மத மோதல்களை தடுக்கும் விதமாக கடும் நடவடிக்கை தேவை என்று முதல்வர் கூறியுள்ளது சரியா?

மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். சமூக வலைத்தளங்கள் மூலம் சாதி மத மோதல்களை உருவாக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டார்.
சாதி, மத மோதல்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் சமூக ஒழுக்கப் பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு தேவையான, அவசியமான ஒன்றுதான்.
இன்றைய காலத்தில் சமூகவலைத்தளங்களான பேஸ்புக், யுடியூப் போன்ற சாதனங்களை பயன்படுத்தி மிக இலகுவாக மத மோதல்களுக்கான விதைகளை தூவி விடுகின்றனர்.
சங்பரிவார கூட்டங்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியே பல்வேறு மாநிலங்களில் சாதி, மத மோதல்களை உருவாக்கினர்.
டெல்லியில் சிஏஏவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்த போது அதை வன்முறைக்களமாக மாற்றியதற்கு அடிப்படைக் காரணமே சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தியது தான்.
தமிழகத்திலும் கூட சில பாஜக ஆதரவாளர்கள் அவ்வப்போது இரு தரப்பிற்கு இடையே பதட்டத்தையும் வன்மத்தையும் உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் களையெடுக்க கடும் நடடிவக்கை மிகுந்த அவசியமானது.
ஆனால் இது வெறும் அறிவிப்பாக இல்லாமல் செயலாக்கம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல நேரங்களில் முஸ்லிம்களை சீண்டும் வகையில் அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் முஹம்மது நபிகள் அவர்களை இழிவுபடுத்தியும் முஹம்மது நபியின் மனைவியர்களை கேவலமாக எழுதியும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஒருவர் சவூதியில் உள்ள மக்கா என்பது உண்மையில் முஸ்லிம்களுக்கான வழிபாட்டுத்தலம் அல்ல. அங்கே கோவில் இருந்தது. அதன் பெயர் மக்கேஸ்வரர் என்றெல்லாம் பொய்யான செய்திகளை கூறினர்.
இப்படி குறிப்பிட்ட மதத்தினர் மீது வெறுப்பை தூண்டும் விதமாகவும் பொய்யான செய்திகளை கூறியுமே இரு சமூகத்திற்கு மத்தியில் மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.
எனவே தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு ஏற்ப காவல்துறை இது போன்ற விஷயத்திற்கு எதிராக சாட்டையை சுழற்ற வேண்டும்.
குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை செய்து தான் பிற மாநிலங்களில் பாஜகவினர் கால் பதிக்கின்றனர்.
தமிழகத்தில் அதற்கு ஒரு போதும் இடமளித்து விடக்கூடாது என்பதில் முதல்வரும் காவல்துறையும் மிகுந்த கவனத்துடன் செயலாற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.