அத்துகான் – புகை

அத்தியாயம் : 44

வசனங்களின் எண்ணிக்கை: 59

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக!
3. பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம்.
4. அதில்தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது.
5. நமது ஆணைப்படியே (பிரிக்கப்படுகிறது.) நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம்.
6. (இது) உமது இறைவனின் அருளாகும். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
7. நீங்கள் உறுதியாக நம்புவோராக இருந்தால் (அவனே) வானங்கள், பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்.
8. அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்க வைக்கிறான். (அவனே) உங்களுக்கும் இறைவன்; முன்சென்ற உங்கள் முன்னோருக்கும் இறைவன்.
9. எனினும், அவர்கள் ஐயத்தில் உள்ளனர்; (கேலியாகக் கருதி) விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
10. வானம், தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக!
11, 12. அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும். “எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்குவாயாக! நாங்கள் இறைநம்பிக்கை கொள்கிறோம்” (என அவர்கள் கூறுவார்கள்.)
13, 14. அவர்களிடம் தெளிவுபடுத்தும் தூதர் வந்திருந்தார். பின்னரும் அவரைப் புறக்கணித்தனர். “இவர் (மற்றவர்களால்) கற்றுக் கொடுக்கப்பட்டவர், பைத்தியக்காரர்” என்று கூறினர். இந்நிலையில் அவர்கள் எவ்வாறு படிப்பினை பெறுவார்கள்?
15. நாம் சிறிதளவு வேதனையை நீக்குவோம். நீங்கள் மீண்டும் (தீமையை நோக்கித்) திரும்புவீர்கள்.465
16. நாம் மிகவும் பலமாகப் பிடிக்கும் நாளில் தண்டிப்போம்.
17. இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமிக்க ஒரு தூதர் வந்தார்.
18, 19, 20, 21. “என்னிடம் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்! நான் உங்களுக்கான நம்பிக்கைக்குரிய தூதராவேன். அல்லாஹ்வுக்கு எதிராகக் கர்வம் கொள்ளாதீர்கள். நான் உங்களிடம் தெளிவான சான்றாதாரத்தைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னைக் கல்லெறிந்து கொல்வதை விட்டும், எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவனிடமே பாதுகாவல் தேடுகிறேன். நீங்கள் என்னை நம்பவில்லையெனில் என்னை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்.)
22. “இவர்கள் குற்றம் செய்யும் கூட்டத்தினராவர்” என அவர் தனது இறைவனிடம் இறைஞ்சினார்.
23, 24. “என் அடியார்களை இரவில் அழைத்துக் கொண்டு செல்வீராக! நீங்கள் பின்தொடரப்படுவீர்கள். கடலைப் பிளந்த நிலையிலேயே விட்டுவிடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினர்” (என இறைவன் கூறினான்)
25, 26. அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும், நீருற்றுகளையும், விளைநிலங்களையும், சிறந்த இருப்பிடங்களையும் விட்டுச் சென்றனர்.
27. அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த வாழ்க்கை வசதிகளையும் (விட்டுச் சென்றனர்.)
28. இவ்வாறுதான் (நடந்தது). அவற்றை வேறொரு சமுதாயத்திற்குச் சொந்தமாக்கினோம்.
29. அவர்களுக்காக வானம், பூமி அழவில்லை. அவர்கள் அவகாசம் அளிக்கப்படுவோராகவும் இருக்கவில்லை.
30, 31. ஃபிர்அவ்னின் இழிவுதரும் வேதனையிலிருந்து இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் காப்பாற்றினோம். அவன் ஆணவக்காரனாகவும், வரம்பு மீறியவர்களில் ஒருவனாகவும் இருந்தான்.
32. தெரிந்தே அவர்களை அகிலத்தாரைவிட நாம் தேர்ந்தெடுத்தோம்.
33. பகிரங்க சோதனைகளைக் கொண்ட பல சான்றாதாரங்களை அவர்களுக்கு வழங்கினோம்.
34, 35, 36. “(இவ்வுலகில் நாம் அடையப்போகும்) நமது முதல் மரணத்தைத் தவிர (நமக்கு) வேறு எதுவுமில்லை. நாம் உயிர்ப்பித்து எழுப்பப்பட மாட்டோம். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோரை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்!” என அவர்கள் கூறுகின்றனர்.
37. இவர்கள் சிறந்தவர்களா? அல்லது ‘துப்பஃ’ சமுதாயமும், அவர்களுக்கு முன்னிருந்தோருமா? அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் செய்வோராக இருந்தனர்.
38. வானங்கள், பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவற்றைக் கேளிக்கைக்காக நாம் படைக்கவில்லை.
39. அவ்விரண்டையும் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளோம். எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
40. அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட நேரம் தீர்ப்பு நாளாகும்.
41, 42. அந்நாளில் அல்லாஹ் அருள்புரிந்தோரைத் தவிர ஒரு நண்பன், மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். அவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
43, 44, 45, 46. ஸக்கூம் மரம் பாவிகளின் உணவாகும். (அது) உருக்கப்பட்ட உலோகத்தைப் போன்று இருக்கும். கொதிநீர் கொதிப்பதைப் போல் அது வயிறுகளில் கொதிக்கும்.
47, 48. அவனைப் பிடித்து, நரகத்தின் மையப் பகுதிக்கு இழுத்துச் செல்லுங்கள்! பின்னர், வேதனையூட்டும் கொதிநீரை அவனது தலைக்கு மேல் ஊற்றுங்கள்!
49. “சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன்; கண்ணியமிக்கவன்” (என்று ஏளனமாகக் கூறப்படும்.)
50. நீங்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுவே இது!
51, 52. இறையச்சமுடையோர் பாதுகாப்புத்தலமான சொர்க்கங்களிலும், நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
53. மெல்லிய பட்டாடையும், அடர்த்தியான பட்டாடையும் அணிந்து ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு இருப்பார்கள்.
54. இவ்வாறுதான் (நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை இணைகளாக்குவோம்.
55. அச்சமற்றவர்களாக அனைத்துப் பழங்களையும் அங்கே வரவழைப்பார்கள்.
56. அவர்கள் முந்தைய மரணத்தைத் தவிர அதில் மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள். அவர்களை நரக வேதனையிலிருந்து (இறைவன்) பாதுகாப்பான்.466
57. (இது) உமது இறைவனின் அருள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
58. (நபியே!) அவர்கள் சிந்திப்பதற்காகவே இ(வ்வேதத்)தை உமது மொழியில் எளிதாக்கி வைத்துள்ளோம்.
59. நீர் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்ப்பவர்கள்தான்.