அத்தியாயம் : 66
வசனங்களின் எண்ணிக்கை: 12
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.573
2. உங்களின் சத்தியங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் பாதுகாவலன். அவன் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.574
3. நபி, தமது மனைவியருள் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறியதை நினைத்துப் பாருங்கள்! அச்செய்தியை அம்மனைவி (நபியின் மற்றொரு மனைவியிடம்) கூறியதும், அதை இந்நபிக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியபோது, அதில் ஒரு பகுதியை (அம்மனைவிக்கு) அவர் அறிவித்துவிட்டு, மற்றொரு பகுதியை தவிர்த்து விட்டார். நபி, அதை (தமது) மனைவியிடம் அறிவித்தபோது “உமக்கு இதை அறிவித்தது யார்?” என அம்மனைவி கேட்டார். “நன்கறிந்தவனும், நன்கு தெரிந்தவனுமே அதை எனக்கு அறிவித்தான்” என அவர் பதிலளித்தார்.
4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்குச் சிறந்தது.) ஏனெனில் உங்கள் உள்ளங்கள் புரண்டு விட்டன. நீங்களிருவரும் அவருக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவினால் அவருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கிறான். அதன்பிறகு ஜிப்ரீலும், இறைநம்பிக்கை கொண்ட நல்லடியார்களும், வானவர்களும் (இந்நபிக்கு) உதவி செய்பவர்கள்.575
5. அவர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்தோராகவும், முஸ்லிமாகவும், இறைநம்பிக்கை கொண்டோராகவும், பணிந்து நடப்போராகவும், பாவ மன்னிப்புக் கோருவோராகவும், வணக்கசாலிகளாகவும், நோன்பு நோற்பவர்களாகவும் இருக்கின்ற விதவைகளையோ அல்லது கன்னியரையோ மனைவியராக அவரது இறைவன் அவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.576
6. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருளாவர். அதில் கடினத் தன்மையுடன், வலிமைமிக்க வானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டதில் அவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு ஏவப்பட்டதையே செய்வார்கள்.
7. “இறைமறுப்பாளர்களே! இன்று சாக்குப்போக்குக் கூறாதீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே கூலி வழங்கப்படுவீர்கள்” (என்று கூறப்படும்.)
8. இறைநம்பிக்கை கொண்டோரே! உளத்தூய்மையுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். உங்களின் இறைவன் உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து அழித்து, உங்களைச் சொர்க்கங்களில் நுழையச் செய்யக்கூடும். அதன் கீழ் ஆறுகள் ஓடும். அந்நாளில் நபியையும், அவருடன் இருக்கும் இறைநம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளிச்சுடர் அவர்களுக்கு முன்புறத்திலும், வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும். “எங்கள் இறைவனே! எங்கள் ஒளியை எங்களுக்குப் பூரணமாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவார்கள்.577
9. நபியே! இறைமறுப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் எதிர்த்துப் போரிடுவீராக! அவர்களிடம் கடுமை காட்டுவீராக! அவர்களின் தங்குமிடம் நரகம். சேருமிடத்தில் அது கெட்டது.
10. இறைமறுப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக நூஹின் மனைவியையும், லூத்தின் மனைவியையும் அல்லாஹ் எடுத்துரைக்கிறான். அவ்விரு பெண்களும் நமது நல்லடியார்களான இரு அடியார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அப்பெண்களோ அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவர்களால் அல்லாஹ்விடமிருந்து அப்பெண்களைச் சிறிதும் காப்பாற்ற இயலவில்லை. “நரகத்தில் நுழைவோருடன் நீங்களிருவரும் நுழையுங்கள்” என்று (அப்பெண்களிடம்) கூறப்பட்டது.
11. இறைநம்பிக்கை கொண்டோருக்கு எடுத்துக்காட்டாக ஃபிர்அவ்வின் மனைவியை அல்லாஹ் எடுத்துரைக்கிறான். “என் இறைவனே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது நடவடிக்கைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! இந்த அநியாயக்காரக் கூட்டத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!” என அவர் இறைஞ்சியதை நினைவூட்டுவீராக!578
12. (இறைநம்பிக்கை கொண்டோருக்கு எடுத்துக்காட்டாக) இம்ரானின் மகள் மர்யமையும் (அல்லாஹ் எடுத்துரைக்கிறான்.) அவர் தனது கற்புநெறியைக் காத்துக் கொண்டார். எனவே நமது உயிரிலிருந்து அதில் ஊதினோம். அவர் தமது இறைவனின் வாக்குகளையும், அவனது வேதங்களையும் உண்மையாக்கினார். அவர் கட்டுப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தார்.