அத்தவ்பா – பாவ மன்னிப்பு

அத்தியாயம் : 9

வசனங்களின் எண்ணிக்கை: 129

1. நீங்கள் உடன்படிக்கை செய்துள்ள இணைவைப்பாளர்களுக்கு, அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் வந்துள்ள விலகல் (அறிவிப்பு)221
2. (இறைமறுப்பாளர்களே!) நீங்கள் நான்கு மாதங்கள் இப்பூமியில் சுற்றித் திரியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், இறைமறுப்பாளர்களை அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
3. “அல்லாஹ்வும் அவனது தூதரும் இணைவைப்போரிடமிருந்து விலகிக் கொண்டனர்” என்பது மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் (வந்துள்ள) மக்களுக்கான அறிவிப்பாகும். நீங்கள் பாவ மன்னிப்புக் கோரினால் அது உங்களுக்கு நல்லது. நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக!
4. உங்களுடன் உடன்படிக்கை செய்து, (அதில்) உங்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுத்தாமலும், உங்களுக்கு எதிராக யாருக்கும் உதவாமலும் உள்ள இணைவைப்பாளர்களைத் தவிர! அவர்களிடம் செய்த உடன்படிக்கையை, அவர்களுக்குரிய தவணை வரை அவர்களுக்கு முழுமைப்படுத்துங்கள்! இறையச்சமுடையோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5. புனித மாதங்கள் கடந்து விட்டால் அந்த இணைவைப்பாளர்களை (போரில்) காணுமிடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! அவர்களுக்காக ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அமர்ந்திருங்கள்! அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் அவர்களின் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.222
6. இணைவைப்பாளர்களில் யாரேனும் உம்மிடம் பாதுகாப்புக் கோரினால் அவர் அல்லாஹ்வின் சொற்களைச் செவியுறுவதற்காக அவருக்குப் பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவருக்கான பாதுகாப்பிடத்தில் அவரைச் சேர்ப்பீராக! ஏனெனில் அவர்கள் அறியாத கூட்டத்தினராக இருக்கின்றனர்.
7. அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இணைவைப்பாளர்களுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் உடன்படிக்கை செய்து கொண்டவர்களைத் தவிர! அவர்கள் உங்களுடன் சரியாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் சரியாக நடந்து கொள்ளுங்கள்! இறையச்சமுடையோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
8. அவர்கள் உங்களை வென்று விட்டால் உங்கள் விஷயத்தில் உறவையும் உடன்படிக்கையையும் பேண மாட்டார்கள் எனும்போது (அவர்களுடன் உடன்படிக்கை) எப்படி இருக்க முடியும்? அவர்கள் தமது வாய்(மொழி)களால் உங்களைத் திருப்திப்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளங்களோ மறுக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் பாவிகள்.
9. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் அற்ப விலைக்கு விற்றுவிட்டனர். அவனுடைய பாதையை விட்டும் தடுத்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
10. அவர்கள் இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் உறவையோ, உடன்படிக்கையையோ பேண மாட்டார்கள். அவர்கள்தான் வரம்பு மீறியோர்.
11. அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் மார்க்கத்தின்படி அவர்கள் உங்களுக்குச் சகோதரர்களே! அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை விவரிக்கிறோம்
12. அவர்களிடம் உடன்படிக்கை செய்த பிறகு, தமது உடன்படிக்கைகளை முறித்து, உங்கள் மார்க்கத்தைப் பற்றிக் குறை கூறினால் அந்த இறை மறுப்பின் தலைவர்களுடன் போரிடுங்கள்! இதனால் அவர்கள் விலகிக் கொள்ளலாம். அவர்களுடன் உடன்படிக்கைகள் எதுவுமில்லை.223
13. தமது உடன்படிக்கைகளை முறித்துத் தூதரை வெளியேற்றத் திட்டமிட்ட கூட்டத்தாருடன் நீங்கள் போரிட வேண்டாமா? அவர்களே உங்களுடன் முதன்முதலில் (தாக்குதலைத்) துவக்கினர். நீங்கள் அவர்களுக்குப் பயப்படுகிறீர்களா? நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்கள் பயப்படுவதற்கு அல்லாஹ்வே மிகத் தகுதியானவன்.
14. அவர்களுடன் போரிடுங்கள்! உங்கள் கைகளால் அவர்களை அல்லாஹ் வேதனை செய்வான். அவர்களை இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு அவன் உதவி செய்து, இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தினரின் உள்ளங்களுக்கு நிவாரணமளிப்பான்.
15. அவர்களின் உள்ளங்களிலுள்ள கோபத்தையும் அவன் அகற்றுவான். தான் நாடியோரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
16. உங்களில் போரிடுவோர் யார் என்பதையும், அல்லாஹ்வையும், அவனது தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் விட்டுவிட்டு (மற்றவரை) உற்ற நண்பராக எடுத்துக் கொள்ளாதோர் யார் என்பதையும் அல்லாஹ் வெளிப்படுத்தாமல் நீங்கள் விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
17. இணை வைப்போர், தமக்குத் தாமே இறைமறுப்புக்குச் சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களின் (நற்)செயல்கள் அழிந்து விட்டன. நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
18. யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயப்படாமல் இருக்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பார்கள். அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும்.
19. ஹஜ் செய்வோருக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரையும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோரைப் போல் ஆக்குகின்றீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.224
20. இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோரே அல்லாஹ்விடம் மகத்தான தகுதிக்குரியோர்; அவர்களே வெற்றியாளர்கள்.
21. தனது அருளையும், பொருத்தத்தையும், சொர்க்கங்களையும் (தருவதாக) அவர்களின் இறைவன் அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான். அங்கு அவர்களுக்கு நிரந்தரமான இன்பமும் இருக்கிறது.
22. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்விடமே மகத்தான கூலி உள்ளது.
23. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்கள் தந்தையரும், உங்கள் சகோதரர்களும் இறைநம்பிக்கையைக் காட்டிலும் இறைமறுப்பை நேசித்தால் அவர்களைப் பொறுப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! உங்களில் யார் அவர்களைப் பொறுப்பாளர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களே அநியாயக்காரர்கள்.
24. உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்கள் குடும்பத்தார், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள், நஷ்டமாகி விடுமோ என்று நீங்கள் அஞ்சும் வியாபாரம், நீங்கள் திருப்தி கொள்ளும் இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வைவிடவும், அவனது தூதரைவிடவும், அவனது பாதையில் போரிடுவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டு வரும்வரை எதிர்பாருங்கள்! பாவிகளின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.225
25. அதிகமான களங்களிலும், ஹுனைன் போர் (நடந்த) அன்றும் அல்லாஹ் உங்களுக்கு உதவியுள்ளான். (ஹுனைனில்) உங்களது அதிக எண்ணிக்கை உங்களுக்குப் பெருமிதத்தை அளித்தபோது, அது உங்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை. பூமி, விரிந்து பரந்ததாக இருந்தும் அது உங்களுக்கு நெருக்கடியானது. பின்னர் நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்கள்.226
26. பின்னர் தன் தூதர்மீதும், இறைநம்பிக்கையாளர்கள்மீதும் அல்லாஹ் தனது அமைதியை இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளையும் இறக்கி, இறைமறுப்பாளர்களை வேதனை செய்தான். இதுவே இறைமறுப்பாளர்களுக்கான கூலியாகும்.
27. இதற்குப் பிறகும், தான் நாடியோரை அல்லாஹ் மன்னிக்கிறான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
28. இறைநம்பிக்கை கொண்டோரே! இணைவைப்போர் அசுத்தமானவர்கள்தான். எனவே தமது இந்த ஆண்டுக்குப் பிறகு அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமைக்குப் பயந்தால், அல்லாஹ் நாடினால் தனது அருளின் மூலம் உங்களைச் செல்வந்தர்களாக்குவான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
29. வேதம் வழங்கப்பட்டோரில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவற்றை விலக்கிக் கொள்ளாமல், இந்த உண்மை மார்க்கத்தை நெறியாகக் கொள்ளாமல் இருப்போர் சிறுமைப்பட்டு, கையால் ஜிஸ்யா வரியை வழங்கும் வரை அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்!
30. யூதர்கள், ‘உஸைர் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். கிறித்தவர்களோ, ‘மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். இது, தமது வாயளவில் அவர்கள் கூறும் கூற்றாகும். அவர்கள் இதற்கு முன்பிருந்த இறைமறுப்பாளர்களின் கூற்றுக்கு ஒத்துப் போகின்றனர். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! அவர்கள் எங்கே திசை திருப்பப்படுகின்றனர்?
31. அல்லாஹ்வையன்றி தங்களது அறிஞர்களையும், துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் அவர்கள் கடவுள்களாக்கிக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்றே அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.
32. அவர்கள் தமது வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர். இறைமறுப்பாளர்கள் வெறுத்தபோதும், அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.
33. இணைவைப்பாளர்கள் வெறுத்தபோதும், அவனே எல்லா மார்க்கங்களைவிட இ(ம்மார்க்கத்)தை மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் தனது தூதரை அனுப்பினான்.227
34. இறைநம்பிக்கை கொண்டோரே! (வேதமுடையோரிலுள்ள) அறிஞர்களிலும், துறவிகளிலும் அதிகமானவர்கள் மக்களின் பொருட்களைத் தவறான முறையில் உண்கின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். “யார் தங்கம், வெள்ளியைச் சேர்த்து வைத்து, அதை அல்லாஹ்வின் பாதையில் செலவிடவில்லையோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என நற்செய்தி கூறுவீராக!228
35. நரகத்தின் நெருப்பில் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதன்மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் நாளில் “உங்களுக்காக நீங்கள் சேர்த்து வைத்தது இதுவே! நீங்கள் எதைச் சேர்த்து வைத்தீர்களோ அதைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்.)
36. வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் (இருந்து) அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே சரியான வழிமுறை. புனித மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்! இணைவைப்பாளர்கள் ஒன்றிணைந்து உங்களை எதிர்த்துப் போரிடுவதைப் போன்று நீங்களும் ஒன்றிணைந்து அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்! அல்லாஹ், இறையச்சமுடையோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!229
37. (புனித மாதங்களை) ஒத்தி வைப்பது இறைமறுப்பை அதிகப்படுத்துவதாகும். இதன்மூலம் இறைமறுப்பாளர்கள் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அ(வ்வாறு ஒத்தி வைப்ப)தை அனுமதிக்கின்றனர்; மற்றொரு வருடம் அதைத் தடுக்கின்றனர். அல்லாஹ் புனிதமா(தங்களா)க்கியவற்றின் எண்ணிக்கைக்கு ஒத்துப் போவதற்காக, அல்லாஹ் புனிதமாக்கியவற்றை(ப் போருக்கு) அனுமதிக்கப்பட்டதாக ஆக்குகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. அல்லாஹ், இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
38. இறைநம்பிக்கை கொண்டோரே! “அல்லாஹ்வுடைய பாதையில் புறப்படுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் இவ்வுலகத்தின்பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? மறுமையைவிட இவ்வுலக வாழ்வில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா? மறுமையுடன் ஒப்பிடுகையில் இவ்வுலக வாழ்வின் இன்பம் அற்பமானது.230
39. நீங்கள் புறப்படவில்லை என்றால் அவன் உங்களைத் துன்புறுத்தும் வேதனையால் தண்டிப்பான். உங்களுக்குப் பதிலாக வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவனுக்கு நீங்கள் சிறிதும் தீங்கிழைக்க முடியாது. ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
40. (நபியாகிய) இவருக்கு நீங்கள் உதவாவிட்டால், இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில் இறைமறுப்பாளர்கள் அவரை வெளியேற்றி, அவ்விருவரும் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது, அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர், தம் தோழருக்குக் கூறியபோது அல்லாஹ் தனது அமைதியை அவர்மீது இறக்கி, நீங்கள் பார்க்காத படைகள் மூலம் அவரைப் பலப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் வார்த்தையைத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்.231
41. எளிதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும் நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுங்கள்! நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது.
42. (நபியே!) சமீபத்தில் உள்ள பொருளாகவும், நடுத்தரப் பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றி வந்திருப்பார்கள். மாறாக, பயண தூரம் அவர்களுக்கு நீண்டு விட்டது. “எங்களுக்கு இயன்றிருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டிருப்போம்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து, தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
43. (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்து விட்டான். உண்மையாளர்கள் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியாத வரை (போருக்கு வராதிருக்க) அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?
44. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்கள் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடாமலிருக்க உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். இறையச்சமுடையோரை அல்லாஹ் நன்கறிந்தவன்.
45. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாதவர்களே (போரிடாமலிருக்க) உம்மிடம் அனுமதி கோருகின்றனர். அவர்களின் உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளன. அவர்கள் தமது சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டுள்ளனர்.
46. அவர்கள் புறப்பட விரும்பியிருந்தால் அதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள். எனினும், அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களைப் பின்தங்கச் செய்து விட்டான். “(போருக்குச் செல்லாமல்) தங்கியிருப்போருடன் நீங்களும் அமர்ந்து கொள்ளுங்கள்!” என்று கூறப்பட்டு விட்டது.
47. அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால் உங்களுக்குத் தீங்கையே அதிகரித்திருப்பார்கள். உங்களிடம் குழப்பம் ஏற்படுத்த விரும்பி, உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். உங்களிடையே அவர்களுக்காக ஒட்டுக் கேட்பவர்களும் இருக்கின்றனர். அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.
48. அவர்கள் இதற்கு முன்னரும் குழப்பம் ஏற்படுத்த விரும்பினர். உமக்கு எதிராகப் பல விஷயங்களைப் புரட்டி விட்டனர். முடிவில் உண்மை வெளிவந்தது. அவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ்வின் கட்டளையே மேலோங்கியது.
49. “(போரிடாமலிருக்க) எனக்கு அனுமதியளிப்பீராக! என்னைச் சோதனைக்குள்ளாக்கி விடாதீர்” என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து விட்டனர். இறைமறுப்பாளர்களை நரகம் சூழ்ந்து கொள்ளும்.
50. உமக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலை தருகிறது. உமக்குத் துன்பம் ஏற்பட்டால் “முன்பே நமது முடிவை (நல்லதாக) எடுத்து விட்டோம்” என்று கூறி மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.
51. “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பாதுகாவலன். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்” எனக் கூறுவீராக!
52. “எங்களுக்கு (வெற்றி அல்லது உயிர் தியாகம் ஆகிய) இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர நீங்கள் வேறெதையும் எதிர்பார்க்கிறீர்களா? ஆனால் அல்லாஹ், தனது தண்டனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகள் மூலமாகவோ உங்களைத் தண்டிப்பதையே உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் உங்களுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறுவீராக!
53. “நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ செலவிடுங்கள்! அது உங்களிடமிருந்து ஏற்கப்பட மாட்டாது. நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராக இருக்கிறீர்கள்” என்று கூறுவீராக!
54. அவர்கள் செலவு செய்தவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருப்பது, அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும், அவர்கள் சோம்பேறிகளாகவே தொழுகைக்கு வருவதும், வெறுப்புடன் செலவிடுவதுமே ஆகும்.
55. அவர்களின் செல்வங்களும், அவர்களின் பிள்ளைகளும் உம்மை வியப்பில் ஆழ்த்த வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்வில் அவர்களை வேதனை செய்யவும், இறைமறுப்பாளர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
56. ‘நாங்கள் உங்களைச் சார்ந்தவர்களே!’ என அல்லாஹ்வின்மீது அவர்கள் சத்தியம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்ல! மாறாக அவர்கள் பயந்த கூட்டத்தினர்.
57. பாதுகாப்பிடத்தையோ அல்லது குகைகளையோ அல்லது நுழைவிடத்தையோ அவர்கள் கண்டால் அதை நோக்கி விரைந்து சென்றிருப்பார்கள்.
58. தர்மங்கள் (பங்கிடும்) விஷயத்தில் உம்மைக் குறை கூறுவோரும் அவர்களிடையே உள்ளனர். அதிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டால் திருப்தியுறுகின்றனர். அதிலிருந்து அவர்களுக்கு வழங்கப்படா விட்டால் கோபமடைகின்றனர்.232
59. அல்லாஹ்வும், அவனது தூதரும் எதை வழங்கினார்களோ அதில் அவர்கள் திருப்தியுற்று, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். எங்களுக்கு அல்லாஹ்வின் அருளிலிருந்து அவனும், அவனது தூதரும் வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் விருப்பம் கொண்டோர்” என்று அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?
60. வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தர்மங்களை வசூலிப்போருக்கும், (இஸ்லாத்தின்பால்) உள்ளங்கள் ஈர்க்கப்படுவோருக்கும், அடிமைகளு(டைய விடுதலைக்)கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதை(யில் போரிடுவோரு)க்கும், வழிப்போக்கருக்கும் தர்மங்கள் உரியவை. இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.233
61. ‘இவர் எதைச் சொன்னாலும் செவியேற்பவர்’ என்று கூறி, அவர்களிடையே இந்த நபிக்குத் தொல்லை கொடுப்போரும் உள்ளனர். “அவர் உங்களுக்கு நன்மையானதைச் செவியுறுகிறார்; அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்கிறார்; இறைநம்பிக்கையாளர்களை உண்மைப்படுத்துகிறார்; உங்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு அருளாக இருக்கிறார்” என்று கூறுவீராக! அல்லாஹ்வின் தூதருக்கு யார் தொல்லை கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
62. (இறைநம்பிக்கை கொண்டோரே!) உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக உங்களிடம் அவர்கள் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும் அவனது தூதருமே மிகத் தகுதியானவர்கள்.
63. ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது; அதில் நிரந்தரமாக இருப்பார்கள்; இது மிகப் பெரும் இழிவு’ என்பதை அவர்கள் அறியவில்லையா?
64. நயவஞ்கர்கள், தமது உள்ளங்களில் (மறைத்து) வைத்திருப்பதை அறிவிக்கும் ஓர் அத்தியாயம் (இறைநம்பிக்கையாளர்களான) அவர்கள்மீது அருளப்படுவதை (எண்ணி) அஞ்சுகின்றனர். “நீங்கள் கேலி செய்யுங்கள்! நீங்கள் எதைப் பற்றி அஞ்சுகிறீர்களோ அதை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்” என்று கூறுவீராக!
65. அவர்களிடம் நீர் விசாரித்தால், “நாங்கள் கேளிக்கையில் மூழ்கி, விளையாடிக் கொண்டிருந்தோம்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பீராக!
66. போலிக் காரணம் கூறாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு மறுத்துவிட்டீர்கள். உங்களில் (திருந்திக் கொண்ட) ஒரு கூட்டத்தாரை நாம் மன்னித்தாலும் மற்றொரு கூட்டத்தார் குற்றவாளிகளாக இருந்ததால் அவர்களை வேதனை செய்வோம்.
67. நயவஞ்சக ஆண்களும், நயவஞ்சகப் பெண்களும் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவுகின்றனர்; நன்மையைத் தடுக்கின்றனர். (நல்வழியில் செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை மறந்தனர்; அவனும் அவர்களை மறந்து விட்டான். நயவஞ்சகர்களான அவர்கள் பாவிகளே!
68. நயவஞ்சக ஆண்களுக்கும், நயவஞ்சகப் பெண்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பை வாக்களித்துள்ளான். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்தும் விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனையும் உள்ளது.
69. (நயவஞ்சகர்களாகிய நீங்கள்) உங்களுக்கு முன்பிருந்தோரைப் போன்றே இருக்கிறீர்கள். அவர்கள் உங்களைவிட அதிகமான வலிமையும், அதிகமான செல்வங்களும், பிள்ளைகளும் உடையோராக இருந்து, தமது நற்பேறுகளை அனுபவித்தனர். உங்களுக்கு முன்பிருந்தோர் தமது நற்பேறுகளை அனுபவித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நற்பேறுகளை அனுபவித்தீர்கள். அவர்கள் (வீணானவற்றில்) மூழ்கியதைப் போன்று நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இத்தகையோரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விட்டன. அவர்களே நஷ்டமடைந்தோர்.
70. அவர்களுக்கு முன்பிருந்த நூஹுடைய சமுதாயம், ஆது, ஸமூது சமுதாயத்தினர், இப்ராஹீமுடைய சமுதாயம், மத்யன் வாசிகள் மற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊரார் ஆகியோரைப் பற்றிய செய்தி அவர்களிடம் வரவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். எனவே, அவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்யவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.
71. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
72. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். மேலும் நிலையான சொர்க்கங்களில் தூய்மையான இல்லங்களையும் (வாக்களித்துள்ளான்.) அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. அதுவே மகத்தான வெற்றியாகும்.234
73. நபியே! இறைமறுப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் எதிர்த்துப் போரிடுவீராக! அவர்களிடம் கடுமை காட்டுவீராக! அவர்களின் தங்குமிடம் நரகம். சேருமிடத்தில் அது கெட்டது.
74. அவர்கள் இறைமறுப்பு வார்த்தையைக் கூறிவிட்டு, தாங்கள் கூறவில்லை என அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு மறுத்து விட்டனர். அவர்களால் அடைய முடியாத காரியத்தைச் செய்ய முயன்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனது அருளால் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகவே தவிர அவர்கள் பழிவாங்கவில்லை. அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்குச் சிறந்தது. அவர்கள் புறக்கணித்தால் இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களை அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுக்கு உலகில் பாதுகாவலரோ, உதவியாளரோ இல்லை.
75. “அல்லாஹ், தனது அருளிலிருந்து எங்களுக்கு வழங்கினால் நாங்கள் தர்மம் செய்து, நல்லவர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தோரும் அவர்களிடையே உள்ளனர்.
76. அவன் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணித்துப் பின்வாங்கி விட்டனர்.
77. அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்ததாலும், பொய்யுரைப்போராக இருந்ததாலும், அவர்கள் அவனைச் சந்திக்கும் நாள்வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தனத்தைத் தொடருமாறு செய்து விட்டான்.
78. தமது இரகசிய எண்ணங்களையும், இரகசியப் பேச்சுக்களையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? அல்லாஹ், மறைவானவற்றை மிகவும் அறிந்தவன்.
79. இறைநம்பிக்கையாளர்களில் தர்மங்களை வாரி வழங்குவோரையும், தமது உழைப்பைத் தவிர (தர்மம் செய்ய) வேறெதுவும் கிடைக்காதவர்களையும் அவர்கள் குறை கூறுகின்றனர்; அவர்களைக் கேலியும் செய்கின்றனர். அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. 235
80. (நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடினாலும் சரி! அல்லது பாவ மன்னிப்புத் தேடாவிட்டாலும் சரி! அவர்களுக்காக எழுபது தடவை நீர் பாவ மன்னிப்புத் தேடினாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததுதான். பாவிகளான கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.236
81. (தபூக் போருக்குச் செல்லாமல்) பின்தங்கியோர் அல்லாஹ்வின் தூதர் சென்ற பிறகு, தாங்கள் (ஊரில்) தங்கியிருந்ததன் மூலம் மகிழ்ச்சியடைந்தனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுத்தனர். மேலும் “இந்த வெப்பத்தில் புறப்படாதீர்கள்” என்றும் கூறினர். “அவர்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால், நரக நெருப்பு இதைவிடக் கடும் வெப்பமானது” என்று கூறுவீராக!
82. எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததன் பலனாக குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!
83. அவர்களில் ஒரு பிரிவினரிடம் உம்மை (வெற்றியுடன்) அல்லாஹ் திரும்பி வரச் செய்து, அவர்கள் (மற்றொரு) போருக்குப் புறப்பட உம்மிடம் அனுமதி கோரினால் “என்னுடன் ஒருபோதும் நீங்கள் புறப்படவே வேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போரிட வேண்டாம். முதல் தடவை நீங்கள் ஊரில் தங்கியிருப்பதையே விரும்பினீர்கள். எனவே பின்தங்கியிருப்போருடன் நீங்களும் இருந்து விடுங்கள்!” என்று கூறுவீராக!
84. அவர்களில் எவரேனும் மரணித்து விட்டால் அவருக்காக ஒருபோதும் நீர் தொழுகை நடத்தாதீர்! அவர்களின் அடக்கத்தலத்திலும் (பாவ மன்னிப்புக் கோருவதற்காக) நிற்காதீர்! ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்துப் பாவிகளாகவே மரணித்தனர்.237
85. அவர்களின் செல்வங்களும், அவர்களின் பிள்ளைகளும் உம்மை வியப்பில் ஆழ்த்த வேண்டாம். அதன் மூலம் இவ்வுலக வாழ்வில் அவர்களை வேதனை செய்யவும், இறைமறுப்பாளர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
86. “அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டு, அவனது தூதருடன் சேர்ந்து போரிடுங்கள்!” என ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அவர்களில் வசதியுடையவர்கள் “எங்களை விட்டு விடுவீராக! ஊரில் தங்கியிருப்போருடன் நாங்களும் இருந்து விடுகிறோம்” என்று கூறி உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
87. (போர் கடமையில்லாமல்) பின்தங்கியிருப்போருடன் தாமும் இருந்து விடுவதை அவர்கள் விரும்பினர். அவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
88. ஆனால் தூதரும், அவருடனிருக்கும் இறைநம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிட்டனர். அவர்களுக்குத்தான் நன்மைகள் உள்ளன. அவர்களே வெற்றியாளர்கள்.
89. அவர்களுக்குச் சொர்க்கங்களை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
90. (போரிடாமலிருக்க) தமக்கு அனுமதியளிக்கப்படுவதற்காக, காரணம் கூறும் கிராமவாசிகள் (உம்மிடம்) வந்தனர். அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் பொய்யுரைத்தோர் (ஊரில்) தங்கிவிட்டனர். அவர்களில் இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்.
91. பலவீனர்கள், நோயாளிகள், (போருக்குச்) செலவிட எதுவும் கிடைக்காதவர்கள் ஆகியோர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உண்மையானவர்களாக நடந்து கொண்டால் அவர்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. நன்மை செய்வோருக்கு எதிராக(க் குற்றம் பிடிக்க) எந்த வழியும் இல்லை. அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.238
92. (நபியே!) தமக்கு வாகனம் கேட்டு அவர்கள் உம்மிடம் வந்தபோது “உங்களை ஏற்றிச் செல்லக்கூடிய (வாகனமான)து என்னிடம் இல்லை” என்று நீர் கூறினீரே அத்தகையோர்மீது எந்தக் குற்றமுமில்லை. (போருக்காகச்) செலவிட தமக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்ற கவலையால் தமது கண்களில் கண்ணீர் வழிந்தோட அவர்கள் திரும்பிச் சென்றனர்.
93. செல்வந்தர்களாக இருந்தும் உம்மிடம் அனுமதி கோரியவர்களுக்கு எதிராகவே (குற்றம் பிடிக்க) வழி உள்ளது. (போர் கடமையில்லாமல்) பின்தங்கியிருப்போருடன் தாமும் இருந்து விடுவதை அவர்கள் விரும்பினர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே அவர்கள் அறிய மாட்டார்கள்.
94. நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது உங்களிடம் போலிக் காரணம் கூறுவார்கள். “போலிக் காரணம் கூறாதீர்கள்! உங்களை நம்பவே மாட்டோம். உங்களைப் பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்” என்று (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்கள் செயலைக் கவனிப்பார்கள். பிறகு மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
95. நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது, நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக உங்களிடம் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார்கள். எனவே அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்! அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களின் தங்குமிடம் நரகம். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான கூலியாகும்.239
96. நீங்கள் அவர்களைப் பொருந்திக் கொள்வதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்களைப் பொருந்திக் கொண்டாலும் பாவிகளான இக்கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்.
97. இறைமறுப்பிலும், நயவஞ்சகத்திலும் கிராமவாசிகள் மிகக் கடுமையானவர்கள். தனது தூதர்மீது அல்லாஹ் அருளியவற்றின் வரையறைகளை அறியாமல் இருப்பதற்கே அவர்கள் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
98. தாங்கள் செலவிடுவதை இழப்பாகக் கருதுவோரும் கிராமவாசிகளில் உள்ளனர். உங்களுக்குக் கேடுகள் ஏற்படுவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மோசமான கேடு அவர்களுக்கே உள்ளது. அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
99. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடியவர்களும் கிராமவாசிகளில் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்வின் நெருக்கத்திற்குரியதாகவும், தூதரின் பிரார்த்தனைகளுக்கு உரியதாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! அது அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே! அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
100. முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளில் முதலாவதாக முந்திக் கொண்டவர்களையும், நல்லவற்றில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்களுக்குச் சொர்க்கங்களைத் தயார்படுத்தியுள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
101. உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். அவர்கள் நயவஞ்சகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். நீர் அவர்களை அறிய மாட்டீர். நாமே அவர்களை அறிவோம். அவர்களை இருமுறை வேதனை செய்வோம். பிறகு அவர்கள் கடும் வேதனையை நோக்கித் திருப்பப்படுவார்கள்.
102. (அவர்களில்) வேறுசிலர் தமது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் நல்ல செயலையும், தீய செயலையும் கலந்து விட்டனர். அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.240
103. (நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக! அதன்மூலம் அவர்களை அப்பழுக்கற்றவர்களாக்கி, அவர்களைத் தூய்மையாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்திப்பீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதியைத் தரும். அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.241
104. அல்லாஹ்வே தனது அடியார்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை ஏற்றுக் கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? அல்லாஹ்வே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன். 242
105. “நீங்கள் செயல்படுங்கள்! அல்லாஹ்வும், அவனது தூதரும், இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!
106. அல்லாஹ்வின் தீர்ப்புக்காக தாமதப்படுத்தப்பட்ட வேறு சிலரும் உள்ளனர். அவன் அவர்களை வேதனை செய்யலாம்; அல்லது அவர்களை மன்னித்து விடலாம். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
107. இடையூறு செய்வதற்காகவும், இறைமறுப்பிற்காகவும், இறைநம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும், இதற்கு முன்பு அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிட்டோருக்கு அடைக்கலமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோரும் (அவர்களில்) உள்ளனர். அவர்கள், ‘நாங்கள் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை’ எனச் சத்தியம் செய்கின்றனர். ‘அவர்கள் பொய்யர்கள்தான்’ என அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
108. அங்கு நீர் ஒருபோதும் தொழ வேண்டாம். ஆரம்ப காலத்திலிருந்து இறையச்சத்தின்மீது அடித்தளமிடப்பட்ட பள்ளிவாசல்தான் நீர் தொழுவதற்கு மிகத் தகுதியானது. தூய்மையை விரும்பும் மனிதர்கள் அங்குள்ளனர். (இத்தகைய) தூய்மையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.243
109. அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், அவனது பொருத்தத்தையும் கொண்டு தனது கட்டடத்திற்கு அடித்தளமிட்டவன் சிறந்தவனா? அல்லது இடியும் நிலையிலுள்ள, அரித்திருக்கும் கரையின் ஓரத்தில் தனது கட்டடத்திற்கு அடித்தளமிட்டு, அதனுடன் நரக நெருப்பில் சரிந்து விழுந்தவ(ன் சிறந்தவ)னா? அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
110. அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாகச் சிதறும் வரை, அவர்கள் கட்டிய அக்கட்டடம் அவர்களின் உள்ளங்களில் (நயவஞ்சகத்தனம் எனும்) சந்தேகமாக நீடித்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
111. ‘இறைநம்பிக்கையாளர்களுக்குச் சொர்க்கம் உண்டு’ என்பதற்கு ஈடாக அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் அவர்களிடமிருந்து அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்கள். கொல்கிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். இது தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட உண்மையான வாக்குறுதியாகும். அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட உங்களின் இவ்வியாபாரத்தின் மூலம் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றியாகும்.
112. அவர்கள் பாவ மன்னிப்புக் கோருபவர்கள்; வணங்குபவர்கள்; புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தா செய்பவர்கள்; நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணுபவர்கள். இந்த இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
113. இணைவைப்போர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்குத் தெளிவான பிறகு, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவது நபிக்கும், இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகுதியானதல்ல!244
114. இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியது, அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மை மிக்கவர்.
115. அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு நேர்வழி காட்டிய பிறகு, அவர்கள் விலகிக் கொள்ள வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தாத வரை அவர்களை அவன் வழிகேட்டில் விட்டுவிட மாட்டான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
116. அல்லாஹ்வுக்கே வானங்கள், பூமியின் ஆட்சி உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரோ, உதவி செய்பவரோ இல்லை.
117. இந்த நபியையும், முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் தடுமாற முற்பட்ட பின்னரும் அவர்கள் சிரமமான காலத்தில் அவரைப் பின்பற்றினர். பின்னர் அவர்களை மன்னித்தான். அவர்கள்மீது அவன் கருணையுள்ளவன்; நிகரிலா அன்பாளன்.
118. (தீர்ப்பு) ஒத்தி வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்தான்.) இப்பூமி, விரிந்து பரந்ததாக இருந்தும் அது அவர்களுக்கு நெருக்கடியானது. அவர்களின் உள்ளங்களும் அவர்களுக்கு நெருக்கடியானது. ‘அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்குமிடம் அவனிடமே தவிர வேறில்லை’ என அவர்கள் அறிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.245
119. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உண்மையாளர்களுடன் ஆகி விடுங்கள்!
120. மதீனாவாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராம வாசிகளுக்கும் (போருக்குச் செல்லாமல்) அல்லாஹ்வின் தூதரை விட்டும் பின்தங்குவதும், அவரது உயிரைவிடத் தமது உயிர்களை நேசிப்பதும் தகுதியானதல்ல! ஏனெனில், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் தாகமோ, சிரமமோ, பசியோ ஏற்பட்டாலும், இறைமறுப்பாளர்களுக்குக் கோபமூட்டும் எந்த இடத்தில் அவர்கள் கால் பதித்து, எதிரியிடமிருந்து எ(ந்தத் துன்பத்)தை அவர்கள் அடைந்தாலும் அதற்கு ஈடாக அவர்களுக்கு நற்செயல் எழுதபட்டே தீரும். நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.
121. சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ எந்தச் செலவை அவர்கள் செய்தாலும், எந்தப் பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து சென்றாலும் அது அவர்களுக்குப் பதியப்படாமல் இருப்பதில்லை. இதற்குக் காரணம், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அல்லாஹ் அழகிய கூலியை வழங்க வேண்டும் என்பதேயாகும்.
122. இறைநம்பிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறப்பட்டுச் செல்லக்கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு பிரிவினர் (மட்டும்) புறப்பட்டிருக்கலாமே! ஏனெனில் அவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்று, தமது கூட்டத்தாரிடம் அவர்கள் திரும்பி வரும்போது அவர்களை எச்சரிப்பார்கள். இதனால் அவர்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்ளலாம்.
123. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு அருகிலிரு(ந்து போர் தொடு)க்கும் இறைமறுப்பாளர்களுடன் போரிடுங்கள்! அவர்கள் உங்களிடம் கடுமையைக் காணட்டும்! இறையச்சமுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
124. ஏதேனும் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால் “இது, உங்களில் யாருக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று அவர்களில் சிலர் கேட்கின்றனர். யார் இறைநம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே அது இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
125. தமது உள்ளங்களில் நோயுள்ளோருக்கோ, அவர்களின் (இறைமறுப்பு எனும்) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே அது அதிகப்படுத்தியது. அவர்கள் இறைமறுப்பாளர்களாகவே மரணித்தார்கள்.
126. ஒவ்வோர் ஆண்டிலும் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? (அதன்) பிறகும் அவர்கள் பாவ மன்னிப்புக் கோருவதுமில்லை; படிப்பினை பெறுவதுமில்லை.
127. ஓர் அத்தியாயம் அருளப்பட்டால் “உங்களை யாரும் பார்க்கிறார்களா?” என அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். பின்னர் திரும்பி விடுகின்றனர். அவர்கள் விளங்கிக் கொள்ளாத கூட்டமாக இருப்பதால் அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் திருப்பி விட்டான்.
128. உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்து விட்டார். நீங்கள் துன்பப்படுவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. அவர் உங்கள் (நலன்)மீது ஆவல் கொண்டவர். இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் கருணையும் அன்பும் கொண்டவர்.
129. அவர்கள் புறக்கணித்தால் “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவன்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் மகத்தான அர்ஷின் இறைவன்” என்று கூறுவீராக!