ஏகத்துவம் – பிப்ரவரி 2008

தலையங்கம்

இறையில்லங்களைப் பாழாக்கும் அநியாயக்காரர்கள்

“நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள்,  தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது”

இப்படியொரு அறிவிப்பு தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரம் துவங்கியதும் 90 சதவிகிதம் பள்ளிவாசல்களின் பலகைகளில் எழுதப்பட்டன. இன்று வரை அந்த அறிவிப்புக்கள் அழிக்கப்படவில்லை.

தவ்ஹீது வளர்ச்சி கண்ட ஊர்களைத் தவிர்த்து ஏனைய ஊர்களில், அதிலும் குறிப்பாக, இந்தக் கொள்கை புதிதாக முளைக்கின்ற ஊர்களில் கொள்கைச் சகோதரர்கள் இன்றும் பள்ளிக்குச் சென்று தொழ முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பல தவ்ஹீது பள்ளிவாசல்கள் எழுந்தமைக்குப் பல்வேறு அடிப்படைக் காரணங்கள் உண்டு. அவற்றில் முதல் அடிப்படைக் காரணமே பள்ளி வாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டது தான். இந்தத் தடை ஏன் விதிக்கப்பட்டது?

 1. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்.
 2. இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுதல். ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஆமீன் சொல்வதற்குத் தடையில்லை. ஹனபி பள்ளிகளில் ஆமீன் சொல்வதற்குத் தடை!
 3. அத்தஹிய்யாத்தின் போது ஆட்காட்டி விரலை அசைத்தல். ஷாபி, ஹனபி என்ற வேறுபாடின்றி எல்லாப் பள்ளிகளிலும் நபி (ஸல்) அவர்களின் இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்குக் கடுமையான தடை!
 4. தலையைத் திறந்து தொழுவதற்குத் தடை!
 5. பல பள்ளிகளில் உள்ள இமாம்கள் இறைவனுக்கு இணை வைப்பவர்கள்; தொழுகை முடிந்தவுடன் பக்கத்திலிருக்கும் கப்ருக்குச் சென்று அதில் அடங்கியிருப்பவரிடம் உதவி தேடக் கூடியவர்கள். அதனால் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ முடியாமல், ஜமாஅத்தில் சேராமல் ஜமாஅத் முடிந்ததும் தனி ஜமாஅத் நடத்தினால் அடி உதை! இரண்டாம் ஜமாஅத் நடத்தாமல் தனியாகத் தொழுதாலும் அடி விழாமல் இருக்காது.

இப்படிப் பல்வேறு காரணங்களால் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை! மீறித் தொழுதால் அடி, உதை! இந்த அநியாயங்களை எதிர்த்துக் காவல் துறையில் புகார்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீதிமன்ற வழக்குகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஏகத்துவ வாதிகள் மிகக் கடுமையாகக் குரல் கொடுத்தனர்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

இந்த வசனம் மொழியப்படாத மேடைகள் கிடையாது என்ற அளவுக்கு பள்ளிவாசல் பிரவேசத் தடையை எதிர்த்துப் பிரச்சாரம் நடைபெற்றது. இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இவை தான் தவ்ஹீதுவாதிகள் தனிப் பள்ளிவாசல் காண்பதற்குக் காரணமாக அமைந்தன.

தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான கொடுமைகள், பள்ளியில் தொழுவதற்குத் தடை என்பதுடன் நின்று விடவில்லை.

திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்தல், ஜனாஸா எடுப்பதற்கு சந்தூக்கு தர மறுத்தல், கப்ருஸ்தானில் இடம் தர மறுத்தல் போன்ற கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டன. இந்தக் கொடுமைகளின் காரணத்தால் தனிப் பள்ளி காண்பது தவிர்க்க முடியாததானது.

இப்படிப் பல்வேறு தியாகங்களை  பின்னணியாகக் கொண்டு தான் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் தமிழகத்தில் அமைந்தன.

விழுங்க நினைக்கும் வக்ஃபு வாரியம்

இந்தப் பள்ளிவாசல்களைத் தான் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிவாசல்கள் வக்ஃப் வாரியத்தின் கையில் போனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

முதல் விளைவு, நிர்வாக மாற்றம். தான் நினைத்த ஆட்களை, இமாம்களை, முஅத்தின்களை நுழைக்க முயற்சிக்கும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

திருக்குர்ஆன் கூறும் இந்த அஸ்திவாரம் தகர்த்தெறியப்படும்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:17, 18

இந்த வசனம் இடுகின்ற கட்டளைக்கு மாற்றமானவர்கள் நிர்வாகத்தின் உள்ளே வருவார்கள்.

இணை வைக்கும் இமாம், முஅத்தின்கள் பணிகளில் நியமிக்கப்படுவார்கள். அப்படியே ஒவ்வொரு தீமையாகக் குடியேறி, அல்லாஹ்வை மட்டும் தனித்து அழைப்பதற்காகக் கட்டப்பட்ட தவ்ஹீது பள்ளிவாசல்கள் குராபிகளின் கூடாரமாக மாறும். அல்லாஹ் காப்பானாக!

அம்பை பள்ளிவாசலில் அரங்கேறிய அநியாயம்

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் நடந்த நிகழ்வைப் படிப்பினையாகக் கொண்டே சொல்கிறோம். மஸ்ஜிதுர்ரஹ்மான் வக்ஃப் வாரியத்தின் கீழ் வராத ஒரு பள்ளிவாசலாகும். ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்காக, அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பள்ளிவாசல்.

இங்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் இல்லாமல் பள்ளி நிர்வாகத்தைக் கையில் எடுக்க வக்ஃப் வாரியம் முயன்றது. இவ்வாறு கையில் எடுக்க முயலும் போதே இமாமையும், முஅத்தினையும் நியமனம் செய்து கையுடன் கூட்டியே வந்தது.

அதிகார பலத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வாரியத்தின் கீழ் வராத ஒரு பள்ளிவாசலை, அதன் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கையில் எடுக்க வந்த வக்ஃப் வாரியம், தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் நிர்வாகத்தைக் கையிலெடுக்க அதிக நேரமா ஆகும்?

இவ்வாறு கூறுவதால் வக்ஃப் வாரியத்திற்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைக்க வேண்டாம். இதற்கான எந்த அதிகாரமும் இல்லாமலேயே அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. (இந்த நடவடிக்கை செல்லாது என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது வேறு விஷயம்.) இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் எந்தப் பள்ளியிலும் எப்போதும் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் என்ற ஊரில் ஒரு பள்ளிவாசலின் நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நிர்வாகத்தை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை; தேர்தலில் முறைகேடுகளையும் தில்லுமுல்லு களையும் செய்து அதே நிர்வாகம் பொறுப்புக்கு வந்து விட்டதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்த நிர்வாகம் மீண்டும் பொறுப்புக்கு வந்தது எப்படி? வக்ஃப் வாரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதை வழங்கி மீண்டும் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து அவ்வூர் மக்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

தவ்ஹீது பள்ளிவாசல் வக்ஃப் நிர்வாகத்தின் கீழ் போனால், அந்தப் பள்ளி நிர்வாகத்தில் வக்ஃப் வாரியம் எப்படியெல்லாம் தன் வேலையைக் காட்டும் என்பதற்கும், எத்தகைய ஊழல் பேர்வழிகள் பொறுப்புக்கு வருவார்கள் என்பதற்கும் இது சிறந்த உதாரணமாகும்.

இப்போது சொல்லுங்கள்! வக்ஃப் வாரியத்தின் கையில் தவ்ஹீது பள்ளிவாசல்கள் சென்றால் என்ன கதிக்கு உள்ளாகும் என்று?

ஏகத்துவப் பிரச்சாரம் முழுமையாக அழிக்கப்படும். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

அதிகார போதை தலைக்கேறியதால் தட்டழிந்து தடுமாறி ஏகத்துவப் பிரச்சாரத்தையே அழிக்க முனைந்துள்ளனர் இந்த நவீன ஃபிர்அவ்ன்கள்.

இந்தப் பதவியில் இவர்கள் இன்று இருக்கலாம்; நாளைக்கே தூக்கி எறியப்படலாம். பக்கா கப்ரு வணங்கிகள் இந்தப் பதவிக்கு வந்து விட்டால் அப்போது தவ்ஹீது பள்ளிவாசல்களின் கதியை நினைத்துப் பாருங்கள்.

அல்லாஹ்வின் ஆலயத்தைக் காக்க தவ்ஹீத் ஜமாஅத் எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளது என்பதையும், இதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாகாது என்பதையும் தமிழக அரசுக்குச் சொல்லி வைக்கிறோம்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். வக்ஃப் என்பது வேறு! வக்ஃப் வாரியம் என்பது வேறு!

அல்லாஹ்வுக்காக ஒன்றை அர்ப்பணித்து விடுவது வஃக்ப் எனப்படும்.

ஆனால் வக்ஃப் வாரியம் என்பது முஸ்லிமல்லாத அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு தான். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டவை என்று சொல்ல முடியாது. அரசு நினைத்தால் அந்தச் சொத்துக்களை எதற்கும் தாரை வார்க்க முடியும்.

இன்று பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குத்தகை, தரை வாடகை என்ற பெயர்களில் ஒரு அற்பத் தொகையைக் கொடுத்து விட்டு கோடிக்கணக்கான சொத்துக்களை அனுபவிக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப் பட்ட இந்த வக்ஃப் சொத்துக்களில் இன்று கோயில்கள் கூட அமைந்துள்ளதை நம்மால் காட்ட முடியும்.

இதற்கெல்லாம் காரணம் அவை வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தான். அந்தச் சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்படாமல் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்தினரால், ஊர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தால் இது போன்ற ஆக்கிரமிப்புக்கு அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.

வாரியம் என்று வருகின்ற போது அதிலுள்ள ஊழல் பெருச்சாளிகள் தங்களுக்கு வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அல்லாஹ்வின் சொத்துக்களைத் தாரை வார்க்கத் துணிகின்றனர். இது கற்பனையல்ல! எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

இதே வரிசையில் தற்போது தவ்ஹீது பள்ளிவாசல்களையும் அபகரித்து, அவற்றைப் பாழாக்க முனைவோருக்கு அல்லாஹ் விடுக்கும் இந்த எச்சரிக்கையை மீண்டும் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

———————————————————————————————————————————————–

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

அவன் தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 3:7

(ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பு)

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்று கின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் “இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையேஎனக் கூறுவார்கள். அறிவுடை யோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 3:7

(நமது மொழி பெயர்ப்பு)

மேற்கண்ட வசனத்தில், “இரு கருத்தைத் தருகின்ற வசனங்கள்” என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில், “முதஷாபிஹாத்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள “முதஷாபிஹாத்” என்றால் எவை என வரையறுப்பதிலும், “முதஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியுமா? முடியாதா? என்பதிலும் அறிஞர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.

இந்தக் கருத்து வேறுபாடு இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல! தப்ஸீர் என்ற பெயரில் பலரும் பலவிதமாக எழுதி வைத்த பின்னர் தான் இந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. மாறாக நபித்தோழர்கள் காலத்திலேயே இது பற்றி அபிப்ராய பேதங்கள் இருந்து வந்துள்ளன.

ஒரு வசனத்திற்குப் பொருள் செய்வதில் ஏன் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்ற வேண்டும்? அதுவும் நேர் முரணான இரு கருத்துக்கள் எவ்வாறு தோன்றின? ஒரு சாரார் “முடியும்” என்று கூறுவதற்கும், மற்றொரு சாரார் “முடியாது” என்று கூறுவதற்கும் அந்த வசனத்தையே ஆதாரமாகக் கொள்ளக் காரணம் என்ன? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு சாராரும் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும், அவற்றில் உள்ள நிறை, குறைகளையும் அலசுவோம். இறுதியாக “முதஷாபிஹ்” என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்வோம்.

காரணம் என்ன?

அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட (முஹ்கம்) வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில்    இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்.

இது திருக்குர்ஆனின் 3:7 வசனத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியைப் புரிந்து கொள்வதில், விளங்குவதில் மார்க்க அறிஞர்கள் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. ஆனால் இவ்வசனத்தில் அடுத்த பகுதியை விளங்குவதில் மொழி பெயர்ப்பதில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கொள்கிறார்கள்.

“லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா”

இந்தப் பகுதியில் தான் அறிஞர்கள் இரு வேறு கருத்துகளைக் கூறுகின்றனர். இந்த சொற்றொடரைக் கீழ்க்கண்ட வகையில் இரு பாகங்களாகப் பிரிக்கலாம்.

 1. லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு
 2. வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பி7னா

அதே தொடரை வேறு விதமாகவும் பிரிக்க இயலும்.

 1. லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி
 2. யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா

இந்த இரண்டு விதமான பிரிவினைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனமாகக் கொண்டு, இதனால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

முதல் சாரார், லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு என்பதை ஒரு பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: “முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

“வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா” என்பதை இரண்டாவது பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: கல்வியில் உறுதியுடையோர், “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்துமே எங்கள் இறைவனிடமிருந்து (வந்தவை) தான்” என்று கூறுவார்கள்.

அதாவது, முதஷாபிஹ் என்ற வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். மற்றவர்கள் யாரும் விளங்க முடியாது என்பது முதல் சாராரின் கருத்து.

இரண்டாவது சாரார், “லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி” என்பதை ஒரு பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும் கல்வியில் உறுதியுடையவர்களையும் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

“யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா” என்பதை இரண்டாவது பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்துமே எங்கள் இறைவனிடமிருந்து (வந்தவை) தான்” என்று கூறுவார்கள்.

அதாவது முதஷாபிஹ் என்ற வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிவான்; கல்வியில் உறுதி மிக்கவர்களும் அறிவார்கள்.  அறிவு குறைந்தவர்களால் இதை விளங்க முடியாது என்று இந்த சாராரின் பார்வை செல்கின்றது.

இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாட்டை நாம் காண்கிறோம். இப்படி எதிரும் புதிருமான இரண்டு மொழி பெயர்ப்புகள் ஏற்படும் போது, இரண்டையுமே சரி என்று கூற முடியாது. இரண்டையும் தவறு என்றும் கூற முடியாது. இரண்டில் ஏதோ ஒன்று சரியாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறாக இருக்க வேண்டும். இதை எவ்வாறு முடிவு செய்வது?

தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட திருக்குர்ஆனின் இந்த வசனத்திற்கு யார் செய்த பொருள் சரி? என்று முடிவு செய்திட அரபு மொழி இலக்கணத்தை நாம் ஆராய்ந்தால், இந்த இரண்டு அர்த்தங்களும் இலக்கணத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இலக்கணத்தில் எந்த விதியையும் இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளுமே மீறி விடவில்லை.

இன்னும் சொல்வதானால் அரபு இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதால் தான் இந்த சர்ச்சையே தோன்றியது. சரியான பொருளைப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இலக்கண விதிகள் சில சமயங்களில் இப்படிக் காலை வாரி விடுவதுண்டு. அரபு மொழி உட்பட எந்த மொழியும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

அரபியர்கள் பேசிக் கொண்ட மொழி வழக்குப்படி, இலக்கண விதிகளின் படி இரண்டு அர்த்தங்களில் எதையும் தவறெனத் தள்ளி விட முடியாது. அதே நேரத்தில் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுமே சரி என்றும் கூற முடியாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் இது பற்றி என்ன கூறுகின்றன? நபி (ஸல்) அவர்கள் இது பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதை எவ்வாறு புரிந்து வைத்திருந்தார்கள்? என்பதை ஆராய்ந்தால் 3:7 வசனத்திற்கு எவ்வாறு மொழி பெயர்ப்பது சரியானது என அறிய முடியும்.

முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறக் கூடியவர்கள் தங்கள் கருத்தை நியாயப்படுத்திட பல ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள். (ஆனால் முதஷாபிஹ் என்றால் என்ன? என்பதில் அவர்களுக்குள்ளேயே ஆயிரம் விளக்கங்கள்; ஒரு ஆதாரமும் இல்லாமல் அவரவர் விருப்பத்திற்கேற்ப “முதஷாபிஹ்” வசனங்கள் எவை என்பதை வரையறுத்துக் கொண்டிருக்கின்றனர்.)

“முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வும் அறிவான்; கல்வியறிவுடையோரும் அறிவர்” என்ற கருத்துடையோர் முதல் சாராரின் அத்தனை வாதங்களுக்கும் முறையாகப் பதில் தருவதுடன், முதஷாபிஹ் வசனங்கள் விளங்கக் கூடியவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர். இரண்டு தரப்பினரின் ஆதாரங்களையும் முதலில் பட்டியலிட்டுத் தருகிறோம். அவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்யும் எவருமே நமது மொழிபெயர்ப்பு தான் சரி என்பதை விளங்க முடியும்.

முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியும் என்று கூறுவோரும் “முதஷாபிஹ் எவை?” என நிர்ணயிப்பதில் ஆளுக்கொரு கருத்தைக் கூறுகிறார்கள். சூபிஸக் கொள்கையுடையோர் முதஷாபிஹ் என்பதற்கு, தங்களுக்குச் சாதகமாக இலக்கணம் வகுத்துக் கொள்கிறார்கள். தக்லீத்வாதிகளும், அவர்களுக்குத் துணை போகக் கூடியவர்களும் அதற்கு இன்னொரு இலக்கணம் வகுக்கிறார்கள். எனவே முதஷாபிஹ் எவை என்பதை இறுதியில் நாம் தக்க சான்றுகளுடன் விளக்கும் போது இதைப் புரிந்து கொள்ளலாம்.

முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்; மற்ற எவருமே அறிய முடியாது என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை முதலில் காண்போம். இவர்களை “முதல் சாரார்” என்றும், எதிர்க் கருத்து கொண்டவர்களை “இரண்டாவது சாரார்” என்றும் குறிப்பிடுவோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

ஹனபி மத்ஹபில் ஈஸா நபி?

அபூமுஹம்மத்

மத்ஹபுகள் மீது எவ்வாறு வெறியூட்டப்படுகிறது என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் காண்போம்.

சுருங்கச் சொல்வதென்றால் நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான்.

நூல்: துர்ருல் முக்தார்,

பாகம்: 1, பக்கம்: 52

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாக அரபிக் கல்லூரிகளில் போதிக்கப் படும் துர்ருல் முக்தாரில் இந்தத் தத்துவம் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம் அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?

நபி (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?

குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும் தவறே இருக்காது என்று அர்த்தமா? அப்படியானால் அல்லாஹ்வைப் போன்று அபூஹனீஃபாவும் தவறுக்கு அப்பாற்பட்டவர் என்று நிலை நாட்டப் போகிறார்களா?

உலகில் உள்ள எல்லா நூற்களையும் விட திருக்குர்ஆன் சிறப்பாக இருப்பது போன்று, உலகிலுள்ள அனைத்து மனிதர்களிலும் அபூஹனீஃபா சிறந்தவர் என்று அர்த்தமா?

அப்படியானால் நபித்தோழர்களை விட, நான்கு கலீபாக்களை விட இவர் சிறந்தவர் என்று கூறப் போகிறார்களா? எந்தப் பொருள் கொண்டாலும் அது அபத்தமாகவே உள்ளது.

நபியவர்கள் தமது நபித்துவத்தை நிரூபிக்க குர்ஆனைச் சமர்ப்பித்தார்கள். அது போல் அபூஹனீஃபாவையும் சமர்ப்பித்து தமது நுபுவ்வத்தை நபியவர்கள் நிரூபித்தார்களா? இப்படியும் அர்த்தம் கொள்ள முடியாது.

எனவே இமாம்கள் மீது பக்தி வெறியூட்டுவதற்காக இவ்வாறு உளறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.

அவரது மாணவர்களிடமும், அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

நூல்: துர்ருல் முக்தார்,

பாகம்: 1, பக்கம்: 52

அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையிலும், அவனது தூதரின் போதனையின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை ஓரணியில் திரட்டக்கூடிய ஈஸா (அலை) அவர்கள் – மத்ஹபுகளை எல்லாம் தகர்த்தெறியக் கூடிய ஈஸா (அலை) அவர்கள் – அபூஹனீஃபாவைப் பின்பற்றுவார்கள் என்று எழுத இவர்களின் கை கூசவில்லை.

“நான் அபூஹனீஃபாவின் பரக்கத்தை நாடி அவரது கப்ருக்குச் செல்வேன். எனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அவரது கப்ருக்கருகே நின்று அல்லாஹ்விடம் கேட்பேன். விரைந்து அந்தத் தேவை நிறைவேற்றப்படும்” என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.

துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51

அல்லாஹ்வைத் தொழும் போது கூட கப்ரை நோக்கித் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கப்ரைத் தொழுவதாகப் பிறருக்குத் தோன்றாமல் இருக்க நபியவர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் இங்கு அபூஹனீபாவின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும் என்று கூறி இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுவதுடன் இணை வைப்பதற்கான வாசலும் திறந்து விடப்படுகின்றது.

ஷாஃபி, அபூஹனீஃபா ஆகிய இரண்டு இமாம்களுமே இது போன்ற சமாதி வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருந்தும் அவர்கள் பெயரிலேயே இவ்வாறு இட்டுக் கட்டுவதற்கு இவர்களுக்கு வெட்கமில்லை.

ஷாஃபி அவர்கள் அபூஹனீஃபாவின் கப்ருக்கு அருகே சுப்ஹு தொழுதார்கள். அப்போது குனூத் ஓதவில்லை. ஏன் என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “இந்தக் கப்ரில் இருப்பவரை மதிப்பதற்காக” என்று விடையளித்தார்கள். இவ்வாறே பிஸ்மியைச் சப்தமின்றி ஓதினார்கள்.

துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழி என்பது ஷாஃபி இமாம் அவர்களின் நம்பிக்கை. அது போல் பிஸ்மியை சப்தமாக ஓதுவது நபிவழி என்று அவர்கள் நம்பினார்கள்.

ஷாஃபி அவர்கள் எதை நபிவழி என்று நம்பினார்களோ அதை ஒரு மனிதருக்காக விட்டு விட்டார்கள் என்றால் நபியை விட அபூஹனீஃபாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகின்றது.

உண்மையான இமாம்கள் ஒருக்காலும், உயிரே போனாலும் நபிவழியை எவருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஷாஃபி இமாமை சந்தர்ப்பவாதியாகவும், கொள்கைப் பிடிப்பில்லாதவராகவும் காட்டி, தங்கள் இமாமுக்கு மதிப்பை உயர்த்தத் திட்டமிடுகின்றார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அபூஹனீஃபா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றவராக இருக்கும் போது அவருக்கு இத்தகைய சிறப்புகள் எப்படி இல்லாமல் போகும்?

(அதே நூல், அதே பக்கம்)

நீங்கள் உஹது மலையளவு தர்மம் செய்தாலும் என் தோழர்கள் கையளவு செய்த தர்மத்தின் கூலியை அடைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மற்ற நபித்தோழர்களின் நிலையையே எவரும் அடைய முடியாது எனும் போது, உம்மத்திலேயே மிகச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்களின் நிலையை அபூஹனீஃபா அடைய முடியுமா?

இவர்களின் இந்தக் கூற்று, மத்ஹப் வெறியைத் தவிர வேறொன்றுமில்லை.

———————————————————————————————————————————————–

அபூபக்ர் (ரலி) வரலாறு – தொடர் 36

காலித் கண்ட அன்பார் வெற்றி

எம். ஷம்சுல்லுஹா

ஓராண்டு காலமாக வீரத் தளபதி காலித், ஹீராவில் முடங்கிக் கிடந்தாலும் முற்றிலுமாக முன்னேற்றம் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கில்லை. யானைப் பசிக்கு சோளப் பொறி என்பது போல், வெற்றித் தளபதி காலிதின் வீரப் பசிக்கு அன்பார், அய்னுத் தமர் போன்ற நகரங்கள் வெற்றியாகக் கிடைத்தன.

தூமத்துல் ஜன்தலை முற்றுகையிட்டிருக்கும் மற்றொரு படைத் தளபதி இயாள் வராத வரை மதாயினுக்குச் செல்லக் கூடாது என்பது ஆட்சித் தலைவர் அபூபக்ரின் கட்டளை!

அதன்படி, இயாள் வருகைக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் தான் அன்பார், அய்னுத் தமர் ஆகியவற்றை காலித் கைப்பற்றுகிறார்.

அன்பார் என்பது ஹீராவுக்கு மிக அருகில் உள்ள நகரமாகும். அன்பார் என்றால் வித்துக்கள் என்று பொருள். கோதுமை தானிய மணிகள், வித்துக்கள் இங்கு வந்து குவிவதால் இதற்கு இந்தப் பெயர் வரலாயிற்று!

பாரசீகப் பேரரசின் கீழ் உள்ள இந்நகரத்திலும் இதற்கு அருகில் உள்ள அய்னுத் தமரிலும் பாரசீகப் படைகள் நிலை கொண்டிருந்தன. ஹீராவைத் தன் கைவசப்படுத்திக் கொண்ட இஸ்லாமியப் படைகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே பாரசீகப் படைகள் இந்நகரங்களில் மையம் கொண்டிருந்தன.

பாரசீகப் பேரரசு இராக்கிலும், ஹீராவிலும் விழுந்து விட்டது. இனி விழ வேண்டிய இடம் மதாயின் ஆகும். மதாயினுக்கு இயாள் வராமல் செல்ல முடியாது. எனவே ஹீராவுக்கு அருகிலுள்ள பாரசீகப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த அன்பாரையும், அய்னுத் தமரையும் கைப்பற்ற காலித் ஆயத்தமானார்.

அதன்படி ஹீராவில் கஅகாஃ பின் அம்ரை ஆட்சியாளராக நியமித்து விட்டு, அன்பாரை நோக்கித் தமது அணி வகுப்பைத் தொடர்ந்தார். படையின் முன்னணியில் அக்ரஃ பின் ஹாபிஸை தலைவராக நியமித்திருந்தார்.

அன்பாரை நோக்கி அணிவகுப்பு

பாரசீகப் பேரரசின் ஆட்சிக் கோட்டைகளை ஒவ்வொன்றாகத் தமது கைவசப்படுத்தி வரும் இஸ்லாமியப் பேரரசின் மாபெரும் வெற்றி வீரர் காலித் படையெடுத்து வருகின்ற போது, “வந்தார்கள்; வென்றார்கள்” என்று வரலாறு சொல்லி விடக் கூடாது என்பதை உணர்ந்த அன்பார் நகரம் முழுமையாக விழித்துக் கொண்டது.

அசத்தலாக அடியெடுத்து அனைத்தையும் காலித் கைப்பற்றி விட்டார் என்ற கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அன்பார் நகரம், தனது கோட்டைகளைச் சுற்றிலும் ஆழமான, அகலமான அகழியை தோண்டி வைத்திருந்தது.

 பல்வேறு படைக் களங்களைக் கண்ட காலிதிடம் இது ஒன்றும் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தவில்லை.

அன்பார் நகரம் விடுத்த இந்த மிரட்டலில் காலித் ஆடிப் போகவில்லை. அசைந்து கொடுக்கவும் இல்லை.

பொதுவாகப் போர்க்களங்களில் காலங்கடத்தும் யுக்தி எதுவும் காலிதுக்கு அறவே பிடிக்காது. அறப்போர்க் களத்தில் இந்தத் தளபதிக்குப் பிடிக்காத வேலை மட்டுமல்ல, பிடிக்காத வார்த்தையும் “தாமதம்” என்பது தான்.

இந்த அகழிகள் எல்லாம் போரை காலங்கடத்தச் செய்யும் ஏமாற்று யுக்திகள் என்பதை நன்கு புரிந்து கொண்ட காலித் அடுத்தகட்ட அவசர போர்ப் பணிகளில் ஈடுபடலானார்.

அதன் முதற்கட்டமாக, கோட்டை மீது நின்று கொண்டிருக்கும் எதிரிப் படையினரின் வியூகத்தைக் கொஞ்சம் மதிப்பிடலானார்.

அனுபவமும், ஆற்றலும் நிறைந்த அச்சமறியாத காலித், எதிரிப் படையினரை மதிப்பிட்ட பின் சொன்ன வார்த்தை, “இவர்கள் போர் அறிவில்லாத பேர்வழிகள்” என்பது தான்.

அன்பார் மக்களின் அலறல் குரல்

காலித் குறிப்பிட்டது போலவே பாரசீக ஆளுநர் ஷீர்ஸாதிடம் அன்பார் நகரத்து அரபியர் எழுப்பிய அலறல்கள் இதோ:

அன்பாருக்கு அதிகாலையில் ஓர் ஆபத்து வந்து விட்டது. வந்து வளைத்து நிற்கும் படையோ வலிமையானது. அதை வெறித்துப் பார்க்கும் நமது படையோ பலவீனமானது.

இது அன்பார் மக்கள் எழுப்பிய அபயக் குரல்.

இதைக் கேட்ட ஆளுநர் ஷீர்ஸாத், “இவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். முன் கூட்டியே இவர்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்ட போது அதுவே தான் இறுதி முடிவாகவும் அமையும். காலித் மட்டும் வரம்பு தாண்டவில்லையெனில் அவரிடம் நான் உடன்பாடு காணவும், ஒப்பந்தம் செய்யவும் தயங்க மாட்டேன்” என்று அன்பார் அரபியர்களுக்குப் பாரசீக ஆளுநர் பதில் கூறிக் கொண்டிருந்தார்.

இது கோட்டை மேல் நடந்த கோழைத்தனமான கூத்தாகும்.

கண்களைப் பறித்த அம்புக் கணைகள்

அதே சமயம் கோட்டையின் மதில் சுவர்களைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த முஸ்லிம் படை வீரர்களிடம் காலித் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்.

கோட்டை மேல் நிற்கும் இவர்களைக் குறியாகக் கொண்டு உங்கள் அம்பு மழை பொழியட்டும் என்று உத்தரவு போட்டார். அவ்வளவு தான்!

கன மழையாய்ப் பாய்ந்த அம்பு மழையில் சுமார் ஆயிரம் பேர் பார்வையிழந்தனர். இதனால் அன்பார் போருக்கு, “கண்கள் போர்” என்ற பெயர் வழங்கப்படுகின்றது.

“அன்பார் மக்களின் கண்களைப் பறிக்கும் அம்புகள்” என்று அன்பார் அரபியர் கூக்குரல் போட்டனர். அவர்களின் அலறலைக் கேட்ட ஆளுநர் ஷீர்ஸாத், காலிதுக்கு சமாதானத் தூது அனுப்பினார்.

அமைதித் தூதர் கொண்டு வந்த ஒப்பந்த விண்ணப்பத்தில் காலிதின் நிபந்தனைகள் காணப்படவில்லை. அதனால் காலித் அதைப் புறக்கணித்தார். போர்க்களப் பணியில் மும்முரம் காட்டினார். அகழியைச் சுற்றி ஓர் அவசரச் சுற்றை மேற்கொள்கின்றார்.

ஒட்டகப் பாலம்

அகழியின் ஒரு நெருக்கமான பகுதியைப் பார்க்கின்றார். மின்னல் போல் ஒரு வியூகம் அவருக்குப் பளிச்சிட்டது. அதன்படி அவர் தன் படையில் உள்ள பலவீனமான ஒட்டகங்களை அறுத்துப் பலியிடச் செய்கின்றார். வந்த மக்களுக்கு உணவு படைப்பதற்கு அல்ல! அகலமான அந்தக் குழிகளில் இந்த ஒட்டகங்களைப் போட்டு நிரப்பி, ஒட்டகப் பாலம் ஒன்றை அமைத்து ஒரு வரலாறு படைப்பதற்காக!

அது போலவே அந்தப் பள்ளம் நிரம்பியது. ஒட்டகப் பாலமும் அமைந்தது. அவ்வளவு தான்!

காலிதின் படையினர் கோட்டையின் வாசல்களைத் தகர்த்தெறிந்தனர்; கோட்டையைக் கைப்பற்றினர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாகக் கொலைகள், கைதுப் படலங்கள் ஏதுமின்றி நகரத்திற்குள் காலித் நுழைய எத்தனிக்கும் வேளையில் பாரசீக ஆளுநர் ஷீர்ஸாத், காலிதிடம் சரணடைகின்றார். காலிதின் அத்தனை கட்டளைகளுக்கும் கட்டுப்படுகின்றார். ஆனால் அவர் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.

வெறுமனே உள்ள ஒரு குதிரைப் படையினருடன் தன்னை, தான் கோரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று காலித் அவரை விடுதலை செய்கிறார்.

அதன்படி அன்பார் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி அது இஸ்லாமியப் பேரரசின் கீழ் வந்தது. ஸப்ரிகான் பின் பத்ர் என்பாரை அதன் ஆளுநராக நியமித்து விட்டு, அடுத்த இலக்கான அய்னுத் தமரை நோக்கி காலித் தன் படைகளைக் கொண்டு செல்கின்றார்.

அடுத்த இலக்கு அய்னுத்தமர்

அன்பார் இஸ்லாமியப் பேரரசின் கீழ் வந்ததும் காலிதின் கவனம் அய்னுத் தமரை நோக்கித் திரும்பியது. இதற்கிடையே, அன்பாருக்கு அருகிலுள்ள பவாஸீஜ், கல்வாதி ஆகிய நகரங்கள் காலிதிடம் உடன்படிக்கை செய்து கொண்டன.

இப்போது காலித், அய்னுத் தமரை நோக்கித் தமது படையை நடத்திச் சென்றார். அய்னுத் தமரிலும் பாரசீக ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் ஆளுநர் மிஹ்ரான் பின் பஹ்ராம் ஜுபீன் ஆவார். இவரது ஆட்சிக்குட்பட்ட இந்நாட்டைச் சுற்றிலும் ஹுதைல், நமிர், தக்லப், இயாத் ஆகிய அரபுக் கிளையினரும் மற்றும் சில அரபுக் கிளையினரும் வாழ்ந்து வந்தனர். அக்கிளையாருக்குக் கூட்டுத் தலைவர் அக்கத் பின் அபீ அக்கத் என்பவராவார்.

காலித், அய்னுத் தமரை நோக்கி வருகிறார் என்று தெரிந்ததும் அக்கத் பாரசீக ஆளுநர் மிஹ்ரானிடம், “அரபியர் தான் அரபியருடன் நன்கு போரிடத் தெரிந்தவர்கள். நாங்களும் அரபியர்; காலித் படையினரும் அரபியர். நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் போரிட வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார். இதை மிஹ்ரானும் சரி கண்டார்.

“நீங்கள் சொல்வது சரி தான். அந்நியர்களாகிய நாங்கள் அந்நியரிடம் போர் புரிவதில் எந்த அளவுக்குத் திறமைசாலிகளோ அது போல் அரபியர்கள், அரபியரிடம் போர் புரிவதில் திறமைசாலிகள்” என்று கிண்டலாகக் கூறினார்.

இதை உண்மையென நம்பிய மிஹ்ரானின் பாரசீக சகாக்கள், “இந்த நாயிடம் நீங்கள் ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? நாம் என்ன காலிதை எதிர்த்துப் போர்     செய்ய முடியாதவர்களா? கையாலாகாதவர்களா?” என்று கேட்டனர்.

அதற்கு மிஹ்ரான், “பாரசீகத் தோழர்களே! நான் உங்களுக்குப் பாதகமான காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். உங்களுக்கு நன்மையான காரியத்தையே செய்திருக்கிறேன். உங்கள் ஆட்சிகளை அழித்தொழிக்கின்ற ஒருவர் (காலித்) உங்களுக்கு எதிராகக் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களுடைய வாள் முனையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார். அவரை விட்டும் இந்த அரபியர்களை வைத்து உங்களை நான் காக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். இந்த அரபியர் காலிதை வென்று விட்டால் உங்களுக்கு லாபம் தானே! அதே சமயம் இந்தப் போர் தோல்வியாக மாறினால் இவர்கள் (அக்கத்தின் அரபுக் குலத்தவர்கள்) முற்றிலும் பலவீனமாகின்ற வரை நீங்கள் போர்க் களத்திற்கு வரத் தேவையில்லை. அவர்கள் முற்றிலும் பலவீனமானதும் நாம் காலித் அணியினரை புதுத் தெம்புடன் போரிட்டு, தோற்கடித்துப் புறமுதுகு காணச் செய்யலாம் அல்லவா?” என்று தன் சகாக்களிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட மிஹ்ரானின் சகாக்கள், “உண்மையில் இது ஒரு ராஜ தந்திர நடவடிக்கை” என்று பாராட்டினர். “அப்படியே நடந்து கொள்வோம்” என்று அவனது ஆலோசனைக்கு இணங்கினர். அதன்படி அவனும் அவனது சகாக்களும் அய்னுத் தமரிலேயே தங்கி விட்டனர்.

பதறி ஓடிய பாரசீக ஆளுநர்

அரபுக் குலங்களின் தலைவரான அக்கத், தன் படையுடன் “கர்க்” எனும் பகுதிக்குச் செல்லும் பாதையில் காலிதை எதிர் கொண்டார். இரு அணியினரும் எதிரெதிரே அணி வகுத்தனர்.

காலித் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அணி வகுத்த மாத்திரத்திலேயே அக்கத்தை காலித் கைது செய்து விட்டார். எனினும் கொல்லாமல் விட்டு விட்டார். அவர் கைதான மறு வினாடியே அவருடன் வந்த அரபுக் கிளையினர் அத்தனை பேரும் தலைதெறிக்க ஓட்டமெடுத்தனர். முஸ்லிம்கள் அவர்களை துரத்திச் சென்று பலரைக் கைது செய்தனர்.

அக்கத்தின் படை சுக்கு நூறாக நொறுங்கி, திக்குத் தெரியாமல் ஓடுகின்றது என்ற தகவல் கிடைத்தவுடன் பாரசீக ஆளுநர், தலை தப்பியது புண்ணியம் என்று தன் பரிவாரத்துடன் கோட்டையை விட்டுத் தப்பி ஓடி விட்டார்.

அலறியடித்து ஓடி வந்த அக்கத் (அரபிய) கூட்டத்தினர் கோட்டைக்குள் நுழைந்து கொண்டனர். கோட்டைக்கு வந்த காலித், படைத் தளபதியாகச் செயல்பட்ட அக்கத், அவருக்குப் படைத் துணையாக வந்த அம்ர் பின் ஸயிக் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தார்.

கோட்டையில் இருந்த போராளிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கோட்டைக்கு உள்ளே ஒரு மாதா கோயில் இருந்தது. பூட்டிக் கிடந்த அந்தக் கோயிலின் கதவுகளை உடைத்துச் சென்றதும் அதனுள் நாற்பது இளைஞர்கள் ஒளிந்திருப்பதைக் கண்டார். “நீங்கள் யார்?” என்று கேட்டதற்கு, “நாங்கள் மார்க்கக் கல்வி பயில்வதற்காக நேர்ந்து விடப்பட்ட அடைக்கலங்கள்; அமானிதங்கள்” என்று கூறினர். (தாங்கள் போராளிகள் அல்ல, பாதிரிகள்; எனவே எங்களைக் கொல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்). அவர்களை காலித் பிடித்து முஸ்லிம்களிடம் பங்கீடு செய்து விட்டார்.

இவர்களில் ஹும்ரான் என்பவர் உஸ்மான் (ரலி)யிடம் வழங்கப்பட்டார். ஸீரீன் என்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி)யிடம் வழங்கப்பட்டார். இவரது மகன் தான் முஹம்மது பின் ஸீரீன் ஆவார். இப்னு ஸீரீன் என்று அழைக்கப்படும் இவர் தபஃ தாபியீன்களில் உள்ளவர். இவர் நம்பகமான, சிறந்த ஹதீஸ் அறிவிப்பாளர் ஆவார். புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களில் உயரிய இடத்தைப் பிடித்திருக்கின்றார். இப்படிப்பட்ட பிற்காலப் பிரபலங்களும் இந்தப் போர்க் கைதிகளின் சந்ததியினராக வந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தவே வந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இவர்கள் ஜனநாயக முறையை முழுக்க முழுக்க எதிர்க்கின்றனர். இந்தக் கொள்கையைப் பற்றிய முழு விளக்கத்தையும், இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும்.

இஸ்மாயீல், துபை

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே வந்தார்கள் என்று கூறுவது, இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.

தாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? “எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்என்று தமது நபியிடம் கூறினர். “உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார். “எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?” என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லைஎன்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 2:246, 247

நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள்.

அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன்என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது “இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக் குரியவராகவும் இருக்கிறீர்என்றார். “இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:55

எனவே, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

என்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

அல்குர்ஆன் 21:25

எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.

அல்குர்ஆன் 5:99

தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?

அல்குர்ஆன் 16:35

இதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது. இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

இவ்வளவு தெளிவாக திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார் என்று தான் அர்த்தம்.

நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை. குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, “இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள்” என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

(பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள்      தான் (பொறுமையின்றி) அவரசப் படுகிறீர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)

நூல்: புகாரி 3612, 3852

நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, “இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள்” என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன்  இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.

எனவே நம்முடைய கடமை, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளுக்குப் பொறுமை காப்பது தான். அவ்வாறு நாம் பொறுமையுடன் இருக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியைக் கூட இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று ஒரு போதும் நபியவர்கள் சொன்னதும் இல்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை.

எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.

சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள்.

முதலில் ஒற்றுமை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  குர்ஆன், ஹதீஸை ஏற்றுக் கொண்ட மக்களைத் தான் அல்லாஹ் ஒற்றுமையாக இருக்கச் சொல்கிறான். கொள்கையை விட்டுவிட்டு அதனால் ஏற்படுகின்ற ஒற்றுமை ஒரு போதும் இஸ்லாம் கூறும் ஒற்றுமையாக இருக்க முடியாது.

ஓர் ஊரிலுள்ள அத்தனை பேரும் வரதட்சணை வாங்குவதை ஆதரிக்கிறார்கள். ஒருவர் மட்டும் எதிர்க்கிறார் என்றால் அதனால் ஒற்றுமை குலையத் தான் செய்யும்.  ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஒருவரும் வரதட்சணை வாங்குவதை ஆதரிக்கத் தான் வேண்டும் என்று கூற முடியுமா?

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த போது ஒற்றுமையைக் குலைப்பதாகத் தான் முஷ்ரிக்குகள் கூறினார்கள். அப்படிப்பட்ட ஒற்றுமை தேவையில்லை என்பதால் தான் எந்த ஒரு சுன்னத்தையும் விடாத, அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒரு சமுதாயத்தை – ஒற்றுமையான சமுதாயத்தை நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள். இவர்கள் வாதிடுவது போல் குர்ஆன், ஹதீஸைப் புறக்கணித்து விட்டு, அதனால் ஏற்படும் ஒற்றுமையை அல்லாஹ்வோ, அவன் தூதரோ காட்டித் தரவில்லை.

இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

இந்த இஸ்லாமிய ஆட்சி கோஷம் போடுவோர் ஜனநாயகத்தையும் எதிர்ப்பதாகக் கூறினார்கள். ஆனால் தற்போது அதெல்லாம் மலையேறி விட்டது. இந்தக் கோஷ்டியினரின் அரசியல் இப்போது சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது. பாபர் மசூதி மீட்புக்காக நாம் போராட்டம் நடத்தும் போது கூட கிண்டல் செய்த இவர்கள், இன்று சேது சமுத்திரத்    திட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கருணாநிதியின் புகைப்படத்தைப் போட்டு டிஜிட்டல் பேனர் வைக்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளையும் அழைத்துப் பொதுக் கூட்டம் நடத்துகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது மட்டும் தான் பாக்கி! இது தான் இஸ்லாமிய ஆட்சி கோஷ்டியினரின் தற்போதைய நிலையாகும்.

? புதுமனை புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா?

ஆறாம்பண்ணை அப்துல்காதர், அபுதாபி

புதுமனை புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனை புகுவிழா என்ற பெயரில் பால் காய்ச்சுதல், மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் சுப்ஹ் தொழுகையை புது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றும் வழக்கமும் உள்ளது. இதுவும் பித்அத்தாகும். இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆனால் அதே சமயம் ஒருவர் புது வீடு கட்டி, அதில் குடிபுகும் போது விருந்தளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் “இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்என்றார். அதற்கு மற்றொருவர் “கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறதுஎன்று கூறினார். பின்னர் அவர்கள் “உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!என்றார். மற்றொருவர் “கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறதுஎன்றார். பின்னர் அவர்கள் “இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார் விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லைஎன்று கூறினர்.

பின்னர் அவர்கள் “இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!என்று சொல்ல மற்றொருவர் “கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறதுஎன்றார். அதைத் தொடர்ந்து “அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 7281

புது வீடு கட்டி, அதில் விருந்துக்கு அழைப்பதை வானவர்கள் உதாரணமாகக் காட்டியதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தான் வானவர்கள் உதாரணமாகக் காட்டுவார்கள் என்ற அடிப்படையில் புது வீடு குடி புகும் போது விருந்துக்கு அழைக்கலாம். எனினும் இது அனுமதிக்கப்பட்ட செயல் தானே தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒருவர் புது வீடு புகும் போது விருந்தளிக்கவில்லை என்றால் அவர் இறைவனிடம் குற்றவாளி ஆகி விட மாட்டார்.

அதிலும் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் அவர் கடனை அடைப்பதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற விருந்துகளை அளிக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்யும் போது “யா அல்லாஹ்! உன்னிடம் பாவத்தை விட்டும், கடனை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்”  என்று தொழுகையில் கூறுவார்கள். (இதையறிந்த) ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு  காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மனிதன் கடன் படும் போது பொய் பேசுகின்றான், வாக்குறுதி அளித்து அதற்கு மாறு செய்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி  789

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 3498

இந்த ஹதீஸ்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். கடன் வாங்கி அல்லது கடன் இருக்கும் நிலையில் விருந்து வைப்பது நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்வதாகும்.

? உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று ஜாமிவுஸ்ஸகீர் என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதா?

முஹம்மது ஸலீம், ஈரோடு

ஜாமிவுஸ்ஸகீர் என்பது ஒரு ஹதீஸ் நூலல்ல. பல்வேறு ஹதீஸ் நூற்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் தான். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அல்அதபுல் முஃப்ரத் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

? பள்ளிவாசல் மிம்பர் படிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்று ஆகஸ்ட் 07 இதழில் எழுதியுள்ளீர்கள். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறும் போது ஆமீன், ஆமீன், ஆமீன் என்று மூன்று படிகளில் கூறி அதற்கு விளக்கமும் அளித்தார்கள். எனவே மிம்பர் படிகள் அமைக்கும் போது மூன்று தான் அமைக்க வேண்டும் என்று தெரிகிறதே?

ஷமீமுர் ரஹ்மான், திருமுல்லை வாசல்

மிம்பர் என்பது இமாம் உரையாற்றுவதற்காக அமைக்கப்படும் மேடை தான். இது குறிப்பிட்ட வடிவத்தில், இத்தனை படிகளுடன் அமைந்திருக்க வேண்டும் என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.

நபித்தோழர் ஒருவர் மிம்பர் செய்து கொடுப்பதற்கு முன்பு வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு மரப் பலகையின் மீது சாய்ந்தவாறு அல்லது ஊன்றியவாறு நின்று தான் உரையாற்றியுள்ளார்கள். நபித்தோழர் கேட்ட பின்னர், விரும்பினால் செய்து தாருங்கள் என்று கேட்டு, அதன் மீது நின்று உரையாற்றியுள்ளார்கள்.

அதிலும் இன்ன வடிவத்தில் தான் மிம்பர் அமைந்திருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதிலிருந்து ஒரு உயரமான மேடை என்பது தான் முக்கியமே தவிர, மிம்பர் என்பதன் வடிவத்திலோ, படிகளின் எண்ணிக்கையிலோ எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை விளங்கலாம்.

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸிலும் மிம்பர் படிகளின் எண்ணிக்கை குறித்து உத்தரவோ அல்லது மூன்று படிகள் அமைப்பது நபிவழி என்றோ குறிப்பிடப்படவில்லை. மூன்று படிகளின் மீது ஏறும் போதும் நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து மூன்று தான் அமைக்க வேண்டும் என்று சட்டம் எடுக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் கூரைகளால் அமைக்கப்பட்டது என்பதால் கூரைகளில் தான் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்று கூற முடியுமா? இது போன்று தான் மிம்பர் விஷயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————–

                தொடர் 2         

மஹ்ஷர் மன்றத்தில் உயர் தூதரின் உலமாக்களுக்கு ஏதிரான புகார்

அபூஜாஸிர்

“அபூபக்ர் தமது இல்லத்திற்கு உள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும்.  ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றைப் பகிரங்கமாகச் செய்வதோ கூடாது”

நாம் சுட்டிக் காட்டியிருக்கும் புகாரி ஹதீஸில் இந்த வாசகம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அபூபக்ர் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்; ஆனால் அவர் அதைப் பகிரங்கமாகச் செய்யக் கூடாது. அதாவது அவர் குர்ஆனை ஓதினால் சப்தமாக ஓதக் கூடாது. இது தான் மக்கா காஃபிர்களின் நிபந்தனை!

இந்த நிபந்தனை எதைக் காட்டுகிறது? அவர்கள் குர்ஆன் மீது கொண்டுள்ள கடுமையான வெறுப்பைக் காட்டுகிறது? இந்தக் குர்ஆன் இப்படி வெகுவாக மக்களை ஈர்த்து விடுகிறதே என்பது தான் அவர்களின் பெருங்கவலை!

குர்ஆன் வசனம் என்றதுமே அவர்களது குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது. அதனால் தான் ஒட்டு மொத்த வெறுப்பையும் இந்தக் குர்ஆன் மீது கொட்டித் தீர்த்தனர்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் குர்ஆன் என்ற இந்தத் தூதுச் செய்தியைக் கொண்டு வந்த துவக்க காலம் முதலே இணை கற்பிப்பவர்களின் வெறுப்பலைகள், வேதனைக் குமுறல்கள் வெளிப்பட ஆரம்பித்தன.

இவ்வாறு அவர்கள் காட்டிய வெறுப்பலைகள் கீழ்க்கண்ட வகையில் பிரதிபலித்தது.

 1. கொலை முயற்சி

இது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறும் வரை நடந்து கொண்டிருந்தது.

“இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?” என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “(மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதைக் கடுமையாக நெறித்ததைப் பார்த்தேன். அப்போது அபூ பக்ர் (ரலி) வந்து நபி (ஸல்) அவர்களை விட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது “என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முயற்சிக்)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா இப்னு ஸுபைர்(ரலி)

நூல்: புகாரி 3678

குர்ஆன் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பை இப்படிக் குமுறிக் கொப்பளித்தனர். அந்த வெறுப்பின் காரணமாகத் தான், குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்களை வேரறுக்க முனைந்தனர்.

 1. பிரச்சாரத்திற்குத் தடை

“இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 41:26

அபூதர் (ரலி) கூறினார்கள்:

நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தேன். அப்போது ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. எனவே நான் என் சகோதரரிடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா!” என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி உள்ளது?” என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளையிடவும், தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்” என்றார். “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டு வரவில்லை” என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு தோல் பையையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.

அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன்.

அப்போது அலீ (ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். “ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே!” என்று கேட்டார். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் வீட்டிற்கு வாருங்கள்” என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதைப் பற்றியும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால் ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான் இல்லை என்றேன். உடனே அலீ (ரலி) “என்னுடன் நடங்கள்” என்று சொல்லி விட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள் அவ்வாறே செய்கிறேன் என்று கூறினார்கள்.

“இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார் என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். அவர் என்னிடம் போதிய பதிலைக் கொண்டு வரவில்லை. எனவே நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “நீங்கள் சரியான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில் (என்னுடன் வரும் போது) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின் என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவர் ஓரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்” என்று கூறினார்கள்.

இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை நோக்கி வா!” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லி விட்டு இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர்.

நான், “குறைஷிக் குலத்தாரே! வணக்கத்திற்குரியவன்அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னேன். உடனே அவர்கள், “இந்த மதம் மாறியை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப் பட்டேன்.

அப்போது அப்பாஸ் (ரலி) என்னை அடையாளம் கண்டு கொண்டு, என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தை ஒட்டித் தானே உள்ளது!” என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகி விட்டார்கள்.

மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறியை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ் (ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். அப்பாஸ் அவர்கள் நேற்று சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி 3522, 3861

நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது கொள்கையை ஏற்று அதை எடுத்துச் சொன்ன மக்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைத் தெரிந்து கொள்ள    இந்த ஒரு ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 1. சமூக பகிஷ்காரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய வந்த கட்டத்தில், மக்கள் வெள்ளத்தில் மிதந்த அந்தத் தலைவர் மலரும் நினைவுகளாக வெளியிட்ட ஒரு வரலாற்றுப் பின்னணி.

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும் பொழுது “நாம் நாளை பனு கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் “குப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்‘ என்று சத்தியம் செய்த இடம்” என்றார்கள்.

”நபி (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்” என குறைஷிக் குலத்தாரும் கினானா குலத்தாரும் பனு ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிபுக்கு எதிராகச் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரீ கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1590

நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இப்படி ஒரு சமூகப் பகிஷ்காரத்தை குறைஷிகள் செய்தனர். இதுவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் மீது காட்டிய வெறுப்பின் வெளிப்பாடு தான்!

 1. பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை செய்வதைப் பற்றி        இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். பின்வரும் வசனங்களில் இந்தக் குற்றத் தன்மையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி!

அல்குர்ஆன் 96:11-16

அன்று மக்கத்து காஃபிர்கள் இதில் வரம்பு கடந்து சென்றனர். இதன் உச்சக்கட்டமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது ஒட்டகத்தின் குடலைக் கொண்டு வந்து போட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்த போது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து “இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து, முஹம்மத் ஸஜ்தா செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?” என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டு விட்டான். அதை நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறை மறுப்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி “யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக” என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில் “அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்” என அவர்களும் நம்பியிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 240

 1. விமர்சனக் கணைகள்

கத்திகள், கண்ட துண்டமாக வெட்டும் வாட்கள், குறி வைத்துத் தாக்கும் ஏவுகணைகள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்களைக் காலியாக்கி விடும் இயந்திரத் துப்பாக்கிகள் இவை அத்தனையையும் விட வலிமையான ஆயுதம் ஒன்று உண்டு. அந்த ஆயுதம் மனிதனின் மேனியைத் தொடாது. அவனது உள்ளத்தை நோக்கிப் பாயும் கொடியதொரு ஆயுதம். ஆம்! அது தான் விமர்சனக் கணைகள்!

தன் மேனியில் பட்ட காயங்களைக் கூட ஒரு மனிதன் தாங்கிக் கொள்வான். ஆனால் விமர்சனக் கணைகளை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.

இந்த உளவியல் போர் ஆயுதம் ஒருவரை உடைந்து நொறுங்கி உருக்குலைந்து போகச் செய்து விடும். அந்தப் பணியை குறைஷிகள் மிக நன்றாகச் செய்தனர்.

தூதுச் செய்தியை எடுத்துச் சொல்லிய நபி (ஸல்) அவர்களை பைத்தியக்காரர் என்றனர்.

“அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

(முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். “இவர் பைத்தியக் காரர்” என்றும் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 68:51

குறிகாரர், கவிஞர் என்று கூறி தாக்குதல் தொடுத்தனர்.

உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர். “(இவர் ஒரு) கவிஞர். இவரது அழிவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறுகிறார்களா?

அல்குர்ஆன் 52:29, 30

இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள். இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

அல்குர்ஆன் 69:41, 42

சூனியக்காரர் என்று பட்டம் சூட்டி பாடுபடுத்தினர்.

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். “இவர் பொய்யர்; சூனியக்காரர்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.

அல்குர்ஆன் 38:4

இப்படிப்பட்ட இந்த விமர்சனக் கணைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தை மிக ஆழமாகப் பாதித்தது. இவை எல்லாவற்றையும் விட அவர்களை மகாப் பொய்யர் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் கூறியது நபியவர்களை வாட்டியெடுத்தது. நபி (ஸல்) அவர்களின் ஆழ் மனது வேதனையை அல்லாஹ்வின் வார்த்தைகளே அளந்து காட்டுகின்றன.

அவர்கள் கூறுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.

அல்குர்ஆன் 15:97

“இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே! அல்லாஹ்வே எல்லா பொருளுக்கும் பொறுப்பாளன்.

அல்குர்ஆன் 11:12

அல்லாஹ்விடமிருந்து வந்த செய்திகளை மக்களிடம் சமர்ப்பிக்காமல் விட்டு விடுதல் என்பது நபி (ஸல்) அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று! அதைக் கூடச் செய்து விடுவார்களோ என்ற அளவுக்கு அவர்களை இந்த விமர்சனங்கள் பாதித்தன. அதற்குத் தான் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் ஆறுதல் கூறுகின்றான்.

 1. நாட்டை விட்டுத் துரத்துதல்

நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூதுச் செய்தியைக் கொண்டு வந்த மாத்திரத்திலேயே அவர்கள் மீதும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் மீதும் கொலை முயற்சியும், கொலை வெறித் தாக்குதலும் தொடங்கி விட்டது. பிரச்சாரத்திற்குத் தடை விதித்தல், சமூகப் பகிஷ்காரம், பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை, விமர்சனக் கணைகள் என பல்வேறு கொடுமைகளையும், சித்ரவதை களையும் கட்டவிழ்த்து விட்டனர். அதன் பின்னர் அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷி நாடாளுமன்றத்தில் ஒரு இறுதித் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

அல்குர்ஆன் 8:30

இந்த வசனத்தில் குறிப்பிடுவது போன்று நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்கு அல்லது நாடு கடத்துவற்கு, குறைஷிகள் செய்த முயற்சிகளைப் பின்வரும் ஹதீஸ்களில் தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குக் காலை அல்லது மாலை நேரங்களில் வருபவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் மகள்கள் ஆயிஷா (ரலி), அஸ்மா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதோ வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்மிடம் வழக்கமாக வரும் நேரத்தில் வராமல் இந்தப் பகல் நேரத்தில் தமது தலையை மூடியவர்களாக வந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.

நண்பகலில் சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தது வீட்டிலிருந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அபூபக்ர் (ரலி) அவர்கள், “புதிதாக ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த நேரத்தில் நம்மிடம் வந்திருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.

நபியவர்கள் வந்தவுடன் வீட்டில் நுழைந்து விடவில்லை. வாசலில் நின்று அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் வீட்டிற்குள் சென்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் “உங்களுடன் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வீட்டில் என்னுடன் இருப்பவர்கள் உங்களது குடும்பத்தினர் தான். எனது புதல்வியரான அஸ்மா, ஆயிஷா ஆகியோர் தான் இங்கு உள்ளனர்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நானும் உங்களுடன் புறப்பட்டு வர விரும்புகிறேன்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகின்றேன்” என்று பதில் சொன்னார்கள். (ஆதாரம்: புகாரீ 2138, 3905)

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்கான பயண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க முஷ்ரிக்குகள் நபி (ஸல்) அவர்களை எப்படியேனும் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தனர். அன்றைய தினம் மக்கா நகரில் குறைஷிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டன. சிலர் நபி (ஸல்) அவர்களைக் கைது செய்து இதே இடத்தில் கட்டிப் போட வேண்டும் என்று கூறினார்கள். சிலர் நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். இன்னும் சில கொடியவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொலை  செய்து விட வேண்டும் என்று கொக்கரித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களை எங்கே கண்டாலும் கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லாத், உஸ்ஸா ஆகிய சிலைகளுக்கு முன்னால் போய் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.

(ஆதாரம்: அஹ்மத் 2626)

கொலை முயற்சி, பிரச்சாரத் தடை, பள்ளிவாசலில் தொழுகைக்குத் தடை, சமூகப் பகிஷ்காரம், விமர்சனங்கள், நாடு கடத்துதல் ஆகிய இவை அனைத்தும் குர்ஆனுக்கு எதிராக மக்கத்துக் காஃபிர்கள் காட்டிய வெறுப்பின் காரணமாகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்களாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

முன்னோர்களைப் பின்பற்றுதல்

அபூயாஸிர்

மனிதனை நேர்வழியிலிருந்து அப்புறப்படுத்துவதிலும், மிகப் பெரிய அறிவாளியைக் கூட அறிவீனனாக ஆக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது, முன்னோர்கள் மீது கொள்ளும் குருட்டு பக்தியாகும்.

நமது வாழ்க்கையில் மிகப் பெரிய விஞ்ஞானிகளை, சட்ட மேதைகளை, நீதிபதிகளை, ஆராய்ச்சியாளர்களைக் காண்கிறோம். அவர்களது திறமையையும், ஆராயும் திறனையும் கண்டு மலைக்கிறோம். மற்றவர்களை பிரமிக்கச் செய்யும் அளவுக்கு அறிவுடைய இந்த மேதைகள் தாங்களே உருவாக்கிய ஒரு கல்லுக்கு முன்னால் கைகட்டி நிற்பதையும், தங்களைப் போன்ற அல்லது தங்களை விடவும் அறிவு குறைந்த மத குருமார்களின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுவதையும் காண்கிறோம்.

இவர்களது அறிவும், திறனும் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கே போயின? அற்பமான விஷயங்களில் கூட மயிர் பிளக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், அணுவையும் பிளந்து அதிலுள்ள ஆற்றலை வெளிக் கொண்டு வருபவர்கள் இந்த விஷயங்களில் கண் மூடிக் கொள்வது ஏன்? தமது முன்னோர் மீது கொண்ட குருட்டு பக்தியைத் தவிர வேறு காரணமில்லை. இவர்களின் முன்னோர்கள் இவ்வாறு நடந்து கொண்டதைக் கண்டார்கள். இவ்வாறு நடக்க வேண்டும் என்று முன்னோர்களால் பயிற்றுவிக்கப் பட்டார்கள். இதனால் தான் அபாரமான அறிவாற்றலை இந்த விஷயங்களில் இவர்கள் பயன்படுத்துவதில்லை.

“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

அல்குர்ஆன் 2:170

மனிதனது அறிவுக்கும், சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர்.

முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, “எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்” எனக் கூறுகின்றனர்.

சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், “எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?” என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது.

இவர்களின் இந்தப் போக்குக்கு, முன்னோர்கள் மீது குருட்டு பக்தி கொள்வதற்குக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை.

ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து  சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்ப, இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?

தங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது என்றால், ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்தது என்று கிறித்தவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும்? உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நம்பியதை எப்படித் தவறென்று கூற முடியும்?

நமது முன்னோர்கள் தாம் தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கூட மார்க்கம் என்று நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அதே போன்று அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும்.

“அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தால் கூட அவர்களைத் தான் பின்பற்றப் போகிறார்களா?” என்று இறைவன் கேட்பதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.

முன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால் – அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியாக இருந்தால் – தாராளமாக அதை ஏற்கலாம். தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர். உலக விஷயங்களில் யாருமே முன்னோர்களை பின்பற்றுவதில்லை.

முன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டடங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதில்லை என்பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு அதிக நன்மை தரக் கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.

உலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு எதுவும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம், அவ்வளவு தான்!

ஆனால் மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 33:66, 67

முன்னோர்கள், பெரியார்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு, உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களில் அதிகக் கவனம் அவசியம் என்பதை உணர வேண்டாமா?

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால், முன்னோர்களின் வழிமுறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காஃபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.

அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் போதனை களையும் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல்படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!

————————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு  தொடர்  7

பருவ வயதை அடைந்தவருக்கு பால் புகட்டுதல்

ஸாலிம் சம்பவத்தில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்காக, “ஸஹ்லா (ரலி) அவர்கள் ஸாலிமுக்குப் பாலைக் கறந்து கொடுத்திருக்கலாம்” என்ற வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள். இந்த விளக்கமும் இந்தச் சம்பவத்தோடு பல விதங்களில் பொருந்தவில்லை.

ஹதீஸில், “அர்ளியீஹி” (அவருக்குப் பால் புகட்டு) என்ற அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது. மார்பகத்தில் வாய் வைத்துக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை ஏராளமான ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் தாயும் தன் குழந்தைக்கு நேரடியாகப் பால் கொடுப்பாலே தவிர கறந்து கொடுக்க மாட்டாள். கறந்து கொடுப்பதற்கான அவசியமும் வராது. கறந்து கொடுப்பதற்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு ஒரு ஹதீஸையாவது அல்லது குறைந்தபட்சம் அகராதியிலாவது ஆதாரம் காட்ட வேண்டும்.

நேரடியாகக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து கொண்டே இல்லாத அர்த்தத்தைக் கூறி, இந்தச் செய்தியில் உள்ள குறைகளை மறைக்கப் பார்க்கிறார்கள்.

கறந்து கொடுத்தார்கள் என்ற விளக்கத்தைக் கூறும் அறிஞர் ஒருவர், எந்த ஹதீஸையும் இதற்கு ஆதாரமாகக் காட்டாமல் “கறந்து கொடுத்திருக்கக் கூடும்” என்று யூகமாகத் தான் கூறியுள்ளார்.

காலி (இயாள்) கூறுகிறார்: ஸஹ்லா அவர்கள் ஸாலிமுக்குப் பாலைக் கறந்து கொடுத்திருக்கக் கூடும். ஸாலிம், ஸஹ்லாவின் மார்பகத்தைத் தொடாமலும் அவ்விருவரின் தோல் உரசாமலும் ஸாலிம் அப்பாலைப் பருகியிருக்கக் கூடும்.

மார்க்கத்தில் யூகத்தை ஆதாரமாக வைப்பது பெரும் தவறாகும்.

பால்குடி உறவு ஏற்படுவதற்கு எப்படி இரண்டு வருட காலம் நிபந்தனையாக இருக்கிறதோ, அது போல் தாயின் மார்பகத்தில் குழந்தை வாய் வைத்துக் குடிப்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை. கறந்து கொடுத்தார்கள் என்ற வாதத்தை எழுப்புபவர்கள் கூட, கறந்து கொடுத்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஸாலிமுடைய சம்பவத்தில் மட்டும் பல்டி அடித்து விடுகிறார்கள்.

இந்த ஒரு சம்பவத்தைச் சரி காண்பதற்காக, குர்ஆன் வசனத்திற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் எதிரான பல கருத்தைக் கூற வேண்டிய மோசமான நிலையை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். மார்பகத்திலே உறிஞ்சிக் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது, பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: திர்மிதி 1072

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஒரு தடவையோ, இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்பட்டு விடாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 2869

இதே சம்பவம் தப்ரானீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் வாசக அமைப்பு மார்பகத்தில் பால் புகட்டும் கருத்தை ஒளிவு மறைவின்றி தெளிவாக உணர்த்துகிறது.

நான் (முழுமையான) ஆடையை அணிந்திருக்காத போது அபூ ஹுதைஃபாவின் பொறுப்பில் இருந்த ஸாலிம் என்னிடத்தில் வந்து செல்பவராக இருந்தார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு அவர்கள் “(உங்களிடத்தில்) அவரை உறிஞ்சிப் பால் குடிக்க வையுங்கள்; அவருக்கு நீங்கள் பால்குடி அன்னையாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்லா (ரலி)

நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத், 7178, பாகம்: 7, பக்கம்: 168

மஸ்ஸத் என்ற சொல் நேரடியாக உறிஞ்சிப் பால் குடிப்பதற்குச் சொல்லப்படும். இந்த வார்த்தை தான் இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

ஸஹ்லா (ரலி) அவர்களிடத்தில் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது ஸஹ்லா (ரலி) அவர்கள், “அவர் பெரிய மனிதராக இருக்க நான் எப்படி அவருக்குப் பால் புகட்டுவேன்?” என்று ஆட்சேபணை செய்ததாகவும், இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்ததாகவும் முஸ்லிம் 2878வது செய்தியில் பதிவாகியுள்ளது. “தாடி உள்ளவராக சாலிம் உள்ளாரே!” என்று கேட்டதாக முஸ்லிம் 2882வது செய்தியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள், “பெரிய மனிதராக உள்ளாரே? தாடியுள்ளவராக இருக்கிறாரே? நான் எப்படிப் பால் புகட்டுவேன்?” என்று ஏன் கேள்வி கேட்க வேண்டும்? கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் ஸஹ்லா (ரலி) அவர்கள் இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த ஹதீஸின் முன் பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களைக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்னு அபீமுலைக்கா என்பவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் நபர்களில் ஒருவர். இவருக்கு இந்த ஹதீஸை காசிம் என்பவர் அறிவித்துள்ளார். இப்னு அபீமுலைக்கா இந்த ஹதீஸை அறிவிக்கப் பயந்து ஒரு வருடம் வரை இந்த ஹதீஸை யாருக்கும் சொல்லாமலேயே இருந்துள்ளார்.

பிறகு இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த காசிமைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய போது காசிம் அவர்கள் இப்னு அபீமுலைக்காவிடம், “பயப்படாதே! நான் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதாக மக்களிடம் அறிவிப்புச் செய்!” என்று கூறினார்கள். இந்தத் தகவல் முஸ்லிமில் 2880வது எண்ணில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கே இந்தச் செய்தியைச் சொல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. கறந்து கொடுப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசினால் இப்னு அபீமுலைக்கா ஏன் இதை அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டும்?

ஸாலிமுக்கு நேரடியாகப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மக்களுக்குச் சொன்னால் மக்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் இதைச் சொல்ல விடாமல் அவரைத் தடுத்துள்ளது.

சுயநலம்

இந்தச் செய்தியைச் சரி காண்பவர்கள் தங்களுடைய மனைவிமார்களிடம் ஓர் அன்னிய ஆண் இது போன்று பாலருந்துவதை விரும்புவார்களா? அதைச் செயல்படுத்துவார்களா? என்று நாம் சவால் விடுகிறோம். அபூ ஹுதைஃபா இதற்குச் சம்மதித்தார் என்று வாய் கூசாமல் இவர்கள் சொல்லி விடுகிறார்கள். ஆனால் இச்சட்டத்தைத் தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த இவர்களின் உள்ளம் எள்ளளவும் இடம் கொடுப்பதில்லை.

ஆகுமான ஒன்றைச் செய்யவும், செய்யாமல் இருக்கவும் அனுமதி இருக்கும் போது, செய்வீர்களா? என்று கேட்பது அறிவீனம் என்று பேசி தப்பித்துச் செல்லப் பார்க்கிறார்கள்.

ஆகுமான விஷயத்தைச் செய்யவும் செய்யாமல் இருக்கவும் அனுமதி இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. நம்முடைய கேள்வி எதுவென்றால், மார்க்கத்தில் ஒரு விஷயம் ஆகுமானதாக இருந்தால் அதைச் செய்யக் கூடியவர்களும் இருப்பார்கள். அதைச் செய்யாதவர்களும் இருப்பார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் எவராலும் ஏற்று நடத்த முடியாத வகையில் கண்டிப்பாக இருக்காது.

ஸாலிமுக்குக் கூறப்பட்ட சட்டம் அனுமதிக்கப்பட்ட காரியம் என்று இவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் இதைச் செயல்படுத்துபவர்கள் யாராவது உள்ளார்களா? அனுமதிக்கப்பட்ட இந்தச் காரியம் ஏன் யாராலும் செயல்படுத்த முடியாத வகையில் அமைந்துள்ளது? என்பதே நமது கேள்வி.

உங்களுடைய உள்ளமும், மக்கள் அனைவரின் உள்ளமும் ஏற்றுக் கொள்ளாத இந்தச் சட்டம் எப்படி அனுமதிக்கப்பட்ட காரியமாக இருக்கும்? ஹதீஸை ஏற்றுக் கொள்வதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் அளவுகோலை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

கருத்துப் பிழைகள்

 1. வாலிப வயதை அடைந்த ஒரு அன்னிய ஆணுக்கு, அன்னியப் பெண்ணைப் பால் புகட்டும்படி கூறுவது அசிங்கமான காரியம். இவ்வாறு பலருக்குச் சொல்லாமல் ஒருவருக்கு மட்டும் சொன்னாலும் அசிங்கம் தான். கெட்ட வார்த்தைகளைக் கூட பேசாத, அதிக வெட்கத்தைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இந்தக் காரியத்தைச் செய்யும் படி சொல்லவே மாட்டார்கள்.
 2. ஸாலிம் தனது வீட்டிற்குள் வருவதைக் கூட விரும்பாத அபூ ஹுதைஃபா அவர்கள் தன்னுடைய மனைவியின் மார்பகத்தில் ஸாலிம் பால் குடிப்பதை எப்படி ஒத்துக் கொள்வார்? சிறிய விஷயத்திற்காக அதிருப்தியடைந்தவர் இவ்வளவு பாரதூரமான காரியத்திற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டார்.
 3. ஸாலிம் வருவதை ஸஹ்லா அவர்களும் விரும்பவில்லை என்று ஒரு செய்தி கூறுகிறது. அவ்வாறிருக்கும் போது ஸாலிமுக்குப் பால் கொடுக்கச் சொல்வது அப்பெண்ணுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தாது.
 4. ஸாலிம் (ரலி) அவர்களுக்கு ஹிந்த் என்ற பெண்ணை மணமுடித்திருந்தார்கள். தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணிடத்தில் பாலருந்துவதை ஒரு பெண் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.
 5. நம்முடைய சொந்தத் தாயாக இருந்தால் கூட சிறுவனாக இருக்கும் போது நடந்து கொள்வதைப் போல், குறிப்பிட்ட வயது வந்தவுடன் நடந்து கொள்வதில்லை; பழகும் முறையை மாற்றிக் கொள்கிறோம். ஸஹ்லா (ரலி) அவர்களை ஸாலிம் தாயாகக் கருதியிருந்தால் கூட அவர்களின் மார்பகத்தில் பாலருந்த ஸாலிம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.
 6. தன்னிடத்தில் யார் யாரெல்லாம் வர வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்களோ அந்த ஆண்களை தன்னுடைய சகோதர, சகோதரிகளின் மகள்களிடத்தில் அனுப்பி பால் குடிக்க வைத்து வர வைத்தார்கள் என்று பச்சையாக ஆயிஷா (ரலி) அவர்களின் மீதும் ஏனைய நபித்தோழியர்கள் மீதும் பழி சுமத்தும் இச்செய்தி இஸ்லாத்திற்கு உகந்ததா? ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதர, சகோதரியின் மகள்கள் கணக்கின்றி ஆயிஷா (ரலி) அவர்கள் அனுப்புகின்ற ஆண்களுக்கெல்லாம் பால் புகட்டினார்கள் என்று ஒத்துக் கொள்பவர்கள் இப்பத்தினிப் பெண்களின் மீது அவதூறு சொன்ன குற்றத்திற்கு ஆளாவார்கள்.
 7. அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் ஸாலிமை வளர்ப்புப் பிள்ளையாக எடுத்துக் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை வளர்ப்புப் பிள்ளையாகக் கவனித்து வந்தார்கள். முஹம்மதுடைய மகன் ஸைத் என்று சொல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களை நேசித்தார்கள். ஸைத் (ரலி) அவர்களின் மேலுள்ள பிரியத்தினால் ஸைத் (ரலி) அவர்களின் மகன் உஸாமா அவர்களையும் அதிகமாக நேசித்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்கு ஹிப்பு ரசூலில்லாஹ் (அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமானவர்) என்ற பெயர் கூட மக்களால் சூட்டப்பட்டது. பெரியவருக்குப் பால் புகட்டி தாய் மகன் உறவை ஏற்படுத்துவது மார்க்கத்தில் ஆகுமான காரியமாக இருந்தால் முதலில் நபி (ஸல்) அவர்கள், ஸைத் (ரலி) அவர்களை தன்னுடைய மனைவிமார்களில் யாரிடத்திலாவது அனுப்பி பால் குடிக்க வைத்து இரத்த பந்த உறவை ஏற்படுத்தி இருப்பார்கள். இதிலிருந்து ஸாலிமுடைய சம்பவம் உண்மையல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 8. பெரியவருக்குப் பால் புகட்டினாலும் பால்குடி உறவு ஏற்படும் என்றால் கணவன்மார்கள் கூட தங்கள் மனைவியிடத்தில் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள். இதனால் மனைவியிடத்தில் பால் குடித்த கணவன், மனைவிக்கு மகனாக மாறி விடுவான் என்ற அறிவீன தீர்ப்பை இவர்கள் கூறுவார்களா?

முரண்பாடுகள்

 1. புகாரியில் 2647வது எண்ணில் இடம் பெற்றுள்ள செய்தி, பெரிய வயதை அடைந்த பிறகு பால் குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற தகவலைத் தருகிறது. இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். ஆனால் அபூதாவூதில் 1764வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய சகோதர, சகோதரியின் மகள்களிடத்தில் ஆட்களை அனுப்பி பால் குடிக்க வைத்து தன்னிடத்தில் வருவதற்கு அனுமதித்தார்கள் என்ற மோசமான கருத்தைக் கூறுகிறது. ஸாலிமுடைய சம்பவமும் இதையே கூறுகிறது. இந்தத் தகவலையும் ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள்.

பெரியவர்களுக்குப் பால்குடி சட்டம் கிடையாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியிருக்கும் போது, பெரியவருக்குப் பால் புகட்டி, பால்குடி உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்களே எப்படிச் செய்வார்கள்? இந்த முரண்பாடும் ஸாலிமுடைய சம்பவம் குளறுபடியானது என்பதை வலுப்படுத்துகிறது.

 1. ஸாலிமுடைய சம்பவத்தில் 5 முறை பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணிக்கைக்கு மாற்றமாக 10 முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று அஹ்மதில் 25111வது எண்ணில் ஆயிஷா (ரலி) கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 முறை குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும், 3 முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 7, 5, 3 ஆகிய நான்கு எண்ணிக்கைகளில் எந்த எண்ணிக்கையில் பால் புகட்ட வேண்டும் என ஆயிஷா (ரலி) கூறினார்கள் என்று குழப்பம் நிலவுவதால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஹதீஸில் முரண்பாடு இருந்தால் இந்த முரண்பாடே அந்த ஹதீஸ் சரியில்லை என்பதற்குப் போதிய சான்றாகி விடும். இதுவும் ஹதீஸ் கலையில் உள்ள விதியாகும்.

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு – தொடர் 10

கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா

அபூஉஸாமா

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 7:54

அர்ஷ் என்பது அல்லாஹ்வின் ஆசனமாகும். இதை மேற்கண்ட வசனத்திலும், 9:129, 10:3, 13:2, 17:42, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 43:82, 57:4, 81:20 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இதில் 9:129, 23:86 ஆகிய வசனங்களில் மகத்தான அர்ஷ் என்றும், 23:116 வசனத்தில் கண்ணியமிக்க அர்ஷ் என்றும், 17:42, 81:20 ஆகிய வசனங்களில் அர்ஷின் நாயன் என்று அர்ஷுடன் தன்னை இணைத்தும் வல்ல அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இப்படிப்பட்ட அர்ஷைத் தான் பாசியும், தூசியும் படிந்த பாஸி, தனக்குக் கட்டுப்பட்டது என்று கூறுகிறார். இதிலிருந்து இவரது அகந்தையையும், ஆணவத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த அகந்தையும், ஆணவமும் யூத, ஷியாயிஸத்தின் பிறவிக் குணங்களாகும். இந்தப் பாஸியும் அந்த வகையறாக்களில் உள்ளவர் என்பதால் அவர் அந்தக் குணத்தைப் பிரதிபலிக்கின்றார்.

அல்லாஹ் தனது குர்ஆனில் அர்ஷுக்கு வழங்கும் மரியாதையை மேலே குறிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்கு அளிக்கும் மரியாதையைப் பாருங்கள்.

“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் இறை வழியில் அறப்போர் புரிந்தாலும் சரி அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?” என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், “சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும், பூமிக்கும் இடையில் உள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள். ஏனெனில் அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்) கூறினார்:

மேலும், “அதற்கு மேலே கருணையாளனின் அர்ஷு – சிம்மாசனம் இருக்கிறது. இன்னும் அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலை (ரலி) தம் தந்தையிடமிருந்து, “அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள் என (சந்தேகமின்றி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2790

இப்படிப்பட்ட ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்திற்கு மேல் அர்ஷ் உள்ளது. அல்லாஹ்வின் அர்ஷ் உள்ள காரணத்தினாலேயே அந்த பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை நீங்கள் கேளுங்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் அர்ஷின் மகத்துவத்தை உணர்த்துகிறார்கள். அத்தகைய மாண்புமிகு அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று பாஸி விஷம் கக்குகிறார்.

சுவனம் என்பது ஒரு முஃமினுக்குக் கிடைக்கும் மாபெரும் பாக்கியமாகும். அந்தச் சுவனத்திலும் அர்ஷுக்குக் கீழே உள்ள சுவனத்தில் இடம் கிடைப்பது மாபெரும் மகத்தான அருட் கொடையாகும். இப்படி அர்ஷுக்குக் கீழ் இடம் கிடைப்பது பாக்கியம் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல இந்த ஃபாஸியோ, மகத்தான அர்ஷ் தனக்குக் கீழ் உள்ளது என்று கூறத் துணிகிறார் என்றால் இவர் நிச்சயமாக யூத, ஷியாக்களின் மறு பிறவி தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து “அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன் “இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள். அந்த அன்சாரி “இவர் கடை வீதியில் “மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததைச் செவியுற்றேன். உடனே நான் “தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில் மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது பூமி பிளந்து வெளிப்படுத்துபவர் களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். “மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா? அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதும்; இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா? என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2412

இறைத் தூதர்களில் மிக முக்கியமான மாபெரும் இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள், மறுமை நாளில் அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அர்ஷை, அனாமதேய ஃபாஸி தனக்குக் கீழ் இருப்பதாகக் கூறி அவமரியாதை செய்கிறார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது முன்னங்கால் (இறைச்சி) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் வாயால் பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு அவர்கள் கூறியதாவது: “நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தொயுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி) “நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைப் பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர் “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் இருக்கும் நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள் “(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ள மாட்டான்.  மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (சட்டங்களுடன் அனுப்பப்பட்ட) முதல் இறைத் தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் “நன்றி செலுத்தும் அடியார்” என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள நிலையை நீங்கள் காணவில்லையா?  எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது கோபமுற்றுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபித்ததில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் கோபம் கொள்ள மாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

மக்கள் என்னிடம் வருவார்கள். நான் அர்ஷுக்குக் கீழே ஸஜ்தாச் செய்வேன். அப்போது “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3340

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்குக் கீழ் ஸஜ்தாச் செய்வதன் மூலம் அர்ஷின் மகிமையை நமக்கு உணர்த்துகிறார்கள். ஆனால் ஷாதுலிய்யா கலீபாவான ஃபாஸியோ, அர்ஷ் தனக்குக் கீழ் தான் உள்ளது என்று கூறுவதன் மூலம் இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறார்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது “லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் மிக்கவனும், பொறுமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6345

சோதனையான கட்டத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஓதுகின்ற இந்த துஆவில் அர்ஷின் நாயன் என்று கூறுகின்றார்கள். வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி என்பதற்குச் சமமான மற்றொரு புகழ் வார்த்தையாக அர்ஷின் நாயன் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த மகத்துவமிக்க அர்ஷ், ஷாதுலிய்யா தரீக்காவின் பாதிரி ஃபாஸியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அல்லாஹ்வே அவரது கட்டுப்பாட்டில் உள்ளவன் என்றாகி விடாதா?

அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறுவதன் மூலம், தான் ஒரு யூத, ஷியா வம்சாவளி, வழித்தோன்றல் என்று தெளிவாக உணர்த்துகின்றார். இவரையும் ஒரு கூட்டம் வலியுல்லாஹ் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது என்றால் இவர்கள் எப்படி சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியும்? நிச்சயமாக இவர்களும் ஷியாக்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படும் அர்ஷின் அந்தஸ்து மற்றும் மரியாதையைத் தெரிந்த எந்த ஓர் இறை விசுவாசியும் ஃபாஸியின் திமிர் பிடித்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான். இந்தக் கருத்துக்கள் அடங்கிய ஷாதுலிய்யா பைத்தை நடுச்சந்தியில் வைத்துக் கொளுத்தாமல் விட மட்டான். அவ்வளவு சாபக்கேடான கவிதை வரிகளை ஷாதுலிய்யா தரீக்காவின் தனி வேதமான மவ்லிது தெரிவிக்கின்றது.

ஷாதுலிய்யாவின் பலான ஆசாமி ஃபாஸி இத்துடன் நிற்கவில்லை. அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடவில்லை. அதன் அர்த்தத்தை அடுத்த வரியிலேயே போட்டு உடைக்கின்றார்.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

அர்ஷ் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஏன் சொல்கிறார்? என்று நாம் திகைக்க வேண்டிய அவசியமே இல்லை. அர்ஷின் மீது இவர் ஏறி அமர்ந்து விட்டால் அர்ஷ் தானாகவே இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றது அல்லவா?

அதாவது இவர் அல்லாஹ்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றார். அதனால் தான் ஒளியும், ஒளிகளும் நான் தான் என்று கூறுகின்றார். அல்லாஹ்வும் இவரும் சங்கமமாகி விட்டால் அர்ஷ் இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுமல்லவா? அதைத் தான் இங்கு கூறுகிறார். அல்லாஹ் தூய்மையானவன். இந்த இணை வைப்புக் கவிதையிலிருந்து நம்மைக் காப்பானாக!

இந்த அபத்தத்தையும் அபாண்டத்தையும் நாம் எப்படிச் சகித்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எவ்வளவு பெரிய துணிச்சல் என்று பாருங்கள்.

அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படா விட்டாலும் அதன் எண்ணையும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:35

இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை எப்படிக் கூறுகின்றானோ அது போன்றே ஃபாஸி என்ற ஷைத்தானும் கூறுவதாக ஷாதுலிய்யா பைத் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வர்ணிக்கும் வார்த்தை வடிவங்களைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் “இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்து விடு. நீயே  முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை” என்று கூறிவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1120

அல்லாஹ் தனது குர்ஆனில் எவ்வாறு தன்னைப் பற்றிக் கூறுகின்றானோ அது போன்ற வார்த்தைகளை நபி (ஸல்) அவர்களும் கூறி, மனம் ஒன்றி ஒருமைப்படுத்திக் கூறி தமது பிரார்த்தனைகளை அவன் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

திருக்குர்ஆனும், நபிமொழியும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறும் இந்த வர்ணனைகளை ஃபாஸி என்ற ஷாதுலிய்யா கலீபா அப்படியே தனக்குப் பொருத்திப் பார்க்கிறார்.

“அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்” என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

தன்னையே கடவுள் என்று கூறும் இந்த சாயிபாபாக்களுக்கு அல்லாஹ் வழங்கும் பரிசு நரகம் தான் என்று இந்த வசனம் தெளிவாக அறிவிக்கின்றது.

இப்படிப்பட்ட இந்த வார்த்தைகளைத் துணிந்து யார் சொல்வார்கள்? யூத வர்க்கம் தான்.

“அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

அல்குர்ஆன் 19:88-93

யூதர்களின் ஏகபோக வாரிசுகளான ஷியாக்களும் அல்லாஹ்வின் தன்மைகளை மனிதர்களுக்கு வழங்கி அழகு பார்ப்பவர்கள் என்பதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதைத் தான் இந்த ஷாதுலிய்யாக்கள் எதிரொலிக்கின்றனர்.

திருக்குர்ஆனின், திருத்தூதரின் கட்டளைகளை உணர்ந்தவர்கள் இது போன்ற அகம்பாவமான வார்த்தைகளை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.

அல்லாஹ்வை அவமதிப்பது, அவனுடைய இடத்தில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்துவது அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் மற்றும் குஃபர் ஆகும். இந்த இணை வைப்பையும், இறை மறுப்பையும் தான்  ஷாதுலிய்யா கட்சியினர் அவ்ராதுத் தொகுப்புகளில் ஓதிக் கொண்டிருக்கின்றனர்.

ஷாதுலிய்யா பக்தர்களே! நாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த அவ்ராதுத் தொகுப்புகளைத் தீயில் போட்டு விட்டு, குர்ஆன் ஹதீஸ் கூறும் தூய பாதையின் பக்கம் திரும்ப வேண்டும். இல்லையேல் நரகத் தீயில் நிரந்தரமாக வெந்து சாக வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக!