பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு பதிலாக அந்த பொருளாதாரத்தில் பள்ளிக்கூடங்களை கட்டலாமே?

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் கல்விக்கு பெரிய இடமுண்டு எனும் அடிப்படையில் கல்வி நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். அதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அதற்காக வேறு எதற்காகவும் செலவிடாமல் கல்வி நிலையங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்று நினைப்பது ஏற்புடையதல்ல.
முஸ்லிம் சமுதாயம் உலகில் முன்னேற கல்வி முக்கியம் என்பதை போல மறுமை ஈடேற்றத்திற்கு பித்அத்களிலிருந்து விடுபடுவது அதை விட முக்கியம்.
அதற்காக மாநாடு நடத்துவது அவசியமானது தானே தவிர அநாவசியமானது அல்ல.
வெகு சிலரிடம் ஒரு மனப்பான்மை உள்ளது.
தாங்கள் எதை முக்கியம் என்று கருதுகிறார்களோ அதனுடன் மற்றவற்றை ஒப்பிட்டு அதை விட இதை செய்யலாமே என்பது.
இதுவும் அந்த வகையிலானது தான்.
இப்படி எல்லாவற்றிலும் கேட்க ஆரம்பித்தால் எதையுமே செய்ய இயலாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.
ஒரு நாளைக்கு ஏன் மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டும். இருவேளை மட்டும் சாப்பிட்டு, ஒருவேளை உணவை அதற்கு கூட வழியில்லாத ஏழைக்கு கொடுக்கலாமே? என்று கேட்கலாம்.
முழுக்கை சட்டை போடுவதற்கு பதிலாக எல்லாரும் அரைக்கை சட்டை மட்டும் அணிந்து மீதமாகும் ஆடையை ஏழைகளுக்கு வழங்கலாமே? என்றும் கேட்கலாம்.
ஆண்களுக்கு எதற்கு மேலாடை? பனியன் மட்டுமே அணிந்து கொண்டு சட்டைத் துணிகளை எல்லாம் சோமாலிய நாட்டு மக்களுக்கு அல்லது ஆடையின்றி திரியும் மக்களுக்கு அனுப்பலாமே?
நாட்டில் பல குழந்தைகள் பாலின்றி அவதிப்படுகிறார்கள். அனைவரும் பால் டீ குடிப்பதை நிறுத்தி விட்டு அந்தத் தொகையை குழந்தைகளுக்கு வழங்கலாமே?
எதற்கு பல அறைகள் உள்ள விசாலமான வீடு?
குறுகலான ஒரு வீட்டை கட்டிக் கொண்டு அதில் மிஞ்சும் தொகையை பள்ளிக்கூடம் அமைக்க உதவலாமே?
ஸ்மார்ட் டிவியை விற்று விட்டு சாதாரணமான டிவியை வாங்கி அந்தத் தொகையை பள்ளிவாசல் வகைக்கு கொடுக்கலாமே?
ஸ்மார்ட் போனை விற்று விட்டு பட்டன் போன் வாங்கி அதில் மீதமுறும் தொகையை கல்வி உதவிக்கு தரலாமே?
இப்படி பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம்.
இவைகள் எதற்கும் அவர்களிடம் பதில் இருக்காது.
இதுவெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால் நாம் மாநாடு நடத்துவது ஒன்று தான் பிரச்சனையா?
இன்றைக்கு மாநாடு நடத்தும் செலவில் பள்ளிக்கட்டலாம் என்பவர்கள் அடுத்து மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தும் செலவில் ஏழைக்கு உணவளிக்கலாம் என்பார்கள்.
இதன் மூலம் மார்க்க பிரச்சாரங்களை எல்லாம் இழுத்து மூட வேண்டும் என்பதை தவிர இதில் வேறொன்றுமில்லை.
கஅபாவை தவாஃப் செய்வதற்கு பதிலாக இரண்டு ரக்அத்கள் தொழலாமே என்றாலோ, இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு பதிலாக குர்ஆனை ஓதலாமே என்றாலோ ஏதாவது செய்ய முடியுமா?
நன்மையான காரியங்களில் ஒன்றை இன்னொன்றுடன் மோத விட்டு அதற்கு பதிலாக இதை செய்யலாமே என்றால் எந்த நன்மையும் மிஞ்சாது. சமூகத்தில் தீமைக்காக செலவிடும் போது இப்படி யாரும் கேட்பதில்லை.
பீடி, சிகரெட், போதை பொருள்களுக்காக செலவிடும் தொகையை நல்லவற்றுக்கு செலவு செய்யலாமே என்று யாரும் கேட்பதில்லை.
தர்கா, கந்தூரி தினங்களில் வீடு வீடாக வசூலித்து கந்தூரி கொண்டாட்டம் மற்றும் கந்தூ£¤ சாப்பாட்டுக்காக செலவிடும் தொகையை ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிடலாமே என்று யாரும் கேட்பதில்லை.
திருமணத்தில் ஆடம்பரமாக அளிக்கப்படும் விருந்து போன்றவற்றுக்காக இலட்சங்களை செலவு செய்கிறார்கள். அதை எல்லாம் தவிர்த்து அந்தத் தொகையை பள்ளிக்கூடங்கள் அமைக்க வழங்கலாமே என்று யாரும் கேட்பதில்லை.
இது போன்ற இடங்களில் கேட்டால் கூட அர்த்தம் உண்டு. அந்தத் தீமைகளை விட்டு மக்களை காக்க அது உதவும்.
ஆனால் இதையெல்லாம் சாதாரணமாக கடந்து செல்பவர்கள் நாம் மாநாடு நடத்தப் போகிறோம் என்று சொல்லியதும் பள்ளிக்கூடம், கல்லூ£¤ என்று வந்து விடுகிறார்கள்.
மாநாடு நடத்தும் போது இலட்சக்கணக்கில் செலவாவதால் அதைத் தேவையற்றது என்று கருதுவதில் அர்த்தமில்லை. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.