நாம் தமிழர் கட்சியின் சீமானும் பாஜகவின் அண்ணாமலையும் நூறு நாள் வேலைத்திட்டம் பயனற்றது எனும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாகவே சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்து விவாதப் பொருளாகியுள்ளது.
முதலில் நூறு நாள் வேலைத்திட்டம் என்பது என்ன? என்று அதன் பின்னணியை அறிவோம்.
கிராமப்புறங்களில் வேலையின்றி, வருவாயின்றி அவதிப்படும் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்பது இதன் பெயர்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2005ல் இது அறிமுகமானது. 2005ல் அறிமுகமானாலும் 2008ல் தான் நாடு முழுவதும் இத்திட்டம் விரிவானது.
இத்திட்டத்தில் இணைவோருக்கு வருடத்திற்கு 100 நாள்கள் வேலை வழங்குவார்கள்.
இந்நாள்களில் சாலைகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளை அமைப்பது உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப் படுவார்கள்.
கிராமப்புற பஞ்சாயத்து இதை கவனித்து இப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
துவக்க காலத்தில் ஒரு நாள் கூலி 80 ரூபாய் என்றிருந்து இப்போது 273 ரூபாய் ஆகியுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் ஒருவருக்கு 15 நாள்களை தாண்டிவிட்டாலே ஊதியம் வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதால் கிராமப்புற ஏழை மக்களிடத்தில் இத்திட்டம் வரவேற்புக்குரியதாக உள்ளது.
ஒரு நாள் கூலியாக 273 வூ 100 ஒரு வருடத்திற்கு 27,300 ரூபாய் ஒரு ஏழைக்கு கிடைக்கின்றது எனும் அடிப்படையில் கிராமத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் திட்டமாகவும் திகழ்கிறது.
எனினும் அனைவருக்கும் இவ்வேலை 100 நாட்கள் கிடைப்பதில்லை. சராசரியாக ஐம்பது நாட்கள் கிடைத்தாலே பெரிது என்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை தான் பயனற்றது என்று சிலர் கூறுகிறார்கள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் கேலிக்கூத்தாக இருக்கிறது.
ஊழல் நடைபெறுவதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள்.
இந்தியாவில் ஊழல் இல்லாத துறை ஏதும் உண்டா? ஒரு துறையில் ஊழல் இருப்பதாலேயே அதை ரத்து செய்ய வேண்டும் என்பதா?
ஊழல் இல்லாத கட்சிகளே இல்லை எனும் நிலையே தமிழகத்தில் உள்ளது. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளையும் கலைக்க வேண்டும் என்பார்களா?
அரிசி, பருப்பு வழங்கும் நியாய விலைக் கடையிலும் தான் ஊழல் நடைபெறுகிறது. அதனால் நியாய விலைக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது அறிவுடமையாகுமா?
கிராம அலுவலர் அலுவலகம் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் இருக்கத்தான் செய்கிறது. ஆகையால் அனைத்து அரசு அலுவலகங்களையும் இழுத்து மூடுவது அதற்குரிய தீர்வாகுமா?
சாலை போடுவதில் ஊழல் நடைபெற்றால் சாலையே போட வேண்டாம் என்று முடிவெடுப்பார்களா?
ஆவின் ஊழல், நிலக்கரி ஊழல், ரபேல் ஊழல் என்று எதில் தான் ஊழல் இல்லை இந்திய தேசத்தில்?
ஊழல் நடைபெறா வண்ணம் மக்கள் பணி நடப்பதை உறுதி செய்வதே ஒரு நிர்வாகத்தின் வேலை.
100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றால் அதைக் கண்காணித்து சீர் செய்ய வேண்டும். அது தான் அறிவுள்ள நபர் எடுக்கும் முடிவாகும்.
ஒரு நாள் ஊதியத்திற்கே அவதிப்படும் ஏழைகளின் குறைந்தபட்ச வேலைவாய்ப்பை ஊழலின் பெயரால் பறிக்கச் சொல்லி யாரும் கேட்க மாட்டார்.
100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. எந்த நன்மையும் இல்லை என்று இன்னொரு காரணத்தையும் கூறுகிறார்கள்.
இது ஊகம் தானே தவிர தரவுகளின் அடிப்படையில் சொல்லப்படும் உண்மையல்ல.
கடந்த காலங்களை விட தற்போது அரிசி, சிறுதானியங்களின் உற்பத்தி கனிசமாக உயர்ந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அரிசியை எடுத்துக் கொண்டால் 35 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியிலிருந்து தற்போது 72 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எனும் நிலையை அடைந்துள்ளது.
சிறு தானியங்கள் 13 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எனும் நிலையிலிருந்து 35 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எனும் நிலையை அடைந்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயம் நலிவடைந்து விட்டது என்பது உண்மையானால் உற்பத்தியின் அளவு குறைந்து இருக்க வேண்டுமே? அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இத்திட்டத்தில் இணைவோர் யாரும் வேலை செய்வதில்லை. வெறுமனே சென்று விட்டு மரத்தடியில் தூங்கி விட்டுப் பிறகு வந்து விடுகிறார்கள்.
இத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை மறுக்க முடியாது. கிராமப்புற பஞ்சாயத்து தான் இதைக் கண்காணித்து நிறைவேற்ற வேண்டும் என்று இருக்கும் போது அதற்குரிய பொறுப்பாளர்கள் முறையாக கண்காணித்து வேலை வாங்க வேண்டும். இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சீர் செய்ய வேண்டும். அதற்குரிய வழிவகைகளை எடுத்துக் கூற வேண்டும்.
அதை விடுத்து ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் இத்திட்டதை இது போன்ற காரணங்களால் பயனற்றது என்று கூறுவது அபத்தமானது.
பேரிடர் காலத்தில் கிராமப்புற மக்களுக்கு பொருளாதார ரீதியில் பேருதவியாக இருந்தது 100 நாள் வேலைத்திட்டம் தான் என்று டவ்ன் டூ எர்த் எனும் ஆங்கில ஆய்வு இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை இந்தத் திட்டத்தின் கீழ் தமிழக கிராமங்களில் மட்டும் செலவிடப்பட்டுள்ளது.
அதிகளவில் ஏழைகளை சென்றடையும் ஒரு திட்டத்தை கண்காணிப்பு குறைபாடுகள் இருப்பதாலே ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப்பட வேண்டும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது சீரான கால இடைவெளியில் இத்திட்டத்தினால் செய்யப்பட்ட பணிகள் மக்களுக்கு அறிக்கையாக தரப்பட வேண்டும்.
இதை தமிழக அரசு கவனித்து செயலாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.