வரலாற்றுச் சிறப்புமிக்க, மிகவும் பழமை வாய்ந்தது பாபரி மஸ்ஜித். இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் 1992ஆம் ஆண்டு சமூக விரோதிகளால் பள்ளிவாசல் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது.
இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டித் தரப்படும் என அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவ் உறுதிமொழி அளித்தார்.
பள்ளியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பல்லாண்டு காலமாக இஸ்லாமிய சமுதாயம் ஜனநாயகப் போராட்டங்களை நடத்தி வந்தது.
பாபர் மசூதி குறித்த அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நாமும் அதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தோம்.
அலகாபாத் நீதிமன்றத்தின் அநியாய தீர்ப்பு வெளியானது. தீர்ப்பிற்கு பிறகு அதைக் கடுமையாக எதிர்த்து மிகப்பெரும் அளவில் போராட்டம் நடத்தினோம். குரங்கு அப்பத்தை பங்கு வைத்தது போல் மூன்று பங்காக பிரித்து கொடுக்கப்பட்ட அந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தோம். துளியும் பயமின்றிதான் நாம் நீதிமன்றத்தையே கண்டித்துப் போராட்டம் நடத்தினோம்.
உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு களத்தில் போராடுவது மிகப்பெரும் அளவில் மாற்றங்களை பெற்று தராது. மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டிய போராட்டம் என்பது ஒரு சடங்காக போய் விடக்கூடாது என்று தான் அதை நாம் கைவிட்டோம்.
சிலர் அந்தப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியது கூட பெரிய அளவில் மக்களிடம் எழுச்சி பெறவில்லை.
உச்ச நீதி மன்றத்தில் தொடரபட்ட வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர் பார்த்தோம். ஆளும் பாசிச ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அமைந்திருந்தது. நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை இது தகர்த்தது.
சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதி மன்ற தீர்ப்பும் அநியாயமான முறையில் வழங்கப்பட்டது.
குற்றவாளிகள் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் கூட்டியே திட்டமிடவில்லை, சதி செய்யவில்லை என்று குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையை உச்ச நீதி மன்றம் செய்தது.
இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மக்கள் மத்தியில் கடுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வழக்கறிஞர்கள், நீதி அரசர்கள், சமூக நீதியை விரும்பக் கூடிய தலைவர்கள் பலரின் நியாயமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றோம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினோம்.
டிசம்பர் 6 அன்று நடக்கும் போராட்டத்தை தான் கைவிட்டோமே தவிர அநீதிக்கு எதிரான போராட்டங்களை நாம் கைவிடவில்லை. இவர்களின் சதிச்செயல்களை முறியடிக்க என்றும் தயங்க மாட்டோம்.
அரசியல் சாசன மரபுகளை மீறி நடந்துள்ளனர். தங்களின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு நீதியை குழி தோண்டி புதைத்து விட்டனர். நீதி ஒரு நாள் வெல்லும்.
இன்ஷா அல்லாஹ்.