ஏகத்துவம் – ஆகஸ்ட் 2012

தலையங்கம்

வளைக்கும் ஐரோப்பா வளையும் சவூதியா

ஒலிம்பிக் விளையாட்டில் சவூதி, கத்தார் போன்ற நாடுகள் தங்கள் பெண்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்நாடுகளின் ஆண்களும் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்திருந்தது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்த மிரட்டலை விமர்சித்து ஏகத்துவத்தில், “ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்து.

இந்த மிரட்டல்களுக்குப் பணியாமல் இருந்த ஒரேயொரு முஸ்லிம் நாடு சவூதி அரேபியா தான். இப்போது அந்நாடும் பணிந்து விட்டது.

ஏற்கனவே புருணை தாருஸ்ஸலாம் தன் பங்கிற்குப் பெண்களை அனுப்ப முடிவு செய்து விட்டது. கத்தாரும் நான்கு வீராங்கனைகளை அனுப்பி, தன்னுடைய இஸ்லாமிய பிடிமானத்தைப் பிரகடனப் படுத்தியிருக்கின்றது.

இப்போது சவூதியும் இரண்டு பெண்களை இந்த ஒலிம்பிக் விளையாட்டிற்கு அனுப்புவதற்குப் பணிந்திருக்கின்றது என்று சொல்வதை விட மேற்கத்திய நாடுகள் விரித்த வலைக்குப் பலியாகியிருக்கின்றது.

இவ்விரு பெண்களில் ஒருவர் பெயர் ஷத்தான் ஷஹர்கானி! ஜூடோ விளையாட்டில் பங்கேற்கிறார். மற்றொரு பெண்ணின் பெயர் சாரா அத்தார்! இவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கிறார்.

ஆரம்பத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் எங்களிடம் இல்லை என்றே சாதித்து வந்தது. இறுதியில் சரிந்து, சாய்ந்து விட்டது.

இவர்களுடைய நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போன்று இருக்கின்றது.

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3456

சவூதி அரேபியா இதற்கான சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

 1. ஷரீஅத் அடிப்படையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
 2. விளையாட்டு வீராங்கனையின் உறவினர் உடன் இருக்க வேண்டும்.
 3. விளையாட்டில் ஆண்களுடன் கலக்கக்கூடாது.

இத்தனை நிபந்தனைகளையும் விதித்து பங்கேற்க அனுமதித்திருக்கின்றது. இந்த நிபந்தனைகளை இப்போது இவர்கள் பின்பற்றலாம். இனிவரும் காலங்களில் இனிவரும் வீராங்கனைகள் இதில் நிற்பார்களா என்பது வினாக்குறியே!

சவூதி இவ்வாறு தளர்ந்த மாத்திரத்தில் உலக நாடுகளின் ஊடகங்கள், ஏடுகள் இதைப் பெரிது பெரிதாக எழுதுகின்றன. இதை மிகப் பெரும் முன்னேற்றமாக, புரட்சியாக வர்ணிக்கின்றன.

குட்டைப் பாவாடை சானியா மிர்ஸாவைப் போன்ற பெண்களை அரைகுறை ஆடைகளில் ஆடவிட்டு அவர்களின் அங்க அவயங்களை அங்குலம், அங்குலமாகக் கண் பார்வையினால் கற்பழித்துச் சுவைக்க நினைக்கும் இந்தக் காமுகச் சிந்தனையாளர்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருப்பதைத் தான் இது காட்டுகின்றது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் பலியாகாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு இருக்க வேண்டுமானால் உறுதியான ஈமான் இருக்க வேண்டும். அதுவே நமது அவாவும் ஆதங்கமும் ஆகும்.

ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்

பராஅத் இரவு, மிஃராஜ் இரவு என்று இல்லாத, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத இரவுகளை உயிர்ப்பிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உற்சாகம் காட்டி உணர்வூட்டும் உலமாக்கள், நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய, வற்புறுத்திய ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளை, அதில் அடங்கியுள்ள லைலத்துல் கத்ரை அடைவதற்கு ஆர்வம் ஊட்டுவதில்லை; ஆசை காட்டுவதில்லை.

ரமளான் 27ஆம் இரவு மட்டும் அமர்க்களமான, ஆர்ப்பாட்டமான அமல்களைச் செய்து விட்டு, அதுவும் நபி (ஸல்) அவர்கள் கற்றும் காட்டியும் தராத வகையில் அமல்களைச் செய்து விட்டு ரமளானின் பிந்திய 10 இரவுகளை இருட்டாக்கி விடுகின்றனர்; இல்லாமல் ஆக்கி விடுகின்றனர்.

இதற்குக் காரணம் 27ல் லைலத்துல் கத்ர் இருப்பதாக அவர்கள் குருட்டுத்தனமாக நம்புவது தான். அதனால் இதைத் தான் லைலத்துல் கத்ர் என்று துணிந்து பிரச்சாரமும் செய்கின்றனர். உப்புச் சப்பில்லாத, உருப்படாத ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர்.

லைலத்துல் கத்ர் என்ற வார்த்தையில் மொத்தம் 9 அரபி எழுத்துக்கள். இந்த வார்த்தை குர்ஆனில் மூன்று தடவை இடம்பெறுகின்றது. ஆக, ஒன்பதை மூன்றால் பெருக்கினால் 27 வருகின்றது. அதனால் லைலத்துல் கத்ர் 27ல் தான் உள்ளது என்ற கூறுகெட்ட வாதத்தைக் கூறுகின்றனர்.

இது ஓர் அபத்தமான வாதம் என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ் என்ற அரபி வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன என்பதற்காக நான்கு கடவுள்கள் என்று சொல்வது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு இது அபத்தமாகும். இந்த அபத்தங்கள் ஒருபோதும் ஆதாரமாகாது.

அடுத்து முஸ்லிமில் இடம்பெறும் ஒரு செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்என்று கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழிபாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக் கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்என்று பதிலளித்தார்கள். பிறகு “அல்லாஹ் நாடினால்என்று கூறாமல் “அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள்.

நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் “அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ்

நூல்: முஸ்லிம் 1272, 1999

“அடையாளத்தை வைத்து நான் அறிந்து கொள்வேன்” என்று  கூறுவதன் மூலம் நபித்தோழர் தனது சொந்தக் கருத்தைத் தான் இங்கு கூறுகின்றார் என்பதை சாதாரணமாக விளங்கிக் கொள்ளலாம்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னால், அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் 21ஆம் இரவில் தான் லைலத்துல் கத்ர் என்று சொல்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் -அந்த இரவின் காலையின் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள் – “யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது என மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்!எனக் கூறினார்கள்.

அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2027

இந்த நபித்தோழரும் 21ஆம் இரவில் லைலத்துல் கத்ர் என்று அதன் அடையாளத்தை வைத்துத் தான் கூறுகின்றார்.

27ல் தான் லைலத்துல் கத்ர் என்று கூறும் ஆலிம்கள் இந்தச் செய்தியையும் மக்களிடம் கூற வேண்டுமல்லவா? ஆனால் இதைக் கண்டு கொள்வதில்லை.

உண்மையில் லைலத்துல் கத்ர் என்பது 27ல் மட்டுமல்ல. பிந்திய 10 இரவுகளில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில் தான் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “லைலத்துல் கத்ர்‘ (கண்ணியமிக்க இரவு) பற்றி (“அது ரமளான் மாதத்தில் எந்த இரவுஎன்று) அறிவிப்பதற்காக (தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள்என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 49

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 2023

நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் “லைலத்துல் கத்ர்எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2015

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் “லைலத்துல் கத்ர்இரவைத் தேடிக்கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1988

இந்த ஹதீஸ்களெல்லாம் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இருப்பதை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த ஆலிம்கள் தானும் கெட்டு, மக்களையும் வழிகெடுத்து, 27ஆம் இரவில் மட்டும் நிற்க வைத்து அன்றைய இரவுகளில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து, இது மட்டும் தான் லைலத்துல் கத்ர்; ஏனைய இரவுகளில் இல்லை என்றாக்கி விடுகின்றனர்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:25

இதன் மூலம் ஏமாந்த மக்கள் அனைவரின் பாவ மூட்டைகளையும் இவர்கள் சுமக்கத் துணிந்து விட்டனர். அல்லாஹ் காப்பானாக!

எனவே, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை 27ஆம் இரவில் மட்டும் தேடாமல் பிந்திய பத்து இரவுகளிலும் தேடுவோம்; லைலத்துல் கத்ரை அடைவோம்.

இதன் மூலம் நமக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றனர்.

 1. லைலத்துல் கத்ர் அன்று மட்டும் அல்லாமல் மீதி 9 அல்லது 8 நாட்கள் செய்த வணக்கத்தின் நன்மைகள்.
 2. லைலத்துல் கதர் இரவின் நன்மைகளும் நிச்சயமாகக் கிடைத்து விடுகின்றது.

பொதுவாக வியாபாரிகளுக்கு இந்த இரவுகளில் தான் கொள்ளை வியாபாரம் நடக்கும். வியாபாரமும் செய்து கொள்ள வேண்டியது தான். ஆனால் லைலத்துல் கத்ரை இழந்து விடக் கூடாது.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

அல்குர்ஆன் 7:163

இஸ்ரவேலர்களின் புனித நாளான சனிக்கிழமை அன்று சோதித்தது போன்று இறைவன் நம்மைச் சோதிப்பான்.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?” என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:94

ஹஜ் வணக்கத்தின் போது வேட்டையாடத் தடை செய்யப்பட்ட நேரத்தில் வேட்டைப் பிராணிகள் நமக்கு முன்னால் வந்து வந்து போகுமாறு சோதிக்கின்றான்.

இதுபோன்றே லைலத்துல் கத்ரைத் தேடும் பிந்திய பத்து இரவுகளிலும் வியாபாரம் செழிப்பாக நடக்கும். இந்தச் சோதனைகளுக்கு நாம் பலியாகி விடாமல் லைலத்துல் கத்ரை அடைவோம். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம்.

ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தைக் கடைப்பிடித்ததிலிருந்து இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

வரும் ஆண்டு இருப்போமா என்று சொல்ல முடியாது. எனவே இந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் லைலத்துல் கத்ரை அடைவோம், இன்ஷா அல்லாஹ்.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்  தொடர்: 15

அரசியின் அன்பளிப்பு எது?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

“மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித் தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன் திரும்புகிறார்கள் என கவனிக்கப் போகிறேன்” என்றும் கூறினாள். (அல்குர்ஆன் 27:35)

தனக்குக் கட்டுப்பட்டு தனது அதிகாரத்தின் கீழ் வருமாறும், இஸ்லாத்தை ஏற்குமாறும் நபி சுலைமான் (அலை) அவர்கள், ஸபா எனும் பகுதியின் அரசிக்கு ஓர் கடிதத்தை “ஹுத்ஹுத்” பறவையின் மூலம் அனுப்புகின்றார்கள்.

அக்கடிதத்தை அரசி பெற்றவுடன் தனது அவையினரிடம், அது தொடர்பாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்கிறாள். ஆலோசனையின் இறுதியாக அரசி கூறிய வார்த்தையே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னோட்டமாக சுலைமான் நபிக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி நிலைமையை கணிக்கப் போகிறேன் என்று அரசி கூறியதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இதன் பின்னர் நடந்தவை வசனத்தின் தொடர்ச்சியில் கூறப்படுகின்றது.

இதில் விஷயம் என்னவெனில் சுலைமான் நபிக்கு அந்த அரசி எதை அன்பளிப்புச் செய்தாள்? இதில் தான் விரிவுரையாளர்கள் தங்கள் கைவரிசையை செமத்தியாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூறும் விளக்கவுரை:

ஆண், பெண் பணியாளர்களில் எண்பது பேரை தலையை மூடியவர்களாக அவள் அன்பளிப்பாக அனுப்பினாள். ஆண் அடிமைகள் யார்? பெண் அடிமைகள் யார்? என்பதை (சுலைமான்) அறிந்தால் அவர் நபியாவார். அவ்வாறு அறியவில்லையானால் அவர் நபியல்ல என்றும் கூறினாள் என ஸயீத் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம்11, பக்கம் 365

இப்னு ஜுரைஜ் கூறியதாவது: இருநூறு ஆண் அடிமைகள் மற்றும் இரு நூறு பெண் அடிமைகளை அவள் அன்பளிப்புச் செய்தாள்.

ஆண்களுக்கு பெண்களின் ஆடைகளையும் பெண்களுக்கு ஆண்களின் ஆடைகளையும் மாற்றி அணிவித்து சுலைமான் நபியிடம் அனுப்பியதாகவும், ஆண்கள் யார்? பெண்கள் யார் என்பதை சுலைமான் சரியாகக் கண்டுபிடிக்கின்றாரா? என்பதைச் சோதிப்பதற்காக அரசி இவ்வாறு செய்ததாகவும் விரிவுரை நூல்களில் கூறப்படுகின்றது.

நூல்: தப்ரீ, பாகம் 18, பக்கம் 53

அபூஸாலிஹ் கூறியதாவது: தங்க செங்கலை அவள் அன்பளிப்புச் செய்து, “அவர் (சுலைமான்) இவ்வுலகை விரும்பினால் அதை நான் அறிவேன். மறுமையை விரும்பினால் அதையும் நான் அறிவேன்’ என்று அரசி கூறினாள்.

நூல்: தப்ரீ, பாகம்18, பக்கம் 55

அரசி, சுலைமான் நபிக்கு அன்பளிப்பு வழங்கினாள் என்ற தகவல் மட்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அது என்னவென்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ எங்கும் கூறப்படவில்லை. இந்நிலையில் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டியது என்ன? சுலைமான் நபிக்கு அவள் எதையோ அன்பளிப்பாக வழங்கியிருக்கிறாள் என்று நம்பிவிட்டுப் போகவேண்டும். இதுவே குர்ஆன் கூறும் வழி. இதைத் தாண்டி, அது என்ன பொருள் என்ற ஆய்வுக்குள் செல்வது அவசியமற்றது, தேவையற்றது.

தான் கற்றுத் தராததை இறைவன் நம்மிடத்தில் விசாரிக்கப் போவதில்லை. ஆனால் விரிவுரையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்குத் தகுந்தாற் போல ஆளாளுக்கு ஒன்றைக் குறிப்பிடுகின்றார்கள். இறைவனே கூறாமல் விட்டுவிட்டதை இவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இவ்வாறு கற்பனை அடிப்படையில் விளக்கம் அளிப்பது தேவை தானா? இமாம்களின் தஃப்ஸீர்களில் அர்த்தங்களை விட அபத்தங்களே நிறைந்துள்ளன என்பதை இதன் மூலம் அறியலாம்.

சில கட்டுக்கதைகள்

பறவையின் மூலம் சுலைமான் (அலை) ஸபாவின் அரசிக்குக் கடிதம் அனுப்பியதிலிருந்து அவள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரையிலான தகவல்கள் யாவும் 27வது அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படுகின்றது. சுலைமான் நபிக்கும் அந்த அரசிக்கும் இடையில் நடந்த உரையாடல்கள், தன்னை விட வலிமையான அதிகாரத்தை இறைவன் சுலைமான் நபிக்கு அளித்ததை அறிந்த அரசி உடனே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது என்பன போன்ற விஷயங்கள் யாவும் அதில் இடம் பெற்றுள்ளது. படிப்பினை பெறப் போதுமான தகவல்களை இறைவன் குர்ஆனில் கூறி விட்டான்.

ஆனால் இறைவன் குறிப்பிடாத, இது தொடர்பாக இறைத்தூதர் கற்றுத் தராத பல கட்டுக்கதைகள் விரிவுரை நூல்களில் இமாம்களின் விளக்கம் என்ற பெயரில் பரவலாகக் காணப்படுகின்றது. அந்த கதைகளையும் அறியத் தருகிறோம்.

சுலைமான் நபியும் ஷைத்தானும்

சுவையான (தூய்மையான) தண்ணீரை (எது என) எனக்கு தெரிவியுங்கள், அது பூமியிலிருந்தோ, வானத்திலிருந்தோ இருக்கக்கூடாது என சுலைமான் நபியிடம் அரசி கேட்டாள். சுலைமான் நபியின் வழக்கம் தனக்கு தெரியாத (கேள்வி) ஏதும் வந்தால் அதைப் பற்றி மனிதர்களிடம் கேட்பார். அதற்கான விளக்கம் அவர்களிடம் இருந்தால் சரி, இல்லையெனில் ஜின்களிடம் கேட்பார். அவர்கள் அறிந்தால் சரி, இல்லையெனில் ஷைத்தான்களிடம் கேட்பார். (இதற்கான பதில் மனித, ஜின்களில் யாருக்கும் தெரியாததால்) ஷைத்தான்களிடம் கேட்டார். இது மிகவும் எளிதானது என ஷைத்தான்கள் பதில் கூறின. குதிரைகளை ஓடவிட்டு பிறகு அதன் வியர்வையை பாத்திரத்தில் நிரப்புங்கள் (அதுவே அவள் குறிப்பிட்ட தண்ணீர்) என்று ஷைத்தான்கள் பதிலளித்தன. அதன் பிறகு குதிரைகளின் வியர்வை என சுலைமான் நபி, அவளிடம் கூறினார். நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் என்று அரசி கூறி, இறைவனின் நிறத்தை எனக்குச் சொல்லுங்கள் என (இரண்டாவதாக) கேட்டாள்.

இதைக் கேட்டு சுலைமான் நபி தனது அரியணையிலிருந்து பாய்ந்து சுஜுதில் விழுந்தார். இது சுலைமான் நபிக்கு (பதிலளிக்க) சிரமமளித்தது. அவள் சுலைமான் நபியிடமிருந்து எழுந்து நிற்க, அவளது படையினரும் (எழுந்து) பிரிந்து செல்லலானார்கள். இந்நிலையில் தூதுவர் (வானவர்) சுலைமானிடம் வந்து உமது காரியம் என்ன? என்று இறைவன் கேட்டான் என கூறினார். அதற்கு சுலைமான், இறைவா அவள் கூறியதை நீ நன்கு அறிவாய் என்று கூறினார். அதற்கு வானவர், உங்கள் அரியணையிடம் நீங்கள் திரும்பி செல்லுமாறும் அவளிடமும் அவளது படையினரிடமும் ஆளனுப்பி (அவர்களை வரவழைத்து) அவள் முதலில் உங்களிடம் கேட்டதை பற்றி திரும்ப அவர்களிடம் கேட்பீராக. இதை இறைவன் உமக்கு உத்தரவிடுகிறான் என்று (வானவர்) கூறினார்.

சுலைமானும் அவ்வாறே செய்தார். (அரசியும் அவளது படை) அவர்கள் சுலைமானிடம் வந்த போது நீ என்னிடம் என்ன வினவினாய்? என்று சுலைமான் (அரசியை நோக்கி) கேட்டார். நான் வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் இல்லாத சுவையான தண்ணீரை பற்றி கேட்டேன். அதற்கு நீங்கள் பதிலளித்து விட்டீர்கள் என அவள் கூறினாள். அதற்கு சுலைமான் வேறு ஏதேனும் என்னிடம் கேட்டாயா? என்று கேட்க, இதை தவிர வேறு எதுவும் நான் கேட்கவில்லை என்று அரசி பதிலளித்தாள். அவர்கள் அனைவருக்கும் அதை (இறைவனின் நிறம் பற்றிய கேள்வியை) மறக்கடிக்கச் செய்தான்.   (நூல்: அல்கஷ்பு வல் பயான், பாகம் 7, பக்கம் 213, 214)

இவ்வாறு ஒரு கட்டுக்கதை பரவலாக விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது. பல அபத்தங்கள் நிறைந்த கட்டுக்கதை இது. இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ்வின் தூதர் இதைக் கூறினார்களா?

இதில் குதிரையின் வியர்வை சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது? யார் இதை சுவைத்துப் பார்த்தது? இதற்காகக் குதிரையை எதற்கு ஓட விட வேண்டும்? ஆடு, மாடு போன்ற பிராணிகளும் இந்த நிபந்தனையில் வருமல்லவா? எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதையைப் பாருங்கள்.

அவள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அவளது விஷயத்தில் இமாம்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். அவள் முஸ்லிமாகி விட்ட போது சுலைமான் நபி அவளை திருமணம் செய்ய விரும்பினார். இதை அவர் நாடும் போது அவளின் இரு கெண்டைக்கால்களில் இருந்த அதிகமான முடியை பார்த்ததால் (அதை) வெறுத்தார். எவ்வளவு அருவருக்கத்தக்கது? என்று கூறி இதை அகற்றும் வழி என்ன? என்று மனிதர்களிடம் கேட்டார். அவர்கள் கத்தி என்றனர். இதுவரை என்னை எந்த இரும்பும் தீண்டியதில்லை என்று அவள் கூறினாள். எனவே அது அவளது கால் கெண்டையை துண்டித்துவிடும் என்று கூறி கத்தியை சுலைமான் (வேண்டாமென) வெறுத்தார். பிறகு ஜின்களிடம் (வழி) கேட்டபோது எங்களுக்கு தெரியாது என்றனர். பிறகு ஷைத்தான்களிடம் கேட்டார். அதற்கு அவை சற்று தாமதித்து உங்களுக்காக அதை வெண்மையான வெள்ளியாக்குவதற்கு நாங்கள் தந்திரம் செய்கிறோம், அவளுக்காக முடி அகற்றும் கருவியையும் குளியலைறையையும் ஏற்பாடு செய்யுங்கள் என்று ஷைத்தான்கள் கூறின.

நூல்: தஃப்ஸீருல் குர்ஆன், பாகம்7, பக்கம் 214

இது இறைத்தூதர் மீது இட்டுக்கட்டிப் பொய் கூறும் ஒரு மாபாதகச் செயல். கண்டிப்பாக இஸ்லாத்தின் எதிரிகள், இறைத்தூதர்களின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் வேண்டும் என்றே இட்டுக்கட்டி அவிழ்த்து விட்டிருக்கும் ஒரு கட்டுக்கதை, பொய்க் கதை தான் இது.

எவ்வித மறுப்புமின்றி இது போன்ற கப்ஸாக்களை விரிவுரை நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் எனில் விரிவுரை நூல்களை வேதமாகப் பார்க்கும் முஸ்லிம்கள், ஆலிம்கள் தங்கள் பார்வையைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? திருக்குர்ஆன் ஒன்று தான் தவறே இல்லாத வேதம் என்பதை இதன் மூலம் மீண்டும் பதிவு செய்து கொள்கிறோம்.

ஆதம் நபி நெருங்கிய மரம்

ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்என்று நாம் கூறினோம்.  (அல்குர்ஆன் 2:35)

ஆதம் (அலை) அவர்களையும், அவர்களிலிருந்து அவருக்கான துணையையும் இறைவன் படைத்து இருவரையும் சொர்க்கத்தில் வசிக்கச் செய்தான். அதில் தாராளமாக உண்ணுமாறும் குறிப்பிட்ட மரத்தை இருவரும் நெருங்க வேண்டாம் என்றும் இறைவன் உத்தரவிட்டான். இதை இருவரும் மீறியதால் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது அனைவரும் அறிந்த வரலாறு தான். இறைவனின் உத்தரவை மீறினால் இறைவனின் கோபத்திற்கு, தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதே இவ்வரலாற்றிலிருந்து பெற வேண்டிய படிப்பினை ஆகும். இதில் விளக்குவதற்கு வேறு ஒன்றும் இல்லை.

இருவரையும் நெருங்க கூடாது என்று தடுத்த மரம் எதுவென்பதை இறைவன் குறிப்பிடவில்லை. அதைக் குறிப்பிடாமல் போவதால் இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினையில் எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை.

தஃப்ஸீர் நூல்களில் அது எந்த மரம் என்று எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி இமாம்கள் விளக்கமளித்துள்ளனர். அது பற்றி:

வஹ்ப் பின் முனப்பஹ் கூறியதாவது: இறைவன் ஆதம் (அலை) அவர்களை (நெருங்க விடாது) தடுத்த மரம் கோதுமை ஆகும். எனினும் சொர்க்கத்தில் அதன் ஒரு தானியம், மாட்டின் இரு கொம்புகளை போன்றது. நுரையை விட மென்மையானது. தேனை விட சுவையானது.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 1, பக்கம் 283

அது அத்திமரம் என்று கதாதா கூறுகிறார்.

அது பேரிச்ச மரம் என அபூமாலிக் கூறுகிறார்.

அது ஆரஞ்சு மரம் என யஸீத் கூறுகிறார்.

ஜஃத் பின் ஹுபைரா கூறுவதாவது: ஆதம் (அலை) அவர்களை இறைவன் சோதித்த மரம் திராட்சை ஆகும்.

என்ன நடக்கிறது இங்கே? இறைவன் கூறாத ஒன்றை ஆளாளுக்கு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்ற, வாய்க்கு வருகின்ற பழங்கள் அத்தனையையும் குறிப்பிடுகின்றார்கள். இவை தான் குர்ஆனை நன்கு விளங்கிட உதவும் விளக்கங்களா? தஃப்ஸீர்களா?

இவர்கள் குறிப்பிட்டதில் சிலவற்றுக்கும் மரத்திற்கும் சம்பந்தமில்லை என்பது தனி விஷயம். கோதுமை எந்த மரத்தில் விளைகின்றது?

சாதாரண அறிவும், கொஞ்சம் இறை நம்பிக்கையும் உள்ள யாரும் இது அதிகப் பிரசங்கித்தனம், இறைவனுடைய எல்லையை மீறும் எகத்தாளம் என்று அறிந்து கொள்ள இயலும். இதிலிருந்து இமாம்களின் விளக்கங்களில் சில உண்மை இருந்தாலும் உளறல்களுக்கும் பஞ்சமில்லை என்ற பேருண்மையை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொண்டால் சரி.

—————————————————————————————————————————————————————-

ஜும்ஆவின் சிறப்புகள்

வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குரிய நாள்

இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414

மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: அபூதாவூத் 883

ஜும்ஆ தொழுகைக்காகக் குளித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 858

ஜும்ஆ தொழுகைக்கு ஒரு பாங்குதான்

தவ்ஹீத் பள்ளிவாசல்களைத் தவிர உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் என்று கூறப்படுபவற்றில் ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுகின்றனர். இது நபிவழிக்கு எதிரான செயலாகும். அனைத்து தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு கூறுவதைப் போல் ஜும்ஆ தொழுகைக்கும் ஒரு பாங்குதான் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது.

அறிவிப்பவர்: சாயிப் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி 912

ஜும்ஆ பாங்கு கூறப்பட்டால் வியாபாரம் கூடாது

ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

பாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால், அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.

மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.

ஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.

நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.

நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?

நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?

நாமே செய்வதும் நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்ததாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபாரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.

எனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை நிறுத்தியாக வேண்டும்.

ஜும்ஆ தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும்

ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 342, திர்மிதி 198

ஜும்ஆ தொழுகைக்கு முன் செய்ய வேண்டியவை

ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி (ரலி), நூல்: புகாரி 883

முஸ்லிமில் அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் ‘பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து பெறப்படும் ஜும்ஆவின் ஒழுங்குகள்:

 1. ஜும்ஆ நாளில் பல் துலக்குதல் 2. இயன்ற வரை நன்றாகச் சுத்தமாகக் குளித்தல் 3. தலைக்கு எண்ணை தேய்த்தல் 4. நறுமணத்தை பூசிக் கொள்ளுதல் 5. நம்மிடம் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிதல் 6 பள்ளிவாசலில் நெருக்கமாக இருக்கும் இரண்டு நபர்களை பிரிப்பது கூடாது 7. இமாம் உரையாற்ற ஆரம்பிக்கும் வரை தம்மால் இயன்ற அளவு இரண்டிரண்டு ரக்அத்துகளாகத் தொழுதல் 8. இமாம் உரையாற்றும் போது மவுனமாக இருத்தல்.

முன்கூட்டியே பள்ளிக்கு வருவதன் சிறப்புகள்

ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 881

முந்தி வருபவரை பதிவு செய்யும் மலக்குமார்கள்

ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1416

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

ஓராண்டு நோன்பு நோற்று, நின்று வணங்கிய கூலி

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூல்: நஸயீ 1381

இமாம் உரையாற்றும் போது பேசக்கூடாது

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடுஎன்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 934

இமாம் உரையாற்றும் போது விளையாடக்கூடாது

யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1419

ஜும்ஆவிற்கு வரும் நல்லவர்களும் கெட்டவர்களும்

மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப்படுவார்என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.

ஜும்ஆ தொழாதவர்களுக்கான தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி “மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1570

அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி)

நூல்: திர்மிதி 460

ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்து விட வேண்டும் என எண்ணியதுண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 1156

பெண்களும் ஜும்ஆவிற்கு வருதல்

நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி

நூல்: முஸ்லிம் 1580

மேற்கண்ட ஹதீஸில் ஒரு பெண்மனி ஜும்ஆவில் கலந்து கொண்டு, நபியவர்கள் ஜும்ஆ பயானில் என்ன பேசினார்கள் என்பதைக் கேட்டுள்ளார். இதிலிருந்து பெண்களும் ஜும்ஆ தொழுகைக்கு வரலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

பைத்தியம் பலவிதம்            தொடர்: 4

ஒளிக்கு ஏது உணவும் நீரும்

கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்என்றும் “அல்லாஹ்வின் தூதர்என்றும் சொல்லுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 3445

தம்மைக் கடவுள் நிலைக்கு யாரும் உயர்த்தி விடக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

ஆனால் பரேலவிசப் பைத்தியங்களோ நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் ஸ்தானத்தில் தூக்கிக் கொண்டு நிறுத்தி, நபியவர்களின் அந்த எச்சரிக்கையைத் தூக்கி எறிந்து விட்டனர். இதற்கு எடுத்துக்காட்டு தான் நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று அவர்கள் எடுத்து வைக்கும் வாதம்.

தங்களின் வழிகெட்ட வாதத்திற்காக எப்படியெல்லாம் குர்ஆனையும், ஹதீஸையும் வளைக்கின்றார்கள்; திரிக்கின்றார்கள் என்பதற்குப் பல சான்றுகளை நாம் காட்டலாம். கடந்த இதழ்களில் அந்தச் சான்றுகளில் சிலவற்றை நாம் கண்டோம். இந்தத் தொடரில் மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

தொடர் நோன்பு

நாமெல்லாம் நோன்பு நோற்கையில் சூரியன் மறைந்ததும் நோன்பு துறப்போம்; உணவு சாப்பிடுவோம். அடுத்த நாள் நோன்புக்காக ஸஹரில் உணவு சாப்பிடுவோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இப்படி ஓர் இடைவெளி இல்லாமல் பல நாட்கள் நோன்பைத் தொடர்வார்கள். இதைப் பார்த்துவிட்டு நபித்தோழர்களும் அதுபோன்று தொடர் நோன்பு நோற்கலாயினர். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கின்றார்?” என்று கேட்டார்கள். (பார்க்க: புகாரி 1965, 6851)

நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களைப் போன்று நம்மில் யார் இருக்கின்றார்கள்? சாதாரண மனிதன் என்றால் எத்தனை நாட்கள் பட்டினி கிடக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல, புனிதப் படைப்பு, ஒளிப் படைப்பு, அதாவது கடவுள் தன்மை கொண்டவர் என்று சொல்ல வருகின்றார்கள்.

யூத சாதியினர்

நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக்கொள்ள மறுத்தபோது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1965, 6851

ஒரு ஹதீஸின் முற்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பிற்பகுதியை விடுபவர்களில் இவர்களை விடக் கைதேர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. இவர்கள் அல்லாஹ் சொல்வது போன்று வேதத்தில் கொஞ்சத்தை ஏற்று, மீதியை மறுக்கும் யூத சாதியினர் ஆவர்.

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன் 2:85)

உங்களில் என்னைப் போன்றவர் யார்? என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள் அதைத் தொடர்ந்து, “என்னுடைய ரப்பு எனக்கு உணவளிக்கின்றான். குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான்’ என்று கூறி இந்தக் கழிவுகெட்ட கப்ரு வணங்கிகளுக்குச் சரியான பதிலடி கொடுக்கின்றார்கள்.

பசி, பட்டினி கிடக்கவில்லை. பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை என்பதெல்லாம் கிடையாது. இந்த இரண்டையும் தன்புறத்திலிருந்து இறைவன் தருகின்றான். உண்ண உணவும், குடிக்க நீரும் இல்லையென்றால் நான் வாழ முடியாது. என்னுடைய இரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் அசைய வேண்டுமென்றால் உணவும் நீரும் வேண்டும். காரணம் நான் மனிதன் தான் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள். ஆனால் இந்த ஜென்மங்கள், சிந்தனையற்ற ஜடங்கள் நபி (ஸல்) அவர்களை ஒளி என்று உளறிக் கொட்டுகின்றனர்.

கருணைமிக்க காருண்ய நபி

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில், கருணை மிக்கவர், முஃமின்களுக்குக் கஷ்டம் வருவதைக் காணப் பொறுக்காதவர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றான்.

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

அல்குர்ஆன் 9:128

இப்படி ஒரு கருணையும் கரிசனமும் கொண்ட நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்காமல் தொடர் நோன்பு நோற்றாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைத்து விடுகின்றது. ஆனால் பாவம், இந்தத் தோழர்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்ற வேதனையில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைக் கண்டிக்கும் விதமாக, பிறை தெரியத் தாமதமானால் இன்னும் நோன்பை நீடிக்கச் செய்திருப்பேன் என்று கூறுகின்றார்கள். அதாவது நபித்தோழர்களால் இந்தத் தொடர் நோன்பை நோற்க முடியாது என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு கூறுகின்றார்கள்.

ஆனால் இந்தக் களிமண்களுக்கு இந்த விபரம் புரியாமல் இந்த ஹதீஸை விளங்க வேண்டிய விதத்தில் விளங்காமல், நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்ற பார்வையைச் செலுத்தி தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பஸ்பமாகும் பாறைகள்

தொடர் நோன்பு குறித்த இந்த ஹதீஸில் இப்படி ஒரு விபரீதப் பார்வையைச் செலுத்தியவர்கள், அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்கள் பாறையை உடைத்த ஹதீஸிலும் இதே விபரீதப் பார்வையை, இஸ்லாமிய விரோதப் பார்வையைச் செலுத்தியிருக்கின்றார்கள்.

இந்த தரீக்காவாதிகள் பார்க்கின்ற தறிகெட்ட பார்வைக்குரிய ஹதீஸ் இதோ:

நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறதுஎன்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் இறங்கிப் பார்க்கிறேன்என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குந்தாலி எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 4101

பசி பட்டினியும் கிடக்கின்ற சாதாரண மனிதரால் இந்தப் பாறையை உடைக்க முடியுமா? அப்படியானால் அவர்கள் ஒளிப் படைப்பு தான் என்பது இவர்களின் அபத்தமிக்க வாதமாகும்.

இதையும் ஏடாகூடமாக விளங்கிக் கொண்டு இதற்குக் குதர்க்கமான, கோணலான அர்த்தத்தைக் கொடுக்கின்றனர்.

பசி, பட்டினியுடன் கிடக்கும் போதே இப்படி ஒரு பலம் இருக்கின்றதென்றால் சரியான உணவு உண்டால் அவர்களின் பலம் என்ன மாதிரியாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்களின் மனிதத் தன்மைக்கு மெருகூட்டுவதாகவும் மேன்மைப்படுத்துவதாகவும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக அவர்களை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கொள்கின்றனர்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

ஒரு பக்கம் நபி (ஸல்) அவர்கள் ஒளிப் படைப்பு என்று சொல்லிக் கொண்டு, மறுபக்கம் நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு என்று அவர்களே வாக்குமூலம் தருகின்றனர். அது எப்படி?

நபியின் பல் நரகைத் தடுப்பதா?

நபி (ஸல்) அவர்களின் சிறுநீரை தோழர்கள் பருகினர். நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை தோழர்கள் சாப்பிட்டனர். அவ்வாறு சாப்பிட்டவர்களை நரகம் தீண்டாது என்ற செய்திகள் தான் இந்தப் பரேலவிகளின் சொற்பொழிவுகளில் ஆக்கிரமிப்பு செய்யும்.

சாதாரண ஓர் அடிப்படை அறிவு கூட இல்லாத அறிவீனர்கள் இவர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்ததும் தண்ணீரால் சுத்தம் செய்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதியிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் (-அனஸா) எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 152

மற்றவர்களின் சிறுநீரைப் போலவே தனது சிறுநீரும் அசுத்தம் என்பதால் தான் சுத்தம் செய்திருக்கின்றார்கள். இந்த அசுத்தத்தை அடுத்தவர் சாப்பிடச் சொல்வார்களா? அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் பண்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையான வற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 7:157)

உங்களுக்குக்கு நல்லவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5:5)

இப்படியிருக்கையில் அசுத்தம் என்று அவர்களே கருதிய தமது சிறுநீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடிக்கச் சொல்வார்களா? என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

அறிவியல் அடிப்படையில் இவை உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள். இந்தக் கழிவு உடலுக்குள் இருந்தால் உபாதையும் உபத்திரமும் ஆகும். இப்படி உடலுக்குத் தீங்கிழைக்கும் ஓர் அசுத்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடுத்தவரை, அதிலும் தனது தோழர்களைக் குடிக்கச் சொல்வார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 13

இவ்வாறு இறை நம்பிக்கையாளரின் இலக்கணத்தைக் கூறும் நபி (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக அவர்கள் சில ஹதீஸ்களைக் கூறுகின்றார்களே என்று கேட்கலாம். இந்த ஹதீஸ்களின் லட்சணம் என்ன என்பதைக் கடந்த ஏகத்துவம் இதழ் தோலுரித்துக் காட்டியது. எனவே இது பரேலவிகளின் பயங்கர அசுத்தமான, அசிங்கமான, அபத்தமிகு வாதமாகும்.

அடுத்து இவர்கள் கூறுகின்ற நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிப்பது தொடர்பான விஷயத்திற்கு வருவோம்.

தடுக்கப்பட்ட இரத்தம்

உயிருடன் உள்ள, செத்த மனிதர்களின் மற்றும் பிராணிகளின் இரத்தம் என்றைக்கும், எப்போதும் ஹராம் ஆகும். இதைத் திருக்குர்ஆனிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5:3)

இவ்வாறு தடை செய்யப்பட்ட இரத்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடுத்தவரைப் பருகச் சொல்வார்களா? என்பதைக் கூட இந்தப் பைத்தியங்கள் உணரவில்லை. இது தொடர்பாக இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கு இந்த இதழில் தனிக்கட்டுரையில் சம்மட்டி அடி, சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம் நபி (ஸல்) அவர்கள் ஒளியென்றால் அவர்களுக்கு ஏது இரத்தம்? அவர்களுக்கு ஏது சிறுநீர்? அதை ஏன் இந்த ஈன ஜென்மங்கள் குடிக்கச் சொல்கின்றனர்? அது என்ன ஒளித் திரவமா? இதுவெல்லாம் இந்தப் பண்டாரப் பரதேசிகளுக்கு மண்டையில் பண்டமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு!

பரேலவிகளின் சொற்பொழிவில் நபி (ஸல்) அவர்களின் வியர்வை, முடி போன்றவற்றை நபித்தோழர்கள் சேர்த்து வைத்தார்கள்; சேமித்து வைத்தார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

இந்த விஷயத்தில் பின்பற்றுவதற்கு எதுவுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் இதைச் சொல்வதன் மூலம் தங்கள் ஷைகுகள், பீர்கள், சாதாத்துகள் போன்ற ஷைத்தான்களுக்குப் புனிதம் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ளலாம்.

மறுமையில் நன்மை கிடைப்பது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை வைத்துத் தான். முடி, வியர்வையைப் பாதுகாத்து வைப்பதில் அல்ல என்ற அடிப்படை அறிவும் இவர்களுக்கு இல்லை.

இன்னும் இதுபோன்ற என்னென்ன அபத்தங்களை வைக்கின்றார்கள் என்று இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

தவறான வாதங்களும் தக்க பதில்களும்      தொடர்: 3

இணை கற்பித்தல்

இறைநேசர்களின் இலக்கணம்

நாம் உயிர் மூச்சாக கருதக்கூடிய தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை. இதில் என்னென்ன தவறான வாதங்களை வைக்கிறார்கள்?

நமது மார்க்கத்தில் மிகப்பெரும் குற்றமாகக் கருதக்கூடிய பாவம் இணை வைப்பு. இந்த இணை வைத்தலை நியாயப்படுத்துவதற்காக, தவ்ஹீதைத் தவறு என்று காட்டுவதற்காக, ஷிர்க்கை அவர்கள் தவ்ஹீத் என்று எவ்வாறெல்லாம் நியாயப்படுத்திப் பேசுகிறார்கள்? என்று நாம் விளங்கிக் கொண்டால் நமக்கு பாரதூரமான, நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய அந்த விஷயத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதிலும் ஷிர்க்கைப் பொறுத்தவரை மனிதன் செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாக இருப்பதால் இந்தத் தலைப்பை நாம் முதலில் தேர்வு செய்திருக்கின்றோம். இறைவன் கூறுகின்றான்:

“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 39:65,66)

நாம் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டால் நாம் செய்த அனைத்து நன்மைகளும் அழிந்து விடும் என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான். நாம் தொழுத தொழுகைகள், நாம் பல வருடங்களாக நோற்ற நோன்புகள், நாம் செய்த தர்மங்கள் என அனைத்துமே இதன் காரணத்தினால் அழிந்து, நமக்கு எந்த நன்மையும் இறைவனிடத்தில் கிடைக்காமல் போய்விடும். மேலும் இறைவன் கூறுகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.  (அல்குர்ஆன்: 4:48)

நாம் இணை கற்பித்துவிட்டு மரணித்தோம் என்றால் மன்னிப்பே கிடையாது. நிரந்தர நரகம் தான். அதிலிருந்து மீளவே முடியாது என்று இந்த வசனத்தில் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை. (அல்குர்ஆன்: 5:72)

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (அல்குர்ஆன் 6:88)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் இறைவன், தனக்கு இணை கற்பிப்பது பாரதூரமான, மாபெரும் அநியாயம் என்றும், அவ்வாறு இணை கற்பித்தால் நிரந்தர நரகம் தான் பரிசு, சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் எச்சரிக்கை செய்கிறான்.

இவ்வாறு படுபாதாளத்தில் நம்மைத் தள்ளக்கூடிய இந்த இணை வைத்தலை முஸ்லிம்களிலேயே பலர் சரி என்று வாதிக்கின்றனர். தர்காவிற்குச் சென்று வழிபடலாம்; அவ்லியாக்களை வணங்கலாம்; அவர்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது; அதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது; ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லி தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தத் தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் என்னென்ன வாதங்களை வைக்கிறார்கள்? அது எப்படியெல்லாம் தவறாக இருக்கிறது? அதை முறியடிக்கும் விதமாக அல்லாஹ் என்னென்ன வாதங்களை தன்னுடைய திருமறையில் சொல்கிறான் என்பதை முதல் அம்சமாக எடுத்துக் கொண்டு இது பற்றி நாம் பார்ப்போம்.

இணை கற்பித்தலின் நுழைவு வாயில்

முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை ஏகத்துவம் (தவ்ஹீது) தான் உயிர் மூச்சாக இருந்த போதும் இந்தச் சமுதாயத்திற்குள்ளேயும் இணை கற்பிக்கக்கூடிய காரியங்கள் நுழைந்திருக்கின்றன. இந்தச் சமுதாயத்தில் அவை எப்படி நுழைந்திருக்கின்றன என்று கேட்டால், ஒரு கல்லை வைத்துக் கொண்டு இது கடவுள் என்று சொன்னால் இந்தச் சமுதாயத்தில் யாரும் அதனை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சூரியனைக் கடவுளாக வழிபடுங்கள் என்று கேட்டால் மற்ற சமுதாய மக்கள் அதை ஏற்றுக் கொள்வதைப் போல நம்முடைய சமுதாயத்தினர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தச் சமுதாயத்தில் உள்ளவர்கள் எந்த வகையில் இணை கற்பிப்பார்கள் என்றால், இங்குள்ள உள்ள ஒருவரை மகான் என்றும், பெரியார் என்றும், அல்லாஹ்வுடைய நேசர் என்றும் இவர்கள் நினைக்கும்போது அவர்களைக் கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரில் தான் இந்தச் சமுதாயத்திற்குள் இணை கற்பித்தல் நுழைந்திருக்கின்றது. வேறு வகையில் இந்த சமுதாயத்திற்குள் இணை வைத்தல் வராமல் நாம் கவனமாக இருக்கின்றோம்.

இந்தச் சமுதாயத்தில் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்ற பெயர் இல்லாமல் வேறு விதமான இணை கற்பித்தல்கள், வேறு வகையான போலி தெய்வங்கள் வந்து நுழைய முடியுமா என்று கேட்டால் அவை நுழைய முடியாத அளவுக்கு நாம் தெளிவாக இருக்கின்றோம். இது எப்படிக் கடவுளாகும்? இதற்கு எப்படி சக்தி இருக்கும்? என்றெல்லாம் மற்ற விஷயங்களில் தெளிவாகக் கேட்டு விடுகிறோம்.

பிரச்சனை எங்கிருந்து வருகின்றது? அவ்லியாக்கள், மகான்கள், ஷைகுமார்கள், பெரியார்கள், ஞானிகள் என சிலரை நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நிறைய ஆற்றல்கள் இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு, நல்லடியார்களைப் பாராட்டி வரக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களையும், அவர்களைப் பாராட்டி இடம்பெறும் ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டி, இந்த அளவுக்கு அவர்கள் சிறந்தவர்களாக இருப்பதால் அவர்களிடம் நாம் பிரார்த்தனை செய்யலாம்; அவர்களுக்குச் சிரம் பணியலாம்; அவர்களுக்கு நேர்ச்சை செய்யலாம்; நம்முடைய கோரிக்கைகளை அவர்களிடம் வைத்து முறையிடலாம் என்று சொல்லித் தான் நமது சமுதாயத்தில் இணை வைத்தல் முதன் முதலாக நுழைகின்றது.

எனவே, இறைநேசர்கள் என்றால் யார்? அவர்களுக்கு மார்க்கத்தில் உள்ள எல்லை என்ன? அவர்களுடைய சிறப்புகளை வைத்து இணை கற்பித்தலை நியாயப்படுத்துகிறார்களே அந்த இணை வைத்தலுக்கும் இவர்களுடைய சிறப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவர்கள் சொல்லக்கூடிய கருத்தை திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் சொல்கின்றதா? என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இறைநேசர்கள் என்று சிலரை நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நிறைய ஆற்றல்கள் இருப்பதாக நினைத்துக் கொள்வதை நாம் பல கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

இறைநேசர்கள் யார்?

முதலாவதாக, ஒருவர் அல்லாஹ்வுடைய நேசர் என்று வைத்துக் கொள்வோம். இவர் அல்லாஹ்வுடைய நேசர் என்று எந்த மனிதராவது அறிந்து கொள்ள முடியுமா? ஒருக்காலும் முடியாது.

ஒருவரை அல்லாஹ்வுடைய நேசர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அதற்கு ஏதாவது மார்க்கத்தில் அளவுகோல் சொல்லப்பட்டிருக்கின்றதா? இன்னின்ன அடையாளங்கள் இருந்தால் தான் இறைநேசர் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இறைநேசர்கள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று இறைவன் இவரை நேசிக்கிறான், அதனால் இவர் இறைநேசர் என்று சொல்லலாம். அல்லது இவர் இறைவனை நேசிக்கிறார், இதனால் இவர் இறைநேநசர் என்று சொல்லலாம். இந்த இரண்டில் எந்த அர்த்தத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் இதை நம்மால் முடிவு செய்ய இயலாது. நமக்கு அதிகாரமும் கிடையாது. இறைநேசர்களுக்குரிய இலக்கணமாக இறைவன் தன்னுடைய திருமறையில் கூறும்போது,

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)

இந்த வசனத்தைக் காட்டித்தான் ஷிர்கை நியாயப்படுத்தக்கூடிய, தர்கா வழிபாட்டைத் தூக்கி நிறுத்தக்கூடிய எல்லாருமே வாதிக்கின்றார்கள். அவ்லியாக்கள் என்றால் யார் தெரியுமா? அவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்குப் பயமே கிடையாது. எதற்கும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டான். இவர்கள் தான் அவ்லியாக்கள் என்று சொல்லி இணை கற்பித்தலை நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்கள் இந்த வசனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதற்கு அடுத்துள்ள வசனத்தைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். அவ்வாறு அரைகுறையாக விளங்குவதால் தான் நமக்குள் குழப்பம் ஏற்படுகிறது. மேற்கண்ட வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் அதாவது 10:63வது வசனத்தைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் அதில் நமக்குக் கூடுதல் விளக்கம் கிடைக்கின்றது.

அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.  (அல்குர்ஆன் 10:63)

அவ்லியாக்கள் யார் என்பதற்கு அல்லாஹ் சொல்கின்ற இலக்கணம், அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பார்கள், அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் இருக்கும் என்றும், இறைவனுக்கு மட்டுமே பயப்படக்கூடியவர்களாக இருப்பார்கள், அவர்களுடைய உள்ளத்தில் இறையச்சம் இருக்கும் என்றும் கூறுகிறான்.

யாருடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய முழுமையான நம்பிக்கையும், மலக்குமார்களைப் பற்றிய நம்பிக்கையும், நபிமார்களைப் பற்றிய நம்பிக்கையும், வேதங்களைப் பற்றிய நம்பிக்கையும், மறுமை பற்றிய நம்பிக்கையும் சரியான முறையில் இருக்கிறதோ அவர்களும், எவருடைய உள்ளத்தில் இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதோ அவர்களும் தான் அவ்லியாக்கள்.

நாம் இன்று பார்ப்பது போல் ஜுப்பா அணிந்திருப்பவர், பெரிய தலைப்பாகை கட்டியவர், பள்ளிவாசலிலேயே அமர்ந்து தவம் செய்பவர் எல்லாம் இறைநேசர் கிடையாது, அல்லது வருடா வருடம் ஹஜ் செய்பவர், எல்லா நேரமும் வணக்கத்தில் மூழ்கியிருப்பவர், பொருளாதாரத்தை வாரி வாரி வழங்குபவர் போன்றோரெல்லாம் இறைநேசர்கள் ஆகிவிட முடியாது.

அல்லாஹ்வுடைய நேசர்கள் என்றால் ஒன்று, அல்லாஹ்வை பற்றி நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது, அல்லாஹ்வைப் பற்றிய பயம் அவரது உள்ளத்தில் இருக்க வேண்டும். இதுதான் அல்லாஹ் சொல்லக்கூடிய அளவுகோல் ஆகும்.

ஒருவனுடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய பயம் இருக்கிறதா? இல்லையா? என்று நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? ஒரு நபரை நாம் பார்க்கிறோம். அவரை அவ்லியா என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அவருடைய உள்ளத்தில் இறையச்சம் இருக்கிறது என்பதை நாம் எப்படிக் கண்டறிய முடியும்? முதலில் ஒருவரை நாம் இவர் அவ்லியா என்று சொல்லலாமா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் அவர்களுக்கு என்னென்ன அந்தஸ்து இருக்கிறது என்பதைப் பற்றிப் பேச வேண்டும்.

அவ்லியா என்பதற்கு அல்லாஹ் சொல்கின்ற இலக்கணம் இரண்டுமே வெளிப்படையான அடையாளம் கிடையாது. ஈமானும் இறையச்சமும் உள்ளம் சம்மந்தப்பட்டது தானே தவிர முகத்திலேயோ, உடலிலேயோ தெரியக்கூடிய விஷயம் கிடையாது.

இறையச்சத்தை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது நெஞ்சைக் காட்டி தக்வா இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது என மூன்று முறை கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 460)

இறைவனை ஒருவர் அஞ்சுகிறாரா என்பது முகத்திலோ, உடலிலோ, வெளிச் செயல்களிலோ தெரியாது. அவருடைய உள்ளத்தில் தான் இருக்கும். ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உள்ளதை இன்னொரு மனிதரால் அறிய முடியாது. வெளிப்படையான விஷயங்களை அறியும் அளவில் தான் மனிதனை இறைவன் படைத்துள்ளான்.

அவ்லியாக்களை அறிவது இரண்டாவது பட்சம். முதலில் நாம் நம்முடைய மனைவியின் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியுமா? அல்லது நம்முடைய கணவன் எதை உள்ளத்தில் வைத்துக் கொண்டு நம்மிடம் பழகுகிறார் என்பதை மனைவியால் கண்டறிய முடியுமா? பெற்ற பிள்ளைகளுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பெற்றோர்கள் அறிய முடியுமா? அல்லது பெற்றோருடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பிள்ளைகள் அறிய முடியுமா? நகமும் சதையுமாக இருக்கக் கூடிய, நெருங்கிய நண்பர்களுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று நம்மால் அறிய முடியுமா? முடியவே முடியாது.

வெளிப்படையான செயல்களை வைத்து தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். இன்றைக்கு எத்தனையோ பேர் மனிதனின் வெளித் தோற்றத்தை நம்பி ஏமாந்திருக்கிறார்கள். “இவனை நம்பி நான் ஆயிரம் ருபாய் கொடுத்தேன். என்னை ஏமாற்றி விட்டான்’ என்று நாம் சொல்கிறோமே இதற்குக் காரணம் என்ன? உள்ளத்தில் உள்ளதை நாம் அறிய முடியவில்லை. அதனால் தான் நாம் ஏமாந்து போகின்றோம்.

ஒருவனை நம்பி நாம் கடையில் சேர்க்கிறோம். அவன் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது. ஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத் தான் தெரிந்தான்.

ஆகவே, ஒருவனுக்கு உள்ளத்தில் நல்ல எண்ணம் இருக்கிறதா? கெட்ட எண்ணம் இருக்கிறதா என்பதை அறியும் ஆற்றலை இறைவன் யாருக்கும் தரவில்லை. நாம் ஒருவரை அவ்லியா என்று சொன்னால், அவரை விட நாம் மிகப் பெரிய அவ்லியாவாக ஆகி விடலாம். ஏனென்றால் அவருடைய உள்ளத்தில் இருப்பதை, அவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்பதை நாம் அறிந்து விடுகிறோம். அல்லாஹ் இவரை அவ்லியாவாக ஏற்றுக் கொண்டுள்ளான் என்று நினைத்து விடுகிறோமே? எனவே அவரை விடப் பெரிய அவ்லியா நாம் என்றாகி விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ. உடலையோ பார்க்க மாட்டான். மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான். (நூல்: முஸ்லிம் 460)

ஒருவரை, இவர் அழகானவராக இருக்கிறார், அதனால் இவரை நேசிப்போம் என்று நாம் சொல்வது போல் இறைவன் சொல்ல மாட்டான். எவ்வளவு அழகானவராக இருந்தாலும் சரி! எவ்வளவு உடல் வலிமை உள்ளவராக இருந்தாலும் சரி! அவன் உள்ளத்தைத் தான் பார்ப்பான். உள்ளம் ஷைத்தானாக இருந்தால் அவனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

சக மனிதன் ஒருவன் தோற்றம் அழகானவனாக, கவர்ச்சியானவனாக இருந்தால் அவனை நேசிப்பவர்களாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். ஆனால் அல்லாஹ்வுக்கு நம்முடைய தோற்றம், கவர்ச்சி எதுவும் தேவைப்படாது. அவன் உள்ளத்தை மட்டும் தான் பார்ப்பான்.

ஆக மொத்தத்தில் ஒருவரை இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால் அவருக்குரிய தகுதிகளான இறைநம்பிக்கை மற்றும் இறையச்சம் போன்றவை இருக்க வேண்டும். ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அறிகின்ற ஆற்றலுடன் நாம் படைக்கப்படவில்லை என்பதை விளங்கிக் கொண்டால், ஒருவரை பார்த்து இவர் மகான், இவர் இறைநேசர் என்று சொல்ல மாட்டார்கள். மகான்களுக்கு கந்தூரி விழா கொண்டாட மாட்டார்கள்.

ஆகவே, அவ்லியாக்கள் என்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் கண்டுபிடிக்க முடியாது. அவர்களை மறுமை நாளில் தான் நாம் காண முடியும். அல்லாஹ் யாருக்கு சொர்க்கத்தை நிர்ணயிக்கின்றானோ அவர் தான் அல்லாஹ்வின் நேசர். யாருக்கெல்லாம் அல்லாஹ் நரகத்தை நிர்ணயிக்கின்றானோ அவர்களெல்லாம் ஷைத்தானுடைய நேசர்கள் என்று மறுமையில் தான் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வுலகில் யாரையும் இவர் மகான், இவர் இறைநேசர், இவர் அவ்லியா. இவர் அல்லாஹ்வுக்கு விருப்பமானவர் என்று சொல்ல முடியாது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபி (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை ஏகத்துவ இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

இதே போன்று நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள்  குடித்தார்கள் என்பதே அந்தப் பொய்யான செய்தி.

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸ்களைப் பற்றியும் அறிவில்லாத சில அறிவிலிகள் நபி (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இது போன்ற செய்திகளை மக்களிடம் சொல்லி, நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் காட்டுமிராண்டி போல் மற்றவர்களிடம் சித்தரித்துக் காட்டுகின்றனர்.

எனவே இந்த ஆய்வுக் கட்டுரையில் நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்களா? என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தபோது தன் இரத்தத்தை என்னுடைய மகனிடம் கொடுத்தார்கள். என் மகன் அதை பருகிவிட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இந்த விசயத்தை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் (என் மகனிடம்), “நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “உங்கள் இரத்தத்தை கீழே கொட்ட நான் விரும்பவில்லைஎன்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவருடைய தலையை வருடிவிட்டு, “நரகம் உன்னைத் தீண்டாது. உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகும். மக்களால் உனக்குக் கேடு உண்டாகும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின் அபீபக்ர் (ரலி), நூல்: தாரகுத்னீ

குர்ஆனுடன் முரண்படும் செய்தி

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் 2:173)

இரத்தத்தை உண்ணுவது ஹராம் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளின் இறைச்சி உண்ணத் தகுந்ததாக இருந்தாலும் இவற்றின் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது.

உண்ணத் தகுந்த பிராணிகளின் இரத்தத்தையே உண்ணக் கூடாது என்றால் உண்ணுவதற்கு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டவற்றின் இரத்தத்தைக் குடிப்பது மிக மோசமான செயலாகும்.

ஒருவன் ஆட்டின் இரத்தத்தைக் குடிப்பதைக் காட்டிலும் பன்றியின் இரத்தத்தைக் குடிப்பது மிக மோசமான செயல் என்று கூறுவோம். ஏனென்றால் பன்றியின் இரத்தம், பன்றி என்ற காரணத்தாலும் இரத்தம் என்ற காரணத்தாலும் ஹராமாக உள்ளது. இதன் இரத்தத்தை ஒருவன் குடிக்கும் போது இறைவனுடைய இரண்டு கட்டளைகளை மீறும் நிலை ஏற்படுகின்றது.

மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பதும் இதுபோன்ற மோசமான செயலேயாகும். மனிதன், மனிதனை உண்ணுவதை மார்க்கம் தடை செய்துள்ளது. இரத்தமும் தடை செய்யப்பட்ட பொருளாகும்.

ஒரு சாதாரண மனிதருக்கு முன்னால் யாராவது இப்படிச் செய்தால் அந்த மனிதர் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார். அநாகரீகமான இந்தச் செயலை எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அப்படியானால் மனிதனை மனிதாக வாழக் கற்றுக் கொடுத்தவரும் நற்பண்புகளின் முழு உருவமாகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள் இந்தக் கெட்ட செயலை அனுமதித்து இருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும்.

(நபியே) நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68:4)

மேலும் மேற்கண்ட ஹதீஸில் கருத்து முரண்பாடும் உள்ளது. நரகம் உன்னைத் தீண்டாது என்ற வாசகத்தின் மூலம் நபியின் இரத்தத்தைக் குடித்தவர் நல்ல காரியத்தைச் செய்துள்ளார் என்று இந்தச் செய்தி கூறுகின்றது. அப்படியானால் நபி (ஸல்) அவர்கள், உன்னால் மக்களுக்கும் மக்களால் உனக்கும் கேடு உண்டாகும் என்று ஏன் பழிக்க வேண்டும்?

பலவீனர்கள் அறிவிக்கும் செய்தி

இந்தச் செய்தி கருத்து ரீதியில் பலவீனமான செய்தியாக இருப்பதுடன் இது சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்படவில்லை. இதன் அறிவிப்பாளர் தொடரில் பல பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தச் செய்தியில் பின்வரும் நபர்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளனர்.

 1. அஸ்மா பின்த் அபீபக்ர்
 2. ரபாஹ் அந்நவ்பீ அபூ முஹம்மது
 3. அலீ பின் முஜாஹித்
 4. முஹம்மது பின் ஹுமைத்
 5. அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்தில் அஜீஸ்

இவர்களில் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழியர் என்பதால் இவரைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்.

இரண்டாவது அறிவிப்பாளரான ரபாஹ் பலவீனராவார். இவர் யாரென்றே தெரியவில்லை. இவரைச் சிலர் பலவீனர் என்று கூறியுள்ளனர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய நம்பகத்தன்மை அறியப்படாத காரணத்தால் இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர் அலீ பின் முஜாஹிதும் பலவீனராவார். இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் என்று யஹ்யா பின் ளரீஸ் மற்றும் யஹ்யா பின் மயீன் ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். முஹம்மது பின் மஹ்ரான் என்பவரும் இவ்வாறு கூறியுள்ளார். ஹதீஸ் கலையில் இவர் முற்றிலுமாக விடப்பட்டவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

நான்காவது அறிவிப்பாளரான முஹம்மது பின் ஹுமைத் என்பவரும் பலவீனமானவராவார். இவர் பெரும் பொய்யர் என இப்னு கராஷ், சாலிஹ் ஜஸ்ரா, இஸ்ஹாக் பின் மன்சூர் ஆகிய மூவரும் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்று இமாம் நஸாயீ அவர்களும் இப்ராஹீம் பின் யஃகூப் என்பவரும் கூறியுள்ளனர். மேலும் இமாம் தஹபீ அவர்களும் இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியில் மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அறியப்படாதவர்களின் அறிவிப்பு

ஹில்யதுல் அவ்லியா எனும் நூலில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வெளியேற்றிய இரத்தத்தைக் குடித்ததாகவும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நரகம் உன்னைத் தீண்டாது எனக் கூறி இதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் கைசான், சஅத், முஹம்முது பின் மூசா, அஹ்மது பின் ஹம்மாத், மற்றும் முஹம்மது பின் அலீ ஆகிய ஐந்து நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரின் நம்பகத்தன்மையும் நிரூபிக்கப்படவில்லை. எனவே நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

சஃபீனாவின் அறிவிப்பு

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தை எடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு) புதைத்துவிடு” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக் குடித்தேன் என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: சஃபீனா (ரலி), நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

இந்தச் செய்தியில் புரைஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இப்னு கஸீர் கூறியுள்ளார். இமாம் தாரகுத்னீயும் இப்னு ஹிப்பானும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த செய்தியில் உமர் பின் சஃபீனா என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் யார் என அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறியுள்ளார்கள். இமாம் புகாரி அவர்கள் இவரை மஜ்ஹுல் – அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். எனவே இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு

உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய முகத்தில் காயம் ஏற்பட்டபோது என் தந்தை மாலிக் பின் சினான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விழுங்கினார்கள். “நீ இரத்தத்தை குடிக்கின்றாயா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிக்கின்றேன்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய இரத்தம் அவருடைய இரத்தத்துடன் கலந்துவிட்டது. அவரை நரகம் தீண்டாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் மாலிக் (ரலி), நூல்: தப்ரானீ

இந்தச் செய்தியில் ருபைஹ் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள இப்னுல் அஸ்கஃ யாரென்ற விபரம் அறியப்படவில்லை.

மேலும் இதில் மூசா பின் யஃகூப் என்வர் இடம்பெற்றுள்ளார். இவர் மனன சக்தி சரியில்லாதவர் என்று இமாம் இப்னு ஹஜரும், இவர் பலவீனமானவர் என்று இமாம் அலீ பின் மதீனீயும், இவரிடத்தில் பலவீனம் உள்ளது என்று இமாம் தஹபீயும் கூறியுள்ளனர்.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் பின் அபீ ஷம்லா என்பவரைப் பற்றி எந்தக் குறிப்பும் ஹதீஸ் நூற்களில் இல்லை. இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே பலவீனமானவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

பரேலவிகளுக்கு எதிரான செய்தி

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது அவர்களிடத்தில் நான் வந்தேன். அந்த வேலை முடிந்தவுடன் அவர்கள், “அப்துல்லாஹ்வேஎன்று (என்னை) அழைத்து, “இந்த இரத்தத்தைக் கொண்டு சென்று இதை யாரும் பார்க்காதவாறு கீழே கொட்டிவிடுஎன்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை விட்டுத் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். நான் அவர்களிடம் திரும்பி வந்தபோது, “அப்துல்லாஹ்வே! அதை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “மக்களை விட்டும் மறைவான இடம் என்று நான் கருதிய ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டேன்என்று நான் கூறினேன். அவர்கள், “அதை நீ குடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), நூல்: ஹாகிம்

நபித்தோழர்கள் நபியின் இரத்தத்தைக் குடித்தார்கள் என்று வாதிடக்கூடியவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதில் ஹின்ந் பின் காசிம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.

எதிர் தரப்பினர் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் காட்டும் செய்திகளில் இந்தச் செய்தி தான் ஓரளவுக்குப் பரவாயில்லை என்று கூறும் நிலையில் குறைவான பலவீனத்தைக் கொண்டுள்ளது என்றாலும் இதில் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர் இருப்பதால் இதுவும் பலவீனமான செய்தியாகும்.

ஒரு பேச்சுக்கு இது சரியான செய்தி என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் வாதத்துக்கு எதிராகவே இந்தச் செய்தி அமைந்துள்ளது.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபியின் இரத்தத்தைக் குடித்த போது, “உன்னை நரகம் தீண்டாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்படிக் கூறியிருந்தால் இந்த நபித்தோழர் செய்த செயலை நபியவர்கள் அங்கீகரித்தார்கள் என்று பொருள் வரும்.

ஆனால் அவ்வாறு கூறாமல் “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்’ என்று கடிந்து கொள்கிறார்கள். எனவே நபியின் இரத்தமாக இருந்தாலும் அதைக் குடிப்பது கூடாது; இது அநாகரீகமான செயல் என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

தங்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்தச் செய்தியை எதிர் தரப்பினர் தங்களுக்கு ஆதாரமாகச் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

எஸ். ராஜா முஹம்மத்

சூரியன் உதிக்கும் போதும் உச்சிக்கு வரும் போதும் மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போது தான் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா (ரலி)

நூல்: முஸ்லிம் 1512

இறை மறுப்பாளர்கள் இந்த நேரங்களில் சூரியனுக்கு சஜ்தா செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நேரத்தில் நாம் தொழுதால் நாமும் சூரியனுக்கு சஜ்தா செய்வதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இறை மறுப்பாளர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த மூன்று நேரங்களில் தொழுவதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதே நேரங்களில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்ய எந்தத் தடையுமில்லை. எனவே  இந்த செய்தியில் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கலாம் என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

? குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா?

ஷாஹித் ஹமீத்

பசி, தூக்கம், பாலுணர்வு போன்ற விஷயங்களை மனிதனின் இயல்புத் தன்மைகளாக இறைவன் ஆக்கியுள்ளான். மனிதனின் பாலுணர்வுக்கு வடிகாலாகத் திருமணம் என்ற முறையை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ர-) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் “இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் யஸீத்

நூல்: புகாரி 5066

ஒருவர் சாப்பிடாமல் தன்னை நோவினைப்படுத்துவதையும் உறங்காமல் உடலை கெடுத்துக் கொள்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது போன்று ஒருவர் தன் பாலுணர்வை முறையான அடிப்படையில் தீர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவருக்கு நோவினையாகும். இந்த நோய் ஒரு கட்டத்தில் அவனை விபச்சாரத்தில் தள்ளிவிடும்.

ஒருவர், மற்றவரின் பாலுணர்வுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு இவ்விருவரும் நீண்ட காலம் பிரிந்திருந்தால் இந்த ஒப்பந்தத்தை மீறும் நிலை ஏற்படுகின்றது.

மனைவியின் இல்லறத் தேவையை கணவனால் நிறைவேற்ற முடியாமல் போகின்றது. இது மாதிரியான ஆண்களுக்குப் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!என்றேன்.

நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: புகாரி 1975

இன்றைக்குப் பல பெண்கள் தவறிழைப்பதற்கு அவர்களுடைய இல்லறத் தேவையை நிறைவு செய்யும் கணவன் அருகில் இல்லாமல் இருப்பதே காரணமாக உள்ளது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகச் சில இளைஞர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞர்களின் இல்லறத் தேவையை கவனத்தில் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

சம (வயதுடைய) இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் நல்ல நண்பராகவும் இருந்தார்கள்.

நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டு வந்த (எங்கள் குடும்பத்)தவர்களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள். (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணித்திடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ர-)

நூல்: புகாரி 631

ஒருவர் அந்நியப் பெண்ணைப் பார்த்து இச்சை ஏற்பட்டுவிட்டால் அவர் மனைவியிடம் சென்று இச்சையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2718

மனைவியை விட்டுப் பல வருடங்கள் பிரிந்து வாழ்பவர்களுக்கு இது சாத்தியமே இல்லை. இந்தச் சூழ்நிலை எப்போதாவது அவர்களை மானக்கேடான விஷயங்களில் தள்ளிவிட அதிக வாய்ப்புள்ளது.

எனவே,  தேவைக்கும் அதிகமான பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக மனைவியை விட்டுப் பல வருடங்கள் பிரிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்

—————————————————————————————————————————————————————-.

பொருளியல்    தொடர்: 24

வியாபாரம்

நாம் இதுவரை பிறருடைய பொருள் ஹராம் என்பதைத் தெளிவாகப் பார்த்தோம்.

இனி வியாபாரத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் எது? தடுக்கப்பட்ட வியாபாரம் எது? என்பதைப் பார்க்கவிருக்கிறோம்.

ஏமாற்று வியாபாரம்

ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததுஎன்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 7:85

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்என்றார். “என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

அல்குர்ஆன் 11:84, 85

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு.

அல்குர்ஆன் 17:35

மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

அல்குர்ஆன் 26:183

அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6:152

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.

அல்குர்ஆன் 83:1-6

சுண்டு வியாபரம்

கல்லெறி வியாபாரம் (பைஉல் ஹஸாத்) மற்றும் மோசடி வியாபாரம் (பைஉல் ஃகரர்) ஆகியவை செல்லாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 3033

சுண்டு வியாபாரத்தை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். இன்றைய நமது காலத்தில் ரூபாயை வைத்துச் சுண்டி விடுவது போன்ற நடைமுறை உள்ளது. இம்மாதிரியான வியாபாரத்தை தடை செய்தார்கள்.

வாங்கும் போதும் கொடுக்கும் போதும் ஏமாற்றுவதாக இருந்தால் ஹராம் ஆகும், இன்னும் வியாபாரத்தில் அதிகமான ஏமாற்றம் இருக்கிறது. அதில் நாம் கண்டிப்பாகக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அப்துல் மஜீத் பின் வஹ்ப் என்பார் அறிவிக்கின்றார்கள்: அதாவு பின் ஹாலித் (ரலி) அவர்கள் என்னிடம் “நபியவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த ஒரு கடிதத்தை உனக்கு நான் படித்துக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர் ஒரு ஏட்டை வெளியில் எடுத்தார். அதில் (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது)

அதாஉ பின் காலித் என்பாரிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை, குற்றம்புரியும் தன்மையுமில்லைஎன்று எனக்கு எழுதித் தந்தார்கள்.

நூல்: திர்மிதி 1137

அதாவு பின் ஹாலித் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமையை வாங்கும் போது, “எனக்கு எழுதி கொடுங்கள்” என்று அதாவு பின் ஹாலித் (ரலி) கேட்கின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுதி கொடுக்கின்றார்கள் என்ற செய்தியை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

எனவே வியாபாரம் என்றால் இப்படி இருக்க வேண்டும். வியாபாரம் செய்யும் போது நாம் விற்கக் கூடியவராக இருந்தால் அதை எழுதிக் கேட்டால் உடனே எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக உள்ளது

குறைகளை வெளிப்படுத்த வேண்டும்

வியாபாரி ஒரு பொருளை விற்கும் போது அதில் என்ன குறைகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படுத்தாமல் விற்கக் கூடாது. இது வாங்குபவனுக்கும் விற்பவனுக்கும் சமமானது. எந்தக் குறைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தி விற்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

நூல்: புகாரி 2079

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்குச் சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 2237

அடங்காத தாகமுள்ள ஒட்டகத்தையும் சிரங்கு பிடித்த ஒட்டகத்தையும் வாங்குதல்

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று “அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்!என்றார். நவ்வாஸ் “யாரிடம் விற்றீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “இன்ன பெரியாரிடம் விற்றேன்!என்றார்.

அதற்கு நவ்வாஸ், “உமக்கு கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தாம்!என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். “எனது பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்று விட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லைஎன்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால் அதை ஓட்டிச் செல்வீராக!என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும், இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதை விட்டுவிடுவீராக! தொற்று நோய் கிடையாதுஎன்ற நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் எனது ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது)என்றார்கள்.

நூல்: புகாரி 2099

ஒருவரிடம் குறையைத் தெளிவுபடுத்தி அதை அவர் பொருந்திக் கொண்டால் விற்பது கூடும் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்              தொடர்: 6

ஆறு நோன்பை வெறுக்கும் அபூஹனீஃபா

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மாநபி வழி

உலகை ஆளும் உன்னதக் குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம். அதனாலே ரமலான் துவங்கி விட்டால் நோன்பு, தொழுகை, தர்மம், திக்ர், குர்ஆன் ஓதுதல் என ஒவ்வொருவரும் நல்லடியார்களாகக் காணப்படுகிறார்கள். அது போன்றே ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது மிகவும் சிறப்பான, உவப்பான காரியம் ஆகும்.

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு நோற்பது, இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பதற்கு சமமானது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

யார் ரமலானில் நோன்பு நோற்றுப் பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம் 1984

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்பிற்குச் சமமானது. அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸப்வான் (ரலி), நூல்: தாரமி 1690

ஷவ்வால் மாத ஆறு நோன்பு நபிவழி என்றும், அது சிறப்பிற்குரியது எனவும் இச்செய்திகள் சந்ததேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றன.

பெரும்பாலான முஸ்லிம்கள் ஆறு நோன்பை அறிந்தவர்களாகவும், நோற்பவர்களாவும் உள்ளனர். ரமலான் நோன்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் கஞ்சி காய்ச்சி நோன்பாளிகளுக்கு வழங்குவதைப் போன்று பல பள்ளிகளில் இந்த ஆறு நோன்புக்கும் கஞ்சி ஏற்பாடு செய்வது, ஆறு நோன்பு முஸ்லிம்களிடத்தில் பரவலாக அறிப்பட்ட ஒன்று என்பதை உறுதிப்படுத்துகின்றது. இப்படி அனைவரும் அறிந்து வைத்துள்ள ஆறு நோன்பை அபூஹனிபா மறுக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?

மத்ஹபு வழி

மழைத் தொழுகை இல்லை, கிரணகத் தொழுகையில் குத்பா இல்லை என்று கூறுவதன் மூலம் நபிவழி மெய்ப்படுத்தும், உறுதிப்படுத்தும் பல வணக்க வழிபாடுகளை மத்ஹபுகள் இல்லை என்று கூறியதை அரபி மூலத்துடன் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இப்போது அந்த வரிசையில் நபிமொழிகளில் ஆதாரமுள்ள ஆறு நோன்பையும் மறுக்கும் நிலைக்கு மத்ஹபு சென்றுள்ளது. ஆம்! ஆறு நோன்பு நோற்பதை இமாம் அபூஹனிபா வெறுப்பிற்குரியது என்று கூறியுள்ளார்.

ஆறு நோன்பை அபூஹனிபா வெறுத்தார் என்ற தகவலை நாம் பொய்யாக, அவர் மீது இட்டுக்கட்டிக் கூறவில்லை. மாறாக அவரைப் பின்பற்றும் அவரது மத்ஹபைச் சார்ந்தவர்களின் நூல்களிலேயே இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது வெறுப்பிற்குரியதாகும்… இமாம் அபூஹனிபா அவர்களிடத்தில் பிரித்தோ, தொடர்ச்சியாகவோ ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பதும் அதில் உள்ளதாகும். (வெறுக்கத்தக்கதாகும்) தொடர்ச்சியாக ஆறு நோன்பு நோற்றால் வெறுக்கத்தக்கது, பிரித்து வைத்தால் அவ்வாறு இல்லை என்பது அபூயூசுப் அவர்களின் கருத்து.

நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம் 6, பக்கம் 133

எந்தெந்த நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்ப்பட்டுள்ளது, வெறுக்கத்தக்கது என்பதைப் பட்டியிலிடும் போது அதில் ஆறு நோன்பையும் சேர்த்துள்ளார்கள். நபிவழியில் உறுதியான ஆறு நோன்பை, சிறப்பிற்குரிய வணக்கவழிபாட்டை அபூஹனிபா எவ்வாறு வெறுக்க முடியும்? அபூஹனிபா வெறுப்பதற்கு அவரின் மத்ஹபின் தரப்பிலிருந்து என்ன காரணம் சொல்லப்பட்டாலும் அது ஏற்புடையதா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். மேலும் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் அபூஹனிபாவைப் பின்பற்றி, ஆறு நோன்பு இல்லை என்று மறுப்பார்களா? அல்லது வெறுப்பார்களா?

நபிகள் நாயகம் ஒன்றை அனுமதித்திருக்கும் போது, சிறப்பித்துச் சொல்லியிருக்கும் போது அதை வெறுப்பிற்குரியது என்று யார் சொன்னாலும் அது நபிகள் நாயகத்தை அவமதிக்கும் செயலாகும். எந்த முஸ்லிமும் இது போன்ற கருத்துக்களை ஏற்கவோ, அங்கீகரிக்கவோ, ஜீரணிக்கவோ கூடாது.

இதன் மூலம் அபூஹனிபா, நபிகள் நாயகத்தை அவமதிக்கின்றார் என்ற கருத்தை நாம் முன்வைக்கவில்லை. மத்ஹபிற்கும் இமாம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இமாம் அபூஹனிபாவிற்கும் பல ஹதீஸ்கள் தெரியாமல் இருந்துள்ளது, அதனாலே அவர் பல தவறான மார்க்க தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றார் என்பதை உணர்த்தவே இதைக் கூறுகிறோம்.

தவறுகள் ஏற்படும் மனிதனைப் பின்பற்றுவதை விட்டும் விலகி, தவறுகளே ஏற்படாத இறைவனை, பிழைகளில்லாத இறைச்சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். மத்ஹபுகளிலிருந்து விலக வேண்டும் என்பதே இதைக் குறிப்பிடுவதன் நோக்கம்.

நோன்பில் ஒரு புதிர் கணக்கு

அல்லாஹ்விற்காக சில நாட்கள் நோன்பு வைப்பது என் மீது உண்டு என்று எவ்வித நிய்யத் இன்றி ஒருவர் கூறினால் அவர் மீது பத்து நாட்கள் நோன்பு நோற்பது கடமையாகும். இச்சட்டம் அபூஹனிபாவிடத்தில் ஆகும். அவர்கள் இருவரும் (அபூயூசுப், முஹம்மத்) ஏழு நாள் என்கிறார்கள்.

நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம் 2, பக்கம் 320

ஹனபி மத்ஹபினரின் மார்க்கச் சட்ட விளக்க நூலான பஹ்ருர் ராயிக்கில் இவ்வாறு கூறப்படுகின்றது. இந்த அர்த்தமற்ற சட்டத்திற்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? சில நாட்கள் என்று சொன்னால் அது எப்படி பத்து நாட்களை குறிக்கும்? மூன்று, நான்கு, ஐந்து, ஐம்பது என்று எவ்வளவோ இருக்க பத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது எந்த அடிப்படையில்? இதற்கான நபிமொழி ஆதாரத்தை மத்ஹபைப் பின்பற்றுவோர் கூறுவார்களா?

இமாமை பின்பற்றும் பயணி

மாநபி வழி

25 கிலோ மீட்டர் தொலைவு ஒருவன் பயணம் செய்தால் அவன் தொழுகையை சுருக்கித் தொழுவதற்கும், இரு தொழுகைகளையும் ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதற்கும் சலுகையைப் பெறுகின்றான். அவ்வாறு சுருக்கித் தொழும் போது லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை 4 ரக்அத்களுக்கு பதிலாக 2 ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும். இது சலுகையே தவிர கண்டிப்பாக இப்படித் தான் தொழுதாக வேண்டும் என்பதில்லை. ஹதீஸ்களில் பயணிக்களுக்கான இந்தச் சலுகை இருப்பதை அறிகிறோம்.

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று மைல்அல்லது “மூன்று ஃபர்ஸக்தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ, நூல்: முஸ்லிம் 1230

இறைவன் அளிக்கும் இச்சலுகையை பயணிகள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இறைவன் அளித்த இச்சலுகையை தகுந்த ஆதாரமின்றி யாரும் ரத்தாக்கி விட முடியாது. அந்த அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை.

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 6:115)

உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்! (அல்குர்ஆன் 18:27)

இதை நினைவில் கொண்டு இது தொடர்பாக மத்ஹபு கூறும் சட்டத்தைப் பாருங்கள்.

மத்ஹபு வழி

பயணி ஒருவர் உள்ளூர்வாசி இமாமை அத்தஹிய்யாத் இருப்பில் அடைந்து அவருடன் தொழுகையில் இணைந்து விட்டார் எனில் அந்தப் பயணி உள்ளூர்வாசியைப் போன்று நான்கு ரக்அத்கள் தொழுவது கடமையாகும். ஏனெனில் அவர் இமாமுடைய தொழுகையில் இணைந்து விட்டதால் இமாமின் மீது கடமையான நான்கு ரக்அத் அவர் மீதும் கடமையாகும் என்று அபூஹனிபா கூறுகிறார்.

நூல்: அல்ஹுஜ்ஜா பாகம் 1, பக்கம் 296

அத்தஹிய்யாத் அமர்வில் இமாமை அடைந்த பயணி உள்ளூர்வாசியைப் போன்று முழுமையாகத் தான் தொழவேண்டும். இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழக்கூடாது என்று ஹனபி மத்ஹபு கூறுகின்றது.

இமாமுடன் சேர்ந்து தொழுவதால் இமாமுக்கு எது கடமையோ அது தான் பயணிகளுக்கும் கடமையாம். எனவே அவர் எழுந்து நான்கு ரக்அத்களை முழுமையாகத் தொழவேண்டும் என மத்ஹபு சட்டம் சொல்கிறது. இதற்கு என்ன ஆதாரம்? எந்த அடிப்படையில் இச்சட்டத்தை வகுத்தார்கள் என்பதைத் தெரிவிப்பார்களா?

(தக்பீர் தஹ்ரீமா) துவக்கத்திலிருந்து இமாமைப் பின்பற்றும் பயணி முழுமையாகத் தொழவேண்டும் என்றால் அது சரி. ஏனெனில் இமாம் என்பவர் பின்பற்றப்படுவதற்குத் தான் நியமிக்கப்படுகின்றார் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்அல்லது “(பின்பற்றப்படுவதற்காகவே) இமாம் இருக்கிறார்”. அவர் தக்பீர் (“அல்லாஹு அக்பர்என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹு அக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) “சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்என்று கூறினால், நீங்களும் “ரப்பனா ல(க்)கல் ஹம்துஎன்று கூறுங்கள்; அவர் சஜ்தா செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள். (நூல்: புகாரி 733)

இமாமின் துவக்கத்திலிருந்து இல்லாமல் அத்தஹிய்யாத் அமர்விலிருந்து இமாமை ஒரு பயணி பின்பற்றினால் இவர் முழுமையாகத் தான் தொழவேண்டும் என்ற சட்டம் எவ்வித ஆதாரமும் அற்றது. அவருக்குள்ள சலுகையை மறுக்கும் வரம்பு மீறிய செயலாகும். பயணிகளுக்கு இறைவன் வழங்கிய சலுகையை எவ்வித ஆதாரமும் இன்றி ஹனபி மத்ஹபு மறுத்து நபிவழியுடன் மோதுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

பால்குடிக் காலம்

மாநபி வழி

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன் 2:233)

குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பால் புகட்டும் காலம் இரண்டு வருடங்கள் அதாவது 24 மாதங்கள் என்று இவ்வசனம் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் ஹனபி மத்ஹபு கூறுவது என்ன?

மத்ஹபு வழி

பாலருந்தும் பருவம் அபூ ஹனீஃபாவிடம் முப்பது மாதங்காகும்

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 223

இதில் வேறென்ன சொல்ல? மத்ஹபுச் சட்டம் தெளிவாக இறைச்சட்டத்துடன் மோதுகின்றது என்பதை தவிர!

தொடரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை     தொடர்: 11

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

அல்குர்ஆன் 78:1-5

உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் புகை மூட்டம், தஜ்ஜால், ஈஸா நபியின் வருகை போன்றவற்றைப் பார்த்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர்.

முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். “துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். “என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்என்றார். (தனது பணியாளர்களிடம்) “என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ஊதுங்கள்!என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். “என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதுஎன்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

அல்குர்ஆன் 18:94-99

முன்பே அந்தக் கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றெல்லாம் இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.

இறுதியில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

அல்குர்ஆன் 21:96

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது.

அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் முற்றுகையிடப்படுவார்கள். ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கும். நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடுஎன்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5228

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5228

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.

நவீன கருவிகளையும்,  ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இது வரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.

இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.

குறிப்பிட்ட காட்டில் தான் வீரப்பன் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தும் வெகு நாட்களாக அவனது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாததற்கு இது தான் காரணம். காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

இலங்கையில் பிரபாகரனும், புலிகளும் இந்திய, இலங்கை இராணுவத்தினரால் நீண்ட நாட்களாகப் பிடிக்கப்பட முடியாமல் போனதற்குக் கூட அடர்த்தியான காட்டுப்பகுதியை அவர்கள் தேர்வு செய்தது தான் காரணம்.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.

எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.

இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக, அதாவது யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.

இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும் (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ்

நூல்: அஹ்மத் 21299

இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: தப்ரானி

ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.

உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 3348

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 1593