திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள ஏர்வாடியில் பழமையான சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் உள்ளது. அப்பள்ளி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்கள்.
அப்புகாரின் விவரம் இது தான். பள்ளிவாசலுக்கு தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் நியமனம் செய்து பல தலைமுறையாக நாங்களே நிர்வகித்து வருகிறோம்.
இந்நிலையில் வஹ்ஹாபி கொள்கை உடைய ஒரு சிலர் பள்ளிவாசல் நிர்வாகத்தில் குழப்பம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு இருக்கின்றது.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுதி அதை புகாராக கலெக்டரிடம் கொடுத்துள்ளார்கள். கலெக்டருக்கு அனுப்பிய புகார் கடிதத்தை ஒரு சில பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான செய்தி என்றால் தினமலர் சும்மா விடுமா என்ன? அதனால் தான் தம் விருப்பம் போல தலைப்பிட்டு அச்செய்தியை வெளியிட்டு தமது அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர்.
இது பற்றி ஏர்வாடி ஊர் மக்களிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்ன தகவல்கள் முற்றிலும் இதற்கு நேர்எதிராக உள்ளன.
பள்ளிவாசல் நிர்வாகிகள் சொல்லும் புகார்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்று ஊர் மக்கள் தரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
பள்ளிவாசல் நிர்வாகிகள் பல வருடங்களாகவரவு செலவு கணக்கு காட்டவில்லை. கணக்கு காட்டாமல் இருப்பதை பார்க்கும் போது முறைகேடான செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்று அப்பகுதி மஹல்லா மக்கள் அஞ்சுகின்றனர். எனவே இருக்கும் நிர்வாகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி புதிய நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்கள் யாவரும் சுன்னத் ஜமாஅத் அமைப்பை சார்ந்தவர்களே, தங்கள் மீது குற்றம் சாட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும் எதிர் கொள்ள துணிவு இல்லாத காரணத்தாலும் ஏதேதோ கதைகளைக் கட்டவிழ்த்து விட்டு திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
தங்களை குற்றம் சாட்டுவோர் மீது வஹ்ஹாபிகள், பள்ளிவாசலை கைப்பற்ற முயற்சி, வெளிநாட்டு சதி என்றெல்லாம் முத்திரை குத்தி பள்ளிநிர்வாகத்தை தங்கள் வசமே வைத்துக் கொள்ள மோசடிக் கும்பல் முயல்கிறது.
இது தான் ஏர்வாடி மக்கள் தரும் தகவலாக உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஓய்வு பெற்ற உளவுத்துறை உயர் அதிகாரி கூறியதாக தினமலர் ஒரு கருத்தை கூறுகிறது.
தமிழகத்தில் காலம் காலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்ததாகவும் தர்கா கூடாது, தாயத்து கூடாது என்று கூறும் வஹ்ஹாபிகள் தான் அம்மத நல்லிணக்கத்தை கெடுத்ததாகவும் அந்த உளவுத்துறை உயர் அதிகாரி சொன்னாராம். இதுவெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை.
தினமலரின் செய்திகளை மூன்று வகைகளில் அடக்கி விடலாம்.
மோடி, பாஜக புகழ்பாடுவது
கள்ளக்காதல், திருமணத்தை மீறிய தகாத உறவுகள் பற்றி விரசத்துடன் எழுதுவது
முஸ்லிம்களுக்கு எதிரான பொய் செய்திகளைப் பரப்புவது
உளவுத்துறை விஷயம் இதில் மூன்றாம் ரகத்தை சார்ந்ததாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தென்றால் உடனே பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி சொன்னார் அமைச்சர் சொன்னார் என்று பொய்களை கட்டவிழ்த்து முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்குவதில் என்றுமே தினமலருக்கு முக்கிய இடம் உண்டு.
ஒரு வேளை உளவுத்துறை அதிகாரி சொன்னதாகவே வைத்துக் கொண்டாலும் இது அறிவுக்கு சம்பந்தமில்லாத கருத்தாகும்.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் தர்கா தாயத்து மாந்தி£¦கம் கூடாது என்ற பிரச்சாரத்திற்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை.
தர்கா கூடுமா கூடாதா என்பதெல்லாம் ஒரு மதத்திற்குள் ஏற்படும் கருத்து அபிப்பிராயங்கள் தொடர்புடையவை ஆகும். ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு கருத்து இருக்கும்.
சைவத்திற்கும் வைணவத்திற்கும் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
கிறித்தவர்களில் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டோஸ்டன்ட் பிரிவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஒவ்வொரு மதத்தை பின்பற்றுவோரிடத்திலும் இப்படியான கருத்து மோதல்கள் இருப்பது இயல்பானது. அனைத்து தரப்பாரும் தமது கருத்தையே சரியென்றும் மாற்றாரின் கருத்துகளை தவறெனவும் பிரச்சாரம் செய்வார்கள்.
அது போலத்தான் முஸ்லிம்களில் தர்கா, தாயத்து, மாந்திரீகம் இவையெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கருதுவோரும் உள்ளனர். அது எல்லாமே சரிதான் என்று கருதுவோரும் உள்ளனர்.
இதில் எது சரி என்பதை இஸ்லாத்தின் மூலாதாரங்களான திருக்குர்ஆனும் நபிகளாரின் கூற்றுகளின் அடிப்படையிலும் முடிவு செய்ய வேண்டும்.
தர்கா, தாயத்து மாந்திரீகம் யாவும் இஸ்லாத்தில் இல்லை என்பதை இஸ்லாம் ஆணித்தரமாக எடுத்துரைத்து விடுகிறது.
இதில் நாம் கேட்க விரும்புவது பிற மதங்களில் உள்ள கருத்து மோதல்கள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு மாந்திரீகம் இல்லை என்று சொல்வது தான் மதநல்லிணக்கம் அற்றுப் போனதற்கு காரணம் என்பது எந்த விதத்திலாவது நியாயமானதாக தோன்றுகிறதா?
உண்மையில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் தமிழகத்தை பொறுத்தவரை மிகச்சரியான புரிதலும் மிகுந்த நல்லிணக்கமும் இயல்பாகவே உள்ளது. வடமாநிலங்களில் தான் அது சீர்கெட்டுப் போயுள்ளது.
அதற்கு சங்பரிவார கும்பல்களின் பொய்யான வெறுப்புணர்வு பிரச்சாரம் தான் காரணமாக உள்ளது. அது குறித்து தினமலர் கட்டுரை எழுதுமா?
இன்னொரு விஷயம் என்னவென்றால் தர்கா, தாயத்து கூடாது என்று சொல்வது இறைவன் தான். சவூதியில் பிறந்த முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அல்ல. எனவே இந்த கொள்கையை வஹ்ஹாபியிசம் என்று குறிப்பிடுவது மடமையாகும்.