பீஸ்ட் திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது, இதற்கு கண்டனங்கள் எழுந்த பின் அவ்வாறான படங்கள் எடுக்கப்படுவது குறைந்து விட்ட நிலையில், சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி எடுக்கப்பட்டிருக்கிறது,
பீஸ்ட் திரைப்படத்தைப் பார்க்கும் அப்பாவிகள் உள்ளத்தில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை அது விதைக்கும்.
சினிமா நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு கிடையாது. நடிகர்கள் சமூக சீர்கேட்டை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வருமானம் ஈட்டுவதே அவர்களின் இலக்கு.
சினிமாக்களில் ஆபாசங்கள், கொலை கொள்ளை வன்முறை காட்சிகளில் நடிப்பது, ஒழுக்கக் கேடான அரைகுறை ஆடைகளுடன் நடனமாடுவது, மதுபானம், சிகரெட் பிடித்து நடிப்பதின் மூலம் சினிமாக்கள் சமூக சீர்கேட்டை உண்டாக்குகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. பொது சமூகத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கின்ற எண்ணத்தை விதைத்ததில் பெரும் பங்கு சினிமாக்களையே சாரும்,
ஒரு சமூகத்தின் மீது வன்முறை கருத்தை பொது சமூகத்தில் சினிமாக்கள் வழியாக இலகுவாக நுழைத்திட முடியும். கடந்த காலங்களில் சினிமாக்களில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டதின் பாதிப்பை இன்றளவும் இஸ்லாமியர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பீஸ்ட் போன்ற படங்களால் இஸ்லாமிய சமூகம் பாதிக்கப்படும்.
இஸ்லாமியர்களிடம் சாதிய பாகுபாடு இல்லை. தீண்டாமை இல்லை. நிறவேறுபாடு இல்லை. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை. இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவருக்கு பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் உரிமையை வழங்கி சகோதரத்துவத்தைக் கடைபிடிக்கின்ற மார்க்கத்தை திரைப்படங்களில் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி காட்டுகின்றனா¢.
கஜா புயல், சுனாமி, சென்னை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சாதி மத பேதம் இன்றி களப்பணியாற்றியது இஸ்லாமியர்கள்தான்.
கொரோனா நோய் தொற்றில் இறந்தவர்களை அடக்கம் செய்ய யாரும் முன் வராத போது மனிதநேயத்துடன் உடல்களை அடக்கம் செய்தவர்கள் முஸ்லிம்கள்,
கொரோனா பேரிடர் காலத்திலும் குருதி கொடை அளித்து உயிர் காத்த இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து திரைப்படங்களில் தீவிரவாதிகளாக காட்ட மனம் வருகிறது என்றால் உண்மையில் இவர்கள் தான் மனித மிருகங்கள்.
சூப்பர் ஸ்டாராகவும், தளபதியாகவும் அழைப்பதை விரும்பிய நடிகர்கள் இது போன்ற காலங்களில் களப்பணியாற்ற முன் வர வில்லை.
இது வரை பாகிஸ்தான் உளவாளியாக இந்திய அரசால் கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களே. அதில் ஆச்சரியம் என்ன வென்றால் பலர் அரசின் உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்களைப் பற்றி எந்தத் திரைப்படங்களிலும் பேசப்படுவதில்லை.
தொடர்ந்து திட்ட மிட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் காட்டுவது ஒன்று. இரண்டாவது இவ்வாறு காட்டினால் யாரும் நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற மனநிலை.
இன்றைய இந்திய முஸ்லிம்கள் அதிகாரங்களைப் பெற்றிருக்க வில்லை அவர்களால் கண்டனங்களை மட்டுமே தெரிவிக்க முடியும், அரபு நாடுகள் நினைத்தால் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுப்பவர்களின் கொட்டத்தை அடக்க முடியும்.
சில அரபு நாடுகள் நாடுகளில் பீஸ்ட் திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கின்றன, இது திரைப்படத்தை பெரிய அளவில் பாதிக்காது. ஓடிடிக்கள் வழியாக வெளியிட்டு வருமானம் பார்த்து விடுவார்கள்,
இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுப்பவர்களும், நடிப்பவர்களும் அரபு நாடுகளில் வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும், இவர்களை அங்கு நுழையவும் அனுமதிக்க கூடாது. இப்படி இஸ்லாமிய நாடுகள் கடுமை காட்டினால் இவர்களின் கொட்டம் அடக்கப்படலாம்.