டி.வி நிகழ்ச்சியில் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜகவினர் பொங்குகின்றார்களே?

சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இருசிறுவர்கள் மன்னர் மற்றும் அமைச்சர் போல வேடமணிந்து நடித்துள்ளனர்.
இதில் இந்தியாவில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் பலவற்றை மறைமுகமாக நையாண்டி செய்து அட்டகாசமாக பேசியுள்ளனர்.
ஐநூறு, ஆயிரத்தை செல்லாது என்று அறிவிக்கலாமா என்று யோசிக்கிறேன் என மன்னர் சொல்வது போலவும், அதற்கு அமைச்சர் வேடமணிந்த சிறுவன் சிந்தியா எனும் நாட்டின் மன்னன் இப்படித்தான் கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் என 500, 1000 செல்லாது என்று அறிவித்தார் என்று கூறுகிறான்.
கருப்பு பணத்தை ஒழித்து விட்டாரா? என்று மன்னர் வேடமணிந்தவர் கேட்க
கருப்பு பணத்தை எங்கே ஒழித்தார்? கலர் கலராக கோட் அணிந்து ஊர் சுற்றத்தான் செய்கிறார் என்று ஒரு பன்ச்.
வெளிநாடுகளில் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என்று மன்னர் கேட்க
அங்கே உங்கள் ஆட்சி இல்லையல்லவா அதனால் தான் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அங்கொரு பன்ச்.
இலாபத்தில் உள்ள நிறுவனங்களை ஏன் விற்கிறீர்கள் மன்னா?
என்ன அமைச்சரே நீரும் மக்களை போல முட்டாள்தனமாக கேட்கிறீர்கள்?
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்றால் நமக்கு எப்படி இலாபம் வரும்? இலாபத்தில் உள்ள நிறுவனங்களை விற்றால் தானே நமக்கு இலாபம் வரும்.
இப்படி மோடி அரசின் கையாலாகாத திட்டங்களை எல்லாம் பகடி செய்து பன்ச் வசனங்களாக அள்ளி தெளித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி தான் பாஜகவினர் பொங்குவதற்கு காரணம்.
இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் கருத்துகளை குழந்தைகள் மூலமாக திணிப்பதற்கு அனுமதியில்லை. இது கண்டனத்திற்குரியது. தனியார் டிவி நிறுவனம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர்கள் எல்லாம் என்ன ரகம் என்றே தெரியவில்லை.
பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் பொய்களையும், அவதூறு பதிவுகளையும் இடுவதாக கூறி காவல்துறை கைது செய்த போது கடந்த வாரம் தான் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக பொங்கினார் இந்த அண்ணாமலை. தமிழக கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தார்.
மாரிதாஸுக்கு உள்ள கருத்து சுதந்திரம் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இல்லையா? அந்த சிறுவர்களுக்கு கிடையாதா?
இத்தனைக்கும் சிந்தியா என்றும் முட்டாள் அரசன் என்றும் மறைமுகமாகவே அந்த தனியார் நிகழ்ச்சி காணொளி அமைந்திருந்தது. அதில் எங்கேயும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் தமிழக பாஜக வகையறாக்கள் அந்த முட்டாள் அரசன் மோடி தான் என்று ஊரறிய, உலகறிய செய்துள்ளார்கள் என்றால் இங்கே பிரதமரை இழிவுபடுத்துவது யார்? என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. பாஜகவின் கதறலுக்கு பிறகு அந்த வீடியோ இப்போது தமிழகத்தில் வைரலாகி விட்டது.
அரசியல் கருத்துகளை குழந்தைகள் மூலம் திணிக்க கூடாது என்று கூறுவதற்கு எள்ளளவும் இவர்களுக்கு தகுதியில்லை.
முஸ்லிம்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம் என குழந்தைகளை வைத்து வன்முறை பேச்சுக்களை பேச செய்கிறதே பாஜகவின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்?
அப்போது எங்கே போனார் இந்த அண்ணாமலை?
தனியார் நிகழ்ச்சியின் சிறுவர்கள் அப்படி ஒன்றும் தவறாகவோ பொய்யாகவோ பேசிடவில்லை.
கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி செய்யப்பட்ட பண மதிப்பிழப்பு நீக்கம் தோல்விதானே? கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை தானே?
இதை தானே அந்தச் சிறுவர்கள் சொன்னார்கள். இதிலென்ன தவறுள்ளது?
தேசத்தை ஆளும் பிரதமரை இரு சிறுவர்கள் கேலி செய்யலாமா என்று கேட்பதை விட சிறுவர்களும் கேலி செய்யும் அளவு ஒரு பிரதமர் தேசத்தை ஆளலாமா என்று கேள்வி கேட்டால் பாஜகவினர் கொஞ்சமாவது திருந்த வாய்ப்பு உள்ளது.