ஏகத்துவம் – ஏப்ரல் 2010

தலையங்கம்

திருப்புமுனையாகட்டும் தீவுத் திடல் மாநாடு

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நாம் எழுப்பவே முடியாது; அது ஓர் எட்டாக்கனி என்றே தமிழக முஸ்லிம்களாலும், முஸ்லிம் தலைவர்களாலும் கருதப்பட்டது. அதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் இருந்தது.

இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. நாடு விடுதலை பெற்றதும் முஸ்லிம்களிடமிருந்து அந்த இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டது. திரும்பவும் இட ஒதுக்கீட்டைக் கேட்டால் அது ஒரு தேச விரோத உணர்வாகப் பார்க்கப்படும் அல்லது ஆக்கப்படும் என்று அன்றைக்கு இருந்த அசாதாரணமான நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் பயந்தனர்.

இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதற்கு இந்தப் பயம் தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது. தமிழகத்திலும் மத்தியிலும் இட ஒதுக்கீடு இல்லாதது தான் நம் தலையெழுத்து என்று முஸ்லிம்கள் வாளாவிருந்து வந்தனர். கொள்கையளவில் கூட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் இல்லை என்ற நிலையே தமிழகத்தில் இருந்தது.

இந்த சமயத்தில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு, முஸ்லிம்களின் அவல நிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது. தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கால கட்டங்களில் தலைதூக்கிய தவ்ஹீதுக் கொள்கையாளர்கள் இட ஒதுக்கீடு, காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து அதை மக்களுக்கு உணர்த்தினர். முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு என்ற வித்தை விதைத்து, அதற்கு நீர் பாய்ச்சி வளரச் செய்தனர்.

இதற்காக 1999 ஜூலை 4ல் சென்னை கடற்கரையில் ஒரு வாழ்வுரிமை மாநாடு, 2004 மார்ச் 21ல் தஞ்சையில் ஒரு பேரணி, கும்பகோணத்தில் 2006 ஜனவரி 29ல் பேரணி, 2007 ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம் என பல்வேறு கட்டப் போராட்டக் களங்களின் பரிசாக தமிழகத்தில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தனர்.

இந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஒரு வீரியத்தையும் இலக்கை அடைவதில் ஒரு வெறித்தனத்தையும் சமுதாய மக்களின் உள்ளங்களில் ஊட்டியதும் உரமாக்கியதும் தவ்ஹீதுக் கொள்கை தான்.

அடக்கப்பட்ட சமுதாயமான இஸ்ரவேலர்களிடம் அடக்குமுறை தர்பார் நடத்திய ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா நபியை ஆர்த்தெழச் செய்த அற்புத சக்தி தவ்ஹீத் தான். இறைத் தன்மைக்குச் சொந்தம் கொண்டாடிய ஏகாதிபத்திய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஃபிர்அவ்னை எதிர்த்து ஒரு சாமானியரான மூஸாவை நிற்க வைத்து, ஃபிர்அவ்னின் சாம்ராஜ்யத்தைச் சாய வைத்ததும் சரிய வைத்ததும் இந்த ஏகத்துவக் கொள்கை தான்.

சத்தியப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்த இறைத்தூதர் மூஸா நபியின் போராட்டம், இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு வித்தானது; சத்தானது.

2006 ஜனவரி 29ல் நடைபெற்ற குடந்தைப் பேரணி மாநாடு, ஜெயலலிதாவையே இட ஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைக்கச் செய்தது. அதுவே அடுத்து வந்த கருணாநிதியின் ஆட்சியில் ஆணையாக வந்தது. இது தான் உண்மை.

ஆணையம் வெற்றுப் பேப்பர், இட ஒதுக்கீடு தருவதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை என்றெல்லாம் கூறி ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் சமுதாயத்தை அடகு வைத்த இயக்கங்களும், இட ஒதுக்கீட்டிற்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாத இலக்கியக் கழகங்கள் எனும் அனாமதேயங்களும், பெயர் தாங்கி சமுதாய இயக்கங்களும், லெட்டர்பேடு இயக்கங்களும் தாங்கள் தான் இட ஒதுக்கீட்டை வாங்கித் தந்ததாகப் போலியாகச் சொந்தம் கொண்டாடினாலும் அதற்கு உண்மையான சொந்தக்காரர்கள் நாம் தான். அதற்குப் பின்னணியாக இருந்தது ஏகத்துவம் தான். இந்த ஏகத்துவம் என்ற மந்திரக்கோல் நம்மிடம் இல்லாவிட்டால் இட ஒதுக்கீட்டை நம்மால் ஒரு போதும் வாங்கியிருக்க முடியாது. இட ஒதுக்கீடு பெற அல்லாஹ்வின் அருளால் நாம் தான் காரணம் என்பதற்கு இந்த ஒன்றே போதிய ஆதாரமாகும்.

மாநிலத்தில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த அதே ஏகத்துவவாதிகள் தான், இன்ஷா அல்லாஹ் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளின்படி மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு கோரி களமிறங்கியிருக்கிறோம். இவ்வாறு நாம் களமிறங்கியிருப்பதற்குக் காரணம் பேருக்காக அல்ல! இது தூதுச் செய்தியின் தூய பணிகளில் ஒன்று என்பதற்காகவே!

அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். (அல்குர்ஆன் 7:157)

இந்தச் சமுதாயத்தின் சுமைகளை அகற்றி, இட ஒதுக்கீட்டை இக்லாஸ் என்ற தூய்மையான எண்ணத்தில் அடைவதற்காகவே!

சமுதாயத்தின் வறுமையும் வெறுமையும் நீங்கிட மத்தியில் நாம் காணவிருக்கின்ற இட ஒதுக்கீட்டிற்கான மாநாட்டிற்குக் களமிறங்குவோம்! கனவை நனவாக்குவோம்! கானல் நீரை காணும் நீராக்குவோம் இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

பெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்?

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கி விட்டோம் என்று பெண்ணுரிமை இயக்கங்கள் பீற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த இட ஒதுக்கீடெல்லாம் பெண்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் ஒரு பெண், எம்.பி.யாக இருந்தாலும் தலைநகர் டெல்லியில் தனியாக இரவு நேரத்தில் சுதந்திரமாக நடந்து வர முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. இது தான் உண்மை. இந்த உண்மை மனிதச் சட்ட நாயகர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் புரியவும் மாட்டார்கள். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம்.

உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

இந்த  இயற்கை மார்க்கம், பெண்களின் இயல்பை, பலவீனத்தைப் புரிந்து பெண்களுக்கென்று வாழ்க்கைப் பயணத்திலும் வழிப் பயணத்திலும் ஒரு சரியான வழிகாட்டலை வழங்குகின்றது.

அந்த வழிகாட்டல் தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் புகாரியில் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த ஹதீஸ்களில் முரண்பாடுகள் தென்படுகின்றன. இதைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும் முன் அந்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 1088, முஸ்லிம் 2386

இந்த ஹதீஸ் ஒரு நாள் தூரம் பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றது.

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களைச் செவியுற்றேன்:

 1. ஒரு பெண் கணவனோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது.
 2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது.
 3. சுப்ஹுத் தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ர் தொழுததிலிருந்து அஸ்தமனம் வரையும் தொழக் கூடாது.
 4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல்மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிவாசல்களுக்கு (நன்மையை நாடிப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 1197

இந்த ஹதீஸில் இரண்டு நாட்கள் என்று உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1086, முஸ்லிம் 2381

இந்த ஹதீஸ் மூன்று நாட்கள் என்று குறிப்பிடுகின்றது.

இந்த 3 ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் குழப்பமோ, கோளாறோ, முரண்பாடோ கிடையாது.

பொதுவாக ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீசுடன் முரண்படுவது போல் தோன்றினால்,

 1. அந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து கருத்துக் காண வேண்டும்.

ஆனால் இங்கு அவ்வாறு இணைத்துக் கருத்துக் காண்பதற்கு வழியில்லை.

ஒரு நாள் பயணம் என்ற ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று அறிவிக்கப்படும் இரு ஹதீஸ்களையும் அது மறுக்கின்றது.

இப்படி ஒவ்வொரு ஹதீஸும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கின்றன.

 1. இது போன்ற நேரத்தில் இம்மூன்றும் வெவ்வேறு கால கட்டத்தில் கூறப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் கடைசியாகக் கூறப்பட்டதை நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டும் முன்னர் கூறப்பட்டுப் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்று முடிவு செய்தால் முரண்பாடு நீங்கி விடும். ஆனால் இம்முன்றில் இது தான் இறுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வரும் போது அவை அனைத்தையும் நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இம்மூன்று ஹதீஸ்களுமே சரியான ஹதீஸ்கள் அல்ல என்ற முடிவை எடுத்து வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இது தான் தர்க்க ரீதியாகவும் சரியானதாகும். முரண்பட்ட மூன்றையும் யாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.

வேறு ஆதாரங்களைத் தேடும் போது இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கத்தக்க ஆதாரம் கிடைக்கிறது.

பெண்களின் பயணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு ஒரு வரையறையை நிர்ணயிப்பதற்குக் காரணம், இந்த வரையறை இல்லையென்றால் பெண்களின் கற்புக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும். அல்லது ஒரு பெண் தானே வலியத் தவறி விடுவாள். இதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படியொரு வரையறையை நிர்ணயிக்கின்றார்கள்.

இந்த வரையறையில் 3 நாட்கள் ஒருபுறமிருக்கட்டும்! ஒரு நாள் அதாவது 24 மணி நேரங்கள் கூட இது போன்ற தவறுகள் நிகழ்வதற்கு மாபெரும் அவகாசம்.

அதுவும் இந்த நவீன காலத்தில், போக்குவரத்துப் புரட்சி உள்ள காலத்தில் இந்த அவகாசம் சாதாரண ஒன்றல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படி ஓட்டை, உடைசல் உள்ள சட்டத்தைத் தருவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அப்படியானால் எங்கோ ஓரிடத்தில் குழப்பம் இருக்கின்றது என்று நாம் பார்த்தாக வேண்டும். அந்தக் குழப்பம் வேறெங்குமில்லை. அது அறிவிப்பாளர்களின் புரிதலில் தான் ஏற்பட்டுள்ளது. இதை நாம் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்யவில்லை. தப்ரானியில் இடம் பெற்றுள்ள, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதை நமக்கு விளக்குகின்றது. அந்த ஹதீஸ் இது தான்.

கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தவுடன், “மக்கள் மூன்று நாட்கள் என்று கூறுகிறார்களே!என்று அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இது அவர்களது யூகம் தான்என்று பதிலளித்தார்கள்.

நூல்: தப்ரானி

புகாரியில் இடம்பெற்றுள்ள முரண்பட்ட மூன்று ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள், தாங்கள் விளங்கிய தவறான விளக்கத்தின் அடிப்படையிலேயே அறிவிக்கின்றார்கள்.

ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்குத் தெளிவான விளக்கத்தை அளித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சரியான வழிகாட்டலைத் தெரிவிக்கின்றார்கள். அந்த வழிகாட்டல் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோமாக!

————————————————————————————————————————————————

பொருளியல்       தொடர்: 2

பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன.

ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை விட வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம்.

வியாபாரத்தைத் தூண்டும் திருக்குர்ஆன் வசனங்கள்

திருக்குர்ஆன் ஆன்மீகத்தைச் சொல்லித் தரக் கூடியது. இதில் அதிகமான இடங்களில் சம்பாதிக்கத் தூண்டக்கூடிய வசனங்களும்  இடம்பெற்றுள்ளன.

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:10)

தொழுகை முடிந்தவுடன் வியாபாரத்திற்குச் செல்லச் சொல்வதிலிருந்து பொருள் திரட்டுவது அவசியம் என்று விளங்குகின்றது.

நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது. (அல்குர்ஆன் 28:73)

பகலில் அவனது அருளை தேட வேண்டும்; இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து வியாபாரம் செய்வது அவசியம் என்பதை அறிய முடியும்.

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர். (அல்குர்ஆன் 16:14)

கடலில் அவனுடைய அருளைத் தேடுவதற்கு வசதியாக அதில் பயணத்தை இறைவன் இலகுவாக ஆக்கிருக்கின்றான்.

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வியாபாரத்தின் மூலமும் ஆகுமாக்கப்பட்ட பிற வழிமுறைகளிலும் பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும் என்பதை விளக்குகின்றன.

அனைத்திற்கும் பொருளாதாரம் அவசியம்

 1. தாய், தந்தையைக் கவனிக்க பொருளாதாரம் தேவை.
 2. திருமணம் முடிக்கும் போது மஹர் கொடுக்கப் பொருளாதாரம் தேவை.
 3. வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை இறைவன் தடை செய்தான்.
 4. குழந்தை பிறந்தால் அகீகா கொடுக்கப் பணம் தேவை.
 5. நோன்பு காலத்தில் நோன்பை முறிக்கக்கூடிய காரியமான உடலுறவு கொண்டு விட்டால் இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதைச் செய்வதற்குப் பொருளாதாரம் தேவை.
 6. சத்தியம் செய்து அதை முறித்துவிட்டால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இந்தப் பரிகாரத்தைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவை.
 7. நோன்பு வைக்க முடியாத நோயாளிகள் தினமும் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
 8. மனைவியை (லிஹார்) தாய்க்கு ஒப்பாகக் கருதி இல்லற வாழ்வில் சேரவில்லையென்றால் இதை முறித்துவிட்டு இதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
 9. குர்பானி மற்றும் நோன்பின் தர்மமான ஸதக்கதுல் பித்ரா கொடுக்க வேண்டும்.
 10. உண்ணுங்கள், பருகுங்கள் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து உண்ண, குடிக்கப் பொருளாதாரம் தேவை.

மேற்கூறப்பட்ட விஷயங்கள் தவிர இதில் கூறப்படாத விஷயங்கள் ஏராளம் உள்ளன. ஒரு மனிதன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருளாதாரம் இன்றியமையாததாகும் என்பதை விளங்க முடிகின்றது.

சொத்துக்களை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுதல்

நாம் நம்முடைய சொத்துக்களை நமக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஏழைகளாக மாறி பிறரிடம் கையேந்துவதை விட செல்வந்தர்களாக அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது.

விடை பெறும்ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள்  நோயுற்றிருந்த  என்னை (நலம்)  விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விüம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி (ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி 3936

சொத்துக்களைச் சேர்ப்பது, பணம் சம்பாதிப்பது கூடாது என்றால் நபி (ஸல்) அவர்கள் எதற்காக வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு ஏவினார்கள்? அப்படியானால் சொத்து, பணம் சம்பாதிப்பது கூடாது என்ற கருத்து தவறானது என்று விளங்குகின்றது.

உயிரைக் கொடுத்தேனும் சொத்தைப் பாதுகாத்தல்

ஒரு மனிதனிடத்தில் உயர்ந்த செல்வம் உயிராகும். கத்தியைக் காட்டி பயமுறுத்தினால் உயிருக்குப் பயந்து ஓடி விடுவான். ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடி அதில் அவன் இறந்து விட்டால் அவன் உயிர் தியாகியுடைய அந்தஸ்தை அடைந்து கொள்வான் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லைஎன்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்என்று பதிலளித்தார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 225

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: புகாரி 2480

பொருளாதாரத்தைக் கேட்டுப் பிரார்த்தித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்து வருடம் வேலை செய்த அனஸ் என்ற நபித்தோழருக்குப் பொருளாதார வளத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் நபியவர்கள் துஆச் செய்தார்கள். இதிலிருந்து பொருளாதாரத்தைக் கேட்டு துஆச் செய்யலாம் என்று விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது!என்றார். நபி (ஸல்) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். “உங்கள் ஊழியர் அனஸ் தான்!என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டுஎனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். “இறைவா! இவருக்குப் பொருட்செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக!என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 1982, 6334, 6344, 6378, 6380

அனஸ் அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இறக்கும் தருவாயில் மதினாவிலேயே மிகப்பெரும் செல்வந்தனாக இருந்தேன். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் செல்வத்தைக் கேட்டு எனக்கு துஆ செய்தது தான் காரணம்.

செல்வத்தைக் கேட்டு நபியவர்களின் பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில், “என்னை ஏழையாக வாழச் செய்து, ஏழையாகவே மரணிக்கச் செய்’ என்று பிரார்த்தனை செய்ததாக நபி (ஸல்) பெயரில் சில ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். நபி (ஸல்) அவர்களே செல்வத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்ததிலிருந்து செல்வத்தைக் கேட்டு நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம் என்று விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினாஎன்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 5265

அள்ளி அள்ளிக் கொடுப்பவன் சிறந்தவன்

எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல் வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 16:75)

இந்த் வசனத்தில் அல்லாஹ், செல்வத்தை வைத்திருப்பவனை தனக்கும், எந்தச் சொத்திற்கும் சொந்தமாகாத அடிமையை சிலைகளுக்கும் உதாரணமாகச் சொல்லிக் காட்டுகிறான். அழகிய செல்வம் வைத்திருப்பவனை உயர்ந்த ஒன்றிற்கு உதாரணமாகக் காட்டுவதன் மூலம் செல்வத்தின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தர்மம் செய்பவன் மீது பொறாமை கொள்ளுதல்

பொதுவாக ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொள்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்துள்ளனர். பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாவல் தேடவும் இறைவன் கற்றுத் தந்துள்ளான்.

பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5)

பொறாமை என்பது ஷைத்தானின் குணம் என்றெல்லாம் எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டிருந்தும் இரண்டு விஷயங்களில் மட்டும் பொறாமை கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி (73, 1409, 7149, 7316)

தொடரும்.. இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

ஏகத்துவமும் இணை கற்பித்தலும் – தொடர்: 4

சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இணை வைத்தல் என்பதன் வரையறைகளைச் சென்ற இதழில் சுருக்கமாகப் பார்த்தோம். இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல் இணை கற்பிக்கின்ற காரியமாகும் என்பதையும் அதற்குரிய சான்றுகளையும் பார்த்து வருகின்றோம்.

சிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம், சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல், உருவப்படங்களை வரைதல், உருவப்படங்களை மாட்டி வைத்தல், சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.

நபியவர்கள், “இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே” என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது. மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும், தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.

சமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது.

அதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும். இது பற்றி விரிவாகக் காண்போம்.

பள்ளிவாசல் என்றால் என்ன?

இன்றைக்கு முஸ்லிம்கள் பாங்கு சொல்லி ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றும் இடத்திற்குப் பள்ளிவாசல்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டைக் கண்டித்து உரையாற்றும் போது நாம் “யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தங்களின் நபிமார்களின் சமாதிகளையெல்லாம் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர்” என்ற ஹதீஸைக் குறிப்பிடும் போது தர்ஹா வழிபாட்டை ஆதரிப்பவர்கள், “நாங்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை. பள்ளிவாசல்களில் பாங்கு கூறுவார்கள். நாங்கள் சமாதிகளில் பாங்கு கூறவா செய்கிறோம்? பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழுகிறார்கள். நாங்கள் சமாதிகளில் ஜமாஅத்தாகத் தொழவா செய்கின்றோம்?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். களியக்காவிளை விவாதத்தின் போது கூட சில கோமாளிகள் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்தனர்.

பள்ளிவாசல் என்றால் என்ன? என்பதைத் திருக்குர்ஆன் ஒளியில் நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுப்பது என்றால் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பள்ளிவாசல் என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கும் வார்த்தைக்கு அரபியில் “மஸ்ஜித்’ என்பதே மூலச் சொல்லாகும். “மஸ்ஜித்’ என்றால் பணியுமிடம் என்று பொருளாகும். அது போன்று தலையை பூமியில் வைத்து ஸஜ்தா செய்யுமிடம் என்றும் பொருள்படும்.

அதாவது அல்லாஹ்வாகிய ஒரே இறைவனை எவ்வாறு பணிய வேண்டும் என்பதை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இவ்வாறு பணிவதற்காகக் கட்டப்படும் ஆலயத்திற்குப் பெயர் தான் “மஸ்ஜித்’ அதாவது பள்ளிவாசல் ஆகும்.

இதன் காரணமாகத் தான் கஅபாவைக் கட்டுமாறு இபுறாஹிம் நபியவர்களுக்கு இறைவன் கட்டளையிடும் போது பின்வருமாறு கூறுகிறான்.

“எனது ஆலயத்தை தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 22:26)

தவாஃப் (கஅபா ஆயத்தை மட்டும்) செய்தல், நிலையில் நிற்பது, குனிதல், ஸஜ்தா செய்தல் போன்று இறைவனுக்குப் பணிவைக் காட்டும் செயல்களைச் செய்வதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் தான் பள்ளிவாசலாகும்.

மேலும் இறைவனை உயர்த்தி அவனுடைய பெயர்களை “திக்ர்’ நினைவு கூர்வதற்காக எழுப்பப்படும் ஆலயமும் பள்ளிவாசலாகும்.

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். (அல்குர்ஆன் 24:36)

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 22:40)

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழை யும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)

மேற்கண்ட வசனங்களில் இறைவனுடைய பெயர்கள் காலையிலும் மாலையிலும் எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஆலயமே பள்ளிவாசல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

மேலும் பிரார்த்தனை செய்வதற்காக உருவாக்கபட்ட ஆலயமும் பள்ளிவாசலேயாகும்.

எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்எனக் கூறுவீராக! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்! (அல்குர்ஆன் 7:29)

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன் 72:18)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.

(குறிப்பு: இறையில்லம் கஅபா அமைந்துள்ள பள்ளியே மஸ்ஜிதுல் ஹராம் ஆகும். மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியே மஸ்ஜிதுந் நபவீ எனப்படுகிறது. ஜெரூசலேமிலுள்ள புனிதப் பள்ளிவாசலே மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1189

மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸிலிருந்து பள்ளிவாசல் என்பதன் அர்த்தத்தை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம்.

இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக்கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும், நன்மையை நாடிப் பயணம் செய்வதற்காகவும் (கஅபா, மஸ்ஜிதுந் நபவீ, அக்ஸா ஆகிய மூன்று மட்டும்) ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.

இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் கட்டளையிடுகின்றான்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன் 72:18)

ஒரு சமாதியை மையமாக வைத்து அதற்குப் பணிவைக் காட்டுவதற்காகவும், அதில் அடங்கியுள்ளவரை திக்ர் செய்து நினைவு கூர்வதற்காகவும், சமாதியில் அடங்கப்பட்டவரிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும், நன்மையை நாடித் தங்குவதற்காகவும் ஒரு கட்டடம் கட்டப்பட்டால் அது சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசலாகும்.

அல்லது சமாதியே இல்லாமல் மனிதனையோ அல்லது இறைவனல்லாத ஏதாவது ஒன்றையோ மகத்துவப்படுத்துவதற்காகக் கட்டப்பட்ட கட்டடமும் பள்ளிவாசலேயாகும்.

அதாவது மேற்கண்ட நோக்கத்தில் இறைவனுக்காக மட்டும் தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் கட்டப்படக்கூடாது.

எனவே யூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர் என்று நபியவர்கள் கூறியதன் கருத்து யூத கிறிஸ்தவர்கள் சமாதிகளில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுதார்கள் என்பதல்ல. பாங்கு என்பதும் ஜமாஅத்தாகத் தொழுதல் என்பதும் நபியவர்களின் உம்மத்திற்கு மார்க்கமாக்கப்பட்டதாகும். நபியவர்களுக்கு முந்தைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது கிடையாது.

அப்படியென்றால் அவர்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள் என்பதன் விளக்கம், இறைவனுக்காக ஆலயங்களை எழுப்பி என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அதே காரியங்களை சமாதிகளுக்காக ஆலயங்களை எழுப்பிச் செய்தார்கள் என்பதேயாகும்.

இதன் மூலம், “பள்ளிவாசலில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுவார்கள். தர்ஹாக்களில் பாங்கு கூறி நாங்கள் ஜமாஅத்தாகத் தொழவில்லை. எனவே நாங்கள் சமாதிகளை பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை. பள்ளிவாசல் வேறு, தர்ஹா வேறு’ என்று கூறுவது போலியான வாதம் என்பதை யாரும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப்  போன்று சமாதிகளை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் தர்ஹாக்கள். நாகூர் தர்ஹாவை நாகூர் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும், பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும் மேலும் ஒவ்வொரு ஊராரும் தங்கள் ஊரின் தர்ஹாக்களை பள்ளிவாசல்கள் என்றும் குறிப்பிடுவதே இதற்குத் தெளிவான சான்றாகும்.

இவ்வாறு சமாதிகளைப் பள்ளிவாசல்களாக்கிய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றியும் அவ்வாறு நபியவர்களின் உம்மத்துகள் செய்து விடக்கூடாது என்பதையும் நபியவர்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் சாபம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்தி-ருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத்தூதர்கüன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 436

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்என்று கூறுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925

நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள், நபியவர்களைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தமது கடைசிக் காலத்தில்) நோயுற்றிருந்த போது, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் அடக்கவிடமும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1390

நபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்கு பணிதல். அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு அதனை வணக்கத்தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப்படவில்லை. இன்றளவும் நபியவர்களின் கப்ரை அது வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.

“இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே! என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள்” என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும் ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்

உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 918

கப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை வணக்கதலமாக்குவதாகும்.

இன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப்படுத்துகிறது.

கப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது

இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.

அப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா? என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.

இது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது பிற்காலங்களில் கப்ரை பள்ளிவாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம்.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ தடை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610

சாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்தெறியுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்), நூல்: முஸ்லிம் 1764

நபியவர்களின் பார்வையில் சமாதிகள்

கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1430)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1768, 1769)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறையையும் குளியலறையையும் தவிர

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: அஹ்மத் (11801)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: அபூ தாவூத் (1746)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் சமாதிகளை, தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

சபிக்கப்பட்ட பெண்கள்

கப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (976)

பெண்கள் என்றாவது ஒருநாள் மறுமை சிந்தனைக்காக பொது மையவாடிக்குச் சென்று விட்டு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் கப்றுகளுக்கு அதிகமாகச் செல்லும் பெண்களை நபியவர்கள் சபித்திருக்கின்றார்கள்.

சமாதிகள் வணங்குமிடங்களாக மாற்றப்படுவதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள் இவ்வாறு சபித்திருக்கின்றார்களோ என்று நாம் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்று தர்ஹாக்கள் கொடிகட்டிப் பறப்பதற்கு 90 சதவிகிதம் பெண்களே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

கோமாளிக் கூத்து

தமிழகத்தைச் சார்ந்த மவ்லவிகள் சிலர், கப்ருகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குதல் என்றால் ஒரு மய்யித்தை அடக்கி அந்தக் கப்ருக்கு மேல் பள்ளிவாசலைக் கட்டுவது தான் இதன் பொருள் எனக் கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கோமாளித்தனமானது என்பதை நபியவர்களின் வார்த்தைகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1430)

வீடுகளில் மய்யித்துகளை அடக்கம் செய்தால் மட்டும் தான் வீடுகளை கப்ருகளாக மாற்றிவிட்டோம் என்பதல்ல. மாறாக, வீடுகளில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற காரியங்களைச் செய்யாமலிருப்பதும் வீடுகளைக் கப்ருகளாக மாற்றுவது தான். ஏனென்றால் கப்ருகளில் தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது. அவ்வாறு ஒரு வீடு இருக்குமென்றால் அது மண்ணறைக்குச் சமம் என்பதையே நபியவர்கள் விளக்குகிறார்கள்.

அது போன்று தான் “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பள்ளிவாசலில் தான் பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல், ஸஜ்தா செய்தல், நன்மையை நாடி தங்கியிருத்தல் இதுபோன்ற இன்னும் பிற வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவைகளைச் செய்வதற்குரிய இடம் கப்ருஸ்தான் அல்ல. ஒருவன் கப்ருஸ்தானில் இது  போன்ற காரியங்களைச் செய்வான் என்றால் அவன் சமாதியை வணகத்தலமாக, மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டான் என்பது தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

தொடர்: 3

ஸிஹ்ர் – ஒரு விளக்கம்

ஸிஹ்ர் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமா? என்பதைப் பார்ப்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் செய்தி உண்மையானதா? என்பதைப் பார்த்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டது என்பதை ஆதரிக்கும் இஸ்மாயீல் ஸலஃபி கூட நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் வாதிடுகிறார். தம் மனைவியுடன் சேராமலே சேர்ந்தது போன்ற போலித் தோற்றம் ஏற்பட்டதே தவிர அவர்களின் மன நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் இதை மறுக்க முடியாது என்பது தான் அவரது வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டால் அந்தச் செய்தி ஏற்கக் கூடியது அல்ல என்பது தான் அவரது வாதத்திற்குள் அடங்கியுள்ள உட்கருத்து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று அந்த ஹதீஸ் கூறுகிறதா இல்லையா என்பது தான் இப்போது கேள்வி. அந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்பட்டுள்ளது என்பதை இஸ்மாயீல் ஸலபியின் வார்த்தைகளைக் கொண்டே நிரூபித்து விட்டதால் அந்த ஹதீஸ் பொய்யானது என்பது அவரது வாதத்தின் படியே நிரூபணமாகி விட்டது.

சென்ற தொடரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்று நாம் எழுதியது குறித்து இஸ்மாயீல் ஸலபி கூறிய மறுப்பு தவறானது என்பதை விளக்கினோம்.

அதைத் தொடர்ந்து அவர் பின் வருமாறு கேள்விகளை எழுப்புகிறார்.

இப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.

இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம் பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

இந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர்-பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.

நம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை? அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா? அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.

சூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர்ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.

இப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா? குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது இவர், தான் புரிந்து கொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா? இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா? அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா?

எது வலுவான நியாயமான வாதம்? என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆய்வு செய்யும் எந்தத் தெளிவும் இவரிடம் இல்லை என்பதற்கு இவரது இந்த வாதம் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் இவர் குர்ஆன் ஸுன்னாவை விட்டு வெகு தொலைவு சென்று விட்டார் என்பதையும் இந்த வாதம் தெளிவுபடுத்துகிறது. இந்த இடத்தில் இவர் குறிப்பிட்டுள்ள பின்வரும் வாதத்தை முதலில் கவனிப்போம்.

காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா? அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா? எது வலுவான நியாயமான வாதம்?

என்று கேள்வி எழுப்புகிறார். அதாவது முஸ்லிம் அறிஞர்களை நம்பாமல் காஃபிர்களை ஆதாரமாகக் கொள்வது போன்ற தோற்றத்தை இவர் ஏற்படுத்துகிறார்.

காஃபிர்கள் வாதத்தை ஏற்பதா? முஸ்லிம்களின் வாதத்தை ஏற்பதா? என்பது இங்கு பிரச்சனையே இல்லை. காஃபிர்கள் எடுத்து வைத்த வாதத்தை ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு இங்கே இடம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக அது குறித்து காபிர்கள் கேள்வி கேட்டிருப்பார்கள் என்பது காபிர்களின் வாதம் அல்ல. மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளவர்களின் வாதம் தான்.

ஒரு காரியம் நடந்ததா? இல்லையா என்பதை அறிவதற்கான வழிமுறைகளில் விளைவுகளை வைத்துச் சிந்திப்பதும் ஒன்றாகும்.

ஒரு ஊரில் அணு குண்டு போடப்பட்டதாக ஒரு செய்தி கிடைக்கிறது. ஆனால் அந்த ஊரில் எந்த மனிதனுக்கோ அல்லது வேறு உயிரினங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கே அணுகுண்டு போடப்படவில்லை. அது பொய்யான செய்தி என்று நாம் முடிவு செய்வோம். அந்தச் செய்தியைச் சொல்பவர் எத்தகைய நம்பகமானவர் என்றாலும் அவ்வூரில் அணுகுண்டு போடப்பட்டது என்பதை நாம் நம்ப மாட்டோம்.

ஏனெனில் அணுகுண்டு போடப்பட்டால் அதனால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று நாம் சிந்திப்பதே காரணம். நல்ல அறிஞர்கள் ஒன்று கூடி அங்கே அணுகுண்டு போடப்பட்டது என்று கூறினாலும் நாம் ஏற்க முடியாது.

அந்த அடிப்படையில் தான் நாம் நமது பல கேள்விகளில் இக்கேள்வியையும் எடுத்து வைத்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் ஒழித்திட இணை வைப்பவர்களும் யூதர்களும் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். எப்படியாவது இவரை வீழ்த்த வேண்டும் என்று சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்தனர். சின்னச் சின்ன தோல்விகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட போதெல்லாம் இவரால் தான் இது ஏற்பட்டது என்று கூறி வந்தனர். ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தப்பட்ட போது அதை எப்படியெல்லாம் முனாஃபிக் கூட்டம் பரப்பியது என்பதை நாம் அறிவோம்.

இப்படியெல்லாம் இவர்கள் தக்க சந்தர்ப்பத்துக்காகக் காத்து கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது அவர்களுக்கு எவ்வளவு அற்புதமான வாய்ப்பு? ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறை விட இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் இது குறித்து யூதர்களோ, முஸ்லிம்களூடன் இரண்டறக் கலந்திருந்த நயவஞ்சகர்களோ எவ்வித விமர்சனமும் செய்யவில்லை. அப்படி எந்த விமர்சனமும் இல்லை என்றால் அப்படி ஒரு மந்திர வேலை நடக்கவில்லை என்பது உறுதி என்பதையும் ஒரு வாதமாக முன் வைத்தோம்.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பட்ட செய்தியையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.

ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இறைத் தூதர்கள் என்பதற்கான சான்றுகள்

இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?’ என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது. (திருக்குர்ஆன் 17:94)

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று கூறினர். (திருக்குர்ஆன் 36:15)

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம். (திருக்குர்ஆன் 26:186)

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக! (என்றும் கூறினர்.) (திருக்குர்ஆன் 26:154)

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 25:7)

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அலிருந்துவதையே இவரும் அலிருந்துகிறார் என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 23:33)

இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா? என்றனர். (திருக்குர்ஆன் 23:47)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். (திருக்குர்ஆன் 21:3)

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத் தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத் தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடையவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக் காட்டுகிறது.

உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 3:184)

இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். (திருக்குர்ஆன் 7:101)

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 35:25)

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். (திருக்குர்ஆன் 10:74)

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம். (திருக்குர்ஆன் 10:13)

அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 40:22)

அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர். (திருக் குர்ஆன் 9:70)

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன். (திருக்குர்ஆன் 64:6)

உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர் கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும். (திருக்குர்ஆன் 40:50)

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம். (திருக்குர்ஆன் 57:25)

இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.

இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

“நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்” என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

“இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்” என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

(இதற்கும் இஸ்மாயீல் பதில் கூறியுள்ளார். அது இதே தொடரின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது)

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்ற தலைப்பில் கூறிய செய்தியுடன் மேற்கண்ட காரணங்களையும் கூறி விட்டுத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்று நாம் வாதிட்டோம்.

முஸ்லிம் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், அவர்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரிந்து விட்டதா என்பதும் இவ்வாதங்களுக்கு உரிய பதிலாகுமா? அதிகமான அறிஞர்கள் (அனைவரும் அல்லர்) இந்த ஹதீஸை அங்கீகரித்துள்ளார்கள் என்றால் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறும் ஹதீஸ்கள் சரியானவை என்று கூறும் அவர்கள் அந்த ஹதீஸ்களில் இல்லாத விளக்கத்தைக் கொடுத்தனர்.

அதாவது ஸிஹ்ர் வைக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலையில் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களுக்கு மனைவிமார்களுடன் உடலுறவு கொள்ள முடியவில்லை. அல்லது உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்களுக்கு உணர்வு ஏற்பட்டது என்று விளக்கம் கூறிக் கொண்டதால் இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்று அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். இஸ்மாயில் ஸலபி இது குறித்து எழுதிய அனைத்தும் அவர்கள் அரபு மொழியில் எழுதியதன் தமிழாக்கம் தான்.

அந்த அறிஞர்கள் கூறும் இந்த விளக்கத்தை நாமும் பார்க்கத் தான் செய்தோம். அதைக் கண்ணை மூடிக் கொண்டு இஸ்மாயீல் ஸலபி எடுத்து எழுதியது போல் நாமும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இவர்கள் விளங்கியது போல் விளங்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என்று சிந்தித்தோம். ஹதீஸ்களின் வாசகத்தில் இருந்து பெற முடியாத தங்களின் விருப்பத்தைத் தான் விளக்கமாகக் கொடுத்துள்ளனர் என்று நாங்கள் அறிந்தோம்.

எந்த விளக்கத்தை யார் கொடுத்தாலும் அந்த விளக்கம் அந்த ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாக இருந்தால் தான் நாம் ஏற்க முடியும். இது தான் தவ்ஹீதின் அடிப்படை.

மதஹபுவாதிகள் மத்ஹபுக்கு ஆதாரமாகச் சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டுவார்கள். ஆனால் அந்த வசனங்களில் இல்லாத கருத்தை அதில் திணித்திருப்பார்கள் என்பதை நாம் அம்பலப்படுத்தியுள்ளோம். அது போல் தர்கா வாதிகளும் கூட குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவார்கள். இவர்கள் கூறும் கருத்து அந்த வசனங்களில் இல்லை என்று அப்போது நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

அதே போல் தான் இந்த விஷயத்தில் அறிஞர்கள் கூறிய கருத்தையும் அணுக வேண்டும். அதிகமான அறிஞர்களின் கருத்து என்று அணுகக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. உடலுறவு கொள்ளாமலெ உடலுறவு கொண்டதாக சில அறிவிப்புக்கள் கூறுகின்றன. அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைத்தார்கள் என்று பல அறிவிப்புக்கள் கூறுகின்றன. இதைச் சென்ற தொடரில் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். இன்னும் சில அறிவிப்புக்களில் சூனியத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் வேதனை ஏற்பட்டதாகவும் கூறுகின்றன.

1

எந்த ஹதீஸை இவர்கள் சரி என்று கூறுகிறார்களோ அந்த ஹதீஸ் இவர்கள் கூறும் கருத்தில் இருக்கவில்லை எனும் போது எப்படி இவர்கள் கூறும் விளக்கத்தை ஏற்க முடியும் என்பது தான் இங்குள்ள கேள்வி. அதிகமான அறிஞர்கள் ஆதரித்துள்ளார்களா என்பது இங்கே கேள்வி அல்ல. அதிகமான அறிஞர்கள் ஆதரிக்கும் இந்த ஹதீஸ்கள் நபிகள் நாயகம் ஸிஹ்ர் மூலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று தெளிவாகக் கூறும் போது அதில் இல்லாத கருத்தை அறிஞர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக ஏற்க முடியுமா?

அன்னியப் பெண்ணிடம் இளைஞர் ஒருவருக்குப் பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸையும் பொய் என்று நாம் கூறினோம். அந்த ஹதீஸையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறி இருக்கிறார்கள். ஆனால் அது குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை இஸ்மாயீல் ஸலபியால் பதில் சொல்ல முடியவில்லை.

எல்லா அறிஞர்களும் இதைச் சரி கண்டு விட்டதால் அனைவருக்கும் மாற்றமாக ஒருவர் கூறுவதை ஏற்க முடியுமா என்று இவரால் கேட்க முடியவில்லை. அந்த அறிஞர்கள் எல்லாம் பால்குடி விஷயத்தில் எங்கே போனார்கள்?

இன்னும் நாம் பட்டியல் போட்ட பல ஹதீஸ்களையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறியுள்ளனர். ஆனால் நாம் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. அது போல் தான் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸிலும் அவர்கள் தவறாகக் கூறி விட்டார்கள் என்று கூறுகிறோம்.

ஒருவரும் சொல்லாவிட்டாலும் அந்தக் கருத்து சரியாக இருக்கிறதா என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். ஆனால் ஒருவருமே சொல்லாத கருத்தை நாம் கூறுவதாக இவர் சொல்வது கூட உண்மை இல்லை.

ஏனெனில் காரிஜிய்யாக்களாகவும், முஃதஸிலாக்களாகவும் இல்லாத பல அறிஞர்கள் நாம் கூறிய கருத்தை முன்னரே கூறியும் இருக்கிறார்கள்

2

ஸிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. இது வெறும் கற்பனை மட்டுமே. இதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ ஜஃபர் அல் இஸ்திராபாதீ, ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூபக்ர் ராஸீ, இப்னு ஹஸ்ம் அள்ளாஹிரி, மற்றும் சிலர் இவ்வாறு கூறுகின்றனர். ஸிஹ்ருக்கு உண்மைத் தன்மை உள்ளது என்பதே சரியான கருத்து என்று நவவீ கூறுகிறார். பெரும்பாலோர் இதை உறுதிப்படுத்துகின்றனர். அதிக உலமாக்களும் இக்கருத்திலேயே உள்ளனர். குர்ஆனும் சரியான ஹதீஸ்களும் இதையே அறிவிக்கின்றன

இவ்வாறு ஃபத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். பெரும்பாலானவர்களின் கருத்துக்கு மாற்றமான கருத்துடையவர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.

3

ஸிஹ்ர் என்பதற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்பதில் அபூஹனீபா அவர்களைத் தவிர அனைவரும் கூறுகின்றனர் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எடுத்துக் காட்டுகிறார்.

4

ஸிஹ்ர் என்பதற்கு உண்மைத் தன்மை உள்ளதா? ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது வெறும் மாயையா என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. முஃதஸிலாக்களும், அபூ பக்ர் அல்ஜஸ்ஸாஸ்,. அபூஜஃபர், இமாம் பகவீ ஆகியோர் பொய்த் தோற்றம் ஏற்படுத்துவதே ஸிஹ்ர் என்கின்றனர். ஸிஹ்ர் செய்பவன் விஷத்தையோ, புகையையோ ஒருவன் மீது பயன்படுத்தினால் அன்றி எந்தக் கேடும் ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனபி மத்ஹபினரின் கூற்றும் இது தான் என்று அறிவிக்கப்படுகிறது என்று இப்னு தைமிய்யா அவர்கள் எடுத்து எழுதுகிறார்கள்.

ஸிஹ்ர் தொடர்பாக முன்னுள்ள அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருக்கவில்லை. அவ்வாறு இருந்ததாக உண்மைக்கு மாறான தகவலை இஸ்மாயீல் ஸலபீ கூறுகிறார்.

சில விஷயங்களில் அதிகமான அறிஞர்களை விட குறைவான அறிஞர்களின் முடிவு சரியாக அமைந்திருப்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எனவே அதிகமான அறிஞர்கள் மடையர்களா என்று கேட்டு வந்த வழியே இஸ்மாயீல் ஸலபீ செல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்ட சில விஷயங்களையும் இஸ்மாயீல் ஸலபி மறுக்கிறார். அவற்றையும் நாம் ஆராய்வோம்.

17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)

நபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.

இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.

இப்படி இருக்க, நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர் எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்?

சூனியம் செய்யப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடக்கப்படவே இல்லை என்று இவர் கூறுகிறார். “இது மக்களுக்குத் தெரியாது; நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்’ என்ற இவரது பதில் சரியில்லை என்பதை சென்ற தொடரில் நிரூபித்து இருக்கிறோம்.

மனைவி சம்மந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இன்றி பொதுவாகவும் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதையும் நிரூபித்து இருக்கிறோம். சூனியம் வைத்த யூதனுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். அவன் மூலம் முழு யூதர்களுக்கும் தெரிந்திருக்காமல் இருக்காது என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். கிணற்றில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று வானவர்கள் சொன்னவுடன் மக்களை அழைத்துச் சென்று அப்புறப்படுத்தினார்கள் என்றால் இது அனைவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்க முடியாது. பல நாட்கள் சூனியத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டார்கள் என்று நஸயீயில் ஹதீஸ் உள்ளது

5

சிந்தித்து விளங்கக் கூடிய எந்த ஒரு விஷயம் பற்றியும் யூகம் என்ற வார்த்த்தையைப் பயன்படுத்துவதை கட்டுரை முழுவதும் இவர் கையாள்கிறார்.

ஒரு வாசகத்துக்குள் அடங்கியுள்ள கருத்துக்களை நாம் வெளிப்படுத்திக் காட்டும் போதெல்லாம் இவர் சொல்லும் ஒரே பதில் யூகம் என்பது தான்.

சீ என்று பெற்றோரைக் கூறக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. பெற்றோரை அடிக்கலாமா என்று ஒருவர் கேட்டால் நாம் கூடாது என்று இந்த வசனத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கலாம். சீ என்று கூறக் கூடாது என்றால் அடிக்கக் கூடாது என்பது அதற்குள் அடக்கம் என்று கூறினால் இது யூகமா? சிந்தனையின் தெளிவா?

இஸ்மாயீல் ஸலபி எதையும் சரியாகச் சிந்திக்காமல் எழுதுவதற்குக் காரணமே அவருக்குச் சிந்திப்பது என்றாலே என்னவென்று தெரியாதது தான்.

ஒருவன் செத்து விட்டான் என்று கூறப்படுகிறது. அவனுக்குக் காது கேட்காது; கண் தெரியாது என்று நாம் கூறினால் “இல்லாததை யூகமாகக் கூறுகிறார்’ என்று இஸ்மாயீல் ஸலபி கூறுவார் போலும்.

ஒரு மாபெரும் தலைவருக்கு மனநிலையும், உடல் நிலையும் சேர்ந்து ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அது நாட்டு மக்களில் ஒருவருக்கும் தெரியாது என்பது வெற்று யூகமா? இது அனைவருக்கும் தெரியாமல் இருக்க முடியாது என்பது வெற்று யூகமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்பது ஹதீஸில் உள்ளது தான். மனைவியுடன் சேர்ந்ததைக் கூட அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இது ஆறு மாதம் நீடித்தது என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இவ்வளவு பெரிய பாதிப்பை உதிர்ந்த முடிக்குள் மந்திரத்தின் மூலம் ஒரு யூதன் செய்திருக்கிறான் என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இது அன்றைய மக்களுக்குத் தெரிந்திருந்தது என்பதும் ஹதீஸில் உள்ளது தான்.

எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நபிகள் நாயகத்தின் மனநிலையைப் பாதிக்கச் செய்து விட்டார்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? வெற்று யூகமா? செய்ததைச் செய்யவில்லை என்று ஆறு மாத காலம் ஒருவர் கூறிக் கொண்டிருந்தால் அவர் முடக்கப்பட்டு விட்டார் என்று கருத்து அதில் இருக்கிறதா? அல்லது வெற்று யூகமா?

அடுத்ததாக அவர் எடுத்து வைக்கும் வாதத்தைப் பாருங்கள்!

அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித் தான் ஹதீஸ் கூறுகின்றது.

இதிலும் அவருக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்பது உறுதியாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் ஆரம்பம் முதலே அறிந்திருந்தார்கள். தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் கூறுவதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை இஸ்மயீல் ஒப்புக் கொண்டுள்ளதை முதல் தொடரில் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் இந்த பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தான் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அது தான் கடைசியில் தெரிந்தது. காரணம் தெரியவில்லை என்பதால் மனநிலை பாதிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா?

இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் மேலே குறிப்பிட்டது தொடர்பாக இன்னும் சில விமர்சனங்களைச் செய்கிறார். அதை அடுத்த இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு           தொடர் – 16

இறந்தவர் உயிர் திரும்புவாரா?

அபூஉஸாமா

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன?

இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம்.

இந்தக் கழிவுகெட்டக் கசடுக் கொள்கையின் வேர்ப்பிடிப்பு எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை. ஷியாயிஸம் என்ற விஷத்தில் தான்.

இந்த விஷத்தின் வேர்ப்பிடிப்பு யூதயிஸம். இது சீயோனிஸ சிந்தனையும் சித்தாந்தமும் ஆகும். அதாவது யூத மதத்தின் சித்தாந்தமாகும். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை!

ஷியாக்களின் “ரஜ்அத்கொள்கை

அப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் தான் ரஜ்அத் எனப்படும் கொள்கையைத் தோற்றுவித்தான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) ஆகியோர் இறுதி நாளுக்கு முன் உயிருடன் திரும்ப வருவர் என்ற விஷக் கருத்தைத் தூவினான். அதன் பின்னர் அலீயுடன் 11 இமாம்களையும் சேர்த்து மொத்தம் 12 இமாம்களும் மறு உயிர் பெற்று வருவார்கள் என்று ஷியா ஷைத்தான்கள் அந்தப் பட்டியலை விரித்துக் கொண்டனர்.

யார் அந்தப் பனிரெண்டு இமாம்கள்?

 1. அபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்
 2. அபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ)
 3. அபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ – ஷுஹதாக்களின் தலைவர்)
 4. அபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்)
 5. அபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்)
 6. அபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் – இவர் தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர்)
 7. அபூஇப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்)
 8. அபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா)
 9. அபூஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்)
 10. அபூஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ)
 11. அபூமுஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி)
 12. அபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)

இந்த 12 என்ற எண்ணிக்கை, யூதயிஸத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த 12 பேரும் திரும்ப உயிர் பெற்று வருவார்கள் என்று சாதாரணமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டி இந்தச் சித்தாந்தத்தை நுழைக்கின்றார்கள்.

இந்த 12 பேரும் இறுதி நாள் வருவதற்குள் திரும்ப வருவார்கள்; திரும்ப வந்து இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியுரிமையை மீட்பார்கள். பறித்தவர்களைப் பழிவாங்குவார்கள்.

இப்படி இவர்களது விஷம சரித்திரம் நீள்கிறது.

ஷியாக்களின் ஆதாரம்

இதற்கு இவர்கள் காட்டுகின்ற ஆதாரங்கள் என்ன?

இவர்களின் முதல் முக்கிய ஆதாரம் 2:243 வசனமாகும்.

இவர்கள் வைக்கும் இரண்டாவது ஆதாரம் 28:85 வசனம்.

மூன்றாவது ஆதாரம் 40:11 வசனம்.

இந்த விளக்கங்களை ஷியாக்களின் குர்ஆன் விளக்கவுரை நூலான தஃப்ஸீர் அல்கிம்மியில் நாம் பார்க்கின்றோம்.

முதல் ஆதாரம்

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். “செத்து விடுங்கள்!என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல்குர்ஆன் 2:243

இது மூஸா (அலை) அவர்களது காலத்தில் அல்லது அவர்களுக்குப் பிந்திய காலத்தில் நடந்த சம்பவம். சுருக்கமாகச் சொன்னால் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு நடந்த சம்பவம். இதே போன்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழவுமில்லை. அவ்வாறு நிகழவும் செய்யாது என்று திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவித்து விட்டது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

திருக்குர்ஆனின் இந்த வசனங்களின்படி, முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் கியாமத் நாள் வரை எவரும் உயிர் பெற்றுத் திரும்ப வரமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

இதில் ஒரேயொரு விதிவிலக்கு உண்டென்றால் இறுதிக் காலத்தில் பெரும் சோதனையாக வரும் தஜ்ஜால், ஒரு மனிதனை உயிர்ப்பிப்பது மட்டும் தான். இதுவும் ஒரு முறை தான் அவனால் முடியும். இரண்டாவது இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதன் பின்னரும் 2:243 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்தவில்லை. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் சிந்தனையைத் தான் ஆதாரமாக நிறுத்துகின்றார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டாவது ஆதாரம்

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். “நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 28:85

இந்த வசனம் குறிப்பிடுவது, மக்காவைத் துறந்து மதீனா சென்ற நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்பதைத் தானே தவிர, இறந்து மீண்டும் உயிர் பெற்று வருவதையல்ல.

மூன்றாவது ஆதாரம்

எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?” என்று அவர்கள் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 40:11

“இரு முறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்” என இவ்வசனம் கூறுகிறது.

இரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒரு முறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் எழுப்புகிறான்.

ஆனால் ஒரு முறை தான் நாம் மரணிக்கிறோம் எனும் போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்?

இதைத் திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது “நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்” என்று கூறுகிறான்.

படைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத் தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்.

இதை ஷியாக்கள் தங்களது 12 இமாம்கள் உயிர் பெற்று வருவார்கள் என்ற கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இந்த வசனமோ குற்றவாளிகளைப் பற்றிப் பேசுகின்றது. இதிலிருந்தே ஷியாக்களின் புரட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த மூன்று ஆதாரங்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல! நிராகரிக்கத்தக்கவை!

நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஷியாக்களின் இந்தக் கொள்கையைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கொண்டிருக்கின்றனர்.

யூத மற்றும் ஷியாயிஸத்தின் கொள்கைகளைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

குத்பிய்யத் என்ற குருட்டு நம்பிக்கை

குத்பிய்யத் என்பது விளக்கை அணைத்துக் கொண்டு, இருட்டில் உட்கார்ந்து முஹ்யித்தீனை ஆயிரம் தடவை அழைத்து திக்ர் செய்வதற்குப் பெயராகும். யாகுத்பா என்ற பாடலில் இது இடம்பெறுகின்றது.

“எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே, யா அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் அழைக்கட்டும்”

இந்த குத்பிய்யத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. தமிழக முஸ்லிம்கள், கேரள முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கும் இது நடைபெறுகின்றது. இந்த குத்பிய்யத்தின் போது முஹ்யித்தீன் ஆஜராகின்றார் என்றே நம்புகிறார்கள். ஆம்! முஹ்யித்தீன் “ரஜ்அத்’ அடிப்படையில் உயிர் பெற்றுத் திரும்ப வருகின்றார் என்றே உறுதியாக நம்புகின்றனர்.

முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பதையும் அவர் வருகையளிக்கின்றார் என்ற நம்பிக்கையையும் தகர்க்கும் விதமாகவே காயல்பட்டிணத்தில் 1985ஆம் ஆண்டில்   முபாஹலா நடைபெற்றது.

இந்த முபாஹலா மூலம், முஹ்யித்தீன் வருகை பற்றிய நம்பிக்கை எந்த அளவுக்கு இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம் ஊடுறுவிப் போய் இருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.

அதே தாக்கம்! அதே ஆதாரம்!

அப்போதைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை அருகிலுள்ள கிளியனூர் அல்மத்ரஸா ரஹ்மானிய்யாவில் அதன் முதல்வர் மறைந்த அப்துஸ்ஸலாம் அவர்களோடு ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது, “குத்பிய்யத் என்ற திக்ரு நடைபெறுகின்றது; அதில் முஹ்யித்தீன் வந்து ஆஜராகின்றார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் இருக்கின்றதா?” என்று கேட்கப்பட்டபோது “ஆம்! அதற்குக் குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கின்றது” என்று அப்துஸ்ஸலாம் சொன்னதும், சரியான ஆதாரம் கிடைக்கப் போகின்றது என்றெண்ணி அருகில் இருந்தவர்கள் பரபரப்புடனும், பரவசத்துடனும் அவரது பதிலை எதிர்பார்த்தனர். அப்போது அவர் பின்வரும் வசனத்தை முன்வைத்தார்.

அதன் ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 2:73)

அதற்கு “நீங்கள் கூறும் இந்த வசனத்தில் – அது கூறுகின்ற நிகழ்வில் – சம்பந்தப்பட்டவர் உயிர் மற்றும் உடலுடன் சேர்த்து வந்தாரா? அல்லது உயிர் மட்டும் வந்ததா?” என்று கேட்டதற்கு அப்துஸ்ஸலாம் (ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றத்திற்கு பிறகு) உயிர், உடலுடன் சேர்த்துத் தான் வந்தார்” என்று பதிலளித்தார்.

“உயிர், உடலுடன் முஹ்யித்தீன் வந்து விட்டால் தான் பிரச்சனையே இல்லையே! முஹ்யித்தீனை நாம் நேரில் பார்த்து நாமே உறுதி செய்து கொள்ளலாமே! பிரச்சனையே அவர் உடல் இல்லாமல் உயிருடன் மட்டும் வருகின்றார் என்பது தான்” என்று   கூறியதும் இதற்கு அப்துஸ்ஸலாம் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

(குறிப்பு: அப்துஸ்ஸலாம் அவர்கள் மரணிக்கின்ற போது தமது மகனாரை நோக்கி, “அவர்களை (தவ்ஹீதுவாதிகளை) தாக்கிப் பேச வேண்டாம். நாம் அபூஹனீபா சொன்னார், அபூயூசுப் சொன்னார் என்று சொல்கிறோம். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் என்று சொல்கின்றனர்’ என்றக் கருத்துப்படக் கூறியுள்ளார்கள்.)

இறந்தவர் இவ்வுலகிற்கு ஒரு போதும் திரும்ப வரப் போவதில்லை என்பதற்குரிய ஆதாரத்தை இன்ஷா அல்லாஹ் நாம் பின்னர் பார்க்கவிருக்கின்றோம்.

நாம் இங்கு பார்க்கவிருக்கும் விஷயம் சுன்னத் வல் ஜமாஅத்தினரிடமும் இருக்கும் “ரஜ்அத்’ கொள்கையைத் தான். இதற்கு ஷியாக்கள் தங்கள் ஆதாரத்தை யூத மதத்திலிருந்து நிறுவுகின்றார்கள். இவர்களும் அதே ஆதாரத்தை, அதே தாக்கத்தில் எடுத்து வைக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிடவே இந்த எடுத்துக்காட்டு!

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

தூதர் வழியில் ஒரு தூய அமைப்பு

எம். ஷம்சுல்லுஹா

தமிழகத்தில் இன்று காளான்கள் போன்று பல்வேறு இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் முளைத்துள்ளன. ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மார்க்கம், அரசியல், சமுதாயம் போன்றவற்றின் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் நேரிய பாதையில் இருப்பதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தாம் நேர்வழியில் செல்வதற்கு எந்த இயக்கத்தில் இணைவது? என்ற ஓர் இக்கட்டிற்கு ஒரு முஸ்லிம் ஆட்பட்டே தீர்வார். அப்போது அவருக்கு ஓர் அற்புத வழிகாட்டியாகத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் திகழ்கின்றது.

என் சமுதாயமே! நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்! எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்என்றும் கூறினார்.

அல்குர்ஆன் 11:88

இது இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள், தமது சமுதாய மக்களை நோக்கிக் கூறிய போதனை!

இந்த உரைக் கல்லில் தவ்ஹீத் ஜமாஅத்தை உரசிப் பார்த்தால் அவருக்கு ஓர் உண்மை புலப்படும்.

இதற்கு வரதட்சணையை எடுக்காட்டாகக் கொள்வோம்.

1980களில் இந்த இயக்கம் வரதட்சணைக் கொடுமையைப் பற்றி மக்களிடம் மிக வீரியமாக எடுத்துச் சென்றது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 4:4

இந்த வசனம் தான் மேடைகள் தோறும் ஆட்சி செலுத்தியது. வரதட்சணைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மூட்டிய தீ தமிழகமெங்கும் பற்றிப் பரவ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஆலிம் வர்க்கம், “குர்ஆன் கொடுக்கச் சொல்கின்றது; ஆனால் வாங்காதே என்று சொல்கிறதா? பெண் வீட்டிலிருந்து வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா?’ என்று அறியாமையை வெளிப்படுத்தினர். அப்போது நாம் எழுப்பிய கேள்வி: யாசகம் கேட்பவனுக்குக் கொடுக்கச் சொல்கின்றது; அவனது தட்டிலிருந்து நாம் எடுப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேள்வி கேட்பது எப்படியோ அப்படித் தான் இவர்களது கேள்வி என்று முகத்தில் அறைந்தாற்போல் பதிலளித்தோம். வாயடைத்துப் போனார்கள் உல(க)மாக்கள்.

புடமாக்கிய புறக்கணிப்புக்கள்

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

வரதட்சணை வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அத்தகைய திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது; விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற புறக்கணிப்புக் கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்! அன்றிலிருந்து இன்று வரை அந்தக் கொள்கையிலிருந்து மாறவில்லை. அத்துடன் திருமணம் மிக எளிமையாகவும், மிகச் சிக்கனமாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் போதித்தோம். இன்று வரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் திருமணத்தில் எளிமையிலும் எளிமையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

விளைவு! இன்று ஒரு ஜமாஅத், சமுதாயமாகப் பரிணமித்து நிற்கின்றனர் இந்தக் கொள்கைவாதிகள். இந்தக் கொள்கை கால் ஊன்றி, கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இன்று அடுத்தக்கட்டத் தலைமுறையினர் இந்தக் கொள்கையின்படி திருமணம் முடிக்கின்றனர். எளிமையான முறையில் திருமணம் முடிக்கின்றனர். அதற்குக் காரணம் 11:88 வசனம் தான். இதுபோல் தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள் யாரும் திருமணங்களைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தி பிரஸ்தாபிப்பதில்லை. காரணம், இந்த வசனம் தான்.

மகளின் திருமணத்தில் மார்க்கத்திற்கு மாற்றம்

ஜமாஅத்துல் உலமாவின் முன்னாள் மாநிலத் தலைவர் மறைந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் எளிமையான திருமணத்தைப் பற்றிப் பேசினார். அவர் அந்த உரையில் குறிப்பிட்ட செய்தி இது தான்:

என் நண்பர் ஒருவர் ஹாங்காங்கில் இருக்கிறார். அவர் தன் மகனுக்குத் திருமணம் முடித்த போது, வெறும் ரோஸ் மில்க் மட்டும் கொடுத்து திருமணத்தை நடத்தினார். எனக்கு அந்தக் கல்யாணம் மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்று எளிமைத் திருமணங்கள் நடந்தால் பெண்கள் தேங்க மாட்டார்கள்.

இதுதான் அவர் ஆற்றிய உரையின் கருத்துச் சாரம்! இப்படிப் பேசிய அவர், தனது மகளுக்கு மாங்குடி என்ற ஊரில் திருமணம் நடத்தினார். மணமகன் தப்ஸ் முழக்க ஊர்வலத்துடன் பள்ளிவாசலை நோக்கிப் பவனி வந்தார். தமிழகமெங்கும் உள்ள அவரது விசுவாச உலமா பரிவாரங்கள் படையெடுத்து வந்திருந்தனர். மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். நானும் அழைக்கப்பட்டு ஓர் அன்பளிப்புடன் சென்றிருந்தேன். அது ஜமாஅத்துல் உலமாவை விட்டு நாங்கள் வெளிவராத காலம். தவ்ஹீதுக் கருத்து எங்களிடம் குருத்து விட்டு முளைத்துக் கொண்டிருந்த காலம். என்னுடைய சக்திக்கு, பெரிய எவர்சில்வர் ஸஹ்னை வைத்துக் கொண்டு, அதை ஷம்சுல்ஹுதாவிடம் கொடுப்பதற்குக் காத்திருந்தேன். அன்பளிப்புகளை வாங்குவதற்குக் கூட அவரால் முடியவில்லை. அந்த அளவுக்கு பிஸி!

சொல் ஒன்று! செயல் வேறு!

கடைசியில் ஒருவாறாக அவரது கையில் அன்பளிப்பைக் கொடுத்து விட்டு வெளியே வந்தேன். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பொதுமக்களிடம் எதைப் போதித்தாரோ அதை அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் செயல்படுத்த முடியவில்லை. இது அழைப்பாளனுக்குரிய பண்பல்ல! மார்க்க அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குரிய பண்புமல்ல!

இப்படிப்பட்டவர்கள், இத்தகைய அமைப்புகள் தவறான வழியில் இருக்கிறார்கள் என்பதற்கு ஷுஐப் (அலை) அவர்களின் இந்த வாதம் சிறந்த உரைகல்லாகும்.

விடியலும் வைகறையும்

திருமணம் என்பது ஓர் அழைப்பாளனின் தூய பிரச்சாரத்தின் நுழைவு வாயில்! தலை வாயில்! அதில் தலை தட்டியவர்கள் ஒருபோதும் அழைப்புப் பணியில் ஈடுபட முடியாது. இன்னும் ஒரு சில அழைப்பாளர்கள் வெளியூரில் எடுபடுகின்றனர். உள்ளூர் வட்டாரத்தில் எடுபடவில்லை, செல்லுபடியாகவில்லை. காரணம் வரதட்சணை வாங்கியது தான். சரி! தான் வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்து சரி செய்து விட்டால், அவர்கள் தங்கள் மகன், மகள் திருமணத்தில் சரியாக நடக்க வேண்டும். அதிலும் சறுகினால் இந்தச் சத்தியப் பிரச்சாரப் பாதைக்குச் சற்றும் தகுதியற்றவர்களாகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத் தன் பயணத்தின் ஊடே பல்லாயிரம் இளைஞர் பட்டாளத்தை வசப்படுத்தியது; வசீகரித்தது. இந்தப் பட்டாளத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக தஸ்கியா, பைஅத், ஜிஹாத் என்ற பல அடுக்குகளை வைத்து இந்த இயக்கத்திலிருந்து சில இளைஞர்களைக் களவாடிச் சென்றனர் அன்றைய விடியல், இன்றைய வைகறை! இதன் தலைவர் சறுக்கியது திருமண விவகாரத்தில்! அவரது அமைப்பினராலேயே சகிக்க முடியாமல் கசக்கி வெளியே வீசப்படுகின்றார்.

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற சிக்கலில் மாட்டவில்லை. காரணம், இந்த இயக்கமே ஷுஐப் (அலை) அவர்கள் கூறிய அந்த மந்திரத்தை வேதமாகக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழகத்தில் மூலை முடுக்குகள் தோறும் படை, பற்று போல் படர் தாமரையாகப் பெருகி வரும் இயக்கங்களுக்கு மத்தியில் எந்த இயக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினாலும் அவர் அந்த இயக்கத்தை 11:88 என்ற சோதனைக்குழாயில், உரைக் கல்லில் போட்டுப் பரிசோதனை செய்து பார்க்கட்டும். அந்தப் பரிசோதனையில் பழுதின்றி பாதிப்பின்றி இந்த இயக்கம் தான் வெற்றி பெறும்.

போக்காகிப் போன ஜாக்

இங்கு ஒரு சந்தேகம் எழலாம். அப்படியானால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தோற்றுவித்த ஜாக் இயக்கத்தின் கதை என்ன? என்று கேட்கலாம். பெண் வீட்டு விருந்தை ஜாக் பகிரங்கமாக ஆதரித்து, தான் கிளம்பிய ராஜபாட்டையை விட்டு மாறிச் சென்று விட்டது. ஷுஐப் (அலை) கூறும் அந்த அளவுகோலில் இந்த அமைப்பு நிலைக்கவில்லை; நிலை மாறி விட்டது.

திருமண சம்பந்தங்கள் விஷயத்தில் அந்த அமைப்பின் தலைவர்களிடம் தவ்ஹீது முதன்மை அளவுகோலாகப் பார்க்கப்படவில்லை என்பதை அவர்கள் நடத்திய திருமணங்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் கிருபையால் இந்தத் தவ்ஹீது ஜமாஅத் மட்டும் தன் நிலைப்பாட்டில் பிழைபாடின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. திருமணம் என்பது இங்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கணக்கில் அலசப்படுகின்றது.

சமூக அந்தஸ்து, பந்தா, சுய விளம்பரம், பணம் அத்தனையும் வெளிக்காட்டும் தலமாகவும், களமாகவும் திருமணம் அமைவதால் இதில் பலர் வழுக்கி விடுகின்றனர். தான் செய்த பிரச்சாரத்திற்கு நேர் மாற்றமான செயல்பாட்டைத் திருமணத்தில் காட்டி, 11:88 வசனம் கூறும் உன்னத பண்பிற்கு உலை வைத்து விடுகின்றனர். அதனால் தான் திருமணத்தை மையமாக வைத்து இந்தக் கட்டுரை சுழல்கின்றது.

டமார் டிமார் பார்ட்டிகள்

இன்று புற்றீசல் போன்று என்று சொல்வதை விட சர வெடிகள் போன்று டமார், டிமார், டெமாக்ரெடிக் என்று வெடித்துக் கிளம்பும் இயக்கங்கள் என்று கூடக் கூறலாம். இந்த அமைப்புகளை ஆய்வு செய்ய இந்தப் பரிசோதனைக் குழாய் தேவையில்லை.

இந்த அமைப்பின் கூட்டத்தைத் துவக்கும் போதே வான் அதிரும் வாத்திய இசை முழக்கத்துடன் துவக்குவதிலிருந்து இந்த இயக்கங்களெல்லாம் எடுத்து எடுப்பிலேயே தூக்கி எறிய வேண்டியவை என்று விளங்கிக் கொள்ளலாம்.

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்… (சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஆமிர் (ரலி)

நூல்: புகாரி 5590, பைஹகீ, பாகம்: 3, பக்கம்: 272

நட்சத்திர விடுதி அழைப்புப் பணி

உடையில் ஷேர்வானி, உணவில் பிரியாணி என்று உள்ள ஒரு மேல்தட்டு அமைப்பின் நட்சத்திர விடுதி அழைப்புப் பணியினர் மாநாடு நடத்துகின்றனர். இவர்கள் கப்ர் வணக்கத்தைக் கண்டித்துப் பேசுவதை, கூவத்தை வாயில் போட்டுக் கொப்பளிப்பது போன்று கருதுவர். இவர்கள் பேசுவதெல்லாம் இஸ்லாமிய ஆட்சி, அதிகாரம், இஸ்லாமிய அரசியல் சாசனம் என்ற உயர்மட்டப் பேச்சுக்கள் பேசுவர். ஷிர்க், இணை வைத்தல் எல்லாம் இவர்களுக்கு சாதாரண விஷயம். அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆனால் ஜனநாயகத்தை இணை வைப்பு என்று பேசுவார்கள்.

இந்த நட்சத்திர விடுதி அழைப்பாளர்கள் சமீபத்தில் நடத்திய ஒரு மாநாட்டில், தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பாலியல் குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்ட பலான ஆசாமிக்கு மேடையைப் பகிர்ந்து கொடுத்தனர். இந்த ஒன்று போதும், இவர்களின் அழைப்புப் பணியின் இலட்சணத்தைப் பார்ப்பதற்கு!

ஒழுக்க மாண்பு என்று இந்த அமைப்பினர் பேசுவது எல்லாம் வெறும் வார்த்தை ஜாலமும் ஒய்யாரமும் தான் என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ளலாம். இவர்கள் 11:88 வசனம் கூறும் வரையறைக்குள் வரமாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமுதாயப் பணியிலும் சரியான உரைகல்

இந்த வசனத்தில் ஷுஐப் (அலை) அவர்களின் சூத்திரம் சத்தியப் பிரச்சாரப் பணிக்கு மட்டுமல்ல! சமுதாயப் பணிக்கும் இது தான். சத்தியப் பணிக்கு ஓர் உரை கல், சமுதாயப் பணிக்கு வேறோர் உரை கல் என்பது கிடையாது.

சமுதாயப் பணிக் களத்தில்,

எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்; தேர்தலில் போட்டியிட மாட்டோம்; வாரியம் கோர மாட்டோம்; வேறெந்த அரசுப் பதவியும் கேட்க மாட்டோம் என்று மக்களிடம் வாக்குக் கொடுத்தோம். இந்த வாக்குறுதியை மீறினால் உங்களிடம் வந்தால் எங்களை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் முழங்கினோம்.

அந்த வாக்குறுதியில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று வரை நிற்கின்றோம். கேட்டும், கேட்காமலும் சிறிய, பெரிய பதவிகளுக்கான சூழல் பிரகாசமாக இருந்தும் நெருப்பு போல் அவற்றைக் கண்டு நமது ஜமாஅத்தினர் ஒதுங்கினர்; ஓடினர். இதற்கு அடிப்படைக் காரணம் திருக்குர்ஆனின் 11:88 வசனம் தான்.

காரணம், நாம் சொல்வது தூதுச் செய்தி எனும் தூய பணி! அந்தப் பணிக்கு எந்தக் குந்தகமும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.

இப்படி ஒரு தூய்மையைக் கடைப்பிடிக்கும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! இதற்கு வெளியில் இருப்போர் இம்மை, மறுமையில் வெற்றி பெறத் தேர்வு செய்ய வேண்டிய அமைப்பு இந்த அமைப்பு தான் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்த அமைப்பின் உள்ளே இருப்பவர்கள், இது தான் நாம் இருப்பதற்குச் சிறந்த அமைப்பு, இதை விட்டு வெளியில் சென்றால் நாம் காணாமல் போய்விடுவோம், கொள்கைச் சூனியமாகி விடுவோம் என்பதை உணர வேண்டும்.

————————————————————————————————————————————————

சென்ற இதழ் தொடர்ச்சி…

தாடி – ஓர் ஆய்வு

இப்னு உமரின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?

அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல்: புகாரி 5892

இப்னு உமர் (ரலி) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.

இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக் காட்டாமல் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம் உள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை. ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக் கூடாது என்பதே நமது வாதம்.

தாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும், தவறானது என்றும் கூறுகிறார்கள்.

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.

குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.

சிக்கல்களை உருவாக்கும் கருத்து

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றனது. இவர்கள் என்ன செய்வது? என்று கேட்டால் மாற்றுக் கருத்தில் இருப்பவர்களிடம் முறையான எந்தப் பதிலும் இல்லை. மேலும் தாடியைப் பொறுத்த வரை அது ஒரே அளவில் சீராக வளர்வதில்லை. ஓரிடத்தில் அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம் குறைவாகவும் வளரும்.

தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியைச் சரி செய்ய முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும்.

பொருத்தமற்ற ஆதாரங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக் கொண்டு வருகிறார். இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாகக் கருதும் வசனத்தையும் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார்.

விபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையைப் பார்த்தவுடனே இவரது கருத்துக்கும் இவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

தாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிற்கு ஆதாரம் காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை.

மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7288

ஒரு விஷயத்தை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டுவதை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடை செய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள்; ஏற்க முடியாது.

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியைச் சுட்டிக்காட்டி, பின்வருமாறு தன் வாதத்தை வைக்கிறார்.

இந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விடச் சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக் கூடாது என்பது தெளிவு.

ஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர், தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.

ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்குக் கூறிய தவறான விளக்கத்தையும் நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத கருத்தை செருகப் பார்க்கிறார்.

மீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள்.

இந்த உத்தரவுடன் தாடியை வளரவிடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது. அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கி விடாதீர்கள் என்ற தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே கூடாது என்ற தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை.

எனவே தாடியில் கை வைக்கக் கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

அடுத்து இவர் தனது வாதத்திற்குச் சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன் (அலை) அவர்களின் தாடி, பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது; நபி (ஸல்) அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்கும் பெரிதாக இருந்தது; மழை நீர் அத்தாடியில் வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது; ஓதும் போது அசையும் அளவிற்குப் பெரிதாக இருந்தது; நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி தாடியை வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார்.

தாடியில் கை வைக்கக் கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக் காட்டிய ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக்கூடாது என்ற கருத்து அடங்கியிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

இவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படி கூற முடியும்? இவர்கள் தாடியை வெட்டியும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக் கூடாது என்று இவர் கூறுவது ஏற்புடையதல்ல.

ஒரு பேச்சிற்கு இவர்கள் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள், நபித்தோழர்கள், இஸ்லாத்தின் எதிரி அபூஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக் கூடாது என்று இதிலிருந்து சட்டம் எடுக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது.

“தாடியை வெட்டித் தான் ஆக வேண்டும்; பெரிதாக வைக்கக் கூடாது; தாடியை பிடிக்கும் அளவிற்கு வைக்கக் கூடாது’ என்று நாம் கூறவில்லை. இப்படிக் கூறினால் தான் மேற்கண்ட ஆதாரங்களைக் காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற முடியும்.

ஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ப்பதும் அவரவர் விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம்.

எனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைப்பாட்டிற்கு எதிரானைவை அல்ல. மாறாக, தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு இவை சான்றுகளாக உள்ளன.

ஹதீஸ்களிலிருந்து எவ்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர் அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்குச் சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம் கூறியுள்ளார்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை மட்டும் தடை செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களில் அவர்கள் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். இப்போது ஒரு அறிவாளியின் முடிவு எப்படி இருக்க வேண்டுமென்றால் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததைத் தவிர்த்து மற்ற அனைத்தும் அனுமதியாகும். நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றைத் தனது விருப்பப்படி தேர்வு செய்துள்ளார்கள் என்றே இருக்க வேண்டும்.

ஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைப்பாடு தவறு என்று கூறுவோம்.

ஏனென்றால் எது தடை செய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்கள் இடும் தடையின் மூலமே அறிய முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின் செயலின் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருப்பதை மட்டும் வைத்து மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டது என்று முடிவு செய்யக் கூடாது.

உதாரணமாக வேட்டியை தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால் தெரியும் அளவிற்குக் கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181வது ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால் இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூற மாட்டோம். கரண்டை வரை ஆடை உடுத்திக் கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும் உடுத்தலாம் என்றே கூறுவோம்.

மேலும் காவி நிற ஆடையை ஆண்கள் உடுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் அணியக் கூடாது என்று கூற மாட்டோம்.

இதே போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள் தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.

நபி (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம்.

இதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியை பிடிக்கும் அளவுக்குப் பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று, ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாகக் கூறிவருகிறார்.

தலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா?

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். “(சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள்என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: நஸயீ 4962

தாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம் குறிப்பிடுவதுண்டு. மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப் பற்றிப் பேசப்படவில்லையே? எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும்? என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம் எதற்கு சுட்டிக் காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியைக் கேட்டுள்ளார்.

மேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு யாராலும் கூற முடியாது. மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான ஹதீஸாகும். இந்த ஹதீஸிலிருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம். இவர் கூறுவது போல் தலை முடி தொடர்பான ஹதீஸிலிருந்து அல்ல.

தாடியை வளர விடுங்கள் என்றால் அதை வெட்டாமல் இருப்பது என்று சிலர் தவறாக விளக்கம் தருகிறார்கள். எனவே அக்கட்டளையின் உண்மையான பொருள் என்ன? அதை எவ்வாறு விளங்கிக் கொள்வது? என்பதை விளக்குவதற்காகவே தலைமுடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம்.

ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை ஒரு காரணத்தை முன்னிட்டு கூறப்பட்டுள்ளது. அதாவது இணை வைப்பாளர்கள் தாடியை மழிப்பதாலும் வேதமுடையவர்கள் தாடியை ஒட்ட நறுக்குவதாலும் அவர்களுக்கு மாறு செய்யும் விதத்தில் வளர விட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை, அதை மழிக்கக் கூடாது, ஒட்ட நறுக்கிவிடக் கூடாது என்ற கருத்தில் தான் கூறப்பட்டுள்ளது என்பதைச் சந்தேகமற உணரலாம்.

இந்த ஹதீஸ் தாடியை வெட்டுவதைப் பற்றி பேசவே இல்லை. அதை மழிப்பதைப் பற்றியும் ஒட்ட வெட்டுவதைப் பற்றியுமே பேசுகிறது. எனவே இந்த ஹதீஸ் எதைப் பற்றி பேசவில்லையோ அந்த விஷயத்திற்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அடிப்படையை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில் கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூற மாட்டோம். ஏனென்றால் தலைமுடியை வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.

இக்கட்டளை எந்தக் காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டது, எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்று பார்க்கிறோம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது.

இதை புரிந்து கொள்வதைப் போன்றே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.

தடுமாற்றங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற நிலைப்பாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைப்பாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அதன் நீளத்தைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் இவரோ கைப்பிடி அளவுக்குத் தாடி, தரையைத் தொடும் வரை தாடி என்று அளவு பார்க்கின்றார். அதிலும் இவரால் எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில் இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளன. இவர் கூறிய பின்வரும் வாசகத்தைக் கவனியுங்கள்.

எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம்.

மேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையைத் தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை தாடி வளர்ந்தாலோ, இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ, முட்டி வரை தாடி வளர்ந்தாலோ, ஏன் கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைக் கவனியுங்கள்.

தாடி என்றால் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என அபூஜஹ்ல் விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை.

அயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம்? அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கித் தான் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்து கொண்டார்?

அவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய நபிவழியை இவர் இணைத்துப் பேசுவதும் நபி (ஸல்) அவர்களை, அயோக்கியன் சங்கராச்சாரியாருடன் இணைத்து மதுரை ஆதீனம் பேசியதும் ஒன்றே!

இவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்டத் தயங்க மாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று தாடிக்கு ஒரு அளவைக் கூறுகிறார்.

நபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்குத் தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

மேற்கண்ட இவரது கூற்றைப் பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் அளவுக்குக் தாடி இருக்க வேண்டும் என வாதிடுகிறார். இவரது இக்கூற்று நமது நிலைபாட்டிற்கு எதிரானதல்ல. தாடி தெரியாத அளவிற்கு ஒருவர் ஒட்ட நறுக்கினாலேயே இந்த நிலை ஏற்படும். இவ்வாறு செய்வது கூடாது என்றே நாம் கூறுகிறோம்.

தரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் ஒரு பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில், பார்த்தால் தாடி தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித் தான் இருக்கும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.

ஆய்வின் சுருக்கம்

தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

தாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால் நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7288

தனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்!