் 9:25

—————————————————————————————————————————————————————-

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம்.

அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம், வீம்பு, வீராப்பு, திமிர், துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.

தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.

கண்ணில் கண்ணாடி! கையில் கைத்தடி!

ஆம்! கையில் கைத்தடி! கண்ணில் ஒரு கண்ணாடி! உளூச் செய்யும் விரல்களை வாயில் உள்ளே விட்டுப் பல் துலக்கிய காலம் போய் பல் செட்டைக் கழற்றி கையில் வைத்துக் கழுவுகின்றான்.

இரும்பு போன்ற எலும்புகளையும் உடைத்துத் தள்ளிய தாடைப் பற்கள், பொக்கையாகிப் போய் மென்மையான உணவுகளைக் கூட மென்று சாப்பிட முடியாத சூழ்நிலை! சோதனை!

இந்த முதுமையை விட்டு அவனால் தப்பிக்க முடியவில்லை. எத்தனையோ அறிவியல் புரட்சிகள், மருத்துவ சாதனைகள்! எவராலும் இந்த முதுமையை வெல்கின்ற, கொல்கின்ற மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்கப் போவதுமில்லை.

வளர்கின்ற வாலிபனின் தலையில் ஈயக்காட்டுக் கம்பியாக ஒரேயொரு நரைமுடி இழையோடிவிட்டால் அதைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகின்றான். தலையில் நரை, தன் வாலிபத்திற்கு ஒரு திரை என்று வெந்து நீருகின்றான். என்ன செய்ய முடியும்?

தான் இருக்கும் வயதை விட்டுத் தாண்டக் கூடாது என்றே நினைக்கின்றான். ஆனால் அவனது வயது, வாழ்நாள் அவனைக் கேட்காமலேயே தாண்டிச் செல்கின்றது. வயோதிகத்தின் பக்கம் வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகின்றது. இதுவே மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

அல்குர்ஆன் 36:68

பெற்றோரை விரட்டுகின்ற பிள்ளைகள்

மனிதன் வயது ஏற, ஏற நடமாட்டம் நிற்கின்றது. படுக்கையில் விழுந்து விடுகின்றான். சிறுநீர் பிரிவது அவனுக்குத் தெரிவதில்லை. மலம் கழிவதும் அவனுக்குப் புரிவதில்லை. இந்நிலையை திருக்குர்ஆன் படம்பிடித்துக் காட்டுகின்றது.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 16:70

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.

அல்குர்ஆன் 22:5

இப்போது அவன் கழிக்கின்ற மலம், கூட இருப்பவர்களின் குடலையே புரட்டுகின்றது; குமட்டலை வரவழைக்கின்றது. கொண்ட மனைவி கூட இதைச் சகித்துக் கொள்வாளா என்பது கேள்விக்குறி!

பெற்ற பிள்ளைகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வார்க்கப்பட்டவர்களாக இருந்தால் முகம் சுளிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பாடம் பயின்றவர்கள்; பக்குவம் பெற்றவர்கள்.

மற்றவர்களாக இருப்பின் சதாவும், சனியனே! தொலைந்து போ! என்று திட்டித் தீர்ப்பார்கள்; சபித்துத் தள்ளுவார்கள். படுக்கையில் கிடக்கும் பெற்றோரைப் பாரமாக நினைப்பார்கள். பளுவாகவும் நசுக்க முடியாத ஒரு புழுவாகவும் கருதுவார்கள்.

இந்நிலையை அடைந்து தங்களுக்கு ஒரு சுமையாக ஆகி விடக் கூடாது என்பதற்காகச் சிலர் முன்னரே அடித்துத் துரத்தி விடுகின்றனர். இப்படித் துரத்தப்பட்டவர்கள் கிறித்தவ மரணத்தைத் தழுவுகின்றனர்.

காரணம் அவர்கள் தான் இதுபோன்ற அரவணைப்பு நிறுவனங்களை, முதியோர் இல்லங்களை நடத்துகின்றனர். இந்த நிலையை விட்டும் முஸ்லிம்களைக் காப்பதற்காக அவர்கள் ஈமானிய, ஏகத்துவ மரணத்தைத் தழுவ வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத், ஆதரவற்றோர் மறுவாழ்வு மையத்தைத் துவங்கியிருக்கின்றது.

இப்படி ஒரு முதியோர் இல்லம் முஸ்லிம்களிடமும் வந்து விட்டதா? என்று விமர்சிக்கின்ற மூடச் சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஈமானிய மரணத்தின் பலனை அறியாத இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

இப்படி ஒரு வயோதிக, தள்ளாத பருவம், நம்மைப் பார்த்து முகம் சுளிக்கின்ற, நம்மைப் பாரமாகவும் தூரமாகவும் கருதுகின்ற ஓர் இழிநிலை, ஈன வாழ்க்கை நமக்குத் தேவையா?

அதற்கென ஒரு தீர்வு, இதோ இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் இறைத் தூதர் நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு நிலையை நாம் அடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இதர நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது தான் அந்த வழி!

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி

(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)

இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ

நூல்: புகாரி 2822

இந்த ஹதீஸில் வரும், ஒரு ஆசிரியர் மாணவருக்குக் கற்றுக் கொடுப்பது போல் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாலையில் ஓதும் துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி

பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம் 4901

காலையில் ஓதும் துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பஃதஹூ, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரிமா பஃதஹூ, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி

பொருள்: நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்தப் பகலின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தப் பகலின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம் 4901

எல்லா நேரங்களிலும் கேட்க வேண்டிய துஆ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்களிடம், “உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம்

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புஹ்லி வல் ஜுப்னி வ ளலயித்தைனி வ கலப(த்)திர் ரிஜாலி

(பொருள்: இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)

என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5425

—————————————————————————————————————————————————————-

பிற மேடைகளில் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

சென்ற இதழின் தொடர்ச்சி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்கள் பிற அமைப்பினரோடு இணைந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பற்றிக் கடந்த இதழில் அறிந்தோம்.

அதே போல், பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.

கொள்கைக் குழப்பம்

அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள். இப்படிப்பட்ட தியாகிகளின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் தான் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் சொற்பொழிவாற்றுவது!

எந்த அளவிற்கென்றால் மத்ஹபைப் பின்பற்றக்கூடாது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் இது போன்ற பலதரப்பட்ட கொள்கையுடையோரால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அந்த மேடையில் ஓர் அறிஞர், “மத்ஹபைப் பின்பற்றக்கூடாது; தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று முழக்கமிட மற்றொரு அறிஞர், “ஸஹாபாக்களை மார்க்கத்தின் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்’ எனவும் பிரச்சாரம் செய்வார். இந்த இரண்டு உரையையும் பார்க்கும் மக்கள், எது  சரியான கொள்கை என்பதைக் கண்டறியாமல் குழப்பத்திற்கு ஆளாகிவிடும் சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டும் உள்ளது.

கடந்த காலங்களில் நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிவாசல்களில் ஒரு வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் ஒரு வாரம் ஜாக் அமைப்பு சார்பிலும் ஜுமுஆ பிரசங்கம் நடைபெற்று வந்தது. அப்போது ரமலான், ஹஜ் பெருநாட்களின் போது பிறை விஷயமாக நம் ஜமாஅத் சார்பில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு மாற்றமாக ஜாக் தரப்பில் ஒரு நிலைப்பாட்டில் அறிவிப்பார்கள். இருவரும் ஒரே பள்ளியில் வாரம் விட்டு வாரம் ஜுமுஆ பிரசங்கம் செய்வதால் ஒருவரையொருவர் சாடிப் பேசாமல் தங்களது நிலைப்பாட்டை மட்டும் அறிவிக்கும் நிலைக்குப் தள்ளப்பட்டார்கள்.

இதனால் பார்க்கும் மக்கள் குழம்பிப் போய், “பெருநாள் திங்களா? அல்லது செவ்வாயா?’ எனக் கேட்க அதற்கு அந்தச் சபையில் தர்க்க ரீதியாக பதில் சொல்லாமல் ஜாக் சார்பில் திங்கள்கிழமை பெருநாள் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செவ்வாய்கிழமை பெருநாள் எனவும் கூறி இதனால் மக்கள் குழப்பிப் போய் தங்களின் இபாதத்தே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நம் ஜமாஅத் சார்பில் மார்க்க ரீதியாகப் பதில் கொடுக்கத் தெரிந்தாலும் பிற மேடைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்கிற குறுகிய சிந்தனையே இந்த அவலத்தை ஏற்படுத்திவிட்டது.

நம்பிக்கை துரோகம்

பலதரப்பட்ட கொள்கையுடையோர் தங்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் சரிசெய்து கொள்ளாமல் சமரசத்துடனும் சுயநலத்துடனும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் இந்த மக்களின் கொள்கையில் தான் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் இன்னொரு பக்கம் இந்த அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து அவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளிவிடுகின்றனர்.

தவ்ஹீத் கொள்கையை ஏற்ற மக்கள் வெறுமனே சத்தியவாதிகளின் பிரச்சாரத்தை மட்டுமே பார்த்து இந்த கொள்கையை ஏற்பது கிடையாது. மாறாக இந்தப் பிரச்சாரகர்களின் ஒழுக்கம், நேர்மை, நாணயம் ஆகியவற்றையும் பார்த்துத் தான் இந்தக் கொள்கையை ஏற்கின்றனர். இதுவே இயல்பு.

இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக

அல்குர்ஆன் 10:16

நான் சத்தியத் தூதர், என்னைப் பின்பற்றுங்கள் எனக் கூறாமல்  உங்களுக்கு முன்னால் பல ஆண்டுகள் நான் வாழ்ந்துள்ளேன்; என் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பார்த்து இந்தக் கொள்கைக்கு வாருங்கள். என்னை நம்புங்கள் என நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின்பால் அழைக்கும் போது, தனது நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

அதைப் போன்று தான் மக்களும் சத்தியப் பிரச்சாரம் செய்வோரை நன்மையை ஏவுபவராகவும், தீமையைத் தடுப்பவராகவும் மட்டும் பார்க்காமல் அவர் ஒழுக்கமுள்ளவராகவும் பார்க்கிறார்கள். ஒருவரை நாம் ஒழுக்க மாண்பு மிக்கவராகப் பார்க்கும் போது அவர் யாருடன் பழகினாலும், யாருடன் இணைந்து மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தினாலும் அவர்களையும் கண்ணியமானவராகவே கருதுவார்கள்.

அதற்குக் காரணம், நாம் யாரை ஒழுக்கமுள்ளவர் என்று நினைக்கிறோமோ அவர்கள் கழிசடைகளுடன் சகவாசம் வைக்க மாட்டார்கள்; என்றென்றும் ஒழுக்கமுடையோருன் மட்டுமே சகவாசம் வைப்பார்கள் என்று அவர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்தியப் பிரச்சாரகர்கள் நடத்தை கெட்டோரையும் தவறான கொள்கையுடையோரையும் கண்டால் கடிந்து பேசுவார்களே தவிர அவர்களுடன் பல்லிளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கும்.

உதாரணமாக, ஒழுக்கக் கேடு மற்றும் பண மோசடியின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பாக்கரைப் பற்றி நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். அவர் கடந்த காலங்களில் அடிக்கடி திண்டுக்கல் சென்றார். ஏன் சென்றார்? எதற்காக சென்றார்? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று அவரால் திண்டுக்கல்லில் ஒரு குடும்பம் நாசமாகி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான காரணத்தால், தனக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட கணவர் கண்ணீர் மல்கக் கொடுக்கிறார்.

“என்னுடைய மணைவி பாக்கரின் உடன் பிறந்த அக்காள் மகள் என்ற உறவைச் சொல்லி அடிக்கடி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இல்லாத போது பல முறை வீட்டிற்கு வந்திருக்கிறார்; தங்கியுமிருக்கிறார். மிக நெருங்கிய உறவினர் என்று விட்டு விட்டேன். ஆனால் பின்னால் தான் தெரிந்தது, அவருக்கும் எனது மனைவிக்கும் எந்தவிதச் சொந்தமும் இல்லை என்பது” என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி வீடியோவில் பேட்டியாகக் கொடுத்து, அது ஒரு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாக்கர் இறையச்சத்தோடு (?) கத்தி, ஆக்ரோஷமாகப் பேசுபவர், இந்த இழிசெயலைச் செய்து விட்டார் என்ற மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாக்கப்பட்டு, தனது மனைவியை தலாக் விட்டுவிட்டார்.

இப்போது கவனியுங்கள்! இப்படிப்பட்ட கழிசடைகளை வன்மையாகக் கண்டித்து ஒரு புறம் பேசிவிட்டு, மறுபுறம் அவருடன் ஒரே மேடையில் பேசி அந்தக் கழிசடைகளுக்கு நற்சான்று கொடுத்தால் அது, நம் மீது நல்லபிப்ராயம் கொண்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

சிதிலடையும் சிந்தனைத் திறன்

எதைச் சொன்னாலும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போல் தலையாட்டிக்  கொண்டிருந்த நாம் இன்று அல்லாஹ்வின் கிருபையால் குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு சிந்தித்து செயல்படுவதையே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர் ஆன் 25:73.

அல்லாஹ்வின் வசனங்களைச் செவியேற்போர் அதைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்ற இந்த இறைவசனத்தை நம் ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தி மக்களை சிந்திக்கத் தூண்டுகிறோம்.

எந்த அளவிற்கென்றால் கப்ர் வழிபாட்டை வலியுறுத்தி எந்த ஆலிம்சாவாவது உரை நிகழ்த்திவிட்டால் அதற்கு நாம் தனி மேடை போட்டு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதிலளிப்பதுடன் அந்த ஆலிம்சாவுக்கு சில கேள்விக் கணைகளைத் தொடுப்போம். அதற்கு அந்த ஆலிம் (?) பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய்விடுவார். அதைப் பார்க்கும் மக்கள் யாரிடம் சத்தியம் உள்ளது என சிந்தித்து உணர்வார்கள்.

ஆனால் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் ஒருவரது தவறை மற்றொருவர் கண்டிக்க முடியாமல் போய்விடும். இதனால் யாருடைய கருத்துக்கள் சரியானவை எனக் கண்டுபிடிக்க முடியாமல் போய் மக்கள் சிந்திக்க மறந்து விடுவார்கள். இதனால் மீண்டும் வந்த வழியே திரும்பிப் போகும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எனவே பலதரப்பட்ட கொள்கையுடையவர்களின் சமரசப் பேச்சைக் கேட்டு செல்லாக் காசாகிப் போய்விடாமல் குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டும் கொள்கையாகக் கொண்டு, நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் தனித்தன்மையோடு செய்யப்படும் பிரச்சாரத்தில் பங்கேற்று ஈருலகத்திலும் வெற்றிபெற வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரிவானாக.

—————————————————————————————————————————————————————-

கேக் வெட்டிய ஜாக் மவ்லவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பிற மேடைகளில் ஏறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. நாம் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்களை வைத்துத் தான்.

(இது தொடர்பாக நமது மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ஆர். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் விரிவான விளக்கங்களை “பிற மேடைகளில் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு” என்ற தலைப்பில் அளித்திருக்கின்றார்.)

நமது இந்த நிலைப்பாட்டை நமக்கு எதிரான அமைப்புகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களது விமர்சனம் தவறானது; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையே நியாயமானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:

நாகர்கோயில் அருகில் பின்னந்தோடு என்ற ஊரில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவில் ஜாக் அமைப்பின் பேச்சாளரும், அந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிவாசலின் இமாமுமான யாஸீன் இம்தாதி போய் கலந்து கொள்கின்றார்.

ஒருவேளை, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா (மீலாது விழா) தான் பித்அத்; ஈஸா நபியின் பிறந்த தின விழா (கிறிஸ்துமஸ்) கொண்டாடுவது சுன்னத் என்று எண்ணுகிறார்கள் போலும்.

இதில் போய் கலந்து கொண்டு, கேக் வெட்டி, பிறந்த தின விழாவைக் கொண்டாடி ஜாக்கின் கொள்கைப் பிடிப்பை நிலைநாட்டியுள்ளார்.

இனி நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களிலும் சோறாக்கி, ஜோராக அங்கேயும் இந்தக் கொள்கைப் பிடிப்பைப் பறைசாற்றினால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூற்கள்: அஹ்மத், பஸ்ஸார்

இந்த மவ்லவி ஏதோ அறியாமல் கலந்து கொண்டிருக்கிறார் அல்லது மயக்கத்தில் போய் கலந்து கொண்டு விட்டார் என்று யாரும் கடுகளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

ஏனெனில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, போகக் கூடாது என்று இருக்கிறதா? என்று ஜாக்கிற்கே உரிய தனி பாணியில் கேட்டிருக்கின்றார்.

பெண் வீட்டு விருந்து கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது, பெண் வீட்டு விருந்துக்குத் தடை இருக்கின்றதா? என்று ஆணித்தரமான(?) அசத்தலான (?) கேள்வியை ஜாக் கேட்கின்றது. அதே அடிப்படையில் தான் இந்தக் கேள்வியும் அமைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் நாளை இவர்கள் மீலாது விழாவும் கொண்டாடுவார்கள். கேட்டால் இதே பதிலைத் தான் தருவார்கள். போகிற போக்கைப் பார்த்தால் குராபிகளை மிஞ்சி விடுவார்கள் போல் தெரிகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்

குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும். ஒரு வணக்கம் இஸ்லாத்தில் உள்ளதாக அங்கீகரிப்பதாக இருந்தாலும், அல்லது அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்துவதாக இருந்தாலும் அதை இந்த இரண்டின் மூலமே தீர்மானிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் உயிர் மூச்சாக, வழிகாட்டு நெறியாக, வாழ்வியல் வழிமுறையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டியது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டைத் தான். இதுவே நம்மை சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாகும்.

குர்ஆன், ஹதீஸ் எனும் பாதையில் பயணிக்க வேண்டிய முஸ்லிம்கள் புதிய பாதைகள் பலவற்றை ஏற்படுத்திக் கொண்டு அவ்வழிகளில் பயணிக்கின்றார்கள். அவர்கள் புதிதாக உருவாக்கிய அப்பாதைகள் தங்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்பவை என்பதை ஏனோ உணராமல் உள்ளனர். முஸ்லிம்களை நரகை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகளில் பெரும் பங்களிப்பாற்றுவது மத்ஹபு எனும் (ú)பாதையாகும்.

முஸ்லிம்கள் வணக்க வழிபாடு முறைகளில் பல பிரிவுகளாகப் பிளவுண்டு கிடப்பதற்கும், இஸ்லாத்தின் அடிப்படைத் தூண் என்று போற்றப்படுகின்ற தொழுகை முறையிலும் சில முஸ்லிம்கள் வேறுபட்டிருப்பதற்குக் காரணமும் இந்த மத்ஹபுகளே!

கந்தூரி விழா, சமாதி வழிபாடு, யானை ஊர்வலம், மவ்லிது, மீலாது விழா போன்ற வழிகேடுகளை அரங்கேற்றி அதை ஆதரிப்போரும் மத்ஹபைப் பின்பற்றுவோராகவே இருக்கின்றனர். இப்படியாக மத்ஹபுகள் செய்த சாதனை(?)களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

நபிவழிகளை பிரதிபலிப்பவையாக இந்த மத்ஹபுகள் இருந்திருக்குமானால் பல பித்அத்கள் தோன்றியிருக்காது. எண்ணற்ற சடங்குகள் முளைத்திருக்காது. மத்ஹபுகள் நபிவழிக்கு முரண்படுவதாலே முஸ்லிம்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றுகிறது.

மத்ஹபுகள் கூடாது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுத்து மற்றும் உரைகள் மூலமாக, பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதன் பலனாக பல மக்களை இந்த வழிகேட்டிலிருந்து மீட்டெடுத்து ஏகத்துவக் கொள்கையின் பக்கம் ஈர்த்திருக்கின்றோம்.

இந்த மத்ஹபு இஸ்லாத்திற்கு விரோதமானது, நபிவழிக்கு முரணானது என்பதை மேலும் மக்களின் உள்ளங்களில் ஆழப்பதியச் செய்வதற்காக இத்தகவல்களை இங்கே தருகின்றோம்.

மத்ஹப் என்றால் என்ன?

மத்ஹபுகள் நபிவழியுடன் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் காணும் முன் மத்ஹபு என்றால் என்ன? என்பதன் சிறு விளக்கத்தை அறிந்து கொள்வோம்.

மத்ஹப் என்ற அரபு பதத்துக்கு வழிமுறை, செல்லுமிடம் என்று பொருளாகும். கழிவறை என்ற பொருளும் உண்டு. இந்த அர்த்தத்தில் தான் அபூதாவூதில் முதல் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபியவர்கள் மத்ஹபிற்கு (கழிவறை) செல்ல விரும்பினால் தூரமாகச் செல்வார்கள். (நூல்: அபூதாவூத் 1)

மத்ஹப் என்பது பொதுவாக அனைத்து வழிமுறைகளையும் குறிக்கும் என்றாலும் நடைமுறையில் இமாம்கள் மார்க்க ரீதியாகச் சென்ற வழிமுறையை குறிக்கப் பயன்படுத்துகின்றனர். அதாவது குர்ஆன், ஹதீஸை இமாம்கள் எவ்வாறு புரிந்து கொண்டு தங்கள் நிலைபாட்டை எடுத்தார்களோ, அதன் படி செயல்பட்டார்களோ அதைப் பிசகாமல் பின்பற்றுவது மத்ஹபு எனப்படுகின்றது.

ஷாஃபி இமாம் மார்க்கத்தை எவ்வாறு புரிந்து செயல்பட்டாரோ அவ்வழியைப் பின்பற்றுபவர்கள் ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்கிறோம். இமாம் அபூஹனிஃபாவின் வழிமுறையைப் பின்பற்றுபவர்கள் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்கிறோம்.

மத்ஹபுகள் தோன்றக் காரணம்

ஒருவர் மார்க்க ரீதியாக ஒரு கருத்தைக் கூறுகிறார் எனில் அதைக் கண்மூடித்தனமாக ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாகாது. மாறாகக் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றதா என்பதை உரசிப்பார்த்து, ஒப்புநோக்கியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரிடத்திலும் சில, பல தவறுகள் ஏற்படவே செய்யும். மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவர்களும் தவறுகளை இழைத்திருப்பார்கள். இதை உணர்ந்து அவர்களின் கருத்தை குர்ஆன், நபிவழியுடன் ஒப்புநோக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த ஆய்வுக் கண்ணோட்டமின்றி இவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்ற பார்வையே மத்ஹபுகள் தோன்றக் காரணமாகி விட்டது.

மத்ஹபிற்கும் இமாம்களுக்கும் சம்பந்தமில்லை

மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கண்ணோட்டம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும் என்பதே இமாம்களின் நிலைப்பாடாக, எண்ணமாக, கருத்தாக இருந்தது. எந்த இமாமும் தன்னைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறவில்லை. மாறாக குர்ஆன், சுன்னாவைப் பின்பற்ற வேண்டும், தங்களை விட அவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

ஹதீஸ் ஸஹீஹ் ஆக இருந்தால் அதுவே எனது மத்ஹபு வழிமுறையாகும் என இமாம் அபூஹனிஃபா கூறினார். மேலும் அவர் “மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் எனது புத்தகத்திலிருந்து ஃபத்வா அளிப்பது தகாது. நான் எங்கிருந்து அக்கருத்தை கூறினேன் என்பதை அவர் அறியும் வரை” (ஃபத்வா வழங்க அனுமதியில்லை.) என்று கூறினார்.

நூல்: உசூலுத்தீன் இன்தல் இமாமி அபூஹனிஃபா

பாகம் 1, பக்கம் 6

“நீங்கள் கூறிய கருத்து குர்ஆனுக்கு முரண்பட்டால் (என்ன செய்வது)?” என இமாம் அபூஹனிஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அல்லாஹ்வின் வேதத்திற்காக எனது சொல்லை விட்டுவிடுங்கள்” எனக்கூறினார். “அல்லாஹ்வின் தூதருடைய சொல்லிற்கு உங்கள் கருத்து முரண்பட்டால்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “அல்லாஹ்வின் தூதரின் சொல்லிற்காக எனது கருத்தை விட்டுவிடுங்கள்” எனக்கூறினார்.

நூல்: தய்ஸீருல் அஜீர்

பாகம் 1, பக்கம் 487

உதாரணத்திற்கு இமாம் அபூஹனிஃபாவின் கருத்தை இங்கு பதிவு செய்துள்ளோம். இது போன்றே இமாம் ஷாஃபி, மாலிக், அஹ்மத் போன்ற இமாம்களும் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் அவர்களின் வார்த்தைகளாக அவர்களின் நூல்களிலேயே இடம்பெற்றுள்ளன.

இதனால் தான் மத்ஹபுகளைக் கண்டித்து பேசும் நாம் ஒரு போதும் இமாம்களைக் கண்டித்துப் பேசுவதில்லை. அவர்களை மதிக்கவே செய்கின்றோம். அவர்களின் பெயரால் மத்ஹபுகளை உருவாக்கியதையும், அது குர்ஆன் நபிவழிக்கு முரணாக இருந்தும் அதைப் பின்பற்றுவதையுமே கண்டிக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இந்த ஜமாஅத் இச்செயலைக் கண்டிக்கவே செய்யும்.

எனவே மக்கள் உருவாக்கியிருக்கும் மத்ஹபுகளுக்கும் அவ்விமாம்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அதனை விட்டும் அவர்கள் விலகியவர்கள்.

இமாம் அபூஹனிஃபாவின் மேற்கண்ட கருத்தைக் கவனிக்கும் போது குர்ஆன், நபிவழிக்கு முரணாக அவரது கருத்து இருந்தால் அக்கருத்தை விடுத்து, தூக்கியெறிந்து, குர்ஆன் நபிவழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே இமாம் அபூஹனிஃபாவின் நிலைப்பாடாக இருந்தது என்பதை அறியலாம்.

எனவே இமாம் அபூஹனிஃபாவின் கருத்து குர்ஆன், சுன்னாவிற்கு முரண்பட்டால் அனைவரும், குறிப்பாக அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் ஹனபி மத்ஹபினர் தயங்காமல் அக்கருத்தைத் தூக்கியெறிய வேண்டும். அது தான் அவர்கள் அந்த இமாமுக்குச் செய்கின்ற மரியாதை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி, இமாம் அபூஹனிஃபாவின் கருத்துக்கள் எவ்விதத்தில் நபிவழியுடன் நேரிடையாக மோதுகின்றது, முரண்படுகின்றது என்பதைக் காண்போம். இதை வேறு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், ஹனபி மத்ஹபினர் தூக்கியெறிய வேண்டிய, மார்க்க ரீதியாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்களை காண்போம்.

—————————————————————————————————————————————————————-

கை கழுவுதலை கை கழுவாதீர்

மேற்கு வங்க மாநிலத்தில், பி.சி.ராய் மருத்துவமனையில் இறந்த 18 குழந்தைகள் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 36 குழந்தைகள் இறந்தனர். நவம்பர் மாதத்திலும் கூட இதுவரை அந்த மாநிலத்தில் மால்டா மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றாலும், இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் சிறார் மரணங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. காரணம், பிகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் இதுவரை 82 குழந்தைகள் இறந்துவிட்டனர். புத்தகயா பகுதியில் தான் இந்த மூளைக் காய்ச்சல் மிக அதிகமான குழந்தைகளைத் தாக்கியுள்ளது. 2009-ம் ஆண்டில் இதே பகுதியில் 42 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளனர்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் ஓர் ஊரில் அல்லது ஒரு மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் நிகழும் போது தான் இத்தகைய மரணங்கள் மக்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. மேற்கு வங்கம், பிகார் மட்டுமன்றி இத்தகைய குழந்தைச் சாவுகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே நடந்துகொண்டிருக்கின்றன.

குழந்தை மரணங்களுக்கு மிக முக்கிய காரணம், குழந்தை மருத்துவப் பிரிவுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. நோய்த் தடுப்பூசிகள் முறையாகப் போடப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் அலட்சியம் ஆகியவை தான்.

எந்த மாநிலம் அல்லது எந்த அரசின் ஆட்சி என்ற போதிலும், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவர் பணியிடங்களும் பிரிவுகளும் மிகக் குறைவு தான். பொது மருத்துவர் தான் குழந்தைகளின் நோய்க்கும் சிகிச்சை அளிப்பவராக இருக்கிறார். இதையும் மீறி, அந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு இருந்து, அதற்கு மருத்துவரும் இருப்பாரேயானால், அவருக்கு ஊருக்குள் தனியாக கிளினிக் இருக்கும். அரசு மருத்துவமனைக்கு அவரது சேவை நேரம் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தனை சிக்கல்களையும் மீறித் தான் இந்தியாவில் குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்து வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை 2011-ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 2008-ம் ஆண்டில் 5 வயதுக்கு உள்பட்ட 3.71 லட்சம் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளனர். தற்போது மேற்கு வங்கத்தில் இறந்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மரணத்துக்கும் அதிகளவு காரணம் நிமோனியா காய்ச்சல் தான்.

யுனிசெப் அறிக்கையின்படி, 2005-ம் ஆண்டில் இந்தியாவில் இறந்த, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 லட்சம்! இது உலகம் முழுவதிலும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 20 விழுக்காடு!

இந்தியாவில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் பெற்றோர் 69 விழுக்காடு தான். மற்ற 31 விழுக்காட்டினர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர். ஒருவேளை, குழந்தைகளுக்கு அவரவர் தெய்வக் குறியீடுகளைப் போட்டு காப்பாற்றும் பொறுப்பைப் படைத்தவனிடமே விட்டுவிடுகிறார்கள் போலும். மருத்துவமனை அல்லது கிளினிக் வரும் 69 விழுக்காடு குழந்தைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெறும் குழந்தைகள் 13 விழுக்காடு தான்!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நர்சரி பள்ளிகள் மற்றும் விளையாடும் இடங்களில் தான் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, இக்குழந்தைகள் தங்கள் உணவை உண்ணும் முன்பாக கைகளைக் கழுவிவிட்டு உண்ண வேண்டும் என்கின்ற சிறிய நல்வழக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறது யுனிசெப். இதற்காக பல கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி, மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். உலக கைகழுவும் நாள் என்று அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கைகளை சோப்புப் போட்டு எப்படி கழுவுவது என்று சொல்லித் தரப்படுகிறது.

ஆனால், இந்தத் திட்டத்தில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சோப்பும் துடைத்துக் கொள்ள ஒரு துண்டும் கூடக் கொடுப்பதில்லை. ஆனால், நிதி மட்டும் முழுமையாகச் செலவாகிவிடுகிறது. தண்ணீரில் கை கழுவினாலே நிதி செலவாகிவிடுகிறதே, அது எப்படி என்று யாரும் கேட்பதில்லை. குழந்தைகளுக்கும் கேட்கத் தெரியாது.

நிமோனியா அல்லது மூளைக் காய்ச்சல் போன்ற எந்தவொரு நோய்த் தொற்றுக்கும் அடிப்படைக் காரணம், நம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பது தான். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்குக் குறைந்தது 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதைவிடச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை எந்தவொரு தடுப்பூசியாலும் தடுப்பு மருந்தாலும் அளித்துவிட முடியாது என்கிறது யுனிசெப் நிறுவனம்.

ஆனால், இந்தியாவில் குழந்தைக்குத் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்போர் 46 விழுக்காடு தான் என்று யுனிசெப் சொல்கிறது. இந்தியாவில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமும் கொண்டாடப்படுகிறது. இதற்கும் அரசு நிறைய பணம் செலவிடுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் அளவுக்கு ஆரோக்கியமான தாய்மார்கள் இல்லாமல் இருப்பது கூட அதற்குக் காரணம் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?

பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து, குழந்தைகளுக்குச் சுகாதாரமான பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் 90 விழுக்காடு காய்ச்சல்களைத் தடுத்துவிட முடியும். நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைக் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நிறுவவும் பராமரிக்கவும் மட்டுமே செலவிட்டாலே போதும், நாளைய தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாகவும், குழந்தைச் சாவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படவும்கூடுமே, இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா தெரிய வேண்டும்?

“என்ன காரணம்?” என்ற தலைப்பில் 16-11-2011 அன்று தினமணி நாளிதழில் வெளியான தலையங்கத்தை மேலே பார்த்தீர்கள்.

அடுத்து, ஹிந்து ஆங்கில நாளேட்டில் 14-10-2011 அன்று Don’t wash your hands off hand washing என்ற தலைப்பில் வெளியான செய்தியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

கை கழுவுங்கள் என்று அடிக்கடி சொல்லும் வார்த்தையைக் கேட்டு கொஞ்சம் கடுப்புடன் தான் குழந்தைப் பருவத்தில் கைகளைக் கழுவியெடுப்பீர்கள். ஆனால் கை கழுவுதல் என்பது செலவில்லாத மிகப் பயனுள்ள நோய் தடுப்பு வழிமுறையாகும்.

குழந்தைகள் தான் முதன்முதலில் வயிற்றுப் போக்கு, சுவாசக் குழாய் தொற்று நோய் ஆகியவற்றிற்கு அதிகம் பலியாகி விடுகின்றனர். குழந்தைகளின் மரணத்திற்கும் இது தான் முக்கியக் காரணம். அவர்களின் கைகளில் வைரஸ், தொற்று நோய் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கைகளைக் கழுவாததால் அவர்களிடம் நோய்கள் எளிதில் தொற்றி விடுகின்றன. அதனால் அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவ வேண்டும். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் கொண்டு வருவதற்காக யூனிசெப் நிறுவனம் அக்டோபர் 15ஆம் தேதியை உலக கைகழுவும் தினமாக அனுஷ்டிக்கின்றது. அந்நாளில் இந்தியாவில் பள்ளிக்கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கு வெந்நீர், சோப் வைத்து கழுவும் பயிற்சியை அளிக்கின்றது.

பள்ளிக்கூடங்களில் வாராந்திர சுகாதார நிகழ்ச்சிகளை மாநில நல்வாழ்வுத் துறை நடத்துகின்றது என்று அதன் துணை இயக்குனர் வி. வீரபாண்டியன் தெரிவிக்கின்றார். இந்நிகழ்ச்சியில் “கை கழுவுதல்’ தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் இதோ:

பள்ளி மாணவர்களுக்குக் கை கழுவுகின்ற நுட்பம் இந்நிகழ்ச்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டது. வயிற்றுப் போக்கு, மூச்சுக் குழாய் (நிமோனியா), காற்றினால் பரவுகின்ற பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு அவசியம் என்பதும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

உள்ளங்கைகள், நக இடுக்குகள் ஆகியன எல்லாம் நன்கு கவனம் செலுத்தப்பட்டு வெந்நீர், சோப்பு வைத்துக் கழுவப்பட வேண்டும்.

பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது கதவுகளின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

“தாய்மார்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியர்கள், குழந்தைகளிடம் கிருமிகள், வைரஸ்கள் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய ஒரே வழிமுறை கைகளைக் கழுவுவது தான். இது நீரினால் ஏற்படும் தொற்று நோய்களைப் பாதியளவுக்குத் தடுத்து விடும்” என்று குழந்தை நல மருத்துவ சங்கத்தின் செயலாளர் தெரிவிக்கின்றார். இது வயிற்றுப் போக்கு, டைபாயிட், வயிற்றுப் புழுக்கள் உள்ளிட்ட நோய்கள் வராமல் காக்கின்றன.

பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய அணைச் சீலைகள் (டயாப்பர்) போன்றவற்றை மாற்றிய பிறகு கைகளை கழுவிக் கொள்ள வேண்டும்.

கைகளைக் கழுவும் பழக்கம் பெண்களின் சுகாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக மாதவிலக்கு நேரங்களில் கறை பட்ட துணிகளைக் களையும் போதும், அடுத்த புதிய மாற்றுத் துணி அணியும் போதும் கண்டிப்பாகக் கைகளைக் கழுவியாக வேண்டும். காரணம், இது இன உறுப்புகளில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் என்று மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது Don’t wash your hands off hand washing என்ற தலைப்பில் ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியாகும்.

மனிதன் தன் வாழ்க்கையில் தூய்மை, துப்புரவை உச்சக்கட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டும்; குறிப்பாகக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதை தினமணி தலையங்கத்திலிருந்தும், ஹிந்து நாளேட்டின் செய்தியிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

தினமணி தலையங்கம் குறிப்பிடுகின்ற இரண்டு நோய்களில் ஒன்று மூளைக் காய்ச்சல்; மற்றொன்று நிமோனியா!

நிமோனியாவிற்குத் தீர்வைச் சொல்கின்ற இந்தக் கட்டுரை மூளைக் காய்ச்சலுக்குத் தீர்வைச் சொல்லவில்லை. அது நிமோனியாவிற்குச் சொல்கின்ற தீர்வை இஸ்லாம் அன்றே சொல்லி விட்டது.

மூளைக் காய்ச்சலுக்கும் இஸ்லாம் தீர்வைச் சொல்கின்றது. இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அதாவது மனிதனைப் படைத்த அதே சக்தி தான் அவனுக்குரிய வாழ்க்கை நெறியை, மார்க்கத்தையும் படைத்திருக்கின்றது. அதனால் மனிதனுக்கு எது நன்மை பயக்கும்? எது தீமை விளைவிக்கும் என்பது அந்தச் சக்திக்கு, அதாவது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். அதனால் அவன் அமைத்த அந்த நெறிக்குத் தக்க வாழ்கின்ற போது மனிதன், தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, துப்புரவாக வைத்துக் கொள்கின்றான்.

இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் மனிதனையும் சுத்தமாக இருக்கச் சொல்கின்றது; அவன் வாழ்கின்ற சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைக்கச் சொல்கின்றது.

நிமோனியாவும் தாய்ப்பாலும்

நிமோனியாவுக்குப் பரிகாரம் தாய்ப்பால் என்று தினமணி தலையங்கமே தெரிவிக்கின்றது. உலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; அதுவும் இரண்டாண்டு காலம் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றது.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

அல்குர்ஆன் 31.:14

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் 2:233

வேதம் என்று சொன்னால் தத்துவம், துறவு, நடைமுறைக்குச் சாத்தியமற்ற சமாச்சாரங்கள் அடங்கியதாகத் தான் இருக்கும். ஆனால் திருக்குர்ஆன் நடைமுறைக்கு எளிதான வாழ்க்கை நெறியாகும். இயற்கைக்கு ஒத்த நெறியாகும். அதனால் இத்தகைய இயற்கை வழியை இயல்பான வழியைக் காட்டுகின்றது.

இன்று மக்கள் மனிதப் பால், தாய்ப்பால் கொடுப்பதற்குப் பதிலாக மாட்டுப் பால், மாவுப் பால் கொடுக்கின்றனர். இது குழந்தையின் குடலுக்கு ஒத்துவருவதில்லை. மாறாக ஒவ்வாமையையும் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றது.

ஒரு குழந்தை பிறந்ததும் ஓர் அரை மணி நேரம் அது குடிக்கின்ற தாய்ப்பால் தான் அதன் வாழ்நாள் முழுவதற்கும், ஆயுளின் இறுதி வரைக்கும் தாக்குப் பிடிக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தியாக அமைந்து விடுகின்றது. அத்தகைய இயற்கை அருமருந்தாக தாய்ப்பால் அமைந்திருக்கின்றது. அதனால் தான் அது நிமோனியாவை விட்டும் காக்கின்ற காவல் அரணாக நிற்கின்றது.

இதையெல்லாம் தெரிந்த இறைவன், மனிதப் பாலைக் குடிக்க, கொடுக்கச் சொல்கிறான். பெண்களுக்கு இயற்கையிலேயே நோய் அல்லது பலவீனம் போன்ற இடையூறுகள் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் போது கூட மாற்றுக்காக மாவுப் பாலையோ, மாட்டுப் பாலையோ கொடுக்கச் சொல்லாமல் மனிதப்பாலையே கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது.

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும்.

அல்குர்ஆன் 65:6

இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கும் வெகுவாகக் குறைந்து வருகின்றது. பெற்ற தாயே தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முன்வருவதில்லை. தங்கள் அழகு கெட்டு விடும் என்று கருதி தாய்ப்பால் கொடுக்காமல், தங்கள் குழந்தைக்குத் தாங்களே எதிரிகளாக ஆகி விடுகின்றனர். இதில் பால்குடித் தாய் மூலம் குழந்தைக்குப் பாலூட்டுவதெல்லாம் கற்பனையே செய்ய முடியாத நிலை.

மார்க்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாகத் திகழும் தவ்ஹீத் ஜமாஅத் தான் இதற்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகளுக்கு பால்குடித் தாய் மூலம் பால் கொடுக்கும் வழிமுறையை உயிர்ப்பிக்க வேண்டும்.

அண்மையில் மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரப் பணி செய்து கொண்டிருந்த ஆலிமா ஹஜ் பாத்திமா என்ற கொள்கைச் சகோதரி, குழந்தை பெற்றெடுத்து 14 நாட்களில் மூளையில் இரத்தக் கட்டு ஏற்பட்டு இறந்து விட்டார். பிறந்து பதினான்கு நாட்களில் தாயை இழந்த அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கு நமது ஜமாஅத்தில் யாரேனும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, நகரத் தலைவர் ரோஷன் பொறுப்பேற்றுக் கொண்டு தனது மனைவி மூலம் பால் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

பன்றியும் மூளைக் காய்ச்சலும்

குழந்தைகளின் மூளைக் காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமே பன்றிகள் தான். பன்றிகளில் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சுகின்ற கொசு, குழந்தையை வந்து கடிக்கும் போது ஏற்படுவது தான் மூளைக் காய்ச்சல் என்பது அறிவியல் உலகம் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.

கிறித்தவ மதத்தில் பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டதாகும். இன்னும் சொல்லப் போனால் பன்றி இறைச்சி சாப்பிடுவதைப் புனிதம் என்று கருதும் கிறித்தவர்களும் இருக்கிறார்கள். இந்து மதத்தினரும் பன்றி இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்லாம் அதைச் சாப்பிடுவதற்குத் தடை செய்வதுடன் அதை விற்பதற்கும் தடை செய்கின்றது.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் பன்றிப் பண்ணைகள் வளர்ப்பதற்கும் ஊக்குவிக்கின்றனர். என்ன செய்வது? மது, வட்டி போன்ற சமூகக் கேடுகளை விளைவிக்கும் தீமைகள் இவர்களுக்கு அலங்காரமாகத் தெரிவது போன்று இந்தக் கேடும் அலங்காரமாகத் தெரிகின்றது. இதை ஒழிக்க வேண்டுமெனில் இஸ்லாமிய அரசு தான் அமைய வேண்டும்.

தாய்மையும் தூய்மையும்

அடுத்து மகப்பேறு மருத்துவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது பாலூட்டும் பெண்கள், பாலூட்டுவதற்கு முன்பு தங்களது கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் என்று தான்.

பொதுவாகப் பிள்ளை பெறுகின்ற தாய்மார்களுக்கு இரண்டு விதமான இயற்கை உபாதைகள் ஏற்படுகின்றன.

  1. பிரசவத்திற்குப் பின் நாற்பது நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான நாட்களுக்குத் தொடர்கின்ற உதிரப் போக்கு மற்றும் வழக்கமான மாத விலக்கு.
  2. குழந்தைகள் கழிக்கின்ற மல ஜலம்.

இந்த இரு கட்டங்களிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இதில் பிரசவ இரத்தம் என்பது கொஞ்ச நாட்களுக்குத் தான். ஆனால் மாத விலக்கு என்பது மாதந்தோறும் தொடர்கின்ற இயற்கைச் சிரமம்.

குழந்தைகள் கழிக்கின்ற மலஜலமும் அன்றாடம் தொடர்கின்ற ஒன்று தான். இக்குழந்தைகள் தாங்களாக இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, தாங்களே சுத்தம் செய்கின்ற வரை தொடர்கின்ற ஒரு சிரமம் தான்.

இதில் தாய்மார்கள் அதிகம் தூய்மை காக்க வேண்டும். அவர்கள் காக்கும் தூய்மை, குழந்தைகளை வைரஸ் கிருமிகளின் தாக்குதலிலிருந்து காக்கும்.

தூய்மையைக் காட்டும் தூய நெறி

தாய்மை தாக்க வேண்டிய இந்தத் தூய்மையை, தூய நெறியான இஸ்லாம், பிள்ளைகளை வளர்க்கும் போதே பெற்றோர்களுக்குக் காட்டித் தருகின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் அன்னையார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.

நூல்: புகாரி 222

குழந்தையை வளர்க்கும் போது இந்தத் தூய பண்பைச் சொல்லித் தருகின்றது. இதன் மூலம் மலம், ஜலம் அசுத்தம் என்பதை உணரச் செய்து குழந்தைகள் வளர, வளர அவர்களுடன் தூய்மை உணர்வையும் சேர்த்தே வளர்க்கின்றது.

உணவுக்கு வலது கை

உண்ணுதல், பருகுதல் போன்று அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையைக் கொண்டே செய்ய வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தருகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும்போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.

நூல்: புகாரி 168

வலது கைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல்: புகாரி 5376

சிறுநீர் கழிக்கும் போது வலது கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் போதிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறப்புறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புகாரி 154

இயற்கை மார்க்கத்தின் இனிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இயற்கை நெறியில், உணவுக்கு வலது கை, அசுத்தம் களைவதற்கு இடது கை என்ற நாகரீகப் பழக்கத்தை, நாசூக்கான நடைமுறையை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள். உணவு உண்ணும் போது கிருமிகள் உட்புகுவதை விட்டும் இதன் மூலம் காக்கச் செய்கின்றார்கள். இந்த இனிய மார்க்கத்தைப் பின்பற்றுவோர் தன்னையும் தன் சுற்றுப்புறச் சூழலையும் காப்பவராகி விடுகின்றார்.

இஸ்லாம் ஒரு தூய்மை மார்க்கம்

தூய்மைக்கு மறு பெயர் இஸ்லாம்; இஸ்லாத்திற்கு மறு பெயர் தூய்மை என்று கூறி விடலாம். இஸ்லாத்தின் ஆதார நூலான திருக்குர்ஆன் அருளப்படும் ஆரம்ப கட்டத்திலேயே ஆடைத் தூய்மையைப் பற்றித் தான் அது கட்டளையிடுகின்றது.

உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! (அல்குர்ஆன் 74:4)

ஒவ்வொரு முஸ்லிமும் ஐந்து வேளை தொழுவது கட்டாயக் கடமையாகும். அந்த ஐந்து வேளை தொழுகையின் போது, கை, கால்கள், முகத்தைக் கழுவியாக வேண்டும். அவ்வாறு கழுவாமல் தொழ முடியாது. இந்தத் தூய்மையும் துப்புரவும் கிருமிகள் அண்டவோ, அணுகவோ விடாமல் மனிதனைக் காக்கின்றது. இந்தக் கிருமிகளின் பிடியிலிருந்து மனித சமுதாயம் காக்கப்பட வேண்டுமானால் மனிதனுக்கேற்ற, மண்ணுக்கேற்ற இஸ்லாம் தான் தீர்வு என்பதைத் தெளிவாக உணரலாம்.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

காஜா முஹைதீன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி பைஹகியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ (2392)

மேற்கண்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அபூ ளப்யா நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் தஹபீ அவர்களும் கூறியுள்ளனர்.

நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 9, பக்கம் : 103

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 542

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 7, பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 7, பக்கம் : 60

இமாம் அஹ்மது அவர்கள், இந்த ஹதீஸ் மறுக்கப்படவேண்டியது. ஏனென்றால் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா, பாகம் : 1, பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்          தொடர்: 11

நாற்பது இரவுகள்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.

அல்குர்ஆன் 2:51

தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக மூஸா (அலை) அவர்களை தூர் மலைக்கு வருமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதற்காக நாற்பது நாட்கள் வாக்களித்து நாற்பதாம் நாள் அவ்வேதத்தை பலகைகளில் வழங்கினான் என்று இது தொடர்பான பிற வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

இதில் இறைவன் மூஸா (அலை) அவர்களுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தான் என்று வருவதால், அவை எந்த மாதங்கள்? அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதை ஆய்வு (?) செய்து அதன் முடிவை விரிவுரை நூல்கள் வாயிலாக இமாம்கள் நமக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அவர்கள் சமர்ப்பித்த விளக்கங்கள் இதோ:

 (அந்த நாற்பது நாட்கள்) துல்கஃதா (30 நாட்கள்) மற்றும் துல்ஹஜ்ஜில் 10 நாட்களாகும் என அபுல்ஆலியா கூறுகின்றார்.

நூல்: ஜாமிஉல் பயான்

பாகம் 2 பக்கம் 62

நாற்பது நாட்கள் என்று தான் குர்ஆனில் உள்ளதே தவிர அது எந்த மாதம் போன்ற மேலதிகத் தகவல்கள் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ தெரிவிக்கப்படவில்லை.  நிலைமை இவ்வாறிருக்க இந்த அறிஞர் அது துல்கஃதா, மற்றும் துல்ஹஜ் மாதத்திலிருந்து 10 நாட்கள் என்று மூஸா (அலை) அவர்கள் அருகில் இருந்ததைப் போன்று துல்லியமான தகவலை தருகின்றார்.

அரபு மாதங்களான, அரபு மொழிச் சொல்லில் பெயரிடப்பட்ட  இந்த மாதங்கள் தான் அரபியரல்லாத மூஸா நபி சமுதாயத்துக்கும் இருந்தது என்பது மடமையாகும் என்பது கூட இவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது

மேலும், இது நமக்குத் தேவையில்லாத வேலை. அது எந்த மாதமாக இருந்தால் நமக்கென்ன? ஏன் இல்லாததை நாமாக வலிந்து கொண்டு விளக்கம் என்ற பெயரில் அள்ளிக் கொட்ட வேண்டும்?

இது மட்டுமல்ல. இன்னும் முக்கிய விவரமும் நமக்கு தரப்படுகின்றது. அது…..

அந்த நாற்பது இரவுகளில் தூர் மலையிலிருந்து இறங்கும் வரை மூஸா (அலை) அவர்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என நமக்கு தகவல் வந்தது.

அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) அவர்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என்று மேற்கண்ட விரிவுரை நூலில் அதன் தொடர்ச்சியில் கூறப்படுகின்றது.

இது எப்படி சாத்தியாமாகும்? இறைவன் இதைக் கூறியிருந்தால் நாம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்க மாட்டோம். ஏனெனில் இறைவனுக்கு இது சாத்தியமே.

ஆனால் இறைவன் இவ்வாறு கூறாமல் இந்த இமாம்கள் சுயமாகக் கூறும் இது போன்ற கூறுகெட்ட விளக்கங்களுக்கு நாம் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?

மேலும் இன்னார் இத்தனை நாட்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என்றெல்லாம் யாராலும் கூறமுடியாது. காரணம் யாருக்கும் தெரியாமல் ஓரிரு தருணங்களிலாவது அவர் மலம் கழிக்கச் சென்றிருப்பார்.

இறைத்தூதராக இருந்தாலும் மலம், ஜலம் கழிக்கப் போகும் போது கூட இவர்களுக்குத் தகவல் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா?

இதற்கெல்லாம் மேல், அந்த வேதப் பலகை எதனால் ஆனது என்பதிலும் மல்லுக்கட்டிக் கொண்டு ஆளாளுக்கு விளக்கமளிக்க முன்வருகின்றார்கள்.

இவர்கள் என்ன விரிவுரையாளர்களா? அல்லது தச்சர், ஆசாரிகளா? என்ற கேள்வியுடன் இந்த விளக்கத்தை முடித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

தவ்ஹீதுக்கு முன் தானம், தர்மம்

தவ்ஹீதுக்குப் பின் கஞ்சத்தனமா?

 தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலர் லோக்கல் (கிராம, நகர, மாவட்ட அளவிலான) தர்ஹாக்களுக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். தர்ஹாக்களுக்குச் சந்தனம் பூசுதல், விளக்கேற்றுதல், போர்வை போர்த்துதல், உண்டியல் காணிக்கை போன்ற வகைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தார்கள்.

ரீஜினல் அவ்லியா – அதாவது நாகூர், ஏர்வாடி போன்ற மாநில அளவிலான தர்ஹாக்களுக்குப் பயணம் செய்து சென்று தங்கள் கைகளிலிருந்து காசு பணத்தைக் காலி செய்தனர்.

இந்திய அளவில் அஜ்மீர் போன்ற நேஷனல் அவ்லியா, இன்டர்நேஷனல் அளவில் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (பாக்தாத்) போன்ற தர்ஹாக்களுக்குச் சென்று தங்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.

இதுபோக, வீடுகளில் மவ்லிது, கத்தம் பாத்திஹா என்ற அனாச்சாரங்களில் பணம் செலவழித்தனர்.

இந்தச் செலவினங்கள் அனைத்தும் அவ்லியாக்களின் பக்தியின் பெயரால் நடைபெற்றவை.

மற்றொரு புறம் சினிமா, மது, பீடி, கிகரெட், டி.வி. டெக்குகள், ஆடியோ வீடியோ கேஸட்டுகள் என்று தடபுடலாக ஆடம்பர, அனாச்சார வகைகளில் செலவழித்துத் தள்ளினர்.

இவை அனைத்தும் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால்! தீய வழிகளில் பணத்தைச் செலவிட்டு வந்தவர்கள் அந்தச் செலவுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டதில் வெற்றி பெற்று விட்டாலும் தீயவழியில் செலவிடும் போது இருந்த தாரளத்தன்மை நல்வழிக்கு வந்த பின்னர் மாறிவிட்டது.

ஒரு சிலர் தவ்ஹீதுக்கு வந்த பின்னால் இனி மவ்லிது, பாத்திஹா, தர்ஹா செலவுகள் இல்லை. அப்பாடா! ஒரு வகையில் மிச்சம் என்று இருக்கின்றனர்.

தவ்ஹீதுவாதிகள் ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் இந்தக் கொள்கையை ஏற்ற பின்னர் தாராளமாகச் செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் தமிழகத்தில், குறிப்பாக பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் நில புலன்களை அரபி மதரஸாக்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் எழுதி வைத்தனர். ஆனால் இன்று தவ்ஹீதுவாதிகள் ஓர் ஐந்து சென்ட் பள்ளிவாசல் இடம் வாங்குவதற்குத் தவியாய் தவிக்கின்றனர். தமிழகமெங்கும் அலையாய் அலைகின்றனர்.

தவ்ஹீது சிந்தனையாளர்கள் கொஞ்சம் மனது வைத்தால் தத்தமது ஊர்களிலேயே தனி நபர்களாகவே பள்ளிக்கு இடம் வாங்கி விடலாம். அவ்வூர் மக்கள் வெளியூர்களில் போய் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தச் சகோதரர்கள் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் தங்கள் செய்த செலவையெல்லாம் சற்று எண்ணிப் பார்த்தார்கள் என்றால் அவற்றை இப்போது செய்யக் கூடிய தர்மத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிக மிகக் குறைவானதாகவே இருக்கும். அசத்தியத்திற்காகச் செலவு செய்ததை விட அதிகமாகவே சத்தியக் கொள்கைக்காகச் செலவு செய்ய வேண்டும்.

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய போது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் (செய்து) நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தர்ம) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்

நூல்: புகாரி 1436, 2538

ஹகீம் பின் ஹிஷாம் அறியாமைக் காலத்தில் செய்த அதே நன்மையை இப்போதும் செய்கிறார். காரணம், ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் செய்த நன்மையையும் சேர்த்தே கொண்டு வருகின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது தான்.

இதில் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அதற்கு முன்பு செய்த நன்மைகளைக் கொண்டு வரும் அதே வேளை, அறியாமைக் காலத்தில் அவர் செய்த பாவங்களைக் கொண்டு வருவதில்லை.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். நான், “சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?” என்று கேட்டார்கள். “என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (-மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 173

அறியாமைக் காலத்தில் செய்த நன்மைகளைக் கொண்டு வரும் அதே நேரத்தில் அவருடைய பாவங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன என்பது இறைவன் செய்த மிகப் பெரிய அருட்கொடையாகும்.

இன்று தவ்ஹீதுக்கு வந்தவர்களின் நிலைமை, புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களின் நிலையை ஒத்தது தான். அவர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுக்க முன்வர வேண்டும். அல்லாஹ்வின் அருள் வளத்தை அள்ளிச் செல்ல வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 19

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

அமர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். “அல்லாஹ்வின் துôதரே என்னிடத்தில் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றது ஆனால் என்னுடைய தந்தை என்னிடம் தேவையுடையவராக இருக்கின்றார்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “நீயும் உன்னுடைய செல்வமும் உன் தந்தைக்குரியது; நீங்கள் சம்பாதித்ததில் துôய்மையானது உங்களுடைய குழந்தைகளே” என்று கூறினார்கள்.

(நூல் : அபூதாவுத் 3063)

ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் சம்பாத்தியத்தில் ஒரு அளவு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். அந்த அனுமதி என்னவென்றால் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் வீட்டிற்குச் சென்றால் யாரிடமும் அனுமதியில்லாமல் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது பிள்ளை தடுக்கக்கூடாது. அந்த அனுமதி கூட சாப்பிடுவதற்கு மட்டும் தான். அதை எடுத்து வருவது கூடாது.

கணவன் அனுமதியின்றி பொருளை எடுத்தல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!என்று சொன்னார்கள்

(நூல் : புகாரி 5364, 2460, 5359, 5370, 2211, 7161, 7180)

கணவனிடம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனுமதி இல்லாமல்  எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை இஸ்லாம் தருகின்றது. ஆனால் இது பொதுவான சட்டம் அல்ல. கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் கணவருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. ஏனென்றால் சுஃப்யான் கஞ்சனாக இருக்கின்றார் என்று அவரின் மனைவி கூறியபோது தான் இந்த அனுமதியை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். ஆகவே இது பொதுவானதல்ல என்பதை நாம் விளங்க முடியும்.

வட்டிப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால்…

ஒருவர் வட்டியின் மூலம் சம்பாதிக்கின்றார். அதை அவர் நமக்குத் தந்தால் நாம் சாப்பிடலாமா? என்றால் அதை நாம் உண்ணலாம், அதை அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தருகின்றார் என்றால் அது நமக்கு ஹராம் இல்லை என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்ககூடிய அன்பளிப்பு ஹராம் ஆகாது.

திருடிய பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால்…

வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருடன் திருடிய பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருதாலும் அது அவனின் பொருளாகும்.

ஆனால் திருடன், திருடிய பொருள் அவனுடைய பொருள் இல்லை என்பதை நாம்  விளங்கிக் கொள்ள வேண்டும். இந்திய நீதிமன்றத்தின் சட்டப்படியும் இன்னும் உலக சட்டப்படியும் இது சாத்தியமற்ற விஷயம் ஆகும். என்னுடைய பணத்தை வட்டியின் மூலம் அபகரித்துவிட்டான் என்று வழக்குப் போட முடியுமா? ஆனால் என்னுடைய பொருளை திருடிவிட்டான் என்று ஒருவன் வழக்குப் போட முடியும்.

இதை வைத்து நாம் விளங்குவது என்னவென்றால் திருடிய உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அது அவருடைய பொருள் அல்ல. பின்பு எப்படி அவர் அன்பளிப்பு கொடுக்க முடியும்?

கட்டடத்தை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?

வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் பொருளை வாங்கலாம் என்றால், நம் இடத்தை அல்லது நம் கடையை வாடகைக்கு கொடுக்கலாம்; அதில் என்ன தவறு என்று கேட்கின்றனர்.

இதில் ஒரு வித்தியாசத்தை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருதாலும் அது அவனது பொருளாகும். ஆனால் அவன் சம்பாதிக்கும் முறை தவறானதாகும். அதற்குரிய பாவம் அவனுக்குக் கிடைக்கும். ஆனால் அவர் கொடுக்கும் பொருள் நமக்கு ஹராம் ஆகாது.

நீங்கள் உங்கள் இடத்தை அல்லது கடையை வாடகைக்குக் கொடுப்பது நீங்கள் அதற்கு உறுதுணையாக இருப்பதாகும். ஆகவே நமது இடத்தையோ அல்லது கடையையோ வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.

கணவன் அனுமதியில்லாமல் தர்மம் செய்யலாமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 2065, 1441, 1437, 1425

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனது சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனது நற்பலனில் பாதி அவளுக்கு உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2066, 5195, 5260

அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா?” என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள், “தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே.  அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும்என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2590

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து கணவன் அனுமதியின்றி அவனது பொருளை மனைவி தர்மம் செய்யலாம் என்பதை அறிய முடிகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக திர்மிதியில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நபியவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் கூறினார்கள்: எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதியைக் கொண்டே தவிர தன்னுடைய கணவனின்  வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது. “அல்லாஹ்வின் தூதரே! உணவையும் வழங்கக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் அது தான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறப்பானதாகும் என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (606)

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஷுரஹ்பீல் இப்னு முஸ்லிம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவராவார். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

உறவினர் வீட்டில் உணவு

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கை யாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன் 24:61)

அன்பளிப்பை திருப்பிக் கேட்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 2622

உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் கூறியதாவது: ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கி விட்டார். ஆகவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், “நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்என்று கூறினார்கள்.

(நூல் : புகாரி 1490, 2623, 2636, 3003)

—————————————————————————————————————————————————————-

நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!

கே.எம். அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1359)

குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

இதன் காரணமாகத் தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும்.

இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்படாத காரணத்தினால் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளைப் பற்றி தினமணி நாளிதழ் டிசம்பர் 26ல் எழுதிய தலையங்கத்தை மக்களின் பார்வைக்கு தருகிறோம். இதோ அந்த தலையங்கம்:

நல்லவராவதும் தீயவராவதும்

மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில் தான் உருவாகின்றன.

இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.

தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.

இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் “அப்பா-அம்மாவை அழைத்து வா’ என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.

இந்த மாணவர்கள் உழைப்பது சரி தான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு “டாப்-அப்’ செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு “டாப்-அப்’ செய்வதிலும் தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.

தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூக விரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.

மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்து கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது

பெற்றோர்களே பிள்ளைகளின் பொறுப்பாளர்

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்தவர்களாக நல்லவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றார் தினமணி ஆசிரியர்.

ஆசிரியர்களில் பலர் பொறுக்கிகளாகவும், காமவெறி பிடித்தவர்களாகவும் உள்ள காலகட்டத்தில் பிள்ளைகளைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்தது தான் என்று குறிப்பிடுவது வேடிக்கையான ஒன்றாகும்.

பெற்றோர்கள் வேலைப் பழுவினால் பிள்ளைகளைக் கவனிக்க இயலாது என்று தினமணி ஆசிரியர் கூறுவது பிற சமுதாயத்தைக் கவனித்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

ஆனால் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வாழ்வாதாரங்களைத் தேடும் பொறுப்பை ஆண்களுக்கும் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை பெண்களுக்கும் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்படவேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும்.

குழந்தைகளைச் சிறந்த குழந்தையாக உருவாக்கும் பொறுப்பை அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தெடுக்கும் தாயிடம் தான் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி (2554)

ஒரு குழந்தையின் தாய்தான் அவனுடைய நல்லொழுக்கத்திற்கு பொறுப்புதாரி ஆவார். குழந்தைகளுக்கு நல்லதொரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பு தான்.

முஃமின்களின் இலட்சியம்

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (25 : 74)

ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் எத்தகைய இலட்சியத்தில் வாழ வேண்டும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

மற்றவர்கள் நம்முடைய வாழ்வை ஒரு முன்மாதிரியான வாழ்வாகக் கருதும் அளவிற்கு ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும்  திகழ வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான். நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் முறைகளைப் பார்த்து, இது போன்றல்லவா நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மற்றவர்கள் எண்ணும் அளவிற்கு ஒவ்வொரு முஃமினும் தன்னுடைய குடும்பத்தை இறையச்சமுடைய குடும்பமாக உருவாக்க வேண்டும் என்பதும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதும் தான் இறைவனின் வழிகாட்டுதல்.

சிறந்த சமுதாயம் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதற்கு மேற்கண்ட வசனம் தெளிவான ஆதாரமாகும்.

திருமணமே முதல்படி

குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை இஸ்லாம் தாயிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக உருவாக வேண்டுமென்றால் அக்குழந்தையின் தாய் நல்லொழுக்கங்களை அறிந்தவளாக இருக்க வேண்டும். ஒரு தாய் அதிகம் சினிமா பார்க்கக் கூடியவளாகவும், தர்ஹா வழிபாடுகள் செய்பவளாகவும், பில்லி, சூனியம், பேய், பிசாசு நம்பிக்கை உடையவளாகவும் இருந்தால் இவள் எப்படி தன்னுடைய குழந்தையை ஒரு நல்லொழுக்கமுள்ள, இறைநம்பிக்கையுள்ள குழந்தையாக உருவாக்குவாள்?

ஒரு சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் குழந்தைகள் நல்லொழுக்கங்கள் உடையவர்களாக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் நற்சிந்தனையைப் பெற வேண்டும் என்றால் அக்குழந்தையின் தாய் அதற்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் திருமணத்தின் போதே நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (5090)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (2911)

சிறந்த சமுதாயம் உருவாவதற்கு முதல் அடிப்படை நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இல்லறமும் இனிய சமுதாயத்திற்கே!

ஒருவன் திருமணம் செய்து தன்னுடைய உடல் இச்சையைத் தணிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகின்றான். இந்த இனிய இல்லறத்திலும் இனிய சமுதாயம் உருவாவதற்காக அல்லாஹ்விடம் நபியவர்கள் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (141)

“எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!” என்ற பிரார்த்தனையின் முக்கிய அடிப்படையே நம்முடைய எதிர்காலச் சந்ததிகள் நல்லொழுக்கமுள்ள சந்ததிகளாக உருவாக வேண்டும் என்பதுதான்.

இஸ்லாம் நல்லொழுக்க சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது என்பதற்கு மேற்கண்ட நபிவழியும் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை             தொடர்: 5

கியாம நாளின் அடையாளங்கள்

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.  (திருக்குர்ஆன் 78:1-5)

உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் புகை மூட்டம் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். தஜ்ஜாலைப் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் மேலும் சில விபரங்களைக் காண்போம்.

தஜ்ஜால் இனிமேல் தான் பிறப்பானா?

தஜ்ஜால் இனி மேல் பிறந்து வரப் போகிறானா? அல்லது முன்பே பிறந்து பிற்காலத்தில் வெளியே வருவானா? இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். தஜ்ஜாலைச் சந்தித்த விபரத்தை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

எனவே அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதை நாம் நம்பியாக வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தஜ்ஜால் பற்றி அதிக விபரங்கள் கிடைப்பதால் அந்த ஹதீஸை முழுமையாகப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் “அஸ்ஸலாத்து ஜாமிஆ” (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார்கள். “ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு “நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர் கூறியதாவது:

லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்ப-ல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.

அப்பிராணியிடம் “உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?” என்று கேட்டோம். “நான் ஜஸ்ஸாஸா” என்று அப்பிராணி கூறியது. “நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்” எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் “அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ” என்று அஞ்சினோம்.

நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். “உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை?” என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கு அம்மனிதன், “என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.”

“நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத்தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.” எனக் கூறினோம்.

“பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா?” என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன், “விரைவில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம்” என்றான்.

“தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா?” என்று அவன் கேட்டான். “அதில் அதிகமான தண்ணீர் உள்ளது” என்று நாங்கள் கூறினோம். “அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும்” என்று அவன் கூறினான்.

“ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா?” என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் “ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது; அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர்” என்றோம்.

“உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள்” என்று அம்மனிதன் கேட்டான். அவர் “மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார்” என்று கூறினோம்.

“அவருடன் அரபுகள் போர் செய்தார்களா?” என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். “போரின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்” எனக் கூறினோம். “அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்” என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். “நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்” என்று அம்மனிதன் கூறினான்.

இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, “இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா; இது தைபா” எனக் கூறினார்கள். “இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் “ஆம்”என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை; இல்லை; அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5235.

தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பிருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இஸ்லாத்தை எதிர்ப்பான்

முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.

அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான்.

இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் 5237.

தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர் என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5223

அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.  அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான்.

தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408

தஜ்ஜாலின் அற்புதங்கள்

இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம்.

தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான்.

ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

பாழைடந்த இடத்துக்குச் சென்று “உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்துஎன்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின் தொடரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூற்கள்: முஸ்லிம் 5228

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான்.

ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார். “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்என்று அவர் கூறுவார்.

இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?” என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 7132, 1882

இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை.

இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்; தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

நூல்: அஹ்மத் 22573

தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம் “நானே உங்கள் இறைவன்என்பான். “யாரேனும் நீ தான் என் இறைவன்என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். “அல்லாஹ் தான் என் இறைவன்என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி),

நூல்: அஹ்மத் 19292

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான்.

அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான்.

 மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். “இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),

நூல்: அஹ்மத் 14426

தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: புகாரி 7130

தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?

இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.

தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்

இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

மதீனா நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),

நூல்: புகாரி 7125

தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம் பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 2450

இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள்.

அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத் எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: அஹ்மத் 23327

மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது.

“அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது” என்பது நபிமொழி.

நூல்: அஹ்மத் 22571

தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி

தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று “தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்” என்பதாகும்.

நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள்.

தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க கஹ்ப் அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.

உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

தஜ்ஜால் வெளிப்படும் இடம்

தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். “அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியாக நில்லுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : திர்மிதீ 2163

தஜ்ஜால் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவான் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்