ஏகத்துவம் – பிப்ரவரி 2013

தலையங்கம்

மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை

சவூதியின் தலைநகர் ரியாத் அருகில் அமைந்த தவ்ஆத்மி என்ற ஊரில் நாயிஃப் என்பவரது வீட்டில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நாஃபிக் என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாயிஃபின் மகன் காலித் என்ற நான்கு மாதக் குழந்தை இப்பெண்ணின் பாதுகாப்பில் இருக்கும் போது கொல்லப்பட்டு விடுகின்றது. காவல்துறை விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ரிசானாவின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சவூதி நாட்டுச் சட்டத்தின்படி – உயிருக்கு உயிர் என்ற குர்ஆனிய சட்ட அடிப்படையில் கடந்த ஜனவரி 9, 2013 அன்று ரிசானாவுக்குத் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது தான் தாமதம், பன்னாட்டு அரசுகள், மனித உரிமை ஆணையங்கள், ஐ.நா. சபை உள்ளிட்ட அத்தனையும் இதை வன்மையாகக் கண்டிக்கத் துவங்கி விட்டன. உலகளாவிய இந்த விமர்சனங்களுக்கு சவூதி அரசு என்ன பதில் சொல்கின்றது என்று விடையும் விளக்கமும் தேடிய போது, “எங்களது அரசாங்கம் நீதித்துறையில் தலையிடாது. சவூதியின் நீதித்துறை சுதந்திரமானது” என்பது தான் சவூதி அரசாங்கம் சொல்கின்ற ஒரு வரி பதில். உண்மையும் அதுதான்.

குற்றவாளி, சவூதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால் கொலையாளிக்கு மரண தண்டனை தான். சவூதி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் இந்தத் தண்டனையை நிறைவேற்றிவிடவில்லை.

காவல்துறையிலிருந்து இந்த வழக்கு பொது நீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அதன் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அங்கும் இந்தக் குற்றம் உறுதி செய்யப்படுகின்றது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அங்கும் குற்றம் உறுதி செய்யப்பட்ட பின் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. இதைத் தான் உலக நாடுகள் விமர்சனம் செய்கின்றன.

இந்த விமர்சனத்தில் தமிழகத்திலுள்ள அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சேர்ந்து கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதில் சேர்ந்து கொள்கின்றார். அவருடைய விமர்சனத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

“போலீசார் என்னைத் தடியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்ததாகக் கூறுமாறு சொல்லி அடித்தார்கள். அப்படிக் கூறாவிட்டால் எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பதாகக் கூறினார்கள். என்னை வலியுறுத்தி அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பமிடச் செய்தார்கள். அல்லா மீது ஆணையாக நான் குழந்தையைக் கொல்லவில்லை. கழுத்தை நெறிக்கவில்லை”

இப்படி ரிசானா சொன்னதாக கருணாநிதி கதை வசனம் போன்று எழுதியுள்ளார். சவூதி காவல்துறை ஒன்று கருணாநிதியின் கைவசம் இருந்த காவல்துறை இல்லை. ஒரு குற்றம் நடந்தவுடன் யாரேனும் ஒரு அப்பாவியைப் பலிகடாவாக்கி, அவனை அடித்துத் துன்புறுத்தி, மிரட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து கொலையாளி ஆக்குகின்ற வேலையை இவர் முதல்வராக இருந்த போது காவல்துறை செய்தது.

இந்திய அளவில் காவல்துறையின் செயல்பாடுகள் இப்படித் தான் இருந்து வருகின்றன. அதிலும் முஸ்லிம்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களே பலிகாடாவாக்கப்பட்டனர். பின்னர் இந்துத்வாவின் பயங்கரவாதச் செயல்கள் இவை என உறுதியான பின் விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஒரு நிர்ப்பந்தம் சவூதி அரசாங்கத்துக்குக் கிடையாது.

இந்திய நீதித்துறையை எடுத்துக் கொண்டால், பாபரி மஸ்ஜித் வழக்கு இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டு. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளி என்று தெரிந்தும் பெரும்பான்மை என்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்து, இதுவரை இந்த வழக்கை இழுத்தடித்து வருகின்றது. இதனால் பல்வேறு வகுப்புக் கலவரங்கள், உயிரிழப்புக்கள், பொருளாதாரச் சேதங்கள் என்று விளைவுகளும் விபரீதங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.

இப்படி ஒரு நிர்ப்பந்தம் சவூதி நீதிமன்றங்களுக்கு ஒருபோதும் கிடையாது. அதனுடைய பார்வை எல்லாம் ஒன்றே ஒன்று தான். மனித உயிர் புனிதமானது. அந்த உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டால் அதற்குப் பரிகாரம் உயிர் தான். பறிக்கப்பட்டது பச்சிளம் குழந்தையின் உயிராக இருந்தாலும் சரி தான்.

ஒவ்வொரு மரண தண்டனையின் போதும் சவூதி உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிடும். அதேபோன்று ரிசானா விவகாரத்திலும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் மிக முக்கியமாகக் கூறப்படும் செய்தி, “அடுத்தவர் உயிரைப் பறிப்பவருக்கு இது தான் கதி’ என்று குறிப்பிடுகின்றது.

இப்படி ஒரு தண்டனை இருக்கும் போது தான் அடுத்தவன் உயிரை ஒருவன் அநியாயமாகப் பறிக்க மாட்டான். ஆம்! மனித உயிரைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக இந்தச் சட்டம் திகழ்கின்றது. இதைத் தான் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:179

—————————————————————————————————————————————————————-

தொடர்: 2

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அப்துந் நாசிர், கடையநல்லூர்

சென்ற இதழில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், மற்றும் உளூச் செய்த பின் ஓதும் துஆ ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக, தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதைக் காண்போம்.

பாங்கு கூறுவதன் சிறப்புகள்

தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.

பல பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கென்று முஅத்தின்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முஅத்தின்கள் நியமிக்கப்படாத பள்ளிகளும் உள்ளன. முஸ்லிம்களில் அதிகமானோர் பாங்கு கூறுவதற்கு வெட்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே பல பள்ளிவாசல்களில் சப்தமிட்டு பாங்கு கூறுவதற்குச் சக்தியில்லாத வயோதிகர்கள் முஅத்தின்களாக உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட விளங்க முடியாத வகையில் பாங்கின் வாசகங்களைக் கூறுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகும்.

தொழுகைக்காக நாம் கூறுகின்ற பாங்கிற்கு, பாங்கு சொல்பவருக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.

பாங்கு சொல்வதற்குப் போட்டி

ஒரு தடவை பாங்கு சொன்னால் ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தால் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகப் பலர் பாங்கு சொல்வதற்குப் போட்டி போடுவார்கள். ஆனால் இந்த உலகில் கிடைக்கின்ற பல கோடிகளை விட மறுமையில் கிடைக்கின்ற ஒரு நன்மை மிகச் சிறந்ததாகும்.

பாங்கு சொல்லுதல் என்ற நற்காரியத்திற்கு இறைவன் நன்மைகளை வாரிவழங்குகிறான். அவன் வாரிவழங்குவது இவ்வுலகில் நமது கண்களுக்குத் தெரியாது. இதன் காரணமாகத் தான் நாம் அந்த நற்காரியத்தைச் செய்வதில் அசட்டையாக இருக்கின்றோம். பாங்கு சொல்வதால் கிடைக்கும் நன்மையை அல்லாஹ் நமது கண்களுக்குக் காட்டினால் நிச்சயமாக அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக, பாங்கு சொல்பவரை சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்து எடுக்கும் நிலைதான் ஏற்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி (615, 654, 2689),

முஸ்லிம், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அபூ தாவூத், அஹ்மத்

பாங்கு சொல்வது எவ்வளவு பெரிய நற்பாக்கியம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது. தொழுகைக்காக பாங்கு சொல்பவர் நிச்சயம் தொழுகையாளியாகத் தான் இருப்பார். எனவே தொழுகை என்ற வணக்கம் தான் இந்தப் பாக்கியத்தை அடைவதற்குக் காரணமாக அமைகிறது. இதன் மூலம் தொழுகை என்பது பாரமல்ல. அது பலன்களை வாரி இறைக்கும் செழிப்பான ஒரு தோட்டம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

பாங்கு சொல்பவர்களுக்கு நபியவர்களின் பிரார்த்தனை

சாதாரண மனிதர்களின் பிரார்த்தனையை விட நபியவர்களின் பிரார்த்தனை வலிமை மிக்கதாகும். அகில உலகங்களின் இரட்சகன் ஏற்று, பதிலளிப்பதற்குத் தகுதியானதாகும். அந்த இறைத்தூதரின் பிரார்த்தனை, பாங்கு சொல்லும் முஅத்தின்களுக்குக் கிடைக்கின்றதென்றால் இது எப்படிப்பட்ட நற்காரியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் என்பவர் (பின்பற்றி தொழுபவர்களின் தொழுகைக்கு) பொறுப்பாளியாவார். பாங்கு சொல்பவர் (முஅத்தின் தொழுகை நேரங்களில் சரியாக பாங்கு சொல்வதற்காக) நம்புவதற்குரிய ஒருவராவார். எனவே அல்லாஹ் இமாம்களை நேர்வழியில் செலுத்துவானாக! பாங்கு சொல்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவானாக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9418)

தொழுகை நேரங்களை சரியாகக் கவனித்து அதனை மக்களுக்கு அறிவிப்புச் செய்தவற்காகத் தான் முஅத்தின். மக்கள் அவருடைய பாங்கை வைத்துத் தான் தொழுகை நேரங்களை அறிகிறார்கள். எனவே நம்பிக்கைக்குரியவராக ஒரு முஅத்தின் செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் முஅத்தினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் மன்னிப்பும், சுவனபதியும்

பள்ளிவாசலில் மட்டுமல்ல. பள்ளி அல்லாத எந்த இடத்தில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவது நம்முடைய பாவங்களை மன்னித்து சுவனத்தைப் பெற்றுத் தரக்கூடிய காரியமாகும். இதனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலை உச்சியின் மீதுள்ள பாறையில் தொழுகைக்காக பாங்கு சொல்லி, தொழுகையை நிறைவேற்றும் ஆட்டு இடையனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றான். “இதோ என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள் என்னைப் பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுகையை நிலைநாட்டுகிறான். நிச்சயமாக நான் என்னுடைய அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்து விட்டேன்என்று அல்லாஹ் கூறுகிறான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி), நூற்கள்: அபூதாவூத் 1017, அஹ்மத், நஸாயீ

தொழுகைக்காக பாங்கு சொல்பவருக்குத் தான் இந்தப் பாக்கியம். இதனை தொழுகையாளிகள் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். நாம் நிறைவேற்றும் தொழுகை ஒரு அற்புத பாக்கியம் என்பதை மேற்கண்ட நபிமொழி வலுப்படுத்துகிறது.

அனைத்தின் சாட்சியும் அழைப்பாளருக்கே!

பாங்கு சொல்பவரின் சப்தம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அந்தப் பகுதியில் வாழும் மனிதர்கள், ஜின்கள், விலங்குகள், புற்பூண்டுகள், மலைகள், மரங்கள், செடி கொடிகள், பள்ளங்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் மொத்தத்தில் அனைத்துப் பொருட்களும் அவர் செய்த நற்காரியத்தை உறுதிப்படுத்தி அல்லாஹ்விடம் சாட்சி கூறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவ்வாறு சாட்சி கூற வைப்பான். இது பாங்கு சொல்பவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஒரு அருளாகும்.

அபூ ஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் “ஆட்டை மேய்த்துக் கொண்டோஅல்லது “பாலைவனத்திலோஇருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றனஎன்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.

நூல்:  புகாரி (609)

தொழுகைக்காக பாங்கு கூறுபவருக்கே இப்படிப்பட்ட பெரும்பாக்கியம் என்றால் தொழுகை எப்பெரும் பாக்கியத்தை தொழுகையாளிகளுக்குப் பெற்றுத் தருகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அழகிய தோற்றம் பெறும் அழைப்பாளர்

பாங்கு சொல்பவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் காண்பதற்கு அழகிய தோற்றத்தை வழங்குகிறான். ஆம்! அவர்களின் கழுத்து மறுமையில் நீளமானதாக இருக்கும். இவ்வுலகில் கழுத்தை நீளமானதாக வைத்து நாம் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் காண்பவர்கள் கவரும் விதத்தில் மறுமையில் பாங்கு சொல்பவர்களுக்குத் தோற்றம் வழங்குவான்.

மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: முஸ்லிம் (631)

அழகிய தோற்றத்தைப் பெற்றுத்தரும் இந்த அற்புத பாங்கிற்கு அடிப்படை வணக்கம் தொழுகை தான் என்பதை நாம் இங்கே நம்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஷைத்தானை விரட்டும் பாக்கியம்

அல்லாஹ்வின் எதிரி ஷைத்தானை புறமுதுகிட்டு நெடுந்தொலைவுக்கு விரட்டும் மாபெரும் ஆயுதம் தான் பாங்கு. பாங்கு சொல்பவர் அல்லாஹ்வின் எதிரியை விரட்டியடிக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரி (608), முஸ்லிம் (634)

ஷைத்தானை விரட்டும் இந்தப் பாக்கியத்தை பெற்றுத் தருவதும் தொழுகை தான்.

பாங்கிற்குப் பதில் சொல்வதன் சிறப்புக்கள்

தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக நபியவர்கள் வழிகாட்டிய ஒரு அற்புத நடைமுறை தான் பாங்கு சொல்லுதல். ஒருவர் முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்கும் போது அந்த பாங்குகிற்குப் பதில் கூறுவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருகிறது.

இன்றைக்கு பெரும்பாலான சகோதரர்கள் பாங்கு சொல்லும் போது அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. ஒரு மார்க்க மீட்டிங் நடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதில் சொல்வதற்காக இடைவெளி விடப்படுகிறது. ஆனால் அந்நேரத்தில் பாங்கிற்குப் பதில் சொல்லாமல் பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இவை தவிர்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.

பாங்கிற்கு நாம் பதில் கூறுவது நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பெரும் பாக்கியமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளர் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்என்று சொன்னால் நீங்கள் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்‘ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்என்று சொன்னால் நீங்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்என்று சொல்லுங்கள். பின்பு அவர் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொல்லுங்கள். பின்பு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்என்று சொன்னால் நீங்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி), நூல் முஸ்லிம் (629)

உறுதியாகச் சொன்னால் சொர்க்கமும் உறுதி

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யமன் நாட்டில் அருவிகள் கொட்டும் இடத்தில் இருந்தோம். அப்போது பிலால் (ரலி) அவர்கள் எழுந்து பாங்கு கூறினார். அவர் முடித்த போது நபி (ஸல்) அவர்கள் “யார் உள்ளத்தில் உறுதி கொண்டவராக இவர் கூறியதைப் போன்று கூறுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்என்று கூறினார்கள்.

நூல்: அஹ்ம்த் (8609)

பாங்கிற்குப் பிறகு ஓதும் துஆக்களின் சிறப்புகள்

பாங்கு சொன்ன பிறகு ஓதும் துஆக்களுக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இது போன்ற நல்லறங்களில் கவனமற்றவர்களாகப் பலர் இருக்கின்றனர். நாம் செய்யும் சின்ன சின்ன நல்லறங்கள் கூட மறுமையில் இறைவனின் திருப்தியையும், சுவர்க்கத்தையும் பெற்றுத்தரும். பாங்கிற்குப் பிறகு ஓதும் துஆக்களுக்கு எத்தகைய சிறப்புகளை அல்லாஹ் வழங்குகிறான் என்று பார்ப்போம்.

பாங்கிற்குப் பதிலும் படைத்தவனின் சுவர்க்கமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு)

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன்

என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்).

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (630)

ஸலவாத்தும் அற்புத ஷஃபாஅத்தும்

பாங்கிற்குப் பிறகு நாம் நபி அவர்கள் மீது ஸலவாத் ஓதினால் அல்லாஹ் நமக்குப் பத்து முறை அருள்புரிகின்றான். ஒருவன் தான் செய்த பாவத்தினால் அவன் நரகத்திற்குச் சென்றாலும் நபியவர்களின் ஷஃபாஅத்தின் மூலம் சுவர்க்கம் செல்கின்ற பாக்கியத்தை அவனுக்கு இந்த பாங்கு துஆவினால் கிடைக்கச் செய்கின்றான்.

நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது “ஸலவாத்சொல்லுங்கள். ஏனெனில், என்மீது  யார் ஒருமுறை “ஸலவாத்சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலாவைக் கேளுங்கள். “வஸீலாஎன்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),  நூல்: முஸ்லிம் (628)

பாங்கினால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு

இதுவரை தொழுகைக்கு பாங்கு கூறுவதால் கிடைக்கும் பல பாக்கியங்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதனை மீண்டும் ஒருமுறை தொகுப்பாகக் காண்போம்.

 1. பங்கு சொல்வதற்காக அல்லாஹ் வழங்கும் நன்மைகளை அறிந்தால் மக்கள் அதற்காகப் போட்டியிடுவார்கள். அப்படிப்பட்ட பெரும் நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.
 2. பாங்கு சொல்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
 3. எவ்விடத்தில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுபவனை அல்லாஹ் நேசிக்கிறான். அவனுடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வழங்குகிறான்.
 4. பாங்கு சொல்பவருக்காக, அவருடைய சப்தம் எட்டும் தொலைவில் உள்ள மனிதர்கள், ஜின்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள்.
 5. பாங்கு சொல்பவர்கள் மறுமையில் நீண்ட கழுத்து உடையவர்களாக அழகிய தோற்றம் பெறுவார்கள்.
 6. பாங்கு சொல்பவர் பாங்கு கூறும் போது அல்லாஹ்வின் எதிரியான ஷைத்தானை விரட்டியடிக்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
 7. உள்ளத்தில் உறுதிகொண்டவராக பாங்கிற்குப் பதில் கூறுபவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை கூலியாகக் கொடுக்கின்றான்
 8. பாங்கு கூறிய பிறகு ஓதும் துஆவினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
 9. பாங்கு கூறிய பிறகு நபியவர்கள் மீது ஸலவாத் ஓதுவதினால் நமக்கு அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான்.
 10. ஒருவன் தான் செய்த பாவத்தினால் நரகத்திற்குச் சென்றுவிட்டாலும் பாங்கிற்குப் பதில் கூறியிருந்தால் நபியவர்களின் ஷஃபாஅத்தின் மூலம் அல்லாஹ் சொர்க்கம் செல்லும் பாக்கியத்தை வழங்குகிறான்.

தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமேஎன்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன் 15:2)

அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன.

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம், கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் போன்று பெண்கள் புர்கா அணிந்து செல்ல வேண்டும் என்று மதுரை ஆதீனம் போன்றோர் உண்மையை மறைக்காமல் ஊரறிய, உலகறியச் சொன்னார்கள்.

அரபு நாட்டுச் சட்டங்கள் வேண்டும் என்றும், பெண்கள் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சங்பரிவார்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.

பெண்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தை பற்றிப் பேசுகின்றார். இப்போது இந்த வரிசையில் சன்னியாசிகள் எனும் சாதுக்களும் இணைந்துள்ளனர். இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

“ஜல சமாதியின் மூலம் ஆறுகள் மாசுபடுகின்றன. அதனால் சாதுக்களை அடக்கம் செய்வதற்கு நில சமாதி வேண்டும்” என்று உ.பி. அரசாங்கத்திடம் சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜல சமாதி

ஜல சமாதி என்றால் என்ன? இறந்த பின் பிணத்தை நீரில் வீசியெறிவது தான் ஜல சமாதியாகும். இதற்கு இரண்டு விதமான காரணங்களைக் கூறுகின்றார்கள்.

 1. ராமர் சரயூ நதியில் தன்னை மூழ்கச் செய்து மரணித்தார், அதாவது தற்கொலை செய்து கொண்டார். இதுபோல் யாரும் செய்தால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது இந்துக்களின் புராண நம்பிக்கையாகும்.

இதன்படி ராம நவமியின் போது, வயதானவர்கள் அயோத்யாவில் தற்கொலை செய்ய முனைவார்கள். இதன் காரணமாகவே காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

பாதுகாப்பு வளையங்கள் போட்டு, கயிறுகளைக் கட்டி, மின்னொளி விளக்குகளை நிறுவி இதுபோன்று தற்கொலை செய்ய முனைவோரைத் தடுக்கின்றது. இந்த வயதான சாதுக்கள் சொர்க்கத்தைத் தேடி நீர் சமாதி ஆகிவிடுவார்கள். ஆனால் காவல்துறையோ விசாரணை என்ற நரகத்தில் சிக்கிக் கொள்ளும். இதற்காகத் தான் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 24 மணி நேரமும் விழிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. ஆக, நேரடியாக ராமரைப் போன்று நதியில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதற்கு ஜல சமாதி அல்லது நீர் சமாதி என்று பெயர். உடலில் கல்லைக் கட்டி, நீரில் தன்னை ஆழ்த்திக் கொள்வதற்கும் நீர் சமாதி என்றே பெயர்.

 1. இந்தியாவில் ஓடுகின்ற நதிகளின் கரையோரங்கள் அனைத்திலும் தகன மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறந்தவர்களின் உடலைக் கொண்டு போய் எரித்துச் சாம்பலாக்கி விடுவர். இது அக்னி சமாதி என்று பெயர். இதன் பின்னர் அந்தச் சாம்பலை ஆற்று நீரில் கரைத்து விடுவர். இதையும் நீர் சமாதி என்கின்றனர்.

சாதுக்களின் உடலை எரிப்பதில்லை. அவர்களின் உடலை அப்படியே அந்த நதியில் தூக்கி வீசி விடுகின்றனர். இதுவும் நீர் சமாதி எனப்படுகின்றது. இப்போது சாதுக்கள் கோருவது என்ன?

சாதுக்கள் இருக்கும் போது மனித மற்றும் பிற இனங்களுக்குப் பயனளிப்பவர்களாம். இறந்த பிறகும் அதுபோன்று பயனளிக்க வேண்டுமாம். இதனால் தாங்கள் இறந்த பிறகு நீர் சமாதி செய்கின்ற போது, நீர்வாழ் பிராணிகள் அவர்களது உடலை உண்டு பயனடைகின்றன. ஆனால் இப்போது ஆறுகள் மாசுபட்டு விட்டதால் நீர்வாழ் பிராணிகளே அழிந்து விட்டன. அவை உயிருடன் இருந்தால் தானே, “தானமே பிரதானம்’ என்று தண்ணீரில் சமாதியான பிரேதத்தை அவை உண்டு உயிர் வாழும்.

அதனால் இப்போது சாதுக்களுக்குத் திடீர் ஞானோதயம் வந்து, “எங்களை நிலத்தில் அடக்கம் செய்வதற்கு நிலம் தாருங்கள்” என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

மற்றவர்களைப் போன்று உங்களையும் எரித்து விட்டால் என்ன? என்று கேட்டதற்கு, “புனிதமானவர்களை எரிப்பதற்கு மரபு தடை செய்கின்றது; அதனால் தான் நீர் சமாதி செய்கின்றோம். இப்போது உயிரினங்களுக்கு இரையாகாமல் அந்தப் பூதவுடல்கள் அழுகி விடுகின்றன. இதுவும் அவர்களை அவமானப்படுத்துவதாகும். அதனால் தான் இப்போது நில சமாதி கேட்கின்றோம்” என்று பதிலளிக்கின்றனர்.

நிறம் மாறிய நீராதாரம்

ஏற்கனவே கும்பமேளா என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் கங்கை நதிக் கரையில் கூடுகின்றனர். இத்தனை பேரும் கழிக்கும் மலம், ஜலம் கங்கையில் தான் சங்கமமாகின்றது.

அத்தனை பேரும் ஒரே நேரத்தில் புனித நீராடல் என்ற பெயரில் ஆற்றில் இறங்கி, குளித்துக் கழித்தால் கங்கை மாசுபடாமல் இருக்குமா? கூவமாக மாறி விடுகின்றது. இத்துடன் நிற்பதில்லை. இவர்கள் கொண்டு வருகின்ற பூமாலைகள், பூஜைப் பொருட்கள், பைகள் அனைத்தும் கங்கையில் தான் விடப்படுகின்றன.

நீறு பூக்கும் நீர்வளம்

இதில் மில்லியன் கணக்கில் இறக்கும் மக்களின் அஸ்தியும், அதாவது அவர்களின் உடலை எரித்த சாம்பலும் இந்த ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. மங்கைக்கு சூதகம் ஏற்பட்டால் கங்கையில் சுத்தம் செய்வாள்; அந்தக் கங்கையே சூதகமானால் எங்கே சுத்தம் செய்யும் என்று கேட்பார்களே! அதுபோன்று கங்கை முழுமையாக சூதகப்பட்டுவிட்டது.

இந்தக் குடிநீரைக் குடிக்கும் இந்தியக் குடிமகன் எப்படி சுகாதாரமாக வாழ்வான்? வெகு சீக்கிரத்தில் சூதகமாகி அவனும் சாவான். இது தான் இன்று நடக்கின்றது. ஒரு நோய் அல்ல! பல புதுப்புது நோய்கள் புற்றீசல்களாக இந்தியாவில் முளைப்பதற்கு இதுதான் காரணம்.

இவர்கள் கங்கையை மட்டுமல்ல! வடபுலத்தில் ஓடுகின்ற மிக முக்கியமான யமுனை, ஷிப்ரா, கோதாவரி, சட்லஜ், நர்மதா, சரயூ போன்ற நதிக் கரைகளையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தாமிரபரணி, காவிரி போன்ற நதிகளும் இப்படித் தான் நாசமாகிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே கழிவுநீர் சாக்கடைகளும் இந்த நதிகளில் தான் மடை திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பிணங்களின் திசுக்கள் கலந்து தண்ணீர் மேலும் மாசாகி விடுகின்றது. இந்தச் சூழலில் தான் சாதுக்கள் தங்களுக்கொரு அடக்கத்தலம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

இறந்தவர்களின் உடல்களைப் பூமியில் புதைப்பது தான் சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் உகந்தது. அதனால் தான் இஸ்லாம், உடலைப் புதைக்கச் சொல்கின்றது. உலகில் மரணித்த முதல் மனித உடல் மண்ணில் தான் புதைக்கப்பட்டது. இதைத் திருக்குர்ஆன் அழகாக எடுத்துரைக்கின்றது.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனேஎனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

(அல்குர்ஆன் 5:31)

இந்த அடிப்படையில் சாதுக்கள் மட்டுமல்ல! முஸ்லிம்களைப் போன்று அனைத்து சமுதாயத்தவரும் இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்ய முன்வரவேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்வதில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய மார்க்கம் அழகிய, அற்புத வழியை – வாழ்க்கை நெறியைக் காட்டுகின்றது. எனவே உலக மக்கள் அனைவரும் கவுரவம் பார்க்காமல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என அன்பாய் அழைக்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்          தொடர்: 17

யூசுப் நபியின் கனவு

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

உண்மையான பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன், மிக அழகிய வரலாறு என்று யூசுப் நபியின் வரலாற்றை வர்ணித்து சான்றளிக்கின்றது. யூசுப் நபியின் வரலாறு முழுவதையும் உளப்பூர்வமாக, கூர்ந்து படிக்கும் எவரும் திருக்குர்ஆன் கூறும் இச்சான்றிதழை மறுக்க மாட்டார். அந்த அளவிற்குப் பல சுவாரசியமான, படிப்பினை மிக்க தகவல்களை அது கொண்டுள்ளது.

அழகான யூசுப் நபியின் அழகிய வாழ்க்கையைக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் என்ற பெயரில் பல கதைகள் விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை யாவும் திருக்குர்ஆன் கூறும் அர்த்தமுள்ள வரலாற்றை கொச்சைப்படுத்துவதாகவும், யூசுப் நபியை அவமதிப்பதாகவும் உள்ளன. இவை அனைத்தும் இஸ்ரவேர்களால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட கட்டுக்கதையே. அவை சில ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இது கட்டுக்கதை தான் என்று பல அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள். அவற்றை இப்போது காண்போம்.

பதினோரு நட்சத்திரங்கள்

என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரிஎன்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:4, 5

யூசுப் நபி தனது சிறு பிராயத்தில் பதினோரு நட்சத்திரங்கள் மற்றும் சூரியன், சந்திரன் ஆகிய அனைத்தும் தனக்கு ஸஜ்தா செய்வதாகக் கனவு கண்டார் என்று இவ்வசனம் கூறுகின்றது. அதைத் தொடர்ந்து அவரது வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் கூறப்பட்டு யூசுப் நபி கண்ட கனவின் விளக்கம் என்ன என்பதும் கூறப்படுகின்றது.

தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். “என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும், என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:100

யூசுப் நபியின் பெற்றோர், சகோதரர்கள் அனைவரும் இறுதியில் யூசுப் நபிக்கு மரியாதை செய்தனர் என்பதே பதினோரு நட்சத்திரங்கள் அவருக்கு ஸஜ்தா செய்ததாக அவர் கண்ட கனவின் விளக்கமாகும். இக்கருத்தை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.  (முழுமையாக அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் 12வது அத்தியாயத்தின் துவக்கத்திலிருந்து 100வது வசனம் வரை படிக்கவும்)

யூசுப் நபியின் கனவு பற்றி இது தான் திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது. இதில் தான் முஸ்லிம்களுக்குப் படிப்பினையும் நிறைந்துள்ளது. ஆனால் யூசுப் நபியின் கனவு தொடர்பாக தஃப்ஸீர் நூல்களில் அர்த்தமற்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நட்சத்திரங்களின் பெயர்கள்

யூசுப் நபியவர்கள் பதினோரு நட்சத்திரங்களைக் கனவில் கண்டார்கள் அல்லவா? அதன் பெயர்கள் தொடர்பாகப் பின்வரும் கதை விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளது.

ஜாபிர் (ரலி) கூறியதாவது: ஒரு யூதன் நபியவர்களிடம் வந்து, “முஹம்மதே யூசுப் நபி தனக்கு ஸஜ்தா செய்ததாகக் கனவில் கண்ட நட்சத்திரங்களின் பெயர் என்ன என்று எனக்கு தெரிவிப்பீராக” என கூறினான். நபியவர்கள் பதில் ஏதும் அளிக்காமல் மௌனமாயிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை), நபியவர்களிடம் வந்து அவற்றின் பெயர்களைத் தெரிவித்தார்கள். உடனே நபியவர்கள், “நான் அவற்றின் பெயர்களைச் சொன்னால் நீ நம்பிக்கை கொள்வாயா?” என்று கேட்க, அவன் சரி என்றான்.  “ஹர்சான், தாரிக், தியால், துல்கஃபதான், காபிஸ், தஸான், ஹவ்தான், ஃபீலிக், மிஸ்பஹ், லரூஹ், ஃபரீக், ழியாஃ, நூர்  ஆகிய நட்சத்திரங்கள் தனக்கு ஸஜ்தா செய்ததாகக் கனவில் கண்டார். அதை யூசுப் தனது தந்தை யஃகூப் (அலை) அவர்களிடம் கூறிய போது, “இது சிதறடிக்கப்பட்ட விஷயம் இதற்குப் பின்னால் அல்லாஹ் அதை ஒன்று சேர்ப்பான்’ என்று யஃகூப் நபி கூறினார்கள்” என நபியவர்கள் (அவற்றின் பெயர்களை) கூறினார்கள். அதற்கு அந்த யூதன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக இவையே அவற்றின் பெயர்கள்” என்று கூறினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம்: 8, பக்கம்: 182

யூசுப் நபியவர்கள் கனவில் கண்ட பதினோரு நட்சத்திரங்களின் பெயர்களை யூதன் ஒருவன் நபியவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு முதலில் அமைதியாக இருந்து பிறகு நபியவர்கள் பதிலளித்ததாகவும் இந்தச் சம்பவத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க நபியவர்களின் பெயரில் புனைந்து சொல்லப்பட்ட கட்டுக்கதையே.

 1. இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கு எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் சான்றாக இல்லை.
 2. ஹாகிம், பைஹகீ போன்ற ஹதீஸ் நூல்களில் இது பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இச்செய்தி மிகவும் பலவீனமான செய்தியே. காரணம் இதில் ஹகம் பின் ளஹீர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். பல ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இமாம் புகாரி, “இவர் மறுக்கப்பட வேண்டியவர்’ என்றும் இப்னு மயீன் அவர்கள், “இவர் எதற்கும் மதிப்பில்லாதவர், நம்பகமானவர் இல்லை’ என்றும் விமர்சித்துள்ளார்கள்.
 3. பல விரிவுரை நூல்களில் வெவ்வேறான பதினோரு பெயர்கள் காணப்படுகின்றன. பெயர்களில் காணப்படுகின்ற இந்த முரண்பாடுகளும் இச்சம்பவம் உண்மையல்ல பொய் என்று தெளிவுபடுத்துகின்றது.
 4. யூசுப் நபி கண்ட கனவின் விளக்கத்தை திருக்குர்ஆன் அர்த்தத்தோடு தெளிவுபடுத்தும் போது (பொய்யான) பெயர்களைக் கொண்டுள்ள இக்கதையில் என்ன படிப்பினை உள்ளது?

இறைவன், பெயர்களைக் குறிப்பிடாத பலவற்றுக்கும் எவ்வித ஆதாரமுமின்றி பெயரிடப்பட்ட சம்பவங்கள் பல விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ளதை முன்னரே நாம் எழுதி விளக்கியுள்ளோம். (குகையின் பெயர், அதில் இருந்த நாயின் பெயர்) இதுவும் அந்த வகையில் உள்ளது தான்.

எனவே தஃப்ஸீர் நூல்களில் காணப்படும் இவ்விளக்கத்திற்கு வலுவான செய்தி ஏதுமில்லை. இது நபியவர்கள் பெயரில் புனையப்பட்ட கட்டுக்கதையே என்பதை அறிந்து கொள்வோம்.

யூசுப் நபி ஆடையை அவிழ்த்தார்களா?

நபியை அவமதிக்கும் விளக்கம்

யூசுப் நபியவர்களின் கனவை அர்த்தமற்றதாக்கும் வகையில் விளக்கம் கூறியது போதாதென்று யூசுப் நபியின் மீது சேற்றை வாரி இறைக்கும் விதமாக அபத்தமான விளக்கமும் விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது.

தம் சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டு, வணிகக் கூட்டத்தால் கண்டெடுக்கப்பட்டு, விற்கப்பட்ட யூசுப் நபி, மன்னரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னரின் மனைவி யூசுப் நபியின் அழகில் மயங்கி தம்முடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். இதைப்பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

மன்னரின் மனைவி தவறு செய்ய வற்புறுத்தி அழைக்கும் போது யூசுப் நபியின் உள்ளம் தீமையை நாடியது. பிறகு உடனே சுதாரித்துக் கொண்டு அத்தீமையிலிருந்து விலகி விட்டார் என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.

உள்ளத்தால் தீமையை நாடினார்களே தவிர அதற்காக எந்த முயற்சியையும் யூசுப் நபி செய்யவில்லை. அதிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்கள் என்று குர்ஆன் தெரிவிக்கின்றது. ஆனால் இறைவசனத்திற்கு எதிராக, யூசுப் நபி அந்தத் தீமையைச் செய்வதற்கான முயற்சிகளைச் செய்தார் என்று விரிவுரை நூல்களில் எழுதப்பபட்டுள்ளது.

அவருக்காக அவள் மல்லாந்து படுத்துக் கொண்டாள். அவளது இரு கால்களுக்கிடையில் அமர்ந்து தனது ஆடைகளையும் அவளது ஆடைகளையும் யூசுப் நபி அவிழ்த்தார்.

அடிப்பகுதி தெரியுமளவு கால் சட்டையை அவிழ்த்தார். அவருக்காக அவள் மல்லாந்து படுத்துக் கொண்டாள்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரி பாகம் 13 பக்கம் 83

தனது கால் சட்டையின் (பேண்ட்) நாடாவை யூசுப் நபி கழட்டினார்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ பாகம் 16, பக்கம் 37

இந்த விரிவுரை யூசுப் நபியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் இல்லையா? ஒரு இறைத்தூதர் இவ்வாறு கேவலமான, அருவருப்பான செயலில் ஈடுபடுவார்களா? மனதால் தீமையை எண்ணுவதும், அத்தீமையை புரிய செயல்படுவதும் ஒன்றல்ல. யூசுப் நபி மனதால் தீமையை நாடினார்களே தவிர அதற்காகச் செயல்படவில்லை. மாறாக அதிலிருந்து விலகவே செயல்பட்டுள்ளார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

யூசுப் நபி ஓடினார்

மன்னரின் மனைவி அழைத்தும் யூசுப் நபி வெளிப்பகுதியை நோக்கி ஓடினார் என்றும் அவள் யூசுப் நபியை துரத்தி பிடிக்க முயற்சித்ததில் அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டது என்றும் இறைவன் கூறுகின்றான்.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். “உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள்.

அல்குர்ஆன் 12:25

இவள் தான் என்னை மயக்கலானாள்என்று அவர் கூறினார். “அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியதுஎன்றார்.

அல்குர்ஆன் 12:26, 27, 28

யூசுப் நபி ஓடியதும் அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதும் அவர் தீமைக்கான செயல்களைச் செய்யவில்லை; அதிலிருந்து விலகவே முற்பட்டார்கள் என்று தெளிவாக்குகின்றது. மேலும் யூசுப் நபி அருவருக்கத்தக்க செயலில் இருந்து விலகிக் கொண்டார் என்று இறைவன் கூறுகிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

மேற்கண்ட விரிவுரை நூலில் கூறப்பட்ட தகவல் இவ்வசனங்களுக்கு எதிராக உள்ளதைச் சிந்திக்க வேண்டும்.

யூசுப் நபி அவள் மேல் அமர்ந்தார் என்று விரிவுரை சொல்கிறது.

அவர் தப்பிக்க வாசலை நோக்கி ஓடினார் என்று இறைவன் சொல்கிறான்.

அவர் சட்டை, பேண்ட்டை கழற்றினார் என்று விரிவுரை சொல்கிறது

அவரை விட்டும் வெட்கக்கேடான செயலைத் தடுத்தோம் என்று இறைவன் சொல்கிறான்.

இதில் எது உண்மை?

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்க முடியும்?

அல்குர்ஆன் 4:87

இறைவன் கூறிய உண்மைத்தகவலுக்கு மாற்றமாக விரிவுரை நூலில் காணப்படும் இது விளக்கமன்று. மாறாக இஸ்லாத்தின் எதிரிகளால் புனைந்து சொல்லப்பட்டிருக்கும் பொய்யே என்பது உறுதி.

ஆகவே இமாம்கள், ஸஹாபாக்கள் பெயரில் விரிவுரை நூலில் காணப்படும் இவ்விளக்கம் குர்ஆனுக்கு எதிரான கட்டுக்கதையே என்பதில் சந்தேகமில்லை.

யூசுப் நபி பார்த்த இறைவனின் சான்று

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

மன்னரின் மனைவி யூசுப் நபியை வற்புறுத்திய போதும் அவர் இறைவனின் சான்றைப் பார்த்த காரணத்தால் அதற்கு இணங்காது விலகி விட்டார் என்று இறைவன் கூறுகிறான்.

யூசுப் நபி பார்த்தது இன்ன சான்று தான் என்று குறிப்பிட்டு எந்த வசனமோ, ஹதீஸோ வரவில்லை. இந்நிலையில்

யூசுப் நபி பார்த்த இறைவனின் சான்று எதுவென்பதைப் பற்றி சில வினோத விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அவை உங்கள் பார்வைக்கு…

யூசுப் நபி பார்த்த சான்றாகிறது, இறைவேதத்தில் உள்ள மூன்று வசனங்களாகும். “உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.  நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்’ எனும் (82:10,11,12) வசனம், “ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை’ எனும் 10:61  வசனம், “ஒவ்வொருவரும் செய்பவற்றை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்க, அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்களா?’ எனும் 13:33 வசனம் ஆகிய மூன்று வசனங்களாகும் என்று முஹம்மத் பின் கஃப் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8 பக்கம் 228

ஹஸன் கூறுகிறார்: (கோபத்தால்) விரலை கடித்துக் கொண்ட நிலையில் (தனது தந்தை) யஃகூப், “யூசுபே! யூசுபே!” என்று கூறியதை அவர் கண்டார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8 பக்கம் 225

இது போன்ற பல வினோதமான விளக்கங்கள் விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளன. இதற்கு என்ன ஆதாரம்? இதை நபியவர்கள் எங்காவது கூறியிருக்கிறார்களா?

இறைவனின் கண்காணிப்பு தொடர்பாக திருக்குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களைக் குறிப்பிட்டு, இதுதான் யூசுப் நபி பார்த்த சான்றுக்கான விளக்கம் என்கிறார்கள். குர்ஆனுடைய வசனங்கள் யாவும் நமது நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டவை. இந்த வசனங்களை எப்படி யூசுப் நபி பார்த்திருப்பார்?

யூசுப் நபி தொடர்பான இந்த விளக்கங்களுக்கும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை அறியலாம்.

—————————————————————————————————————————————————————-

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத் போன்ற நூற்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸில், கண் தெரியாத நபித்தோழர் உஸ்மான் பின் ஹுனைப் (ரலி), நபி (ஸல்) அவர்களை நோக்கி, முஹம்மதே என்று அழைப்பதை ஆதாரமாகக் காட்டி, “யா முஹம்மத்’ என்று திக்ரு செய்யலாம் என்று பரேலவிகள் வாதிட்டதன் தில்லுமுல்லுகளைக் கடந்த இதழில் பார்த்தோம்.

அருகிலோ, கூப்பிடு தூரத்திலோ, உயிருடன் இருக்கும் ஒருவரை பெயர் சொல்லி அழைப்பது ஒருபோதும் இணைவைப்பாகாது என்ற விளக்கத்தையும் கண்டோம்.

வஸீலா என்பது ஆளை வைத்துத் தான் என்று கூறும் தில்லுமுல்லுகளுக்கும், திருகுதாளங்களுக்கும் சரியான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

சான்று: 1

பார்வை தெரியாத நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பரேலவிகள் சொல்வது போன்று, “முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன்” என்று கூறவில்லை. அப்படிச் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வீட்டில் இருந்து கொண்டே இந்தப் பிரார்த்தனையைச் செய்திருக்கலாம். ஆனால் அந்த நபித்தோழர் அவ்வாறு செய்யவில்லை. ஏன்? அவர், தவஸ்ஸுல் – வஸீலா தேடுதல் என்ற வார்த்தையில் பொருள் அறிந்த, அரபி மொழி தெரிந்த ஓர் அரபியர்.

ஓர் ஆளை வைத்து வஸீலா தேட வேண்டுமானால் அவர் தனது வஸீலாவில் அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அப்படிப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தன் மீது அக்கரை காட்டுபவர், மார்க்க ஞானம் உள்ளவர் என்று யாரை அந்த நபித்தோழர் நம்புகிறாரோ அவரிடம், அந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்காகப் பிரார்த்தியுங்கள் என்று கூறுகிறார். அதில் தான் முழுப் பயன் இருக்கின்றது என்று அவர் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வந்து பிரார்த்திக்கச் சொல்கிறார். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுவதற்கு அல்லாஹ்விடம் மிக மிகத் தகுதியானது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

சான்று: 2

நபி (ஸல்) அவர்கள், உஸ்மான் பின் ஹுனைபுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். அதே சமயம் அவரிடம் சிறந்ததைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரையும் செய்கிறார்கள்.

“நீ விரும்பினால் இந்தச் சோதனைக்குரிய கூலியை மறுமையில் கிடைப்பதற்காக விட்டு விடுகின்றேன்; நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்பது தான் அந்த அறிவுரையாகும்.

பொதுவாக இவ்வாறு பிரார்த்தனை செய்யக் கோருபவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை மறுமையை முன்னிறுத்தியே அமைந்திருக்கும் என்பதைப் புகாரியில் இடம்பெறும் ஹதீஸ் விளக்குகின்றது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: புகாரி 5652, முஸ்லிம் 4673

இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கோரும்போது மறுமை நன்மையைத் தான் நபியவர்கள் முன்னிலைப்படுத்துவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் எடுத்துக்காட்டாகும்.

மிக முக்கியமாக, இந்த உரையாடலில் நமக்கு நிரூபணமாவது, கண் தெரியாத அந்த நபித்தோழரின் கோரிக்கை முஹம்மது (ஸல்) என்ற ஆள் அல்ல, அவர்கள் செய்கின்ற பிரார்த்தனை என்ற அமல் தான்.

சான்று: 3

பார்வை தெரியாத தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வலியுத்துகின்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றார்கள்.

நபியவர்கள் பிரார்த்தித்த விபரம் இந்த ஹதீஸில் இடம் பெறாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள், அந்த நபித்தோழருக்கு அளித்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றியிருப்பார்கள்.

அவருக்காக நபி (ஸல்) அவர்கள், தாம் பிரார்த்திக்கின்ற அதே வேளையில், அவர் மீதுள்ள அன்பின் மேலீட்டால் அவரையும் பிரார்த்திக்குமாறு சொல்கின்றார்கள். தான் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபித்தோழரிடம் நபியவர்கள் கூறுகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக, உளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு துஆச் செய்யுமாறு கூறுகின்றார்கள்.

அதாவது தொழுகை, துஆ என்ற அமலை வைத்து வஸீலா தேடச் சொல்கின்றார்கள். இது தான் அல்லாஹ்வின் வசனத்தில் உள்ள கட்டளையாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 5:35

சான்று: 4

நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்த துஆவில், “அல்லாஹும்ம ஃபஷஃப்பிஃஹு ஃபிய்ய- யா அல்லாஹ் என் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக” என்ற வார்த்தை இடம்பெறுகின்றது.

இவ்வார்த்தை இடம்பெறும் ஹதீஸ் அஹ்மதில் (16604) பதிவாகியுள்ளது. இதில் ஃபிய என்ற வார்த்தை இல்லாமல் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பிரகாசமான வார்த்தை பிரகடனப்படுத்துவதென்ன? வஸீலா தேடுதல் என்பது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால்… என்ற ஆளை, அந்தஸ்தை, தகுதியை வைத்தல்ல. அவர்களது துஆவை வைத்துத் தான். ஆளை வைத்து, அந்தஸ்தை வைத்து வஸீலா தேடலாம் என்று பொருள் கொள்வது அசாத்தியம் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது.

ஏனெனில், “யா அல்லாஹ், என் விஷயத்தில் – அதாவது எனக்குப் பார்வையை எனக்குத் திரும்பத் தருவதில் அவர்களின் பரிந்துரையை (ஷஃபாஅத்தை) ஏற்றுக் கொள்வாயாக!” என்ற வாசகத்தின் பொருள், “நபி (ஸல்) அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்வாயாக’ என்பது தான்.

இந்தச் செய்தியில் ஷஃபாஅத் என்ற வார்த்தைக்கு, பரிந்துரை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஷஃபாஅத் என்பதற்கு அரபியில், “துஆ – பிரார்த்தனை’ என்பதே பொருளாகும்.

நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் நாளை மறுமையில் ஷஃபாஅத் என்று சொல்வது இந்தப் பொருளில் தான். இந்த அடிப்படையில் ஷஃபாஅத் என்பது குறுகிய பொருள் கொண்டதாகவும் துஆ என்பது விரிந்த பொருள் கொண்டதாகவும் அமைகின்றது.

துஆ என்றால் ஒருவர் தனக்காகச் செய்வதையும், பிறருக்காகச் செய்வதையும் எடுத்துக் கொள்ளும். ஷஃபாஅத் என்பது ஒருவர் மற்றவருக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை மட்டும் குறிக்கும். இதன்படி ஷஃபாஅத் என்பது துஆவையே குறிக்கின்றது.

உஸ்மான் பின் ஹுனைபுக்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்வதிலிருந்து, அமலை வைத்துத் தான் வஸீலா தேட வேண்டுமே தவிர ஆளை வைத்து அல்ல என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

சான்று: 5

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது, வ ஷஃப்பிஃனீ ஃபீஹி என்ற வார்த்தையாகும்.

என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் செய்கின்ற பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக

இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280) இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையே, ஒரு ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது.

இதில் வேதனை என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்கு, அமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பொருளும் கொடுக்க முடியாது என்பதால் தான் இதை அவர்கள் அப்பட்டமாக மறைக்கின்றனர்.

ஆளைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான வாதங்கள், நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்து, தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப் போய்விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கண் தெரியாத நபித்தோழருக்குப் பரிந்துரை செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் துஆவிற்கு அந்த நபித்தோழர் எப்படிப் பரிந்துரைக்க முடியும் என்ற கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

இந்த ஹதீஸின் முற்பகுதியை வைத்துக் கொண்டு, இவ்வாறு வஸீலா தேடலாம் என்று வாதிடும் இவர்கள், “யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக” என்று தான் கூற வேண்டும். ஆனால் பரேலவிகள் அவ்வாறு சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர்களின் விளக்கங்கள் அனைத்து அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகி விடும். அதனால் அவர்கள் அப்படிச் சொல்வதில்லை.

சான்று: 6

அறிஞர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட துஆ தொடர்பானவற்றிலும் பதிவு செய்துள்ளார்கள். உண்மையில் இயற்கைக்கு மாற்றமான அதி அற்புத நிகழ்வாகும். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாகவே அவரது குருட்டுத்தன்மை நீங்கியது, பார்வை திரும்பியது.

இதனால் தான் இமாம் பைஹகீ போன்றவர்கள், தலாயிலுன் நுபுவ்வா – நபித்துவத்தின் அடையாளங்களில் இதைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துஆவின்றி, தனது துஆவைக் கொண்டு மட்டும் அந்த நபித்தோழர் நிவாரணத்தைப் பெற்றிருந்தால் உலகிலுள்ள கண் தெரியாதவர்கள் அனைவருக்கும் இது பொதுவானதாகி விடும். உலகில் உள்ள கண் தெரியாதவர்கள் ஒவ்வொருவரும் அல்லது ஒரு சிலராவது, இதுபோன்று உருக்கமாகவும், உளத்தூய்மையாகவும் பிரார்த்தனை செய்து குணம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. இது இவ்விஷயத்தில் ஒளிந்து கிடக்கின்ற நுணுக்கமாகும்.

இதுபோல் இன்னொரு நுணுக்கத்தையும் நாம் காணத் தவறிவிடக் கூடாது. பரேலவிகள் இந்த ஹதீஸை விளங்குவது போல், கண் தெரியாத நபித்தோழர், நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்து, தகுதி, மரியாதை மற்றும் அவர்களது பொருட்டைக் கொண்டு கேட்டதால் தான் இந்தக் குணம் கிடைத்தது என்று விளங்கினால், இதே நிவாரணம், அதாவது உலகிலுள்ள ஒவ்வொரு குருடருக்கும் பார்வை கிடைக்க வேண்டுமல்லவா?

இந்தக் கொள்கையில் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்களை மட்டும் வைத்து வஸீலா தேடுவதில்லை. நபிமார்கள், அவ்லியாக்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள், மலக்குகள், ஜின்கள் அனைவரின் பொருட்டாலும், தனித்தனியாகவோ, அனைவரையும் சேர்த்தோ கேட்கின்றனர். அவர்களுக்குக் குணம் கிடைத்ததா என்று பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இத்தனை நூற்றாண்டுகளில் யாருக்கும் பார்வை திரும்பக் கிடைத்ததாக வரலாறு இல்லை.

இதுவரை உள்ள இந்த விபரங்களின்படி ஒரு விஷயம் தெளிவாகப் புரிகின்றது. கண் தெரியாத நபித்தோழரின் வஸீலா என்ற சக்கரம் சுழல்வது துஆ என்ற அச்சாணியில் தான். அதாவது துஆ என்ற அமல் மூலம் தான். ஆளைக் கொண்டு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தனைக்குப் பிறகும் இங்கு இன்னொரு கேள்வி எழுகின்றது.

ஒரு அறிவிப்பில், “யா அல்லாஹ், உன்னிடத்தில் கேட்கின்றேன்; இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மதை வஸீலாவாக்கி (சாதனமாக்கி) கேட்கின்றேன்” என்று பார்வை தெரியாத நபித்தோழர் சொல்கின்றாரே! அது ஏன்? என்பது தான் அந்தக் கேள்வி.

இந்த இடத்தில், “உன்னுடைய நபியின் துஆவைக் கொண்டு” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு அர்த்தம் கொள்வதற்கு மொழி இலக்கணத்தில் இடம் உண்டு.

நாங்கள் இருந்த ஊர்வாசிகளிடமும், எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தாரிடமும் விசாரியுங்கள்! நாங்கள் உண்மை கூறுபவர்களே” (என்று தந்தையிடம் கூறினார்கள்.)

அல்குர்ஆன் 12:82

இந்த வசனத்தில், ஊர்வாசிகள், ஒட்டகக் கூட்டத்தார் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இடத்தில், “ஊரைக் கேள், ஒட்டகத்திடம் கேள்’ என்று தான் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ஊரையும், ஒட்டகத்தையும் கேட்பதல்ல. ஊர்வாசிகளையும், ஒட்டகக் கூட்டத்தாரையும் என்று பொருள் கொள்கிறோம்.

இந்த வசனத்தில் ஊர் என்பதற்குப் பின்னால் “வாசிகள்’ என்ற இணைப்புச் சொல்லும், ஒட்டகம் என்ற வார்த்தைக்குப் பின்னால் “உரிமையாளர்கள்’ என்ற இணைப்புச் சொல்லும் போக்கப்பட்டுள்ளது.

அதுபோன்றே மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது நபி என்ற வார்த்தைக்குப் பின்னால் ஓர் இணைப்புச் சொல் போக்கப்பட்டுள்ளது. இதைப் பரேலவிகளும் ஒப்புக் கொள்கின்றார்கள். அந்த இணைப்புச் சொல், முஹம்மது நபியின் அந்தஸ்து, மரியாதை, பதவி, பொருட்டு என்ற பொருளை அவர்கள் கொடுக்கிறார்கள். நாம் இந்த இடத்தில் முஹம்மது நபியின் துஆ என்ற பொருளைப் பயன்படுத்துகிறோம்.

இந்த ஹதீஸில் அந்தஸ்து, பதவி, பொருட்டு என்ற இணைப்புச் சொல்லை இங்கு சேர்ப்பதற்கு இந்த ஹதீஸிலோ, வேறு ஹதீஸ்களிலோ இவர்களுக்கு ஆதாரம் இல்லை. இந்த ஹதீஸின் முன்பின் வாசக அமைப்பும் இதற்கு இடம் தரவில்லை. ஆனால் துஆ என்ற இணைப்புச் சொல்லைச் சேர்க்கும் போது அழகாகப் பொருந்திப் போகின்றது. வேறு நூற்களில் இடம் பெறும் இதே ஹதீஸின் வாசகங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பேச்சுக்கு இவர்கள் வாதிடுவது போன்று ஹதீஸின் வெளிப்படையான வாசக அமைப்பைக் கொண்டு, “ஆளை வைத்து’ என்று பொருள் கொண்டாலும் அந்த வாதம் மேலே நாம் காட்டிய அஹ்மத் ஹதீஸ் மூலம் உடைந்து போகின்றது. “யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக” (அஹ்மத் 17280) என்ற வார்த்தைகள் மூலம் “ஆளைக் கொண்டு வஸீலா தேடுதல்’ என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.

இதையும் தாண்டி இந்த ஹதீஸ் அந்தப் பொருளைத் தான் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில், அவர்களுக்கு மட்டும் உரிய தனி உரிமையாகும். இதில் மற்ற யாருக்கும் அறவே பங்கு கிடையாது என்று தான் விளங்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

புகைக்கத் தடை ஆஸ்துமாவுக்கு விடை

பிரிட்டனில் உணவு மற்றும் பொது விடுதிகளிலும் பொது இடங்களிலும் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட மாத்திரத்தில் கூச்சல்களும் கூப்பாடுகளும் ஒருசேரக் கிளம்பின. இது ஜனநாயகத்தின் குரல்வளை நெறிப்பு, சர்வாதிகாரத்தின் கொக்கரிப்பு, அக்கிரமம், அநியாயம் என்று எதிர்ப்பலைகள் மிகப் பெரிய அளவில் கிளம்பின.

ஆனால் தடை விதிக்கப்பட்ட இந்த ஐந்து வருட காலங்களில் குழந்தைகளின் உடல் நலத்தில் அபரிமிதமான முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது. லண்டன் இம்பீரியல் காலேஜ் நடத்திய ஆய்வறிக்கை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

இந்தத் தடை 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானது. இவ்வாறு அறிமுகமான முதல் ஆண்டில் ஆஸ்துமா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.3 விழுக்காடு குறைந்திருந்தது.

புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்கள் – அதாவது புகைக்காதவர்கள் புகையால் பாதிக்கப்படுதல் டஹள்ள்ண்ஸ்ங் நம்ர்ந்ண்ய்ஞ் எனப்படுகின்றது. இந்த டஹள்ள்ண்ஸ்ங் நம்ர்ந்ண்ய்ஞ் என்பது எந்த அளவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதை இந்தப் புள்ளி விபரம் நமக்கு உணர்த்துகின்றது.

இத்தடை, வீட்டிலோ அல்லது கார் போன்ற மூடப்பட்ட இடங்களிலோ குழந்தைகளுக்கு முன்னால் சிகரெட் பற்ற வைக்கும் பெற்றோரின் பழக்கத்தையும் வெகுவாகக் குறைத்திருக்கின்றது.

டங்க்ண்ஹற்ழ்ண்ஸ்ரீள் என்ற மாத இதழில் இந்த ஆய்வு வெளியானது. கிரிஸ்டோபர் மில்லட் என்பவர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வு இங்கிலாந்துக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக, குழந்தைகள் டஹள்ள்ண்ஸ்ங் நம்ர்ந்ண்ய்ஞ் என்ற ஆபத்திற்கு மிக மிகக் குறைவான அளவிலேயே இலக்காவதன் மூலம் இந்தப் பயன் கிடைத்துள்ளது. புகை தடைச் சட்டத்தின் வாயிலாக மக்கள் புகையில்லா வீடுகள் என்ற மனோபாவத்திற்கு மாறி விட்டார்கள் என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது.

“இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக சிகரெட் பாக்கெட்டுகளில் பிராண்டுகளின் பெயரைத் தவிர வேறெதுவும் அச்சிடாமல் வெளியிட வேண்டும். அப்போது தான் இளைஞர்கள் இதன் கவர்ச்சியில் விழாமல் தப்பிப்பார்கள்” என்று இங்கிலாந்தின் புகை எதிர்ப்புப் பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 9

அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்

சென்ற இதழில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள், சொர்க்கவாசிகள் என்று அடையாளப்படுத்திக் காட்டினார்கள் என்பதற்குச் சில ஆதாரங்களைப் பார்த்தோம்.

அதே போல் நபியவர்களுடைய மகன் இப்ராஹீம் சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்காக மிகவும் கவலைப்பட்டார்கள். அதைப் பற்றி பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியவர்களின் மகன்) இப்ராஹீம்  இறந்த போது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டுஎனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1382, 3255, 6195

அதே போன்று அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் குமைஸா பின்த் மில்ஹான் அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது இது யார்? என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், “இவர் தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த் மில்ஹான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம்: 4851

அதேபோல பிலால் (ரலி) அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நற்செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

(ஒருநாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக! ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும் நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளூச் செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை) தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4854

அதுபோன்று, உம்மு சுஃபைர் அவர்களையும் நபிகளார் சொர்க்கவாசி என்று நற்சான்று தந்திருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வ-ப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலி-ருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ  பின் அபீரபாஹ்

நூல்: புகாரி 5652

ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு (ஒருநாள்) கனவில் சொர்க்கம் எடுத்துக்காட்டப்பட்டது. அப்போது அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதை செவியுற்றேன். அப்போது இவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “இவர்தான் ஹாரிஸா பின் நுஃமான்என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நன்மை இவ்வாறு தான். நன்மை இவ்வாறு தான்என்று கூறிவிட்டு, “அவர் தான் மக்களிலேயே தன்னுடைய தாய்க்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியவராக இருந்தார்என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 24026

பத்ருப்போரில் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ (அனைவருடைய தகவலும் இல்லாவிட்டாலும் பத்ருவாசிகள் என்று யாரெல்லாம் சொல்லப்பட்டார்களோ) அவர்களை நாம் சொர்க்கவாசிகள், மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லலாம்.

பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருடைய பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும், பத்ருவாசிகள் என்று  சுமார் 60க்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் பெயர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரானன அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரானன ஹிப்பான் பின் அதிய்யா அவர்களிடம் சர்ச்சையிட்டுக் கொண்டு, “உங்கள் தோழர் அலீ அவர்களுக்கு இரத்தம் சிந்தச்செய்யும் துணிவைக் கொடுத்தது எது? என்று நான் உறுதிபட அறிவேன்என்று கூறினார்கள். ஹிப்பான் அவர்கள், “தந்தையற்றுப் போவாய்! (அலீ அவர்களுக்குத் துணிவைத் தந்த) அந்த விஷயம் எது?” என்று கேட்டார்கள். அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள், “அது ஒரு சம்பவம். அதனை அலீ (ரலி) அவர்களே கூற நான் கேட்டுள்ளேன்என்று சொன்னார்கள். ஹிப்பான் அவர்கள், “என்ன சம்பவம் அது?” என்று கேட்க, (பின்வருமாறு) அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்:

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களையும் அபூமர்ஸத் (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் “ரவ்ளத்து ஹாஜ்எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு “ஹாஜ்என்றே அபூஅவானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூசலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் “ரவ்ளத்து காக்என வந்துள்ளது) – அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (மக்காவி-ருக்கும்) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய (நமது இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டுவாருங்கள்என்று கூறி அனுப்பினார்கள். உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தனது ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), “உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?” என்று கேட்டோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லைஎன்று சொன்னாள். உடனே நாங்கள் அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் “இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையேஎன்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, “ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தனது இடுப்பை நோக்கி (தனது கையைக்) கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். பிறகு அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்யைôளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளாம-ருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களுடைய (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களுயை குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்”  என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள்என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் மீண்டும் “அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையாஉங்களுக்கு என்ன தெரியும்ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்என்று கூறிவிட்டிருக்கலாம்என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6939

இந்த ஹதீஸ் மேலும் புகாரியில் 3007, 3081, 4274, 4890, 6259, 3983 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருமே சொர்க்கவாசிகள் என்பது தெளிவாகிறது. அவர்களிடம் எத்தனை தவறுகளைக் கண்டாலும் அவர்கள் சொர்க்கவாசிகள் தான் என்று அல்லாஹ்வும் கூறுகிறான். இந்த ஹதீஸில் இடம்பெற்ற ஸஹாபியும் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்தான். அந்தப் போருக்கு பிறகு அவர் தவறு செய்திருக்கிறார் என்ற செய்தி நபியவர்களுக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்று சொன்ன காரணத்தினால் அவர்களை நபியவர்கள் தண்டிக்கவில்லை. எனவே இந்தச் செய்தியில் இடம்பெற்ற ஹாதீப் பின் அபீபல்தஆ அவர்களையும், பத்ருப்போரில் கலந்து கொண்ட அனைவரையுமே நல்லடியார்கள், மகான்கள், அவ்லியாக்கள் என்று நாம் சந்தேகமற உறுதிபடக் கூறலாம்.

இதுபோன்று, பைஅத்து ரிள்வான் என்று சொல்லப்படக்கூடிய ஹுதைபியா உடன்படிக்கையின் போது ஒரு மரத்தடியில் உறுதி மொழி எடுத்தவர்கள் அனைவரையும் சொர்க்கவாசிகள் என்று நாம் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் தியாகம் செய்யாவிட்டாலும் அதற்காகப் பின்வாங்காமல், உயிரை விடவும் தயாராக இருந்ததால் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

அல்குர்ஆன் 48:18

அந்தச் சம்பவம் என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகச் செல்லும் போது இடையில் தடுக்கப்படுகிறார்கள். அப்போது ஒரு மரத்தின் அடியில் அனைவரும் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களைப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, தூதுவராக மக்காவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை மக்காவில் உள்ள எதிரிகள் கொன்று விட்டார்கள் என்று வதந்தி பரவுகின்றது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், ஒரு நாட்டிலுள்ள தூதரை மற்றொரு நாட்டிலுள்ளவர்கள் கொல்லக்கூடாது என்ற சட்டம் அந்த காலத்தில் மட்டுமல்ல இன்றைக்கும் நடைமுறையில் உலகம் முழுவதும் ஒத்துக்கொண்ட விஷயமும் கூட. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடந்தால் கூட பாகிஸ்தான் தூதுவர் இந்தியாவில் பாதுகாப்பாகத் தான் இருப்பார். இந்தியாவினுடைய தூதர் அங்கு பாதுகாப்பாகத் தான் இருப்பார். அவருடைய உயிருக்கு யாரும் எந்தக் கெடுதலும் பண்ணக்கூடாது. தூதுவர் என்ற அடிப்படையில் அவர் செய்யக்கூடிய பணிகளைத் தடுக்க மாட்டார்கள். இதுதான் இன்றைக்கும் அன்றைக்கும் உள்ள நடைமுறையாக இருந்து வருகின்றது.

இந்தச் சம்பவத்தில், எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதுவராக சென்ற உஸ்மான் (ரலி) திரும்பி வருவதற்கு தாமதமாகி விட்டது. எதிரிகள் அவரைப் பிடித்தும் வைக்கவில்லை; தடுத்தும் வைக்கவில்லை. ஆனால் இந்தத் தாமதமான செய்தியை அறியாமல் அவர்களைக் கொன்று விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி விடுகின்றனர்.

தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் நபியவர்கள் தன்னுடைய தோழர்களை ஒரு மரத்தடியின் கீழ் ஒன்றுகூட்டி, “நாம் தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று இருப்பார்களானால், அல்லாஹ்வுக்காகக் கடைசி வரையும் நின்று போராடுவோம் என்று சொல்லக்கூடியவர்கள் என்னுடன் உறுதிமொழி எடுங்கள்!” என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த அனைவரும் நபியவர்களிடத்தில் நாங்கள் கடைசி வரைக்கும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வந்ததால் போர் நடக்கவில்லை. எந்தவித சண்டையும் நடக்கவில்லை. யாரும் எந்தவித தியாகமும் செய்யவில்லை. ஆனால் “கடைசி நிமிடம் வரைக்கும் பின்வாங்கமாட்டோம். இந்த விஷயத்தை (அதாவது தூதரைக் கொன்ற விஷயத்தை) நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வெற்றி பெறும் வரை அல்லது வீரமரணம் அடையும் வரைக்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று என்னிடத்தில் உறுதிமொழி அளிக்கக்கூடியவர்கள் யார்?’ என்று கேட்டவுடன் அனைவரும் உறுதிமொழி அளிக்கிறார்கள். இந்த உறுதிமொழியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் எல்லாருமே சொர்க்கவாசிகள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டதால் இவர்களை நல்லடியார்கள், அவ்லியாக்கள், மகான்கள் என்று நாம் கூறலாம்.

உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எகிப்து வாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தை ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷிகள்என்று கூறினர். அவர், “இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள்என்று பதிலளித்தனர். உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் -ரலி- அவர்களை நோக்கி) “இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கின்றேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் அவர்கள் உஹுதுப் போரின் போது (போர்க்களத்தி-ருந்து) வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் அவர்கள், பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் ஹுதைபிய்யாவில் நடந்த “பைஅத்துர் ரிள்வான்சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டு விட்டு) அந்த மனிதர், (உஸ்மான் -ரலி- அவர்கள், தாம் நினைத்திருந்தது போலவே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள் தாம் என்று தொனிக்கும்படி) “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்என்று சொன்னார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் -ரலி- அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று) உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுதுப் போரின் போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன். பத்ருப் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி-) உஸ்மான் அவர்களின்  மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)என்று சொன்னார்கள். (எனவே தான் அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.) “பைஅத்துர் ரிள்வான்சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களை  விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை) எனவே தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, “இது உஸ்மானுடைய கைஎன்று சொல்- அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்என்று சொன்னார்கள்என (இப்னு உமர் -ரலி- அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் -ரலி- அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்த பதில்களை எடுத்துக் கொண்டு இப்போது நீ போகலாம்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3699

இந்தச் செய்தியில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்ற உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்பைப் பற்றி விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் அந்த மரத்தினடியில் உறுதிமொழி (பைஅத்) எடுத்தார்களோ அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள். அவர்கள் சொர்க்கவாசிகள். சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்ற கருத்தில் அமைந்த செய்தி முஸ்லிமில் 4552வது ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

இதைப் போன்று எந்த நல்லடியார்களைப் பற்றி சொர்க்கவாசி என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவர்களைத் தான் சொர்க்கவாசிகள் என்றோ, நல்லடியார்கள் என்றோ சொல்ல வேண்டும்.

நபியவர்கள் இப்படி ஏராளமானவர்களைப் பற்றி நல்லடியார்கள் என்றும் சொர்க்கவாசிகள் என்றும் நற்சான்று அளித்திருக்கிறார்கள்.

அதேபோல் ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது நல்லவர்கள், சொர்க்கவாசிகள் என்று முன்னறிவிப்பு செய்திருக்கிறார்களா? நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபியவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அந்த இருவர் யார் என்பதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்    தொடர்: 28

சங்கிலித் தொடர் வியாபாரம்

சங்கிலித் தொடர் வியாபாரம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் முதல் வகையான மோசடியைக் கடந்த இதழில் கண்டோம். இதில் இன்னும் சில வகைகள் உள்ளன. அவற்றை இந்த இதழில் காண்போம்.

இரண்டாவது வகை

இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் மற்றொரு வகையான மோசடியும் நடைபெறுகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி இல்லாத பொய்களைச் சொல்லி அதனை மிகப்பெரும் விலையில் யாருக்காவது விற்பதாகும்.

வியாபாரத்தில் பொய் சொல்லி சம்பாதிப்பது ஹராம் ஆகும். அது வியாபாரத்தின் பரக்கத்தை அழித்துவிடும்.

சாதாரண ஒரு படுக்கையை, “இது அதி அற்புதமான சக்தி வாய்ந்த மூலிகைப் படுக்கை அல்லது காந்தப் படுக்கை. இதில் படுத்தால் குறுக்கு வலி குணமாகிவிடும். மலட்டுத் தன்மை நீங்கி விடும். கேன்சர் குணமாகி விடும். இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இதற்கு சர்ட்டிஃபிகேட் வழங்கியுள்ளது” என்று பலவிதமான பொய்களைக் கூறி நம்ப வைத்து மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள்.

சர்க்கரை நோய்க்கு மருந்து தருகிறோம் என்று கூறி ஏதேனும் ஒரு மாத்திரையைத் தருவார்கள். இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் இனி ஒருபோதும் சர்க்கரை நோய் ஏற்படாது என்று அடித்துச் சொல்வார்கள். பத்து ரூபாய் மாத்திரையை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பார்கள்.

இப்படி மாத்திரை வாங்கியவர், இன்னும் ஆறு பேருக்கு அந்த மாத்திரையை விற்றால் நீங்கள் கொடுத்த பத்தாயிரம் உங்களுக்குக் கிடைத்து விடும். அந்த ஆறு பேரும் தலா ஆறு பேருக்கு விற்றால் உங்களுக்கு 60,000 லாபம் கிடைக்கும். இப்படி மூன்று அடுக்கு போய் விட்டால் உங்களுக்குக் கார் பரிசு கிடைக்கும். ஐந்து அடுக்கு போனால் பங்களா பரிசு கிடைக்கும். பத்து அடுக்கு போய் விட்டால் அமெரிக்காவுக்கு சுற்றுலா! இருபது அடுக்கு போய் விட்டால் தென்ஆப்பிரிக்காவில் ஒரு தீவு வாங்கித் தருவோம் என்று கற்பனையில் மிதக்க வைப்பார்கள்.

ஆனால் சர்க்கரை நோய்க்கு இப்படி ஒரு மருந்து இருந்தால் அது அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களுக்குத் தெரியாமல் போகுமா? பிரபல மருந்துக் கம்பெனிகள் அதைத் தயாரிக்காமல் இருக்குமா? என்றெல்லாம் யாரும் சிந்திக்க மாட்டார்கள். கார், பங்களா கனவு தான் பிரதானமாக இருக்கும்.

சாதாரண ஒரு பற்பசையைத் தந்து, இதனை பட்டாணி அளவில் வைத்தாலே அதிக அளவில் நுரை வரும். இதில் பல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றெல்லாம் பொய் கூறி நம்ப வைத்து அதிகமான விலையில் விற்பனை செய்வார்கள்.

இந்த வியாபாரத்தைப் பற்றி விளக்குகிறோம் என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் கூட்டி லேப்டாப்பில் பல விதமான காட்சிகளைக் காட்டுவார்கள். “நான் மிகவும் ஏழையாக இருந்தேன். இந்த வியாபாரத்தில் சேர்ந்தவுடன் மிகப் பெரும் பணக்காரனாகி விட்டேன்’ என்றெல்லாம்  சிலர் பேசும் காட்சிகளைக் காட்டுவார்கள்.

உற்பத்திச் செலவு இரண்டாயிரம் உள்ள பொருளை இப்படிப் பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.

இந்தப் பணத்தை அடைவதற்காக கம்பெனி தன்னிடம் எதையெல்லாம் கூறி ஏமாற்றி விற்பனை செய்ததோ அது போன்று இவரும் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கூறி வியாபாரம் செய்வார். இவருக்குக் கீழ் உள்ள ஐந்து பேரும் தங்களுக்குக் கீழ் தலா ஐந்து நபர்களைச் சேர்த்தால் இவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலாபமாகக்  கிடைக்கும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தனக்கு  கீழ் உள்ளவர்களுக்கு இலாபமாக வழங்குவார்.

ஒவ்வொருவரும் தான் யாரிடம் பொருள் வாங்கினோம் என்பதை மட்டும் தான் அறிவார்கள். யாரும் கம்பெனியோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது.

இது போன்ற பொருட்களை எந்தக் கடையிலும் வைத்து விற்பனை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை வாங்கிய மக்கள் உரிய பலன் கிடைக்காமல் ஏமாறும் போது இதனை விற்பனை செய்யும் மூலத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே வியாபாரம் செய்வார்கள்.

நாம் உதாரணத்திற்குத் தான் பொருட்களையும் அதற்கு வழங்கப்படும் இலாபத்தையும் குறிப்பிட்டுள்ளோமே தவிர பல கம்பெனிகள், பல பொருட்களை, பல விதமான இலாப சதவிகிதத்தில் ஏமாற்றி விற்பனை செய்கின்றன.

இவ்வாறு பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் எப்படி ஹலாலான வியாபாரமாக இருக்க முடியும்?

மூன்றாவது வகை

அன்றாடம் தேவைப்படக்கூடிய சில அவசியமான பொருட்களை  ஒரு கம்பெனி தயார் செய்யும். உதாரணத்திற்கு சோப்பு, பவுடர், பேஸ்ட், சட்டை இது போன்ற பொருட்களைத் தயார் செய்யக் கூடிய ஒரு கம்பெனியாக இருக்கும்.

இவர்கள் தயார் செய்யும் பொருட்களை இவர்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் ஆட்களைப் பிடித்து அவர்களின் மூலம் விற்பனை செய்வார்கள். இதற்கு அவர்கள் நிபந்தனை விதிப்பார்கள். யார் அவர்களுடைய கம்பெனியில் உறுப்பினர்களாக இணைகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் வியாபாரச் சரக்கை வழங்குவார்கள். உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு வியாபாரச் சரக்கு வழங்க மாட்டார்கள்.

இப்படி உறுப்பினர்கள் மூலம் வியாபாரம் செய்வதால் விளம்பரச் செலவு கிடையாது; அதனால் அந்த லாபத்தை நாங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம் என்று வியாக்கியானம் கூறுவார்கள்.

அவர்களுடைய கம்பெனியில் நாம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொன்னால் நாம் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்ட வேண்டும். அதில் ஒரு கணிசமான தொகை உறுப்பினர் கட்டணம் என்று எடுத்துக் கொண்டு மீதித் தொகைக்கு நாம் வியாபாரம் செய்வதற்கு சரக்கு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஒருவர் 20,000 ரூபாய் செலுத்தினால் 10,000 ரூபாயை உறுப்பினர் கட்டணம் எனப் பிடித்துக் கொண்டு 10,000 ரூபாய்க்கு சரக்கு தருவார்கள். அவர்கள் நமக்கு குறிப்பிட்ட விலையில் சரக்கினைத் தருவார்கள். நாம் அதனை விற்றால் நமக்கு அதில் இலாபம் கிடைக்கும்.

இவ்வாறு மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இத்தோடு நில்லாமல் நீங்கள் விற்பனை செய்வதோடு நின்று விடாமல் நீங்கள் இரண்டு உறுப்பினர்களை எங்கள் கம்பெனியில் சேர்த்து விட்டால் அவர்கள் செய்யும் விற்பனையில் கிடைக்கும் இலாபத்திலிருந்து உங்களுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்று நமக்கு கூறுவார்கள்.

உதாரணத்திற்கு நாம் சேர்த்து விடுகின்ற இருவர் ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் நமக்கு இலாபத்தில் இரண்டு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட ஒரு அளவு பங்கு தருவார்கள்.

இத்தோடு நில்லாமல் நம்மால் சேர்த்து விடப்பட்ட இரண்டு பேர் ஒவ்வொருவரும் இன்னும் இரண்டு நபர்களைச் சேர்த்து விடுவார்கள். அவர்கள் செய்யும் விற்பனையிலிருந்தும் நமக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இலாபமாகக் கிடைக்கும்.

இவ்வாறு தொடர்ந்து சங்கிலி போன்று செல்லும் போது ஒவ்வொரு மட்டத்தினர் செய்கின்ற வியாபாரத்திலிருந்தும் முதலாமவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற வியாபாரத்தின் இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும்.

சில நேரங்களில் 100 பேர், 200 பேர் என்று அதிகமான நபர்கள் சங்கிலித் தொடராகச் சேரும் போது முதல் நிலையில் உள்ளவருக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

நம்முடைய எந்த முதலீடும் இல்லாமல் மற்றவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு நமக்கு லாபம் கிடைப்பது எப்படி மார்க்க அடிப்படையில் ஹலாலான சம்பாத்தியமாக இருக்க முடியும்?

நாம் எந்த வியாபாரமும் செய்யாமல் நமக்கு இலாபம் கிடைக்கிறது எனும் போது அது ஹராமான சம்பாத்தியமாகத் தான் இருக்கும்.

இதுபோன்று சங்கிலித் தொடரில் விற்பனை செய்பவர்கள், ஹலாலான முறையில் விற்றார்களா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் ஏமாற்றி விற்பனை செய்தால் அந்தப் பாவத்திலும் நமக்கு பங்கு இருக்கத் தானே செய்யும்?

நாம் சேர்த்து விடுவதினால் மட்டும் நமக்கு இலாபம் கிடைக்கும் என்பதே நியாயமானது கிடையாது. ஒரு வாதத்திற்கு இதைச் சரி என்று வைத்து கொண்டாலும் முதல் இருவரைத் தான் நாம் சேர்த்து விடுகிறோம். அவர்களுக்குப் பின்னால் இணைபவர்கள் செய்யும் வியாபாரத்தில் இருந்தும் நமக்கு பங்கு வருகிறதே?

இப்படி இலாபம் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான உற்பத்திச் செலவுள்ள பொருட்களைக் கூட பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி அதிகமான விலைக்கு விற்பனை செய்ய வைக்கின்றார்கள். ஏமாற்றியதில் கிடைக்கும் பணத்தில் தான் பங்கு தருகின்றார்கள். எனவே இது எப்படி நமக்கு ஹலாலாக முடியும்?

இப்படி பொய்களைச் சொல்லி விற்பனை செய்வதன் மூலமும் அந்த வியாபாரம் ஹராமானதாக மாறிவிடுகிறது.

பொதுவாக எந்தெந்த வியாபாரங்களில் எல்லாம் ஏமாற்றுதல், மோசடி, பொய் போன்றவை காணப்படுகிறதோ அவை அனைத்துமே ஹராமான வியாபாரங்கள் தான்.

வியாபாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்த சில போதனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 3033

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது.

உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2079

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 2237

—————————————————————————————————————————————————————-

சீறுவோர் சிந்திக்க வேண்டும்

அப்துல் மஜீத் உமரி

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.

அல்குர்ஆன் 33:6

இந்த வைர வாக்கியத்தின் உயிரோட்டம் இன்று உலக முஸ்லிம்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் என்பவர் ஷாபானு வழக்கில் ஷரீஅத்துக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய போதும், நமது உயிரை விடவும் மேலாக நாம் மதிக்கும் நபி (ஸல்) அவர்களை டென்மார்க்கில் ஒருவன் கேலிச் சித்திரம் வரைந்த போதும் நாம் வெளிக்காட்டிய எதிர்ப்புக்கள் மாபெரும் வரலாற்றுச் சுவடுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மார்க்கெட் நிலவரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அவரச உலகில் மார்க்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு செழிப்படைந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இதுபோன்ற கட்டங்களில் வரம்பு மீறி வன்முறையில் ஈடுபடுவது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது போன்ற ஒரு சிலரின் செயல்கள், “தனது நாவினாலோ, கரங்களினாலோ பிறருக்குத் தீங்கு ஏற்படுத்தாதவனே முஸ்லிம்” என்று நபி (ஸல்) அவர்கள் வகுத்துத் தந்த இலக்கணத்திற்கு எதிரானது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை குறும்(பு) படம் எடுத்துக் கொச்சைப்படுத்திய ஸாம் பாசில் என்பவன் மீது பாய்கின்ற நாம், அந்த நபி (ஸல்) அவர்களை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கின்றோமா?

நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும் என்றாலும் அதற்கான நிபந்தனை, நாம் நபியைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையை திருக்குர்ஆன் பிறப்பிக்கின்றது.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

நபியை நமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்று மேலே நாம் சுட்டிக்காட்டிய 33:6 வசனம் வலியுறுத்துகின்றது. நாம் நமது நபியை அவ்வாறு தான் நேசிக்கிறோமா? பின்பற்றுகிறோமா?

இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.

இயற்கை மரபுகள் என்று வர்ணிக்கப்பட்ட நபிமொழி, சுகாதாரத்தை நமக்கு நேரடியாகவே அள்ளித் தருகின்றது என்பதை இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு விளங்கியிருக்கின்றது?

மீசையைக் கத்தரித்தல்:

உதடு தெரியாத அளவுக்கு மீசை வளர்ந்து கிடப்பதை எத்தனை முஸ்லிம்கள் கண்டுகொள்கின்றார்கள்? அதை முறைப்படி கத்தரிப்பதில்லையே!

தாடி வளர்த்தல்:

ஆண்களுக்கான முக அடையாளமான தாடியைப் பேணுபவர்கள் நம்மில் எத்தனை பேர்? சிலர் ஃபேஷன் தாடி வளர்க்கின்றார்கள். அதைப் பார்ப்பதற்குப் பூதக்கண்ணாடி தேவைப்படுகின்றது.

நகங்களை வெட்டுதல்:

நகங்களில் உள்ள அழுக்குகள் காலரா உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு ஏதுவாகின்றது என்று மருத்துவக் குறிப்பு சொல்கின்றது. வலது கைவிரல் நகங்களில் உணவுத் துகள்கள் தேங்குகின்றன. இடது கைவிரல் நகங்களிலோ மலஜலக் கழிவுகள் தேங்குகின்றன. (இதில் சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் வேறு!) இவற்றின் மூலம் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை நினைக்கும் போதே அருவருப்பாக இருக்கின்றது.

தேவையற்ற முடிகளைக் களைதல்:

அக்குள் மற்றும் மறைவிடங்களின் முடிகளைக் களைய வேண்டும் என்ற நபிவழியை நம்மில் அனேகர் அறிந்திருப்பதில்லை. காற்றுப் புகாத அந்த இடங்களில் எத்தனை வாசனைத் திரவியங்கள் பூசினாலும் சுகாதாரம் ஏற்படுமா?

பேருந்துகளில் கம்பியைப் பிடித்து நிற்பவர்களின் அருகில் நிற்பவர்கள் மயக்கம் போட்டு விழுகின்ற அளவுக்குத் துர்நாற்றம் அடிக்கின்றதே! அக்குள் முடிகளைக் களைந்தால் இந்நிலை ஏற்படுமா?

நபிவழியில் ஏராளமான வழிகாட்டுதல்கள் கிடக்கும் போது நம்மவர்களிடம் சுன்னத் என்று பேணப்படுவது இரண்டே இரண்டு தான்.

அந்நிக்காஹு மின் சுன்னத்தீ என்று அரபியில் உலமாக்கள் நீட்டி மொழிவார்களே அந்தத் திருமணம் ஒன்று!

திருமணம் எனது வழிமுறை என்ற கருத்தில் அமைந்த அந்த சுன்னத்தை மேற்கொள்ளப் போகும் மணமகன் தாடியைச் சிரைத்து விட்டு வந்து சபையில் அமர்ந்திருப்பார். அந்நிக்காஹு மின் சுன்னத்தீ என்று முழங்கும் உலமாக்களில் பெரும்பாலோர், சுன்னத்தைச் சிரைத்துவிட்டு, சிதைத்துவிட்டு அமர்ந்திருக்கும் மணமகனைத் தட்டிக் கேட்பதோ, சுட்டிக் காட்டுவதோ கிடையாது. அதே நேரத்தில் சுன்னத்தாக இல்லாத தொப்பி, மாலையெல்லாம் அணிந்தாக வேண்டும் என்று ஜமாஅத்தார்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள்.

இரண்டு சுன்னத்துகளில் மற்றொன்று, விருத்தசேதனம் என்று கூறப்படும் கத்னா தான். சில பகுதிகளில சுன்னத் என்றாலே கத்னா தான்.

இந்த இரண்டையும் தவிர சுன்னத் – நபிவழி என்ற வகையில் அக்கறை காட்டப்படும் அம்சங்கள் வேறு ஏது?

கத்னாவை வலியுறுத்தும் அதே தொடரில் தான் மீசை, தாடி, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்திலுள்ள முடி சம்பந்தமான வழிகாட்டுதல்கள், வலியுறுத்தல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

இயற்கை மரபுகள் ஐந்தாகும்அல்லது “ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும்‘. (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 429)

இன்னொருபுறம் பார்த்தால் சுன்னத்களை ஒழிப்பதற்கென்றே சில பித்அத்களை சமுதாயம் உருவாக்கியுள்ளது.

 • முஸ்லிம்களின் அடையாளமாகத் தாடி அமைந்திருக்கும் போது, சம்பந்தமில்லாத தொப்பியை சுன்னத்துடன் முடிச்சுப் போடுதல்
 • மழைத் தொழுகை என்று ஒரு சுன்னத் இருக்கும் போது, மவ்லிதில் உள்ள மழை பைத்து என்ற பித்அத்தை அரங்கேற்றுதல்
 • கிரகணத்தின் போது தொழுகை நடத்துகின்ற நபிவழியை செயல்படுத்தாமல் திக்ரு மஜ்லிஸ் நடத்துதல்
 • மக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்கள் தொழவிடாமல் தடுக்கும் வகையில், தொழுகை நேர அட்டவணையில் பாங்கு முடிந்தவுடன் இகாமத் என்று எழுதி வைத்தல்.
 • ஜனாஸா தொழுகையில் முதல் தக்பீருக்குப் பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது நபிவழி என்றிருக்கும் போது அதில் ஸனா ஓதவேண்டும் என்று கூறுவது. (ஹனபி மத்ஹப்)
 • ஜனாஸா தொழுகை முடிந்த பின் ஃபாத்திஹா ஓதுதல்
 • பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதி, பாங்கு துஆ ஓதுவது சுன்னத் என்றிருக்கும் போது பாங்குக்கு முன் ஸலவாத் ஓதுதல்
 • ஸலவாத் இவ்வாறு தான் என்று நபிவழியில் கற்றுத் தரப்பட்டிருக்கும் போது அதை விட்டுவிட்டு ஸலாத்துன் நாரிய்யா, திப்பில் குலூப் ஸலாவத் என உருவாக்குதல்
 • பாரக்கல்லாஹு லக்க.. என்ற துஆவை மணமக்களுக்காக ஓதுவது சுன்னத் என்றிருக்கும் போது, “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா என்ற துஆவை பிடிவாதமாக ஓதுதல்
 • ஃபாத்திஹா சூராவின் முடிவில் ஆமீன் சப்தமிட்டுக் கூறும் வழிமுறையைப் புறக்கணித்து விட்டு, கூட்டு துஆவில் ஆமீன் கூறச் சொல்வது.

இப்படிப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் விட்டு விடுவோம்.

போதாக்குறைக்கு குர்ஆன் ஹதீஸ் என்ற நிரந்தரமான வழிகாட்டுதல்களை ஓரங்கட்டிவிட்டு மத்ஹபுகளையும் மவ்லிதுகளையும் அரங்கேற்றத் துடிக்கும் உலமாக்களை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகின்றது.

ஒரேயொரு படத்தின் மூலம் நபியைக் கொச்சைப்படுத்திய டெர்ரி ஜோன்ஸ், ஸாம் பாசில் போன்றவர்களைக் கூட மன்னிக்கலாம். ஏனெனில் அவர்கள் சத்திய வாசனையைக் கூட நுகராதவர்கள்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

அல்குர்ஆன் 6:112

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது போன்று டெர்ரி ஜோன்ஸ், ஸாம் பாசில் போன்றோரின் நடவடிக்கைகளை ஒரு முன்னறிவிப்பாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பல கட்டங்களில் நபிவழியை திட்டமிட்டுக் கொச்சைப் படுத்துபவர்களை எப்படி விடமுடியும்?

மத்ஹபுப் போர்வையில் சுன்னத் என்ற வார்த்தைக்கு “ஃபர்ழ் அல்லாதது – கடமையல்லாதது’ என்ற தவறான வரைவிலக்கணம் கொடுத்திருப்பதன் மூலம் உண்மையான சுன்னத்தின் வீரியத்தைக் குறைத்து விட்டனர்; குலைத்து விட்டனர். அதன் காரணமாகத் தான், “சுன்னத்து தானே!’ என்ற அலட்சியப் போக்கு காணப்படுகின்றது.

தாடி வளர்ப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்! அது ஒரு கட்டளை! ஆனால் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? தாடி ஒரு சுன்னத்து தானே என்று தான் பேசிக் கொள்கிறார்கள்.

நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவதும், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதும் கூட சுன்னத்து தானே என்று கூறி நபிவழித் தொழுகையையே தவறாகச் சித்தரிக்கின்றனர்.

“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையின் உள்ளடக்கத்தில் நெஞ்சின் மீது கைகளைக் கட்டுவதும், அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பதும் சேரத் தானே செய்யும்?

அப்படியானால் “சுன்னத்து தானே’ என்பது எவ்வளவு அபாயகரமான சிந்தனை! அதைப் பற்றிய அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கையும் மிகக் கடுமையானது.

யார் எனது சுன்னத்தை (வழிமுறையை) புறக்கணிக்கின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்.

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 2176)

இந்த நபிமொழி சொல்வதென்ன? நபிவழியைக் கொச்சைப்படுத்துவோர் நபியைச் சார்ந்தவர்கள் அல்லர், அவர்கள் ஸாம் பாஸில், டெர்ரி ஜோன்ஸ் வகையறாக்கள் என்பது தானே இந்த ஹதீஸின் பொருள்.

யாரோ நபியைக் கொச்சைப்படுத்தியதற்காகச் சீறுகின்றோம்; சிங்கமாகக் கர்ஜிக்கின்றோம். நமக்குள் நடக்கும் இந்தச் சீர்கேட்டைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும். சிந்திப்போமா?

—————————————————————————————————————————————————————-

கூட்டத்திற்கல்ல! கொள்கைக்கே வெற்றி!

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை, 80களிலிருந்து இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலிருந்தவர்கள் இன்று வியக்க வைக்கும் எண்ணிக்கையில் வான் முகட்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு தான் நமது ஜமாஅத் சுதாரிக்கவும் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியும் எழுச்சியும் கிடைத்தது எதனால்?

கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் தான். இல்லையென்றால் மழை காலத்துக் காளான்கள் போல் நமது கூடாரங்கள் கலைந்து, காணாமல் போயிருக்கும். இன்னும் இந்தக் கொள்கை ஏறுமுகம் காண வேண்டுமானால், எழுச்சி பெறவேண்டுமானால் இதே கொள்கைப் பிடிப்பும் பற்றும் நம்மிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் இறங்குமுகம் தான். நம்முடைய வாழ்நாளிலேயே இந்த இயக்கத்திற்கு முடிவுரை எழுத வேண்டியது தான். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

கொள்கை உறுதி என்றதும் நம்முடைய கவனத்திற்கு வரும் விஷயங்கள் தர்ஹா வழிபாடு, மவ்லிது, மத்ஹபுகள் போன்றவை தான். இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் கவனமாகத் தான் இருப்பார்கள். இதில் கோட்டை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அவர்கள் கோட்டை விடுவது திருமண நிலைபாட்டில் தான்.

திருமண விஷயத்தில் ஜமாஅத் ஒரு நிலைபாட்டை அறிவிக்கின்றது என்றால் அது சுயவிருப்பத்தின் அடிப்படையில் அல்ல. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தான்.

பெண் சிசுவைக் கருவிலேயே அழிப்பதற்கான காரணம் வரதட்சணை தான். கருவை விட்டுத் தப்பி அந்தக் குழந்தை வெளியே வந்து விட்டால் அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்குக் காரணம் வரதட்சணை தான்.

அத்தனையும் தாண்டி ஒரு பெண் மணம் முடித்துக் கொடுக்கப்பட்ட பின் ஸ்டவ் வெடித்துக் கொல்லப்படுவதற்குக் காரணம் வரதட்சணை தான்.

இந்த வரதட்சணை எனும் கொடிய பாவத்தைத் தான் சுன்னத் வல்ஜமாஅத்தினர் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர். இவர்கள் இவ்வாறு செய்வதற்குக் காரணம், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவதில்லை. அத்துடன், வேதத்தில் தங்களுக்குப் பிடித்தவற்றை பின்பற்றிக் கொண்டு பிடிக்காதவற்றை விட்டுவிடுபவர்கள். இந்தச் செயலை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:85

இவர்களின் மனோஇச்சை செயல்பாடுகளிலிருந்து விலகி, வெளியேறி மார்க்க அடிப்படையில் செயல்படுவதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்துள்ளோம்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

அல்குர்ஆன் 2:208

அல்லாஹ் சொல்வது போன்று இந்த இயக்கத்தின் மூலம் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திருக்கின்றோம். இந்த இயக்கத்தில் இருந்து கொண்டு, நமக்குப் பிடித்தவற்றைப் பின்பற்றிக் கொண்டு, பிடிக்காதவற்றை விட்டுவிடுவோம் என்று கூறுவது இயக்கத்திற்கு எதிரான செயல் அல்ல, இஸ்லாத்திற்கு எதிரான செயலாகும்.

உதாரணத்திற்கு திருமண விஷயத்தைக் கூறலாம். நம்மில் எத்தனை பேர் வரதட்சணை திருமணங்களை, ஆடம்பரத் திருமணங்களை, குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமாக நடத்தப்படும் திருமணங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றோம்? உறவு, நட்பு என்ற அற்பக் காரணங்களுக்காக இறைக் கட்டளையை அலட்சியப்படுத்துபவர்கள் எப்படி ஏகத்துவாதிகளாக இருக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பெண் வீட்டு விருந்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெண் வீட்டு விருந்தில் ஜமாஅத்தின் உறுப்பினர் மட்டுமல்லாது கிளை நிர்வாகிகளே போய் கலந்து கொள்கின்றனர். பெண் வீட்டு விருந்து கூடாது என்று சொல்வது நமது ஜமாஅத் மட்டும் தான். சொல்வதுடன் நில்லாமல் இதுபோன்ற விருந்தைப் புறக்கணித்து, செயல்பாட்டிலும் நிலைநிறுத்துகின்ற ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான்.

ஏன்? ஒன்று, அது இஸ்லாத்தில் இல்லாத ஒரு நடைமுறை, பித்அத் ஆகும். இந்த அடிப்படையில் இது எதிர்க்கப்பட வேண்டும்.

மற்றொன்று, பெண் வீட்டு திருமணச் செலவுகள் தான் இன்றைக்குப் பெண் சிசுக் கொலைகளுக்குக் காரணம். எனவே இந்த விருந்தில் பங்கெடுக்கும் எவருக்கும் அந்தப் பாவத்திலும் பங்குண்டு என்ற விபரம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.

அதிலும் குறிப்பாக, மாப்பிள்ளை வீட்டாரின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வைக்கப்படும் பெண் வீட்டு விருந்துகள் தெளிவான வரதட்சணையாகும். பெரும்பாலான பெண் வீட்டு விருந்துகள் இந்த அடிப்படையில் தான் வைக்கப்படுகின்றன.

இந்தக் காரணங்களைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெண் வீட்டு விருந்து போன்ற அனாச்சாரங்களைத் தவிர்க்கச் சொல்கின்றது. அவ்வாறு தவிர்க்காத திருமணங்களை ஜமாஅத் புறக்கணித்து தனித்து ஒதுங்கிக் கொள்கின்றது. இது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை நிலைப்பாடு! இதுபோன்று பிற ஜமாஅத்துகள், இயக்கத்தினர் நடத்தும் மேடைகளில் பங்கெடுக்கக் கூடாது என்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு!

இவையெல்லாம் ஜமாஅத் நலன் கருதி, குர்ஆன் ஹதீசுக்குக் கட்டுப்பட்டு எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள். இதுபோன்ற பல்வேறு நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஜமாஅத் உறுப்பினர்கள் ஆட்டம் கண்டால் அது கொள்கை ரீதியிலான ஆட்டமாகும். இந்த ஆட்டம் ஜமாஅத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிடும்.

தர்ஹா வழிபாடு, மவ்லிது போன்றவற்றில் உறுதியாக இருந்தால் மட்டும் போதாது. இதுபோன்ற விஷயங்களிலும், சின்னச் சின்ன விஷயங்கள் என்று அலட்சியம் காட்டாமல் உறுதியாக இருக்க வேண்டும். இவற்றிலும் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டும்.

இன்று நமது ஜமாஅத்தில் கிளைப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகளே இந்த நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்கின்றனர். இந்த இயக்கத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது கொள்கை தான்; கூட்டமல்ல! இலட்சியம் தான்; எண்ணிக்கையல்ல!

இதைக் கவனத்தில் கொண்டு மாநில அளவிலான தர்பியா முகாம்களை தலைமை விரைவில் நடத்தவுள்ளது. சென்னை, கோவை, மதுரை என மாநிலத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்து, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு இந்தத் தர்பியா முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். தங்கள் கொள்கை, கோட்பாடுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? பாங்கைப் பதிவு செய்து, அதை பாங்காகப் பயன்படுத்தலாமா? வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா?

அஜி

இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது வணக்க வழிபாடு தொடர்புடைய விஷயமாகும். பாங்கு சொல்வது சிறந்த நல்லறமாக மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் “ஆட்டை மேய்த்துக் கொண்டோஅல்லது “பாலைவனத்திலோஇருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றனஎன்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (819)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து) விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி (615)

ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் கூறுகிறார்:

(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் (631)

நல்லறங்களைப் பொறுத்தவரை மனிதன் அவற்றைச் செய்தால் தான் அதன் நன்மைகளை அடைய முடியும். நவீன கருவிகளைப் பயன்படுத்தி பாங்கு சப்தத்தை ஒலிக்க விட்டால் நாம் பாங்கு சொன்னவராக முடியாது.

இவ்வாறு செய்யும் போது பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்புகளை நம்மால் அடைய முடியாது. எனவே நாம் பாங்கு சொன்னால் தான் பாங்கிற்குரிய சிறப்புகள் நமக்கு கிடைக்கும்.

இந்த நல்லறத்தை மனிதர்களில் ஒருவரே செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(இளைஞர்களான) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (819)

இந்த ஹதீஸில் உங்களில் ஒருவர் என்று சொல்லப்படுவது, தொழுபவர்களில் யாரேனும் ஒரு மனிதரையே குறிக்கின்றது. எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆடியோவை பாட விடுவதன் மூலம் பாங்கு சொல்வது கூடாது. மனிதர்களில் யாராவது ஒருவரே பாங்கு சொல்ல வேண்டும்.

? பெண்கள் பாங்கு சொல்லலாமா?

அஜி

தொழுகைக்காகச் சொல்லப்படும் பாங்கில் இரண்டு வகை உள்ளது.

மக்களைப் பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை.

தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் ஆண்களுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம். மற்றவர்களை அழைப்பதற்காகப் பாங்கு சொல்வது ஆண்களை முந்துவதில் அடங்கும். எனவே இது போன்ற பாங்குகளை சொல்லக் கூடாது.

ஒரு பள்ளியில் சொல்லப்பட்ட பாங்கு கேட்காத போதும் மக்கள் வசிக்காத பகுதியில் தொழும் போதும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த வகையான பாங்கை அதாவது தனது தொழுகைக்காகச் சொல்லிக் கொள்ளும் பாங்கை பெண்கள் சொல்லலாம்; சொல்ல வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது “நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரி (2848)

யாரையும் அழைக்கும் நோக்கம் இல்லாமல் பயணத்தில் இருக்கும் போதும் பாங்கு சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான்.பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன்என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: அபூதாவூத் (1017)

தன்னந்தனியாக இருப்பவன் கூட பாங்கு சொன்னால் அதை இறைவன் விரும்புகிறான் என்பதால் நாம் தனியாக தொழுதாலும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த நன்மையை ஆண்களும் அடைந்து கொள்ளலாம். பெண்களும் அடைந்து கொள்ளலாம்

பெண்கள் தனித்துத் தொழும் போதும் அல்லது பெண்களுக்கு பெண்கள் ஜமாஅத் நடத்தும் போதும் தமக்காக பாங்கு சொல்லலாம்.

? தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் எவ்வாறு அமர வேண்டும்? முதல் அமர்வுக்கும் இரண்டாவது அமர்வுக்கும் இருக்கும் விதத்தில் வித்தியாசம் உள்ளதா?

அபூதாஹிர்

தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் இடது காலின் மீது அமர்வார்கள் என்று பொதுவாகவும் தன் இருப்பிடத்தை தரையில் வைப்பார்கள் என்று பொதுவாகவும் ஹதீஸ்கள் இருவிதமாக வந்துள்ளது.

பின்வரும் செய்திகள் அத்தஹிய்யாத்தில் இடது காலின் மீது அமர வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.

அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் கூறுகிறார்:

என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்ப்பேன். ஆகவே நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாதென என்தைத் தடுத்துவிட்டு, “தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால் உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து வைப்பதாகும்என்று கூறினார்கள். “அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் கால்கள் என்னைத் தாங்காதுஎன்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 827)

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது பின்னாலிருந்து (பார்த்தால்) அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை விரித்து (இடைவெளி விட்டு) வைப்பார்கள். அவர்கள் அமர்ந்தால் தமது இடது தொடையின் (காலின்) மீது நிதானமாக அமர்ந்துகொள்வார்கள்.

நூல்: முஸ்லிம் (855)

பின்வரும் ஹதீஸ்கள் இடது காலை விரித்து வைக்க வேண்டும். அதாவது இருப்பிடத்தை தரையில் படுமாறு அமர வேண்டும் என்ற கருத்தைக் கூறுகின்றன.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணைக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து வைப்பார்கள். தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள்.

நூல்: முஸ்லிம் (1014)

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் “அத்தஹிய்யாத்ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள்.

நூல்: முஸ்லிம் (857)

இந்தச் செய்திகளை மட்டும் படித்தால் அமர்வின் போது இடது காலின் மீது அமர வேண்டுமா? அல்லது இடது காலை விரித்து வைத்து இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டுமா? என்று குழப்பம் ஏற்படும்.

நபித்தோழர் அபூ ஹுமைத் சாயிதீ அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழி இந்தக் குழப்பத்தை நீக்கி தெளிவான முடிவைத் தருகின்றது.

நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வின் போது இடது காலின் மீது அமர வேண்டும். நான்காவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வின் போது இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டும். இவ்வாறு பின்வரும் நபிமொழி கூறுகின்றது.

முஹம்மது பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது இடது காலை (குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.

நூல்: புகாரி (828)

கடைசி ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடமையான தொழுகை இரண்டாக இருந்தாலும் மூன்றாக இருந்தாலும் நான்காக இருந்தாலும் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இதே செய்தி வேறு வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இறுதி ரக்அத்தில் இவ்வாறு தான் அமர வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

தாரமியில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் எந்த ரக்அத்தில் ஸலாம் சொல்லப்படுமோ அந்த ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்னு ஹிப்பானில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில், தொழுகையின் முடிவாக அமையும் ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே இரண்டு ரக்அத் கொண்ட ஃபஜர் தொழுகையானாலும் மூன்று ரக்அத் கொண்ட மஃக்ரிப் தொழுகையானாலும் இறுதி ரக்அத்தில் இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டும்.

? இஹ்வான் எனப்படுபவர்கள் இசையைக் கேட்பது இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்று கூறுகின்றார்கள். இதுபற்றி விளக்கவும்.

ராஸி

இஸ்லாம் இசை தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்குச் சரியான பதிலையும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்.

இசை கேட்பது கூடும் என்று இஹ்வான்கள் என்போரும் நமது நாட்டில் அவர்களைப் பின்பற்றுவோரும் கூறுகிறார்கள். இவர்களைப் பற்றி ஒரு விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை எனக் கூறும் இவர்கள் இதற்கேற்ப நடப்பதில்லை. இஸ்லாத்தை மற்ற மக்களிடம் போதனை செய்வதையோ தங்கள் வாழ்வில் முழுமையான இஸ்லாத்தைக் கடைபிடிப்பதையோ இவர்களிடம் பார்க்க முடியாது.

இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரைப் பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஆட்சி கிடைக்காவிட்டாலும் ஆட்சி செய்பவன் காபிராக இருந்தாலும் இணை வைப்பாளனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ஒரு எம்.பி.யாகவாவது வர வேண்டும். அல்லது ஒரு எம்.எல்.ஏ. சீட்டாவது வாங்க வேண்டும். இதை விடவும் கீழ் நிலையில் உள்ள பதவி கிடைத்தாலும் சரி. இதுவே இவர்களின் நோக்கம்.

அரசியல் பதவி ஒன்றே இவர்களின் இலக்கு. இதற்காக இவர்கள் எப்படிப்பட்ட கேவலமான காரியத்தையும் செய்வார்கள். வணக்கம் சொல்வார்கள். விநாயகர் சதூர்த்தி, பொங்கல், தீபாவளி ஆகிய மாற்றுமதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறி பேனர்கள் வைப்பார்கள். தேசிய கொடியை வணங்குவார்கள்.

இந்த அடிப்படையில் தான் இவர்கள் இசை கூடும் என்று கூறிவருகிறார்கள். இசை பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் பார்க்கவில்லை. இதுவெல்லாம் இவர்களுக்குத் தேவையுமில்லை. இதுபற்றிப் பேச அழைத்தால் விவாதிக்க முன்வரமாட்டார்கள்.

இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இசை பயன்படுகின்றது என்ற ஒரு காரணத்துக்காகவே இசை கூடும் என்று கூறுகின்றனர். சுய நலனுக்காக மார்க்கத்தில் விளையாடும் இவர்களை சமுதாயம் அடையாளம் காண வேண்டும்.