ஏகத்துவம் – ஏப்ரல் 2015

தலையங்கம்

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்

ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன.

அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார்.

பூச்சிகள், புழுக்கள் போன்றவை சிறு செடி கொடிகளைத் தான் தாக்கும்; பெரும் மரங்களைத் தாக்காது என்று நினைத்துவிடக் கூடாது. படர்ந்து, விரிந்து நிற்கின்ற பலமான மரத்தைக் கூட வைரஸ் தாக்கி பட்ட மரமாக்கி விட்டிருக்கின்றது.

தவ்ஹீது பாதை என்பது நேரிய, நெடிய பாதையாகும். அந்தப் பாதையின் இறுதி இலக்கை அடைகின்ற வரை ஷைத்தான் ஒரு தவ்ஹீதுவாதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நிற்பான். இதைக் கீழ்க்காணும் வசனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிக மானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

அல்குர்ஆன் 7:16, 17

ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய மாத்திரத்தில், தவ்ஹீது மக்களை வழிமறித்துக் கொண்டு செல்வதற்காக ஜிஹாத் என்ற பெயரில் விடியல் வெள்ளியினர் உள்ளே நுழைந்து வழிகெடுத்தனர். ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தனர். இதற்குப் பதிலடி கொடுத்து அந்த வைரஸ்களிடமிருந்து ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். இன்றும் அந்த விஷக்கிருமிகள் பிரண்ட், பேக் என பல்வேறு பெயர்களில் வந்து தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அஹ்லுல் குர்ஆன் என்ற விஷக் கூட்டம் முளைத்து, குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று வாதிட்டனர். அந்த வைரஸ்களை விட்டும் அல்லாஹ்வின் அருளால் மக்களை மீட்டெடுத்தோம்.

சர்வதேசப் பிறை என்ற ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மூலம் ஒரு வைரஸ் தாக்குதல் வந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அதை விட்டும் இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். அதுவரை ஜாக் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருந்த நம்மை, அதை விட்டும் பிரிக்கும் மையப்புள்ளியாக இந்த ஜோதிடப் பிறை கணிப்பு அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

நாம் வளர்த்த தமுமுகவே நம்மை அழிப்பதற்கான வைரஸாக மாறியது. சளைக்காமல், சடையாமல் அதிலிருந்தும் ஜமாஅத்தைக் கரை சேர்த்தோம்.

இப்போது ஸலஃபு என்றொரு வைரஸ் தோன்றியுள்ளது. இதனால் ஜமாஅத்திற்கு நேரடிப் பாதிப்பு இல்லையென்றாலும் ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் மதரஸாக்களை அமைத்துக் கொண்டு, அவர்களிடம் சிறு வயதிலேயே விஷத்தை விதைத்து, வருங்கால தலைமுறையை வழித்தடம் மாற்றும் வேலையில் இந்த ஸலஃபுகள் இறங்கியுள்ளனர்.

இன்று நமது ஜமாஅத்தின் கிளைகளில் பெண்கள் மதரஸாவை நிறுவுவதில் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில் 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்ததும் தங்கள் பெண் மக்களை மேற்படிப்பு படிக்க அனுப்புவதற்கு மக்கள் கடுமையாக அஞ்சுகின்றனர். அதனால் பட்டப் படிப்பெல்லாம் தேவையில்லை, நமது பெண்மக்கள் ஆலிமாக்களாக வரட்டும் என்று அவர்களை மார்க்கக் கல்வி படிப்பதற்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குக் கல்வி கொடுக்கின்ற கல்வி நிலையங்கள் அவசியம் தேவை தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நமது மழலைகள், சந்ததிகள், வருங்காலத் தலைமுறைகள் நாளை நம்முடன் சுவனத்தில் நுழைவார்கள்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.

அல்குர்ஆன் 52:21

நம் சந்ததிகளுக்கு ஏகத்துவக் கொள்கையை சரியாகப் போதிக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் போய்ச் சேர்ந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களை தவ்ஹீத் வார்ப்பில் வளர்க்கவும் வார்க்கவும் வேண்டும். அதற்குச் சரியான களமும் தளமும் காலை, மாலையில் நடத்தப்படும் மக்தப் மதரஸாக்கள் தான்.

இன்று தமுமுக, விடியல் வெள்ளி போன்ற அமைப்பினர் தவ்ஹீத் ஜமாஅத் செய்கின்ற வேலைகள் அத்தனையையும் கையில் எடுக்கின்றனர். அவர்கள் காலை, மாலை மக்தப்களையும், பெண்கள் மதரஸாக்களையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத இந்தத் துறையில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் மறுமை அல்ல!    ஈ கூட எட்டிப் பார்க்காத தங்கள் ஆர்ப்பாட்ட, போராட்டக் களங்களுக்கு மக்களை வினியோகம் செய்யும் கருவூலமாக, களஞ்சியமாக இந்தத் துறைகளைப் பயன்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயல்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது.

இந்தத் துறையில் இவர்கள் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம் மார்க்கப்பணி என்றால் அதில் காசு, பணம் பார்க்கலாம். வசூல் வேட்டை நடத்தலாம். அதற்காக இந்த முகமூடியைக் கையில் எடுத்துள்ளனர்.

என்ன தான் இவர்கள் நமது பாதையில் குறுக்கிட்டாலும் அல்லாஹ்வின் அருளால் நமது வளர்ச்சிப் பணி அசாதாரணமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ். இதற்குக் காரணம் நம்முடைய மைய நோக்கமே மறுமை மட்டும் என்பது தான்.

இட ஒதுக்கீடு என்ற சமுதாய நோக்கத்திற்காகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தோம். அதையும் தற்போது அற்று, அறுத்து எறிந்து விட்டோம். மறுமையை மட்டும் உயிர் மூச்சாக ஆக்கிக் கொண்டோம். கொள்கை என்ற விளக்குடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வோம்.

இந்தப் பயணத்தின் போது நமது தலைமுறையினரையும் அழைத்துச் செல்வதற்கு, காலை, மாலை நேர மதரஸாக்களில் கவனம் செலுத்துவோம். இதுதவிர மற்ற நேரங்களில் குறிப்பாக மக்ரிப், இஷா நேரங்களில் வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கான மதரஸாக்களை நடத்துவோம். இந்த மதரஸாக்கள் தான் கொள்கை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

நம்மை மட்டும் நரகத்தில் இருந்து காப்பது நமது லட்சியமல்ல! நமது சந்ததிகளையும் சேர்த்து நரகத்திலிருந்து காப்பதே நமது லட்சியமாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தின் ஆணைப்படி, நம்மையும் நமது சந்ததிகளையும் நரகத்திலிருந்து காப்போமாக!

—————————————————————————————————————————————————————-

தொடர்: 4   ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஜிப்ரயீலை இழிவுபடுத்தும் ஹுசைன் மவ்லிது

எம். ஷம்சுல்லுஹா

ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபு, பொய்யான ஹதீஸ்கள் மண்டிக் கிடக்கும் – ஷியாக்களின் போலிச் சரக்குகள் நிரம்பி வழியும் சவக்கிடங்கு என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு ஷியாக்களின் மறுபதிப்பாக இந்த மவ்லிதுக் கிதாபு அமைந்திருக்கின்றது. ஹதீஸ்கள் என்ற பெயரில் ஷியாக்களின் கதைகளை அளந்து விட்டிருக்கின்றாôர்கள். அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு வருகிறோம்.

அந்த அடிப்படையில் இவ்விதழில் ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள மேலும் சில பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம்.

இமாம் ஸஃபவிய்யி அறிவிக்கின்றார்: (இமாம் என்று அடைமொழியிட்டிருக்கும் இவர் ஒரு ஷியா புறம்போக்கு என்பதை இந்தக் கதையைப் படித்தவுடன் அறிந்து கொள்ளலாம்.)

மற்றொரு தடவை ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து ஓர் ஆப்பிளைக் கொண்டு வந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் வைத்தார்கள். ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்தனர். அவ்விருவருமே தங்களுக்குத் தான் ஆப்பிளைத் தரவேண்டும் என்று கேட்டனர். அப்போது ஜிப்ரயீல், “அவ்விருவரையும் மல்யுத்தம் செய்ய விடுங்கள். வெற்றி பெறுபவருக்கு ஆப்பிள் கிடைக்கும்” என்று கூறினார். ஆனால் ஜிப்ரயீல் ஹுஸைனுடனும், நபி (ஸல்) அவர்கள் ஹஸனுடனும் இருந்தார்கள். அவ்விருவரில் எவரும் மற்றவரை வெற்றி கொள்ளவில்லை. உடனே ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து மற்றோர் ஆப்பிளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

இது தான் ஹதீஸ் என்ற பெயரில் ஹுஸைன் மவ்லிதில் அளந்து விடப்பட்டுள்ள அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு ஆகும். இந்தப் பொய்ச் செய்தி, ஹதீஸ் நூற்களில் எதிலும் இடம்பெறவில்லை. ஷியாக்களுடைய நூற்களில் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது.

ஜிப்ரயீல் (அலை) அவர்களின் முக்கியப் பணி அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது தான்.

நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் உண்மையுடன் இறக்கினார்என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 16:102

அல்குர்ஆனை இறக்குகின்ற ஆற்றல்மிகு ஜிப்ரயீலை, ஹஸன் ஹுஸைனுக்கு விளையாட்டுக் காட்டுவதற்கு ஆப்பிள் கொண்டு வருகின்ற அடிமைச் சேவகராக இந்த ஷியாக்கள் சித்தரிக்கின்றனர்.

ஸஃபவி என்ற அனாமதேயம், பொய் சொல்லும் ஷியா புளுகித் தள்ளியிருக்கின்றது. இது ஹதீஸ் என்ற பெயரில் ஹிகாயத் எனும் கதையாகவும், கவிதையாகவும் இடம்பெற்றிருக்கின்றது.

சாம்பிராணி போட்டு, சந்தனம் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி இந்தக் கதைகளை வணக்கம் என்று நம்பி ஓதுகின்றார்கள் என்றால் இவர்கள் ஷியாக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ஹஸன், ஹுஸைனுக்காக ஏதோ மண்ணில் இருக்கும் பழத் தோட்டத்திலிருந்து ஆப்பிள் பழங்களைப் பறித்து வருவது போல் காட்டுகின்றனர். அல்லாஹ் தனது கட்டளைப்படியே ஜிப்ரயீல் இறங்குவதாகத் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்.)

அல்குர்ஆன் 19:64

ஹஸன், ஹுஸைன் விளையாடுகின்ற இந்த விளையாட்டை அல்லாஹ், ஜிப்ரயீல், முஹம்மது (ஸல்) ஆகியோர் வேலையில்லாமல் உட்கார்ந்து ரசிப்பது போன்று இந்த ஷியாக்காரன் குறிப்பிடுகின்றான்.

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 21:16, 17

இந்த வசனத்தில் விளையாடுவது தனது வேலையல்ல என்று அல்லாஹ் தெளிவாக அடித்துச் சொல்லிவிடுகின்றான்.

சுவனத்துக் கனி என்றால் சும்மாவா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொடர்ந்து பசியும் பட்டினியுமாகவே கிடந்திருக்கின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5416

அப்போதெல்லாம் ஆப்பிள் கொண்டு வராத ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இந்த விளையாட்டுக்காக ஆப்பிள் கொண்டு வந்தார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?

சுவனத்தின் பழங்களைச் சாப்பிடுவது என்பது சாதாரணமான காரியமல்ல.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(தப் பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட்டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1052

இந்த ஹதீஸ் சுவனத்துக் கனியின் பிரம்மாண்டத்தை எடுத்துச் சொல்கின்றது. சுவனத்தின் பழங்களை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் இந்த உலகில் சாப்பிட்டதில்லை. சுவனத்தின் உணவு மறுமையில் தான் கிடைக்குமே தவிர இந்த உலகில் அல்ல! இதை யாரும் இவ்வுலகில் அனுபவிக்கவில்லை, சுவைக்கவுமில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்என்று அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்என்னும் (32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3244

அப்பேற்பட்ட கனியை, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஏதோ ஹஸன், ஹுஸைனின் எடுபிடி போன்று சுவனத்திலிருந்து எடுத்து வந்ததாக இந்தப் பொய்யர்கள் அளக்கின்றார்கள். இவர்கள் தங்களது ஐந்து கடவுள்கள் மீது கொண்டுள்ள காதல், வெறியானது மலக்குகளின் மாபெரும் தலைவரான ஜிப்ரயீலின் மரியாதை, மதிப்பைத் தெரியாத அளவிற்குக் கண்ணை மறைக்கின்றது.

இவர்களுடைய மார்க்கம் முழுவதும் இந்த ஐந்து கடவுள் என்ற மையப்புள்ளியைக் கொண்டு தான் அமைந்திருக்கின்றது.

தமிழக ஆலிம்கள் இந்த மவ்லிதைப் பற்றி ஒருபோதும் கண்டுகொள்வது கிடையாது. கண்டிப்பதும் கிடையாது. மாறாக இவர்களும் அந்த சங்கீத சபையில் உட்கார்ந்து சங்கையாக ஓதுகின்றனர்.

இவர்கள் கால்வாசி, அரைவாசி ஷியாக்கள் கிடையாது. முழுமையான ஷியாக்கள் என்பதற்கு ஹுஸைன் மவ்லிது சரியான ஆவணமாக அமைந்துள்ளது.

தமிழக ஆலிம்களில் 99 சதவிகிதத்தினர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விஷயத்தில், எது சரியான ஹதீஸ்? எது பலவீனமான ஹதீஸ் என்று பிரித்துப் பார்க்காமல், நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறினால் நரகமே தண்டனையாகக் கிடைக்கும் என்ற எச்சரிக்கையைப் பற்றிக் கடுகளவு கூட அச்சமில்லாமல் சகட்டுமேனிக்குத் தங்கள் சொற்பொழிவுகளில் நாவில் வருவதையெல்லாம் நபிமொழிகள் என்று அடித்து விடுகின்றனர். இதிலிருந்து இவர்கள் தங்களை ஷியாக்களின் மறுவடிவம் என்பதை ஒளிவு மறைவில்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

இந்த அபத்தங்களைத் தாங்கிய ஹுஸைன் மவ்லிது கூறும் இன்னொரு கதையைப் பார்ப்போம்.

ஒருநாள் பாத்திமா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னிடமிருந்து ஹஸனும் ஹுஸைனும் காணாமல் போய்விட்டனர். அவர்கள் இருக்கும் இடம் எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னார். உடனே ஜிப்ரயீல் (அலை) வந்து, “அவ்விருவரும் இன்ன இடத்தில் உள்ளனர். அவ்விருவரையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ் ஒரு மலக்கை நியமித்து விட்டான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வந்து, அவ்விருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியவர்களாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒருவரை தமது வலது புஜத்திலும், மற்றொருவரை தமது இடது புஜத்திலும் சுமந்து கொண்டு வந்தார்கள்.

அபூபக்ர் (ரலி), நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, ஒரு பையனை என்னிடத்தில் கொடுங்கள்; நான் சுமக்கிறேன் என்று வாங்கிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்விருவரின் வாகனம் சிறந்த வாகனமாக அமைந்துவிட்டது. இவ்விரு பயணிகளும் சிறந்த பயணிகளாகி விட்டனர்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் நுழைந்ததும், “முஸ்லிம் சமுதாயமே!  பாட்டனார், பாட்டியார் மக்களில் சிறந்த ஒருவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ஆம் என்றனர். “ஹஸன், ஹுஸைனின் பாட்டனார் அல்லாஹ்வின் தூதர். அவ்விருவரின் பாட்டி கதீஜா” என்று கூறினார்கள்.

இந்தச் செய்தியின் மையக் கருத்து ஹஸன் ஹுஸைன் காணாமல் போனது தான். இதை அச்சாணியாக வைத்துப் பல்வேறு விதத்தில் இந்தச் செய்தி பாதிவாகியுள்ளது. இந்தச் செய்தி தப்ரானியின் அல்முஃஜமுல் கபீரில் பின்வருமாறு இடம்பெறுகின்றது.

ஹஸன், ஹுஸைனைக் காணவில்லை என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து உம்மு ஐமன் (ரலி) முறையிடுகின்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஸன் ஹுஸைனைத் தேடுங்கள் என்று கூறினார்கள். பலரும் பல்வேறு வழிகளில் தேடிப் போனார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் போன திசையில் சென்றேன். அவர்கள் மலையடிவாரத்திற்கு வந்தார்கள். ஹஸனும், ஹுஸைனும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு நின்றிருந்தனர். அங்கே ஒரு பாம்பு (காவலுக்கு) நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து நெருப்பு போன்று ஒரு பொருள் வெளியாகிக் கொண்டிருந்தது. அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் விரைந்ததும் அது நபி (ஸல்) அவர்களிடம் உரையாடியது. பின்னர் ஒரு பொந்தில் நுழைந்து கொண்டது. நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் தமது தோள் புஜங்களில் சுமந்து கொண்டு வந்தார்கள்.

இது அல்முஃஜமுல் கபீரில் 109/3ல் இடம்பெற்றுள்ள செய்தியாகும்.

ஷைக் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், இது கோளாறும், பலவீனமான அறிவிப்பாளர்களும் நிறைந்த தொடராகும். இதன் அறிவிப்பாளர் சிலர் ஷியாக்கள் ஆவர் என்கிறார்.

  1. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகின்ற அல்ஹுஸைன் பின் முஹம்மத் அல் ஹன்னாத் என்பவருக்குரிய வாழ்க்கைக் குறிப்பே எனக்குக் கிடைக்கவில்லை.
  2. அஹ்மத் பின் ருஷ்த் பின் குஸைம் அல்ஹிலாலி என்பவரை, இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சொல்லவில்லை. பொய்யான ஹதீஸை அடித்து விடுபவர் என்று ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்.
  3. ஸயீத் பின் குஸைம் – இவர் மேற்கண்ட இரண்டாம் அறிவிப்பாளரின் சிறிய தந்தை ஆவார். இவரைப் பற்றி இப்னு ஹஜர், “உண்மையாளர், ஷியா என்று குற்றம் சாட்டப்பட்டவர், தவறான செய்திகளைக் கொண்டவர்’ என்று குறிப்பிடுகின்றார்.
  4. முஸ்லிம் அல் மலாயீ – இவரைப் பற்றி தஹபீ அவர்கள், இவரை ஹதீஸ் துறையினர் கைகழுவி விட்டனர் என்று முக்னியில் குறிப்பிடுகின்றார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகின்றார்.
  5. ஹப்பத்துல் அர்னீ – இவர் ஷியா வெறியர்களில் உள்ளவர். “பத்ருப் போரில் பங்கெடுத்த 80 நபித்தோழர்கள் ஸிஃப்பீன் போர்க்களத்தில் அலீ (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டார்கள்” என்று புளுகியவர். இவ்வாறு ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்க்ள்.

உண்மையாளர், தவறான செய்திகள் உள்ளவர், ஷியாவில் வெறியர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் தமது தக்ரீபில் குறிப்பிடுகின்றார்கள்.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று இப்னு மயீன் குறிப்பிடுகின்றார்கள்.

இது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைப் பற்றிய வண்டவாளங்கள் ஆகும். பக்கா ஷியா வெறியர்கள் புனைந்து தள்ளிய பொய்ச் சரக்கு தான் இந்த ஹதீஸாகும். இதைத் தான் ஹுஸைன் மவ்லிதில் இறக்குமதி செய்திருக்கின்றார்கள்.

இது சொல்ல வருகின்ற செய்தி என்ன?

ஹஸன், ஹுஸைன் புனிதமானவர்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கென்று தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) வஹீ கொண்டு வரும் வேலையை விட்டுவிட்டு அவர்களைக் கண்காணிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படித் தான் ஷியா ஷைத்தான்கள் சித்தரிக்கின்றார்கள்.

அஹ்லுல் பைத் என்னும் இந்த ஐவரையும் கடவுளாக்குகின்ற கதையையும், கவிதையையும் படிப்பதை வணக்கமாக்கிய இந்த ஆலிம்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று முத்திரை குத்திக் கொள்வது இந்த நூற்றாண்டின் இணையற்ற கேலிக்கூத்தாகும். இவர்களின் ஷியா விஷத்தை இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

சிறு நேரத்தில் பெரு நன்மைகள்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மனிதர்களில் பெரும்பான்மையினர் எல்லா செயல்களும் விரைவாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.  எவ்வளவு பெரிய வேலையும் சொற்ப நேரத்தில், இலகுவாக முடிந்து விடுவதையே அதிகமானோர் விரும்புகின்றனர்.

அதனாலேயே சமையல் வேலையை எளிதாக்கித் தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுப் பொருள்களுக்கும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் பைக், இரயில் போன்றவை உள்ளிட்ட அனைத்து நவீன சாதகங்களுக்கும் மக்களுக்கு மத்தியில் தனிமவுசு இருப்பதைக் காண முடிகிறது.

முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் எனும் தலைப்பிலான புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும், ஒரு நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டா என்று விளம்பரம் செய்யப்படும் கடைக்குத் தனியாக மக்கள் கூட்டம் மொய்ப்பதும் சீக்கிரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் மனநிலையைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றது.

மக்களின் இந்த மனநிலையைப் பறைசாற்றும் அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் விஷயம் அதுவல்ல. இவ்வாறாக எல்லாவற்றிலும் சொற்ப நேரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இறைவனிடத்தில் நன்மைகளைப் பெறுவதற்கு இதுமாதிரியான வழிமுறைகள் உண்டா? என்று கேட்டால் ஆம் என்பது தான் அதற்குச் சரியான பதிலாகும்.

ஒரு நன்மைக்குப் பத்து கூலிகள் தருவதை (அல்குர்ஆன் 6:160) வழக்கமாக வைத்திருக்கும் இறைவனிடம் இது போன்ற சலுகைகள் இல்லாமலிருக்குமா?

நபிகள் நாயகம் கற்றுத் தந்த நல்லறங்களிலும் சொற்ப நேரத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும்படியான ஏராளமான வழிபாடுகளை அறிய முடிகிறது. அவ்வகையிலான சில நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறோம்

முதல் தகுதி

அதற்கு முன் முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டு விடுகிறோம்.

குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளைப் பெற வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் முக்கியமாக நம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது தான் மனத்தூய்மை.

செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்காக என்ற மனத்தூய்மையுடன் செய்யும் போதே அல்லாஹ்விடம் அதற்குரிய கூலியைப் பெற முடியும் என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். (அல்குர்ஆன் 5:27)

எனவே சரியான இறைநம்பிக்கையுடனும், மனத்தூய்மையுடனும் இந்நன்மைகளைப் புரிந்தால் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றிடலாம் என்பதில் சந்தேகமே இல்லை.  அவற்றை இனி காண்போம்.

சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட…

உளூச் செய்த நிலையில் பாங்கிற்குப் பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ என்று துவங்கும் துஆவை ஓதினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படும் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.

நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “ஒரு முலிஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லைஎன்று கூறுவதை நான் கேட்டேன்.

உடனே நான் “என்ன அருமையான வார்த்தை!என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் “இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானதுஎன்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுவது விலை மதிக்க இயலாத நன்மை என்பதும், அதற்குரிய வழிமுறையாகச் சொல்லப்பட்டது மிக எளிமையானது என்பதும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள்

நாளொன்றுக்கு ஆயிரம் நன்மைகளை அள்ளித் தரும் மிக எளிதான வழிபாட்டை நபிகள் நாயகம் பின்வரும் நபிமொழியில் கற்றுத்தருகிறார்கள். அதை உளமாறப் படித்து அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் உணரும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை (“சுப்ஹானல்லாஹ்என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றனஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 5230

கையளவு தர்மம் – மலையளவு கூலி

தூய்மையான சம்பாத்தியத்தில் மதிப்பில் குறைந்த பொருளை சிறிய அளவு தர்மம் செய்தாலும் கூட அதற்காக இறைவனிடத்தில் மலையளவு நன்மைகளைப் பெறலாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கையளவு முதலீட்டுக்கு மலையளவு லாபம் என்பது உண்மையில் பெரிய விஷயம் தானே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),, நூல்: புகாரி 1410

ஒரு நோன்பும் ஈராண்டு பாவ மன்னிப்பும்

அரஃபா நாளில் நோன்பு நோற்றால் இரு ஆண்டுகள் புரிந்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும், அதே போல ஆஷூரா தினத்தன்று (முஹர்ரம் 9,10) நோன்பு நோற்றால் ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்றும் நபிகள் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, “முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு “அது கடந்த ஆண்டின் பாவப் பரிகாரமாகும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 2152

எழுத்து ஒன்று – நன்மைகள் பத்து

திருக்குர்ஆனை ஓதும் போது அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் வீதம் நமக்குக் கிடைப்பதாக நபிகளார் போதித்துள்ளார்கள். குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளை அறுவடை செய்ய விரும்பும் நபர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதி (2835)

மூன்று புனிதப் பள்ளிகள்

கஃபா, மஸ்ஜிதுந் நபவீ, பைத்துல் முகத்தஸ் ஆகிய பள்ளிகளில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட அதிக  நன்மைகளைப் பெற்றுத் தரும்.

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1189

குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம்

“குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்தை ஓதினால் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கை ஓதியதற்கு ஈடானதாகும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதர் “குல்ஹுவல்லாஹு அஹத்எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),

நூல்: புகாரி 5013

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவைகளற்றவன்‘ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),

நூல்: புகாரி 5013

பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலிகள் வழங்குவதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதையும் இந்நேரத்தில் நினைவு கூர்வது சாலச்சிறந்தது.

நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:10

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 22

கோபமும் தாபமும்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் கோபப்படுபவர்களாகவும் பிறகு அதைச் சரிசெய்து கொள்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். சில நேரங்களில் மனைவி கோபமாகவும் சில நேரங்களில் அன்பாகவும் இருப்பாள். இப்படித் தான் கணவனும் பல நேரங்களில் இருப்பான்.

நபியவர்களே தமது மனைவி ஆயிஷாவைப் பற்றிச் சொன்னதாக இதை ஹதீஸ்களை நம்மால் பார்க்க முடிகிறது.

நமது ஊர்களில் கணவனின் பெயர்களைச் சொல்வதே குற்றமாகக் கருதுகிறார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதுகிறார்கள்.

முஸ்லிம் ஊர்களில் மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்களிடம், கணவனின் பெயரைச் சொல்வதற்கே தயங்குவார்கள். அதில் ஒரு மனைவி, தனது கணவனின் நூர் முஹம்மது என்ற பெயரை சொல்வதற்குக் கூச்சப்பட்டு, இரண்டு ஐம்பது, ஒரு முஹம்மது என்று கூறியதாக தமாஷாகச் சொல்வார்கள்.

கணவனின் பெயரை மனைவி உச்சரிப்பதில் சொல்வதில் எந்தத் தவறும் கிடையாது. இதிலும் அதிகப்படியாகச் சொல்வது எனில், நபியவர்களுக்கும் ஆயிஷா (ரலி)க்கும் வயது மிகவும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. அதனால் கணவன் மனைவிக்குள் எந்தப் பிரச்சனைகளும் கிடையாது. முஹம்மது என்று தனது கணவரது பெயரைச் சொல்வதில் ஆயிஷா (ரலி)க்கு அலாதிப் பிரியம் என்பதைப் பார்க்கிறோம். நபியவர்களும் அதை விரும்பியிருக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்என்று கூறினார்கள். அதற்கு நான், “எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது (பேசினால்), “முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாகஎன்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாகஎன்று கூறுவாய்என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)என்று கூறினேன்.

நூல்: புகாரி 5228

எனவே நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூட பாராமால் கணவன் மனைவி என்ற அடிப்படையிலேயே நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் கோபமாக இருந்துள்ளதைப் பார்க்கும் போது இதுவெல்லாம் குடும்ப வாழ்வில் சகஜம் என்று புரிய வேண்டும்.

நபியவர்கள் ஒரு மனைவியின் வீட்டில் இருக்கும் போது இன்னொரு மனைவி ஒரு உணவைக் கொடுத்து அனுப்பினார்கள். இதனால் உணவு கொடுத்து விட்ட பாத்திரத்தையே அந்த மனைவி உடைத்து விட்டார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(துகொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் யாரது வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டி-ருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள்.

மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), “உங்கள் தாயார் ரோஷப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார(துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக் கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பி விட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்து விட்டார்கள்.

நூல்: புகாரி 5225

இந்தச் சம்பவத்தை ஆராய்ந்தால், இப்படியெல்லாம் நபியவர்களின் மனைவிமார்கள் நடந்திருப்பார்களா? என்று தோன்றும். ஆனால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது எனில், நமக்கெல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஒரு முன்மாதிரியைக் காட்டுவதற்காகத் தான் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

இப்படி நபியவர்களின் மனைவிமார்களிடம் நிகழ்வுகளை நடக்க வைத்து அதை நபியவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நமக்கு அல்லாஹ் கற்றுத் தருவதற்காகத் தான் இப்படியெல்லாம் நிகழ்த்துகிறான் இறைவன்.

நபியவர்களின் மனைவிமார்களே இப்படியிருந்துள்ளார்கள் என்பதால் பெண்கள் இப்படித்தான் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் கணவன் மனைவிக்குள் ஏன் சண்டை வரப்போகிறது?

எனவே ஒரு பெண்ணிடம் இருக்கின்ற குறை இன்னொரு பெண்ணிடம் இருக்காது. ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு வகை நிறையும் உண்டு. பல வகையான குறைகளும் உண்டு. இந்த ஏற்ற இறக்கங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துதவற்குத்தான் இஸ்லாம் குடும்பவியலில் பயிற்சி வழங்குகிறது.

எனவே குடும்பம் என்ற நிர்வாகத்தை ஆண்கள் நடத்துகிற போது, பெண்களுக்கு என இருக்கும் பண்பியல்புகளை பிரச்சனையாக்காமல் மனம் பொறுத்துக் கொண்டு வாழ்வதைத்தான் நிர்வாகம் என்று மார்க்கம் சொல்கிறது. அதைத் தான் நபியவர்கள், வளைந்த விலா எலும்பு என்றும் அதை உடைத்து விடாதீர்கள் என்றும் நமக்கு எச்சரித்தார்கள்.

நமக்கெல்லாம் சொன்ன நபியவர்கள் வளைந்த விலா எலும்பை நிமிர்த்தாமல் செய்துகாட்டி வழிநடத்துகிறார்கள். அதை எப்படியாவது சரிசெய்யாலாம் என்று கங்கணம்கட்டி இறங்கினால் கணவன் மனைவி என்கிற ஒப்பந்தம் முறிந்து விவாகரத்தில்தான் முடியும்.

குறைகளுக்கு மாற்றாக எத்தனையோ நிறைகள் இருக்கும், அவற்றை வைத்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான். நம்மீது வைத்திருக்கிற பாச உணர்வு, கவனிக்கும் அக்கறைத் தன்மை, பிள்ளைகளைப் பார்க்கும் பாங்கு, நமது பெற்றோரைப் பேணும் முறைகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு குறைகளை மன்னிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

கற்பொழுக்கத்தைப் பேணுவது போன்று ஒவ்வொன்றாக ஆய்வு செய்து குறைகளைப் பொறுத்துக் கொள்வதுதான் நபிகள் நாயகம் நிர்வாகம் செய்த முறை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அதேபோன்று நபியவர்கள் ஒரு முறை கோபப்பட்டும் இருக்கிறார்கள். அதை நபியவர்களின் கோபத்தின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம்.

ஆயிஷா நாயகியும் ஹப்ஸா நாயகியும் நபியவர்களிடம் கடுமையான முறையில் சண்டையிழுத்து விடுகிறார்கள். இப்படி சண்டை போட்டதால் நபியவர்களுக்குக் கோபம் வந்து, இனிமேல் உங்களுடன் எந்த உறவும் கிடையாது என்று கூறி, ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்துவிடுகிறார்கள்.

இதற்கு அரபியில் ஈலா என்று சொல்லப்படும். பிறகு இந்தச் செய்தி, நபியவர்கள் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டார்கள் என்று ஊர் முழுவதும் பரவிவிட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒரு சஹாபி வந்து கூறுகிறார்கள்.

பிறகு உமர் தனது மகள் ஹப்ஸாவைக் கண்டிக்க வருகிற போது, அப்படித்தான் செய்வேன் என்கிற மாதிரி பதில் வருகிறது. ஆனால் என்ன பேசிக் கொண்டார்கள். என்ன சண்டை என்றெல்லாம் அந்தச் சம்பவத்தில் கிடையாது. வீட்டுக்குள்ளேயே மாடி போன்ற மேற்பகுதியுடைய பரணில் சென்று அமர்ந்து விடுகிறார்கள் நபியவர்கள்.

பொறுமையின் சிகரம் நபியவர்களுக்கே இவ்வளவு மன உளச்சலை அவர்களது மனைவிமார்கள் கொடுத்தபோதும், நபியவர்கள் பொறுமை இழந்து அடித்துத் துன்புறுத்தவில்லை. ஒப்பந்தம் குறித்து பயம் காட்டுகிறார்கள் அவ்வளவுதான். இது தலாக்குடைய சட்டம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மட்டும் பிரிந்து வாழ்கிற ஈலா என்கிற சட்டம். நபியவர்கள் தானாக ஒதுங்கியிருந்தது தான் தீர்வே தவிர, அடித்து உதைத்து சித்ரவதை எதையும் மனைவிமார்களுக்கு நபியவர்கள் செய்யவில்லை.

(பார்க்க: புகாரி 4913)

—————————————————————————————————————————————————————-

பாஜகவின் பசுநேசம் ஒரு பகல்வேஷம்

எம். ஷம்சுல்லுஹா

புகை உயிருக்குப் பகை, புகை பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற எச்சரிக்கைகளுக்கு இந்தியாவில் ஒன்றும் குறைச்சலில்லை. சிகரெட் பாக்கெட்டுகள் இந்த எச்சரிக்கை மணியைத் தாங்கித் தான் வருகின்றன. ஆனால் புகைப்பவர்களிடம் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

2011ல் வெளியான ஒரு புள்ளி விபரம் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதன் காரணமாக உயிரிழப்பதாகக் கூறுகின்றது. இது புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்.

மதுவினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கொண்டால் அதற்கு இந்தச் சிறிய கட்டுரை தாங்காது. அண்மையில், இந்து நாளிதழில், “மெல்லத் தமிழன் இனி…” என்ற தலைப்பில் பல நாட்களாக ஒரு தொடர் வெளியானது.

பாமரனிலிருந்து பட்டதாரி வரை, தொழிலாளிகள் முதல் முதலாளிகள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை, பழுத்த மனிதர்கள் முதல் பள்ளிக்கூடப் பையன்கள் வரை தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களையும் மது என்ன பாடு படுத்தியது? எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை விரிவாகப் படம்பிடித்துக் காட்டியது.

தேசிய அளவில் 2008ஆம் ஆண்டு 4308 என்ற எண்ணிக்கையிலிருந்த மது தொடர்பான மரணங்கள் 2012ல் 5478 என்ற சிகரத்தைத் தொட்டிருக்கின்றது என்ற புள்ளிவிபரத்தை தேசிய குற்றப் பதிவு ஆவணத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அளவுக்கு மது அரக்கன் இந்தியாவில் வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றான்.

மதுவுக்கு அடிமையானவன் முதலில் தான் சம்பாதிக்கும் காசு, பணம் அனைத்தையும் குடிப்பதில் கொட்டித் தீர்க்கின்றான். பின்னர் அவன் தொழிலில் எதுவும் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றான். குடிப்பதற்குப் பணம் இல்லாமல், பணம் கேட்டு மனைவியை மாடு மாதிரிப் போட்டு அடிக்கின்றான். மனைவியின் நகை நட்டுக்களைக் களவாடி விற்றுக் குடிக்கிறான்.

முஸ்லிமல்லாத மக்களை எடுத்துக் கொண்டால் தாலி என்பது வெறும் கயிறல்ல! அது ஒரு புனிதக் கயிறு! மாங்கல்யம் என்பது அவர்களிடம் மங்களகரமானது. அந்த மங்களத்தை இந்தத் திமிங்கிலம் மனைவியிடமிருந்து பறித்துச் சென்று, அதை விற்று, குடித்துத் தீர்க்கிறான்.

பெற்ற மகளை விற்கும் மிருகம்

குடிப்பதற்குப் பண்ட, பாத்திரம் எதுவும் இல்லையென்றால் பெற்ற பிள்ளைகளை விற்பதற்கும் இந்த ஈவு இரக்கமற்ற மிருகம் தயங்குவதில்லை. இவர்களை மிருகங்களோடு கூட ஒப்பிட முடியாது. காரணம் எந்த மிருகமும் தான் ஈன்ற குட்டியை எந்தவொரு கட்டத்திலும் விட்டுவிடுவதில்லை. எதிரி இனம், தனது குட்டியைக் கவர வரும் போது அதை எதிர்த்து நின்று காக்கும் குணம் கொண்டது. அந்த உயர்ந்த இனத்துடன் பணத்திற்காக பாசத்தை விலை பேசும் இழிந்த மனித சடத்தை, சவத்தை, ஈனப் பிறவியை ஒருபோதும் ஒப்பு நோக்கக்கூடாது.

மதுவுக்காக, தான் பெற்ற பிள்ளைகளை விற்கும் ஜென்மமும் இருக்கின்றதா? என்று உங்களிடம் வியப்புக் குறி தோன்றும்; வினாக்குறி எழும். அதற்கு 07.07.2014 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான செய்தியை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு பிரேம்ராஜ் தனது 4-வது பெண் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு அங்கு வந்து செல்பவர்களிடம் விற்க முயற்சி செய்தபோது காவல் துறையிடம் பிடிபட்டார். எழும்பூர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் இதற்கு முன்பே தன்னுடைய 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்றிருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது பிரேம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெண் குழந்தை அவரது மனைவி மஞ்சுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது தாயும், குழந்தையும் பெரம்பூரில் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் அரசு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

கணவர் பிரேம்ராஜ் குறித்தும் குழந்தைகளை விற்ற சம்பவங்கள் குறித்தும் தி இந்துவிடம் மனம் திறந்தார் மஞ்சு.

கடந்த 2007-ம் ஆண்டில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது 16 மட்டுமே. முதலில் வாடகை வீட்டில் இருந்தோம். பின்னர் வில்லிவாக்கத்தில் உள்ள அம்மன் கோயில் அருகே இருக்கும் பாலத்தின் அடியில் பிளக்ஸ் பேனர் கூடாரம் அமைத்து அதில் தங்கினோம்.

மேற்கூரை எதுவும் இல்லாமல் நடைபாதையிலேயே திருமண வாழ்வில் பாதிக்கும் மேல் கழித்திருக்கிறார்கள் இவர்கள். திருமணமான அடுத்த வருடமே மஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

முதல் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் அவசரச் சிகிச்சை பிரிவில் குழந்தை இருக்க வேண்டிய சூழ்நிலை. அந்தச் சமயம் வேறு ஒரு தம்பதி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறி என்னுடைய கணவர் பிரேம்ராஜ் முதல் குழந்தையை அவர்களிடம் விற்றுவிட்டார்.

அப்புறம் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தை 10 நாள் மட்டும்தான் என்னுடன் இருந்தது. அதையும் விற்றுவிட்டார். மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தை பிறந்து 4 நாட்கள் தான் இருக்கும். அதற்கு முழுமையாகத் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு குழந்தையை எடுத்துச் சென்று விட்டார்.

திருமணமான முதல் நாள் தொடங்கி இரவுகளில் பல கொடுமைகளை கணவரிடம் அனுபவித்திருக்கிறார் மஞ்சு. தினமும் அடி விழும். நான் குளத்து வேலை செய்து சம்பாதிக்கும் 100, 200 ரூபாயையும் குடிக்க பிடுங்கிச் சென்றுவிடுவார் என்று மஞ்சு சொல்லும்போது இப்போதும் அவருக்கு குரல் உடைகிறது.

வீடு இல்லாத நிலையில் மஞ்சுவை வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து தங்க வைத்திருக்கிறார் பிரேம்ராஜ். மஞ்சு எப்போதாவது குழந்தை பெற்றுத்தர முடியாது என்று சொன்னால் அன்று அவருக்கு கடுமையான அடி விழும். அவருக்கு நான் விற்பதற்குக் குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக இருந்தேன். குழந்தையை விற்கக் கூடாதுன்னு சண்டையெல்லாம் போட்டிருக்கேன். என்னுடைய வாழ்க்கைதான் இப்படி ஆகிடுச்சு என்னுடைய குழந்தைகளாவது வேறு ஒரு குடும்பத்துல சந்தோஷமா வளரும்னு சமாதானப் படுத்திக்குவேன் என்கிறார் மஞ்சு.

இப்போ மீட்கப்பட்ட நான்காவது குழந்தை பற்றி நிறைய கனவுகள் இருக்கின்றன. அவளுக்கு நல்லா தலைவாரி, பூச்சூடி, அழகா சட்டைபோட்டு விட வேண்டும். இந்தப் புள்ள மட்டும்தான் தற்போது எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என்கிறார் அவர்.

பிரேம்ராஜ் போன்ற நபர்கள் இறுதிவரை சிறையிலேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பல பெண்களது வாழ்க்கை பாழாய் போகும் என்றும் தெளிவாகப் பேசுகிறார் மஞ்சு.

குடியைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் குடி

மதுவுக்காக, பெற்ற பிள்ளைகளை விற்கின்ற கணவனைச் சிறையில் போடுங்கள் என்று மனைவி கதறுகின்றாள் என்றால் அவளது பாதிப்பின் பரிமாணத்தை நம்மால் தெளிவாக விளங்க முடிகின்றது.

கணவன் வெளியே சென்றால் வழிமேல் விழி வைத்து, கண்கள் பூத்து, கணவன் வந்த பின் சாப்பிடுவோம் என்று காத்துக் கிடக்கின்ற பத்தினிப் பெண்கள் தான் இத்தகைய ஈனப் பிறவிகளுக்கு எதிராக இப்படித் தீப்பிழம்பாக மாறி கொழுந்துவிட்டு எரிகின்றார்கள்.

இந்த அளவுக்கு மது, குடும்ப அமைதியைக் கெடுத்து விடுகின்றது. வளருகின்ற பிள்ளைகளும் இந்த மதுவுக்கு, சில இடங்களில் மனைவியும் இதற்கு அடிமையாக, குடும்பமே சிதைந்து சின்னாபின்னமாகி விடுகின்றது.

குழந்தைகள் குடிகாரர்களாக மாறிவிடுவதோடு மட்டுமல்லாமல் கொலைகாரர்களாகவும் மாறிவிடுகின்றார்கள் என குடியின் கேடுகள் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. குடியின் கேட்டை விவரிக்க இந்தக் குட்டி எடுத்துக்காட்டுக்கள் போதும்.

இப்படிப்பட்ட குடியிலிருந்து குடியையும், குடும்பத்தையும் காப்பது மக்கள் நலம் நாடும் ஒரு குடியரசின் கடமையாகும்.

கொடிய நெருப்பின் கோர வேகத்தை மிஞ்சுகின்ற வகையில் குடிமக்களை அழித்துப் பொசுக்குகின்ற, மாய்த்துத் தள்ளுகின்ற இந்த மது அரக்கனைப் போர்க்கால அடிப்படையில் வீழ்த்துவது மத்திய அரசின் உடனடி வேலையாகும்.

போதைக்கு அனுமதி! புரதத்திற்குத் தடை!

உடலுக்குக் கெடுதியளிக்கின்ற புகையையும், போதையையும் உடனடியாகத் தடுக்க வேண்டிய மத்திய அரசு, புரத உணவை அளிக்கின்ற மாட்டிறைச்சியைத் தடை செய்யத் துடிக்கின்றது. மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சியைத் தடை செய்ததையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் தடை செய்வதற்குப் பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் 7:146

பா.ஜ.க. என்ற முஸ்லிம் விரோத அரசு, வழிகேடான பாதையை மட்டும் தனது வழியாக எடுத்துக் கொண்டுள்ளது. மாட்டிறைச்சி என்பது முஸ்லிம்கள் மட்டுமன்றி பெரும்பான்மையான இந்துக்களின் உணவாகவும், புரதமாகவும் அமைந்திருக்கின்றது. ஆட்டிறைச்சி ஒரு வகையில் பணக்கார உணவாகவே இருந்து வருகின்றது. மாட்டிறைச்சி ஏழைகளின் உணவாக அமைந்திருக்கின்றது.

மற்றவர்களுக்கு உணவாக அமைந்த ஒரு கால்நடையை இவர்கள் கடவுளாக ஆக்கிக் கொண்டு அதைச் சாப்பிடக்கூடாது, விற்கக் கூடாது, விற்றால் அவர்களுக்குப் பத்தாண்டு சிறைத் தண்டனை என்று கூறினால் அது மாபெரும் அநீதியும், அக்கிரமும் ஆகும்.

இதற்குரிய அடிப்படைக் காரணமே முஸ்லிம்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதைத் தவிர்த்து வேறு எந்தக் காரணமும் இல்லை.

மாடு, அது பசுவாக இருக்கட்டும்; அல்லது காளையாக இருக்கட்டும். அதைச் சாப்பிடுவதால் யாருக்கும் எந்தப் போதையும் ஏற்படுவதில்லை. அதனால் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் இத்தனை பேர் இறந்தார்கள் என்ற ஒரு செய்தி எப்போதும் வெளியானதில்லை. அரசும் வெளியிட்டதில்லை. மாடு உடலுக்குக் கேடு என்று அரசு விளம்பரம் போட்டதில்லை. மாறாக, மது குடும்பத்தைக் கெடுக்கும் என்று அரசாங்கமே விளம்பரம் செய்கின்றது. புகை உடலுக்குப் பகை என்று அரசாங்கமே விளம்பரம் செய்கின்றது.

மாட்டிறைச்சியும் நாட்டு வளர்ச்சியும்

மாட்டினால் யாருக்கும் கடுகளவு கூடப் பாதிப்பு இல்லை என்பதைவிட மாட்டிறைச்சியின் மூலமாக மனிதனுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. மாட்டிறைச்சி புரதச் சத்தை மட்டும் தரவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் தருகின்றது.

உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு (சுமார் 20 லட்சம் டன்) இந்தியாதான். இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 2011-இல் 1.9 பில்லியன் டாலரிலிருந்து 2013-இல் 3.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இப்போது சுமார் 5 பில்லியன் டாலராகி இருக்கக்கூடும். இந்தியாவின் 48% தோல் ஏற்றுமதி தமிழ்நாடு மூலம் நடைபெறுகிறது. இதில் 30% தோல் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. (19.03.2015 – தினமணி தலையங்கம்)

தன்னுடைய இறைச்சியின் மூலம் மட்டுமல்லாமல் பாலிலிருந்து தோல் வரை, கொம்பிலிருந்து அதன் வால் முடி வரை, கால் குளம்பு வரை அத்தனையிலும் மனித சமுதாயத்தின் வருவாய், பிழைப்பு நடத்துவதற்கு மாடு வகை செய்கின்றது.

இப்படிப்பட்ட பொருளாதாரச் சுரங்கத்தைத் தான் நாடு முழுவதும் தடை செய்வதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்கின்றது.

இந்த வேகத்தையும், வீரியத்தையும் பல குடிகளைக் கெடுத்து, பிள்ளைகளைத் தலைமுறை தலைமுறையாகப் பாழாக்கி, பாதிக்கச் செய்து, பலரைக் கொலை செய்யவும் தற்கொலை செய்யவும் காரணமாக அமையும் மதுவைத் தடை செய்வதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். குஜராத், மிஜோராம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் அதில் ஏகப்பட்ட குறைபாடுகளும், கோளாறுகளும் உள்ளன.

மகாராஷ்டிராவில் மது விலக்கு நடைமுறையில் இருந்தால் மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கி, உரிமம் பெற்றுக் கொண்டால் உரிமையுடன் மதுவை வாங்கி ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் மகாராஷ்டிரா மதுவிலக்கின் லட்சணம்.

இப்படி சில மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் அது தள்ளாடுகின்ற நிலையில் தான் உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, தில்லி மாநிலங்களில் அந்த மாநில அரசுகளே நேரடியாக மதுவை விற்பனை செய்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையின் இலக்கை உயர்த்தி சாதனை படைத்து வருகின்றது தமிழ்நாடு.

மாபெரும் இந்தத் தீமையை விட்டும் மக்களைக் காக்க வேண்டிய மத்திய அரசு இதில் தீவிரம் காட்டாமல் மாட்டிறைச்சியைத் தடை செய்வதில் தீவிரம் காட்டுகின்றது. மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கைத் தவிர்த்து இது வேறொன்றுமில்லை.

தவிடுபொடியாகும் தற்காப்பு வாதங்கள்

மாட்டிறைச்சி தடையைத் தூக்கி நிறுத்துவதற்காக பத்திரிகைகள் பல்வேறு தற்காப்பு வாதங்களை வைக்கின்றன. அவை அனைத்தும் தவிடுபொடியாகும் வாதங்களாகவே அமைந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தினமணி 19.03.2015 அன்று வெளியான தலையங்கத்தைக் குறிப்பிடலாம்.

தேவை தானா தடை? என்ற தலைப்பில் வெளியான அந்தத் தலையங்கம் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்ப்பது போல் இருந்தாலும் தடையைப் பக்காவாக ஆதரித்திருக்கின்றது.

பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மிருகங்களின் வதைக்குத் தடை விதித்திருக்கின்றன. யூத மதத்துக்கு எதிரானது என்பதால் இஸ்ரேலில் குதிரை மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கம்யூனிஸ நாடான கியூபாவில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஏதோ இந்தியாவில் மட்டுமே மத நம்பிக்கையின் அடிப்படையில் பசுவதையும், மாட்டிறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூக்குரலிடுவது அர்த்தமற்றது. (தினமணி தலையங்கம்)

பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக மாடுகளைத் தடை செய்திருப்பது உண்மை! ஆனால் மேற்குறிப்பிட்ட அந்த நாடுகள், அந்தப் பிராணிகளைக் கடவுள், புனிதம் என்ற காரணத்திற்காகத் தடை செய்யவில்லை. இஸ்லாமிய நாடுகள் பன்றியையும், அதன் இறைச்சியையும் தடை செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் அதன் புனிதத் தன்மைக்காக அல்ல! ஆனால் இந்தியாவில் பசுவைக் கொல்வதற்குத் தடை செய்யக் காரணம் அதன் புனிதத் தன்மைக்காகத் தான். எனவே இந்தத் தடையை அந்தத் தடையுடன் ஒப்பிடுவது தவறான ஒப்பு நோக்காகும். இந்த அடிப்படையில் அந்த வாதம் தவிடுபொடியாகி விடுகின்றது.

மாமிசத்துக்கான நீர்த் தேவை மிக அதிகம். ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்திக்கு செலவாகும் தண்ணீர் 15,415 லிட்டர். ஆட்டிறைச்சிக்கு 8,763, பன்றி இறைச்சிக்கு 5,988 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. தாவர உணவுகளுக்கான நீர்த் தேவை, ஒரு கிலோ பருப்பு உற்பத்திக்கு அதிகபட்சமாக 4,000 லிட்டர் தான். மற்ற காய்கறிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவை. நீர்த் தேவை குறித்த விழிப்புணர்வு மூலம் மக்களை சைவ உணவுக்கு மாற்றுவது இயலும். ஆனால், சட்டம் போட்டு மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக ஆடு, கோழியை விடுத்து, வெறும் மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வது பயனற்றது. (தினமணி தலையங்கம்)

தினமணியின் இந்த வாமும் அர்த்தமற்ற வாதமாகும். மாமிசத்திற்காகன நீர்த் தேவையைக் கணக்குப் பார்த்தால் பருப்பு உற்பத்திக்கு 4000 லிட்டர் தேவைப்படுகின்றது. அதுபோல் அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. மனிதன் அரிசியை மட்டும் சாப்பிடுவதில்லை. அரிசியுடன் பருப்பு, உளுந்து போன்ற தானியங்களையும் சேர்த்தே சாப்பிடுகின்றான். இவை ஒவ்வொன்றையும் கூட்டினால் ஒரு கிலோ மாட்டிறைச்சிக்குத் தேவையான தண்ணீரையும் தாண்டிப் போய்விடும்.

இவை அனைத்திற்கும் சேர்த்துத் தான் வான்மழை பொழிகின்றது. ஏதோ தண்ணீரை பாஜக அரசு தன் கருவூலத்திலிருந்து திறந்து விடுவது போன்று அர்த்தமற்ற கதையை அளந்து விடுகின்றது.

ஒரு பொருளை உருவாக்க இத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதைக் கணக்கிடும் மறை நீர் என்ற இந்தச் சித்தாந்தம் கிறுக்குத்தனமானது. ஒரு பொருளைத் தயாரிக்க எத்தனை ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவானாலும், அந்தத் தண்ணீர் உலகில் இருந்து காணாமல் போகாது. ஒன்று நிலத்தடியில் தேங்கி மீண்டும் நமக்குப் பயன்படும். அல்லது வானில் சேமிக்கப்பட்டு மழையாக திரும்பக் கிடைக்கும். இந்த வகையில் சிந்தித்தால் மறைநீர் என்ற தத்துவம் அறிவுப்பூர்வமானதல்ல. மனிதன் எதையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளி நாட்டைக் கெடுப்பதற்காக சில சதிகாரர்கள் கண்டு பிடித்த வறட்டுத் தத்துவம் என்பதையும் கூடுதலாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது அரசியல் சட்டத்தின் 48-ஆவது பிரிவான அரசுக்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறையில் பசுவதைத் தடுப்பு என்பதும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பசுக்களும் விவசாயத்திற்கு பயன்படும் ஏனைய கால்நடைகளும் கொல்லப்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. (தினமணி தலையங்கம்)

இந்தத் தடையை அரசியல் சட்டம் கூறுவதாகத் தெரிவிக்கின்றது. அப்படி இருந்தாலும் காளை மாட்டையும் அறுக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது அல்ல என்பதை தினமணி நரித்தனமாக மறைக்கிறது.

இதற்கு முந்தைய 47வது பிரிவு மதுவிலக்கை அமல்படுத்தச் சொல்கின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பசுவை அறுத்துச் சாப்பிடுவதால் யார் குடியும் கெட்டுப் போவதில்லை. ஆனால் மது குடியைக் கெடுத்து விடுகின்றது.

அதில் காட்டாத அக்கறையையும், ஆர்வத்தையும், அவசரத்தையும் இதில் ஏன் காட்டுகின்றது? இதற்கு இது முஸ்லிம்களுடைய பொருளாதார வளத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்பதைத் தவிர்த்து இதற்கு வேறு காரணமல்ல.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பசுவதைத் தடுப்பு இடம் பெற்றிருந்தது என்பது மட்டுமல்ல, நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பசுமைப் புரட்சிக்கும், வெண்மைப் புரட்சிக்கும் பதிலாக இறைச்சி ஏற்றுமதியை ஊக்குவித்து “சிவப்புப் புரட்சி’ (பிங்க் ரெவல்யூஷன்) செய்து கொண்டிருக்கிறது என்று சாடியிருந்தார். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி பா.ஜ.க. பசுவதைத் தடை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைத் தடை மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்பதுதான் உண்மை. அந்தக் கருத்துடன் நாம் உடன்படாமலிருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தை பா.ஜ.க. இந்தப் பிரச்னையில் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (தினமணி தலையங்கம்)

தேர்தல் வாக்குறுதி என்ற வாதத்தையும் தினமணி வைக்கின்றது. இதுவும் ஓர் அர்த்தமற்ற வாதமாகும். பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டுகள் அடிப்படையில் 282 பெற்றிருக்கலாம். ஆனால் விகிதாச்சார அடிப்படையில் அது வெறும் 31 சதவிகிதம் வாக்குகளைத் தான் பெற்றிருக்கின்றது. அதாவது 69 சதவிகிதம் மக்கள் பாஜகவை எதிர்த்துத் தான் வாக்களித்துள்ளனர். இது எப்படி பாஜகவின் பசுநேசத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்? என்று தினமணி சிந்திக்கவில்லை. இந்த அடிப்படையில் இது ஒரு சொத்தை வாதமாகும்; ஒரு சார்பு சிந்தனை வாதமாகும்.

பல்டி அடிக்கும் பலே கில்லாடி

வித்தியாசமான கட்சி என்று தன்னைத் தானே பீற்றிக் கொள்கின்ற ஒரு கட்சி தான் பாஜக. உண்மையில் அந்தக் கட்சி மாதிரி எந்தக் கட்சியும் புரண்டு பேச முடியாது; பல்டி அடிக்க முடியாது. அதற்கு ஏற்றாற்போல் ஒரு பல்டி நாயகன் மோடி வாய்த்திருக்கின்றார்.

முதலில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டையை அட்டகாசமாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்த பின் அதில் அப்படியே பல்டியடித்து, காங்கிரஸை விடப் பன்மடங்கு தீவிரமாக ஆதார் அட்டையை அமல்படுத்துகின்றார். சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை காங்கிரஸ் கொண்டுவந்த போது அதைக் கடுமையாக விமர்சித்தார். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதைப் போன்று உள்ளது என்ற அளவிற்கு தினமணி உள்ளிட்ட காவி பத்திரிகைகள் விமர்சித்தன. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எரிவாயு மட்டுமின்றி அனைத்து வகையான மானியத்தையும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

வங்கதேசத்துடன் நிலமாற்றுப் பரிவர்த்தனை கூடாது என்று ஆட்சிக்கு வருமுன் மோடி கூறினார். தற்போது அதைச் செயல்படுத்துவோம் என்று கூறுகின்றார். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் 25 விவகாரங்களில் இதுபோன்ற அந்தர் பல்டிகளை அடித்த ஒரே நாயகன் மோடி தான். இந்த வகையில் பாஜக ஒரு வித்தியாசமான கட்சி தான்.

மோடி கண்மூடித்தனமாகக் கிண்டல் அடித்த விஷயங்களில் ஒன்று தான் சிவப்புப் புரட்சி! அதாவது மாட்டிறைச்சி ஏற்றுமதியைக் கடுமையாகச் சாடினார். கடுமையாகக் கிண்டலடித்தார். இதற்குப் பதிலாக வெண்மை (பால்) புரட்சியைச் செய்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின் இறைச்சி ஏற்றுமதியின் நிலவரம் என்ன? கடந்த ஆண்டு 10,56,118 மெட்ரிக் டன்னாக இருந்த இறைச்சி ஏற்றுமதி இந்த ஆண்டு 15,91,581 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 5,35,000 மெட்ரிக் டன் இறைச்சி அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று வணிக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார்.

வெறும் எருமை மாட்டு இறைச்சி மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. பசு இறைச்சியும் சேர்த்துத் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பது இங்கு வெளியான மறுக்கமுடியாத உண்மையாகும். 08.03.2015 அன்று இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இறைச்சி ஏற்றுமதியில் பாஜக கையும் களவுமாக மாட்டிக் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இங்கு தான் பாஜகவின் இரட்டை முகம் அப்பட்டமாக அம்பலமானது.

பசுநேசம் ஒரு பகல்வேஷமே!

உண்மையில் பாஜகவுக்கும் மோடிக்கும் பசு மீது நேசமிருக்குமானால் எடுத்த எடுப்பிலேயே பசு இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்திருக்க வேண்டும். இங்கு காசு கடவுளாகி, பசு சாதாரண பொருளாகிவிட்டது. பசு நேசம் பகல் வேஷமாகிவிட்டது.

இவ்வளவு நாளும் பசு மூலம் காசு பார்த்துவிட்டு இப்போது மோடி முண்டா தட்டுவது அவரது முகமூடியைக் களைந்திருக்கின்றது. அவரது உண்மை முகத்தை அடையாளம் காட்டுகின்றது.

சிவப்புப் புரட்சியும் சிந்தனை வறட்சியும்

சிவப்புப் புரட்சி பற்றி மோடி கடுமையாக விமர்சிக்கும் போது, இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முஸ்லிம்களை தாஜா செய்யும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படி விமர்சித்தவர் தான் அந்த அரசை விட அதிகம் ஏற்றுமதி செய்து சம்பாதித்திருக்கின்றார். அப்படியானால் இவரும் முஸ்லிம்களை தாஜா செய்வதற்காகத் தான் செய்தாரா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு மோடி ஒருபோதும் பதிலளிக்கப் போவதில்லை.

அடுத்து, மோடி வெண்மைப் புரட்சியைப் பற்றி பெரிய புத்திசாலி போன்று வெளுத்து வாங்குகின்றார். இவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவாகப் போகின்றது. இந்த ஓராண்டில் வெண்மைப் புரட்சியில் இவர் என்ன கிழித்து விட்டார் என்று தெரியவில்லை.

மாட்டிறைச்சியை விற்றாலோ அல்லது இறைச்சியைக் கையில் வைத்திருந்தாலோ 5 ஆண்டு சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று மகாராஷ்டிர அரசு சட்டம் போட்டிருக்கின்றது.

புனிதமான மாட்டின் திடப் பொருளுக்கு அதாவது இறைச்சிக்கு இப்படி ஒரு சட்டம் என்றால் திரவப் பொருளுக்கு (பாலுக்கு) இந்தச் சட்டம் ஏன் பொருந்தாது? இறைச்சியாவது பால் கறப்பதற்குத் தகுதியில்லாத மாட்டிலிருந்து தான் பெறப்படுகின்றது. ஆனால் பாலோ கன்றுக்குரிய உணவிலிருந்து மனித இனத்திற்கு அபகரிக்கப்படுகின்றது. உண்மையில் பசு பால் கறப்பது மனிதனுக்காகவா? கன்றுக்காகத் தான். பால் இல்லாமல் கன்று வாழ முடியாது. ஆனால் பசுவின் பால் இல்லாமல் மனிதன் வாழ முடியும் என்றிருக்கும் போது அந்தப் பாலை எப்படி அபகரிக்கலாம்? இது அநியாயம் இல்லையா? இந்த அநியாயத்திற்கு வெண்மைப் புரட்சி என்று பெயர் வேறு!

மாட்டு மூத்திரம் கோமியம் என்ற பெயரில் இவர்களால் ஏற்கனவே அருந்தப்படுகின்றது. இதபோன்று இன்னும் சாணம் போன்ற கழிவுகளைப் புனிதம் என்ற பெயரில் பயன்படுத்திக் கொள்ளட்டும். பாலை எப்படிப் பயன்படுத்தலாம்? எனவே இந்தச் சட்டம் முற்றிலும் ஓர் அறிவீனம்! இதை வைத்து ஒரு சமுதாயத்தைப் பழிவாங்குவது அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

இஸ்லாமிய சமுதாயத்தைப் பழிவாங்குவதைக் குறியாகக் கொண்டு இந்தச் சட்டம் மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் இயற்றப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்ல! இந்து சமுதாயத்திலும் பெரும்பான்மையோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு விவசாயி பால் கறப்பதற்கும், உழுவதற்கும் தகுதியில்லாத மாட்டைத் தான் விற்கிறான். அது தான் அறுக்கப்படுகின்றது. இதை அறுப்பது குற்றம் என்றால் ஒரு விவசாயி தன் பாட்டைக் கழிப்பதே பெரும் சுமையாகிவிடும். அதனால் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறான். அவனை நோக்கி, பசு தானாகச் சாகின்ற வரை அதைப் பராமரிக்க வேண்டும் என்று சொன்னால் அவனுக்கு இது பொருளாதாரச் சுமையாக மாறி விடுகின்றது.

இது ஒருபுறமிருக்க, பெரும்பான்மை மக்களின் உணவுப் பொருளாகத் திகழும் மாட்டிறைச்சியைத் தடை செய்வதால் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியின் விலை மட்டுமின்றி காய்கறிகளின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் இந்தத் தடையால் ஏற்பட்டுள்ள மறைமுக பாதிப்பாகும்.

மது என்பது அத்தியாவசிய உணவு அல்ல! மேலதிகமாகக் குடிக்கும் போதைப் பொருளாகும். மது விலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் சட்டத்திற்குப் புறம்பாக நடந்த மது விற்பனை வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. போதை பானத்திற்கே இப்படி என்றால் மாட்டிறைச்சி என்பது அன்றாட, அத்தியாவசிய உணவு! இதனால் ஏற்படும் வழக்குகள் நீதிமன்றத்தின் பளுவையும் பராமரிப்பையும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட பக்க விளைவுகளையும் பாதகத்தையும் பார்க்காத பாஜக மதவெறி அரசு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

உயர் சாதி என்று ஒரு சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மை சமுதாயம் உணவாக உட்கொள்கின்ற ஒரு கால்நடையைக் கடவுளாக ஆக்கிக் கொண்டு அதை அவர்கள் சாப்பிடக் கூடாது என்று தடுப்பதும், அதற்காகத் தண்டனை வழங்குவதும் மாபெரும் அராஜகமாகும். இயற்கை நீதிக்கு எதிரான செயலாகும்.

இந்திய வாக்காளர்களின் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான, 30 சதவிகித மக்களே பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். இதை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்களின் உணவிலும், அது தொடர்பான தொழிலிலும் அடிப்பது மிகப் பெரும் கொடுமையாகும். அடுத்த தேர்தலில் இதற்குப் பெரும்பான்மை மக்கள் பலத்த பதிலடி கொடுப்பதற்கு இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். இவர்களின் அஸ்தமன அத்தியாயம் இப்போதே தொடங்கி விட்டது.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 29

அற்புதங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

சென்ற இதழில் நபிமார்கள் செய்த அற்புதங்களில் சிலவற்றை நாம் பார்த்தோம். அவற்றை நபிமார்கள் செய்தார்கள் என்பதில் நமக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த அற்புதத்தை நபிமார்கள் எப்படிச் செய்தார்கள்? யார் மூலமாகச் செய்தார்கள் என்பதற்கான விடையும் அந்தந்த சம்பவங்களிலேயே கிடைக்கின்றது. அவற்றை நாம் பார்ப்போம்.

பொதுவாக அல்லாஹ் நமக்கு அற்புதங்கள் சம்பந்தமாக ஒரு விதியை சொல்லித் தருகின்றான்.

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.

(அல்குர்ஆன் 40.78)

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 13.38)

இந்த இரண்டு வசனங்களிலும் இறைவன் சொல்வது, எந்த நபியாக இருந்தாலும் தாமாக நினைத்தவுடன் எந்த அற்புதத்தையும் கொண்டு வர இயலாது. தாமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றலை யாருக்கும் நான் கொடுக்கவுமில்லை. என்னுடைய அனுமதி இருந்தால் மட்டுமே அற்புதங்களைக் கொண்டு வர முடியும்.

ஆக, நபிமார்கள் செய்து காட்டிய எல்லா அற்புதங்களையும் இறைவனின் அனுமதியுடனே தான் செய்தார்கள். அவர்களுக்கு சுயமாக அந்த சக்தி – ஆற்றல் கொடுக்கப்படவில்லை என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்.

அது மட்டுமல்லாமல் அத்தனை நபிமார்களும் அற்புதங்களைச் செய்து காட்டும் போது, “இதை நானாகச் செய்யவில்லை. மாறாக அல்லாஹ்வுடைய விருப்பம் மற்றும் அனுமதியைக் கொண்டுதான் செய்கிறேன்’ என்று மக்களிடம் கூறியதாக இறைவன் பின்வரும் வசனங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்என்று அவர்களின் தூதர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன் 14:11)

மேற்கண்ட வசனங்களிலிருந்து, நபிமார்கள் அற்புதங்கள் செய்தது உண்மை. ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் கட்டளையை கொண்டே தவிர அவர்கள் தாமாக சுய விருப்பப்படி நினைத்த நேரத்தில் செய்யவில்லை. செய்யவும் முடியாது என்பது விளங்குகிறது.

இதை இன்னும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதென்றால், அற்புதங்கள் சம்பந்தமாக இதுவரை நாம் பார்த்த சம்பவங்களிலிருந்தே நபிமார்களுக்குத் தாமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இல்லை இல்லை என்பதையும், அல்லாஹ்வின் மூலமாகத் தான் நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அதில் முதலாவதாக, மூஸா நபியவர்கள் தன்னுடைய சமுதாய மக்கள் கேட்டதற்கிணங்க 12 ஊற்றுகளை ஏற்படுத்தினார்கள் என்பதை நாம் முன்னர் பார்த்தோம்.

அந்தச் சம்பவத்தில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த மக்கள் மூஸாவிடத்தில் தண்ணீர் கேட்ட போது தன்னுடைய கையில் இருக்கும் கம்பைக் கொண்டு அடித்து தானாக தண்ணீரை வரவழைக்கச் செய்தார்களா? அல்லது அந்த சமுதாயத்திற்காக இறைவனிடத்தில் தண்ணீர் கேட்டு அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்ட பின் தண்ணீரை வரவழைக்கச் செய்தார்களா? என்பதைத்தான்.

ஏனென்றால் 2:60-வது வசனத்தின் ஆரம்பத்திலேயே மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஆக, அல்லாஹ் தான் இந்த அற்புதத்தை மூஸா நபியின் மூலம் செய்து காட்டியதாகச் சொல்கிறான். மூஸா நபி அந்த அற்புதத்தைத் தானாகச் செய்ததாக அந்த வசனம் சொல்லவில்லை.

அதே போன்று, மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் முதன் முதலில் உரையாடுவதற்காகக் கைத்தடியுடன் செல்கிறார்கள். அப்போது அல்லாஹ் மூஸா நபியிடத்தில், உனது வலது கையில் என்ன இருக்கிறது என்று கேட்க, அதற்கு அவர்கள் “இது என்னுடைய கைத்தடி. இதன் மூலம் நான் நடப்பதற்கும், ஆடு மாடுகளுக்கு இலை தழைகளை பறித்து போடவும், இன்னும் பல வேளைகளுக்காகவும் இதனை நான் பயன்படுத்துவேன்’ என்று சொல்கிறார்கள்.

உடனே அல்லாஹ், “அந்த கைத்தடியை கீழே போடுவீராக!’ என்று சொன்னவுடன் அவர்கள் அந்த கைத்தடியைக் கீழே போடுகிறார்கள். அந்தக் கைத்தடி உடனே பாம்பாக மாறுகிறது. அது பாம்பாக மாறியதைப் பார்த்த மூஸா நபியவர்கள் பயந்து நடுங்கியவர்களாக அந்த இடத்தை விட்டு விரண்டு ஓடினார்கள் என்ற செய்தியை முன்னர் நாம் பார்த்தோம். (பார்க்க: அல்குர்ஆன்27:10)

மூஸா நபிக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இருக்குமென்றால் ஏன் தன்னுடைய கைத்தடியை கீழே போட்டு அது பாம்பாக மாறியபோது பயந்து ஓடினார்கள்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கையில் இருக்கும் தடியைக் கீழே போடு என்று மூஸா நபிக்கு அல்லாஹ் தான் கட்டளையிடுகிறான். அந்தக் கைத்தடியும் அல்லாஹ்விடத்தில்  இருந்து வந்த கைத்தடியோ, மந்திரக்கோலோ கிடையாது. ஒரு மனிதன் பயன்படுத்துகின்ற சாதாரணக் கம்புதான் அது. அதை அல்லாஹ் கீழே போடச் சொல்கிறான். ஏன் அல்லாஹ் இத்தடியை கீழே போடச் சொல்கிறான்? என்பது மூஸா நபிக்குத் தெரியவில்லை. அவ்வாறு போட்டால் என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது.

ஆக இதிலிருந்து இந்த அற்புதத்தை அல்லாஹ் தான் நிகழ்த்தியிருக்கிறான் என்பது தெளிவாகிறது.

அதே போன்று, மூஸா நபிக்கு மேலும் ஒரு அற்புதத்தை வழங்கினான். இவர் தூதர் என்பதில் எதிரிகள் சந்தேகத்தைக் கிளப்பிய போது இறைவன் மூஸா நபிக்கு “உம்முடைய கையை சட்டைப் பைக்குள் விட்டு வெளியே எடுப்பீராக’ என்று கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறு செய்தார்கள். மற்ற நேரங்களில் சாதாரணமாக இருந்த அவர்களுடைய கை அந்த நேரத்தில் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிடும் ஒளியாக ஆனது. ஏன் இவ்வாறு செய்யச் சொல்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு சட்டைப் பைக்குள் இருந்து கையை எடுத்தால் என்னவாகும் என்பதும் தெரியவில்லை.

இந்த அற்புதத்தை அல்லாஹ், தான் நிகழ்த்திக் காட்டியதாக அல்குர்ஆன் 28:32, 7:108, 27:12 ஆகிய வசனங்களில் குறிப்பிடுகின்றான். இதையும்  முன்னரே நாம் பார்த்தோம்.

அதுபோன்று, பிர்அவ்னுக்கும், மூஸா நபியவர்களுக்கும் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பிர்அவ்ன் ஏற்பாடு செய்திருந்த சூனியக்காரர்கள் தங்களுடைய கயிறைப் போட்டு பாம்பாக மாற்றி மக்களின் கண்களை வயப்படுத்துகிறார்கள். அது ஒரு மேஜிக் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஆனால் அதற்குப் பிறகு அல்லாஹ் மூஸா நபியிடத்தில் இருக்கும் கைத்தடியைப் போடச் சொல்கிறான். அது நிஜப் பாம்பாக மாறி அந்த போலிப் பாம்புகளை விழுங்கி விடுகின்றது. இறைவனிடமிருந்து கட்டளை வராமல் அவர் அந்தக் கைத்தடியைப் போட்டிருந்தால் அது பாம்பாக மாறியிருக்காது. இறைவனுடைய கட்டளை வந்த பிறகு தான் அந்தக் கைத்தடியைப் போடுகிறார்கள். அது பாம்பாக மாறுகிறது. இது தன்னால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாக அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான்.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்களே போடுங்கள்!என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். “உமது கைத்தடியைப் போடுவீராக!என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன் 7:113 முதல் 117 வரை)

மேலும் இந்தச் சம்வம் குர்ஆனில் 20:66 முதல் 69 வரை இடம் பெற்றுள்ளது.

“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்” என்று கூறினோம். “உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

இந்த வசனத்தில், மூஸா நபியவர்களுக்கு அற்புதம் செய்யும் ஆற்றலும், மறைவான ஞானமும் இருந்திருந்தால், பிறகு ஏன் அந்த சூனியக்காரர்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டு, பாம்பாக மாற்றிய போது பயப்பட வேண்டும்? இவர்கள் செய்வது மேஜிக் தான். ஆனால் நம்மிடம் இருப்பதோ மிகப்பெரிய அற்புதம். நம்முடைய கம்பைப் போட்டு நிஜ பாம்பாக ஆக்கிவிடலாம் என்று நினைத்து பயப்படாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

ஆனால் அவர்களுக்கே இந்தப் போட்டியில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் இருந்திருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு தான் அந்த அற்புதத்தைச் செய்து காட்டினார்கள்.

அது போன்று, பிர்அவ்னும், அவனது கூட்டத்தாரும் மூஸாவையும் அவரை ஈமான் கொண்டவர்களையும் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வருகிறார்கள். கடைசியில் கடற்கரையை அடைகின்றார்கள். தப்பிப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஒன்று பிர்அவ்னிடம் அகப்பட்டு கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்படும். அல்லது கடலில் விழுந்து இறக்க நேரிடும் என்பதை அறிந்த மூஸா நபியின் கூட்டத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அப்போது அல்லாஹ் அங்கும் அனைவரும் பார்க்கும் விதமாக ஒரு அற்புதத்தை மூஸா நபிக்கு நிகழ்த்திக் காட்டியதாக (அல்குர்ஆன் 26:62,63) வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

உமது கைத்தடியால் கடலில் அடிப் பீராகஎன்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

(அல்குர்ஆன் 26.62,63)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கட்டளையில்லாமல் மூஸா நபி தானாக தன்னுடைய கைத்தடியை கொண்டு கடலை அடித்து தன்னையும் தன்னுடைய கூட்டத்தாரையும் காப்பாற்றிக் கொண்டார்களா? அல்லது அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு அதைச் செய்தார்களா? இறைவனுடைய கட்டளை வந்த பிறகு தானே அதைச் செய்தார்கள்.

மூஸா நபியவர்களுக்கு அற்புதம் செய்யும் ஆற்றல் இருந்தால், அவருடைய கூட்டத்தார், நாம் மாட்டிக் கொண்டோம் என்று சொன்னவுடன், ஏன் மாட்டிக் கொண்டோம்? இதோ என்னிடத்தில் கைத்தடி இருக்கிறது. இதைக் கொண்டு இந்த கடலை அடித்து இதில் ஒரு பாதை ஏற்படுத்தி நாம் தப்பித்து விடுவோம் என்று சொல்லியிருக்கலாமே!

ஆனால் அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் – உதவி செய்வான் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்வின் கட்டளைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ்வின் கட்டளையும் வருகிறது என்பதை நாம் மேற்கண்ட வசனத்தில் பார்க்கிறோம்.

மூஸா நபியிடம் அந்தச் சமுதாய மக்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அப்போது மூஸா நபியவர்கள் இறைவனிடத்தில் தான் கோரிக்கை வைக்கின்றார்கள். இறைவன் அவர்களுக்கு மன்னு ஸல்வா எனும் அற்புத உண்வை இறக்கி வைத்த சம்பவத்தை அல்குர்ஆன் 20:80, 2:57 ஆகிய வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

மேலும் மற்றொரு அற்புதத்தையும் இறைவன் தான் செய்து காட்டியதாகப் பின்வரும் வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

ஒரு காளை மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது “எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?” என்று கேட்டனர். என்றார். “உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையதுஎன்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்என்று அவர்கள் கேட்டனர்.

அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!என்று அவர் கூறினார்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அதன் நிறம் என்னஎன்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்என்று அவர்கள் கேட்டனர். “அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்என்றார்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையதுஎன்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்என்று அவர்கள் கூறினர். “அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாததுஎன்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார்.

இப்போது தான் சரியாகச் சொன்னீர்என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர். நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன். “அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்

(அல்குர்ஆன் 2:67-73)

இந்த வசனங்களில் மூஸா நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதற்குப் பிறகு தான் அந்தக் கட்டளைக்கு ஏற்றவாறு அவர்கள் அந்த மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியை இறந்து போன அந்த மனிதன் மீது போடுகிறார்கள். இதுவும் ஓர் அற்புதம்தான்.

நாம் மூஸா நபிக்கு அற்புதம் நடந்ததை மட்டும் தான் பார்க்கின்றோமே தவிர, அந்த அற்புதம் எப்படி நடந்தது? யாரால் நடந்தது? அவர் நினைத்தவுடன் நடந்ததா? அவர் அல்லாஹ்விடம் கேட்காமல் தானே செய்து காட்டினாரா? அல்லது அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பிறகு செய்து காட்டினாரா? என்பதை நாம் சிந்திக்க மறந்து விடுகின்றோம்.

மூஸா நபியவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் சம்பந்தமாக வரக்கூடிய  அத்தனை சம்பவங்களிலும் அல்லாஹ், அத்தனை அற்புதங்களையும் தானே செய்து காட்டியதாகச் சொல்கிறான். அல்லாஹ்வின் கட்டளை அல்லது அவனுடைய அனுமதி கொண்டே தவிர மூஸா நபியவர்கள் அற்புதத்தைச் செய்து காட்டவில்லை. எனவே மூஸா நபிக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இல்லை. இறைவனுக்கு மாத்திரம் தான் அந்த ஆற்றல் உள்ளது  என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

அது போன்று ஈஸா நபியவர்கள் சம்பந்தமாக வரக்கூடிய இறைவன் செய்து காட்டிய அற்புதங்களை இதற்கு முன்பாக நாம் பார்த்தோம்.  குர்ஆனில் 19:20, 3:49, 5:110, 3:37, 21:91, 66:12, 3:45,46,47 ஆகிய இடங்களில் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைப் பற்றி இறைவன் கூறுகிறான்.

அவற்றில், ஈஸா நபியவர்கள் களிமண்ணால் ஒரு பறவையைச் செய்து அதை நிஜப் பறவையாக மாற்றிய அற்புதமாக இருக்கட்டும், பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்கியதாக இருக்கட்டும், இறந்தோரை உயிர்ப்பித்த சம்பவமாக இருக்கட்டும், அவருடைய சமுதாய மக்கள் உண்பதையும், அவர்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்வதாக இருக்கட்டும், வானத்திலிருந்து உணவுத் தட்டை இறக்கிய அற்புதமாக இருக்கட்டும்! இவை அனைத்தையும் அவர்களாகவே செய்து காட்டவில்லை. மாறாக, இறைவனின் கட்டளையுடனும், அனுமதியுடனும் தான் செய்து காட்டினார்கள் என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

களிமண்ணில் ஒரு பறவையைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தது அல்லாஹ்வின் அனுமதியுடன் தான். பிறவிக் குருடரை நீக்கியதும், குஷ்ட நோயைக் குணப்படுத்தியதும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான். இப்படி அத்தனை அற்புதங்களையும் இறைவனின் நாட்டப்படி அனுமதியுடன் தான் செய்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

அதே மாதிரி, இப்ராஹீம் நபிக்கு, நான்கு பறவைகளை அறுத்து துண்டுதுண்டாக ஆக்கி அவற்றை தனித் தனியாக நான்கு மலையின் மீது வைத்து விட்டுப் பிறகு, “நீ அவற்றை அழைத்தால் அவை உன் அழைப்பை ஏற்று உயிர்பெற்று வரும்’ என்று இறைவன் கட்டளையிட்டதாக அல்குர்ஆன் 2:260வது வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலும் இறைவன் கட்டளையிட்டு இந்த அற்புதம் நடந்ததாகக் குறிப்பிடுகிறானே தவிர அவராகவே அந்த அற்புதத்தைச் செய்யவில்லை. அந்த ஆற்றலை அல்லாஹ் அவருக்கு கொடுக்கவில்லை.

அது போன்று இப்ராஹீம் நபியவர்களை எதிரிகள் தூக்கி தீயில் போட்டவுடன் அந்தத் தீயை இறைவன் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் குளிர்ச்சியாக ஏற்படுத்தினான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடுஎன்று கூறினோம்.

(அல்குர்ஆன் 21:68-70)

இந்த அற்புதத்தையும் அல்லாஹ், தானே நிகழ்த்தியதாக சொல்லிக் காட்டுகிறான்.

அதே போன்று சுலைமான் நபியவர்கள் காற்றைத் தன் கைவசத்தில் வைத்திருந்தார்கள். இதை வைத்துக் கொண்டு சிலர் சுலைமான் நபி அவர்களுக்கு மிகப் பெரிய ஆற்றல் இருப்பதாகக் கூறிக்கொண்டு வருகின்றனர். இது அவர்களது அறியாமையை குறிக்கிறது.

சுலைமான் நபிக்கு காற்றை, தான் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தாக அல்லாஹ், பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம்

(அல்குர்ஆன் 34:12)

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

(அல்குர்ஆன் 38:36)

அதே போன்று சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறான்.

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்

அல்குர்ஆன் (21:82)

ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். “இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!” (என்று கூறினோம்.)

அல்குர்ஆன் (38:37)

அதே போன்று தாவூத் நபிக்கும் அல்லாஹ் மலைகளையும், பறவைகளையும் தான் வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.

பறவைகளையும், மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை (இறைவனைத்) துதித்தன

(அல்குர்ஆன் 21:79)

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 27.16)

பறவைகளுடைய மொழிகளும் எங்களுக்கு தெரியும் என்று சுலைமான் நபி மக்களிடத்தில் சொல்லவில்லை. மாறாக எங்களுக்குக் கற்றுத்தரப் பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

சுலைமான் நபி செய்த எந்த அற்புதத்திலும் அவர் சம்பந்தப்படவேயில்லை. மாறாக அல்லாஹ் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான். தாவூத் நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலும் அவர் சம்பந்தப்படவே இல்லை. இறைவன் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்ததினால் அவர்களுக்கு அனைத்தும் கட்டப்பட்டு நடந்தன. இல்லாவிட்டால் எதுவும் அவருக்கு கட்டுப்பட்டிருக்காது.

ஆக, அற்புதங்களைப் பற்றி பொதுவான விதியாக அல்லாஹ் தன்னுடைய நாட்டப்படி, விருப்பப்படி இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டான். இதுவரை நாம் பார்த்த சம்பவங்கள் இடம்பெற்ற அந்தந்த வசனங்களிலேயே அல்லாஹ் சொல்லிவிட்டான்.

எந்த வசனத்திலும் நபிமார்கள் தாங்களே அற்புதங்கள் செய்ததாக வரவில்லை. ஒன்று நபிமார்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டு அதைச் செய்து காட்டுவார்கள். அல்லது அல்லாஹ் கட்டளையிட்டு அதை நபிமார்கள் மூலமாகச் செய்து காட்டுவான். இந்த இரண்டு வகைகளில் ஒன்றாகத்தான் நபிமார்கள் மூலமாக (வழியாக) அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.

எனவே இன்று வழிகேடர்கள் சிலர், அற்புதங்கள் என்ற பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுவதிலிருந்து நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் சமுகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான மற்ற விஷயங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

பிறமதக் கலாச்சாரத்தை புறக்கணிப்போம்

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

சென்ற இதழின் தொடர்ச்சி…

பிற மதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்பது தொடர்பான மார்க்கத்தின் அறிவுரைகளைப் பார்த்து வருகிறோம். வணக்க வழிபாடுகளில் பிற மதத்தவர்களுக்கு மாறு செய்வது தொடர்பான செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம்.

குடும்பக் காரியங்களில் மாற்றம்

ஒரு சமுதாயம் சிறந்து விளங்க வேண்டுமெனில், அதன் அங்கமாக இருக்கும் குடும்பங்களும் சிறந்து விளங்க வேண்டும். எனவே, குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக இஸ்லாம் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் உரிய உரிமைகளையும் கடமைகளையும் முழுமையாக விளக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கணவன் மனைவி ஆகிய இருவருக்கு இடையே எத்தகைய தொடர்பு இருக்க வேண்டும்; அவர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் போதித்து இருக்கிறது. மேலும், இந்த விசயத்திலும் பிறமத மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளை, தவறான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்ததோடு மட்டுமில்லாமல், அவ்வாறு முஸ்லிம்கள் இருந்துவிடக் கூடாது என்றும் எடுத்துரைத்து இருக்கிறது, இஸ்லாம்.

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்தில் இருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, “உங்கள் பெண்கள் உங்களுக்குரிய “விளை நிலம்ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்எனும் (2:223 ஆவது) இறைவசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புஹாரி (4528)

யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக்கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:222) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். 

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் (நபி(ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே விட்டு வைக்க விரும்பவில்லை. அதில் அவர் நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லைஎன்று பேசிக்கொண்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (455), அபூதாவூத் (225)

யூதர்களிடம் இருந்த தவறான சிந்தனை இன்றும் நம்மைச் சுற்றியிருக்கும் பிறமத மக்களிடம் பார்க்க முடிகிறது. ஒருபெண் மாதவிடாய் காலத்தில் இருந்தால் அவளுக்கென படுப்பதற்குத் தனியான பாய், சாப்பிடுவதற்குத் தனியான தட்டு என்று அனைத்திலும் தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்கிறார்கள்.

மாதவிடாயின் போது காட்டும் மூடநம்பிக்கை மட்டுமின்றி இன்னும் பல்வேறு சடங்குகளையும் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள். கணவன் மனைவி என்ற பந்தத்தை ஏற்படுத்தும் திருமணத்திலேயே ஏராளமான சடங்குகளைத் துவக்கி விடுகிறார்கள்.

ஒரு பெண் தனது வயிற்றில் குழந்தையை சுமக்கும் போது, அதை பெற்றெடுத்த பிறகு, அந்தக் குழந்தை வளரும் போது என்று ஒவ்வொன்றிலும் இருக்கும் சடங்குகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் அவர்களிடம் இருக்கும் வரதட்சனை வாங்குவது, பத்திரிக்கை அடிப்பது, பருவமடைந்த பெண்ணுக்கு நீராட்டு விழா நடத்துவது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது போன்ற காரியங்கள் முஸ்லிம்களிடம் தொற்றியிருப்பதை மறுக்கவே இயலாது.

மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய,  எடுத்து சொல்ல வேண்டிய முஸ்லிம்களே அவர்களின் கலாச்சாரத்திற்கு அடிமையாக இருக்கும் நிலையைக் காணும் போது கவலையாக இருக்கிறது.

தனிமனித ஒழுங்குகளில் மாற்றம்

முஸ்லிம்களுடைய வணக்கங்கள், பண்புகள், பழக்க வழக்கங்கள் பற்றி இஸ்லாம் கூறியிருப்பது போன்று, அவர்களின் தோற்றம், தேவைகள் குறித்தும் விளக்கி இருக்கிறது. சாப்பிடுவது, பருகுவது, உறங்குவது, ஆடை ஆபரணங்களை அணிவது போன்ற அன்றாட விஷயங்களிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் நபிகளார் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறான தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான காரியங்களிலும் முஸ்லிம்கள் பிற மக்களை விட்டும் தனித்துத் திகழும் வகையில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளர விடுங்கள். மீசைகளை ஒட்ட நறுக்குங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (5892), முஸ்லிம் (434)

மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். நெருப்பு வணங்கிகளுக்கு (மஜூசிகளுக்கு) மாறு செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (435)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (3462), (5899)

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),

நூல்: அஹ்மது (21252)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளைக் கடந்து சென்றனர். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது “அன்சார்களே (உங்கள் முடிகளை) மஞ்சளாகவோ, சிவப்பாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள். வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்எனக் கூறினார்கள். “அப்படியானால் வேதக்காரர்கள் கால்சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லையேஎன்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள். வேட்டியும் அணியுங்கள் வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் காலுறை அணிகின்றனர். செருப்பு அணிவதில்லையேஎன்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்கள் காலுறைகளும் அணியுங்கள். செருப்பும் அணியுங்கள். வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்எனக் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் தங்கள் தாடிகளைக் கத்தரித்து மீசைகளை முழுமையாக வைக்கின்றனரேஎனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீங்கள் உங்கள் தாடிகளை முழுமையாக வைத்து மீசையைக் கத்தரியுங்கள்எனக் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (21252)

இந்த செய்திகளுக்கு மாற்றமாக, முழுக்க முழுக்க வெள்ளை வெளேரென்று தலைமுடியும் தாடியும் வைத்திருப்பது, அல்லது கருப்பு சாயம் பூசுவது, ஒட்டு முடி வைப்பது, பர்தாவை பெண்கள் பேணாமல் இருப்பது போன்ற காரியங்களை முஸ்லிம்கள் மக்களிடம் பார்க்க முடிகிறது. வெறும் பெயரை மட்டும் வைத்துத் தான் முஸ்லிம் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தங்களது தனித்துவத்தை தொலைத்துவிட்டு பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

மறக்கக்கூடாத மார்க்கத்தின் எச்சரிக்கைகள்

இஸ்லாத்தை அடையாளம் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக அன்று முதல் இன்று வரை பல்வேறு கூட்டங்கள் பல கட்டங்களில் முயற்சித்து வருகிறார்கள். தங்களின் கேடுகெட்ட சிந்தனைகளை, சீரழிக்கும் செயல்களை இஸ்லாத்திற்குள் நுழைப்பதற்கு, திணிப்பதற்குப் பல்வேறு தந்திரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியிருக்க, இன்னொரு பக்கம் பிறமத மக்களிடம் மண்டியிருக்கும் குருட்டு நம்பிக்கைகள், தரமற்ற காரியங்களின் பக்கம் பல முஸ்லிம்கள் மயங்கி கிடக்கிறார்கள். இஸ்லாத்தில் இருந்து கொண்டு அதற்கு மாற்றமான கோட்பாடுகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இதுபோன்ற மோசமான நிலை முஸ்லிம் சமுதாயத்திற்குள் புகுந்துவிடும் அபாயம் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அனைத்து முஸ்லிம்களும் அவற்றை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொண்டு விழிப்புடன் வாழ வேண்டும்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி – அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.

(அல்குர்ஆன் 2:120)

(நிராகரிப்பவர்கள்) அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 2:217)

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும்.

நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்துஎன்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்என்றுபதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலி)

நூல்: திர்மிதீ (2106), அஹ்மத் (20892)

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புஹாரி (3456)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்துகொண்டிருக்க, “யூதர்களையும்  கிறிஸ்தவர்களையும்  அல்லாஹ் தன் கருணையிலிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (435), (436)

பேய் பிசாசு இருப்பதாக நம்புவது, இறந்தவர்களை வழிபடுவது, முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது, தீ மிதிப்பது, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்று பிறமத மக்களிடம் இருந்து இஸ்லாமியர்களிடம் புகுந்திருக்கும் காரியங்களைப் பெரும்பட்டியல் போடலாம். முன்சென்ற செய்திகளை மறந்தும் புறக்கணித்தும் முஸ்லிம்கள் வாழ்ந்ததின் விளைவால்தான் இந்த மார்க்க விரோதக் காரியங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்குள் புகுந்திருக்கிறது என்பதே உண்மை.

மார்க்கத்தின் பகிரங்கமான கண்டனம்

பிற மக்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கின்றது. இத்தகைய மக்கள் தங்களை இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின்பற்றும் கொள்கையை சார்ந்த மக்களாகவே கருதப்படுவார்கள் என்று கடுமையாகக் கண்டிக்கிறது.

எனவே எந்த வகையிலும் பிறமத மக்களின் கலாச்சாரங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவை அரங்கேற்றம் செய்யப்படும் இடங்களுக்கு அறவே போகாமலும் அவர்களுடன் அங்கு அமராமலும் புறக்கணித்து இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை என்று எச்சரிக்கிறது இஸ்லாம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர் களைப் போன்றவர்களே என்று இவ் வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

(திருக்குர்ஆன் 4:140)

யார் பிறமத மக்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களை சேர்ந்தவரே என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவுத் (3512)

மார்க்கத்தில் நிலைத்திருங்கள்

ஒரு முஸ்லிம் எந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும்; எந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது என்பது குறித்து மார்க்கத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதைக் கடைபிடிப்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். எந்த விதத்திலும் அதன் வரம்புகளை மீறி விடக்கூடாது. இதற்கு மாற்றமாக, நட்பு, தோழமை, அண்டை வீட்டார், தெரிந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் செய்யும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாமும் செய்துவிடக்கூடாது. அவற்றில் பங்கெடுக்கவும் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(ஏக இறைவனை) மறுப்பவர்களே!நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்குஎன (முஹம்மதே!) கூறுவீராக!

(திருக்குர்ஆன் 109:1-6)

தடுத்து நிறுத்த முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன் உமது முகத்தை நிலையான மார்க்கத்தை நோக்கி நிலை நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

(திருக்குர் ஆன் 30:43)

(முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(திருக்குர் ஆன் 30:30)

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களைச் செய்ய மாட்டோம்; உலகக் காரியங்களிலும் மார்க்கக் கட்டளைகளை மீற மாட்டோம் என்று நாம் நமது பிற மத நண்பர்களிடம் தெளிவு படுத்த வேண்டும். அவர்கள் என்ன நினைப்பார்களோ? ஏது சொல்வார்களோ என்று தயக்கம் கொள்ளக் கூடாது.

பிறமத சகோதரர்கள் செய்யும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களைப் பின்பற்றாமலும், அந்தக் காரியங்களில் அவர்களுக்கு ஒத்துழைக்காமலும் அவர்களிடம் பழகுவதற்கும் நட்பு கொள்வதற்கும் மார்க்கத்தில் எந்தவொரு தடையும் இல்லை. வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தில் முழுமையாக நிலையாக இருந்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 18

வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் கூறிய செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம்.

பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இஸ்லாத்தில் புகுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய விரோதிகளின் மாபெரும் சதித் திட்டமாகும். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக இந்தச் சமுதாயத்தின் சத்திய ஆலிம்கள், உண்மையான நல்லடியார்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அடையாளம் காட்டினார்கள். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக சங்கைமிகு ஆலிம்கள் சரியான மறுப்பு கொடுப்பதற்காகத் தங்கள் சிந்தனையைச் செலுத்தினார்கள். இதற்காக நல்ல ஆட்சியாளர்களை அவர்கள் நாடினார்கள். முயற்சிகள் பல முனைகளிலும் பலன் தரக்கூடிய வகையில் அமைந்தன.

இந்தப் பொய்களை எதிர்கொள்வதற்குப் பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல் தொடுக்கும் வகையில் கவசங்களை, கேடயங்களை, அற்புதமான ஆயுதங்களை நூல்கள் வடிவில் உருவாக்கினார்கள். சரியான ஹதீஸ்களை, பொய்யான ஹதீஸ்களை விட்டும் பிரிக்கின்ற அளவுகோல்களை ஏற்படுத்தினார்கள்.

நபிமொழி என்ற கோட்டையைச் சுற்றி எந்த ஒரு திருடனும் ஏறிக் குதிக்க முடியாத அளவுக்குப் பெரும் மதில் சுவர்களை எழுப்பினார்கள். தகுதிவாரியாக அறிவிப்பாளர்களைத் தரம் பிரித்தார்கள். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அந்தக் காலத்தில் ஹதீஸ் அறிவிக்க வந்த அறிவிப்பாளர்களைப் படம் மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களின் ஆரம்பம் முதல் அஸ்தமனம் வரையில் வாழ்க்கைக் குறிப்புகளை அணு அணுவாக, பல கோடிக்கணக்கான பக்கங்களில் பக்காவாக, பாதுகாப்பாகப் பதிவு செய்து வைத்துவிட்டனர்.

ஹதீஸ் கலையில் ஒரு நுண்ணறிவு மிக்க புலனாய்வுப் பிரிவே செயல்பட்டது. அவர்கள் வைத்திருந்த அளவுகோல்கள் என்னும் அற்புதமான நுண்ணோக்காடிகள், பூதக் கண்ணாடிகள், தொலைநோக்கிகளிலிருந்து எந்த அறிவிப்பாளரும் தப்ப முடியாமல் ஆயினர்.

தாங்கள் பெற்ற பிள்ளைகளை எப்படித் தெரிந்து வைத்திருந்தார்களோ அந்த அளவுக்கு அறிவிப்பாளர்களை அந்த அறிஞர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஓர் அறிவிப்பாளரின் பெயரைச் சொன்னால் போதும். அவர்களின் ஜாதகங்கள் அத்தனையையும் அள்ளிப் போடும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்கள். ஹதீஸ் கலை எனும் துறையில் எத்தர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் நுழைகின்ற அத்தனை வாசல்களையும், ஓட்டை உடைசல்களையும் அடைத்தார்கள். ஹதீஸ் கலை துறையில் ஒவ்வொரு பிரிவிலும் பெரும் ஆய்வுப் புரட்சி படைத்தனர்.

அறிவிப்பாளர்கள் பற்றிய குறை நிறைக்காகவே ஒரு துறை, ஹதீஸ்களின் குறைகளை மட்டும் கண்டறிவதற்கு ஒரு துறை, அறிவிப்பாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசி ஆராய்வதற்காகவும் அவர்களது சரியான, பலவீனமான ஹதீஸ்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதற்காகவும் ஒரு துறை, பலவீனமானவர்களை மட்டும் கண்டறிவதற்காக ஒரு துறை, பொய்யர்கள் மற்றும் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரு துறை என்று பல்வேறு முனைகளில் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைக் காப்பதற்குப் பாதுகாப்பு வளையங்கள் ஹதீஸ் துறையில் பலமாக நிறுவப்பட்டன.

கல்வி, கலை அறிவியல் வளர்ச்சியின் முடிசூட்டி, கொடி கட்டிப் பறக்கின்றோம் என்று தம்பட்டம் அடிக்கின்ற நவீன கணிணி யுக வல்லுநர்கள், இந்த ஹதீஸ் துறையில் சற்று உற்று நோக்க வேண்டும். கணிணி இல்லாத அந்தக் காலத்தில் இப்படி ஓர் ஆவணப் புரட்சியா? என்று அதிசயித்துப் போவார்கள்; அதிர்ச்சியில் உறைந்து போவார்கள்.

அவர்கள் கொண்டிருந்த அந்த அளவுகோல்கள், ஆவணப் புரட்சி இன்றைய காலத்தில் உள்ள இந்தப் பாவிகளுக்கு சாத்தியமில்லை. அவர்கள் கொண்டிருந்த கல்வி, அர்ப்பணிப்பு, பேணுதல் போன்ற பண்புகளை இவர்களும் கொண்டிருந்தால் இவர்களாலும் இதைச் சாதிக்க முடியும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகும்.

இப்போது இஸ்லாத்தின் எதிரிகள் தீட்டிய சதித் திட்டத்தை விரிவாக அல்லாமல் ஓர் எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.

குர்ஆன், ஹதீஸ் பாதையைத் தவிடுபொடியாக்குகின்ற வேலையை மட்டும் அவர்கள் செய்யவில்லை. மக்கள் நாசமான பாதையில் இருந்து கொண்டிருந்தார்கள். ஆனால் “அவர்கள் இருக்கும் பாதை குர்ஆன், ஹதீஸ் பாதை தான்; அதைத் தான் முஸ்லிம்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் சரியான வழியில் தான் இருக்கின்றார்கள்’ என்ற மாயையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

கஸ்ஸாலியின் இஹ்யாவும் இந்த வேலையைத் தான் மக்களிடம் செய்து கொண்டிருக்கின்றது என்பதைப் பின்னர் நாம் பார்ப்போம். முதலில் சதிகாரர்களின் சதியைப் பட்டியலிடுவோம்.

ராஃபிளிய்யா என்ற ஷியா பிரிவினர்

இவர்களிடமிருந்து தான் ஒட்டு மொத்த மதம் மாறும் குழுக்களும் தோன்றின. வழிகேடுகளின் ஊற்றுக்கண்கள் இந்த சாராரிடமிருந்து தான் பிறந்து, பிரிந்தன.

“(ஷியாக்களின்) சிறப்புகள்’ தொடர்பான பொய்யான ஹதீஸ்களின் தொடக்கமே ஷியாக்களிடமிருந்து தான் உருவானது. தங்கள் எதிர் அணியினர் மீது கொண்டிருந்த பகைமையின் காரணமாக தங்கள் (ஷியா) அணிக்கு ஆதாரவான பல்வேறு ஹதீஸ்களை தொடக்கத்தில் இவர்கள் தான் இட்டுக்கட்டினார்கள்.

இவ்வாறு நஹ்ஜுல் பலாகா என்ற நூலின் விரிவுரையில் அதன் ஆசிரியர் இப்னு அபில் ஹதீத் தெரிவிக்கின்றார்.

ராபிளிய்யா என்ற பிரிவினரில் கதாபிய்யா என்று ஒரு சாரார் உள்ளனர். இவர்களுடைய சாட்சியத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. காரணம், தங்கள் கருத்தை ஆதரிப்பவர்களிடம் பொய் சாட்சியம் சொல்லலாம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று இமாம் ஷாஃபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மனோ இச்சையைப் பின்பற்றுகின்ற சாராரில் ராபிளிய்யாக்களை விட மிக அதிகமாகப் பொய் சொல்கின்ற எவரையும் நான் கண்டதில்லை என்றும் இமாம் ஷாஃபி கூறுவதாக இமாம் கதீப் தெரிவிக்கின்றார்கள்.

மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களில் உண்மை சொல்பவர்களும் இருக்கின்றார்கள். அதனால் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கதாபிய்யா என்ற ராபிளிய்யா கூட்டத்தின் சாட்சியத்தை ஏற்க முடியாது. இதுபோன்று கத்ரிய்யா என்ற சாராரின் சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், ஒரு பொருள் உருவாகின்ற வரை அந்தப் பொருள் அல்லாஹ்வுக்குத் தெரியாது என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் என்று ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூயூசுப் தெரிவிக்கின்றார்.

கதாபிய்யா என்றால் யார்? என்று இப்ராஹீம் அவர்களிடம் கேட்கப்பட்டது. இவர்கள் ராபிளிய்யாவின் ஒரு வகையினர் என்று அவர் கூறியதாக அபூஅய்யூப் தெரிவிக்கின்றார்.

“ஹதீஸ்களை நான் யாரிடமிருந்து செவியுற வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்கள்?” என்று அபூ இஸ்மா என்பார் இமாம் அபூஹனீபாவிடம் வினவிய போது, “ஷியாவைத் தவிர மனசாட்சிப்படி நடக்கின்ற ஒவ்வொரு நீதமானவரிடத்திலும் கேட்டுக் கொள். காரணம் ஷியாக்களுடைய அடிப்படைக் கொள்கை, முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களை வழிகெடுப்பது தான்’ என்று கூறினார்கள். இதை இமாம் கதீல் அறிவிக்கின்றார்.

(நூல்: அல்கிஃபாயா)

பித்அத்தை பிரச்சாரம் செய்கின்ற அழைப்பாளராக இல்லாத பித்அத்வாதிகளிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுப் பதிவு செய்யலாம். ஆனால் ராபிளிய்யாக்களைத் தவிர! காரணம் அவர்கள் பொய் சொல்கின்றார்கள் எனறு யஸீத் பின் ஹாரூன் தெரிவிக்கின்றார். (நூல்: அல்முன்தகா)

இமாம் மாலிக்கிடம், ராபிளிய்யாவைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, “அவர்களுடன் பேசாதீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களையும் அறிவிக்காதீர்கள். காரணம் அவர்கள் பொய் பேசுகின்றார்கள்” என்று சொன்னதாக அஷ்ஹப் வழியாக யூனுஸ் பின் அப்துல் அஃலா தெரிவிக்கின்றார். (நூல்: அல்முன்தகா)

ராபிளிய்யாவைத் தவிர நான் சந்தித்த அத்தனை பேரிடமிருந்து கல்வியைக் கற்றுக் கொள்கிறேன். ராபிளிய்யாக்கள் ஹதீஸை இட்டுக்கட்டுவது மட்டுமல்லாமல் அதை மார்க்கமாக ஆக்கிக் கொண்டார்கள் என்று ஷரீக் தெரிவிக்கின்றார்கள். (நூல்: அல்முன்தகா)

மக்களை (அறிஞர்களை) நான் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ராபிளிய்யாக்களைப் பொய்யர்கள் என்று தான் குறிப்பிடுகின்றார்கள் என அஃமஷ் தெரிவிக்கின்றார். (நூல்: அல்முன்தகா)

மின்ஹாஜுல் நதாமா என்ற நூலைப் பற்றி என்ற நூலைப் பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, தமது மின்ஹாஜுஸ் ஸுன்னாவில் குறிப்பிட்டதாவது: இதன் ஆசிரியர் ராபிளிய்யாக்களின் தலைவர்களான இப்னு நுஃமானில் முஃபீத், அவரது மாணவர்கள் தராஜிகி, அபுல்காஸிம் மவ்சூவி, தூஸி போன்றோரின் பாதையில் சென்றுள்ளார். ராபிளிய்யாக்கள் அடிப்படையில் ஆய்வு, விவாதம், ஆதாரங்கள் ரீதியான அறிவோ, அனுபவமோ இல்லாதவர்கள். ஹதீஸ்களைப் பற்றியும் அறவே ஞானம் இல்லாதவர்கள். ஸஹீஹ் லயீப் மத்தியில் ஹதீஸ்களைப் பிரித்துப் பார்க்கின்ற விபரமும் இல்லாதவர்கள். அவர்கள் ஆதாரமாகக் கொள்வது சங்கிலித் தொடர் (இஸ்னாத்) அறுந்து போன செய்திகளைத் தான்.

இந்த செய்திகளில் அதிகமானவை இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் செய்திகள். இன்னும் சொல்லப் போனால் இறைமறுப்பான செய்திகளாகும்.

அபூமிக்னப், லூத் பின் யஹ்யா போன்ற ஆட்களின் அறிவிப்புகளை மட்டும் தான் இவர்களது ஆலிம்கள் நம்புவார்கள்.

ராபிளிய்யாக்கள் (ஷியாக்கள்) மக்களில் அதிகமாகப் பொய் சொல்பவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர்.

இது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்ற கருத்தின் சாரம்சமாகும்.

—————————————————————————————————————————————————————-

இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

அமீன் பைஜி, கடையநல்லூர்

அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை குர்ஆனில் யூசுப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் விரிவாக சொல்லிக் காட்டி விட்டு இறுதியில் அல்லாஹ் நபிமார்களின் வரலாற்று நிகழ்ச்சிகளில் அறிவுடைய மக்களுக்குப் படிப்பினை இருக்கிறது என்று சொல்லிக் காட்டுகின்றான்.

அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.

(அல்குர்ஆன் 12.111)

இந்த வகையில் நபி இப்ராஹீம், யஃகூப் நபி ஆகிய இருவரும் தனது பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கி வந்தார்கள் என்பதை அல்லாஹ், குர்ஆனில் 2:132 வது வசனத்தில் இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.

“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

அதாவது நபி இப்ராஹிம்(அலை), நபி யஃகூப்(அலை) ஆகிய இருவரும் தமது பிள்ளைகளுக்கு அல்லாஹ் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உங்களுக்காக தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றான். எனவே இப்போது இஸ்லாத்தில் (ஓரிறைக் கொள்கையில்) வாழக்கூடிய நீங்கள், மரணம் வரும் போதும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களாக (ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக) மரணிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதாவது இஸ்லாமியர்களாக (ஓரிறைக் கொள்கை எனும் ஏகத்துவத்தை ஏற்றவர்களாக) வாழ்வது பெரிதல்ல. மரணிக்கும் போதும் இஸ்லாமியர்களாக- ஏகத்துவவாதிகளாக மரணிக்க வேண்டும்.

இதே கருத்துப்பட அதற்கு அடுத்த வசனத்தில் 2:133ல் கொஞ்சம் விரிவாக அல்லாஹ் நபி யஃகூப் (அலை) அவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பற்றிய நிகழ்வை சொல்லிக் காட்டுகின்றான்.

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர்.

நபி யஃகூப் அலை) அவர்கள் மரண வேளையில் கூட மற்ற விஷயங்களை பற்றிக் கவலைப்படாமல் தமது பிள்ளைகளின் இஸ்லாம் – ஏகத்துவம் குறித்துக் கவலைப்படுகிறார்கள். மரண வேளையில் இருக்கும் நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணமாகிவிடலாம். அப்படி மரணித்து விட்டால் ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்து ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தமது பிள்ளைகள், தமது மரணத்திற்குப் பிறகு எப்படி இருப்பார்கள்? அந்த ஒரே இறைவனை வணங்குவீர்களா? அல்லது திசைமாறி பல தெய்வங்களை வணங்கி வழிபடுவீர்களா? என்று கவலைப்பட்டுத் தான், எனக்கு பிறகு எதனை நீங்கள் வணங்குவீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு பிள்ளைகளும், “உங்களுடைய இறைவனும் உங்களுடைய மூதாதையர்களின் இறைவனுமான ஓரே இறைவனைத்தான் (உங்களுடைய மரணத்திற்கு பிறகும்) நாங்கள் வணங்குவோம்” என்று உத்தரவாதம் கொடுத்து பதில் கூறுகின்றார்கள்.

எனவே மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களும் நமக்கு எதனை உணர்த்துகின்றது? இஸ்லாம் எனும் ஏகத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கூறுவதோடு இஸ்லாமியர்களாக வாழ்வது மட்டும் போதாது. மரணமும் அதே நிலையில் ஏற்பட வேண்டும் என்று உணர்த்துகிறது.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை நாம் தகர்த்தெறிந்து மரணத்தின் கடைசி மூச்சு வரை இஸ்லாம் எனும் ஏகத்துவத்தைக் கொண்டு செல்ல  வேண்டும்.

ஆரம்ப காலத்தில் ஏகத்துவத்தில் நம்முடன் ஒன்றாக இருந்த சகோதரர்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்து வந்த பாதைக்கே திரும்பி, ஏகத்துவத்தை விட்டு வெளியேறியிருக்கின்ற காட்சியைப் பார்க்கின்றோம். இதுபோன்றெல்லாம் இல்லாமல் மரணம் வரைக்கும் இந்த ஏகத்துவத்தைக் கொண்டு சென்று அத்துடன் மரணிக்க வேண்டும்.

இறுதி முடிவை பொறுத்துத் தான் அல்லஹ்விடம் நமது தீர்ப்பு அமைகின்ற காரணத்தால் முடிவு நன்றாக இருக்க வேண்டும்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரின்போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்துகொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தனது வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் (கொண்டு தற்கொலை செய்து)கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார்.

(இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றனஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6493

போரில் கலந்து கொண்டு வீர தீரமாக அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு இறந்தவராக இருந்தாலும், அவர் சொர்க்கவாசி என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக, அவர் நரகவாசி என்று சொல்கின்றார்கள். காரணம். அவர் தன்னுடைய முடிவை  இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட தற்கொலையின் மூலம் ஆக்கிக் கொள்கிறார்.இந்த முடிவை வைத்து தான் அவரை அல்லாஹ் நரகில் நுழைக்கிறான்

மேலும் இஸ்லாம் எனும் ஏகத்துவத்துடன் தான் நமது மரணம் ஏற்பட வேண்டும். அதற்கு மாற்றமான முறையில் மரணம் அமைந்துவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி 3:102வது வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே  தவிர மரணிக்காதீர்கள்!

இஸ்லாம் எனும் ஏகத்துவக் கொள்கையை ஏற்ற நிலையில் நாம் மரணிக்க  வேண்டும் என்ற அதே நேரத்தில் லாஇலாஹ இல்லல்லாஹூ எனும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ சங்க நாதத்தை (சொல்லும் எண்ணமும்) ஒன்றுபட்டு மொழிந்தவர்களாக மரணிப்பது மிகப் பெரிய பாக்கியம். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 7/272

ஏகத்துவக் கலிமாவோடு மரணித்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தரவேண்டும்.

பின்வரும் ஹதீஸூம் ஏகத்துவத்தைத் தாங்கிய கலிமாவோடுதான் ஒரு மனிதன் இறக்க வேண்டும். அதற்கு மாற்றமான கொள்கையில் தனது மரணம் வந்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றது

அனஸ் (ரலி)  அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, ”இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!என்றார்கள். உடனே அவன் தன்னருகிரிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், ”அபுல் காசிம் – நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், ”’இவனை நரகத்திரிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.  

நூல்: புகாரி 1356

நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து வந்த சிறுவன் யூத மதத்தில் இருக்கிறான். அவனுக்கு நோய் ஏற்பட்டதும் அவனை நலம் விசாரிக்க வந்த நபியவர்கள், யூத மதத்தில் இருக்கும் இச்சிறுவனின் முடிவு என்னவாகுமோ என்றும், இதே நிலையில் இறந்து விட்டால் நரகம் சென்று விடுவானே என்ற கவலையுடனும் அவனுக்கு (ஏகத்துவக் கலிமாவைச் சொல்லி) இஸ்லாத்தைத் தழுவுமாறு அவனிடம் கூறுகிறார்கள். அவனும் இஸ்லாத்தை தழுவுகிறான். அதனால் தான் நபியவர்களும் சந்தோஷப்பட்டு அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக சிறுவனின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்த குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் கூறுவது போன்று முஸ்லிமாக ஏகத்துவவாதியாக வாழ்வது முக்கியமல்ல. மாறாக இஸ்லாமியனாக ஏகத்துவவாதியாக மரணிக்க வேண்டுமென்பதே முக்கியம் என்று கூறுகிறது. இந்த உயர்ந்த பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் ஈமான் எப்போதும் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.  அப்படி உறுதியாக இருந்தால் தான் மரணத்தின் கடைசி மூச்சின்போது ஏகத்துவத்தை  தாங்கிய கலிமாவைச் சொல்வதற்கான பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்படி, ஈமான் உறுதியாக இருப்பதற்கான சில வழிமுறைகளை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.

1)            ஒவ்வொரு நாளும் ஓத வேண்டிய ஏகத்துவத்தைத் தாங்கிய கலிமாவைக் கூறுவது.

பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்குப் பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

நூல்: புகாரி 3293

2) கடமையான தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய ஏகத்துவத்தை தாங்கிய கலிமாவை கூறுவது.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்து.

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.

நூல்: புகாரி 844, 6330

3)            குர்ஆனோடு நம்முடைய தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25.32)

இந்த வசனத்தில் நபியின் உள்ளத்தை ஈமானைக் கொண்டு வலுப்படுத்துவதற்காக சிறுக சிறுக இறங்கிய குர்ஆனைத்தான் காரணமாக இறைவன் கூறுகின்றான்.

எனவே நாமும் குர்ஆனோடு நமது தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டால் உள்ளத்தில் ஈமான் உறுதி பெறும்.

4)  குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளில் படிப்பினை பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது. (அல்குர்ஆன்11.120)

இந்த வசனத்தில் நபிமார்களின் வரலாறுகள்,  நபியின் உள்ளத்தை  (ஈமானால்) பலப்படுத்தக்கூடியது என்று இறைவன் கூறுகிறான். நம்முடைய உள்ளங்களும் ஈமானால் வலுப்பெற நாமும் நபிமார்கள் வரலாற்றில் படிப்பினை பெற்று நடைமுறைப்படுத்தினால் போதுமானதாக இருக்கும்.

மரணிக்கின்ற தருவாயில் ஏகத்துவக் கலிமாவோடு மரணிக்கின்ற பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!