அத்தியாயம் : 51
வசனங்களின் எண்ணிக்கை: 60
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. புழுதியைக் கிளப்பும் காற்றுகள்மீது சத்தியமாக!
2. (மழை எனும்) சுமையைச் சுமப்பவற்றின்மீது சத்தியமாக!
3. எளிதாகச் செல்பவற்றின்மீது சத்தியமாக!
4. கட்டளையைப் பங்கிடுவோர்மீது சத்தியமாக!
5. உங்களுக்கு வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மையே!
6. (மறுமையில்) கூலி கொடுப்பது நடந்தே தீரும்.
7. பாதைகளைக் கொண்ட வானத்தின்மீது சத்தியமாக!
8. நீங்கள் மாறுபட்ட கருத்திலேயே இருக்கிறீர்கள்.
9. திசை திருப்பப்படுபவரே இ(வ்வேதத்)தைவிட்டும் திருப்பப்படுகிறார்.
10. பொய்யர்கள் அழிந்து விடுவார்கள்.
11. அவர்கள் அறிவீனத்தால் அலட்சியத்தில் உள்ளனர்.
12. “தீர்ப்பு நாள் எப்போது?” என அவர்கள் கேட்கின்றனர்.
13. அந்நாளில் அவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்கள்.
14. “உங்கள் வேதனையை அனுபவியுங்கள்! நீங்கள் எதை விரைந்து தேடிக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது” (என்று கூறப்படும்.)
15. இறையச்சமுடையார் சொர்க்கங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
16. அவர்களின் இறைவன், அவர்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு முன்னர் அவர்களே நன்மை செய்வோராக இருந்தனர்.
17. அவர்கள் இரவில் சிறிது நேரமே உறங்குவோராக இருந்தனர்.501
18. அவர்கள் ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்.502
19. அவர்களின் செல்வங்களில் இரந்து கேட்போருக்கும், (கேட்காத) ஏழைகளுக்கும் உரிமை உண்டு.
20, 21. உறுதியாக நம்புவோருக்கு இந்தப் பூமியிலும், உங்களுக்குள்ளேயும் சான்றாதாரங்கள் உள்ளன. நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
22. உங்களின் உணவும், உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதும் வானத்தில் இருக்கின்றன.
23. வானம், பூமியின் இறைவன்மீது சத்தியமாக! நீங்கள் பேசுகிறீர்கள் என்பது (எப்படி உண்மையோ அது) போல் இது உண்மையாகும்.
24. (நபியே!) இப்ராஹீமுடைய கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?
25. அவர்கள் அவரிடம் வந்தபோது “ஸலாம்” என்றனர். அதற்கவர், “ஸலாம், அறிமுகமில்லாத கூட்டமாக இருக்கிறீர்களே!” என்று கூறினார்.
26. அவர், தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (பொறித்துக்) கொண்டு வந்தார்.
27. அதை அவர்களுக்கு அருகில் வைத்தார். “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
28. அவர்களைப் பற்றி மனதிற்குள் பயந்தார். “அஞ்சாதீர்!” என அவர்கள் கூறினர். அறிவுள்ள ஆண் குழந்தையைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.
29. அப்போது அவரது மனைவி சப்தமிட்டவாறு முன்னோக்கி வந்தார். அவர் தமது முகத்தில் அடித்துக் கொண்டு, “(நான்) மலடான ஒரு வயோதிகப் பெண்” என்றார்.
30. “இவ்வாறே உமது இறைவன் கூறினான். அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்” என அவர்கள் கூறினர்.
31. “தூதர்களே! உங்கள் விஷயம் என்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
32, 33, 34. “குற்றவாளிக் கூட்டத்தின்மீது களிமண் கற்களை எறிவதற்காக அனுப்பப்பட்டுள்ளோம். (அது) வரம்பு மீறியோருக்காக உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது” என்று கூறினர்.
35. அங்கிருந்த இறைநம்பிக்கையாளர்களை வெளியேற்றினோம்.
36. எனினும், அவ்வூரில் (லூத்துடைய) ஒரு வீட்டைத் தவிர முஸ்லிம்களில் எவரையும் நாம் காணவில்லை.
37. துன்புறுத்தும் வேதனைக்கு யார் அஞ்சுகிறார்களோ அவர்களுக்காக அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம்.
38, 39. மூஸாவிடமும் (படிப்பினை உள்ளது). அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பியபோது, தனது வலிமையின் காரணமாக அவன் புறக்கணித்தான். “இவர் சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றான்.
40. அவனையும், அவனது படையினரையும் நாம் பிடித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். அவனோ பழிப்பிற்குரியவனாக இருந்தான்.
41, 42. ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை உள்ளது). அவர்களுக்கு எதிராக மலட்டுக் காற்றை நாம் அனுப்பியபோது, அது எந்தவொரு பொருளின்மீது பட்டாலும் அதை மக்கியதைப் போல் ஆக்கி விடும்.503
43, 44. ஸமூது சமுதாயத்திடமும் (படிப்பினை உள்ளது). “குறிப்பிட்ட காலம்வரை சுகம் அனுபவியுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, தமது இறைவனின் ஆணைக்கு மாறுசெய்தனர். எனவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது.
45. அப்போது அவர்கள் எழுந்து நிற்பதற்குக் கூட சக்தி பெறவில்லை. அவர்கள் தற்காத்துக் கொள்வோராகவும் இருக்கவில்லை.
46. இதற்கு முன் நூஹின் சமுதாயத்தையும் (தண்டித்தோம்). அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராக இருந்தனர்.
47. ஆற்றலைக் கொண்டு நாம் வானத்தைக் கட்டமைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவாக்குவோம்.
48. பூமியை நாம் விரித்தோம். விரிப்பவர்களில் (நாம்) சிறந்தோராவோம்.
49. நீங்கள் படிப்பினை பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடியாகப் படைத்தோம்.
50. “அல்லாஹ்வை நோக்கி விரைந்து செல்லுங்கள்! அவனிடமிருந்து (வந்துள்ள) நான் உங்களைப் பகிரங்கமாக எச்சரிப்பவன்” (என்று நபியே கூறுவீராக!)
51. “அல்லாஹ்வுடன் வேறு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். அவனிடமிருந்து (வந்துள்ள) நான் உங்களைப் பகிரங்கமாக எச்சரிப்பவன்” (என்றும் கூறுவீராக!)
52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்றே கூறினர்.
53. இதுபற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டார்களா? அவ்வாறில்லை! அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாக உள்ளனர்.
54. (நபியே!) அவர்களைப் புறக்கணிப்பீராக! நீர் பழிக்கப்படுபவரல்ல!
55. அறிவுரை கூறுவீராக! இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.
56. ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறெதற்கும்) நான் படைக்கவில்லை.
57. நான் அவர்களிடம் வாழ்வாதாரத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றும் நாடவில்லை.
58. அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவன்; வலிமை உடையவன்; உறுதியானவன்.
59. அநியாயக்காரர்களுக்கு, அவர்களுடைய (முன்சென்ற) கூட்டாளிகளின் பங்கைப் போன்று (வேதனையில்) பங்கு உண்டு. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
60. எனவே, இறைமறுப்பாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்நாளில் அவர்களுக்குக் கேடுதான்.