தலையங்கம்
இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு
ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது.
வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்
உங்களிடம் போருக்கு வருவோரு டன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 2:190
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங் களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
அல்குர்ஆன் 9:13
“போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றல் உடையவன்.
அல்குர்ஆன் 22:39
சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!
அவர்கள் உங்களை வெளியேற்றி யவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்!
அல்குர்ஆன் 2:191
“எங்கள் இறைவன் அல்லாஹ் தான்” என்று அவர்கள் கூறியதற் காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.
அல்குர்ஆன் 22:40
அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்!
“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் 4:7
போர் செய்வதற்கு இதுபோன்ற நியாயமான காரணங்கள் இருந்தாலும் ஓர் அரசாங்கம் தான் போர் தொடுக்க வேண்டும். தனி நபர்களோ, குழுக்களோ போர் செய்வதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஆனால் இன்று திருக்குர்ஆனின் இந்தக் கட்டளைகளுக்கு மாற்றமாக சில பகுதிகளில் சிறு சிறு குழுக்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பாரிஸிலும், மாலியிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அராஜக அமைப்பு நடத்திய தாக்குதல்கள் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இந்த அமைப்பினர் முஸ்லிம்களின் பெயரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்ற கருத்து தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவர்களும் இதைப் போன்ற மற்ற இயக்கங்களும் தங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவது ஜிஹாத் தொடர்பான வசனங்களைத் தான்.
ஐ.எஸ். அமைப்பினர் பாரிஸில் அல்ல! மாலியில் அல்ல! உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் போர் தொடுத்துள்ளனர். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகப் போர் தொடுப்பதாக இவர்கள் கூறிக் கொண்டாலும் உண்மையில் முஸ்லிம் களை அழிப்பதற்காகத் தான் இவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷி இறை மறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா எனும் இடத்தில் தமது தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு) விட்டுத் தமது தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், “வரும் ஆண்டில், தாம் (தம் தோழர்களுடன்) உம்ரா செய்ய (அனுமதிக்கப்பட) வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்பு கின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்‘ என்னும் நிபந்தனை யின் பேரில் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெளியேறும் படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறி விட்டார்கள்.
நூல்: புகாரி 4252
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் மக்காவிற்கு உம்ரா எனும் வணக்கத்தைச் செய்ய வருகின்றார்கள். அப்போது மக்காவிற்குள் நுழைய விடாமல் அவர்களை மக்காவிலிருந்து இணை வைப்பாளர்கள் தடுக்கின் றார்கள். அந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யாமலேயே திரும்புகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் அவ்வாறு தடுக்கப்பட்ட போது, அந்த மக்களை எதிர்த்துப் போர் செய்யக் கூடிய எல்லா நியாயங்களும் இருந்தன. எதிரிகளை அழிக்கும் அளவுக்கு வலிமையும் இருந்தது. ஆனாலும் முஸ்லிம்களைப் போர் செய்ய விடாமல் தடுத்ததற்கு ஒரே காரணம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மறைத்துக் கொண்டு மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் களைக் கருத்தில் கொண்டு தான் நபி (ஸல்) அவர்கள் போர் செய்யவில்லை.
அவர்கள் தாம் (ஏகஇறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதை யும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.
அல்குர்ஆன் 48:25
போரில் எதிரிகளை அழிக்கும் போது, அடையாளம் தெரியாத அத்தகைய முஸ்லிம்களையும் கொன்று விடக்கூடாது என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் அல்லாஹ் தடுத்து நிறுத்தினான்.
மக்காவாசிகளின் கொடுமைக்குப் பயந்து, தங்களை வெளிப்படுத்தாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட நிலையிலும் போர் செய்ய வேண்டாம் என்று ஓர் இஸ்லாமிய அரசாங்கத் தையே அல்லாஹ் தடுத்திருக்கும் போது, இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களையே கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கின்றனர். இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
அல்குர்ஆன் 4:93
தெரிந்து, வேண்டுமென்றே முஸ்லிம்களைக் கொல்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையிலும் இவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.
அப்படியானால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லலாமா? என்ற கேள்வி இங்கு எழலாம். இஸ்லாம் எந்த ஓர் உயிரையும் அநியாயமாகக் கொலை செய்வதற்கு அனுமதிக்கவில்லை.
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்!
அல்குர்ஆன் 17:33
இந்த வசனத்தின் அடிப்படையில் மனித உயிர் அனைத்துமே புனிதமானது தான். குற்றவியல் தண்டனை, போர் போன்றவை அரசாங்கத்திற்கான விதிவிலக்குகள். இதையே, “தக்க காரணமின்றி’ என்று மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது. இதைத் தவிர எந்த உயிரையும் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்று நாம் இங்கு குறிப்பிட்டுக் கூறுவதற்குக் காரணம், இவர்கள் உண்மையில் முஸ்லிம்களாக இருந்தால் மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் நிரந்தர நரகம் என்ற தண்டனையைக் கவனத்தில் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு விளக்குவதற்காகத் தான்.
ஓர் இஸ்லாமிய அரசாங்கமே போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதில் முதியவர்களைக் கொல்லக் கூடாது; பெண்கள், குழந்தைகளைக் கொல்லக் கூடாது; மதகுருமார்களைக் கொல்லக்கூடாது; சொத்துக்களைச் சூறையாடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இஸ்லாம் கூறும் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றாமல் போரிடுவதாகக் கூறுபவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
தெரிந்தே ஒரு முஸ்லிமைக் கொல்பவருக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறியிருக்கையில், இந்தப் பயங்கரவாதிகள் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களையே கொல்வது, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகின்றது.
இந்தப் பயங்கரவாதிகள் நேரடியாக முஸ்லிம்களைக் கொல்கின்ற கொடுமையுடன் எதிர்விளைவாகவும் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக இப்போது பிரான்ஸ், சிரியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் கொல்லப்படுவது ஐ.எஸ். பயங்கரவாதிகள் மட்டும் கிடையாது. சிரியாவிலுள்ள அப்பாவி மக்கள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் போன்ற பலவீனர்கள் தான் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர். இப்படி எதிர்விளைவின் மூலமாகவும் இவர்கள் முஸ்லிம்களைத் தான் அழிக்கின்றார்கள்.
இத்தகைய எதிர்விளைவால், பெற்றோரை இழந்து அனாதைகளான பிள்ளைகள், பிள்ளைகளைப் பலி கொடுத்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவிமார்கள் என்று பாதிக்கப்படும் முஸ்லிம்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் ஐரோப்பாவை நோக்கி, உரிய பயண ஆவணங்கள் இல்லாமல், உடுத்திய துணியோடு, வாரிச் சுருட்டிய படுக்கையோடு அகதிகளாக சிரியாவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி வருகின்றனர். பாதுகாப் பான வாகனங்களில் செல்லாமல் படகுகளில் செல்வதால் கடும் குளிரில் உறைந்து, கடலில் விழுந்து முஸ்லிம்கள் சாவதற்கும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தான் காரணம்.
துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவன் அய்லான் குர்தியின் உடல் இதற்கு ஒரு சாட்சியாகும். அய்லான் குர்தியின் உடல், உலகில் வாழ்கின்ற முஸ்லிம் களின் உள்ளங்களை மட்டுமல்ல! அனைத்து சமுதாய மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது. கண்களில் கண்ணீரை உதிர வைத்துவிட்டது.
இரக்கமும் ஈரமும் கொண்ட ஐரோப்பிய மக்கள் லட்சக்கணக்கான சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வருகின்ற வேளையில் அந்த வாசலையும் அடைக்கின்ற வேலையை பாரிஸ் தாக்குதல் மூலம் இந்த ஐ.எஸ். அமைப்பு அரங்கேற்றியுள்ளது.
இது மட்டுமல்லாமல் உலகெங் கிலும் உள்ள மார்க்க அறிவற்ற இளைஞர்களை ஜிஹாத் என்ற போர்வையில் அழைத்து, அவர்களைத் தற்கொலைச் சாவில் மடிய வைக்கின்றது. இந்த வகையிலும் முஸ்லிம்களை இந்த இயக்கம் அழித்து வருகின்றது.
சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க் களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக் கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண் டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)” என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
நூல்: புகாரி 2898
போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இந்த பயங்கரவாதிகளோ சர்வசாதாரணமாக தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் இவர்கள் கிலாபத் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறிக் கொள்கிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை சங்பரிவாரக் கும்பல்களால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் இந்தத் தற்கொலைப் படையில் சிலர் இருப்பதாக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இது இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சங்பரிவார்கள் இதைச் சாக்காகப் பயன்படுத்தி இங்குள்ள முஸ்லிம்களைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகெங்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒருவிதமான அச்சத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
அல்காயிதா செய்த செயல்களின் எதிர்விளைவுகளை விட்டு இந்த முஸ்லிம் சமுதாயம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது ஐ.எஸ். அமைப்பினரின் எதிர்விளைவுகளில் முஸ்லிம்கள் மாட்டித் தவிக்கின்றனர்.
இவையெல்லாம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்ற பாடம், இவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற் காகப் போரிடவில்லை. உலகில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காகத் தான் போரிடுகின்றனர். எனவே இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம் களாக இருக்க முடியாது என்பதையே இவர்களின் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இங்குள்ள பரேலவிகள் ஐ.எஸ். அமைப்பின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வஹ்ஹாபிகள் தான் இந்த அமைப்பில் இருக்கிறார்கள் என்று போகிற போக்கில் அடித்து விடுகின்றார்கள். ஊடகங்களும் இதை அப்படியே வாந்தியெடுக்கின்றன. வஹ்ஹாபிகள் என்று இவர்கள் குறிப்பிடுவது ஏகத்துவவாதிகளைத் தான்.
திருக்குர்ஆனுக்கும், நபிகளாரின் ஹதீஸ்களுக்கும் மாற்றமாகச் செயல் பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களே அல்ல என்பது தான் நமது நிலைப்பாடு! இவர்கள் எப்படி ஏகத்துவவாதிகளாக இருக்க முடியும்?
இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் பற்றி முகநூலில் வலம் வரும் ஒரு செய்தியை இங்கு தருகிறோம்.
ஒரு மலைப்பாதையில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் வழிமறித்து, “நீங்கள் எந்த மதம்?” என்று கேட்டார்கள். காரில் இருந்தவர்கள், “நாங்கள் இஸ்லாமி யர்கள்” என்றனர்.
உடனே தீவிரவாதிகள், “அப்படியானால் குர்ஆனிலிருந்து சில வரிகளைச் சொல்லுங்கள், பார்க்கலாம்” என்றனர். காரில் இருந்தவர்கள் குலை நடுங்கி விட்டனர். உடனே காரில் இருந்த ஒரு குழந்தை, பைபிளில் இருந்து சில வரிகளைச் சொல்லிவிட்டது. “செத்தோம்’ என்று காரில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைய, தீவிரவாதிகளோ, “சரியாகச் சொன்னாய், நீங்கள் செல்லலாம்” என்றனர்.
சிறிது தூரம் சென்றதும், காரில் இருந்தவர்கள் குழந்தையிடம், “எப்படி நீ கொஞ்சம் கூடப் பயமில்லாமல் குர்ஆனுக்குப் பதில் பைபிள் வரிகளைச் சொன்னாய்? ஒருவேளை அந்தத் தீவிரவாதிகள் கண்டு பிடித்திருந்தால் நம் நிலை என்னவாகியிருக்கும்?” என்று கடிந்து கொண்டனர்.
“அவர்களுக்குக் குர்ஆன் தெரியாது”
“எப்படிச் சொல்கிறாய்”
“அவர்கள் குர்ஆனை முழுவது மாகப் படித்து உணர்ந்திருந்தால், இப்படி ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறி யிருக்க மாட்டார்கள். எந்தவொரு மதமும் கொலை செய்யச் சொல்லி தூண்டுவதில்லை. தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது”
மேற்கண்ட சம்பவம் கற்பனையாக இருந்தாலும் யதார்த்தம் இதுதான்.
—————————————————————————————————————————————————————-
தூதரின் பக்கம் திரும்புவோம்
– எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்
எந்தவொரு செய்தியாக இருந் தாலும் எல்லோரும் அதை ஒரே விதமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் விளங்கிக் கொள்வதில் கூடுதல் குறைவு இருக்கும். சிலர் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். இதனால்தான், எது குறித்துக் கேட்டாலும், பார்த்தாலும் மக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் வருகின்றன. இதுவே யதார்த்தம்.
எனவே இதை மனதில் நிறுத்திக் கொண்டு எந்தச் செய்தியையும் சரியான முறையில் அணுக வேண்டும். அது உலகம் தொடர்பாக இருந்தாலும் சரி; மார்க்க தொடர்பாக இருந்தாலும் சரி!
நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.
எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறையின் சுருக்கம். இது தொடர்பாக சில முக்கியச் செய்திகளை இப்போது காண்போம்.
இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பி, அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து இருக்கிறான். வாழ்க்கை எனும் கலையை நபிகளார் நமக்கு முழுமையாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
வழிகேடு எனும் இருளில் இருந்து தப்பித்து நேர்வழி எனும் ஒளிமிக்க பாதையில் பயணிக்கும் பயிற்சி அளித்திருக் கிறார்கள். அனைவருக்கும் அனைத்து விஷயத்திலும் அண்ணலாரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது.
ஆகவே, மார்க்க வழிகாட்டி எனும் தூதருக்குரிய இடத்தை வேறு யாருக்கும் கடுகளவும் கொடுத்துவிடக் கூடாது. அவரின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில்தான் மார்க்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(திருக்குர்ஆன் 59:7)
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(திருக்குர்ஆன் 24:51)
தூதரைப் புறக்கணிப்பது வழிகேடு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணைக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்வது அவசியம் என்று மட்டுமல்ல, அதற்கு மாறு செய்வது மிகப் பெரும் குற்றம் என்றும் எச்சரிக்கிறது.
இதற்குப் புறம்பாக, தூதருடைய தீர்ப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு மற்ற மனிதர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அப்பட்டமான வழிகேடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற பண்பு ஒருபோதும் முஃமின்களிடம் இருக்கவே கூடாது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
(திருக்குர்ஆன் 33:36)
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமை யாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 4:65)
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர்பாய்ச்சி வந்த “ஹர்ரா‘ (என்னும் இடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், “தண்ணீரைத் திறந்து ஓட விடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள்.
(இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், “ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள்.
இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, “உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?” என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, “உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
(என்னிடம்) இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், “இறைவன் மீதாணையாக! “(முஹம்மதே!) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர், நீங்கள் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தி யும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்‘ என்னும் (4:65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: புஹாரி 2359, 2360
தூதரின் தீர்ப்பே தீர்வு தரும்
இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மேற்கண்ட செய்திகள் மூலம் விளங்க முடிகிறது. அவர்களின் நெறிமுறைக்கு மாற்றமாகச் செயல்படுவதன் விபரீதத்தைப் புரிந்து கொள்ள இயலுகிறது.
ஆதலால்தான், அன்றைய கால மக்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கும் கண்ணியத்தை நினைவில் கொண்டு செயல்பட்டார்கள். தங்களுக்கு மத்தியில் ஏதேனும் மார்க்க ரீதியாகப் பிணக்குகள் வந்தால் தூதரிடம் கொண்டு சென்றார்கள். அவரின் தீர்ப்புக்கு மதிப்பளித்து வாழ்ந்தார்கள். அவரின் ஆலோசனைகள், அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார்கள்.
நபியின் தோழமை நமக்கு இருக்கிறது எனும் காரணத்திற்காகத் தங்களுக்குள் சுயமாக முடிவெடுத்து கொண்டு மனம்போன போக்கில் நடக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அவர்களின் வாழ்க்கை இருந்தது. இதற்குரிய சான்றாக சில சம்பவங்களை மட்டும் காண்போம்.
இறைவேதம் தொடர்பான பிரச்சனை
திருக்குர்ஆனை ஓதுவது, அதை அணுகுவது, அதன் வசனங்களைப் பயன்படுத்துவது, அதற்கு கண்ணியம் கொடுப்பது போன்ற பல்வேறு விசயங்களில் பல வகையில் கருத்துகள் இருப்பதை மறுக்க இயலாது. இது மாதிரியான நேரங்களில், நபித்தோழர்கள் தங்கள் பிரச்சனையை நபிகளாரிடமே எடுத்துச் சென்றார்கள். அவர்களிடமே அதற்குரிய தீர்ப்பை எதிர்பார்த்தார்கள். அதன் மூலம் எளிதாகத் தெரிந்து கொண்டார்கள்.
அன்சாரிகளில் (குல்ஸும் பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு முன் “குல் ஹுவல்லாஹு அஹத்‘ (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியா யத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது “குல்ஹுவல்லாஹு அஹத்‘ அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாயத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம்.
இது குறித்து அவரிடம் மக்கள், “நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியா யத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்)” என்று கூறினார்கள்.
அதற்கு அவர், “நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும் பினால் இவ்வாறு (ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களை விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்)” என்றார்.
அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந் தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் இந்த அத்தியாயத்தை நேசிக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியாயத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புஹாரி (774)
குர்ஆனை உளூ இல்லாமல் ஓதலாமா? நோயுற்றவர்களுக்கு ஓதி காசு வாங்கலாமா? இறந்தவர்களுக்கு குர்ஆனை ஓதி நன்மை சேர்க்க இயலுமா? என்று பல்வேறு கேள்விகள் பலருக்கும் இருக்கும்.
இவற்றில் சரியான கருத்தைத் தெரிந்து கொள்ள் முஃமின்கள் குழப்பம் அடைய அவசியமே இல்லை. இவற்றுள் எதற்கெல்லாம் நபிகளாரின் வழிகாட்டுதல் இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று கவனித்துப் பாருங்கள். திருக்குர்ஆன் தொடர்பாக சமூகத்தில் இருக்கும் சடங்குகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை
பொருளாதாரம் சம்பந்தமாக எப்போதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. அனுமதி இருக்கும் வியாபாரம், தடையாக இருக்கும் வியாபாரம், லாபத்தை பெற்றுக் கொள்வது, செலவழிக்கும் வகை, தொழில் நடத்தும் விதம் என்று செல்வம் ரீதியாக எண்ணற்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
இம்மாதிரியான வினாக்களுக்கும் விடையை நபிகளாரிடம் தேடிச் செல்ல வேண்டும். இதை முஸ்லிம் சமுதாயத்தின் முதல் தலைமுறையினர் நன்கு விளங்கி வைத்து இருந்தார்கள். நபிகளார் கொடுத்த பதிலை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.
நானும் என் தந்தையும் என் பாட்டனாரும் நபி (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும் வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு தடவை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன். அதாவது, என் தந்தை யஸீத் தர்மம் செய்வதற்காக சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். உடனே என் தந்தை, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம் உனக்கல்லவே” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கவர்கள் ” யஸீதே! உமது (தர்ம) எண்ணத்திற்கான நற்பலன் உனக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கே!” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஅன் பின் யஸீத் (ரலி),
நூல்: புஹாரி (1422)
எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கி, “கஅப் பின் மாலிக்! கஅப்!” என்று அழைத்தார்கள். உடனே நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ் வின் தூதரே!” என்றேன்.
அப்போது அவர்கள் “உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக‘ என்று சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி), “எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
நூல்: புஹாரி (471)
வட்டி, வரதட்சனையை வாங்கலாமா? அதை ஆதரித்து துணை போகலாமா? குத்தகை, அடமானம் ஆகியவற்றை எப்படிக் கையாள்வது? என்றெல்லாம் பொருளாதாரம் பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்குரிய போதனைகள் திருத்தூதரின் வாழ்விலே இருக்கின்றன.
முஸ்லிம் சமுதாயத்தில் எத்தனை பேர் இதை நினைவில் வைத்து செயல்படுகிறார்கள்? மனோ இச்சைக்கு இசைவாக நடந்து கொள்வதைக் கைவிட்டு அனைவரும் மாமனிதர் பாதையில் பயணம் செய்ய முன்வர வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
பொய்த்துப் போன பைபிளின் முன்னறிவிப்புகள்
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் கிறித்தவ மத போதகர்களுடன் சென்னையில் ஒரு விவாதத்தைச் சந்தித்தது.
பைபிள் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா என்பது விவாதத்தின் தலைப்புகள்.
அல்லாஹ்வின் அருளால் குர்ஆன் இறைவேதமே என்பதும், பைபிள் இறைவேதமே அல்ல என்பதும் அடுக்கடுக்கான பல சான்றுகளுடன் விவாதத்தில் நிரூபிக்கப்பட்டது.
நமது தரப்பிலிருந்து குர்ஆன் இறைவேதமே என்பதை நிரூபிக்க, குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் பலவற்றை அடுக்கினோம்.
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன – அல்குர்ஆன் 4:56
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன – அல்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61,
குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே – அல்குர்ஆன் 75:39
விண்வெளிப் பயணம் மேற் கொள்ளும்போது மனித இதயம் சுருங்கும் – அல்குர்ஆன் 6:125
விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது – அல்குர்ஆன் 17:37
இவை நாம் நாம் முன்வைத்த ஆதாரங்களில் சில துளிகளாகும்.
இவற்றைக் குறிப்பிட்டு நாம் முன்வைத்த பிரதான வாதம் என்னவென்றால்,
தற்போதைய விஞ்ஞான அறிவில் நூற்றில் ஒரு பங்கு கூட 1400 ஆண்டு களுக்கு முன்பு இருந்ததில்லை.
அப்படியிருக்க, தற்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த அரிய விஞ்ஞான உண்மைகள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பது எப்படி சாத்தியம்?
அகிலத்தையும் அறிந்த இறைவன் வழங்கிய வேதமாக, வார்த்தையாக அல்குர்ஆன் இருக்கும் காரணத்தால் தான் இது சாத்தியமானது. எனவே குர்ஆன் இறைவேதம் என்பது சத்தியமானது.
இவ்வாறு நாம் வாதம் வைத்தோம்.
இதற்கு கிறித்தவ மதபோதகர் களால் மழுப்பலையும் உளறலையும் தவிர வேறு எந்தப் பதிலையும் அளிக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி பைபிள் இறைவேதமே என்பதையும் அவர்களால் நிறுவ முடியவில்லை.
ஆதாரம் என்று அவர்கள் முன்வைத்த சிலவற்றைக் குறிப்பிடு கிறோம். இதிலிருந்தே அவர்களின் தரம் என்ன? திறம் என்ன? என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.
கணவன் மனைவி அன்பாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
உழைப்பாளிகளுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
பெண்களை மதிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
எனவே பைபிள் இறைவேதமே!!!
இவ்வாறு கிறித்தவ மதபோதகர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.
இதைப் படித்ததும் சிரிப்பு வருகிறதல்லவா? கிறித்தவ மத போதகர்கள் இவ்வாதங்களை வைத்த போது அதே சிரிப்பொலி தான் விவாத அரங்கிலும் ஒலித்தது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அவர்களின் வாதத் திறமையை எடுத்துக் காட்ட இது ஒன்றே போதுமானது எனக் கருதுகிறோம்.
மேலும் விவாதத்தில் முன் வைக்கப்பட்ட நமது வாதங்கள், எதிர் தரப்பாளர்களின் வாதங்கள், உளறல்கள், கேள்விகள் அதற்கு நமது பதில்கள் என முழுமையாக அறிந்து கொள்ள நமது இணைய தளத்தையும் உணர்வு வார இதழையும் பார்வையிடுங்கள்.
இந்தக் கட்டுரையில் நாம் விளக்க முற்படுவது குறிப்பிட்ட ஒரு அம்சத்தைப் பற்றி மட்டுமே!
இறைவேதம் என்று ஒரு புத்தகத்தைச் சொல்ல வேண்டுமானால் அதற்குப் பல தகுதிகள் இருக்க வேண்டும். அவற்றில் முதன்மைத் தகுதியானது, வேதம் என்று கருதப்படுவதில் சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகளில் எந்த ஒன்றும் பொய்யாகி விடக் கூடாது. எல்லா முன்னறிவிப்புகளும் நிறைவேறி இருக்க வேண்டும். இதுவே இறைவேதத்திற்கான முக்கிய அளவுகோலாகும்.
இறைவேதத்திற்கான இந்த ஒரு அளவுகோலின் படி பைபிளை நாம் அணுகினால் அது இறைவேதமல்ல என்பதை தன்னைத் தானே நிரூபிப்பதைக் காணலாம்.
பைபிள் உண்மையிலேயே இறைவனின் வேதம் என்றால் அதில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகள் நிறைவேறியிருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் பைபிளில் சொல்லப் பட்டுள்ள பல முன்னறிவிப்புகள் நிறைவேறாமல், பொய்த்துப் போயுள்ளது. அவற்றில் சிலவற்றை, குறிப்பாக நாம் விவாதத்தில் மேற்காள் காட்டியதை ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் அறியத் தருகிறோம்.
முன்னறிவிப்பு: 1
விருத்தசேதனம் செய்யாதோர் ஜெருசலத்திற்குள் செல்வதில்லையா?
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக் கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
ஏசாயா, அதிகாரம் 52, வசனம் 1
இந்த வசனத்தில் கடவுளாகிய கர்த்தர் ஜெருசலம் பற்றி ஒரு முன்னறிவிப்பு செய்கிறார்.
விருத்தசேதனமில்லாதவன் மற்றும் அசுத்தமானவன் எவனும் இனி ஜெருசலத்திற்குள்ளே வரமுடியாது என்பது தான் கர்த்தர் செய்யும் முன்னறிவிப்பாகும்.
இந்த முன்னறிவிப்பு மெய்யானதா? பொய்யானதா?
இனி விருத்தசேதனமில்லாதவர்கள் யாரும் ஜெருசலத்திற்குள் வரமுடியாது என்றால் அது சொல்லப்பட்டதிலிருந்து இதுவரையிலும், இறுதி வரையிலும் அப்படிப்பட்ட யாரும் அங்கே செல்லக் கூடாது என்று அர்த்தம்.
விருத்தசேதனம் (கத்னா) செய்யப் படாதோர் யாரும் ஜெருசலத்திற்குள் இப்போது பிரவேசிப்பதில்லையா?
ஏன் அங்கிருக்கும் யூத, கிறித்தவ மக்களே (அதிகம்) விருத்த சேதனம் செய்யாதவர்கள் தானே?
அடுத்து அசுத்தமானவர்களும் அங்கே இனி செல்ல முடியாதாம்.
அசுத்தமானவன் என்பது கொள்கையைக் குறிக்கும் என்றால் கிறித்தவ கொள்கையை ஏற்காத யாரும் ஜெருசலத்திற்குள் பைபிள் செய்த முன்னறிவிப்பின் படி செல்ல முடியாமல் இருக்க வேண்டும். ஆனால் நடப்பு நிலவரம் அவ்வாறல்ல.
விருத்த சேதனம் செய்யாதோர், அசுத்தமானவர்கள் என இரு சாராருமே ஜெருசலத்திற்குள் ஒவ்வொரு நாளும் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படியிருக்கும் போது இவர்களில் யாரும் இனி உன்னிடத்தில் வர மாட்டார் என்று பைபிள் சொன்னது என்னவானது?
பைபிள் சொன்ன முன்னறிவிப்பு பொய்த்துப் போனது என்பதைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகிறது.
முன்னறிவிப்பு: 2
யூதர்களுக்கென சொந்த தேசம் இருக்குமா?
பைபிள் செய்யும் மற்றொரு முன்னறிவிப்பு யாதெனில் யூதர் களுக்கு என்று எல்லாக் காலத்திலும் சொந்த தேசம், நாடு இருக்கும். அது அவர்களிடமிருந்து எப்போதும் பிடுங்கப்படாது என்பதாகும்.
இதோ பைபிள் கூறுவதைப் பாருங்கள்.
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனி பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆமோஸ், அதிகாரம் 9, வசனம் 14, 15
யூதர்களுக்கு என்று ஒரு தேசம் கர்த்தரால் வழங்கப்படும் என்றும் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து பிடுங்கப்படாது என்றும் பைபிளின் இவ்வசனங்கள் முன்னறிவிப்பு செய்கிறது.
இதுவாவது நிறைவேறியதா?
அதுவும் இல்லை. இவ்வசனத்தில் சொல்லப்பட்டபடி யூதர்களுக்கென்று தேசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அது நிலைத்திருக்க வில்லை. பல காலகட்டங்களில் அது அவர்களிடமிருந்து பிடுங்கப் பட்டுள்ளது.
யூதர்களுக்கென்று சொந்தமாக எந்த நாடும் இல்லாத காலமும் உண்டு என்பதை வரலாறு மெய்ப்பிக்கின்றது. அப்படியானால் பைபிள் செய்த முன்னறிவிப்பின் கதி என்ன? அதோ கதி தான். இதை தனியாக வேறு சொல்லவும் வேண்டுமா?
பொய்த்துப் போன முன்னறிவிப்பு களை உள்ளடக்கிய மனித நூலே பைபிள். அது இறைவேதமல்ல என்பதை இது காட்டுகின்றது.
முன்னறிவிப்பு 3
இயேசு காலத்திலிருந்து இன்று வரை உயிரோடிருக்கும் நபர்கள் உண்டா?
அடுத்து பைபிள் இன்னொரு விநோதமான முன்னறிவிப்பு ஒன்றையும் செய்கிறது. வழக்கம் போல் அதுவும் காலத்தால் பொய்ப்பிக்கப் பட்டுள்ளது.
காலத்தால் மட்டுமல்ல, படிக்கும் போதே இது என்ன முன்னறிவிப்பு? இது முழுக்க முட்டாள் தனம் என்பதை எளிதில் அறிந்து விடலாம்.
இதோ விநோத முன்னறிவிப்பைச் சொல்லும் பைபிளின் வசனங்கள்.
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு, அதிகாரம் 16, வசனம் 27, 28.
இதில் என்ன சொல்லப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
தம் வாழ்நாளில் உள்ள மக்களை நோக்கி இயேசு முழங்குகிறார்.
இறுதி காலத்தின் நெருக்கத்தில் மீண்டு(ம்) வருவேன். அப்போது நான் வருவதைப் பார்க்கும் வரை உங்களில் சிலர் உயிரோடு இருப்பீர்கள். அதுவரையிலும் அந்த சிலர் மரணிக்க மாட்டீர்கள் என்கிறார்.
இந்த முன்னறிவிப்பின் படி இயேசுவின் காலத்திலிருந்து தற்போது வரை ஏதேனும் சில நபர்கள் உயிரோடு, மரணத்தைச் சுவைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
அந்த நபர்கள் யார்?
ஏனெனில் இயேசு தம் ராஜ்யத்தில் இன்னும் வரவில்லை. நான் ராஜ்யத்தில் வருவதை காணாமல் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள் என்று தம் காலத்தில் உள்ள சிலருக்கு தீர்க்க தரிசனமாக, முன்னறிவிப்பாகச் சொல்லியுள்ளார்.
பைபிள் கூறிய இந்த முன்னறிவிப்பு நிறைவேற வேண்டும் என்றால் இயேசுவின் காலத்தில் உள்ள அந்த ஒரு சிலர் தற்போது வரையிலும் உயிரோடு இருந்திருக்க வேண்டும். இயேசு ராஜ்யத்தில் வரும் வரை மரணிக்காமல் இருக்க வேண்டும்.
இதை இன்னும் எளிமைப் படுத்துவதாக இருந்தால் இயேசு இந்த முன்னறிவிப்பைச் சொல்லும் போது ஒருவருக்கு வயது 40 என்றும் இயேசுவுக்கு வயது 40 என்றும் வைத்துக் கொண்டால் இந்நேரம் அவருக்கு வயது 1975. இந்த வயதில் உயிரோடு இருக்கவேண்டும்.
இந்த உதாரணத்தின் படி உலகத்தில் 1975 வயதில் யாராவது ஒரு சிலராவது இருக்க வேண்டும் என்பது பைபிளின் முன்னறிவிப்பு. அப்படி யாரும் உண்டா?
இருந்தால் பைபிள் இறைவேதம் என்பதற்கு அதுவே மிகப்பெரிய அத்தாட்சியாக இருந்திருக்குமே.
உலகின் எந்த மூலையில் அவர் இருந்திருந்தாலும் மீடியாவின் கழுகுப் பார்வைக்கு இரையாகி இந்நேரம் நம் பார்வைக்கு விருந்தாகியிருப்பாரே!
நம் நாட்டுப் பெண்கள் அவரைக் கடவுளாக்கி ஒரு மரத்தடியில் அமர வைத்து பூஜை, பரிகாரங் களையெல்லாம் செய்யத் துவங்கியிருப்பார்களே!
ஊருக்கு ஊர் அவர் பெயரில், அவர் உருவத்தில் சிலைகள் வடித்திருப்பார்களே!
ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை. காரணம் இயேசுவின் காலத்திலிருந்து தற்போது வரையிலும் உயிரோடு வாழும் ஒருவரும் இல்லை என்பது எல்.கே.ஜி. படிக்கும் சிறுபிள்ளைக்கும் தெரிந்த விஷயம்.
பைபிள் செய்த இந்த முன்னறிவிப்பு பொய்த்துப் போனது மட்டுமல்ல, கேலிக்கூத்தாகி நிற்பதிலிருந்து பைபிள் இறைவேதமே அல்ல என்பது இன்னும் தெளிவாகிறது.
குர்ஆனின் முன்னறிவிப்புகள்
பைபிள் செய்த முன்னறிவிப்புகள் வார்த்தைக்கு வார்த்தை பொய்யாகி அது இறைவேதமல்ல என்பது நிரூபணமாவதால், கூனிக்குறுகி நின்று கொண்டிருக்கும் வேளையில் குர்ஆன் தன்னைத் தானே இறைவேதம் என்பதை தனது முன்னறிவிப்புகளால் நிரூபித்து, கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதையும் பார்க்கிறோம்.
குர்ஆனில் சொல்லப்பட்ட ஒவ்வொரு முன்னறிவிப்பும் அச்சரம் பிசகாமல் நிறைவேறியுள்ளது. நிறைவேறிக் கொண்டும் இருக்கிறது.
அவற்றில் ஒரு சிலதை இங்கே சுருக்கமாகக் காண்போம்.
அபய பூமி கஅபா
உலகில் இறைவனை வணங்குவ தற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 2:125
கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே இருந்து வருகிறது.
14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும், அப்படித் தாக்க வந்தால் அவர்களை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருகிறது.
யூத, கிறித்தவர்கள் இதை முறியடிக்க என்னென்னவோ செய்து பார்த்தும் கஃபாவின் பாதுகாப்புத் தன்மைக்கு ஒரு பங்கமும் ஏற்படவில்லை.
இந்த வகையில் தான் செய்த முன்னறிவிப்பை நிரூபித்து, தான் இறைவேதமே என்று உலக மக்களுக்கு அல்குர்ஆன் கர்ஜனை செய்கிறது.
முஸ்லிம்கள் பெறும் வெற்றி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்தபோது பிற்காலத்தில் முஸ்லிம் களின் ஆட்சி அமையும் என்று திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்தது.
உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான்.
அல்குர்ஆன் 73:20
“உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரும் இனிமேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்” என அல்லாஹ் கூறுகிறான்.
நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருந்த காலகட்டத்தில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பது ஒரு ஆட்சியை அமைத்து படைதிரட்டிப் போர் புரிவதைக் குறிக்கும்.
இப்படிப் போர் புரிவோர் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே மாபெரும் இஸ்லாமிய ஆட்சி அமைந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் உருவானார்கள்.
இவ்வாறு முன்னறிவிப்புச் செய்த படியே நடந்தேறியது, திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும்.
மக்காவின் வறுமை நீங்கும்
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர் களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் பின்னர் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:28
மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி எல்லா விதமான தீமைகளையும் அங்கு அனுமதித்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வரக் கூடாது’ என்று இவ்வசனத்தின் (9:28) மூலம் இறைவன் தடை செய்தான்.
இந்தத் தடையினால் பயணிகளின் கூட்டம் குறைந்து அதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மக்காவாசிகள் அஞ்சினார்கள்.
இவர்களது அச்சத்தைப் போக்கும் விதமாகவே இவ்வசனத்தில் “நீங்கள் வறுமையை அஞ்ச வேண்டாம்; நான் உங்களைச் செல்வந்தர்களாக்குவேன்’ என்று இறைவன் புறத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இணை கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர், இறைவன் வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசிகளின் செல்வநிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும் நீடித்து திருக்குர்ஆன் இறைவேதமே என்பதை உலகுக்கு அறிவித்து கொண்டிருக்கிறது.
இப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பைபிள் செய்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றும் பொய்த்துப் போய் விட்டது.
குர்ஆன் செய்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றும் உண்மையாகியுள்ளது.
இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவுஜீவிகள் யாவரும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதையும் திருக்குர்ஆன் இறை வேதமே என்பதையும் உறுதியாக ஏற்றுக் கொள்வார்.
—————————————————————————————————————————————————————-
எத்தி வைக்கும் யுக்தி – 3
வீரியமுள்ள பிரச்சாரம் வீழ்கின்ற தருணங்கள்
எம்.எஸ். ஜீனத் நிஸா
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்
மார்க்கத்தை எத்திவைப்பதற்கு வெட்கம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பது பற்றிக் கடந்த இதழில் கண்டோம். மேலும் நமது பிரச்சாரங்களுக்கு இழுக்கை ஏற்படுத்தக் கூடிய பயிற்சியின்மை பற்றி இவ்விதழில் நாம் காண இருக்கின்றோம்.
சொற்பொழிவுகளில் ஏற்படும் தவறான வார்த்தைப் பிரயோகத்தினால், முறையான பயிற்சியின்மையினால் சிலரது பிரச்சாரம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இது குறித்து பேச்சாளர்கள் அறிந்து கொள்வதும், இவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.
உரையில் பயன்படுத்துகின்ற குர்ஆன் வசனங்களிலோ, ஹதீஸ்களிலோ தவறிழைத்து விடக் கூடாது. அதற்கேற்றாற் போல் முறையாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்களைப் பயிற்சி எடுத்த பின்னரே சொற்பொழி வாற்றுவதற்குச் செல்ல வேண்டும்.
சிலர் குர்ஆன் வசனங்களை, ஹதீஸ் என்றும் ஹதீஸ் வாசகங்களை இது குர்ஆனில் இடம் பெறுகின்றது என்றும் தவறுதலாகப் பயன்படுத்தி விடுகின்றனர்.
மேலும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் துஆக்களை அரபியில் பயன்படுத்தும் போது தப்பும், தவறுமாகப் பயன்படுத்தி விடுகின்றனர். இது மார்க்க அடிப்படையில் தவறாகும். பேச்சாளர்களுக்குரிய அழகும் கிடையாது
அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது “யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக் கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறி விட்டார்” என்று குறிப்பிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். “யார் அல்லாஹ் விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ‘ என்று (பிரித்துக்) கூறுவீராக!” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 1578
“அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும்’ என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தும் போது “அவ்விருவருக்கும்’ என்று நபித்தோழர் பேசியதற்குத் தான் இவ்வளவு பெரிய கண்டனத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இந்த இடத்தில் இவர்கள் செய்த தவறு தான் என்ன என்று உற்று நோக்கும் போது தான் அல்லாஹ்வின் அந்தஸ்தில் அல்லாஹ்வின் தூதரை வைத்துப் பயன்படுத்திவிட்டார்கள் என்ற கருத்து இதில் அடங்குகின்றது.
இந்த ஒரு சான்றே நாம் சொற்பொழிவில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், நாம் பயானில் எவ்வளவு தவறுகளைச் செய்கின்றோம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத் தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கி விடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபி‘யை நான் நம்பினேன்” என்று பிரார்த்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!
இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். “நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்‘ என்ற இடத்தை அடைந்ததும் (“உன் நபியை‘ என்பதற்கு பதிலாக) “உன் ரசூலை‘ என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், “இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்‘ என்று சொல்” என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.
நூல்: புகாரி 247
நபி என்ற வார்த்தைக்கும், ரசூல் என்ற வார்த்தைக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஒரே பொருள் தருகின்ற இரு வார்த்தைகளாகும். ஆனாலும் கற்றுக் கொடுத்த அந்த துஆவை அப்படியே வார்த்தை பிசகாமல் பயன்படுத்துமாறு அந்த நபித் தோழருக்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே உரையில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளைக் கூட நாம் செய்துவிடக்கூடாது.
எதையேனும் ஒன்றை பேசித் தான் ஆகவேண்டும் என்பதற்காக இட்டுக் கட்டப்பட்ட செய்தி களைப் பேசிவிடக் கூடாது. மேலும் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நாம் பேசுவதற்கு எடுத்துள்ள ஹதீஸ்கள் சரியான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்பதை ஆய்வு செய்த பிறகே சொற்பொழிவாற்ற வேண்டும்.
அரபு மூலத்துடன் வாசித்து பொருள் செய்து உரையாற்றும் ஆற்றலுள்ளவர்கள் குர்ஆன் வசன எண்ணையோ, ஹதீஸ் எண்ணையோ குறிப்பிடாமல் பேசலாம். மூலத்தை வாசித்துக் காட்டியதால் அதில் மக்களின் நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படாது.
ஆனால் அரபு மூலத்தை வாசித்துப் பொருள் செய்ய இயலாதவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பயன்படுத்தும் போது அத்தியாய எண், மற்றும் வசன எண்களையும், ஹதீஸ்கள் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவற்றையும் ஹதீஸ்களின் எண்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதுவே நமக்கும், மற்ற அமைப்பினருக்கும் உள்ள வித்தியாசமாகும்.
வசன எண்களையும், ஹதீஸ் எண்களையும் நாம் தவறாகப் பயன்படுத்தினால் அது நமது உரையில் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி விடும்.
பாமர மக்களிடமும் குர்ஆன், ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, அவற்றுக்கான மொழிபெயர்ப்புகள் வெளிவந்துவிட்ட இந்தக் காலத்தில் நாம் கூறும் வசனத்தையோ, ஹதீஸ்களையோ உடனடியாகச் சென்று அதன் மொழிபெயர்ப்புகளில் தேடிப் பார்க்க விழைவார்கள். நாம் குறிப்பிட்ட எண்களில் அந்த வசனம் இல்லாத பட்சத்தில் நமது மொத்த உரையையும் அது சந்தேகத்திற்குரியதாக ஆக்கிவிடும்.
சொற்பொழிவாற்றும் போது நாம் சொல்கின்ற தகவல்கள் உண்மையான செய்திகள் தானா? என்பதை ஆய்வு செய்யாமல் கண்மூடித்தனமாக பேசிவிடக் கூடாது. ஏனெனில் அது வதந்தியைப் பரப்புவதாக அமைந்துவிடும்
பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள் வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.
அல்குர்ஆன்: 4:83
மார்க்கத்தை மென்மையான முறையில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும்
“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங் கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)
அல்குர்ஆன் 20:44
தன்னையே கடவுள் என்று கூறிக் கொண்டு தனது ஆட்சிப் பீடத்திற்கு எவரும் வந்துவிடக்கூடாது என்பதற் காக பனூ இஸ்ரவேலர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று குவித்து, அவர்களை அடிமைப்படுத்தி, சித்ரவதை செய்து கொண்டிருந்த கொடுங்கோல் மன்னனான பிர்அவ்னிடம் கூட மென்மையான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் என்றே மூஸா நபியவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர். நபி (ஸல்) அவர்கள் “அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் செல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 220
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவி யரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்க மாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ள வனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 2946
நன்மை மற்றும் சொர்க்கத்தின் பக்கம் ஆர்வமூட்டி மக்களின் தவறுகளைத் திருத்தவேண்டுமே தவிர அவர்களைப் பயமுறுத்தி மார்க்கத்தை விட்டுமே விரண்டு ஓடச் செய்துவிடக்கூடாது
அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள், “யமன் இரு மாகாணங்களாகும்” என்று சொன்னார்கள். பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள். வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.
நூல்: புகாரி 4341
தர்மம் செய்தல், மென்மை யைக் கடைபிடித்தல் போன்ற நம் செயல்களாலும் மார்க்கத்தைப் பிறருக்கு எத்திவைக்கலாம். ஏனெனில் நபிகளாரின் செயல் களினாலும் பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று கூறினார்.
நூல்: முஸ்லிம் 4630
நம்முடைய செயல்கள் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் சரியான முறையில் இருக்குமானால் அதைப் பார்த்து முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள்.
ஒரு மனிதர் உலக ஆதாயத் திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிலிருப் பவற்றையும் விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.
அல்லாஹ்வின் தூதருடைய நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுமாமா (ரலி) அவர்களின் சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்‘ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா‘ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.
மறு நாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளி வாசலுக்கு வந்து, “வணக்கத்திற் குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை‘ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்க வில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்று வரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்” என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி யளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 4372
—————————————————————————————————————————————————————-
உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்!
முஹம்மது ஒலி, எம்.ஐ.எஸ்.சி.
மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.
பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து ஏழைகளாக மாறிவிடுகின்றனர். இந்த நேரத்தில் நம்மிடம் உதவக் கூடிய நல்லுள்ளத்தை இறைவன் எதிர் பார்க்கிறான்.
சமீபத்தில் தமிழகத்தில் பரவலாகப் பெய்த கனமழையின் காரணமாக சென்னை, கடலூர் போன்ற சில மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டன. அங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் நீரில் மிதந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போனது. இதில் வேடிக்கை என்வென்றால் மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலை ஏற்பட்டது. இதில் தமிழக அரசு தன்னால் இயன்ற சில உதவிகளைத் தான் செய்தது.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இதுபோன்ற நிலையில் மனிதர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதில் அழகிய முறையில் நமக்கு வழிகாட்டியுள்ளது.
இஸ்லாத்தில் சிறந்த செயல்
இஸ்லாமிய மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் அதில் சிறந்ததாக பசித்தோருக்கு உணவளிக்கும் இந்தச் செயலைக் குறிப்பிடுகிறது. நாம் மட்டும் உண்டு கழித்து சுகபோகத்தில் வாழக்கூடிய சுய நலத்தை நமக்குக் கற்றுத் தரவில்லை.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது,
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்பு களி)ல் சிறந்தது எது‘ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக் கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல்: புகாரி 12
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
”ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” – இது மனிதர்கள் சொல்லும் பழமொழி (இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பது இஸ்லாத்தின் ஆழமான நம்பிக்கை). ஆனால் இதன் சிறப்பை உணர்ந்து மக்கள் நடப்பது போல் தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இதன் சிறப்பை அழகிய முறையில் எடுத்துரைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5021
உணவளிக்காதவன் நரகம் செல்வான்
மறுமையில் நரகம் செல்வதற்குரிய கெட்ட செயல்களை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் கூறியுள்ளான். அதில் மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளிடம் கேட்கும் சில கேள்விகளும் அடங்கும்.
இது பற்றி இறைவன் கூறும்போது,
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை” (எனவும் கூறுவார்கள்).
அல்குர்ஆன் 77:42-47
மறுப்போரின் பண்பு
இறைவனை மறுப்போர் எப்படி இவ்வுலக வாழ்வில் நடப்பார்கள் என்பதற்கு இறைவன் பல பண்பு களை திருமறையில் கூறியுள்ளான். இந்தப் பண்புகள் முஸ்லிம்களாகிய நமது வாழ்க்கையில் வராமல் இருப்பதற்கு அதிகக் கவனத்தோடு வாழ்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
இது குறித்து இறைவன் தன் திருமறையில் கூறும்போது,
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர் களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 36:47
உணவளிக்கத் தூண்டாதவனின் நிலை
பசித்தோருக்கு உணவளிப்பது என்பது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களும், நடுத்தரத்தில் இருப்பவர்களும் செய்ய வேண்டிய அவசியமான பண்பாகும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் பிறரிடத்தில் எடுத்துக் கூறியாவது பசித்தோரின் பசி போக்கப் பாடுபட வேண்டும்.
இந்தக் கருத்தில் இறைவன் பல வசனங்களை தன் திருமறையில் கூறியுள்ளான்.
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் “எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரிய வில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்ற வில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.
அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்). அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவும் இல்லை.
அல்குர்ஆன் 69:25-34
அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டு வதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்பு கிறீர்கள். அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
அல்குர்ஆன் 89:17-23
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
அல்குர்ஆன் 107:1-3
நபிகளாரிடம் முன்மாதிரி
அகிலத்தாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக இருப்பது போல் ஏழைகளுக்கு உணவளிக்கும் விஷயத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். தன்னிடத்தில் உணவளிக்க ஏதும் இல்லாதிருந்த போதும் கூட பிறரிடம் எடுத்துக் கூறி மற்றவர்களின் பசி போக்க அதிக முனைப்பு காட்டினார்கள்.
இதனைப் பின்வரும் செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்-அனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?”… அல்லது “இவருக்கு விருந்தளிப்பவர் யார்?”… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கிறேன்)” என்று சொல்- அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று சொன்னார்.
அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று சொன்னார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கை சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்
…அல்லது வியப்படைந்தான்” என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கஞ்சத்தனத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்” என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.
நூல்: புகாரி 3798
மேலே குறிப்பிடப்பட்ட செய்திகள் அனைத்தும் மற்றவர்கள் பசியோடிருக்க நாம் மட்டும் உண்டு கழித்து சுயநலத்தோடு வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்படுகிறது. இத்தகைய செய்திகளை உணர்ந்து பொது நலத்துடன் வாழ்ந்து இஸ்லாத்தின் சிறப்புத் தன்மையை அனைத்து மக்களுக்கும் எடுத்துக் காட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.
—————————————————————————————————————————————————————-
இணை கற்பித்தல் தொடர்: 36
இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
அற்புதங்கள் நபிமார்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மனிதர்களுக்கும் நடக்கும் என்பதற்குப் பல சான்றுகளைப் பார்த்தோம்.
நபிமார்கள் அல்லாத வேறு யாராவது நான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். நபிமார்கள் கூட தாங்களாகவே அற்புதங்களைச் செய்ய முடியாது. அல்லாஹ் நாடினால், நபிமார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு அற்புதத்தையும் நான் இப்போது இந்த மாதிரியாக செய்து காட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அற்புதத்தைச் செய்கின்ற ஆற்றலை இறைவன் நபிமார்களுக்குத் தான் வழங்கி யிருக்கிறான். அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை.
மற்றபடி நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உலக வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்கும். ஆனால் அந்த அதிசயங்களை அவர்கள் சொல்லி வைத்து செய்வது கிடையாது. அவர்கள் அறியாமலேயே அது நடக்கும். இவ்வாறு நடக்கப் போகின்றது என அவர்களுக்கே தெரியாது. இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இந்த அற்புதங்களெல்லாம் அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் நிகழும்.
அற்புதங்களை நபிமார்கள் செய்வதாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு அவர்களிட மிருந்தே அவர்கள் அறியாமலே அல்லாஹ் வெளிப்படுத்துவதுகின்ற அற்புதங்களாக இருந்தாலும் சரி! இவை அனைத்துமே அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் செய்ய முடியும். அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது.
ஆனால் நம் சமுதாய மக்கள், அவ்லியாக்கள் உயிருடன் இருக்கும் போதும், மரணித்த பிறகும் அவர்களிடமிருந்து அற்புதங்கள் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, அவர்கள் உயிருடன் இருக்கும் போது செய்த அற்புதங்களை விட இறந்த பின்னர் தான் அவர்களுக்கு அதிகமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றல் பெற்றதாக நினைக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது நாம் செய்வதை அறியாத அவ்லியாக்கள் இறந்த பிறகு நாம் செய்வதை மட்டுமல்ல, உலகில் எங்கு எது நடந்தாலும் அனைத்தையும் அறிகிறார் என்று நம்புகின்றனர்.
உயிருடன் இருக்கும் போது நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புங்கள் செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை. அதே நேரத்தில் நபிமார்களாக இருந்தாலும் எந்தவொரு மனிதர்களாக இருந்தாலும் இறந்த பிறகு அற்புதங்கள் செய்ய முடியுமா? அல்லது அவர்களிட மிருந்து அற்புதங்கள் நிகழுமா என்றால் நிகழாது. அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிமார்களாக இருந்தாலும் இறந்த பிறகு உலகத்தில் நடக்கக்கூடிய எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்பதற்குக் குர்ஆனில் உள்ள பல வசனங்கள் சான்றாக அமைகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்.
(அல்குர்ஆன் 7.194)
அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தங்களுடைய கோரிக்கையை வைத்தாலும் அவன் அத்தனை தேவைகளையும் ஒரு வினாடியில் நிறைவேற்றக் கூடியவன். அனைவரையும் அல்லாஹ் தான் படைத்தான். அவ்லியாக்கள் என்று இவர்கள் நினைக்கும் அவர்களையும் அல்லாஹ் தான் படைத்தான். அனைவரும் அவனது அடிமைகளே!
அவனல்லாத மற்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவது இரண்டாவது விஷயம். முதலில் நாம் அவர்களை அழைத்தால் அதைச் செவியேற்க கூட அவர்களுக்கு சக்தி இல்லை. அப்படியே செவியேற்றாலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது என்று சொல்லிக் காட்டுகிறான்.
நாம் இவர்களிடத்தில் கேட்பது என்னவென்றால், தர்ஹாக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு சக்தி, ஆற்றல் இருக்கிறது என்று நீங்கள் வாதிப்பது உண்மையானால் அல்லாஹ் விடக்கூடிய இந்த அறைகூவலை ஏற்கத் தயாரா?
அவர்கள் செவியேற்பார்கள் என்றால் தர்காவிற்குச் சென்று அவர்களை அழையுங்கள்? அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கின்றார்களா என்று பார்ப்போம். நீங்கள் உங்களுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை அவர்களிடத்தில் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு கப்ரில் இருந்து கொண்டே உங்களுடைய கையில் நீங்கள் கேட்ட பொருளை கொண்டு வந்து தரட்டும். இந்த மாதிரி உலகத்தில் எங்காவது யாருக்காவது நடந்திருக்கிறதா? என்று ஒரு செய்தியை நீங்கள் காட்ட முடியுமா?
இவ்வாறு செய்து காட்டி, நீங்கள் உண்மையாளர்கள், உங்களுடைய கடவுள்களும் உண்மையானது என்று நிருபிக்கத் தயாரா?
இதை நீங்கள் ஒருபோதும் செய்து காட்ட முடியாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.
மேலும், இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,
தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் உங்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது? என்று கேட்பான். எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 5:109)
அல்லாஹ் ஒவ்வாரு சமுதாயத் திற்கும் அந்தந்த சமுதாயத்தில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இறைச் செய்தியை எடுத்துச் சொல்லக் கூடிய தூதராக அனுப்புகிறான். அவ்வாறு அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் யார் யார் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள்? யார் யார் ஏற்றுக் கொள்ளவில்லை? கொள்கையை ஏற்றுக் கொண்ட மாதிரி நடித்தவர்கள் (முனாஃபிக்குள்) யார்? என்னென்ன துன்பங்கள் ஏற்பட்டது? அந்த துன்பங்களின் போது உறுதியாக இருந்தவர்கள் யார்? விரண்டோடி யவர்கள் யார்? இந்தக் கொள்கையை எதிர்த்த எதிரிகள் யார்? என்பதை தங்களது சக்திக்கு உட்பட்டு நபிமார்கள் அறிந்து வைத்திருந்தனர். சிலவற்றை அல்லாஹ்வே அறிவித்துக் கொடுத்தான்.
ஆனால் அந்த நபிமார்கள் இறந்த பிறகு இவற்றில் எந்த ஒன்றையும் அறிந்து வைத்திருக்கவில்லை. அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. அல்லாஹ் மறுமை நாளில் அனைத்து நபிமார்களிடத்திலும் கேட்பது, நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய சமுதாய மக்களின் நிலை என்ன? என்பதுதான். அதற்கு அவர்கள், இறைவா! அதைப் பற்றிய அறிவு எங்களுக்கு கிடையாது. நாங்கள் எதையும் அறிந்திருக்க வில்லை. யார் யார் கொள்கையில் இருந்தார்கள்? யார் கொள்கையை விட்டு வெளியேறினார்கள்? அல்லாஹ்வை மட்டும் வணங்கிய வர்கள் யார்? சிலைகளை வணங்கியவர்கள் யார்? என்பதை நாங்கள் உயிருடன் இருக்கும் போது தான் அறிந்து வைத்திருந்தோம். இறந்த பிறகு அதை அறியக்கூடிய ஆற்றல் உனக்கு தான் இருக்கின்றது என்று சொல்லி விடுவார்கள்.
ஆக, நபிமார்களாகவே இருந்தாலும் அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. அதைத் தான் மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
மேலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
(அல்குர்ஆன் 35:14)
அவ்லியாக்கள் என்ற பெயரில் சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்ட வர்களுக்கு அத்தனையும் அறியக் கூடிய ஆற்றல், கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்றால், எதற்காக மறுமையில் இறைவனிடத்தில் அவர்கள் மறுக்க வேண்டும்?
நீங்கள் அவ்லியாக்களை (?) அழைத்ததை, அவர்களிடத்தில் பிரார்த்தித்ததை, கோரிக்கைகளை முன் வைத்ததை ஏன் மறுக்க வேண்டும்? அவர்களுக்கு ஆற்றல் உண்டு என்றால் அல்லாஹ்விடத்தில், “எனக்கும் உன்னைப் போன்ற ஆற்றல், வல்லமை இருக்கிறது. உன்னிடத்தில் அவர்கள் கேட்பதை நீ கொடுப்பது போன்று என்னாலும் கொடுக்க முடியும்’ என்று சொல்லியிருக்க வேண்டியது தானே!
ஆனால், மேற்கண்ட வசனத்தில் “நான் யாரையும் என்னை வணங்கு மாறு சொல்லவில்லை. என்னை அழைக்குமாறு, என்னிடத்தில் கோரிக்கைகளை முன் வைக்குமாறு சொல்லவில்லை. நாங்கள் அதனை மறுத்து விடுகின்றோம்’ என்று அந்த அவ்லியாக்கள் சொல்லி விடுவதாக இறைவன் கூறிக் காட்டுகின்றான்.
அவர்கள் இறந்த பிறகு இந்த உலகத்தில் நடந்தது எதுவும் தெரியாது என்ற காரணத்தினால் தான் இந்த மக்கள் செய்த இணைவைப்புக் காரியங்களை அல்லாஹ்விடம் மறுத்து விடுகின்றார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
தொடர்: 8 ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு
நோய் நிவாரணம் தருவது யார்?
எம். ஷம்சுல்லுஹா
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாத்திமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர் களுக்கு ஸலாம் சொல்கின்றேன். ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹமத் (என்ற இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.
இவை ஹுஸைன் மவ்லிதில் இடம்பெறும் வரிகளாகும்.
பொதுவாக எந்த ஒரு மவ்லிதாக இருந்தாலும் அந்த மவ்லிதின் ஆரம்ப வரிகள் அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி அவனைப் பாராட்டியும் அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலாம், ஸலவாத்துச் சொல்லியும் ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் அருமையாகத் துவங்கும். இவற்றைப் படிக்கவும், பாடவும் ஆரம்பித்தவர், இவை தன்னை ஏகாந்த லயிப்பிலும், ரசிப்பிலும் ஏகத்துவ உலகத்திற்கு இழுத்துச் செலவதைப் போன்ற ஒரு ஸ்பரிசத்தை உணர்வார்.
அதன் பிறகு வரக்கூடிய இணை வைப்புப் பாடல் வரிகள் முன்னால் சொன்ன ஏகத்துவக் கருத்துகளை அப்படியே தலைகீழாகப் புரட்டி விடும். அப்போது, இணைவைப்பு என்னும் இருட்டறைக்கு, குமட்டலைத் தருகின்ற பிண வாடை வீசும் பிணக் கிடங்கிற்கு நாம் வந்து விட்டோம் என்று உணர்வார். அந்த அவலத்தையும் அலங்கோலத்தையும் தான் இப்போது நாம் இந்தக் கவிதை வரிகளில் பார்க்கின்றோம்.
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாதிமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். இந்த கவிதை வரிகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதன் பின்னால் வருகின்ற விஷயம் தான் தவ்ஹீத் கருத்தைக் குழி தோண்டி புதைப்பதாக உள்ளது.
ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹமத் என்ற (இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.
இதை எழுதிய காயல்பட்டினத்தைச் சார்ந்த முஹம்மது பின் அஹ்மத் என்பவர் “வேண்டுதல் வைக்கப் படக்கூடியவர் ஹுசைன் (ரலி)’ என்று கூறுகின்றார்.
முதலில் இந்தக் கவிஞன் செய்கின்ற குற்றம், இறந்து போன ஹுசைனிடம் உதவி தேடுவதாகும். இது மாபெரும் இணை வைப்பாகும்.,
ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:20, 21
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற் பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்குர்ஆன் 35:14
இந்த வசனங்கள் இன்னும் இதே கருத்தில் அமைந்த வசனங்கள் மிகத் தெளிவாக இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறுகின்றன. இந்த அடிப்படையில், இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்று இந்தக் கவிஞர் நம்புவது வல்ல அல்லாஹ்வுக்கு வைக்கின்ற முதல் இணை வைப்பாகும்.
வேண்டுதல் முன் வைக்கப் படுபவர் ஹுசைன் என்ற வார்த்தையை இவர் பயன்படுத்துகின்றார். ஆனால், வல்ல நாயன் தனது திருக்குர்ஆனில்,
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக அல்குர்ஆன் 2:186) என்று கூறுகின்றான்.
இந்த வசனத்தில் அடியார்கள் தன்னிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“பிரார்த்தனை தான் வணக்க மாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” (40:59) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 3170, 2895, 3294
இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களும், துஆ ஒரு வணக்கமாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால், இவரோ ஹுசைனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த அடிப்படையில் இவர் இறைவனுக்கு வைக்கின்ற இரண்டாவது இணை வைப்பாகும்.
அடுத்து, நோய் நிவாரணம் ஹுசைனிடம் தான் இருக்கின்றது என்று கூறுகின்றார். இது அடுத்த இந்தக் கவிஞர் செய்கின்ற அடுத்த இணை வைப்பாகும்.
மனிதனுக்கு நோய்களை ஏற்படுத் துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளை யிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.
இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன் 26:80)
நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயைத் தாமே நீக்கிக் கொள்ள வில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக் கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த் தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரை யும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 21:83)
துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 6:17)
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்
(அல்குர்ஆன் 10:49)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர் களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:38)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள்.
நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், “நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது‘ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2839, 4423
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா‘ என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
நூல்: புகாரி 5648, 5660, 5667
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப் பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750
பொருள்:
“இறைவா! மனிதர்களின் இரட்ச கனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!’
நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.
ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது “இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு‘ என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 5659
அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ் விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.
அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.
அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்… நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.
நூல்: புகாரி 1248
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஆனால் ஹுஸைன் மவ்லிதை எழுதிய இந்தக் கவிஞரோ நோய் நிவாரணம் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் இருக்கின்றது என்று கூறுகின்றார்.
திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
—————————————————————————————————————————————————————-
குடும்பவியல் தொடர்: 29
ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி
இஸ்லாமியக் குடும்பவியலில் ஆண்கள் நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரப் பிரச்சனை கள் அனைத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள் என்பதையும் இதுவரை நாம் பார்த்துள்ளோம்.
குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார் களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களை யும் கொடுத்துவிடக் கூடாது. அந்தக் கஷ்டங்களை நாமே சுமந்து கொண்டு, அவர்களைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும் என்பதற்குரிய பல காரணங்களைப் பார்த்தோம்.
பொதுவாக முஸ்லிம்கள் பெண் களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் மற்றவர்களை விடவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இருவரின் சம்பாத்தியமும் சேர்ந்து கிடைத்தால் தற்போது வாழ்வதை விடவும் செழிப்பாக வாழலாம் என்பதே வேலைக்கு அனுப்புபவர்களின் மனநிலையாக உள்ளது. இதில் காசு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆண் போன்று இன்னொரு மடங்கு பெண்களின் சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்தால் சொத்து சுகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதுதான் பெண்களை வேலைக்கு அனுப்புபவர்களின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.
இது இஸ்லாமிய சமூகமல்லாத மற்ற மக்களுக்குரிய வழியாகும். அவர்கள் உலகப் பொருளாதாரக் கணக்குப் போடுவது அவர்களுக்குச் சரியாகத் தான் தெரியும். ஏனெனில் அவர்கள் உலகத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே அதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை.
ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மறுமையை நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே ரிஸ்க்கைத் தருகிறவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்று மட்டும் அர்த்தம் வைத்துவிடக் கூடாது. உணவு, ஆடை, அழகு, அலங்காரம், வாகனங்கள், பண்புகள் என்று எதுவெல்லாம் மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரங்களாக உள்ளதோ அவை அனைத்துக்குமே ரிஸ்க் என்று சொல்லப்படும். அதை வழங்குகிற இறைவனுக்கு ராஸிக் (ரிஸ்க்கை வழங்குபவன்) என்றும் ரஸ்ஸாக் (அளவு கடந்து ரிஸ்க்கை வாரிவழங்குபன்) என்றும் அல்லாஹ் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.
எது பரக்கத்?
அல்லாஹ் நமக்குத் தந்த ரிஸ்க்கில் பரக்கத் என்ற மறைமுகமான அருளைத் தருகிறான் என்று நம்பிச் செயல்பட வேண்டும். நிறைய பொருளாதாரத்தைத் தந்து, அதில் நமது தேவைகள் நிறைவேறாமல் ஆகிவிட்டால், அந்த நிறைய பொருளாதாரத்தினால் எந்த நன்மையும் கிடையாது. இலட்சக் கணக்கான ரூபாய் வருமானம் வந்து, அதை விடவும் இலட்சக் கணக்கான வகையில் செலவாகிவிட்டால் அதிகமான வருமானத்தினால் எந்த நன்மையும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
பத்தாயிரம் வருமானம் வந்து, 12 ஆயிரம் செலவானால் இந்தப் பத்தாயிரத்தில் நன்மை இல்லை என்று பொருள். அதே நேரத்தில் 5000 வருமானம் வந்து 4000 ரூபாயில் நமது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் அதுதான் நமக்குக் கிடைத்த பெரிய நன்மை. ஏùனில் ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.
ஆக முஸ்லிம்களைப் பொறுத்த வகையில், ஆண்கள்தான் குடும்பப் பொருளாதாரத்தைச் சுமக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னதை கொள்கையளவில் ஒத்துக் கொண்டு செயல்பட்டால் அல்லாஹ் அத்தகைய ஆண்களுக்கு மறைமுகமாக அருள் செய்கிறான்.
ஆண்கள் மட்டும் வருமானத்தை ஈட்டி குடும்பத்தைப் பார்க்கிற நமது சமூகம் இருக்கிற செழிப்பைப் போன்று ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதிக்கிற வேறு சமூகங்களில் செழிப்பு இல்லாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் சொகுசாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் பெறுகிற சம்பளத்திற்கேற்ற செழிப்பு அவர்களது வாழ்க்கையில் தெரிவ தில்லை. அவர்களது வாழ்க்கையில் பல சிரமங்களைத் தான் அன்றாடம் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆய்வு செய்து பார்த்தால், பிற சமூகங்களைப் போல் பெரிய படிப்பு படித்திருக்க மாட்டார்கள். 5000, 6000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களாக அதிகமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தச் சம்பளத்தில் தான் தானும் சாப்பிட்டு, மனைவி மக்களுக்கும் சாப்பாடு கொடுத்து கொண்டு, பிள்ளைகளைப் படிக்க வைத்து, மனைவிமார்களுக்கு நகை நட்டுகளெல்லாம் அணிவித்து நல்லபடியாக வைத்துள்ளாôர்கள்.
ஒரு நபரின் சம்பாத்தியத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் சாப்பாடு, ஆடைகள் உள்ளிட்ட முக்கியத் தேவைகளையெல்லாம் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான்.
தொகை அதிகமாக வந்தால் இன்னும் நன்றாக வாழலாம் என்று தப்பாக ஒரு முஸ்லிம் கணக்குப் போடவே கூடாது. தொகை கூடுதல் குறைவு என்பது விஷயமல்ல. குறைவோ கூடுதலோ எப்படி யிருந்தாலும் அல்லாஹ் அதில் பரக்கத் என்ற மறைமுக அருளைச் செய்கிறானா? என்று தான் பார்க்க வேண்டும்.
ஒரு இலட்ச ரூபாயைத் தந்து, 2 இலட்சத்திற்கு நோயையும் சேர்த்துக் கொடுத்தால் ஒரு இலட்சத்திற்கு எந்த மதிப்பும் கிடைக்காது. ஒரு இலட்சமும் தராமல், நோயும் வராமல் இருந்தால் நமக்கு மிச்சம் தான். எனவே ஒவ்வொரு முஸ்லிமும், அல்லாஹ் நமக்கு இப்படியொரு ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறான். இதில் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பான், நம்மைச் சிரமத்தில் விட்டுவிட மாட்டான் என்று அல்லாஹ்வின் பரக்கத்தை நம்ப வேண்டும்.
இறைவனின் மறைமுக உதவி யான பரக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறை மறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார். பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார். மறு நாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோது, அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கை யாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 4189, புகாரி 5397
இன்னும் இச்செய்தி புகாரியில் 5393, 5394, 5395, 5396 யிலும் முஸ்லிமில் 4185, 4186, 4187, 4188 ஆகிய அறிவிப்புக்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி நபியவர்கள் கண்முன்னே நடந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுத் தான் அல்லாஹ் முஸ்லிமுக்குச் செய்யும் மறைமுக அருளான பரக்கத்தை விளக்குகிறார்கள், ஒரு ஆட்டின் பாலிலிருந்தே முஃமினுக்கு வயிறும் நிறைந்து விடுகிறது, மனதும் போதுமாக்கிக் கொள்கிறது, அதிலிருந்து கிடைக்க வேண்டிய சத்துக்களும் சரியாகக் கிடைத்து விடுகிறது.
முஃமினல்லாதவருக்கு அதிகம் வயிறு கொள்கிற அளவுக்கு சாப்பிடுவார்கள், மனதும் வயிறும் நிரம்பாத நிலை உள்ளது.
எனவே பரக்கத் என்ற மறைமுக அருளைத் தான் முஃமின் ஒரு குடலில் சாப்பிடுவதாகவும் மற்றவர்கள் ஏழு குடலுக்குச் சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்த நன்மையை முஸ்லிம் சமூகம் இன்றுவரை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ சமூகங்கள் கணவன் வேலைக்குச் செல்வதைப் போன்று மனைவியைச் சம்பாதிப்பதற்கு அனுப்புவார்கள். இப்படிக் குடும்பத்துடன் உழைத்தும் சாதாரண நிலையில் தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. குடிசைகளிலும் ஓட்டு வீடுகளிலும்தான் இருக்கிறார்கள்.
நமது சமூகம் வெளிநாடுகளில் அற்ப சம்பளத்திற்கு இருந்தாலும் வீட்டைக் கட்டுகிறார்கள். கார வீடுகளிலும் மாடிவீடுகளிலும் சொகுசாக வசிக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் ஒரு பொட்டு தங்கத்திற்குக் கூட வழியில்லாமல் இருப்பார்கள். நமது சமூதாயப் பெண்கள் காதுக்கு, மூக்குக்கு, கைகளுக்கு என்று தங்கத்தை அடுக்கிக் கொள்கிற அளவுக்கு இருக்கிறார்கள். ஆனாலும் பிற சமூக மக்களோடு ஒப்பிடுகையில் நாம் தான் மிகவும் வருமானத்தில் பின்தங்கியிருக்கிறோம். நமக்குக் கிடைக்கும் பொருளாதாரம் குறைவாக இருந்தாலும் அதற்குள்ளேயே நமது தேவைகள் நிறைவேறி, மிச்சத்தைச் சேமிக்கும் வகையில் அல்லாஹ் நமக்கு அமைத்துத் தருகிறான்.
கல்யாணத்திற்குப் பிற சமூக மக்கள் பத்தாயிரத்திற்கு நகை போட்டதைப் பெரிதாகச் சொல்வார்கள். முஸ்லிம் சமூக மக்களுக்கு கல்யாண வீட்டில் பெண் உடுத்துகிற பட்டுக்கே பத்தாயிரம் பற்றாமல் இருக்கிறது. கல்யாணப் பெண்ணுக்கு நகை போட்டால் அரைக் கிலோ, ஒருகிலோ தங்கம் என்று போடுகிறார்கள். வரதட்சணை வாங்குவதையும் கொடுப்பதையும் இந்த மார்க்கம் தடுக்கிறது. இருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் செழிப்பை விளங்கிக் கொள்வதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
எனவே அதிகமான பொருளாதாரம் நமக்குக் கிடைக்கும் என்பதற்காக பெண்களை வேலைக்கு அனுப்பும் நோய் நமக்கு வந்து விடக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மரபுக்கு மாற்றமாக பொருளாதாரத்திற்கு ஆசைப்பட்டால், மாத வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கலாம். ஆனால் அதை விட அதிகமாகச் செலவாகி விடும்.
இப்படி மனைவியை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதால் அல்லாஹ் பரக்கத்தை தடுத்துவிட்டுத் தான் தருவான். கடைசியில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிச்சம் ஒன்றுமிராது. கையைப் பிடிக்கிற மாதிரித்தான் இருக்கும்.
எனவே முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குடும்பச் செலவுக்கான பொருளாதாரப் பொறுப்பை ஆண்களின் மீது அல்லாஹ் சுமத்தியிருப்பதினால் நாம் தான் அந்தப் பொறுப்பைச் சுமக்கவேண்டும் என்பதையும் அப்படிச் சுமந்தால் அல்லாஹ்வின் உதவியும் மறைமுகமான அருளும் இருக்கிறது என்பதையும் நம்பிச் செயல்பட்டால் எந்தக் கட்டத்திலும் நமது மனைவிமார்களை வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழல் வராது.
அதுபோக, நாம் உலகத்திற்காக வாழ்கின்ற சமூகம் கிடையாது. இதுவரை கடந்த இதழ்களில் கூறப்பட்டவைகள் அனைத்திலும் உலகக் கணக்கின் அடிப்படையில் பெண்களை வேலைக்கு அனுப்பி சம்பாதிக்கக் கூடாது என்பதை விளக்கியிருந்தோம்.
முஸ்லிம்கள் மறுமையை இலக்காகக் கொண்ட சமுதாயம் என்பதால் இந்த உலகத்தில் வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றாலும் அதற்காக இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிவிடவே கூடாது.
உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் கணவர் மட்டும் உழைக்கிறார். அவரது சம்பாத்தியத்தில் சோறு, தண்ணீர் மட்டும் தான் குடித்து வாழ முடிகிறது, மற்றபடி பெரியளவுக்குத் தேவைகளை கணவரது சம்பாத்தியத்தில் ஒன்றும் செய்யமுடியாத சூழல் இருந்தால் அதை அப்படியே பொருந்திக் கொண்டு வாழவேண்டியதுதான். அவர்கள் அப்படியிருக்கிறார்கள்; இவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்று மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளத் தேவையில்லை.
இதற்கு மிகச் சிறந்த ஆதாரம், ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அனைத்திற்கும் முன்மாதிரியாக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். நபிகளார் நபித்துவ வாழ்வில் வறுமையும் ஏழ்மையும் தான் நிறைந்து காணப்படுகிறது. நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரது ஒருநாள் உணவு ஒரு பேரீச்சம் பழம் என்ற அளவில் தான் இருந்தது. வெறும் தண்ணீரையும் பேரீச்சம் பழங்ளையும் உண்டு, பாலைப் பருகித் தங்களது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்கள்.
சொகுசாக வாழ்வதற்காக, டீவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின் போன்றவை வாங்க வேண்டும் என்பதற்காகக் குடும்பப் பெண்களை சம்பாதிக்க அனுப்பக் கூடாது. நன்றாகவும் நவீன வசதிகளோடும் சொகுசாகவும் வாழ்வதற்கு ஆண்களே மார்க்கம் அனுமதித்த வழியில் கூடுதலாக சம்பாதிப்பதற்கு, உழைப்பதற்கு முயற்சிக்கலாம். இதில் தவறேதும் கிடையாது. இன்னும் சொல்வதெனில் மார்க்கம் அதை வலியுறுத்தவே செய்கிறது.
ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை ஒருக்காலும் எடுத்துவிடவே கூடாது. ஏனெனில் நபிமார்களும் நபிகள் நாயகமும் அவர்களது தோழர்களும் பட்ட சிரமங்களை இன்றைய காலத்தில் நம்மில் ஒருவர் கூட நிச்சயம் அடைந்திருக்க மாட்டார். அவ்வளவு பெரிய வறுமையில் தான் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இந்தக் குடும்பவியல் தலைப்பில் புரிந்து கொள்ளவேண்டும்.
சமூக பாதிப்பு
பெண்களைச் சம்பாதிப்பதற்காக வேலைக்கு அனுப்புவதால், சமூகத் திற்கும் நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. நாட்டு மக்களுக்கே நட்டம் தான். ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்று பலநாடுகளில் காணப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு ஆண் வேலைக்குச் சென்றால், மனைவி மக்கள், தன் குடும்பத்தையெல்லாம் காப்பாற்றிக் கொள்கிறான். அந்தக் குடும்பத்திற்கு ஒரு வேலை என்றாகி விடுகிறது.
ஆனால் நடைமுறையில் இன்றைக்குக் கணவர் வேலைக்குச் சென்றால், தனது செல்வாக்கில் மனைவியையும் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். அப்படியெனில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு வேலையாகி விடுகிறது. இப்போது, இந்தப் பெண்ணுக்குக் கிடைத்த வேலை வேறொரு ஆணுக்குக் கிடைத்தால் அவனைக் கொண்டு ஒரு குடும்பமே நன்றாக வாழும். பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஆண் களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது.
ஒரு ஆண் வேலைக்குச் செல்வது ஒரு ஆணுக்கு மட்டும் உரிய வேலை கிடையாது. ஒரு குடும்பத்தின் வேலையாகும். அப்படியெனில் ஒரு ஆணுக்கு வேலை கொடுத்தால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்துத் தான் வேலை கொடுக்கிறோம் என்றாகும். ஏனெனில் தாய், மனைவி போன்ற பெண்களைப் பார்ப்பதும் ஒரு ஆண்மகனின் வேலை தான்.
பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஒரு குடும்பத்திலுள்ள இருவர் வேலை செய்வார்கள். அதே நேரத்தில் இன்னொரு குடும்பத்திலுள்ள ஆணுக்கு வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கும்.
அடுத்ததாக, பெண்களுக்கு இன்னும் ஒரு முக்கியமான பலவீனம் இருக்கிறது. பெண்கள் இயற்கையாகவே மாதவிடாய்க் காலத்தில் இயல்புக்கு மாற்றமாகவே இருப்பார்கள். டென்ஷனாகவும் கோபமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். மாதவிடாய் நேரத்தில் சாதாரண நாட்களில் இருப்பதை விடவும் அதிகமாக ஓய்வை எதிர்பார்ப்பார்கள். பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார்கள் எனில் சிறிய வேலைகளைச் செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் ஏதேனும் நிறுவனத்தில் வேலைக்குப் போகிற பெண்ணாக இருந்தால் மாதம் முழுவதும் எல்லா நாட்களிலும் வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். நினைத்த நேரத்திற்கெல்லாம் ஓய்வை எடுக்க முடியாது. இந்நேரத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமான சுமைகளைத் தாங்கக் கூடாது என்றும் இலகுவாக வேலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களும் உடற்கூறு ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளும் சொல்லத்தான் செய்கின்றனர்.
அதேபோன்று பொதுவாக பெண்கள் 45 வயதை அடைய ஆரம்பித்தால் மாதவிடாய்க்கான சுரப்பிகள் குறையத் துவங்கி ஏறத்தாழ 50 வயதுக்குள் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடும். இந்தக் கால இடைவெளியில் உடல் ரீதியாக பல சிதைவு மாற்றங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் கடுமையாகக் கோபப்படுவார்கள். மாதவிடாய் நின்றதும் உடலிலுள்ள வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடும். இவ்வளவு பலவீனங்களுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்புவது நியாயமற்ற செயல்.
இதில் நிறைய விஷயங்கள் உள்ளன. மாதவிடாய் மூலம் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று ஆய்வு செய்தால் இன்னும் அதிகமான பிரச்சனைக்குரிய காரணகளைச் சொல்கிறார்கள்.
மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உள்ள பெண்கள் விஷயத்தில் கணவன்மார்கள், குடும்பத்தினர் கூடுதலான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கோபம் தெரியும். அதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் வாழவேண்டும். எப்போதையும் விட அதிக பரிவையும் கரிசனத்தையும் அன்பையும் அவர்கள் மீது பொழிய வேண்டும்.
எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால், இஸ்லாம் ஆண்கள் மீது பொருளீட்டும் பொறுப்பைச் சுமத்தியிருப்பது அறிவுப்பூர்வமான தாகவும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்யக் கூடியதாகவும் மனித குலத்திற்கு நன்மை செய்யக் கூடியதாகவும் இருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.
—————————————————————————————————————————————————————-
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்: 23
இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
இதுவரை பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக்கூடாது என்று விரிவாகப் பார்த்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் ஏற்படுகின்ற பயங்கர விளைவுகள் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் பார்த்தோம்.
இந்த அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக கஸ்ஸாலி தனது இஹ்யாவில் அள்ளிக் கொட்டி யிருக்கின்ற பொய்யான, இட்டுக் கட்டப்பட்ட, அறிவிப்பாளர் தொடரில்லாத சில ஹதீஸ்களைப் பார்ப்போம்.
பொய்யான ஹதீஸ் – 1
நான் அறிவுமிக்கவன். ஒவ்வொரு அறிவுமிக்கவனையும் நான் நேசிக்கின்றேன் என்று இப்ராஹீம் நபிக்கு கண்ணியமும் மகத்துவம் நிறைந்த அல்லாஹ் வஹீ அருளினான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்னு அப்துல் பர்ரு இந்தச் செய்தியை தொடர்பு அறுந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதற்கு நான் எந்த தொடரையும் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கீ தெரிவிக்கின்றார்கள்.
இப்னு சுபுக்கியும் இதை அறிவிப்பாளர் தொடர் கிடைக்காத ஹதீஸ்களின் நூலான தபக்காத் என்ற நூலில் கொண்டு வருகின்றார்.
பொய்யான ஹதீஸ் – 2
சீனா சென்று கூட கல்வி தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு அதிய்யி பதிவு செய்திருக்கின்றார். அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸை பைஹகி மத்கல், ஷுஃபுல் ஈமான் நூலில் பதிவு செய்து, “இந்த ஹதீஸ் பிரபல மானது; ஆனால் இதன் அறிவிப்பாளர் தொடர்கள் பலவீனமானவை’ என்று தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறே இது தொடர்பாக ஹாபிழ் இராக்கி அவர்களும் தெரிவிக்கின்றார்கள்.
இது தவறான செய்தியாகும். இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இதை தனது மவ்லூஆத் (இட்டுக் கட்டப்பட்ட செய்திகள்) என்ற நூலில் கொண்டு வருகின்றார் என அல்பானி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சீனம் சென்றேனும் ஞானம் தேடு என்று கவிதை நடையில் தமிழக ஆலிம்கள் தங்கள் பயான்களில் அடித்து விடுவார்கள். ஆலிம்களும் இஸ்லாமியப் பேச்சாளர்களும் கல்வியைப் பற்றிப் பேசும் போது இந்த ஹதீஸைச் சொல்லாமல் விட மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பொய்யான ஹதீஸுக்கு மதிப்பும் மரியாதையும் மக்களிடம் பெற்றிருக்கின்றது.
பொய்யான ஹதீஸ் – 3
“ஆயிரம் ரக்அத்துகள் தொழு வதை விடவும் ஆயிரம் நோயாளிகளை நலம் விசாரிப்பதை விடவும் ஆயிரம் ஜனாஸாக்களில் கலந்து கொள்வதை விடவும் ஓர் ஆலிமின் அவையில் வருகை அளிப்பது மிகச் சிறந்ததாகும்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் ஓதுவதை விடவுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “கல்வி இல்லாமல் குர்ஆன் பயனளிக்குமா?” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அதுவும் உமர் (ரலி) அறிவிப்பதாகத் தான் இந்த ஹதீஸ் வருகின்றது. கஸ்ஸாலி குறிப்பிடுவது போன்று அபூதர் (ரலி) வழியாக இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி அறிவிக்கப்படவில்லை.
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் மவ்லூஆத் என்ற நூலில் இதைக் கொண்டு வந்துள்ளார்கள் என ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்படி ஒரு செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று இதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளலாம்.
ரசூல் (ஸல்) அவர்கள் ஆயிரம் ரக்கஅத்துகள் அளவிற்கு தொழ வேண்டும் என்று சிறப்பித்துச் சொன்ன எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியாது. அதே சமயம், கடமையல்லாத உபரியான தொழுகைகளின் பெயர் குறிப்பிட்டும் பெயர் குறிப்பிடாமலும் நபி (ஸல்) அதிகம் அதிகம் கூறியிருக்கின்றார்கள்.
நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது, குர்ஆன் ஓதுவது குறித்தும் நபி (ஸல்) சிறப்பித்துக் கூறிய ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஹதீஸ் வீதம் எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.
யார் இரவு பகலில் பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு அதற்குப் பதிலாக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப் படுகின்றது என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1198
“ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?’ என்று (அடியானிடம்) அல்லாஹ் மறுமை நாளில் விசாரிப்பான். “இறைவா! நீ அகிலத்தின் ரட்சகன் ஆயிற்றே! (நீ எப்படி நோயுறுவாய்) உன்னை நான் எப்படி விசாரிக்க முடியும்?’ என்று அடியான் கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான். அவனை நீ விசாரித்திருந்தால் என்னைக் கண்டிருப்பாய்‘ என்று பதில் அளிப்பான்.
அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4661
“ஜனாஸா தொழுகையில் பங்கேற் கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு‘ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப் பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1325
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திரா விட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4937
இவை ஒவ்வொன்றும் இஹ்யாவில் இடம்பெற்ற மேற்கண்ட பொய்யான ஹதீஸில் கூறப்பட்ட அமல்களுக்கு ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய சிறப்புகளாகும்.
இந்தச் சிறப்புகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் தான் இந்த இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் அமைந்துள்ளது. அத்துடன், ஆலிம்கள் என்ற பெயரில் உள்ள இன்றைய கப்ரு வணக்கப் பேர்வழிகளுக்கு குறிப்பாக அப்துல்லாஹ் ஜமாலி போன்ற ஆட்களுக்கு முன்னால் அமர்ந்தால் அதன் இலட்சணம் எப்படியிருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். இந்த பலே ஆசாமிகளின் முன்னால் அமர்ந்தால், இவர்கள் நம்மை நிச்சயமாக நிரந்தர நரகத்தின் கொள்ளிக் கட்டைகளாக மாற்றி விட்டுத் தான் நகர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இப்படி நரகத்தில் நம்மைக் கொண்டு போய் தள்ளுகின்ற நாசகார நச்சுக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதைச் சாதாரண பாமரனும் உணர்கின்றான். இதை கல்விக் கடலான கஸ்ஸாலியால் உணர முடியவில்லை. அத்துடன் இது, ஸனது அடிப்படையில் ஆதார மில்லாத, இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பது மட்டுமல்லாமல், கருத்து அடிப்படையிலும் அபத்தமான, மிகவும் ஆபத்தான ஹதீஸாகும்.
மொத்தத்தில், இந்தப் பொய்யான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் எந்தத் தனி நபர் வழிபாட்டைத் தகர்த்தெறிந்தார்களோ அந்தத் தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்கின்ற விதத்தில் அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் பாதகமான ஹதீஸாகும்.
இப்படிப்பட்ட பொய்யான ஹதீஸ்களைத் தான் கஸ்ஸாலி இஹ்யாவில் பரவ விட்டிருக்கின்றார்.
பொய்யான ஹதீஸ் – 4
“எனது சமுதாயம் கொள்கின்ற கருத்து வேறுபாடு (இறைவனின்) அருட்கொடையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இது எந்த அடிப்படையும் இல்லாத செய்தியாகும். ஹதீஸ் கலை அறிஞர்கள் இதற்கு ஒரு ஸனதைத் தேடி பெருமுயற்சி எடுத்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் இதற்கு எந்த ஒரு ஸனதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
“இப்படி ஒரு செய்தி ஹதீஸ் கலை அறிஞரிடத்தில் அறியப்பட வில்லை. இதற்கு எந்த ஒரு ஆதாரமான, பலவீனமான ஏன் இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் நான் காணவில்லை’ என்று சுபுக்கீ கூறியதாக மனாவீ தெரிவிக்கின்றார்.
தஃப்ஸீர் பைளாவியின் அடிக் குறிப்பில் ஷைகு ஜகரிய்யா அல் அன்சாரி இதை மேலும் உறுதிப்படுத்துகின்றார். இப்னு ஹஸ்மு அவர்கள், இது ஹதீஸே கிடையாது என்று தெரிவித்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கருத்து படுமோசமான கருத்தாகும். “சமுதாயத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் இறைவனின் அருட் கொடை’ என்றால் ஒற்றுமை, ஒத்தக் கருத்து என்பது அவனுடைய சாபக்கேடு என்ற பாதகமான கருத்தை இது தருகின்றது. இப்படி ஒரு கருத்தை ஒரு முஸ்லிம் கூறமுடியாது.
ஏனெனில், கருத்து வேறுபாடு இருந்தால், கருத்து ஒற்றுமை இருக்காது. அருட்கொடை இருந்தால் சாபக்கேடு இருக்காது என்று இப்னு ஹஸ்மு குறிப்பிடுகின்றார். மற்றொரு இடத்தில், இது பொய்யான செய்தியாகும் என்றும் தெரிவிக்கின்றார்.
உண்மையில் இப்படி ஒரு செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவே முடியாது. இஸ்லாமிய மார்க்கமே முரண்பாடுகளால் சூழப் பட்டுள்ளது போன்ற ஒரு கருத்தை இந்தச் செய்தி தருகின்றது. சுன்னத் வல் ஜமாஅத்தினர் தங்கள் மத்ஹபுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்கு, கஸ்ஸாலி பதிந்துள்ள இந்தப் பொய்யான செய்தியையே ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆனால் வல்ல அல்லாஹ்வோ, ஒரு விஷயத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸில் அதற்குத் தீர்வு இருக்கின்றது என்று கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
அல்குர்ஆன் 4:59
பொய்யான ஹதீஸ் – 5
“குறைந்த இறை உதவி, அதிகமான கல்வியை விடச் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி இஹ்யாவில் அளந்து விடுகின்றார். இது பற்றி ஹாபிழ், இதற்கு எந்த ஓர் அடிப்படையையும் நான் காண வில்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.
தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக மேற்கணட ஹதீஸ் அமைந்துள்ளது.
கஸ்ஸாலி இது போன்று மார்க்கத்தின் பெயரால் பொய்யான ஹதீஸ்களை இன்னும் ஏராளமாக இஹ்யாவில் கொட்டியிருக்கின்றார். அவற்றையும் இனி பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.