ஏகத்துவம் – ஆகஸ்ட் 2013

தலையங்கம்

தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளானிய புரட்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கால் பதித்து, கால் நூற்றாண்டு தாண்டவிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். அது, தான் கடந்து வந்த பாதையில் எண்ணிப் பார்க்கும்படி பல தடங்களையும், தடயங்களையும் பதித்து வந்திருக்கின்றது. அந்தத் தடங்களில், தடயங்களில் ஒன்று ரமளானில் ஏற்படுத்திய புரட்சியாகும்.

தராவீஹ் என்று அழைக்கும் இரவுத் தொழுகை 23 ரக்அத்துகள் என்பதை மாற்றி, நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் 8+3 அல்லது 8+5 என அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் அமலும்படுத்தியது.

இரவுத் தொழுகையின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களே என்று வருத்தப்பட்டவர்கள், “எட்டு ரக்அத்தை இப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டி, நிதானமாகத் தொழ முடியுமா?’ என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் குர்ஆன் ஓதி 20 ரக்அத்துகளை அரை மணி நேரத்திற்குள்ளாக முடித்து விடும் ஆலிம்களுக்கு மத்தியில் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதி, எட்டு ரக்அத்தை மணிக்கணக்கில் தொழுவிக்கும் நேர்த்தியின் காரணமாக நாளுக்கு நாள் இந்தத் தொழுகைகளில் பங்கேற்போர் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றது.

லைலத்துல் கத்ர் என்றால் 27 அன்று மட்டும் தான் என்பது மக்களிடம் ஆழப் பதிந்த நம்பிக்கை! இதற்குத் தூபம் போடும் விதமாக ஆலிம்கள் உரையும் ஆற்றுவார்கள். இன்று அந்த நிலை மாறி, மலையேறி, நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் உயிராக்கப்பட்டுள்ளன.

தவ்ஹீத் ஜமாஅத் வருவதற்கு முன்னால் ரமளான் மாத ஸஹர் நேர நிகழ்ச்சிகளில் ஈ.எம். ஹனீபா, ஷேக் தாவூத் போன்றோரின் பாட்டுக் கச்சேரிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். ஸஹர் நேரம் என்பது உணவு நேரமாக இருந்தாலும் அது பாக்கியம் பொருந்திய நேரமாகும். அந்த நேரத்தில் இந்தப் பாட்டுக் கச்சேரிகள் நமது பாவங்களைப் பெருக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்கப் பிரச்சாரம் “இஸ்லாம் ஓர் அறிமுகம்’ என்ற பெயரில் 1996ல் விஜய் டிவியில் அறிமுகமாகியிருந்தது. இதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் “மானுட வசந்தம்’ நிகழ்ச்சி டிவிக்கு வந்தது.

இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற பெயரில் அறிமுகமான இந்த நிகழ்ச்சி தான் பின்னாளில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கமாக ஒளிபரப்பானது. பக்கா தர்ஹா வழிபாட்டுக்காரர்கள் கூட சரியான தவ்ஹீது பாதைக்கு வருவதற்கு இந்நிகழ்ச்சி காரணமானது.

பவளக்காரத் தெருவில் இருந்த ஜான் டரஸ்ட் அலுவலகத்தில் ரமளான் மாத இரவு நேர குர்ஆன் விளக்கவுரை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் வட மரைக்காயர் தெருவில் உள்ள தமுமுக அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இரவுத் தொழுகை முடிந்ததும் திருக்குர்ஆனின் 30வது ஜுஸ்வில் உள்ள அத்தியாயங்களுக்கு விளக்கவுரை மக்களிடத்தில் பலத்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. 1996ல் துவங்கிய அந்த நிகழ்ச்சி இன்று வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அவ்வளவு தான். தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் அலை அலையாகப் பாய ஆரம்பித்தன. கொள்கை ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத்தை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பவர்களும் ஸஹர் நேர நிகழ்ச்சியில் களமிறங்கினர். எத்தனை பேர் களமிறங்கினாலும் எத்தனை பேர் காட்சியளித்தாலும் மக்களிடம் அதிகமான எதிர்பார்ப்பையும், அமோகமான வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சி தவ்ஹீத் ஜமாஅத்தின் ஸஹர் நேர நிகழ்ச்சி மட்டும் தான்.

இந்த வகையில் தமிழகத்தில் டிவி நிகழ்ச்சிகளில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்ததும் தவ்ஹீத் ஜமாஅத் தான், அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத் தோன்றும் வரை, ஃபித்ரு ஸதகா என்ற பெருநாள் தர்மம், பள்ளிவாசலில் பணி புரிகின்ற இமாம்கள், முஅத்தின்கள், கப்ர் குழி தோண்டுகின்ற பணியாளர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டு வந்தது. இது அவர்களுக்குப் பெருநாளில் கிடைக்கின்ற வசூல் வேட்டையானது.

ஒட்டுமொத்த ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டிய இந்த தர்மம், ஒட்டுமொத்தமாக நம்மை நோக்கி மடைமாற்றம் செய்யப்படுகின்றதே! இது நியாயம் தானா? என்பதைக் கூடச் சிந்தித்துப் பார்க்காமல் ஆலிம்கள் வாய் பொத்தியிருந்தனர்.

ஃபித்ரு ஸதகா என்றால் என்ன என்பதை மக்களுக்குப் புரிய வைத்து, தமிழகம் முழுவதும் தனது ராணுவ வீரர்களை மிஞ்சுகின்ற போராளிகளைக் கொண்டு ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, அதை ஏழை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் அரும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் செய்யத் துவங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சில லட்சங்களில் துவங்கி, இன்று சமுதாயத்தில் உள்ள கடைக்கோடி ஏழைகளுக்கும் போய்ச் சேர்கின்ற அளவில் பல கோடிகளாகப் பெருகி, உணவுப் பண்டமாக, இறைச்சியாக மக்களிடம் சீரான முறையில் வினியோகித்து வருகின்றது.

அத்துடன் நில்லாமல் அதன் வரவு செலவுக் கணக்குகளை தனது உணர்வு வார இதழில் வெளியிட்டு மக்களின் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமானது.

இதர இயக்கங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. காரணம், ஃபித்ரா வரவையும் இதயமில்லாமல் தங்கள் இயக்கப் பணிக்காகப் பயன்படுத்திய இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹபுகளின் ஆதிக்கம் உள்ள ஊர்களில் அறவே பெண்களுக்குப் பெருநாள் தொழுகை இல்லை. இதற்குக் காரணம், பெண்களையும் கருத்தில் கொண்டு மார்க்கம் ஏற்பாடு செய்த திடல் தொழுகை அவர்களிடம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் தனது கிளை விரித்த ஊரில் எல்லாம் திடல் தொழுகையை அறிமுகப்படுத்தி, அந்தத் திடலை நோக்கி ஆண்கள் பெண்கள் அனைவரும் அலைகடலாய் படையெடுத்து வருகின்றனர். அங்கு அவர்கள் அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது போன்று அவனைப் பெருமைப்படுத்தி மகிழ்கின்றனர்.

(குர்ஆனை வழங்கி) உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் (பெருநாளில்) பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)

அல்குர்ஆன் 2:185

அடுத்தடுத்த ஊர்களில் வெவ்வேறு நாட்கள் நோன்பு நோற்கப்பட்டன. இங்கொரு பெருநாள், அங்கொரு பெருநாள் என்று தமிழகமெங்கும் இரு பெருநாட்கள் கொண்டாடப்பட்டன. இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படைக் காரணம் இலங்கைப் பிறை தான். அத்துடன் ஒரு தெளிவில்லாமல், ஒரு தடவை கேரளா பிறை, மறு தடவை கர்நாடகா பிறை என்று ஒரு நிலைபாடு இல்லாமல் தமிழகம் குழப்பத்தில் தத்தளித்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டிலும் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு. ஆனால் அது ஒருபோதும் உலகப் பிறை, கணிப்புப் பிறை போன்றவற்றைச் சரிகண்டதில்லை.

பிறை விஷயத்தில் தமிழக அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட முடியும் என்ற சிந்தனை ஓட்டத்தின் பின்னணியாக இருந்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

இவை தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளான் மாத சாதனைகளும் புரட்சியும் ஆகும். ரமளானைத் தாண்டியும் அதன் சாதனைகளும் புரட்சியும் விரிந்து கொண்டு செல்கின்றது. இதற்கெல்லாம் காரணம் அது கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கை தான். அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; நபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற அந்தக் கொள்கை தான்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 14:24, 25

அல்லாஹ் சொல்வது போன்று இது ஒரு மரமாகும். இன்ஷா அல்லாஹ் இந்த மரத்தின் நிழலில் ஒட்டுமொத்த மக்களும் வரவிருக்கின்றார்கள். அதற்கு இந்த ரமளான் புரட்சி கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

—————————————————————————————————————————————————————-

பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்

எம். ஷம்சுல்லுஹா

ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மீது ஜாக் இயக்கம் ஒரு பயங்கர குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்றது. உண்மையில் ஜாக் தான் ஹதீஸை மட்டுமின்றி குர்ஆனையும் மறுக்கும் கூட்டம் என்பதைப் பல தடவை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து வருகின்றோம்.

ஸஹர் பாங்கு இக்காலத்திற்கு ஒத்து வராது என்று ஹதீஸை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்று பெருநாள் தொழுகையைத் திடலில் தொழும் நபிவழியையும் மறுக்கின்றார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளுடன் ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழிகேட்டைப் போதிக்கும் இந்தக் கூட்டம் தான் நம்மைப் பார்த்து ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று விமர்சனம் செய்கின்றனர்.

சூனியம் தொடர்பாக புகாரி மற்றும் பல நூல்களில் இடம் பெறுகின்ற ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் 17:47, 25:8 உள்ளிட்ட வசனங்களுக்கு நேர்முரணமாக அமைந்துள்ளதைக் காரணம் காட்டி, அந்த ஹதீஸ்களில் நாம் அறியாத அறிவிப்பாளர் கோளாறு இருக்கின்றது என்று சொல்லி அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சொல்கிறோம்.

இவ்வாறு நாம் சொல்லும் போது அதில் நமக்கு எந்த ஒரு சுயவிருப்பமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தும் நம்மை ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று திட்டமிட்டுக் கூறிவருகின்றனர். அதே சமயம் சூனியம் தொடர்பாக நாம் எழுப்புகின்ற கேள்விகளுக்கு இவர்களால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. சூனியம் போன்று வேறு சில ஹதீஸ்களும் உள்ளன. அந்தப் பட்டியலில் பல்லி தொடர்பான ஹதீசும் ஒன்றாகும்.

அந்த ஹதீஸ் இது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை- அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்ததுஎன்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி), நூல்: புகாரி 3359

இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியிருந்தோம். அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

புரட்சி செய்யும் பல்லி

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். (அல்குர்ஆன் 3:83)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.  (அல்குர்ஆன் 13:15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான். (அல்குர்ஆன் 22:18)

உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு எதிராகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?

முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஜோடி செய்த பாவம் மனித குலம் அனைவர் மீதும் இருக்கின்றது; அதைக் கழுவுவதற்காக இயேசு (ஈஸா நபி) சிலுவை ஏந்தினார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது.

அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:164

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? (அல்குர்ஆன் 53:36, 37, 38, 39)

ஆனால் இந்தப் பல்லி சம்பவம் நமக்குச் சொல்லித் தருவது, கிறித்தவர்களின் நம்பிக்கையான முதல் பாவத்தைத் தான். இப்ராஹீம் நபிக்கு எதிராகத் தீக்குண்டத்தை பல்லி ஊதியது என்றால் சம்பந்தப்பட்ட அந்தப் பல்லியை மட்டும் கொல்ல வேண்டும் என்று சொன்னால் அது நியாயம் எனலாம். ஆனால் இந்த ஹதீஸ் கியாமத் நாள் வரை உள்ள ஒவ்வொரு பல்லியையும் கொல்ல வேண்டும் என்று கூறி, ஒரு பல்லி செய்த பாவத்திற்காக மற்ற பல்லிகளைத் தலைமுறை தலைமுறையாகப் பலியாக்குகின்றது. இது மாபெரும் அநியாயமும் அநீதியுமாகும். அல்லாஹ் இந்த அநியாயத்தை அறவே ஆதரிக்கவில்லை.

இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

அல்குர்ஆன் 40:17

இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 36:54

பல்லி தொடர்பான இந்தக் கேள்விகளை நாம் எழுப்பி சில நாட்கள் அல்ல, பல வாரங்களோ மாதங்களோ அல்ல. வருடங்கள் ஓடிவிட்டன. இதுவரை பதிலளிக்காமல் மவுனமாகி, மரணமாகிக் கிடந்த ஜாக் அண்மையில் ஏப்ரல் 2013 அல்ஜன்னத் இதழில், “நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?’ என்ற தலைப்பில் பதிலளித்திருக்கின்றார்கள்.

இந்தப் பதிலுக்காக இத்தனை வருடங்கள் ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போல் தெரிகின்றது. இப்படி யோசித்து சரியான பதிலை எழுதியிருக்கின்றார்களா? என்றால் அதுவும் இல்லை. பல்லியைப் பகுத்தறிவாளியாக்கி விட்டு இவர்கள் பைத்தியமாகியிருக்கின்றார்கள். பல்லி சம்பந்தமான இந்தப் பதில் அவர்களது இதழின் ஏப்ரல், மே, ஜூன் வரை மொத்தம் மூன்று இதழ்களில் தொடர்கின்றது.

இந்தப் பதில்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவது இவர்களுக்குப் பிடித்த பைத்தியத்தை பக்காவாக உறுதி செய்கின்றது. முதல் இதழில் இவர்கள் அளித்த பதிலுக்கு முரணாக அடுத்த இதழில் இவர்களே அந்தர் பல்டி அடித்திருப்பது, அல்லாஹ் சொல்வது போன்று உண்மைக்கு எதிராக மோதுபவர்களின் மண்டைக் கபாலங்கள் கலங்கிப் போய்விடுகின்றன என்பதையே காட்டுகின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் 21:18

இவர்களின் ஏப்ரல் இதழில் வெளியான அபத்தத்திற்கு உடனடியாக நாம் பதில் எழுதி மே மாத ஏகத்துவ இதழில் வெளியிடுவதாக இருந்தது.

அண்மைக் காலமாக மத்ஹபு, தரீக்காவாதிகள் தங்கள் பத்திரிகைகளில் வெளியிடுகின்ற, மார்க்கத்திற்கு முரணான விஷயங்களையும், கண்மூடித்தனமாக நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எழுதும் பொய்யான ஹதீஸ்களையும் அடையாளம் காட்டும் பணியில் ஏகத்துவம் இறங்கியிருக்கின்றது. எனவே தான் ஜாக்கின் இந்தப் பைத்தியக்கார வாதங்களுக்குப் பக்கங்களை ஒதுக்க முடியாமல் போனது.

அடுத்த இதழிலும் ஜாக்கின் பால்குடிச் சட்டத்திற்குரிய மறுப்புக் கட்டுரை வெளியானது. அதனால் பல்லியை அடிக்க முடியாமல் போனது. இவ்வாறு நாம் வெளியிடத் தாமதமானது நமக்கு நன்மையாக முடிந்தது. ஏனெனில் இதற்கு இடையில் மே மற்றும் ஜூன் மாத அல்ஜன்னத்தில் ஜாக் தனக்குத் தானே முரண்பட்டது, அந்தர் பல்டி அடித்துக் கொண்டது போன்றவற்றையும் சேர்த்து நம்மால் அடையாளம் காட்ட முடிந்தது.

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது என்பது தான் ஜாக்கின் நிலைப்பாடு. அதன்படி “நெருப்புக் குண்டத்தை பல்லி ஊதியது உண்மை’ என்றோ “நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதும்’ என்றோ தான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.

தராவீஹ் 20 ரக்அத்துக்கள் என்ற நிலைபாடு கொண்ட சுன்னத் வல்ஜமாஅத்தினர், அதை விளக்குவதற்காக ஒரு நூலை வெளியிட்டனர். கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய அந்த நூலுக்கு, “தராவீஹ் 8 ரக்அத்துக்களா?’ என்று தான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் “தராவீஹ் 20 ரக்அத்துக்களா?’ என்று தலைப்பிட்டிருந்தனர். இது அவர்களது கொள்கைத் தடுமாற்றத்தையே காட்டியது.

அதேபோன்று தங்கள் நிலைபாட்டில் உறுதியற்ற ஒரு தன்மையைத் தான் ஜாக்கின் இந்தத் தலைப்பும் காட்டுகின்றது. “நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?’ என்று தலைப்பிலேயே தடுமாறியிருக்கின்றது. இப்போது அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு வருவோம்.

“ஒரு பல்லி எப்படி அவ்வளவு பெரிய நெருப்புக் குண்டத்தை ஊதும்? இது எப்படி முடியும்? எப்படி சாத்தியம்? என்பது தான் இவர்களது பிரதான வாதமாகும்”

அல்ஜன்னத், ஏப்ரல் 2013, பக்கம்: 34

அறிவுக்குப் பொருந்தவில்லை, நடைமுறை சாத்தியமில்லை என்பதெல்லாம் நம்முடைய வாதங்களில் துணை வாதங்களாக இடம்பெறுமே தவிர ஒருபோதும் அவற்றைப் பிரதான வாதமாக வைப்பதில்லை. அதுபோன்றே இந்த விவகாரத்திலும், பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை என்பதும் நம்முடைய வாதம் தான். ஆனால் இவர்கள் பிதற்றுவது போன்று பிரதான வாதமல்ல.

பல்லி என்பது அல்லாஹ்வின் படைப்பு! மனித, ஜின் இனங்களைத் தவிர பகுத்தறிவு வழங்கப்படாத அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டே வாழ்கின்றன. பல்லி என்ற பகுத்தறிவற்ற இந்தப் படைப்பு அல்லாஹ்விற்கு எதிராகப் புரட்சி செய்யுமா? போர்க்கொடி தூக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறோம். அந்தக் கேள்விக்கு இந்த ஐந்தறிவுக் கட்டுரையாளர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் எழுப்புகின்ற வாதத்தை இந்த ஐந்தறிவுப் பிராணி அறவே பார்க்கவில்லை என்று விளங்குகின்றது.

அந்தப் பல்லியின் “எண்ணம்’ நாம் நெருப்பை அதிகரிக்க வேண்டும் என்பது தான். தன்னால் “முடியாது’ என்பது அந்தப் பல்லிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் ஊதியது என்றால் என்ன அர்த்தம்? நம்மால் முடியுமளவிற்கு “முயல்வோம்’ என்ற எண்ணம் தான் காரணமாகும். தீமை, கெடுதல், அதுவும் சத்தியத்திற்கெதிராக சூழ்ச்சியே மிகப் பெரிய தவறு தானே! அப்படிச் செய்பவர்களைத் தண்டிப்பது நியாயம் தானே! அதனைத் தான் அந்த ஹதீஸ் சொல்கின்றது. எனவே ஹதீசும் சரி, அதன் கருத்தும் சரி, அனைத்துமே சரியானவை தான். இப்ராஹீம் (அலை) என்ற ஏகத்துவப் போராளிக்கெதிராக கெடுதல் செய்ய “நினைத்த’ பல்லியை அல்லாஹ் அடையாளம் காட்டியிருக்கிறான் என்பதை விளங்கிக் கொண்டால் ஹதீஸ்கள் அனத்தையுமே முழு மனதோடு ஏற்றுக் கொள்வோம்.

அல்ஜன்னத், ஏப்ரல் 2013, பக்கம்: 34

ஜாக் என்ன சொல்ல வருகின்றது தெரிகின்றதா? பல்லிக்குச் சிந்திக்கின்ற ஆறாம் அறிவு, அதாவது மனித இனத்திற்கு இருப்பது போன்ற மூளை இருப்பதாகச் சொல்கின்றது. மூளை இருந்தால் தானே எண்ணம், சிந்தனையெல்லாம் ஏற்படும். இதைப் புரிந்து கொள்ள ஆறாம் அறிவைப் பற்றிப் பார்ப்போம்.

ஆறாம் அறிவு

மனித, ஜின் இனங்கள் மட்டுமே ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு உள்ள பிராணிகள். இதர உயிர்ப்பிராணிகளுக்கு இந்த அறிவு இல்லை. இது பச்சிளம் பாலகனுக்கும் தெரிந்த அற்ப விஷயமாகும். இந்த அறிவு ஜாக்கிற்கு இல்லையே வருந்த வேண்டியுள்ளது. பல்லியை இவர்கள் பகுத்தறிவுப் பிராணி பட்டியலில் சேர்த்து விட்டு இவர்கள் பல்லியின் இடத்திற்குப் போய் விட்டது மிகவும் பரிதாபத்திற்குரியது.

இப்போது, பல்லியார் பகுத்தறிவாளர் அல்ல என்பதை அல்குர்ஆனிலிருந்து விளக்குவோம்.

அல்குர்ஆன் கூறும் ஐந்தறிவுப் பிராணிகள்

அல்லாஹ் கூறுகின்ற ஐந்தறிவுப் பிராணிகளைப் பார்ப்போம்.

வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏகஇறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:171)

இவற்றுக்குச் சிந்தனை ஆற்றல் இல்லை என்று கூறுகின்றான்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.  (அல்குர்ஆன் 7:179)

இந்த வசனத்திலும் சிந்திக்கின்ற உள்ளங்கள் இல்லை என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழிகெட்டவர்கள்.                  (அல்குர்ஆன் 25:44)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (ஏகஇறைவனை) மறுப்போர் (இவ்வுலகில்) கால்நடைகள் தின்பது போல் தின்று அனுபவிக்கிறார்கள். நரகமே அவர்களுக்குத் தங்குமிடம்.    (அல்குர்ஆன் 47:12)

ஆகிய வசனங்களும் இதே கருத்தைப் பதிவு செய்கின்றன.

பகுத்தறிகின்ற அறிவு இருந்தால் தான் எண்ணியது, சிந்தித்தது என்றெல்லாம் சொல்ல முடியும். அதனால் தான் மாடு சிந்தனை செய்கின்றது; ஆய்வு செய்கின்றது என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயம் மாடு பார்க்கின்றது; ஆட்டின் காது கேட்கின்றது என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

இதனால் இந்தப் பிராணிகளுக்கு, இந்த உயிரினங்களுக்குச் சொர்க்கம், நரகம் கிடையாது. நாம் இதைச் சொல்வதால், நம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, ஆடு மாடுகளுக்கும் நரகத்தில் தண்டனை உண்டு என்று ஜாக்கினர் சொன்னாலும் சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்      தொடர்: 14

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிமார்கள் உட்பட யாரும் தலையிட முடியாது என்பதைப் பார்த்து வருகிறோம். முஹம்மத் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட முடியாது என திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் மூலமாகவே இதை அல்லாஹ் அறிவிக்கச் சொல்கிறான்.

நானும் உங்களைப் போல மனிதன் தான் என்பதையும், எனக்கும் உங்களைப் போல மறைவானதை அறிய முடியாது என்பதையும் அல்லாஹ் அந்த மக்களுக்கு புரிய வைக்கச் சொல்கிறான்.

ஈஸா நபி முதல் அதற்கு முந்தைய ஒவ்வொரு நபிமார்களையும் கடவுளாக ஆக்கிவிட்டார்கள். அந்த நிலை உங்களுக்கும் வரக்கூடாது என்றால், உங்களைப் பற்றியே நீங்கள் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதாக அல்லாஹ் சொல்கின்றான்.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன். 7:188

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தமக்கே ஏதாவது செய்ய முடியுமா? செய்ய முடியாதா? என்பது இரண்டாவது விஷயம். மறைவானது ஒருவருக்கு தெரிந்திருந்தால் தான் இதையெல்லாம் செய்ய முடியும்.

எனக்கு ஒரு துன்பம் வரப் போகின்றது என்பது மறைவான விஷயம். நாளைக்கு என்னை ஒருவன் கொல்லப் போகின்றான் என்றால் அது மறைவான விஷயம். ஆனால் அதே நேரத்தில் என் கண் முன்னால் என்னைக் கொல்ல வருவது மறைவான விஷயம் அல்ல. அவன் நாளை என்னைக் கொல்ல வருவது எனக்கு இன்றைக்கே தெரிந்திருந்தால், என்னைக் கொல்வதற்கு இன்னின்ன திட்டங்களை தீட்டியிருக்கிறான், இன்னின்ன தயாரிப்போடு இருக்கிறான் என்று எனக்கு தெரிந்திருந்தால் என்னை அவன் கொல்ல முடியுமா? அவன் என்னைக் கொல்வதிலிருந்தும் தப்பித்து விடுவேன்.

ஆக ஒரு மனிதனுக்கு மறைவான விஷயங்கள் தெரிந்து விட்டால் அவனுக்கு எந்த ஒரு கஷ்டமுமே வராது. நாம் நம்முடைய வீட்டில் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது இந்த வீடு இன்னும் சிறிது நேரத்தில் இடிந்து விழும் என்று நமக்கு முன்கூட்டியே  தெரிந்திருந்தால் நாம் அந்த வீட்டில் இருப்போமா? அந்த இடத்தை விட்டே நாம் ஓடிவிடுவோம். இந்த மறைவான ஞானம் உலகில் உள்ள அனைவருக்கும் இருந்திருந்தால் இதுவரைக்கும் நடந்த நிலநடுக்கங்களில் யாராவது இறந்திருப்பார்களா? சுனாமிப் பேரலையில் சிக்கி யாராவது மரணமடைந்திருப்பார்களா? வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழந்திருப்பார்களா? அவ்வாறு மறைவான ஞானம் இருந்தால் இயற்கை மரணத்தைத் தவிர வேறு விதமான உயிரிழப்புகளே ஏற்பட்டிருக்காது. ஆக நாளை நடப்பதை ஒருவன் அறிந்திருந்தால் அவனுக்கு எந்தக் கஷ்டமும் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு தான் அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சொல்லச் சொல்கிறான்.

நீங்கள் அடிப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன். இரத்தம் சொட்டச் சொட்ட ஊரை விட்டு அடித்து விரட்டினீர்கள். ஓடத் தான் செய்தேன். தாயிப் நகரை விட்டு அடித்துத் துரத்தினீர்கள். கல்லை எறிந்தீர்கள், நான் நடக்கும் பாதையில் முள்ளை வைத்தீர்கள். நான் தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டகக் குடலை என் மீது போட்டீர்கள். என்னால் ஏதாவது செய்ய முடிந்ததா? இப்படியெல்லாம் என்னை சித்ரவதை செய்வீர்கள் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் இந்த சிரமத்தைத் தேடி வந்திருப்பேனா? இவை அனைத்தையும் விட்டும் நான் தப்பித்திருப்பேனல்லவா?

நான் உங்களைப் போல மனிதன் தான். மறைவானதையெல்லாம் அறியக் கூடிய சக்தி எனக்கு கிடையாது என்பதை அழைப்புப் பணி செய்யும் போது சேர்த்தே சொல்லச் சொல்கிறான்.

எனக்கும் எவ்வளவோ கஷ்டங்கள் வருகின்றன. அதை நீங்களும் பார்க்கத் தான் செய்கறீர்கள். இந்தக் கஷ்டங்கள் நானும் ஒரு மனிதன் தான் என்பதைக் காட்டவில்லையா? இந்தக் கஷ்டங்கள் உங்களிடமிருந்து வரும் என்பதை நான் முன் கூட்டியே அறிந்திருந்தால் இந்தக் கஷ்டங்களை நான் அடைந்திருப்பேனா? நீங்கள் என்னென்ன திட்டம் தீட்டியிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள் நாளை என்னை என்ன செய்வீர்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று நபிகளாரை சொல்லச் சொல்கிறான்.

ஒருவன் நாளை என்ன நடக்கும் என்பதை அறிபவனாக இருந்தால் அவன் நல்லதை மட்டுமே அடைவான். கெட்டது ஒன்றுமே வராது. உதாரணமாக நாம் ஒரு வியாபாரம் நடத்தி வருகிறோம். அந்த வியாபாரம் 10 வருடங்களுக்குப் பின் எந்த நிலையை அடையும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தால், அதாவது 10 வருடங்களுக்குப் பின் நஷ்டமடைந்து விடும் என்பதை நாம் அறிந்து வைத்திருந்தால் நாம் என்ன செய்வோம்? லாபம் வரும் வரைக்கும் வியாபாரம் நடத்திவிட்டு 10வது வருடத்தில் வியாபாரத்தை விட்டு விடுவோம். அப்போது நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. ஆக நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நமக்கு எவற்றிலெல்லாம் லாபம், நன்மை இருக்குமோ அதை மட்டும் அடைந்து கொள்வோம். எவற்றிலெல்லாம் நஷ்டம், தீமை இருக்குமோ அவற்றை விட்டும் விலகிக் கொள்வோம்.

இந்த மாதிரி நன்மையை மட்டும் அடைந்து, தீமையை விட்டும் விலகியவனாக நான் இருந்தேனா? என்று மக்களிடம் கேட்குமாறு அல்லாஹ் நபிகளாரைப் பார்த்துச் சொல்கிறான்.

நபி (ஸல்) அவர்களுடன் இருந்த மக்கள் அவ்வாறு நினைக்காவிட்டாலும் கியாம நாள் வரை உள்ள மக்களுக்கு, அதாவது யாரெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குகிறார்களோ, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுகிறார்களோ அந்த மக்களுக்கு அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இதை சொல்லச் சொல்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் கஷ்டங்கள் வருவதற்குக் காரணம், அந்தக் கஷ்டங்களைத் தடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவர்கள் மறைவானதை, நாளை நடப்பதை, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை அறியாமல் இருந்தது தான்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுப்பவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்என்று கூறுவீராக!  (அல்குர்ஆன். 39:38)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாகப் பல விஷயங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீயை இறக்குகிறான். அவர்கள் மீது அல்லாஹ் அதிகம் அன்பு வைத்திருக்கிறான். அருள் நிறைந்தவனாக இருக்கிறான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மறுமையில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுக்க இருக்கிறான், அவர்களை எவ்வளவு பெரிய உயர்வான இடத்தில் வைத்திருக்கிறான் என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கடுமையாக எச்சரிப்பதைப் பாருங்கள்.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.

அல்குர்ஆன். 69:44-47

நான் இந்த முஹம்மதுக்கு குர்ஆனைக் கொடுத்திருக்கிறேன். இதில் அவராக தன்னுடைய இஷ்டத்துக்கு எதையும் சேர்க்க மாட்டார். அவ்வாறு ஏதாவது ஒன்றைச் சேர்த்து விட்டாலும் நம்முடைய தூதர் தானே, நமக்கு வேண்டிய ஆள் தானே என்று விட்டு விட மாட்டேன் என்று இந்த வசனத்தில் சொல்கிறான்.

எந்த நபியாக இருந்தாலும் சரி தான்; என்னுடைய எல்லைக்குள் யாரும் வரமுடியாது. மனிதன் மனிதனாகத் தான் இருக்க வேண்டும். என்னுடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது என்றெல்லாம் அல்லாஹ் நமக்குச் சொல்வதற்குக் காரணம் மனிதனின் எல்லை என்பதை நமக்குப் புரிய வைப்பதற்காகத் தான். நமது எல்லை என்ன என்பதைப் புரிந்தால் தான் நாம் அவ்லியாக்களை வணங்க மாட்டோம். அவர்களிடம் உதவி தேடமாட்டோம். அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம். அவனையே சார்ந்திருப்போம்.

தூதரைக் கண்டித்த தூயோன் அல்லாஹ்

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காண முடியும். சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான்.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் தேனைப்பற்றி சொல்லும் போது,

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.

அல்குர்ஆன். 16:68, 69

ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி, தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான். அந்தச் சம்பவம் இதோ:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் “நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன்என்று கூறினார்கள். ஆகவே, “நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?” என்று தொடங்கி “நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 5267

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேனை ஹராமாக்கியதை யாருக்கும் அறிக்கவில்லை. யாரும் தேனை சாப்பிடாதீர்கள் என்று உத்தரவு போட்டதும் கிடையாது. தான் சாப்பிட மாட்டேன் என்று தான் தமக்குத் தாமே அதைத் தடை செய்து கொண்டார்கள். இது உலகத்திற்கே தெரியாத ஒரு இரகசியமான விஷயம் தான். அல்லாஹ் கண்டித்ததால் தான் நமக்குத் தெரிகிறதே தவிர அல்லாஹ் சொல்லவில்லையென்றால் நமக்குத் தெரியுமா? தெரியாது.

தன்னுடைய தூதர் தானே என்று கூட பார்க்காமல் தம்மைக் கண்டித்ததை மறைத்து விடாமல் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை வெட்ட வெளிச்சமாக ஆக்கி விட்டான். கண்டிக்கும் அந்த வசனத்தை தம்முடைய வாயினாலேயே உலக மக்களுக்குச் சொல்லவும் வைக்கிறான்.

நபியின் விருப்பமும் நாயனின் கண்டனமும்

இன்றைக்குச் சிலர் மார்க்கத்தில் நன்மையைக் கருதி பல விஷயங்களில் வளைந்து கொடுப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் நடந்துள்ளது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரமுகரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கண் தெரியாத குருடர் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொல்கின்றார். நபி (ஸல்) அவர்கள் அதைக் காதில் வாங்கியும் கண்டும் காணாதவர்களாக, அவர்களுக்குப் பதில் கூறாமல் முகம் சுளித்தவர்களாக திரும்பிக் கொண்டு அந்தப் பிரமுகரிடம் பேச்சைத் தொடர்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபியவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூர அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது. எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனி மரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள். ஆனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.  (அல்குர்ஆன் 80:1-10)

—————————————————————————————————————————————————————-

மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதத் தடையா?

மவ்லானாவுக்கு மறுப்பு

மாதவிடாய் பெண்கள் குர்ஆனைத் தொடுவதோ, ஓதுவதோ கூடாது என்று மனாருல் ஹுதா என்ற மாத இதழில் மத்ஹபுச் சட்ட நூல் அடிப்படையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்திருந்தனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு தவறானது என விளக்கி, ஏகத்துவம் மே 2013 இதழில், “மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, கடந்த மாத மனாருல் ஹுதா கேள்வி பதில் பகுதியில் மறுப்பு வெளியிட்டுள்ளார்கள்.

அதில் மாதவிடாய் பெண்கள், குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனைத் தொடலாம், ஓதலாம் என்பதற்கு ஆதாரமாக நாம் வெளியிட்ட ஆதாரங்கள் எதையுமே கண்டுகொள்ளவில்லை. மாறாக, மத்ஹபுச் சட்டங்களை நியாயப்படுத்துவற்காக சில பலவீனமான செய்திகளை ஆதாரமாகக் காட்டி, தங்கள் கருத்தை நியாயப்படுத்தியிருந்தார்கள். இந்தக் கருத்திற்குக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளார்கள். முறையான ஆய்வு இல்லாத காரணத்தால் கண்ணில் தென்படுவதை வைத்து இவ்வாறு சட்டம் கூறியுள்ளனர்.

இவர்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் சற்று ஆய்வு செய்திருந்தால் உண்மையை உணர்ந்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கும் ஆய்வுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது.

இது குறித்து யாராவது அரபியில் எழுதியிருந்தால் அந்தக் கருத்து தங்களது நிலைபாட்டிற்கு ஒத்ததாக இருந்தால் அதை அப்படியே மக்களுக்கு முன்பாக வைத்துவிடுவார்கள். அந்தக் கூற்று சரியானதா? தவறானதா? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டவர்களும் குளிப்புக் கடமையானவர்களும் குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்குக் குர்ஆனிலோ ஏற்கத் தகுந்த ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை.

இவர்கள் எதை ஆதாரமாகக் கருதுகிறார்களோ உண்மையில் அவை இதற்குரிய ஆதாரங்கள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

குர்ஆனில் ஆதாரம் உள்ளதா?

குர்ஆன் ஷரீபில் அல்லாஹு தஆலா “அதனை பரிசுத்தமானவர்களைத் தவிர தொடமாட்டார்” (56:79) என்று கூறியுள்ளான். இந்த ஆயத்திற்கு ஹள்ரத் அலீ, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஸஃதுப்னு அபீவக்காஸ், ஸயீத் இப்னுஜைத் (ரலியல்லாஹு அன்ஹும்) உட்பட பல ஸஹாபாக்கள், அதாவு, ஜுஹ்ரீ, நகயீ (ரஹிமஹுமுல்லாஹ்) உட்ளிட்ட பல தாபியீன்களான முபஸ்ஸிரீன்கள், முதஹ்ஹரூன் – பரிசுத்தமானவர்கள் என்பதன் பொருள் சிறுதொடக்கு, பெருந்தொடக்கை விட்டும் சுத்தமானவர்கள் என்று விளக்கமளித்துள்ளனர்.

(மனாருல் ஹுதா)

இவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் குறித்த வசனத்திற்கு இவர்கள் கூறுவது போல் விளக்கம் தருகிறார்களா? இல்லையா? என்பது தனி விஷயம். அவர்கள் அவ்வாறு கூறினாலும் கூறாவிட்டாலும் இவ்விஷயத்தில் முடிவு செய்வதற்கு இது எந்த வகையிலும் ஆதாரமாகாது.

குர்ஆன் ஒரு கருத்தை நேரடியாக, தெளிவாகச் சொல்லியிருக்கும் போது அதற்கு அந்த அர்த்தமல்ல. இது தான் அர்த்தம் என்று வேறொருவர் வேறு கருத்தைக் கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்? இந்த நேரத்தில் அவர் கூறியுள்ளார், இவர் கூறியுள்ளார் என்று பட்டியல் போடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும். அல்லாஹ்வை மீறிப் பேசுவதாகும். குர்ஆனுக்கு எதிராக வாதிடுவதாகும்.

இந்த வசனத்தின் சரியான பொருளைக் குர்ஆனிலிருந்தே அறிந்துகொள்ள முடியும். இது இன்றைக்கு ஆரம்பித்துள்ள புதிய பிரச்சனை அல்ல. பல வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு வாதம் சுன்னத் ஜமாத்தினரால் வைக்கப்பட்டு அதற்குப் பலமுறை நாம் பதிலும் கூறியுள்ளோம். நாம் அளித்த விளக்கங்களுக்கு இன்று வரை இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில் மனாருல் ஹுதா மாத இதழில் நம்முடைய பதிலையும் விளக்கங்களையும் கண்டுகொள்ளாமல் மறுபடியும் பழைய வாதத்தையே வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே இவர்களுக்கு நாம் முன்பு கூறிய அதே விளக்கத்தையே மறுபடியும் கூறுகிறோம். இனிமேலாவது இதற்குப் பதில் தருவார்களா? என்று பார்ப்போம்.

குர்ஆன் கூறும் கருத்து

குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ள மாதவிடாய் ஏற்பட்டவர்கள் தொடக்கூடாது; ஓதக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்கள் என்றால் யார்? தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முதலில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொடமாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56:79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

அல்குர்ஆன் 56:77-79

56:79 வசனத்துடன் முந்தைய இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது “அதை’ என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

அல்குர்ஆன் 80:11-16

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

அல்குர்ஆன் 26:210-212

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன்  தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56:79 வசனமும் அமைந்துள்ளது.

குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக்கூடாது என்று தொடுவதற்கு தடை போடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே உணர்த்துகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56:79 வசனத்தில் சொல்லப்பட்ட “தூய்மையானவர்கள்’ என்பது வானவர்கள் என்பதும் “அதை’ என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க!  இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்-மல்லாத ஒரு மன்னருக்கு “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம்; ஓதலாம்.

உமர் (ரலி) அவர்களின் பெயரில் பலவீனமான செய்தி

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

(மனாருல் ஹுதா)

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இமாம் ஹாகிம் அவர்களின் தொகுப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி என்பாரும், உசாமா பின் ஸைத் என்பாரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பலவீனமானவர்களாவர்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி பலவீனமானவர் என்பதில் அறிஞர்களுக்கிடையில் மாற்றுக் கருத்தில்லை. இவர் பலவீனமானவர் என்று அனைவரும் ஏகோபித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக வரும் செய்திகளில் இது தான் சிறந்ததாக உள்ளது. ஆனால் இதில் இடம்பெறும் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி பலவீனமானவர் என்பதில் அனைவரிடமும் ஒத்த கருத்து நிலவுகின்றது என தஹபீ அவர்கள் முஃக்னீ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

நூல்: கன்சுல் உம்மால் (பாகம் 12, பக்கம் 550)

அபூஹாதிம், நஸாயீ, புகாரி, இப்னு அதீ, அபூ சுர்ஆ மற்றும் இப்னு ஹஜர் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூ-ல் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியை பஸ்ஸார் அறிவித்துள்ளார். இதில் உசாமா பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

நூல்: மஜ்மஉஸ் ஸவாயித் (பாகம் 9, பக்கம் 64)

அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என தஹபீ கூறியுள்ளார்கள். இவருடைய மோசமான நினைவாற்றல் காரணமாக இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் முயீன், அபூஹாதிம், நஸாயீ, இப்னு சஅத், இப்னு ஹிப்பான், அலீ பின் மதீனீ, புகாரி, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

காசிம் பின் உஸ்மானின் அறிவிப்பு

இதே செய்தி காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் வழியாகவும் தாரகுத்னியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இந்த ஹதீஸைப் பதிவு செய்த தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்திக்குக் கீழ் இவர் வ-மையானவர் இல்லை என்பதையும் சேர்த்து பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: சுனனுத் தாரகுத்னீ 382

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக இவர் அறிவிக்கும் சம்பவம் மறுக்கப்பட வேண்டியது என தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம்: 3 பக்கம்: 375)

தாரகுத்னீ அவர்கள் இவர் வ-மையானவர் இல்லை என்று கூறியுள்ளார்கள். மற்றவர்கள் அறிவிக்காத இவர் மட்டும் தனித்து அறிவித்த ஹதீஸ்கள் பல உள்ளன என புகாரி கூறியுள்ளார்கள்.

நூல்: தன்கீஹுத் தஹ்கீக் (பாகம்: 1 பக்கம்: 234)

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்வூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது. ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அறிவிப்பு ஆதாரமானதா?

இஃதன்றி இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தமது முவத்தாவில் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்கள். அதில் குர்ஆனைப் பரிசுத்தமானவர் தவிர தொடலாகாது என்ற வரியும் உள்ளது. இந்த அறிவிப்பு ஹாகிம் (1447), தாரமி (2266), தாரகுத்னீ (222), இப்னுஹிப்பான் (6559) இன்னும் பலரும் அறிவித்துள்ளனர். மேலும் இதே கருத்துள்ள அறிவிப்பு ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் தாரகுத்னீ (3) அறிவித்துள்ளார்கள்.

(மனாருல் ஹுதா)

நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குர்ஆனை பரிசுத்தமானவர்களைத் தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று குறிப்பிட்டதாக ஒரு செய்தி உள்ளது. இதை இவர்கள் ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்கள் முதலாவதாக முவத்தாவில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை ஆதாரமாகக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குர்ஆனை தூய்மையானவரைத் தவிர தொடக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

நூல்: முவத்தா (419)

இது தொடர்பு அறுந்த செய்தியாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதியதாக இதை அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் ஹஸ்ம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கவில்லை. இவர் நபித்தோழர் இல்லை.

எனவே இது முர்சல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். அபூதாவுத் அவர்கள் இதை தொடர்பு அறுந்த செய்திகளில் ஒன்றாக பதிவு செய்துள்ளார்.

தாரமியின் அறிவிப்பு

ஹாகிம், தாரமி, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் ஆகியோரின் நூற்களில் பதிவாகியுள்ள அறிவிப்பையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

தாரமி (2166)

தாரகுத்னீ (380)

இந்த அறிவிப்புகளில் சுலைமான் பின் தாவூத் என்பவர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவறாகும். சுலைமான் பின் அர்கம் என்பதே சரியானது என்று இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சுலைமான் பின் தாவூத் நம்பகமானவர் என்றாலும் இவர் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை. சுலைமான் பின் தாவூதை குறிப்பிட்டது ஹகம் பின் மூசா என்ற அறிவிப்பாளர் செய்த தவறாகும்.

சுலைமான் பின் அர்கம் என்ற பலவீனமானவரே இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்னு ஹஜர், தஹபீ, அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூதாவுத், திர்மிதி, நஸாயீ, புகாரி, அபூ சுர்ஆ மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

இந்த அறிவிப்பில் இடம்பெறும் ஹகம் பின் மூசா என்பவர் தவறாக அறிவித்துள்ளார். சுலைமான் பின் அர்கம் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சுலைமான் பின் தாவூத் என்று தவறாகக் கூறியுள்ளார் என்று அபூதாவுத் கூறியுள்ளார்கள். சுலைமான் பின் அர்கம் பலவீனமானவர் என்று நஸாயீ கூறியுள்ளார்.

நூல்: நஸ்புர் ராயா (பாகம்: 1 பக்கம்: 197)

இமாம் நஸாயீ அவர்கள் இந்த அறிவிப்பை சுலைமான் பின் அர்கம் என்பவர் வழியாகவே பதிவு செய்துள்ளார்கள். இதன் பிறகு சுலைமான் பின் அர்கம் என்று கூறுவது தான் சரியானது. சுலைமான் பின் அர்கம் பலவீனமானவர் என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்முஹர்ரிர் ஃபில் ஹதீஸ் என்ற நூலிலும் இந்த விபரம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மாலிக் அவர்கள் பதிவு செய்த அறிவிப்பு முர்சலாகும். இதை அபூதாவுத் அவர்கள் மராசீல் என்ற தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். மேலும் நஸாயீ, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் ஆகியோரும் இதை சுலைமான் பின் தாவூத் என்பவரின் வழியாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பலவீனமானவரான சுலைமான் பின் அர்கம் என்பதே சரியானது என்று கூறப்பட்டுள்ளது.

நூல்: அல்முஹர்ரிர் ஃபில் ஹதீஸ் (பாகம்: 1 பக்கம்: 123)

இன்னும் பல ஆதாரங்கள் எங்கே?

இந்த ஹதீஸை அதனுடைய பல வழிகளைக் கவனித்தும் இன்னும் பல வகையான ஆதாரங்கள் மூலமும் பலரும் சரிகண்டுள்ளனர். எனவே தான் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் மார்க்கத்தின் பெரும் கொண்ட கூட்டத்தினர் நான்கு இமாம்கள் அனைவரும் குர்ஆன் ஷரீபைத் தொடுவதற்கு சிறுதொடக்கு, பெருந்தொடக்கை விட்டும் சுத்தமாக இருப்பது அவசியம்; சுத்தமின்றி தொடுவது பாவம் என்பதில் ஏகோபித்த முடிவு கொண்டுள்ளனர். (மஆரிஃபுல் குர்ஆன் 8:287)

(மனாருல் ஹுதா)

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஒரு வழி கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அனைத்தும் பலவீனமானதாக உள்ளதை மேலே தெளிவுபடுத்தி விட்டோம்.

நான்கு இமாம்களும் பெருங்கொண்ட கூட்டத்தினரும் சுத்தமின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்று கூறியதாக இவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் அவ்வாறு கூறினார்களா? இல்லையா? இதற்கு மாற்றமாக குர்ஆனை உளூவின்றி தொடலாம் என்று கூறிய அறிஞர்கள் யார் யார்? என்பது தனி விஷயம். அந்த ஆய்விற்குள் நாம் செல்லவில்லை.

ஒரு பேச்சுக்கு அவர்கள் அனைவரும் அப்படி கூறினாலும் அது சரியான கூற்று இல்லை என்பதற்கு மேலே நாம் கூறிய விசயங்கள் தெளிவான ஆதாரங்களாக அமைந்துள்ளன. இதற்குப் பதில் சொல்வது இவர்களின் கடமை.

இன்னும் பல ஆதாரங்கள் இருப்பதாக போகிற போக்கில் கூறியுள்ளனர். அந்த ஆதாரங்கள் எவை என்பதை இவர்கள் கூறக்கூடாதா? அப்படிக் கூறினால் அதன் உண்மை நிலையும் மக்களுக்குத் தெளிவாகிவிடும் என்ற பயத்தினால் கூறாமல் நழுவிச் சென்றுள்ளனர்.

தங்களிடத்தில் உள்ள ஆயுதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவை அனைத்தும் முனை மழுங்கியவை என்பதால் இன்னும் என்னிடம் பெரிய பெரிய ஆயுதங்கள் உள்ளன என பயமுறுத்தும் வேலையைச் செய்கின்றனர்.

உளூ மற்றும் குளிப்புக் கடமையை நிறைவேற்றாதவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு ஒரு சரியான ஆதாரம் கூட கிடையாது.

இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு

மேலும் இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் பெண்ணும் குளிப்பு கடமையானவரும் குர்ஆன் ஓத வேண்டாம் என்று கூறியதைப் பதிவு செய்துள்ளார்கள். இது மாதவிடாய் பெண்ணும் குளிப்பு கடமையான வர்களும் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கு தெள்ளத் தெளிவான ஆதாரமாகும்.

இந்த ஹதீஸ் இஸ்மாயீல் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றிருப்பதால் பலகீனமானதாக இருந்தாலும் தாரகுத்னீ அவர்களின் அறிவிப்பில் (ஹதீஸ் எண்: 428, 432, 433) இவரல்லாத அபூ மஃஷர், முகீரா என்ற இருவர் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த ஹதீஸ் ஆதாரம் பிடிக்கத்தக்க ஹதீஸாகும். எனவே இந்த ஹதீஸை பலகீனமானது என்று இதன் மூலம் பெறப்படும் சட்டத்தை நிராகரிக்க இயலாது.

(மனாருல் ஹுதா)

திர்மிதியில் (121) இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். இதை இவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவரல்லாமல் அபூ மஃஷர் மற்றும் முகீரா ஆகியோர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இதை ஏற்கிறோம் என்று கூறியுள்ளனர். எனவே அபூ மஃஷர் மற்றும் முகீரா ஆகியோரின் அறிவிப்பு சரியானதா என்ற ஆய்வுக்கு வருவோம்.

அபூ மஃஷரின் அறிவிப்பு

சுனனுத் தாரகுத்னீயில் (424) இடம்பெறும் இந்த அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.

அபூ மஃஷர் பலவீனமானவர் ஆவார். இவரை பலவீனமானவர் என்று இமாம்கள் கூறியுள்ளனர்.

அபூ மஃஷரிடமிருந்து பெயர் கூறப்படாத ஒருவர் இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவர் யார்? நம்பகமானவரா? என்பது தெரியவில்லை.

இந்தக் காரணங்களால் இதுவும் பலவீனமான செய்தியாகும். அபூமஃஷரின் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பில் அறியப்படாத ஒருவர் இடம்பெற்றுள்ளார். மேலும் அபூ மஃஷர் பலவீனமான மனிதர் ஆவார்.

நூல்: நஸ்புர் ராயா (பாகம்: 1 பக்கம்: 195)

அபூ மஃஷர் என்பார் வழியாகவும் இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். அபூ மஃஷர் பலவீனமானவர் ஆவார்.

நூல்: தல்ஹீசுல் ஹபீர் (பாகம்: 1 பக்கம்: 373)

முகீராவின் அறிவிப்பு

குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனில் எதையும் ஓதக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: சுனனுத் தாரகுத்னீ (423)

இந்த அறிவிப்பில் முகீராவிடமிருந்து அப்துல் மலிக் பின் மஸ்லமா என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இப்னு ஹஜர் அவர்களும் மற்ற அறிஞர்களும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முகீராவின் அறிவிப்பைச் சரியானது என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் அதில் அப்தில் மலிக் பின் மஸ்லமா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் தான் இந்த தொடர் சரியானதாக இருக்கும்.

நூல்: தல்ஹீசுல் ஹபீர் (பாகம்: 1, பக்கம்: 373)

முகீராவிடமிருந்து அறிவிக்கும் அப்துல் மலிக் பின் மஸ்லமா பலவீனமானவர் ஆவார். இவர் தவறான செய்திகள் அதிகம் அறிவிப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என இப்னு யூனுஸ் கூறியுள்ளார். இவர் தடுமாறக்கூடியவர். வ-மையானவர் இல்லை என அபூஹாதிம், அபூ சுர்ஆ ஆகியோர் கூறியுள்ளார்.

நூல்: பத்ருல் முனீர் (பாகம்: 2, பக்கம்: 545)

எனவே இதுவும் பலவீனமாதாகும். குளிப்புக் கடமையானவர்கள், உளூ இல்லாதவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது, தொடக்கூடாது என்பதற்கு ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. மாற்றுக் கருத்துடையவர்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டும் அனைத்தும் பலவீனமானதாகவே உள்ளது.

எனவே மாதவிடாய் பெண்கள், குளிப்புக் கடமையானவர்கள், உளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதற்கோ ஓதுவதற்கோ எந்தத் தடையுமில்லை.

—————————————————————————————————————————————————————-

இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

எம். ஷம்சுல்லுஹா

இமாம் கஸ்ஸாலி என்று அழைக்கப்படுகின்ற கஸ்ஸாலிக்கு உலக அளவில் ஒரு தாக்கமிருக்கின்றது. அது இந்திய அளவில் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழகத்தில் அவரது தாக்கம் எல்லை தாண்டி ஊடுறுவியிருக்கின்றது.

“வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!”

என்று இங்குள்ள ஆலிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற பாடசாலைகளில், மழலையர் பள்ளிக்கூடங்களில் பயில வருகின்ற பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இந்த நஞ்சை ஊற்றியும் ஊட்டியும் விடுகின்றனர்.

பாலர் பாடசாலையுடன் கஸ்ஸாலி வெறி நிற்பதில்லை. பட்டம் வழங்குகின்ற அரபிக் கல்லூரிகளிலும் இந்த வெறி இவர்களது தலையில் ஏறி இவர்களைத் தட்டழியச் செய்கின்றது.

மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பில் கஸ்ஸாலியின் மின்ஹாஜுல் ஆபிதீன் என்ற நூலை பாடத்தில் வைத்திருக்கின்றனர். 5, 6, 7 ஆகிய வகுப்புகளில் அவர் எழுதிய இஹ்யா உலூமித்தீன் என்ற நூலின் நான்கு பாகங்களை பாடத்தில் வைத்திருக்கின்றனர்.

கல்வி என்றாலே கஸ்ஸாலி தான். கஸ்ஸாலி என்றால் கல்விக் கடல் என்று கஸ்ஸாலி மீது அவர்களுக்கு போதை ஏறியிருக்கின்றது. இந்தப் போதையை மாணவ சிகாமணிகளின் மூளையில் ஏற்றி விடுகின்றார்கள்.

அந்தப் போதைக்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

கஸ்ஸாலி, மூஸா நபியைக் கனவில் கண்டாராம். அந்தக் கனவில் மூஸா நபி, “உமது பெயரென்ன?’ என்று வினவுகின்றார்கள். அதற்கு கஸ்ஸாலி, “முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் அல் கஸ்ஸாலி அத்தூஸீ” என்று பதில் சொல்கின்றார். “உன் பெயரைத் தானே கேட்டேன். நீ முப்பாட்டன் பெயர் வரை அடுக்குகின்றாயே?” என்று மூஸா நபி கேட்கின்றார். இதற்கு, “அல்லாஹ் உங்களிடம் “மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?’ (20:17) என்று மட்டும் தான் கேட்டான். ஆனால் நீங்களோ “இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன’ (20:18) என்ற பதிலை அடுக்கியுள்ளீர்கள்” என்று கஸ்ஸாலி சொன்னாராம். மூஸா (அலை) அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டார்களாம்.

இப்படி ஒரு சம்பவத்தைச் சொல்லி, சிறந்த தூதர்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்களை மட்டப்படுத்தி, கஸ்ஸாலியை உயர்த்திக் காட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம்மை மூஸா நபியை விடவும், யூனுஸ் நபியை விடவும் உயர்த்திப் பேசாதீர்கள் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், “உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அந்த யூதர், “உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார்.

அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2411, 3408

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3416

ஆனால் இவர்களோ, சூபிஸம் என்ற பெயரில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான ஒரு சித்தாந்தத்தைப் பேசிய, நபி (ஸல்) அவர்கள் பெயரால் பல புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்ட கஸ்ஸாலியை, மூஸா நபியை விட உயர்த்திப் பேசுகின்றார்கள். இந்த அளவுக்கு கஸ்ஸாலி மீதான போதை இவர்கள் கண்ணை மறைக்கின்றது.

கஸ்ஸாலியை மதிப்பீடு செய்ய அவரது நூல்களில் அவர் கொண்டு வந்துள்ள பொய்யான ஹதீஸ்கள் போதும். ஹதீஸ் துறையில் முதவாத்திர் (தலைமுறை தலைமுறையாய் ஒருமித்து அறிவிக்கின்ற செய்தி) என்ற தரம் ஒன்று உண்டு. அந்த ஹதீசுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் கீழ்க்கண்ட ஹதீஸாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 110

இது புகாரி, முஸ்லிம் இன்னும் மற்ற ஏராளமான நூல்களில் இடம்பெற்றுள்ளது. 70க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட ஹதீஸின் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு, தன் மனம் போன போக்கில், எழுதுகோல் செல்கின்ற வாக்கில் 940க்கு மேற்பட்ட பொய்யான ஹதீஸ்களை இஹ்யா நூலில் பதிவு செய்துள்ளார். இந்த ஹதீஸ்களுக்கு எந்த ஆதாரமும், அடிப்படையும் இல்லை. இவையல்லாமல் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஒரு எண்ணிக்கை தேறும். பலவீனமான ஹதீஸ்கள் ஒரு தொகை தேறும். இப்படிப்பட்ட இஹ்யா உலூமித்தீனை, போலியான, பொய்யான ஹதீஸ்களைக் கொண்டு நிரப்பிய – பரப்பிய ஒருவரை எப்படி ஓர் அறிஞராக ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி மக்கள் தலைவராக வர்ணிக்க முடியும்?

இந்த ஒன்றுக்காகவே இவர் முதலில் ஓரங்கட்டப்படவும் ஒதுக்கப்படவும் வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக உயரத்திலும் உச்சத்திலும் வைக்கப்பட்டிருக்கின்றார்.

இரண்டாவதாக இவர் ஓரங்கட்டப்பட வேண்டியது இவர் போதிக்கின்ற சூபிஸம் என்ற கொள்கைக்காக! சூபிஸம் என்பது குர்ஆனில் இல்லாத, நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு புதிய வழிகெட்ட கொள்கையாகும். மறைந்த அறிஞர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் குறிப்பிடது போன்து “சூஃப்’ என்ற வார்த்தையே அந்நிய வார்த்தையாகும். அரபிய வார்த்தை அல்ல. இது இஸ்லாத்தில் இல்லாத கொள்கையாகும்.

இந்தக் கொள்கையை மையமாக வைத்துத் தான் கஸ்ஸாலி தனது நூலான இஹ்யாவைப் படைத்திருக்கின்றார். இந்த அடிப்படையிலும் இது நிராகரிக்கப்பட வேண்டிய நூலாகும்.

இவர்களின் வேதம் இஹ்யா?

இன்று தமிழக ஆலிம்கள் பொய்யான ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இப்படிப்பட்ட ஹதீஸ்களைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் இவர்களிடம் எந்தவித உறுத்தலும் உள்ளச்சமும் இல்லை.

பொதுவாக நமது ஏகத்துவம் இதழில் அசத்தியவாதிகள் வெளியிடும் மாத இதழ்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் இந்தப் பத்திரிகைகள் தான் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத செய்திகளை, அவர்கள் சொன்னதாக, பொய்யான ஹதீஸ்களைத் துணிந்து வெளியிடுகின்றன. அதை இந்தக் காலத்திலேயே அடையாளம் காட்டத் தவறிய குற்றத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக இம்மாத இதழ்களின் பெயரைக் குறிப்பிட்டு, “நபி மீது பொய், நரகமே தங்குமிடம்’ என்ற தலைப்பில் ஏகத்துவத்தில் சில பக்கங்களை ஒதுக்கி, அடையாளம் காட்டி வருகிறோம் என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

இந்த ஆலிம்கள் இப்படிப் பொய்யான ஹதீஸ்களை அடித்து விடுவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற, கஸ்ஸாலி இறக்கிய இஹ்யா உலூமித்தீன் என்ற இவர்களது வேதம் தான்.

இதில் வரக்கூடிய அத்தனை கருத்துக்களையும் ஆய்வுக்கும், அலசலுக்கும் உட்படுத்தாமல் அப்படியே மேடையில் அள்ளிக் கொட்டுவார்கள். இந்த வேதம் தான் நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய்யான, போலியான ஹதீஸ்களைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் ஓர் அடிப்படைக் காரணமாகும்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில், இறைச் செய்தியைப் பாதுகாப்பதாகச் சொல்கின்றான். அல்லாஹ்வின் இந்தப் பாதுகாப்பு குர்ஆனுக்கு மட்டுமல்ல. நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கும் உண்டு. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் சொல்லும் ஒரு வஹீயாகும்; இறைச் செய்தியாகும். இதைப் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

அல்குர்ஆன் 53:3

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51

இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பாளரின் வாழ்க்கைக் குறிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படி சுமார் 5 லட்சம் பேரின் வாழ்க்கை ஆய்வுக்குள்ளானது. இந்தத் துறையில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மகத்தான சேவையையும் மாபெரும் பணியையும் ஆற்றியிருக்கின்றார்கள்.

புனிதப் போராளிகள்

எல்லைப் படைக் காவலர்களைப் போன்று இந்தப் போராளிகள் ஹதீஸ் என்ற எல்லைக்குள் நுழைகின்ற பொய்யான ஹதீஸ்களைத் தாக்கி அழித்துள்ளார்கள். அந்தப் போராளிகளில் ஒருவர் தான் ஹாபிழ் இராக்கி என்று அறியப்பட்ட அப்துர்ரஹீம் பின் அல்ஹுஸைன் ஆவார். இவர் ஹிஜ்ரி 725 (கி.பி. 1325)ஆம் ஆண்டு பிறந்தார். ஹிஜ்ரி 806 (கி.பி. 1404)ல் இறந்தார்.

ஹாஃபிழ் இராக்கி அவர்கள் இஹ்யா என்ற நூலுக்கு உள்ளே புகுந்து பொய்யான, பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளம் காட்டினார்கள். இன்று கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ளவர்களையே ஹதீஸ் துறை திக்குமுக்காடச் செய்கின்றது. ஆனால் அதிர வைக்கும் அச்சு எந்திரங்களின் வளர்ச்சி இல்லாத காலத்தில் ஸஹீஹ் (சரியானது) லயீஃப் (பலவீனமானது) என்று இஹ்யாவில் இடம்பெற்ற ஹதீஸ்களைத் தரம் பிரித்த அவர்களின் தியாக உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அல்முஃங்னீ அலா ஹம்லில் அஸ்ஃபார் ஃபில் அஸ்ஃபார் ஃபீ தக்ரீஜீ மாஃபில் இஹ்யாஇ மினல் அக்பார்

“இஹ்யாவில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களுக்கு மூல நூல்களைத் தேடும் பயணத்தில் பல நூல்களைப் புரட்டுவதைத் தவிர்க்கின்ற ஒரு தன்னிறைவு நூல்”

என்ற நீண்ட பெயரில் ஒரு நூலை இயற்றியுள்ளார்கள்.

அந்த நூலின் முன்னுரையில் அவர்கள் குறிப்பிடுகின்ற ஒரு செய்தியைப் பார்ப்போம்.

நான் இஹ்யா உலூமித்தீனில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் தொடர்பான ஆய்வை 51ல் அதாவது ஹிஜ்ரி 751ல் முடிக்கும் போது அதில் உள்ள சில ஹதீஸ்களுக்கு மூல நூல்களைக் குறிப்பிடுவது எனக்கு மிகச் சிரமமானது. அதனால் 761ஆம் ஆண்டு வரை மூல நூலைக் குறிப்பிடுவது எனக்குத் தாமதமானது. இறுதியில் அவற்றில் எனக்குத் தெரியாமல் போன பல ஹதீஸ்களுக்குரிய மூல நூல்களை அடைவதில் நான் வெற்றியும் அடைந்தேன்.

இவ்வாறு ஹாஃபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு பொய்ச் செய்தி புகுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹதீஸ் தொடர்பான மூல நூற்களைத் தேடும் பயணத்தில் ஹாஃபிழ் இராக்கி அவர்கள் தமது வாழ்நாளில் பத்து ஆண்டுகளைத் தொலைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த முன்னுரையெனும் பொன்னுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

புனித ஹதீஸில் ஒரு பொய் ஹதீஸ் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக அன்னார் மேற்கொண்ட பொறுமையையும் போர்க்குணத்தையும் இதில் நாம் காண முடிகின்றது.

அதே வேளையில் கஸ்ஸாலி, நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆள்வதில், மேற்கோள் காட்டுவதில் எந்தவொரு பேணுதலையும் கடைப்பிடிக்கவில்லை என்பதையும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

எரிக்கப்பட்ட இஹ்யா உலூமித்தீன்

இதன் காரணத்தால் அமீருல் முஃமினீன் என்றழைக்கப்பட்ட யூசுப் பின் தாஷிஃபீன் அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இஹ்யா உலூமித்தீன் என்ற நூலின் அனைத்துப் பிரதிகளையும் எரிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

யார் இந்த யூசுப் பின் தாஷிஃபீன்?

எகிப்து, சிரியா, ஹிஜாஸ் நாடுகளின் ஆட்சியாளராக இருந்து அய்யூபிய அரசாட்சியை நிறுவிய ஸலாஹுத்தீன் யூசுப் பின் அய்யூப் (பிறப்பு: ஹிஜ்ரி 532 – கி.பி. 1138, இறப்பு: ஹிஜ்ரி 589 – கி.பி. 1193) அவர்களை நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியத்தையும் கவுரவத்தையும் தேடித் தந்தவர். பைத்துல் முகத்தஸை கிறித்தவர்களிடமிருந்து மீட்டுத் தந்த மாபெரும் வீரர். இந்த மாவீரர் “கிழக்கத்திய யூசுப்’ என்று அறியப்பட்டார்.

யூசுப் பின் தாஷிஃபீன்  (பிறப்பு: ஹிஜ்ரி 400 – கி.பி. 1009, இறப்பு: ஹிஜ்ரி 500 – கி.பி. 1106) மக்ரிப் என்ற மொராக்கோ நாட்டின் “மேற்கத்திய யூசுப்’ என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி தெற்கே கானா வரையிலும், வடக்கே ஸ்பெயின் வரையிலும் நீண்டிருந்தது. இவரது ஆட்சியை முராபிதீன் ஆட்சி (ஆப்ம்ர்ழ்ஹஸ்ண்க் ஊம்ல்ண்ழ்ங்) என்று அழைப்பார்கள்.

முராபித் என்பது ரிபாத் – உறுதியாக இருத்தல் என்ற மூலச் சொல்லிலிருந்து வந்த வார்த்தையாகும். இந்த வார்த்தை திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் இடம்பெறுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 3:200

உண்மையில் இந்தப் பெயருக்குப் பொருத்தமான இம்மக்கள் திகழ்ந்தனர்.

யூசுப் பின் தாஷிஃபீன், உறுதி மிக்க நம்பிக்கையாளராக, இறையச்சம் நிறைந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மக்களிடத்தில் “மன்னர்’ என்ற பெயரெடுக்காமல் “அமீருல் முஃமினீன்’ என்ற பெயரெடுத்த தலைசிறந்த ஆட்சியாளர். இவருடைய ஆட்சியில் தான் ஆலிம்கள் இஹ்யா உலூமித்தீனுக்கு எதிராக ஏகோபித்துக் கிளம்பினர். உண்மையான அந்த உலமாக்களின் வேண்டுகோளின்படி இஹ்யா உலூமித்தீனைக் கொளுத்த உத்தரவிட்டார்.

ளீகூரீடுறீளீறீ ளீகூஹீளுலூளுனீ கூஹீசுளு வீஹீலூளீமீ ருகூணூசூ ளீகூகுலூஞூ சூஞூ ளுறீகூ ரீசூலூசு ளீகூசூலீசூஞூலூஞூ றீஞூ ஸீளீணுழுலூஞூ

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கின்றார்கள்.

இஹ்யாவின் தாக்கம் தமிழகத்தில் எல்லை தாண்டி ஊடுறுவியிருப்பதால் அதை உடைக்க வேண்டும் என்பதற்காக இன்ஷா அல்லாஹ் அதன் தமிழாக்கத்தை வரும் இதழில் அளிக்க இருக்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 6        தொழுகையின் சிறப்புகள்

வரிசையை சீராக்குவதன் சிறப்புகள்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

வரிசைக்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம்

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். (நூல்: புகாரி 719)

இந்தச் செய்தியில் நபியவர்கள் முதுகுக்குப் பின்புறமாகவும் பார்க்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது. சில வழிகேடர்கள் இந்த ஹதீஸைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவதற்காக தவறான பொருளில் பயன்படுத்தி வருகின்றனர்.

முதுகுக்குப் பின்புறமாக உள்ளவற்றை நபியவர்கள் பார்க்கிறார்கள் என்பதன் சரியான பொருள், நபியவர்கள் ருகூவு செய்யும் போது, சுஜூது செய்யும் போது பின்புறம் நிற்பவர்களின் மீது படுகின்ற பார்வையைத் தான் குறிப்பிடுகின்றார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் “எனக்குப் பின்புறமாகஅல்லது “என் முதுகுக்குப் பின்புறமாகநீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 742, 6644

பொதுவாகத் தொழுகையில் ருகூவு அல்லது ஸஜ்தா செய்யும் போது முன்னால் இருப்பவருக்குப் பின்னால் உள்ள வரிசை தெரியத் தான் செய்யும். எனவே தான், நீங்கள் வரிசையைச் சரி செய்யாவிட்டால் ருகூவின் போது பின்புறம் நான் பார்த்து விடுவேன் என்று சாதாரண அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதை இப்படி அனர்த்தம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ஒரு வாதத்திற்கு, பின்னால் உள்ளதைப் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வைத்துக் கொண்டாலும் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காண்பித்துக் கொடுக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளமும் நோக்கமும் ஒன்றுபடுகிறது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்:  நுஅமான் பின் பஷீர் (ரலி),  நூல்: புகாரி (717)

நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் அல்அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம் (739)

தொழுகை வரிசையை சீராக ஆக்குவதன் மூலம் அல்லாஹ் தொழுகையாளிகளின் உள்ளங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறான். இது தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமாகும்.

அதே நேரத்தில் வரிசையில் சீர்குலைவு ஏற்படுமென்றால் அதுவே உள்ளப் பிரிவினைகளுக்கும் காரணமாகிவிடும். எனவே வரிசையை சீர் செய்த பின்பே தொழுகையை ஆரம்பம் செய்ய வேண்டும்.

வரிசை சீர்பெற்றாலே தொழுகை முழுமை பெறும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (741)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),  நூல்: புகாரி (723)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி (722)

இணைந்து நிற்க வேண்டும்

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள்.

நூல்: புகாரி (725)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒருவரது பாதங்களுடன் மற்றவரின் பாதங்களைச் சேர்த்துக் கொண்டு நிற்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இது குறித்து அபூதாவூதிலும் இன்னும் சில நூல்களிலும் இடம் பெற்ற ஹதீஸில் எங்களில் ஒருவர் தமது தோள் புஜத்தை தம் அருகில் இருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது முட்டுக்காலை தம் அருகில் இருப்பவரின் முட்டுக்கால்களுடனும் தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஹதீஸ்களில் மூன்று விஷயங்கள் கூறப்படுகின்றன.

அருகில் இருப்பவரின் பாதத்துடன் தனது பாதத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பது

அருகில் இருப்பவரின் முட்டுக்காலுடன் தனது முட்டுக்காலைச் சேர்த்துக் கொண்டு நிற்பது

அருகில் இருப்பவரின் தோள் புஜத்துடன் தனது தோள் புஜத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பது.

இந்த ஹதீஸை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டு செயல்படுத்துவதாக இருந்தால் இதில் கூறப்படும் மூன்றையும் செயல்படுத்த வேண்டும். அருகில் இருப்பவரின் முட்டுக்காலுடன் தனது முட்டுக்காலைச் சேர்த்துக் கொண்டு யாராலும் நிற்க முடியாது.

அது போல் தோள் புஜத்துடன் தோள்புஜத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பதும் சாத்தியாமாகாது. அனைத்து மனிதர்களும் சமமான உயரம் உடையவர்களாக இருந்தால் தான் ஒருவரது தோள் புஜத்துடன் மற்றவரின் தோள்புஜம் சேரும் வகையில் நிற்க முடியும். இல்லாவிட்டால் ஏற்ற இறக்கமாகத் தான் நிற்க முடியும்.

ஆனால் தோள், முட்டுக்கால், பாதம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எது சேரவே முடியாதோ அது சேர்ந்ததாகக் கூறப்பட்டால் இது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது. இதற்கு வேறு அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.

வரிசையில் நிற்கும் போது ஒருவர் முன்னால் தள்ளிக் கொண்டும் இன்னொருவர் பின்னால் தள்ளிக் கொண்டும் நின்றால் வரிசை நேராக அமையாது. ஒரே நேர் கோட்டில் நின்றால் தான் வரிசை சீராக அமையும். அவ்வாறு நேர் கோட்டில் நிற்கும் போது இருவரது தோள் புஜங்களும் இருவரது முட்டுக்கால்களும், இருவரது பாதங்களும் ஒரு நேர் கோட்டில் அமையும்.

ஒரு நேர் கோட்டில் அமைந்ததைத் தான் அறிவிப்பாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டால் இது நடைமுறைப்படுத்த சாத்தியமானது. அறிவிப்பாளர் குறிப்பிகின்றபடி நடந்திருக்கும் என்று நம்ப முடியும்.

ஒன்றுடன் ஒன்று ஒட்ட வேண்டும் என்று பொருள் கொண்டால் இந்த ஹதீஸ் நடக்க முடியாததைக் கூறுவதாக அமைந்து விடும். மேலும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிசையைச் சீராக்குங்கள் என்று கூறியவுடன் நபித்தோழர்கள் அதற்கு செயல் வடிவம் கொடுத்தது பற்றித் தான் இது குறிப்பிடுகிறது. வரிசையை நேராக்குங்கள் என்ற கட்டளையை நேர் கோட்டில் நிற்க வேண்டும் என்று தான் யாரும் புரிந்து கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு என்ன அர்த்தமோ அதைத் தான் நபிதோழர்கள் செயல்படுத்தி இருக்க முடியும். இதன் படி பார்த்தாலும் நேர் கோட்டில் நின்றதைத் தான் இப்படி நபித்தோழர் குறிப்பிட்டுள்ளார் என்பது உறுதியாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈட்டியை நேராக்குவது போல் வரிசையை நேராக்குவார்கள். நாங்கள் இதைப் புரிந்து கொள்ளும் வரை வரிசையச் சரியாக்குவார்கள். பின்னர் ஒரு நாள் வந்து தக்பீர் சொல்லத் தயாரான போது ஒரு மனிதர் நெஞ்சைத் தள்ளிக் கொண்டு நின்ற போது வரிசையைச் சீராக்குங்கள் என்று குறிப்பிட்டார்கள்.   (நூல்: முஸ்லிம்)

நெஞ்சைத் தள்ளிக் கொண்டு நிற்கும் போது அவர்கள் வரிசையை நேராக்குங்கள் என்று கூறியதில் இருந்தும் நேராக்குதல் என்பதன் பொருளை அறியலாம். இதை ஏற்காமல் ஒன்றுடன் ஒன்றைச் சேர்ப்பது என்று பொருள் கொள்வார்களானால் அவர்கள் பாதங்களோடு பாதங்களைச் சேர்ப்பதால் மட்டும் இந்த ஹதீஸைச் செயல்படுத்தியவர்களாக மாட்டார்கள். பாதம், முட்டுக்கால். புஜம் ஆகிய மூன்றையும் அருகில் உள்ளவருடன் இணைத்துக் காட்டி செயல் வடிவம் கொடுத்துக் காட்ட வேண்டும். ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுக்கும் போது அதில் ஒன்றை ஏற்று இரண்டை விட்டு விடுவது ஹதீஸ்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதாக ஆகாது.

அல்லாஹ்வின் உறவும் பகைமையும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலக்குமார்களின் வரிசையைக் கொண்டு தான் நீங்கள் வரிசையாக நிற்கிறீர்கள். எனவெ தொழுகை வரிசையை நேராக்குங்கள்! இடைவெளிகளை நிரப்புங்கள்! தோள் புஜங்களை நேராக்கிக் கொள்ளுங்கள்!) உங்களின் சகோதரர்களின் கைகளை (பிடித்து அருகில் நிறுத்துவதில்) இதமாக நடந்து கொள்ளுங்கள். ஷைத்தானிற்கு இடைவெளிகளை விடாதீர்கள். யார் வரிசையில் இணைந்து நிற்கிறாரோ அவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். யார் வரிசையைத் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மத் (5724)

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்      தொடர்: 5

குடும்ப அமைப்பின் அவசியம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ் மனிதனைப் படைத்த காரணமே குடும்பமாக வாழவேண்டும் என்பதற்காகத் தான். எனவே குடும்ப அமைப்பில் வாழ்வது தான் இயற்கை நியதியாகும். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.  (அல்குர்ஆன் 7:189)

இப்படி ஜோடியைப் படைத்ததே, அவர்கள் இருவரும் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதற்காகத் தான். அதையும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 30:21)

இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று இந்த வசனத்தில் இருக்கிறது. அல்லாஹ் ஆதம் என்கிற ஒரு ஆணை களி மண்ணிலிருந்து படைத்து, அவரிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவரது ஜோடியைப் படைக்கிறான். ஆதமை மண்ணிலிருந்து படைத்திருப்பதினால் அவரது மனைவியையும் மண்ணிலிருந்தே தனியாகப் படைப்பது ஆதமைப் படைத்ததை விட இலேசானது தான்.

அல்லாஹ் மண்ணிலிருந்து ஆதம் என்கிற ஆணைப் படைத்ததைப் போன்று, இன்னொரு பெண்ணையும் மண்ணிலிருந்து படைத்திருந்தால் அவ்விருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆகிவிடும். எனவே தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு தொடர்பு இயற்கையாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனித சமூகத்தைப் படைக்க விரும்பும் போது, ஆதமை மட்டும் மண்ணிலிருந்து படைத்துவிட்டு, அவரது மனைவியை அவரிடமிருந்து படைக்கிறான்.

அந்தக் காரணத்தையும் அல்லாஹ் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான். ஆண் பெண்ணிடத்தில் அமைதியையும் நிம்மதியையும் பெறவேண்டும் என்பதற்காகத் தான் ஆதமிலிருந்து ஹவ்வாவை அல்லாஹ் படைத்திருக்கிறான்.

எனவே ஆணுக்கு ஆண் என்றும், பெண்ணுக்குப் பெண் என்று தடம் புரண்டு போகிற மனித சமூகம், அல்லாஹ் ஆணிலிருந்து ஆணைப் படைக்கவில்லை என்றும் பெண்ணிலிருந்து பெண்ணைப் படைக்கவில்லை என்கின்ற அடிப்படைத் தத்துவத்தை சிந்திக்க வேண்டும். மேலும் ஆணுடைய ஒரு பகுதியிலிருந்து தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் அப்படிப் படைத்திருப்பதன் நோக்கமே ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் அன்பையும் கருணையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் என்பதையும் இத்தகையவர்கள் சிந்திக்க வேண்டும்.

யாரோ எவரோ என்று தெரியாது; ஆணுக்கு ஒரு ஊராக இருக்கும்; பெண்ணுக்கு வேறொரு ஊராக இருக்கும். இவனது குலமும் மொழியும் அவளது குலமும் மொழியும் கூட வெவ்வேறானவையாக இருக்கும். இப்படிப் பல வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம். அன்பைப் பரிமாறிக் கொள்கிறவர்களாகவும் பார்க்கிறோம்.

இது இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்புக்குள் கணவன் மனைவி என்றாகிவிடும் போது, ஒருவருக்கொருவர் மாய்ந்து மாய்ந்து அன்பையும் இரக்கத்தையும் பொழிகின்றனர். இவளுக்கு அவன் உதவுகிறான். அவனுக்கு இவள் பணிவிடை செய்கிறாள். இப்படியெல்லாம் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் ஈடுபாடு காட்டுவதையும் பார்க்கிறோம்.

எனவே கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பை நிறுவி, அவர்களில் ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஈர்க்கப்படுவதாக ஏற்படுத்தியது இறைவனின் ஆற்றலில் உள்ளதாகும். அதனால் தான் இந்த ஈர்ப்பைச் சொல்லிக் காட்டிய இறைவன், இதில் சிந்திக்கிற சமுதாயத்திற்குப் பல சான்றுகள் இருப்பதாகவும் கூறுகிறான்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:1)

அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில், ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் இறைவன் படைத்தான் என்று கூறி அனைவரும் சமம் என்றும் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதைப் போதிக்கிறான்.

ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்ததாகச் சொல்லுகிறான். ஹவ்வா உட்பட அனைத்து மனிதர்களையும் சேர்த்துக் கொண்டு ஆதம் என்கிற ஒரு ஆத்மாவிலிருந்து படைத்ததாகச் சொல்கிறான். அதாவது ஹவ்வா உட்பட அனைவரும் ஆதமிலிருந்து தான் உருவாக்கப்பட்டார்கள் என்பதாகச் சொல்கிறான். அதாவது நம் அனைவருக்கும் ஆதாம், ஹவ்வா மூலமாக இருந்தாலும், ஹவ்வாவுக்கு மூலம் ஆதாமாகத் தான் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் “ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து’ படைத்தாகச் சொல்கிறான். மேலும் அவரிலிருந்து அதாவது அவரில் ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து அவரது ஜோடியைப் படைத்ததாகவும், இந்த இரண்டு பேர் மூலமாக இவ்வுலகத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்த இறைவன் நான் தான் என்றும், எனவே எனக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இவைகளையெல்லாம் சொல்லக் காரணம், மனிதன் குடும்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் குடும்ப அமைப்பை உடைத்து தனியாக மனிதனால் ஒருக்காலும் வாழவே முடியாது என்பதை மனித சமூகம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஏதாவது காரணத்தைக் கூறி குடும்ப அமைப்பை மனிதன் உடைக்க முடியாது என்பதையும் நம்ப வேண்டும்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.  (அல்குர்ஆன் 6:89)

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.  (அல்குர்ஆன் 39:6)

அதேபோன்று ஆதமைப் படைத்துவிட்டு, எல்லாவிதமான இன்பங்களையும் கொடுத்து, சொர்க்கத்திலோ அல்லது தோட்டத்திலோ தங்கச் சொல்லும் போதுகூட, ஆதமை மட்டும் தனியாகத் தங்கச் சொல்லவில்லை. அவரது துணையுடன் தான் தங்கச் சொன்னான். ஏனெனில் அதில் தங்க வைப்பதற்கு முன்னாலேயே ஆதமுடைய ஜோடியைப் படைத்துவிட்டான்.

“ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்” என்று நாம் கூறினோம்.  (அல்குர்ஆன் 2:35)

எனவே தோட்டத்திலோ அல்லது சுவர்க்கத்திலோ குடியமர்த்தும் போதே ஜோடியாகத் தான் அல்லாஹ் குடியமர்த்துகிறான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் ஆதமை மட்டும் படைத்து, அவர் தனக்கு ஒரு ஜோடி வேண்டும் என்கிற அளவுக்கு அவரைத் தனியாக ஏங்க வைத்து, காக்க வைத்த பிறகு அவரது ஜோடியான ஹவ்வாவைப் படைக்கவில்லை. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் மத்தியில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. ஆதமைப் படைத்தவுடனேயே அவருக்குரிய ஜோடியையும் உடனே படைத்துவிட்டான் என்றே இந்த வசனம் நமக்குச் சொல்லிக் காட்டுகிறது.

எனவே இந்த ஆதாரங்களையெல்லாம் அலசிப் பார்க்கின்ற போது, ஆண் பெண் என்கிற அடிப்படையில் படைத்திருப்பது தான் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்பதை மனமார ஏற்றுக் கொண்டு வாழவேண்டும். எனவே இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை நியதிக்கு மாற்றமான உடலுறவு, பாலியல் உறவுகளுக்கு இஸ்லாத்தில் அறவே எந்த அனுமதியும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆண் பெண்ணல்லாத உறவு முறையை ஏற்றுக் கொள்ளவோ வலியுறுத்தவோ கூடாது.

சமீப காலமாக ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் மணமுடிக்கும் அவல நிலையைச் சரிகாண்கிற கேடுகெட்ட நிலையைச் சமூகத்தில் பாôக்கிறோம். இந்த அவல நிலை இஸ்லாத்தில் இருப்பதாகவும், இஸ்லாம் அதை அங்கீகரிப்பதாகவும் சிலர் காட்டப் பார்க்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் பட்டியலில் வரமாட்டார்கள் என்பதையும் எச்சரிப்பதற்காகத் தான், கணவன் மனைவி அதாவது ஆண் பெண் உறவுகளை இப்படி மிகவும் வலியுறுத்தி சொல்கிறோம்.

அதேபோன்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்பதைப் போன்றும் இப்படியெல்லாம் இஸ்லாமிய குடும்பங்களிலும் இருக்கத் தான் செய்கிறது என்றும் மீடியாக்களும் பத்திரிக்கைகளும் முஸ்லிம்கள் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் சிலரை வைத்து தவறாகச் சித்தரிக்கின்றனர்.

அதாவது முஸ்லிமல்லாதவர்கள் இதைச் சரி காண்பதினால் இஸ்லாமும் முஸ்லிம்களும் சரிகாண்கிறார்கள் என்று தவறாகக் காட்டுவதற்காக சில கேடுகெட்ட ஷியாக்களை முஸ்லிம்கள் எனக் காட்டப் பார்க்கிறார்கள். எனவே யாரெல்லாம் இப்படிச் சொல்கிறார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும், எந்தக் காலத்திலும் ஆணும் பெண்ணும் தான் இல்லறத்திலும் குடும்ப உறவுகளிலும் ஈடுபட வேண்டும் என்பதையும் சரியாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம்.

மேலும் இதுபோன்ற ஓரினக் கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே இறைவன் ஒரு நபியை அனுப்பி எச்சரித்து அந்தச் சமூகத்தை அழித்திருக்கிறான் என்பதிலிருந்தே அது மனித சமூகக் கட்டமைப்பையே நாசமாக்குகின்ற மிகப் பெரிய மாபாதகச் செயல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

மஹ்ஷரில் மனிதனின் நிலை

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி,  மங்கலம்

ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.

அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:6-8)

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்என்று கூறியதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம் (5518)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால், அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்என்று கூறியதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம் (5519)

கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

மனிதர்களின் பொதுவான நிலை

இந்த உலகத்தில் பிறக்கும் போது மனிதர்கள் எவ்வாறான நிலையில் இருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய நாளில் அனைவரும் இருப்பார்கள். ஆடை அணியாதவர்களாக, செருப்பு போடாதவர்களாக, விருத்தசேதனம் செய்யாதவர்களாக பரந்து விரிந்த நிலப்பரப்பில், பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருப்பார்கள். நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நூதனவாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த நிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள். இதற்குரிய ஆதாரங்களை இப்போது காண்போம்.

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

(அல்குர்ஆன் 21:104)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்என்று கூறிவிட்டுப் பிறகு “எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.  பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூல்: முஸ்லிம் (5102)

கெட்ட மனிதர்களின் நிலை

பூமியில் வாழும் காலத்தில் நாமெல்லாம் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நல்ல காரியங்கள் செய்கிறோமா? தீய காரியங்கள் செய்கிறோமா? என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தமக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு தரும் காரியங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறர் நலம் மறந்து, மறுத்து சுயநலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் தவறான குணத்தாலும் காரியத்தாலும் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மக்கள், இவ்வுலகில் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, பாவங்களுக்குத் தோதுவாக மறுமையில் சில வகையான நிலைகளில் நிறுத்தப்படுவார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

இறைமறுப்பாளர்களின் நிலை

இறைவன் கொடுத்த பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல் அவனை மறுத்துக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று, இறைவன் இருப்பதாக நம்பினாலும் அவனைச் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அவனுக்குரிய ஈடு இணையற்ற இடத்தில் மற்ற படைப்பினங்களை வைத்து அல்லது அவை இருக்கும் இழிவான நிலைக்கு இறைவனை தரம் தாழ்த்தி மகிழும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.

மறுமை நாளில் மஹ்ஷரில் இவர்களுக்கென்றே குறிப்பிட்ட சில வகையான நிலைகள் இருக்கின்றன. எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அந்த நாளில் இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறதோ? என்ற பீதியில் பதறியவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களது முகம் கவிழ்ந்த நிலையில் இறைவனிடம் இழுத்துச் செல்லப்படுவார்கள். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.

அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.

(அல்குர்ஆன் 80:37-42)

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். “நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).

(அல்குர்ஆன் 3:106, 107)

சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும். “அதுவே பிரிவுஎன்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும்.  அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான். பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான்.

(அல்குர்ஆன் 75:22-33)

முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழி கெட்டோராகவும் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 25:34)

ஒருமனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இந்த உலகில் அவனை இரு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி (4760)

போதனையை புறக்கணித்தவர்களின் நிலை

ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராகத் திகழ வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம்.

தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான்.

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.

(அல்குர்ஆன் 17:97, 98)

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்என்று (இறைவன்) கூறுவான்.

அல்குர்ஆன் (20:124-126)

கொலையாளிகளின் நிலை

தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை.

ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில் கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்துவரப்படுவார்கள்.

(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதீ (2955)

நீதம் செலுத்தாதவர்களின் நிலை

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.

மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள். இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?

எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸாயீ (3881)

வட்டிக்காரர்களின் நிலை

வட்டி என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் தீமை தரக்கூடியதல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கைத் தரும் பெரும்பாவமே வட்டியாகும். வட்டியினால் பலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏராளமான தீமைகள், பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.

இப்படிப்பட்ட வட்டியினால் மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை; எனக்கு உலக ஆதாயமே முக்கியம் என்று சுயநலத்தோடு பொதுநலத்தை மறந்து பல மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இழிவு என்ன தெரியுமா? பூமியில் வாழ்ந்த முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர்கள் வரை எல்லோரும் நிற்கும் மாபெரும் சபையில் பைத்தியமாக உளறிக் கொண்டிருப்பார்கள்; புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கேவலம் வேண்டுமா? என்பதை வட்டி வாங்குபவர்கள் யோசிக்க வேண்டும்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் (2:275)

யாசகம் கேட்பவர்களின் நிலை

குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள். உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (1474, 1475)

மேசாடி செய்பவர்களின் நிலை

இறையச்சம் இல்லாமல் பிறருக்குரிய பொருளாதாரத்தை, பொருட்களை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்கும் மோசடிக்காரர்கள் சமுதாய மக்களிடத்தில் இருந்து மறைந்து கொள்ளலாம்; தங்களது மோசடியை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை நாளில்  இவ்வாறு தப்பிக்க இயலாது. இவர்களின் முகத்திரையை மற்றவர்களின் முன்னிலையில் வல்ல இறைவன் கிழித்தெறிவான்.

இத்தகைய மோசடி மன்னர்களுக்கு பல இழிவான நிலைகளைக் கொடுத்து கேவலப்படுத்துவான். மோசடிக்காரர்கள் தாங்கள் செய்த மோசடிப் பொருட்களைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இனம் காட்டும் விதமாக அவர்களுக்கு அசிங்கமான முறையில் கொடி ஒன்று குத்தப்பட்டிருக்கும். இவ்வாறான வெட்கக்கேடான நிலையில் வெட்டவெளி மைதானத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் உலாவந்து கொண்டிருப்பார்கள். இந்த அவலத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் மோசடி செய்வதற்குக் கடுகளவும் நெருங்க மாட்டார்கள் என்பதே உண்மை.

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:161)

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, –அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது – “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3743, 3266)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு  மறுமை நாளில் (அவனுடைய மோசடியை  வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது “இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (6178, 6177)

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, “மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது   நான், “என்னால் உனக்கு எந்த உதவியும்  செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்‘’என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு  (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது  நான், “என்னால் உனக்கு எந்த உதவியும்  செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்என்று கூறி விடுவேன்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3073)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

அறிவிப்பவர்: சயீத் பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி (2452)

ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை

மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள்.

ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான். எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா?

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லைஎன்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லைஎன்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1402)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் எவன் கையிலுள்ளதோஅல்லது “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோஅவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும்.  அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும்.  இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி (1403, 4659, 1403, 1460)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்என்று சொல்லும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு, “அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லதுஎன்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1403), திர்மிதீ (2938)

உங்களது கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (4659)

பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1803)