பனீ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்

அத்தியாயம் : 17

வசனங்களின் எண்ணிக்கை: 111

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்திற்கு நாம் அருள்வளம் செய்த மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு, நமது சான்றுகளை அவருக்குக் காட்டுவதற்காக இரவில் அழைத்துச் சென்றவன் தூயவன். அவனே செவியேற்பவன்; பார்ப்பவன்.284
2. மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீல் வழித்தோன்றல்களுக்கு அதை நேர்வழிகாட்டியாக ஆக்கினோம். “என்னையன்றி எந்தப் பொறுப்பாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!” (என்று கூறினோம்.)
3. நூஹுடன் நாம் (கப்பலில்) சுமந்து சென்றோரின் வழித்தோன்றல்களே! அவர் நன்றியுள்ள அடியாராக இருந்தார்.285
4. அவ்வேதத்தில் இஸ்ராயீல் வழித்தோன்றல்களுக்கு, “நீங்கள் பூமியில் இரண்டு முறை குழப்பம் விளைவிப்பீர்கள்; மிகப் பெரிய அளவில் அநியாயம் செய்வீர்கள்” என அறிவித்தோம்.
5. அந்த இரண்டில் முதலாவது வாக்குறுதி வந்தபோது, உங்களுக்கு எதிராகக் கடும் வலிமை கொண்ட நம் அடியார்களை அனுப்பினோம். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் ஊடுருவி(த் தாக்கி)னார்கள். அது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியாகி விட்டது.
6. பின்னர், அவர்களை மிகைக்கும் வாய்ப்பை உங்களுக்கு மீண்டும் வழங்கினோம். செல்வங்களையும், ஆண் மக்களையும் கொண்டு உங்களுக்கு உதவினோம். எண்ணிக்கையில் உங்களை அதிகமானவர்களாக ஆக்கினோம்.
7. நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்குரியதே! இறுதி வாக்குறுதி வந்தபோது, அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்கும், மஸ்ஜிதுல் அக்ஸாவில் அவர்கள் ஏற்கனவே நுழைந்ததைப் போன்று நுழைவதற்கும், தாங்கள் கைப்பற்றிய அனைத்தையும் அடியோடு அழிப்பதற்கும் (அவர்களை அனுப்பினோம்.)
8. உங்கள் இறைவன் உங்களுக்குக் கருணை காட்டலாம். நீங்கள் மீண்டும் (அநியாயம் செய்யத்) திரும்பினால் நாமும் (தண்டிப்பதற்குத்) திரும்புவோம். இறைமறுப்பாளர்களுக்கு நரகத்தையே சிறையாக ஆக்கியுள்ளோம்
9, 10. எது மிகச் சரியானதோ அதை நோக்கி இந்தக் குர்ஆன் வழிகாட்டுகிறது. நற்செயல்கள் செய்யும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் கூலி உண்டு என்றும், மறுமையை நம்பாதவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம் என்றும் நற்செய்தி கூறுகிறது.
11. மனிதன், நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வது போன்றே தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்.
12. இரவையும், பகலையும் இரு சான்றுகளாக ஆக்கியுள்ளோம். உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் (காலத்தின்) கணக்கை நீங்கள் அறிவதற்காகவும் இரவின் சான்றை மங்கச் செய்து, பகலின் சான்றைப் பிரகாசமாக்கினோம். ஒவ்வொன்றையும் தெளிவாக விவரித்துள்ளோம்.
13. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது செயல்களின் ஏட்டை அவனுடைய கழுத்தில் பொருத்தியுள்ளோம். மறுமை நாளில் அவனுக்கு ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்ட நிலையில் அவன் பெற்றுக் கொள்வான்.
14. “உனது புத்தகத்தை நீயே படி! இன்றைய தினம் உன்னைப் பற்றிக் கணக்கிடுவதற்கு நீயே போதும்” (என்று கூறப்படும்.)
15. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிகேட்டில் செல்பவர் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறார். ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (யாரையும்) தண்டிப்போராக இல்லை.
16. ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சொகுசாக வாழ்வோருக்கு(ப் பணிந்து நடக்குமாறு) ஆணையிடுவோம். ஆனால் அவர்கள் அங்கு வரம்பு மீறுவார்கள். அதனால் அவ்வூரின்மீது (நம்) வாக்கு உறுதியாகிவிடும். எனவே அதை அடியோடு அழித்து விடுவோம்.
17. நூஹுக்குப் பின்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்து உள்ளோம். தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்க உமது இறைவனே போதுமானவன்.
18. யார் இவ்வுலகை விரும்புகிறாரோ அவர்களில் நாம் நாடியோருக்கு, நாடியதை இவ்வுலகிலேயே விரைவாகக் கொடுப்போம். பிறகு அவருக்காக நரகத்தை ஏற்படுத்தியுள்ளோம். அதனுள் அவர் பழிக்கப்பட்டவராகவும், விரட்டப்பட்டவராகவும் நுழைவார்.
19. இறைநம்பிக்கையாளராக இருந்து, மறுமையை விரும்பி அதற்காக முயல்வோருக்கு, அம்முயற்சி நன்றி பாராட்டப்படுவதாக இருக்கும்.
20. உமது இறைவனின் அருட்கொடையிலிருந்து (உலகை விரும்பும்) அவர்களுக்கும், (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் வாரி வழங்குகிறோம். உமது இறைவனின் அருட்கொடை தடுக்கப்பட்டதாக இல்லை.
21. அவர்களில் சிலரை, வேறு சிலரைவிட எவ்வாறு சிறப்பித்துள்ளோம் என்பதைக் கவனிப்பீராக! மறுமையே உயர்ந்த பதவிகளைக் கொண்டது; சிறப்பிப்பதில் மிகப் பெரியது.
22. அல்லாஹ்வு(க்கு இணையாக அவனு)டன் வேறு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் பழிக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் இருந்து விடுவீர்.
23. தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உமது இறைவன் ஆணையிட்டுள்ளான். அவ்விருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ உம்மிடம் முதுமைப் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களைச் ‘சீ’ என்று (சடைந்தும்) கூறாதீர்! அவர்களை விரட்டாதீர்! கண்ணியமிக்க சொல்லையே அவர்களிடம் கூறுவீராக!
24. கருணையுடன் பணிவு எனும் இறக்கையை அவர்களுக்குத் தாழ்த்துவீராக! “என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை(ப் பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக!” என்று பிரார்த்திப்பீராக!
25. உங்கள் இறைவன், உங்களுடைய உள்ளங்களில் இருப்பதை நன்கறிவான். நீங்கள் நல்லவர்களாக இருந்தால், பாவ மன்னிப்புக் கோருவோரை அவன் மிகவும் மன்னிப்பவன்.
26. உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களின் உரிமைகளை வழங்குவீராக! ஒருசிறிதும் வீண்விரயம் செய்யாதீர்!286
27. வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாக உள்ளனர். ஷைத்தானோ தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
28. உமது இறைவனின் அருளில் ஆதரவு வைத்து, அதை நீர் எதிர்பார்த்திருக்கும் நிலையில் (உதவி கேட்போருக்குக் கொடுக்க இயலாமல்) அவர்களை நீர் புறக்கணிக்க நேர்ந்தால் அவர்களிடம் மென்மையான சொல்லையே கூறுவீராக!
29. (கஞ்சத்தனம் செய்து) உமது கையை, உம் கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கி விடாதீர்! அதை முழுதும் விரித்தும் விடாதீர்! அவ்வாறு செய்தால் பழிக்கப்பட்டவராகவும், கவலைப்பட்டவராகவும் இருந்து விடுவீர்.
30. உமது இறைவன், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான்; (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். தன் அடியார்களை அவன் நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
31. வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரும் பாவமாக இருக்கிறது.
32. விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்! அது மானக்கேடானதாகவும், கெட்ட வழியாகவும் இருக்கிறது.287
33. அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! யார் அநியாயமாகக் கொல்லப்படுகிறாரோ அவரது பொறுப்பாளருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம். எனவே, கொலை செய்வதில் (சட்டத்திற்குப் புறம்பாக) அவர் வரம்பு மீற வேண்டாம். அவர் (சட்டத்தால்) உதவி செய்யப்பட்டவர் ஆவார்.
34. அநாதையின் செல்வத்தை, அவர் பருவமடையும் வரை சரியான முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்.
35. நீங்கள் அளந்தால் நிறைவாக அளந்து கொடுங்கள்! மேலும் சரியான தராசினால் நிறுத்துக் கொடுங்கள்! இதுவே சிறந்ததும், அழகிய நடைமுறையுமாகும்.
36. உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்! செவி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றும் அதுகுறித்து விசாரிக்கப்படுவதாகும்.
37. பூமியில் கர்வமாக நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலைகளின் உயரத்தை நீர் அடைந்துவிடவும் முடியாது.
38. இந்த ஒவ்வொன்றின் தீங்கும் உமது இறைவனிடம் வெறுக்கப் பட்டதாக உள்ளது.
39. (நபியே!) இவை, (தன்) ஞானத்திலிருந்து உமது இறைவன் உமக்கு அறிவித்தவையாகும். அல்லாஹ்வு(க்கு இணையாக அவனு)டன் வேறு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் பழிக்கப்பட்டவராகவும், விரட்டப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
40. உங்கள் இறைவன், உங்களுக்கு ஆண் மக்களைத் தேர்ந்தெடுத்து (வழங்கி) விட்டு, வானவர்களைப் பெண் மக்களாக அவன் எடுத்துக் கொண்டானா? கடுமையான கூற்றையே கூறுகிறீர்கள்.
41. இந்தக் குர்ஆனில் அவர்கள் சிந்திப்பதற்காக(ச் சான்றுகளை) விவரித்துள்ளோம். இது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர வேறெதையும் அதிகரிக்கவில்லை.
42. “அவர்கள் சொல்வதைப் போன்று அவனுடன் வேறு கடவுள்கள் இருந்திருந்தால், அப்போது அர்ஷுக்குரியவனை நோக்கி அவர்கள் (அவனை மிகைக்க) ஒரு பாதையைத் தேடியிருப்பார்கள்” என்று கூறுவீராக!
43. அவன் தூயவன்; அவர்கள் கூறுவதை விட்டும் மிகப் பெரும் உயர்வு மிக்கவன்.
44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவையும் அவனைப் போற்றுகின்றன. அவனது புகழைக் கொண்டு போற்றாத எந்த ஒன்றும் இல்லை. எனினும் அவை போற்றுவதை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள். அவன் சகிப்புத் தன்மை மிக்கவன்; மிக மன்னிப்பவன்.
45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையே மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை ஏற்படுத்துகிறோம்.
46. அதை விளங்க முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரைகளையும், காதுகளில் செவிடையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனைத் தனித்தவனாக நீர் எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்புடன் தமது முதுகைக் காட்டித் திரும்பிச் செல்கின்றனர்.
47. (நபியே!) உம்மிடம் அவர்கள் செவியேற்கும்போது எதைச் செவியேற்கிறார்கள் என்பதையும், அந்த அநியாயக்காரர்கள் தமக்குள் இரகசியமாகப் பேசுகையில், “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்” என்று கூறுவதையும் நாம் நன்கறிவோம்.
48. உமக்கு எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். எனவே, அவர்கள் சரியான பாதையை அடையச் சக்திபெற மாட்டார்கள்.
49. “எலும்புகளாகவும் மக்கிப்போனவையாகவும் நாம் ஆகிவிட்டாலும், புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என அவர்கள் கேட்கின்றனர்.
50, 51. “நீங்கள் கல்லாகவோ, அல்லது இரும்பாகவோ, அல்லது உங்கள் உள்ளத்திற்குப் பெரியதாகத் தெரியும் ஏதேனும் ஒரு படைப்பாகவோ ஆகிக் கொள்ளுங்கள்!” என்று கூறுவீராக! “எங்களை மீண்டும் (உயிர்ப்பித்துக்) கொண்டு வருபவன் யார்?” என அவர்கள் கேட்பார்கள். “உங்களைத் தொடக்கத்தில் யார் படைத்தானோ அவன்தான்” என்று கூறுவீராக! அதற்கு அவர்கள் உம்மை நோக்கித் தமது தலைகளை அசைப்பார்கள். மேலும், “அது எப்போது?” எனக் கேட்கிறார்கள். “அது விரைவில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
52. அவன் உங்களை அழைக்கும் நாளில் அவனைப் புகழ்ந்தவர்களாகப் பதிலளிப்பீர்கள். நீங்கள் சிறிது காலமே தங்கியிருந்ததாக எண்ணுவீர்கள்.
53. என் அடியார்கள் நல்லதையே பேசவேண்டும் என அவர்களுக்குக் கூறுவீராக! அவர்களுக்கிடையே ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான், மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கிறான்.
54. உங்களைப் பற்றி உங்கள் இறைவன் மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் செய்வான். அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளராக அனுப்பவில்லை.
55. உமது இறைவன் வானங்களிலும், பூமியிலும் இருப்பவர்களை மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை, வேறு சிலரைவிடச் சிறப்பித்துள்ளோம். தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம்.288
56. “அவனையன்றி நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவர்களிடம் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் துன்பத்தை நீக்கவோ, திருப்பவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!
57. அவர்கள் யாரை அழைக்கிறார்களோ அத்தகையோர், தம்மில் (இறைவனுக்கு) யார் மிக நெருக்கமானவர்கள் என்பதற்காக (வணக்க வழிபாடுகள் மூலம்) தமது இறைவனின்பக்கம் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர்; அவனது அருளை எதிர்பார்க்கின்றனர்; அவனது தண்டனைக்குப் பயப்படுகின்றனர். உமது இறைவனின் தண்டனை எச்சரிக்கப்பட்டதாக உள்ளது.289
58. எந்த ஊராக இருந்தாலும் மறுமை நாளுக்கு முன் அதை நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனையால் தண்டிக்காமலோ இருப்பதில்லை. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக உள்ளது.
59. நாம் அற்புதங்களை அனுப்புவதற்குத் தடையாக இருப்பதெல்லாம் முன்சென்றோர் அவற்றைப் பொய்யெனக் கூறியதால் (அவர்கள் அழிக்கப்பட்டது) தான். ஸமூது சமுதாயத்திற்கு ஒரு பெண் ஒட்டகத்தை, கண்கூடா(ன சான்றா)க வழங்கினோம். ஆனால் அவர்கள் அதற்கு அநியாயம் செய்தனர். அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே சான்றுகளை அனுப்புகிறோம்.290
60. “உமது இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து அறிகிறான்” என்று நாம் உமக்குக் கூறியதை (நபியே!) நினைத்துப் பார்ப்பீராக! நாம் உமக்குக் காட்டிய காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. நாம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறோம். ஆனால் அது பெருமளவு வரம்புமீறலையே அவர்களுக்கு அதிகரிக்கிறது.291
61. நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று கூறியபோது, இப்லீஸைத் தவிர மற்றவர்கள் பணிந்தனர். “நீ களிமண்ணால் படைத்த ஒருவருக்கு நான் பணிவதா?” என அவன் கேட்டான்.
62. “என்னைவிட நீ கண்ணியப்படுத்திய இவரைப் பற்றி எனக்கு அறிவிப்பாயாக! மறுமை நாள்வரை நீ எனக்கு அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது வழித்தோன்றல்களை வேரறுத்து விடுவேன்” என்று அவன் கூறினான்.
63, 64. “நீ சென்றுவிடு! அவர்களில் யாரும் உன்னைப் பின்பற்றினால், உங்களுக்கு நரகமே நிறைவான கூலியாகும். உனது சப்தத்தின் மூலம் அவர்களுள் உன்னால் இயன்றவர்களை வழிதவறச் செய்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்கள்மீது ஏவிவிடு! அவர்களுடன் செல்வங்களிலும், குழந்தைகளிலும் கூட்டாகிக் கொள். அவர்களிடம் வாக்குறுதியை அளி!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு ஷைத்தான் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் வாக்களிப்பதில்லை.
65. “என் (நல்) அடியார்களின்மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் கூறினான்). உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
66. உங்கள் இறைவன், தனது அருளை நீங்கள் தேட வேண்டும் என்பதற்காக கப்பலைக் கடலில் உங்களுக்காகச் செலுத்துகிறான். அவன் உங்கள்மீது நிகரிலா அன்பாளனாக இருக்கிறான்.
67. கடலில் உங்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுவர். அவன் உங்களைக் காப்பாற்றி, கரைக்குக் கொண்டு வந்துவிட்டால் நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
68. தரைப் பகுதியில் அவன் உங்களைப் புதைத்துவிட மாட்டான் என்றோ, அல்லது உங்கள்மீது கல்மழையை அனுப்ப மாட்டான் என்றோ நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? (அதன்) பிறகு, உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள்.
69. அல்லது, நீங்கள் நன்றி மறந்ததால் அவன் மீண்டும் ஒருமுறை உங்களைக் கடலில் செல்ல வைத்து, உங்கள்மீது அழிக்கும் புயல் காற்றை அனுப்பி, உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர், அதில் நமக்கு எதிராக உங்களுக்கு உதவுபவர் எவரையும் காண மாட்டீர்கள்.
70. ஆதமின் மக்களைக் கண்ணியப்படுத்தினோம். தரையிலும் கடலிலும் அவர்களை (வாகனங்கள் மூலம்) சுமந்து சென்றோம். அவர்களுக்குத் தூய்மையானவற்றிலிருந்து உணவளித்தோம். நாம் படைத்ததில் பலவற்றைவிடவும் அவர்களை மிகவும் சிறப்பித்தோம்.
71. நாம் அனைத்து மனிதர்களையும் அவர்களின் தலைவர்களுடன் அழைக்கும் நாளில், யாருடைய ஏடு அவரது வலக் கரத்தில் கொடுக்கப்படுகிறதோ அவர்கள் தமது ஏட்டைப் படிப்பார்கள். அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
72. இவ்வுலகில் (சிந்தனைக்) குருடராக இருந்தவர், மறுமையில் குருடராகவும், வழி தவறியவராகவும் இருப்பார்.
73. (நபியே!) நாம் உமக்கு எதை அறிவித்தோமோ அது அல்லாததை நம்மீது நீர் புனைந்துகூற வேண்டும் என்பதற்காக, அதை விட்டும் உம்மைத் திசை திருப்பிவிட அவர்கள் முயன்றனர். அவ்வாறு செய்திருந்தால் அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்திருப்பார்கள்.
74. (நபியே!) உம்மை நாம் உறுதிப்படுத்தியிருக்கா விட்டால் சிறிதளவேனும் அவர்களின் பக்கம் சாய முனைந்திருப்பீர்!
75. அப்படிச் செய்திருந்தால், உம்மை வாழ்வில் இரு மடங்கும், மரணத்தில் இரு மடங்கும் (வேதனையைச்) சுவைக்கச் செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவுபவர் எவரையும் காண மாட்டீர்!
76. (நபியே!) உம்மை இவ்வூரிலிருந்து கிளப்பி, வெளியேற்றுவதற்கு அவர்கள் முனைந்தனர். அப்படிச் செய்திருந்தால் (அங்கு) அவர்கள் உமக்குப் பின்னர் குறைந்த காலமே வாழ்ந்திருப்பார்கள்.
77. உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களின் (விஷயத்தில் இதுவே நம்) நடைமுறையாகும். நமது நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்.
78. சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழ்ந்திடும் வரையிலான தொழுகைகளையும், ஃபஜ்ர் (தொழுகையில்) ஓதுதலையும் நிலைநிறுத்துவீராக! ஃபஜ்ர் (தொழுகையில்) ஓதுதல் சாட்சி கூறப்படுவதாக உள்ளது.292
79. (நபியே!) இரவின் ஒரு பகுதியில், குர்ஆன் (ஓதுவதன்) மூலம் தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றுவீராக! (இது) உமக்கு உபரியானதாகும். உமது இறைவன், உம்மைப் புகழப்பட்ட இடத்தில் எழுப்பக் கூடும்.293
80. “என் இறைவனே! அழகிய முறையில் என்னை நுழையச் செய்வாயாக! அழகிய முறையில் என்னை வெளியேற்றுவாயாக! எனக்கு உன்னிடமிருந்து உதவக்கூடிய ஒரு வலிமையை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்திப்பீராக!
81. “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக் கூடியதாகவே உள்ளது” என்று கூறுவீராக!294
82. இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும், நிவாரணமாகவும் உள்ளவற்றைக் குர்ஆனில் அருளுகிறோம். அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர எதையும் அதிகரிக்காது.
83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் அவன் புறக்கணித்துத் தூரமாகி விடுகிறான். அவனுக்குத் துன்பம் ஏற்பட்டாலோ நம்பிக்கையிழந்து விடுகிறான்.
84. “ஒவ்வொருவரும் தமது வழிமுறைப்படி செயல்படுகின்றனர். நேரான வழியில் இருப்பவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிவான்” என்று கூறுவீராக!
85. (நபியே!) உயிரைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “உயிர், எனது இறைவனின் கட்டளையில் உள்ளதாகும். குறைவான அறிவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறுவீராக!295
86, 87. (நபியே!) உமக்கு நாம் அறிவித்த வேத அறிவிப்புகளை நாம் நாடினால் போக்கி விடுவோம். (அதன்) பின்னர் அதில் நமக்கு எதிராக உமக்குப் பொறுப்பாளர் எவரையும் காண மாட்டீர்! எனினும், (அவ்வாறு போக்காமல் இருப்பது) உமது இறைவனின் அருளாகும். உம்மீது அவனுடைய அருள் மிகப் பெரியதாகவே இருக்கிறது.296
88. “மனிதர்களும் ஜின்களும் இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்தாலும் இதனைப் போன்று அவர்களால் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருந்தாலும் சரியே!” என்று கூறுவீராக!
89. இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்துள்ளோம். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இறைமறுப்பைத் தவிர மற்றதை மறுக்கின்றனர்.
90. “நீர் எங்களுக்காக ஒரு நீரூற்றைப் பூமியிலிருந்து பீறிட்டு ஓடச் செய்யாதவரை உம்மை நம்பவே மாட்டோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
91. “அல்லது உமக்குப் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருந்து, அவற்றுக்கிடையே ஆறுகள் பாய்ந்தோடுமாறு நீர் செய்ய வேண்டும்”
92. “அல்லது நீர் நம்புவது போல், எங்கள்மீது வானத்தைத் துண்டு துண்டாக விழச் செய்ய வேண்டும். அல்லது நீர் (எங்கள்) முன்னிலையில் அல்லாஹ்வையும் வானவர்களையும் கொண்டு வர வேண்டும்”
93. “அல்லது தங்கத்தினாலான வீடு உமக்கு இருக்க வேண்டும்; அல்லது நீர் வானில் ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கும் வகையில் ஒரு புத்தகத்தை எங்களிடம் கொண்டுவராத வரை நீர் ஏறிச் சென்றதை நாங்கள் நம்பவே மாட்டோம்” (என்றும் கூறுகின்றனர்). (நபியே!) “என் இறைவன் தூயவன். நான் தூதராக இருக்கும் மனிதனைத் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!
94. மனிதர்களிடம் நேர்வழி வரும்போது, அவர்கள் இறைநம்பிக்கை கொள்வதற்குத் தடையாக இருந்ததெல்லாம், “ஒரு மனிதரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்?” என்று அவர்கள் கேட்டதுதான்.
95. “பூமியில் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கும் வானவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு வானிலிருந்து ஒரு வானவரைத் தூதராக அனுப்பியிருப்போம்” என்று கூறுவீராக!
96. “எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன். தன் அடியார்களைப் பற்றி அவனே நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்” என்றும் கூறுவீராக!
97. யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவரே நேர்வழி பெற்றவர். யாரை அவன் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களைக் காண மாட்டீர். மறுமை நாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் அவர்களை முகம் குப்புற (நடப்பவர்களாக) ஒன்றுசேர்ப்போம். அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்களுக்கு அ(ந்நெருப்பான)து தணியும் போதெல்லாம் கொழுந்து விட்டு எரிவதை அதிகப்படுத்துவோம்.297
98. இதுவே அவர்களுக்கான கூலியாகும். அவர்கள் நமது வசனங்களை மறுத்து, “நாம் எலும்புகளாகவும் மக்கிப் போனவையாகவும் ஆகிவிட்டாலும், புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டதே இதற்குக் காரணம்.
99. வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ், இவர்கள் போன்றவர்களைப் படைப்பதற்கும் ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர்களுக்கென ஒரு தவணையை அவன் ஏற்படுத்தியுள்ளான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் அநியாயக்காரர்கள் இறைமறுப்பைத் தவிர மற்றதை மறுக்கின்றனர்.
100. “என் இறைவனுடைய அருட்களஞ்சியங்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்களாக இருந்திருந்தால் அப்போதும் செலவிடுவதற்கு அஞ்சித் தடுத்து வைத்திருப்பீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்” என்று கூறுவீராக!
101. தெளிவான ஒன்பது அற்புதங்களை நாம் மூஸாவுக்கு வழங்கினோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அவர் வந்தபோது (நடந்த நிகழ்வுகளை நபியே) அவர்களிடம் கேட்பீராக! அப்போது அவரிடம் “மூஸாவே! நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்றே எண்ணுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
102. “வானங்கள், பூமியின் இறைவனே இவற்றைத் தெளிவான சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ நன்கறிவாய்! ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என உறுதியாக நம்புகிறேன்” என்று (மூஸா) கூறினார்.
103. அவன், அவர்களை அப்பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணினான். ஆனால் அவனையும், அவனுடனிருந்த அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
104. இதன்பின்னர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம், “நீங்கள் இப்பூமியில் குடியிருங்கள்! மறுமையின் வாக்குறுதி வரும்போது, உங்களை ஒட்டுமொத்தமாகக் கொண்டு வருவோம்” என்று கூறினோம்.
105. உண்மையைக் கொண்டே இதை இறக்கினோம். உண்மையைக் கொண்டே இது இறங்கியது. உம்மை நாம் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.
106. (நபியே!) இந்தக் குர்ஆனை மக்களுக்கு(க் கால) அவகாசத்துடன் நீர் ஓதிக் காட்டுவதற்காக, இதைப் பிரித்துச் சிறிது சிறிதாக அருளியுள்ளோம்.
107. “நீங்கள் இதை நம்புங்கள்! அல்லது நம்பாதிருங்கள்! இதற்கு முன்னர் கல்வியறிவு வழங்கப்பட்டோரிடம் இது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் பணிந்தோராக, முகம் கவிழ்ந்து (ஸஜ்தாவில்) விழுவார்கள்” என்று கூறுவீராக!
108. மேலும் அவர்கள், “எங்கள் இறைவன் தூயவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாகி விட்டது” என்று கூறுகின்றனர்.
109. மேலும் அவர்கள் அழுதவர்களாக முகம் கவிழ்ந்து (ஸஜ்தாவில்) விழுகின்றனர். அவர்களுக்கு அது பணிவை அதிகரிக்கிறது.
110. “நீங்கள் ‘அல்லாஹ்’ என அழையுங்கள்! அல்லது ‘அர்-ரஹ்மான்’ என அழையுங்கள்! நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது தொழுகையில் சப்தமிட்டும் ஓதாதீர்! அதில் மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு இடைப்பட்ட ஒரு வழியைக் கடைப்பிடிப்பீராக!298
111. “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுக்கு அதிகாரத்தில் எந்தக் கூட்டாளியும் இல்லை. (உதவியாளனை ஏற்படுத்துவது) இழிவு என்பதால் அவனுக்கு எந்த உதவியாளனும் இல்லை” என்று கூறுவீராக! அவனை அதிகமதிகம் பெருமைப்படுத்துவீராக!