ஏகத்துவம் – பிப்ரவரி 2017

வறட்சியை நீக்குபவன் வல்ல அல்லாஹ்வே!

தமிழகத்தில் இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அது தீவிரமடையவில்லை. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்ன.

தற்போது தமிழகத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் 194 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் வெறும் 24 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீரைக் கொண்டு தமிழகத்தில் 2 மாதம் கூட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. இதனால், இப்போது முதலே பெரும்பாலான பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வாரியத்திற்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இது வெறும் செய்தி அல்ல! தமிழகம் சந்திக்கப் போகின்ற பயங்கர பஞ்சத்தைப் பற்றிய எச்சரிக்கை மணியாகும். வரப் போகும் வறட்சியை அறிவிக்கின்ற அபாயச் சங்காகும். தமிழகம் தற்போது மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. இரண்டு புயலைத் தவிர, பெரிதாக எந்த மழையும் பெய்யவில்லை.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இயல்பை விட 62 சதவிகித மழை குறைவாகப் பெய்துள்ளது. இது கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மழை அளவாகும். இதற்கு முன்னர் கடந்த 1876ஆம் ஆண்டு 63 சதவிகிதம் பொய்த்துப் போனது தான் இதுவரையில் குறைந்த மழை அளவாக இருந்தது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவான மழைதான் பெய்து உள்ளது. கடலூர், புதுச்சேரி, நாமக்கல்லில் 19 சதவிகித மழையே பெய்துள்ளது.

தமிழகத்தில்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேரள மாநிலம் இந்த ஆண்டு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகக்குறைந்த மழை அளவைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் 34 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழையில் 61 சதவிகிதமும் குறைவான மழையைப் பெற்றுள்ளது. கேரளாவில் வழக்கமாக, இந்த காலங்களில் அணைகளில் 90 சதவிகிதம் நீர் இருப்பு இருக்கும். ஆனால் தற்போது 47 சதவிகிதம்தான் உள்ளது.

கர்நாடகத்தின் நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. தொடந்து மூன்றாவது வருடமாக வறட்சியைச் சந்தித்து வருகிறது கர்நாடகம். அங்கு உள்ள 175 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை 20 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழை 62 சதவிகிதமும் குறைவாகப் பெய்துள்ளது.

தென் மாநிலங்களில் மழை அளவு குறைவால் தமிழகத்தின் அரிசித் தேவையில் மூன்றில் ஒரு பகுதியைத் தந்து வந்த காவிரிப் பாசனப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் பயிர் செய்யப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பருவ மழை பொய்த்துப் போனதால் தமிழகமும், கர்நாடகமும்  காவிரிப் பிரச்சனையில் போர் மழையைச் சந்திக்க நேர்ந்தது.  பல உயிர்கள் பலியாயின. பலகோடி ரூபாய் பொருளாதாரம் பாழாயின. இவ்விரு மாநிலங்களும் அதன் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

கேரளாவில் ரப்பர், தென்னை, காப்பி போன்ற நீண்டகாலப் பயிர்கள் கூட கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதே நிலை தான் கர்நாடகத்திலும்.

வறண்ட தமிழக அணைகள்

மேற்கு மாவட்டங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வேகமான வறண்டு வருகின்றன. மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர், பெரியார், வைகை, சிறுவாணி உள்ளிட்ட அணைகளில் 13 சதவிகித அளவு தண்ணீர்தான் உள்ளது.

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது மேட்டூர் அணை. சுமார் 127 குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 மில்லியன் கனஅடி தண்ணீர் இந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நீர் அளவைக் கொண்டு இன்னும் இரண்டு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர்த் தேவை அதிகரிக்கும் என்பதால், இரண்டு மாதம் என்பதுகூட குறைய வாய்ப்புள்ளது.

அதேபோல கோயம்புத்தூருக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலும் இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. இதனால் கோவையில் குடம் நீர் பத்துக்கு விற்கின்றது.

தூத்துக்குடியில் குடிநீருக்காக குடங்களைத் தூக்கிக் கொண்டு அலைகின்ற தாய்க்குலத்தைப் பார்க்கின்ற போது கண்கள் குளமாகின்றன.

தென் மாவட்ட அணைகள் பாபநாசம், மணிமுத்தாறு, வைகை ஆகிய மூன்று அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் இல்லை. வைகையில் 4 சதவிகித தண்ணீர் தான் இருப்பில் உள்ளது. இது 10 நாள் குடிநீர்த் தேவைக்குதான் போதுமானதாக இருக்கும். தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் கடுமையான நீர்த் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டிவரும். முல்லைப் பெரியாரில் உள்ள நீரை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.

தமிழகத்தின் ஜீவநதி என்று வர்ணிக்கப்படும் தாமிரபரணி நீரைக் கொண்டு உள்ள பாபநாசம் அணையில் இருந்து இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்திக்க உள்ளனர்.

வட மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சாத்தனூர் அணையில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் உள்ளது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் சுமார் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி…

தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் தற்போது உள்ள தண்ணீரின் மொத்த அளவின்படி பார்த்தால், சரியாக இன்னும் ஒரு மாதத்தில் மழை பெய்து, தமிழகத்தைக் காப்பாற்றா விட்டால், மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை தமிழகம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அணை மொத்தமாக வறண்டு விடும் என்பதால் தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் இந்தாண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர்ப் பஞ்சம் இன்னும் இரண்டு மாதத்தில் வர வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்னையை ஓரளவு சமாளிக்க 900 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கலாம் என அறிக்கை அளித்துள்ளோம். பொதுமக்களிடம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் கூறியுள்ளோம். மேலும், இப்போதிருந்தே குடிநீர் விநியோகிப்பதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார். பஞ்சத்திற்கு ஆழ்குழாய் தோண்டுவது மட்டும் தீர்வாகாது. ஏற்கனவே, பல இடங்களில்  500, 600 அடிகளை தாண்டி போர் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். போதிய நீர் வராமல் புகை தான் வந்துக் கொண்டிருக்கின்றது.  காரணம், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருப்பது மழை தான்.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

அல்குர்ஆன் 23:18

இந்த வசனம் நீரை பூமியில் நாமே தங்க வைத்திருக்கின்றோம். என்று கூறுகின்றது.

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

அல்குர்ஆன் 15:22

மழை நீர் தான் பூமியில் சேமித்து வைக்கப் படுகின்றது என்று அல்லாஹ் கூறுகின்றான்

அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் 39:21

வான் மழை தான் பூமியில் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்று கூறுகின்றான். எனவே ஏற்கனவே, மழை பெய்து நிலத்தில் நீர் சேகரமாகியும், சேமிப்பாகியும் இருந்தால் தான் ஆழ்குழாய் மூலம் நீரை பெற முடியும். இல்லையென்றால், பூமியிலிருந்து பொங்கி வழியும் நீருக்குப் பதிலாகப் பொசுங்கி வரும் புகையைத் தான் பார்க்க முடியும். அதனால் இதற்குத் தீர்வு மழை தானே தவிர ஆழ்குழாய் கிணறுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எல்லாம் இயற்கை! இயற்கை! இவ்வையகத்தை இயக்குகின்ற இறை சக்தி எதுவும் கிடையாது என்று எகத்தளமாகப் பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் பைத்தியம் வாதம் பேசுகின்ற அறிவிலிகளை நோக்கி,  ‘தண்ணீர் பஞ்சத்தில் தகித்துக் கொண்டிருக்கின்ற தமிழகத்தை நோக்கி, தவிக்கின்ற வாய்க்குத் தண்ணீர் தரப்  போவது இயற்கையா? அல்லது எல்லாம் வல்ல ஏகனும் தனி நாயகனுமான அல்லாஹ்வா?’ என்ற கேள்வியை திருமறைக் குர்ஆன் முன்வைக்கின்றது.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?

அல்குர்ஆன் 56:68-70

அரிசி விளைவிக்கின்ற தஞ்சை போன்ற வளம் நிறைந்த  விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றனவே அந்த நிலங்களை வளங்கொழிக்கச் செய்வது இயற்கையா? அல்லது  தன்னிகரற்ற தனி நாயன் நானா? என்று அடுத்தக் கேள்விக் கணையையும் அல்குர்ஆன் வசனங்கள் தொடுக்கின்றன.

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்‘’ என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்

அல்குர்ஆன் 56:63-67

1878-ல் தமிழகம் அப்போதைய ஆங்கில ஆட்சியர் கீழ் இருந்த போது சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்டது. அந்த சென்னை மாகாணத்தில் இது போன்று பருவ மழை பொய்த்த போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் மைசூர், பம்பாய், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி என்று  கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து அதன் கடுமையான  பாதிப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம். அந்த பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மக்கள் இலங்கை, பர்மா, ஃபிஜி, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்த வம்சாவளியினர் இன்றும் அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பஞ்சம் தமிழகத்தைப் பிடிக்கவில்லை. கடந்த 1967 முதல் 1975 வரை தமிழகத்தில் விவசாயம் பாதித்ததால் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான உணவான அரிசி கிடைக்கவில்லை. பட்டினியின் பிடியில் தவித்த மக்கள் மரவள்ளிக் கிழங்கு, சோளம் ஆகியவற்றைச் சாப்பிட்டுக் காலம் தள்ளினர். ரேஷனில் கூட சோள மாவு கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் 1977லிருந்து 1989 வரை பருவ மழை பெய்து நிலைமை சீரானது. இதற்குப் பிந்தைய ஆண்டுகளும் பெரிய பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால், 2016ஆம் ஆண்டு போதிய மழையின்றி  தமிழகம் 1878 பஞ்சத்தைப் போன்ற நிலையைச் சந்தித்து விடுமோ என்ற பயம் மக்களை ஆட்கொண்டு விட்டது.

இதிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன?  வரலாறு காணாத வறட்சியை விட்டும் காக்கின்ற வான்மழை தான். வான் மழையைப் பெறுவதற்கு மக்கள் கொடும்பாவி எரித்தல், ஒப்பாரி வைத்தல், பெண்களை நிர்வாணமாக ஓட விடுதல், கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம் முடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த மூடப் பழக்க வழக்கங்கள் பிற மத சமுதாயங்களில் நடக்கின்றன என்றால்,  முஸ்லிம்கள் மழை பைத்து என்ற பெயரில் அரபி, தமிழ் கலந்த பாடல் ஒன்றை மழை வேண்டி வீதிகளில் ஓதி வலம் வருகின்ற மூடப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மழை என்பது அல்லாஹ்வின் தனி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது. தனி அதிகாரத்தைக் கொண்டது. அந்த வல்ல அல்லாஹ் தான் இந்த வறட்சியைப் போக்கவும், வாழ்வாதாரமான மழையைத் தரவும் வளத்தை வழங்கவும், ஆற்றல் பெற்றவன், அதிகாரம் படைத்தவன்.

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

அல்குர்ஆன் 42:28

படைத்தவனின் இந்த அருளை வேண்டி அவனிடமே நாம் பிரார்த்திக்க வேண்டும். வறட்சியை நீக்கும் ஆற்றல் அந்த வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. அவனிடம் நாம் மன்றாடிக் கேட்பது மட்டும் இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாகும்.

இறைவனின் அருள் மழையை வேண்டுவதற்கு மார்க்கம் காட்டிய வழிமுறைகள் எவை என தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி வறட்சி நீங்க வல்ல அல்லாஹ்விடம் முறையிடுவோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

அழைப்புப் பணியே அழகிய பணி

எம்.எஸ்.ஜீனத் நிஸா, B.I.Sc.., கடையநல்லூர்

நம் நாட்டில் பாமரர்களின் எண்ணிக்கை குறைந்து கல்வியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகக் கல்வியில் மட்டும் தானே தவிர மார்க்க்க் கல்வியைப் பொறுத்த வரை அது ஆரம்பித்த இடத்திலேயே தான் இருக்கின்றது. மார்க்க அறிவில்லாத பாமரர்களின் எண்ணிக்கை அதிகரித்து மார்க்கமறிந்த அறிஞர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்குக் குறைந்து கொண்டே வருகின்றது. இதனை நபியவர்களும் மறுமையின் அடையாளம் என்று குறிப்பிடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படஅவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.

நூல்: புகாரி 100

இவ்வாறு ஒரு நிலை உருவாவதற்கு மனிதனின் மார்க்கப் பற்றின்மையும் இவ்வுலகத்தின் மீது மனிதன் கொண்ட பேராசையும் தான் காரணமாகும். மார்க்கக் கல்வி பயில்வதால் கிடைக்கும் நன்மைகளை விடவும் உலகக் கல்வி பயில்வதால் கிடைக்கும் பலன்கள் இவ்வுலகிலே அதிகம். இதனால் மக்களிடம் மார்க்கக் கல்வி மதிப்பிழந்துள்ளது.

பொருளாதார ரீதியாகவும் கௌரவ ரீதியாகவும் ஒரு மனிதனுக்குப் பெருமளவில் உதவி செய்வது இவ்வுலகக் கல்வியே என்று எண்ணும் ஒருவன் மார்க்கக் கல்வியைப் புறந்தள்ளி மறுமை வெற்றியை அலட்சியப்படுத்தி, இம்மையையும் இவ்வுலகக் கல்வியையும் தேர்வுசெய்கின்றான். இன்னும் படிப்பறிவே இல்லாமல், பொறுப்பற்று சுற்றித் திரியும் ஒருவனே மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்ற ஒரு வரையறையையும் இந்த சமுதாயம் உருவாக்கியுள்ளது.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி அவசியமானது. அதுவே நிலையான வெற்றி என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டு உலகக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மார்க்கக் கல்வி பயில்வதால் மனிதனின் இறையச்சம் உயரவே செய்கின்றது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.

அல்குர்ஆன் 35:28

இந்நிலை தொடர்ந்தால் முட்டாள்களிடம் தீர்ப்புக் கேட்கும் நிலை உருவாகிவிடும். இதைத்தான் மேலே நாம் குறிப்பிட்ட ஹதீஸில் நபிகளார் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரம் என்பது சிலருக்கு மட்டுமே கடமை, நம் மீது எந்தக் கடமையும் இல்லை என எண்ணி ஒவ்வொருவருமே அலட்சியப்படுத்தினோம் என்றால் எந்த அறியாமைக் காலத்தில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோமோ அதே அறியாமைக் காலத்திற்கே மீண்டும் நாம் செல்லும் நிலை ஏற்படும். நாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி அதன் மூலம் ஒருவர் நேர்வழி பெற்றால் அது நமக்குப் பன்மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும்.

‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்’’ என்று  நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4780

வேண்டாம் முகஸ்துதி     

தன்னைச் சிறந்த பேச்சாளர் என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கம், அழைப்பாளர்களிடம் இருக்கக் கூடாத மோசமான பண்பாகும்.

இதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என்றால் ஒரு இடத்தில் தனக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லையென்றால் இனி அப்பகுதிகளில் அவர்கள் பயான் பேசுவதை விரும்புவதில்லை. அதைத் தவிர்க்கவே பார்க்கின்றனர். அதே சமயம் தனக்கு வரவேற்பு கிடைக்கின்ற பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கின்றோம். இந்நிலையை மார்க்கப் பிரச்சாரம் செய்வோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மக்களிடம் ஆதாயத்தையோ, பாராட்டையோ எதிர்பார்த்துச் செய்யாமல் இறைவனுக்காக, மறுமையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக மட்டுமே மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்மையில் பாராட்டப்படுவதற்காகச் செய்கின்ற செயல்கள் இம்மையோடு நின்றுவிடுகின்றன. மறுமையில் எவ்விதப் பயனையும் அவை அளிப்பதில்லை. மாறாக நரகத்தையே பரிசாக வழங்குகின்றன.

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்.

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும் போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்’’ என்று பதிலளிப்பார். இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ‘மாவீரன்என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்’’ என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) அறிஞர்என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; ‘குர்ஆன் அறிஞர்என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்’’ என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

நூல்: முஸ்லிம் 3865

பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக மார்க்கப் பிரச்சாரம் செய்தவருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நரகம் கூலியாகக் கிடைக்கின்றது என்பதை உணர்ந்து இந்த விஷயத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.

மேலும் பயான் பேசி முடிந்ததற்குப் பிறகு சிலர் நீங்கள் சிறப்பான முறையில் உரையாற்றியதாகக் கூறுவார்கள். அச்சமயத்தில் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அந்தப் பெருமையை இறைவனுக்கு உரித்தாக்கி விட வேண்டும். இதன் மூலம் நாம் பெருமை கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்கலாம்.

ஒவ்வொரு பேச்சாளரும் நாம் கற்றதன் அடிப்படையிலும் பிறருக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையிலும் நமது வாழ்நாளில் செயல் படுகிறோமா என்பதை ஒவ்வொரு நாளும் நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். 

அல்குர்ஆன் 3:135

—————————————————————————————————————————————————————————————————————

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம்            தொடர் – 7

தேளிடம் கடி வாங்கத் தயாரா? – சவாலும், சறுக்கலும்!

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

தேளிடம் கடி வாங்கத் தயாரா?

இப்படியொரு கேள்வியை ஸலஃபுகளும், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிகொள்வோரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரைப் பார்த்து எழுப்பி வருகின்றார்கள்.

கேள்வியின் பின்னணி:

இந்தக் கேள்விக்கான பின்னணி அஜ்வா பேரீச்சம்பழம் குறித்து வரக்கூடிய செய்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது என்ன செய்தி என்பதைப் பார்த்துவிட்டு, ஸலஃபுகளும், போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் எழுப்பும் தேள் கடி பற்றிய கேள்விக்கான பதிலைக் காண்போம்.

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

புகாரி என்ற ஹதீஸ் நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா’ (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5445

புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியை நாம் திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய பொய்யான செய்தி என்று கூறுகின்றோம்.

இது நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியே அல்ல; இந்தச் செய்தியை நபிகளார் பெயரால் யாரோ இட்டுக்கட்டிக் கூறியுள்ளார்கள் என்றும் கூறுகின்றோம்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் 4:87

அல்லாஹ்வைவிட அழகிய முறையில் உண்மை பேசக்கூடியவன் யார் என்று அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான்.

அஜ்வா ரகப் பேரீச்சம்பழத்தை ஒருவர் காலையில் சாப்பிட்டுவிட்டால் அந்த நாள் முழுவதும் அவருக்கு எந்த விஷமும் பாதிப்பை ஏற்படுத்தாது; அவருக்கு சூனியத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாது என நபிகளார் சொல்லியதாக இந்த செய்தி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் சில அஜ்வாரகப் பேரீச்சம் பழங்களை யார் சாப்பிடுகின்றாரோ அவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5768

மேற்கண்ட செய்தியில் இன்னும் ஒருபடி மேலே போய் தெளிவாக மற்றுமொரு செய்தியும் கூடுதலாக அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது யார் ஒரு நாள் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு அன்று இரவு வரைக்கும் எந்த விஷமோ அல்லது சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று நபிகளார் சொன்னதாக சொல்லப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்; அஜ்வா பேரீச்சம்பழங்கள் இன்றும் கடைகளில் கிடைக்கின்றன. அந்தப் பேரீச்சம்பழத்தை உண்டுவிட்டு விஷத்தைக் குடித்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்; அப்போதுதான் நபிகளார் சொன்ன இந்தச் செய்தி உண்மையாகும்; ஆனால் அந்தச் செய்தியை யாரும் இதுவரை நம்பவில்லை; அது பொய் என்று உணர்ந்தே வைத்துள்ளார்கள்; அதனால்தான் ஸலஃபுகளாக இருக்கட்டும்; இந்தச் செய்தியை உண்மையென்று நம்பும் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினராக இருக்கட்டும். அவர்களில் யாரும் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு விஷத்தைக் குடித்து இந்த செய்தியை உண்மையென்று நிரூபிக்க முன்வருவதில்லை.

அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் இந்தச் செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்று யார் உறுதியாக நம்புகின்றார்களோ அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தை காலையில் உண்டு விட்டு, உடனே விஷத்தைக் குடித்து உயிரோடு வாழ்ந்து காட்டி நிரூபிக்க வேண்டும். இதுபோல செய்ய யாரும் முன்வந்ததில்லை; அப்படியானால் அவர்களும் இந்தச் செய்தியை பொய்யென்று தங்களது செயலளவில் மறுத்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆக அல்லாஹ்வைவிட உண்மை பேசக்கூடியவன் யார் என்ற இறைவசனத்திற்கு இந்தச் செய்தி முற்றிலும் முரண்பாடாக உள்ளதை நாம் அறியலாம்.

மேலும், தன் பெயரில் இதுபோன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

ஆக மேற்கண்ட செய்திகளின் அடிப்படையிலும் அஜ்வா பேரீச்சம்பழம் விஷத்தை முறித்துவிடும் என்று சொல்வது பொய்யான செய்திதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் சூனியத்திற்கு ஆற்றல் இல்லை; அதனால் எவ்வித பாதிப்பையும் யாருக்கும் எவராலும் ஏற்படுத்த முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு;

மேலும் சூனியத்திற்கு ஆற்றல் உண்டு என யார் நம்புகின்றாரோ அவர் சுவனம் செல்ல முடியாது என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். (பார்க்க: அஹ்மது 26212)

சூனியத்தால் யாரும் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த முடியாது; அவ்வாறு நம்புபவருக்கு சொர்க்கத்தில் இடமில்லை என நபிகளார் தெளிவுபடுத்திச் சென்றுள்ள நிலையில், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற ரீதியில் சொல்லப்பட்டுள்ள இந்தச் செய்தி பொய்யானதுதான் என்பதும், இதை நபிகளார் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது.

அஜ்வா பேரீச்சம்பழத்தை காலையில் உண்டால் அன்று இரவு வரை சூனியமும், விஷமும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற இந்தச் செய்தியை யார் உண்மையென்று நம்புகின்றாரோ அவர் அஜ்வா பேரீச்சம்பழத்தையும் உண்டு, விஷத்தையும் குடித்து உயிர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாம் அறைகூவல் விடுத்து வருகின்றோம்.

இதற்கு இதுவரை ஸலஃபுக் கும்பலோ அல்லது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரோ பதிலளிக்கவில்லை.

மாறாக, தேளைப் பிடித்து உங்களைக் கடிக்க விடுகின்றோம் என்று எதிர்க் கேள்விதான் எழுப்பி வருகின்றனர்.

தேள் கடி சவாலும் அறியாமையும்

தேளைக் கடிக்க விடுகின்றோம் என்று அவர்கள் சொல்லக் காரணம் கீழ்க்கண்ட செய்தி தான்:

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. ‘‘உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?’’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் ‘‘நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’’ என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்துசூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். ‘‘நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்’’ என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ‘‘அல்ஹம்துசூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்!’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2276

மேற்கண்ட செய்தியில் தேள் கடித்த ஒருவருக்கு அல்ஹம்து சூராவை வைத்து ஓதிப்பார்த்தவுடன் அவருக்குக் குணமாகியுள்ளது. அந்த ஹதீஸின் அடிப்படையில் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஒரு தேளைப் போட்டு கடிக்க விடுகின்றோம்; தேள் கடித்தவுடன் அல்ஹம்து சூராவை ஓதி அந்த விஷத்தை முறிப்பீர்களா? இந்த சவாலுக்குத் தயாரா என்பது தான் நம்மை நோக்கி எழுப்பப்படும் கேள்வி.

சவாலும் சறுக்கலும்

இது அறியாமையால் எழுப்பப்பட்டுள்ள கேள்வி என்பதை நாம் சற்று சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இது சவால் அல்ல; அவர்களது அறியாமையால் விளைந்த சறுக்கல்.

இதற்கும், அஜ்வா பேரீச்சம்பழம் குறித்த கட்டுக் கதைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் தேள் கடிக்கு அல்ஹம்து சூராவைக் கொண்டு ஓதிப்பார்த்தால் ஷிஃபா (நலம்) கிடைக்கும் என்று நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.

இது ஒரு பிரார்த்தனை தான். பிரார்த்தனை என்பதைப் பொறுத்த வரை, அல்லாஹ் நாடினால் அதை ஏற்றுக் கொள்வான்; நாடினால் அதை நிராகரிக்கவும் செய்வான்; அது அவனது அதிகாரத்தில் உள்ளது.

அல்லது நாம் கேட்கும் பிரார்த்தனைக்குப் பதிலாக நமக்கு வரும் ஏதேனும் ஒரு துன்பத்தை அல்லாஹ் இல்லாமல் ஆக்குவான்; அல்லது மறுமை சேமிப்பாக ஆக்குவான் என்று நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள். கீழ்க்கண்ட செய்தியிலிருந்து அதை நாம் அறிந்து கொள்ளலாம்.

‘‘பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ‘‘அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே!’’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் 10709

அல்ஹம்து சூராவை ஓதினால் தேள் கடி குணமாகும் என்ற செய்தியை அறிவித்த அதே அபூ ஸயீத் அல்குத்ரி அவர்கள் தான் அல்லாஹ் நமது பிரார்த்தனையை அங்கீகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நபிகளார் சொல்லிக்காட்டிய செய்தியையும் அறிவிக்கின்றார்கள்.

இதை விளங்காமல் ஸலஃபுக் கும்பலும், போலி சுன்னத் வல் ஜமாஅத்தார்களும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைக்கப்பார்க்கின்றார்கள்.

மேலும்,

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

தேள் கடிக்கு துஆ செய்த விஷயத்தில் சவால் விடும் அறிவாளிகள் மேற்கண்ட ஹதீஸ் குறித்தும் சவால் விடலாம் நீங்கள் கைகளை விரித்து துஆ செய்யுங்கள்; அதில் ஏதேனும் விழுகின்றதா என்று பார்ப்போம் என்று சவால் விட்டால் அதற்கு என்ன பதிலோ அதுதான் தேள் கடி குறித்து கேள்வி எழுப்பக்கூடியவர்களுக்குமான பதில்.

நாம் செய்யும் துஆக்களை அல்லாஹ் பல வழிகளில் அங்கீகரிக்கின்றான் என நம்பும் ஒரு இறை நம்பிக்கையாளன் இதுபோன்ற கேள்வி எழுப்ப மாட்டான் என்பது தான் அடிப்படையான விஷயம் என்பதை இது குறித்து கேள்வி எழுப்புவோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மெட்டீரியலும், பிரார்த்தனையும் ஒன்றா?

இன்னுமொரு முக்கியமான விஷயத்தையும் இதில் எதிர்தரப்பினர் சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் எந்த செய்தியைச் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே நம்ப மாட்டீர்களா? அதை ஆய்வு செய்து உண்மை என்று நிரூபித்த பிறகுதான் நம்புவீர்களா என்றும் நம்மிடம் இது குறித்து விதண்டாவாத கேள்வியை எழுப்புகின்றனர் எதிர்த்தரப்பினர்.

நம்பிக்கை விஷயத்தில் நாம் எதையும் ஆய்வு செய்து தான் நம்புவோம் என்று இதுவரை சொன்னதில்லை.

சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்க்கை, மறுமை என்று மறைவான விஷயத்தில் நாம் எதையும் ஆய்வு செய்து, அதை நிரூபித்துக் காட்டினால் தான் நம்புவோம் என்று சொன்னதில்லை. அவை அனைத்துமே நம்பிக்கை தொடர்புடையவை.

மாறாக மெட்டீரியலாக இருக்கும் ஒரு விஷயத்தில் நபிகளார் சொன்னதாக ஒரு செய்தி வந்தால் அதை ஆய்வு செய்ய வழி இருக்கும் போது அதை ஆய்வு செய்துதான் நம்ப வேண்டும்.

உதாரணத்திற்கு,

‘விலங்குகளுக்குப் பகுத்தறிவு உள்ளது; மனிதன் குடும்ப வாழ்க்கை நடத்துவது போல அவை தங்களுக்கு மத்தியில் குடும்ப வாழ்க்கை நடத்தி கணவன் – மனைவி – பிள்ளை பேரன் – பேத்தி – குடும்பம் – குட்டிகள் என வாழ்ந்து வருகின்றன’ என நபிகளார் சொன்னதாக ஒருவர் சொல்கின்றார் என வைத்துக் கொள்வோம். அது பொய் என்று நாம் உடனே சொல்வோம்; ஏனென்றால் அதுபோன்ற ஒரு நடைமுறை இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்துள்ளோம். இது உண்மையென்றால் விலங்குகளுக்கு மத்தியில் அவ்வாறு குடும்ப வாழ்க்கை நடத்தப்படுகின்றது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் நம்புகின்றோம் என நாம் சவால் விடுவோம்.

இது சோதித்து அறியக்கூடியது; அதனால் அந்த சவாலை விடுக்கின்றோம்; அதுபோலத்தான் இந்த அஜ்வா பேரீச்சம்பழம் குறித்து நபிகளார் சொல்வதாக வரும் செய்தி.

அஜ்வா பேரீச்சம்பழத்தில் விஷ முறிவு ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது; அப்படியானால் அதை ஆய்வு செய்து ஆய்வகத்தில் கொடுத்து சோதனை நடத்தி அதில் விஷ முறிவுத்தன்மை உள்ளதை நிரூபிக்க வேண்டுமா இல்லையா?

அதைத்தான் நாம் கேட்கின்றோம்.

ஆனால் தேள் கடி தொடர்பான விஷயத்தில் அவ்வாறு சொல்லப் படவில்லை. அது ஒரு பிரார்த்தனை! அல்ஹம்து சூராவை எடுத்துக் கொண்டு போய் ஆய்வகத்தில் கொடுத்து சோதித்து அதில் என்னென்ன கலந்துள்ளது என்பதை சோதித்து அறிய  முடியாது. இந்த அடிப்படையான விஷயத்தை விளங்காமல் தான் இவர்கள் இந்தக் கேள்வியை அறியாமையால் எழுப்பி வருகின்றார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆக இது நமது எதிர்த்தரப்பினரின் சவால் அல்ல; அறியாமையால் அவர்களுக்கு வந்த சறுக்கல் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

—————————————————————————————————————————————————————————————————————

அருள் மழை  பொழிவாய்  ரஹ்மானே!

எம். ஷம்சுல்லுஹா

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் தொடர்பாக மூன்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன,

மக்கா நிகழ்வு

நபி (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்த போது மக்கா குரைஷிகள் சத்தியத்தை ஏற்க மறுத்தனர். அப்போது, ‘யூசுஃப் (அலை) காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை  ஏழாண்டுகள் பிடித்தது போன்று இவர்களையும் ஏழாண்டுகள்  பிடிப்பாயாகஎன்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அதன் விளைவாக மக்காவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங்களையும் புசிக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் (குறைஷிகளின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! நீங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவுகளைப் பேணவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றீர்கள். உங்கள் சமுதாயத்தார் அழிந்துவிட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்காக மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள்.

பார்க்க புகாரி: 1007,4821

ஜும்ஆ தொழுகையில் மழை வேண்டிப் பிரார்த்தனை

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மேடைக்கு எதிர் திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் வந்தார். அவர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான்’’ என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

நூல்: புகாரி 1013

திடலுக்குச் சென்று தொழுது பிரார்த்தித்தல்

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்த போது தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளின் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.

நூல்: புகாரி 1005

முந்திய இரண்டு நிகழ்வுகள் துஆ மூலம் மழை வேண்டியதையும் மூன்றாவது நிகழ்வு திடலுக்குப் போய் தொழுகை மூலம் மழை வேண்டியதையும் விளக்குகின்றது. நாம் இவற்றின் அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மழை வேண்டி பிரார்த்திப்போமாக!

(குறிப்பு: மழைத் தொழுகையின் முறை, அதில் இடம்பெற வேண்டிய பிரார்த்தனைகள், ஜும்ஆவில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் ஆகியன குறித்து கடந்த ஏகத்துவம் – ஜனவரி 2017 இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

இறைவன் விதிக்கும் நிபந்தனைகள்

பொதுவாக மழையை அளிப்பதற்கும், அருள்வதற்கும் இறை நம்பிக்கை, இறையச்சம், பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற நிபந்தனைகளை விதிக்கின்றான்.

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 7:96

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.

திருக்குர்ஆன் 71:10

நாம் இறை நம்பிக்கையாளர்கள் என்றாலும் நம்மிடம் இறையச்சத்திற்கு மாற்றமான செயல்பாடுகள் அதிகம் இருக்கின்றன. நாம் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். அவனிடத்தில் பாவமன்னிப்பும் அதிகமதிகம் தேடிக் கொள்ள வேண்டும்

வல்ல இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்வோமாக! பஞ்சம் தீரப் பரிகாரம் வேண்டுவோமாக! மழை பெறுவதற்கு பிழை பொறுக்கத் தேடுவோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?

எம்.ஐ. சுலைமான்

பிரமிப்பூட்டும் இந்த உலகத்தை இறைவன் எப்படிப் படைத்தான்? எத்தனை நாட்களில் படைத்தான் என்பதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

அல்குர்ஆன் 21:30

வானம் பூமி இரண்டும் இணைந்திருந்து பின்னர் அவற்றை இறைவன் பிரித்தெடுத்துள்ளான்.

அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்களை அல்லாஹ் உருவாக்கியுள்ளான்.

பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்.

அல்குர்ஆன் 41:11

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இன்னபிற கோள்களாகவும், துணைக் கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின என்ற கருத்தை திருக்குர்ஆன் தருகிறது.

இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது.

எத்தனை நாட்களில் படைத்தான்?

இவ்வுலகம் முழுவதையும் இறைவன் எத்தனை நாட்களில் படைத்தான்? என்ற கேள்விக்கும் திருக்குர்ஆனில் பதில் சொல்லப்பட்டுள்ளது.

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

அல்குர்ஆன் 25:59

இந்தக் கருத்து திருக்குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

வானங்கள், பூமி மற்றும் அதற்கு இடைப்பட்ட பொருட்களை அல்லாஹ் மொத்தம் ஆறு நாட்களில் படைத்திருக்கின்றான். இதை விரிவாகவும் சுருக்கமாகவும் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?      

அல்குர்ஆன் 41:9

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

அல்குர்ஆன் 41:10

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

அல்குர்ஆன் 41:12

வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்கள் என்று பொதுவாக  சொல்லப்படுவதன் பொருள் :

வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள்,

பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,

பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,

ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள் என்று திருக்குர்ஆன் தெளிவாக விளக்கியுள்ளது.

அதே நேரத்தில் சில நபிமொழிகளில் இந்த கருத்துக்கு மாற்றமாக செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை எவை? என்பதையும் அதன் தரத்தையும் பார்ப்போம்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 127)

7231 – حَدَّثَنِى سُرَيْجُ بْنُ يُونُسَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ وَفِى آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (5379)

இதே செய்தி இப்னுஹுஸைமா (1736), முஸ்னத் அபீயஃலா (6132), அஹ்மத் (7991), பைஹகீ (17705), முஸ்னத் பஸ்ஸார் (8228), நஸாயீ (10943), தப்ரானீ-அவ்ஸத் (3232) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

  • சனிக்கிழை – பூமி
  • ஞாயிறு – மலைகள்
  • திங்கள் – மரங்கள்
  • செவ்வாய் – துன்பம்
  • புதன் – ஒளி
  • வியாழன் – உயிரினம்
  • வெள்ளிக்கிழமை – ஆதம்

உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் உருவாக ஏழு நாட்கள் ஆனதாக இந்த செய்தி கூறுகிறது.

மொத்த உலகத்தை அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக திருக்குர்ஆன் சொல்கிறது. ஆனால் இந்தச் செய்தி ஏழு கிழைமைகளையும் குறிப்பிட்டு ஏழு நாட்கள் என்ற கருத்தைத் தருகிறது.

மேலும் பூமி மற்றும் பூமியில் உள்ள பொருட்களை உருவாக்க நான்கு நாட்கள் ஆனது என்று திருக்குர்ஆன் (41:10) கூறுகிறது. ஆனால் இந்தச் செய்தியில் மூன்று நாட்கள் என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமை பூமியையும் ஞாயிறு அன்று மலைகளையும் திங்கள் அன்று மரங்களையும் படைத்ததாக (மொத்தம் மூன்று நாட்கள் என்று) சொல்லப்பட்டுள்ளது.

துன்பத்தை செவ்வாய்க் கிமையில் படைத்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்பத்தை எந்தக் கிழமையில் படைத்தான் என்று சொல்லப்படவில்லை. அதை ஒருநாள் என்று சேர்த்தால் எட்டுநாட்கள் ஆகிவிடும்.

இந்தச் செய்தி திருக்குர்ஆனின் கருத்து முரணாக இருப்பதால் இது பலவீனமான செய்தி என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.

இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.

முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

النكت على مقدمة ابن الصلاح – (2 / 269)

وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به

இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ்கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்கு காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறு நாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : அந்நுகத், பாகம்: 2, பக்கம்: 269

المنار المنيف – (1 / 85)

وهو كما قالوا لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما   في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

அல்லாஹ் வானங்கள், பூமியையும் அதற்கு இடைப்பட்டவைகளையும் ஆறு நாட்களில் படைத்துள்ளான் என்று அல்லாஹ் தஆலா (திருக்குர்ஆனில்) கூறுகின்றான். ஆனால் அந்தச் செய்தி படைப்பின் மொத்த காலம் ஏழுநாட்கள் என்று சொல்கிறது. (எனவே இந்த செய்தி தவறானது என்று) அறிஞர்கள் சொல்கின்றனர்.

நூல் அல்மனாருல் முனீஃப்,பாகம் 1, பக்கம் 85

இந்தச் செய்தி நபிகளார் கூறியது கிடையாது. இது கஅபுல் அஹ்பார் அவர்களின் சொந்தக் கருத்து என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

التاريخ الكبير – 1 / 413

1317 – ايوب بن خالد بن ابى ايوب الانصاري عن ابيه عن جده ابى ايوب ان النبي صلى الله عليه وسلم قال له إذا اكننت  الخطيئة قم توضأ فأحسن  وضوءك ثم صل ما كتب الله لك، قاله لى يحيى بن سليمان عن ابن وهب اخبرني حيوة عن الوليد بن ابى الوليد ان ايوب حدثه، وروى اسمعيل بن امية عن ايوب بن خالد الانصاري  عن عبد الله بن رافع عن ابى هريرة عن النبي صلى الله عليه وسلمقال خلق الله التربة  يوم السبت، وقال بعضهم عن ابى هريرة عن كعب وهو أصح.

(இந்த செய்தி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக நபிகளார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. சிலர் இது கஅபுல் அஹ்பார் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) கஅபுல் அஹ்பார் கூற்று என்பதே சரியானது என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல்: அத்தாரிகுல் கபீர்,பாகம்: 1, பக்கம்: 413

இக்கருத்தை இப்னு கஸீர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

تفسير ابن كثير / دار طيبة – (6 / 359)

وقد علَّله البخاري في كتاب “التاريخ الكبير” فقال: “وقال بعضهم: أبو هريرة عن كعب الأحبار وهو أصح” ، (6) وكذا علَّله غير واحد من الحفاظ، والله أعلم.

இந்தச் செய்தியை புகாரி அவர்கள் அத்தாரிக்குல் கபீர் என்ற நூலில் குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள். சிலர் இது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) இதுவே சரியானது என்று (புகாரி) குறிப்பிடுகிறார்கள். அறிஞர்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இந்தச் செய்தியை குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்,

பாகம்: 6,பக்கம்: 359

உலகம் ஏழு கிழமைகளில் படைக்கப்பட்டது என்று வரும் செய்தி திருக்குர்ஆனின் செய்திகளுக்கு மாற்றமாக அமைந்துள்ளதால் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாகும்.

—————————————————————————————————————————————————————————————————————

வான்மறையும் வான்மழையும்

எம். ஷம்சுல்லுஹா

மழை என்பது படைத்த இறைவனின் தனிப் பெரும் ஆற்றலாகும். அதிலும் இந்தியாவில் பொழிகின்ற பருவ மழை உண்மையில் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பறை சாற்றுகின்ற அற்புதமாகும்.

தென்மேற்குப் பருவ மழை பெய்வதற்கு பூமியின் தென் அரைக் கோளத்தில் புறப்படுகின்ற காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது.

இந்தக் காற்று பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய மூன்று கடல்களின் ஈரப்பதத்தை சுமந்து கொண்டு கருவுற்ற காற்றாக வருகின்றது.

மராட்டியத்திலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு 900 மீட்டர்கள் உயரத்திற்கு நெடிதுயர்ந்து நிற்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுத்து திருப்பப்படுகின்றது. அவ்வாறு தடுக்கப்பட்ட காற்று தான் மேல் நோக்கி எழுந்து தமிழ்நாடு, கிழக்குக் கடற்கரை பகுதிகளைத் தவிர உள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மழையைப் பொழிவிக்கின்றது. இந்த மழைப் பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலத்தில் நிகழ்கின்றது. இது தான் தென்மேற்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.

அது போல் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று பூமி சுழற்சி காரணமாக வடகிழக்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று இமயமலையால் தடுக்கப்பட்டு மேல் நோக்கி எழுந்து  தமிழ்நாடு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் மழையைப் பொழிவிக்கின்றது. இது தான் வடகிழக்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.

இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன. இயந்திரப் பயன்பாடு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் உந்தித் தள்ளுகின்ற இந்தப் பருவ காலக் காற்றுகளை பயன்படுத்தித் தான் அரபியர்கள் பாய்மரக் கப்பல்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.  பருவ காலத்திற்கு அரபியில் மவ்சிம் என்பதாகும். பின்னால் அது ஆங்கிலத்தில் விஷீஸீsஷீஷீஸீ மான்சூன் என்று மறுவியதற்குப் பின்னணியும் பின்புலமும் இது தான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் பெய்கின்ற இந்த மழைக்கு காற்று, மலைகள், கடல், பூமியின் சுழற்சி, பூமியின் சாய்வான அச்சு ஆகியவை காரணிகளாக அமைந்திருக்கின்றன. இவற்றை அல்லாஹ்வின் கீழ்க்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் அவனது வசனங்களை இந்தக் காரணிகளும் உண்மைப்படுத்துகின்றன.

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

அல்குர்ஆன் 15:22

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

அல்குர்ஆன் 77:27

இந்த வசனம் முளை என்ற குறிப்பிடுவது மலையைத் தான். இந்த மலைகள் முளைகளாக மட்டுமல்லாமல், மழையை சேமித்து ஆறாகப் பகிர்கின்ற வேலைகளைச் செய்வதுடன் அவை காற்றுகளைத் தடுத்தும் மழையைத் தருகின்றன. இந்தியாவில் இந்த அற்புதம் மிக அற்புதமாக நடைபெறுகின்றது. அல்லாஹ்வின் இந்த சொற்பதம் தெளிவாக உணர்த்துகின்றது.

நம்பிக்கை கொள்வோருக்கு வானங்களிலும், பூமியிலும் பல சான்றுகள் உள்ளன. உங்களைப் படைத்திருப்பதிலும், ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானிலிருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் (அதற்கு) உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 45:3-5

நமக்குக் கிடைக்கின்ற மழையில் இத்துணை காரணிகள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்று இந்த வசனங்கள் பின்னி எடுத்து விட்டன. அல்குர்ஆன் மின்னிக் கொண்டிருக்கின்ற உண்மை வேதம் என்பதையும் உலகிற்கு உரத்து உரைத்து விட்டன. ஒரு மழை பொழிய வேண்டுமென்றால் அல்லாஹ்வின் இத்தனை ஆற்றல்கள் அடங்கியிருக்கின்றன எனும் போது, அவனிடம் மழையை வேண்டாமல் கழுதைத் திருமணம் போன்ற மூடப் பழக்கங்கள் மழையைக் கொண்டு வருமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முன்காலத்தில் அரபு வணிகர்கள் பாய்மரக் கலங்களில் ஏறி தென்மேற்குப் பருவக்காற்றின் உதவியுடன் இந்தியாவின் மேற்குக் கரைகளில் வந்து இறங்குவார்கள். வடகிழக்குப் பருவக்காற்றின் உதவியுடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவார்கள். இதன் காரணமாகவே பருவக்காற்றுகளுக்கு ‘வணிகக் காற்றுகள்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.

உலகிலேயே உயரமான மலைத்தெடரான இமயமலை, மியான்மரில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை பரந்து விரிந்திருக்கிறது. இதன் பெரும் பகுதி தெற்காசிய நாடுகளில்தான் உள்ளது. கங்கை, பிரம்மபுத்திரா, இன்டஸ், சல்வீன், மேகாங், யாங்டெஸ், ஹுவாங் ஹோ ஆகிய ஏழு நதிகள் இன்னும் வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டிருக்கக் காரணம் இந்த மலைத் தொடர்தான். இந்த மலையில் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் படர்ந்திருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால்தான் இந்த நதிகளுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

இந்த பனிப் பாறைகள் எப்படி உருவாகின்றன? பருவ காலங்களில் மேகங்கள் பொழிகின்ற பனிப் பொழிவினால் தான் பனிப் பாறைகள் உருவாகின்றன.  இவற்றைத் தான் மலைகள் வாங்கி சேமித்து வைத்து நமக்கு ஆறுகளாக உருகி ஓடச் செய்கின்றன.

இதைத் தான் மேலே இடம்பெற்றுள்ள 77:27 வசனம், உயர்ந்த முளைகளை நிறுவி, இனிமையான நீரை உங்களுக்குப் புகட்டுகிறோம் என்று கூறி, திருக்குர்ஆன் ஓர் அற்புத வேதம் என்பதை மெய்ப்பிக்கின்றது.

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

அல்குர்ஆன் 24:43

இவ்வசனத்தில் ‘வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது’ என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்களின் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.

மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக்கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகின்றது.

இந்தப் பனிக்கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றன. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.

இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக்கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின்காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக்கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.

இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத்தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக்கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

—————————————————————————————————————————————————————————————————————

இணை கற்பித்தல்           தொடர் – 46

தர்ஹா ஜியாரத் செய்யலாமா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இணை வைப்பின் கேந்திரங்களாக தர்ஹாக்கள் திகழ்ந்து வருவதையும், அவற்றை இஸ்லாமிய மார்க்கம் எப்படியெல்லாம் தடை செய்துள்ளது என்பதையும் கடந்த இதழ்களில் கண்டோம்.

சமாதி வழிபாட்டையும் தர்ஹாக்களையும் ஆதரிப்போர், அதை நியாயப்படுத்த சில வறட்டு வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

தர்ஹாக்களுக்குப் போவது  ஜியாரத் அல்ல!

பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது.

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்தவற்றைப் பொதுவாகவும், குறிப்பாக அனுமதித்தவற்றைக் குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள  வேண்டும். கப்ரு ஜியாரத்தைப் பொறுத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப் படவில்லை. மரணத்தை நினைவுபடுத்தும் என்ற காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்ஹாக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.

எனவே தர்காக்களுக்குப் போவது ஸியாரத் ஆகாது.

புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லைஎன்றார். இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லைஎன்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஜியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஜியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத் தலங்களில்…

பிரம்மாண்டமான கட்டிடம்

கப்ரின் மேல் பூசுதல்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள சமாதிகளை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (இது பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.)

இவ்வளவு தீமைகள் நடக்கும் இடத்துக்குப் போனால் மறுமை பயம் அதிகமாகாது.

மார்க்கம் தடை செய்த பல அம்சங்களைக் கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் அங்கு செல்வது ஹராமாகும்.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணம் தர்ஹாக்களில் இல்லை.

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது

பாத்திஹா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

இறந்தவருக்காக நேர்ச்சை செய்வது

கப்ரை முத்தமிடுவது

அங்கே விளக்கேற்றுவது

கப்ர் மீது சந்தனம் தெளிப்பது, பூ போடுவது

ஆகியன உள்ளிட்ட ஏராளமான தீமைகளை தர்ஹாக்கள் உள்ளடக்கியுள்ளன.

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 70

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது அடக்கத்தலங்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான அடக்கத்தலம் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்ஹாக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

அல்லாஹ்வின் பல கட்டளைகள் கேலி செய்யப்படும் கேந்திரமாக தர்ஹா அமைந்துள்ளதால் அந்தத் தீமைகளைத் தடுப்பதற்காகவே தவிர வேறு நோக்கத்தில் அங்கே செல்வதற்கு அனுமதி இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————————————

அகீதா விஷயங்கள்  ஆய்வுக்கு அப்பாற்பட்டதா?

சுஜா அலி

லகில் உள்ள பல மதங்களில் கொள்கையை தெளிவாகக் கூறுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகிறது. தெளிவாகக் கூறும் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமையை வழங்குவதன் மூலம் மேலும் தனித்து விளங்குகிறது.

இஸ்லாத்தின் அடிப்படையாக விளங்குகின்ற கடவுள் கொள்கையைக் கூறுவதில் உள்ள தெளிவு, ஆய்வு செய்பவர்களை உடனடியாக ஈர்க்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் எந்த ஒரு பொருளையும் ஆய்வு செய்து அறிவதே மனிதர்களுடைய இயல்பு.

கடைகளில் சென்று சிறு பொருட்களை வாங்கினாலும் கூட அதனுடைய தரம் என்ன? எடை என்ன? நிறம் என்ன? விலையை எப்படித் தருவது என்பது போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்துதான் அவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு மாற்றமாக ஆய்வின்றி எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏற்படும் தோல்வியை நம்மால் உணர முடிகிறது.

இதுபோன்ற உலக நடைமுறைகளுக்கே ஆய்வு தேவைப்படும்போது இஸ்லாத்தின் கொள்கை விஷயத்திலும் மனிதர்களுக்கு அந்த உரிமையை வழங்கினால் தான் இக்கொள்கையை நன்கு உணர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் இதில் ஆய்வு செய்யும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஏகத்துவக் கொள்கையை ஆய்வும் செய்யும் உரிமை!

இறைத்தன்மை பற்றி ஆய்வு செய்த இப்ராஹீம் நபி

ஏகத்துவக் கொள்கையை உரக்கச் சொன்ன நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் எந்தளவிற்கு ஆய்வு செய்து ஏற்றார்கள் என்பதையும் கூறுகிறான்.

இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்கு அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்தித்தைக் கண்டு ‘‘இதுவே என் இறைவன்’’ எனக் கூறினார். அது மறைந்த போது ‘‘மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்’’ என்றார்.

சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்’’ என்றார். அது மறைந்தபோது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகிவிடுவேன்’’ என்றார்.

சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்! இதுவே மிகப்பெரியது’’ என்றார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணைகற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொண்டவன்’’ எனக்கூறினார்.

‘‘வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தை திருப்பிவிட்டேன். நான் இணைகற்பித்தவனல்லன்’’ (எனவும் கூறினார்).

அல்குர்ஆன் 6:75-79

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்காக சான்றுகளை அல்லாஹ் எடுத்துக்காட்டிய போது அவற்றை  ஆய்வு செய்கிறார்கள். முதலில் நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். அது மறைந்த பிறகு சந்திரனைப் பார்க்கிறார்கள். அதுவும் மறைந்த பிறகு சூரியனைப் பார்க்கிறார்கள். அதுவும் மறைந்த பிறகு “நான் இணை கற்பித்தவனில்லை. அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவன்’’என்று கூறுகிறார்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ வாசகத்தைப் பிரதிபலிப்பதில் அழகிய எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும்போது அதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான். கொள்கையை ஆய்வு செய்யாமல் அவரிடம் விவாதித்த மக்கள் தான் தவறான கொள்கையில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே ஆய்வு செய்வதற்கு அபரிமிதமான உரிமைகளையும், வழிகளையும் மார்க்கம் வழங்கியிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

தூதுத்துவக் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமை!

ஏகத்துவக் கொள்கையை மட்டுமின்றி தூதுத்துவக் கொள்கையையும் ஆய்வு செய்யும் உரிமையினை இஸ்லாம் வழங்குகிறது. ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைநிராகரிப்பாளர்கள் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் போது, ‘இத்தூதரை நன்றாக ஆய்வு செய்யுங்கள்’ என இறைவன் கூறுகிறான். ஏனெனில் அவ்வாறு ஆய்வு செய்யும்போது நபி (ஸல்) அவர்களிடம் தவறு கண்டுவிட்டால் தூதுத்துவக் கொள்கையை எளிதில் தோற்கடித்துவிடலாம். அவ்வாறிருந்தும் ஆய்வு செய்யும் உரிமையை அல்லாஹ் வழங்குகிறான்.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை.

அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.

அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத்தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:2-4

நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் ‘‘உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை. கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லைஎன்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன் எனக்கூறுவீராக!

அல்குர்ஆன் 34:46

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதன் கருத்தாகிய ஏகத்துவம் மற்றும் தூதுத்துவத்தை ஆய்வு செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. மேலும் இந்த ஆய்வை மார்க்கம் வரவேற்கிறது என்பதை இந்த ஆதாரங்களின் மூலம் அறியமுடிகிறது.

அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்ய ஆர்வமூட்டுதல்!

குர்ஆனை ஆய்வு செய்யவேண்டும்

இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட பல்வேறு வேதங்களில் குர்ஆனை மட்டும் தான் இறுதிநாள் வரை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உத்திரவாதம் அளிக்கிறான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப்  பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்கமாட்டார்கள்.

அல்குர்ஆன் 29:49

குர்ஆனில் எந்த சந்தேகமும் இல்லை

(இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

‘‘இதை இவர் இட்டுக்கட்டிவிட்டார்என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

அல்குர்ஆன் 32:2,3

ஒரு வேதம் ஆட்சேபணைக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமென்றால் பிரமாண்டமான பாதுகாப்பும் சந்தேகத்திற்கிடமில்லாத பரிசுத்த தன்மையும் தேவை. இந்த இரண்டையுமே குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அப்படியிருந்தும் குர்ஆனின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கும் இஸ்லாத்தை ஏற்பவர்களுடைய கொள்கை உறுதி அதிகரிப்பதற்கும் குர்ஆனை ஆய்வு செய்யுமாறு அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பாரகள்.

அல்குர்ஆன் 4:82

ஆய்வாளர்களுக்கு ஓர் அறைகூவல்

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள் (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:23,24

தன்னை ஆய்வுசெய்து விடக்கூடாது என குர்ஆன் அஞ்சினால் இத்தகைய பகிரங்க அறைகூவலை விடுத்திருக்காது. மாறாக இந்த அறைகூவலின் மூலம் தன்னை ஆய்வு செய்பவர்களிடம், தானே வெற்றி பெறுவதற்கு அதிகம் தகுதியான வேதம் என்பதை நிரூபிக்கிறது.

—————————————————————————————————————————————————————————————————————

குடும்பவியல் தொடர்: 36

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் கூறும் குடும்பவியலில், குடும்பத்தின் எல்லா செலவீனங்களும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னால் பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கக் கூடாது என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு வரதட்சணையை நியாயப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

இப்படிப் பெண் வீட்டார் மனப்பூர்வமாக விரும்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். ஆனால் உண்மையில் மனப்பூர்வமாகக் கொடுக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இன்று திருமணத்தை முன்னிறுத்தி பெண் வீட்டார் கொடுப்பதெல்லாம் மனப்பூர்வமாகக் கொடுப்ப தாகக் கூறவே முடியாது. ஏனெனில் உண்மையில் இது லஞ்சம் கொடுப்பதைப் போன்றே உள்ளது.

லஞ்சத்தை நம்மில் பலர் கொடுப்பதற்குக் காரணம், அவர்களது காரியம் இலகுவாக நடக்க வேண்டும் என்பதற்குத்தான். தமது தேவை நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் லஞ்சம் வாங்குபவனோ மக்கள் விரும்பித்தானே தருகிறார்கள் என்று கூறுகிறான். ஆனாலும் விரும்பி லஞ்சத்தைக் கொடுத்தாலும் லஞ்சம் தவறுதான்.

அதேபோன்று திருமணத்தை முன்னிறுத்தி மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் கொடுக்கவில்லையெனில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை ஒழுங்காக நடத்த மாட்டார்கள்; மற்ற மருமகளுடன் ஒப்பிட்டுக் காட்டி நமது மகளைக் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்; மாமியார் வீட்டில் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும், கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில்தான் ஒருவர் தனது சக்திக்கு மீறி அன்பளிப்பு செய்கிறான். மேற்சொன்ன சூழ்நிலை சமூகத்தில் இல்லையெனில் நிச்சயம் யாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு எதையும் அன்பளிப்பாகக் கொடுக்கவே மாட்டார்கள். ஆக இஸ்லாத்தில் அன்பளிப்பு என்பது, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்படித்தான் அன்பளிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நபியவர்களின் உபதேசம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூஅசத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’’ என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, ‘இது உமக்குரியது; இது எனக்குரியதுஎன்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தமது கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக  இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’’ என்று சொன்னார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “நான் எடுத்துரைத்துவிட்டேனா?’’ என்று மும்முறை கூறினார்கள்.

நூல்: புகாரி 7174

இதே செய்தி புகாரியில் 2597, 6636, 6979 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளிலெல்லாம் அன்பளிப்பு தவறாகக் கொடுக்கப்படக் கூடாது என்ற நுணுக்கத்தைப் போதிக்கிறது.

எனவே திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படும் அன்பளிப்புகள் வரதட்சணை தான் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இது அன்பளிப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், சிலரது குடும்ப வாழ்க்கை திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்த சில தினங்களிலோ மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது பெண் வீட்டார் கொடுத்த அன்பளிப்பபைத் திரும்பவும் கேட்பார்கள். இது அன்பளிப்பாக அவர்கள் தரவில்லை என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அன்பளிப்பின் அடிப்படை இலக்கணமே, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, பதிலுக்குப் பதில் என்ற முறையில் இல்லாமல் கொடுப்பதேயாகும். இந்த அடிப்படையெல்லாம் திருமணத்தில் கிடையாது. எனவே திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்காமல் பெண் வீட்டார் கொடுப்பதுவும் வரதட்சணைதான்.

நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் அப்படித் தான் கேட்டார்கள். அன்பளிப்பு வழங்கப்பட்ட அதிகாரி அவரது தந்தை வீட்டிலும், தாய் வீட்டிலும் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்டதைப் போன்று நாமும் பெண் வீட்டில் கேட்டுப் பார்த்தால் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படியெனில் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதில் எந்த அன்பளிப்பும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

எனவே திருமண ஒப்பந்தத்தை ஒட்டி எதுவும் செய்யக் கூடாது. பின்னால் நம் வீட்டில் ஒருவராக நமது மருமகன் ஆனபிறகு அவர்கள் வீட்டில் நம் பெண் ஒரு குடும்ப உறுப்பினராகிய பிறகு அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் சகஜம்தான். அதில் குறைகூற வாய்ப்பில்லை.

எனவே திருமணத்தின் போது (முன்போ பின்போ) பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படுபவை, மாப்பிள்ளை வீட்டார் அன்பளிப்பு என்ற பெயரில் பெற்றாலும், அதில் நம் பெண்ணின் வாழ்க்கை தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் பெண் மாமியார் வீட்டில் கொடுமைப் படுத்தப்படக் கூடாது என்பதற்காகவும் சமூகத்தில் எல்லோரைப் போன்று நாமும் முறையைச் செய்துவிடுவோம் என்ற அடிப்படையில்தான் தரப்படுகிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ளலாம். மேற்கண்ட நபியவர்களின் செயல்பாட்டிலிருந்து கேட்காமலே தந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிட வேண்டும். கொடுத்துவிட்டாலும் மறுத்துவிட வேண்டும்.

இன்னும் சிலர் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, செல்வமிக்க வீட்டில் பெண் தேடுவார்கள். கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைப் பார்த்து மணம் முடிப்பதைப் பார்க்கிறோம். ஏனெனில் இதுவெல்லாம் பிற்காலத்தில் நமக்குத் தான் வரவேண்டும் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். நாம் கேட்காமலே கிலோ கணக்கில் நகையைப் போட்டு அனுப்புவார்கள் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். இப்படி உள்ளூர ஆசை வைத்துக் கொண்டு வெளியில் நல்லவர்களைப் போன்று நடிப்பவர்களும் நபியவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆதாரங்கள் வாயிலாக தெரிகிறது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’’ என்றார்கள்.

நூல்: புகாரி 1473, 7173, 7164

மேலும் பெண்கள் நான்கு நோக்கத்திற்காக திருமணம் முடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் இதற்கு ஆதாராமாகக் கொள்ளலாம். அதிலும் மார்க்கப் பற்று என்ற நோக்கமே வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டால், மார்க்கப்பற்று குறைவாக உள்ள பணக்காரப் பெண்ணை விட மார்க்கப்பற்று அதிகம் உள்ள ஏழைப் பெண்களைத் தேர்வு செய்வார்கள்.

(பார்க்க : புகாரி 5090)

இதுபோக பெண்களிடம் இருந்து வாங்குவது அநீதி என்பதை விளங்க வேண்டும். கொடுப்பதற்குத் தகுதி ஆண்களிடமும் பெறுவதற்குத் தகுதி பெண்களிடமும் தான் இருக்கிறது. இதைப்பற்றியும் குர்ஆன் பேசுகிறது. அப்படியெனில் நாம் தவறான முறையில் செல்வத்தைப் பெறவே கூடாது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!

(அல்குர்ஆன் 2:188)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2449

இப்படிப் பெண் வீட்டார் பல இடங்களில் பிச்சை எடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் போது வெளிப்படையில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மனம் புழுங்கிக் கொண்டு, சாபமிட்டுக் கொண்டும் இறைவனிடம் எதிராகப் பிரார்த்தனை செய்து கொண்டும்தான் கொடுப்பார்கள். நிச்சயம் இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ்விடம் அதிகம் மரியாதை உண்டு என்பதைப் புரிந்து மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே பெண்களிடமிருந்து வெளிப்படை யாகவும் வரதட்சணை வாங்கக் கூடாது. மறைமுகமாகவும் வாங்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்வில் பெண்ணுக்கும் சேர்த்து ஆண்கள் தான் பொருளாதாரப் பொறுப்பை சுமக்க வேண்டும் என்பதில் இவையும் அடங்கும் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————————————

இலகுவை விரும்பிய  எளிய தூதர்

சபீர் அலீ M.I.Sc.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள்.

ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி மூன்றாவது வயதில் மரணத்தை எய்தினார்கள்.

அப்போது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையில் பெரும் மக்கள் சக்தியே சங்கமித்திருந்தது.

இன்றளவும், கோடிக்கணக்கான மக்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது கொள்கையையும் உயிருக்கும் மேலாக நேசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மதங்களைக் கடந்து அனைத்து சாராராலும் போற்றப்படும் முதன்மைத் தலைவராகவும் நபி (ஸல்) அவர்கள் தான் திகழ்கின்றார்கள்.

நாற்பது வயதைத் தாண்டிய, ஒரு மனிதரால் 23 ஆண்டு காலம் என்ற மிகக் குறுகிய கால கட்டத்தில் எவ்வாறு இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்ட முடிந்தது என்று உலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது அயராத பிரச்சாரப் பணியால் மாத்திரம் மக்களை வென்றெடுக்கவில்லை. அவர்களது அழகான பண்பாலும் தான் வென்றெடுத்தார்கள்.

ஒரு கூட்டம் ஓரிறைக் கொள்கையினால் கவரப்பட்டார்களென்றால் இன்னொரு சாரார் இவர்களது நற்குணத்தால் கவரப்பட்டார்கள்

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

அல்குர்ஆன் 68:4

இறைவனால் நற்சான்று வழங்கப்பட்ட நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளில் ஒன்றுதான், அவர்கள் அனைத்து காரியங்களிலும் இலகுவானதையே தேர்ந்தெடுப்பவர்களாக இருப்பது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள். (தேர்ந்தெடுக்கப்பட்ட) அக்காரியம் பாவமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்.

அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் விலகி நிற்பார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.

நூல்: புகாரி 3560

ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்களின் இரண்டு குணத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

  1. நபி (ஸல்) அவர்கள் தாம் சந்திக்கின்ற அனைத்து காரியங்களிலும் பாவமல்லாத இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள்.
  2. தனக்காக யாரையும் தண்டிக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் சட்டம் மீறப்படுகின்ற போது அல்லாஹ்விற்காக மட்டும் தண்டிப்பார்கள்.

இவ்விரு தன்மைகளுக்குமே நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையின் ஏராளமான நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

மேலும், நபி (ஸல்) தனது அனைத்து வணக்க வழிபாடுகளிலும் சிரமத்தை தேடிக்கொள்ளவில்லை. எளிமையையே கடைபிடித்தார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?’’ நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’’ என்றார். இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’’ என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்’’ என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5063

இவ்வாறு, நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் சந்தித்த அத்துணை விஷயங்களிலும், வணக்க வழிபாடுகளிலும் பாவமல்லாத இலகுவையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

மார்க்கமும் நமக்கு லேசானதாகவே வழங்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 39

மார்க்கம் எளிதானதுதான். மக்கள் சிரமங்களை ஏற்படுத்திக் கொண்டால் தான் மார்க்கம் அவர்களுக்கு சிரமமாகக் காட்சியளிக்கும் என்ற தனது சொல்லின் அடிப்படையிலேயே தனது வாழ்க்கையிலும் எளிதைத் தேர்ந்தெடுத்து கஷ்டத்தைப் புறக்கணிப்பவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்களுக்கு மார்க்கத்தை எளிதாக எடுத்து சொல்லி அவர்களை மார்க்கத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டிய மார்க்க அறிஞர்களே(?) மார்க்கத்தைக் கடினமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

மணமகன்தான் மஹர் கொடுக்க வேண்டும், வலீமா கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் எளிய சட்டத்தை சொல்லியிருக்க, மணமகளிடமிருந்து வரதட்சணையையும், வலீமாவையும் பெற வேண்டும் என்று கடினத்தைப் புகுத்தி, திருமண வழிமுறையை கஷ்டமாக்கியிருக்கிறார்கள்.

மேலும், நோன்பு நோற்றவர் எச்சிலை விழுங்கக் கூடாது; பல் துலக்க கூடாது என்பன போன்ற மார்க்கத்தில் இல்லாத சட்டங்களை இயற்றி நோன்பைக் கடினமாக்கியிருக்கின்றார்கள்.

இன்னும், பயணம் செய்பவர் தொழுகையை சுருக்கித் தொழுது கொள்ளலாம் என்று மார்க்கம் சலுகை தருகிறது. ஆனால் பயணி தொழ வைத்தால் அவரைப் பின்பற்றித் தொழுதவர்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத சட்டம் இயற்றி கஷ்டமாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு மார்க்கத்தில் இல்லாத ஏராளமான சட்டங்களை இயற்றி மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பவர்களாக இன்றைய மார்க்க அறிஞர்கள் (?) இருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மக்களுக்கு எளிதை நாடுகின்ற குணம் படைத்தவர்களாக இருந்தார்களோ அதுபோன்று மக்களுக்கு மார்க்கத்தில் உள்ள பாவமல்லாத, இலகுவான சட்டத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வென்றெடுக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————————————

இந்தோனேஷியாவில்  இஸ்லாமிய ஷரீஆ?

நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை

ஷரீஅத் சட்டம் காலத்தின் ஒவ்வாமை, அது ஒரு கருப்பு சிந்தனை,  அது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று மேற்கத்தியம் பூதாகரமாக உருவாக்கிய  கருத்தாக்கம் கண்மூடித்தனமாக  உலகில் உலவிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேஷியாவின் மாகாணங்களில் ஒன்றான ‘பாண்டா அச்சே’ அதை புஸ்வானமாக்கி ஒரு புரட்சி படைத்துக் கொண்டிருப்பதை ஒரு பத்திரிக்கைச் செய்தி நமக்கு புலப்படுத்துகின்றது.

ஷரீஅத் சட்டம் பற்றிய அந்நாட்டு மக்களின் புரிதலில் நமக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும்  உலகில் எந்த ஒரு பாகத்திலும் இஸ்லாமியச் சட்டம் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் மேற்கத்திய உலகம் எந்த அளவு குறியாக இருக்கின்றது என்பதை அடையாளங்காட்டி அம்பலப்படுத்துவதற்காக இந்த ஆக்கம் இங்கு தரப்படுகின்றது.

நியூயார்க் டைம்ஸில் வெளியான இந்தக்  கட்டுரை இந்து ஆங்கில நாளேட்டில் 14.01.2017 அன்று மறுபதிப்பு செய்யப்பட்டது. அதற்கு அவர்கள் வைத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா?

“Amid Shariat experiment, Indonesia’s secular face slips- ஷரீஅத் சட்ட சோதனைக்கு மத்தியில் இந்தோனேஷியாவின் மதச்சார்பின்மை முகம் சிதைகிறது”

எந்த அளவுக்கு இவர்கள் ஷரீஅத் சட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதை இந்தத் தலைப்பே நமக்கு உணர்த்துகின்றது. அந்தக் கட்டுரை இதோ:

கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் தேனீர் விடுதியில் ஒரு மாலை நேரத்தில் ஒலிபெருக்கியில் அலறுகின்ற இசைப் பாடல்கள் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த நவ நாகரீகமான கருப்புக் கண்ணாடிகள் போட்ட வாலிபக் கூட்டம் வெளியே அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் தங்கள் கைகளில் உள்ள கோப்பைகளிலிருந்து தேனீரை உறிஞ்சிக் கொண்டும் மறு பக்கம் சிகரெட் ஊதிக் கொண்டும் கால்களை ஆட்டியவாறு காதுகளில் விழுகின்ற  தேனிசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கட்டத்தில் அருகில் உள்ள ஒரு பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை ஒலித்தது தான் தாமதம்; பணிப் பெண் இசை பாடல்களை நிறுத்தி, அனைவரையும் ஒரு நொடிப் பொழுதில்  உள்ளே அமரச் செய்து கதவுகளை கீழிறக்கி விடுதியை உடனடியாக மூடிவிட்டாள். பாங்கு சப்தம் கேட்டபின் பள்ளிக்கு தொழுகைக்கு வராமல் பணிகளில் முடங்கிக் கிடக்கக் கூடாது என்பதற்காகத் தான்.

சுமத்ரா முனையில் சுடர்மிகு சூரியன்

இவ்வளவும் நடப்பது எங்கே? இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் முனையில் அமைந்திருக்கும்  பாண்டே அச்சே என்றே மாகாணத்தில் தான்! உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கின்ற நாடு இந்தோனேஷியாவாகும். 17,508  தீவுகளின் தொகுப்பாக அமைந்த அந்நாட்டில் 34 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 5 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றவை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தையும் தகுதியையும் பெற்ற மாநிலம் தான் பாண்டே அச்சே!  மதச்சார்பின்மையை அரசியல் சாசனமாகக் கொண்ட இந்தினேஷியாவில் அச்சே மாநிலம் மட்டும் 2001ல் இஸ்லாமிய ஷரீஅத்தை அரசியல் சாசனமாக ஐஸ்வரித்துக் கொண்டது. இம்மாநிலம் பிரிவினை வாதச் சிந்தனையில் உள்ள மாநிலம் என்பதால் அதை மட்டுப்படுத்தவே இந்த சிறப்புச் சலுகை என்ற வாதமும் வைக்கப்படுகின்றது.

தடை விதிக்கப்பட்ட தகாத காரியங்கள்

அச்சே மாநிலத்தில் மனித குலத்தை அழித்து நாசமாக்குகின்ற ஆல்கஹால் (மது) தடை செய்யப்பட்டுள்ளது. விபச்சாரம் முதல் கொண்டு ஓரினச் சேர்க்கை, மது விற்பனை வரையிலான குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பொது இடத்தில் சாட்டையடி கொடுக்கப்படுகின்றது. ஷரீஆ காவல் துறை அல்லும் பகலும் ரோந்து வந்து கொண்டு ஹோட்டல் விடுதி முதல் கடற்கரை வரை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு  ஆபாசச் செயல்கள் அரங்கேறாமல்  கண்காணித்து வருகின்றது. ஒரு பதினைந்து ஆண்டு காலமாக இந்தோனேஷியா பழமைவாத சிந்தனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கால கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பார்க்கப்பட்ட வந்த அச்சே இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகின்றது. எதற்கு? ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதற்காகத் தான்!  இது மதசார்பின்மையிலிருந்து இந்தோனேஷியாவைத் தடம் புரள வைத்து விடுமோ என்று மதச்சார்பின்மைவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கின்றது.

அச்சே எப்போதெல்லாம் ஒரு ஷரீஅத் சட்ட ஆணையைப் பிறப்பிக்கின்றதோ அப்போதெல்லாம் மற்ற  மாநிலங்கெல்லாம் தாமும் அது போன்ற ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிக்கலாமே என்று  ஆர்வமும் ஆசையும் கொள்கின்றன என்றளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது என்று இந்தோனேஷியாவின் பெண்களுக்கு எதிரான வன்முறை கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர்  ஆண்டி எண்ட்ரியாணி கூறுகின்றார். ஷரீஅத் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சில சட்டங்களை திரும்ப பெற வேண்டும். காரணம் அவை இந்தோனேஷியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளன என்றும் அவர் கூறுகின்றார்.

மாநிலங்களும் மாவட்டங்களும் தங்களுக்கு அவசியமான சட்டங்களை தாங்களே இயற்றிக் கொள்ளலாம் என்று 1999ல் மத்திய அரசு அவற்றிற்கு முக்கியமான அதிகாரங்களை வழங்கியது. அன்றிலிருந்து இது வரை நாடு முழுவதும் 442க்கும் மேற்பட்ட ஷரீஅத் அடிப்படையிலான  ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அண்மைக் கால ஆய்வு குறிப்பிடுகின்றது.

பழமை சிந்தனையை (இஸ்லாமிய ஷரீஅத் சட்ட அமைப்பை) தழுவிக் கொள்கின்ற புதுப் புது பகுதிகளில் உள்ள பிரதிநிதிக் குழுக்கள், அச்சே மாநிலத்தை நோக்கி வந்து அங்கு இஸ்லாமியச் சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகின்றது என்று பார்க்க வருகின்றனர்.  பாண்டா அச்சேவை நோக்கி பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு குழுக்கள் படை எடுத்து வருவது உள்ளூர் அதிகாரிகளுக்குப் பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது.

‘ஷரீஅத் சூழ்நிலையை எப்படி எளிதாக்கி தகவமைத்திருக்கின்றோம் என்று அக்குழுக்கள் இங்கு வந்து  ஆசுவாசமாகப் பார்க்கின்றனர். நாங்கள்  அவர்களிடம் ஷரீஅத் போதனைகளுக்கு எப்படி சட்ட வடிவு, வரைவாக்கம் கொடுப்பது என்று விரிவாக விளக்கிக் கூறுகின்றோம்’ என அச்சே அரசாங்கத்தின் ஷரீஅத் சட்டத்துறை தலைவர் சியாரிசல் அப்பாஸ் தெரிவிக்கின்றார்.

கடுமையான விமர்சனக் கணைகளுக்குள்ளான சவூதி ஷரீஅத்தை விட்டும் இங்குள்ள ஷரீஅத் சட்டம் சற்று வித்தியாசமானது; வேறுபட்டது.   இது மாற்று சிந்தனைக் கருத்துகளையும் அரவணைக்கக் கூடியது. அத்துடன், இது, பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கலாம் என்ற கண்ணோட்டத்தையும் கொண்ட ஒரு மிதமான ஷரீஅத் சட்டம் என்று மிதவாதி என கருதப்படக்கூடிய  சியாரிசல் அப்பாஸ்  கூறுகின்றார்.

இதற்கேற்ப, மாநிலத்தின் தலைநகரான பாண்டா அச்சேவின் மாநகராட்சியின் மேயராக இருப்பவரும் ஒரு பெண் தான். இவர் தான் முதல் மேயரும் ஆவார். அவர் பெயர் இல்லிசா ஸஆதுத்தீன் டிஜமால். இவர் முற்போக்குத் தலைவியாகச் செயல்படுவார் என்று தான் இவருக்கு  நாங்கள் வாக்களித்தோம். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, அச்சேவின் பழமைவாத ஒழுக்க மாண்புகளை செயல்படுத்துவதில் பெரும் ஈடுபாடும் பேரார்வமும் கொண்ட பெண்மணியாக இருக்கின்றார் என்று   பெண்ணுரிமைப் போராளிகள்  அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

முக்காடு அணிந்த முஸ்லிம் பெண்கள்

கடந்த ஆண்டு ஃபிப்ரவரியில் திருமதி இல்லிசா கருப்புத் தலை முக்காடு அணிந்து கொண்டு அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்து விட்டார். அழகிகளை கேமராக்களை வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தன.  அரங்கில் நுழைந்த அவர், அழகிகளை நோக்கி, நீங்கள் ஏன் ஜில்பாப் (தலை முக்காடு) அணியக் கூடாது? என்று  ஒருத்தியைப் பார்த்து கேட்டார். ஷரீஆ காவல் துறை அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு கோப்பைகளை கோணிப் பைக்குள் வாரி போட்டு கொண்டு சென்றனர். அழகிகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.

இந்தோனேஷியாவிலிருந்து தனி நாடு கோரி  ஒரு பத்தாண்டுகள் பாண்டா அச்சா மாநிலம் போராட்டம் நடத்தியது. தனி நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு  பரிசாக  அளித்தது தான் ஷரீஆ சட்ட ஆட்சி. ஷரீஅத் சட்ட ஆட்சி அமுலுக்கு வந்ததிலிருந்து தனி நாட்டுக் கோரிக்கை 2005ல் முடிவுக்கு வந்தது. அச்சே மக்களிடம் தனி நாட்டுக் கோரிக்கைக்கான போர் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறாத வடுக்களாக இருந்து வருகின்றன.

அத்துடன், இந்தோனேஷியாவில் 2004ல் 230000 பேர்களை பலி கொண்ட சுனாமி ஆழி பேரலையும் அவர்களிடம் ஆறாத, அழியாத வடுக்களாகவே இருந்து வருகின்றன. இன்று அச்சே இந்தோனேஷியாவில் மிகவும் வறுமையான மாநிலமாகும்.

வரும் ஃபிப்ரவரியில் அச்சே மாநில மக்கள் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். மேயருக்கு அல்லது ஆளுநர் பதவிக்கு போட்டியிடக் கூடிய எந்த வேட்பாளரும் ஷரீஅத்தின் சட்டத்தின் இறையாண்மையை, அதன் மேலாண்மையை எதிர்த்து களங்காணப் போவதில்லை.

அரசாங்கம் கொஞ்சம் கூடுதலாகத் தான் போகின்றது என்று எண்ணி ஒரு பெருங்கூட்டம் உள்ளுக்குள்  நொந்து கொண்டிருந்தாலும் ஷரீஅத் சட்டத்தை எதிர்த்து இனி வாதம் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அச்சேவின் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இர்வான் ஜான் தெரிவிக்கின்றார். அவர்களுக்கு எந்தத் துணிச்சலும் கிடையாது என்று ஷரீஅத் சட்ட விமர்சகர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். மத விவகாரங்கள் குறித்து பேசினால் ஒன்று  நீ நீக்கப்படுவாய் அல்லது உண்மையான அச்சே நாட்டுக்காரன் அல்லன் என்று முத்திரை குத்தப்படுவாய். அனைவரும்          நயவஞ்சகர்களே என்று அவர் குறிப்பிட்டார்.

—————————————————————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர்

எம்.முஹம்மது சலீம், M.I.Sc. மங்கலம்

மார்க்கத்தின் அடிப்படையை அறியாத மக்கள் பல்வேறு வகையான பாவங்களிலும் குற்றங்களிலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். மற்றொரு பக்கம், மார்க்கத்தை அறிந்துள்ள மக்கள் பலரும், அதன்படி வாழாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இப்படி, உண்மையை ஒதுக்கித் தள்ளும் தீய குணம் முஃமின்களிடம் இருக்கக் கூடாது. சத்தியத்திற்கு ஏற்ப சீரிய முறையில் வாழ்வைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் மறுமையில் கவலையின்றி இருக்க முடியும்.

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 3:135)

நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 6:48)

இவ்வசனங்களை விளக்கும் வகையில் நபிகளாரின் வாழ்வும், வாக்கும் இருந்தது. மார்க்க விசயமாக இருப்பினும், தமது விவகாரமாக இருப்பினும் எப்போதும் உண்மையின் உறைவிடமாக திகழ்ந்தார்கள், நபி(ஸல்) அவர்கள்.

ஆகவே தான், அல்லாஹ் தம்மைக் கண்டிக்கும் வசனங்களையும் கொஞ்சமும் மறைக்காமல் திரிக்காமல் மக்கள் மன்றத்தில் முன்வைத்தார்கள்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம்.

(திருக்குர்ஆன் 3:128)

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

(திருக்குர்ஆன் 28:56)

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?

(திருக்குர் ஆன் 66:1)

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன் 80:1-3)

எதையும் உள்ளது உள்ளபடி சொல்லும் நற்குண செம்மலாக நபிகளார் இருந்தார்கள் என்பதற்கு இவை மட்டுமல்ல, மேலும் நிறைய சான்றுகள் உள்ளன.

பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, “இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்’’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை’’ என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ்(ரலி)

நூல்: முஸ்லிம் (4711)

மற்றொரு அறிவிப்பில் (முஸ்லிம் 4712), “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’’ என்று சொன்னதாக உள்ளது.

மற்றொரு அறிவிப்பில் (முஸ்லிம் 4713), நபி (ஸல்) அவர்கள், “உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்’’ என்று சொன்னதாக உள்ளது.

மகசூல்  குறைந்தது பற்றி மக்கள் முறையிடும் போது, தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று நபிகளார் தயங்கவில்லை. தமக்கு எல்லாம் தெரியும் என்று வாதிடவும் இல்லை. தூதுத்துவத்தைப் பின்பற்றும் முறை பற்றியும் தமது இயல்பு நிலை பற்றியும் பகிரங்கமாக விளக்குகிறார்கள்.

ஆனால், இன்றும் சிலர் தங்களுக்கு அசாதரண ஆற்றல் இருப்பதாக சுற்றித் திரிகிறார்கள். பார்வை பட்டால் பேய் ஓடிவிடும்; கை பட்டால் நோய் குணமாகி விடும்; போகும் இடம் பணம் கொட்டும் என்றெல்லாம் கதை விடுகிறார்கள். தாயத்து தகடு போன்றவை மூலமாக எதிர்காலத்தையே மாற்றிவிடுவதாக நடிக்கிறார்கள்.

இப்படி ஆன்மீகத்தின் பெயரால் ஊரை ஏமாற்றும் ஆசாமிகளைப் பார்க்கும்போது, நபிகளார் மனிதருள் மாணிக்கம் என்பதை என்றும் மறுக்க இயலாது.

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.- (தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)’’ என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் ஏதேனும் மாற்றங்ககள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (401)

சிலர் பொதுமக்கள் மத்தியில் தங்களைத் தனித்துவம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். குறைகள், தவறுகள் ஏதுமில்லா மகான்களாகப் படம் காட்டுகிறார்கள். இந்த வியாதி காரணமாக, தாங்கள் மக்களுக்குத் தெரிவித்த மார்க்க தீர்ப்புகள், கருத்துகள் தவறானவை என்று தெரிந்தும் அதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அல்லது பெயர் கெட்டுவிடக் கூடாதென மௌனமாகி விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நபிகளாரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’’ என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்’’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

இன்னொரு அறிவிப்பில், “அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்பேன்’’ என்று கூறியதாக உள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (2088), (2089)

பிறமதக் கலாச்சாரம் பற்றி தூதர் அவர்கள் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஆஷூரா நோன்பு பற்றி தோழர் ஒருவருக்கு சந்தேகம் எழுகிறது. அதிலுள்ள நியாயத்தை நபிகளார் ஏற்றுக் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் அனுமதிப்படி அந்த நோன்பின் சட்டத்தை மாற்றுகிறார்கள்.

இன்று நிலைமை என்ன? நபிகளாரின் காலத்திலேயே மார்க்கம் முழுமையான பிறகும், அதில் இல்லாத காரியங்களை பல முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் குர்ஆன் ஹதீஸை சுட்டிக் காட்டினால் செவியேற்க மறுக்கிறார்கள். அறிந்தாலும் பொய்யான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு ஷிர்க்கிலும் பித்அத்திலும் ஆட்டம் போடுகிறார்கள்.

ஒருவர் முஸ்லிமோ, காஃபிரோ, எவராக இருந்தாலும் அவருடைய கருத்து சரியாக இருக்கும் போது அதனை அங்கீகரிப்பதே சரியானது. அதுவே சத்தியத் தூதரின் வழிமுறையாக இருந்தது.

ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘நீங்கள் இணைக் கடவுள்களை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் இணை கற்பிக்கின்றீர்கள். (அதாவது) நீங்கள் அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து (என்று இறைநாட்டத்திற்கு சமமாக மனித நாட்டத்தை இணைத்துக்) கூறுகின்றீர்கள். இன்னும் கஅபாவின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றீர்கள்’’ என்று கூறினார். உடனே நபியவர்கள் (ஸஹாபாக்களாகிய) அவர்களுக்கு, சத்தியம் செய்யும் போது கஅபாவின் இரட்சகன் மீது சத்தியமாக என்று கூறவேண்டும் என்றும், அல்லாஹ் நாடினான், பிறகு நீங்கள் நாடியது நடந்தது என்ற கூறவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: குதைலா (ரலி)

நூல்கள்: நஸயீ (3713), அஹ்மத் (25845)

இவ்வாறு தூதர் வாழ்வில் சம்பவங்களை நிகழ்த்தி மார்க்கத்தை அணுகும் முறையை அல்லாஹ் நமக்கு புரிய வைக்கிறான். ஆகவே, ஆளைப் பார்த்து செய்தியை முடிவு செய்துவிட முடியாது. நல்ல நபரிடமும் தவறான கருத்து இருக்கும். கெட்ட மனிதனிடமும் சரியான தகவல் கிடைக்கும். எதிலும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ரமளானுடைய ஃபித்ரா பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தது. இரவில் திருடன் ஒருவன் வந்து அதிலிருந்து எடுக்கிறான். அவர் அவனை பிடிக்கும் போது, இனிமேல் வர மாட்டேன் என்று கெஞ்சியதால் விட்டுவிடுகிறார்கள். இரவு சம்பவத்தை நபிகளாரிடம் தெரிவிக்கிறார்கள். திருடன் மீண்டும் வருகிறான். முதல் நாள் போலவே இரண்டு நாட்கள் கழிகிறது. இது குறித்து அந்த நபித்தோழரே விவரித்துள்ளார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான்.  அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்!’’ என்று கூறினேன். 

அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!’’ என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?’’ என்று கேட்டேன்.  நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.  விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?’’ என்று கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன்.  அந்த வார்த்தைகள் என்ன?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும்  உம்மிடம் உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள்.  தெரியாது!’’ என்றேன்.  அவன்தான் ஷைத்தான் (திருடன்)!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புஹாரி (2311)

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபிகளாரின் நடவடிக்கையைக் கவனியுங்கள். அவை நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான். உண்மை எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதனை மறைக்க கூடாது. எந்தவொரு பாகுபாடும் பாராமல், அதற்கேற்ப நம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இத்தகு நல்ல புரிதலை வல்ல இறைவன் நமக்கு வழங்குவானாக!

—————————————————————————————————————————————————————————————————————

தற்கொலை செய்ய முயன்றார்களா  நபிகள் நாயகம்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

பொய் பிரச்சாரத்தால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தத் துடியாய் துடிக்கும் கள்ளக் கிறித்தவக் கூட்டமும், தங்களின் இழிசெயலால் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் சமாதி வழிபாட்டுக் கும்பலும் நபிகள் நாயகம் தற்காலைக்கு முயன்றார்கள் என்ற செய்தியைப் பரவலாக பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களின் இப்பரப்புரைக்கும் பழிப்புரைக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்திருப்பது புகாரியில் உள்ள பின்வரும் நீண்ட செய்தியாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது.

பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது.

(அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘ஓதும்என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையேஎன்று அவருக்கு பதிலளித்தார்கள்.

(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு ஓதும்என்றார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவன் இல்லையேஎன்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து, பின்னர் என்னை விட்டு விட்டு, ‘ஓதும்என்றார். அப்போதும், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையேஎன்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதும்..என்று தொடங்கும் (96வது அத்தியாயத்தின்) வசனங்களை மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. அப்போது, ‘கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா(ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் வரக்காவிடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

வரக்காஅறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் அவர்தாம் நபி மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்என்று கூறிவிட்டு உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார்.

(இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6982

நபிகளாருக்கு வஹீ வரத் துவங்கி பின் தடைபட்டுப் போனதால் மனமுடைந்து மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்றும் ஒவ்வொரு முறை அவ்வாறு எண்ணமேற்பட்டு முயற்சிக்கும் போதெல்லாம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் இறைத்தூதர் தான் என ஆறுதல் கூறிய பிறகே நபிகளார் ஆறுதலடைவார்கள் எனவும் இச்செய்தி கூறுகிறது.

தற்கொலை செய்யும் தப்பெண்ணம் நபிக்குப் பலமுறை ஏற்பட்டிருக்கிறது என்றும் இச்சம்பவம் எடுத்துரைக்கின்றது.

இச்செய்தி தான் மேற்கண்ட இருசாராருக்குமான அஸ்திவாராமாகும்.

வெறும் வாயை மென்று கொண்டிருந்த கிறித்தவக் கூட்டம் இதை அவல் என்றெண்ணி நன்றாக அரைத்துக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்கிறீர்களா?

பாருங்கள்! முஹம்மது உண்மையிலேயே இறைத்தூதர் என்றால் இப்படி மனச்சோர்வடைந்து தற்கொலை செய்ய எண்ணியிருப்பாரா?

முஹம்மத் தற்கொலை செய்யுமளவு சென்றார் எனில் அவரைத் தொடர்பு கொண்ட – தூண்டிய ஆவி பரிசுத்த ஆவியாக இருக்க முடியுமா?

மெய்யான கடவுள் தான் அவரை தொடர்பு கொண்டார் எனில் இத்தகைய குழப்பத்திற்கு அவர் ஏன் செல்ல வேண்டும்?

எனவே முஹம்மது ஓர் பொய்த்தூதர் என்று விஷமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

இதற்குப் பதிலளிக்கத் துப்பு கெட்ட கப்ரு முட்டிக் கூட்டமோ தாங்கள் அவ்லியாக்களாகத் தேர்வு செய்த சில பைத்தியக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக, ‘நபியே தற்கொலை செய்ய முயற்சித்தவர் தான்’ (நஊது பில்லாஹ்) என்ற ரேஞ்சுக்கு இந்தச் செய்தியை வைத்து சிலாகித்து சிறப்பாக  சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சாராருக்குமே இஸ்லாம் குறித்த அறிவோ நபிமொழிகளை அணுகும் ஆய்வுத் திறமோ எதுவுமில்லை.

உண்மையில் நபிகளார் தற்கொலை செய்யத் துணிந்தார்களா? இக்குறைமதி கொண்டோர் குறிப்பிடும் செய்தியின் தரம் என்ன என்பதை அலசுவோம்.

யார் சொன்னது?

இச்செய்தியினை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷாவிடமிருந்து உர்வா – உர்வாவிடமிருந்து ஸூஹ்ரி என்பார் அறிவிக்கிறார்.

இறைச்செய்தி வரும் முன் ஹிரா குகையில் நபிகளார் தங்கியிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ஓதுவீராக என்று கூறிய  விபரங்கள் முதல், நபி அச்சமடைந்ததால் அன்னாரின் துணைவி கதீஜா அவர்கள் தம் உறவுக்காரர் வரகாவிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறியது – அதற்கு  வரகா அளித்த பதில் என நபிகள் நாயகத்திற்கு வஹீ வரத்துவங்கிய புதிதில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இச்செய்தி துவங்குகிறது.

வஹீ தடை பட்டதால் நபியவர்கள் கவலை கொண்டார்கள் என்பதை ஆயிஷா (ரலி) கூறியதாகச் சொல்லப்படும் தொடர்ச்சியில் தான் பிரச்சனைக்குரிய வாசகம் வருகிறது.

‘‘நமக்குக் கிடைத்த தகவலின்படி’’ எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள்.

இந்த வாசகம் தான் நபி தற்கொலை செய்ய முயன்றார்கள் என்பதற்கான ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

இது தான் நன்றாக ஆராயப்பட வேண்டும்.

நமக்குக் கிடைத்த தகவலின் படி என்று கூறி நபி தற்கொலை செய்ய எண்ணினார்கள் என்று கூறப்படுகிறது என்றால் இத்தகவல் யாருக்குக் கிடைத்தது?  யார் மூலம் கிடைத்தது?

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்திருந்தால் வேறு நபித்தோழர் மூலம் கிடைத்திருக்கலாம் என்று கருதலாம்.

ஆயிஷா அல்லாத – அச்செய்தியில் இடம் பெறும் வேறு அறிவிப்பாளர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்திருந்தால் அவர்கள் இந்தத் தகவலை யாரிடமிருந்து, எப்படிப் பெற்றார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். நபி தொடர்புடைய செய்தியினை அவர்கள் கூறுவதால் அவர்களின் வரலாறும் ஆராயப்பட்டு அவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.  அதன் பிறகே அது நம்பகமான செய்தி என்ற தரத்தை அடையும்.

நமக்குக் கிடைத்த தகவலின் படி… என்ற வாசகம் யார் சொன்னது?

இச்செய்தியினை துவக்கத்திலிருந்து நன்றாகக் கவனித்து வந்தால் அது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தை அல்ல என்பதையும் ஆயிஷாவுக்குப் பிந்தைய நபர் கூறிய வார்த்தையே என்பதையும் அறியலாம்.

ஹிரா குகையில் தங்கியதிலிருந்து நபி தொடர்புடைய பல செய்திகளை ஆயிஷா (ரலி) குறிப்பிட்டு வருகிறார்கள்.

இந்நிகழ்வுகள் எதிலும் ஆயிஷா அவர்கள் நபியுடன் உடனிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவாகக் குறிப்பிடுவதானால் இந்நிகழ்வு ஆயிஷா அவர்கள் பிறப்பதற்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற நிகழ்வாகும். ஆக அனைத்தையுமே ஆயிஷா (ரலி) பிற நபித்தோழரிடமிருந்து கேட்டறிந்த தகவல்களைத் தான் எடுத்துக் கூறுகிறார்கள்.

அப்படியிருக்க, நீண்ட சம்பவத்தின் துவக்கத்திலிருந்து எங்கேயும் எனக்கு கிடைத்த தகவலின் படி என்பதைக் கூறாமல் தற்கொலை விவகாரத்தின் போது மாத்திரம் இந்த வாசகம் வருகிறது என்றால் நிச்சயம் இது ஆயிஷா அவர்களின் வார்த்தையல்ல என்பதை சம்பவத்தின் போக்கே காட்டிக் கொடுத்து விடுகிறது.

முழுச் சம்பவத்தையும் ஆயிஷா தான் அறிவிக்கின்றார்கள். அதில் பல தகவல்களைக் கூறுகிறார்கள். எல்லாமே அவர்களுக்குப் பிற நபித்தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் தாம். எதிலும் அவர்கள் உடனிருக்கவில்லை. அப்படியிருக்க நபி தற்கொலை செய்ய எண்ணினார்கள் என்ற தகவல் வரும் போது மட்டும் ‘எனக்கு கிடைத்த தகவலின் படி’ என்று சொல்வதாக இருந்தால் கண்டிப்பாக இதை ஆயிஷா பயன்படுத்தவில்லை. ஆயிஷாவுக்குப் பிந்தைய அறிவிப்பாளர்களில் – அறிஞர்களில் ஒருவரே இதைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு.

இப்படி சம்பவத்தின் போக்கை நன்றாக உற்று நோக்கி இந்த வாசகத்தை அதே சம்பவத்தில் இடம்பெறும் ஸூஹ்ரி என்பவரே கூறுகிறார் என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அறிஞர் இப்னு ஹஜர் மற்றும் கிர்மானீ ஆகியோர் இதை குறிப்பிடுகின்றனர்.

فتح الباري – ابن حجر (12/ 359)

ثم ان القائل فيما بلغنا هو الزهري ومعنى الكلام أن في جملة ما وصل إلينا من خبر رسول الله صلى الله عليه و سلم في هذه القصة وهو من بلاغات الزهري وليس موصولا وقال الكرماني هذا هو الظاهر

‘நமக்கு கிடைத்த தகவலின் படி’ என்று சொன்னவர் ஸுஹ்ரி ஆவார். இச்சம்பவத்தோடு நபி தொடர்பாக நம்மை வந்தடைந்த தகவல்களில் இதுவும் ஒன்று என்பது இதன் கருத்தாகும். இது ஸூஹ்ரிக்கு கிடைத்த தகவலாகும். அது முழு அறிவிப்பாளர் தொடருடன் அமையவில்லை

இதுவே வெளிப்படையான கருத்து  என கிர்மானி கூறுகிறார்.

பத்ஹூல் பாரி, பாகம் 12, பக்கம் 359

எனக்குக் கிடைத்த தகவலின் படி நபி தற்கொலை செய்ய முனைந்தார்கள் எனும் வாசகத்தை சம்பவத்தில் தொடர்புடைய ஸுஹ்ரியோ அல்லது வேறு யாருமோ கூறியிருக்கிறார்கள் எனும்போது இக்கருத்து முழு அறிவிப்பாளர் தொடருடன் அமையப்பெற்ற செய்தியாக இல்லை என்றாகி விடுகிறது.

ஸூஹ்ரி தாபியி ஆவார். அவர் நபிக்கு வஹி வந்த துவக்க காலத்தில் நடைபெற்ற சம்பவத்தைச் சொல்வாரேயானால் இதை அவர் யாரிடமிருந்து அறிந்து கொண்டார் என்கிற நபர்கள் விபரம் இங்கு குறிப்பிடப்படவில்லை. நபித்தோழர் அல்லாதவரிடமிருந்தும் இந்தத் தகவல் அவருக்குக் கிடைத்திருக்கலாம். அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்ன உள்ளிட்ட விபரங்கள் இச்செய்தியில் இல்லை.

எனவே நீண்ட செய்தியில் உள்ள இச்சிறுபகுதி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகக் கருதப்படும்.

இதனடிப்படையில் நபிகளார் தற்கொலைக்கு முயன்றார்கள் எனும் புகாரியில் உள்ள நீண்ட செய்தியின் இந்தப் பகுதி அறிவிப்பாளர் அடிப்படையில் நிராகரிக்கப்பட வேண்டிய பலவீனமான செய்தியாகிறது.

குர்ஆனுக்கு எதிரானது

நபிகள் நாயகம் தற்கொலைக்கு முயன்றார்கள் எனும் இந்தச் செய்தியின் கருத்தும் குர்ஆனுக்கு எதிரானதாகவே உள்ளது.

நபிகள் நாயகம் வஹி நின்று போனதால் தற்கொலைக்கு முயன்றார்கள் என்றால் கடுமையான மன பாதிப்பு நபிக்கு ஏற்பட்டுள்ளது என்றாகிறது.  மேலும் ஒவ்வொரு முறை தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது ஜிப்ரீல் அலை வந்து நீர் தூதர் தாம் என்று கூறிய பிறகே ஆறுதல் அடைவார்கள் என்றால் இது நபிகள் நாயகம் இறைத்தூதில் கடுமையான சந்தேகத்தில் இருந்தார்கள் என்ற கருத்தையும் தருகிறது. இவ்விரண்டுமே திருக்குர்ஆன் கூறும் போதனைகளுக்கு தெளிவாகவே எதிரானதாகும்.

நபிகள் நாயகம் தமக்கு இறைவனின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்பதை மக்களிடம் எடுத்துரைத்த போது நபியை பைத்தியக்காரர் என்றே மக்கள் விமர்சித்தனர்.

அதை இறைவன் வன்மையாகக் கண்டித்து நபிக்கு எந்தப் பைத்தியமும் இல்லை – அவர் பைத்தியக்காரரும் அல்ல என்கிறான்.

{وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ (22) وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ (23) وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ} [التكوير: 22 – 24]

உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.

திருக்குர்ஆன் 81:22

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

திருக்குர்ஆன் 52:29

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

திருக்குர்ஆன் 7:184

நபிக்கு எந்தப் பைத்தியமும் ஏற்படவில்லை என்று அல்லாஹ் மறுத்துள்ளதோடு அத்தகைய நிலை நபிக்கு எப்போதும் ஏற்படவில்லை என்ற மறுப்பையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியுள்ளான்.

வஹிக்கு முன்பு பைத்தியக்காரராக நபி இருந்தால் அதுவும் நபித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதே.

மனச்சிதைவு ஏற்பட்டுப் பலமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்ட ஒருவர் அந்தக் கால கட்டத்திலேயே தனக்கு இறைவனின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்று கூறினால் மக்கள் எப்படி அவரை இறைத்தூதராக அங்கீகரிப்பார்கள்? இச்செயல் நபித்துவத்தை கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.

எனவே எந்நிலையிலும் நபி மனச்சிதைவு உள்ளவராக இருக்கவில்லை என்பதையே மேற்கண்ட வசனம் குறிக்கின்றது.

அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்கள் என்றால் அது நபி கடும் மனப்பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள் என்று ஆகி விடும்.

பல தடவை தற்கொலைக்கு முயற்சி செய்த ஒருவரை நிச்சயம் மனப்பாதிப்பு உள்ளவராகவே கருத இயலும்.

நபியை பைத்தியக்காரர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பைத்தியக்காரச் செயலை நபி செய்தார்கள் என்று நம்புவதும். குற்றத்தில் இரண்டும் சமமே.

இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது உண்மையானால் அதன் பிறகு எதிரிகள் நபியைப் பைத்தியக்காரர் என்று விமர்சித்தது உண்மை என்றாகி விடும். எனவே இந்தச் செய்தி அறிவிப்பு குறைபாடு இருப்பதுடன் மிக முக்கியமாக குர்ஆனுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.

சரியான அறிவிப்பாளர் தொடருடன் இது அமையப் பெற்றிருந்தால் கூட குர்ஆனுக்கு முரண்படும் இத்தன்மையே இதை பலவீனமாக்கப் போதுமானதாகும்.

குர்ஆனுக்கு முரணான இதுபோன்ற செய்திகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைக் களங்கப்படுத்த முடியாது.

நபிகள் நாயகம் தொடர்புடைய செய்தியை எப்படி அணுகுவது என்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே இஸ்லாம் பற்றி விமர்சிக்கப் புறப்பட்ட கிறித்தவக் கூட்டத்திற்கு நாம் என்ன சொல்கிறோம் எனில் நபிமொழியை அணுகும் ஆய்வுத்திறனை வளர்த்துக் கொண்டு அதன்பின் இஸ்லாத்தை விமர்சனம் செய்ய முன்வாருங்கள் என்ற அழைப்பை விடுக்கிறோம்.

புகாரியின் நிலை என்ன?

இது தொடர்பாக முஸ்லிம்களுக்கு அறிவுறுத்த வேண்டிய விஷயமும் இதில் அடங்கியுள்ளது.

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் புகாரியில் ஒரு செய்தி பதிவாகி விட்டால் அவ்வளவு தான்; அதற்கு மேல் வாய் திறக்க கூடாது என்ற வழிகேடான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

நாங்களும் தவ்ஹீத் தான் என்று எக்காளமிடும் ஸலபுக் கும்பலோ அதற்கு ஒத்து ஊதி, ஆமாமாம் புகாரியில் பலவீனமா? என்று எகத்தாளம் பேசி வருகின்றனர்.

புனிதத்தில் குர்ஆனுக்கு நிகராக புகாரி நூலை மதிப்பிடும் இவர்களின் எண்ணக் கோட்டையை இந்தச் செய்தி சுக்கு நூறாக நொறுக்கி, தகர்த்து விடுகிறது.

ஏனெனில் நபி தற்கொலைக்கு முயன்றதாக உள்ள இச்செய்தி புகாரியிலேயே உள்ளது.

எல்லாவற்றையும் நம்பித்தான் பதிவு செய்துள்ளார் எனில் நபி தற்கொலை செய்ய பல முறை முயன்றார்கள் என்பது தான் இமாம் புகாரியின் நிலைப்பாடா? புகாரி பதிவு செய்து விட்டார் என்பதால் உலக முஸ்லிம்கள் அனைவரும் நபி தற்கொலை செய்யத் துணிந்தார்கள் என்பதை அவசியம் நம்ப வேண்டுமா?

இமாம் புகாரியை மனிதனாகப் பார்க்காமல் அவரிடத்தில் எந்தத் தவறும் வராது என்ற அளவில் அவரை இறைவனுக்கு இணையாக்கும் இஸ்லாமியர்கள் இதன் மூலம் புகாரி இமாமும் தவறிழைப்பவரே – பலவீனமானதை சரியானது என தவறாக மதிப்பிடுபவரே என்பதை உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.

இந்தச் செய்தியை இமாம் புகாரி, தாபியியின் அல்லது தனது சொந்தக் கூற்றாகப் பதிவு செய்யாமல் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றோடு இணைத்து சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தியின் தோரணையில் சொன்னது ஏற்க முடியாத தவறாகும்.

அதனால் அவர் பெரிய அறிஞர் அல்ல என்றாகி விடாது. அவர் மிகப் பெரும் அறிஞர் தான் என்றாலும், நம்மை போன்ற மனிதர் என்ற அடிப்படையில் தவறிழைப்பவர் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது.

குறிப்பு: இதைப் படித்ததும், என்னது? இமாம் புகாரி தவறிழைத்து விட்டாரா? என்று பொங்கியெழுந்து, இல்லையில்லை இமாம் புகாரி இதை கொண்டு வந்ததன் ஹிக்மத் – நுணுக்கம் என்ன தெரியுமா? என்று பயான் பண்ணும் ஸலபுக் கும்பலைப் பார்த்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நேர்வழி வேண்டிப் பிரார்த்திப்பது நமது பொறுப்பாகும்.

பலவீனமான செய்தி

புகாரி அல்லாத மற்ற நூல்களிலும் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. அவைகளின் தரத்தையும் அறிந்து கொள்வோம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாக இதே கருத்தில் அமைந்த வேறொரு செய்தி தப்காதுல் குப்ரா எனும் நூலில் உள்ளது.

الطبقات الكبرى كاملا 230 (1/ 196)

469- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ : حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مُوسَى عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِي غَطَفَانَ بْنِ طَرِيفٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ بِحِرَاءٍ مَكَثَ أَيَّامًا لاَ يَرَى جِبْرِيلَ فَحَزِنَ حُزْنًا شَدِيدًا حَتَّى كَانَ يَغْدُو إِلَى ثَبِيرٍ مَرَّةً ، وَإِلَى حِرَاءٍ مَرَّةً يُرِيدُ أَنْ يُلْقِيَ نَفْسَهُ مِنْهُ ، فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ عَامِدًا لِبَعْضِ تِلْكَ الْجِبَالِ إِلَى أَنْ سَمِعَ صَوْتًا مِنَ السَّمَاءِ ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِقًا لِلصَّوْتِ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ، فَإِذَا جِبْرِيلُ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ مُتَرَبِّعًا عَلَيْهِ يَقُولُ : يَا مُحَمَّدُ ، أَنْتَ رَسُولُ اللَّهِ حَقًّا ، وَأَنَا جِبْرِيلُ قَالَ : فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَقَرَّ اللَّهُ عَيْنَهُ ، وَرَبَطَ جَأْشَهُ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ بَعْدُ وَحَمِيَ.

நபிகளாருக்கு வஹீ வந்த போது சில நாட்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை. எனவே கடும் கவலை கொண்டு தற்கொலை செய்யும் நோக்கில் ஒரு முறை ஸபீர் என்ற மலைக்கும், மற்றொரு முறை ஹிராவுக்கும் சென்றார்கள். இம்மலைகளை நாடிச் சென்று வந்த நிலையில் வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டு திடுக்கம் அடைந்து நின்றுவிட்டார்கள். பிறகு தம் தலையை உயர்த்திப் பார்த்தால் அங்கே ஜிப்ரீல் அலை வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள இருக்கையில் உள்ளடக்கி இருந்தவாறே, ‘முஹம்மதே உண்மையிலேயே நீர் அல்லாஹ்வின் தூதர் தாம், நான் தான் ஜிப்ரீல்’ என்று கூறினார்கள். அதன் பிறகு நபியின் கண்களை அல்லாஹ் குளிர்ச்சிப்படுத்தி உள்ளத்தை இணைத்த நிலையில் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு வஹீ தொடர்ந்து எழுச்சியுடன் வரலாயிற்று.

ஹதீஸ் எண் 469

தப்காதுல் குப்ரா பாகம் 1 பக்கம் 196

இந்தச் செய்தி முற்றிலும் நிரகாரிக்கத்தக்க பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இதில் இடம் பெறும்  முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ என்பவர் பல அறிஞர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர் ஆவார்.

இமாம் அஹ்மத் இவரை பொய்யர் என்றும் இமாம் நஸாயி, புகாரி ஆகியோர் வாகிதீ ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: அல்காமில், பாகம் 7, பக் 481

தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக்  324

எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதே செய்தி இப்னு ஹிப்பானில் ஆயிஷா (ரலி) அறிவிப்பாக வருகிறது.

அதில் இப்னுல் முதவக்கில் என்பார் இடம் பெறுகிறார். இவரும் அறிஞர்களால் குறை சொல்லப்பட்டவரே.

ميزان الاعتدال (3/ 560)

7580 – محمد بن أبي السري العسقلاني.

هو ابن المتوكل.

له مناكير

இவரிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என தஹபீ விமர்சித்துள்ளார்.

மீஸானுல் இஃதிதால், பாகம் 3, பக்கம் 560

المغني في الضعفاء (2/ 628)

5938 – د / محمد بن المتوكل بن أبي السري العسقلاني صدوق قال أبو حاتم لين

இமாம் அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்

அல்முக்னி, பாகம் 2, பக்கம் 628

அதிகம் தவறிழைப்பவர் என்று இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

தத்கிரதுல் ஹூஃப்பாழ், பாகம் 2, பக்கம்  46

இத்துடன் இப்னு ஹிப்பானின் இந்த அறிவிப்பிலும் துவக்கத்தில் நாம் விளக்கிய எனக்குக் கிடைத்த தகவலின் படி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

எனவே இந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ள இயலாத பலவீனமான செய்தி என்பது தெளிவாகிறது.

தப்ரீ அவர்களின் அறிவிப்பு

நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற கருத்திலமைந்த மற்றொரு செய்தி தாரீகு தப்ரீ, பாகம் 2, பக்கம் 298லும் பதிவாகியுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பாகப் பதிவாகியுள்ள இச்செய்தியில் நுஃமான் பின் ராஷித் என்பார் இடம்பெறுகிறார்.

இவரை அறிஞர்கள் பலரும் பலவீனப் படுத்தியுள்ளனர்.

யஹ்யா அல்கத்தான் இவரை முற்றிலும் பலவீனமானவர் என்றும் இமாம் அஹ்மத் இவரை ஹதீஸ் துறையில் குழப்பமானவர் என்றும்

இப்னு மயீன் பலவீனமானவர் என்றும் இவருடைய செய்திகளில் அதிகம் சந்தேகம் உள்ளது என இமாம் புகாரி அவர்களும், அதிகம் தவறிழைப்பவர் பலவீனமானவர் என நஸாயியும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: தஹ்தீபுல் கமால்,

பாகம் 29, பக்கம் 447

எனவே இது குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. அனைத்தும் பலவீன மானவையாகவே உள்ளன.

நபிகள் நாயகம் மனப்பிறழ்ச்சி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்ற குர்ஆனுக்கு எதிரான செய்தியாகும்.

இனிமேலும் இதை நபியின் மீது பரப்புவோர் எவரோ அவரே மனப்பிறழ்ச்சி கொண்டோராகக் கருதப்படுவார்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.