நபிகள் நாயகம் குறித்து இழிவாக கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா, நவீன் ஜின்டால் உள்ளிட்ட சங்பரிவாரத்தினரைக் கண்டித்து இந்தியாவெங்கும் அறவழி அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உ.பியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் ஜாவித் அஹ்மத். இவர் ஒரு கட்சியின் தலைவர்.
இவரது மகள் அப்ரின் பாத்திமா. முன்னாள் ஜே.என்.யூ பல்கலை. மாணவர். சிஏஏ மற்றும் ஹிஜாப் விஷயத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சமூக ஆர்வலர். தற்போது இவரது வீட்டைத்தான் புல்டோசர் மூலம் இடித்துள்ளனர்.
அரசுத் தரப்பில் இடிப்பிற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல. உ.பியில் யோகி அரசுக்கு எதிராக போராடினார் என்பது தான் தற்போது அவர் தனது வீட்டை முற்றிலுமாக இழந்து நிற்பதற்குக் காரணம் என்பதை அனைவரும் நன்கறிவர்.
ஜனநாயக நாட்டில் அமைதி வழியிலான போராட்டம் என்பது சாதாரணமானது. அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு எதிராக போராடுவோர் குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களது வீடுகள், கடைகள் இலக்காகி விடுகின்றன.
அரசுக்கு எதிராக குரலெழுப்பினாலோ அரசின் சட்டங்களை எதிர்த்து போராடினாலோ உடனே அத்தகைய முஸ்லிம்களின் வீடுகளுக்கு முன்பாக புல்டோசர்கள் வந்து நின்று பயமுறுத்துகின்றன.
அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் அடியோடு தகர்த்து விடுகின்றனர். கேட்டால் ஆக்கிரமிப்பு என்றோ வன்முறைக்கு வித்திட்டவர் என்றோ ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிடுகின்றனர்.
புல்டோசர்களைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கும் கலாச்சாரத்தை சமீப காலமாக பாஜக ஆளும் மாநிலங்களில் அரங்கேற்றுகின்றனர்.
உ.பியில் கடந்த 2020 குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களிடமிருந்து இழப்பீடு பெறவும் சொத்துக்களை ஏலம் விடவும் உ.பி அரசு நோட்டீஸ் அனுப்பியது. ஒரு சிலரின் வீடுகளை குறிவைத்து முன்னெடுப்புகளைத் துவங்கினர்.
பிரச்சனை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏற்புடையதல்ல. நீதிமன்ற வழிகாட்டுதல்களை உ.பி. அரசு மீறியுள்ளது என்று நீதிமன்றம் கண்டித்தது.
2023 ஏப்ரலில் டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது.
முஸ்லிம்களின் குடியிருப்புகளையும் பள்ளிவாசல்களையும் கடந்துச் செல்லும் போது வெறுப்புக் கோஷங்களை முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர். இது தான் மோதலிற்கு முக்கிய காரணம்.
எனினும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த மோதல் தொடர்புடைய முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு வீடுகளை மட்டும் இடித்தனர்.இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இது தொடர்பான விசாரணை வரவிருப்பாக நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அனுமர் ஜெயந்தி ஊர்வலத்தை ஒட்டி மத்திய பிரதேசம் கார்கோன் பகுதியிலும் இது போன்ற மோதல் ஏற்பட்டது.
இந்த ஊர்வலத்தில் கைகளில் வாள்களுடன் இந்துத்துவ குண்டர்கள் சென்றது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை நோக்கி வாள்களைக் காட்டி பிரச்சனை செய்தனர். இது மோதலுக்கு வழிவகுத்தது.
இந்த மோதலுக்கு பிறகும் முஸ்லிம்களின் வீடுகள் மட்டும் குறிவைக்கப்பட்டு புல்டோசர்களால் இடிக்கப்பட்டன.
இதற்கும் ஆக்கிரமிப்பு என்று காரணம் சொல்லினர். ஆனால் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முஸ்லிம்களின் வீடுகளையும் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை.
மத்திய அரசின் நிதி தொகுப்பிலிருந்து கட்டப்பட்ட வீடுகளையும் கூட இவர்கள் ஆக்கிரமிப்பு என்று சொல்வதிலிருந்தே இவர்களின் இலட்சணத்தை தெரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்கள் நீதியை எதிர்பார்க்க கூடாது முஸ்லிம்கள் கற்களை எரிந்தால் அவர்களின் வீடுகள் கற்களின் குவியலாக மாறும் என்று கூறி தெளிவாகவே புல்டோசர் இடிப்பிற்கு நியாயம் கற்பித்தார் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா.
தற்போது உ.பியில் கடந்த ஜூன் 3 முதல் சுமார் பத்து நாள்களில் மட்டும் நான்கு முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு தரைமட்டமாக்கியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு என்று இவர்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.
அது எப்படி ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்படும் வீடுகள் யாவும் முஸ்லிம்களின் வீடுகளாக மட்டுமே உள்ளன?
ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லிம்களை தவிர வேறு யாரும் இல்லையா? அரசுக்கு எதிராக அவர்கள் போராடியதற்கு பிறகு தான் அது ஆக்கிரமிப்பு நிலம் என்று தெரிந்ததா? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மோதலில் ஈடுபட்டார்கள் என்பது உண்மையானால் அந்த மோதலுக்கு காரணமான இந்துத்துவ குண்டர்களின் வீடுகளைப் புல்டோசர்கள் பதம் பார்ப்பதில்லையே?
டெல்லி ஷாஹீன்பாக் வன்முறைக்கு காரணமான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்ற வன்முறைக்கு வித்திட்டவர்களின் வீடுகளையும் புல்டோசர்கள் பதம் பார்க்குமா?
இது எல்லாவற்றையும் விட சட்டம் என்று ஒன்றுள்ளது. இங்குள்ள அனைவரையும் விட சட்டமே பெரிது. ஆனால் அந்தச் சட்டத்தையே இப்போது குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.
புல்டோசர்களைக் கொண்டு அத்துமீறுவதை நீதிமன்றங்கள் கண்டித்தப் பிறகும் கூட அவற்றை மதிக்காது தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் சட்டத்தை விட அரசியல் சாசனத்தை விட பெரியவர்களா?
அப்படி என்றால் சட்டம் என்பது இங்கே சாமானியர்களுக்கு மட்டும் தானா? பாஜக தலைவர்களுக்கோ முதல்வர்களுக்கோ இல்லையா? அதிர்ச்சியாக உள்ளது.
புல்டோசர்களால் தொடர்ந்து முஸ்லிம்களின் வீடுகளைப் பதம் பார்த்து வருவது ஒரு புறம் அதிர்ச்சி என்றால் இவற்றை எல்லாம் வெகுஜன மக்களும் அரசியல் தலைவர்களும் அமைதியாக மௌனித்து வேடிக்கை பார்ப்பது அதை விட ஆச்சரியமாகவும் பேரதிர்ச்சியாகவும் உள்ளது.
விரல் விட்டு எண்ணக்கூடிய கட்சிகளையும் தலைவர்களையும் தவிர இந்தப் புல்டோசர் கலாச்சாரத்திற்கு எதிராக அதிகமான முக்கிய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மயான அமைதி காக்கின்றனர்.
ஜாவித்தின் வீட்டை இடித்தது முற்றிலும் சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் பலரும் இது குறித்து எந்தக் கவனத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் என பலரும் இது குறித்து இந்நேரம் வரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
முஸ்லிம்களின் உரிமைகளின் மீதும் அவர்களின் குடியிருப்புகளின் மீதும் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் புல்டோசரை கொண்டு தாக்குதல் தொடுப்பது ஒரு கண்டனம் விடுவதற்கு கூட தகுதியற்ற ஒன்றாக மாறிவிட்டதா?
நமது நாட்டில் வலுவான சட்டம் உள்ளது. நீதித்துறை உள்ளது. சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் தலைவர்கள் உள்ளனர். நியாய உணர்வுள்ள மக்கள் இருக்கிறார்கள்.
எல்லாம் இருந்தும் முஸ்லிம்களின் வீடுகளைச் சட்டத்திற்கு புறம்பாக புல்டோசரை கொண்டு இடிப்பதை தடுக்க முடியவில்லை என்றெண்ணும் போது உள்ளம் முழுவதும் வேதனை கவ்விக் கொள்கிறது.
மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கயவர்களை இந்தப் புல்டோசர்கள் பதம் பார்க்கவில்லை.
மாட்டின் தோலை உறித்தார்கள் என்று கூறி தலித்களை அடித்து சித்ரவதை செய்த குண்டர்களின் வீடுகளின் பக்கம் புல்டோசர் செல்லவில்லை.
அமைதி வழியில் போராடிய கூட்டத்திற்குள் நுழைந்து கலவரக்காடாக மாற்றிய சங்பரிவாரக் கும்பல்களின் வீடுகளைப் புல்டோசர் இடிக்கவில்லை.
ஜெய் ஸ்ரீ ராம் எனும் பெயரில் கும்பல் கொலையில் ஈடுபட்ட கும்பல்களின் வீடுகளைப் புல்டோசர் குறிவைக்கவில்லை.
ஆனால் அரசின் அநியாய சட்டங்களுக்கு எதிராக குரலெழுப்பிய முஸ்லிம்களின் வீடுகள் என்றால் மட்டும் புல்டோசர் வந்து விடுகின்றது என்றால் இங்கே குறிவைக்கப்படுவது யார் என்பதை தனித்துச் சொல்லத் தேவையில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
சங்பரிவார கும்பலின் புல்டோசர்கள் இடித்து தகர்ப்பது முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அல்ல. நமது நாட்டின் அரசியல் சாசனமும் தகர்க்கப்படுகிறது.
அனைவருக்குமான பாதுகாப்பை வழங்குவது அரசியல் சாசனம் தான். அது தகர்ந்து போகுமானால் அனைத்து மக்களின் உரிமையும் படிப்படியாக பறிபோகும் நிலை ஏற்பட்டே தீரும்.
அதற்கு முன் ஜனநாயகவாதிகள் அனைவரும் விழிப்புணர்வு கொண்டு இக்கொடுமைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும்.
அதுவே ஜனநாயகத்திற்கு நாம் ஆற்றும் கடமையாகும்.