ஏகத்துவம் – டிசம்பர் 2018

அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல!

ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்!

இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணர்கின்றான். அந்த அளவுக்குக் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தலைவிரித்தாடுகின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் கற்புக்கு அறவே பாதுகாப்பில்லை.

கன்னிப்பெண், கல்யாணம் முடித்த பெண் என்ற வரம்பு எல்லைகளைத் தாண்டி, பருவமடையாத, பால் முகம் மாறாத சின்னஞ்சிறுமிகளும் காட்டுமிராண்டிகளின் காமப்பசிக்கு இரையாகின்றனர். பறந்து திரியும் பருந்துகளின் பாலியல் சேட்டைக்கும், வாய் பிளந்து நிற்கும் காம ஓநாய்களின் வேட்டைக்கும் இலக்கான அந்தச் சிறுமியர், உயிருடன் கூட விட்டு வைக்கப்படாமல் வெறும் சடலங்களாக சாலை ஓரங்களிலும், சாக்கடைகளிலும், பாழுங்கிணறுகளிலும், புதர்களிலும் வீசி எறியப்படுகின்றனர்.

இது எதைக் காட்டுகின்றது? இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு மருந்துக்குக் கூட இல்லை என்பதையும், சட்டம் ஒழுங்கு சவக்குழிக்கு அனுப்பப்பட்டு அதற்கு சமாதியும் கட்டப்பட்டு விட்டது என்பதையும் தான் இது காட்டுகின்றது.

இதுபோன்ற நிலை தான் அன்றைய அரபகத்தில் நிலவியது. திருக்குர்ஆன் எனும் வேதம் அருளப்படுவதற்கு முன்னால் அரபகத்தில் இத்தகைய காட்டாட்சி தான் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையை திருக்குர்ஆன் தலைகீழாக மாற்றி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாகத் திருக்குர்ஆன் மக்களுக்கு ஒரு வாக்குறுதியையும் அளித்தது.

அவர்களின் முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன் 24:55)

 • ஆட்சி அதிகாரத்தை அளித்தல்.
 • அவர்கள் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்துதல்.
 • அச்சத்திற்குப் பின் அச்சமின்மை, அதாவது அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அந்த அச்சமான சூழலைப் போக்கி பாதுகாப்பு அளித்தல்.

ஆகிய மூன்று விஷயங்களை நிறைவேற்றுவதாக திருக்குர்ஆன், தன்னை நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வாக்குறுதியை அளித்தது.

அந்த மூன்று வாக்குறுதிகளையும் 23 ஆண்டுகளில் நிறைவேற்றியும் கொடுத்தது. அவை அனைத்தையும் இங்கு நாம் விரிவாகப் பார்ப்பதற்கு இவ்விதழ் இடமளிக்காது.

திருக்குர்ஆன் உலகம் முழுவதும் அரசியல் சாசனமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வேதம் என்பதை விளக்குவதற்கு இதில் மூன்றாவதாக இடம்பெறும் ‘பயத்திற்குப் பின் பாதுகாப்பு’ என்ற அந்த வாக்குறுதியை மட்டும் இப்போது பார்ப்போம்.

நிறைவேறிய அந்த வாக்குறுதி பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர் அதீ பின் ஹாத்திம் (ரலி) அறிவிக்கக் கேட்போம்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?’’ என்று கேட்டார்கள். ‘‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது’’ என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், ‘‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்’’ என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யிகுலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்? என்று கேட்டுக் கொண்டேன்.-

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), ‘‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்’’ என்று சொன்னார்கள். நான், ‘‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா?’’ என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)’’ என்று பதிலளித்தார்கள்.  (ஹதீஸின் சுருக்கம், நூல்: புகாரி 3595)

மேற்கண்ட இந்தச் செய்தியில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் இரண்டு பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன.

 1. வழிப்பறி

முஹம்மது (ஸல்) அவர்கள், வழிப்பறி என்ற பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் போது, ஒரு பெண் ஹீரா என்ற இடத்திலிருந்து தன்னந்தனியாக மக்காவிற்கு வந்து திரும்பிச் செல்வாள் – அதாவது தான் பயணிக்கும் வழியில் தனது உயிர், கற்பு, உடைமை போன்றவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்ற எவ்வித பயமும் இல்லாமல் வந்து திரும்பிச் செல்வாள் – என்று கூறுகின்றார்கள்.

 1. வறுமை

இரண்டாவதாக அவர்களிடம் வைக்கப்பட்ட பிரச்சனை வறுமை. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து, வளமடைந்து வறுமை தீரும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த இரண்டும் நடந்ததா? என்றால் அதையும் அதே அதீ பின் ஹாத்திம் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள்.

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். (ஹதீஸின் சுருக்கம், நூல்: புகாரி 3595)

முஹம்மது (ஸல்) அவர்கள் நிறுவி, நிர்மாணித்த இஸ்லாமிய ஆட்சியில் இந்த இரண்டும் நிறைவேறியதை அன்னாரின் தோழர் அதீ பின் ஹாத்திம் (ரலி) தெளிவுபடத் தெரிவிக்கின்றார்கள்.

வழிப்பறி, வறுமை ஆகிய இரண்டும் தான் இந்த உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய சவால்களாகும்.

இவ்விரண்டில் வறுமையைப் பற்றிப் பேச இவ்விதழ் பற்றாது. அதனால் வழிப்பறிக் கொள்ளையை ஒழித்து, ஒரு பாதுகாப்பான சாம்ராஜ்யத்தை இஸ்லாம் எப்படி உருவாக்கியது என்பதை மட்டும் பார்க்கவுள்ளோம்.

இது எப்படி சாத்தியமானது? இதற்குத் திருக்குர்ஆன் நடைமுறைப்படுத்திய குற்றவியல் சட்டம் முக்கியக் காரணமாகும்.

குற்றவியல் சட்டம்

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் என்ற சட்டமும் (பார்க்க: அல்குர்ஆன் 5:45) திருட்டிற்கு கையை வெட்ட வேண்டும் என்ற சட்டமும் (பார்க்க: அல்குர்ஆன் 5:38) குற்றவாளிகளின் உள்ளங்களில் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் குற்றங்கள் வெகுவாகக் குறைந்தன. மக்களின் உயிர்களுக்கும் அவர்களின் பொருட்களுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது.

மணமுடிக்காதவர் விபச்சாரம் செய்தால் 100 கசையடிகள், மணமுடித்தவர் விபச்சாரம் செய்தால் அவரைக் கல்லெறிந்து கொல்லுதல் என்ற தண்டனையை இஸ்லாம் விதியாக்கியது. இதன் மூலம் விபச்சாரத்தின் வாசல் அடைக்கப்பட்டது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீமைகள் களையெடுக்கப்பட்டு விட்டாலே அந்தச் சமுதாயத்தில் அமைதியும் அச்சமின்மையும் ஏற்பட்டு விடும். அந்த அடிப்படையில் திருக்குர்ஆன் தனது கடுமையான சட்டத்தின் மூலம் இந்தத் தீமைகளைக் களைந்தெறிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சி நடத்திய மதீனாவில் இது முதலில் நிறைவேறியது. பின்னர் ஒட்டுமொத்த அரபகத்திலும், அதன்பின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த அண்டை, அயல் நாடுகளிலும் நிறைவேறியது. இது திருக்குர்ஆன் நிறைவேற்றிய வாக்குறுதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இங்கு இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். குற்றவியல் சட்டம் என்று சொல்லும் போது, வெறுமனே குற்றவியல் சட்டத்தால் மட்டும் மக்களிடம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதல்ல. அது திருக்குர்ஆனின் நோக்கமும் அல்ல! காரணம், சட்டத்தை அமல்படுத்த சாட்சிகள் தேவை. சாட்சிகள் இல்லாமல் எந்தத் குற்றத்திற்கும் தண்டனை வழங்க முடியாது.

இந்த உலகத் தண்டனையிலிருந்து ஒருவன் சாட்சிகள் இல்லாமல் அல்லது சாட்சிகளைக் கலைத்து அல்லது மிரட்டி தப்பி விடலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறந்த பிறகு ஒரு வாழ்க்கை நிச்சயம் உண்டு. அந்த வாழ்க்கையில் அதற்குரிய தண்டனையிலிருந்து அவன் தப்ப முடியாது என்று அவனுக்கு மறுஉலக நம்பிக்கையைப் போதிக்கின்றது. நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் இந்தச் சிந்தனையைக் குர்ஆன் நங்கூரமாகப் பாய்ச்சி விடுகின்றது. அது தான் இறையச்சமாகும். நம்பிக்கை கொண்ட மனிதனை இதுபோன்ற பாவங்களில் தடுக்கி விழாமல் அந்த இறையச்சம் தடுத்து விடுகின்றது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்த இறையச்சம் என்பது பாவங்கள் என்ற கிருமிகளின் தாக்குதலுக்குப் பலியாகி விடாமல் தடுத்த நிறுத்துகின்ற தடுப்பூசியாக அமைந்து விடுகின்றது. ஒரு பக்கம் முதன்மையாக இறையச்சம், இன்னொரு பக்கம் குற்றவியல் சட்டம் என்ற இரு அடிப்படைகளில் மனித சமுதாயத்திற்கு அமைதி, அச்சமின்மை, பாதுகாப்பு ஆகியவற்றை திருக்குர்ஆன் தருகின்றது.

இறந்த பிறகு ஒரு வாழ்க்கையா? என்று ஒருவன் மறுஉலக வாழ்க்கையை நம்ப மறுத்தால் அவனை நோக்கி இந்தத் திருக்குர்ஆன் ஓர் அறைகூவலை விடுக்கின்றது.

மறுமை வாழ்க்கை உட்பட இந்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்துமே உண்மை! இது பொய் என்றால் அதை உடைத்துக் காட்டுங்கள்; இதுபோன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று ஒரு பகிரங்க அறைகூவலை விடுக்கின்றது.

இவர் இதனை இட்டுக்கட்டிவிட்டார்’’ எனக் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

அல்குர்ஆன் 52:33,34

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:23

தான் கூறுகின்ற மறுஉலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல! தான் கூறுகின்ற கொள்கை கோட்பாடுகள், குற்றவியல், சிவில் சட்டங்கள், குடும்பவியல், பொருளியல், நீதியியல், வாழ்வியல், வணக்கவியல், அறிவியல் என்று ஒட்டு மொத்த துறைகளையும் உடைத்தெறிய திருக்குர்ஆன் அழைக்கின்றது. அதிலும் இன்றைய அறிவியல் உலகத்திற்கும் அதன் அறைகூவல் நீடிக்கின்றது. 1400 ஆண்டுகளாக அது விடுக்கின்ற அறைகூவலை இதுவரையில் ஏற்பவரில்லை. அதை ஏற்கும் எவரும் இனி பிறக்கப் போவதுமில்லை என்பது தான் உண்மையாகும்.

இந்தியா முதல் உலக நாடுகள் அத்தனையிலும் குற்றங்கள் மிகைத்திருப்பது, மனிதர்கள் இயற்றிய அந்தக் குற்றவியல் சட்டங்கள் தோற்றுவிட்டன என்பதையே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஆம்! அரபு நாட்டு (அதாவது குர்ஆன்) சட்டம் வேண்டும் என்று இந்தியாவில் உள்ள மக்களே குரல் எழுப்புவதன் மூலம் இங்குள்ள குற்றவியல் சட்டம் தோற்றுவிட்டது என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர்.

புள்ளி விவரப்படி, குர்ஆனிய குற்றவியல் சட்டம் அமலில் இருக்கின்ற சவூதி அரேபியாவில் நிகழும் குற்றங்கள், மற்ற உலக நாடுகளில் நிகழும் குற்றங்களைக் காட்டிலும் ஒப்பீட்டு அடிப்படையில் மிக மிகக் குறைவாகும். இதை இங்கு குறிப்பிடுதற்குக் காரணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல! ஒட்டு மொத்த உலகிற்கும் அமைதியையும் அச்சமின்மையையும் தருவதற்குரிய, சட்ட ஒழுங்கைச் சீரமைக்கின்ற ஒரே ஓர் அரசியல் சாசனம் திருக்குர்ஆன் தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டம் இங்கு ஒரு மாதிரிக்குத் தான் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. குர்ஆன் வெற்றிகரமாகச் செயல்படுத்திய இதர சட்டங்களையும் உங்களின் கனிவான பார்வைக்குத் தருகின்றோம்.

மதுவிலக்கு

உலக நாடுகள் மதுவிலக்கை அமல் செய்வதில் தோல்வியைத் தழுவி விட்டன. இன்றளவும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகள் மதுவிலக்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் 14 நூற்றாண்டுகளைத் தாண்டித் தொடரும் திருக்குர்ஆனின் ஆளுமை தான். அது, மதுவை ஒழிக்க வெறுமனே மதுவை மட்டும் தடை செய்வதுடன் நின்று விடவில்லை. மதுவின் மூலம் வருகின்ற வருவாய் அனைத்தையும் தடை செய்து மதுவின் வாசனையும் வாடையும் மனிதனின் பக்கம் அண்ட விடாது பாதுகாத்துக் கொண்டது.

வட்டி ஒழிப்பு

உலகத்தின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. எங்கும் வட்டி, எதிலும் வட்டி என்று வணிகத்துறை அனைத்தையும் வட்டி எனும் மாய வலை வளைத்து நிற்கின்றது.

இந்தியாவில் கந்து வட்டி பல உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றது. வட்டியினால் பாதிக்கப்பட்ட மக்கள் வட்டியில்லாத ஒரு பொருளாதார வாழ்க்கை தங்களுக்கு அமையாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் திருக்குர்ஆனோ வட்டியில்லாத ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பியது. இன்று உலகில் கொலை, கொள்ளைகள் நடப்பதற்கு முக்கிய மூல காரணமாக அமைவது பொருளாதாரம் தான். அந்தப் பொருளாதாரத்தில் வட்டி அடிப்படையிலான அனைத்து கொடுக்கல் வாங்கலையும் தடை செய்து, தான தர்மங்களின் வாசல்களைத் திறந்து விட்டு மாபெரும் ஒரு பொருளாதாரப் புரட்சியை உலகுக்கு அளித்தது திருக்குர்ஆன் தான்.

மூட நம்பிக்கை ஒழிப்பு

மனிதர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்கள் மக்களின் அறியாமையை மூலதனமாக்கியே தொழில் செய்கின்றனர். பில்லி, சூனியம், ஜோதிடம், செய்வினை, ஏவல் போன்ற மூட நம்பிக்கைகளை விதைத்து, மக்களிடமிருந்து பொருளாதாரத்தைச் சுரண்டி வருகின்றனர்.

விஞ்ஞானம் வளர்ந்து, விண்வெளியில் போய் தங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலேயே இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் மக்கள் விழுந்து தங்கள் பொருளாதாரத்தையும் சில சமயங்களில் உயிர்களையும் பறி கொடுப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் அறிவியல் வளர்ச்சியில்லாத, காட்டுமிராண்டி சமுதாயம் என்று எண்ணப்பட்ட அந்தக் காலத்திலேயே இந்த மூட நம்பிக்கைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து, இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதைத் திருக்குர்ஆன் பறைசாற்றியது.

தீண்டாமை ஒழிப்பு

உலக மக்கள் தீண்டாமையினால் பல நூற்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தீண்டாமையின் கொடுமை உச்சத்தில் உள்ளது. திருக்குர்ஆன் அந்தத் தீண்டாமையை தகர்த்தெறிந்து மக்கள் அனைவரையும் ஒரு தந்தை, தாய்க்குப் பிறந்த சகோதரர்கள் என்று மனித குலம் அனைத்தையும் ஒரே கயிற்றில் பிணைத்திருக்கின்றது.

ஆண்டுதோறும் மொழி, இனம், நிறம், குலம், கோத்திரம், நாடு என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு, வெள்ளையர்கள், கறுப்பர்கள் என உலக மக்கள் அனைவரையும் மக்காவில் அமைந்திருக்கின்ற புனித கஅபா ஆலயத்தில் ஹஜ் எனும் உலகளாவிய மாநாடு மூலம் சந்திக்கவும் சங்கமிக்கவும் செய்கின்றது. அன்றாடம் அந்தந்த ஊர்களில் ஐவேளைத் தொழுகைகள் மூலம் பள்ளிகளில் மக்களை ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்கின்றது.

இப்படி மனித குலத்தை அரித்து, அழித்துத் தள்ளுகின்ற அத்தனை தீமைகளையும் அடையாளங்காட்டி அவற்றைத் தடை செய்து ஒவ்வொரு தனிமனிதனையும் சமுதாயத்தையும் திருக்குர்ஆன் பாதுகாக்கின்றது. இதன் மூலம் உலகத்தை அமைதியாக வாழச்செய்கின்றது.

இது மட்டுமின்றி உலக அரசாங்கங்கள் வழங்காத உரிமைகளையும் திருக்குர்ஆன் அளித்தது. அவற்றையும் பார்ப்போம்.

குடிமையியல் (சிவில்) சட்டங்கள்

மனிதர்களுக்குரிய சட்டங்கள் குற்றவியல் (கிரிமினல்), குடிமையியல் (சிவில்) என்று இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சத்தை மேலே நாம் பார்த்தோம். அந்தச் சட்டத்திற்கு முன்னால் உலகக் குற்றவியல் சட்டங்கள் தோற்றுப் போனது போன்று குர்ஆன் கூறுகின்ற குடிமையியல் சட்டங்களுக்கு முன்னாலும் உலக நாடுகளின் குடிமையியல் சட்டங்கள் தோற்றுப் போய்விட்டன.

அதற்கு காரணம் உலக நாடுகளின் சட்ட மன்றங்கள், நாடாளுமன்றங்கள் குடிமையியலின் ஓர் அங்கமான சொத்துரிமையைப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்று அதை இன்று வரையில் விவாதப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆன் அவர்களுக்கு சொத்துரிமையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது ஆறாம் நூற்றாண்டிலேயே வழங்கி மனிதர்கள் இயற்றிய குடிமையியல் சட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்ட்து.

மகளிருக்கு அளித்த மகத்தான உரிமைகள்

அன்றைய அரபகம் மட்டுமல்ல, அகில உலகமும் பெண்களுக்கு வாழ்வுரிமையைப் பறித்துக் கொண்டிருந்தது. பெண்களுக்கு ஆன்மா இருக்கின்றதா? என்று உலகம் அதிபுத்திசாலித்தனமாக (?) விவாதித்துக் கொண்டிருந்தது. ஆனால் திருக்குர்ஆன் வாழ்வுரிமையைத் தாண்டி வாரிசுரிமை (சொத்துரிமை), வழிபாட்டு உரிமை, விரும்பும் கண்வனைத் தேர்வு செய்யும் உரிமை, பிடிக்காத கணவனிடமிருந்து விலகும் உரிமை என்று அத்தனை உரிமைகளையும் அள்ளி வழங்கியது.

பெண்களுக்கு ஆலயத்தில் நுழைவதற்கு இதுவரையில் பல நாடுகளில் அனுமதி இல்லை. இந்தியாவில் சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு நடத்தப்படும் போராட்டங்கள் இதற்கு ஒரு நிதர்சனமான எடுத்துக் காட்டாகும். ஆனால் திருக்குர்ஆன் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் உலகின் முதல் ஆலயமான மக்காவில் உள்ள புனிதப் பள்ளியிலும், இன்னும் உலகிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வணங்குவதற்குரிய வழிபாட்டுரிமையை வழங்கியிருக்கின்றது.

பெண்களுக்குரிய வழிபாட்டுரிமை ஒரு பக்கமிருக்க, ஆண்களுக்கே குறிப்பிட்ட சாதியினர் கோயில்களில் நுழைய அனுமதி கிடையாது என்று மறுக்கப்படுகின்றது. ஆனால் திருக்குர்ஆனோ ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டால் புனிதமிகு மக்கா ஆலயம் முதல் உலகில் உள்ள அத்தனை ஆலயங்களிலும் நுழையவும், இறைவனைத் தொழவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருசேர அனுமதியளிக்கின்றது.

இவை அனைத்தும் திருக்குர்ஆன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி, நிறைவேற்றிய வாக்குறுதிகளாகும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு ஒரு நிபந்தனையை இடுகின்றது. அந்த நிபந்தனை இதோ:

‘‘அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள்

அல்குர்ஆன் 24:55

ஆம்! அன்று அரபுலகம் கண்ட அதே அமைதி உலகம் முழுவதும் திரும்ப வேண்டுமென்றால் உலக மக்கள் உருப்படியான, உன்னதமான ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும். பலதெய்வக் கொள்கையைக் கைவிடவேண்டும். அப்போது தான் அந்த வாக்குறுதி நிறைவேறும்.

அதை உணர்த்தும் விதமாகவே ஜனவரி 27, 2019 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருக்குர்ஆன் மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாடு ஒரு நாள் கூடிக் கலைவதற்கல்ல! உயிருள்ள வரை, உணர்வுள்ள வரை திருக்குர்ஆனை மக்களிடம் கொண்டு செல்வதற்குரிய ஓர் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் ஒரு வாழ்நாள் திட்டத்தைத் தருகின்ற மாநாடாகும். இதில் அனைவரும் பங்கு கொள்வோம். அல்குர்ஆனை அனைவரிடமும் கொண்டு செல்வோம்.

—————————————————————————————————————————————————————————————————————

கடவுளின் இலக்கணம்

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

கடவுளே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பது நாத்திகக் கொள்கையாகும். உலகில் இது ஏற்பாரும் ஏறிட்டுப் பார்ப்பாரும் இல்லாத ஒரு நாதியற்றக் கொள்கையாகும்.

காரணம், எந்த ஒரு பொருளும் தான்தோன்றி கிடையாது. உதாரணத்திற்கு மனிதன் மணி பார்ப்பதற்காகக் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை எடுத்துக் கொள்வோம். இது தானாகத் தோன்றியது என்றால் கிராமத்தில் வாழ்கின்ற, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரன் கூட அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிப்பான்.

அப்படியிருக்கும் போது, இந்தப் பிரபஞ்சம், அதிலுள்ள கோள்கள், நாம் வாழும் இந்த பூமி, அதிலுள்ள உயிரினங்கள், அவற்றுக்கான வாழ்க்கை வசதிகள் இவை எல்லாமே தானாக வந்து விட்டது என்று கூறினால் அது எவ்வளவு நகைப்புக்குரியது? அந்த நகைப்பிற்குரிய ஒரு கேலிக்கூத்தைத் தான் நாத்திகக் கொள்கை போதிக்கின்றது. அதனால் அதை விளக்க வேண்டிய அவசியம் தேவையில்லை.

உலகில் 99 சதவிகித மக்கள் தங்களைப் படைத்த ஓர் அரிய சக்தி, அற்புத ஆற்றல் இருக்கின்றது என்றே நம்புகின்றார்கள். அப்படி ஒரு சக்தி இருக்கின்றது, அதாவது, கடவுள் இருக்கின்றான் என்றால் எத்தனை கடவுள்கள்?

ஒரு கடவுளா? பல கடவுள்களா?

ஒரு நிறுவனத்தில் பல முதலாளிகள் இருந்து ஆதிக்கம் செலுத்தினால் அந்த நிறுவனம் உருப்படாது, அது செயலிழந்து போய்விடும் என்பதை  ஒவ்வொரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

பல மூர்த்திகள் (முதலாளிகள்) இருந்தால் அது பல கீர்த்தியில் இருக்கும். அதாவது அலங்கோல நிலையில் அது இருக்கும். ஒரு மூர்த்தி இருந்தால் அது ஒரு கீர்த்தியில் (கட்டுப்பாட்டில்) இருக்கும். அது போல் தான் இந்த உலகத்திற்குப் பல கடவுள்கள் இருந்தால் அது செயலிழந்து சீர்கெட்டுப் போய் விடும். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

அல்குர்ஆன் 21:22

கடவுள் என்றால் அவன் எல்லாவற்றுக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். எப்போது அவனுக்கு ஒரு துணைக் கடவுள் தேவைப்படுகின்றதோ அப்போதே அவன் கடவுள் என்ற தகுதியை இழந்து விடுவான்.

இரண்டு கடவுள்களில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியும் ஏற்பட்டு விடும். உலகில் பல கடவுள் கொள்கையைப் போதிக்கும் மதங்களில் கடவுள்களுக்கு இடையே சண்டை நடந்ததாகப் புராணங்களை எழுதி வைத்திருப்பதைப் பார்க்கிறோம். கடவுளே சண்டையிட்டால் அவன் எப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலணம் செய்வான்? எனவே இந்த அடிப்படையில் உலகத்தில் ஒரு கடவுள் தான் இருந்தாக வேண்டும் என்பது நிரூபணமாகின்றது.

கற்சிலையும் கடவுள் இல்லை!

பொற்சிலையும் கடவுள் இல்லை!

ஒரு கடவுள் தான் இருக்க முடியும். சரி! அது ஒரு சிலையாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்பவன் தன்னையும் தற்காத்துக் கொண்டு மற்றவர்களையும் காக்க வேண்டும். சிலைகளுக்கு அந்த சக்தி அறவே கிடையாது. சிலைத் திருட்டு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தன்னை திருடுபவரைத் தடுக்க முடியாத சிலை எப்படிக் கடவுளாக முடியும்? சிலையைக் காப்பதற்கும் கட்த்தப்பட்ட சிலையை மீட்பதற்கும் காவல் துறை தான் வரவேண்டியதிருக்கின்றது என்றால் இந்தச் சிலை எப்படிக் கடவுளாக முடியும்? மனித குலத்தை நோக்கி இதை இந்தக் குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

ஈயைப் படைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஈ பறித்துக் கொள்கின்ற எள்முனை அளவிலான பொருளைக் கூட தடுக்க முடியாதவை, மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை விட்டும் எப்படித் தடுக்கும் என்று சிந்திக்கச் சொல்கின்றது.

இது தொடர்பாகத் திருக்குர்ஆன், சிலை வணக்கத்தை எதிர்த்துப் போராடிய பகுத்தறிவு நாயகர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றைக் கூறுகின்றது.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம். நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?’’ என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்டபோது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்’’ என்று அவர்கள் கூறினர்.

நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்’’ என்று அவர் கூறினார். நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?’’ என்று அவர்கள் கேட்டனர்.

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்’’ என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்’’ (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்’’ என்று அவர்கள் கூறினர். ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்’’ எனக் கூறினர். அவரை மக்கள் பார்வைக்குக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்’’ என்றனர்.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?’’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!’’ என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்’’ என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!’’ என்றனர். அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?’’ என்று கேட்டார். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?’’ (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:51-67

சிலைகளுக்கு சக்தியில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்ற சுவையான வரலாறாகும். சிலை மட்டுமல்ல! சிலையைப் போன்ற வடிக்கப்படுகின்ற எந்தப் பொருளுக்கும் கற்பனைப் படங்களுக்கும் எவ்வித சக்தியும் இல்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

சிலைகளுக்கு ஒரு சக்தி இருக்கின்றது என்று நம்பியதன் விளைவு மக்கள் கல், மண் போன்றவற்றிலிருந்து சிலைகளை வடிக்கின்றனர். வசதி உள்ளவர்கள் தங்கத்திலிருந்தும் வெண்கலத்திலிருந்தும் மொத்தத்தில் ஐம்பொன்னிலிருந்தும் சிலைகளை வடிக்கின்றனர். எந்த மூலத்திலிருந்து சிலைகள் வடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு எந்த சக்தியும் கிடையாது என்பதைத் திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சூரியன் சந்திரன் கடவுளாக முடியுமா?

மக்களில் ஒரு சாரார் சூரியன், சந்திரனை கடவுளாக வழிபடுகின்றனர். அவை கடவுளாக இருக்க முடியுமா? இதோ திருக்குர்ஆன் அதுபற்றிக் குறிப்பிடுகின்றது.

இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுவே என் இறைவன்’’ எனக் கூறினார். அது மறைந்தபோது மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்’’ என்றார்.

சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது இதுவே என் இறைவன்’’ என்றார். அது மறைந்தபோது என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்’’ என்றார்.

சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது’’ என்றார். அது மறைந்தபோது என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்’’ எனக் கூறினார்.

வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்’’

அல்குர்ஆன் 6:76-79

வானில் நீந்துகின்ற பிரம்மாண்டமான சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற எந்த ஒரு கோளும் கடவுளாக முடியாது. காரணம் அவை மறையக்கூடியவை. எனவே அவை கடவுள்களாக இருக்க முடியாது என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. அதனால் பிரம்மாண்டமான சூரியனைப் படைத்த அந்த ஒரு பிரம்மாண்டமான கடவுளையே வணங்குமாறு திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

அல்குர்ஆன் 41:37

இது போன்று பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் இவற்றிற்கு சில  குறிப்பிட்ட பணிகளைத் தவிர வேறு எந்த ஆற்றலும் இல்லை.  மரம், செடி கொடிகளுக்கும் எந்த ஆற்றலும் இல்லை. அவையும் கடவுளாக ஆக முடியாது.

காளை, பசு மாடுகள் கடவுளாக முடியுமா?

யூத சமுதாயம் நகைகளிலிருந்து வார்த்து வடிக்கப்பட்ட செயற்கையான காளை மாட்டைக் கடவுளாக வணங்கினர். அவர்களை நோக்கி அவர்களது இறைத்தூதர் கண்டித்த கண்டனத்தை திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

அல்குர்ஆன் 7:148

கடவுள் என்றால் பேச வேண்டாமா? என்று திருக்குர்ஆன் கேட்கின்றது. இது போன்று தான் பசுவும் கடவுளாக முடியாது. அது மட்டுமல்லாமல், அவை கடவுள் என்றால் அவை அறுக்கப்படும் போது தங்களை ஏன் தற்காத்துக் கொள்ள முடியவில்லை என்று மக்கள் சிந்திப்பதில்லை. காளை, பசு மட்டுமல்ல! ஊர்வன, பறப்பன, மிதப்பன போன்ற எந்த ஒரு பிராணியும் கடவுளாக முடியாது என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் கடவுளாக முடியுமா?

அஃறிணை பொருட்கள் எவையும் கடவுளாக இருக்க முடியாது என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இப்போது எஞ்சியிருப்பவன் மனிதன் மட்டும் தான்! இந்த மனிதன் கடவுளாக முடியுமா? அவனும் கடவுளாக முடியாது. ஏன்? திருக்குர்ஆன் மட்டும் தான் கடவுளுக்குரிய இலக்கணங்களை மிகத் துல்லியமாக குறிப்பிடுகின்றது. அந்தத் தன்மையைப் பெற்றவர் தான் கடவுளாக இருக்க முடியும். அந்தத் தன்மைகளைப் பெறாதவர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனிதனுக்குரிய பலவீனங்கள் கடவுளுக்கு இருக்கக்கூடாது. கடவுளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் மக்கள் இதைக் கவனிப்பதுமில்லை; கண்டு கொள்வதுமில்லை. மனிதன், தான் வாங்குகின்ற பொன் நகைகள் முதல் மண் பாண்டம் வரை அத்தனையையும் சோதித்துப் பார்த்து தான் வாங்குகின்றான்.

தங்கத்தை உரசிப் பார்க்க உரைக்கல்லை வைத்திருக்கும் மனிதன் கடவுளைத் தேர்வு செய்வதற்கு எந்த உரைக்கல்லையும் பயன்படுத்துவதில்லை. திருக்குர்ஆன் கடவுளைத் தேர்வு செய்வதற்கு ஓர் உரைக்கல்லைத் தருகின்றது. அதாவது கடவுளுக்குரிய இலக்கணங்களை அது குறிப்பிடுகின்றது. அது கற்பனை அடிப்படையில் அமைந்தது அல்ல. அந்த உரைக்கல் ஒவ்வொன்றாகப் பார்த்தோம் என்றால் இது தான் கடவுளைத் தேர்வு செய்வதற்கு சரியான அளவுகோல் என்று மனிதனின் அறிவு ஒப்புக்கொண்டு விடும். ஒப்புக் கொள்வதுடன் நிற்காமல் கடவுளைத் தேர்வு செய்வதற்கு இதைத் தாண்டி வேறெதுமில்லை; இது தான் சரியான அளவுகோல் என்ற இறுதியான, உடைக்க முடியாத, உறுதியான முடிவுக்கு வந்து விடும். வேதம் கூறும் வேதியியல் பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைவோம். கடவுளுக்குரிய இலக்கணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிறப்பில்லாதவன்

ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவன் ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்றால் அவனுக்கும் ஆதிக்கம் செலுத்துபவன் எவனும் இருக்கக் கூடாது. அவனை விட அந்தஸ்தில், தரத்தில் மேலானவர்கள் இருக்கக் கூடாது. கடவுளுக்குப் பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் தான் கடவுளை விட ஆதிக்கம் பெற்றவர்கள். கடவுளை விட அவர்கள் தான் மேலானவர்கள்.

(கடவுளாகிய) அவன் (யாருக்கும்) பிறக்கவில்லை.

அல்குர்ஆன் 112:3

மனைவி, மக்கள் இல்லாத மகத்தான நாயன்

அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

அல்குர்ஆன் 6:101

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.

அல்குர்ஆன் 72:3

அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்’’ எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

அல்குர்ஆன் 2:116

முக்கடவுள் கொள்கை முற்றிலும் பொய்யே!

கிறிஸ்தவ சமுதாயம் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் கொள்கை ஒரு பொய்யான கொள்கை என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 4:171

ஏசு கிறிஸ்து இறைவனின் மகனா?

உஸைர் அல்லாஹ்வின் மகன்’’ என்று யூதர்கள் கூறுகின்றனர். மஸீஹ் (இயேசு கிறிஸ்து) அல்லாஹ்வின் மகன்’’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன் 9:30

ஒரு கடவுள் தான்! இருகடவுள் அல்ல!

இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!’’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்குர்ஆன் 16:51

சத்தியக் கடவுளுக்கு சந்ததிகள் இல்லை

அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்’’ என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் எந்தச் சான்றும் இல்லை. அவன் தூயவன். அவன் தேவைகளற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

அல்குர்ஆன் 10:68

பிள்ளைகள் யாருக்கு தேவை? வயது முதிர்ந்த தள்ளாத பருவத்தில் தன்னை தாங்கிப் பிடிப்பதற்காகவும், தான் தேடி வைத்த செல்வத்தை அடுத்தவர் அள்ளிச் சென்றுவிடாமல் தன் பிள்ளையையே அதற்கு வாரிசாக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னை ஒரு மலடன் என்று உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும் ஒருவனுக்குப் பிள்ளை அவசியம் தேவை. இது மனிதனுக்குரிய பலவீனம். இந்த பலவீனம் கடவுளுக்கு இருந்தால் அவன் கடவுள் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக உலகிற்கு திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

இன்று கடவுள் என்றால் தங்களைப் போன்றே கடவுளுக்கு மனைவி, மக்கள் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்கின்றார்கள். கடவுளுக்கு மனைவி இருந்தால் மனைவியும் கடவுளாகி விடுவார். பிள்ளைகளும் கடவுளாகி விடுவார்கள். அதாவது பல கடவுளர்கள் உருவாகி விடுகின்றார்கள். கடவுளுக்குரிய இலக்கணத்தில் ஒன்று அவனுக்கு நிகரோ, இணையோ இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ் ஒருவன்’’ என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

 அல்குர்ஆன் 112:1-4

எப்போது மனைவி, மக்கள் என்று கடவுளுக்கு ஆகிவிடுகின்றார்களோ அப்போது கடவுளுக்கு நிகரும் இணையும் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் தான் இந்தியாவில் கடவுள் பற்றிக் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு ஆபாசக் கதைகளெல்லாம் உலா வருகின்றன. கடவுளின் மான உறுப்பு கூட ஒரு பெரிய பரிமாணத்தில் வரையப்பட்டும் வடிக்கப்பட்டும் வழிபாடு செய்யப்படுகின்றது. ஒரு பக்கம் கடவுளுக்கு இணை ஏற்பட்டு விடுகின்றது. இன்னொரு பக்கம் காமம் என்ற தேவை ஏற்பட்டு விடுகின்றது. காமம் ஏற்பட்டதும் அதைத் தணிக்க மனைவி தேவைப்படுகின்றது. பிறரிடம் தேவை ஏற்படுபவன் ஒருபோதும் கடவுளாக முடியாது. இது அத்தனையையும் மேற்கண்ட அத்தியாயம் அழகாக விளக்கிவிடுகின்றது.

காக்க ஒரு கடவுள்; ஆக்க ஒரு கடவுளா?

கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள், ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று கடவுளின் அதிகாரத்தை முதலமைச்சர் சக அமைச்சர்களுக்கு துறைகளைப் பிரித்துக் கொடுப்பது போன்று பிரித்துக் கொடுக்கின்றார்கள். ஆனால் இறைவனின் அதிகாரம் பங்கிடுவதற்கும் பகிர்வதற்கும் உரிய அதிகாரம் இல்லை. ஆக்கல் என்ற படைக்கும் அதிகாரம் அவன் வசமே இருக்கின்றது.

வானம், பூமியை படைத்தவன்

நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு (தாவர) வகையையும் முளைக்கச் செய்தோம்.

இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழிகேட்டில் உள்ளனர்.

அல்குர்ஆன் 31:10,11

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

அல்குர்ஆன் 7:54

மனிதர்களை படைத்தவன்

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.

அல்குர்ஆன் 39:6

மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:21

காக்கும் கடவுள் அவன் தான்

“இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்’’ என்று பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யும்போது “தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’’ என்று கேட்பீராக!

இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’ என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:63,64

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

அழிக்க ஒரு கடவுள்

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

அல்குர்ஆன் 30:40

நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நம்மிடமே மீளுதல் உண்டு.

அல்குர்ஆன் 50:43

இறப்பே இல்லாதவன்; என்றும் இருப்பவன்

கடவுளாக என்பவன் எப்போதும், என்றும், என்றென்றும் இருப்பவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். அவன் சாகக்கூடாது. பிறப்பில்லாதவனைப் போன்று அவன் இறப்பும் இல்லாதவன்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

அல்குர்ஆன் 2.255

உணவில்லாதவன்; உறக்கமில்லாதவன்.

கடவுள் பசி, தாகமில்லாதவனாக இருக்க வேண்டும். அவ்வாறு பசி, தாகம் போன்ற பலவீனங்கள் இருந்தால் அவன் கடவுள் கிடையாது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:14

மறதி இல்லாதவன்; களைப்பில்லாதவன்.

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

அல்குர்ஆன் 19:64

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

அல்குர்ஆன் 50:38

தேவையுள்ளவன் தேவனல்லன்!

அல்லாஹ் தேவைகளற்றவன்.

அல்குர்ஆன் 112:2

இயற்கைத் தேவை இல்லாதவன்!

கடவுள் என்றால் அவனுக்கு சிறுநீர், மலம் கழித்தல் போன்ற இயற்கைத் தேவைகள் இருக்கக் கூடாது. கிறிஸ்தவர்கள் ஈஸா என்ற ஏசுவையும் மர்யம் என்ற மேரியையும் கடவுளாக வணங்குகின்றனர். அவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

மர்யமின் மகன் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர்.

அல்குர்ஆன் 5:75

உணவு உண்ணுபவர்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் மலம் ஜலம் கழித்தே ஆக வேண்டும்.

ஏசுவும் அவர்களது தாயாரும் மலம், ஜலம் கழிப்பவர்களாக இருந்தனர். அதனால் மலம், ஜலம் என்ற இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவர்கள் ஒரு போதும் கடவுளாக இருக்கமுடியாது என்று திருக்குர்ஆன் கடவுள் பற்றிய இலக்கணத்தை வரையறுத்துச் சொல்கின்றது.

கடவுள் மனிதானாக அவதாரம் எடுப்பாரா?

கடவுள் தான் ஏசுவாகப் பிறந்து வந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். மற்ற சமுதாய மக்களும் கடவுள் பல்வேறு பிராணிகள் வடிவத்தில் உருவமெடுப்பார், அவதாரம் எடுப்பார் என்று நம்புகின்றார்கள்.

அவனைப் போல் எதுவும் இல்லை.

அல்குர்ஆன் 42:11

கடவுளுக்கு ஒப்பு, உவமை அறவே கிடையாது. அதனால் கடவுள் எந்த மனிதரின் தோற்றத்திலும் ஊர்வன, பறப்பன, மிதப்பனவற்றில் எவரிலும் எவற்றிலும் அவதாரமெடுக்க மாட்டார், வடிவமெடுக்கமாட்டார்.

தூணிலும் இல்லை; துரும்பிலும் இல்லை

இவ்வளவு வல்லமையும் மாட்சிமையும் பொருந்திய இறைவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்டால் மக்கள் ‘அவன் தூணிலும் துரும்பிலும் இருக்கின்றான்’ என்று பதிலளிக்கின்றார்கள்.  அவர்கள் அவ்வாறே நம்பியிருக்கின்றார்கள்.

ஆனால் திருக்குர்ஆன் இதை அபத்தமான, ஆபத்தான கொள்கை என்று குறிப்பிடுகின்றது. காரணம், இது அவனது தனித்தன்மையை கேலிக் கூத்தாக்கி விடுகின்றது. காணும் பொருளெல்லாம் கடவுள் என்றால் அவற்றிற்கு ஏன் அழிவு ஏற்படுகின்றது? என்ற பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன.

இந்த அபத்தத்திற்கும் அர்த்தமற்ற உளறலுக்கும் நேர்மாற்றமாக, படைத்த இறைவன் வானத்திற்கு மேல் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான், அங்கிருந்து அவன் ஆட்சி செலுத்துகின்றான் என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 7:54

அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.

அல்குர்ஆன் 2:255

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 13:2

அந்த இறைவன் நமக்கு மேல் அமைந்திருக்கும் வானங்களுக்கு மேல் இருக்கின்றான்.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா?

அல்குர்ஆன் 67:16, 17

இறைவனுக்கு இணையில்லை; நிகரில்லை

அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன் 112:4

அவனுக்கு நிகரானவன் இல்லை.

அல்குர்ஆன் 6:163

ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.

அல்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை.

அல்குர்ஆன் 25:2

இவை அனைத்தும் திருக்குர்ஆன் கூறுகின்ற கடவுள் தொடர்பான இலக்கணங்கள். இந்த இலக்கணங்கள் உரைகற்களும் இரசாயனப் பரிசோதனைகளும் ஆகும்.

நீங்கள் கடவுள் என்று நம்பக்கூடியவர்களை, நம்பக்கூடியவைகளை இவற்றுடன் உரசிப் பாருங்கள். இந்த இலக்கணங்களின் படி கல்லையோ களிமண்ணையோ கடவுளாக்க முடியாது. அதுபோல் மனிதனையும் நீங்கள் கடவுளாக்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இலக்கணங்களுக்குட்படாதவர்களை கடவுளின் பட்டியலிருந்து தூக்கி விடுங்கள் என்பது திருக்குர்ஆன் விடுக்கும் அறிவார்ந்த கட்டளையாகும்.

இந்தத் திருக்குர்ஆனை உலக மக்களிடம் சமர்ப்பிக்க வந்த சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் கடவுள் கிடையாது திருக்குர்ஆன் அகில உலக மக்களுக்கு பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துகின்றது.

தனக்கே நன்மை, தீமை செய்ய இயலாத தூதர்

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

திருக்குர்ஆன் கூறக்கூடிய இந்த அளவுகோலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒவ்வொருவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஓர் அளவுகோலாகும். முஹம்மது நபி அவர்கள் உஹத் போர்க்களத்தில் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். இந்தத் தீமை தனக்கு வராமல் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை எனும் போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தீமையைத் தடுக்க முடியும் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்படி இந்தத் திருக்குர்ஆனின் அளவுகோல் அமைந்திருக்கின்றது.

கடவுள் என்றால், ஒருவனுக்கு நன்மையையும் தீமையையும் அளிக்கும் ஆற்றல் கொண்டவன். ஒருவரை, ஒரு பொருளைக் கடவுளாக ஏற்க வேண்டுமென்றால் இந்த அளவுகோலை வைத்தும் அளந்து பாருங்கள். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அத்தகையவர்களை, அத்தகையவற்றை கடவுள் பட்டியலிலிருந்து தூக்கி எறிந்து விடுங்கள்.

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்!

அல்குர்ஆன் 10:106

இறந்தவர்கள் கடவுளர்களா?

மக்கள் இறந்து போன பெரியார்களை, நல்ல மனிதர்களை வணங்குகின்றனர். முஸ்லிம்களும் சமாதி கட்டி, தர்ஹாக்கள் எழுப்பி இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். மனிதன் உயிருடன் இருக்கும் போதே கடவுள் கிடையாது எனும் போது இறந்த பின்பு எப்படிக் கடவுளாவான் என திருக்குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

அல்குர்ஆன் 46:5

கண்களால் கடவுளை காணமுடியுமா?

இப்போது அப்படிப்பட்ட ஆற்றல்மிகு அந்தக் கடவுளை நமது கண்களால் காண முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.

அல்குர்ஆன் 6:103

இந்த உலகத்தில் நிச்சயமாக யாரும் அந்த இறைவனைக் காண முடியாது. இறந்த பின்னர் ஒரு வாழ்க்கையிருக்கின்றது; இறந்த பின் ஓர் உலகம் இருக்கிறது. அங்கு தான் அந்த இறைவனைப் பார்க்க முடியும் என்று திருக்குர்ஆன் அகில உலகிற்கும் அறிவிக்கின்றது.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அல்குர்ஆன் 75:22,23

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்.

அல்குர்ஆன் 33:44

உண்மையான, உங்களையும் இந்த உலகத்தையும் படைத்த ஓர் இறைவனைக் காண வேண்டுமானால் மேற்கண்ட இலக்கணங்களின் அடிப்படையிலேயே கடவுளை நம்பி வணங்க வேண்டும். அப்படி வணங்குபவருக்கு இறந்தபிறகு அமையவிருக்கும் மறுமை வாழ்க்கையில் நிரந்தர சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான்.

திருக்குர்ஆன் கூறும் இந்த இலக்கணங்களின் அடிப்படையில் கடவுளை வணங்காமல், தங்கள் விருப்பத்திற்குக் கடவுளை உருவாக்கி வணங்கினால் அதுதான் இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும். இவ்வாறு இணை கற்பிப்பவர்களுக்கு அந்த ஓரிறைவன் மறுமையில் நிரந்தர நரகத்தைக் கூலியாகத் தருகின்றான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.

அல்குர்ஆன் 5:72

மனிதப் பலவீனங்கள் கொண்டவன் கடவுளாக இருக்க முடியாது என்ற ஒரு கண்ணோட்டத்தை மட்டும் மையப்படுத்தி குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை என்ற இந்த ஆக்கம் தரப்பட்டிருக்கின்றது.

இறைவனுக்கென்று தனிப்பண்புகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நீங்கள் திருக்குர்ஆனைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————————————————————

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!

அக்டோபர், 2010

கோவை ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் குமார் ஜெயின் என்பவரது மகன் ரித்திக் (வயது 7) மற்றும் மகள் முஷ்கின் (11) ஆகிய இருவரும் கால் டாக்சி டிரைவர் மோகன கிருஷணன் என்பவனால் கடத்திச் செல்லப்பட்டனர். அவனும் அவனது நண்பன் மனோகரன் என்பவனும் சிறுமி முஷ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு உடன்படாததால் முஷ்கினைத் தாக்கினர். உடன் இருந்த சிறுவன் ரித்திக்கையும் அவர்கள் தாக்கினர். அதன் பின்னர் இரண்டு பேரையும் பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்தனர்.

தீபாவளியையொட்டி நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தச் சிறார்களின் வீடு அமைந்துள்ள ரங்கே கவுடர் வீதியில் வசிக்கும் மக்கள் தீபாவளி கொண்டாடாமல் சோகத்தில் ஆழ்ந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் நடைபெற்று பத்தாவது நாளில் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் முக்கியக் குற்றவாளியான மோகன கிருஷ்ணனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

மோகன கிருஷ்ணன் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டதாகவும், அதனால் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக என்கவுண்டரில் அவனைக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் வழக்கமான கதை சொல்லப்பட்டாலும் இது திட்டமிட்ட கொலை தான் என்பதில் சந்தேகமில்லை.

குற்றவாளிகளுக்கு இதுபோன்று தண்டனை வழங்குவதற்குக் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. இது போலி என்கவுண்டர் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் மக்கள் மத்தியில் இந்தக் கொலைக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது.

‘‘இவ்வளவு சீக்கிரம் கோவை போலீஸார் எங்களது வேதனைக்குத் தீர்வு காண்பார்கள் என நினைக்கவில்லை. கமிஷனர் சைலேந்திர பாபு மூலமாக எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. இன்றுதான் எங்களுக்குத் தீபாவளி’’ என்று முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறினர்.

இதேபோல முஷ்கின், ரித்திக் ஆகியோரது வீடு உள்ள ரங்கே கௌடர் வீதியில் வசிக்கும் மக்கள் மோகன கிருஷ்ணனின் மரணத்தை தீபாவளி போல பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

டிசம்பர்,  2012

டெல்லியில் 23 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பயிற்சிப் பணியை முடித்து விட்டு, தனது ஆண் நண்பருடன் டேராடூனிலிருந்து டெல்லிக்குத் திரும்புகிறார். துவாரகா செல்லும் ஒரு பேருந்தில் அவர்கள் இருவரும் ஏறிய போது, ‘நீங்கள் இருவரும் இரவில் ஏன் பயணம் செய்கிறீர்கள்?’ என்று உள்ளே இருந்தவர்கள் கேட்கின்றனர். ‘இதைக் கேட்க உங்களுக்கு என்ன அவசியம்?’ என்று பதிலுக்கு ஆண் நண்பர் கேட்கின்றார். உடனே அவர் தாக்கப்படுகின்றார். அவரைக் காப்பாற்ற அந்தப் பெண் குறுக்கிடவும் அந்தப் பெண்ணைத் தரதரவென்று பின்னிருக்கைக்கு இழுத்துச் செல்கின்றனர். ஆறு பேர் அவளை மாறி மாறிக் கற்பழிக்கின்றனர். கற்பழித்ததுடன் நில்லாமல் அவளது அடிவயிற்றில் கடுமையாக அடித்து விட்டு, இரும்புக் கம்பியால் அந்த இருவரையும் தாக்கி ஆடைகளை உருவி ஒரு பாலத்தின் அருகே அரைகுறை நிர்வாணத்தில் வீசி எறிந்து விட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் டாமினி, நிர்பயா, அமானத் எனும் புனைப்பெயர்களால் குறிக்கப்பட்டார். செயற்கைச் சுவாச உதவியுடன் இருந்த அவர், மிகவும் ஆபத்தான கட்டத்தில் 2012 டிசம்பர் 26 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் 2012 டிசம்பர் 29 அன்று உயிரிழந்தார். இவரின் உண்மையான பெயர்  ஜோதி சிங் என்று பின்னாளில் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவை உலுக்கிய இந்தக் கோரச் சம்பவம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் காரசார விவாதத்தில் கலந்து கொண்ட பிஜேபி தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், பெண்களைக் கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குற்றவாளிகளில் ஒருவன் 18 வயது நிரம்பாத காரணத்தால் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு, மூன்று ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டான். ஒருவன் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். ஏனைய நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில், 2012, டிசம்பர் 20 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த புனிதா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்படுகின்றாள்.

ஜூலை, 2018

சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படிக்கிறார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவியை அக்குடியிருப்புக்குப் பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 17 பேர் 6 மாதங்களாக ஒவ்வொருவராக, தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம்’ என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்தச் சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த ஜூலை மாதம், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் குடியிருப்புக் காவலாளிகள், துப்புரவுத் தொழிலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைநகர் சென்னையில் நடந்த இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அப்பார்ட்மென்ட் அருகில் இருந்த பூ வியாபாரி ஒருவர், “இவனுங்களுக்கெல்லாம் சவுதி அரேபியால கொடுக்கிற மாதிரி தண்டனையைக் கொடுத்தாத்தான் சரியாவரும்…  பச்ச புள்ளப்பா..”  என்று கூறினார்.

காமக் கொடூரன்கள் 17 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சில சம்பவங்களையே இங்கு குறிப்பிட்டுள்ளோம். பொதுவாக, இந்தியாவில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள் என்று குற்றப் புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது. இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டோடு இருட்டாகக் கலந்து விடுகின்றன.

இதுபோன்று வெளிச்சத்திற்கு வருபவை மட்டுமே விவாதப் பொருளாக ஆகின்றன. அதுவும் ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். ஊடகங்களில் விவாதம் நடக்கும். அப்புறம் அத்தனையும் மறந்து போய் விடும். அப்புறம் வேறொரு விவகாரம் வரும்; அதுவும் மறந்து போகும். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்று யாரும் உருப்படியாகச் சொல்லவில்லை. அவர்களால் சொல்ல முடியாது.

இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்தபாடில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது. இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.

ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப் பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.

மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டில் மது பாட்டில்களின் மீது, ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், ‘பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது’ என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.

ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.

இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.

மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள். இக்கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் மக்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதிலிருந்து இதை அறியலாம்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலைக் குற்றம் செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவதால், கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப் போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப் பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?

 • குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
 • ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
 • குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன, குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விடச் சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச்சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

பெயரளவிலான இந்தத் தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

50 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

10 முறை திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 50 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச்சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால், நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே என்று எண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் சிறைச்சாலைகளில் சந்தித்துக் கொள்வதற்கும், கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்குப் புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர். சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது. மனிதாபிமான (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய், திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய், கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது. இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கொலை மற்றும் தாக்குதல்களுக்கான தண்டனைகள்

ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றாவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி, பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகள் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரத்தை, பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண் என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:178, 179

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 5:45)

அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்

அல்குர்ஆன் 17:33

கொலை செய்தனுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தால், கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? ‘கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது; தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது’ என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

திருட்டுக் குற்றம்

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 5:38

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.

முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக்கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது.

“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். அந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறி கொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

மகளின் திருமணத்திற்காகக் கொண்டு சென்ற பணத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறான். திருமணம் நின்ற துக்கத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொள்கின்றது. இவர்களுக்காக யார் பரிதாபப்படுவார்கள்?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய குற்றவாளியைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்.

ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது.

விபச்சாரக் குற்றம்

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 22:2)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர். திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் வழங்கியுள்ளார்கள்.

கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்’’ என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்’’ என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்என்று தீர்ப்புக் கூறினார்கள்’’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்’’ என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, “உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக’’ என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836

ஆண், பெண் இருவரும் இணங்கி செய்யும் விபச்சாரத்திற்கே இந்தத் தண்டனை என்றால், அப்பாவிப் பெண்ணை வன்புணர்வு செய்யும் காமக் கொடூரன்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

இதுபோன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கம் அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பது தான். எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும் என்பதால் “மக்கள் பார்த்துக் கொண்டிருக்கட்டும்’’ என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே தீர்வு

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமிய தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால், உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன் 24:4)

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு 80 கசையடி வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது.

குற்றங்கள் குறைந்து மனித சமுதாயம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு, குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள் தான் தீர்வு. இந்தக் குர்ஆனிய சட்டங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம் இன்ஷா அல்லாஹ்.

—————————————————————————————————————————————————————————————————————

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன்

சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன.

சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம்.

இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல மக்கள் மீது அடக்குமுறை பாய்ந்தது.

 • அவர்கள் உயர்குல மக்கள் வசிக்கும் இடங்களில் வசிக்கக் கூடாது.
 • ஊரின் ஒதுக்குப் புறமாக வசிக்க வேண்டும்.
 • ஊரின் பொதுக் கிணற்றிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
 • உயர்சாதியினருக்கு முன் தலைகுனிந்து நடக்க வேண்டும்.
 • உயர்குலத்தவர் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களைத் தொட்டுவிடக் கூடாது.
 • உயர்குலத்தவரின் வீட்டுக்குள் சென்றுவிடக் கூடாது.

இப்படிப் பல்வேறு விதங்களில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் பல இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இத்தகைய, தீண்டாமையை ஒழிப்பதற்கு இஸ்லாம் மட்டுமே தகுந்த தீர்வை முன்வைக்கிறது. தகுந்த நடவடிக்கைகள் மூலம் உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்துகின்றது.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தின் அடிவேரையும் அதன் கிளைகளையும் முழுமையாக வெட்டி எறிகின்றது.

இந்தச் சீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஒரே ஒரு திருமறை வசனம் போதும். அதை அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டால் போதும். இதோ படைத்தவன் பேசுவதைக் கேளுங்கள்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்  4:1)

ஒரேயொரு ஆண், பெண்ணில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித இனமும் பல்கிப் பெருகியது என்று குர்ஆன் சொல்கிறது. இந்த வசனம் ஒட்டுமொத்த தீண்டமையையும் ஒழிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.

ஏனென்றால், தங்களை மேன்மையாகவும் அடுத்தவர்களை இழிவாகவும் இறைவன் படைத்திருப்பதாக சிலர் ஆழமாக நம்புகிறார்கள். கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவன் உயர்ஜாதி என்றும் கால் பகுதியிலிருந்து படைக்கப்பட்டவன் தாழ்ந்த ஜாதி என்றும் அவர்கள் நம்பும் வேத நூல்களும் சொல்கின்றன. இதுதான் தீண்டாமையின் தொடக்கம்.

இந்த மனநிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே தீண்டாமையை ஒழிப்பது சாத்தியமாகும். அப்போதுதான் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஆகவே, ஓர் உலகளாவிய உண்மையை எடுத்துரைத்து மக்களிடமுள்ள குருட்டு நம்பிக்கையை முதலில் குர்ஆன் களைகிறது. தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தை முளையிலேயே முற்றாகக் கிள்ளி எறிந்து விடுகிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு தாய் தந்தையரின் தொடர்ச்சி என்பது மட்டுமல்ல! அவர்களைப் படைத்த இறைவனும் ஒருவன் தான் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

(அல்குர்ஆன் 39:6)

இந்த வசனம் தீண்டாமைக்கு எதிராக மற்றொரு சம்மட்டி அடியைக் கொடுக்கிறது. எப்படி?

தீண்டாமையின் பெயரில் மக்களைக் கூறுபோட்டவர்கள் ஒருகட்டத்தில் கடவுள்களையும் பிரித்துக் கொண்டார்கள். உயர்குல மக்களுக்குரிய தெய்வங்கள் வேறு; தாழ்ந்த குல மக்களுக்குரிய தெய்வங்கள் வேறு என்று பிரித்தார்கள்.

எந்தளவுக்கு என்றால் உயர்குலமென தம்பட்டம் அடிப்பவர்கள், தாழ்ந்த சாதியினரின் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள், அவர்கள் வணங்கும் தெய்வங்களை வணங்க மாட்டார்கள், அந்த தெய்வங்களை திருவிழாக்களின் போது  தங்கள் பகுதிக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இதற்காக இன்றளவும் பல கலவரங்கள் நடக்கின்றன. இதில் கொல்லப்படுவோரும் உள்ளனர்.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம், அவர்கள் நம்பும் பொய்யான வேத நூல்களும் அதன் அடிப்படையிலான கடவுள் கொள்கையும் தான்.

இதற்கு மாறாக, திருக்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கமாகத் திகழ்கிறது. அது கூறும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் கோட்பாட்டில் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும். இதோ குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

மனிதர்களிடம் இருக்கும் அனைத்து வித்தியாசங்களும் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிந்து கொள்வதற்குத் தானே தவிர அதன் மூலம் பெருமை அடிப்பதற்கு, சண்டையிட்டு சீரழிந்து போவதற்கு அல்ல.

இதை உணர்ந்து கொள்ளாத மக்கள் குலச் சண்டைகள், இன மோதல்கள் மூலம் சமூகத்தை நாசப்படுத்துகிறார்கள். இதுபோன்ற சீர்கேடுகளை விட்டும் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு ஒரே வழி குர்ஆனிய போதனகளை ஏற்று நடப்பதுதான். இதற்கு வரலாற்றில் நிறைய சான்றுகள் உள்ளன.

முஹம்மது நபியவர்களின் காலத்தில் குறைஷ் எனும் குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மிகவும் உயர்வாகக் கருதினார்கள்.

ஹஜ் எனும் வணக்கத்தில், மக்களெல்லாம் அரஃபா எனும் இடத்தில் தங்கும் போது இவர்கள் மட்டும் முஸ்தலிஃபா எனும் இடத்தில் தங்குவார்கள். இதன் மூலம் மற்ற குலத்தினரை இழிவாகக் கருதினார்கள். இதைத் திருக்குர்ஆன் மூலம் இறைவன் கண்டித்தான்.

இனிமேல் அனைவரும் ஒரே இடத்தில் தான் தங்க வேண்டும்; இதற்கு முன்பு மற்றவர்களிடம் பாகுபாடு காட்டியதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கட்டளையிட்டான்.

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்  2:199)

(ஆரம்ப காலத்தில் ஹஜ்ஜின் போது) மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 1665

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் கொள்கையைச் சாந்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கி விடுவார்கள். (ஹரம் – புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள்எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் ஒன்பதாவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்எனும் (திருக்குர்ஆன் 02:199வது) இறைவசனமாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 4520

மேற்கூறிய இறைவசனம் இறங்கிய பிறகு, ஹஜ் எனும் முக்கியக் கடமையில் அனைவரையும் சமமாக நடத்தியதன் மூலம் இனவெறியை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது. இதிலும் அகில மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், “இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 1664

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.

(நூல்: முஸ்லிம் 2137)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் அவர்கள் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் பாராமல் மக்களோடு மக்களாக ஒரே இடத்தில் தங்கினார்கள். அதுமட்டுமல்ல, இனவெறிக்கு, குலவெறிக்கு எதிராக அழுத்தம் திருத்தமாக எச்சரிக்கை விடுத்தார்கள்.

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

இதுபற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா நபி (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.

உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 3475

சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே! எனது மகளாக இருப்பினும் ஒரே நீதி தான் என்பதன் மூலம் மக்கள் அனைவரும் சமம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்.

இனம், குலத்தின் பெயரால் மக்களிடம் பாரபட்சம் காட்டுவது சமூகத்தை அழித்துவிடும் என்பதோடு அது அறிவற்றவர்களின் அடையாளம் என்றும் கடுமையாக எச்சரித்தார்கள்

“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டுக் கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமேஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ்

நூல்: முஸ்லிம் 3440

நாங்கள் (பனூ முஸ்தலிக் எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, “அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)என்று அழைத்தார். அந்த முஹாஜிர், “முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)என்று அழைத்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து), “இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5041)

தனது இனத்தைச் சேர்ந்தவன் என்ன தவறு செய்தாலும் எப்போதும் அவனுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும் என்கிற இனவெறியை விட்டொழிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல! அவர்களிடம் மற்றொரு மாற்றமும் வர வேண்டி இருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் ஜாதியின் பெயரால் மக்கள் ஒதுக்கப்படுவதைப் போன்று அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நிறவெறி தலைவிரித்து ஆடுகிறது.

மனித இனத்திற்கு அப்பாற்பட்ட தனி இனத்தைப் போன்று கருப்பு நிற மக்களை வெள்ளையர்கள் கேவலமாக நடத்துகிறார்கள்.

இவ்வாறு நிறத்தின் பெயரால் பாகுபாடு பார்ப்பவர்களும் திருந்த வேண்டும். அவர்களுக்காகவும் முஹம்மது நபி (ஸ) அவர்கள் சமத்துவம் குறித்துப் பாடம் நடத்தியுள்ளார்கள்

அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (5011)

நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதாஎன்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்என அபூதர் கூறினார்.

அறிவிப்பவர்: மஃரூர், நூல்: புகாரி (30)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

நூல்கள்: நஸாயி (4192), திர்மிதி (1706)

அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் கூட இன வெறி, நிற வெறி பல நாடுகளில் இன்னும் சாகாமல் இருக்கிறது.

ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் அடிமைத்தனத்தை பூண்டோடு ஒழித்தார்கள்.

கருப்பு நிற அடிமை தலைவராக இருந்தாலும் கட்டுப்படு என்ற தமது கட்டளையை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

கருப்பு நிற அடிமையாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய தோழர் பிலால் (ரலி) அவர்களை தொழுகைக்கு மக்களை அழைக்கும் உன்னதமான பொறுப்பை கொடுத்தார்கள்.

இதன் மூலம் இறைவனின் அன்பையும் அருளையும் பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகளுக்கு உயர்ந்த குலத்தவராகக் கருதப்படும் நபர்கள்தான் தலைமையேற்க வேண்டும் என்கிற மரபை நபியவர்கள் மாற்றினார்கள். அதுபோன்று நெடுங்காலமாக மக்களிடம் குடி கொண்டிருந்த மொழி வெறியையும் மாய்த்தார்கள்.

அரபி மொழிதான் உயர்ந்த மொழி; அந்த மொழியைப் பேசத் தெரியாதவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு அரபிகள் மொழி வெறி முற்றியவர்களாக இருந்தார்கள். இந்த சிந்தனைப் போக்கும் தவறென முஹம்மது நபியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அரபிமொழியல்லாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 22391)

இன்றும் கூட தங்கள் மொழியே தேவ மொழி; சொர்க்கத்தின் மொழி என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பிற மொழி பேசுவோரை ஏளனமாக நினைக்கிறார்கள். இத்தகைய ஆட்களுக்கும் குர்ஆன் அழகிய அறிவுரை வழங்கியுள்ளது.

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளனவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்  30:22)

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.

(அல்குர்ஆன் 14:4)

மனிதர்கள் பல மொழிகள் பேசுவது அவர்களைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கும் அவன் அனைத்து ஆற்றலும் கொண்டவன் என்பதற்கும் பெரும் சான்றாகும்.

அனைத்து சமுதாயத்திற்கும் அவர்களின் தாய்மொழியிலேயே தூதர்கள் வந்தார்கள். இதன் மூலம் எல்லா மொழியும் சமம் என்று குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.

இப்படி தீண்டாமைக்கு எதிராகப் பல கோணங்களில் இஸ்லாம் சாட்டையைச் சுழற்றுகிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இனம், மொழி, நிறம், செல்வம் போன்ற வேறுபாடுகள் மூலம் பெருமை கொள்வதில் அர்த்தமில்லை.

ஒவ்வொரு நொடியும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனுக்குப் பயந்து, நமது சிந்தனைகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்வதில் தான் உயர்வு இருக்கிறது என்று குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் விளக்குகின்றன.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

(அல்குர்ஆன் 22:37)

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (5012)

அழியும் இந்த உலக வாழ்வுக்குப் பிறகு நிரந்தரமான வாழ்க்கை உள்ளது. அதில் சொர்க்கம் செல்பவர்களாக இருக்க வேண்டுமெனில் இங்கு ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக இருப்பது கட்டாயம்.

இத்தகைய இஸ்லாம் தான் அனைத்துப் பிளவுகளையும் மோதல்களையும் தடுத்து நிறுத்துவதற்குரிய வழிமுறை என்பதைப் பிறமத சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வம், கல்வி, அதிகாரம், ஆட்சி என்று தேவையானவற்றை எல்லாம் அடைந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்படுபவர்கள் சரி சமமாக மதிக்கப்படுவதில்லை. அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

காரணம் தீண்டாமை உணர்வு, ஆன்மீக நம்பிக்கையுடன் இரண்டறக் கலந்து வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது. அந்த அர்த்தமற்ற ஆன்மீக சிந்தனையை விட்டு வெளியே வந்து, திருக்குர்ஆன் ஒளியில் இஸ்லாத்தில் பயணத்தைத் தொடரட்டும். மறுநொடியே தீண்டாமைக் கொடுமையை விட்டும் அவர்களுக்கு முழுப்பாதுகாப்பு கிடைக்கும்.

இதை எடுத்துச் சொல்லவே திருக்குர்ஆன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டினை மையமாக வைத்து மார்க்கம் மற்றும் சமூகப் பணிகளைச் செய்து ஈருலகிலும் வெற்றி பெற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————————————

சுயமரியாதை போதித்த  பகுத்தறிவு வேதம்

இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பரவச் செய்திருக்கின்றான். இந்த உலகத்தில் ஏராளமான உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவு என்ற சிந்தனை அறிவு மனிதர்களைத் தவிர வேறு எந்தப் படைப்புக்கும் வழங்கப்படவில்லை.

மேலும், மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருகின்ற சிந்தனை அறிவின் காரணத்தினால் எல்லா உயிரினங்களையும் விட மனிதர்களே படைப்பில் சிறந்தவர்கள்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த படைப்பாய் கருதப்படுகின்ற மனித குலத்துக்கு இறைவன் ஏராளமான குணநலன்களை வழங்கி வாழச் செய்து கொண்டிருக்கின்றான். இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற குணங்களில், பல நற்குணங்களும் நிறைந்து கிடக்கின்றன. மேலும், மனிதர்களை சோதிப்பதற்காக சில தீய குணங்களையும் இறைவன் வழங்கியிருக்கின்றான்.

இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்பிற்குரிய, கண்ணியத்தைப் பெற்றுத் தருகின்ற குணநலன்களில் ஒன்று சுயமரியாதை. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத, அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாகும்.

சுயமரியாதையை இழந்து இந்த உலகத்தில் வாழ்வதென்பது படுமோசமான வாழ்க்கையாகக் கருதப்படும். பிற மக்களால் எள்ளி நகையாடக்கூடிய, கேலி கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய வாழ்க்கையாக மாறிவிடும். மக்கள் மரியாதையின்றி நடத்தக்கூடிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.

இதுபோன்ற ஏராளமான காரணங்களுக்காகத் தான் எந்த மதமும், சித்தாந்தமும், மார்க்கமும், கோட்பாடும் கற்றுத் தராத அற்புதமான வாழ்க்கைப் பாடத்தை இஸ்லாமிய மார்க்கம் அகில உலக மக்களுக்கும் சுயமரியாதையின் முக்கியத்துவத்தைப் பற்றி போதிக்கின்றது.

ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழ்கின்ற காரணத்தினால் மட்டும் தான், வெட்க உணர்வோடும், தன்மானத்தோடும், மரியாதையோடும் வாழ முடியும் என்பதை ஆணித்தரமாகவும், அழுத்தந்திருத்தமாகவும் அனைத்து மக்களின் உள்ளங்களிலும் ஆழமாக இஸ்லாமிய மார்க்கம் பதிய வைக்கின்றது.

தன்மானத்தைக் காப்பாற்றும் சுயமரியாதை

சுயமரியாதை என்பது ஒரு மனிதனின் தன்மானத்தைக் காக்கும் கேடயமாக இருக்கின்றது. யார் சுயமரியாதையை இழந்து விடுகின்றாரோ, அவர் தன்மானத்தை இழந்து விடுவதற்குச் சமம் என்று இஸ்லாம் ஆழப்பதிய வைக்கின்றது.

திருக்குர்ஆனை விளக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமரியாதைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தொண்டர் படையினர்களுக்கும், தோழர்களுக்கும் பாடம் நடத்திப் பறைசாற்றியிருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையைவிடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடத்தில் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.

ஆதாரம்: புகாரி 1427

சுயமரியாதையோடு வாழ்வது தான், படைத்த இறைவனுக்கு விருப்பமானது என்றும், சுயமரியாதையோடு வாழ்பவரை இறைவன் சுயமரியாதையோடு வாழச் செய்கின்றான் என்றும் அற்புதமான முறையில் பாடம் நடத்துகின்றார்கள்.

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது’’ என்றும் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 1429

இந்த செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! தன்னுடைய மக்களுக்கு உபதேசம் செய்யும் போது, சுயமரியாதையை எந்த அளவுக்கு மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், முக்கியத்துவம் வாய்ந்த பண்பாகவும் வைத்து உபதேசிக்கின்றார்கள்.

மேலும் யாசகம், கையேந்துதல் போன்ற பண்புள்ளவர்களுக்கு அழகான முறையில் அறிவுரை பகர்கின்றார்கள். இன்றைய காலத்தில் மரியாதையை இழந்து பிறரிடத்தில் யாசகம் கேட்கும் மோசமான செயலைச் செய்து வருவதைப் பார்க்கின்றோம். அத்தகைய குணம் படைத்தவர்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பும் விதமாக, ஆழமான கருத்தாக சுயமரியாதையைப் பேணுங்கள் என்ற முக்கியமான அறிவுரையை எடுத்துரைக்கின்றார்கள்.

வயிற்றுப் பசிக்கு விறகு வெட்டுவது சிறந்தது

இன்றைய நவீன காலத்தில் யாசகம் கேட்பவர்கள், உழைத்து உண்ணுபவர்களை விட பணவசதி படைத்தவர்களாக வலம் வருகின்றார்கள். எந்தளவிற்கு என்றால், பிறரிடத்தில் யாசகம் கேட்டுக் கேட்டே பல இலட்சங்களையும், கோடிகளையும் சேமித்து வைத்த எத்தனையோ நபர்களைப் பார்க்கின்றோம்.

இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கும், தேவைக்கு அதிகமாக யாசகம் கேட்டு, அதையே பிழைப்பாகக் கொண்டவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கம் அழகிய போதனையை எடுத்துச் சொல்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்றுப் பிழைத்து), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதையுடன்) வாழ்வதும் அதைத் தர்மம் செய்வதும், ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும் சரிமறுத்தாலும் சரி. மேலிருக்கும் கை, கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும்.

ஆதாரம்: முஸ்லிம் 1884

சுயமரியாதையை ரத்தினச் சுருக்கமாக, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் கூட ஆழமாகப் பதிய வைக்கின்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.

பிறரிடத்தில் யாசிக்காதே! அவ்வாறு யாசிக்க நேரிட்டால் சிரமப்பட்டு முதுகிலே விறகு சுமந்து, அதை விற்றுப் பிழைத்த பொருளாதாரத்தில் உணவு உட்கொள்.

மேலும், வாங்குகின்ற கையை விட, கொடுக்கும் கை தான் சிறந்தது என்று ஒட்டுமொத்த சுயமரியாதையின் அம்சத்தையும் ஒரே வார்த்தையில் சாறு பிழிந்து வழங்குகின்றார்கள். எனவே, நாம் யாரிடமும் கையேந்தாமல் சுயமரியாதையோடு வாழ முயற்சி செய்ய வேண்டும்.

புரோகிதத்தின் பெயரால் சுயமரியாதை இழப்பு

இன்றைய நவீன காலத்தில் மனிதர்களின் அறிவின் வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கின்றது. ஏராளமான புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து ஆச்சரியப்பட வைக்கின்றான். இப்படிப்பட்ட அறிவியலின் உச்சத்திற்குச் சென்ற மனிதன், மதம் என்று வந்துவிட்டால் தன்னிலை மறந்தவனாக சுயமரியாதையை குழிதோண்டிப் புதைத்து விடுகின்றான்.

இந்த இருபதாம் நூற்றாண்டில் அதிபயங்கரமான, அசர வைக்கின்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அறிவை கன கச்சிதமாகப் பயன்படுத்துகின்ற மனிதர்கள், மதத்தின் பெயரால், வழிபாட்டின் பெயரால், மதகுருமார்களின் பெயரால், சாமியார்களின் பெயரால் சுயமரியாதையை இழந்து, பகுத்தறிவு  உள்ள மனிதனா இவன் என்று கேட்கின்ற அளவுக்குத் தள்ளப்படுகின்றான்.  இத்தகைய குணம் படைத்த மனிதனின் நிலையை என்னவென்பது?

மேலும், மதகுருமார்கள் என்பவர்கள் மக்களை ஏமாற்றி முட்டாள்களாகவும், படுபாதாளத்தில் தள்ளி விடுபவர்களாகவும், மரியாதையை இழக்கச் செய்கின்ற செயலைத் தூண்டி விடுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

கடவுளின் நேசத்தைப் பெற வேண்டுமா? கடவுளின் அன்பைப் பெற வேண்டுமா? கடவுள் உன்னைக் கண் திறந்து பார்க்க வேண்டுமா? கடவுள் உன்னுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டுமா? நான் உனக்கு ஒரு வழியை திறந்து வைக்கின்றேன் என்ற பெயரால் மதகுருமார்களின் அட்டூழியம், அராஜகம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

கடவுளின் நேரடிக் கண்காணிப்பில், கடவுளின் நேசத்திற்குரியவனாக இருக்கின்ற எனக்குப் பணிவிடை செய்யுங்கள்! நான் கேட்பதையெல்லாம் அன்பளிப்பாக வழங்குங்கள்! என்னுடைய காலில் விழுங்கள்! என்னுடைய காலில் உள்ள புனிதத்தை கழுவிக் குடியுங்கள் என்பது போன்ற பல்வேறு செயல்களைச் செய்ய வைத்து தன்னைக் கடவுளின் அந்தஸ்துக்குக் கொண்டு போய் சேர்க்கின்றனர். அப்பாவி மூட பக்தர்கள் சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு சுயமரியாதைக்கு வேட்டு வைக்கின்றனர். சுயமரியாதையைக் காலில் போட்டு மிதிக்கின்றனர்.

எந்த மதமும், எந்த மதத் தலைவரும் சொல்லாத அற்புதமான சொல்லாடலை அகில உலகத்திற்கும் பேரருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  தான் இறைவனின் எப்படிப்பட்ட தூதர் என்பதை இரத்தினச் சுருக்கமாகப் பதிய வைக்கின்றார்கள்.

நபிகள் நாயகத்தைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறும்போது;

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடுதான் இருக்கிறது’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 41:6

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

இந்த இரண்டு வசனங்களையும் ஆழ்ந்த சிந்தனையோடு படித்துப் பாருங்கள்! திருக்குர்ஆன் புரோகிதத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்ற அத்தனை வாசல்களையும் அடைக்கின்றது.

உலகில் எந்த இடத்திலும் சிலை வைக்கப்படாத, முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பின்பற்றப்படுவதற்கு எந்தப் பக்கமும் இல்லாதவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். ஆனால் கோடான கோடி மக்களின் உள்ளங்களில் தங்களின் உயிரை விட மேலாக மதிக்கத்தக்கவர். தங்களின் வாழ்க்கையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்த வாழ்க்கைப் பாடத்தை அச்சுப் பிசகாமல் பின்பற்றி நடப்பவர்கள் கோடிக்கணக்கானோர்.

இத்தகைய பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களே ‘நான் மனிதன் தான்’ என்று ஒரே போடாகப் போட்டு உடைக்கின்றார்கள் என்றால் மற்ற மதகுருமார்களெல்லாம் இவர்களின் கால் தூசு அளவுக்குக் கூட வருவார்களா?

நான் மனிதன் தான்; எனக்கும், உங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று உங்களுக்கு நான் பாடம் நடத்துகின்றேன். இந்த ஒரு அம்சத்தைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பதை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றார்கள்.

நான் மனிதன் தான் என்ற வார்த்தைப் பிரயோகத்திலிருந்தே, மனிதனுக்கு இருக்கின்ற அத்தனை பலவீனங்களும் எனக்கும் உண்டு; தனிப்பட்ட முறையில் எந்த மிகப்பெரும் சக்தியும், ஆற்றலும் எனக்கில்லை என்பதை உலகிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறைசாற்றுகின்றார்கள்.

காலில் விழுந்து சுயமரியாதை இழத்தல்

மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும். ஆனால் இன்றைக்குத் தன்னுடைய காலத்தில் வாழ்கின்ற அல்லது வாழ்ந்து மறைந்த சிலரை, மனிதர்கள் என்ற பார்வையில் அணுகாமல் புனிதர்களாகக் கருதுகின்றார்கள்.

கணவனின் காலில் மனைவி விழுகின்றாள். அதிகாரம் படைத்தவனின் காலில் பாமரன் விழுகின்றான். பணக்காரனின் காலில் ஏழை விழுகின்றான். தாய், தந்தையரின் காலில் பிள்ளைகள் விழுகின்றார்கள்.

சாதாரண மலஜலத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற, இயற்கைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய, உணவு உண்ணுகின்ற, உறங்குகின்ற, தாகம் எடுக்கின்ற, நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுகின்ற, உச்சகட்ட நோய் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்ற, மரித்துப் போகின்ற இது போன்ற ஏராளமான மனிதப் பண்புகள் அடங்கிய, மனிதனுக்கு இருக்கின்ற அத்துணை பலவீனத்தையும் உள்ளடக்கியிருக்கின்ற மதகுருமார்களை, மனிதப் படைப்பைத் தாண்டி கடவுளின் அந்தஸ்துக்கு நிகராக்குகின்றார்கள்.

பல்வேறு பலவீனத்தை கொண்டிருக்கின்ற, சகமனிதர்களின் காலில் விழுவதைக் காட்டிலும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற ஒரு செயலைக் காட்ட முடியுமா? காலில் விழுவதென்பது சுயமரியாதைக்கு ஏற்படுகின்ற அவமானம். வெட்கித் தலைகுனிய வைக்கின்ற செயல். பகுத்தறிவை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல்.

கடுமையாகப் பார்க்கப்பட வேண்டிய இந்தச் செயலை சர்வ சாதாரணமாக பாமர மக்களும், படித்த மக்களும், அறிவிற் சிறந்தவர்களும், குறைமதி உள்ளவர்களும் செய்து வருவதைப் பார்க்கின்றோம்.

இந்தச் செயலை இஸ்லாமிய மார்க்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகப் பார்க்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்கு எவ்வளவு அற்புதமான கலாச்சாரத்தை, சுய மரியாதைக்குக் கண்ணியம் சேர்க்கின்ற காரியத்தைக் கற்றுத் தருகின்றார்கள் என்பதற்கு இது ஒரு அற்புதமான சான்று.

நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கின்றார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் 6545

நான் ஹியரா நகருக்கு சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்என்று (என் மனதுக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்கு பின்) எனது அடக்கத்தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். மாட்டேன்என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) ஆம்அவ்வாறு செய்யக் கூடாது என்று கூறினார்கள்.

ஆதாரம்: அபூதாவூத் 1828

இந்தச் செய்தியை நன்றாக ஆழமாக படித்துப் பாருங்கள்! யார் இவர்? சாதாரண மனிதரா? ஒரு நாட்டின் தளபதி! ஜனாதிபதி! குடியரசுத்தலைவர்! அதிபர்! பிரதமர்! இப்படி அனைத்துப் பதவிகளுக்கும் சொந்தக்காரர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

இன்னும் சொல்வதாக இருந்தால் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்! ஒழுக்கசீலர்! உண்மையாளர்! நம்பிக்கைக்குரியவர்! நாணயமிக்கவர்! இப்படிப் பலதரப்பட்ட நற்குணங்களை உடையவர்.

இப்படிப்பட்ட நற்குணத்திற்கு சொந்தக்காரரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சாஷ்டாங்கம் செய்ய அதிகத் தகுதியும், நியாயமும் இருக்கின்றது. ஆனால் காலில் விழுவதை அவர்கள் விரும்பவில்லை; மாறாக வெறுத்திருக்கின்றார்கள்.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குச் சொன்ன கட்டளை என்னவென்றால், சிரம் பணிதல் என்ற காரியத்தை, எனக்கு மட்டுமல்ல; உலகத்தில் இருக்கின்ற யாருக்கும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கையாகப் பதிய வைத்திருக்கின்றார்கள்.

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகின்ற தலைவராக இருந்தார்கள். அவர்களுடைய கடைசி காலகட்டத்தில் நிகழ்ந்த அற்புதமான சம்பவத்தை எண்ணிப் பார்த்தால், சுயமரியாதைக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றர்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும்  குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 699

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் உட்கார்ந்தவர்களாக தொழுகை நடத்துகின்றார்கள். மக்களெல்லாம் நின்ற நிலையில் தொழுவதைப் பார்த்து விட்டு, சுயமரியாதையைத் தூக்கி நிறுத்துகின்ற உபதேசத்தை எடுத்துச் சொல்கின்றார்கள். இதுபோன்ற ஏராளமான செய்திகள் சுயமரியாதையை முக்கியத்துவம் வாய்ந்த பண்பாக இஸ்லாம் வலியுறுத்துகின்றன.

பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள், பிறர் காலில் விழலாமா?

சிந்தனைத்திறனைப் பெற்றிருக்கின்ற யாராக இருந்தாலும் சகமனிதர்களின் காலில் விழுவதையும், விழப்படுவதையும் வெறுப்பார்கள். அப்படித்தான் இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தருகின்றது.

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமமே! பிறகு ஏன் சக மனிதர்களின் காலில் விழுகின்றீர்கள்?

ஒரு மனிதன் அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, உயர் பதவியில் இருந்தாலோ, மதகுருவாக இருந்தாலோ அவனது காலில் அந்தஸ்தில் குறைந்த மனிதன் விழுகின்றான். இரண்டு நபர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அரசியல் தலைவர்களின் கால்களிலும், பண வசதி படைத்தவர்களின் கால்களிலும் விழுந்து சுயமரியாதையை இழக்கின்றார்கள். ஏன்?

போட்டி, பொறாமை, ஆசை, பேராசை, பசி, பதவியைப் பெறுதல், பொருளாதாரத்தின் மீது மோகம் என்ற இதுபோன்ற ஏராளமான பலவீனங்கள், யார் காலில் விழுகின்றோமோ அவர்களுக்கும் இருக்கின்றது. பிறகு எதற்காகக் காலில் விழுந்து மரியாதை செய்கின்றீர்கள்?

யாருடைய கால்களுக்கு பாதபூஜை செய்கின்றீர்களோ அத்தகைய மனிதனும் மலம், ஜலத்தை சுமந்து கொண்டுதான் வாழ்கின்றான். அத்தகைய மனிதர்களுக்கு பாதபூஜை செய்யலாமா?

இதுபோன்று சக மனிதர்களின் காலில் விழுவது சுயமரியாதையை குழிதோண்டிப் புதைப்பதாக இல்லையா?

மனிதனை மனிதனாகப் பாருங்கள்! காலில் விழுவதோ, கால்களை கழுவிக் குடிப்பதோ, கைகளில் முத்தம் கொடுப்பதோ, கைகட்டி நிற்பதோ, தலைகுனிந்து வணங்குவதோ இதுபோன்ற சுயமரியாதையை பாதிக்கச் செய்து, தன்மானத்தை இழக்கச் செய்கின்ற எந்தச் செயலாக இருந்தாலும், அப்படிப்பட்ட இழிசெயலை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். எந்தச் சூழல் வந்தாலும் யாருக்கும் அடிபணிந்து நின்று, யாருடைய கால்களிலும் விழ மாட்டேன்! படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம்பணிவேன்! படைத்த இறைவனின் சன்னிதானத்தில் மட்டுமே வீழ்ந்து கிடப்பேன் என்ற சபதத்தை ஆழமாக உள்ளத்தில் ஏந்தியவர்களாக வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக்குவோம்! சுயமரியாதையைப் பேணுவோம்! தன்மானம் காப்போம்!

—————————————————————————————————————————————————————————————————————

மாமறை செயல்படுத்திய  மதுவிலக்குத் திட்டம்

மனிதனின் அறிவுக்குத் திரை போட்டு, பாவமான காரியங்களில் ஈடுபடச் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது மதுவாகும். இந்த மதுப் பழக்கம் அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை இருந்து வருகிறது.

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர் பொருளாதாரத்தை இழக்கிறார்கள். சிலர் குடும்பத்தை இழக்கிறார்கள். சிலர் கற்பை இழக்கிறார்கள். சிலர் இவையனைத்தையும் இழக்கிறார்கள். சிலர் உயிரை இழக்கின்றார்கள்.

இந்த மோசமான பழக்கத்தை இஸ்லாம் முற்றிலும் ஒழிக்க, பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மதுப் பழக்கத்தில் இருந்தவர்களை படிப்படியாக நிறுத்தி, முற்றிலுமாக மதுவை ஒழித்தது.

மதுவை படிப்படியாக தடுத்த திருக்குர்ஆன்

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

அல்குர்ஆன் 4:43

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90,91

நான், அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், “வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்‘’ என்று கூறினர். -இது மது தடை செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வாகும்.- அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன்.

அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.

அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் அன்சாரிகளை விட முஹாஜிர்களே சிறந்தவர்கள்’’ என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்படுத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும்’’ (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (4789)

அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தின் கடைசி வசனம் இறங்கிய போது அதை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி (2084), முஸ்லிம் (3221)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல வகை மதுக்கள் பழக்கத்திலிருந்தன. எனவே அதை ஒழிக்க மது தொடர்பாகப் பல எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் சொல்லி மக்களை மதுவிலிருந்து தடுத்தார்கள்.

நபிகளார் காலத்து மதுவகைகள்

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்) ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை. ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரி (5581), முஸ்லிம் (5769)

அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம் பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான்  மதுபானமாகும் என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (5584), முஸ்லிம் (4010)

மது, ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை 5. தேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்: புகாரி (5589), முஸ்லிம் (5769)

போதை தரும் அனைத்தும் ஹராம்

எந்தப் பொருளிலிருந்து மது தயாரித்தாலும் அவை அனைத்தும் தடை என்று தெளிவான ஒரு கட்டளையை நபிகளார் பிறப்பித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பித்உகுறித்துக் கேட்கப்பட்டது. -அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும்.- யமன் வாசிகள் அதை அருந்தி வந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரும் (மது) பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி (5586), முஸ்லிம் (4070)

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘பாதக்எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், (இவர்கள் மதுவுக்கு) பாதக்எனும் புதுப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டது தான்  என்று பதிலளித்தார்கள்.

நான், (பாதக் எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஜுவைரிய்யா

நூல்: புகாரி (5598)

போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4076)

குறைவான மதுவும் தடையே!

அதிகமாக அருந்தினால் மட்டுமே போதை தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மதுவையும் நபிகளார் தடைசெய்தார்கள். அவற்றில் குறைவாக அருந்தினாலும் அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதே என்று தெளிவுபடுத்தினார்கள்.

எந்தப் பொருள் அதிகமாக உட்கொள்ளும்போது போதை தருமோ அதில் குறைவாக உட்கொள்வதும் ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: திர்மிதீ (1788), நஸாயீ (5513), அபூதாவுத் (3156), இப்னுமாஜா (3383)

போதை தரும் அனைத்தும் ஹராமாகும். எது ஃபரக் அளவு (சுமார் 7.5 கிலோ) சாப்பிட்டால் போதை தருமோ அதில் கையளவும் ஹராமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: திர்மிதீ (1789), அஹ்மத் (23287)

மருந்தல்ல நோயே!

சிலர் மருத்துக்காக மதுவைப் பயன்படுத்தினர். நபிகளார் எந்த வகைக்கும் இந்த மதுவைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது மருந்தல்ல; நோய்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4015)

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை (மாற்றக் கூடாது)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (4014)

மதுவை அனுமதிக்கப்பட்டதாகக் கருதும் கூட்டம்

நபிகளார் காலத்தில் இல்லாத புதிய பெயர் சூட்டி மதுவை அருந்தினாலும் அதுவும் தடையே. எந்தப் பெயரில் எந்த வடிவத்தில் மது வந்தாலும் அது கூடாது என்று நபிகளார் மிகத் தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ அவர்கள் கூறியதாவது:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமா-க் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். -அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை.- (அவர்கள் கூறியதாவது:)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிகேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான்

நூல்கள்: புகாரி (5590), பைஹகீ (6100)

மதுவை அருந்தினால் இவ்வுலகில் கெடுதி ஏற்படுவது போல் மறுமையில் கடும் தண்டனையுண்டு என்றும் நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மறுமை நாளின் அடையாளம்

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்துபோவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயொரு ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்து விடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (5577), முஸ்லிம் (5186)

தண்டனைகள்

ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள ஜைஷான்எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒரு வகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக்கூடியதா?’’ என்று கேட்டார்கள். அவர் ஆம்’’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) தீனத்துல் கபாலைநிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்’’ என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! தீனத்துல் கபால்என்பது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4075)

ஈமான் போய்விடும்

விபச்சாரி, விபச்சாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி (2475), முஸ்லிம் (100)

பாவமன்னிப்பு

மது அருந்தும் பழக்கம் உள்ளவர் உடனடியாக நிறுத்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மறுமையில் சொர்க்கத்தில் மது அருந்தும் பாக்கியத்தை இழந்துவிடுவார்.

உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேறை இழந்துவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரி (5575), முஸ்லிம் (4076)

மது தயாரிக்கப் பயன்படும் பாத்திரங்கள்

மது அருந்தப் பயன்படும் பாத்திரங்களை நபிகளார் ஆரம்பத்தில் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று தடுத்திருந்தார்கள். பின்னர் மது இல்லாத பாத்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கிவிட்டார்கள்.

தோல் பாத்திரங்களில் ஊற்றிவைக்கப்பட்ட பானங்களை(த் தவிர வேறெந்த பானத்தையும்) அருந்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி எல்லாப் பாத்திரங்களிலும் அருந்திக் கொள்ளுங்கள். எனினும், போதை தரக் கூடியதை அருந்தாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (4068), நஸாயீ (2005), அபூதாவுத் (3212), அஹ்மத் (21880)

தடையை செயல்படுத்திய நபித்தோழர்கள்

அல்லாஹ் மதுவைத் தடை செய்தவுடன் நபித்தோழர்கள் மதுவை வீதியில் கொட்டி இறைக் கட்டளையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தார்கள்.

அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’’ என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு’’ என்று சொன்னார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (5582), முஸ்லிம் (4006)

நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, (மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், வெளியே சென்று இதை ஊற்றிவிடு என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)’’ என்று கேட்டார்கள். அப்போது தான், ‘‘நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை’’ (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (2464), முஸ்லிம் (4006)

மது இல்லாத உலகை, போதையற்ற சமுதாயத்தை உருவாக்கிட திருக்குர்ஆனும் அதற்குச் செயல்வடிவம் கொடுத்த நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலும் தான் தீர்வாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

—————————————————————————————————————————————————————————————————————

ஜோதிடம் பொய்யே!

மூட நம்பிக்கையை முறியடித்த மாமறைக் குர்ஆன்

உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று ஜோதிடம் ஆகும். நட்சத்திர ஜோசியம், எண் ஜோசியம், கிளி ஜோசியம், நாடி ஜோசியம், கைரேகை ஜோசியம் என்று பல்வேறு வகையிலான ஜோதிடக் கலைகள் மக்களுக்கு மத்தியில் உலவிவருகின்றன.

நம்முடைய எதிர்காலத்தையும் மறைவான விஷயங்களையும் ஜோதிடர் கண்டறிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை நம்பி தங்களுடைய எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூற இயலாது. இந்த ஜோதிடத்தை நம்பியவர்களில் அதிகமானோர் இதன் மூலம் ஏமாற்றப்பட்டு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கற்பிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாகும்.

தமிழக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் பலர் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றர். பச்சை நிறத்தில் சேலை அணிதல், மஞ்சள் நிறத்தில் துண்டு அணிதல், பெயரை நியூமராலஜி அடிப்படையில் மாற்றிக் கொள்வது, பெயரில் தேவையில்லாமல் ஓரிரு எழுத்துக்களை அதிகப்படுத்தி எழுதுவது, தோஷம் கழித்தல், பரிகார பூஜைகள் நடத்துதல் என இவர்களின் மூட நம்பிக்கைகளைப் பட்டியல் போட்டு மாளாது. பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் இதில் அடக்கம்.

‘‘உங்கள் மனைவிக்கு நாக தோஷம், இதனால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்று ஜோதிடன் கூறியதை நம்பி கூலிப் படையினரை வைத்து அப்பாவி மனைவியை ஒருவர் கொலை செய்தார் என்ற செய்தி கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சில நாளிதழ்களில் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய மருமகளுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று ஜோதிடர் கூறியதால் அதனை சிசுவிலேயே அழிப்பதற்காக ஆசிட் வாங்கி அதனை மருமகளின் வயிற்றில் வீசிய மாமியார் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி 2016, செப்டம்பர் 2ஆம் தேதி தினமலர் நாளிதழில் இடம் பெற்றுள்ளது.

உடல்நிலை சரியில்லை என்று கூறி ஜோதிடரிடம் சென்ற இளம் பெண்ணை ஜோதிடர் ‘நிர்வாண பூஜை செய்ய வேண்டும்’ என்று கூறி பூஜை நடந்து கொண்டு இருக்கும் போதே அப்பெண்ணை ஜோதிடர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற செய்தி 2018 நவம்பர் 11 அன்று வெளியான நாளிதழ்களில் இடம் பெற்றுள்ளது.

தலைப்பிள்ளையைக் காளிக்குப் பலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று ஜோதிடர் கூறியதை நம்பி கேரளாவைச் சார்ந்த பதினொரு வயது சிறுவனைக் கடத்தி பலி கொடுப்பதற்காக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி 2017, நவம்பர் 15 விடுதலை நாளிதழில் இடம் பெற்றுள்ளது.

மகன் பிறந்த நேரம் பொருத்தமில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி தனது 6 வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் 2008, ஆகஸ்ட் 19ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது.

அது போன்று ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியதை நம்பி பல்லாண்டுகள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாக வாழ்ந்து மனநோயால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்தவர்கள் ஏராளம்.

ஜோதிடர்களின் வசீகரமான  பேச்சுக்களை நம்பி சொத்துக்களையும், கற்பையும் இழந்தவர்கள், இழந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

அன்றாடம் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பால் கிடைத்த வருமானத்தைப் பெற்றோர்களுக்கும் மனைவி மக்களுக்கும் செலவிடாமல்  மது குடித்து சீரழிப்பவர்கள் ஒருபுறம் என்றால் அதற்கு நிகராக ஜோதிடர்களுக்கு அள்ளிக்கொடுத்து சீரழிப்பவர்கள் அதை விட அதிகம்.

மனித சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிகப் பெரும் பாதிப்பிற்குள்ளாவதற்குக் காரணம் இந்த ஜோதிட நம்பிக்கை தான். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் மிகமிக அதிகம்.

ஆனால் உண்மையான இறைவனிடமிருந்து அருளப்பட்ட திருமறைக்  குர்ஆன், இது மூடநம்பிக்கை என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன் மனித சமூகம் நிம்மதியான வாழ்வடைய திருக்குர்ஆன் தெளிவான வழிகாட்டுகிறது.

ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையை ஒழிப்பதற்குத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் அற்புதமான அடிப்படை ‘‘நாளை நடப்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறுயாரும் அறிய முடியாது” என்ற கொள்கைப் பிகரடனம்தான்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு இறைவன் வழங்கிய அறிவினால் இறைவன் காட்டிய நேர்வழியில் செல்ல வேண்டும். தனக்கு எந்த ஒரு நல்லதோ, பாதிப்போ ஏற்படுவதாக இருந்தால் அது இறைவன் ஏற்படுத்திய விதிப்படிதான் நடக்கும். இறைவன் நமக்கு விதித்த விதியை அது நடந்த பிறகுதான் நாம் அறியமுடியும் என்ற அடிப்படையை மனித உள்ளங்களில் திருக்குர்ஆன் ஆழமாக ஊன்றுகின்றது.

மனிதர்களால் மறைவானவற்றை அறிய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் ஓங்கி உரைக்கின்றது.

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 27 : 65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

(அல்குர்ஆன் 6:59)

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இறைவன் ஒருவன் மட்டுமே அறியமுடியும் என்ற அடிப்படைக் கொள்கை உள்ளத்தில் ஆணிவேராய் ஆழப்பதிந்து விட்டால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை சிதறுண்டு போய்விடும்.

திருமறைக் குர்ஆனை இறைவேதம் என உறுதியாக நம்பிக்கை கொள்ளும் மக்கள் ஜோதிடர்களை நம்பி உயிரையோ, கற்பையோ, சொத்துக்களையோ இழக்கவேண்டிய பரிதாப நிலை ஏற்படாது. இவ்வாறுதான் முஸ்லிம்களை திருமறைக் குர்ஆன் பாதுகாக்கின்றது.

ஐந்து விஷயங்களை இறைவனைத் தவிர எந்த ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது என திருமறைக் குர்ஆன் உறுதிபடக் கூறுகிறது.

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன் 31:34)

மேற்கண்ட இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து விஷயங்களும் இறைவன் மட்டுமே அறியக் கூடியவை ஆகும். படைப்பினங்களால் அறிந்து கொள்ள முடியாது என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவுகோல் ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாகும் என்று யாரும் அறிய மாட்டார்கள்.

எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.

எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.

மழை எப்போது வரும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (1039)

அதிகமாக ஜோதிடர்களிடம் செல்பவர்கள் எதை அறிவதற்காகச் செல்வார்களோ அவற்றை இறைவன் மட்டுமே அறிய முடியும் என்ற உண்மையை உலகத்திற்கு உரக்கச் சொல்வதன் மூலம் திருமறைக் குர்ஆன், ஜோதிடம் எனும் மூடநம்பிக்கைக்கு சாவுமணி அடிக்கின்றது.

ஜோதிடத்திற்குத் தடை விதித்த முஹம்மது நபி

குர்ஆன் கூறும் போதனைகளின் அடிப்படையில் வாழ்ந்து காட்ட வந்தவர்கள்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.  திருக்குர்ஆன் கூறும் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களுக்கு இறைவனின் மார்க்கத்தை போதனை செய்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் இந்த ஜோதிடத்திற்குத் தடை விதித்து, அது மூட நம்பிக்கை என்பதை உணரச் செய்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை மறுத்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1971)

முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்து வந்தோம். சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்என்று கூறினேன். அதற்கு அவர்கள் ‘‘சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் (4484)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது (ஜோதிடம்) கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் (4137)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகுனம் பார்ப்பது (இறைவனுக்கு) இணை கற்பித்தலாகும்என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: அபூதாவூத் (3411)

யார் சகுனம் பார்த்து (அதன் பிரகாரம்) தனது காரியத்தை மாற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)

நூல்: அஹ்மத் (6748)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய மேற்கண்ட போதனைகள் அனைத்தும் ஜோதிடம் எனும் மனித குலத்திற்குக் கேடுண்டாக்கும் தீய நம்பிக்கையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் போதனைகளாகும்.

இவ்வாறு திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதல் மூலம் உலக மக்களைப் பாதிக்கும் இந்தத் தீய நம்பிக்கைக்கு எதிராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதன் மூலம் இறைவேதத்தின் வழிநடந்தவர்கள் ஜோதிட நம்பிக்கையினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்றார்கள்.

இன்றைய உலகில் ஜோதிடத்தின் பெயரால் நடக்கும் பல்வேறு கொடுமைகளிலிருந்து மனித குலத்தைப் பாதுகாக்கும் போர்க்கவசமாகத் திருமறைக் குர்ஆன் திகழ்கின்றது.

மனித குலத்தைச் சீரழிக்கும் தீமைகளை அழிப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவனின் உண்மை வேதமாய் அற்புதச் சான்றாய் ஒளிர்கின்றது. இறைவேதத்தை நம்பிக்கையுடன் படித்து வழிநடக்கும் மக்களுக்கு அது நேர்வழிக்கு வழிகாட்டுகின்றது.

போலி பகுத்தறிவுவாதிகள் பலரால் இந்த அறிவியல் யுகத்தில் கூட சாதிக்க முடியாத காரியத்தை, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டியது திருக்குர்ஆனும், அதை போதிக்க வந்த திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் என்றால் மிகையாகாது.

திருமறைக் குர்ஆன் மனித குலத்திற்கு வழிகாட்டும் உண்மை இறைவேதம் என்பதற்கான எண்ணற்ற சான்றுகளில் இதுவும் ஓர் சான்றாகும்.

—————————————————————————————————————————————————————————————————————

தீவிரவாதத்திற்கு எதிரான திருக்குர்ஆன்

உலகெங்கும் தற்போது தீவிரவாதம் தலைத்தோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களால் உலகம் முழுவதிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.

இத்தகைய தீவிரவாதச் செயல் மதம், மொழி, இனம், நாடு என்ற பல்வேறு அடிப்படைகளில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் மறுபெயராகவே மேற்கத்திய ஊடகங்களால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சில இடங்களில் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்குமே தீவிரவாதச் சாயம் பூசிவிட்டது உலக ஊடகத்துறை.

தனிமனிதர்களின் செயல்களை ஒட்டுமொத்த மதத்தோடு தொடர்புபடுத்தத் துவங்கினால் எந்த மதமும் தீவிரவாதப் பட்டம் பெறாமல் எஞ்சி இருக்காது.

பெயரளவில் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சிலரிடத்தில் இவ்வாறான காரியங்கள் இருக்குமே தவிர இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இஸ்லாம் அவர்களின் செயல்களை ஆதரிக்கவும் இல்லை.

இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கும் மார்க்கம்  அல்ல. திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் வேதமல்ல. மாறாக, அன்பை ஏவும் மார்க்கம். மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம்.

ஒருவர் ஒரு உயிரைக் கொன்றால் அவருக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற பாவம் கிடைக்கும் என்று கூறி, உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

‘‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

அல்குர்ஆன் 5:32 (சுருக்கம்)

இவ்வாறு, ஒரு உயிரைக் கொல்வதே ஒட்டுமொத்த மனிதர்களையும் கொல்வது போல் என்று சொல்லும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? துணை நிற்குமா?

மேலும், மனிதர்களுக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் இலக்கணமே என்பதையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மார்க்கம் என்பதே பிறர் நலம் நாடுவதுதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 95

இன்னும், ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வுலகத்தில் வாழும் போது இறையன்பை எதிர்பார்த்தே வாழவேண்டும். அப்படி வாழ்பவரே முஸ்லிம்.

மக்களுக்கு இரக்கம் காட்டுவது தான் இறையன்பைப் பெற்றுத் தரும் என்றும் மார்க்கம் சொல்கிறது.

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 7376

இவ்வாறு ஒரு மனிதன் பிற மனிதனுக்கு போதிக்கும் அன்பையே பிரதான தத்துவமாகக் கொண்ட மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது.

இதை முஸ்லிம்களிடத்தில் உலகம் கண்கூடாகக் காண்கிறது. சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், கஜா புயல் போன்ற எண்ணற்ற இயற்கைப் பேரிடர்களின் போது முஸ்லிம்களின் அன்பும் பாசமும் நிறைந்த அயராத பணி இதற்கெல்லாம் சாட்சிகளாக உலக மக்களின் கண் முன்னால் நிற்கிறது.

ஆனாலும், எத்தகைய மாற்றம் வந்தாலும் ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதில் பொய் பிரச்சாரங்களின் வாயிலாகத் தவிடுபொடியாக்கி, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என மக்களை ஏமாற்றிவிடுகின்றன.

இவ்வாறு கூறும் போது, குர்ஆனில் ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்பன போன்ற வன்முறையை ஆதரிக்கும் கருத்துக்கள் இருக்கத் தானே செய்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

அவை அனைத்துமே ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி இருந்து, அந்த நாட்டுக்கும் வேறொரு நாட்டுக்கும் போர் நடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சமாகும்.

இஸ்லாமிய நாடு மட்டுமல்ல. எந்த நாடாயினும் தனது எல்லையைப் பாதுகாக்கும் போர் செய்யும் போது எதிர்த்து வருபவர்களைக் கொல்வதுதான் உலக வழக்கம். கைகட்டி வேடிக்கை பார்ப்பது இல்லை.

அதுதான் அங்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இஸ்லாத்தைப் பரப்ப போர் செய்யுங்கள் என்றோ, அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்றோ திருக்குர்ஆன் போதிக்கவில்லை.

மேற்படி சொன்னது போல் நாடுகளுக்கிடையே போர் புரிவதற்குக் கூட இஸ்லாம் சில நெறிமுறைகளை சொல்லித் தருகிறது. அவற்றையும் பார்ப்போம்.

ஆட்சி இருந்தால் மட்டுமே போர்

திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.

அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுப்போலத்தான் போர் செய்வதென்பது தனிநபர்களின் மீதோ, குழுக்கள் மீதோ கடமையில்லை. அரசாங்கத்தின் மீது மட்டுமே கடமையானதாகும்.

தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை’’ என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்’’ என்று அவர் கூறினார்.

அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.

அல்குர்ஆன் 2:247, 248

படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் சட்டமாகும்.

ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.

போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.

வம்புச் சண்டைக்கு வருவோருடன்தான் போர்

இஸ்லாம் போரை அரசாங்கத்திற்கு மட்டும்தான் கடமையாக்கியுள்ளது. அரசாங்கத்திற்குப் போர் கடமையாக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் இஷ்டப்படி அனைவரையும் தாக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் புரிய மட்டுமே வலியுறுத்துகிறது.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

இவ்வாறு போரி புரிவது யதார்த்தமான நியதியே. வம்புச் சண்டைக்கு வருவோருடன் சண்டையிடாமல் கைகட்டி வேடிக்கை பாருங்கள் எந்த சித்தாந்தமும் சொல்லாது.

போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லக் கூடாது

வம்புச் சண்டைக்கு வருவோருடன்தான் போர் புரிய வேண்டும். அத்தகைய போரிலும் எதிர் தரப்பில் பெண்கள், குழந்தைகள் போன்ற அப்பாவிகள் இருந்தால் அவர்களைக் கொல்லக் கூடாது என்றும் அவர்களைக் கொல்வது கடும் கண்டனத்திற்குரிய குற்றம் என்றும் இஸ்லாம் சொல்கிறது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட ஒரு புனிதப் போரில், பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக்  கண்டித்தார்கள்.

நூல்: புகாரி 3014

எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது

போரிடும் போது எதிரிகளின் மீதுள்ள கோப அலையினால் அவர்களின் உடல்களை கோரப்படுத்தக் கூடாது; சிதைத்துவிடக் கூடாது.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 2474, 5516

போரில் அத்துமீறக்கூடாது

போர் புரியும் போது எதிரிகளை விட அரசாங்கத்திற்கு படைபலம் அதிகம் இருந்தாலும் எல்லைக் மீறக் கூடாது, அக்கிரமம் புரியக்கூடாது.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

இதுபோன்று இன்னும் பல பாதிப்பில்லா சட்டங்களையும் வழங்கி அப்பாவிகளைக் காத்து, நாட்டை அழிக்க வருபவர்களுக்கு எதிராக மட்டுமே போர் என்ற நெறிகளை இஸ்லாம் சொல்கிறது. இந்த நெறிகள், சட்டங்கள் யாவும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் போர் நெறிகளை விட பல மடங்கு உயர்ந்தவையாகும்.

இஸ்லாம் சொல்லும் போர் நெறிகள் மட்டுமே  மனித உரிமை மீறல் இல்லாத நீதமான போர் நெறியாகும்.

இவ்வாறு போரில் கூட மனித உரிமை மீறலைத் தடுக்கும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் யாரோ ஒரு சிலர் செய்வதற்கு இந்த மார்க்கமோ அல்லது அதன் வழிகாட்டியான திருக்குர்ஆனோ ஒருபோதும் பொறுப்பாக முடியாது.

—————————————————————————————————————————————————————————————————————

பெண்ணுரிமை பேணிய புனித வேதம்

இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர்.

பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை.

சம்பாதிக்கும் உரிமை இல்லை.

சொத்துரிமை இல்லை.

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை.

பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லை.

கணவன் இறந்தால் மனைவிக்கு மறுமணம் செய்யும் உரிமை இல்லை.

கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை என்ற பெயரில் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். அல்லது மொட்டை அடித்து, வெள்ளை ஆடை அணிந்து துறவியைப் போல் வாழ வேண்டும்.

மாதவிடாய் போன்ற இயற்கை உபாதைகளைக் கூட, தீட்டு என்ற பெயரில் அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்துக் கொடுமை செய்தல்.

அவர்களுக்குக் கடவுளை வழிபடும் உரிமை கூட இல்லை.

இப்படிப் பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் மதத்தின் பெயராலேயே அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அறிவியல் முன்னேற்றத்தாலும் நாகரீக வளர்ச்சியினாலும் பெண்கள் தற்போது தான் அரசியல் சட்ட ரீதியாக சில உரிமைகளைப் பெற்று வருகிறார்கள். எனினும் மதங்கள் மற்றும் அவை கொண்டுள்ள வேதங்கள் பெண்களுக்குச் செய்யும் அநீதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும் இந்தக் காலத்திலும் போராட்டங்கள் நடத்தி வருவதைப் பார்க்கிறோம்.

ஆனால் திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமையைப் பேணிப் பாதுகாத்தது. பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியது. இதைப் பற்றி விவரித்து எழுத வேண்டும் என்றால் பக்கங்கள் போதாது. எனவே பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் தொடர்பான குர்ஆன் வசனங்களில் சிலவற்றை மட்டும் கீழே தந்துள்ளோம்.

ஆணில் ஒரு பகுதியே பெண்

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.

(அல்குர்ஆன் 4:1)

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். 

(அல்குர்ஆன் 2:228)

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.

(அல்குர்ஆன் 2:187)

கல்வி கற்கும் உரிமை

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?

(அல்குர்ஆன் 39:9)

என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து’’

(அல்குர்ஆன் 20:114)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.

(அல்குர்ஆன் 9:71)

சம்பாதிக்கும் உரிமை

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:32)

சொத்துரிமை

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

(அல்குர்ஆன் 4:7)

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன் 4:12)

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞான மிக்கவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:11)

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 4:176)

பள்ளிவாசல்களுக்குச் செல்லும் உரிமை

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?

(அல்குர்ஆன் 2:114)

(‘பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள் என்பது நபிமொழி.

பார்க்க: புகாரி 900, 873, 5238)

கணவனைத் தேர்வு செய்யும் உரிமை

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

(அல்குர்ஆன் 4:19)

மஹர் எனும் மணக் கொடை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன் 4:4)

மறுமணம் செய்யும் உரிமை

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:234)

விவாகரத்திற்குப் பின் வாழ்வாதாரம்

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

(அல்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

(அல்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

(அல்குர்ஆன் 65:6,7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

(அல்குர்ஆன் 2:233)

கணவனைப் பிரியும் உரிமை

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 2:229)

(ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி’’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’’ என்றார்கள். –

பார்க்க: புகாரி 5273, நஸயீ)

கற்பு நெறியில் ஆணும் பெண்ணும் சமமே!

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 24:30, 31)

தண்டனையில் ஆணும் பெண்ணும் சமமே!

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!

(அல்குர்ஆன் 24:2)

இறைவனின் கூலியில் ஆணும் பெண்ணும் சமமே!

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.

(அல்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 40:40)

சிலரை, வேறு சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. 

(அல்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:35)

பெண்களுக்கான பாதுகாப்பு வளையங்கள்

அவதூறிலிருந்து பாதுகாப்பு

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன் 24:4)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. 

(அல்குர்ஆன் 24:23)

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்).

(அல்குர்ஆன் 24:6-9)

ஆடை விஷயத்தில் பாதுகாப்பு

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 24:60)

கெட்டவர்களிடமிருந்து பாதுகாப்பு

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

(அல்குர்ஆன் 24:26)

மனைவியரிடையே பாரபட்சம் காட்டக்கூடாது

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப் பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடை யோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:129)

ஏனைய மதங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எல்லா வகையிலும் பெண்களின் உரிமைகளை திருக்குர்ஆன் பாதுகாக்கின்றது.

—————————————————————————————————————————————————————————————————————

வட்டியை ஒழித்த வான்மறை

வட்டிக்குக் கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சிக்கிக் கொள்கின்றனர்.

வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டியால் மக்களை வாட்டி வதைக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறிக் கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு ஒரு தொகை கொடுத்தால் அதற்கான வட்டியை 12 மணிக்கு கொடுத்து விடவேண்டும். தாமதமானால் தரத்தவறிய வட்டிக்கு வட்டி போட்டு விடுவார்கள். 500 கொடுத்துவிட்டு ஒரே நாளில் 5000 வரை கூட வசூல் செய்யும் கொடுமை இன்றும் இருக்கிறது.

இப்படிப் பல்வேறு வகையில் வட்டித் தொழில் உலகம் முழுவதும் உள்ளது. வட்டிக்குப் பணம் வாங்கும் பல அப்பாவிகள்  பலியாகி வருகின்றனர்.

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள், நிலமோசடிகள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்துள்ளன.

சமீபத்தில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து இறந்தார்கள்.

இப்படித் தனி மனிதன் மட்டுமல்ல! உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன.

நமது இந்திய நாடே ஒட்டுமொத்தமாக வட்டியில் மூழ்கி விடுமோ என்ற அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்தளவிற்குக் கொடுப்போரிடமெல்லாம் கை நீட்டி, கடனை வாங்கிக் குவித்திருக்கிறது.

இதுவரை இந்தியாவின் மொத்தப் பொதுக்கடன் ரூ.63,000,000,000,000 (63 லட்சம் கோடி ரூபாய்)ஆகும்.

மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய் தான் இந்த வட்டி. இதனை அடியோடு வேரறுக்கவில்லை எனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. வட்டி என்ற விஷக்கிருமியை அழிக்க வேண்டிய அரசாங்கம் அந்தக் கிருமியை நாடெங்கிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றது. மக்களும் வட்டியில் வதைபட்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த வட்டி என்ற புற்றுநோய் 1440 ஆண்டுகளுக்கு முன்னால் அரபுலகத்தில் யூதர்களால் பரவிக் கிடந்தையும் அதை நபிகளார் தனது ஆட்சிக்காலத்தில் மனிதகுல வழிகாட்டியான திருக்குர்ஆன் போதனைகளைக் கொண்டு அந்த நோயை எப்படி ஒழித்தார்கள் என்பதையும் இங்கே காண்போம்.

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள்

மனித குலத்திற்கு அருளாகவும் நேரிய வழிகாட்டியாகவும் அருளப்பட்ட திருக்குர்ஆன் மனிதனை வாட்டும் வட்டி குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (3:130)

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (2:277)

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம். (4:160, 161, 162)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. (2:278-280)

 • வட்டியை உண்ணக்கூடாது.
 • அது இறையச்சமுள்ள ஒருவனுக்கு அழகல்ல.
 • இறைவனை அஞ்சுபவன் வட்டியிலிருந்து விடுபட வேண்டும்.
 • வட்டியை விட்டவனே மறுமையில் வெற்றி பெறுவான்.
 • வட்டி அழிவைத்தரும். தர்மங்கள் அருளைத் தரும்.
 • வட்டி வாங்குபவன் நன்றி கெட்ட பாவியாவான்.
 • வட்டிக்குக் கடன் கொடுத்து மக்களை வாட்டிய யூத சமுதாயம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தார்கள்.
 • ஒருவன், இறைவனை நம்புவது உண்மை எனில் அவன் கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
 • அதையும் மீறி வட்டி வாங்கினால் அவன் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் எதிராகப் போர் புரிகிறான்.
 • இறைவனுக்கு எதிராக யுத்தம் செய்பவன் அழிந்தே போவான்.

இவ்வாறு பல்வேறு அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இறைவன் விடுத்துள்ளதை அறிய முடிகிறது.

இறைவனின் பலமான எச்சரிக்கைகளை எடுத்துரைத்ததன் மூலம் வட்டியிலிருந்து அந்த மக்களை நபிகளார் மீட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு நற்செயலையும் மக்களுக்கு போதிக்கும் போதும், தீமையிலிருந்து மக்களைத் தடுக்கத் துவங்கும் போதும் அதில் ஒருவர் தன்னளவில் முழுமையான ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் நபியவர்கள், வட்டி எனும் கொடிய நோயைத் தன் குடும்பத்தில் முதலில் ஒழிக்கின்றார்கள்.

நபிகளாரின் சிறிய தந்தையான அப்பாஸ் என்பவர் மக்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்திருந்தார். வட்டி மிகப்பெரிய பாவம் என்பதை மக்களுக்குச் சொன்ன அதே வேளையில் தன் சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்தார்கள்.

இவ்வாறு மக்களை வாட்டி வதைக்கும் வட்டியை ஒழித்து, திருக்குர்ஆனின் ஒளியில் வளமான ஆட்சியை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். வட்டியில்லாக் கடன் வாங்கியவர்களுக்கு அவகாசம் அளிப்பதையும், கடனைத் தள்ளுபடி செய்வதையும் வலியுறுத்தினார்கள். ஸகாத் எனும் பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டு மக்கள் கடனில் மூழ்காதபடி பாதுகாத்தார்கள்.

திருக்குர்ஆனின் போதனையின் விளைவாக முஸ்லிம் சமுதாயம் வட்டி எனும் புற்று நோயில் மடிந்து விடாமல், மாட்டிக் கொள்ளாமல் பெருமளவில் தப்பித்து வருகிறது.

முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைவரும் திருக்குர்ஆனின் போதனைகளை உணர்ந்து வட்டியை ஒழித்து, வளமான வாழ்வைப் பெறுவோமாக!