அத்தியாயம் : 81
வசனங்களின் எண்ணிக்கை: 29
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. சூரியன் சுருட்டப்படும்போது,614
2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது,
3. மலைகள் பெயர்த்தெடுக்கப்படும்போது,
4. நிறைமாத சினை ஒட்டகங்கள் கவனிப்பாரற்றுக் கைவிடப்படும்போது,
5. வனவிலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
6. கடல்கள் பற்ற வைக்கப்படும்போது,
7. உயிர்கள் இணைக்கப்படும்போது,
8, 9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்குழந்தையிடம், என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என விசாரிக்கப்படும்போது,
10. பதிவேடுகள் விரிக்கப்படும்போது,
11. வானம் அகற்றப்படும்போது,
12. நரகம், தீ மூட்டப்படும்போது,
13. சொர்க்கம், அருகில் கொண்டு வரப்படும்போது,
14. ஒவ்வொருவனும், தான் கொண்டு வந்திருப்பதை அறிந்துகொள்வான்.
15, 16. தொடர்ந்து ஓடி மறைகின்ற, (மீண்டும்) உதிக்கின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.615
17. பின்னோக்கிச் செல்லும்போதுள்ள இரவின்மீது சத்தியமாக!
18. விடியும்போதுள்ள காலை நேரத்தின்மீதும் சத்தியமாக!
19. இது கண்ணியமிக்க (ஜிப்ரீல் எனும்) தூதரின் கூற்றாகும்.
20. அவர் வலிமையுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் மதிப்பு மிக்கவர்.
21. அங்கு (வானவர்களால்) கீழ்ப்படியப்படுபவர்; நம்பிக்கைக்குரியவர்.
22. உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்ல!
23. (நபியாகிய) இவர், (ஜிப்ரீலான) அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்.
24. (நபியாகிய) இவர் மறைவான விஷயத்தில் கஞ்சத்தனம் செய்பவரல்ல.
25. இது, விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்றுமல்ல!
26. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
27, 28. உங்களில் நேர்வழியில் செல்ல விரும்பும் அகிலத்தாருக்கு இது அறிவுரையாகும்.
29. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலே தவிர நீங்கள் (எதையும்) நாட மாட்டீர்கள்.