அரசாங்கத்தின் வேலையை மக்கள் உளவு பார்ப்பதா?

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுமத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என சுமார் 1200 நபர்களின் அலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக உலகளாவிய பிரபல நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தற்போதைய மத்திய அமைச்சர்களில் ஒரு சிலர் தொடங்கி நீதித்துறை மற்றும் ஊடகத்துறையினரின் பெயர்களும் இந்த ஒட்டுக் கேட்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இது நிச்சயமாக மோடி அரசின் எதேச்சதிகார செயலாகவே தெரிகிறது.
ஏனெனில் தங்களது நிறுவன உளவு செயலிகளை தனி நபர்களுக்கு விற்பதில்லை என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ குழுமம் தெரிவிக்கின்றது.
அரசிற்கு எதிராக குரல் எழுப்புவோரை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவும் அவர்கள் மீது பொய் வழக்குகளை அள்ளிவீசி, அடக்கி ஒடுக்கவுமே உளவு வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளதாக சாமானிய மக்கள் சந்தேகிக்கின்றனர்.
அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தாலே தேசத்துரோகம் எனும் முத்திரை குத்திப் பழகி போன பாஜக அரசிற்கு தங்களுக்கு வேண்டாதவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த நெடுநேரம் ஆகாது.
எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என்றில்லாமல் ஊடக செய்தியாளர்களும் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச பிரபல நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திரிக்கையாளர்கள் உளவு பார்க்கப்பட வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது வழக்கம் போல இந்த விவகாரத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுக்கின்றது மோடி அரசு.
இவர்களது கூற்றை எப்படி நம்ப முடியும்?
சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் எத்தனை நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது மாநிலங்கள் வழங்கிய அறிக்கையின் படி இந்தியாவில் யாரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளனர்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவே திணறியதையும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாததால் இறந்து போன மனிதர்களை எரியூட்ட வரிசையில் காத்திருந்த பேரவலத்தையும் எந்த இந்தியனும் மறக்க முடியாது.
இந்தக்காட்சிகளை எல்லாம் மொத்த உலகமும் பார்த்தன. ஆனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஒருவரும் இறக்கவில்லை என ஒன்றிய அரசு பதிலளிக்கின்றது.
இது தான் இவர்களது நேர்மை.
இத்தகைய நேர்மைமிகு அரசு நாங்கள் யாரையும் ஒட்டுக் கேட்கவில்லை என கூறுவதை நம்ப முடியுமா?
மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டுமே தவிர மக்களை வேவு பார்ப்பதில் அல்ல.
சர்வதேச நாளேடுகளால் வெளிப்படுத்தப்பட்ட பெகாசஸ் உளவு விவகாரம் இந்திய நாட்டில் உள்ள அனைவரது தனிநபர் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை கொண்டாட நெருங்கும் இவ்வேளையில் தனிநபர் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள இந்நிகழ்வு பெருத்த அவமானகரமானது.
அரசின் இத்தகு எதேச்சதிகார போக்கிற்கு முடிவு கட்டும் வரை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கைவிடக் கூடாது.