மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014 முதல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை பாஜக அரசு தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது.
முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் உரிமை ரத்து போன்றவை அதில் அடங்கும்.
இந்த பட்டியலில் தான் கடந்த 2019 சிஏஏ எனும் சட்டமும் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க இச்சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதத்தின் அடிப்படையில் மக்கள் பாகுபாடு பார்க்கப்பட கூடாது என்பதே மதச்சார்பற்ற நாடு எனும் வார்த்தையின் உள்ளடக்கம். இங்கே எல்லா மதத்தவரும் சட்டத்தின் படி சம உரிமை பெற்றவர்களாவர். அத்தகைய சமத்துவத்தையே நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.
ஆனால் சிஏஏ சட்டம் மத அடிப்படையில் மக்களை பாகுபடுத்துகிறது.
முஸ்லிம்கள் கணிசமாக வாழும் குறிப்பிட்ட மூன்று நாடுகளை மட்டுமே தேர்வு செய்து அங்கிருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்பது நிச்சயம் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதே.
சிஏஏ சட்டத்தின் படி மேற்படி மூன்று நாடுகள் அல்லாத இதர நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோருக்கு குடியுரிமை வழங்கப் படாது.
இலங்கையிலிருந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கோ, பூட்டானிலிருந்து வரும் கிறித்தவர்களுக்கோ, பர்மாவிலிருந்து வரும் அகதிகளுக்கோ குடியுரிமை வழங்க இச்சட்டம் வழியேற்படுத்தவில்லை.
மத அடிப்படையில் பாகுபடுத்தி குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டமானது நிச்சயம் நமது அரசியல் சாசனத்தின் அடிநாதத்தையே குழிதோண்டி புதைப்பதாக உள்ளது.
எனவே தான் இச்சட்டம் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே நாடெங்கிலும் ஜனநாயக போராட்டங்கள் நடைபெறத்துவங்கின.
சுதந்திர போராட்டத்தை நினைவு கூரும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் தன்னெழுச்சியுடன் நடைபெற்ற அப்போராட்டங்களின் ஒரே கோரிக்கை சிஏஏ திரும்ப பெறப்பட வேண்டும். நமது அரசியல் சாசனம் வலியுறுத்தும் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே.
ஆனால் மதவாத ஒன்றிய அரசு மக்களின் கோரிக்கையை செவிமடுக்கவில்லை. அச்சட்டத்தை திரும்ப பெறுகிறோம் என்றோ, குறைந்த பட்சம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம் என்றோ கூட அரசு அறிவிக்கவில்லை.
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என அலை அலையாக மக்கள் பாதிக்கப்பட்டு, பல்லாயிரணக்கணக்கில் செத்து மடிந்து கொண்டிருக்கும் வேளையிலும் கூட மக்கள் பிரச்சனைகள், தேவைகள் என எதுவொன்றிலும் கவனம் செலுத்தாத ஒன்றிய அரசு சிஏஏ வை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா காலத்தில் பிழைக்க வழியின்றி, உண்ண உணவின்றி, முறையான மருத்துவ வசதிகளின்றி, அடிப்படைத் தேவைகளை பெறுவதற்கே இந்திய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு அது பற்றி கவலையில்லை நாங்கள் சிஏஏவை அமல்படுத்துவோம் என்கிறது என்றால் இதிலிருந்தே ஒன்றிய அரசின் கவனம் எதில் உள்ளது என்பதை ஜனநாயகவாதிகள் அறியலாம்.
எனவே ஒன்றிய அரசின் இந்த திமிர்த்தனமான அறிவிப்பை இந்திய முஸ்லிம்கள் சாதாரணமாக கடந்து விட முடியாது. கடக்கவும் கூடாது.
இந்நிலையில் மூன்று விதமான வழிமுறைகள் நம்முன்னே உள்ளன.
எழுச்சிமிக்க அறவழிப் போராட்டங்கள் சிஏஏ அறிமுகப்படுத்தப்பட்ட போது துவங்கிய நமது தன்னெழுச்சி மிக்க போராட்டங்களை நாமாக விரும்பி முடிவுக்கு கொண்டு வரவில்லை. கொரோன பேரிடர் காலம் தான் அதை தற்காலிகமாக நிறுத்தியது.
இப்போது ஒன்றிய அரசு அதன் அதிகார கோரமுகத்தை வெளிப்படுத்தும் போது நாமும் நம் ஜனநாயக வலிமையை வெளிப்படுத்த தயங்க கூடாது.
மக்கள் ஆற்றலைக் கொண்டு தான் எதேச்சதிகார ஆற்றலை வீழ்த்த முடியும். எனவே முன்பு போலவே இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு வடிவங்களிலான அறவழி போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க வேண்டும்.
இதனூடாக அரசிற்கு போதிய அழுத்தம் கொடுக்க முடியும்.
மக்கள் போராட்டங்களால் விடிவு கிடைக்குமா? என்று எண்ணத் தேவையில்லை.
தற்போதைய ஒன்றிய அரசு பல்வேறு விஷயங்களில் தனது நகர்வுகளை நிறுத்தி வைத்திருப்பதின் பிண்ணனியில் மக்கள் போராட்டங்களே பங்கு வகித்திருக்கின்றது.
லட்சத்தீவு சட்ட வரைவு, புதிய கல்விக் கொள்கை போன்ற ஓரிரு விஷயத்தில் மக்கள் கருத்தை கேட்டறிந்த பிறகே இது பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என்று ஒன்றிய அரசின் சுருதி குறைந்ததற்கு மக்கள் போராட்டங்களே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.
சட்டபூர்வ நடவடிக்கைகள்
சிஏஏவுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுடன் சட்டபூர்வ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே சிஏஏவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாஅத்தும் தன்பங்கிற்கு வழக்கை பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக ஆகிவிடுகின்றது என்றாலும் சிஏஏ சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மையையே தகர்க்கின்றது.
எனவே தான் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பல அறிவு ஜீவிகள், வழக்கறிஞர்கள், அறிஞர் பெருமக்கள் சிஏஏ சட்டம் நிச்சயம் அரசியல் சாசனத்தின் படி ஏற்புடையது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அரசியலமைப்பு சட்டத்தின் ஆணிவேருக்கே ஆபத்து எனும் போது அந்த ஆபத்தை நீக்கி ஜனநாயகத்தை தழைக்கச் செய்யும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உண்டு. அக்கடமையை தவறாது உச்சநீதிமன்றம் நிறைவேற்றும் என்ற ஆழமான நம்பிக்கை இந்திய மக்களிடையே உள்ளது.
பதியப்பட்ட வழக்குகள் யாவும் உச்சநீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளங்களே.
எனவே அரசியல் சாசனத்தின் விழுமியங்களின் படி நீதித்துறை செயலாற்றும் போது சிஏஏ சட்டம் நீர்த்துப்போகும். அதற்கான முழு முயற்சியாக சட்டப்போரட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும்.
இது நமக்கு முன்னுள்ள இன்னொரு வழியாகும்.
வீரியமான எதிர்ப்பு
சிஏஏவுக்கு எதிராக மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானங்களை இயற்றி உள்ளன.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வரும் ஜூலையில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றப்படும் என்று சட்டப் பேரவையில் கூறியுள்ளது.
சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்பது இச்சட்டத்திற்கு எதிராக போராடிய மக்களின் கோரிக்கைகளில் ஒன்றுதான் என்பதால் அது நிறைவேறுவதில் மகிழ்ச்சியே.
உள்ளபடியே தீர்மானம் நிறைவேற்றிய அரசுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
அதே வேளை தமிழகத்தை பொறுத்தவரை சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் மட்டும் போதாது.
சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானம் என்பது குறிப்பிட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசிற்கு எதிராக ஒரு மாநிலமாக ஒருங்கிணைந்து அச்சட்டத்தை எதிர்க்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ஓர் அம்சம் தானே தவிர அதுவே ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ததாகாது.
எனவே இச்சட்டம் அமலாகுவதை நடைமுறையில் தடுக்க வேண்டும். அதுவே நமக்கு முன்னுள்ள பெரும் சவால். அதற்கு வீரியமான எதிர்ப்பு அவசியம்.
எந்த சட்டத்தையும் மக்கள் ஒத்துழைப்பின்றி ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்த முடியாது.
அவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முன்வரும் போது நடைமுறையில் வீரியமான எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அவற்றை எதிர்கொள்ளலாம்.
ஆனால் இது மக்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. மாநில அரசுகளும் மக்களும் இணைந்தால் தான் இது சாத்தியமாகும்.
எனவே இதற்கான உத்தரவாதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
இதன் அடையாளமாக சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதுணையாக ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிடும் என்.ஆர்.சி எனும் தேசிய குடிமைப் பதிவேடு, அதன் வேறு உருவான என்.பி.ஆர் எனும் தேசிய மக்கள் பதிவேடு இவ்விரண்டையும் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் உறுதியளிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த ஒரு சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றுவதை விட என்.பி.ஆர் என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உறுதியளிப்பது இன்னும் வீரியமான எதிர்ப்பு வடிவமாகும்.
இச்சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்பதை விட ஒரு படி மேலானது ஒரு மாநில அரசு இச்சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்பது.
எனவே என்.ஆர்.சி – என்.பி.ஆர் நடைமுறையை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்றவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆணிவேராக திகழும் சமத்துவத்தையும் மதச்சார்பற்ற தன்மையையும் சிதைக்கும் கொடிய சட்டங்களாகும்.
முன்பொருமுறை தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா கூறியதை நினைவு கூர்ந்தாலே இச்சட்டங்கள் கொண்டுவரப்படுவதன் தீய நோக்கம் தெளிவாக புலனாகும்.
அமித்ஷா கூறியதை பாருங்கள்
“முதலில் நாம் குடியுரிமை சட்ட மசோதாவை இயற்றுவோம். அதன்மூலம் நம் அண்டைநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவோம். அதன் பிறகு என்.ஆர்.சியை அமல்படுத்தி நம் தாய்நாட்டிற்குள் ஊடுருவியவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம்“
என்.ஆர்.சியை கொண்டுவருவதன் நோக்கமே பாஜக அரசு யாரை ஊடுருவியவர்கள் என்று வரையறுக்கின்றதோ அவர்களை அகதிகளாக்குவதே என்பதை இப்பேச்சு தெளிவுபடுத்தி விட்டது.
பாஜக யாரை ஊடுருவியவர்கள் எனக்கூறும்?
தங்களுக்கு வாக்களிக்காதவர் களையும் தங்களை எதிர்த்து குரலெழுப்புவோரை எல்லாம் தேசத்துரோகிகள் என எளிதில் முத்திரை குத்தும் இவர்கள், தாங்கள் கூறும் சித்தாந்தத்தை ஏற்காத எவரையும் எளிதில் ஊடுருவியவர்களாக வரையறுத்துவிடுவார்கள் என்பதை மறுக்க முடியாது.
எனவே இச்சட்டம் பாஜகவை ஆதரிக்காத அனைவருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் ஒன்றேயாகும்.
இதையுணர்ந்து மக்களும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து, வீரியமிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தை ஒன்றிய அரசின் எதேச்சதிகார போக்கை முறியடிக்க முற்பட வேண்டும்.