அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டியுள்ளது.
அதற்கு அடிப்படை காரணமே கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய பொருள்களின் விலையை மத்திய பாஜக அரசு ஏற்றி வந்தது தான்.
அதன் விளைவாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருள்களும் விலையேற்றம் கண்டன
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைக்கு அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ச்சியாக ஏறிவந்தது ஒரு முக்கிய காராணமாகும்.
இப்போது பணவீக்கப் பிரச்சனையில் இலங்கை படும் பாட்டை மக்கள் உணரத்துவங்கியுள்ளனர்.
இதை எல்லாம் பார்த்து தான் ஓரளவு விலை குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 9.50, யும் ஒரு லிட்டர் டீசலுக்கு 7 ரூபாயும் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது.
ஏனென்றால் இவர்கள் பெட்ரோல், டீசலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விலையை தொடர்ச்சியாக ஏற்றி விட்டு மக்களை ஏமாற்ற ஒரு முறை விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடுவார்கள்.
இது தான் பாஜகவின் வரலாறு.
அதாவது வேகமாக பதினாறு அடி முன்பே பாய்ந்து விட்டு வெறும் ஈரடி மட்டும் பின்னே வருவார்கள்.
இது உண்மையில் விலை குறைப்பாகாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் உதவாது. மக்களை வஞ்சிக்கும் செயல் மட்டுமே.
2020 மே மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.69.05 ஆக இருந்தது.
கடந்த இரு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்தி 2022 ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.4 உயர்ந்து விட்டது.
நன்றாக கவனிக்கவும்.
69 ரூபாயிலிருந்து 105 ரூபாய்.
இப்போது அதிலிருந்து தான் சற்று விலைக் குறைப்பை அறிவித்துள்ளார்கள்.
இதன் பிறகு அவ்வப்போது 2 ரூபாய், 1 ரூபாய் என விலையை உயர்த்தி மக்களை முட்டாளாக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்வார்கள்.
அப்படி எதுவும் நடக்காத பட்சத்திலும் இன்னும் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய பொருள்களின் விலையை குறைப்பது தான் மக்களுக்கு உண்மையில் நன்மை பயப்பதாக அமையும்.