ஏகத்துவம் – ஆகஸ்ட் 2018

தனிமையில்  அல்லாஹ்வை தவறாமல் அஞ்சுவோம்

ஊரில் உள்ளவனுக்கு ஒரு ஷைத்தான்! ஓதுகின்ற பிள்ளைகளுக்கு  ஒன்பது ஷைத்தான் என்று மத்ரஸாவில் ஓதுகின்ற மாணவர்களைப் பற்றி ஊர் மக்கள் ஒரு சொலவடையைச் சொல்வார்கள். இவ்வாறு சொல்வதற்குக் காரணம் மத்ரஸாவில் படிக்கின்ற மாணவனிடம் அத்தனை சேட்டைகள் நிறைந்திருக்கும்.

மற்றவன்  ஒரு படம் பார்த்தால் இவன் அனைத்துத் திரையரங்குகளில் ஓடுகின்ற அத்தனை படங்களையும் பார்த்து விடுவான். ஊரில் உள்ளவன் ரமலான் மாதத்தின்  புனிதத்தைக் கவனத்தில் கொண்டு  அம்மாதத்தில் படம் பார்க்க மாட்டான். இவன் ரமலான் மாதத்திலும் துணிந்து படம் பார்ப்பான். ஊரில் உள்ளவனிடம் புகைப் பழக்கம் இருக்காது. இவனிடம் புகைப்பழக்கம் இருக்கும். ஊரில் உள்ளவன் ஐவேளைத் தொழுகைகளை பேணித் தொழுவான். இவன் ஐவேளைத் தொழுகைகளை பேணித் தொழ மாட்டான். இதுபோன்ற காரணங்களால் இப்படிப்பட்ட சொலவடையை மக்கள் சொல்கின்றார்கள்.

இது கிண்டலாக மக்களால் சொல்லப் பட்டாலும் இதில் ஒரு உண்மை  ஒளிந்திருக்கின்றது.  மார்க்கத்தைப் போதிப்பவன் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த உண்மையாகும். இதைத் தான் தவ்ஹீது ஜமாஅத் தனது அழைப்பாளர்களிடத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தவ்ஹீது ஜமாஅத் செய்கின்ற இந்தப் பணி இறைத்தூதர்கள் செய்த தூய பணியாகும். தூதுச் செய்தியை தூய வடிவில் எடுத்துரைக்கும் ஓர் உன்னத, உயரிய பணியாகும். அந்தப் பணியை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் ஒரு தாயி அல்லது அழைப்பாளரின் வாழ்க்கை வேதியியல் பரிசோதனைக்குள்ளாகும். கடந்த கால வாழ்க்கை தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு அலசப்படும். ஆந்தைப்பார்வை அவரது வாழ்க்கையின் அந்தரங்கம் வரை, அதளபாதாளம் வரை பாயும்.  நிகழ்கால வாழ்க்கை நேரலையாகப் பார்க்கப்படும்.

அரசியல்வாதிகள் தப்பு, தவறு செய்யும் போது, அது என் தனிப்பட்ட  வாழ்க்கை என்று சொல்லி சர்வ சாதாரணமாகத் தப்பித்து விடுவார்கள். அதுபோல் இங்கு யாரும் எளிதில் தப்பிக்க முடியாது.

தாயியை விட்டு விடுவோம். ஒரு சாதாரண தவ்ஹீதுவாதியான அடிமட்ட உறுப்பினரின் வாழ்க்கை கூட அது தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று இருகூறாகப் பிரித்துப் பார்க்கப்படாது எனும் போது தாயியைப் பற்றிச் சொல்லவே  வேண்டியதில்லை.

இதோ மூஸா (அலைஹி) அவர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் போது, அவன் அவரது கடந்த கால வாழ்க்கையின் ஃபைல்களை  தூக்கிப் போடுகின்றான்.

குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!’’ என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான். “நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்’’ (என்றும் கூறினான்.)

நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்’’ என அவர் கூறினார்.

அல்குர்ஆன் 26:18-20

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி (ஸல்) அவர்களுடன் உர்வா பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உர்வா, நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா (ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, ‘உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து’ என்று கூறிய வண்ணமிருந்தார்கள்.

அப்போது உர்வா தன்னுடைய தலையை உயர்த்தி, ‘இவர் யார்?’ என்று கேட்க மக்கள், ‘இவர் முகீரா இப்னு ஷுஅபா’ என்று கூறினார்கள். உடனே உர்வா, ‘மோசடிக்காரரே! நீர் மோசடி செய்தபோது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?’ என்று கேட்டார்.

முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பொருட்களை எடுத்தார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்தபோது அவரின் தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருள்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்கள்.

நூல்: புகாரி 2732

இந்தச் சம்பவத்தில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த உர்வா, நபி (ஸல்) அவர்களின் தோழரான மூகீராவின் கடந்த கால வாழ்க்கையின் ஃபைல்களை தூக்கிப் போடுகின்றார். ஏகத்துவப் பாதையில் இது போன்று கடந்த கால வாழ்க்கையின் ஃபைல்கள் தூக்கிப் போடப்படும் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக் காட்டு.

இது மாதிரியான கட்டங்களில் மூஸா (அலை) அவர்கள் கடந்த காலத் தவறை ஒப்புக்கொண்டது போன்றும், நபி (ஸல்) அவர்கள் மூகீராவின் வாழ்க்கையில் நடந்த தவறை ஒப்புக் கொண்டது போன்றும் ஒப்புக் கொண்டு விட்டு, அதாவது, ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் இதுபோன்ற தவறைச் செய்தேன், இப்போது நான் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்கிறேன் என்ற உத்தரவாதத்துடன் அழைப்புப்பணியையும் பயணத்தையும் தொடர வேண்டும்.

கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறு என்றால் இவ்வாறு நாம் ஒப்புக் கொண்டு, திருத்த வேண்டியதைத் திருத்திக் கொண்டு கடந்து செல்லலாம். ஆனால் நிகழ்கால வாழ்க்கையில் இது போன்று நடந்தால் என்ன செய்வது? அது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும்.  இது அழைப்புப் பணியை பாதித்து விடும்.

இவன் தன்னை தானே திருத்திக் கொள்ளவில்லை. இவன் அடுத்தவனுக்குச் சொல்ல வந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டு  ஏகத்துவவாதிகளே சம்பந்தப்பட்டவரின் அறிவுரையைக் கேட்க முன் வரமாட்டார்கள்.

ஏகத்துக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் இவரது பயானைக் கேட்க வராமல் இருப்பதில் பிரச்சனை இல்லை. பயானைக் கேட்காவிட்டாலும் கொள்கையளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் அதே சமயம் இந்தக் கொள்கைக்கு வெளியே, ஷிர்க் கொள்கையில் உள்ள ஒருவர் இந்த அழைப்பாளர் செய்த தவறுகளைப் பார்த்து விட்டு, ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்ள அறவே முன் வரமாட்டார்.

 அதனால் அழைப்புப் பணியில் உள்ளவனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒரு தவறு வெளியே இருப்பவனை சத்தியக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு தடைக்கல்லாக ஆகிவிடுகின்றது.

அதனால் தான் ஒரு தாயி தனது வாழ்க்கையை முன்மாதிரி வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீது ஜமாஅத் கடுமை காட்டுகின்றது.

அதற்குக் குர்ஆன், ஹதீஸ் கூறுகின்ற வழிமுறை என்ன?

அல்லாஹ்வை தனிமையில் அஞ்ச வேண்டும்

இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 36:11

திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.

அல்குர்ஆன் 50:32-33

அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.

அல்குர்ஆன் 21:49

இவ்வசனங்கள் அல்லாஹ்வுக்குத் தனிமையில் அஞ்சுவதை வலியுறுத்திக் கூறுகின்றன. அந்த அடிப்படையில் ஒவ்வொரு அழைப்பாளரும் தனிமையில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

இந்த ஜமாஅத் அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஜமாஅத். வஹீ தான் நேர்வழி என்று நெஞ்சு நிமிர்த்திச்  சொல்கின்ற ஒரு ஜமாஅத். அப்படிச் சொல்கின்ற இந்த ஜமாஅத்தில் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்களை ஷைத்தான் கட்டம் கட்டி முற்றுகையிடுவான்.

இதனால் அவனுக்கு இரண்டு லாபங்கள்.

 1. ஒருவனை வழி கெடுத்த லாபம்.
 2. இந்த ஜமாஅத்தின் பெயரைக் களங்கப்படுத்தி, அதற்குள் மற்றவர்களை வரவிடாமல் தடுத்த லாபம்.

இந்த ஜமாஅத்துக்குள் வந்தால் அவர்கள் ஏகத்துவவாதிகளாகி விடுவார்கள். ஷிர்க் – இணை வைப்பு என்ற பாவத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். அதனால் அந்தப் பலனை தடுத்து நிறுத்தி விடவேண்டும். அதுதான் ஷைத்தானின் இலக்கு. அண்மையில், நடந்த சில நிகழ்வுகள் இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டுகளாகும்.

தனிமனிதன் எம்மாபெரிய ஆளாக இருந்தாலும் தவறின்பாற்பட்டவன். அதற்கு அமைப்பு பொறுப்பாகாது. அமைப்பின் சட்டத்தைப் பாருங்கள் என்று நாம் உரத்து, கூச்சம் நாச்சமில்லாமல் சொல்ல முடிகின்றது. கூனிக் குறுகாமல் கொள்கைப் பாதையில் பயணம் செல்ல முடிகின்றது. அப்படி ஒரு பாதுகாப்பை அல்லாஹ் நமது ஜமாஅத்திற்கு வழங்கியிருக்கின்றான்.

பொதுவாக அல்லாஹ் தன் அடியார்களை அவர்கள் தனிமையில் தன்னை அஞ்சுகின்றார்களா? அல்லது ஷைத்தானின் ஊசலாட்டத்திற்கு ஆட்படுகின்றார்களா? என்று சோதிப்பான்.  எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் இஹ்ராம் கட்டிய மக்களை நோக்கிக் கூறக்கூடிய வசனத்தை பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ‘தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும்போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:94

இஹ்ராம் கட்டிய பிறகு வேட்டையாடுதல் தடுக்கப்பட்டிருக்கின்றது. தடுக்கப்பட்ட காரியத்தைச் செய்யாமல் தனிமையில் தன்னை   அஞ்சி  ஒதுங்குகின்றார்களா? அல்லது தடுக்கப்பட்ட காரியத்தைச் செய்து விடுகின்றார்களா? என்று அல்லாஹ் வேண்டுமென்றே கண் முன்னால் வேட்டைப் பிராணிகளைக் கொண்டு வந்து அவர்களைச் சோதிப்பேன் என்று சொல்கின்றான். அது மாதிரியான சோதனையை தாயிகளுக்கும் அல்லாஹ் வைப்பான். அந்தச் சோதனையில் தவ்ஹீதுவாதியான தாயிகள் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் அல்லாஹ்வைத் தனிமையில் அஞ்ச வேண்டும்.

சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டும் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்

அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார்.

சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.

எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும்.

எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி)

நூல்: புகாரி 52

என்ன அற்புதமான ஹதீஸ்! இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒரு தாயி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்தின் வாசல்கள் அத்தனையையும் ஒரு தாயி அடைத்து விட வேண்டும்.

ஒருவர் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் செயல்பட்டாலே போதும். அது அவரது மார்க்கத்தையும் மானத்தையும் காத்து விடும். இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, ‘நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்’ என்றார்.

அதற்கு நான் ‘நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே’ என்று கூறினேன்.

உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சனை பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?’ என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்.

அறிவிப்பவர்: உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி)

நூல்: புகாரி 88

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உக்பாவிடம், ‘நீ போய் உன் குடும்பத்தாரிடம்    மேலும் விசாரி’ என்றெல்லாம் சொல்லவில்லை. ‘சொல்லப்பட்டு விட்டதே! விலகிக் கொள்’ என்று சொல்கின்றார்கள்.

இங்கே சந்தேகம் வந்து விட்டது. அதனால் அதைத் தவிர்ப்பதற்குரிய வாசலை நபி (ஸல்) அவர்கள் அடைத்து விடுகின்றார்கள். தடுக்கப்பட்ட உறவினரிடம் உறவு கொண்டு அதன் மூலம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவதை விட்டும் அவர் மார்க்க ரீதியில் காப்பாற்றப்படுகின்றார். இதில் அவரது மார்க்கம் காக்கப்படுகின்றது. மக்களின் பார்வையில் இதன்  மூலம் அவமானப்படுவதை விட்டும் அவர் காப்பாற்றப்படுகின்றார். இதில் அவரது மானம் காக்கப்படுகின்றது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது; உடனே அதைப் போட்டு விடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 2433

பொதுப்பணத்தை நிர்வாகம் செய்பவர்கள் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்டிப்பாக சந்திப்பார்கள். இதுபோன்று நிர்வாகம் செய்பவர்களிடம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது  அவர் அந்தப் பணம் தன் வரவில் உள்ளதா? என்று பார்க்கின்றார். தனக்குரிய வரவு தான் என்று முடிவு செய்ய முடியவில்லை. பொது வரவா? என்று பார்க்கின்றார். பொது வரவு தான் என்றும் முடிவு செய்ய முடியவில்லை. அப்போது அவர் செய்ய வேண்டிய வேலை அதைப் பொதுப்பணத்தில் சேர்த்துவிடுவது தான்.

ஒரு பேச்சுக்கு நாளை அவர் மீது யாராவது பண மோசடிக் குற்றம் சுமத்தி, அவர் சத்தியம் செய்ய நேரிடும் போது, அவர் அதைப்  பற்றி எந்த உறுத்தலும் இல்லாமல் சத்தியம் செய்து விடலாம். இதன் மூலம் அவரது மானம் காக்கப்படுகின்றது.

ஒருவேளை அது பொதுக்காசாக இருந்து, அந்தப் பணத்தைத் தன் வரவில் சேர்த்து விட்டால் அது ஹராமான பணமாகும். அதனால் அவரது துஆ ஒப்புக்கொள்ளப்படாது என்ற பாதக நிலையை அவர் சந்திக்க நேரிடும்.

அவர் அந்தப் பணத்தை ஒப்படைத்து விட்டால் மார்க்கத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றார். இங்கு அவரது மார்க்கம் காக்கப்பட்டதை நாம் அறிய முடிகின்றது.

இது மேற்கண்ட புகாரி 52 ஹதீஸில் இடம்பெறுகின்ற மார்க்கம், மானம் காக்கப்படுவது தொடர்பான  ஒரு சிறிய விளக்கமாகும்.

ஒரு தாயி, தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுதல் என்ற நெறிமுறையையும், சந்தேகத்தின் வாசலை அடைப்பது என்ற வழிமுறையையும் கடைப்பிடித்தால் அவர் தன்னையும் தனது மார்க்கத்தையும் இந்த மார்க்கத்தைத் தூய வழியில் சொல்கின்ற இந்த பேரமைப்பையும் காத்தவராவர். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

————————————————————————————————————————————————–

சென்ற இதழின் தொடர்ச்சி…

தொப்பி அணிவது சுன்னத்தா?

சபீர் அலி

தொப்பி அணிவது நபி வழி என்ற தலைப்பில் ஓர் ஆக்கத்தை சிலர் வெளியிட்டு அதில் சில ஆதாரங்களை முன்வைத்திருந்தனர். அதற்கான விளக்கத்தையும் அந்தச் செய்தியின் தரங்களையும் பார்த்து வருகிறோம்.

ஆறாவது ஆதாரம்

தொப்பியின் மீது தலைப்பாகை அணியும் வரை எனது சமுதாயம் இயற்கை வழிமுறையிலேயே இருக்கும்.

இந்தச் செய்தியை தங்கள் அடுத்த ஆதாரமாக எடுத்துவைக்கின்றனர்.

இந்தச் செய்தி இமாம் தைலமீ அவர்களின் அல்ஃபிர்தௌஸ் பிமஃசூரில் கிதாப் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதை நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்பதற்கு இந்தச் செய்தியில் எந்தச் சான்றும் இல்லை.

இதை ருக்கானா (ரலி) அறிவிப்பதாக இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் தைலமீ அவர்கள் யஸீத் பின் ருக்கானா வழியாக, அதாவது ருக்கானா (ரலி) அவர்களின் மகனாரின் சொல்லாகத்தான் பதிவுசெய்துள்ளார்.

மேலும், இந்தச் செய்திக்கு எந்த அறிவிப்பாளர் தொடரும் இலலை.

இப்படி முழுவதும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியைத்தான் தங்களுக்கான ஆதாரமாகக் காண்பித்து, மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

ஏழாவது ஆதாரம்

நீங்கள் தலைப்பாகை அணிந்து வாருங்கள். அதன் மூலம் பெருந்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியையும் தங்களுக்கான ஆதாரமாக எடுத்து வைத்து விட்டு, இந்தச் செய்தி ஹாகிம் மற்றும் தப்ரானியில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்  தொடரில் உபைதுல்லாஹ் பின் அபீ ஹுமைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் கடுமையான பலவீனம் கொண்ட ஒரு நபர்.

تهذيب الكمال 742 (19/ 30)

قال أبو طالب (1) : سألت أحمد بن حنبل عن عُبَيد الله بن أَبي حميد ، فقال : ترك الناس حديثه.

وَقَال أبو موسى محمد بن المثنى : ما سمعت عبد الرحمن بن مهدي يحدث عن عُبَيد الله بن أَبي حميد الهذلي ، ضعيف الحديث ، وهو كوفي.

وَقَال في موضع آخر (2) : ما سمعت يحيى ولا عبد الرحمن يحدثان عنه بشيءٍ قط.

وَقَال عَبد الله بن أحمد الدورقي (3) عن يحيى بن مَعِين ، وعثمان بن سَعِيد الدارمي عن دحيم : ضعيف الحديث (4).

وقَال البُخارِيُّ (5) : منكر الحديث.

وَقَال في موضع آخر (1) : يروي عَن أبي المليح عجائب (2).

وَقَال أبو داود : ضعيف.

وَقَال النَّسَائي : ليس بثقة.

وَقَال في موضع آخر (3) : متروك الحديث.

وَقَال أبو حاتم (4) : منكر الحديث ، ضعيف الحديث.

وَقَال أبو حاتم بن حبان (5) : يقلب الأسانيد فاستحق الترك.

وَقَال الدَّارَقُطْنِيُّ (6) : ضعيف الحديث (7.

இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ, அபூஹாதம், அபூதாவூத், யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர்.

இவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அபூஹாதம், புகாரி ஆகியோர் கூறியுள்ளனர்.

இவர் ஹதீஸில் விடப்படவேண்டியவர் என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 19, பக்கம் 30

எனவே இந்தச் செய்தி பலவீனமடைகிறது. மேலும் மேற்குறிப்பிட்டது போல இந்தச் செய்தி தப்ரானியிலும் இடம்பெற்றுள்ளது. அதில் வேறொரு அறிவிப்பாளர் தொடர் இடம்பெற்றுள்ளது. அதில் இம்ரான் பின் தமாம் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இவரைப் பற்றி ஒரே ஒரு விமர்சனத்தை தவிர வேறு எந்த விமர்சனமும் பெறப்படவில்லை.

இவர் மறுக்கப்படவேண்டிய செய்திகளையே அறிவிப்பார் என்பதே அந்த ஒரு விமர்சனம் ஆகும். (பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம் 3, பக்கம் 235)

இதை தாண்டி வேறு எந்த நிறையும் குறையும் சொல்லப்படாத காரணத்தினால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.

எட்டவாது ஆதாரம்

(கடினமான வெப்பக் காலத்தில் தரைச்சூட்டை தவிர்ப்பதற்காக) மக்கள் (ஸஹாபாக்கள், தாபியீன்கள்) தத்தமது தலைப்பாகையின் மடிப்பின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்து வந்தார்கள் என்று ஹஸன் கூறினார்

இந்த செய்தியையும் தொப்பி அணிவதற்கு அடுத்த ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.

இந்த செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தி புகாரியில் அறிவிப்பாளர் தொடர் இல்லாத முஅல்லக்கான செய்தியாகத் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடருடன் பைஹகீ, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும், இந்தச் செய்தி ஹஸன் அல்பஸரீ வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஹிஜ்ரி 22 வாக்கில் தான் பிறந்துள்ளார்.

இவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும் இவர் அறிவிக்கவில்லை.

தன் காலத்தில் இருந்த நடைமுறையை, வெப்பத்திலிருந்து காத்துக் கொள்வதற்காக தொப்பியின் மீது ஸஜ்தாச் செய்தார்கள் என்று கூறுகிறார்.

இது தொழுகையில் தொப்பி அணிய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகுமா?

தொப்பி அணிவது சுன்னத் என்பதற்கு ஆதாரமாகுமா?

இவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்னால் நடந்த நிகழ்வை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திலேயே தொப்பி அணிகின்ற நடைமுறை இருந்தது.

அந்த நடைமுறை எப்படி இருந்தது தொப்பி அணிந்து தொழுதால்தான் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும் என்று இருந்ததா?

தொப்பி அணிவதுதான் முஸ்லிம்களின் அடையாளம் என்று இருந்ததா?

தொப்பி அணிவதுதான் நபிவழி என்று இருந்ததா?

இதில் எதற்காகவும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த நடைமுறையாக இருந்தது.

இஸ்லாத்தின் எதிரிகள் கூடத் தொப்பி அணிந்து தான் இருந்தார்கள். அது அவர்களுடைய ஆடை முறை, அதனால் அணிந்தார்கள்.

அந்த அரபுலக வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் இந்த ஆடை முறையைக் கடைப்பிடித்திருக்கலாம்.

இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி, தலைப்பாகை கடைப்பிடிக்கப்பட்டதே தவிர சுன்னத் என்ற முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை.

தொழுகையில் தொப்பி அணிவது அவசியம் என்றிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தனிக்கட்டளையாகப் பிறப்பித்திருப்பார்கள்.

அவ்வாறு எந்தக் கட்டளையும் பிறப்பிக்க வில்லை என்பதிலிருந்தே இது அவர்கள் காலத்து, அவர்கள் பகுதியின் நடைமுறை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒன்பதாவது ஆதாரம்

தங்களின் அடுத்த ஆதாரமாக அவர்கள் முன்வைக்கும் செய்தி,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீளமான ஐந்து பட்டையுடைய தொப்பி அணியக் கண்டேன் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்தச் செய்தி முஸ்னத் அபீ ஹனிஃபா எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தி பலவீனமான, இட்டுக்கட்டப் பட்ட செய்தி என்ற தரத்தையுடையதாகும்.

இந்தச் செய்தியில் இடம்பெற்றிருக்கும்  அபூ கதாதா அல் ஹர்ரானீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இவரைப் பற்றிய விமர்சனங்களில் சில…

تهذيب التهذيب ـ محقق (6/ 61)

قال عبدالله بن أحمد وقال يحيى بن معين ليس بشئ وقال الدوري عن يحيى ثقة وقال ابن أبي حاتم سألت أبا زرعة عنه فقلت ضعيف الحديث قال نعم لا يحدث عنه قال وسألت أبي عنه فقال تكلموا فيه منكر الحديث وذهب حديثه.

وقال البخاري تركوه منكر الحديث وقال في موضع آخر سكتوا عنه وقال النسائي ليس بثقة وقال الجوزجاني متروك الحديث.

இவர் விஷயத்தில் விமர்சனம் செய்துள்ளார்கள் எனவும், இவர் ஹதீஸில் மறுக்கப்படவேண்டியவர் இவரது ஹதீஸ் போக்காகிவிட்டது எனவும் அபூஹாதம் கூறியுள்ளார்.

இவர் ஹதீஸில் பலவீனமானவர். இவர் வழியாக அறிவிக்கப்படாது என்று அபூ ஸுர்ஆ கூறியுள்ளார்.

இவரை (ஆதாரம் கொள்ளாமல்) விட்டுவிட்டார்கள் எனவும் இவர் ஹதீஸில் மறுக்கப்படவேண்டியவர் எனவும் புகாரி கூறியுள்ளார்.

இவர் நம்பகமானவர் அல்ல என்று நஸாயீ கூறியுள்ளார்.

இவர் ஹதீஸில் விடப்படக்கூடியவர் என்று ஜவ்ஸானீ கூறியுள்ளார்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்,

பாகம் 6, பக்கம் 61

மேற்கூறப்பட்ட விமர்சனங்களால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

மேலும், இந்தச் செய்திக்கு இன்னொரு அறிவிப்பாளர் தொடரும் முஸ்னத் அபீஹனிஃபா நூலில் இடம்பெற்றுள்ளது.

அந்த தொடரில் ஹுஸைன் பின் யூசுஃப் அல் வாஸித்தீ என்பார் இடம்பெறுகிறார்.

இவர் நம்பகமானவரா? பலவீனமானவரா? என்ற நிலை அறியப்படாத மஜ்ஹூலுல் ஹால் என்ற தரத்தையுடைய அறிவிப்பாளர் ஆவார்.

இந்த நிலையில் உள்ள அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி ஏற்றுக்கொள்ளப்படாது.

பத்தாவது ஆதாரம்

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தலைப்பாகை அணிவது சுன்னத்தா-? என்று கேட்டதற்கு, ஆம் என்று பதிலளித்தார்கள்.

இந்தச் செய்தி உம்தத்துல் காரீ எனும் நூலில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

உம்தத்துல் காரீ என்பது ஹிஜ்ரி 855ல் மரணித்த இமாம் அய்னீ அவர்களால் ஸஹீஹுல் புகாரிக்கு விரிவுரையாக எழுதப்பட்ட புத்தகமாகும்.

இந்தப் புத்தகத்தில் மேற்கூறப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இந்தச் செய்தி கிதாபுல் ஜிஹாத் எனும் இப்னு அபீ ஆஸிமுக்குரிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நாம் தேடிப் பார்த்த வரை மேற்படி செய்தி கிதாபுல் ஜிஹாத் எனும் புத்தகத்தில் கிடைக்கவில்லை. வேறு எந்த ஹதீஸ் மூல நூற்களிலும் கிடைக்கவில்லை.

உம்தத்துல் காரீயில் இந்தச் செய்தியை ஒரு அறிவிப்பாளர் தொடருடன் பதிவுசெய்துள்ளார். அந்த அறிவிப்பாளர் தொடர் அடிப்படையிலும் கூட இந்தச் செய்தி பலவீனமானதே!

இந்தச் செய்தியில் சுபைர் பின் ஜவ்வான் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

இவர் நம்பகமானவரா? அல்லது பலவீனமானவரா? என்ற எந்தக் குறிப்பும் இடம் பெறாத அளவிற்கு, இவர் யாரென்று அறியப்படாதவராக உள்ளார்.

இத்தகைய நிலையில் உள்ள அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

பதினொன்றாவது ஆதாரம்

நபித்தோழர்களின் தொப்பி வட்ட வடிவமாக இருந்தது என அப்துல்லாஹ் பின் புஸ்ரு என்பார் அறிவிக்கிறார்.

இந்தச் செய்தியைத் தங்களுக்கான அடுத்த ஆதாரமாகக் குறிப்பிட்டு, இது திர்மிதியில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இமாம் திர்மிதி அவர்கள் இந்தச் செய்தியைப் பதிவு செய்துவிட்டு, அதற்குக் கீழே, இது முன்கரான (மறுக்கப்பட வேண்டிய) செய்தி என்றும், இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் புஸ்ரு என்பாரைப் பல அறிஞர்கள் பலவீனமாக்கியிருப்பதே இதற்கான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்களின் கண் எதிரே, இந்த ஹதீஸின் கீழே திர்மிதி இமாமுடைய விளக்கம் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் இதை ஆதாரமாகச் சமர்பிக்கிறார்கள் என்றால், மக்கள் இதையெல்லாம் எங்கே அறியப்போகிறார்கள், நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிச் சென்று விடுவார்கள் என்ற அவர்களின் ஏமாற்றுப்போக்கு தெளிவாகத் தெரிகிறது.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி சரி என்றாலும் கூட, இதில் நபித்தோழர்களின் தொப்பியின் வடிவம் பற்றியே கூறப்படுகிறது.

இதில் தொப்பி அணிவது சுன்னத் என்றோ,

தொப்பி அணிந்தால் தான் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும் என்றோ இல்லை.

இது, நபித்தோழர்களின் ஆடை முறையைப் பற்றிய ஒரு தகவல் தானே தவிர, மார்க்கச் சட்டம் எதுவும் சொல்லப்படவில்லை. நபிகளாரின் எந்தத் தொடர்பும் இந்தச் செய்தியில் இல்லை.

பனிரெண்டாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தொப்பி அணிவித்து, இதை நீ அணிந்து கொள் எனக் கூறினார்கள் என்று அபூ கிர்ஸாபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்தச் செய்தி இமாம் தப்ரானீ அவர்களின் முஃஜமுல் கபீர் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் இஸ்ஸா பின்த் இயாழ் என்பார் மேற்படி செய்திகளில் குறிப்பிட்டதைப் போன்று ஆதாரம் எடுக்கத்தகுந்தவரா? இல்லையா என்பது உறுதி செய்யப்படாத மஜ்ஹூலுல் ஹால் எனும் தரத்தைச் சார்ந்தவர்.

எனவே, இதுவும் ஆதாரம் பிடிக்கப் படுவதற்கான தகுதியை இழந்துவிட்டது.

இதுவல்லாத இன்னும் சில காரணங்களும் இதைப் பலவீனமாக்குவதற்கு உள்ளன. இதுவே போதுமான காரணம் என்பதால் இதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

பதிமூன்றாவது ஆதாரம்

முஹாஜிர் ஸஹாபாக்கள், கருப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற தடிப்பான தலைப்பாகை அணிந்தவர்களாகக் கண்டேன் என சுலைமான் பின் அப்துல்லாஹ் என்பார் கூறினார்.

இந்தச் செய்தி முஸன்னஃப் இப்னு அபீஷைபா எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் அப்துல்லாஹ் என்பவரைப் பற்றி இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று குறிப்பிடுகிறார்.

இப்னு ஹிப்பான் அவர்களைப் பொறுத்த வரையில் யாரென்று அறியப்படாதவர்களைக் கூட நம்பகமானவர் என்று சான்றளிக்கும் வழக்கமுள்ள அலட்சியப் போக்குள்ளவர்.

எனவே, இவரின் சான்றை ஏற்றுக் கொள்ள இயலாது.

இதுவல்லாத இவரின் நம்பகத்தன்மையை உறுதிசெய்கிற எந்த நற்சான்றும் கிடைக்காததால் இந்தச் செய்தியும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என ஆகிவிடுகிறது.

பதினான்காவது ஆதாரம்

குளிர் காலத்தில் நபி (ஸல்) அவர்களிடம் நான் வநதேன். நபியவர்களையும் ஸஹாபாக்களையும் தெப்பி அணிந்த நிலையில் தொழக் கண்டேன் என ஃபில்தான் பின் ஆஸிம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதையும் தங்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக வைக்கின்றனர்.

இந்தச் செய்தி தப்ரானீயில் இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ஸக்கரிய்யா பின் யஹ்யா என்பவர்  இடம்பெற்றுள்ளார்.

இவரும் மேற்படி பதிமூன்றாவது செய்தியில் இடம்பெற்ற சுலைமான் பின் அப்துல்லாஹ் என்பவரைப் போன்றே பலவீனமானவர்.

இவரைப் பற்றியும் இப்னு ஹிப்பானின் நற்சான்றைத் தவிர வேறு எந்த நற்சான்றையும் காண முடியவில்லை.

எனவே, அவர் ஒருவரின் நற்சான்று ஒருவர் ஹதீஸ் துறையில் ஏற்றுக் கொள்ளப் போதுமானது அல்ல என்பதால் இந்தச் செய்தியும் பலவீனடைகிறது.

இந்தப் பதினான்கு பலவீனமான ஆதாரங்களைத் தான் தொப்பி அணிவதற்கு ஆதாரம் எனச் சமர்ப்பித்துள்ளனர்.

தொப்பி அணிவதற்கு இப்போது எடுத்து வைக்கப்பட்டுள்ள, ஆதாரங்களும், இதற்கு முன் எடுத்துவைக்கப்பட்ட ஆதாரங்களும் பலவீனமானவையாகவே உள்ளன.

பலமான ஆதாரம் இருக்குமெனில் அதை நடைமுறைப்படுத்துவதில் தவ்ஹீத் ஜமாஅத்தே முதலிடம் வகிக்கும் இன்ஷா அல்லாஹ்.

————————————————————————————————————————————————–

முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்?

கே.எம். அப்துந்நாஸர் M.I.Sc.

அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 113:1-5)

சூரத்துல் ஃபலக் என்னும் திருமறைக்குர்ஆனின் 113வது அத்தியாயத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் தீங்கிலிருந்து நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

அவற்றில் ஒரு விஷயமாக ‘‘முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று சொல்லப் பட்டுள்ளது. முடிச்சுகளில் ஊதி சூனியம் செய்யும் பெண்களைத் தான் இது குறிக்கிறது என்று கூறி, சூனியத்துக்குத் தாக்கம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்  என்று வழிகெட்ட நவீன ஸலபிகள்  வாதிடுகின்றனர்.

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் கற்பனை தானே தவிர அல்லாஹ்வோ, அவனது தூதரோ அளித்த விளக்கம் அல்ல. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் ஏற்கத்தக்க எந்த பதிலும் அவர்களிடம் இல்லை.

இவர்கள் கூறுவது தவறானது என்று சாதாரண மனிதனின் அறிவு கூடத் தீர்ப்பு அளித்து விடும்.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சூனியம் செய்வார்கள் என்பதுதான் வழிகெட்ட நவீன ஸலபிகளின் நம்பிக்கையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லபீத் என்ற யூத ஆண் சூனியம் வைத்தான் என்று தான் இவர்கள் நம்புகிறார்கள். அப்படி இருக்கும்போது சூனியம் செய்யும் பெண்களை விட்டுப் பாதுகாப்புத் தேடுமாறு சொல்வது பொருந்துமா?

இந்த அத்தியாயத்தில் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து தான் பாதுகாப்பு தேடப்படுகிறது. சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே?

பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் சூனியத்துக்கு இருந்து, அதிலிருந்து பாதுகாப்பு தேடுவதற்குத் தான் இந்த அத்தியாயங்கள் மூலம் அல்லாஹ் வழிகாட்டுகிறான் என்றால் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டு மட்டும் பாதுகாப்பு தேடச்சொல்லி, சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு அற்ற நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானா?

இப்படிச் சிந்திக்கும் போது இவர்கள் கொடுக்கும் விளக்கம் பயனற்றதாகவும், அல்லாஹ்வின் கூற்றை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்பது தெரிகிறது.

மேலும் முடிச்சுக்களில் ஊதுதல் என்ற ஒரு வழியில் தான் சூனியம் உள்ளது என்பது சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவோரின் கொள்கை அல்ல.

ஆயிரக்கணக்கான வழிகளில் சூனியம் செய்யலாம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. இந்த அத்தியாயம் சூனியத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க அருளப்பட்டது என்றால் இதில் முடிச்சுக்களில் ஊதும் ஒரு வகை சூனியத்தில் இருந்து மட்டுமே பாதுகாப்பு உள்ளது. அது அல்லாத வகைகளில் ஒருவன் சூனியம் செய்தால் அதில் இருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போய் விடுகிறது.

இதிலிருந்து தெரிய வரும் உண்மை என்ன? இது சூனியக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவதற்காக அருளப்பட்டதல்ல. இப்படி அரைகுறையாக அல்லாஹ் கற்றுத்தர மாட்டான் என்பது தெரிகிறது.

உலகில் பெரும்பாலும். ஆண்கள் தான் சூனியம் செய்கின்றனர். மிகமிக அரிதாகத் தான் பெண் சூனியக்காரிகள் உள்ளனர். காமிக்ஸ் கதைகளிலும், பேய்ப் படங்களிலும் தான் சூனியக்காரக் கிழவி என்று காட்டுகிறார்கள். நிஜத்தில் அப்படி இல்லை. ஆண்களே அதிக அளவில் சூனியக்காரர்களாக இருக்கும்போது சூனியம் செய்யும் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேடச்சொல்வது பொருந்தவில்லை.

அப்படியானால் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது எதைக் குறிக்கிறது? முடிச்சுக்கள் என்றால் அதற்கு நேரடியாக முடிச்சு என்று அர்த்தம் இருந்தாலும் இங்கே அது பொருந்தவில்லை. முடிச்சுப் போடுவதால் நமக்கு என்ன தீங்கு நேர்ந்து விடும் எனச் சிந்திக்கும்போது முடிச்சுக்கள் என்பதற்கு முடிச்சு என்ற நேரடிப் பொருளைக் கொடுக்க முடியாது.

முடிச்சு என்பது அதன் நேரடிப் பொருள் அல்லாத மாற்றுப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக மூஸா நபி அவர்களுக்கு திக்குவாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டபோது,

இறைவா! என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு! என்னுடைய காரியத்தை லேசாக்கி வை! எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு! (20:27) என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தை நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என்று நாம் விளங்க மாட்டோம். மூஸா நபிக்குத் திக்குவாய் இருந்துள்ளது. அதனைத்தான் அவர்கள் முடிச்சு எனக் குறிப்பிடுகிறார்கள் என்று எல்லோரும் புரிந்து கொள்கிறோம். நேரடியாக முடிச்சு என்று புரிந்து கொள்வதில்லை.

இதே போன்று திருமணத்தைப் பற்றி அல்லாஹ் சொல்லும்போது, திருமணம் செய்தபின் இருவரும் சேராமல் பிரிந்து விட்டால் பாதி மஹர் கொடுத்துவிட வேண்டும். நிக்காஹ் எனும் முடிச்சு யார் கை வசம் உள்ளதோ அவர் விட்டுக் கொடுத்தால் தவிர. (2:237) என்று கூறுகிறான்.

இதில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைவதை முடிச்சு என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

எனவே இந்த அத்தியாயத்தில் முடிச்சு என்று கூறப்பட்டதற்குப் பொருத்தமான விளக்கம் நபிமொழியில் கிடைக்கிறதா என்று நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் தேடிப்பார்க்கும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி இதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஷைத்தான் ஒருவரின் தலை அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் தூங்கும் நேரத்தில் அவனுக்கு மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். விடிகின்ற நேரம் வந்ததும் நீண்ட இரவு இருக்கின்றது; நீ தூங்கு என்று சொல்வான். அவர் எழுந்துவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். பின்னர் சென்று உளுச் செய்தால் அடுத்த முடிச்சு அவிழ்ந்துவிடும். தொழுகைக்கு தக்பீர் கட்டியபின் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. இதன் பின்னர் நல்ல காலைப் பொழுதை அவன் விடுகின்றான். இல்லாவிட்டால் சோம்பலாக இருப்பான்.

புகாரி 1142, 3269

ஷைத்தான் போடும் முடிச்சு என்றால் நல்ல அமல்கள் செய்ய விடாமல் ஆக்குவதும், தீய செயல்களை செய்யத் தூண்டுவதுமாகும் என்று இதில் இருந்து விளங்குகிறது.

இதுபோல் ஷைத்தான் முடிச்சு போட்டு நம்மை வழிகெடுத்து விடாமல் பாதுகாப்புக் கோருவது தான் முடிச்சுக்களில் ஊதுதல் என்பது.

ஆதாரமின்றி கற்பனை செய்து பொருந்தாத விளக்கம் கூறுவதை விட ஹதீஸ் துணையுடன் முடிச்சு என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது தான் சரியானது.

114வது அத்தியாயத்தில் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவனின் தீங்கி லிருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றோம். அது போன்றது தான் 113வது அத்தியாயமும்.

ஷைத்தான்கள் ஆண்களா? பெண்களா?

ஷைத்தான்களைக் குறிப்பதற்குத் தான் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் ஆண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போகுமே என்று சிலர் நினைக்கலாம்.

113வது அத்தியாயம் நான்காவது வசனத்தின் அரபி மூலத்தில் ‘‘நஃப்பாஸாத்”

نفاثات

என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த வார்த்தைக்குத் தமிழில் ‘‘முடிச்சுகளில் ஊதும் பெண்கள்” என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மொழிபெயர்த்து விட்டு, இது ஷைத்தானைக் குறிக்கும் சொல் என விளக்கம் அளிக்கும் போது, அப்படியென்றால் ஆண் ஷைத்தான் மூலம் நமக்குப் பாதிப்பு ஏற்படாதா? என்ற கேள்வி ஏற்படுகிறது.

பொதுவாக ஷைத்தான்களில் அதாவது ஜின்களில் மனிதர்களைப் போன்று ஆண், பெண் என்ற பிரிவினர் இருந்தாலும் மேற்கண்ட ‘‘நஃப்பாஸாத்” என்பது அனைத்து ஷைத்தான்களையும் குறிக்கும் சொல்லாகும். இது பெண் ஷைத்தான்களை மட்டும் குறிக்கும் வார்த்தை அல்ல.

அரபி மொழியில் ஒரு வார்த்தையைப் பன்மையாக மாற்றும் போது பன்மைச் சொல்லில் அதன் ஒருமை வடிவம் மாறிவிடும் என்றால் அதனை ‘‘ஜம்வுத் தக்ஸீர்” என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமையில் ஆண்பாலாக புழங்கப்படும் ஒரு வார்த்தையை பன்மையாக மாற்றும் போது ஒருமையின் வடிவம் மாறிவிடும் என்றால் அந்த பன்மைச் சொல்லை ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் பயன்படுத்துவார்கள்.

உதாரணமாக

مَلَكٌ

(மலகுன்) என்பது ஒருமைச் சொல் ஆகும். இதன் பொருள் ‘‘வானவர்” என்பதாகும். இது ஆண்பாலாகப் புழங்கப்படும் ஒரு சொல்லாகும். இதனுடைய பன்மைச் சொல் (மலாயிகத்துன்)

مَلَائِكَةٌ

என்பதாகும்.

ஒருமையின் வடிவம் பன்மையாக மாற்றும் போது மாறிவிட்ட காரணத்தினால் இந்த மலாயிகத்துன் என்ற வார்த்தை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் குறிப்பிடப்படும். இது அரபி இலக்கணச் சட்ட விதியாகும்.

வார்த்தையைக் கவனித்து பெண்பாலாகக் குறிப்பிடப்பட்டதால் மலக்குமார்கள் பெண்கள் என்று வாதிடுவது அறியாமையின் உச்சக்கட்டமாகும்.

மலக்குமார்கள் ஆண்களும் அல்ல! பெண்களும் அல்ல! அவர்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.

திருமறைக் குர்ஆனில் ஏராளமான இடங்களில் பன்மையாக வரும் போது மலக்குமார்களின் பண்புகள் பெண்பால் வடிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமறைக்குர்ஆனின் 79வது அத்தியாயத்தில் அந்நாஸிஆத் (79:1), அந்நாஷிதாத் (79:2), அஸ்ஸாபிஹாத் (79:3) அஸ்ஸாபிகாத் (79:4) அல்முதப்பிராத் (79:5) ஆகிய அனைத்தும் மலக்குமார்களின் பண்புகளையும்  செயல்களையும் குறிக்கும் வார்த்தைகளாகும். இவை அனைத்து பன்மையாகவும் பெண்பால் வடிவத்திலும் இடம் பெற்றுள்ளது.

இலக்கணச் சட்டப்படி இங்கே பெண்பால் வடிவம் இடம் பெற்றுள்ளதே தவிர இந்த வாரத்தைகளை வைத்துக் கொண்டு மலக்குமார்கள் பெண்கள் என்று வாதிடுவது அறியாமையாகும்.

அது போன்றுதான் ஃபலக் அத்தியாயத்தில் ‘‘நஃப்பாஸாத்” என்ற பன்மைச் சொல் பெண்பால் வடிவத்தில் இருந்தாலும் இது ஒட்டு மொத்த ஷைத்தான்களையும் குறிக்கும் சொல் ஆகும்.

شيطان”

(ஷைத்தான்) என்ற ஒருமைச் சொல் ஆண்பாலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். இதனைப் பன்மையில்

الشَّيَاطِينُ 

(அஷ்ஷயாத்தீன்) என்று குறிப்பிடுவார்கள்.  ஒருமையின் வடிவம் பன்மையில் மாறிவிட்டால் அந்தப் பன்மைச் சொல்லை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் பயன்படுத்தலாம் என்ற இலக்கண விதியின் அடிப்படையில் குர்ஆனில் பல்வேறு இடங்களில் ‘‘அஷ்ஷயாத்தீன்” என்ற சொல் பெண்பாலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

{اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ} [الأنعام: 71]

ஷைத்தான்கள் அவனை வழிகெடுத்தார்கள்

(அல்குர்ஆன் 6:71)

இந்த வசனத்தில் ‘‘வழிகெடுத்தார்கள்” என்ற பொருளில் வரும் ‘‘இஸ்தஹ்வத்” என்ற வினைச் சொல் பெண்பால் வார்த்தையாகும்.

{تَنَزَّلُ الشَّيَاطِينُ} [الشعراء: 221]

ஷைத்தான்கள் இறங்குவார்கள்

(அல்குர்ஆன் 26:221)

இதில் ‘‘இறங்குவார்கள்” என்ற பொருளில் வரும் ‘‘தனஸ்ஸலு” என்ற வார்த்தை எதிர்கால வினைச்சொல் பெண்பால் வார்த்தையாகும்.

{وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ } [الشعراء: 210]

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.

(அல்குர்ஆன் 26:210)

இதில் ‘‘இறக்கிடவில்லை” என்ற பொருளில் வரும் ‘‘வமா தனஸ்ஸலத்” என்ற இறந்த கால வினைச் சொல் பெண்பால் வார்த்தையாகும்.

மேற்கண்ட வசனங்களில் ஒட்டு மொத்த ஷைத்தான்களையும் குறிக்கும் ‘‘அஷ்ஷயாத்தீன்” என்ற சொல் பெண்பாலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படையில்தான் ஃபலக் அத்தியாயத்தில் ஷைத்தான்களின் ‘‘ஊதுதல்” என்ற பண்பு ‘‘நஃப்பாஸாத்” என்ற பெண்பால் வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார்த்தையின் அமைப்பைக் கவனித்து ‘‘ஊதக்கூடிய பெண்கள்” என்று மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும் ‘‘ஊதக்கூடியவர்கள்” என்று மொழிபெயர்ப்பதே சிறந்ததாகும்.

மலக்குமார்களைக் குறிக்க பெண்பால் பன்மைச் சொற்கள் வந்திருந்தாலும் யாரும் அந்த வார்த்தைகளைப் பெண்பால் பன்மை அர்த்தத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அது போன்றுதான் ஷைத்தான்களைக் குறிக்க பெண்பால் பன்மை வந்துள்ள இடத்திலும் அது பெண்பால் பன்மையைக் குறிப்பது போல் மொழிபெயர்க்காமல் ஒட்டுமொத்த ஷைத்தான்களையும் குறிக்கும் வகையில் ‘‘முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள்” என்று மொழிபெயர்ப்பதே சிறந்ததாகும்.

ஊதுதல் என்பதின் பொருள் என்ன?

ஃபலக் அத்தியாயத்தில் ‘‘முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள்” என்று வந்துள்ளது.

இது ஷைத்தான்களால் உள்ளங்களில் போடப்படும் கெட்ட எண்ணங்களைக் குறிப்பதாகும்.

ஷைத்தான்களுக்கு உள்ளத்தில் கெட்ட எண்ணங்களைப் போடும் ஆற்றல் உள்ளது.

மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

(அல்குர்ஆன் 114வது அத்தியாயம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன் எனக் கூறினார்கள். 

நூல்: புகாரி (2035)

‘‘நஃபஸ” என்ற வார்த்தைக்கு ‘‘வாயால் ஊதுதல்” என்ற பொருள் இருப்பதைப் போன்று ‘‘உள்ளத்தில் போடுதல்” என்ற பொருளும் உள்ளது.

فتح الباري – ابن حجر (1/ 197)

قوله نفث في روعي أي ألقى إلي وأوحي والروع النفس

“நஃபஸ ஃபீ ரூயி” (என் உள்ளத்தில் ஊதினார்) என்றால் என்னிடம் போட்டார், வஹி அறிவித்தார் என்பதாகும்.

நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 1, பக்கம்:197

நஃபஸ என்பதற்கு உள்ளத்தில் போடுதல் என்ற பொருளும் உள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்களின் விளக்கத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வார்த்தைகளின் பொருளை விளங்கிக் கொள்வதற்காக அறிஞர்களின் கருத்தை மேற்கோள் காட்டுவது தவறல்ல.

பலவீனமான செய்தி

சில தஃப்ஸீர்களில் ‘‘முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள்” என்பதற்கு விளக்கமாகப் பின்வரும் செய்தியை எடுத்துக் காட்டுகின்றனர்.

4079 – أخبرنا عمرو بن علي قال حدثنا أبو داود قال حدثنا عباد بن ميسرة المنقري عن الحسن عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم : من عقد عقدة ثم نفث فيها فقد سحر ومن سحر فقد أشرك ومن تعلق شيئا وكل إليه (النسائي)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முடிச்சினை முடிந்து பிறகு அதிலே ஊதுகிறானோ அவன் சூனியம் செய்துவிட்டான். யார் சூனியம் செய்தாரோ அவர் இணை கற்பித்துவிட்டார். யார் ஏதேனும் ஒன்றை தொங்கவிட்டுக் கொள்கிறாரோ அவன் அதன் பக்கம் சாட்டப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸாயீ (4079)

இச்செய்தி மிகவும் பலவீனமானது ஆகும்.  இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘‘உப்பாத் இப்னு மைஸரா அல் முன்கிரீ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

تهذيب التهذيب ـ محقق (5/ 94)

قال الاثرم ضعفه أحمد ,,,,, وقال الدوري عن ابن معين عباد بن ميسرة وعباد بن راشد وعباد بن كثير وعباد ابن منصور كلهم حديثهم ليس بالقوي ولكنه يكتب وقال أبو داود عباد بن ميسرة ليس بالقوي وقال إبراهيم بن بكر الشيباني عن الهيثم بن حبيب شهد عباد بن ميسرة عند عباد بن منصور فرد شهادته قال لم رددت شهادتي قال لانك تضرب اليتيم وتأكل مال الارملة.

இமாம் அஹ்மத் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்.  இவர் உறுதியானவர் இல்லை. என்றாலும் (இவரது ஹதீஸ்கள்) எழுதிக் கொள்ளப்படும் என இப்னு மயீன் கூறியுள்ளார். உப்பாத் இப்னு மய்ஸரா அவர்கள் உப்பாத் இப்னு மன்சூர் என்பாரிடம் சாட்சி கூறியபோது அவர் அவரது சாட்சியை ஏற்க மறுத்துவிட்டார். என்னுடைய சாட்சியை ஏன் மறுக்கின்றீர்? எனக் கேட்ட போது ‘‘நீர் அனாதையை அடிக்கின்றீர். விதவைப் பெண்களின் செல்வத்தைச் சாப்பிடுகின்றீர்” என உப்பாத் இப்னு மன்சூர் கூறினார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 5, பக்கம் 94

மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹஸன் இப்னு அபில் ஹசன் அல் யஸார் என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்த ஒன்றையும் செவியேற்கவில்லை என்பதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீபில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனவே இது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள  முடியாத பலவீனமான செய்தியாகும்.

————————————————————————————————————————————————–

அகில உலகமும் அலீக்கே சொந்தம்!

அலீ ஆதரவாளர்களின் அநியாய வாதம்!

அபுஉஸாமா

‘ஷியாக்கள் ஓர் ஆய்வு’ என்ற தொடர் சில ஆண்டுகளுக்கு முன் ஏகத்துவம் இதழில் வெளியானது. சில காரணங்களால் அத்தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. ஷியாக்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக அத்தொடரில் விளக்கியிருந்தோம்.

தற்போது தமிழகத்தில் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பரேலவிகள் ஷியாக்களின் ஓர் அங்கம் தான் என்பதால் அவர்களை அடையாளம் காட்டும் விதமாக, காலத்தின் கட்டாயம் கருதி அத்தொடரின் விடுபட்ட பகுதிகளை ஏகத்துவம் இதழில் வெளியிட வேண்டும் என்று வாசகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனவே வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று ஷியாக்கள் ஓர் ஆய்வு இங்கு தொடர்கின்றது.

عن أبي عبد الله أنه قال: إن الدنيا والآخرة للإمام يضعها حيث يشاء ويدفعها إلى من يشأ” -”الكافي في الأصول” ص409 ج ط إيران

இம்மையும் மறுமையும் இமாமுக்கே சொந்தம்.அவர் அதைத் தான் நாடியவாறு வைப்பார். தான் நாடியவரிடம் கொடுத்து விடுவார். இவ்வாறு ஷியாக்களின் இமாமான அபூஅப்தில்லாஹ் அறிவிக்கின்றார்.

நூல்: அல்காஃபி ஃபில் உஸூல்

இங்கே இவர்கள் இமாம் என்று குறிப்பிடுவது அலீ (ரலி)யைத் தான்! இவர்கள் அலீ(ரலி)யை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பது அப்படியே அப்பட்டமாகத் தெரிகின்றதல்லவா?

ஆம்! அலீயை அல்லாஹ்வாக ஆக்கி அழகு பார்க்கின்றார்கள். இந்த சித்து விளையாட்டுக்கள், ஷிர்க்  வேலைகள் இவர்களிடம் சர்வ சாதாரணம்.

என்ன நெஞ்சழுத்தமும் திமிரும் இருந்தால் அல்லாஹ்வுக்குச் சொந்தமான  இம்மையையும் மறுமையையும் அலீ (ரலி)க்கு இவர்கள் சொந்தமாக்குவார்கள்?

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் இம்மை மறுமை தனக்கே சொந்தம் என்று  குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வுக்கே மறுமையும், இம்மையும் உரியது.

அல்குர்ஆன் 53:25

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் விடமே காரியங்கள் கொண்டு செல்லப்படும்.

அல்குர்ஆன் 3:109

இந்த வசனத்தில் வானங்கள் பூமியின் அதிகாரம் தனக்கே சொந்தம் என்று குறிப்பிடுகின்றான். இது போன்ற வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெறுகின்றன.  இதற்கு நேர் மாற்றமாக ஷியாக்கள், இம்மையும் மறுமையும் அலீக்கு சொந்தம் என்று வாதிடுகின்றனர்.  ஒரு பொருள் இன்னாருக்குச் சொந்தம் என்று சொன்னால் அந்தப் பொருளை அவர் உருவாக்கியிருக்க வேண்டும்.

வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்.

அல்குர்ஆன் 52:36

அல்லாஹ் கேட்பது போன்று அலீ வானங்களையும் பூமியையும் படைத்திருக்க வேண்டும். அல்லது அலீக்கு வானங்களில் ஏதேனும் பங்கு இருக்க வேண்டும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் 46:4

ஆனால் இந்த இரண்டில் எதுவும் கிடையாது. இது தான் உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாகும். ஷியாக்கள் இதற்கு எதிரான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

இவர்களின் இந்தக் கருத்தை ஒரு வாதத்திற்கு உண்மையென்று வைத்துக் கொண்டால் அலீ (ரலி) ஏன் வறுமையில் வாடினார்கள்? என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

அலீ (ரலி) அறிவித்தார்.

(என் துணைவியாரான) ‘பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை.

எனவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்’ என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.)

பின்னர், ‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்‘ என்றார்கள்.

நூல்: புகாரி 3113

இந்த ஹதீஸ் அலீ (ரலி) வறுமையில் வாடியதைத் தெளிவாக விளக்குகின்றது. அலீ (ரலி) அனுபவித்த இந்த வறுமை அவர்களுக்கு இந்தப் பூமியில் கூட அதிகாரம் இல்லை என்பதை உணர்த்துகின்றது. அதனால் ஷியாக்களின் இந்த வாதம் அபத்தமும் அநியாயமும் ஆகும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

அல்லாஹ்க்கு பொருத்தமில்லாத பண்புகளை அவன் மீது அள்ளி வீசுவதில் யூதர்கள் வல்லவர்கள். அந்த யூதர்களை, அதாவது தங்களின் மூலத்தையே இந்த ஷியாக்கள் மிஞ்சி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் தங்களை ஷியா ஜமாஅத்தினராகத் தடம் பதிதிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தத் தொடரின் ஊடே அவ்வப்போது பார்த்து வருகின்றோம். அதற்கு இப்போது ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.

ஆகாயத்தின் அதிபதி (?) அப்துல் காதிர் ஜீலானி

தமிழகத்தில் இயங்கிவருகின்ற அத்தனை தரீக்காக்களுமே அலீ என்ற நதி மூலத்தில் தான் முடியும். ஒரு தரீக்கா கூட அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் போய் முடியாது.  இது எதைக் காட்டுகின்றது? இந்தத் தரீக்காக்கள் அனைத்தும் ஷியாக்களின் மறுஅவதாரங்கள் என்பதைத் தான்! சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் ஷியாக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களிடம் ஜிஷ்திய்யா  என்ற ஒரு  தரீக்கா  உண்டு.

இந்த தரீக்காவின் தெய்வீக அவதாரமும் கதாநாயகரும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான். இவரைப் புகழ்ந்து யாகுத்பா  என்ற ஒரு பாடல் தமிழகமெங்கும் பாடப்படுகின்றது.  தமிழகத்தில் பிரபலமும் பிரசித்தியும் பெற்ற அந்தப் பாடல், முஹ்யித்தீனை அன்னாந்து பார்க்கின்ற வானத்தின் அதிபதியாகவும் அண்ட கோடியின் அச்சாணியாகவும் ஆக்கி அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்திருக்கின்றது. அந்தப் பாடலின்  ஆரம்ப வரிகளைப் பார்த்து வருவோம்.

அண்ட கோடியின் அச்சாணி

يا قطب أهل السماء والأرض غوثهما .

வானம், பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே! அவ்விரண்டின் இரட்சகரே!

என்ற  புகழ்ப்பாவுக்குப் பிறகு  யாகுத்பா என்ற அரபிப் பாடல் துவங்குகின்றது. இதிலிருந்து தான் இந்தப் பாடலை யா குத்பா – குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! அதாவது வானவர் தலைவரான ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவர் என்பது தான் இதன் பொருள்.

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில், நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர்! அவர்களின் இரட்சகர் என்று இந்தப் பாடல் தெரிவிக்கின்றது.

மேலே நாம் கண்டது போன்று ஷியா இமாம்கள் என்ன விஷத்தைக் கக்கியிருக்கின்றார்களோ அதே விஷத்தைத் தான் இந்தப் பாடலாசிரியர் இந்த வரிகளில்  கக்கியிருக்கின்றார்.  இதைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற ஷியாக்கள் பாடுகின்றனர்.

இனம் இனத்துடன் சேரும் என்பது போன்று அந்த ஷியா இனம், இந்த ஷியா இனத்துடன் சேர்ந்திருக்கின்றது. அவர்களையும் இவர்களையும் எந்த வகையிலும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்காக வேண்டி இந்த எடுத்துக் காட்டு இங்கு தரப்படுகின்றது.

அல்லாஹ்வின் அதிகாரத்தை அடியார்களுக்கு மத்தியில் தாராளமாகவே பங்கிட்டுக் கொடுப்பதில் இவர்களில் யாரும் யாருக்கும் மிஞ்சியவர் கிடையாது. இதற்கு முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெற்றிருக்கக் கூடிய இன்னோர் எடுத்துக் காட்டையும் பார்ப்போம்.

ما زال يأتي عنده الدهور

كذلك الأعوام والشهور

காலங்கள் அவரிடத்தில் சதாவும் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறே  ஆண்டுகளும் மாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

காலங்கள், ஆண்டுகள், மாதங்கள் இவரிடம் வருகையளிக்கின்றன என்றால் அதன் பொருள் என்ன?

சூரியனும் சந்திரனும் காலத்தின் கணக்குக் காட்டிகளாக உள்ளன. இந்த சூரியனும் சந்திரனும் இவரிடத்தில் வருகையளிக்கின்றன என்றால் வானத்தின் மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரமான சூரியனும் பூமியின் துணைக் கோளான சந்திரனும் இவரின் ஆளுகையிலும் ஆட்காட்டி விரல் அசைவிலும் இருக்கின்றன என்பது தான் அதன் பொருள்!

‘வானம் பூமியின் அச்சாணியே’ என்று யாகுத்பா பாடலாசிரியர் வர்ணித்த வர்ணனையையும் இந்த வரிகளையும் சற்றே கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! உணமை விளங்கும்.

அதாவது வானம் முஹ்யித்தீனுக்கு வசப்பட்டிருக்கின்றது என்று ஷியாவின் சித்தாந்தத்தை, சிந்தனையாக்கத்தை இந்த முஹ்யித்தீன் மவ்லிது ஆசிரியர் பிரதிபலிக்கின்றார்.  இவருடன் ஷியாவிஷம் நின்ற பாடில்லை. தமிழ் பாடல்களிலும் இந்த நாசகார நச்சுக் கருத்து எதிரொலிப்பதைப் பார்க்க முடிகின்றது.

குணங்குடி மஸ்தான் என்பவர் பாடலை பாருங்கள்:

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

அடக்கி விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

வைத்து விளையாட வல்லீர்

மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்

மாட்டி விளையாட வல்லீர்

கண்டித்த கடுகில் ஏழு கடலைப் புகட்டிக்

கலக்கி விளையாட வல்லீர்

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

கண்முன் வரு சித்தில்லையோ

நண்டளந் திருநாழியாவனோ தேவரீர்

நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு

நாதன் முஹ்யித்தீனே!

இந்தப் பாருலகத்தை முஹ்யித்தீன் தன் கையில் பந்தாக வைத்து, ஏழு உலகத்தையும் ஆடும் தொட்டிலாக்கி, அணுவுக்குள் மண்ணையும் விண்ணையும் நுழைத்து, கடுகுக்குள் ஏழு கடலையும் புகட்டி, கலக்கி விளையாட வல்லவராம்.

இவ்வாறு குணங்குடி மஸ்தான் என்ற கவிஞன் பாடுகின்றான். மஸ்தான் என்றால் போதை ஏறியவன் என்று பொருள். மேற்கண்ட இந்தப் பாடல் வரிகளும் போதையில் தத்தளித்து தடுமாறுகின்றன.

ஷியாக்களும் அவர்களின் அடிச்சுவற்றின்  அடிபிறழாமல் அடியெடுத்து வைக்கும் பெயர்தாங்கி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் வானம் பூமியைத் தங்கள் வீட்டில் விளையாடுகின்ற  குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் போன்று எண்ணிக் கொண்டு பிதற்றுகின்றனர்.

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?

இரு தடவை பார்வையைச் செலுத்திப் பார்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.

அல்குர்ஆன்  67:3, 4

தனது படைப்பாற்றலுக்குச் சான்றாகப் பறை சாற்றுகின்ற இந்த பிரம்மாண்டமான, பிரமாதமான வானத்தைத் தான் அலீக்கும் அப்துல் காதிர் ஜீலானிக்கும் தாராளமாகத் தாரை வார்க்கின்றனர்.

இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

அல்குர்ஆன்  43:19

அல்லாஹ் சொல்வது போன்று இவர்களின் சாட்சியங்கள் பதியப்பட்டு நாளை விசாரிக்கப்படுவார்கள். நரகத்தில் வீசியெறியப்படுவார்கள்.  அல்லாஹ் காப்பானாக!

————————————————————————————————————————————————–

நடுநிலையா? நயவஞ்சகத்தனமா?

M.A. அப்துர்ரஹ்மான்

அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுவோம்! என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற கணிசமான மக்கள், ஏராளமான கூட்டமைப்புகளில் அங்கம் வகித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

இத்தகைய கூட்டமைப்புகளில் நம்முடைய ஜமாஅத், நன்மையை ஏவக்கூடியதாகவும், தீமையைத் தடுக்கக்கூடியதாகவும், தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை உரக்கச் சொல்வதாகவும் இருக்கின்றது.

இன்னும் விரல் விட்டு எண்ணுகின்ற சில அமைப்புகள் நன்மையை மட்டும் எடுத்துச் சொல்லி விட்டு, தீமையைத் தடுக்காதவர் களாகவும், இன்னும் சில அமைப்புகள் நன்மையையும் ஏவாமல், தீமையையும் தடுக்காமல் சுயநலத்திற்காகவும், அற்ப சுகத்திற்காகவும் அமைப்பு நடத்துபவர்களாக இருக்கின்றார்கள்.

நாங்கள் எந்தக் கூட்டத்தையும், எந்த இயக்கத்தையும் சாராத நடுநிலைவாதிகள் என்றும், நாங்கள் யாரையும் எதிர்க்கவும் மாட்டோம்! ஆதரிக்கவும் மாட்டோம் என்றும் சில கூட்டங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை நீண்ட நாட்களாகப் பார்க்க முடிகின்றது.

இந்த நடுநிலை பேசும் நடுநிலையாளர்கள், உண்மையாகவே நடுநிலையோடு செயல் படுகின்றார்களா? நியாய உணர்வோடு நடக்கின்றார்களா? யார் அநீதிக்கு எதிராக நடந்தாலும் கொந்தளிக்கின்றார்களா? என்று இதுபோன்ற பல்வேறு கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தால், அறவே இல்லை என்பதே அத்தனை கேள்விகளுக்குமான பதிலாக இருக்கும்.

இஸ்லாத்தின் பார்வையில் நடுநிலை

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் சொல்வதாக இருந்தால் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதும், நேர்வழி எது? வழிகேடு எது? என்பதும், ஹலால் எது? ஹராம் எது? என்பதும் இதுபோன்ற எல்லா விஷயங்களும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. எனவே, இதன் அடிப்படையில் தான் செயல்பட வேண்டுமே ஒழிய, நாமாகப் புதிதாக நடுநிலை என்பதை ஏற்படுத்திக் கொண்டு அதனடிப்படையில் செயல்பட்டால், அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுகின்ற விஷயங்களை விட்டு, நம்மை நாமே வழிகேட்டின் பக்கம் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு அறிவுரை கூறுகின்றார்கள்.

‘‘உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: இப்னுமாஜா

இஸ்லாமிய மார்க்கத்தின் ஆணிவேராக இருக்கின்ற ஏகத்துவக் கொள்கை என்பது தெள்ளத் தெளிவானது. யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து, நெளிந்து கொடுத்து மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லவே இல்லை. அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும், மனக் கசப்புகளுக்கும் தீர்வு இருக்கின்றது என்றும் நபி (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் கூறுகின்றார்கள்.

பொதுவாகவே சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் போது அதை மறுப்பவர்களும், சிந்தனை அறிவு இல்லாதவர்களும், பொய் பித்தலாட்டத்தில் ஈடுபடுபவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  மாறாக மறுப்பார்கள். அப்படிப்பட்டப் பொய்யர்களுக்கு மார்க்கம் கசக்கின்றது என்பதற்காக, இஸ்லாம் எனும் தெள்ளத் தெளிவான மார்க்கத்தில் உள்ள உண்மையை மறைப்பது நடுநிலை அல்ல! நயவஞ்சகத்தனம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு!

நடுநிலையா? நயவஞ்சகத்தனமா?

இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமியர்களில் சிலர் நடுநிலை வாதம் பேசி, நாங்கள் எல்லா கூட்டத்தார்களுக்கு மத்தியிலும் சமாதானம் பேசுபவர்கள்! என்று சொல்கின்ற யாராக இருந்தாலும், நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சக வேடம் போடுகின்றார்கள் என்பதே இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடு.

நடுநிலையின் அடிப்படையில் நடக்கின்றோம் என்று சொல்கின்ற யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் நயவஞ்சகக் குணம் தானாகவே குடிகொண்டு விடுவதைப் பார்க்கின்றோம். நடுநிலை பேசுபவர்களால் சத்தியத்தை உள்ளது உள்ளபடி ஒருக்காலும் எடுத்துச் சொல்லவே முடியாது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். உண்மையை மூடி மறைத்து, வளைந்து கொடுத்து அரைகுறையாகத்தான் சொல்ல முடியும் என்று அடித்துச் சொல்லலாம்.

சிதறுண்டு கிடக்கின்ற மக்களுக்கு மத்தியில் நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்கள்! சமாதானம் பேசுபவர்கள்! நடுநிலைவாதிகள் என்று சொல்பவர்களைப் பற்றி வல்ல இறைவன் தனது திருமறையில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கை செய்து அவர்கள் நடுநிலைவாதிகள் அல்லர். நயவஞ்சகர்கள் என்றும் கூறுகின்றான்.

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்படும்போது “நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே’’ எனக் கூறுகின்றனர்.

கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:11,12

நயவஞ்சகத்தனம் கொண்டவர்கள் குழப்பத்தை விளைவிப்பதையே தங்களின் பணியாகச் கொண்டிருப்பார்கள் என்றும், நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்கள் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள் என்றும் அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

மேலும் இறைவன் கூறுகின்றான்;

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும்போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்‘’ எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே’’ எனக் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 2:14

எங்கு சென்றாலும், எந்தக் கூட்டத்தைச் சந்தித்தாலும் நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள் தான், உங்களின் எதிரிகள் நாங்கள் அல்லர் எனவும் கூறி இரட்டை வேடதாரிகளாக வலம் வருவார்கள் என்றும் இறைவன் வன்மையாகக் கண்டித்துக் கூறுகின்றான்.

இன்னும் இதுபோன்ற ஏராளமான வசனங்களின் மூலமும், உதாரணங்களின் மூலமும் ‘நடுநிலையாக நாங்கள் செயல்படுகின்றோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக விமர்சனம் செய்கின்றான்.

இன்னும், உண்மையான ஈமான்தாரிகள் யார்? என்பதையும், நடுநிலை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்ற நயவஞ்சகர்கள் யார்? என்பதையும் அல்லாஹ் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகின்றான்.

தமது உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தும் அத்தியாயம், நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்படுவதை நயவஞ்சகர்கள் அஞ்சுகின்றனர். “கேலி செய்யுங்கள்! நீங்கள் அஞ்சுவதை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:64

உண்மையாகவே அல்லாஹ்வை அஞ்சு பவர்கள் யார்? ஈமான் கொண்டவர்கள் யார்? உளத்தூய்மையானவர்கள் யார்? என்பதையும், நடுநிலை பேசிக் கொண்டு திரிகின்ற நயவஞ்சகர்கள் யார் என்பதையும் அல்லாஹ் கட்டாயம் வெளிப்படுத்தியே தீருவான் என்றும் சவால் விடுகின்றான்.

நடுநிலை பேசும் நயவஞ்சகர்களின் குணநலன்கள்:

கேலி – கிண்டல் செய்தல்

இதுபோன்ற குணநலன்களைக் கொண்டிருக் கின்ற நயவஞ்சகர்களுக்கு அல்லாஹ் ஏராளமான பண்புகளையும், அடையாளங்களையும் தெளிவுபடுத்துகின்றான்.

பொதுவாகவே இன்றைய காலத்தில் பலர் நாங்கள் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் சிறிதும் பிசகாமல் பின்பற்றுபவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் செயல்கள் முற்றிலுமாக நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற செயல்களாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

மேலும், குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாற்றமாக நடப்பவர்களோடு கைகோர்த்துக் கொண்டு நாங்கள் நடுநிலைவாதிகள் என்று அப்பட்டமாக பொய்சொல்லித் திரிவதையும், உண்மையான ஏகத்துவத்தை எடுத்துச் சொல்பவர்களை எதிர்ப்பதையும் பார்க்க முடிகின்றது.

இறைவன் இப்படிப்பட்ட குணநலன்களை பற்றிக் குறிப்பிடும்போது,

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

அல்லாஹ்வின் வசனங்கள் பரிகாசம் செய்யப்படுகின்ற சபைகளில் நயவஞ்சகர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

மேலும் அல்லாஹ் கூறும்போது;

அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டே உள்ளனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு வெற்றி கிடைத்தால் “உங்களுடன் நாங்கள் இருக்கவில்லையா?’’ என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், “நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா?’’ என்று (அவர்களிடம்) கூறுகின்றனர். கியாமத் நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கை கொண்டோருக்கு எதிரான வழியை (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 4:141

முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருப்பதே நடுநிலை பேசும் நயவஞ்சகர்களின் முக்கியமான பண்பு என்றும் அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்.

பேச்சில் நயவஞ்சகத்தனம்:

கேட்பவர்களைக் கவரச் செய்கின்ற வகையிலும், அப்படியே அவர்களின் பேச்சில் லயித்துப் போய் மக்கள் தங்களின் சிந்தனையை இழக்கின்ற வகையிலும் தங்களின் பேச்சை அமைத்துக் கொள்வார்கள்.

இந்த குணத்தைப் பற்றி இறைவன் திருமறையில் கூறும்போது,

உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றிப் பேசுகின்ற, கடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்.

அல்குர்ஆன் 2:204

இன்றைக்கு உண்மையைப் பேச வேண்டும் என்ற எண்ணம் கடுகளவு கூட இல்லாமல், அல்லாஹ்வின் மீது அச்சம் இல்லாமல், தன்னுடைய மரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொள்ள நாக்கூசாமல் அள்ளி விடுவதைப் பார்க்கின்றோம். மேலும் தங்களின் உள்ளங்களில் இருக்கின்ற கேடுகெட்ட செயல்களுக்கு அல்லாஹ்வையே சாட்சியாக்குகின்ற அவல நிலையையும் பார்க்கின்றோம்.

நன்மைக்கு தடையாக இருப்பான்

நடுநிலை என்ற பெயரால் நன்மையான காரியத்திற்குத் தடையாகவும், நன்மை செய்பவர்களை நோகடிக்கக் கூடியவனாகவும் இருந்து கலகத்தை உண்டு பண்ணுவான் என்றும் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 9:67

நடுநிலை வியாதிகள் தீமையை ஏவி, நன்மையைத் தடுப்பவர்களாகவும், இறைவனின் பாதையில் செலவு செய்கின்ற பொருளாதாரம் என்று தெரிந்த பிறகும் கூட, நன்மையான காரியத்திற்குச் செலவிடாமல் இருப்பார்கள் என்றும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கின்றான்.

உடல் தோற்றம் – பேச்சு கண்களைக் கவரும்

நடுநிலை வேடதாரிகள் தன்னுடைய தோற்றத்தாலும், பேச்சாலும் மக்களைக் கவருகின்ற பணிகளை முடுக்கி விடுவார்கள். இத்தகைய கேடுகெட்ட குணம் கொண்டவர்களைப் பற்றி இறைவன் ஒரு உதாரணத்தின் மூலம் கடுமையாக சாடுகின்றான்.

நீர் அவர்களைக் காணும்போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன் 63:4

பேச்சாலும், தோற்றத்தாலும் மக்களைக் கவர்ந்திழுத்தாலும், நடுநிலை பேசும் யாராக இருந்தாலும் மரக்கட்டைகளுக்குச் சமம் என்றும், என்ன நடந்தாலும் தங்களுக்கு எதிராகவே நடக்கின்றது என்ற ஒரு மாயதோற்றமும் அவர்களுக்கு ஏற்படும் என்றும், அத்தகைய குணம் படைத்தவர்களிடத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் அவர்களைப் பற்றி இறைவன் எச்சரிக்கின்றான்.

இறைமறுப்பாளர்களிடம் கௌரவத்தை எதிர்பார்ப்பார்கள்

இன்றைக்குப் பெரும்பாலோர் ஒருசில ஆதாயத் திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஏக இறைவனை மறுப்போரிடத்திலும், ஏகத்துவக் கொள்கையை குழி தோண்டிப் புதைப்போரிடத்திலும் நடுநிலை வேடம் அணிந்து, ஆட்டம் போட்டு, கூட்டு சேருவதைப் பார்க்கின்றோம்.

இவர்களைப் பற்றி இறைவன் வன்மையாகக் கண்டித்துப் பதிவு செய்கின்றான்;

நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு’’ என்று எச்சரிப்பீராக!

நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 4:138,139

கண்ணியத்தை அல்லாஹ்விடத்தில் மட்டுமே தேட வேண்டும். மார்க்கத்தை எதிர்க்கின்ற, கண்டவர்களிடத்தில் எல்லாம் கண்ணியத்தைத் தேடி அலையக்கூடாது. நயவஞ்சக வேடதாரிகளே அவ்வாறு செய்வார்கள் என்றும் இறைவன் எச்சரிக்கையோடு அறிவுரை பகர்கின்றான்.

வஹியின் தீர்ப்பு கசக்கும்

மக்களில் சிலர் ஏதேனும் தவறிழைத்து விட்டாலோ அல்லது நீதி கேட்டாலோ வஹியின் அடிப்படையில் அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டித் தந்ததன் முறையில் தீர்ப்பளிப்பது நடுநிலைவாதிகளுக்குப் பிடிக்காது என்று அல்லாஹ் காட்டமாகப் பதிலளிக்கின்றான்.

அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் என்னவாகும்? பின்னர் அவர்கள் உம்மிடம் வந்து “நன்மையையும், ஒற்றுமையையுமே நாடுகிறோம்’’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 4:61,62

இறைவனும், இறைத்தூதரும் வழிகாட்டிய முறைப்படி அறிவுரை கூறினால் நயவஞ்சகர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்து விடுவார்கள். மக்களிடத்தில் நாங்கள் ஒற்றுமை விரும்பிகள் என்று சொல்லி, கலகத்தையும், குழப்பத்தையும் உண்டு பண்ணுவார்கள் என்றும் இறைவன் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கின்றான்.

இரட்டை வேடதாரிகள் மறுமையில் படும் கேவலம்

நடுநிலை இல்லாமல் சத்தியத்திற்கு எதிராகக் களம் காணும் நயவஞ்சகவாதிகள் நரகத்தின் அடித்தட்டில் கடுமையான வேதனையை சுவைப்பார்கள் என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.

நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.

அல்குர்ஆன் 4:145

இந்த உலகத்தில் யாரிடமாவது உதவி கேட்பதற்காகவும், சுயநலத்திற்காகவும் இரட்டை வேடம் போடலாம். ஆனால் நரகத்தின் அடித்தட்டில் இருக்கும்போது எந்த உதவியாளரையும் காண மாட்டார்கள் என்று இறைவன் சாடுகின்றான்.

மேலும் இறைவன் கூறுகின்றான்;

எங்களைக் கவனியுங்கள்! உங்கள் ஒளியில் நாங்களும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறோம்’’ என்று நம்பிக்கை கொண்டோரிடம் நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் அந்நாளில் கூறுவார்கள். “உங்கள் பின்புறமாகத் திரும்பிச் சென்று ஒளியைத் தேடுங்கள்!’’ எனக் கூறப்படும். அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அதற்கு வாசலும் இருக்கும். அதன் உட்புறத்தில் அருள் இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருந்து வேதனை இருக்கும்.

அல்குர்ஆன் 57:13

நடுநிலை வேடம் போட்டுக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள் நாளை மறுமையில் நம்பிக்கைக் கொண்டோரிடம் அற்புதமான ஒளியைக் கேட்டு கெஞ்சுவார்களாம். ஆனால் அவர்களுக்கு அந்த ஒளி கிடைக்காது. கடுமையான வேதனை தான் கிடைக்கும் என்று இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

அல்லாஹ்வின் அதிபயங்கரமான எச்சரிக்கை

இத்தகைய இரட்டை குணம் படைத்த நயவஞ்சக வேடம் போட்டவர்கள், நாளை மறுமையில் கடுமையான இழிவைச் சந்திப்பார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். மேலும் நடுநிலை என்ற போர்வையில் பேராசையோடு வாழ்ந்த காரணத்தினாலும், ஷைத்தானைப் பின்பற்றியதன் காரணத்தினாலும் தங்களைத் தாங்களே கடும் துன்பத்தில் ஆழ்த்திக் கொள்வார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றான்.

நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’’ என்று அவர்களை அழைப்பார்கள். “அவ்வாறில்லை! உங்களை நீங்களே துன்பத்திலாழ்த்திக் கொண்டீர்கள். (இதை எங்களுக்கு) எதிர்பார்த்தீர்கள். சந்தேகம் கொண்டீர்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை உங்களைப் பேராசைகள் ஏமாற்றி விட்டன. ஏமாற்றுக்காரனும் (ஷைத்தான்) உங்களை அல்லாஹ் விஷயத்தில் ஏமாற்றி விட்டான்’’ என்று அவர்கள் கூறுவார்கள்.

இன்று உங்களிடமிருந்தும் (ஏகஇறைவனை) மறுத்தோரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. உங்கள் தங்குமிடம் நரகமே. அதுவே உங்கள் துணை. அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 57:14,15

ஷைத்தானிய செயல்களாக இருக்கின்ற இந்தக் கேவலமான நடுநிலை என்ற நயவஞ்சகச் செயலில் ஈடுபடுவோரை அல்லாஹ் இழிவு நிறைந்த வேதனைகளை சுவைக்கச் செய்கின்றான். மேலும் அவர்களின் துணையாக நரகத்தை அல்லாஹ் பரிசளிக்கின்றான். இதுபோன்ற அதிபயங்கரமான செயல்களிலிருந்து நாம் அனைவரும் தவிர்ந்து வாழ கடமைப்பட்டிருக்கின்றோம்.

நடுநிலைவாதிகளின் கவனத்திற்கு…

நடுநிலைவாதிகள் என்போர் முழுக்க முழுக்க கீழ்க்கண்ட செயல்பாடுகளைப் பிரதானமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் செயல்பாடுகளின் மூலமாகவே தாங்கள் நடுநிலைவாதிகள் அல்லர். நயவஞ்சகர்கள் தான் என்பதைத் தெளிந்த நீரோடை போல நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

 • நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் இவர்கள் தனி இயக்கமொன்றை ஆரம்பிப்பார்கள்.
 • தவ்ஹீத் கொள்கையை சொல்பவர்களை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அசத்தியவாதிகளிடத்தில் வழிந்து பேசுவார்கள்.
 • சகோதரரின் மானம் புனிதம் என்பார்கள். ஆனால் தவ்ஹீத் சகோதரர்களின் மான மரியாதையை அனுதினமும் பந்தாடுவார்கள்.
 • நாங்கள், எந்தக் கொள்கையைச் சார்ந்தவர்கள் உபதேசம் செய்தாலும் அதை எதிர்க்க மாட்டோம் என்பார்கள்.
 • அசத்தியக் கொள்கையை எடுத்துரைக்கும் கூடாரத்தில் இவர்களும் பங்கெடுப்பார்கள்.
 • நாங்களும் தவ்ஹீத் தான் என்று சொல்லிக் கொண்டு, தவ்ஹீதைக் குழி தோண்டிப் புதைப்பவர்களுடன் கைகோர்த்து நிற்பார்கள்.
 • தவ்ஹீத் கொள்கைக்கும், தவ்ஹீதைப் பின்பற்றுபவர்களுக்கும் எதிராகவும், தவ்ஹீத் எனும் ஆணிவேரை வேரோடு பிடுங்கி எறியவும், களத்திலே இறங்கி ஆங்காங்கே பல்வேறு வகையான கூட்டம் நடத்துவார்கள்.

இதுபோன்ற காரியங்களைச் செய்பவர்களை எப்படி நடுநிலைவாதிகள் என்ற பட்டியலுக்குள் கொண்டு வர இயலும்? அப்பாவி மக்களை ஏமாற்றி நாங்கள் நடுநிலையாளர்கள் தாம்! எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்லர்! எங்களோடு சேர்ந்து பயணித்தால் நீங்களும் வெற்றி பெறலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி மதி மயக்கி விடுவதைப் பார்க்கின்றோம்.

மக்களில் சிலரும் சின்னச் சின்னக் கருத்து வேறுபாட்டின் காரணமாக உண்மையை அறியாமல், அறிந்து கொள்ள முயற்சிக்காமல் உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு பலியாகி விடுவதைப் பார்க்கின்றோம்.

இதுபோன்ற ஏராளமான செயல்பாடுகளின் மூலமாக, தங்களைத் தாங்களே நயவஞ்சகர்கள் தான் என்பதை அனுதினமும் நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.

எனவே இதுபோன்ற குணநலன்களிலிருந்தும், இதுபோன்ற கூட்டமைப்புகளில் உள்ளவர் களிடமிருந்தும் நாம் அனைவரும் விலகி அல்லாஹ்வுக்குப் பயந்து உறுதியோடு – இறுதிவரை ஏகத்துவக் கொள்கையில் பயணிக்க வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!

————————————————————————————————————————————————–

அல்ஹம்துலில்லாஹ்

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

ஒவ்வொரு நாளும் நமது தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் துவங்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்கிறோம்.இரவில் உறங்கும் முன்பும் பிறரை சந்தித்துப் பேசுகையில் நாம் நலமுடன் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும் அல்ஹம்துலில்லாஹ் என்கிறோம்.

 இப்படி அனுதினமும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும் நாம், அதன் பொருள், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று புரிந்திருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் ஏராளமான விளக்கங்களையும் இந்த வார்த்தையை மொழிவதினால் நமக்குக் கிடைக்கும் இம்மை மறுமை பலன்களையும் அறிந்தால் அல்ஹம்துலில்லாஹ் என்ற அற்புத வார்த்தையை உளப்பூர்வமாக மொழியாமல் ஒருநாளும் இருக்கமாட்டோம்.

பல்வேறு ரகசியங்களை உள்ளடக்கிய இந்த வார்த்தையின் விளக்கத்தினையும் இதை எப்போது சொல்ல வேண்டும் என்பதையும் இதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் விரிவாக இந்தத் தொடரில் அறிந்துகொள்வோம்.

அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்கள்

 1. அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்திட,
 2. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திட…
 3. புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திட…

அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்த அல்ஹம்துலில்லாஹ் என்போம்!

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு அமையவிருக்கும் துணைவிக்குத் தகுதிகள் பலவற்றை எதிர்பார்க்கிறான். தனக்குக் கீழ் பணிபுரிபவனுக்குத் தகுதிகள் எதிர்பார்க்கிறான்.இவ்வாறு அனைத்திலும் தகுதி தராதரங்களை எதிர்பார்க்கும் மனிதன் தன்னைப் படைத்த, பரிபாலிக்கின்ற, பாதுகாக்கின்ற, படுகுழிக்குப் போன பின் எழுப்பி விசாரிக்கின்ற இறைவன் பேராற்றல் மிக்கவனாக இருக்க வேண்டும், பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும், தேவைகளற்றவனாக இருக்க வேண்டும் என்ற தகுதியை மறந்துவிடுகிறான்.

அதன் விளைவாக ஊதுபத்தியிலும் சாம்பிராணிப் புகையிலும் கடவுள் மயங்கி விடுவார் என நம்புகிறான். தேங்காயும் வாழைப்பழமும் கடவுளுக்குத் தேவை என நினைக்கிறான். இசை வாத்தியங்களால் தூங்கும் கடவுளைத் தட்டி எழுப்பிடலாம் என நினைக்கிறான்.

கடவுளை, ஒரு பழத்திற்காகச் சண்டை போட்ட பங்காளிகளாகப் பார்க்கிறான். தீப ஆராதனைகளையும், சந்தனம், பால் அபிஷேகத்தையும் எதிர்பார்ப்பவர்களாகத் தனது கடவுளை நினைத்து வழிபடுகிறான்.

ஆனால் அல்லாஹ்வோ தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக் கிறானே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இல்லை எனவும், அவன் பேராற்றல் மிக்கவன் எனவும், பலவீனத்திற்கு அப்பாற்பட்டவன் எனவும் அல்லாஹ் தனது திருமறையில் தெரிவிக்கின்றான்.

பலவீனத்திற்கு அப்பாற்பட்ட அவனே அனைத்துப் புகழுக்கும் தகுதியானவன் என்பதைப் பின்வரும் வசனங்களில் வர்ணிக்கிறான்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி.

அல்குர்ஆன் 1:1-3

மேற்கண்ட வசனத்தில் படைத்தவன், அருளாளன், அன்பாளன், ஆட்சியாளன் ஆகிய நான்கு பண்புகளைக் கொண்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இதன் கருத்து. இந்நான்கு பண்புகளிலும் இறைவனுக்குரிய அனைத்து இலக்கணங்களும் அடங்கியுள்ளன. இப்பண்புகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளும் எவரும் அல்லாஹ்வை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நான்கு பண்புகளுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர உணவளிக்கும் (வேறு) படைப்பாளன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவ்வாறு நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?

அல்குர்ஆன் 35:1-3

இறைவன் வானங்களையும் பூமியையும் வானவர்களையும் படைத்தவன், மனிதர்களுக்கு அருள் வழங்குபவன் என கடவுளுக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏகஇறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!

வானங்களிலும் பூமியிலும் அவனே அல்லாஹ். அவன் உங்களின் இரகசியத்தையும், வெளிப்படையானதையும் அறிகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் அறிகிறான்.

அல்குர்ஆன் 6:1-3

மேற்கண்ட வசனங்களில் இறைவன் தனக்குரிய இலக்கணத்தை அழகாக விவரிக்கிறான்.

அல்லாஹ் தேவைகளற்றவன்

அல்லாஹ்வுக்குத் தூக்கம் தேவையில்லை, அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை, அல்லாஹ்வுக்கு மரணமில்லை, அல்லாஹ்வுக்கு மறதி இல்லை,  அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை, அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை, அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு தேவை இல்லை, அல்லாஹ்வுக்கு மனைவி, மகன் போன்ற தேவைகள் இல்லை, அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் தேவையில்லை, அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை.

அல்லாஹ் வல்லமை மிக்கவன்

அவனே அடுக்கடுக்கான ஏழு வானங்களையும் கண்ணுக்குத் தெரியாத தூண்களால் படைத்தவன்.பூமியைப் படைத்து அதில் மனிதர்களை வாழச் செய்தவன். பூகம்பத்தால் மக்கள் அழிந்துவிடாமலிருக்க மலைகளை முளைகளாக நாட்டியவன். சுட்டெரிக்கும் சூரியனால் ஒளியூட்டியவன். இரவு பகலை மாறி மாறி வரச் செய்பவன். அண்டம் படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டாக நிர்னயித்தவன். மனிதனைப் பல நிறங்களில், மொழிகளில் வகைப்படுத்தியவன். மனிதனுக்கு மரம் செடி கொடிகளை வசப்படுத்தியவன். காய் கனிகளை அள்ளிக் கொடுத்தவன். மழையால் மண்ணையும் மனதையும் குளிர்வித்தவன். இப்படி அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருளையும் அவனது வல்லமையையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு பெரிய மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை அறிந்த எவரும் அவனுக்கு இணைகற்பிக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வுக்கு இணையாக்குமளவிற்கு அந்தப் போலி தெய்வங்கள் யாவும் வல்லமை பெற்றவை அல்ல. அவை அனைத்தும் படைப்பினங்கள். பலவீனத்திற்கு உட்பட்டவைகள். அணுவைக் கூட படைக்க சக்தியற்றவைகள்.

நாம் நம்பி வழிபடும் இறைவன் எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவன்? அவனே படைத்து, வடிவமைத்து, படைப்பினங்களுக்குக் காலக் கெடுவை நேர்த்தியாக நிர்ணயித்து, மனிதர்களின் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் அனைத்தையும் அறிந்த வல்லோன் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

இறைவனின் வல்லமையை உணர்ந்து, நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் இரவிலும் அவனைப் போற்றிப் புகழ்ந்ததைப் பின்வரும் செய்திகளில் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ للهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ رَبّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

அஸ்ப(ஙி]ஹ்னா வஅஸ்ப(ஙி]ஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(ஙி] அஸ்அலு(க்)க கைர மாபீ[தி] ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(ஙி]ஃதஹா, வஅவூது பி(ஙி](க்)க மின் ஷர்ரி மாபீ[தி] ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(ஙி]ஃதஹா, ரப்பி(ஙி] அவூது பி(ஙி](க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(ஙி]ரி, ரப்பி(ஙி] அவூது பி(ஙி](க்)க மின் அதாபி(ஙி]ன் பி[தி]ன்னாரி, வஅதாபி(ஙி]ன் பி[தி]ல் கப்(ஙி]ரி

இதன் பொருள்:

நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4901

மாலையில் ஓதும் போது “அம்ஸைனா வ அம்ஸல் முல்கு லில்லாஹ்” என்று சொல்லிவிட்டு மேற்கண்ட துஆவை ஓதி அல்லாஹ்வைப் புகழ்வார்கள்.

நள்ளிரவிலும் நாயனைப் புகழ்ந்த நபிகள் நாயகம்

اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் பீ[தி]ஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபி(ஙி]ய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(ஙி](க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(ஙி](த்)து, வபி(ஙி](க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ப[தி]க்பி[தி]ர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(ஙி]ல்லாஹி

இதன் பொருள்:

இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499

அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்த நாள்தோறும் நபிகளார் ஓதிய துஆக்களை நாமும் ஓதுவோம்.

————————————————————————————————————————————————–

ஏகத்துவவாதிகளே! தளர்ந்து விடாதீர்கள்!

ஆஃப்ரின் சிதிரா

சமீப காலமாக நம் ஜமாஅத்தில் எதிர்பாராதப் பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. கட்டுக்கோப்பான இந்த ஜமாஅத் எப்போது பிளவுபடும், இத்தோடு அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கயவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்து விட்டது. நம்மைப் பற்றி தப்பும் தவறுமாகப் பல்வேறு விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

திரும்பும் திசையெங்கும் நம்மைப் பற்றிய விவாதங்களும் வாதப் பிரதிவாதங்களும் வலுத்திருப்பதைப் பார்க்கிறோம். இவை அனைத்தும் கொள்கைவாதிகளிடம் மன உளைச்சலையும் கலக்கத்தையும் ஏற்படுத்துவது இயற்கை தான். எனினும் இத்தருணத்தில் நாம் தளர்ந்து விடாமல் நமது கொள்கையில் உறுதியாக இருப்பதும் மக்களிடம் ஏற்பட்டுள்ள சலனத்தை உடைத்தெறிவதும் நமது கடமையாகும்.

இறைச் சோதனையை எதிர்கொள்வோம்

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனையே சார்ந்திருக்கக்கூடிய இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் ஈமானுக் கேற்ப சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். தற்போது நாம் சந்திக்கும் நெருக்கடிகள் கூட ஏகத்துவவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனை தான்.

முஸ்அப் பின் ஸஃத் (ரலி) அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்:

‘‘அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் அதிகம் சோதிக்கப்படுவோர் யார்?’’ என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நபிமார்கள், அதற்கு அடுத்த தரத்திலுள்ளோர், அதற்கு அடுத்த தரத்திலுள்ளோர் (என்ற வரிசையில் சோதிக்கப்படுவர்). ஒருவர் அவரது மார்க்கப் பற்றுக்கேற்ப சோதிக்கப்படுவார். மார்க்கத்தில் உறுதியானவராக இருந்தால் அவரது சோதனையும் கடுமையாக இருக்கும். மார்க்கத்தில் உறுதி குறைந்தவராக இருந்தால் அவரது மார்க்கப் பற்றின் அளவுக்கேற்ப சோதிக்கப்படுவார். எந்தப் பாவமும் அற்றவராக நடமாடும் அளவுக்கு அடியான் சோதனைக்கு ஆளாவான்’’ என்று விடையளித்தார்கள்

நூல்: திர்மிதி 2398

தவ்ஹீத் ஜமாஅத் உடைந்துவிட்டது, இல்லாமல் போய்விட்டது என்றெல்லாம் பலரும் பல வகையில் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்; கற்பனையில் மிதக்கின்றனர்.

ஆனால் தனி நபரின் மீது கொண்ட நேசத்தினால் இக்கொள்கையில் இருப்பவர் யார்? தன்னிகரற்ற நாயனின் நேசத்தைப் பெறுவதற்காக இந்தக் கொள்கையில்  இருப்பவர் யார்? என்று அறிவதற்காக, உண்மையான தவ்ஹீதுவாதிகளிடமிருந்து போலியானவர்களை, தவ்ஹீது எனும் போர்வையில் இருப்பவர்களைப் பிரித்தறிவதற்காகவே அல்லாஹ் சோதிக்கிறான்.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிட மாட்டான்.

அல்குர்ஆன் 3:179

எனவே இச்சோதனைகளின் போது நமது உள்ளம் சோர்வடைந்து விடவோ, பலவீனப்பட்டு விடவோ கூடாது. மாறாக, நமது ஈமான் மென்மேலும் அதிகரிக்க வேண்டும். நமக்கு எதிராகக் கிளம்பக் கூடிய எதிர்ப்புக் கணைகள் நம்மை அசைக்க முடியாத, பூமியின் ஆழப்பதிந்த ஆலமரமாக உருமாற்ற வேண்டும்.

மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!’’ என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 3:173

விமர்சனத்திற்குக் கலங்க வேண்டாம்

நாம் கூட்டத்திற்காகவோ, புகழ்ச்சிக்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ இக்கொள்கையை ஏற்கவில்லை. மறுமை வெற்றிக்காக, இறை நெருக்கத்தைப் பெறுவதற்காக இக்கொள்கையை ஏற்றிருக்கின்றோம். எனவே வீணர்களின் வீண் பேச்சுக்களுக்கும், கேலி நையாண்டிகளுக்கும் நாம் தளர்ந்து விடக்கூடாது; பணிந்தும் விடக்கூடாது.

ஏகத்துவவாதிகளின் மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவன் கூறுவதைக் கேளுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:54

மேலும் நம்மைப் பற்றிய பரிகாசங்கள் அனைத்தும் நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிடச் சிறிய துன்பம் எதுவாயினும், அதற்காக அவருக்கு ஓர் அந்தஸ்து பதிவு செய்யப்படுகிறது; அதற்குப் பகரமாக அவருடைய தவறுகளில் ஒன்று துடைக்கப்படுகிறது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 5024

தடம்புரளாத உள்ளத்தை வேண்டுவோம்

உள்ளம் என்பது உறுதித் தன்மை அற்றதாக, தவறைத் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.

எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத்தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ (என்று யூசுப் கூறினார்).

அல்குர்ஆன் 12:53

உள்ளத்தில் ஏற்படும் சிறு தடுமாற்றம் கூட நம்மை ஒரேயடியாகத் திசை திருப்பிவிடுகின்றது. நன்மையிலும் இறையச்சத்திலும் ஈமானிய உறுதியிலும் நம்மை முந்தி விட்ட, நம்மைவிடச் சிறந்தவர்களான நபித்தோழர்கள், உஹத் போர்க்களத்தில் நபிகளார் மரணித்துவிட்டதாக வதந்தி பரவிய போது அவர்களது உள்ளங்கள் தடுமாறி, தடம்புரள முற்பட்டது. எனினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றினான். எனவே தான் தடம்புரளாத உள்ளத்தையும், இறையச்சத்தையும் இறைவனிடம் வேண்டி ஒவ்வொரு நாளும் நாம் மன்றாட வேண்டும்.

ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டு வந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம். இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா?’’ எனக் கேட்க, அதற்கு நபியவர்கள், ‘‘ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2140

இறைநம்பிக்கையாளர்கள் இளம்பயிர் போன்றோர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே).

தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5644

ஒரு தலைவர் வெளியே போய்விட்டால் உடனே ஏகத்துவக் கோட்டை சரிந்து விட்டதைப் போன்று எதிரிகள் பரப்பினாலும், கொள்கையை மட்டுமே தலைவனாகக் கொண்ட கூட்டத்திற்கு ஒருபோதும் வீழ்ச்சி ஏற்படாது. யார் வந்தாலும் யார் போனாலும் இக்கொள்கையை அல்லாஹ் உறுதிப்படுத்தியே தீருவான்.

நல்ல கொள்கைக்குத் தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளது; அது நிற்காது.

நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

அல்குர்ஆன் 14:24-27

————————————————————————————————————————————————–

இஹ்யாவை ஏன் கொளுத்த வேண்டும்? தொடர்: 31

பாதிரியிடம் மார்க்கம் கற்கப் பரிந்துரைக்கும் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹிமஹுல்லாஹு(?) சொன்னதாக கஸ்ஸாலி கூறும் சம்பவத்தைக் கேளுங்கள்:

சம்ஆன் என்ற பாதிரியிடம் அகமிய ஞானத்தைக் கற்றுக் கொண்டேன். நான் அவருடைய ஆசிரமத்திற்குச் சென்று, ‘‘எவ்வளவு காலம் இந்த ஆசிரமத்தில் நீங்கள் உள்ளீர்கள்’’ என்று கேட்டேன்.

(மீதியை இப்போது உரை நடையில் பார்ப்போம்)

சம்ஆன்: 70 வருடங்கள்

இப்ராஹீம் பின் அத்ஹம்: உங்களுடைய உணவு என்ன?

சம்ஆன்: இஸ்லாத்தைப் பின்பற்றுபவரே! இந்தக் கேள்வியை நீ கேட்பதற்குரிய அவசியம் என்ன?

இப்ராஹீம் பின் அத்ஹம்: அறிய விரும்புகின்றேன்.

சம்ஆன்: ஒவ்வொரு இரவும் ஒரு கொண்டைக் கடலை தான்!

இப்ராஹீம் பின் அத்ஹம்: ஒரே ஒரு கொண்டைக் கடலை உங்கள் ஜீவனைக் கழிக்கவும் காக்கவும் போதும் என்றால் அந்த அளவுக்கு  உங்கள் உள்ளத்தை எது பக்குவப்படுத்தியது? எது பண்படுத்தியது?

சம்ஆன்:  எதிரே இருக்கின்ற பாதிரிகளின் தங்கும் விடுதி உனக்குத் தெரிகின்றதா?

இப்ராஹீம் பின் அத்ஹம்: ஆம்!

சம்ஆன்: இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாள் வந்து என் ஆசிரமத்தை அலங்கரிக்கின்றனர். அதைச் சுற்றி தவாஃப் செய்து (வலம் வந்து) என்னைக் கண்ணியமும் கவுரமும் படுத்துகின்றனர்.

என்னுடைய உள்ளம் வணக்கம் செய்யக் கஷ்டப்படும் போதெல்லாம், கனமாகும் போதெல்லாம், இவர்கள் மதிப்பும் மரியாதையும் அளித்து அர்ப்பணிக்கின்ற அந்த சில மணித்துளி நேரத்தை என் மனக்கண் முன் கொண்டு வருகின்றேன். அவ்வளவு தான் எனக்கு ஏற்பட்ட கஷ்டம், கனம் அத்தனையும்  மாயமாய் மறைந்து விடுகின்றது.

அந்த சில மணித்துளி நேரம், நான்  ஓராண்டு கால வணக்கத்தைச் செய்யவும் தொடரவும் ஓர் உந்து சக்தியாகவும் ஓர் உன்னதமான எரிபொருளாகவும் மாறிவிடுகின்றது. இஸ்லாத்தைப் பின்பற்றுபவனே! இது போன்று  ஒரு மணி நேர உழைப்பை உன் காலம் முழுமைக்கும் வணக்கம் புரிகின்ற ஓர் உந்து சக்தியாகவும் எரிபொருளாகவும் மாற்றிக் கொள்!

(இப்ராஹீம் பின் அத்ஹம்: அந்த  அறிவுரை எனது உள்ளத்தில் அகமிய  ஞானத்தை ஆழமாகப்  பதிய வைத்தது.)

சம்ஆன்: இது போதுமா? இன்னும் வேணுமா?

இப்ராஹீம் பின் அத்ஹம்: இன்னும் வேண்டும் சொல்லுங்கள்

சம்ஆன்: ஆசிரமத்தை விட்டு இறங்குக!

நான் இறங்கியதும் எனக்கு ஒரு தோல் பை ஒன்றை அளித்தார். அதில் இருபது கொண்டைக் கடலைகள் இருந்தன.

சம்ஆன்: பாதிரிகள் தங்கும் விடுதிக்கு செல். நான் உனக்கு அளித்த   தோல் பையை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

(அவர் சொன்னது போன்று அங்கு நுழைந்தேன்)

பாதிரிகள்: இஸ்லாத்தைப் பின்பற்றுபவனே! ஆசான் உனக்கு என்ன தந்தார்?

இப்ராஹீம் பின் அத்ஹம்: அவர் தனது உணவை எனக்கு தந்தார்

பாதிரிகள்: நீ அதை வைத்து என்ன செய்யப் போகின்றாய்? நாங்கள் அதைப் பெறுவதற்கு முழு தகுதியானவர்கள்.

(உடனே அவர்கள் பேரம் பேசுகின்றார்கள்)

பாதிரிகள்: எவ்வளவு

இப்ராஹீம் பின் அத்ஹம்: 20 தீனார்கள்

அவர்கள் உடனே 20 தீனார்கள் தந்தனர்.

(திரும்ப நான் ஆசானிடம் சென்றேன்)

சம்ஆன்:  நான் அளித்ததை என்ன செய்தாய்?

இப்ராஹீம் பின் அத்ஹம்: அவர்களிடத்தில் விற்றேன்.

சம்ஆன்: எவ்வளவுக்கு?

இப்ராஹீம் பின் அத்ஹம்: 20 தீனாருக்கு!

சம்ஆன்: நீ தவறு செய்து விட்டாய். நீ இருபதாயிரம் தீனார்கள் என்று பேரம் பேசியிருந்தாலும் அந்தத் தொகையை அவர்கள் தந்திருப்பார்கள்! இஸ்லாத்தைப் பின்பற்றுபவனே! நீ வணங்காத மக்கள் உனக்கு அளிக்கும் கண்ணியம்  இப்படி என்றால் நீ வணங்கும் இறைவன் உனக்கு அளிக்கும் கண்ணியம் எப்படியிருக்கும் என்று நீ சிந்தித்துப்பார்! எனவே உன்னுடைய இறைவனை நோக்கிச் செல்க! அங்கிங்கும் அலைவதை விட்டு விடுக!

நூல்: இஹ்யா உலூமித்தீன்

(கிதாபு தம்மில் ஜாஹி வர் ரியா – அந்தஸ்து, முகஸ்துதியை  இடித்துரைக்கும் அத்தியாயம்)

நீங்கள் படித்த இந்தச் சம்பவம் இஹ்யாவில் இடம்பெறுகின்ற சம்பவமாகும். அன்றாடம் தமிழக மத்ரஸாக்களில் மாணவர்களுக்குப் பாடமாக நடத்தப்படுகின்ற நூல் தான் இஹ்யா உலூமித்தீன்.

கல்விக் கடல் கஸ்ஸாலி என்று போற்றப்படும்  கஸ்ஸாலி அவிழ்த்து விடுகின்ற, அடித்து விடுகின்ற செய்தி தான் நீங்கள் படித்த இந்த செய்தி!

இதைப் படித்த மாத்திரத்தில் சாதாரண பாமரனுக்கும் பளிச்சென்று  எழுகின்ற ஒரு கேள்வி, யூதப் பாதிரியிடத்தில் ஒரு முஸ்லிம் எப்படிப் போய் பாடம் படிக்க முடியும்? என்பது தான்.

அப்படியிருக்கும் போது ஒரு கல்விக் கடல் என்று வர்ணிக்கப்படும் ஒருவரால் எப்படி இதைச் சொல்ல முடிகின்றது? பாமரனுக்கு எழுகின்ற ஐயமும் அர்த்தமுள்ள கேள்வியும் ஏன் படித்த பண்டிதப் பெருமகனார்களுக்கு எழவில்லை?

இங்கு தான் கஸ்ஸாலியின் மீது கொண்டிருக்கின்ற கண்மூடித்தனமான காதல் அவர்களது கண்ணை மறைக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

இதற்குக் கஸ்ஸாலியின் காதலர்கள் என்ன பதில் கூறப் போகின்றார்கள்? இதற்கும் வக்காலத்து வாங்கி வக்கனை பேசப்போகின்றார்களா?

அல்லது இஹ்யாவில் இடம் பெற்றிருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று உண்மையை ஒப்புக் கொள்ளப் போகின்றார்களா? என்ன செய்யப் போகின்றார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

மார்க்கமா? மனோ இச்சையா?

இப்போது யூதப் பாதிரியிடம் இப்ராஹீம் பின் அத்ஹம் பாடம் படிக்கப் போன கதையை  அசை போட்டு அலசுவோம். குர்ஆன், ஹதீஸுடன் அதைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போம்:

இப்ராஹீம் பின் அத்ஹம் தேடிப் போவது மார்க்க ஞானத்தை நாடித் தான். அவர் மருத்துவம், அறிவியல், பொறியியல் போன்ற மார்க்கம் சாராத உலகக் கல்வியை கற்கச் சென்றால் அதை நாம் குறை காணமாட்டோம். காரணம் அது மார்க்கம் சார்ந்த கல்வியல்ல!

இவர் தேடிச் செல்வதோ உள்ளத்தைத் தூய்மைப்படுத்தக் கூடிய அகமிய ஞானத்தைத் தான். இவர்கள் அகமியம், ஆன்மீகம் என்று என்ன பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளட்டும். ஆனால் அது மார்க்கக் கல்வி. அந்தக் கல்வி ஞானம், குர்ஆன், ஹதீஸில் தான் பொதிந்து கிடக்கின்றது. அதை எந்த ஒரு முஸ்லிமும் ஓர் யூதப் பாதிரியிடம் போய் தேட வேண்டிய அவசியம் இல்லை.

யூதர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மையான மார்க்கம் இஸ்லாம் தான். அந்த இஸ்லாத்தை அது உண்மை என்று தெரிந்தே பின்பற்ற மறுத்து விட்டார்கள்.

உண்மையை மறுத்தால் அவர்கள் எதைப் பின்பற்றியாக வேண்டும்? மனோ இச்சையைத் தான்.

எல்லாம் வல்ல அல்லாஹ், வேதக்காரர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது மார்க்கம் என்ற பெயரில்  அவர்கள் தங்கள் மனோஇச்சைகளைத் தான்  பின்பற்றுகின்றார்கள் என்று குறிப்பிடுகின்றான்.

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’’ எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ் விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

அல்குர்ஆன் 2:120

மனோ இச்சையை பின்பற்றக்கூடிய அவர்களிடம் போய் ஒரு முஸ்லிம் எப்படி மார்க்க விளக்கத்தைக் கற்க முடியும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது சாதாரண பாமரனுக்கும் தெரிந்த சர்வ சாதாரணமான பாலர் பாடமாகும். இது கல்விக்கடலான கஸ்ஸாலிக்குத் தெரியாமல் போனது எப்படி?

வேதமுடையோரில் ஒரு பகுதியினர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

அல்குர்ஆன் 3:69

அவர்கள் முஸ்லிம்களை வழி கெடுப்பதற்குக் கச்சை கட்டிக் கொண்டு நிற்பதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இப்படி வழி கெடுக்கக் காத்திருக்கும் ஒரு கூட்டத்தில் போய் ஒரு முஸ்லிம் ஞானம், விளக்கம் என்ற பெயரில் மார்க்கம் கற்கப் போனால் அவரது நிலை என்னவாகும்? அதிலும் குறிப்பாக மேற்கண்ட சம்பவத்தில் ஒரு கொண்டைக் கடலை உணவு, அவரது ஆசிரமத்தை வலம் வருதல் என்பதெல்லாம் கடைந்தெடுத்த மனோஇச்சை தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கஸ்ஸாலி அகமிய ஞானம், விளக்கம் என்ற பெயரில் பாமர மக்களைப் போய் பாடம் படிக்கச் சொல்கின்றாரே! அப்படி அவர்கள் சென்றால் நிலை என்னவாகும்? ஏற்கனவே விரித்து வைத்திருக்கும் வலையில் போய் இவர்கள் வழுக்கி விட நேரிடும். அதனால் அவர்கள் தங்கள் தூய மார்க்கத்தை விட்டும் தடம் மாறி, யூத மார்க்கத்தில் போய் சேர்வதற்குரிய பொன்னான வாய்ப்பை கஸ்ஸாலியே களம் அமைத்துக் கொடுப்பதாகத் தான் ஆகும்.

யூதர்கள் தரும் செய்திகள் தூதர் வகுத்த வரம்புகள்

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.

(மாறாக, முஸ்லிம்களே!) “அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்’’ என்று கூறுங்கள்! (திருக்குர்ஆன் 2:136) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4485

வேதக்காரர்கள், வேதத்தில் தங்கள் கைவரிசைகளைக் காட்டியவர்கள். அந்த வேதத்தில் இவர்கள் கலந்தவை எவை? அல்லாஹ்வின் வார்த்தைகள் எவை? என்று பிரித்து அடையாளங்காண முடியாத அளவுக்கு வேதத்தைச் சிதைத்து, சீர்குலைத்தவர்கள். அதனால் அவர்களிடமிருந்து பெறக் கூடிய செய்திளை நம்பவும் வேண்டாம் மறுக்கவும் வேண்டாம் என்று அவற்றை அந்தரத்தில் நிறுத்தி வைக்கின்றார்கள்.

இதை நாம் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் அவர்களிடமிருந்து கல்வியைப் பெறுவதற்கு இந்த ஒரு வழி தான் இருக்கின்றது. அதற்கும் நபி (ஸல்) அவர்கள் வரம்பும், வரையறையும் நிர்ணயித்து விட்டார்கள். குர்ஆனும் ஹதீஸும் உண்மைப்படுத்தியவற்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்விரண்டும் பொய்ப்படுத்தியதை நாம் மறுத்து விடவேண்டும்.

இந்த விதிமுறைக்கு மாற்றமானதை அந்தரத்தில் விட்டு விடவேண்டும். அவற்றை நம்பவும் கூடாது. மறுத்து விடவும் கூடாது. இது தான் வேதக்காரர்களின் நிலை எனும் போது அவர்களிடம் போய் மார்க்கக் கல்வி பயில்வது என்பது எப்படி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கீழ்க்கண்ட ஹதீஸ் இதைத் தான் தெளிவுப்படுத்துகின்றது.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

(மார்க்கம் சம்பந்தப்பட்ட) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள உங்களின் வேதமோ புதியது. கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள். வேதக்காரர்கள் (தமக்கு அருளப்பெற்ற) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து, தம் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதிக் கொண்டு, அதன் மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக ‘இது இறைவனிடமிருந்து வந்ததே’ என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள (மார்க்க) ஞானம், வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே!

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்

நூல்: புகாரி 7363

தனித்த நாயனுக்குரிய தவாஃப் எனும் வணக்கம்

தவாஃப் என்ற வணக்கம் தனித்த நாயனுக்கு மட்டும் சொந்தமான தனி வணக்கமாகும். இந்த வணக்கத்தை அல்லாஹ் ஆணையிட்டிருக்கின்ற புனித கஃபா என்னும் ஆலயத்தைத் தவிர்த்து வேறு யாருக்கும் செய்யக்கூடாத, செய்ய முடியாத வணக்கமாகும். அந்த வணக்கத்தைத் தனது ஆசிரமத்தைச் சுற்றி பாதிரிகள் செய்கின்றார்கள்.

அதைப் பார்த்து சம்ஆனும் பெருமை அடிக்கின்றார். அவர் தான் யூதர். அவர் அப்படித் தான் இருப்பார். கஸ்ஸாலி போற்றுகின்ற இப்ராஹீம் பின் அத்ஹமுக்கு இது தெரியாதா? தெரியும். அவரிடம் ஆன்மீக போதை இந்தச் சிந்தனையை விட்டும் மறக்கடித்து விட்டது என்று தான் நாம் விளங்க முடிகின்றது.

கடலை வியாபாரமா? கல்வி விளக்கமா?

ஒரு கொண்டைக் கடலை அளவுக்குத் தான் தினசரி உணவாம்! இதை உண்டுக் கொண்டு தான் பாதிரி உயிர் வாழ்கிறதாம். கேப்பையில் நெய் வடிகிறதாம், கேட்பவர் நம்ப வேண்டுமாம்! என்ன கதை இது?  ஆன்மீகம் என்ற பெயரில் அளப்பதற்கும் அடித்து விடுவதற்கும் ஓர் அளவு வேண்டாமா? இதில் என்ன ஞானம் படித்து விட்டார்?

முதல் போடாமல் கொண்டைக் கடலை வாங்கி விட்டு அதை விற்றிருக்கின்றார். இதற்குப் பெயர் விளக்கம், ஞானம், ஆன்மீகம் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?  இந்த நூலைப் பாடமாகப் படித்து விட்டு வருகின்ற மவ்லவிகளின் இலட்சணம் எப்படியிருக்கும்? இந்நூலுக்குப் பெயர் இஹ்யாஉ உலூமித்தீன் அதாவது மார்க்கக் கல்விகளுக்கு  உயிரூட்டல்! இதை எழுதியவருக்குப் பட்டம் கல்விக் கடல்!

இதைப் படித்து விட்டு மக்களுக்கு ஜும்ஆவில் போதித்தால் என்ன நடக்கும்? கேட்கும் மக்கள் ஜடமாக ஆகி விடுவார்கள். அதனால் இந்த ஆலிம்கள் நடத்துகின்ற ஜும்ஆ உரையில் குறட்டை சப்தம் கேட்கின்றது. முதலில் ஆலிம்களை விழிக்கச் செய்வோம். அதற்கு இஹ்யாவின் அபத்தங்களை அடையாளங்காட்டுவோம்.

————————————————————————————————————————————————–

துறக்க வேண்டிய தீய பண்புகள்

M. முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம்

அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று, அவனிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதாகும். மற்றொன்று, அவன் தடுத்துள்ள தீய பண்புகளை விட்டும் விலகியிருப்பதாகும். இந்த வகையில் படைத்தவனிடம் கெட்ட பெயரைப் ஏற்படுத்தும் மோசமான குணங்களைக் குறித்து இப்போது காண்போம்.

படைத்தவனை மறுத்தல்

இந்தப் பிரபஞ்சம் மிகவும் பிரமாண்டமானது; நேர்த்தியான வேலைப்பாடுகள் கொண்டது; எண்ணற்ற படைப்பினங்களால் நிறைந்தது. இதன் உரிமையாளன், அல்லாஹ் ஒருவனே. அவனை அறிந்து கொள்வதற்குரிய அத்தாட்சிகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை அலட்சியம் செய்துவிட்டு, அந்த அதிபதியை மறுத்து வாழ்வது மிகப்பெரும் பாவமாகும்.

(ஏக இறைவனை) மறுப்போர் தாம், உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவர்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(திருக்குர் ஆன் 8:55)

இறைவனுக்கு இணை கற்பித்தல்

ஒட்டுமொத்த அகிலத்தையும் ஆளும் அல்லாஹ், அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை. அவனது அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது. ஆகவே, அவனுக்கு மட்டுமே முழுமையாக அடிபணிந்து வணங்க வேண்டும். அவனிடமே ஆதரவு தேட வேண்டும். இதற்கு மாற்றமாக அற்பமான படைப்பினங்கள் மீது நம்பிக்கையை அடகு வைப்பதும் அவர்களிடம் உதவி தேடுவதும் மோசமான பண்பாகும்.

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர் ஆன் 98:6)

கப்ரைக் கட்டி வழிபடுதல்

மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகமே இறைவன் முன்னால் ஒரு கொசுவின் இறக்கையை விடக் கீழானாது, அற்பமானது. இதை மறந்ததின் விளைவாக, படைத்தவனுக்கு நிகராக மனிதர்களைக் கருதும் படுமோசமான குணம் பரவிக் கிடக்கிறது.

நல்ல முறையில் வாழ்ந்து மரணித்துப் போன மக்களை நல்லடியார்கள் என்று சொல்லிக் கொண்டு வரம்பு மீறுவது கூடாது. வல்ல ரஹ்மானுக்கு மட்டுமே உரித்தான பண்புகளை, மண்ணோடு மக்கிப்போன மக்களுக்கும் இருப்பதாக நினைப்பது கடும் குற்றம் ஆகும்.

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புஹாரி (427), முஸ்லிம் (918)

மனோ இச்சைக்குப் பணிதல்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வஹீயின் அடிப்படையில் நமக்கு மார்க்கத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். நமது வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளை விளக்கி இருக்கிறார்கள். அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் அழகிய முறையில் வாழ வேண்டும். இதற்கு மாறாக, எதையும் செய்யலாம், எப்படியும் இருக்கலாம் என்று மனம் போன போக்கில் வீழ்ந்துவிடக் கூடாது.

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா? அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.

(திருக்குர் ஆன் 25:43-44)

திருமறையைப் புறக்கணித்தல்

இறுதி வேதமாகத் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது. அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும். எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் அற்புதமான வேதம். அதன் போதனைகளைக் கண்டுகொள்ளாமல் அழிச்சாட்டியம் செய்வது மாபெரும் தவறாகும்.

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர் ஆன் 98:6)

எனக்குப் பின் என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1936)

பகுத்தறிவை இழத்தல்

மனித இனத்தின் மகத்துவமே பகுத்தறிவு தான். இந்த ஆற்றலை நாம் வீணடித்து விடக் கூடாது. இதனை சீரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனமான சிந்தனைகளிலும் செயல்களிலும் பலர் மூழ்கிக் கிடக்கிறார்கள். இத்தன்மை முஃமின்களிடம் இருக்கவே கூடாது.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(திருக்குர்ஆன் 7:179)

சுயநலத்துக்காக வேடம்போடுதல்

தமது சுயநலத்திற்காக ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம் வேடம் போடும் கயவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, தங்களது ஆதாயத்திற்காக ஒருவரிடம் முகத்திற்கு நேராக இனிமையாகப் பேசுவதும், திரைமறைவில் அதே நபரைப் பற்றி இழிவாகப் பேசுவதும் நயவஞ்சகத்தின் அடையாளம் ஆகும். இதுபோன்ற மட்டமான பண்பு முஃமின்களிடம் இருக்கவே கூடாது.

‘‘மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம்  செல்லும்போது  ஒரு முகத்துடனும், அவர்களிடம்  செல்லும்போது  இன்னொரு முகத்துடனும் செல்கிறான்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (7179)

மக்களிடம் சச்சரவு செய்தல்

மனிதர்கள் மத்தியில் ஆயிரம் ஆயிரம் வித்தியாசங்கள் ஒளிந்து இருக்கின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கு பிடித்த மாதிரியே இருக்க வேண்டும் என்று நினைக்கவும் கூடாது. அதற்காக அவர்களை நிர்பந்திக்கவும் கூடாது. இதைப் புரிந்து கொள்ளாத நபர்கள், எதற்கெடுத்தாலும் மற்றவர்களிடம் வர்த்தையால் வாதம் செய்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலும் சச்சரவு செய்கிறார்கள். இது குறித்த எச்சரிக்கையைப் பாருங்கள்.

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான்  என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (7188), (2457)

அருவருப்பாகப் பேசுதல்:

நம்முடைய பேச்சுகள் எப்போதும் மரியாதைக்குரிய வகையில் இருக்க வேண்டும். சிலர், அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அசிங்கமான ஆபாசமான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசும் ஆட்கள் இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்’’ என்று (அவரைப் பற்றிச்) சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?’’ என்று கேட்டேன்.

(அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சென்னேன்)’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (6054)

அந்தரங்கத்தைச் சொல்லுதல்

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடை போன்றவர்கள் என்று திருமறை குறிப்பிடுகிறது. ஆடையானது அணிந்திருப்பவரின் மானத்தை, குறையை மறைப்பது போன்று கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் நடந்து கொள்ள வேண்டும்; இரகசியங்களைப் பேண வேண்டும். வாழ்க்கைத் துணையின் அந்தரங்கமான செய்திகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தி விடக் கூடாது. ஏனெனில், இப்பண்பை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது.

‘‘எவன் (தன்னுடைய மனைவியிடம்) சென்று, அவளும் அவனிடம் வந்து (உறவு கொண்டு) பின்னர் அவளுடைய (அந்தரங்க) ரகசியத்தை வெளிப்படுத்துகிறானோ, அவன்தான் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களில் மோசமானவனாக இருப்பான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: முஸ்லிம் (2517)

இரக்கம் இல்லாதவர்கள்

அனைத்து உயிர்களிடமும் இரக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. அதிலும் குறிப்பாக, மக்களை வழிநடத்துபவர்கள், நிர்வாகம் செய்பவர்கள், கண்காணிப்பவர்கள் தங்களுக்குக் கீழிருக்கும் பொதுமக்களிடம் கருணை உள்ளம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும்.

பொதுவாக, மனிதநேயத்தைத் தொலைத்து விட்டுக் கல்நெஞ்சத்தோடு இருக்கும் நபர்களாக நாம் ஒருபோதும் இருக்க கூடாது. இதற்குரிய காரணத்தைப் பின்வரும் செய்தி விளக்குகிறது.

ஹசன் பின் அபில்ஹசன் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல்நெஞ்சக்காரர் தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

அதற்கு உபைதுல்லாஹ், “(நீர் போய்) உட்காரும். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் மட்டமான ஒருவர்தாம்’’ என்று கூறினார். அதற்கு ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள், “(நபியின் தோழர்களான) அவர்களில் மட்டமானவர்களும் இருந்தார்களா? அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களிலும் மற்றவர்களிலும் தாம் மட்டமானவர்கள் தோன்றினர்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3736)

ஒழுக்கக் கேடுகளில் வீழ்தல்

இன்றைய காலத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் மிகவும் சாதாரணமாகி விட்டன. பல ஒழுங்கீனமான செயல்கள் நாகரீத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், நாளடைவில் நல்லவர்கள் குறைந்து போய்விடுவார்கள். இழிவான செயல்களைக் கொண்டவர்களே நிறைந்து இருப்பார்கள். படைத்தவன் பார்வையில் தீயவர்களான இத்தகைய மக்களே உலகம் அழிக்கப்படும் போது நிறைந்து இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகை விட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான வாற்கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம் பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிர்தாஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புஹாரி (6434)

(உலக அழிவின் இறுதிக் காலத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.)

பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும் குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

நூல்: முஸ்லிம் (5635)

(உலக அழிவின் காலத்தைப் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:)

அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாக இருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.

இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சி இருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீது தான் உலக முடிவு நாள் ஏற்படும்.

அறிவிப்பவர்:  நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம் (5629)

நமது சிந்தனைகள், நடத்தைகள் தூயதாக இருந்தால் மட்டும் போதாது. தீமையான எண்ணங்களை, செயல்களை விட்டும் நாம் விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் அவனிடம் மோசமானவர்கள் எனும் இழிச் சொல்லை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆகவே, மேற்கண்ட செய்திகளை மனதில் கொண்டு நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் சீர்படுத்திக் கொள்வோமாக! இதன்படி சிறந்த முறையில் வாழ்ந்து ஈருலகிலும் உயர்ந்த நிலையை அடைவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

————————————————————————————————————————————————–

 கதை வடிவில் மார்க்கம் அறிவோம்

சபீர் அலீ

“கண்டதைப் படி பண்டிதனாவாய்” என்பது பன்னெடுங்காலமாகத் தமிழில் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளில் ஒன்றாகும்.

மார்க்கத்துக்கு முரணில்லாத நல்லவற்றில் இதை வாசிப்பேன், அதை வாசிக்க மாட்டேன் என்று எந்த ஒதுக்குதலும் இல்லாமல் வாசிக்கின்றவன் நிச்சயம் கற்றுத்தேர்ந்த கல்விமானாக உருவாவான் என்பது நிதர்சனமான உண்மையும் கூட.

ஆனால், இன்றைய தலைமுறையினரின் நவீன வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது.

தான் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை ஒருவன் வாசிக்கின்ற போது கூட கண்கள் கனமாக, வெறுப்புடன் புத்தகத்தைத் தூக்கியெறிந்து, தூக்கத்தைத் துணையாக்கிக் கொள்கிறான்.

காரணம், வாசிப்பில் ஆர்வமில்லாததும், வாசித்து பழக்கமில்லாததுமேயாகும்.

இத்தகைய நிலை பொது விஷயத்தைப் படித்தறிய முற்படும்போது மட்டுமல்ல. தான் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் மார்க்கம் பற்றிய விஷயங்களைப் படிக்கின்ற போதும்தான்.

மார்ககத்தைப் படிக்க வேண்டும், கற்க வேண்டும், மார்க்க ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் முதற்கண் அறிவுரையாக இருக்கிறது.

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5231

இவ்வளவு ஏன்? நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைப் புறத்திலிருந்து வந்த முதற்கட்டளையும் இதுவே!

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!

அல்குர்ஆன் 96:1

இவ்வாறிருப்பினும், வாசிப்புப் பழக்கம் இல்லாததால் மார்க்கச் சட்டங்களை அறிவதில் மிகப்பெரும் தேக்கம் மக்களிடத்தில் நிலவுகிறது.

மார்க்க சட்டதிட்டங்களை சொல்லித் தருகின்ற ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டாலும், அதைப் படிக்க மனம் எத்தனிக்காததின் காரணத்தினால் அதுவெல்லாம் வெறும் மேஜைக்குப் பாரமாகவே இருக்கிறது.

பொதுவாக எழுத்தாக்கங்கள் இரண்டு தலையாய வடிவங்களில் தான் எழுதப்படுகிறது.

ஒன்று செய்தி வடிவம். மற்றொன்று கதை வடிவம்.

ஒரு தகவல் வெறும் செய்தி வடிவில் சொல்லப்படுகின்ற போது ஒரு கட்டத்திற்கு மேல் அதை வாசிக்க ஆர்வம் தூண்டுவதில்லை. மனம் சலிப்படைந்துவிடுகிறது.

அதே தகவலை கதைக் களத்துடன் இணைத்து ஒரு நிகழ்வாகச் சொல்லும் பொழுது அதைப் படிக்க அவா ஆர்ப்பரிக்கின்றது. அதனால்தான் நாவல் போன்ற கதைக் களத்துடன் கூடிய புத்தகங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

ஏன் இந்த வேறுபாடு?

நாம் சிறு பிராயத்திலிருந்து இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

குழந்தைப் பருவத்தில் நம்மை அரவணைத்து வளர்த்தெடுக்கும் பாட்டிமார்களும், அம்மாக்களும் சொல்லும் கதைகளில் துவங்கி நாம் பள்ளியில் படிக்கும் போது மொழி ரீதியான பாடப் புத்தகங்களில் அதிகமாக இடம்பெறும் பாடங்கள் வரை எல்லாமே கதை வடிவம்தான். தத்துவ வடிவமோ, செய்தி வடிவமோ குறைவு.

இன்னும், வீட்டுக்கு வெளியிலேயே அதிகம் விளையாடித் திரியும் குழந்தைக்குத் தாய் பயமுறுத்துவதற்காகச் சொல்லும் வார்த்தை என்னவோ ‘வெளியில் போகாதே! பூச்சாண்டி பிடித்துக் கொள்வான்’ என்பதுதான்.

ஆனால், அதைச் சொல்லும் விதம் என்ன?

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம் எனத் துவங்கி, ராஜாவுடைய மகன் வெளியிலேயே விளையாடிட்டு இருந்தானாம், என்று தொடர்ந்து சென்று அந்தப் பையனை பூச்சாண்டி பிடித்துட்டு போய்ட்டானாம்! அதனால நீ இனிமேல் வெளியில விளையாடாதே என முடியும் கதை வடிவம் தானே!

அறிவுரையாக எத்தனை முறை சொன்னாலும் கேட்காத குழந்தை கதையாக நிகழ்வோடு சேர்த்துச் சொல்லும் போது அதை அவன் மனம் ஏற்றுக்கொள்கிறது.

இந்தப் பழக்கம் தான் நம் வாழ்நாளில் தொடர்கிறது. இதில் எந்தத்  தவறும் இல்லை. செய்தி சென்றடைய வேண்டுமே தவிர அது சொல்லப்படும் விதம் கணக்கில்லை.

அதனால் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பல்வேறு இடங்களில் இந்த விதத்தில் நமக்குப் பாடம் நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்.

நாம் செலவு செய்கின்ற பொருளாதாரத்தின் நன்மை மறுமையில் நமக்குப் பயனளிக்கும் விதமாக அமைய வேண்டும். சில தீய காரியங்களைச் செய்து அந்த நன்மையை நாம் அழித்துக் கொள்ளக்கூடாது என்ற செய்தியை இறைவன் நமக்கு எடுத்துரைக்கிறான்.

ஆனால், மேற்படி தகவலை செய்தி வடிவமாக எடுத்துச் சொல்லவில்லை. கதை வடிவமாக கதாபாத்திரங்களோடு இணைத்து ஒப்பிட்டு இறைவன் பின்வரும் வசனத்தில் நமக்குக் கூறுகிறான்.

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:266

மேலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் விரைவாக விளங்கிக்கொள்வதற்காக தன் போதனையை ஒரு கதைக்களத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் உமர் (ரலி) வருகிறார்கள். அப்போது நபியவர்களோ ஒரு பாயின் மீது உறங்கிக் கொண்டிருக்க அப்பாயின் சுவடுகள் அவர்களின் முதுகில் பதிந்துள்ளது. இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை விட மென்மையான விரிப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாதா?’’ என கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன (தொடர்பு) இருக்கிறது? ஒரு பயணி உஷ்ணமிகுந்த நாளில் பயணம் செய்கிறான். அப்போது, அவன் பகலின் சிறிது நேரம் ஒரு மரத்தின் கீழ் நிழல் பெற்று ராஹத் பெறுகிறான். பிறகு, அம்மரத்தை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறான். இதுபோன்று தான் எனக்கும் இவ்வுலகுக்கும் மத்தியில் உள்ள தொடர்பு இருக்கிறது’’ என்று கூறினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: அஹ்மது 2744

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களால் சொல்லப்படும் தகவல், தனக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இவ்வுலகம் அற்பமானதே என்பது தான். ஆனால் அதை நபி (ஸல்) சொன்ன விதமோ கதா பாத்திரத்தோடு இணைந்த கதை வடிவம் தானே!

இன்னும், இதுபோன்று ஏராளமான செய்திகள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன.

எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும், ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’’ என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3535

மேற்படி ஹதீஸில் நபியவர்களால் சொல்லப்படும் தகவல், நபிமார்களில் இறுதியானவன் நானே என்பது தான். ஆனால் அதை, வீட்டை அழகாகக் கட்டி ஒரு சிறு இடத்தை மட்டும் விட்டுவிட்டுப் பிறகு பூர்த்திசெய்துவிட்ட ஒரு மனிதனின் கதைக் களத்தை ஒப்பீடாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

அடுத்து, இறையடியார்கள் பாவமன்னிப்புக் கோருகையில் இறைவனது சந்தோஷம் எத்தகையது என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கும் விதத்தைப் பாருங்கள்!

ஒரு மனிதர் உணவோ நீரோ கிடைக்காத வறண்ட பாலைவனத்தில் (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தபோது, அவரது ஒட்டகம் தனது கடிவாளத்தை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அந்த மனிதரின் உணவும் பானமும் அதன் மீதே இருந்தன. அந்த மனிதர் அதைத் தேடிப் புறப்பட்டார். அதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். (ஓடிப்போன) அந்த ஒட்டகம் ஒரு மரத்தைக் கடந்தபோது அதன் கடிவாளம் அந்த மரத்தின் வேரில் மாட்டிக்கொண்டது. அதில் சிக்கிக்கொண்டு இருந்தபோது அந்த மனிதர் அதைக் கண்டார். அப்போது அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ என்று நபி(ஸல்) அவர்கள்கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், “மிகவும் அதிகமாக (மகிழ்ச்சி அடைந்திருப்பார்), அல்லாஹ்வின் தூதரே!’’ என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தனது ஒட்டகத்தைக் கண்ட அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியை விடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்’’ என்று சொன்னார்கள்.

இதை பராஉ பின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5299

மனிதன் பாவமன்னிப்புக் கோரும்போது இறைவன் அளவற்ற மகிழ்ச்சியுறுகிறான் என்பது மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் தகவல். ஆனால், அதை மக்கள் அதிகம் உணர்ந்து விளங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் சொன்ன விதம் கதை வடிவம் தான்.

அடுத்து, தொழுகையினால் ஏற்படும் நன்மையைப் பற்றி விளக்க நபி (ஸல்) அவர்கள் கையாண்ட விதத்தைப் பாருங்கள்!

ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அவரோ தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். இவ்வாறு அவர் குளிக்கையில் அவரது மேனியில் அழுக்குகள் ஏதேனும் எஞசியிருக்குமா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு மக்கள், அவரது மேனியில் எந்த அழுக்கும் எஞ்சியிராது என்று பதிலளித்தார்கள். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்’’ என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 528

தொழுகை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது என்பதுதான் இந்தச் செய்தியில் நபியவர்களால் எடுத்துரைக்கப்படும் தகவல். இத்தகவலை நபி (ஸல்) அவர்கள் பல்வேறு இடங்களில் நமக்குச் சொல்லியுள்ளார்கள்.

குறிப்பிட்ட மேற்படி ஹதீஸில் சொன்ன விதம் என்ன?

மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆற்றில் ஐவேளை நீராடும் ஒருவரின் கதைக்களத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு பல்வேறு இடங்களில் அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் மக்கள் எளிமையாக விளங்கிக் கொள்வதற்காகப் பல்வேறு கதைக்களங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

மார்க்கத்தை மக்களுக்கு இப்படியும் எடுத்துச் சொல்லலாம் என்பதற்கு இவைகளெல்லாம் சான்றுகளாக இருக்கின்றன.

மக்கள் மார்க்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, எவ்வழிமுறையைக் கையாண்டால் மக்களுக்கு மார்க்கம் எளிமைப்படுத்தப்படுமோ  அவைகளை ஆராய்ந்து மார்க்கத்தை எடுத்துரைக்கலாம்.

மேற்படி அனுமதியின் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற இதழில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், சட்டதிட்டங்களையும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் கதைக்களங்களாகவும், உரையாடல்களாகவும் பார்க்கலாம்.