தலையங்கம்
மந்திரத்தால் மாங்காய் காய்க்காது
மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது ஒரு நல்ல பழமொழி.
உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை உழ வேண்டும்; விதை விதைக்க வேண்டும்; நீர் பாய்ச்ச வேண்டும்; நாற்று நட வேண்டும்; இடையே முளைக்கும் களைகளைப் பறிக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்ய வேண்டும். களத்திற்குக் கொண்டு வந்து போரடிக்க வேண்டும். நெல்லிலிருந்து சாவிகளை அப்புறப்படுத்த வேண்டும்; உலற வைத்து உமி நீக்கிய பிறகு தான் உலை அரிசியாக வீட்டுக்கு வரும்.
இது அரிசிக்காக ஒரு மனிதன் செய்கின்ற உழைப்பாகும். அது போன்று மாங்காய் காய்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கவாறு உழைக்க வேண்டும். அதன் பின்னர் தான் மாங்காய் காய்க்கும். உழைப்பின்றி வெறுமனே மந்திரத்தின் மூலம் மாங்காய் கிடைத்து விடாது என்ற முதுமொழி இதைத் தான் உணர்த்துகின்றது. உலகக் காரியங்களுக்கு மட்டுமல்ல! மறுமைக் காரியங்களுக்கும் இது முற்றிலும் பொருந்தும். திருக்குர்ஆன் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.
மூஸா மற்றும் முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும். பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.
அல்குர்ஆன் 53:36-41
உலகக் காரியங்களைப் போன்று தான் மறுமைக் காரியத்தையும் அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். இதற்குப் பொருத்தமாகவே ஏகத்துவத்தை ஒரு மரத்திற்கு ஒப்பாகக் கூறுகின்றான்.
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப் பட்டுள்ளது; அது நிற்காது.
அல்குர்ஆன் 14:24, 25, 26
ஏகத்துவம் என்ற மாங்காய் சும்மா காய்த்து விடவில்லை. மகத்தான உழைப்பு, மாபெரும் தியாகத்தால் இந்த மரம் நாட்டப்பட்டு, ஏகத்துவம் என்ற மாங்காய் காய்த்தது.
பத்ரு, உஹத் என்ற பல போர்களில் நபித்தோழர்களின் இரத்தம் நீராகப் பாய்ச்சப்பட்டு, அவர்களின் உடல்கள் உரமாகப் போடப்பட்டு இந்த மரம் நாட்டப்பட்டது. இது வெறுமனே வளர்ந்து விடவில்லை. மக்கள் தங்கள் உழைப்பைப் பயன்படுத்தினால் தான் இந்த மார்க்கம் வளரும்.
அல்லாஹ்வின் மார்க்கம் தானே! அவன் ஆற்றல் மிக்கவன்; அதை அவன் தானாக முளைக்கச் செய்து விடுவான் என்பது கிடையாது.
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்
அல்குர்ஆன் 13:11
இவ்வாறு விதியை அல்லாஹ் நிர்ணயித்து விட்டான்.
ஓர் ஊரில் மூன்று பேர் தான் ஏகத்துவவாதிகள் என்றால் அந்த மூன்று பேரும் மற்ற மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லியாக வேண்டும். தவ்ஹீது தானாக முளைத்து விடும் என்று அவர்கள் வெறுமனே இருந்து விடக் கூடாது. மூலையில் முடங்கிக் கிடந்து விடக் கூடாது.
அவர்கள் தங்களால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளும் போது அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனியாளாக நின்று இந்த ஏகத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்த போது, அல்லாஹ் அவரை ஒரு சமுதாயமாக்கி அவருக்கு உதவிகள் புரிந்தான்.
எனவே அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உழைக்க மக்கள் முன்வர வேண்டும். உழைக்கா விட்டால் இந்த மார்க்கம் வளராது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.
அல்குர்ஆன் 47:7
அல்லாஹ் மக்களிடம் உதவி கேட்கிறான் என்று இந்த வசனத்தில் கூறப்படுவது அவன் இயலாமையினால் உதவி கேட்கிறான் என்ற கருத்தில் இல்லை.
இந்த மார்க்கத்திற்காக மக்களை உழைக்கச் சொல்கிறான் என்பது தான் அதன் கருத்து. அவ்வாறு உழைத்தால் இந்த மார்க்கத்தை வளர்ப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுவது போன்று அவனது தூதர் (ஸல்) அவர்களும், தோழர்களும் உழைத்தார்கள். அவ்வாறு உழைத்த போது அல்லாஹ் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். அவனது உதவியினால் இந்த மார்க்கத்தை வளர்ந்தோங்கச் செய்தான்.
அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 110வது அத்தியாயம்
நபித்தோழர்களைப் போன்று நாம் உழைக்கவில்லை. தியாகம் செய்திடவில்லை. ஆனாலும் நாம் செய்த ஒரு சிறிய, மிக அற்பமான உழைப்பின் மூலம் இன்று மக்கள் அணியணியாக தவ்ஹீதுக்கு வருகிறார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைத்தால் அல்லாஹ்வின் உதவியும் மிதமிஞ்சிக் கிடைக்கும்.
இந்த உழைப்பின் வேகத்தைக் கூட்டுவதற்காகத் தான் தஞ்சை ஏகத்துவ எழுச்சி மாநாடு!
இது நமது அழைப்புப் பணிக்கு ஓர் எரிபொருள். இந்த எரிபொருளைக் கொண்டு ஏற்றிடுவோம் ஏகத்துவ ஜோதியை தமிழகமெங்கும், இன்ஷா அல்லாஹ்!
மீலாதும் மவ்லிதும்
“உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல்: புகாரி 3456
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்லிம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவக் கலாச்சாரமாகும். இது இஸ்லாமியக் கலாச்சாரம் கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை.
இது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றால், நன்மையான காரியம் என்றால் நன்மையில் எல்லா வகையிலும் முந்திச் சென்ற நபித்தோழர்கள் மற்றும் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
“உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.
நூல்: புகாரி 2651
சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்ன பிற கட்டளைகள் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.
வழிபாடல்ல! வழிகேடே!
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்‘ என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்‘ என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ வாக்கிதுல் லைசி
நூல்கள்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892
மீலாது விழா, நினைவு நாள் போன்றவை யூத, கிறித்தவ, இணை வைப்பாளர்களின் கலாச்சாரம் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் இல்லை. இவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படிப் பின்பற்றினால் அவர்கள் யூத, கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தானே ஒழிய முஸ்லிம்கள் கிடையாது. இதையும் நபி (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸிலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
“பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)
நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார்
இந்த ஹதீஸின்படி மவ்லிது ஓதுபவர்கள், மீலாது விழா நடத்துபவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு ஒருவர் மவ்லிது ஓதுகிறார் என்றால், மீலாது விழா கொண்டாடுகிறார் என்றால் அவர் மறுமையில் கடுமையான தண்டனையைச் சந்திக்க நேரிடும்.
மவ்லிது, மீலாது என்பதெல்லாம் வணக்கம் என்ற அடிப்படையில் நடத்தப்படுகின்றது. இதற்கு நன்மை கிடைக்கும் என்று நம்பியே முஸ்லிம்கள் இதைச் செய்கிறார்கள். வணக்கம், நன்மை இவையெல்லாம் நபி (ஸல்) அவர்களால் இந்தச் சமுதாயத்திற்குக் கற்றுத் தரப்பட்டு விட்டது.
மவ்லிது நன்மை என்றால் நபியவர்கள் அதைக் காட்டித் தந்திருக்க வேண்டும். அவ்வாறு காட்டித் தரவில்லையெனில் தம்முடைய தூதுச் செய்தியை அவர்கள் சரியாக மக்களிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நன்மையையும் இந்தச் சமுதாயத்திற்குக் காட்டித் தராமல் செல்லவில்லை; எந்த நன்மையையும் சொல்லாமல் விடவில்லை.
நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, பிறர் செய்து அதை அங்கீகரிக்காத எந்தக் காரியத்தை, வணக்கம் என்ற பெயரில் யார் செய்தாலும் அது வழிபாடு கிடையாது. வணக்கம் கிடையாது. அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
இந்த ஹதீஸின் அடிப்படையில் மவ்லிது என்ற போலி வணக்கம் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் வணக்கமாகும். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவாக விளக்கி விடுகின்றது.
நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
நல்ல நோட்டும் கள்ள நோட்டும்
இதற்குச் சிறந்த ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். இன்று இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கின்றது. அந்த நோட்டுக்கள் தான் நல்ல நோட்டுக்கள். இந்த நோட்டை அச்சடிப்பது என்ன பெரிய சீமை வித்தையா? நானும் நோட்டடிக்கிறேன் என்று ஒருவன் தாராளமாக அடிக்கலாம். ஆனால் இந்த நோட்டை வெளியிட்ட மாத்திரத்திலேயே சிறையில் அடைக்கப்படுவான். அரசாங்கம் தாளில் தான் அச்சடித்தது. இந்த ஆசாமியும் தாளில் தான் அச்சடித்தான். அரசாங்கம் அடித்தால் நல்ல நோட்டு; இந்த ஆசாமி அடித்தால் கள்ள நோட்டு என்றாகிறதே, ஏன்?
ஏனென்றால் அரசாங்க நோட்டு என்பது அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அடிக்கப்படுகின்றது. அதனால் அது நல்ல நோட்டு! அரசாங்க உத்தரவு இல்லாமல் அச்சடித்தால் அது கள்ள நோட்டு!
மார்க்கத்தின் அதிபதி அல்லாஹ் தான். அல்லாஹ்வோ, அவனது தூதரோ அனுமதிக்காத எந்த வணக்கமும் நிராகரிக்கப்படும். இதன் அடிப்படையில் மவ்லிது, மீலாது விழாக்கள், ஊர்வலங்கள் அனைத்தும் இதைச் செய்தவரின் முகத்திலேயே தூக்கி வீசி எறியப்படும் என்பதையே இந்த ஹதீஸ்கள் காட்டுகின்றன. காரணம், அவை கள்ள நோட்டுக்கள்.
தடாகத்தை விட்டும் தடுக்கப்படுதல்
இத்தனையையும் தாண்டி ஒருவர் மவ்லிது ஓதுகின்றார், மீலாது விழா கொண்டாடுகின்றார் என்றால் அவருக்கு மறுமையில் இரண்டு விதமான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று சொல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6585
மவ்லிது ஓதுபவர்கள் தங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்கும், ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தான் ஓதுகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸின்படி இவர்கள் தடாகத்தை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
சூரியன் தலைக்கு மிகவும் அருகில் கொண்டு வரப்பட்டு, வியர்வை வெள்ளத்தில் மூழ்கி, தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு, தடாகத்தில் உள்ள தண்ணீர் மட்டும் தான் விமோசனம். ஆனால் இந்தத் தண்ணீர் தடாகத்தை விட்டும் மவ்லிது, மீலாது கோஷ்டியினர் நிச்சயமாகத் தடுக்கப்படுவார்கள் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மார்க்கத்தில் இல்லாததைப் புகுத்தியவர்கள் என்ற அடிப்படையில் இது இவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான தண்டனையாகும்.
மார்க்கத்தில் புதிய வணக்கத்தைப் புகுத்தியதற்கு வேறு என்ன தண்டனை? தடாகத்தை விட்டுத் தடுக்கப்பட்டு விட்டால் அத்துடன் கதை முடிந்து விடுவதில்லை.
ஷஃபாஅத் கிடைக்கும் என்று நம்பி மவ்லிது ஓதும் இவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கிறது. இப்படி சாபத்தைப் பெற்ற இவர்கள் எப்படி சுவனம் செல்ல முடியும்? நரகம் தான்.
“செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
இதன்படி மார்க்கத்தில் மீலாது, மவ்லிது போன்ற புது வணக்கங்களைச் செய்வோருக்கு நரகமே தண்டனையாகக் கிடைக்கிறது.
இதல்லாமல், நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கிய பாவத்திற்காகவும் நரகம் தண்டனையாகக் கிடைக்கிறது. அதுவும் நிரந்தர நரகம் கிடைக்கிறது.
மவ்லிதுப் பாடல்களில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதை வரிகள் இடம் பெறுகின்றன.
நீங்களே பாவங்களை மன்னிப்பவர்
அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.
தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீங்களே!
சிரமங்களை நீக்கக் கூடியவரும் நீங்களே!
நன்மைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளவரே!
உயர்ந்த மதிப்புடையவரே! என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்.
இவை அனைத்தும் சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் கவிதை வரிகள். இது போன்ற ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ளன.
முஹம்மத் (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் இந்தக் கவிதை வரிகளைப் படிப்பவருக்கு மறுமையில் என்ன நிலை?
“மர்யமின் மகன் ஈஸாவே! “அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!‘ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். “நீ எனக்குக் கட்டளையிட்ட படி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!‘ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.”
அல்குர்ஆன் 5:116, 117
மறுமை விசாரணையின் போது, தம்மைக் கடவுளாக்கியது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று ஈஸா (அலை) அவர்கள் பதிலளிக்கிறார்கள். இதே பதிலைத் தான் நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள் என்று புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் (மறுமை நாளில் கா-ல்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு பிறகு, “நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்” (21:104) என்னும் இறை வசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். “இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்” என்று (அவர்களை விட்டுவிடும் படி) நான் கூறுவேன். அப்போது, “நீர் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததி-ருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறப்படும். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா அலை அவர்கள்) கூறியதைப் போல், “நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்னும் (5:117-118) இறை வசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3349
அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட்டு, அடியார்களை, அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையே கடவுளாக்கியதால் இவர்கள் இடது பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மறுமையில் இடது பக்கம் இழுத்துச் செல்லப்பட்டு விட்டாலே நரகம் தான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
அல்குர்ஆன் 56:41-44
மவ்லிதுப் பாடல்கள் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்குகின்றன. எனவே இந்த மவ்லிதுகளை ஓதுபவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் கிடைக்கிறது. எனவே மவ்லிது, மீலாதுகளைக் கொண்டாடலாமா? என்பதை ஒரு முறை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சிந்தித்துப் பார்த்து, இனியாவது இந்தக் கொடும் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
பள்ளிவாசலா? பாடல் அரங்கமா?
நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த மவ்லிதுக் குப்பைகளை வீடுகளில் ஓதக் கூடாது என்று தவ்ஹீது ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தினால் இன்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இந்தக் கவிதைகளைப் படிப்பது வெகுவாகக் குறைந்து வருகின்றது. மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கூட்டத்தினர், தற்போது இதைப் பள்ளிவாசல்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக, யா முஹம்மது என்று அழைத்து திக்ரு செய்பவர்கள் தான் இந்தக் கூட்டத்தினர். யா முஹம்மது என்று திக்ர் செய்வது தெளிவான இறை மறுப்பு (குஃப்ர்) என்று தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மதரஸாக்களில் கூட ஃபத்வா கொடுத்துள்ளனர். இந்தக் குஃப்ரைச் செய்து கொண்டிருக்கும் இறை நிராகரிப்புக் கும்பல் தான் இன்று பள்ளிவாசல்களைப் பாடல் அரங்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72:18
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய பள்ளிவாசல்களில் இந்த ஆராதனைப் பாடல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இதைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டிய ஆலிம்கள், வருவாய்க்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் இவர்கள் பாடச் சொல்லும் இடங்களில் பாடவும் ஆடவும் தயாராகி விட்டார்கள்.
இஸ்லாமிய சமுதாயமே! இந்தக் கூட்டத்தினர், நபிகளார் மீது மவ்லிது ஓதுகிறோம் என்று கூறி சுப்ஹான மவ்லிதை ஓதுவார்கள். இதை அனுமதித்தால், குளத்தில் போய் விடலைப் பெண்ணைத் தடவிப் பார்த்த ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற செக்ஸ் பாடல்களையும் பள்ளிவாசல்களில் வைத்துப் பாட வேண்டும் என்று சொல்வார்கள்.
எனவே இந்தக் கூட்டத்தினரின் வெறியாட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வாருங்கள். அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்கும் நிலையை ஏற்படுத்துங்கள். இல்லையேல் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் முஹல்லாவாசிகளும் இந்தப் பாவத்தில் பங்கெடுத்து நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.
பள்ளிவாசல்களில் இந்த இணை வைப்புக் காரியங்களை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்தந்த பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த தவ்ஹீது சகோதரர்கள், பள்ளிவாசலில் தங்களுக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக சொற்பொழிவாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து மதரஸாக்களாலும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுக்கப்பட்ட இந்தக் கூட்டத்தினருக்கு பள்ளிவாசலில் மவ்லிது ஓத அனுமதியிருக்கின்றது என்றால், முஹல்லாவாசிகளான தவ்ஹீது சகோதரர்களுக்கு அங்கு பிரசங்கம் செய்வதற்கு உரிமை இருக்கின்றது என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
புகாரி தர்ஹாவில் புனித முடியா?
இந்த வழிகெட்ட கூட்டத்தினர் இன்னொரு மவ்ட்டீகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். கல்லறைகளைக் கட்டிக் கொண்டு அழும் இந்தக் கருத்துக் குருடர்கள் தற்போது புதிதாக முடி கலாச்சாரத்தையும் தூக்கி இருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் முடி தங்களிடம் இருப்பதாகவும் அதைப் பாலில் நனைத்து பொதுமக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் புளுகியிருக்கின்றார்கள்.
தமது முடியைப் பாலில் நனைத்துக் குடிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்களா? அவ்வாறு குடித்தால் புனிதம் கிடைக்குமா? என்பதையெல்லாம் விட்டு விடுவோம்.
இது விஞ்ஞான யுகம். ஒரு முடியை வைத்து குளோனிங் முறையில் அந்த ஆளையே உருவாக்கி விடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. அது போல் ஒரு முடியைக் கொடுத்தால், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருடைய முடி என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். கார்பன் டேட்டிங் (ஈஹழ்க்ஷர்ய் க்ஹற்ண்ய்ஞ்) என்ற முறையில், புஹாரி தர்ஹாவில் உள்ள அந்த முடியை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியா? என்பதை ஆய்வு செய்வோம்.
ஒரு வேளை அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் முடி என்றாகி விடாது.
நம்முடைய மார்க்கத்தில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான பொருளாக இருந்தாலும், போதனையாக இருந்தாலும் அதற்கு ஸனது எனும் சங்கிலித் தொடரான ஆதாரம் வேண்டும்.
இன்று இவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த முடி விவகாரத்திற்கும், ஹதீஸ் கலை அறிஞர்கள் வகுத்திருக்கும் அடிப்படையிலான சங்கிலித் தொடர் வரிசை இருக்க வேண்டும். அதாவது அந்த முடி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, நபித்தோழர், பிறகு அவரிடமிருந்து தாபிஃ, பிறகு தாபிஃயிடமிருந்து தபவுத் தாபிஃ – இப்படித் தலைமுறை தலைமுறையாக வந்து புஹாரி தர்ஹாவுக்கு எப்படி வந்தது என்று நிரூபிக்க வேண்டும். இதை ஓர் அறைகூவலாகவே விடுக்கின்றோம். இவ்வாறு நிரூபிக்கவில்லையெனில் இது சரித்திர நாயகரான நபி (ஸல்) அவர்களின் முடியல்ல, ஏதோ தரித்திரம் பிடித்தவனின் முடி என்றாகி விடும்.
———————————————————————————————————————————————–
தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி
சென்ற இதழின் தொடர்ச்சி…
தமிழகத்தில் தவ்ஹீது ஜமாஅத் மார்க்க அடிப்படையில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பார்த்து வருகிறோம்.
ஸஹர் பாங்கு அறிமுகம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 621
இது ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக இஸ்லாமிய வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.
எட்டுத் திக்கும் எட்டு ரக்அத் இரவுத் தொழுகை
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்
நூல்: புகாரி 1147
இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.
இது தான் ஷரீஅத் வரைபடத்தின் சரியான வடிவம். ஆனால் இது தலைகீழாக மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.
தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப் படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.
இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!
அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை, வணக்க வழிபாட்டுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.
பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017
அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவு ஷரீஅத் வரைபடத்தின் சட்ட வடிவமாகும். ஆனால் இதற்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.
தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.
மக்ரிபுக்கு முன் சுன்னத்
நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்‘ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)
நூல்: புகாரி 1183
ஷரீஅத்தின் வரைபடத்திலுள்ள இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட “மக்ரிப் இகாமத்’ என்ற இடத்தில், “உடன்” என்று தான் போட்டிருப்பார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
பள்ளிவாசலில் நுழைந்தால் ஒரு காணிக்கைத் தொழுகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புகாரி 444
ஷரீஅத்திலுள்ள இந்த வணக்கம் சமுதாயத்தின் செயல்பாட்டில் இல்லை. இந்த வணக்கத்தை, தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.
ஃபித்ரு ஸதகாவில் ஒரு புரட்சி
பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.
இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!
தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இது வரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.
தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை
ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லை” என்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2770
இது தான் ஷரீஅத் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் இருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வ- பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி)
நூல்: புகாரி 3463
இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
பயனுள்ள பயணத் தொழுகை
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.
அல்குர்ஆன் 4:101
கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்களை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்
நூல்: முஸ்லிம் 1230
பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கிக் கொள்ளும் வழிமுறையை அல்குர்ஆனும், ஹதீசும் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் மத்ஹபு ஆலிம்களோ, பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி இந்த உரிமையைத் தட்டிப் பறித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பின்னர் தான் இந்தச் சலுகை மக்களிடம் சென்றடைந்தது.
சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 1111
பயணத்தின் போது தொழுகையின் ரக்அத்களைக் குறைத்துக் கொள்வதற்குச் சலுகை வழங்கிய மார்க்கம் தான் சேர்த்துத் தொழுவதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஆனால் இந்த ஆலிம் வர்க்கம் இந்த உரிமையை அநியாயமாகப் பறித்து விட்டது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டு, ஷரீஅத் வரைபடத்தைச் சரியாக்கி சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்!
களாத் தொழுகை
ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.
“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1217
தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.
மாற்றப்பட்ட ஸஹர் நேரம்
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)
சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.
பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள்.
அறிவிப்போர்: ஆயிஷா (ரலி)இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1918, 1919
திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.
நோன்பு துறப்பதில் கால தாமதம்
“சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 1954
“நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி)
நூல்: புகாரி 1957
சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.
உச்சி வெயிலில் பெருநாள் தொழுகை
பெருநாளன்று திடலில் தொழும் போது மக்களை வெயில் தாக்கும். இதனால் அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்து விட வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612
இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர், பெருநாள் தொழுகையை காலை பத்து மணி வரை தாமதமாகத் தொழுது கொண்டிருந்தனர்.
இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத், பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில், சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே தொழுது வழிகாட்டியது. குறிப்பாக ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை முடித்து விட்டு அறுத்துப் பலியிட வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடலில் நடத்தும் பெருநாள் தொழுகைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. இதைக் கண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரும் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாலையில் தொழ ஆரம்பித்துள்ளனர்.
இப்படி ஷரீஅத் என்ற வரைபடத்தில் உள்ள அத்தனை வழிபாடுகளையும் உள்ளதை உள்ளபடி செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
மார்க்கப் பிரச்சாரத்தில் ஒரு மறுமலர்ச்சி
நாம் இது வரை கண்டது, வணக்க வழிபாடுகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மாற்றியமைத்து தவ்ஹீது ஜமாஅத் கொண்டு வந்த மறுமலர்ச்சி ஆகும். தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கிக் காட்டிய சாதனைகளில் சிலவற்றைத் தான் நாம் கண்டோம்.
இவையல்லாமல் மார்க்கச் சொற்பொழிவு ரீதியிலும் தவ்ஹீது ஜமாஅத், வல்ல இறைவனின் அருளால் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
நாதியற்றுப் போன பேச்சாளர்கள்
தமிழகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் மார்க்கக் கூட்டம் நடைபெறும்.
அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமென்றால் போதும்! மவ்லிதுப் பாடல்களுக்கும் மீலாது மேடைகளுக்கும் மவுசு உண்டாகி விடும். ஊருக்கு ஊர் போட்டி போட்டுக் கொண்டு மீலாது சொற்பொழிவுகளை நடத்துவார்கள்.
இம்மேடைகளில் இரண்டு ரகமான பேச்சாளர்கள் விளாசித் தள்ளுவார்கள்.
ஒரு ரகம் உலமாக்கள்! மற்றொரு ரகம், இந்த உலமாக்களின் கொச்சைப் பேச்சைக் கிண்டல் செய்து பேசும் உலகக் கல்வி கற்ற பட்டதாரிகள்; பண்டிதர்கள்! இவர்களில் அரசியல்வாதிகளும் உண்டு. அரசியலில் கலக்காதவர்களும் உண்டு.
இவ்விரு பேச்சாளர்களுமே பொய்யான ஹதீஸ்களை வைத்துப் பின்னியெடுத்து விடுவார்கள். இவ்விரு ரகத்தினருமே போட்டி போட்டுக் கொண்டு நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுவார்கள்.
உலமாக்களிலும் மூன்று சாரார் உள்ளனர். ஒரு சாரார் கப்ரு வணக்கத்தை ஆதரிப்பவர்கள்; தரீக்கா மற்றும் தர்ஹாவாதிகள். ஷப்பீர் அலீ பாகவி, கலந்தர் மஸ்தான் ரஹ்மானி போன்றவர்கள் இந்தத் தரப்பில் உள்ளவர்கள்.
மற்றொரு சாரார் தப்லீக்வாதிகள். காயல்பட்டிணம் ஹைதுரூஸ் ஆலிம், நிஜாமுத்தீன் மன்பஈ, கலீல் அஹ்மது கீரனூரி போன்றவர்கள் இதில் அடக்கம்.
இந்த இரு சாராரும் ஒருவரையொருவர் காஃபிர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதிர்க் கருத்து கொண்டவர்கள். ஒருவரின் கொள்கையை மற்றவர் குஃப்ரு என்று விமர்சனம் செய்வார்கள்.
மூன்றாவது சாரார் இரண்டும் கெட்டான்கள். மறைந்த ஷம்சுல்ஹுதா, தற்போதுள்ள டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், கான் பாகவி போன்றவர்கள். இவர்கள் எந்தப் பக்கம் என்று சொல்ல முடியாது. தடுமாற்றத்திலும், தத்தளிப்பிலும் உள்ளவர்கள்.
ஆனால் ஓர் உண்மை! தமிழகத்தில் தவ்ஹீது கருத்து உருவானவுடன் இச்சாரார் அனைவருமே தவ்ஹீதுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டு நம்மை எதிர்த்தனர். இப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் அனைவரும் மத்ஹபுவாதிகள். அந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை எதிர்க்கத் துவங்கினர். விதிவிலக்காக அவர்களில் நம்மை எதிர்க்காதவர்களும் உண்டு.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒரு காலத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களாக, நாவலர்களாக, உலமாக்களின் நாயகர்களாக வலம் வந்தவர்களில் பலர் தற்போது பேர் மட்டுமல்ல, வேரும் அறுந்து போனார்கள்.
கவ்ஸர் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று சத்தியத்திற்கு எதிராகக் கிளம்பிய அவர்கள் சந்ததியற்றுப் போனார்கள்.
இன்று இவர்கள் போடும் கூட்டத்திற்குப் பொதுமக்கள் வருவதில்லை. ஒப்பு சப்புக்காகச் சிலர் வருகின்றனர். அல்லது மதரஸா மாணவர்களைக் கொண்டு இருக்கைகளை நிரப்புகின்றனர்.
மார்க்கப் பிரச்சாரத்திற்குக் கூட்டம் வரவில்லை என்பதால் சமுதாயப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்காகக் கூட்டம் போட்டுப் பார்த்தனர். அதற்கும் மக்கள் வருவதில்லை.
இன்று மக்கள் அலையலையாக வருவது தவ்ஹீதுக் கூட்டத்திற்கு மட்டும் தான். இந்த அற்புதத்தை நமது வாழ்நாளிலேயே அல்லாஹ் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறான்.
அது மட்டுமல்ல! ஏகத்துவப் பிரச்சார உரைகள் ஆடியோ, வீடியோ கேஸட்டுகளாகவும், குறுந்தகடுளாகவும் வெளியிடப்பட்டு, அவையும் மக்களிடம் பிரச்சாரமாகச் சென்று கொண்டிருக்கின்றன.
சினிமாப் படங்களையும், பாடல்களையும் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று மார்க்கப் பிரச்சாரங்களைக் கேட்டு, பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் தவ்ஹீது ஜமாஅத் சொற்பொழிவு ரீதியில் ஏற்படுத்திய பெரும் புரட்சியாகும்.
மேலும் இந்த மார்க்கச் சொற்பொழிவுகள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கின்றது.
தொலைக்காட்சி என்றாலே அது கேளிக்கை தான் என்ற நிலையை மாற்றி, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கும் அதைப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்தது தவ்ஹீது ஜமாஅத்தின் சாதனையாகும்.
எடுபடாமல் போன இலக்கியப் பேச்சு
உலமாக்கள் அல்லாத சாராரில் ஆ.கா. அப்துஸ்ஸமது, அப்துல் லத்தீப், மறுமலர்ச்சி ஆசிரியர் யூசுப் ஆகியோர் அடங்குவர். ஒரு காலத்தில் இவர்களது பேச்சுக்களைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் கூடும்.
ஆனால் ஏகத்துவம் வந்த பிறகு இவர்களின் பேச்சுக்கள் எடுபடாமல் போனது. அதுவும் இவர்களது இலக்கியப் பேச்சுக்கள் மதிப்பிழந்து போனது.
காரணம் என்ன? இவர்களும் உலமாக்களுடன் சேர்ந்து கொண்டு சத்தியத்தை எதிர்த்தது தான்.
ஆதாரம் கேட்கும் அற்புதக் காலம்
எந்தப் பேச்சாளரும் எந்த மேடையிலும் எதையும் பேசி விட்டுப் போகலாம்; பொய்யான ஹதீஸ்களை மேடையில் புளுகி விட்டுப் போகலாம் என்று அந்தக் காலம் அமைந்திருந்தது.
நூர் மஸாலா என்ற பெயரில் பக்கீர்ஷாக்கள், நபிமார்கள் வரலாறு என்று கூறி ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளி வீசிய காலம் அது!
அந்தக் காலத்தை அப்படியே புரட்டியெடுத்து, சரியான ஹதீஸை மட்டும் பேச வைக்கும் காலத்தை உருவாக்கியது தவ்ஹீது ஜமாஅத்!
பேச்சாளர்கள் பேசி முடித்ததும், நீங்கள் பேசியதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? என்று ஆண்கள் மட்டுமல்ல! பெண்களும் பேச்சாளர்களைக் கடித்துக் குதறும் புரட்சியை தமிழகம் கண்டது.
மகளிர் பெற்ற மறுவாழ்வு
தமிழகத்தில் தவ்ஹீது என்ற பாக்கியம் ஆரத் தழுவிய பிறகு முஸ்லிம்கள் கண்ட பயன்கள் ஏராளம். இதில் பெண்கள் கண்ட பயன்கள் அளவிட முடியாது என்று கூறலாம். ஒரே அமர்வில் மூன்று தலாக் சொன்னால் அதை மீட்ட முடியாது என்ற மத்ஹபு வெறியைத் தகர்த்தெறிந்து, அது ஒரு தலாக் தான், அதை மீட்டிக் கொள்ள முடியும் என்று தவ்ஹீது ஜமாஅத் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதைக் கடந்த இதழில் கண்டோம்.
முத்தலாக் விஷயத்தில் பெண்களுக்கு மறு வாழ்வு வழங்கியது போன்று மற்றொரு விஷயத்திலும் பெண்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை வழங்கியது. அது தான் குல்உ சட்டமாகும்.
பிடிக்காத கணவனை விட்டும் பிரிந்து கொள்வதற்காக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய ஓர் உரிமை தான் “குல்உ’ ஆகும். இது ஷாபி மத்ஹபுச் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் நடைமுறைக்கு வராத வறட்டுத் தத்துவமாகவே நீடிக்கின்றது. ஹனபீ மத்ஹபில் இது அறவே கிடையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409
இந்த ஹதீஸின் அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான கணவன்களிடமிருந்து பிரிந்து, தனக்கு விருப்பமான வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன் மூலம், பிடிக்காத கணவனிடம் அல்லது கொடுமைக்காரக் கணவனிடம் இருந்து கொண்டு கசங்கி, உருகி, கருகிப் போகும் கோர நிலையிலிருந்து பெண்களைக் காத்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது தவ்ஹீது ஜமாஅத்!
சுன்னத் வல்ஜமாஅத்தின் முக்கியப் பிரமுகர்கள் கூட, தங்களுடைய குடும்பப் பெண்களுக்கு இது போன்ற சோதனைகள் ஏற்பட்டால் மத்ஹபுச் சட்டங்களையோ அல்லது மத்ஹபு ஆலிம்களையோ நாடுவதில்லை. ஏனென்றால் தங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமையிலிருந்து அவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்து, தவ்ஹீது ஜமாஅத்தைத் தான் நாடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
புர்கா போடும் புரட்சி
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஒரு விதமான கோஷா! தஞ்சையில் ஒரு விதமான கோஷா என்றாலும் அதில் கவர்ச்சிகரமான கோஷா!
மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். தவ்ஹீது ஜமாஅத் பெண்கள் மட்டுமல்லாது தற்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்கா அணிகின்றனர். இது உண்மையில் ஒரு புரட்சியாகும்.
புரட்சி என்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் மாற்றத்தையே குறிக்கும். அப்படித் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது. ஒரு சில ஊர்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஹிஜாப் முறை நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதைத் தவ்ஹீது ஜமாஅத், ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது போன்று வாழ்க்கைப் பாடத்தில் கொண்டு வந்தது.
வரதட்சணைக் கொடுமை
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை, கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!
அல்குர்ஆன் 4:4
இது அல்லாஹ்வின் கட்டளை. இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது. ஆனால் இவர்களோ பெண்களிடம் வாங்குகின்றனர். இலட்சக்கணக்கில் பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் வாங்கும் இந்தக் கொடுமையை எதிர்க்கக் கடமைப்பட்ட ஆலிம்கள், அதற்குப் போய் அல்ஃபாத்திஹா சொல்லி ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பெரும் யுத்தத்தையே அன்றிலிருந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பலனாக, அல்லாஹ் சொல்வது போன்று லட்சக்கணக்கில் மஹர் கொடுத்து மணம் முடிக்கும் இளைஞர்களை தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்தை ஏற்பதற்கு முன் ஏற்கனவே வரதட்சணை வாங்கியவர்கள் கூட திருப்பிக் கொடுத்த வரலாறும் உண்டு.
தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் தலைப் பிரசவத்தைப் பெண் வீட்டுக்காரர்கள் தான் பார்க்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளது. பிள்ளைக்கும் தாய்க்கும் செலவளிப்பது ஆண்களின் கடமை என்ற (2:233) வசனத்தின் அடிப்படையில் தலைப் பிரசவம் மட்டுமல்லாமல் எல்லா பிரசவச் செலவையும் ஆண்களே செய்யும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.
கூலி வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை, அரசு உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை என்று மாட்டுச் சந்தையில் விற்பது போல் மணமகனை விற்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதையெல்லாம் உடைத்தெறிந்து, பெண்களுக்கு மனமுவந்து கொடுக்கும் மாபெரும் வரலாற்றுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் படைத்துள்ளது.
ஒரு காலத்தில் மார்க்கத்தின் இந்த நடைமுறைகளை வெறும் தத்துவார்த்தமாகப் பேசிய போது மக்கள் வெகுண்டு எழுந்தனர். சிலர், “இதெல்லாம் பேசுவதற்கு நல்லாயிருக்கும், நடைமுறைக்கு சாத்தியமா?’ என்று கேட்டனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்த போது மக்களும் பின்பற்ற முன்வருகின்றனர். உண்மையில் அல்லாஹ்வின் பேரருளால் இது தமிழகம் காண்கின்ற வரலாற்றுப் புரட்சியாகும்.
இது போன்ற இன்னபிற வணக்கங்களையும் குர்ஆன், ஹதீஸ் என்ற ஷரீஅத் வரைபடத்தில் காட்டியிருக்கும் அடிப்படையில் நிறைவேற்றிட அழைப்பதற்காகத் தான் இன்ஷா அல்லாஹ் மே 10, 11 ஆகிய தேதிகளில் தஞ்சையில் மாநாடு நடத்தவுள்ளோம். அந்த மாநாடு மூலம் இன்னும் அதிகமான மக்களை சத்தியத்தின் பக்கம், சரியான ஷரீஅத்தின் பக்கம் வென்றெடுப்போமாக! அல்லாஹ் அந்த இலக்கை இந்த மாநாட்டின் மூலம் அடையச் செய்வானாக!
தமிழகம் கண்ட தர்ஜுமா புரட்சி
தமிழகத்தில் நம்முடைய தவ்ஹீது பிரச்சாரம் தோன்றிய மாத்திரத்தில் தவ்ஹீது ஜமாஅத் ஆலிம்கள் மக்களிடம் வைத்த அன்பான வேண்டுகோள், “திருக்குர்ஆனைப் படியுங்கள்’ என்பது தான். திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள் என்று மக்களிடம் திரும்பத் திரும்பக் கூறினோம்.
திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற வேண்டுகோளைத் தாங்கிய ஸ்டிக்கர்களை தங்கள் வீட்டுக் கதவுகளிலும், வாகனங்களிலும் கொள்கைவாதிகள் ஒட்டினர்.
திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற நம்முடைய வேண்டுகோள் மக்களிடம் தீயாய் பரவியது. மக்கள் சாரை சாரையாக திருக்குர்ஆன் தர்ஜுமாக்களை வாங்க ஆரம்பித்தனர்.
உடனே இந்த ஆலிம்கள், குர்ஆன் விளங்காது என்று கோரஸ் பாட ஆரம்பித்தனர்; கூப்பாடு போட்டனர்; குருட்டுச் சிந்தனையைப் பரப்பினர்; கூக்குரல் எழுப்பினர்.
குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வ வெள்ளம், இந்த உலமாக்களின் குறுக்குச் சுவர்களைத் தகர்த்தெறிந்தது. புத்தகச் சந்தையில் ஒரு புது சகாப்தம் பூத்தது. தர்ஜுமா விற்பனை சாதனை படைத்து, விண்ணைத் தொட்டது.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டுக்கு முன்பு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தர்ஜுமா, ஜான் டிரஸ்ட் வெளியீடாகும். அதனால் மக்கள் ஜான் டிரஸ்ட் தர்ஜுமாக்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். அதன் விற்பனையில், பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போம்.
1983ம் ஆண்டு 5000 பதிப்புகள் அச்சிட்டு, தனது பணியைத் துவக்கிய ஜான் டிரஸ்ட் நிறுவனம்,
இரண்டாவது பதிப்பு 5,000
மூன்றாவது பதிப்பு 10,000
நான்காம் பதிப்பு 10,000
ஐந்தாம் பதிப்பு 10,000
ஆறாம் பதிப்பு 13,000
ஏழாம் பதிப்பு 10,000
எட்டாம் பதிப்பு 20,000
ஒன்பதாம் பதிப்பு 20,000
பத்தாம் பதிப்பு 20,000
பதினோறாம் பதிப்பு 10,000
12ம் பதிப்பு 10,000
13ம் பதிப்பு 10,000
14ம் பதிப்பு 10,000
என 25 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விற்பனை செய்தது.
இப்படிப் புனிதக் குர்ஆனைப் புரட்டிப் பார்க்கும் ஒரு புரட்சிக் கூட்டம் புறப்பட்டது. இப்போது தான் ஆலிம்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு தர்ஜுமாவை சந்தையில் இறக்கினார்கள்.
கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கத்தில் 1992ல் ஒரு தர்ஜுமா வெளியிடப்பட்டது.
இந்த தர்ஜுமாவைத் தந்தவர்கள், பாமரனுக்குக் குர்ஆன் விளங்காது என்று பகிரங்கமாகப் பேசியவர்கள்; பேசுபவர்கள். குர்ஆன் மொழியாக்கத்திற்கு மக்களிடத்தில் பலத்த வரவேற்பு என்றவுடன் தற்போது புத்தகச் சந்தையில் இந்த தர்ஜுமாவைக் களமிறக்கியுள்ளனர். 2004ம் ஆண்டு திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
அப்போது மக்களுக்கு விளங்காமல் இருந்த குர்ஆன், தற்போது வியாபாரம் என்று வந்ததும் விளங்க ஆரம்பித்து விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவ்ஹீது ஜமாஅத் தடம் பதிப்பதற்கு முன்பு தமிழகத்தில் ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது அவர்களின் தந்தை) மொழியாக்கத்தில், தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபி அதபில் பயான் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. முதலில் அரபு மூலத்துடன் வெளிவந்தது. பிறகு அரபு மூலமின்றி இது வெளியிடப்பட்டது. பிறகு மீண்டும் அரபு மூலத்துடன் வெளிவந்தது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.
குர்ஆனின் அரபி மூலத்துடன் உள்ள தர்ஜுமாவை, முஸ்லிமல்லாத மக்களிடம் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை தான்.
இருப்பினும், குர்ஆனை மூலத்துடன் வெளியிட வேண்டுமா? மூலமில்லாமல் வெளியிட வேண்டுமா? முஸ்லிமல்லாதவர் களுக்குக் கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்று மயிர் பிளக்கும் சர்ச்சைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல தமிழ் நடையில் இந்தத் தமிழாக்கம் வெளிவந்தது.
இது வெளியாவதற்காக மறைந்த அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் சவூதியிலிருந்து நிதி பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தான் ஜான் டிரஸ்ட் சார்பில் அப்துல் வஹ்ஹாப் அவர்களால் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.
ஜான் டிரஸ்ட் நிர்வாகம் இந்த தர்ஜுமாவில் திருத்தம் செய்வதற்காக அப்துல் காதர் மதனீ ஆகியோரை நியமித்தது. அப்போது, திருக்குர்ஆனின் 3:7 வசனத்திற்குச் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு கடும் ஆட்சேபணைக்கு உள்ளானது. பின்னர் மீண்டும் பழைய மொழி பெயர்ப்பின்படியே அந்த வசனம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக “முதஷாபிஹாத்’ என்ற தொடரை அல்ஜன்னத்தில் எழுதினோம்.
அல்குர்ஆன் மனிதர்களுக்காக அருளப்பட்டது; அதில் மனிதர்கள் யாருக்குமே விளங்காத வசனங்கள் எதுவும் இல்லை என்பதே அந்தத் தொடரின் சாராம்சம். இது தற்போது புதிய வடிவில் ஏகத்துவத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
சங்கை மிக்க குர்ஆன்
இது ஒரு சவூதிய வெளியீடு. இலவசம் என்பது இதன் தனிச் சிறப்பு. எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய நடையைக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் குறைபாடு. முஸ்லிம்களுக்கே புரியாது எனும் போது முஸ்லிமல்லாதவர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக கிறித்தவர்களிடம் கொடுப்பதற்குத் துளியும் தகுதியில்லை. காரணம், இந்த தர்ஜுமாவின் தோற்றுவாயை எடுத்துப் படிக்கும் மாத்திரத்திலேயே அதை மூடி வைத்து விடுவர்.
எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக)
(அது உன்) கோபத்திற் குள்ளானவர்கள(யூதர்களின் வழிய)ல்ல.
அன்றியும் வழிகேடர்கள(ôன கிறிஸ்தவர்களின் வழியும)ல்ல.
இவ்வாறு மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இதைப் படிக்கும் ஒரு கிறித்தவர் எப்படி இஸ்லாத்திற்கு வருவார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
இவை அனைத்தும் தர்ஜுமாக்கள். தவ்ஹீது ஜமாஅத் தனது பயணத்தைத் தொடங்கும் போது தப்ஸீர்களும் வெளியாகியிருந்தன.
- தப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்
இது 1958ல் வெளியானது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் பாகவி ஆலிம் அவர்கள் இதை எழுதினார்கள்.
ஆதாரமற்ற ஹதீஸ்கள், வரலாறுகள், அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளின் தொகுப்பாகவே இந்த தப்ஸீர் அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் நிலவிய தமிழ் நடைக்கொப்ப இது வெளியானது. இப்போது அந்த நடை மக்களுக்குப் புரியாது.
- அன்வாருல் குர்ஆன்
இந்த தப்ஸீரும் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்களின் தப்ஸீரைப் போன்றது தான். எனினும் உள்ளடக்கத்தில் இது ஓரளவுக்கு வேறுபட்டுள்ளது. அந்த தப்ஸீரைப் போன்று பெருமளவில் கதைகள் இதில் இடம் பெறவில்லை. இதன் ஆசிரியர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான் இன்றைய தவ்ஹீது ஆலிம்கள் களத்தில் இறங்குவதற்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தவர்கள்.
தமிழகத்தில் உலமாக்கள் பொதுக் கூட்டங்களில் பேசிய ஹதீஸ்களில், மக்களை மவ்ட்டீகத்திற்கு இழுத்துச் செல்லும் படுபாதகமான, படுமோசமான ஹதீஸ்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, “அந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள்’ என்று ஆணித்தரமாக அடையாளம் காட்டினார்கள்.
இப்படிப்பட்ட அறிவு ஞானம் கொண்ட அவாகள், தமது தப்ஸீரிலும் ஹதீஸ் கலையின் தர வரிசைக்கு மாற்றமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.
மவ்லிதுகள், மீலாதுகள், கப்ரு வணக்கங்கள் போன்றவற்றில் மாறுபட்ட, அதாவது நாம் இன்று கொண்டிருக்கும் தவ்ஹீதுக் கருத்தைக் கொண்டதால் வஹ்ஹாபி என்ற முத்திரையை வாங்கிக் கொண்டவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
- தாவூத்ஷாவின் தப்ஸீர்
இதுவும் தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வருவதற்கு முன் நடமாடிக் கொண்டிருந்த ஒரு தப்ஸீராகும். இவருடைய தப்ஸீரில் காதியானி வாடை வீசும்.
குர்ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்துத் தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவுத் ஷாவின் கனவு. தமது இறுதிக் காலத்துக்குள் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதான போது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.
அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையும் மீறி அவர் அச்சேற்றினார்.
“இது காதியானி மொழிபெயர்ப்பு; காபிர் மொழி பெயர்ப்பு இதனை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது” என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக் கட்டை விழுந்தது. நான்காம் தொகுதியை வெளியிட தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் 13000 கொடுத்தார்கள்.
1967ல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவுத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.
- இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தப்ஸீர்
1996ல் திருக்குர்ஆன் என்ற பெயரில் இந்தத் தப்ஸீர் வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழில் வெளியான தப்ஸீர்கள், தர்ஜுமாக்கள் பிற மதத்தவர்கள் வாங்கிப் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்த தப்ஸீர் அமைந்தது என்று சொல்லலாம்.
- தற்போது ரஹ்மத் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்னு கஸீர் தமிழாக்கம்.
தர்ஜுமா
முஸ்லிமல்லாதவர்களிடம் இது போய்ச் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.
காரணம், பெரும்பாலும் தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகப் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன. அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ், ஆங்கில நூல்களின் அடிப்படையில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் வெளியான தர்ஜுமாக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களைக் கருத்தில் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த தர்ஜுமா பிற மதத்தவர்களையும் கவரும் வண்ணம் அதன் தமிழ் நடையில் முழு எளிமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பின் குறிப்புகள்
இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இஸ்லாத்தை நோக்கி வீசுகின்ற ஏவுகணைகள் பலதார மணம், விவாகரத்து போன்றவையாகும். எனவே இது தொடர்பான வசனங்களைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்குப் பொருத்தமான, எளிதில் புரியம்படியான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது போல் அறிவியல் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கும் மன நிறைவைத் தரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஏகத்துவக் கொள்கை, வணக்கங்கள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களை தயவு தாட்சண்யம் இன்றி அல்லாஹ்வுக்குப் பயந்து மிகத் தெளிவாக இதன் பின் குறிப்புகளில் போட்டு உடைக்கின்றது.
கலப்படமின்மை
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தோன்றி, வணக்கங்களில் உள்ள பித்அத்கள், கலப்படங்கள், சேர்மானங்கள் ஆகியவற்றைக் களைந்து, இஸ்லாத்தைத் தூய வடிவில் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை ஏற்றுச் செயல்படவும் ஆரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். ஆனால் குர்ஆனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்ஆனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.
இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஓர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.
- மன்ஜில்
- ருகூவுக்கள்
- ஸஜ்தா அடையாளங்கள்
- நிறுத்தல் குறியீடுகள்.
- வேண்டாத ஆய்வுகள்
- மக்கீ, மதனீ
- குர்ஆனை முடிக்கும் துஆ
மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
குர்ஆன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்ஆனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
————————————————————————————————————————————————
முதஷாபிஹாத்
“முதஷாபிஹ்’ வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களில் எவருக்கும் அவை விளங்காது என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அதற்கான மறுப்புக்களையும் முதலில் பார்ப்போம்.
முதல் சாராரின் வாதம் – 1
எந்த வசனத்திற்குப் பொருள் செய்வதில் சர்ச்சை நடக்கின்றதோ அந்த வசனத்தின் முற்பகுதியிலேயே “முதஷாபிஹ்’ வசனங்கள் மனிதர்களுக்கு விளங்காது என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதாவது, அந்த வசனத்தின் முற்பகுதியில், “எவரது உள்ளங்களில் வழிகேடு இருக்கின்றதோ அவர்கள் குழப்பத்தை நாடி அதன் விளக்கத்தைத் தேடி, “முதஷாபிஹ்’களையே பின்பற்றுவர்” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“முதஷாபிஹ்’ வசனங்களை விளங்கிக் கொள்ள முயற்சிப்பவர்களையும், அதைப் பின்பற்றுவோரையும் இந்த வசனத்தின் முற்பகுதியில் வழிகேடர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். “முதஷாபிஹ்’ வசனங்கள் விளங்கிக் கொள்ள இயலாதவை என்பதற்கு இதுவே சரியான சான்றாக உள்ளது.
“முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது வழிகேடு என்றால் அவை விளங்க இயலாதவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை என்பது முதல் சாராரின் வாதம்.
3:7 வசனத்தின் பிற்பகுதிக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பதை அதன் முற்பகுதி தெளிவுபடுத்துகின்றது. இதன் அடிப்படையில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்கிட இயலாது” என்று இதற்குப் பொருள் கொள்வதே சரியாகும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.
இரண்டாம் சாராரின் மறுப்பு
இந்த வாதம் மேலோட்டமாகப் பார்க்கும் போது வேண்டுமானால் அர்த்தமுள்ளது போல் தோன்றலாம். நன்கு பரிசீலனை செய்யும் போது இந்த வாதம் பொருளற்றது என்று தெளிவாவதுடன், முதல் சாராரின் கருத்துக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது என்பதை உணரலாம்.
மேற்கூறிய 3:7 வசனத்தின் முற்பகுதியில், பொதுவாக “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவோரை வழிகேடர்கள் என்று இறைவன் கூறவில்லை.
குழப்பத்தை நாடி “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவோரையே வழிகேடர்கள் என்று சித்தரிக்கின்றான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள (இப்திகாஅல் ஃபித்னதி) “குழப்பத்தை நாடி” என்ற வாசகம் இங்கு நன்கு கவனிக்கத்தக்கது.
“முதஷாபிஹ்’ வசனங்களில் விளக்கத்தைத் தேடுவது தவறு என்றால் “குழப்பத்தை நாடி’ என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.
குழப்பத்தை நாடி “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது தான் கூடாது என்றால், குழப்பத்தை நாடாது – நல்ல எண்ணத்துடன் “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது தவறில்லை என்பது தெளிவு.
“முதஷாபிஹ்’ வசனங்கள் மனிதர்களுக்கும் விளங்கும் என்பதற்குத் தான் இதில் ஆதாரம் உள்ளதே தவிர “மனிதர்களில் எவருக்கும் விளங்காது’ என்பதற்கு இதில் ஒரு ஆதாரமும் இல்லை. இவ்வாறு இரண்டாம் சாரார் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
முதல் சாராரின் ஆதாரம் – 2
திருக்குர்ஆனின் 3:7 வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டி விட்டு, “ஆயிஷாவே! இதில் வீண் தர்க்கம் செய்பவர்களை நீ காணும் போது இவர்களைத் தான் அல்லாஹ் நாடியுள்ளான் (என்பதைப் புரிந்து கொண்டு) இவர்களைத் தவிர்த்து விடு!” என்று கூறினார்கள்.
இது புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
“முதஷாபிஹ்’ வசனங்கள் பற்றி சர்ச்சை செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்துள்ளார்கள். “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்க முடியும் என்றால் அதுபற்றி சர்ச்சை செய்பவர்களை நபி (அல்) அவர்கள் கண்டித்திருக்க மாட்டார்கள். “முதஷாபிஹ்’ வசனங்கள் விளங்காது என்பதை இந்த நபிமொழி உறுதி செய்கின்றது. இது முதல் சாராரின் அடுத்த வாதம்.
இரண்டாம் சாராரின் மறுப்பு
மேற்கூறிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டிய பின்பே, “அவர்களைத் தவிர்த்து விடு’ என்று கூறுகின்றார்கள். அந்த வசனத்தில் “குழப்பத்தை நாடி’ விளக்கம் தேடுவோரே கண்டிக்கப்படுகின்றனர். அந்த வசனத்தை ஓதிக் காட்டிய பின் நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளதால், குழப்பத்தை நாடி வீண் தர்க்கம் செய்வோரையே நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கின்றார்கள் என்பது தெளிவு.
மேலும் அந்த நபிமொழியில் இடம் பெற்றுள்ள “வீண் தர்க்கம்’ என்ற வார்த்தையும் இதை உறுதிப்படுத்துகின்றது. திருக்குர்ஆன் வசனங்களை ஒன்றுடன் ஒன்றை மோத விட்டு வீண் தர்க்கம் செய்பவர்கள் தான் அந்த வசனத்தில் கண்டிக்கப்படுகின்றனர்.
ஏனெனில், நபி (ஸல்) இந்த நபிமொழியில், “யுஜாதிலூன’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இது “ஜதல்’ என்ற வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். “ஜதல்’ என்றால் உண்மையை அறியும் நோக்கமின்றி வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் வீண் தர்க்கம் தான். அவ்வாறு வீண் தர்க்கம் செய்வோர் தான் இங்கு கண்டிக்கப்படுகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் மற்றொரு நபிமொழியும் அமைந்துள்ளது.
“எந்தச் சமுதாயமும் “ஜதல்’ (வீண் தர்க்கம்) காரணமாகவே நேர்வழி பெற்ற பின் வழிதவறிப் போகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி இப்னுமாஜாவில் 48வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இந்த இடத்தில் பயன்படுத்திய ஜதல் என்ற வார்த்தையையே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலும் பயன்படுத்தியுள்ளனர்.
ஆக, இங்கே கண்டிக்கப்படுவது உண்மையை விளங்கும் நோக்கமின்றி, வீண் தர்க்கம் புரிபவர்கள் தான் என்பது தெளிவாகின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு நபிமொழியும் அமைந்துள்ளது.
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, “உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால் தான் அழிந்து போயினர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 5180
திருக்குர்ஆன் வசனங்களை மோத விட்டு, முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவதையே நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதை இந்த நபிமொழியும் உறுதி செய்கின்றது.
அழகிய முறையில் ஜதல் செய்! சிறந்த முறையில் ஜதல் செய்! என்று கூறப்படும் போது மட்டும், இந்த வார்த்தை முறையான விவாதத்தைக் குறிக்கும். அழகிய முறையில், சிறந்த முறையில் என்று கூறப்படாமல், ஜதல் என்ற வார்த்தை மட்டும் தனித்துக் கூறப்படுமானால் அது வீண் தர்க்கத்தையும், விதண்டாவாதத்தையும் குறிக்கும்.
ஆக, நபி (ஸல்) அவர்கள் கண்டித்தது, வீண் தர்க்கம் செய்வோரையும், குழப்பத்தை நாடுவோரையும் தான் என்பதை விளங்கலாம். உண்மையை விளங்கும் எண்ணத்தில் ஆராய்வதற்குத் தடை ஏதும் இல்லை என்பது இரண்டாவது சாராரின் மறுப்பாகும்.
முதல் சாராரின் வாதம் – 3
திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் சொல்வதில் தன்னிகரற்றவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) ஆவார். அவர்களின் கூற்றும், “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்க முடியாது என்பதையே உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இது தான்:
- எவருக்கும் எளிதில் விளங்கக் கூடியவை.
- அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் மட்டும் அறிந்து கொள்ளக் கூடியவை.
- கல்வியில் உறுதிப்பாடு கொண்டவர்கள் மட்டும் அறிந்து கொள்ளக் கூடியவை.
- அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்தவை.
ஆகிய நான்கு வகையான விளக்கங்கள் குர்ஆனுக்கு உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த நான்கு வகையான கூற்றில், அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்த விளக்கங்கள் உள்ளன என்று கூறப்படுவதால், மனிதர்களால் அறிய முடியாத வசனங்களும் குர்ஆனில் உள்ளன என்பதில் ஐயமில்லை. இது முதல் சாராரின் மூன்றாவது ஆதாரம்.
இரண்டாவது சாராரின் மறுப்பு
இவர்களின் இந்த வாதமும் சரியானதல்ல! ஏனெனில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இந்த விளக்கம் முதஷாபிஹ் வசனங்களைப் பற்றியது அல்ல! பொதுவாக (முஹ்கம், முதஷாபிஹ் உள்ளிட்ட) குர்ஆன் வசனங்களின் விரிவுரை பற்றிய அம்சங்களையே அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
முஹ்கம் வசனங்களின் விளக்கங்களை மனிதர்கள் விளங்குவது போன்ற அர்த்தத்தில் தான் அல்லாஹ்வும் அருளியுள்ளான் என்று கூற முடியாது. முஹ்கம் வசனங்களையும் அல்லாஹ் என்ன விளக்கத்தை நாடி அருளினானோ அதை அப்படியே மனிதன் விளங்குவான் என்று கூற முடியாது. இதனால் முஹ்கமான வசனங்களையும் மனிதர்களால் விளங்க முடியாது என்று கூற முடியுமா?
மேலும் “முதாஷாபிஹ்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கூற்றில் குறிப்பிடவேயில்லை. பொதுவாக, திருக்குர்ஆன் விரிவுரை என்று தான் கூறுகின்றார்கள் என்று இரண்டாம் சாரார் இதை மறுப்பதுடன், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றொரு கூற்றையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
3:7 வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது, “முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அறிந்து கொள்வார்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற, கல்வியில் சிறந்தவர்களில் நானும் ஒருவன்” என்று கூறினார்கள்.
முதல் சாரார் எடுத்துக் காட்டிய, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று எந்த நூற்களில் இடம் பெற்றுள்ளதோ அதே நூற்களில் தான் இந்தக் கூற்றும் இடம் பெற்றுள்ளது.
முதல் சாரார் எடுத்து வைத்த கூற்று, பொதுவாகக் குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பற்றியது. ஆனால் இந்தக் கூற்றில், முதஷாபிஹ் வசனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது.
முதஷாபிஹ் வசனங்களை அறிவில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்று என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இந்தக் கூற்று சந்தேகமற அறிவிக்கின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் சாரார், தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியாது. அவர்களின் கருத்துக்கு எதிராகவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது. ஆக, முதஷாபிஹ் வசனங்களை அறிவில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்பது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து என்று இரண்டாம் சாரார் வாதிக்கின்றனர்.
முதல் சாராரின் வாதம் – 4
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் 3:7 வசனத்தை, “லா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்; வயகூலுர் ராஸிகூன பில் இல்மி” என்று ஓதியதாக பிற்காலத் தப்ஸீர்களில் எழுதி வைத்துள்ளனர். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதியதன் அடிப்படையில் இந்த வசனத்திற்கு இரண்டு அர்த்தங்களுக்கு இடமில்லை. “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியாது” என்ற ஒரு கருத்து மட்டுமே இதற்கு உண்டு. எனவே அல்லாஹ்வைத் தவிர யாரும் முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்க முடியாது என்பதே சரி என்று முதல் சாரார் தங்களது நான்காவது ஆதாரத்தை எடுத்து வைக்கின்றனர்.
இரண்டாவது சாராரின் மறுப்பு
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அவ்வாறு ஓதினார்கள் என்பதற்கு எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லை. ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் அது இடம்பெறவில்லை. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பெயரால் கூறப்படும் பச்சைப் பொய் தான் இது என்பதைத் தவிர வேறில்லை. இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மற்றொரு கூற்றிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
“திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்த வசனம் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் நிச்சயம் நான் அறிவேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
எந்தக் காரணத்துக்காக ஒரு வசனம் இறங்கியது என்பதை அறிய முடியும் என்றால், அதன் பொருளையும் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
“ஒருவர் இந்தக் கேள்வி கேட்ட போது இந்த வசனம் இறங்கியது’ என்றால் அந்த வசனம், அந்தக் கேள்விக்குப் பதிலாகத் தான் அமைந்திருக்கும். இப்படி ஒருவர் நடந்து கொண்டதற்காக அந்த வசனம் இறங்கியது என்றால், அவர் நடந்து கொண்டது சரியா? தவறா? என்பதை அந்த வசனம் கூறும்.
இப்படி, எந்தக் காரணத்துக்காக ஒரு வசனம் இறங்கியது என்பதை அறிய முடியும் என்றால், அதன் பொருளையும் அறிய முடியும் என்பது தெளிவாகின்றது. இது தான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் முடிவாகும்.
இவ்வாறு எல்லா வசனங்கள் இறங்கியதற்கான காரணமும் தமக்குத் தெரியும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதால், எல்லா வசனங்களின் பொருளும் தமக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள் என்றே அர்த்தம்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்றால், குர்ஆனில் மனிதர்களுக்கு விளங்காதது எதுவும் இல்லை என்றே முடிவு செய்ய வேண்டும். இது இரண்டாம் சாராரின் மறுப்பாகும்.
முதல் சாராரின் இன்னும் சில வாதங்களையும், அவற்றிற்கான மறுப்பையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் காண்போம்.
(குறிப்பு: இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு, முதஷாபிஹ் என்றால் என்ன? என்ற ஐயமும், கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார்? என்ற ஐயமும் ஏற்படும். இரு தரப்பு வாதங்களையும் முடித்த பின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், முதஷாபிஹ் என்றால் எவை? என்பதையும், கல்வி அறிவில் சிறந்தவர்கள் யார்? என்பதையும் விளக்கப்படும்.)
————————————————————————————————————————————————
அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் : 37
முற்றுகையை முறியடிக்க காலிதுக்கு அழைப்பு
எம். ஷம்சுல்லுஹா
அன்பார், அய்னுத்தமர் போர் முடிந்ததும் அதில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வங்களை ஆட்சித் தலைவருக்கு காலித் அனுப்பி வைக்கின்றார்.
இந்தப் பொறுப்புக்காக நியமிக்கப்பட்ட வலீத் பின் உக்பா இந்தச் செல்வங்களை ஆட்சித் தலைவரிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். கூடவே அவர், காலிதின் மன வேதனையையும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்.
“ஆட்சித் தலைவர் அபூபக்ர் அவர்கள் எனக்கு இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கக் கூடாது. இதன் காரணத்தால் ஓராண்டு காலமாக முற்றுகையில் முடங்கிக் கிடக்கும் இயாள் பின் கனமை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
ஹீரா வெற்றிக்குப் பிறகு, பாரசீகத்தின் பிடியிலுள்ள மற்ற நகரங்களை என்னால் கைப்பற்றவும் முடியவில்லை. (காரணம், இயாள் வராமல் அடுத்தக்கட்டத் தாக்குதல் கூடாது என்ற கலீபாவின் கட்டளை தான்) மொத்தத்தில் ஹீராவில் நான் தங்கிய இந்த ஆண்டு, ஒரு போர் வீரனுக்குரிய ஆண்டல்ல! ஒரு பெண்ணுக்குரிய ஆண்டு!”
காலிதின் இந்த வேதனை வரிகளை வலீத் பின் உக்பா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கின்றார்.
ஒரு பக்கம் தூமத்துல் ஜன்தலைச் சுற்றிலும் முடிவுக்கு வராத முற்றுகை! மறு பக்கம் இராக்கில் முடங்கிக் கிடக்கும் காலிதின் மன வருத்தம். இந்த இரண்டுமே கலீபாவைக் கவலையடையச் செய்தது. இயாளின் ஓராண்டு கால முற்றுகை ஆட்சித் தலைவரைச் சடையவும், சளைக்கவும் வைத்தது.
இந்த முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஆட்சித் தலைவர், வலீத் பின் உக்பாவை இயாளுக்கு உதவியாக தூமத்துல் ஜன்தலை நோக்கி அனுப்பி வைக்கின்றார். வலீதும் தூமத்துல் ஜன்தலை வந்தடைகின்றார்.
அப்போது தான் அவருக்கு ஓராண்டு கால முற்றுகைக்கான மர்ம முடிச்சு அவிழ்கின்றது. தூமத்துல் ஜன்தல் மக்களை, இயாளின் படை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறது. இயாளின் படையை தூமத்துல் ஜன்தலின் ஒரு படை சூழ வளைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி ஓர் இக்கட்டில் சிக்கியதால் தான் முற்றுகை முடிவுக்கு வராமல் நீடிக்கின்றது என்பதை உணர்ந்த வலீத், ஒரு யோசனை வழங்குகின்றார்.
வலிய படையும் எளிய யோசனையும்
ஒரு சில கட்டங்களில் வலிய படையை விட ஓர் எளிய யோசனை சிறந்ததாக அமைந்து விடும். அந்த எளிய யோசனை வேறொன்றும் இல்லை. காலிதை வரவழைப்பது தான்.
வறட்டுக் கவுரவம், முரட்டுப் பிடிவாதம் எதையும் பார்க்காமல் காலிதுக்கு, வலீத் பின் உக்பா ஓர் அவசரக் கடிதம் வரைகின்றார்.
அன்பார், அய்னுத்தமர் போர்களை முடித்த அடுத்த கணத்தில், அடுத்தக் களம் என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்த காலிதின் கையில் இந்தக் கடிதம் கிடைக்கிறது. போர்ச் சிங்கம் காலிதைக் களத்திற்கு அழைக்கும் செய்தியைத் தான் கடிதம் தாங்கியிருந்தது.
கண்ணைப் பறிக்கும் வாட்களுடன்
கர்ஜிக்கும் சிங்கங்களைத் தாங்கிய வண்ணம்
பகை நடுங்க படைகள் வந்து குவிய இருக்கின்றன
கொஞ்சம் காத்திரு!
என்று கவிதை வரிகளில் காலித் பதில் அனுப்புகின்றார். பின்னர் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கலானார். அதன் முதற்கட்டப் பணியாக உவைமின் பின் அல்காஹில் அல் அஸ்லமியை அய்னுத் தமரின் பொறுப்பாளராக நியமித்தார். அடுத்த கட்டப் பணியாக காலிதின் பயணம் தொடங்கியது.
இராக்கிலிருந்து தூமத்துல் ஜன்தல் முன்னூறு மைல் தொலைவு. சிரியாவின் பாலைவனத்தில் சிறிதும் பயமின்றி அந்தச் சிங்கம், பத்து நாட்களில் தூமத்துல் ஜன்தலை அடைந்தது.
அன்னார் தூமத்துல் ஜன்தலுக்கு அருகில் வந்த மாத்திரத்திலேயே, இயாளைக் கருவருப்பதற்காக வந்திருந்த பல்வேறு கிளையாரின் படைகள் ஆட்டம் கண்டன; அரளத் துவங்கின.
பனூகலப், பஹ்ராஃ, கஸ்ஸான் ஆகியோர் தான் அந்தக் கிளையினர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே காலிதிடம் படுதோல்வியைக் கண்டவர்கள். அதனால் தான் இயாள் தலைமையிலான படையைப் பழிவாங்குவதற்காக தூமத்துல் ஜன்தலில் களமிறங்கியிருந்தனர்.
ஓட்டமெடுக்கும் உகைதிர்
களமிறங்கியிருக்கும் படையின் வீரர்களுக்குக் காலிதை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தூமத்துல் ஜன்தலின் அதிபர் உகைதிர் பின் அப்துல் அஜீஸ் அல்கின்தி என்பவர் காலிதை நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
“நான் காலிதை நன்கு அறிந்தவன். அவர் அருள் பாலிக்கப்பட்ட ஓர் அருட் பறவை! அவரைப் போன்று போர் பற்றிய கூர் பார்வை கொண்டவர் வேறு யாரும் இலர்! கூடவோ, குறையவோ அவர் முகத்தைப் பார்க்கும் படையினர் ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை. மக்களே! பல்வேறு குலப் படையினரே! என் சொல்லைக் கேளுங்கள். எனக்குக் கட்டுப்படுங்கள். காலிதிடம் உடன் படிக்கை செய்து கொள்ளுங்கள்” என்று உகைதிர் கூறுகின்றார்.
ஆனால் அவரது சொல் அங்கு எடுபடவில்லை. அதை உணர்ந்த அவர், “இனி மேல் காலித் மீது போர் தொடுப்பதை என்னால் தடுக்க முடியாது. நான் ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று உகைதிர் கூறி விட்டு, தூமத்துல் ஜன்தலை விட்டுத் தப்பி ஓடலானார்.
ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. காரணம், அவரது ஓடு பாதையில் காலித் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு விட்டார். அவரை இடை மறித்து, கைது செய்து விட்டார்.
(கைது செய்த உகைதிருக்கு, காலித் மரண தண்டனை வழங்கினார் என்று ஒரு கருத்து உள்ளது. உகைதிர் மதீனாவுக்கு அனுப்பப்பட்டார்; உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டு இராக்கிற்குச் சென்றார்; பின்னர் அய்னுத் தமரில் தமது இறுதி நாட்களைக் கழித்தார்; தாம் தங்கிய இடத்திற்கு தூமத் என்று பெயரிட்டுக் கொண்டார் என்று ஒரு கருத்து உள்ளது. இவ்வாறு உகைதிர் பற்றி இரு வேறு கருத்துக்கள் வரலாற்றில் நிலவுகின்றன)
உகைதிர், காலிதை எதிர் கொள்வது இது இரண்டாவது தடவை என்றும், ஏற்கனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உகைதிரை ஒரு முறை சந்தித்தார் என்றும் வரலாற்று நூற்களில் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்திகள் நபி (ஸல்) அவர்கள் தொடர்புடையவையாக இருப்பதாலும் அவற்றுக்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் இல்லாததாலும் அது பற்றிய விபரத்தை அடிக்குறிப்பில் இடம் பெறச் செய்துள்ளோம்.*
உகைதிர் பற்றி ஹதீஸ் நூற்களில் இடம் பெறும் ஆதாரப்பூர்வமான செய்தி இது தான்.
தூமத்துல் ஜந்த-ன் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2616
“தூமத்துல் ஜந்தல்‘ பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 3863
இந்தச் செய்திகள் மட்டுமே உகைதிர் குறித்து நபி (ஸல்) அவர்கள் காலத்துடன் தொடர்புடைய செய்திகளில் ஆதாரப்பூர்வமானவை. ஏனைய செய்திகள் பலவீனமாக இருந்தாலும் அவற்றை அடிக்குறிப்பாக இங்கு குறிப்பிடக் காரணம்,
நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே தூமத்துல் ஜன்தலைக் கைப்பற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதால் அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் இந்தச் சம்பவங்களை வரலாற்றுத் தொடரில் இடம் பெறச் செய்துள்ளனர்.
தூமத்துல் ஜன்தல் விஷயத்தில் இஸ்லாமிய அரசுகள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன்? என்பதற்கான விடையை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காணலாம்.
* நபி (ஸல்) அவர்கள் காலிதை, தூமத்துல் ஜன்தலில் இருந்த உகைதிரிடம் அனுப்பி வைக்கிறார்கள். இன்தாவைச் சார்ந்த அவரது பெயர் உகைதிர் பின் அப்து பின் மலிக். அவர் கிறித்தவர். அவர் தான் தூமத்துல் ஜன்தலின் அரசர் ஆவார். “அவர் ஒரு மாட்டை வேட்டையாடும் போது நீ காண்பாய்’ என்று காலிதிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலித் புறப்பட்டு கோட்டைக்கு அருகில் வந்து விட்டார். கோட்டை இப்போது காலிதின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. அது நல்ல பவுர்ணமி இரவு! அப்போது அரசர் தன் மனைவியுடன் மாடியில் இருந்தார். அப்போது கோட்டையின் வாசலில் ஒரு மாடு தன் கொம்புகளை வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவரது மனைவி, “இதைப் போன்ற ஒரு காட்சியை இதுவரை நீங்கள் கண்டதுண்டா?” என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதுவரை இவ்வாறு கண்டதில்லை” என்றார். “அப்படியானால் இந்த மாட்டை யார் கொண்டு வந்து விட்டிருப்பார்கள்?” என்று கேட்டாள். “யாரும் விட்டிருக்க மாட்டார்கள்” என்று அவர் பதில் கூறினார்.
உடனே கீழே இறங்கி, தன் குதிரையைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அதற்குச் சேணம் போடப்பட்டதும் அதில் ஏறி, மாட்டை வேட்டையாட உகைதிர் புறப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தாரும் புறப்பட்டனர். அவருடைய சகோதரரும் அவருடன் இருந்தார். அவரது பெயர் ஹஸ்ஸான். தங்கள் படையுடன் வாகனத்தில் புறப்பட்டதும், நபி (ஸல்) அவர்களின் குதிரைப் படை அவரைக் கைது செய்தது. அவருடைய சகோதரர் ஹஸ்ஸானும் கைது செய்யப்பட்டார்.
அவர் மேனியில் கிடந்த சட்டை தங்கத்தால் இழையப்பட்ட பட்டாடை ஆகும். காலித் அதை உருவிக் கொண்டார். நபி (ஸல்) அவர்களைச் சென்று சந்திப்பதற்கு முன்னால் அந்தச் சட்டையை அனுப்பி வைத்தார். பின்னர் உகைதிரை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் காலித் ஆஜர்படுத்தினார்.
நபி (ஸல்) அவர்கள், உகைதிரின் உயிருக்குப் பாதுகாப்பு அளித்து, இஸ்லாமிய அரசுக்குத் திரை செலுத்துமாறு உடன்படிக்கை செய்து அவரை விடுதலை செய்தார்கள். இதன் பின்னர் உகைதிர் தனது ஊருக்குத் திரும்பி விட்டார்.
இவ்வாறு இப்னு இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.
நூல்: ஸாதுல் மஆத்
பாடம்: தபூர் போக்
“இரண்டாயிரம் ஒட்டகங்கள், எண்ணூறு ஆடுகள், நானூறு உருக்குச் சட்டைகள் தர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உகைதிரிடம் உடன்படிக்கை செய்தார்கள்’ என்ற குறிப்புடன் இதே செய்தி இப்னு ஸஅதின் தபகாத்துல் குப்ராவில் பதிவாகியுள்ளது.
நூல்: ஸாதுல் மஆத்
மேற்காணும் இந்தச் சம்பவம் ஹிஜ்ரி 9ல் நடைபெற்றுள்ளது என்று அறிய முடிகின்றது. ஏனெனில் தபூக் போர் ஹிஜ்ரி 9ல் தான் நடைபெற்றது.
இதற்கு முன்பு தூமத்துல் ஜன்தலுக்கு நபி (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு படை சென்றுள்ளது. இது பற்றி இப்னு கஸீரின் அல்பிதாயா வன்னிஹாயாவில் இடம் பெறும் செய்தி:
நபி (ஸல்) அவர்கள் சிரியாவின் தாழ்வுப் பகுதிகளுக்குச் செல்ல விரும்பினார்கள். அப்போது, தூமத்துல் ஜன்தலில் ஒரு பெருங் கூட்டம் உள்ளது, அந்தக் கூட்டம் அவ்வூரைத் தாண்டிச் செல்லும் மக்களிடம் கொள்ளையடிக்கின்றது என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. உடனே ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தூமத்துல் ஜன்தலை நோக்கிப் புறப்பட்டார்கள்.
இந்தப் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை மேற் கொண்டார்கள். பகல் முழுவதும் ஓய்வெடுத்துக் கொண்டு இரவில் மட்டும் பயணம் மேற்கொண்டார்கள்.
(தூமத்துல் ஜன்தல், மதீனாவிலிருந்து 900 கி.மீ. என்பதால்) நபி (ஸல்) அவர்கள் ஒரு வழிகாட்டியை நியமித்திருந்தார்கள்.
தூமத்துல் ஜன்தலை நெருங்கியதும், பனூ தமீம் கிளையாரின் ஆட்டு மந்தை மற்றும் ஒட்டக மந்தையை அந்த வழிகாட்டி நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அதன் மீது தாக்குதல் தொடுத்து அவற்றைக் கைப்பற்றினார்கள். பிடிபட்டவர் பிடிபட்டனர்; தப்பி ஓடியவர்கள் தப்பி விட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் தூமத்துல் ஜன்தலில் களமிறங்கினார்கள். ஆனால் அங்குள்ளவர்கள் ஊரைக் காலி செய்து விட்டு ஓடி விட்டனர். சில நாட்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கேயே தங்கி, காலி செய்து விட்டுப் போனவர்களைக் கண்டுபிடித்து வருமாறு தமது படைகளைப் பல்வேறு திசைகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் படையினர் முஹம்மது பின் ஸலமா என்பரைக் கைது செய்தனர். அவரிடம் அந்த ஊர்வாசிகளைப் பற்றி வினவிய போது, நேற்றே அவர்கள் ஓடி விட்டனர் என்று கூறினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்கவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
இது தான் அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தியாகும்.
இது ஹிஜ்ரி 5ல் நடந்ததாக இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவங்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள் முதல் தடவையாகவும், காலித் தலைமையிலான படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தது இரண்டாவது தடவையாகவும் ஏற்கனவே தூமத்துல் ஜன்தலுக்குப் படையெடுத்துச் சென்றதாக இந்தச் சம்பவங்களில் கூறப்பட்டுள்ளது.
படிப்பதற்குச் சுவையாகவும், சுறுசுறுப்பாகவும் அமைந்த இந்தச் சம்பவங்கள் வரலாற்று நூற்களில் தான் இடம் பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்பு உடையவையாக இருப்பதால் அந்தச் செய்திகளை ஏற்றுக் கொள்வதற்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளார்கள்.
அந்த விதிமுறைகளுக்கு உட்படாத செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தூமத்துல் ஜன்தல் தொடர்பாக நபி (ஸல்) அவர்களுடன் இணைத்து வரும் செய்திகள், சரியான அறிவிப்பாளர் தொடரில் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்படவில்லை. எனவே இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்கள் பற்றி இடம் பெறும் செய்திகள் ஒரு சிறு குறிப்பாக இருந்தாலும் சரியான அறிவிப்பாளர் வழித்தடத்தில் வந்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே நமது நிலைபாடு. எனவே இந்தச் செய்திகளை நாம் தொடரில் இடம் பெறச் செய்யவில்லை.
————————————————————————————————————————————————
விதி ஓரு வரையாவிலக்கணம் தொடர்: 2
வஹீயில் முரண்பாடு வரலாமா?
வஹீயில் முரண்பாடு வரலாமா?
இந்தக் கேள்வி நியாயமானது தான்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளாகட்டும்! அதன் சட்ட திட்டங்களாகட்டும்! அவை அனைத்தும் அறிவுப் பூர்வமானவையே! தர்க்க ரீதியாக சரியென்று நிரூபிக்கத் தக்கவைகளே! இஸ்லாத்தின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்குத் தர்க்க ரீதியான பதில் உண்டு.
ஆனால் விதி பற்றிய முரண்பாட்டிற்கு இஸ்லாம் தர்க்க ரீதியான பதிலைத் தரவில்லை.
ஏனெனில் அதை விளங்கும் அளவிற்கு அறிவை அல்லாஹ் மனித சமுதாயத்திற்குத் தரவில்லை. இதை நானாகச் சொல்லவில்லை. எந்த அல்லாஹ் இதைக் குர்ஆனில் சொன்னானோ அதே அல்லாஹ் தான் அதே குர்ஆனில் இதை விளங்குமளவிற்கு நமக்கு ஞானமில்லை என்பதையும் கூறுகிறான்.
“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்” என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். “உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை” என்று கேட்பீராக!
அல்குர்ஆன் 6:148
“உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா?” என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் இது பற்றிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டான்.
எது பற்றிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை அல்லாஹ்வே அறிவித்து விட்டானோ அது பற்றி தீர்வு சொல்லி அல்லாஹ்வுக்கே ஆசானாகும் பாவத்தைச் செய்ய ஒரு போதும் நாம் தலைப்படக் கூடாது. மக்கள் நம்மை மடையர்களாகச் சித்தரித்தாலும் சரியே! மடையர்களும் விதியில் கேள்வி கேட்டு, தாம் அறிவாளிகளென தம்பட்டம் அடிப்பதும் இதனால் தான்.
இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒவ்வொருவரும் தானே முதலில் இதைக் கண்டுபிடித்தது போல நினைக்கிறார்கள்
இது 1400 ஆண்டுக்கு முன்னதாகவே கேட்கப்பட்ட கேள்வி.
நாங்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களின் முகம் சிவக்குமளவுக்கு அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் கோபமடைந்தார்கள். “இப்படித் தான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்களா? இதைத் தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாகக் கொண்டு வந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகத் தான் உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: அஹ்மது 6381,
இப்னுமாஜா 82, திர்மிதி 2216
இந்த ஹதீஸிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? உலகத்திலேயே இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்து வைத்துள்ள நபிகளாரே இந்த முரன்பாட்டிற்கு விளக்கம் தராத போது நாம் எம்மாத்திரம்? மேலும் விதி பற்றி சர்ச்சை செய்வதை அவர்கள் தடுத்துள்ள போது நாம் அதற்கு விளக்கம் சொல்ல முனைவது அறிவீனம்.
எதைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லையோ அது சம்பந்தமாக கேள்வி கேட்பதும் மடமை. பதில் கூறுவதும் மடமை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமையினால் தான் விதி பற்றிக் கேள்வி கேட்கும் மேதாவிகளும் பதில் கூறும் மேதாவிகளும் உருவாகியுள்ளனர்.
உதாரணத்திற்கு எப்பாயிரெவாடிலா என்ற ஒன்று உண்டு. இதைப் பற்றி யாருக்குமே தெரியாது என்று வைத்துக் கொள்ளோம். இதைப் பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும் அது மடமை. அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் அது மடமை.
விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யென்றாகி விடுமா?
விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பது தான் உண்மையில் அறிவுப்பூர்வமானது என்பதை நிரூபிப்பது தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
விதி பற்றி சர்ச்சை எழுப்புவோரை இரண்டு பிரிவினராகப் பிரித்து, அவர்களின் வாதங்களுக்குப் பதிலளிக்க முனைவோம்.
- முஸ்லிம்களாக இருந்து அல்லாஹ்வை நம்பிக் கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்
- நாஸ்திகவாதிகளாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்கள்
முஸ்லிம்களாக இருந்து கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்
இப்பிரிவினரைப் பொறுத்த வரை எதிர்காலத்தை விதியின் மீது போட்டு அமல் செய்யாமல் இருப்பதற்கே அவர்கள் விதியில் சர்ச்சை செய்கின்றனர். “அல்லாஹ் நாடினால் எனக்குச் சுவர்க்கம் கிடைக்கும். நான் என்ன அமல் செய்தாலும் அல்லாஹ் நாடிய படியே நடக்கும். அல்லாஹ் நாடினால் தான் எனக்கு அமலே செய்ய முடியும்” என்று கூறி விதியின் மீது பழியைப் போட்டு விட்டு அமல் செய்யாமல் இருந்து விடுகின்றனர்.
இவர்களின் இந்தக் கேள்வி கூட ஏற்கெனவே ஸஹாபாக்களினால் கேட்கப்பட்டு நபி (ஸல்) அவர்களால் பதிலளிக்கப்பட்ட பழைய கேள்வி தான்.
எனவே இவர்களின் கேள்விக்கு நபிகளாரின் கூற்றையே பதிலாகத் தருகிறோம்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பகீஉல் ஃகர்கத் எனும் பொது மைய வாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் “சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் “அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் “இல்லை. நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லவர், கெட்டவர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறி விட்டு, பிறகு “எவர் (இறைவழியில்) வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்” எனும் (92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 6605
ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம் (தெரியும்)” என்று சொன்னார்கள். அவர் “அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஒவ்வொருவரும் “எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ‘ அல்லது “எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி 6596
இவ்வாறு கேள்வி கேட்பவர்களிடம் சென்று, அல்லாஹ்வை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டுப் பாருங்கள். உடனே ஆம் என்ற பதிலையே தருவார்கள்.
அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பியிருந்தால் விதி பற்றியும் சேர்த்தே இவர்கள் நம்பியுள்ளார்கள் என்பதை ஏன் தான் விளங்க மறுக்கிறார்களோ?
இறைவனை நம்புவதாக இருந்தால் அவனுக்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாம் தெரியும் என்று நம்புவதே சரியானது. அறிவுப்பூர்வமானது.
அப்படித் தெரியாதவன் இறைவனாக இருக்கவே லாயக்கற்றவன்.
உதாரணத்திற்கு, நாளை நீங்கள் வெளி நாடு செல்லவிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இது இறைவனுக்குத் தெரியுமா? என்று கேட்கும் போது, தெரியாது என்று நீங்கள் சொன்னால் அப்படிப்பட்ட ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நமக்கு எவ்வாறு நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்றாகிறது.
நாளை நான் வெளிநாடு செல்வது இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
எனவே அண்ட சராசரங்களின் எதிர்காலம் பற்றிய அறிவு, ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர் காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது? அவன் சுவனம் செல்வானா? நரகம் செல்வானா? என்ற விஷயங்கள் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று நம்பினால் விதியையும் சேர்த்து நம்பியவர்களாகிறோம்.
மேலும் இவர்கள் உலக விஷயங்களைப் பொறுத்த வரை விவரமானவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் நாடியது தான் கிடைக்கும் என்று தொழில் செய்யாமல் இருப்பதில்லை. நோய் வந்தால் அல்லாஹ் நாடியபடி நடக்கும் என்று வீட்டில் இருப்பதில்லை.
அல்லாஹ் எழுதியிருந்தால் சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று அமல் செய்யாமல் இருந்தது போன்று தொழில் செய்யாமல், வைத்தியரிடம் செல்லாமல் இருங்களேன். அல்லாஹ் எழுதி வைத்தது தானே கிடைக்கும் என்று இவர்களிடம் கேட்டுப் பாருங்கள். திரு திரு என்று முழிப்பார்கள்.
நமக்கு எது அளக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. எனவே தான் நாம் முயற்சி செய்கிறோம் என்பதைத் தவிர வேறு பதில் இதற்கு இல்லை.
உலக நடப்பைப் போன்றே ஆகிரத்திலும் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.
எனவே நமது வேலை, எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவது தான் என்று செயல்பட்டால் சரியாகி விடும்.
உலக பாக்கியங்களைப் பொறுத்த வரை அல்லாஹ் எல்லாம் விதிப்படியே என்று கூறி விட்டான். இதில் மாற்றுக் கருத்து குர்ஆனில் இல்லை. ஆனால் மறுமையில் நமது நிலை என்ன என்பது பற்றிக் குர்ஆன் இரு வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளது. இதை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் (இவ்வுலகைப் பொறுத்த வரை) எல்லாம் விதிப்படியே நடக்கும் என்ற தெளிவான விஷயத்தில் இவர்கள் விதி இல்லாதது போல் செயல்படுவார்களாம். இரு விதமாகக் கூறப்பட்டுள்ள மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு, குர்ஆனின் ஒரு பகுதியை மறுத்து எல்லாம் விதிப்படியே என்று வணக்கம் புரிய மாட்டார்களாம். என்னே இவர்களின் ஞானம்?
ஒரு வாதத்திற்காக, ஒவ்வொருவரின் விதியும் அவரவருக்குத் தெரியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் இறக்கப் போகும் ஒரு மனிதனுக்குத் தனது விதி தெரியும் என்றால் என்ன நடக்கும்? நாளை விபத்தொன்றில் சிக்கப் போகும் ஒருவனது விதி அவனுக்குத் தெரியும் என்றால் அவனது நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். விதி தெரிந்த எந்தவொரு மனிதனாலும் நிம்மதியாக வாழ முடியாது. உலகம் சீராக இயங்க வேண்டும் என்பதற்காகக் கூட விதியை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)
இஸ்லாமிய வரலாற்றில் விதியில் சர்ச்சை செய்து இரண்டு சாரார் வழிகெட்டனர்.
- கத்ரியாக்கள்
- ஜபரிய்யாக்கள்
இந்தக் கூட்டங்கள் வழிகெட்டுச் செல்ல அடிப்படைக் காரணமே விதியில் சர்ச்சை செய்தது தான்.
அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுள்ள நாம் உலகின் அனைத்து அம்சங்களும் விதிப்படியே நடக்கிறது என்று நம்புவதன் மூலமே நமது ஈமான் பூர்த்தியடையும்.
முஸ்லிம்களாகிய நாம் விதியைப் பொருந்திக் கொண்டு அதில் சர்ச்சை செய்வதிலிருந்து விலகிக் கொள்வோமாக!
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————
ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 9
மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?
குர்ஆனுடன் ஒத்துப் போகாத விளக்கம்
மதம் மாறிகளைப் பற்றி குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. இந்த இடங்களில் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைப் பொருத்திப் பார்த்தால் அசாத்தியமான விஷயங்களைக் குர்ஆன் சொல்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டி வரும். எந்த வகையிலும் இவர்கள் கூறும் சட்டத்தை வசனங்களுடன் பொருத்த முடியாது.
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.
அல்குர்ஆன் 4:137
இஸ்லாத்தை ஏற்றுவிட்டு பின்னர் மறுத்தவனைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்று விட்டு மறுத்தவுடன் மதம் மாறியவன் கொல்லப்பட்டு விடுவான். மீண்டும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்று மறுத்த பிறகும் இஸ்லாத்தை ஏற்பதைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இரண்டாவது தடவையும் ஒருவனால் எப்படி இஸ்லாத்தில் நுழைந்திருக்க முடியும்? இதன் பின்பு அவன் எப்படி மீண்டும் மறுத்திருக்க முடியும்? மதம் மாறியவர்கள் கொல்லப்படாமல் இருந்தால் தான் இது சாத்தியம்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:217
மதம் மாறியவர்களைக் கொல்வது சட்டமாக இருந்திருந்தால் “உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக கொல்லப்பட்டவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும்’ என்று அல்லாஹ் கூறியிருப்பான். பொதுவாக எல்லோரும் எப்படி மரணிக்கிறார்களோ அது போன்ற மரணத்தையே மதம் மாறியவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
மதம் மாறியவர்கள் திருந்துவதற்கு அவர்கள் மரணிக்கும் வரை அல்லாஹ் கால அவகாசம் கொடுக்கிறான். அதற்குள் அவர்கள் திருந்தி விட்டால் அவர்கள் செய்த செயல்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் நரகிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மரணிக்கும் வரை திருந்துவதற்கு அவகாசம் அல்லாஹ்வால் தரப்பட்டிருக்கும் போது மதம் மாறியவுடன் அவர்களைக் கொல்லுவது என்பது இறை வாக்கிற்கு எதிரான செயல்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 3:86
இந்த வசனத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ்வும். அவனது தூதரும் சொல்லவேயில்லை என்று முடிவு செய்து விடலாம். மதம் மாறியவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. மதம் மாறியதற்காகக் கொல்லப்பட்டு விட்டவர்களுக்கு நான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னால் அது பொருத்தமாக அமையாது. மாறாக அவர்கள் உயிருடன் இருந்தால் தான் இந்த வாசகத்தைக் கூற முடியும்.
மதம் மாறிய பிறகு திருந்தியவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைவனுடைய இந்த மன்னிப்பு மனிதன் மரணிக்கும் வரை இருக்கிறது. மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டு விட்டால் அவர்களால் எப்படித் திருந்த முடியும்? அல்லாஹ் அவர்களை எப்படி மன்னிப்பான்?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
இந்த வசனத்தில் எவ்வாறு அழைப்புப் பணியைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். விவேகம், அழகிய அறிவுரை, அழகான வாதம் இவற்றின் மூலம் அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிடுகிறான். ஒருவரை நிர்பந்தித்து இஸ்லாத்திற்கு இழுத்து வருவது விவேகமாகுமா? அழகிய அறிவுரையாகுமா? அல்லது அழகிய விவாதமாகுமா?
நிர்பந்தம் இருந்தால் விவாதம் எதற்கு?
இணை வைப்பாளர்கள் வைத்த வாதங்களை திருக்குர்ஆன் குறிப்பிட்டுக் கூறி அதற்கான பதிலையும் தருகிறது. சிந்தித்துப் பார்த்து இம்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் படி கூறுகிறது.
முஸ்லிம்கள் கூட அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கும் போது செவிடர்கள், குருடர்களைப் போன்று அதை ஏற்கக் கூடாது என்று உபதேசம் செய்கிறது.
இஸ்லாம் நிர்பந்தத்தைப் போதிக்கின்ற மார்க்கமாக இருந்தால் கண்மூடித்தனமாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக சிந்திக்கும் படி ஏன் சொல்கிறது? நிர்பந்தம் உள்ள இடத்தில் சிந்தனைக்கு வேலை இல்லை.
மாற்றார்களிடத்தில் அழகிய முறையில் விவாதம் செய்யும் வழிமுறையை இஸ்லாம் கற்றுக் கொடுப்பதாலும், மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் இஸ்லாம் என்பது சிந்தித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய மார்க்கம் தான்; யாரையும் நிர்பந்தமாக இஸ்லாத்தில் இணையச் சொல்கின்ற மார்க்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்!
அல்குர்ஆன் 29:46
குôஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் ஜிஹாத் செய்யுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. கொலை மிரட்டல் விடுத்து நிர்பந்திக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் குர்ஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் தர்க்கம் செய்யுங்கள் என்று கட்டளையிடாது. ஏனென்றால் விவாதம் செய்து அவர்களை இஸ்லாத்திற்குக் கொண்டு வருவதை விட நிர்பந்தம் செய்தால் பயந்து கொண்டு எளிதில் இஸ்லாத்தில் நுழைந்து விடுவார்கள். ஆனால் இதை அல்லாஹ்வோ. அவனது தூதரோ விரும்பாததால் விவாதம் செய்வதையே கற்றுத் தந்துள்ளார்கள்.
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
அல்குர்ஆன் 25:52
குர்ஆன் கூறாத தண்டனை
குர்ஆன் பல இடங்களில் மதம் மாறியவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறவே இல்லை. விபச்சாரம், அவதூறு, திருட்டு போன்ற தவறான செயல்களுக்குத் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் தண்டனைகளைத் தருகிறது. ஆனால் தவறான நம்பிக்கைகளுக்கு மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைக் கூறியே எச்சரிக்கிறது.
இந்த உலகத்தில் இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்தத் தண்டனையைக் கூறி மனிதர்களை எச்சரித்திருக்கும். ஆனால் திருட்டு, அவதூறு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு இந்த உலகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையைக் கூறிய குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவே இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.
அல்குர்ஆன் 5:54
மதம் மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் கூட இது தான். ஆனால் இந்த இடத்தில் மதம் மாறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறாமல் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் இன்னொரு கூட்டத்தை நான் கொண்டு வருவேன் என்று தான் சொல்கிறான்.
ஒரு உயிரைக் கொல்வது சம்பந்தமான இந்தப் பெரிய பிரச்சனைக்கு சரியான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குர்ஆனுடன் மோதுகின்ற விளக்கத்தைத் தான் இவர்களால் கூற முடிகிறது.
பெயரளவில் முஸ்லிமாக வேண்டுமா?
மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றால் தான் அவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியும். மதம் மாறியவனுடைய உள்ளம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளம் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு மருத்துவம் காண அவனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது, அவனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்ளைக் கொடுப்பது விவாதம் புரிவது போன்ற வழிகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்.
கொலை செய்வதாக அவனை அச்சுறுத்துவது ஒரு போதும் இந்நோய்க்குரிய மருந்தாகாது. எனவே தான் மதம் மாறியவர்களுக்கு மறுமையில் தண்டனை இருப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் விதிக்கவில்லை.
உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவன் இஸ்லாத்திற்கு வந்தால் அவனுடைய இஸ்லாம் அல்லாஹ்விற்குத் தேவையானதல்ல. அவனது வணக்க வழிபாடுகள் நற்செயல்கள் இவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
அல்குர்ஆன் 9:54
எந்தக் காரியத்தில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லையோ அந்த வேலையைச் செய்யுமாறு இஸ்லாம் சொல்லாது. நிர்பந்தமாக இஸ்லாத்தில் தள்ளப்பட்டவனுக்கு இந்த நன்மையான காரியங்களால் எந்த விதமான நன்மையும் மறுமையில் கிடைக்காது.
மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் தூய இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்காது. மாறாக இஸ்லாத்தை மனதளவில் வெறுத்துக் கொண்டு, இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படும் நயவஞ்சகர்களைத் தான் உருவாக்கும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்