ஏகத்துவம் – ஜனவரி 2010

தலையங்கம்

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

“உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்” என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான்.

உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.

அல்குர்ஆன் 14:13, 14

நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 58:21

நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது. அவர்களே உதவி செய்யப்படுவார்கள். நமது படையினரே வெல்பவர்கள்.

அல்குர்ஆன் 37:171-173

ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் “பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்என்று எழுதியிருந்தோம்.

அல்குர்ஆன் 21:105

இவை அனைத்தும் அல்லாஹ் அளித்திருக்கின்ற பொதுவான வாக்குறுதிகள்! நபி மூஸா (அலை) அவர்களுக்கென்று குறிப்பிட்டும் அல்லாஹ் வாக்குறுதியளித்தான்.

இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். “அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் (மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:127-129

அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறும் நேரமும் வந்தது.

மூஸாவையும் அவரை நம்பிய இஸ்ரவேலர்களையும் நாட்டை விட்டு விரட்ட ஃபிர்அவ்ன் நினைத்த போது அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியது.

அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான். அவனையும், அவனுடன் இருந்த அனைவரையும் மூழ்கடித்தோம்.

அல்குர்ஆன் 17:103

அந்தப் பூமியில் இஸ்ரவேலர்களை அல்லாஹ் குடியமர்த்தினான்.

பூமியில் வசியுங்கள்! மறுமை பற்றிய வாக்கு நிறைவேறும் போது உங்களை ஒரு சேரக் கொண்டு வருவோம்என்று இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்.

அல்குர்ஆன் 17:104

ஃபிர்அவ்னின் ஆட்சியை அழித்து, இஸ்ரவேலர்களுக்கு ஆட்சியை வழங்கினான். இந்த அற்புதம் நடந்த நாள் தான் ஆஷுரா எனும் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

இதன் நினைவாகத் தான் நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதை வழிமுறையாக்கியுள்ளார்கள்.

ஏகத்துவம் வென்ற நாளை, அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிய நாளை, வரலாற்றில் என்றும் நின்று நிலைக்கின்ற நாளாக ஆக்கியுள்ளார்கள்.

இது, மூஸா நபி விஷயத்தில் நிறைவேறிய இறைவனின் வாக்குறுதியாகும்.

இது போன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியிருக்கின்றது.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 17:76)

மூஸா நபியவர்களைப் போன்று முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியது. இந்த வாக்குறுதி நமக்கு ஒன்றை நினைவுபடுத்துகின்றது.

இறுதியில் ஏகத்துவம் தான் வெற்றி பெறும். இவ்வளவு பெரிய வலிமை மிக்கக் கொள்கை தான் ஏகத்துவக் கொள்கை! அந்தக் கொள்கையைத் தான் நாம் பிரச்சாரம் செய்கிறோம். அதனால் தான் இந்தப் பிரச்சாரம் செய்யும் நம்மை நோக்கி ஊர் நீக்கம், சிறைச்சாலை என்று பல்வேறு சோதனைகள் பாய்கின்றன.

இந்தச் சோதனைகளில் நாம் உறுதியாக நின்று கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டால் இறுதியில் ஏகத்துவம் வெற்றி பெறும். அதற்கு மூஸா (அலை), முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறுகள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

நம்மைக் கடந்து சென்றுள்ள ஆஷுரா நாள் இந்தச் சிந்தனையை நம்மிடம் புதுப்பித்து விட்டுச் சென்றிருக்கின்றது. இந்தப் புத்துணர்வுடன், புது வேகத்துடன் புரட்சி மிகு தவ்ஹீதுக் கொள்கைப் பிரச்சாரக் களத்தில் பயணிப்போமாக!

————————————————————————————————————————————————

தொடர்: 1

ஸிஹ்ர் ஓரு விளக்கம்

இலங்கையில் வெளியாகும் “உண்மை உதயம்’ என்ற பத்திரிகையில், “மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்’ என்ற தலைப்பில் இஸ்மாயில் ஸலஃபி என்பவர் ஒரு கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். அந்தத் தலைப்பின் கீழ் தனது வாதத்தை அறவே நிரூபிக்காமல் ஸிஹ்ர் என்ற தலைப்பில் தான் முழுத் தொடரையும் அமைத்திருந்தார்.

ஸிஹ்ர் தொடர்பாக நாம் கூறுவதை ஒருவர் மறுத்து கட்டுரை எழுதுவதாக இருந்தால், அது குறித்து நாம் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை.

நாம் என்ன கூறுகிறோமோ அதைப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு எழுத வேண்டும். இதையும் அவர் செய்யவில்லை.

மார்க்க அறிவு இல்லாத ஒரு பாமரர் எப்படி விமர்சிப்பாரோ, மார்க்க அறிவு இல்லாத ஒரு பாமரர் எப்படி கேள்வி கேட்பாரோ அந்தத் தரத்தில் தான் அவர் தனது கட்டுரையை அமைத்துள்ளார்.

வாதம் என்று சொல்ல முடியாத பல தமாஷ்களையும் இடையிடையே வாதம் என்ற பெயரில் எடுத்து வைக்கிறார். அனைத்தையும் இந்தத் தொடரில் இன்ஷா அல்லாஹ் நாம் விரிவாக எடுத்துக் காட்டுவோம்.

கடந்த காலத்தில் ஸிஹ்ர் பற்றியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் பற்றியும் முதலில் நாம் கூறியதற்கு மாற்றமாக இப்போது கூறுகிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக ஒட்டு மொத்தக் கட்டுரைத் தொடரில் கால் பாகத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் கூறப்பட்டது தவறு என்பது ஆதாரத்துடன் நமக்குத் தெரிய வந்தால் தவறான கருத்தை மாற்றிக் கொள்வது மார்க்கக் கடமையாகும். இப்போது நாம் கூறும் கருத்து சரியா என்பது மட்டுமே ஆய்வு செய்யப்பட வேண்டும்.

எஞ்சிய விஷயங்களுக்கு அவர் கூறிய வரிசைப்படி பதில் அளிப்பதை விட எளிதில் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் தலைப்பு வாரியாக அமைத்து விளக்கக் கட்டுரையை அமைத்துள்ளோம்.

 • ஸிஹ்ர் என்பது நிஜமா? பொய்யா?
 • ஸிஹ்ர் என்பது நிஜமல்ல, கற்பனையே என்று சொல்பவர்கள் முஃதஸிலாக்களா?
 • அறிவுக்குப் பொருந்தவில்லை என்பதற்காகத் தான் ஸிஹ்ர் என்பதை மறுக்கிறோமா?
 • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன?

ஆகிய விஷயங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

இத்தலைப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பற்றிய நமது பார்வை என்ன? அதற்கு இஸ்மாயில் சலபி அளிக்கும் பதில் என்ன என்பதை முதலாவதாக நாம் ஆய்வு செய்வோம். அதன் பிறகு ஸிஹ்ர் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

தவறு – 1

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் அவருக்கு ஏற்பட்டது. அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார். இதை மனநிலை பாதிப்பு என்று கூறமுடியாது. இந்தப் பதத்தின் மூலம் சூனியத்தால் நபி (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார். அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் தமது உரைகள், உரையாடல்கள் மூலம் சூனியம் செய்யப்பட்டதால் நபி (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகக் கூறியுள்ளனர். இது நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டும் இவர்களது இழிசெயலின் ஒரு பகுதி எனலாம்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இவர் என்ன சொல்ல வருகிறார்? தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போலித் தோற்றம் ஏற்பட்டது என்கிறார். இது மனநிலை பாதிப்பு என்று கூற முடியாது என்கிறார்.

மனிதன் எளிதில் மறந்து விட முடியாத, குளிப்பது கடமை என்ற மார்க்கச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில், ஈடுபடாமலேயே ஈடுபட்டதாகப் போலித் தோற்றம் ஏற்படுவது தானே மனநிலை பாதிப்பு.  இருப்பதை இல்லை என்று எண்ணுவதும், இல்லாததை இருப்பதாக எண்ணுவதும் தானே மனநிலை பாதிப்பின் அடிப்படை.

மறுப்பதாக எண்ணிக் கொண்டு வார்த்தையைத் தான் மாற்றிப் போட்டுள்ளாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்று தான் இவரும் கூறுகிறார்.

“மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தொடரை, நாம் உண்மை உதயம் பத்திரிகையில் எழுதவே இல்லை” என்று இஸ்மாயில் சலபிக்குத் தோன்றிக் கொண்டு இருந்தால் அது மனநிலை பாதிப்பு இல்லையா?

ஒரு மனிதரை நாம் முட்டாள் என்று கூறுகிறோம். இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி “அவருக்கு அறிவு இல்லை. அவ்வளவு தான். முட்டாள் என்று சொல்ல முடியாது’ என்று கூறினால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அப்படித் தான் இஸ்மாயீல் ஸலபி கூறுகிறார்.

மறுக்கப் புகுந்த நேரத்தில் கூட நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதை வேறு வார்த்தையில் கூறும் அளவுக்குத் தான் இவரது நிலைமை இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்ற கருத்து இவர்களின் எழுத்துக்களைக் கொண்டே உறுதியாகி விட்டதால் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டும் என்பது மேலும் உறுதியாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் ஏற்பட்டது என்று நாம் கூறி அவர்களை இழிவுபடுத்துவதாக நெஞ்சழுத்தத்துடன் கூறுகிறார்.

மத்ஹபு நூல்களில் கொஞ்சமாகக் கஞ்சா அடிக்கலாம் என்று உள்ளதை எடுத்துக் காட்டி இத்தகைய மத்ஹப் தேவையா என்று கேட்டோம். மத்ஹப் வாதிகள் என்ன செய்தார்கள்? நாம் கஞ்சா அடிக்கச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றனர். அந்த வழிமுறையை இஸ்மாயீல் ஸலபி கற்றுக் கைதேர்ந்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிப்பு, செய்யாததைச் செய்ததாக எண்ணும் பொய்த் தோற்றம், பைத்தியம் ஏற்பட்டதாகக் கூறும் அனைத்தும் பொய்யானவை என்று நாம் கூறுவது இட்டுக்கட்டும் இழிசெயலா?

அல்லது இஸ்மாயில் ஸலபியைப் போன்று, “இது சரியான செய்தி தான்’ என்று கூறி வேறு வார்த்தையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மனநோயாளி என்று உறுதிப்படுத்துவது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் செயலா? சுய நினைவுடன் தான் இவர் இதை எழுதினாரா என்று கேட்க விரும்புகிறோம்.

மனநிலை பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்க பயங்கரமான காரணத்தையும் கூறுகிறார்.

“அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார்’ என்பது தான் அந்தக் காரணம்.

தமக்கு ஏற்பட்டுள்ள நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போது அது எப்படி மனநிலை பாதிப்பாக இருக்க முடியும் என்பது இதன் உள்ளர்த்தம்.

மனநிலை பாதிப்பு என்பது ஏராளமான உட்பிரிவுகளைக் கொண்டது. தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே சில பேருக்குத் தெரியாது. மற்றவர்கள் தான் அவரது நிலையைப் பார்த்து முடிவு செய்வார்கள்.

இன்னொரு வகையினர் தங்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதைச் சில நேரங்களில் தாங்களே உணர்வார்கள். தாங்களே தக்க மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் தேடிச் சென்று சிகிச்சை பெறுவார்கள்.

“நீர் தான் மஹ்தி என்று யாரோ என்னை நோக்கி கூறுவதாக உணர்கிறேன். நான் திட்டமிடாவிட்டாலும் இப்படி எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது” என்பது போன்று கூறும் பலரை நானே சந்தித்திருக்கிறேன்.

மனநல ஆலோசகர்களும் இத்தகையோர் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்பது தான் இந்த ஹதீஸின் மையக் கருத்து எனும் போது அதை மறுத்தே ஆக வேண்டும் என்பதை இஸ்மாயில் சலபியும் உறுதிப்படுத்துகிறார்.

அடுத்து அவர் கண்டு பிடித்துள்ள இரண்டாவது தவறைப் பாருங்கள்.

தவறு – 2

தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது என்று முதல் பத்தியில் கூறி விட்டு அடுத்த பத்தியிலேயே “தமக்கு சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்’ .. என்று ஹதீஸின் கருத்தை மிகைப்படுத்தி, திரிபுபடுத்தியுள்ளார்

தான் செய்யாததைச் செய்ததாகப் போலித் தோற்றம் (மாயை) நபியவர்களுக்கு ஏற்பட்டது என்று தான் ஹதீஸ் கூறுகின்றது. தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறவே இல்லை. அப்படியிருக்க முதல் பத்தியில் கருதினார்கள் என்றும், இரண்டாம் பத்தியில் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்றும் ஏன் நபி (ஸல்) மீது இட்டுக்கட்ட வேண்டும்? ஹதீஸில் கூறப்படாத ஒரு கருத்தை ஏன் பொது மக்கள் மனதில் பதிக்க வேண்டும்?

முதல் தவறு என்று குறிப்பிட்ட விஷயத்திலும் வார்த்தை விளையாட்டுத் தான் ஆடினார் என்றால் இரண்டாவது தவறு என்ற தலைப்பிலும் அதே தான்.

நபிகள் நாயகம் (ஸல்) கருதினார்கள் என்று முதலில் எழுதிய நான் பின்னர், “கூறினார்கள்’ என்று மிகைப்படுத்தி திரிபு வேலை செய்து விட்டேனாம்.

ஹதீஸில் “கருதினார்கள்’ என்று இருக்கும் போது “கூறினார்கள்’ என்று எழுதியதால் நபிகள் நாயகம் (ஸல்) மீது இட்டுக்கட்டிக் கூறி விட்டேனாம்.

நாம் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை விளக்குவதற்கு முன் முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

தான் செய்யாததைச் செய்ததாக ஒருவர் நினைக்கிறார் என்றாலும் கூறினார் என்றாலும் இவரது வாதத்துக்கு எந்த வகையிலும் அது உதவப் போவதில்லை. இரண்டுமே மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்ற ஒரே கருத்தைத் தந்து அந்த ஹதீஸ் கட்டுக்கதை என்பதைத் தான் உறுதிப்படுத்தும்.

உருப்படியான வாதம் இல்லாததால் வார்த்தைக்கு வார்த்தை பிழை கண்டு பிடிப்பதில் தான் எட்டுத் தொடரையும் வீணடித்திருக்கிறார்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) மேற்கண்டவாறு கருதினாலும் அது மன நிலை பாதிப்பு தான்; அப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும் அதுவும் மன நிலை பாதிப்புத் தான்.

கருதினார்கள் என்றும் கூறினார்கள் என்றும் சொல்வது முரண்பட்டதா என்பதைப் பார்ப்போம்.

கருதுதல் என்பது ஒருவரின் உள்ளத்தில் உள்ளதாகும். மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை அவர் மற்றவருக்குக் கூறாமல் அறிந்து கொள்ள முடியாது. ஒருவரது மனதில் தோன்றியதை இன்னொருவர் சொல்லி விட்டார் என்றால் அவருக்கு இறைத் தன்மை இருப்பதாகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலே ஈடுபட்டதாகப் போலித் தோற்றம் ஏற்பட்டது என்றால், எனக்கு இப்படியெல்லாம் ஏற்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொல்லாமல் ஆயிஷா (ரலி) அறிய முடியாது.

ஒரு மனிதர் கற்பனை செய்வதை மற்றொருவர் கூறுகிறார் என்றால், கற்பனை செய்தவர் அந்த மற்றொரு மனிதரிடம் அதைத் தெரிவித்து விட்டார் என்பது தான் பொருள்.

கருதினார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக ஹதீஸில் கூறப்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆயிஷா (ரலி)யிடம் கூறி விட்டார்கள் என்பது தான் பொருள். இதில் இட்டுக்கட்டுதல் ஏதும் இல்லை.

இஸ்மாயில் ஸலபி மேலும் எப்படியெல்லாம் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார் என்று பாருங்கள்.

தனது தர்ஜமாவில் 1298ம் பக்கத்தில் இக்கருத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அழுத்தம் கொடுத்து பின்வருமாறு கூறுவது வேதனையானது. “முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் செய்ததைச் செய்யவில்லை என்கின்றார். செய்யாததைச் செய்தேன் என்கின்றார்’                 (பக்: 1298)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் இப்படியான பாதிப்பு எல்லாம் ஏற்பட்டன என்று ஹதீஸில் இடம்பெறாத கருத்துக்களை ஹதீஸின் கருத்தாகப் புனைந்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, நபியவர்களது அந்த சூழ்நிலை பற்றித் தப்பெண்ணத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார். நியாயமாக விமர்சிப்பதாக இருந்தால் ஹதீஸில் கூறப்பட்டது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதையல்லவா எடுத்துக் காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு ஹதீஸில் சொல்லப்படாத கருத்தைத் திணித்து நிரூபிக்க முனைவது எந்த வகையில் நியாயமானது என்பதைப் பொதுமக்கள் நடுநிலை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். எவ்வித அறிவு நாணயமும் இல்லாமல் எப்படி சித்து வேலை ஸிஹ்ர் வேலை செய்கிறார் என்று பாருங்கள்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி எழுதியுள்ளார்.

நாம் எழுதியதை இருட்டடிப்புச் செய்து தில்லு முல்லு செய்துள்ளதைக் காணுங்கள்.

”முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?” என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் எழுதியது இது தான். இதில் அடிக்கோடிட்ட முக்கியமான பகுதியை வெட்டி எடுத்து விட்டு, மூஸா நபி காலத்து சூனியக்காரர்களை மிஞ்சும் வகையில் கண்கட்டி வித்தை காட்டுகிறார்.

இஸ்மாயில் சலபி பின் வருமாறு தனது பத்திரிகையில் ஒரு வாசகம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

“நானே கடவுள் என்று பிர்அவ்ன் கூறினான்”

அவரை விமர்சிக்கப் புகுந்த நாம், “இஸ்மாயில் சலபி, நானே கடவுள் என்று எழுதிவிட்டார்” என்று கூறினால் இஸ்மாயில் சலபி ஆமாம் என்று ஒப்புக் கொள்வாரா?

மேற்கண்டவாறு காஃபிர்கள் விமர்சிப்பார்கள் என்று தான் நாம் குறிப்பிட்டோம். காபிர்கள் விமர்சிப்பார்கள் என்பதை வெட்டி விட்டு, அதை நாமே கூறுவதாகச் சித்து விளையாட்டு காட்டுகிறார்.

இந்த லட்சணத்தில் நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்ற அறிவுரை வேறு!

கட்டுரை ஸிஹ்ர் எனும் பித்தலாட்டம் பற்றியதாக இருப்பதால் அந்தப் பித்தலாட்டத்தை உண்மை என்று இவர் நம்புவதால் தனது மறுப்பில் ஆங்காங்கே ஸிஹ்ர் செய்து மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார்.

அவற்றை அடுத்த தொடரில் காணலாம், இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————

கேள்வி – பதில்

? வீடு இல்லாமல் கஷ்டப்படும் எங்களுக்கு உதவி செய்யும் நோக்கில், பண வசதி படைத்த தூரத்து உறவினர் ஒருவர் அவருக்குரிய ஒரு இடத்தை எங்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அதை விற்று விட்டு வீடு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதை நம்பி நாங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டோம். பிறகு ஒரு வருடம் கழித்து, அந்த உறவினர் (அன்பளிப்புச் செய்தவர்) அந்த இடத்தை விற்று, பணத்தை என்னிடம் தர வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு மார்க்கத் தீர்வு என்ன?

எம். தவுலத் நிஸா, நாகப்பட்டினம்

அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால் அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கி விட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அதை வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக் கொள்ளாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன் தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்என்றார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 1490

இந்த ஹதீஸில், அன்பளிப்புச் செய்த பொருளை விலை கொடுத்து மீண்டும் வாங்குவதற்கே நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள். அப்படியானால் விலை எதுவும் கொடுக்காமல் திரும்பப் பெறுவது எத்தகைய குற்றம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அன்பளிப்புச் செய்து விட்டால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்ள அவருக்கு உரிமையில்லை. மார்க்க அடிப்படையில் அந்த இடம் உங்களுக்குரியது தான். அதை விற்று அந்தக் கிரயத்தை அன்பளிப்புச் செய்தவரிடம் கொடுக்கத் தேவையில்லை.

எனினும், இந்நாட்டின் சட்டப்படி அன்பளிப்பை உரிய முறையில் பதிவு செய்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். பதிவு செய்யாத பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர், நிலத்தை உங்களிடமிருந்து பறித்துக் கொண்டால் அவரை இந்நாட்டின் சட்டப்படி தண்டிக்க முடியாது. எனினும், அவ்வாறு செய்தால் அவர் இறைவனிடத்தில் குற்றவாளியாவார்.

? லஞ்சம் வாங்குபவர்களையும், கொடுப்பவர்களையும் அல்லாஹ் சபிப்பதாக ஹதீஸில் படித்தேன். ஆனால் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்ற அலுவலகங்களில் எண்ணற்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமா? அல்லது அல்லாஹ் நம் சூழ்நிலையையும் உள்ளத்தையும் அறிந்து மன்னிப்பானா?

ஃபாத்திமா, ஷிமோகா, கர்நாடகா

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன் 2:188)

இந்த வசனத்தில், லஞ்சம் என்றால் என்ன என்பதற்கு ஒரு அளவுகோலை அல்லாஹ் கூறுகின்றான். பிறரது பொருளை, அல்லது பிறரது உரிமையை அநியாயமாக அடைவதற்காக அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் லஞ்சமே இவ்வசனத்தில் தடை செய்யப்படுகிறது.

உதாரணமாக, ரேஷன் கடைகளில் மக்களுக்குச் சலுகை விலையில் விற்பதற்காகப் பொருட்களை வைத்துள்ளார்கள். இந்தப் பொருட்களை நாமும் ரேஷன் முறையில் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மேலதிகமாக நமக்குப் பொருள் தேவை என்பதால் ரேஷன் கடை ஊழியருக்குப் பணத்தைக் கொடுத்து, கூடுதல் பொருள் வாங்கக் கூடாது. காரணம், அது பிற மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பொருளாகும். அதை லஞ்சம் கொடுத்து வாங்கக் கூடாது.

ஆனால் அதே சமயம், ரேஷன் கடையில் நமக்குத் தர வேண்டிய பொருளை வாங்குவதற்கே கூடுதல் தொகை கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இங்கு அடுத்தவர் பொருளை நாம் அடைவதற்காக லஞ்சம் கொடுக்கவில்லை. நமது பொருளைப் பெறுவதற்கே கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதை நமது சக்திக்குட்பட்டு எதிர்த்துப் போராட வேண்டும்

இது மற்றவர்களின் உரிமையைப் பறிக்காத லஞ்சமாகும். நம்முடைய வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு அந்தக் கடமையைச் செய்வதற்காக மக்களிடம் ஒரு தொகையைக் கேட்பது அநியாயம் என்பதால் இதையும் நாம் எதிர்க்க வேண்டும்.

நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.

நமது நாட்டில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நிலை தான் உள்ளது. நமது உரிமையைப் பெறுவதற்காகவே நாம் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒரு வீடு கட்டுவதற்காக அனுமதி கோரி மாநகராட்சியை அணுகினால் அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு அனுமதி தருவது மாநகராட்சியின் கடமை. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதில்லை. வேண்டுமென்றே கால தாமதம் செய்து இழுத்தடிப்பது, தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்துவது, நடைமுறையில் இல்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற காரியங்களில் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபடுவார்கள். சம்திங் வெட்டினால் எல்லாம் சரியாகி விடும். கட்டட அனுமதி உடனே கிடைத்து விடும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், கையூட்டு கொடுக்காமலேயே நாம் நமது உரிமையைப் பெறுவதற்காகப் போராடலாம். லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாம். அது தான் உண்மை முஸ்லிமின் வழிமுறையாகும். ஆனால் யாரைப் பற்றி நாம் புகார் தெரிவிக்கின்றோமோ அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முற்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, அதற்குரிய “சன்மானத்தை’ அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் புகார் தெரிவித்த நம் மீதே சட்டம் பாயும். எனவே இது ஒட்டுமொத்தமாக ஆட்சியாளர்களால் சரி செய்யப்பட வேண்டிய ஒரு சமூகத் தீமையாகும்.

இதனால் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் இது போன்ற கையூட்டுகளைக் கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.

ஆனால் அதே சமயம், அடுத்தவரது உரிமையைப் பறித்து நாம் காரியம் சாதிப்பதற்காகப் பணம் கொடுத்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகும். இதில் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பில்லை.

பத்து பேருக்குப் பின்னர், வரிசையில் வர வேண்டிய நமது விண்ணப்பத்தை, முதன்மைப்படுத்துவதற்காக நாம் பணம் கொடுத்தால் அதில் அந்தப் பத்து பேரின் உரிமை பாதிக்கப்படுகின்றது. இதற்கு நிர்ப்பந்தம் என்ற காரணத்தைக் கூற முடியாது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

? சில கிராமங்களில் பெண் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதற்காக பெண் ஆலிமாக்களை அழைக்கிறார்கள். இது சரியாகுமா? இது ஆலிமாக்களுக்குக் கண்ணியத்தைக் குறைக்கும் விஷயமா? பெண் ஜனாஸாவை கணவர் குளிப்பாட்டலாமா? விளக்கவும்.

ஏ. சித்திக், கீழக்கரை

சில இடங்களில் ஜனாஸா குளிப்பாட்டுதல் என்பது ஒரு இழிவான வேலை என்று கூறி, ஆண் ஜனாஸாவை பள்ளிவாசல் முஅத்தின் தான் குளிப்பாட்ட வேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இதற்கென தனியாக ஊழியர்களை நியமித்து இந்தக் காரியத்தைச் செய்ததில்லை. நபித்தோழர்கள் தான் செய்துள்ளனர்.

முஅத்தின்கள் பள்ளிவாசல் ஊழியர் என்பதால், அவரை ஜமாஅத்தினர் அடிமையாகப் பாவித்து, இது போன்ற பணிகளை ஒப்படைப்பது வழக்கம். ஆனால் பெண் ஆலிமாக்களுக்கு அந்த நிலை இல்லை. அவர்கள் ஊர் ஜமாஅத்துக்குக் கட்டுப்பட்ட ஊழியர்களாக இருப்பதில்லை. எனவே முஅத்தின்களை அழைப்பதற்கும், ஆலிமாக்களை அழைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஒரு மகள் மரணித்து விட்டதும் நபி (ஸல்) அவர்கள் வந்து “அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவையென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்எனக் கூறினார்கள். நீராட்டிய பின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது கீழாடையைத் தந்து “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்: புகாரி 1258

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளை, நபித்தோழியரான பெண்கள் குளிப்பாட்டியுள்ளனர். எனவே ஆலிமாக்கள் என்றால் அவர்களுக்குக் குளிப்பாட்டும் சட்டம் தெரிந்திருக்கும் என்பதற்காக அவ்வாறு அழைத்தால் அதில் தவறில்லை. குறிப்பிட்ட பிரிவினர் தான் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு அழைத்தால் அதைத் தவிர்க்க வேண்டும்.

ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை.

ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.

கணவனை மனைவியும் மனைவியை கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் இதைத் தடுக்க முடியாது.

————————————————————————————————————————————————

கிரகணம் ஓர் அறிவியல் விளக்கம்

வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் இக்கிரகணம், கங்கண சூரிய கிரகணமாக (Annular)தெரியும்.

(கங்கண சூரிய கிரகணம் என்றால் என்ன என்பது பற்றித் தனியாக விளக்கப்பட்டுள்ளது.)

இக்கிரகணம் இந்தியப் பெருங்கடல் பகுதியில், 11 நிமிடங்கள், 08 வினாடிகளுக்கு கங்கண சூரிய கிரகணமாக நிலைக்கும். 3000 ஆண்டுகளுக்கிடையில் நிகழும் மிக நீண்ட கங்கண சூரிய கிரகணமாகும் இது. இனி கி.பி.3043ஆம் ஆண்டில் தான் இதுபோன்றதொரு கிரகணம் நிகழும்.

இந்த கங்கண சூரிய கிரகணத்தை (சூரியனின் வட்ட உருவை, சந்திரன் மறைத்து, நெருப்பு மோதிரம் போல் காட்சியளிக்கும் இந்த அதிசயத்தை) மத்திய ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மாலத்தீவு, இலங்கை, பர்மா மற்றும் கிழக்கு சீனாவின் சில பகுதிகளிலிருந்து சுமார் 3 பில்லியன் மக்கள் இக்கிரணகத்தைக் காண இயலும்.

ஆண்டுதோறும் பொதுவாக (முழு கிரகணம் – பர்ற்ஹப், கங்கண கிரகணம் – ஆய்ய்ன்ப்ஹழ், பகுதி கிரகணம் – டஹழ்ற்ண்ஹப் என) உலகின் ஏதேனும் சில பகுதிகளில் 5 கிரகணங்கள் வரை நிகழும். ஒரு குறிப்பிட்ட பகுதியில், பகுதி சூரிய கிரகணம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும், வேறு சில காலங்களில் சில மாதங்களுக்கு ஒரு முறையும் காணக்கூடியதாக இருக்கும். எனவே, முழு சூரிய கிரகணம் மற்றும் கங்கண சூரிய கிரகணம் ஒரே இடத்தில் மீண்டும் நிகழ நீண்ட காலமாகும்.

தமிழ்நாட்டில், இதற்கு முன், கி.பி.1871ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதியன்று தான் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

தமிழ்நாட்டில், அடுத்த முழு சூரிய கிரகணத்தை கி.பி.2168ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதியன்று தான் காண முடியும்.

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கங்கண சூரிய கிரகணம் 1901ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று தான் கடைசியாகத் தெரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த கங்கண சூரிய கிரகணம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியன்று தான் தென்படும். இது 15.01.2010 அன்று நடைபெறவுள்ள கங்கண சூரிய கிரகணத்தைப் பற்றிய செய்தித் தொகுப்பாகும்.

கிரகணம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? என்பன பற்றி ஒரு சிறு குறிப்பை இப்போது பார்ப்போம்.

ஒளிமறைப்பு (கிரகணம்)

புவியும் நிலவும் சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகின்றன. அவ்வாறு புவியும் நிலவும் பெறுகின்ற சூரிய ஒளியைப் புவியோ அல்லது நிலவோ தடுக்கும் போது கிரகணம் ஏற்படுகின்றது. இத்தகைய ஒளிமறைப்பைக் கிரகணம் என நாம் அழைக்கிறோம்.

இந்நிகழ்ச்சியை ஒரு எடுத்துக்காட்டுடன் நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். காலை அல்லது மாலை வேளைகளில் சூரியனை நோக்கி நில்லுங்கள். அப்பொழுது உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் விழுவதைப் பார்க்கலாம். மற்றொருவரை உங்களுக்குப் பின்னால் உங்கள் நிழலில் நிற்கச் சொல்லுங்கள். அவர் மீது உங்கள் நிழல் படிந்திருக்கும். அவ்வாறு நிற்பவரின் மீது சூரிய ஒளி விழாமல் உங்கள் நிழல் தடுக்கிறது. உங்கள் நிழலில் நிற்பவரை நிழலிலிருந்து விலகி நிற்கச் சொல்லுங்கள், இப்பொழுது சூரிய ஒளி இருவர் மீதும் சமமாக விழுகிறது.

அது போலவே சூரியனுக்கு நேராக வரும் பொழுது புவியின் நிழலும் நிலவின் நிழலும் விண்வெளியில் விழுகின்றன. புவியின் நிழலில் நிலவு வரும் பொழுது அல்லது நிலவின் நிழலில் புவி வரும் பொழுது ஒளிமறைப்பு நிகழ்ச்சி (கிரகணம்) ஏற்படுகிறது.

ஒளிமறைப்பு நிகழ்ச்சி (கிரகணம்) எல்லா பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் நிகழ்வதில்லை. ஏன்? நிலவு புவியை வலம் வரும் பாதையின் கோணம், புவி சூரியனை வலம் வரும் பாதைக் கோணத்தை விட 5 டிகிரி சாய்வாக உள்ளது. எனவே பெரும்பாலும் நிலவு புவியின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது. அது போலவே புவியும் நிலவின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது. அவற்றின் சுழலும் கால வேறுபாட்டினால் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் புவியானது நிலவின் நிழல் விழும் பகுதியிலும், நிலவானது புவியின் நிழல் விழும் பகுதியிலும் வந்து விடுகின்றன.

அவ்வேளைகளில் சூரியன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து விடுகின்றன. ஆதலால் இவை மூன்றின் அமைவிடங்களைப் பொறுத்து கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் நிகழ்ச்சி ஏற்படக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

 1. சூரியன், புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைய வேண்டும்.
 2. நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் புவி அமைய வேண்டும்.
 3. முழுநிலவாகக் காட்சியளிக்கும் பௌர்ணமி இரவாக இருத்தல் அவசியம்.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் நிகழ்ச்சி ஏற்படக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

 1. சூரியன், நிலவு மற்றும் புவி ஆகியவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.
 2. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு அமைய வேண்டும்.
 3. அமாவாசை நாளாக இருத்தல் அவசியம்.

சந்திரன், சூரியனை விட மிக மிகச் சிறியது. ஆனால் சந்திரனால் எவ்வாறு சூரியனை முழுமையாக மறைக்க முடிகின்றது?

ஒரு கண்ணை மூடிக் கொண்டு மற்றொரு கண்ணுக்கு அருகில் நம் விரலை வைத்துப் பார்த்தால் எதிரே சற்றுத் தொலைவில் உள்ள கட்டடம் பெரிதாக இருந்தாலும், தொலைவில் உள்ளதால் நமக்கு சிறிதாகத் தெரிகின்றது. அது போல் விரல் சிறிதாக இருந்தாலும், நம் கண்ணுக்கு அருகில் இருப்பதால் பெரிய கட்டடத்தையே மறைக்கக் கூடியதாக இருக்கின்றது.

சந்திரனை விட சூரியன் 400 மடங்கு பெரிதாக இருந்தாலும், பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரனும், சூரியனும் ஒரே அளவாக இருப்பதாகத் தோன்றுகின்றது. இதற்குக் காரணம், பூமியிலிருந்து சந்திரன் இருக்கும் தூரத்தைக் காட்டிலும், பூமியிலிருந்து சூரியன் 400 மடங்கு தூரத்தில் இருப்பது தான். ஆகவே தான் சூரியனும் சந்திரனும் ஒரே அளவாக நமக்குத் தெரிகின்றன. இதனால் சந்திரன், தன்னை விட 400 மடங்கு பெரிதான சூரியனை முழுமையாக மறைக்க முடிகின்றது.

முழு சூரிய கிரகணம் (Total Eclipse)

சூரியனுக்கு நேர் எதிரில், புவிக்கு இடையில் நிலவு வருகின்ற நேரங்களில் புவி நிலவின் நிழல் பகுதிக்குள் சென்று அமைகிறது. அவ்வாறு நிலவின் நிழலில் புவி அமைவதால் சூரிய ஒளி புவியின் மீது படாமல் மறைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி சூரிய கிரகணம் எனப்படுகிறது. புவியை விட நிலவு உருவில் மிகச் சிறியது. எனவே புவியின் மொத்தபரப்பில் அதன் நிழல் மிகக் குறைந்த பரப்பில் மட்டுமே விழுகிறது. இவ்வாறு நிலவின் நிழல் விழும் புவியின் பரப்பில் வசிக்கும் மக்கள் மட்டுமே முழு சூரிய கிரகணத்தைக் காண இயலும். ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் முழுசூரிய கிரகணத்தைக் காண இயலாது.

புவி தனது அச்சில் சுழல 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. நிலவு தன் அச்சில் சுழல 27.3 நாள்களாகின்றன. இவ்விரண்டும் சுழலும் வேகத்தில் காணப்படும் வேறுபாட்டினால் மிகக் குறைந்த நேரமே அதாவது 8 நிமிடங்கள் மட்டுமே முழு சூரிய கிரகணம் (Total Eclipse) நீடிக்கும். அந்த 8 நிமிடங்கள் புவி இருளில் மூழ்கிவிடும்.

பகுதி கிரகணம் (Partial Eclipse)

சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும். ஆனால் சூரியனை அது முழுமையாக மறைக்காது. இது பகுதி சூரிய கிரகணம் எனப்படுகின்றது.

கங்கண கிரகணம் (Annular Eclipse)

கங்கணம் என்றால் தமிழில் வளையம், மோதிரம், காப்பு என்று பொருள்படும். புவி சூரியனைத் தனது நீள்வட்ட பாதையில் வலம் வருகிறது. அவ்வாறு வலம் வரும் பொழுது ஓர் ஆண்டில் சூரியனுக்கும் புவிக்கும் இடையில் காணப்படும் தொலைவு சிறிது மாறுபடுகிறது. புவி சூரியனுக்கு அருகில் வரும் பொழுது நிலவு வெகு தொலைவில் அமைகிறது. அவ்வேளைகளில் நிலவால் சூரியனை முழுமையாக மறைக்க இயலாது. ஏனெனில் நிலவு சூரியனை விட அளவில் மிகச் சிறியது. ஆதலால் இத்தகைய ஒளி மறைப்பின் போது சூரியனின் பிரகாசமான மையப் பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்படுகிறது. அவ்வேளைகளில் வெளிப்படும் வெளிச்சம் சூரியனின் விளிம்புகளிலிருந்து மட்டுமே வருகிறது. இதை ஒரு சிறிய சோதனை மூலமாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு 50 பைசா நாணயத்தை வைக்கவும். 50 பைசா நாணயத்தின் எல்லையில் ஒரு ரூபாய் நாணயத்தின் விளிம்புகள் தெரியும். ஒரு ரூபாய் நாணயத்தின் மையம் 50 பைசா நாணயத்தால் மறைக்கப்படுகிறது. அது போலவே சூரியனின் மையப்பகுதி நிலவினால் மறைக்கப்பட்டு நிலவின் வட்டு (Disc) எல்லையிலிருந்து மட்டுமே சூரிய வெளிச்சம் வெளிப்படும். இந்த நிகழ்ச்சி வளைய கிரகணம் அல்லது கங்கண கிரகணம் (Annular) எனப்படுகிறது. இத்தகைய கிரகணத்தையும் நிலவின் நிழல் விழும் புவியின் பரப்பில் வசிக்கும் மக்கள் மட்டுமே காண இயலும்.

கலப்பு கிரகணம் (Hybrid Eclipse)

உலகின் ஒரு பகுதியில் முழுக் கிரகணமாகவும், உலகின் வேறு சில பகுதிகளில் வளைய சூரிய கிரகணமாகவும் காட்சியளிப்பது கலப்பு கிரகணம் ஆகும்.

பொதுவாக சூரிய கிரகணம் ஓர் ஆண்டில் இரண்டு முதல் நான்கு முறை நிகழக்கூடும். சில ஆண்டுகளில் அரிதாக ஐந்து முறை நிகழலாம். சூரிய கிரகணத்தை நமது கண்களால் நேரடியாகப் பார்க்கக் கூடாது. ஏனெனில் சூரிய ஒளி நம் கண்ணுக்குக் கேடு விளைவிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

————————————————————————————————————————————————

கிரகணமும் கியாமத்தும்

வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நிகழவிருக்கின்ற கங்கண சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விளக்கங்களைக் கண்டோம். இப்போது இதில் மார்க்கம் தொடர்பான விளக்கத்தைப் பார்ப்போம்.

இஸ்லாம் கிரகணத்தைப் பற்றி என்ன கூறுகின்றது?

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்நாளில் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்து விட்டிருந்தார். உடனே மக்கள், இப்ராஹீம் இறந்ததால் தான் சூரியனுக்குக் கிரகணம் பிடித்து விட்டது என்று பேசினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமையைக் களைந்தெறிகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபியவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டதுஎன்று பேசிக் கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த விளக்கம் சான்றாக அமைந்துள்ளது. கிரகணம் பற்றி மக்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் போது, நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமை இருளை நீக்கி, கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும் நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு என்பதை உணர்த்துகின்றார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு சாதாரண மனிதராக இருந்து, மக்கள் இவ்வாறு பேசியிருந்தால் அதைத் தமது தூதுத்துவத்திற்கு ஆதாரமாக ஆக்கியிருப்பார்கள். நபியின் மகன் இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது என்று மக்களே பேசிக் கொள்ளும் போது அதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று வாதிப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

கிரகணம் ஏற்படுவதற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளான சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வரும் நிகழ்வு என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். அவர்கள் இறைத் தூதர் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்üக்குச் சென்றார்கள்.

நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியது போல் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் நாளாகத் தான் அமைகின்றது. கொம்புள்ள இரண்டு ஆடுகள் கால் முட்டிகளைத் தூக்கிக் கொண்டு முட்டுவதற்கு ஆயத்தமாகி நிற்பது போல் மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.

வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்.

அல்குர்ஆன் 55:37

சந்திர கிரகணத்தின் போது வெண்ணிலவு சிவந்து எரிவது போன்று வானம் எங்கும் சிவப்பு வண்ணம் தெளிக்கப்பட்டது போல் காட்சியளிக்கின்றது. இது கியாமத் நாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போன்றுள்ளது.

கங்கண சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நெருப்பு பற்றி எரிவது போல் தோன்றுகின்றது. ஏதோ மறு நொடியில் மறுமை துவக்கம் அமைந்து விடுமோ என்பது போன்ற ஒரு கோர பயம் நம்மை ஆட்கொள்கின்றது.

கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 28:71)

இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மை அச்சுறுத்துவது போன்று, பூமியில் விழும் நிழலைத் தொடரச் செய்து விட்டால் அவனைத் தவிர வேறு யார் வெளிச்சத்தைத் தர முடியும்?

நபிகள் நாயகம் கண்ட நரகக் காட்சி

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் “சொர்க்கத்தைக் கண்டேன்அல்லது “சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது‘. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்து புசித்திருப்பீர்கள்.

மேலும் நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகüல் அதிகமாகப் பெண்களையே கண்டேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கிரகண நாளில் சுவனம் மற்றும் நரகத்தின் காட்சிகளை நேரடியாகவே கண்ட காட்சி, உண்மையில் கிரகணம் கியாமத் மற்றும் மறுமை உலகை அடியார்கள் ஒரு கணம் தங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதற்காகத் தான் என்று தெளிவாக விளங்குகின்றது.

அனைத்தையும் கண்ட அல்லாஹ்வின் தூதர்

நீங்கள் நுழையவிருக்கின்ற (மறுமை வெளி, சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட) அனைத்தும் எனக்குக் காட்டப்பட்டன. எனக்குச் சொர்க்கம் காட்டப்பட்ட போது அதிலிருந்த பழக் குலையொன்றை நான் எட்டிப் பிடிக்கப் போனேன். ஆனால், எனது கைக்கு எட்டவில்லை. எனக்கு (இத்தொழுகையின்போது) நரகமும் காட்டப்பட்டது. அதில் பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.) மேலும், நரகத்தில் நான் அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன். அவர் நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்று கொண்டிருந்தார். மக்கள் “ஒரு மாமனிதர் (அல்லது தலைவரின்) மரணத்திற்காகவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுகிறதுஎன்று கூறுகின்றனர். (ஆனால்) அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றை உங்களுக்கு இறைவன் காண்பிக்கிறான். அவற்றுக்குக் கிரகணம் ஏற்பட்டால் வெளிச்சம் வரும்வரை நீங்கள் (இறைவனைத்) தொழுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1508

கிரகணத்தின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையில், பூனைக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஹாஜிகளிடம் செய்த திருட்டு உட்பட சமுதாயத்திற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து, அனைத்துப் பாவங்களுக்கும், தீமைகளுக்கும் உரிய தண்டனையும் அத்தொழுகையில் கண்டதாகக் குறிப்பிடுவது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது.

திகிலடைந்த திருத்தூதர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய கிரகண அதிர்ச்சி உரையில் தொடர்ந்து கூறியது:

முஹம்மதின் சமுதாயத்தாரே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபட்டாலும் (அதைக் கண்டு)  கடுமையாக ரோஷம் கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். நான் (சொல்ல வேண்டியதைச்) சொல்லிவிட்டேன் அல்லவா?

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1499

கிரகணத்தைக் கண்டு பயந்த நபி (ஸல்) அவர்கள் பயணமே சொல்லி விட்டார்கள் என்றால் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் என்று தான் நாம் விளங்க முடிகின்றது.

கப்ர் வேதனையைப் பற்றிய எச்சரிக்கை

எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இந்த) இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது:

நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு “நிகரானஅல்லது “நெருக்கமானஅளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.

அப்போது (கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும். அப்போது “இறை நம்பிக்கையாளர்அல்லது “உறுதிகொண்டவர்‘ “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவரது அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தாம்என்று மும்முறை கூறுவார். அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து) “தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!என்றும் “நிச்சயமாகவே நீர் (இறைத் தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்என்றும் கூறப்படும். “நயவஞ்சகனோஅல்லது “சந்தேகப் பேர்வழியோ‘, “எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்என்பான்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 86, 184

கிரகணமும் வணக்கமும்

அறிவியலாளர்கள் கண் கொள்ளாக் காட்சி என்று கேமராக்களையும் வீடியோக்களையும் தூக்கிக் கொண்டு சூரிய, சந்திர கிரகணங்களைப் படம் பிடிக்க பேயாய் அலைகின்றனர். சிலர் விமானத்தில் பயணம் செய்து விமானத்தில் இருந்தவாறே கிரகணத்தை கேமராக்களுக்குள் விழுங்குகின்றனர்.

இப்படி ஒரு சாரார் ஆய்வில் இறங்கியிருக்கும் போது மற்றொரு சாரார் சூரிய, சந்திர கிரகணங்களை ஏதோ ஒரு வான வேடிக்கை போல் உல்லாசப் பார்வையில் இறங்கி விடுகின்றனர். மூன்றாவது சாரார் ஒரு விதமான பயத்திலும் மூட நம்பிக்கையிலும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் மறுமையை நினைவுபடுத்துகின்ற மாபெரும் நிகழ்வுகள் என்பதை மனித குலத்தின் மனதில் பதிய வைத்து அந்நாளில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடச் சொல்கின்றது.

அப்போது செய்ய வேண்டிய வணக்கங்கள் என்னென்ன என்ற பட்டியலையும் விரிவாகத் தருகின்றது.

 1. விரைந்து பள்ளிக்கு வருதல்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்üவாசலுக்குள் சென்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 1040

 1. தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்üவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் “தக்பீர் (தஹ்ரீமா)கூறி, நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்துஎன்று கூறி (நிமிர்ந்து) விட்டு, சஜ்தாச் செய்தார்கள்.

பிறகு இதுபோன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- அப்போது நான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)கüல் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன் (கிரகணம் விலகி) வெüச்சம் வந்து விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணங்களைக் கூறிப் போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள், “(சூரியன், சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1046

 1. இறைவனை நினைவு கூர்தல், பிரார்த்தனை, பாவமன்னிப்பு

அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

கிரகணமும் தர்மமும்

நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்), “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1044

கிரகணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் தர்மத்தை வலியுறுத்துவதால் அந்நாளில் நாம் தர்மம் செய்து நபிவழியை செயல்படுத்துவோமாக! மறுமையில் நன்மையைப் பெறுவோமாக!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எத்தனையோ புதுப்புது கிளைகளில் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்புவதற்காக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகவும், நமது ஜமாஅத்தின் சமூக நலப் பணிகளுக்காகவும், நலிவடைந்துள்ள நமது சொந்த பந்தங்களுக்காகவும் அந்நாளில் அள்ளி வழங்குவோமாக!

பெண்களும் கிரகணமும்

நான் (தொழுதுகொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகüல் அதிகமாகப் பெண்களையே கண்டேன்என்று கூறினார்கள். மக்கள், “ஏன்? அல்லாஹ்வின் தூதரே!என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பெண்கüன் நிராகரிப்பே காரணம்என்றார்கள். அப்போது “பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?” என வினவப்பட்டது. அதற்கு “கணவன்மார்களை நிராகரிக்கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் “உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லைஎன்று சொல்லிவிடுவாள்என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தின் போதும், கிரகண தினத்தின் போதும், பெண்களை நரகத்தில் அதிகமதிகம் பார்த்ததாகவும் அதற்குரிய காரணத்தையும் சொல்கிறார்கள். பெண்கள் இந்தக் காரணத்தைக் களைந்து தங்களை நரகத்திலிருந்து காத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறாக, கிரகணம் ஏற்படும் போது மூட நம்பிக்கைகளைத் தவிர்ந்து, மறுமை நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வோமாக!

————————————————————————————————————————————————

தொடர்: 3

பெண்கள் தங்கம் ஆணியத் தடையா?

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம். அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண் ஆகியோருக்கு) நரக நெருப்பினால் ஒரு வளையத்தை யார் அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை யார் அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க யார் விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்!என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவூத் 4236

இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும்.

மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்தத்தைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம்.

முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள்.

அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர்.

“நேசிக்கின்றவளுக்கு’ என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும்; பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாகத் தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம்.

மேற்படி நபிமொழியில் ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் மாதிரிகள் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழி விதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம்; நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம். இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூற முடியும்.

இவ்வாறு கூறி தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும்.

இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன?

பொதுவாக, அரபு மொழியில் உள்ள சொற்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன்படுத்த வேண்டும் ஆண் ஆலிம் என்றும், பெண் ஆலிமா என்றும் கூற வேண்டும்.

ஹபீப் என்ற சொல்லமைப்பு மட்டும் இதிலிருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்குப் பயன்படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம்.

அதாவது ஆண் ஹபீப், பெண் ஹபீப் என்று கூறலாம்.

ஆனால் பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச் சேர்க்காமல் வெறும் ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால் ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த் வேண்டும்.

நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம்.

பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

“ஒரு கதீல் (கொல்லப்பட்டவன்; கொல்லப்பட்டவள்)ஐ நான் கடந்து சென்றேன்’ என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்குக் குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும்.

இந்த இலக்கண விதியின் படி மேற்கண்ட ஹதீஸை அணுகினால் இவர்கள் செய்த அர்த்தம் தவறு என்பது நிரூபணமாகும்.

இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும்.

இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 3698

மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும் ஹா என்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல் ஹு என்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும் “கும்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும் “குன்ன’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

“பயன்படுத்துங்கள்’ என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை.

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.

ஆண்கள் தங்க நகை அணிவதற்குத் தடை விதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.

(ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.)

அரபு இலக்கனத்துக்கு மாற்றமாகப் பொருள் செய்து விட்டு, அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்குத் தங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன் பின்னால் அல்லாஹ்வின் தூதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.

இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும்.

தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும்.

இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும்.

அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.

அது பெண்களைத் தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாக இன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்த அறிவிப்பில், தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பையும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றிய விவரங்களையும் நாம் தருகின்றோம்.

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரான அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹிப்னு தீனார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம்.

இமாம் யஹ்யா பின் மயீன்: என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு.

இமாம் இப்னு ஹஜர்: தவறிழைக்கும் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்.

இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும். அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது.

இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு. மேலும், இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது. ஆக மொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.

இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள்

இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:

இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குத் தகுதியானவர்.

இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்.

இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்.

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும் நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்குக் கிடையாது. இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம் ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர் என்பது தெளிவாக விளங்குகின்றது.

இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும்.

ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆணைக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா என்ற சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.

எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை.

அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.

எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாராளமாக அணிந்து கொள்ளலாம்.

என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும்.

எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல; அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.

யமன் நாட்டைச் சார்ந்த பெண்மணி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான்; இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.

ஏன்? இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.

இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வெள்ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள்.

மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் கடந்த இதழில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள்.

இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.

தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால், ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு     தொடர் – 15

யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

அபூஉஸாமா

இரட்டை வேடம் போடும் உலமாக்கள்

அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம்.

இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் ஷியாக்கள் கொண்டுள்ள அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே, காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே! (என்னை நெருங்கி என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே! (இறைவனாலேயே) மகத்தான ரட்சகர் என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவமிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப்பட்டு விட்டீர்!

இது, யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெறும் கவிதையின் பொருளாகும்.

இக்கவிதையில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.

 1. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.
 2. அப்துல் காதிர் ஜீலானி, கவ்துல் அஃலம் – மகத்தான ரட்சகராக இருக்கிறார்.
 3. மகத்தான ரட்சகர் என்ற பட்டத்தையும் மனிதர்களாக அவருக்குச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கி விட்டான்.
 4. மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.
 5. இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவரை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களும் இந்தக் கவிதை வரிகளில் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சொல்லப்படுகின்றது.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடக் கூடியவையாக உள்ளன.

அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்லிமும் இதை நம்பத் துணிய மாட்டான். நபிமார்களின் தொடரை, நபி (ஸல்) அவர்களுடன் நிறைவுபடுத்தி, கடைசி ஹஜ்ஜின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்தி விட்டதாக அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

நபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன், எதற்காக இறைவன் பேச வேண்டும்? நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே!

உமரின் நாவில் அல்லாஹ் சத்தியத்தைப் போட்டிருக்கிறான்; அதைக் கொண்டு அவர் பேசுகிறார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2573, இப்னுமாஜா 105

இந்த உயர்ந்த அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே! எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களுடன் பேசவில்லையே!

நபிமார்கள், ரசூல்மார்கள் நீங்கலாக உள்ள முன்னோர், பின்னோர் அனைவரிலும் இளைய தலைமுறையினரின் தலைவர்கள் அபூபக்ரும், உமரும் ஆவர் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 3597, இப்னுமாஜா 97

அபூபக்ரையும், உமரையும் சுட்டிக் காட்டி நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் பின்பற்றி நடங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூற்கள்: திர்மிதீ 3596, இப்னுமாஜா 94

இப்படி நபி (ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட அல்லாஹ் உரையாடவில்லை. ஆனால் இந்த இருவரின் தரத்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

எப்படியாவது அவரை நபியவர்களுக்குச் சமமாக ஆக்கி, பிறகு அவர்களை விடவும் மேலான நிலையில் உயர்த்துவதே இக்கவிஞனின் நோக்கம். இவருடன் அல்லாஹ் நேரடியாக உரையாடியதாகக் கூறுவதன் மூலம் அவரை நபியுடன் சமப்படுத்துகின்றான்.

“மகத்தான ரட்சகரே” என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ், “மகத்தான ரட்சகரே’ என்று அழைக்கவில்லை.

இறைவன் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்று கதை கட்டியதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின், அப்துல் காதிர் ஜீலானி நபியாகத் திகழ்ந்தார்கள் என்று காட்டுவதற்காக யூதர்கள் இயற்றியதே இந்தப் பாடல் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபியென்று பிதற்றிய போது, தனக்கு வஹீ வருகின்றது என்று உளறிய போது, அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த உலமாக்கள், அவனையும் அவனை நம்பியவர்களையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று ஃபத்வா அளிக்காதது மட்டுமின்றி, தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லறைகளுக்காக வீடுகளில் போய் பாடி விட்டு வரவும் எப்படித் துணிகிறார்கள்?

யாகுத்பாவை ஆதரிப்பவர்களுக்கும் காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது? இந்த நச்சுக் கருத்து இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தெரியாமல் போனது ஏன்?

காதியானிகள் காஃபிர்கள் என்று இந்த உலமாக்கள் ஒட்டு மொத்தமாக மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால் யாகுத்பாவை எழுதிய கவிஞன், முஹ்யித்தீனுக்கு வஹீ வருகின்றது என்று சொல்கின்றான். இவனை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் கண்டு கொள்வதில்லை. இந்தக் கவிதையை எதிர்த்து கடுகளவு கூட ஆட்சேபம் தெரிவிக்காமல் மவுன விரதம் பூண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

இந்தப் பாடல்களை பலப் பல வீடுகளில் படியேறிப் பாடுவதால் இவர்களுக்குப் படியளக்கப்படுகின்றது. கைகளில் கைமடக்கு கொடுக்கப்பட்டு பைகள் நிரப்பப்படுகின்றன. இந்த அற்பக் காசுக்காக, சொற்ப ஆதாயத்திற்காக இவர்கள் மார்க்கத்தை விலை பேசி விற்கின்றார்கள்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

அல்குர்ஆன் 2:174

இந்த ஆலிம்கள் தங்களுடைய வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்தக் கவிஞனின் விஷ வரிகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை.

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு ஒரு நீதி, இந்தப் புறம்போக்குக் கவிஞனுக்கு ஒரு நீதி என அநீதி பாராட்டுகின்றார்கள். மிர்ஸா குலாமை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்தது போன்று இந்தக் கவிஞனையும் காஃபிர் என்று ஃபத்வா கொடுக்க மறுக்கின்றார்கள். இதிலிருந்து இவர்கள் பக்கா ஷியாக்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கி முஹ்யித்தீனை உயர்த்துதல்

கவ்துல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!

இதுவும் யாகுத்பாவில் இடம்பெறும் கவிதை வரியாகும்.

நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ், அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாடியிருந்தால், நபியை உரிய விதத்தில் மதிக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் விஷயத்தையே தலைகீழாக மாற்றுகின்றான்.

அப்துல்காதிர் ஜீலானியின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டுமாம்.

உண்மையான முஸ்லிமை விட்டு விடுவோம். அரைகுறை முஸ்லிமாவது இதை ஏற்க முடியுமா?

நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இக்கவிஞனின் உண்மையான நோக்கம். நச்சுக் கருத்தை, நாசகார விஷத்தைக் கொண்ட இவை கவிதை வரிகள் அல்ல! நரக நெருப்புப் பொறிகள்!

கண்மணி நாயகம், உயிரினும் மேலான உத்தம நபி என்று இவர்கள் சொல்வதெல்லாம் வெளி வேஷம்; வெற்றுக் கோஷம்!

நபி புகழ் பாடுகின்றோம் என்று இவர்கள் குறிப்பிடுவது நடிப்பும் நாடகமும் ஆகும். இவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறோம் என்று சொல்வது பகிரங்க நயவஞ்சகமாகும். இதற்குச் சான்று தான் இந்தக் கவிதை வரிகள்.

இந்த ஆலிம்கள் ஷியாக்கள் என்பதால் தான் இப்படி நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று குறிப்பிடுவது பொய்யும் போலியுமாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

இஸ்லாம் சமூக நலன் காக்கும் சுமூக மார்க்கம்

இஸ்லாம் என்றாலே அது ஒரு பயங்கரவாத மார்க்கம்; அது ஒரு தீவிர மார்க்கம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தான் ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆனால் இஸ்லாம், மனித சமூகத்தின் நலன் காக்கும் ஒரு சுமூக மார்க்கமாகும்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி! நீர் வாழ் பிராணி நீரின்றி வாழ முடியாதது போல் சமூகம், சமுதாயமின்றி மனிதனால் வாழ முடியாது. அப்படி இன்றியமையாத சமூகத்தில் அவன் வாழும் போது தன் சக மனிதனிடம் அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன்னை அண்டி நிற்கின்ற பிராணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன் சுற்றுப்புறச் சூழலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழிகாட்டலை இஸ்லாம் வழங்குகின்றது. இப்போது அந்த வழிகாட்டலைப் பார்ப்போம்.

பிறர்நலம் பேணுபவரே முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 10

தனக்குள்ளதைப் பிறருக்கு விரும்புபவரே முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 13

மனைவியின் நலம் பேணல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் வழங்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 56

எச்சில் இலையில் மிச்சத்தைச் சாப்பிடுபவள் தான் மனைவி என்ற அடிமைத்தனத்தை மனித நேய மார்க்கமான இஸ்லாம் உடைத்தெறிகின்றது.

பிள்ளைகள் நலம் பேணுதல்

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கüடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லைஎன்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5998

பிள்ளைகளைக் கொஞ்சி முத்த மழை பொழியாதவர்களுக்கு இறைவனின் அருள் மழை பொழியாது என்று கூறுகின்றது இஸ்லாம்!

பெற்றோர் நலம் பேணுதல்

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5973

நமது பெற்றோரை பிறர் திட்டுவதற்கு நாம் காரணமாவதே பெரும் பாவம் என்றால், பெற்றோரை நாமே நேரடியாகத் திட்டும் பாவத்தின் பரிமாணத்தை அளவிடவே முடியாது.

அண்டை வீட்டாரின் நலம் பேணல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 73

அண்டை வீட்டுக்காரரிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறாதவர் சுவனம் செல்ல முடியாது.

புன்முறுவல் ஒரு புண்ணிய தர்மம்

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியேஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5122

மென்மையே மேன்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 5056

வதை செய்பவன் வதைக்கப்படுவான்

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்து சென்றார்கள். அம்மக்களின் தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். “கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்என்று சொல்லப்பட்டது.

அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், “அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்என்றார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

நூல்: புகாரி 5095

ஆயுதம் ஏந்தாதீர்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 164

கலப்படம் செய்யாதீர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 164

கத்தியைக் காட்டாதீர்

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7072

கத்தியைக் காட்டுவதே பாவம் எனும் போது வெட்டி வீழ்த்துவது பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

முள்ளை அகற்றுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமானஅல்லது “அறுபதுக்கும் அதிகமானகிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 58

பாதத்தில் தைக்கும் சிறிய முள்ளை அப்புறப்படுத்தச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கம், வெடிகுண்டு வைத்து அடுத்த ஆளைக் கொல்லச் சொல்லுமா?

பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்குப் பயப்படு!

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

இதை முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1496

எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் அநீதி இழைக்கப்பட்டு, கதற ஆரம்பித்தால், அநீதி இழைத்தவனுக்கு இறைவன் கண்டிப்பாகத் தண்டனை வழங்கியே தீருவான்.

சூழல் காப்பது சுகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “மக்களின் நடை பாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பது தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 448

இன்று இந்தியாவின் சுகாதாரக் கேட்டிற்கு அடிப்படைக் காரணமே, மக்கள் நடமாடும் பாதைகளில், அவர்கள் ஒதுங்குகின்ற நிழல் பகுதிகளில் மலஜலம் கழிப்பது தான் என்று இஸ்லாம் கூறி, எந்த அளவுக்குச் சூழல் காக்கச் சொல்கின்றது; சுகம் காணச் செய்கின்றது என்று பாருங்கள்.

மரம் வளர்ப்பதும் ஓர் அறம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3159

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று இன்றைய அறிவியல் உலகம், மரம் நடச் சொல்கின்றது. இஸ்லாமிய மார்க்கம், மரம் வளர்ப்பதை ஒரு தர்மம் என்று அன்றே மனித குலத்திற்குப் போதிக்கின்றது.

மிருக வதை

நான் இப்னு உமர் (ரலி) அவர்கüடம் இருந்தேன். அப்போது நாங்கள் “இளைஞர்கள் சிலரைஅல்லது “மக்கள் சிலரைக்கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்று விட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சயீத் பின் ஜுபைர் (ரஹ்)

நூல்: புகாரி 5515

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டி வைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லைஎன்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 2365

மிருகத்தையே வதை செய்யக் கூடாது என்று சொல்கின்ற இந்த மார்க்கம் மனித வதையை எப்படி அனுமதிக்கும்?

தண்டிக்கப்படும் தலைவர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2554

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்துகொள்ளுங்கள்: பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனை விட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 3579

இன்று தலைவர்கள் தைரியமாக ஊழல் செய்வதற்கும், ஊதாரித்தனம் செய்வதற்கும் அராஜகம் புரிவதற்கும், அநீதியிழைப்பதற்கும் அடிப்படைக் காரணமே, தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது; தண்டிக்க முடியாது என்ற எண்ணம் தான்.

ஆனால் இஸ்லாம் இத்தகைய தலைவர்களை மறுமையில் இறைவன் பிடித்து விடுவான் என்று எச்சரிக்கை செய்கின்றது. இந்த மறுமை பயம் மட்டுமே தலைவர்களை தவறு செய்வதிலிருந்து காக்கும் அரண் என்று தெளிவுபடுத்துகின்றது.

சபை ஒழுக்கம்

ஒரு மனிதர் தம் சகோதரரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 911

அடுத்தவனுக்கு அநீதி இழைப்பதை எந்த அளவுக்கு நுணுக்கமாகக் கவனித்து இஸ்லாம் தடை செய்கின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!

பணக்கார விருந்து பாவமான விருந்து

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து உணவே உணவுகüல் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5177

ஏழைகளைப் புறக்கணித்து விட்டுப் பணக்காரனை மட்டும் விருந்து அழைப்பதை இன்றைய சமூகம் மரியாதையாகக் கருதுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ அதைப் பாவமாக்கி இந்த அநாகரிகச் செயலைக் கண்டித்து சமூக நலன் காக்கின்றது.

மனித குலத்தின் எந்த ஒரு உறுப்பினரின் சமூக நலனும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது இஸ்லாம் தான் என்பதற்கு இவை ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்.

இப்படிப்பட்ட சமூக நலன் எல்லோராலும் பின்பற்றப்பட்டால், வாழ்க்கை நெறியாகக் கொள்ளப்பட்டால் தெலுங்கானா, காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகள் எழாமல் மனித குலம் அமைதியில் வாழும். அந்த அமைதிக்கும் சமூக நலனுக்கும் மறு பெயர் தான் இஸ்லாம்!

————————————————————————————————————————————————

மக்காவில் ஒரு மனித உரிமைப் பிரகடனம்!

– தொண்டி அ. சிராஜூத்தீன் – ரியாத்

இன்று உலகத்தின் எத்திசையை நோக்கினாலும், மனிதன் அமைதிக்காக ஏங்குகின்றான். எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, அத்துமீறல், ஆக்கிரமிப்புப் போர், குண்டு வெடிப்பு, ஏமாற்றுதல், மோசடி, பொருளாதாரச் சுரண்டல், கலப்படம் என்று உலகின் எல்லாப் பகுதிகளும் அமைதியற்றுக் காணப்படுகிறது.

அதே போல் மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மனித இனத்தைப் பிளவுபடுத்தி, தாழ்த்தப்பட்டவனின் உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. உலகில் இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, உலகின் இதயம் போன்ற மையப் பகுதியில் அமைந்துள்ள புனித மக்கா நகரம் மட்டும் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

உலகில் மனித உரிமையைப் பாதுகாப்பதற்காகப் பல மனித உரிமை சாசனங்கள் உருவாக்கப்பட்டன. அந்த உரிமைகள் சில நாட்களில் செயலிழந்து போவதைப் பார்க்கிறோம். அதிகாரமுள்ளவன் சட்டத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றான். ஆனால், மக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது விடைபெறும் ஹஜ்ஜின் போது, ஒரு மனித உரிமைப் பிரகடனத்தைச் செய்தார்கள். அது இன்று வரை உலகில் வரையப்பட்ட அனைத்து மனித உரிமைப் பிரகடனங்களை விடவும் உயர்ந்ததாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.

மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைப் பார்த்து வியந்து போகின்றார்கள்.

இஸ்லாம் நான்கு மாதங்களை யுத்தம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டதாக ஆக்கியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜமாதுஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி)

நூல்: புகாரி 3197

இந்தச் சட்டத்தை மட்டும் கடைப்பிடித்தால் நான்கு மாதங்கள் உலகம் அமைதியாக இருக்கும்.

அபாய நகரங்களுக்கு மத்தியில் மக்கா ஓர் அபய நகரமாகத் திகழ்கிறது. அதற்கென்று தனித்துவமான புனிதங்கள் இருக்கின்றன. அதே போல் தான் மனிதனின் உயிர் புனிதமானது என்று நபி (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

எந்த மனிதனின் உடமையையும் அடுத்தவர் உரிமை கொண்டாட முடியாத அளவு அவனது உரிமையைக் காக்கும் வண்ணம் உயிருக்கும் உடமைக்கும் நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பை வழங்குகின்றார்கள். சாதாரணக் குடிமகன் முதல், நாட்டின் ஆட்சியாளன் வரை அவனது மானம் கண்ணியம் மிகுந்தது என்று தமது மக்கா பிரகடனத்தில் நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ, அவ்வாறே உங்களின் உயிர்களும், உடைமைகளும், கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்என்று பல தடவை கூறினார்கள்.

நூல்: புகாரி 1739

இந்த மனித உரிமைப் பிரகடனம் மக்கள் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. குடிமக்களைக் கவனத்திற்கொள்ளாத எந்தப் பிரகடனமும் நடைமுறைச் சாத்தியமற்றுப் போன வரலாறு நிறையவே இருக்கின்றன. ஆனால், இந்த சாசனம் 1400 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியமான உண்மை.

மனித உரிமை மீறல்கள் அதிகமாக இனவெறியின் காரணமாகவே அரங்கேற்றப்படுகின்றன. அதையும் நபிகளாரின் மக்கா பிரகடனம் தகர்க்கிறது. சகோதரத்துவத்தை வலியுறுத்தி, இனவெறியை ஒழித்தார்கள்.

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை இறையச்சத்தைத் தவிர!

நூல்: அஹ்மத் 22391

இனமாச்சரியம், குலச்செருக்கு, மொழிவெறி, நிறவெறி போன்ற அனைத்தையும் இப்பிரகடனம் தகர்த்தெறிகிறது.

உலகில் முதன் முதலாக ஒரே இறைவனை வணங்குவதற்காக உருவாக்கப்பட்ட கஅபா எனும் ஆலயம் உலக மக்களின் ஒருமைப்பாட்டுச் சின்னம். கருப்பன், சிவப்பன் என்ற நிற வேறுபாடுகள் அங்கு இல்லை. ஆசியன், ஆப்பிரிக்கன், அமெரிக்கன் என்ற தேசியப் பிரிவினைவாத வேற்றுமைகள் அங்கு வேரற்றுப் போகின்றன. ஆங்கிலேயன், அரேபியன் என்ற மொழி வேறுபாடுகள் அங்கு  இல்லை. ஆண்டான் – அடிமை, மன்னன் – குடிமக்கள் என்ற உயர்வு, தாழ்வுகள் இல்லை.

இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளை இஸ்லாம் துடைத்தெறிகின்றது. ஒருமைப்பாட்டின் உன்னதத்தை மனிதர்களை உணரச் செய்கிறது. மனித நேயத்தை மனித உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைக்கிறது. மனிதர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. நிறம், மொழி, குலம், கோத்திரம் என்பவற்றை முதன்மைப்படுத்தி வேற்றுமைகளைத் தோற்றுவிக்கக் கூடாது என்று நபியவர்கள் பிரகடனம் செய்தார்கள். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் தான். உங்களுக்குள் வேறுபாடு இல்லை என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

இன்று உலகிலுள்ள பல முக்கிய வழிபாட்டுத் தளங்களில் வேற்றுமை தலை தூக்கியுள்ளது. ஆனால், உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடும் கஅபாவில் ஒற்றுமையைத் தவிர எந்த வேற்றுமையும் இல்லை.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)

ஸகாத் என்ற புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி வட்டியையும் சுரண்டலையும் ஒழித்து, அடிமட்ட மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கு வழிகாட்டினார்கள்.

அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.

நூல்கள்: முஸ்லிம் 2137

நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கணவன் மனைவி உரிமைகளை தனது உரிமைப் பிரகடனத்தில் உள்ளடக்கினார்கள்.

பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும், உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்.

நூல்: முஸ்லிம் 2137

பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்; காயமின்றி அடியுங்கள்; அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது; உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது. அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும்.

நூல்கள்: திர்மிதீ 1083, 3012. இப்னுமாஜா 1841

ஆள்வோருக்கு ஒரு சட்டம்; ஆளப்படுவோருக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை. மனு தர்மத்தைப் போல் பிராமணர்களுக்கு ஒரு சட்டம்; சூத்திரர்களுக்கு ஒரு சட்டம் என்று வேறுபாடு காட்டவில்லை. திருக்குர்ஆனின் சட்டத்தைச் செயல்படுத்திக் காட்டிய திருத்தூதர் (ஸல்) அவர்கள்  சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதைக் கடுகளவு கூட அனுமதிக்கவில்லை.

குரைஷிக் குலத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.

உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால்தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3475

உயர் குலத்தவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனிச் சட்டம் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத் தன் மகளை முன்னிறுத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கின்றார்கள். உன்னதமான மனித சமத்துவத்தையும் ஒழுக்கப் பண்பாட்டையும் உலகுக்குச் சட்டமாக வரைந்து கொடுத்தார்கள்.

பழிவாங்கும் உணர்வை அகற்றி மன்னிக்கும் மனப்பான்மையை தன்னிலிருந்தே ஆரம்பித்து வைத்து மனித உரிமையைப் பிரகடனம் செய்த மாமேதையாக மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய  பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இது வரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்.)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

இவ்வாறு நபியவர்கள் அறிமுகப்படுத்திய மனித உரிமைப் பிரகடனம் உன்னத இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.

————————————————————————————————————————————————

இரண்டாம் ஜமாஅத்: மத்ஹபுவாதிகளின் அறியாமை

இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், “ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது” என்று வாதிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குக் கடந்த இதழில் மறுப்பு வெளியிட்டோம். இதே போன்று இரண்டாம் ஜமாஅத் விஷயத்தில் மத்ஹபுவாதிகளின் நிலையைப் பற்றி இங்கு விளக்கியுள்ளோம்.

இரண்டாம் ஜமாஅத் தொழுகையை மத்ஹபுவாதிகளும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்காகவும் சில விஷயங்களைத் தெளிவு படுத்துகிறோம்.

“(சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), நூல்: அபூதாவூத் 467

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1147

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 1151

மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

கொஞ்சம் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதன் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான். இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி), நூல்: புகாரி 647

பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவது தான் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள், வீட்டிலோ கடையிலோ தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.

எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் தான் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து தங்கள் முதுகுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள்.

நபியவர்கள் கூறிய வார்த்தைகளை நன்றாகக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடை, அல்லது வீட்டை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்தது என்கிறார்கள். எந்த இடத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் எனக் கூறவில்லை. ஏனென்றால் ஜமாஅத்தாகத் தொழுவது என்றாலே அது பள்ளிவாசல் தான் என்பதை அனைவரும் அறிந்திருந்த காரணத்தினாலேயே நபியவர்கள் பள்ளிவாசல் என்று கூறவில்லை. பள்ளிவாசல் என்றாலே அங்கு வரக் கூடியவர்கள் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். சுன்னத்தான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டியதில்லை. எனவே தான் நபியவர்கள் சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.

சஹாபாக்களின் நடவடிக்கைகளும் ஆதாரமாகும் என்று மத்ஹபுவாதிகள் கூறுவதால் அவர்களுக்காகப் பின் வரும் தகவல்களையும் மேலதிகமாக முன் வைக்கிறோம்.

அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

நூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 505

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள்

அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல்

நூல்: அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர், பாகம் : 6, பக்கம்: 318)

நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

நூல்: திர்மிதி

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 39

இமாம் அபூயூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது: இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்று பேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லித் தொழுதால் எந்தத் தவறுமில்லை. இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்யமாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும்’ என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள்.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 399

ஹாமிஸல் ஹஸாயின் என்ற நூலில் ஷாரிஹ் அவர்கள் கூறியுள்ளதாவது: மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது தொடர்பாக குர்ராக்களின் ஆசிரியராகிய மௌலானா முல்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய கருத்தாகிறது ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதின் மீது அமைக்கப்பட்டதாகும்

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார், பாகம்: 3, பக்கம்: 166

மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது, ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது விரும்பத்தக்கதாகும். இது தான் இப்னு மஸ்வூத் (ரலி) அதாவு, ஹஸன், மற்றும் இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்

ஆதாரம்: ஹன்பலி மத்ஹப்

நூல்: அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா, பாகம்: 2, பக்கம்: 7

மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களைத் தான் ஆதாரமாக முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்:

ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது: தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும்.

மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸும் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்த போது நபியவர்கள், “இந்த இருவரும் ஜமாஅத் ஆகும்’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: அஷ்ஷரஹுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 7

பள்ளியில் தாமதமாக வருவதைத் தடை செய்யும் மத்ஹபுவாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் நபிவழிக்கு மட்டுமல்ல! மத்ஹபிற்கும் எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.

எனவே மத்ஹபுவாதிகள் மத்ஹபில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்தத் தடை செய்யக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.