அத்தகாபுன் – இழப்பு

அத்தியாயம் : 64

வசனங்களின் எண்ணிக்கை: 18

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானங்கள், பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் போற்றுகின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றலுடையவன்.
2. அவன்தான் உங்களைப் படைத்தான். உங்களில் இறைமறுப்பாளரும் உள்ளனர்; இறைநம்பிக்கையாளரும் உள்ளனர். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
3. வானங்களையும், பூமியையும் நியாயமான காரணத்துடனே அவன் படைத்துள்ளான். அவனே உங்களை வடிவமைத்து உங்கள் தோற்றங்களை அழகாக்கினான். அவனிடமே மீளுதல் உண்டு.
4. வானங்கள், பூமியில் உள்ளவற்றை அவன் அறிகிறான். நீங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
5. இதற்கு முன்பிருந்த இறைமறுப்பாளர்களைப் பற்றிய செய்தி உங்களிடம் வரவில்லையா? தமது செயலுக்குரிய விளைவை அவர்கள் அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
6. அவர்களுக்கான தூதர்கள், அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தபோது, “ஒரு மனிதரா எங்களுக்கு வழிகாட்டப் போகிறார்?” என்று கூறி, (அவரை) நம்ப மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். எனவே (அவர்களை) அல்லாஹ்வும் புறக்கணித்து விட்டான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
7. (உயிர்ப்பித்து) எழுப்பப்படவே மாட்டோம் என இறைமறுப்பாளர்கள் எண்ணுகின்றனர். “அவ்வாறல்ல! என் இறைவன்மீது சத்தியமாக! நீங்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவீர்கள். பின்னர், உங்களின் செயல்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானதே!” என்று கூறுவீராக!
8. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் இறக்கி வைத்துள்ள ஒளியையும் நம்புங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
9. (அனைவரையும்) ஒன்றுதிரட்டும் நாளுக்காக அவன் உங்களை ஒன்றுசேர்க்கும் நாளை (நினைவூட்டுவீராக!) அது (தீயோர்) இழப்பிற்குள்ளாகும் நாள். அல்லாஹ்வை நம்பி, நற்செயல் செய்பவருக்கு அவரது தீமைகளை அவரிடமிருந்து அழிப்பான். அவரைச் சொர்க்கங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
10. யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது, சேருமிடத்தில் கெட்டது.
11. எந்தத் துன்பமானாலும் (அது) அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டே ஏற்படுகிறது. யார் அல்லாஹ்வை நம்புகிறாரோ அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
12. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துரைப்பதுதான் நமது தூதரின் கடமையாகும்.
13. அல்லாஹ், அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்.
14. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். எனவே அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் கண்டுகொள்ளாமல், அலட்சியம் செய்து, மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.567
15. உங்கள் செல்வங்களும், பிள்ளைகளும் சோதனையே! அல்லாஹ், அவனிடமே மகத்தான கூலி உண்டு.568
16. உங்களால் இயன்ற அளவுக்கு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள்! செலவிடுங்கள்! (அதுவே) உங்களுக்குச் சிறந்ததாகும். தம்மிடமுள்ள கஞ்சத்தனத்தை விட்டும் யார் பாதுகாக்கப்படுகிறாரோ அவர்களே வெற்றியாளர்கள்.569
17. நீங்கள் அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தால் அதை உங்களுக்கு அவன் பன்மடங்காகப் பெருகச் செய்வான். மேலும் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.
18. அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிபவன்; மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.