ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது அருகில் உள்ள மசூதியொன்றில் அதான் எனப்படும் தொழுகைக்கான அழைப்பு சப்தம் கேட்டுள்ளது. உடனே தனது பேச்சை அமித்ஷா நிறுத்தியுள்ளார்.
பாங்கு சப்தம் முழுமையாக முடியும் வரை காத்திருந்து அதன் பிறகு மக்களிடம் இப்போது நான் பேச்சை தொடரலாமா? என்று கேள்வி எழுப்பி தனது பேச்சைத் தொடர்ந்துள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவுகிறது.
ராகுலின் பாரத் ஜூடோ யாத்ரா எனும் நடைப்பயணத்தால் பாஜக சற்று கலக்கம் அடைந்ததாகவே தெரிகிறது. ஆகவே தான் அமித்ஷாவின் இந்த வீடியோவையும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறி மார்க்கெட் சென்ற வீடியோவையும் பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
பார்த்தீர்களா எங்கள் தலைவர்களை? எவ்வளவு எளிமையானவர்களாக, பிற மதங்களை மதிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அங்கலாய்க்கின்றார்கள்.
இதன் மூலம் தங்களை சிறுபான்மை மக்களுக்கு இணக்கமானவர்கள், சாமானிய மக்களுடன் இரண்டறக் கலப்பவர்கள் என்பது போல போலியான தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
நிதியமைச்சர் காய்கறி மார்க்கெட் சென்று விட்டால் பாஜக சாமானிய மக்களின் கட்சியாகி விடுமா?
கேஸ், பெட்ரோல், டீசல், அரிசி, பருப்பு, ஆயில் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலையுயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டு காய்கறி மார்க்கெட் செல்வதால் மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.
வெங்காயம் விலை உயர்ந்து விட்டது என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்த போது நாங்கள் எல்லாம் வெங்காயம் சாப்பிட மாட்டோம் என்று அகங்காரத்துடன் சொன்னவர் தானே?
இப்போது எதற்கு மார்க்கெட் வந்தார்? எல்லாம் வெளிவேஷம்.
அது போலத்தான் அமித்ஷா பாங்கு சொல்லும் போது பேச்சை நிறுத்துவதால் அவரது கட்சி சிறுபான்மை மக்களுக்கு இணக்கமான கட்சியாகி விடாது.
மாட்டிறைச்சியின் பெயரால் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது நாட்டின் உள்துறை அமைச்சராக, அனைவருக்குமான மக்களின் ஆட்சியாளராக அமித்ஷா என்ன செய்தார்? மவ்னம் கலைத்தாரா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தாரா?
இதே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கி வந்த உரிமையை பிரிவு 370 ஐ நீக்கி அந்த மக்களுக்கு துரோகம் இழைத்தது இவர்கள் தானே?
சிஏஏ, என்ஆர்சி சட்டத்தின் மூலம் முஸ்லிம்களை குடியுரிமை அற்றவர்களாக, அகதிகளாக ஆக்க முயற்சிப்பது இவர்கள் இல்லையா?
குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாக இருந்து கொலையாளிகளின் விடுதலையை வரவேற்றவர் தானே?
பாபர் மசூதி இடிக்கப்படும் போதும் முஸ்லிம்களை அந்த இடத்தை விட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய போதும் அதற்கு மூலக்காரணமாக இருந்து விட்டு கள்ள மவ்னம் காத்து விட்டு தற்போது எங்கோ பாங்கு சொல்லும் போது அமைதியாக இருந்து விட்டால் இவர்கள் சிறுபான்மை மக்களின் காவலர்களாகி விடுவார்களா?
நிர்மலா சீத்தாரமன் மார்க்கெட் வந்தது எப்படியோ அப்படித்தான் இதுவும். எல்லாம் பகல் வேஷம்.