ஏகத்துவம் – ஆகஸ்ட் 2010

தலையங்கம்

சத்திய விவாதம் சமாதியான அசத்தியம்

“அப்துல்லாஹ் சமாளியோடு எதற்காக நாம் விவாதம் செய்ய வேண்டும்? ஒரு விளக்கமும் இல்லை; ஒரு விஷயமும் இல்லை;  சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்”

அப்துல்லாஹ் சமாளியுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் விவாதத்தின் போது அரங்கில் இருந்தவர்கள், இணைய தளத்தில் விவாதத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்தவர்கள் நொந்து போய் வெளியிடும் வேதனை வார்த்தைகள் தான் இவை.

இவர்களின் வேதனையையும், விசனங்களையும் தவ்ஹீத் ஜமாஅத் புரியாமல் இல்லை. “இறைவனுக்கு உருவம் உண்டா?’ என்ற தலைப்பில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும், “யார் முஷ்ரிக், பித்அத்வாதி?’ என்ற தலைப்பில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் நடந்த விவாதத்தின் போது நாமும் தலையைப் பிய்த்துக் கொள்ளத் தான் செய்கிறோம். இருப்பினும் இந்தக் களத்தை நாம் சந்தித்துத் தான் ஆக வேண்டிய நிலையிலும் நிர்ப்பந்தத்திலும் இருக்கின்றோம்.

அசத்தியம் ஆட்டம் போடும் போதெல்லாம் சத்தியம் மவுன விரதம் பூணக் கூடாது. சத்தியவாதிகள் பிணமாகக் கிடக்கக்கூடாது.

காயல்பட்டிணத்தில், “முஹ்யித்தீன் என்று அழைத்த்துப் பிரார்த்திக்கலாம்’ என ஓர் அசத்தியவாதி ஆட்டம் போட்டான். முஜாதலா என்ற விவாதத்தைத் தாண்டி முபாஹலாவுக்கு அழைத்து சவால் விட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு யாரும் பதில் சொல்ல முன்வராததால், கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டுத் தான் என்ற குருட்டுச் சிந்தனை கொண்டிருக்கும் பூனையைப் போன்று ஜலீல் மைதீன் என்பவர், தான் மட்டுமே சத்தியத்தில் இருப்பதாக மிதப்பில் இருந்தார்.

அந்தச் சமயத்தில் சவாலை ஏற்றதன் மூலம் ஜலீல் மைதீனின் குருட்டுச் சிந்தனைக்குச் சமாதி கட்டப்பட்டது. அதன் பின்னர் சத்தியம் அமோக, அபார வளர்ச்சி கண்டது, அசத்தியம் சமாதியாகத் தொடங்கியது.

அதன் பின்னர் கோட்டாறு விவாதம், கடையநல்லூர் விவாதம், கிறித்தவ அறிஞர் ஜெபமணியுடன் விவாதம், இலங்கை விவாதம், கோவை காதியானி விவாதம், சென்னையில் அஹ்லெ குர்ஆன் கூட்டத்தினருடன் விவாதம், களியக்காவிளை விவாதம், ஏர்வாடி மற்றும் மதுரையில் பிறை விவாதம், தொண்டியில் தர்ஜுமா விவாதம், சென்னையில் நாத்திகர்களுடன் விவாதம் இன்னும் பல்வேறு விவாதக் களங்களைத் தவ்ஹீத் ஜமாஅத் கண்டது. அல்லாஹ்வின் அருளால் அதில் சத்தியம் வென்றது.

 தற்போது சென்னையில் நடைபெற்றுள்ள இந்த விவாதத்தில், எதிர்த் தரப்பு விவாத அரங்கில் பங்கு கொண்ட ஆசிரியர்களிடம் பயின்ற ஒரு மாணவர், தற்போது தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோதரர் அப்துல் காலிக் அவர்கள், “களியக்காவிளை விவாதத்தில் அப்துல்லாஹ் ஜமாலி சரியான ஆதாரங்களைக் காட்டி விவாதிக்காததால் அதற்குப் பின்னர் தான் நான் தவ்ஹீதுக்கு வந்தேன். இந்தச் சென்னை விவாதத்திலும் ஜமாலி சரியான ஆதாரத்தைக் காட்டவில்லை. எனவே இதற்குப் பின்னரும் இன்ஷா அல்லாஹ் ஏராளமானவர்கள் தவ்ஹீதுக்கு வருவார்கள்” என்று குறிப்பிட்டார். அல்ஹம்துலில்லாஹ்!

களியக்காவிளை விவாதத்தின் போதும், “இவருடன் ஏன் விவாதம் செய்ய வேண்டும்?’ என்று தற்போது வெளியிடுகின்ற வேதனையைத் தான் நமது சகோதரர்கள் வெளியிட்டார்கள்.

ஆனால் அந்த களியக்காவிளையில் கிடைத்த வெற்றி என்ன என்பதை இப்போது நாம் அறிகின்றோம். அப்போதைய ஏகத்துவத்தில், “களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும்’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளியிடப்பட்டது.

களியக்காவிளை விவாதத்தின் மூலம் வந்த வரவு இந்த ஒன்று மட்டுமல்ல! பல வரவுகள் உள்ளன. அவர்களில் சிலர் கிளைப் பொறுப்புகளைக் கூட அலங்கரித்துக் கொண்டுள்ளனர். இப்போது இந்த விவாதத்தின் பலனை நாம் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 2942

தவ்ஹீத் ஜமாஅத் தோற்றுவிக்கப்பட்டது மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியத்தின் பக்கம் மீட்பதற்காகத் தான். அந்தக் களப்பணியின் ஓர் ஆயுதம் தான் விவாதம். அழைப்புப் பணி எனும் வயல் களத்தில் கதிர் மணிகளை அறுத்து வருகின்ற கதிர் அரிவாள் தான் விவாதம்.

அறுவடை செய்யும் போது கால்கள் சேற்றில் மிதக்கும். கைகளில் காயங்கள் பதியும். ஆனால் தானிய மணிகளைக் கொண்டு வருகையில், சோற்றை உண்டு மகிழ்கையில் வேதனைகள் அத்தனையும் தீர்ந்து போய் விடுகின்றன. அது போல் தான் இந்த விவாதக் களத்தில் கிடைக்கப் போகும் கதிர் மணிகளைக் காணும் போது நமது கவலை தீரும். எத்தனை பேர்கள் வருவார்கள் என்பதை அல்லாஹ் தான் அறிவான். யாரும் வராவிட்டாலும் அழைப்புப் பணி என்ற கடமையைச் செய்ததற்கு நமக்குக் கூலி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!

அத்துடன், கண்டவனெல்லாம் “விவாதத்திற்கு வருகிறீர்களா?’ என்று கேட்பதற்கும் இது போன்ற விவாதங்களின் மூலம் முடிவு கட்டலாம்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் 21:18

அல்லாஹ் சொல்வது போன்று இந்த விவாதம் அசத்தியக் கொள்கையை நொறுக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.

ஜமாலி, சமாளி சமாளி என்று சமாளிக்கத் தான் செய்கிறாரே தவிர அவரால் சத்தியத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

ஆம்! சத்தியம் உயிர்த் துடிப்புடன் ஜீவிதம் காண்கிறது, சரித்திரம் படைக்கின்றது. அசத்தியம் சமாதிக்குள் அதற்குரிய இடத்தில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கின்றது, அஸ்தமித்துக் கொண்டிருக்கின்றது.

————————————————————————————————————————————————

பாதை மாறிய பக்ரி

ஹாமித் பக்ரி…. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்தவர். நல்ல பேச்சாளர். ஹதீஸ் கலையில் ஞானம் உள்ளவர். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவர் மீது அதிகமான மரியாதையும் அபிமானமும் வைத்திருந்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகமதிகம் தவ்ஹீத் ஜமாஅத்திற்காகப் பிரச்சாரம் செய்தவர். ஆடியோ, வீடியோ கேஸட்டுகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் வீடுகள் மற்றும் நூலகங்களில் அலங்கரித்து நின்றவை இவருடைய கேஸட்டும் கூட.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இப்படி ஓர் உச்சக்கட்ட நிலையில் இருந்தவர் தான் இன்று தரைமட்ட நிலையில் தேய்ந்து விட்டார். கோபுரமாக இருந்தவர் குப்பை மேடாக ஆகி விட்டார். இவருடைய சறுகலையும் வழுக்கலையும் பார்க்கக்கூடிய நாம், அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது போன்று இஸ்லாமிய மரணத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

அல்குர்ஆன் 3:8

அத்துடன் நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம், நேர்வழி என்பது அல்லாஹ்வின் கைவசம் உள்ளது; அவனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது. பக்ரியின் இந்த வழிதவறலுக்கு புகாரியில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸ் பொருத்தமான உதாரணமாகும்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.

(அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார்.

(ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசிஎன்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்பு களுக்கிடையே  வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 2898

இந்த ஹதீஸின் கடைசிப் பகுதியில் இடம்பெறும் வாசகம் நாம் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

தற்கொலை செய்த இவர் தொடர்பான செய்தி புகாரியில் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளது. அந்தந்த செய்திகளின் கடைசியில் மனதை விட்டு நீங்காத இந்த எச்சரிக்கை மணி ஓசையை நபி (ஸல்) அவர்கள் எழுப்பி விடுகின்றார்கள்.

இதே ஹதீஸ் புகாரியில் 3062 எண்ணில் பதிவாகியுள்ளது. அதன் இறுதியில் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

“முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான்” என்று பொது அறிவிப்புச் செய்தார்கள்.

இதே ஹதீஸ் புகாரியில் 6493வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் “இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு செய்தியிலும் அபாய மணி அடிக்கின்றார்கள். அதனால் தான் உள்ளங்களைத் தன் கைவசம் வைத்திருக்கக்கூடிய அல்லாஹ்விடம் கீழ்க்காணும் துஆக்களை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!

அல்குர்ஆன் 12:101

எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!

அல்குர்ஆன் 7:126

மேலே நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸில் உள்ளவர் வழிகேட்டில் இறந்து விட்டார். பக்ரி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையிலிருந்து பக்ரி பாவ மன்னிப்பு தேடவில்லை என்றால் இவருக்கும் இதே கதி தான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நாம் இங்கே வெளிப்படையான அவருடைய தற்போதைய நிலையைப் பார்த்தே அவர் வழிகேட்டில் சென்றிருக்கிறார் என்று கூறுகிறோம்.

தடுமாற்றமும் தட மாற்றமும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்என்று சொல்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6585, 6586, 6857

இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெறுகின்றது. இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு, “பார்த்தீர்களா? ஸஹீஹுல் புகாரியிலே வருகின்றதா இல்லையா? என்ன வருகின்றது? ஸஹாபாக்களே ஹவ்லுல் கவ்ஸர் தண்ணீருக்கு அருகில் போக முடியாமல், ரசூலுல்லாஹ்விடமிருந்து தண்ணீரைப் பெற முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். இப்படி தடுக்கப்படும் ஸஹாபாக்களையா நீங்கள் பின்பற்றப் போகிறீர்கள்?” என்று இந்த ஹதீஸை வைத்து இப்படிக் குழப்பி, கேட்கக் கூடிய நிகழ்வைப் பார்க்கிறோம்.

சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த ஹதீஸ் இருப்பது உண்மை. ஸஹீஹுல் புகாரியில் இருப்பது உண்மை. ஆனால் அல்லாஹ் எப்படி அவர்களது கண்களைக் குழப்புகிறான் என்று பாருங்கள். அவர்களுடைய இதயங்களை எப்படிச் சிதைக்கிறான் என்று பாருங்கள். இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு வாசகம், அந்த வாசகம் தான் பிரதானமான வாசகம். அவர்கள் யாரென்றால் முர்தத்துகளாக, இஸ்லாத்தை விட்டு, வட்டத்தை விட்டு வெளியேறி மதம் மாறிப் போனவர்கள்.

நான் கேட்கிறேன், ஸஹாபி என்றால் நாம் யாரைச் சொல்வோம். நபி (ஸல்) அவர்களுடைய திருமுகத்தைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்று, அந்த நிலையிலேயே வஃபாத்தாகி இருப்பார்களே அவர்களைத் தானே ஸஹாபாக்கள் என்று சொல்வோம். மதம் மாறியவர்களை ஸஹாபாக்கள் என்று யாராவது சொல்வோமா? இதை அவர்களது கண்களிலிருந்து அல்லாஹ் மறைக்கிறான்.

அது மட்டுமல்ல! அங்கு உஸைஹாபீ, உஸைஹாபீ என்று சொன்னதற்கு என்ன அர்த்தம்? இந்த ஹதீசுக்கு என்ன விளக்கம்? இந்த ஹதீஸ் என்னென்ன கிதாபுகளில் இடம் பெற்றுள்ளது? அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்களே! மிகப் பெரிய இமாம்கள். சொன்ன விஷயங்களெல்லாம் என்ன? இது ஸஹாபாக்களைக் குறிக்கின்ற விஷயமா? இல்லை. இது ஸஹாபாக்களைக் குறிக்கின்ற விஷயம் இல்லை. உம்மத்தைக் குறிக்கின்ற விஷயம். இந்தச் செய்தி வேறு வேறு கிதாபுகளில் வருகின்றது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஆக இல்லாத விளக்கத்தைக் கொடுத்து, இருக்கிற வாசகத்தை மறைத்து, தப்பான அர்த்தத்தைக் கொடுத்து, ஸஹாபாக்கள் மீது தங்களுக்கு இருக்கிற காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக ஹதீஸ்களையே குழப்பக்கூடிய ஒரு நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த ஒன்று தான், எத்தனையோ விஷயங்களைச் சொல்லலாம். இந்த ஒன்று தான் இவர்களிடமிருந்து என்னை அல்லாஹ் பிரித்த விஷயம். யோசித்துப் பாருங்கள். இதை எப்படி ஜீரணிக்க முடியும்?

காயல்பட்டிணத்தில் நடைபெற்ற புகாரி சபையில் ஹாமித் பக்ரி பேசிய வார்த்தைகள் தான் இவை.

ஸஹாபாக்களின் மீது தவ்ஹீத் ஜமாஅத்தினர் கொண்ட காழ்ப்புணர்ச்சியும் கசப்புணர்ச்சியும் தான் தன்னை தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியேறச் செய்தது என்று கூறுகின்றார். இவர் சொல்கின்ற இந்தக் காரணம் உண்மையா என்று பார்ப்போம்.

பக்ரி நமது ஜமாஅத்தில் இருந்த போது ஜமாஅத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான சில கள்ளத்தனமான காரியங்களில் களமிறங்குகின்றார். ஒரு ரமளானின் இரவு நேரத்தில் கைதும் செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றார். கூட இருந்து கொண்டே குழி பறிக்கின்ற இதுபோன்ற ஆட்களை ஜமாஅத்தில் வைக்கக் கூடாது என்று கருதி தவ்ஹீத் ஜமாஅத் அவரை நீக்குகின்றது. அவரைச் சிறையிலிருந்து வெளியே எடுப்பதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்வதில்லை என்பதிலும் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக இருந்தது.

இந்த நிலையில் சிறையிலிருந்து சிலர் மூலம் தூது விட்டார். தவ்ஹீத் ஜமாஅத் அதைக் கண்டு கொள்ளவில்லை. வெளியே வந்த இவர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எந்த விமர்சனத்திலும் ஆரம்பத்தில் இறங்கவில்லை.

தமுமுகவினர் சதி

இவரை வெளியேற்றும் போது தமுமுக நம்முடன் இருந்தது. பக்ரியின் நீக்கம் குறித்த முடிவில் தமுமுகவும் நூற்றுக்கு நூறு உடன்பாடு கொண்டிருந்தது. பக்ரி சிறையிலிருந்து வெளியே வந்த சமயம் தமுமுகவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் உரசல் துவங்கும் நேரம். இந்த நேரத்தில் இவருக்கும் தமுமுகவைச் சேர்ந்த ரிபாயி என்பவருக்கும் ரகசிய தொடர்பு ஏற்படுகின்றது. தமுமுகவுடன் கொஞ்சலும் குழாவலும் ஏற்படுகின்றது. ஜாக்குடனும் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தான் நமக்கு எதிராக இவர் வாய் திறக்க ஆரம்பிக்கின்றார். ஆனாலும் அதிகமாக எதுவும் விமர்சிக்கவில்லை.

இந்நிலையில் இவர் கொஞ்சம் கொஞ்சமாக தவ்ஹீத் என்று மருந்தளவுக்கு இருந்த அல்ஜாமிவுல் அஸ்ஹர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரால் உருவாக்கப்பட்ட ஆயிஷா சித்தீகா மதரஸாவிலிருந்தும் தூக்கியெறிப்பட்டார். இறுதியில் இவர் எந்த புகாரி சபையை விமர்சித்துக் கொண்டிருந்தாரோ அந்த புகாரி சபையின் பூசாரிகளிடம் பாத பூஜை செய்து பாவ மன்னிப்பு கோருகின்றார். அங்கு ஒரு புனர் ஜென்மம் எடுக்கின்றார். அப்போது தான், “இந்த ஒன்றுக்காகத் தான் வெளியே வந்தேன்” என்று புலம்பி அழுகின்றார்; புளுகித் தள்ளுகின்றார்.

இதற்காகத் தான் வெளியே வந்தார் என்றால் உள்ளே இருக்கும் போதே இதற்காகப் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும். மார்க்க ரீதியாக இவர் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைக்கின்ற போது   அனைவரும் அதற்குத் தனிக்கவனம் செலுத்துவர்; தனி மரியாதை கொடுப்பார்கள். ஆனால் அப்போது இதற்காகக் குரல் கொடுத்தாரா? குரல் கொடுப்பது ஒரு புறமிருக்கட்டும். முனகக் கூட இல்லை.

பசப்பு மொழியாளர்! பச்சைப் பொய்யர்!

அப்போது முனகக் கூடச் செய்யாத, மூச்சு விடாத இவர் இப்போது ஸஹாபாக்களுக்காகத் தான் வெளியே வந்தேன் என்கிறார் என்றால் இது பச்சைப் பொய்யைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்? பசப்பு வாதம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல முடியும்?

இவர் தன் பாட்டிற்கு இருந்திருந்தால் நாம் இவரைக் கண்டு கொள்ளப் போவதில்லை. நமது ஜமாஅத்தை சீண்டிப் பார்த்தால், சிராய்ந்து பார்த்தால், ஜமாஅத் இவரை அக்கு வேறாக, ஆணி வேறாக அடையாளம் காட்டத் தயங்காது. ஜமாஅத் மீது அடாத பழியை, ஆகாத பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றார். அவ்வாறு சுமத்தும் போது, இவர் பொய்யர் என்பதை இவரது வார்த்தைகள் மூலமாகவே அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான்.

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட இவர், புகாரி சபையில் போய் அந்த உண்மையைச் சொல்லியிருந்தால் இவரை நாம் பாராட்டலாம். ஆனால் இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து தனது முனாஃபிக் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். இந்த வகையில் கலந்தர் மஸ்தான், அப்துல்லாஹ் ஜமாலி இன்னும் இவரது வகையறாக்களை நாம் பாராட்டலாம். அவர்கள் அசத்தியத்தில் இருந்தாலும் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள்.

தவ்ஹீதுவாதிக்குத் தக்க பாடம்

பக்ரியின் இந்த விவகாரத்தில் தவ்ஹீதுவாதிகளுக்குத் தக்க பாடம் இருக்கின்றது. பக்ரியை நாம் நமது தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டுத் தான் நீக்குகின்றோம். தவ்ஹீதை விட்டு நீக்கவில்லை. ஆனால் அவர் தவ்ஹீதை விட்டே வெளியே போய் விட்டார்.

இறைவா! (நபி) முஸ்தபாவின் பொருட்டால் எங்களது நாட்டங்களை நிறைவேற்றுவாயாக! தயாளனே! கடந்து விட்ட எங்களது தவறுகளை எங்களுக்காகப் பொறுத்தருள்வாயாக!

இவ்வாறு அல்லாஹ்விடம் ஒருவர் பொருட்டால் தா என்று கேட்கும் அளவுக்குக் கேடு கெட்டுப் போய் விட்டார். இதற்குக் காரணம் என்ன? ஜமாஅத் எடுத்த நியாயமான நடவடிக்கையைப் பொருந்திக் கொள்ளாதது தான். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தேன், என்னையா இப்படித் தண்டித்தீர்கள்? என்ற வெறுப்புத் தான் இன்றைக்கு இவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துச் சென்றிருக்கின்றது.

இன்றைக்கு நம்மில் சிலரிடமும் தலைக் கனம் இருக்கின்றது. ஜமாஅத்தினால் தான் நாம் என்பதை விடுத்து விட்டு, நம்மால் தான் இந்த ஜமாஅத் என்ற கர்வம் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். அவர்களது முடிவு இப்படித் தான் இருக்கும்.

நபித்தோழர்களின் அடக்கமும் அமைதியும்

தலைமையில் இருப்பவர்களும் மனிதர்களே! தலைமையிடத்தில் சில தவறுகள் ஏற்பட்டு விடலாம். அது நிரபராதியைக் கூடத் தண்டித்து விடலாம். அதுவும் ஓர் அநியாயக்காரன் சொல்லைக் கேட்டு ஒரு நியாயவாதி மீது நடவடிக்கை எடுத்து விடலாம். இதுபோன்ற சமயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஜமாஅத் நலன் கருதி அல்லாஹ்விடத்தில் பொறுப்பைச் சாட்டி விட்டு, பாரத்தைச் சுமத்தி விட்டு அமைதியாகவும் அடக்கமாகவும் பொறுத்திருக்க வேண்டியது தான். இதற்கு ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்களது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நயவஞ்சகனின் பொய்யை நம்பி, உண்மை சொன்ன தமது தோழர் ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சங்கடப்படுத்தி விடுகின்றார்கள்.

ஒரு நயவஞ்சகனின் சொல்லைக் கேட்டு விட்டு, நம்மை நம்ப மறுத்து விட்டார்களே என்று ஜைத் பின் அர்கம் (ரலி) இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடவில்லை. பட்ட கவலையுடன் பாரத்துடன் காத்திருக்கின்றார்கள்.

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், “அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்று விடுவார்கள்என்று சொல்வதையும், மேலும், “நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, “நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லைஎன்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பி விட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், “(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போதுஎன்று தொடங்கி “ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, “ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

நூல்: புகாரி 4901

இங்கு ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் பொறுமையாக இருந்ததற்கான பரிசைப் பெறுகின்றார்கள். இப்படித் தான் ஒரு தவ்ஹீதுவாதி இருக்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுத்தவுடன் இயக்கத்தை விட்டு வெளியே சென்று விடக் கூடாது. அப்படிச் சென்றவர்கள் இயக்கத்தை விட்டு மட்டுமல்ல, ஏகத்துவத்தை விட்டே வெளியே போய் விடுகின்றார்கள் என்பதற்கு பக்ரிகளும் பாக்கர்களும் அவர்களது பரிவாரங்களும் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். அதனால் ஜமாஅத்தால் நடவடிக்கைக்கு உள்ளாகக் கூடியவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜமாஅத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியே சென்றவர்கள், விஷமத்தனம் செய்தவர்களின் தீய முன்மாதிரிகளைப் போன்று, நடவடிக்கைக்குப் பின்னும் ஜமாஅத்தை விட்டு வெளியேறாமல் பொறுமையுடன் இருந்த சகோதரர்களின் நல்ல முன்மாதிரியும் இருக்கின்றது. எனவே ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டு கொள்கையைக் காப்போமாக!

கவ்ஸர் தடாகம் தடுக்கப்படுவோர் யார்?

பித்அத் செய்யக் கூடாது. பித்அத் செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், விபரீதங்கள் ஏற்படும் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்களை தவ்ஹீத் ஜமாஅத் காட்டி வருகின்றது. அந்த ஆதாரங்களில் முக்கியமான ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்என்று கூறிவிட்டுப் பிறகு “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.

பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம்.

அறிந்து கொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்என்று சொல்வேன். அதற்கு “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாதுஎன்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (ஈசா நபி) சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4625, 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 7049

முஸ்லிம் 365, 4247, 4250, 4259, 5104

இந்த ஹதீஸ்கள் அனைத்திலும், உங்களுக்குப் பின்னால் இவர்கள் புதிதாக என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்று வருகின்றது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றது. பித்அத் செய்தால் நாளை மறுமையில் தடாகத்தில் தண்ணீர் குடிக்க விடாமல் தடுக்கப்படுவதுடன், நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். பித்அத் செய்தால் இதுபோன்ற தண்டனை கிடைக்கும் என்று இந்த ஹதீஸிலிருந்து நிறுவுகிறோம்.

இந்த ஹதீஸை பித்அத்தை ஒழிப்பதற்காகக் கொண்டு வருகின்றோம். இந்த நோக்கத்திற்காக ஹாமித் பக்ரி என்பவரும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பேசியிருக்கின்றார். இப்போது அவர் அதை மறுக்க முன்வருகின்றார்.

ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்கள் என்று வந்து விடக் கூடாதாம். ஸஹாபாக்களை இதை விட்டும் காப்பாற்றுவதற்காக இதற்கு ஒரு மாற்று விளக்கம் கொடுக்கின்றார்.

“இந்த ஹதீஸ் குறிப்பிடுவது ஸஹாபாக்களை அல்ல, ஒட்டுமொத்த உம்மத்தையும் குறிக்கிறது. இந்த உம்மத்தில் மதம் மாறியவர்களைக் குறிக்கும்”

இது தான் அவர் கொடுக்கும் மாற்று விளக்கமாகும். இப்படித் தான் இமாம்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒரு வாதத்தை வைக்கின்றார். மதம் மாறியவர்கள் என்று ஹதீஸிலேயே வருகின்றது என்றும் சொல்கின்றார்.

இவர் சொல்வது போல் புகாரியில் 3349, 3447, 4625, 4740, 6526 மற்றும் முஸ்லிம் 5104 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெறுகின்றது.

இவர் கொடுக்கக் கூடிய இந்த விளக்கம் கபீஸா கூறுவதாக புகாரியில் 3447 ஹதீஸில் இடம் பெற்றிருக்கின்றது.

விளக்கம் தரும் வேறொரு ஹதீஸ்

பொதுவாக ஒரு வசனத்திற்கு மற்றொரு வசனம் விளக்கமாக அமைவது போல் ஒரு ஹதீசுக்கு மற்றொரு ஹதீஸ் விளக்கமாகும். இது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு பொது விதி! அந்த அடிப்படையில் பக்ரியும் ஒரு காலத்தில் ஒத்திருந்தார். இப்போது வழி தவறியதால் வாயும் தவறுகின்றார். அதனால் இப்போது இமாம்களுடைய விளக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஒரு ஹதீசுக்கு மற்றொரு ஹதீஸ் விளக்கமாக அமையும் என்ற அடிப்படையில் இப்போது இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்போம்.

பக்ரி சொல்வது போல் உம்மத்தைக் குறிக்கும் வகையிலும் ஹதீஸ்கள் வராமல் இல்லை. சுனன் நஸயீ அல்குப்ராவில் 11095வது ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் “அஸ்ஹாபீ’ என்பதற்குப் பதிலாக “உம்மத்தீ – என்னுடைய சமுதாயமே’ என்று சொன்னதாக இடம் பெற்றுள்ளது. வேறு சில நூற்களிலும் இதுபோன்ற ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் காரணத்தால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இந்த ஹதீஸ் குறிக்கும் என்ற பொருள் கொடுக்க முடியுமா? முடியாது. காரணம், “அஸ்ஹாபீ’ என்று குறிப்பிடுகின்ற ஹதீஸ்கள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எனவே இந்த ஹதீசுக்கு விளக்கமாக அமைந்த ஏனைய ஹதீஸ்களை இப்போது பார்ப்போம்.

ஆதாரம்: 1

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்‘ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ள மாட்டாரா, கூறுங்கள்என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் “வாருங்கள்என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள்என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!என்று கூறுவேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 நூல்: முஸ்லிம் 367

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களையும், சமுதாயத்தில் உள்ள மற்றவர்களையும் நன்கு தெளிவாக வேறுபடுத்தி, வித்தியாசப்படுத்தியே காட்டுகிறார்கள்.

தடாகம் தொடர்பான ஹதீஸ்கள் அனைத்திலும் உம்மத்தீ (என்னுடைய சமுதாயமே) என்ற வாசகம் இடம்பெறவில்லை. மாறாக அஸ்ஹாபீ (என்னுடைய தோழர்களே) என்று தான் அழைக்கிறார்கள். ஒரு சில அறிவிப்புக்களில் “உஸைஹாபீ’ (குறைவான எண்ணிக்கையிலுள்ள எனது தோழர்களே) என்று இடம் பெறுகின்றது.

அதனால் நபி (ஸல்) அவர்கள் அஸ்ஹாபீ என்று சொல்வதன் பொருள், அவர்கள் தமது தோழர்களைத் தான் அழைக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

ஆதாரம்: 2

புகாரி 7051, முஸ்லிம் 4243 ஆகிய எண்களில் பதிவாகியுள்ள ஹதீஸ்களில், “அவர்களை நான் அறிவேன்; அவர்களும் என்னை அறிந்து கொள்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஹதீஸில் நபியவர்கள் குறிப்பிடுவது ஸஹாபாக்களில் சிலரைத் தான் என்பது உறுதியாகின்றது.

ஆதாரம்: 3

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி  (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவதற்காகக்) கடலில் பயணம் செய்வார்கள். அவர்களுடைய நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும்என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூற்கள்: புகாரி 2878, முஸ்லிம் 3535

மேற்கண்ட ஹதீஸில், “நாஸுன் மின் உம்மத்தீ – என்னுடைய சமுதாயத்தில் சிலர்” என்று பொதுவாகக் குறிப்பிடும் நபி (ஸல்) அவர்கள், தடாகம் தொடர்பான ஹதீஸில், “நாஸுன் மின் அஸ்ஹாபீ – என்னுடைய தோழர்களில் சிலர்” என்றே குறிப்பிடுகின்றார்கள். பொதுவாக சமுதாயத்தவராக இருந்தால் என்னுடைய தோழர்களில் சிலர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது என்னை விட்டு அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் “(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்என்பான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6582

இன்னும் இதை விடத் தெளிவாகவே முஸ்லிமில் இடம் பெறும்  (4259) ஹதீஸில், “என்னிடம் தோழமை கொண்டவர்களில் சிலர்’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.

இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஹதீஸில் குறிப்பிடுவது, ஸஹாபாக்களைத் தான் என்பது உறுதியாகின்றது.

நஸயீயில் வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக உம்மத் என்று குறிப்பிட்டாலும்,

முஸ்லிம் 367 ஹதீஸில், நீங்கள் தோழர்கள் என்று பிரித்துக் காட்டுவதாலும், தடாகம் தொடர்பான ஏனைய ஹதீஸ்களில் ஸஹாபாக்களில் ஒரு சாரார் என்று குறிப்புப்படுத்துவதாலும் நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுவது ஸஹாபாக்களைத் தான் என்பது சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகின்றது.

ஆதாரம்: 4

உம்மத்தீ – என்னுடைய சமுதாயத்தினர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் இது ஸஹாபாக்களைக் குறிக்காது என்பது பக்ரியின் வாதம்.

ஆனால் உம்மத்தீ என்பது பொதுவான வார்த்தையாகும். அஸ்ஹாபீ என்பது குறிப்பு வார்த்தையாகும்.

அதாவது, உம்மத் என்பதில் ஸஹாபாக்களும் அடங்குவார்கள். மற்ற மக்களும் அடங்குவார்கள். ஆனால் ஸஹாபி என்பதில் அனைத்து மக்களும் அடங்க மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு செய்தியில், “வன விலங்கு ஒன்று மனிதனைக் கடித்து விட்டது’ என்று இடம் பெறுவதாக வைத்துக் கொள்வோம். அதே செய்தியை மற்றொரு இடத்தில் சொல்லும் போது, சிங்கம் ஒன்று மனிதனை கடித்ததாகக் கூறப்படுகிறது என்றால் இப்போது முன்னர் இடம் பெற்ற செய்தியில் உள்ள வன விலங்கு, சிங்கம் தான் என்பது தெளிவாகி விட்டது.

வன விலங்கு என்பதால் அது புலி, சிறுத்தை, ஓநாய் எல்லாவற்றையும் குறிக்கும்; எனவே கடித்தது சிங்கம் அல்ல என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால், முதல் செய்தியில் வன விலங்கு என்று பொதுவான வார்த்தை இடம் பெற்றாலும், அடுத்த செய்தியில் சிங்கம் என்ற குறிப்பான வார்த்தை வந்து விட்டதால் இங்கு வேறு அர்த்தம் கொடுக்க வழியே இல்லை.

சில ஹதீஸ்களில் உம்மத் என்ற வார்த்தை இடம் பெற்றாலும் அது ஸஹாபாக்களைக் குறிக்காது என்று கூற முடியாது. ஏனென்றால் ஸஹாபாக்களும் உம்மத்தில் உள்ளவர்கள் தான்.

உம்மத் என்று பொதுவான வார்த்தை இடம் பெறும் ஹதீசுக்கு, ஸஹாபி என்ற வார்த்தை இடம் பெறும் ஹதீஸ் விளக்கமாக அமைகின்றது. எனவே இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது நபித்தோழர்கள் தான் என்பது உறுதியாகின்றது.

ஆதாரம்: 5

எல்லா ஹதீஸ்களிலும் அஸ்ஹாபீ, அஸ்ஹாபீ என்று இடம் பெறும் போது, புகாரி 4625, முஸ்லிம் 4529 ஆகிய ஹதீஸ்களில் உஸைஹாபீ என்று சொன்னதாக இடம் பெறுகின்றது. இவ்வாறு சொல்வதற்கு அரபியில் தஸ்கீர் என்று குறிப்பிடுவர். அதாவது ஒன்றின் பரிமாணத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக, எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக இவ்வாறு சொல்லப்படும்.

உதாரணத்திற்கு ஹஸன் என்றால் அழகன் என்று பொருள். ஹுஸைன் என்றால் சிறிய அழகன் என்று பொருள்.

இதுபோல் அஸ்ஹாபீ எனும் போது அதற்கு, அதிக எண்ணிக்கையிலான என்னுடைய தோழர்கள் என்று பொருள் வரும்.

உஸைஹாபீ என்று சொல்லும் போது, குறைவான எனது தோழர்கள் என்று பொருள்படும்.

இவ்வாறு தமது தோழர்களில் பித்அத் செய்து, மதம் மாறியவர்கள் மிகக் குறைவானவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதிலிருந்தும், அவர்கள் ஸஹாபாக்களைத் தான் குறிப்பிடுகின்றார்கள் என்று தெளிவாகின்றது.

ஆதாரம்: 6

மதம் மாறியவர்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் சில இடங்களில் வருகின்றது. நபித்தோழர்களை மதம் மாறியவர்கள் என்று கூற முடியுமா? என்பது பக்ரியின் வாதம். இந்த வாதம் பாமர மக்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் நபித்தோழர்கள் என்று கருதப்பட்டவர்களிடம் மத மாற்றம் நிகழ்ந்துள்ளதை இஸ்லாமிய வரலாறு தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறந்தவுடனேயே மத மாற்றம் நடந்தது. இதை புகாரி 1400வது ஹதீஸிலும் வேறு பல ஹதீஸ்களிலும் காணலாம்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், “நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஜகாத் கொடுத்தோம். அவர்கள் இறந்து விட்டார்கள். இனிமேல் ஜகாத் கொடுக்க மாட்டோம்” என்று அரபிகள் மறுத்து மதம் மாறியுள்ளனர்.

இந்த அரபிகள் யார்? நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த அரபிகள்.

இவர்ளை தாபியீன்கள் என்று கூற முடியாது. காரணம் தாபிஃ என்றால் ஸஹாபாக்களைச் சந்தித்தவர்கள் என்று அர்த்தம்.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே அவர்களை ஸஹாபாக்கள் என்று தான் குறிப்பிடுவோம்.

நபி (ஸல்) அவர்களை முஸ்லிமாகச் சந்தித்து, அவர்கள் இறந்த பின்னர் மதம் மாறியிருந்தாலும் நபியவர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஸஹாபிகள் தான். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தான் மதம் மாறுகிறார்கள்.

எனவே மதம் மாறியிருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் அறிந்திராத காரணத்தால் தான், “என்னுடைய தோழர்கள்” என்று அழைக்கிறார்கள். உங்களுக்குப் பிறகு, அதாவது உங்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்கள் மதம் மாறியது உங்களுக்குத் தெரியாது என்று மறுமையில் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. எனவே மதம் மாறியவர்களை நபித்தோழர்கள் என்று எப்படிக் குறிப்பிடலாம் என்ற வாதம் அர்த்தமற்றதாகும்.

ஆதாரம்: 7

இந்தக் கருத்தில் வரும் புகாரி 3349, 3347, 4625, 4740, 6526, முஸ்லிம் 5104 ஆகிய ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள், “ஈஸா (அலை) அவர்கள் சொன்ன வாக்குமூலத்தை நானும் சொல்லி விடுவேன்’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது திருக்குர்ஆன் 5:117 வசனத்தில் உள்ளது போன்று, “நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற கருத்து இந்த ஹதீஸில் இடம் பெறுகின்றது.

இந்த வாக்குமூலத்தைப் பாருங்கள். “நான் அவர்களுடன் இருக்கும் போது நான் அவர்களைக் கண்காணித்தேன்’ என்றால் அவர்கள் இருக்கும் போது உடனிருந்த மக்கள் யார்? நபித்தோழர்கள் தான் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அப்படியிருக்கையில் இந்த ஹதீஸ் நபித்தோழர்களைக் குறிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மனோ இச்சையைப் பின்பற்றித் தான் இவ்வாறு வாதிட முடியும்.

ஆதாரம்: 8

“நீங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறுவார்கள். (புகாரி 3447, 3449)

இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம், “நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து” என்ற வாசகம் இடம் பெறுகின்றது. நபித்தோழர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் பிரிவதையே இது குறிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே இந்த வாசகமும் தடாகத்தில் தடுக்கப்படுவோர் நபித்தோழர்களில் சிலர் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, தடாகத்தில் நபி (ஸல்) அவர்கள் அழைப்பது ஒட்டு மொத்த உம்மத்தையும் அல்ல! ஸஹாபாக்களைத் தான் என்பது நன்கு தெளிவாகின்றது.

பல்வேறு ஹதீஸ்களை ஒன்றிணைத்துப் பார்த்து நாம் இந்த முடிவுக்கு வருகின்றோம். ஆனால் பக்ரியோ இமாம்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் என்று சொல்கிறார். இவ்வாறு சுய விளக்கம் கொடுப்பதுடன் மட்டும் நில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மனோ இச்சையைப் பின்பற்றுவதாகவும் கூறுகின்றார்.

இமாம்களின் பெயர்களைச் சொல்லி ஹதீசுக்கு சுய விளக்கம் கொடுத்து மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் யாô? ஹதீசுக்கு ஹதீஸிலிருந்தே விளக்கம் கொடுத்து மார்க்கத்தைப் பின்பற்றுவது யார்? என்பதை இந்தக் கட்டுரையைப் பார்க்கும் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் ஆதாரமான ஹதீஸ்

இங்கே இதுவரை நாம் கண்ட விளக்கங்களின்படி இந்த ஹதீஸ் ஸஹாபாக்களைத் தான் குறிக்கும் என்றால், பித்அத்தை ஒழிப்பதற்கு இந்த ஹதீஸை நாம் ஆதாரமாகப் பயன்படுத்துவது ஏன்? என்ற கேள்வி இங்கே எழுகின்றது.

ஸஹாபாக்களுக்கே இந்தத் தண்டனை என்றால் நாம் பித்அத் செய்தால் நமக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தான் இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறுகின்ற பாடமும் படிப்பினையும் ஆகும். அந்த அடிப்படையில் மட்டுமே இந்த ஹதீஸ் இந்த உம்மத் அனைவருக்கும் ஆதாரமாகும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் நாம் இந்த ஹதீஸைக் கையாள்கிறோம்.

————————————————————————————————————————————————

பொருளியல்      தொடர்: 6

நபியவர்களின் வறுமை

நபியவர்களின் படுக்கை வசதி

நமது காலத்தில் மிகவும் வறுமைக்குக் கீழ் உள்ளவர்கள் கூட, படுப்பதற்குப் பாய் வைத்திருப்பர்கள். தரையிலும் ஈச்சம்பாயிலும் யாரும் படுக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அரசனாக இருந்தாலும், மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் தரையிலும் ஈச்சம் பாயிலும் படுத்துள்ளார்கள்.

நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயின் மீது தூங்கினார்கள். அதனுடைய வரிகள் அவர்களின் விலாப்புறத்தில் (நன்றாக) பதிந்திருந்தது. “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு விரிப்பை ஏற்பாடு செய்யட்டுமா?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “எனக்கும் இந்த உலகிற்கும் என்ன இருக்கிறது? ஒரு மரத்தின் கீழ்  நிழலிற்காக ஒதுங்கி ஓய்வெடுத்து, பிறகு அதை விட்டுச் செல்கிறானே அந்தப் பயணியைப் போன்று தான் இவ்வுலகத்தில் நான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: திர்மிதி 2299

நமது காலத்தில் வாழ்கின்ற அனைவருடைய வீட்டிலும் குறைந்தது இரண்டு பாயாவது இருக்கும். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் ஒரு பாய் தான் இருந்தது. அதை வைத்துப் பகலில் படுப்பார்கள். இரவில் தனது வீட்டிற்குக் கதவாகப் பயன்படுத்துவார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.

நூல்: புகாரி 730

இதன் மூலம் நமக்கு ஒரு படிப்பினையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். நபியவர்கள் வறுமையாக இருந்தாலும் சீராகவும் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள். நபியவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் அல்லாஹ் நம்மை செழிப்பாக்கியுள்ளான். அதனால் நாம் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும்.

குட்டையாக இருந்த வீட்டுச் சுவர்

சாதாரண ஏழைகள் கூட தனது வீட்டைக் கட்டினால் குறைந்த அளவு ஒரு நபரின் உயரத்தை விட அதிகமாகத் தான் கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டின் உயரத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுச் சுவர் அவர்களது மார்பளவு தான் இருக்கும். அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசியபோது, “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 729

வீடோ சிறியது; விளக்கும் கிடையாது!

நாம் வறுமையில் இருந்தாலும் கூட வாழ்வதற்கு வசதியிடத்தை சரியாக அமைத்துக்  கொள்கிறோம். இக்காலத்தில் வாழ்கின்ற ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் தனது வீட்டை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கட்டுகிறார்கள். எல்லா வீட்டிலும் சமையலறை, படுக்கையறை அல்லது ஹால் வைத்துக் கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு நபர் படுத்தால் மற்றொரு நபர் தொழ முடியாது. வீட்டில் வேறு இடத்திலும் தொழ முடியாது. இந்த அளவுக்கு வீடு மிகவும் சிறியதாக இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக(ப் படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் “சஜ்தாசெய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் “சஜ்தாவிற்கு வரும் போது என்னை தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.

நூல்: புகாரி 382, 513

நமது வீட்டில் ஒரு நாள் மின்சாரம் இல்லையென்றால் மிகவும் கஷ்டப்படுகிறோம். இரவில் சரியாகத் தூங்க முடிவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் வாழ்நாள் முழுவதும் விளக்கு கிடையாது. இப்படித் தான் தனது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

தலையணை

நம்முடைய வீட்டில் உள்ள தலையணையை எடுத்துக் கொண்டால் பருத்திப் பஞ்சாலும், இளவம் பஞ்சாலும், அல்லது ஏனைய உயர் ரக பஞ்சுகளால் நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பேரிச்சம் நாரினால் செய்யப்பட்ட தலையணையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம் நாரினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது 

நூல்: புகாரி 6456

நபியவர்களின் ஆடைகள்

ஒரு நாட்டிற்கு மன்னராகவும் சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாகவும் இருந்த அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு ஆடை தவிர வேறு ஆடையில்லை. அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களை எடுத்துக் கொண்டால் பல விதமான உயர் ரக ஆடைகளை வைத்திருந்தார்கள். ஆனால் நபியவர்கள் ஆடைக்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான ஒரு ஆடையிருக்கும். பெருநாள் அல்லது முக்கியமான நபர்களைச் சந்திக்கும் போது அதனைப் பயன்படுத்துவார்கள். இன்னொரு ஆடை வைத்திருப்பார்கள். அந்த ஆடையைத் தான் எப்பொழுதும் உடுத்தியிருப்பார்கள். அந்த ஆடையில் விந்து பட்டால் கழுவி விட்டு மீண்டும் அந்த ஆடையை உடுத்திக் கொள்வார்கள்.

உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.

நூல்: புகாரி 354, 355, 356

அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு ஆடையிருந்தாலும் முழுமையான ஆடையாக இருந்ததா என்றால் கிடையாது. அந்த ஆடையின் அளவு அவர்களது உடலின் பாகங்கள் வெளியில் தெரிகின்ற மாதிரி இருக்கும். சாம்ராஜ்யத்தின் அதிபதிக்கு ஆடைக்குப் பஞ்சமாகி விட்டது. இப்படி ஆடை கூட இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் மா-க் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தமது இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு ஒரு கை (புஜங்)களையும் விரி(த்து வை)ப்பார்கள்.

நூல்: புகாரி 807

சொத்து எதையும் விட்டுச் செல்லவில்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தனது குடும்பத்தாருக்கு எந்தச் செல்வமும் கொடுக்கவில்லை. சரி! மரணத்திற்குப் பிறகாவது தனது குடும்பத்தாருக்கு எதையாவது விட்டுச் சென்று இருக்கிறார்களா? என்று பார்த்தால் மரணத்திற்குப் பிறகும் எந்தச் செல்வத்தையும் விட்டுச் செல்லவில்லை. தனது குடும்பத்திற்காக கோவேறுக் கழுதையையும் தனது ஆயுதத்தையும் ஒரு நிலத்தையுமே விட்டுச் சென்றார்கள். அந்த நிலத்தையும் தர்மமாக ஆக்கியிருந்தார்கள்.

அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; “பைளாஎனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த  ஒரு நிலத்தையும் தவிர!

நூல்: புகாரி 4416, 2739, 3149, 6088

ஆயுதத்தை அடைமானம் வைத்தல்

அல்லாஹ்வின் தூதருடைய கஷ்டத்தை எடுத்துக் கொண்டால் கேட்பதற்கே மிகவும் துயரமாக இருக்கும். தனது வாழ்நாளில் யாரிடமும் கையேந்தாமல் தனது பொருட்களை அடைமானம் வைத்து, கடைசி வரை அதை மீட்டாமலேயே மரணித்து விட்டார்கள். அந்தச் செல்வத்தை தனது குடும்பத்திற்கு விட்டு செல்ல வில்லை.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். “முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

நூல்: புகாரி 2508, 2069

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

மறு ஆய்வு

கூட்டு துஆ

காயல்பட்டிணத்தில் நடைபெற்ற புகாரி சபையில் ஹாமித் பக்ரி பாவ மன்னிப்பு தேடியதையும் வழிகேட்டில் வீழ்ந்ததையும் தனித் தலைப்பில் விளக்கியுள்ளோம்.

ஜமாஅத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான வகையில் சில அன்டர்கிரவுண்ட் வேலைகளைச் செய்ததால் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வழிகேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த பக்ரி தற்போது ஒட்டுமொத்த வழிகேட்டையும் குத்தகைக்கு எடுக்கும் அளவுக்கு ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பித்அத்தின் உச்சக்கட்ட சபையான புகாரி சபையில் ஹாமித் பக்ரி மற்றொரு வாதத்தையும் எடுத்து வைத்துள்ளார். அது தான் கூட்டு துஆ ஓதலாம் என்பதாகும். இதே ஹாமித் பக்ரி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த போது கூட்டு துஆவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்.

கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஏகத்துவத்தில் ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை ஹாமித் பக்ரி முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது.

ஆதாரம்: 1

ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலி),  நூல்: ஹாகிம் 5478

இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ஹாமித் பக்ரீ, கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகிறார்.

இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக “இப்னு லஹீஆ’ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.

எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இப்னு லஹீஆவிடமிருந்து இப்னு வஹப் அல்முக்ரிஉ மற்றும் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவித்த அறிவிப்புகள் தரமானவை.

இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ ஆகியோரைப் போன்று. இவ்வாறு அபூ ஹஃப்ஸ் ஃபல்லாஸ் என்பார் தெரிவிக்கின்றார்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 8, பக்கம் : 11)

இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.

நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் : 4, பக்கம் : 166)

இப்னு வஹம், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 330

அபாதிலாக்கள் என்று கூறப்படும் நபர்கள், அதாவது அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அவருடைய மூளை குழம்புவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே அப்துல்லாஹ் பின் முபாரக் அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அறிவித்தவர்கள் என்பதால் இவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஹாமீத் பக்ரீ கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டும் மேலுள்ள செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று பக்ரீ வாதிடுகிறார்.

இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இவரது இந்த வாதத்தை பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.

இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)

அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது. இதை ஹாமித் பக்ரி விளங்கியிருந்தால் இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டு துஆ என்ற பித்அத்தைச் செய்திருக்க மாட்டார்.

ஆதாரம்: 2

கைஸ் அல்மதனீ கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்’ என்றார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான அல்இசாபா ஃபீ தம்யீசிஸ் சஹாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தங்களுடைய பித்அத்திற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடித் திரிந்தவர்களின் கண்ணில் இச்செய்தி பட்ட மாத்திரத்தில் முழுமையான ஆய்வு செய்யாமல் அரைகுறை ஞானத்தோடு இதை ஆதாரமாகக் கருதி மக்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பரப்பியும் வருகின்றனர்.

உண்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செய்தியைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இச்செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள். இவருடைய தவறைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டு துஆவை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1,  பக்கம் : 458

கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?

இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.

இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தனது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர்.

நூல்: மஜ்மஉ ஸவாயித், பாகம் : 9, பக்கம் : 347

இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.

திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் முபாரக் ஃபூரி அவர்களும் இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் நூருத்தீன் சனதீ அவர்களும் இமாம் அல்பானீ அவர்களும் மற்றும் தற்கால சில அறிஞர்களும் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எனவே ஹதீஸ் கலை அடிப்படையில் இவர் இடம்பெற்றுள்ள செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது.

இந்தப் பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டால் அந்தச் செயல் ஒருக்காலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. அது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் என்ற அனாச்சாரம் என்பதைக் கொள்கை வாதிகள் மறந்து விடக்கூடாது.

சரியான கொள்கையை விட்டு தடம் புரண்டு அசத்தியக் கொள்கைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

————————————————————————————————————————————————

தொடர்: 7

ஸிஹ்ர் ஒரு விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அந்த ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்று தான் கருத வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்ததாக குர்ஆன் கூறினாலும் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார். இது குறித்து அவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தவறானவை என்பதை சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.

சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு, சூனியக்காரர் என்று அர்த்தம் செய்ய வேண்டும் என்பதைப் பின்வருமாறு எழுதி நியாயப்படுத்துகிறார்.

அல்குர்ஆனின் இலக்கிய நடை

இவ்வாறு கூறும் போது ஏன் அல்குர்ஆன் இந்த மொழி நடையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறுமனே ஸாஹிர் என்றே கூறி விட்டுப் போகலாமே! என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். இது குறித்த சிறு விளக்கத்தைப் பெறுவது நல்லது.

அல்குர்ஆன் பொருளை மட்டுமன்றி அழகிய இலக்கிய நயம் கலந்த சொற்பயன்பாட்டிலும் கவனம் செலுத்துகின்றது. இந்த மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட ஆயத்துக்கு முந்தைய வசனங்கள் மஸ்ஹூரா என்ற சொல்லை ஒத்த ஓசை நயமுடையதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.

நபி(ஸல்) அவர்களைக் குறித்து மஸ்ஹூரா என அவர்கள் கூறிய வசனத்திற்கு முந்தைய-பிந்திய வசனங்களின் முடிவை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம். 17 ஆம் அத்தியாயத்தின் 33 ஆம் வசனம் மன்ஸூரா என்றும், 34ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 35ஆம் வசனம் தஃவீலா என்றும், 36ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 37ஆம் வசனம் தூலா என்றும், 38ஆம் வசனம் மக்ரூஹா என்றும், 39ஆம் வசனம் மத்ஹூரா என்றும், 40ஆம் வசனம் அழீமா என்றும், 41ஆம் வசனம் நுபூரா என்றும், 42ஆம் வசனம் ஸபீலா என்றும், 43 ம் வசனம் கபீரா என்றும், 44ஆம் வசனம் கபூரா என்றும், 45 ஆம் வசனம் மஸ்தூரா என்றும், 46ஆம் வசனம் நுபூரா என்றும், 47ஆம் வசனம் மஸ்ஹூரா, இவ்வாறு இலக்கிய நயத்துடனும் ஒத்த ஓசை நயத்துடனும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறே 25:8 வசனத்திற்கு முந்திய-பிந்திய வசனங்களும் மஸ்ஹூரா என்ற ஓசை நயத்துடன் ஒன்றித்திருப்பதை அறியலாம். எனவே, அறபு இலக்கண விதிகளில் இடமிருப்பதாலும், அல்குர்ஆன் பயன்படுத்தியிருப்பதாலும், இந்த இடத்தில் மஸ்ஹூரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும் அது ஸாஹிரா என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சூனியக்கார மனிதனைத் தான் இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர் என்பது அந்த வசனத்தின் விளக்கமாகும்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி கூறியுள்ளார்.

இவரைப் போல் திருக்குர்ஆனை வேறு எவரும் இழிவு படுத்தி இருக்க முடியாது என்று கருதும் வகையில் இவரது இந்த வாதம் அமைந்துள்ளது.

இவரது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்மாயீல் ஸலபி அழகிய முறையில் தோளில் துண்டு போடும் வழக்கமுடையவர் என்று வைத்துக் கொள்வோம். தோளில் போட துண்டு கிடைக்காத போது வேட்டியை அவிழ்த்து அதைத் தோளில் போட்டுக் கொண்டார் என்று கூறினால் அது எந்த அளவுக்கு இஸ்மாயீல் ஸலபியைக் கேவலப்படுத்துமோ அந்த அளவுக்கு இவர் குர்ஆனைக் கேவலப்ப்டுத்துகிறார்.

திருக்குர்ஆன் மொழி நடைக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மை தான். அதை விட கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். கருத்தைப் புறம் தள்ளி விட்டு வார்த்தைகளை அழகுபடுத்துவது குர்ஆனின் தன்மை இல்லை.

தமிழ் அரசியல்வாதிகளும் மேடைப் பேச்சாளர்களும் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். அதில் உருப்படியாக கருத்து எதுவும் இருக்காது. அது போல் தான் குர்ஆன் அமைந்துள்ளது என்று இவர் வாதிடுகிறார். சூனியம் செய்பவர் என்பது தான் இந்த இடத்தில் பொருத்தமான வார்த்தை; நடையழகுக்காக சூனியம் செய்யப்பட்டவர் என்று அல்லாஹ் கூறி விட்டான் என்று கூறியதன் மூலம் பொருத்தமற்ற சொற்களைப் போட்டு மொழி நடையை குர்ஆன் அழகுபடுத்தியுள்ளது என்ற இந்த வாதம் எவ்வளவு கடுமையானது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கியே தீருவது என்பதற்காக அல்லாஹ்வின் வசனத்திலும் கை வரிசையக் காட்டி விட்டார்.

சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்று சரியான அர்த்தம் செய்தால் மொழி நடையும் கருத்துச் செறிவும் திருக்குர்ஆனில் இருப்பது உறுதியாகும். சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொண்டால் வார்த்தை அலங்காரம் தான் இருக்கும். மொழியில் தவறு ஏற்பட்டுவிடும். அதாவது பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி குர்ஆன் மொழி நடையைப் பேணியுள்ளது என்ற நிலை ஏற்படும். அதாவது வேட்டியைக் களைந்து விட்டு தோளில் துண்டு போடும் செயலுக்கு ஒப்ப இது அமையும் என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அனைத்து இறைத் தூதர்களும் சூனியக்காரர்கள் என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்த போதும், (இவர்) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என அவர்கள் கூறாமல் இருந்ததில்லை. (51:52)

எனக் குர்ஆனும் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அர்த்தம் செய்யும் போது அந்த அர்த்தத்திற்கும், ஹதீஸிற்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு. முன்னைய அர்த்தத்தின்படி சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று அர்த்தம் செய்தாலும், காஃபிர்கள் கூறிய நோக்கத்திற்கும் இந்த ஹதீஸ் கூறும் அர்த்தத்திற்குமிடையில் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.

நம் இஷ்டத்துக்கு இல்லாத அர்த்தம் செய்தால் எதையும் முரண்பாடு இல்லை என்று ஆக்கிவிடலாம்.

இஸ்மாயீல் ஸலபி ஒருவரை அடிக்கும் போது, “இஸ்மாயீல் ஸலபி அடிக்கப்பட்டார்’ என்று நாம் கூறலாம். “அவர் அடிக்கத் தான் செய்தார் அடிக்கப்படவில்லையே’ என்று யாராவது கேட்டால், “அடித்தார் என்ற அர்த்தத்தில் தான் அப்படிக் கூறினேன்’ எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

“இஸ்மாயீல் ஸலபிக்கு மூளை இல்லை’ என்று ஒருவர் கூறுகிறார். ஏன் இப்படி கூறினாய் என்று இஸ்மாயீல் ஸலபி கேட்கும் போது “மூளை இருக்கிறது என்பதைத் தான் மூளை இல்லை என்ற வார்த்தையால் குறிப்பிட்டேன்’ என்று கூறினால் இஸ்மாயீல் ஸலபி திருப்திப்பட்டுக் கொள்வார்.

திருடலாம்; விபச்சாரம் செய்யலாம் என்று கூட ஒருவர் பேசி விட்டு திருடக் கூடாது; விபச்சாரம் செய்யக் கூடாது என்பது தான் இதன் அர்த்தம் என்று கூறலாம்.

நாம் சொல்லும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பிரச்சனை இல்லை. நான் நினைப்பது தான் அதற்கு அர்த்தம் என்று கொள்கை வகுத்துக் கொண்டால் எதையும் பேசலாம். வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம் என்று ஆகிவிடும். சொந்த வாழ்க்கையில் இதை ஜீரணிக்காத இவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மட்டும் இப்படி கேலிப் பொருளாக ஆக்குகிறார்.

அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று காபிர்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதற்கு சூனியம் செய்பவர் என்று இல்லாத அர்த்தம் செய்தால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸுக்கு முரண்படாமல் பொருந்திப் போய்விடுமாம்.

இதைவிட, நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று பொருள் கொண்டால் பொருந்திப் போகாதோ? இதெல்லாம் ஒரு ஆய்வா?

மஸ்ஹூர் என்பதற்கு என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்தைச் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

முந்தைய நபிமார்களைப் பற்றி சூனியக்காரர்கள் என்று சொன்னதால் நபிகள் நாயகத்தைப் பற்றியும் அப்படித் தான் சொல்லி இருப்பார்கள் என்று ஆதாரமற்ற ஊகத்தை திணிக்கிறார். முந்தைய நபிமார்களை சூனியம் செய்பவர்கள் என்று எதிரிகள் கூறியதாக திருக்குர்ஆன் கூறும் போது ஸாஹிர் (சூனியம் செய்பவர்) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. எனவே அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை அங்கே கொடுக்க வேண்டும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஸாஹிர் (சூனியக்காரர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. மஸ்ஹூர் (சூனியம் செய்யப்பட்டவர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. இரண்டு விதமாகவும் விமர்சனம் செய்தனர் என்று தான் அறிவுடைய ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். சூனியம் செய்யப்பட்டவர் என்று சொல்லி இருந்தாலும் அதை நான் கருத்தில் கொள்ள மாட்டேன். சூனியம் செய்பவர் என்று என் இஷ்டத்துக்கு அர்த்தம் செய்வேன் என்று கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

மெல்லிய பிறையும் துல்லிய பார்வையும்

ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு ஒரு நோன்பு, தம்பிக்கு மறு நாள் நோன்பு. பெற்றோருக்கு ஒரு நாள் நோன்பு, பிள்ளைகளுக்கு மறு நாள் நோன்பு. அண்ணனுக்கு ஒரு பெருநாள். தம்பிக்கு அடுத்த நாள் பெருநாள்.

ஏகத்துவத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட சகோதரர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு பிரச்சனை – பிரிவினைகள் கொள்கை விஷயத்தில் கூட ஏற்பட்டதில்லை. ஆனால் பிறை விஷயத்தில் ஏற்பட்டு விட்டது. ஆம்! பிறைக் கணிப்பு முறை இந்தப் பிரச்சனைக்கும் பிரிவினைக்கும் வித்திட்டது.

உண்மையில் இது தவ்ஹீதுக் கொள்கை மீது ஒரு வெறுப்பையே உருவாக்கி விட்டிருந்தது. ஒரே ஊரில் இரு பெருநாட்கள் நிகழ்ந்தன. ஊடகங்களுக்கு இது ஒரு விருந்தாகவும் வேடிக்கையாகவும் ஆனது. பரஸ்பரம் மனக் கசப்பையும் மனமாச்சரியத்தையும உண்டாக்கியது.

கொள்கைக்காக இப்படி ஒரு பிரச்சனை, பிரிவினை ஏற்பட்டால் கூட மனம் ஆறுதல் அடையும். ஆனால் மார்க்கம் விரிவான பாதையையும் பார்வையையும் தந்திருக்கின்ற ஒரு விஷயத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. அல்லாஹ்வின் கிருபையால் ஜாக் தலைமை இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து முடிவு கண்டுள்ளது. இதில் கமாலுத்தீன் மதனி யாருடைய முகத்தாட்சண்யமும் பார்க்காமல் விமர்சனத்திற்குக் கவலைப்படாமல் 17:36 வசனத்தை மேற்கோள் காட்டி கணிப்பு நிலைப்பாட்டை உடைத்திருக்கின்றார்.

பிறையைக் கண்ணால் கண்டு நோன்பு நோற்பது, நோன்பை விடுவது என்ற அழகிய முடிவுக்கு, ஹதீஸிற்கு ஒத்த கருத்துக்கு வந்திருக்கின்றார். மார்க்கத்தைச் சரியாக விளங்காத அரைவேக்காட்டு ஆசாமிகளின் அறியாமைக்கும் அதிகப் பிரசங்கித்தனத்திற்கும் அதிரடி கொடுத்திருக்கின்றார். மேற்கு வானத்தில் பிறக்கின்ற மெல்லிய பிறையை நோக்கி ஒரு துல்லிய பார்வையை செலுத்தியிருக்கின்றார்.

இதை தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டுகின்றது. கணிப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அலசலையும் ஏகத்துவத்தில் பிரசுரம் செய்துள்ளோம். இதுபோன்ற அலசலை, கணிப்பினால் ஏற்படும் குழப்பத்தை ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்பே தவ்ஹீத் ஜமாஅத், அல்முபீன் இதழில் வெளியிட்டுள்ளது என்பதை இங்கு நினைவுக்குத் தருகிறோம்.

எதைப் பற்றி ஞானமில்லையோ அதைப் பின்பற்றாதீர்கள்

கேள்வி:

பிறை விஷயத்தில் நீங்கள் கணிப்பை ஆதரித்து விட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி பிறை பார்த்துத் தான் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், இதற்கு உங்களுக்கு ஏதோ உலகாதாயம் இருக்கின்றது என்றும் சிலர் கூறி வருகின்றனரே! இது உண்மையா? தக்க விளக்கம் தரவும்.

அப்துத் தவ்வாப், மதுரை

பதில்:

அல்லாஹ் கூறுகிறான்: எதைப் பற்றி உனக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை நீர் பின் தொடராதீர். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இதயமும், இவை ஒவ்வொன்றும் (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.

அல்குர்ஆன் 17:36

எனக்குப் பிறைக் கணக்கை கணித்து முன்கூட்டியே சொல்லக் கூடிய ஞானம் இல்லை. அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் சொல்ல வேண்டும். அது சரியா? தவறா என்று ஆய்வு செய்து தீர்மானிக்கின்ற ஞானமும் எனக்கில்லை. அப்படியிருக்க நான் பொறுப்பில் இருந்து கொண்டு கண்மூடித்தனமாக அறிவிப்புச் செய்ய முடியாது. அது இறைத்தூதரின் நேரடி சொல், செயலுக்கு எதிரானதாக ஆகி விடும்.

இது விஷயத்தில் யாருடைய கருத்தையாவது பின்பற்றி முன்கூட்டி கணிப்பின் படி அறிவிக்கும் போது, எந்த அடிப்படையில் இதை அறிவித்தாய்? இதைப் பற்றிய ஞானம் உனக்கு உண்டுமா? என்று கேட்டால் என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியாத நிலை தான் ஏற்படும். இதற்கு முன்னர் ஓரிரு சந்தர்ப்பங்களில் இதுபோன்று அறிவிப்புச் செய்து அதன் மூலம் ஏற்பட்ட குழப்பங்களை மறக்க முடியாது.

ஒவ்வொரு வருடமும் பிறை அறிவிப்புச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறதே, அதைத் தவிர்க்க ஆங்கிலக் காலண்டரைப் போன்று நாமும் ஒரு காலண்டரைப் பின்பற்றினால் சிரமத்திலிருந்து விடுபடலாமே என்ற எண்ணத்தில் தான் அதை அறிவிப்புச் செய்தேன்.

ஆனால் இது விஷயத்தில் நம்மை விடவும் அறிவு ஞானம் உடையவர்களின் விளக்கங்களை குர்ஆன், சுன்னாவின் ஒளியில் பார்க்கும் போது, கணித்துச் சொல்வது நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளைக்கும் அவர்களுடைய செயல் முறைக்கும் மாற்றமாக உள்ளதை உணர முடிந்தது. மேலும் யார் சொல்லும் கணிப்பை எடுப்பது என்பதிலும் குழப்பம் இருந்தது. எனவே இது விஷயத்தில் நமது ஜமாஅத் எந்த நிலைப்பாட்டில் இருந்து வந்ததோ அதே நிலைபாட்டிலேயே செயல்படுவது என்ற முடிவுக்கு வந்தோம். இது தான் உண்மை நிலை.

ஆனால் சிலர் அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு ஏதோ உலக ஆதாயத்திற்காகத் தான் கணிப்பைப் பின்பற்றாமல் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்றுப் பிறை பார்த்து செயல்பட வேண்டும் என்று நாம் கூறுவதாகப் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது என்ன உலகாதாயம் என்பதை இவர்கள் விளக்கிக் கூற வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் வெளிப்படையான கட்டளைக்கு மாற்றமாகி விடுமே என்ற அச்சத்தைத் தவிர வேறு எந்த ஆதாயமும் எங்களுக்கில்லை. இவர்கள் இதயத்தைப் பிளந்து பார்த்தது போன்று பேசுவது சில சமயம் இவர்களை இறை நிராகரிப்பின்பால் கொண்டு போய் சேர்த்து விடும்.

இவர்கள் தங்கள் மனம் சொல்கின்ற விளக்கத்தை வைத்துக் கொண்டு, கணிப்பைத் தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவது மட்டுமில்லாமல் தாங்கள் சொல்லும் விளக்கத்தைத் தான் ஏற்றாக வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்களே! இவர்கள் என்ன ஆதாயத்தை எதிர்பார்த்து இதைச் செய்கிறார்கள்? என்று நாமும் கேட்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளனர். பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றக் கூடாது. அப்படியிருந்தும் சிலருடைய பேச்சை அப்படியே நம்பி விடுகின்றனர். அவர்களிடத்தில் விளக்கம் கேட்டால் சொல்லத் தெரிவதில்லை. இது கண்மூடிப் பின்பற்றுவதாகாதா? இது எந்த அடிப்படையில் நியாயமானது? எனவே எது தெளிவாக இருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை மற்றும் வழிகாட்டுதல் தெளிவாக இருக்கிறது.

அல்ஜன்னத் ஜூலை 2010